கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 17, 2024
பார்வையிட்டோர்: 1,397 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இஞ்சே! இஞ்சே;”

சிராங்கூன்சாலை வாகனங்களின் இரைச்சலையும், பாவோர் வருவோர் நிற்போர் எழுப்பும் சத்தத்தையும் மீறி திர்வேலுவின் காதுக்கு அந்தக்குரல் தெளிவாகவே கேட்டது.

பெண் குரல் பழக்கமான குரல். ஆனால், பல ஆண்டுகளாகக் கட்காதிருந்த குரல், எங்கிருந்து வருகிறதென்று சுற்று மற்றும் கவனித்தார், கதிர்வேலு.

“இஞ்சே… இஞ்சே….”

குரல் மீண்டும் ஒலித்த போது, குரலுக்குச் சொந்தக் சரியை அவர் அடையாளம் கண்டு கொண்டார்.

மூய் சுவான்!

அவர் கண்கள் அகல விரிந்தன! அகத்திலே பொங்கிய யப்பும் மகிழ்ச்சியும் முகத்திலே அலை மோதின!

‘தேக்கா’ மார்க்கெட் முகப்பில், சுவர் ஓரமாகச் செய்திப் பத்திரிகைத் தரையில் விரித்துப் போட்டு, அதிலே பப்பாளிப் பழங்கள், பலாப்பிஞ்சுகள், மரவள்ளிக்கிழங்குள், கீரை வகைகளை பரப்பி வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தாள் அந்தச் சீன மூதாட்டி,

“உன்னைப் பார்த்து எத்தனை வருசமாச்சு? சுகமாக இருக்கிறியா?” என்று மலாய் மொழியில் ஆவலோடு வினவினாள்.

“நான் சுகமாகவே இருக்கிறேன் என்னோட அந்தக் காலத்துப் பேரை மறந்துட்டியா? நீ எப்பவும் இங்கே தான் வியாபாரம் செய்யுறியா?”

அதே மொழியில் அவரும் கேட்க. அதிலேயே அவர்கள் உரையாடல் நொடர்ந்தது.

அன்புக்கு, மொழி எதுவானாலென்ன?

மொழி. இனம், நிறம் ஆகிய அனைத்தையும் கடந்த அன்பு வெள்ளம் அங்கே கரை புரண்டது!

பல ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்பாராமல் ஏற்பட்ட சந்திப்பு இருவர் மனத்திலும் எவ்வளவு பரவசம்! எவ்வளவு பரிவு! எவ்வளவு பாசம்!

“உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா? பிள்ளைகள் எத்தனை? குடும்பம் எங்கேயிருக்கு? தொழில் நல்லபடியாக நடக்குதா?”

அவருடைய கேள்விகளுக்கும், பரிமாறிக் கொண்ட செய்திகளுக்கும் இடையில் கதிர்வேலு கேட்டார்: “உன் மகன் என்ன வேலை செய்யுறான்? அவனுக்கு இப்ப இருபத்தெட்டு வயசாகுமே? அவன் உனக்கு உதவி செய்யுறதில்லையா?

மகனைப்பற்றிப் பேச்செடுத்தும் மூய்சுவான் முகம் ‘சட்’ டென்று வாடிக் கறுத்தது, புண்பட்ட உள்ளத்தின் அடையாள மாகக் கண்ணீர்த்துளிகள் அரும்பின. துயரம் தோய்ந்த குரலில் பேச முடியாமல் பேசினாள்.

“‘அவன் உதவி வேண்டாம்’னு தான் ஒதுங்கி வாழுகிறேன் அவனை என் மகன்னு சொல்லவே வெட்கமாயிருக்கு அன்றைக்கே அவன் செத்துத் தொலைஞ்சிருந்தா… இப்ப எவ்வளவோ நிம்மதியாயிருப்பேன்’‘

அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. ‘எல்லாம் கடவுளின் சோதனை’ என்பது போல் மேலே நோக்கியபடி விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.

