சாரதா, குழந்தை அரவிந்தைத் தூக்கிக்கொண்டு மூச்சிரைக்க ஓடிக் கொண்டிருந்தாள். அவனைக் காப்பாற்றிவிட வேண்டும் என்பது மட்டுமே அவளது எண்ணமாக இருந்தது. பின்னால் அடிக்கடித் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடியவள்; ஒருவரும் தன்னைப் பின்தொடரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சிறிதே நிதானித்தாள். அருகில் தென்பட்ட ஒரு வீட்டின் திண்ணையில், தூண் மறைவில் சென்று உட்கார்ந்துகொண்டாள். தூக்கிக் கொண்டு ஓடி வருகையில், அது ஒரு விளையாட்டு என்று எண்ணி, சிரித்துக்கொண்டே வந்த அரவிந்த், இப்பொழுது, விரல் சப்பிக் கொண்டிருந்தான். கையை எடுத்துவிடத் தோன்றாமல், கண்களில் நீர் வழிய குழப்பத்துடன் அவள் அமர்ந்திருந்தாள்.
அப்பொழுது அவ்விடத்தைக் கடந்து சென்ற ஒரு கார் ரிவர்சில் வந்து அருகே நின்றது. அதிலிருந்து ஒரு மூதாட்டியும், ஒரு பெரியவரும், கூடவே ஒரு வாலிபனும் இறங்கி வந்தார்கள். “ஆம்மா நீ ஓடி வருவதைப் பார்த்த நாங்கள் என்னவோ! ஏதோ? என்று உன்னைப் பின் தொடர்ந்து வந்தோம். பயப்படாதே! உனக்கு எங்களால் ஆன உதவி செய்ய செய்ய முடியும்” மூதாட்டி சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, சாரதா தலை சுற்றி அவள் மடியில் சாய்ந்துவிட்டாள். மறுநாள், சாரதா கண்விழித்துப் பார்த்த போது அரவிந்த் அவளருகே அழகாக உறங்கிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்த பிறகுதான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அரவிந்தும், அவளும் புதிய இடத்தில் சௌகரியமாகத் தூங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.
சிறிது நேரத்தில், அவர்கள் இருவருக்கும் சாப்பாடு, மற்ற உபசரணைகள் பலமாக இருந்தது. இவ்வாறே பல நாட்கள் தொடர்ந்தது. அவற்றை ஏற்றுக் கொள்வதைவிட அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. உடல் நலம் தேறிவிட்ட பிறகும், மாற்று ஏற்பாடு என்ன செய்து கொள்ளலாம் என்பது குறித்து, அவளால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. “எனக்கு ஏதேனும் வேலைக்கு ஏற்பாடு செய்து தர முடியுமா அம்மா? என தயங்கியவறு அம்மூதாட்டியிடம் கேட்ட போதில், சிறிது யோசனைக்குப் பிறகு, அவர்கள், உனக்கு ஆட்ஷேபணை இல்லை என்றால், வயதான எங்கள் இருவருக்கும் உதவிகள் செய்து கொண்டு எங்களுடனேயே இருந்துவிடு.உனக்கு எவ்வளவு சம்பளம் வேண்டுமோ தந்துவிடுகிறோம். நாங்களும் உன் பிள்ளையைக் கொஞ்ச்சிக் கொள்ள அனுமதித்தாய் என்றால் மகிழ்வோம்”. என்றார்கள்.
அவர்கள் குரலில் ஏதோ மறைந்திருந்தது. துக்கமா?. என் பிள்ளை என்று குறிப்பிட்டார்களே! சாரதாவுக்கு உள்ளுக்குள் சந்தோஷம் ஏற்பட்டது. வளர்த்த பாசம் போலும்.
“உங்களோடு அன்றைக்கு வந்திருந்தவர், உங்கள் மகனா அம்மா?”. என சாரதா கேட்க, “ஆமாம் சாரதா. ராம், அவன் தன் மனைவியுடன் தனிக் குடித்தனம் இருப்பதால், எப்போதாவதுதான் இங்கு எங்களைப் பார்க்க வருவான். எங்கள் மருமகளுக்கு ஏனோ எங்களைப் பிடிப்பதில்லை. அதனால் நாங்கள் இங்கே தனியாக இருக்கிறோம்”.என்றார்கள்.