அவளை அழ வைத்து விட்டோமே என்று அவருக்கும் சங்கடமாக இருந்தது.

ஓர் இந்தியக் கிழவர் சங்கடப்படுவதையும் ஒரு சீன மூதாட்டி அழுவதையும் கவனித்த சிலர் ஏன் எதற்கு ‘என்று‘ தெரிந்து கொள்ள அருகில் நெருங்கினர். அவர்களிடம் எதையும் விவரிக்க விரும்பாத அவர், அவசரம் அவசரமாக அவளுக்குச் சிறிது ஆறுதல் கூறிவிட்டு, அவள் வீட்டு முகவரி யையும், அவள் வற்புறுத்திக் கொடுத்த ஒரு பப்பாளிப்பழத்தை யும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.


“அன்றைக்கே அவன் செத்துத் தொலைஞ்சிருந்தா…” வழி நெடுகிலும் அந்த வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்தார் கதிர்வேலு.

ஒரு தாய், தான் பெற்று வளர்த்த பிள்ளையைப் பற்றி இப்படிச் சொல்வதென்றால், அவள் எவ்வளவு வேதனைக் குள்ளாகியிருக்க வேண்டும்? எவ்வளவு விரக்தி அடைந்தி ருக்க வேண்டும்? எவ்வளவு விரக்தி அடைந்திருக்க வேண்டும்? எவ்வளவு வெறுப்புற்றிருக்க வேண்டும்?

‘அன்றைக்கே‘ என்று அவள் குறிப்பிட்டது சரியாக இருபத்து நான்கு வருடங்களுக்கு முந்திய ஒரு சீனப் புத்தாண்டு தினம்.

புத்தாண்டை வரவேற்கும் சீன மக்கள், பட்டாசு வெடிகளுக்குப் பணத்தைத் தண்ணீராக வாரியிறைத்த காலமது.

வெடிகளின் முழக்கங்கள் செவிகளைச் செவிடாக்கும் வெடித்த பட்டாசுகளின் சிவப்புச் சிதறல்கள் வீதிகளை மூடிவிடும்!

அப்போது பாசீர் பாஞ்சாங் பகுதியில் தையல்கடை வைத்திருந்தார் கதிர்வேலு. கடைக்குப் பக்கத்தில் அத்தாப்புக் கூரை வேய்த்த ஒரு பலகைவீடு. அதில் தான் மூய்சுவான் குடும்பம் குடியிருந்தது, எளிய குடும்பம் கணவன், மனைவி, ஓர் ஆண் குழந்தை என மூவர் மட்டுமே உள்ள சிறு குடும்பம்.

மூய் சுவானின் கணவனுக்குத் துறைமுகத்தில் வேலை காலையில் வேலைக்குச் சென்று, நள்ளிரவில் தான் வீட்டுக்குத் திரும்புவார். அதுவரை மூய்சுவானும் குழந்தை சான்லாய் செங்கும் கதிர்வேலுவின் கடையில் தான் பெரும்பகுதி நேரத்தைப் போக்குவார்கள்.

குழந்தை சான் லாய் செங்குக்கு அப்போது நான்கு வயது நிலவு நிறம்! பூமேனி! கருகரு விழிகள்! துறுதுறு குறும்பு! மயக்கும் சிரிப்பு! இனிப்பு பேச்சு!

அவனிடம் தன் உள்ளத்தைப் பறிகொடுத்திருந்தார் தன்னையே பறி கொடுத்திருந்தார், என்றாலும் மிகையாகாது அதனால் தான், கடையில் அவன் துணிகளையெல்லாம் அள்ளித் தாறுமாறாகப் போட்டாலும் சரி. தையல் இயந்திரத்தை அக்கு வேறு ஆணிவேறாக ஆக்கி வைத்தாலும் சரி. கோபப்படவே மாட்டார். சிரித்துக் கொள்வார்.

சற்றுநேரம் கடையில் அவனைப் பார்க்காவிட்டால் அவருக்கு என்னவோ போலிருக்கும். “எங்கே என் ராஜா?” என்று தேடிக் கொண்டு போய் விடுவார். அவனுக்கு அவர் சூட்டியிருந்த செல்லப்பெயர் ராஜா!

அவரை அவன்: ‘சாமி… சாமி’ என்று சுற்றி வருவான். அந்தத் தெருவில் உள்ளவர்களுக்கெல்லாம் அவர் ‘சாமி’ தான்!

அவனுக்கு அழகான உடுப்புகள் தைத்துக் கொடுப்பார். அவற்றை அணிவிக்கச் செய்து மனம் பூரிப்பார்! விளையாட்டுப் பொருள்கள் வாங்கி வருவார், அவற்றை வைத்துக் கொண்டு

அவன் விளையாடுவதைப் பார்த்து மெய் மறப்பார்! தின்பண்டங்கள் வாங்கி, அவர் கையினாலேயே அவனுக்கு ஊட்டி ஊட்டி உவகை கொள்வார்!

எப்போதாவது அவன் உடம்பு கொஞ்சம் சூடாக இருந்தால் போதும் – உடனே தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குப் பறப்பார்!

பிள்ளையைக் கொண்டாடுவதில் அவர் பெற்றவர்களையும் மிஞ்சினார்! மற்றவரான அவர் மீது பிள்ளையும் அதிகப் பிரியமாக இருந்தான் !

இந்த நெருக்கத்தின் காரணமாக, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவனைக் கதிர்வேலுவின் குழந்தை என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு.

“எனக்குக் குழந்தை பிறந்தா… அதை இரண்டாவது குழந்தையாகத் தான் பாவிப்பேன்! ராஜா தான் என்னோட மூத்த குழந்தை”.

ஒரு சீனப்புத்தாண்டு தினத்துக்கு முதல்நாள் இப்படி மூய்சுவானிடம் கூறினார் கதிர்வேலு. அவரை நிமிர்ந்து பார்த்தால் அவள், அவள் பார்வையில் பெருமையும் கனிவும் கலந்திருந்தன.

“அது சரி நீ எப்போ கல்யாணம் செய்துக்கப் போறே?”

“இந்தியாவிலே இருக்கிற எங்க அப்பா அம்மா இன்னும் பொண்ணு பார்த்துப் பேசி முடிக்கலே…”

“ஒகோ? சீக்கிரம் பேசி முடிக்கச் சொல்லி அவங்களுக்குக் கடிதம் போடு…”

“எழுதிப் போட்டுட்டேன் மூய் சுவான்” வெட்கத்தோடு சிரித்தார் கதிர்வேலு. ஒரு சகோ தரியைப் போல் அவளும் சிரித்தாள்,

அடுத்து நிகழ்ந்த கொடுமை மிக்க துயர நிகழ்ச்சிகளை வரவேற்கிறது அந்தச் சிரிப்பு என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை.

மறுநாள் சீனப் புத்தாண்டு!

குதூகலத்திலும் கொண்டாட்டத்திலும் மூழ்கியிருந்தது சிங்கப்பூர்! இல்லங்களில் இனிய பலகாரங்களின் நறுமணம்! மக்கள் மனங்களில் இன்பொளி வெள்ளம்!

புத்தாடை தரித்து, புதுநகை அணிந்து புத்துணர்வும் பூரிப்பும் கொண்ட மக்கள் எங்கு பார்த்தாலும் பட்டாம்பூச்சி களாகப் பவனிவந்த கோலம் கண்கொள்ளக் கோலமாக இருந்தது.