அடுத்து வந்த சில நாட்களிளேயே அவள் அந்த குடும்பத்தில் ஒருத்தியாக ஒட்டிக்கொண்டுவிட்டாள். அரவிந்தை தங்கள் சொந்த பேரன் போன்றே அவர்கள் கொஞ்சினார்கள். இதைவிட பத்திரமான இடம் வேறு இருக்க முடியாது என்று சாரதா முடிவுக்கு வந்தாள். பெரியவர்களையும் குழந்தையையும் தன் குடும்பத்தினர் போலவே எண்ணி அன்பு பாராட்டி கவனித்து வந்தாள். அவ்வப்போது, ராம் அங்கு வருவான். உடனேயே போய்விடுவான். ராம் அங்கு இருக்கும் நேரங்களில், சாரதா அவன் எதிரில் வருவதை தவிர்த்துக் கொண்டாள். ராம், வரும்போதெல்லாம், அரவிந்துக்கு வேண்டிய துணிமணிகள், விளையாட்டு சாமான்கள் என ஏராளமாக வாங்கிவந்து குவித்துவிடுவான்.
சாரதாவுக்கு, அவள் குடும்பத்தினரின் ஞாபகம் அடிக்கடி வரும். அவளுடைய இரு தங்கைகளைப் பற்றி யோசிக்காமல், அவர்களின் திருமணம் பற்றி கவலைப்படாமல், இப்படி ஒரு காரியம் செய்துவிட்டோமே!.என நினைத்து வருத்தம் கொள்வாள். அடுத்த கணம், “எல்லாவற்றையும் விட அரவிந்த் உயிர் முக்கியம். அதனால் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவை இல்லை. திரும்ப அவர்கள் வீட்டிற்குப் போக அவள் மிகவும் அஞ்சினாள். நர்மதாவைப் பற்றி அவள் ஒருவள்தான் நன்றாக அறிந்து வைத்திருந்தாள். அவள் திரும்ப அங்கு சென்றால் என்ன நடக்கும் என்பது குறித்து அவள் தெளிவான கண்ணோட்டத்தில் இருந்தாள். அவள் எண்ணங்கள் பின்னோக்கி கடந்த கால நிகழ்வுகளுக்குள் சென்றது.
சாரதாவின் அம்மா, குடும்ப வரவுசெலவுகளுக்கு மிகவும் சிரமப்பட்டபோது பக்கத்து பங்களா பங்கஜத்தம்மாவிடம் உதவி கேட்கப் போனாள். அதன் பிறகு பங்கஜத்தம்மாளின் அறிவுரையின்படி அவர்கள் வீட்டு அவுட்ஹவுசிலேயே சாரதாவின் குடும்பம் குடிபெயர்ந்தது. சாரதாகுடும்பத்தின் சிறிய வீடு வாடகைக்கு விடப்பட்டது. அப்படியும் பற்றாக்குறை. அதனால்,அவள் அம்மா பங்களாவின் சமையல்காரியானாள். சாரதா; பங்கஜத்தம்மாளின் செல்லப் பெண்ணான நர்மதாவை நினைத்து மிகவும் பயந்து கொண்டிருந்தாள். நர்மதா சாரதாவின் வகுப்புத்தோழி. அவள் சாரதாவை ஒரு பொருட்டாகவே மதிக்காததுடன், மனம் நோகப் பேசி பிறர் முன் அவளை மட்டம் தட்டி மகிழக்கூடியவள்.
சின்ன வகுப்புகளில் படித்த போது நர்மதா; சாரதாவை நன்றாக கிள்ளிவிட்டுவிட்டு சாரதாதான் தன்னை கிள்ளிவிட்டாள் என சொல்லி கேட்போர் மனம் இரக்கப்படும்படி பிழியப்பிழிய அழுவாள். இதே மாதிரியான அவளுடைய லீலைகளினால் பள்ளி ஆசிரியர்களிடமும், அக்கம்பக்கத்தினரிடமும் சாரதாவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. அவள் மறுப்பேதும் சொல்லாமலேயே தன் மீது அபாண்டமாக சாட்டாப்பட்ட குற்றங்களை ஏற்றுக்கொள்வாள். ”ஏழைசொல்.அம்பலம் ஏறாது” என்பதை அவள் அறிந்தே இருந்தாள். இது மாதிரியே பெரியவர்களான பின்பும், நர்மதா நடந்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது. ஒரு முறை எங்கோ காலில் அடிபட்டுக்கொண்ட நர்மதா, வேண்டுமென்றே இவள் கூட நடந்துவந்து திடீரென்று “ ஐயோ! இவள் செருப்புக்கால் என்னை மிதித்து விட்டாளே!.ரத்தம் வருகிறதே! நான் இவளைத் தோழியாக நினைத்தாலும், இவளுக்கு ஏன் என் மீது பொறாமை?” என்றெல்லாம் அரற்றிக்கொண்டு அழவே; இதைக்கேட்டவர்கள், சாரதாவைத் திட்டி “எப்பேர்பட்ட செல்வந்தரான தணிகாசலத்தின் மகளுடன், இந்த ஏழைச் சிறுமி, இப்படி போட்டி போட்டுக் கொண்டிருகிறாளே! திமிர் பிடித்தவள் இந்த சாரதா” என்று கோபப்பட்டர்கள். ஆனால் படிப்பதில் சாரதாவை மிஞ்ச முடியாமல் நர்மதா உள்ளுக்குள் வெதும்பிப்போனாள். அழகிலும்கூட சாரதாதான் முன்னால் இருந்தாள்.