ஆனந்தப் பெருக்கிலும் மனிதர்கள்” தவறு செய்வதுண்டு என்பதற்கு உதாரணமாக, ஊரெங்கும் பட்டாசுகள் வெடித்தன! அவை வெடிக்கும் போது கக்கிய தீக்கங்கு. ‘நெருப்புடன் விளையாடாதே” என்று எச்சரித்தது! ‘ பட் பட்…… படபட…… பட் பட்……’ என்று இடியோசைத் தொடர்போல் முழங்கிய பேரொலி ‘ஆபத்தைத் தேடிக் கொள்ளாதே’ என்று பயமுறுத் தியது. வெடி மருந்தின் நாற்றமும் கரும்புகையும் விழாக்கால உற்சாகத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தன.

காலையிலே கதிர்வேலுக்கு மூய் சுவான் வீட்டுப் பலகாரங்கள் இரண்டு தாம்பாளங்கள் நிறைய வந்துவிட்டன, ‘குலேபங்கே‘ ‘லவ்லெட்டர்’ பொக்சாய், ‘குவே பிளாண்டா’ ‘அங்க கூ…’

அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் சுவை பார்த்துக் கொண்டிருந்தார் கதிர்வேலு.

அப்போது வெளியில் பரபரப்பும் கூச்சலும் குழப்பமுமாக ஏதோ நடப்பதைப் போல் தோன்றியது என்னவென்று வெளியே ஓடி வந்து பார்த்தால்…

மூசுவான் வீடு தீப்பற்றி எறிந்தது!

அவளுடைய கணவன் அலறித் துடித்துக் கொண்டிருந்தான்.

‘ஐயோ என் குழந்தை. ஐயோ என் குழந்தை என்று கதறிப் புலம்பினாள் மூய் சுவான். சிலபேர் அவளை அசைய விடாமல் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

கதிர்வேலுக்கு நிலைமை விளங்கியது. தீப்பிடித்தெரியும் வீட்டுக்குள்ளே அவருடைய செல்லப்பிள்ளை ராஜா சிக்கிக் கொண்டிருக்கிறான்.

திடுக்கிட்டார், திகைத்தார் அதிர்ச்சியுற்று ஊமையானார் எல்லாம் இமைப்பொழுது தான். மறுவினாடி ஆவேசம் கொண்டவர் போல் ‘ஆ……என் ராஜா!’ என்று கூவியபடி நெருப்புச் சுழலுக்குள் பாய்ந்து விட்டார்!

கூடி நின்ற கூட்டம் இதைச் சிறிதும் எதிர் பார்க்கவில்லை கதி கலங்கிய நிலையில் நின்ற அவர்கள், குபு குபு வென எரியும் அத்தாப்புக்கூரை விழுந்து அவரையும் குழந்தையையும் அழித்து விடப் போகிறதே என்று அஞ்சிக் கொண்டிருக்கையில்…… தோளில்…… சான்லாய் செங்கைச் சுமந்தபடி வெளியே ஓடி வந்தார் கதிர்வேலு,

அதே சமயம் ‘சட சட’ வென்று சரிந்தது கூரை! இரண்டு உயிர்கள் அன்று மயிரிழையில் உயிர் தப்பிப் பிழைத்தன!

கூடி நின்றவர்கள் மலைத்துப் போனார்கள்! நிம்மதிப் பெரு மூச்சு விட்டார்கள்! கதிர்வேலுவின் துணிச்சலையும் தீரத்தையும் தியாக மனப்பான்மையையும் வியந்து பாராட்டினார்கள்.

மூய் சுவானும் அவள் கணவரும் தங்கள் நன்றிக்கண்ணீரில் அவரைக் குளிப்பாட்டினார்கள்.

ஒரு சீனச் சிறுவன் மீது ஓர் இந்தியனுக்கு இவ்வளவு பாசமா? இவ்வளவு பற்றுதலா? எங்கிருந்து வந்த உறவு இது?

பத்திரிகைகளில் படங்களுடன் வந்த செய்திகளைப் படித்தவர்கள் அனைவருமே இப்படி வியந்தார்கள்.

அந்தச் சான்லாய் செங்கைக் குறித்துத்தான், இருபத்து நான்கு வருடங்களுக்குப் பிறகு மூய் சுவான் மனம் நொந்து சொல்கிறாள்! அன்றைக்கே அவன் செத்துத் தொலைஞ்சிருந்தா.


தீ விபத்துக்குப் பிறகு மூய்சுவான் குடும்பம் ‘குயின்ஸ்டவுன் பக்கம் குடி பெயர்ந்தது. கதிர்வேலு ‘தோபாயோ’ வட்டாரத்தில் தையல் தொழிலைத் தொடர்ந்தார். கொஞ்ச நாள் கழித்து மறு படியும் வெவ்வேறு இடங்களுக்கு மாறினார்கள். அதற்கப்புறம் அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்க வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.

சான் லாய் செங் எப்படி வளர்ந்தான்? என்ன செய்கிறான். என் அவன் மீது இவ்வளவு வெறுப்பு என்பதையெல்லாம் மூய்சுவானிடம் விவரமாகக் கேட்கவேண்டுமென்று தீர்மானித்து கொண்டார். அதற்காகவே நாளைக்கு அவள் வீட்டுக்குப் போக முடிவு செய்தார்?

தனக்குத் திருமணம் நடந்ததையும், மனைவி மக்கள். இந்தியாவில் இருப்பதையும் தான் மட்டும் தனியாளாகத், திரை கடல் ஓடித் திரவியம்’ தேடிக் கொண்டிருப்பதையும் அவளிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் நினைத்துக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தார்.

சான் லாய் செங் என்ன செய்து கொண்டிருக்கிறான்?

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் விட்டு வைத்திருக்கும் ஒரு பழைய சேரிப்பகுதி அங்கு ஓர் ஒட்டுக்கடை காலை நேரம்.

‘டன்ஹில்’ சிகரெட் பாக்கெட் ஒன்றை அலட்சியமாக. எடுத்துக் கொண்டு, ‘தீப்பெட்டி கொடு என்று கைச் சைகை காட்டினான் சான் லாய் செங் அப்போது தான் ஒட்டுக்கடையைத், திறந்தார் தாவுது.

அவளை நிமிர்ந்து பார்த்து விட்டு பேசாமல் தீப்பெட்டியை நீட்டினார். அவர் முகத்தில் ஓர் அசட்டுச் சிரிப்பு!

பதிலுக்குத் தலையாட்டிய சான்லாய் செங் சிகரெட்டுக்குத் தீ வைத்துக் கொண்டே நடையைக் கட்டினான்.

முதல் போனி, என்றாலும் அப்போது அவன் காசு கொடுக்க மாட்டான் என்பது தாவுதுக்கு நன்றாகத் தெரியும். அவனிடம் காசு கேட்க அவருக்கு மட்டுமல்ல அந்தத் தெருவில் உள்ள எந்தக் கடைக்காரருக்குமே தைரியம் வராது.

தேவைப்பட்ட பொருளை ஒட்டுக் கடைகளில் எடுத்துக் கொள்வான். யாருமே காசு கேட்க மாட்டார்கள். ஆ னா ல் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமென்பதைச் சரியாக ஞாபகம் வைத்திருப்பான். பணம் கிடைத்ததும் அத்தனை பேருக்கும் பட்டுவாடாச் செய்து விடுவான்! அது அவன் வாடிக்கை.

பணம் அவனுக்கு எங்கிருந்து கிடைக்கிறது என்று அவர்களும் கேட்பதில்லை. அவனும் சொல்வதில்லை. ஆனால் அவன் சட்டைப் பையில் கத்தை கத்தையாகப் பணம் இருக்கும் சமயங்களில் அவர்கள் அவனை ஒரு மாதிரியாகப் பார்ப்பதுண்டு.

அவனுக்குச் சொந்தம் சுற்றம் என்று யாருமே இல்லை என்று தான் அங்குள்ளவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.