இந்நிலையில், இபோது, சாரதா குடும்பம் நர்மதா வீட்டு அவுட் ஹவுசில் ஜாகை. எங்கே போய் முட்டிக் கொள்வாள். இந்த வருடம் படிப்பு முடிந்தவுடன், வெளியூரில் வேலை தேடிக்கொண்டு இவளை விட்டு ஓடிவிட வேண்டும் என்பது சாரதாவின் தீர்மானமாக இருந்தது. நினைப்பது எல்லாம் நடந்துவிடுமா என்ன?
ஓரு சில நாட்களிலேயே சாரதாவைப் பெண்பார்க்க வருகிறார்களாம்.அப்படி என்ன அவசரம்? பையனின் முதல் தாரம் இறந்துவிட்டதால் இரண்டாம் தாரமாக, பெண் கேட்டு வருகிறார்கள். ஒன்றரை வயது குழந்தையைப் பார்த்துக்கொள்ள அம்மா தேவையாம். பங்காத்தம்மாவிற்கு அண்ணன் மகன் என்பதாலும், பையன் பெரும் பணக்காரன் என்பதாலும்,சாரதா வீட்டாருக்கு சம்மதமாம். பையன் ரகு பெண்ணைப் பார்த்துவிட்டு o.k சொல்லிவிட்டால் வருகின்ற மாதத்திலேயே கல்யாணமாம். நர்மதாவின் உறவினான் என்ற ஒரே காரணத்திற்காக சாரதா இந்த கல்யாண ஏற்பாட்டை எதிர்த்தாள்.
“மாப்பிள்ளைவீட்டார் வரும் நேரமாகிவிட்டது. சீக்கிரம் ரெடியாகச்சொல்”.பங்கஜம் சத்தம் போட, “நான் போய்ப் பார்த்து வருகிறேன்” என்று சொல்லி சாரதா இருந்த அறைக்குச் சென்ற நர்மதா, அவள் அருகில் அமர்ந்து கொண்டு, “நான் உனக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன். நான் உயர்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையிலேயே ரகுவைக் காதலித்தேன். ஆனால் அப்போ அவனைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இப்போது அவனைத்தான் நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். நீ ஏதாவது காரணம் சொல்லி அவனை வேண்டாம் என்று சொல்லிவிடு”.என்றாள்.
இதனைக் கேட்ட சாரதாவுக்கு உள்ளுக்குள் சிரிப்பு தாங்கவில்லை. அவளுக்கு எல்லாமே புரிந்தது. “இவளாவது இரண்டாம் தாரமாக போவதாவது? எத்தகைய மனப்போக்கு நர்மதாவுக்கு இருக்கும் என்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. இருவரும் பேசிக்கொண்டிருந்த அறையின் வெளியே நிழலாடியதை (அதுவும் இரண்டு நிழல்கள் ) நர்மதா கவனிக்கவில்லை. ஆனால் சாரதா கவனித்துவிட்டள். “ஏன் நீயே இந்த விஷயத்தை சொல்லிவிடேன். அட்லீஸ்ட் மாப்பிள்ளையிடமாவது”. என சாரதா கேட்டதற்கு, “ம்ஹூம்.படிப்பு முடிந்த பிறகுதான். இப்போ சொன்னால் உடனே கல்யாணம் முடித்துவிடுவார்கள்”.என்றாள்.
ரூமிலிருந்து வெளிவந்த நர்மதாவை பங்கஜம், தங்கள் வீட்டிற்கு இழுத்துக் கொண்டு போனார்கள். பங்கஜத்துடன்,சாரதாவின் தங்கை திலகாவும் ஜன்னல் பக்கமிருந்து சாரதா சொன்னதைக் கேட்டு விட்டதால் விஷயம் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று.