எப்பொழுதும் ஆடம்பரமான உடைகளில் குளிர்ச்சிக் கண்ணாடியுடன் ‘டிப்டாப் ‘பாக, ஆபீசர் மாதிரி காட்சியளிப்பான், வாட்ட சாட்டமான உடம்பு, எடுப்பான தோற்றம்.

ஏதோ ஒரு முக்கியமான அலுவலில் ஈடு பட்டவன் போல் ஊர் முழுக்கச் சுற்றி வருவான். காசில்லாத போது கால்நடை கொஞ்சம் காசிருந்தால் பஸ், கூடுதலாகப் பணப்புழக்கம் இருந்தால் ‘டாக்ஸி’

அன்று கால்நடையாகவே கிளம்பி விட்டான் தொழிலுக்கு.

எங்கெல்லாமோ சுற்றிவிட்டு, ‘ மெக்பர்சன்’ பேரங்காடிக்கு முன்னால் வந்து கொண்டிருந்த சான் லாய் செங், வாடகைக் காரிலிருந்து இறங்கிய ஒரு முதியவரைப் பார்த்ததும் ‘சட்‘டென்று நின்றான். எங்கேயோ பார்ப்பது போல் தன் கழுகுக் கண்களால் அவரை நோட்டம் விட்டான்.

சுமார் ஐம்பது வயதிருக்கும் அந்தப் பெரியவருக்கு, கையில் விலை உயர்ந்த கைக்கடிகாரம். விரலில் அக்கிக் கல் பதித்த பெரிய மோதிரம், கழுத்தில் கணிசமான எடையுள்ள தங்கச் சங்கிலி.

வாடகைக் காருக்கான கட்டணத்தைக் கொடுப்பதற்காக அவர் தன் பணப்பையைத் திறந்த போது… உள்ளே அடுக் கடுக்காகப் பண நோட்டுகள்.

தங்கள் கையிருப்பை இப்படி வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் குற்றச் செயல்களுக்கு உடந்தையாக, இருக்கிறோம் என்பதைப் பலபேர் அறியாமலே இருக்கிறார்கள்.

‘இரை கிடைத்து விட்டது’ தனக்குள்ளேயே சொல்லி கொண்டான் சான் லாய் செங் ! வேட்டையைத் தொடங்குவதற் கான முன்னேற்பாடுகள் ஆரம்பமாகின.

முதலில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை நான்கு பக்கமும் பார்த்து, காவல்துறை சார்ந்தவர்கள் யாரும் அங்குக் காணப்படவில்லை. என்பதை உறுதி செய்து கொண்டான். போவோர் வருவோர் யாரும் தன்னை ஐயத்தோடு நோக்கவில்லை என்பதை அடுத்துக் கவனித்துக் கொண்டான்.

முதியவரை முன்னே போக விட்டு அவர் அறியா வண்ணம் பூனைபோலப் பின் தொடர்ந்தான்.

பேரங்காடியைத் தாண்டியதும் காய்கறி மார்க்கெட். அதைக் கடந்ததும் ஒரு சீனக்கோயில். கோயிலுக்குப் பின்புறம் பூங்கா பூங்கா வழியாகச் சிறிது தூரம் சென்ற பிறகு ஒரு சிறிய பாலம். பாலத்தை ஒட்டிய படிக்கட்டில் ஏறித் தன் கட்டிடத்தை நெருங்கினார் முதியவர்.

அவருடைய வீட்டையும் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தெரிந்து கொண்டு, “இங்கே சரியான வேட்டை ஒன்று எளிதாக கிடைக்கும்” என்று மனத்திற்குள்ளேயே சிரித்துக் கொண்டான் சான் லாய் செங் !

சில தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது.

நினைவு அலைகளில் மிதந்தபடியே.

வீட்டு வாசற்படியில் வந்து நின்ற கதிர்வேலுவுக்குத் ‘திக்’ கென்றிருந்தது போகும் போது வெளிப்புறம் பூட்டி வைத்த பூட்டு எங்கே? கதவு எப்படி உட்பக்கம் தாளிடப்பட்டது?

தற்சமயம் அவர் ஒருவர் மட்டுமே குடியிருக்கும் ஓரறை வீடு அது. மெதுவாக கதவைத் தட்டினார்.

சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. தயக்கத்தோடு காலெடுத்து வைத்த அவரை, இரண்டு முரட்டுக் கைகள் வேகமாக இழுத்து உள்ளே தள்ளி விட்டன! நிலை குலைந்து சுவரில் மோதிக் குப்புற விழுந்த அவர், ஒரு கணம் பொறி கலங்கிப் போனார். கையிலிருந்த பப்பாளிப்பழம் நசுங்கிசிதைந்தது

நெற்றியில் காயம்பட்டு ரத்தம் கசிந்ததைக் கையால் அழுத்திக் கொண்டு, திகிலோடும் திகைப்போடும் பயத்தோடும் நிமிர்ந்து பார்த்த போது-

எதிரில் ஒரு சீன இளைஞன் கையில் கத்தியோடு நின்றிருந் தான்! எதற்கும் துணிந்த கொடியவன் அவன் என்பதைத் தோற்றம் தெளிவாகக் காட்டியது.

“சத்தம் போட்டால் கொன்று விடுவேன்! உயிர் வேண்டும் என்றால் ஒழுங்காக நடந்து கொள்” ஆங்கிலத்தில் மிரட்டினான்.

அச்சத்தில் அவர் நா எழவில்லை. நடுக்கத்தில் அவர் குரல் வெளிவரவில்லை. ‘என்னை ஒன்றும் செய்து விடாதே’ என்று கெஞ்சுவது போல் இரு கைகளையும் ஏந்தினார்.

“நான் வந்தவேலை முடியும் வரை… இந்தச் சமையலறைக்குள்ளேயே கிட” என்று அவரை அதனுள்ளே தள்ளிக்கதவைச் சாத்தினான்.

அவன் வந்த வேலை எதுவென்று அப்போது தான் அவருக்குப் புரிந்தது.

அலமாரியில் இருக்கும் மூவாயிரம் வெள்ளி ரொக்கம், பதினைந்து பவுன் நகைகள். துணிமணிகள், பொருட்கள் எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு போகப் போகிறான்.

அவை அவருடைய மூன்றாண்டு காலச் சேமிப்பு. அடுத்த வாரம் இந்தியாவுக்குப் போவதற்காக வாயைக்கட்டி வயிற்றைக் கட்டிச் சேகரித்தவை பாவம்.

குரல் எழுப்பினால் கொன்று விடுவான் பாவி பணத்தோடு உயிரும் போய் விடும்.

“ஐயோ தெய்வமே…” வாய்க்குள்ளே தான் முணு முணுத்தார். மனசுக்குள்ளே தான் தவித்தார். ஆனால், அது அந்தச் சீனஇளைஞனுக்குத் தெரிந்து விட்டதோ என்னவோ?

சமையலறைக் கதவைத் திறந்து கொண்டு, அவர் முன்னால் வந்து நின்றான் அவன்! அவர் உடம்பு வெட வெட’ வென்று ஆட ஆரம்பித்தது.

அவன் கையில் கத்தியைக் காணவில்லை. அதற்குப் பதிலாகப் பழைய பத்திரிகைகள் இருந்தன! பல ஆண்டுகளாக அவர் அலமாரிக்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பத்திரிகைகள்!

அவற்றில் ஒரு தாளை எடுத்து, அதிலிருந்த படத்தைச் சுட்டிக்காட்டி, “இது நீ தானா?” என்ற ஆவலுடனும் அவசரத்துடனும் கேட்டான்.

“ஆமாம்” என்று தலையாட்டினார் கதிர்வேலு.