ரகு, பங்கஜத்தின் சொந்த அண்ணன் மகன். நர்மதா, ரகுவைக் காதலிப்பதாக வேறு சொல்லிவிட்டாள். அது பொய் என்பதை அறியாத பங்கஜம், கல்யாண ஏற்பாடுகளை உடனேயே கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
தடபுடலாகக் கல்யாணம் நடந்தேறியது. கல்யாண விருந்து மிக நன்றாக இருந்ததாம். பெண்ணின் கண்கள் வீங்கி இருந்ததை யாரும் பொருட்படுத்தவில்லையாம், சாரதாவை அந்த கல்யாணத்திற்குப் போகவேண்டாம் என்று சொல்லிவிட்டர்கள். அதனால், மாப்பிள்ளை வீட்டாரையோ, மணமகனையோ சாரதா பார்க்கக் கூட இல்லை. நர்மதாவின் கணவர் எப்படி இருப்பார்? என்று சாரதா யோசிக்கும் போதெல்லாம், அவன் தலையில் நர்மதா குட்டிகுட்டி தலை பெரிசாக வீங்கிப் பொயிருக்கும். என சாரதா தனக்குள் நினைத்து சிரித்துக்கொள்வாள். அவனுக்காகவும்,அவன் குழந்தைக்காகவும் சாரதா பரிதாபப்பட்டாள்.
திருமணத்தைப் படம் பண்ணிய புகைப்படக்காரரின் வீட்டில் பெரிய துக்கம் நடந்துவிட்டதால், ஒரு மாதம் வரை அவர் தன் வீட்டிற்கு வரக்கூடாது. என்றும் அவர் வீட்டிலிருந்து எதுவும், புகைப்படத் தொகுப்பைக் கூட கொடுத்தனுப்பிவிடக் கூடாது என்றும் பங்கஜதம்மாள் கண்டிப்புடன் கூறிவிட்டார்கள். நர்மதாவின் கணவர் என்ற நினைவு வரும் போதெல்லாம் உருவமற்ற ரகுவின் வீங்கிய தலை மட்டுமே அடிக்கடி அவள் நினைவுக்கு வரும்.
குழந்தை அரவிந்தை பங்கஜம் வளர்ப்பதாக ஏற்பாடு ஆயிற்று. அண்ணன் பேரனாயிற்றே!. அதனால் வலியப் போய் பங்கஜமே இந்த ஏற்பாட்டை செய்து கொண்டார்கள். நாளடைவில் அரவிந்தை வளர்த்தது என்னவோ சாரதாதான். அவளது அம்மா அந்த வீட்டில் சமையல் வேலை செய்ய, அந்த வீட்டுப் பெண்ணைப் போல வளையவந்து, தணிகாசலத்திற்கு உதவியாக கணக்கு வழக்குகளைப் பார்ப்பது, அவருக்கும், பங்கஜத்திற்கும் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொடுப்பது, அரவிந்த்தை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வது விருந்தினர் வந்தால் உபசரிப்பது எல்லாமே சாரதாதான்.
ஒரு நாள் காலை நர்மதாவின் கணவன், மாமனார், மாமியார் ஆகியோர் பங்கஜத்தம்மாவின் வீட்டிற்கு வருவதாக செய்தி வரவே ஏற்பாடுகள் பலமாக நடந்துகொண்டிருந்தது. உள்ளூரில் இருந்த நண்பர்கள், உறவினகளை மட்டும் அழைத்திருந்தனர். நர்மதா மட்டும் மாலையில்தான் வருகிறாளாம். ஏதோ முக்கிய வேலையாம். “என்ன மண்ணாங்கட்டி வேலையோ” என சாரதா நினைத்துக் கொண்டாள். வீட்டில் யாவரும் விருந்து ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில்; சத்தமின்றி வீட்டிற்குள் நுழைந்த யாரோ ஒரு புதியவன், சாரதாவின் இடுப்பிலிருந்த அரவிந்தைப் பிடுங்கிக்கொண்டு ஒடினான். சாரதாவுக்கு அதிர்ச்சியில், குரல் எழும்பவில்லை. ஆனால், அவனைப் பின்தொடர்ந்து மிக வேகமாக ஓடிச் சென்று குழந்தையைக் கைப்பற்றிக்கொண்டு, ஒன்றும் புரியாமல் எதிர்த் திசையில் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தாள்.
குழந்தைக்கு யாரால் ஆபத்து என அந்த அதிர்ச்சியிலும் அவளால் கணிக்க முடிந்தது. சாரதாவின் கடந்த கால எண்ண ஓட்டங்கள் குழந்தையின் “அம்மா! அம்மா!” என்ற அழைப்பினால் தடைப்பட்டது.
அவனை அன்போடு அணைத்துக்கொண்டாள். இங்கு வந்தபின், அரவிந்த்தும் அவளும் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாக அவள் உணர்ந்தாள். நாட்கள் நகர்ந்தன.
ஒருநாள் அரவிந்தும், அவளும் ஓடிப்பிடித்து விளையாடினர். அவனைப் பிடித்துவிட்டதாகச் சொல்லி, ஆசையுடன் அள்ளி அணைத்துக் கொண்டாள். அவன் சிரித்துக்கொண்டே அவளிடமிருந்து திமிறி இறங்கி ,இங்குமங்குமாக ஓடி அவளை அலைகழித்தான். போல பாசாங்கு செய்தாள். அவ்வமையம் ராம் வந்தால் தங்கும் அறைக்குள் பிடி, பிடி, என்று அவளும் அவனைப் பிடித்துவிடுவது அரவிந்த் ஓடிவிவிடவே, அவனைப்பின் தொடர்ந்து சென்றவள்; அவ்வறைச் சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு திகைத்துப்போனாள். அதில் நர்மதாவும், ராமும் மணக்கோலத்தில்!
அதிர்ச்சியடைந்த அவள்; குழந்தையைத் தூக்கிகொண்டு பெரியவர்கள் முன்னிலையில் கோபாவேசமாக போய் நின்றாள். “இனி எனக்கு இங்கு வேலை இல்லை நான் போகிறேன்.” என்றாள். அதுவரை, அம்மா, பிள்ளை ஓடி விளையாடுவதை ரசித்துப்பார்த்துக் கொண்டிருந்த முருகானந்தம் சொல்லத் துவங்கினார்.
நான் பங்கஜத்தின் அண்ணன், நர்மதாவின் மாமனார். அன்று குழந்தையைப் பறிக்க முயற்சித்த புதியவனுக்கும்,உனக்கும் நடந்த போராட்டத்தை எதிரில் காரில் வந்துகொண்டிருந்த நாங்கள் பார்த்தோம். எங்கள் காரைப்பார்தவுடன் ஓட்டம்பிடித்தவனைப் பிடித்து போலிசில் ஒப்படத்தான் ரகுராம். அந்த குண்டன் நர்மதா அனுப்பிய அடியாள் என்பதை உடனேயே ஒப்புக் கொண்டான். பிறகு உன்னைத்தேடி வந்தோம். பிறகுதான் தெரியுமே! உனக்கு எங்களை அடையாளம் தெரியவில்லை என்றதும் நாங்கள்,ஒரு முடிவுக்கு வந்தோம் “எக்காரணத்தைக்கொண்டும் அவளுக்கு நாம் யார் என்பது தெரிய வேண்டாம் .நர்மதாவின் குணம் அவளுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. அரவிந்த்தை, தன் உயிரைப்பொருட் படுத்தாமல் காப்பாற்றி இருக்கிறாள். நாம் நர்மதாவின் உறவினர் எனத்தெரிந்தால், நம் உதவியை அவள் ஏற்றுக்கொள்ள மாட்டாள். அவளையும் அரவிந்த்தையும் நாம் பிரிய நேரிடலாம்.” என்பது எங்கள் முடிவாக இருந்தது.
அன்று மடியில் மயங்கி விழுந்த சாரதாவை வீட்டிற்கு அழைத்து வந்தபிறகு, பங்கஜத்தம்மாள் வீட்டிற்குச் சென்றனர். அங்கு,குழந்தையையும்,சாரதாவையும் காணவில்லை என்று வீடு அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. அப்பொழுது அங்கு வந்துவிட்ட நர்மதா தன்னுடைய நகைகளையும் காணவில்லை என்று சீன் போட்டுக் கொண்டிருந்தாள்.ரகு, வெறுத்தேபோனான்.ரகசியம் ரகசியமாகவே இருக்கட்டும் என அவர்கள் முடிவெடுத்தனர்..
இதையெல்லாம் முருகானந்தம் சொல்லச் சொல்ல சாரதா வாய் அடைத்துப்போனாள்.சாரதாவின் வேண்டுகோளின்படி சாரதாவின் குடும்பத்தினரும் அங்கே அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டனர். ரகுவின் தம்பி கண்ணனுக்கும் சாரதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அது இனிதே நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த நர்மதா, மணமக்களை வாழ்த்தவில்லை. ஆனாலும் அவளைப் பார்த்து சாரதா மலரச் சிரித்தாள்.சங்கு சுட்டாலும் வெண்மை தரும் மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்களே.