சில நிமிடங்கள் அவரையே பார்த்துக்கொண்டு மௌனமாக நின்றான் அந்தச் சீன இளைஞன். அவனுக்குள்ளே ஒரு மனப்போராட்டம் நிகழ்வதை, அவன் முகத்தில் நிழலாடிய உணர்ச்சிக் குறிகள் தெரியப்படுத்தின.

அவன் முகம் மாறியது. கண்கள் கலங்கின. சற்று முன்பிருந்த தோற்றத்துக்கு முற்றிலும் மாறுப்பட்டவனாகத் தணிந்த குரலில் பேசினான்.

“சாமி, இதே பத்திரிகைகளை என் தாயாரும் எங்கள் வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அப்போது நடந்த நிகழ்ச்சிகளையும் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் உங்களோடு இருக்கும் சிறுவன் நான் தான்!”

உவகைப் பெருக்கில் துள்ளி விழுந்தார், “கதிர்வேலு! ஆ என் ராஜாவா நீ? “ அவர் உள்ளக் கடலில் பொங்கிய உணர்ச்சி அலைகள் பேரிரைச்சலிட்டன.

“திருடுவதற்காக உங்கள் வீட்டுக்குள்ளே புகுந்தேன். அலமாரியைத் துழாவும் போது தெய்வாதீனமாக இவை என் கையில் அகப்பட்டன, இவற்றைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டாமல் போயிருந்தால்.. நான் எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்திருப்பேன்?“

அவர் நெற்றியில் கசிந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே கூறினான்,

என்ன ஓர் அதியமான திருப்பம் ! கனவா? காட்சியா? நம்ப முடியாமல் திக்கு முக்காடினார் கதிர்வேலு.

அவனுக்குப் பத்து வயதான போது அப்பாவை இழந்தது அம்மாவுக்குக் கட்டுப்படாத பிள்ளையாக வளர்ந்தது, சோம்பேறித் தனத்தால் பள்ளிப்படிப்பைக் கைவிட்டது, சேரக் கூடாதவர் களோடு சேர்ந்து கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானது, திருடனாகவும் போக்கிரியாகவும் அலைவது அனைத்தையும் சொல்லிச் சிறு குழந்தைபோல் தேம்பித்தேம்பி அழுதான் சான் லாய் செங்.

“அன்றைக்கே அவன் செத்துத் தொலைஞ்சிருந்தா…” மூய் சுவான் குரல் அங்கு எதிரொலித்தது.

“நான் மிகவும் வருத்தப்படுகிறேன். வெட்கப்படுகிறேன். சாமி, அன்றைக்குத் தீயிலிருந்து நீங்கள் என்னைக் காப்பாற்றினீர்கள்! இன்றைக்குத் தீய வழிகளிலிருந்தும் நீங்களே என்னைக் காப்பாற்ற வந்திருக்கிறீர்கள்! இனி நான திருட மாட்டேன்! இன்று முதல் புதுப்பிறவி எடுத்த புதுமனிதனாவேன்! என் அம்மாவின் அன்புக்குரிய நல்ல பிள்ளையாக வாழ்வேன்! இது உண்மை. இது சத்தியம் என்னை நம்புங்கள்”

கொஞ்ச நேரந்துக்கும் பிறகு அவரும் அவனும் மூய்சுவான் வீட்டுக்குப் புறப்பட்டார்கள். ஆமாம்; தன் பிரியத்துக்குரிய ராஜாவைப் புதுமனிதனாக அவளிடம் ஒப்படைக்கப் போகிறார் கதிர்வேலு!

– சமூக வளர்ச்சி அமைச்சு நடத்திய 1985-ம் ஆண்டு சிறுகதை எழுதும் போட்டியில் முதல் இடமும் இரண்டாம் பரிசும் பெற்ற சிறுகதை.

– சிங்கப்பூர்க் குழந்தைகள் (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு:1989, சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *