காணாமல் போகும் கற்பூரதீபம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 11,005 
 
 

பஞ்சபூதங்களுக்கும் ஐம்புலன்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம்பூத உடலின் ஐம்புலன்களை பஞ்சபூதங்களால் குளிப்பாட்டும் பொழுது உடலும் மனமும் ஒருசேர ஆரோக்கியம் பெறுகிறது. பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீரில் குளிப்பது நமது அன்றாட வழக்கம். வெற்று உடம்புடன் திறந்த வெளியில் இருப்பதால் நமக்கு கிடைப்பது ஆகாயக்குளியல் மற்றும் காற்று குளியல். உடம்பு முழுக்க சேற்றோடு வயலில் வேலை செய்வதால் கிடைக்கப்பெறுகிறது பூமி குளியல்.

அக்னி குளியல்………………!!!!?

அதற்காக நம் முன்னோர்கள் ஏற்படுத்தி தந்ததுதான் கற்பூரதீபம். கற்பூரதீபத்தை இரு கைகளால் தொட்டு முகத்திலும்தலையிலும் ஒற்றிக்கொள்வதன்மூலம் கிடைக்கப்பெறுகிறது அக்னி குளியல்.

இந்த ஐந்து குளியலும் ஒருசேர அனைவருக்கும் கிடைக்கப்பெறவேண்டும் என நம்முன்னோர்கள் ஏற்படுத்தி தந்ததுதான் கோயில்கள்.

கோயிலுக்குள்ளே மேலாடையை கழற்றச்சொல்வது, பின்புறம் உள்ள குளத்தில் முங்கி குளிக்கச்செய்வது, அங்கப்பிரதட்சனம் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியது, இறுதியில் கருவறையில் கற்பூரதீபத்தை ஒற்றிக்கொள்ள செய்வது அத்தனையும் இத்தகைய பஞ்சபூத குளியலுத்தான்.

தற்போது பெரும்பாலான கோயில்களில் கற்பூரதீபம் தடைசெய்யப்பட்டு நெய்தீபம் ஏற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளது. அதற்கு கூறும் காரணம் கற்பூரம் எரிவதால் உண்டாகும் புகை படிவதாகவும் மற்றும் நச்சுதன்மை உடையதாம்.

கதை தொடக்கம்

“டீ பானு துண்டை எடுத்துண்டு வாடி”

அந்த பழைய ஓட்டு வீட்டின் சிதிலமான பின்புற கிணற்றடியில் ஈரம் சொட்ட சொட்ட நடுங்கியபடி சுமார் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க சுவாமிநாத ஐயங்கார் உரக்க கூவி அழைத்தார்.

ஒல்லியான தேகம் கொண்ட பானு என்று அழைக்கப்பட்ட சுவாமிநாத ஐயங்காரின் மனைவி பானுமதி மடிசார் புடவையில் கையில் துண்டுடன் இடுப்பில் பத்து வருடம் கழித்து பிறந்த ஒரு வயது குழந்தை கிருஷ்ணனுடன் பின்கட்டுக்கு வேகமாக வந்தாள். துண்டை சுவாமிநாத ஐயங்காரிடம் தந்துவிட்டு

“ஏன்னா……. வீட்டில் நெய் தீர்ந்து போச்சு. குழந்தைக்கு சாதம் ஊட்டனும். மதியம் வரும்போது வாங்கிட்டு வான்னா……”

பழைய ஹெர்குலிஸ் சைக்கிளை தெருவில் இறக்கி ஏறி மிதிக்கத்தொடங்கினார். அகலமான மண்சாலை. இருபுறமும்…. பின்கட்டு, திண்ணை மற்றும் நீண்ட தாழ்வாரம் கொண்ட ஓட்டு வீடுகள் அது அக்ரஹாரம் என்று பறைசாற்றியது.

வரிசையான பூக்கடைகள், பூஜை சாமான் கடைகள் தாண்டி கோயில் வாசலில் சைக்கிளை வழக்கமாக நிறுத்தும் அதனிடத்தில் நிறுத்திவிட்டு கோயில் கோபுரத்தை அண்ணாந்து பார்த்தார். அந்த ஊரிலேயே பெரிய பெருமாள் கோயில் அது. கும்பாபிஷேகம் முடிந்து பத்து நாட்களே ஆன நிலையில் புதுப்பொலிவுடன் காட்சி தந்தது முன்கோபுரம். கோயில் வாசலில் உள்ள அறிவிப்பு பலகையில்

“இக்கோயிலில் பகவானுக்கு நெய்தீபம் ஏற்றுவது உகந்தது” என்ற வாசகத்தை படித்துக்கொண்டே உள்ளூர கற்பூரம் ஏற்றவேண்டாம் என்று சொன்னால் யாரும் கேட்கமாட்டார்கள்…. இவ்வாறு அறிவிப்பு செய்தால்தான் நம்புவார்கள் என நினைத்தபடி தான் கொண்டுவந்திருந்த பெரிய சாவியின் மூலம் கோயிலின் பிரம்மாண்ட வாசற்கதவினை திறந்து உள்ளே நுழைந்தார் தலைமை குருக்களான சுவாமிநாத ஐயங்கார்.

அவ்வளவாக வெயிலின் தாக்கம் இல்லாத காலை பத்து மணி.

வாசலில் ஒரு வெளிநாட்டு கார் வந்து நிற்பதை கருவறையில் இருந்தே கவனித்தார் ஐயங்கார். காரிலிந்து நடத்தர வயதை தாண்டிய கோட்சூட் அணிந்தவரும் அவருடன் பட்டுப்புடவையில் கையில் ஐந்து கிலோ அளவுள்ள நெய் டின்னோடு ஒரு பெண்மணியும் கோயிலுக்குள் வருவதை கண்டார்.

::2::

“ஏற்கனவே போர்டு மீட்டிங்குக்கு டைம் ஆயிடுச்சு. சீக்கிரமா நெய்யை தந்துவிட்டு வா. நமக்காக எல்லாரும் காத்துகிட்டு இருப்பாங்க” கூறிக்கொண்டே கருவறை நோக்கி சென்றார். நெய் காணிக்கை செலுத்துமிடம் என்ற இடத்தில் நெய்யை தந்துவிட்டு அப்பெண்மணியும் அவரை பின்தொடர்ந்தார்.

சற்று நேரத்தில் கோயில் வாசலில் சிவப்பு விளக்கு பொருத்திய இன்னோவா கார் வந்து நின்றது. அதனுள்ளிருந்து அந்த ஊரின் சட்டமன்ற உறுப்பினர் கருத்த உருவமுடைய காண்டீபன் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் தொண்டர்கள் புடைசூழ கோயிலுக்குள் நுழைந்தார்.

“வாடா காண்டீபா……….” தன்னுடன் பயின்றவன் என்ற உரிமையில் வாஞ்சையுடன் அழைத்தார் ஐயங்கார்.

ஐயங்கார் அருகே சென்ற காண்டீபன் ரகசியக்குரலில் “சுவாமிநாதா….. பப்ளிக்ல பேர் சொல்லி கூப்பிடாத……..”

கல்லூரியில் பயிலும் காலங்களில் தன்னுடன் நெருக்கமாக இருந்ததையும், நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ்நிலையில் இருந்த காண்டீபன் தன்னுடைய மதிய உணவை பகிர்ந்து கொண்டதையும், தற்போது பணம் பதவி வந்தவுடன் தன்னை தூக்கி எறிந்து பேசுவதையும் கண்டு உள்ளுக்குள் குபுக்கென கோபம் பொங்கியது ஐயங்காருக்கு. இருப்பினும் காண்டீபன் கூறுவதில் சிறிது நியாயம் இருப்பதாகப்பட்டது ஐயங்காருக்கு. ஆனாலும் அவரது மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

லேசாக பனி பெய்து கொண்டிருந்தது. இரவு பத்து மணி……….கோயில் மூடும் நேரம்.

காணிக்கை செலுத்தப்பட்ட நெய் டின்களும், பாட்டில்களும் கோயிலின் ஒரு அறையில் நிரம்பி வழிந்தது. அவ்வளவு நெய்யையும் தீபமாக ஏற்றுவது இயலாத காரியம் என்பதால் அவ்வூரில் உள்ள சிறு சிறு கோயில்களுக்கு நெய்யை பிரித்துக்கொடுத்தார். அப்படியிருந்தும் கணிசமான நெய் மீதமிருந்தது. வீட்டிற்கு தேவையான நெய்யை எடுத்துக்கொண்டு கோயில் வாசற்கதவை பூட்டிக்கொண்டு சைக்கிளை உருட்டிக்கொண்டே வீடு நோக்கி நகரத்தொடங்கினர்.

மறுநாள் இரவு ஒன்பது மணி……..கோயிலில் கூட்டம் சுத்தமாக வடிந்து விட்டிருந்தது. நழுவிய வேட்டியை இறுக்கியபோது இடுப்பில் செருகியிருந்த செல்போன் ஒலித்ததை கவனித்தார் ஐயங்கார். முற்றிலும் புதிய எண்…. ஆன் செய்து காதில் வைத்தார்.

“ஹலோ….சுவாமிநாதன் பேசறேன்..”

“சுவாமிநாதா…..நான் காண்டீபன் பேசறேன்…. உங்கூட கொஞ்சம் பேசனும். ஃப்ரீயா

இருக்கியா……..”

இந்த நேரத்தில் காண்டீபன் எதற்காக போன் பண்றான் என்ற குழப்பத்துடன்

“ஃப்ரீதான்……என்ன விஷயம் காண்டீபா……..”

“ஒன்னுமில்ல சுவாமிநாதா…… உங்க கோயில்ல நிறைய நெய் காணிக்கையா

வருதுனு கேள்விப்பட்டேன்.”

ஒரு பிரபல கல்பெனியின் பெயரைச்சொல்லி

“நெய் ஏஜென்சி எடுத்திருக்கேன். கோயில்ல நிறைய நெய் மீந்துபோகுதுனு கேள்விப்பட்டேன். அந்த நெய்யை எங்கிட்ட கொடு. உனக்கு பாதி விலை தரேன். என் கம்பெனியின் பெயரில் பேக் செய்து வித்துக்கிறேன்”

அதிர்ச்சியாக இருந்தது ஐயங்காருக்கு…………….பகவானுக்கு காணிக்கையாக வந்த நெய்யை விற்பதா……!!!

“என்ன சுவாமிநாதா யோசிக்கிற…….எவ்வளவுநாள்தான் நீயும் நாலு காசு சம்பாரிக்காம இப்படியே இருப்ப……நண்பன் என்ற முறையில் இதைச்சொல்றேன்…யோசிச்சு சொல்லு”

கோவிலில் உபரியாக தேங்கும் நெய் வீணாகத்தானே போகிறது. அதை காண்டீபன் சொன்னமாதிரி கொடுத்தால்தான் என்ன…? நினைத்தபடி சைக்கிளை வேகமாக மிதிக்கலானார். போன் செய்து சம்மதத்தையும் தெரிவித்துவிட்டார்.

மறுநாள் இரவு 10.15 மணி. வழக்கத்திற்கு மாறாக கோவிலில் காத்திருந்தார் ஐயங்கார். கையில் பெரிய பெரிய டின்களுடன் காண்டீபன் அனுப்பிய ஆள் உள்ளே வந்துகொண்டிருந்தான்.

::3::

காலம் உருண்டோடியது. சிறு சிறு கோவில்களுக்கு வழங்கும் நெய்யின் அளவும் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. தன் சக ஊழியர்களுக்கு பங்கு தந்தது போக கணிசமான ஒரு தொகை கையிலிருப்பதைக் கண்டு இனம்புரியா ஆனந்தம் அடைந்தார். ஒன்றரை வருடங்கள் கழிந்தது. ஒரு பெரும்தொகை கையிலிப்பதைக்கண்டு மிகவும் சந்தோஷப்பட்டார். ‘இந்த தொகையில் சொந்தமாக ஒரு இடம் வாங்கிப்போடனும்’ நினைத்துக்கொண்டிருக்கும்பொழுது இடுப்பில் செருகியிருந்த செல்போன் ஒலித்தது. மறுமுனையில் பானு.

“என்னாடி பானு………இந்த நேரத்திற்கு போன் பண்ற..”

“ஏன்னா…….உடனே வீட்டுக்கு வாங்கோ….”

“என்னாச்சும்மா……?”

“நம்ம பையன் கிருஷ்ணன் மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டான். எந்திரிக்கவே மாட்டேங்கிறான். சீக்கிரமா வாங்க”

அந்த அரசு மருத்துவமனையின் அவசரசிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சூழ்ந்திருக்க முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் சுற்றிலும் பல கருவிகளின் நடுவே வாடிய கீரைத்தண்டாய் படுத்திருந்தான் இரண்டரை வயது கிருஷ்ணன். கண்ணீருடன் அதன் வாசலில் ஐயங்காரும் பானுவும்.

டாக்டர் வெளியே வருவதைப்பார்த்த ஐயங்கார் நேராக சென்று அவர் காலைப்பிடித்துக்கொண்டார். “டாக்டர் எப்படியாச்சும் என் குழந்தையை காப்பாத்துங்க”

சற்றே பின்னால் நகர்ந்து விலகிய டாக்டர் “கவலைப்படாதீங்க… எல்லா டெஸ்ட்டும் எடுக்க சொல்லியிருக்கேன். ரிப்போர்ட் வரட்டும். என்னன்னு கண்டுபிடிச்சி சிகிச்சையை ஆரம்பிச்சிடலாம்”.

ஒன்றரை நாள் கடந்தும் கிருஷ்ணன் கண்விழிக்கவில்லை. மேலும் கோமா ஸ்டேஜிக்கு போய்விட்டதாக அறிந்ததும் துடிதுடித்துப்போய்விட்டார் ஐயங்கார். டாக்டர் அறையை நோக்கி ஓடினார். ஐயங்கார் வருவதைப்பார்த்த டாக்டர் “சார்……..உங்க பையனுக்கு எல்லா டெஸ்ட்டும் எடுத்து பார்த்தாச்சு. எல்லாமே நார்மலா இருக்கு. என்ன வியாதின்னே கண்டுபிடிக்க முடியவில்லை. இனிமேலும் தாமதிக்க வேண்டாம்.” அந்த பெரிய தனியார் மருத்துவமனையின் பெயரைச்சொல்லி “உடனே அங்க அட்மிட் பண்ணுங்க”.

ஐந்து மாடி கட்டிடம். சுற்றிலும் பெரிய புல்தரை. ஆங்காங்கே சிறியதும் பெரியதுமான மரங்கள். ஐந்து நட்சத்திர ஓட்டலை நினைவுபடுத்தும் விதமாக அமைந்திருந்தது அந்த மருத்துவமனை.

கிருஷ்ணனை அட்மிட் செய்யும்போதே ஒரு பெரும் தொகையை கட்டணமாக செலுத்தச்சொன்னார்கள். மேலும் ஒரு அரைநாள் கழிந்தும் கிருஷ்ணனின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேன்மேலும் ஏராளமான சோதனைகள் நடத்தப்பட்டு ஐயங்காரிடம் இருந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக கரையத்தொடங்கியது. அவ்வாறிருந்தும் கிருஷ்ணன் கண்விழித்தபாடில்லை. இதுசம்மந்தமாக வெளிநாட்டு சிறப்பு மருத்துவர் ஒருவரின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்திருப்பதாகவும் அதற்கு கணிசமாக தொகை ஃபீஸாக தரவேண்டும் என்றும் கூறிவிட்டார் தலைமை மருத்துவர்.

இடுப்பில் நழுவிய வேட்டியை இறுக்கியபடி அழுது அழுது ஓய்ந்த கண்களுடன் மருத்துவமனையின் வாசலில் வந்தமர்ந்தார். எதிரே பரப்பான பெரிய சாலை. அதைத்தாண்டி பெரிய கோபுரத்துடன் சிவன் கோவிலைக்கண்டார். விறுவிறுவென அதை நோக்கி கண்மூடித்தனமாக நடக்கத்தொடங்கினார். சாலையில் வாகனங்கள் கிறீச் கிறீச்சென பிரேக்கிட்டு நின்றன. நாகரிகமாக சிலரும் கோபமாக சிலரும் மிக மோசமான வார்த்தைகளால் சிலரும் திட்டித்தீர்த்தனர். எதுவுமே அவர் காதில் விழுந்ததாக தெரியவில்லை. கோவிலுக்குள் நுழைந்தார். கோவிலில் அதிக கூட்டமில்லை. நேராக கருவறை நோக்கி விரைந்தார். இரு கைகளையும் கூப்பியபடி

“சர்வேஸா…. என் குழந்தையை காப்பாற்று. நான் ஹரிக்கு பண்ண துரோகத்திற்கு என்

குழந்தையை எங்கிட்டயிருந்து பிரிச்சிடாத……..”

பொத்தென்று கருவறை வாசலில் சாஷ்டாங்கமாக விழுந்தார். கருவறை படிக்கட்டில் முன் மண்டை மோதியதில் லேசாக இரத்தம் கசியத்தொடங்கியது. கோயிலில் இருந்த சொற்ப கூட்டமும் அவரை வினோதமாக பார்த்தனர்.

::4::

இடுப்பில் செல்போன் சிணுங்கியது. மறுமுனையில் பானு

“ஏன்னா…………..” நடுக்கத்துடன் பானுவின் குரலை கேட்டதும் புரிந்துவிட்டது ஐயங்காருக்கு. கிறுகிறுவென தலைசுற்றியது. நடுங்கும் அவர் கைகளிலிருந்து செல்போன் நழுவி கீழே விழுந்தது. பூமி அவர் காலடியிலிருந்து நழுவி செல்வதாக உணர்ந்தார். தொப்பென்று கருவறை தூணில் சாய்நது உட்கார்ந்தார்.

“ ஆண்டவா……நான் செய்தது தப்புதான். அதற்காக எனக்கு இவ்வளவு பெரிய

தண்டனையா…..? பெருமாளே…..இனிமேல் நான் எப்படி உயிர்வாழ்வேன்.”

தனக்குத்தானே புலம்பிக்கொண்டிருந்தார்.

தன் தோளை யாரோ பலமாக உலுக்கியதில் லேசாக கண்திறந்து பார்த்தார். கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் “ஐயரே…. ரொம்ப நேரமா உங்க செல்போன்ல யாரோ ஹலோ ஹலோன்னு கத்திகிட்டு இருக்காங்க” கூறிக்கொண்டே செல்போனை அவர் கையில் திணித்தார். மெதுவாக அதை காதில் வைத்தார். பானுவின் குரல்:

“ஏன்னா….எங்க இருக்கீங்க.. டாக்டர் உங்களை கூப்பிடறார்.. உடனே வாங்கோன்னா”

கிர்ரென்று ஏசி ரீங்காரமிட ஜில்லெனெ டாக்டரின் அறைக்குள் நுழைந்தார். ஆரஞ்சு தோலை உரித்ததுபோல் வெளிர் வெண்மை நிறம். நீள்வடிவ சதுரமான முகம்.

“வாங்க மிஸ்டர் சுவாமிநாதன்…..உட்காருங்க”

எதிரே இருந்த இருக்கையை காட்டி ஆங்கிலத்தில் கூறினார் அந்த வெளிநாட்டு மருத்துவர். தன் கண் கண்ணாடியை சரிசெய்தபடி இருக்கையில் பின்னால் சாய்ந்து உட்கார்ந்தபடி

“உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். ஆங்கிலத்தில் பேசலாமா…….?” என ஆங்கிலத்திலேயே வினவினார்.

“பேசலாம் சார்….எனக்கு ஆங்கிலம் புரியும்” குழப்பத்துடன் ஆங்கிலத்திலே பதில் தந்தார் ஐயங்கார். தொண்டையை செருமிக்கொண்ட டாக்டர்:

“மிஸ்டர் சுவாமிநாதன் உங்களோட மகனுக்கு என்ன வியாதின்னு கண்டுபிடிச்சிட்டேன். கவலைப்படாதிங்க…..அவனை காப்பாத்திட்டேன். அபாய கட்டத்தை தாண்டிவிட்டான்.”

“ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்” கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டார் ஐயங்கார்.

“உங்களோட மகனோட இரத்தமாதிரியை தீவிரமா சோதித்தபோது அதில் எத்தனால் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பது தெரிந்தது. அது ஒன்றும் கொடிய விஷத்தன்மை கொண்டதல்ல. ஆனாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அந்த வேதிப்பொருளால் நரம்பு மண்டலம் பாதிக்கும். சரியான சிகிச்சை அளிக்கைவில்லையெனில் கோமா நிலைவரை கொண்டுசெல்லும். ஏன்? மரணம் கூட நிகழலாம். உங்களோட மனைவியிடம் கடைசியாக பையனுக்கு என்ன சாப்பிட கொடுத்திங்கனு கேட்டேன். சாதத்தில் நெய் கலந்து ஊட்டியதாக கூறினார்கள். அந்த நெய்யை கொண்டு வரச்சொல்லி சோதித்துப்பார்த்தேன். நெய்யில் புதியதாக ஒரு பொருள் கலந்திருப்பது தெரிந்தது. தீவிரமாக சோதித்தபோது அது கற்பூர துகள்கள் என்று தெரிந்தது. யாரோ கற்பூரத்தை பொடி செய்து கலந்திருக்கிறார்கள். தற்போது கற்பூரங்களில் எத்தனால் என்ற வேதிப்பொருள் கலந்து தயாரிக்கிறார்கள்” நீண்ட உரையை முடித்தார் டாக்டர்.

கோவில் வாசலில் சைக்கிளை அதனிடத்தில் நிறுத்திவிட்டு முந்தைய நாள் தான் எழுதிய அறிவிப்பு பலகையை பார்த்தார்.

“நெய்தீபம் ஏற்றவரும் மற்றும் நெய் காணிக்கை செலுத்தவரும் பக்த கோடிகள் அனைவரும் அதில் கற்பூரத்தை பொடி செய்து கலப்பது இப்பகவானுக்கு உகந்ததாகும்”.

Print Friendly, PDF & Email

2 thoughts on “காணாமல் போகும் கற்பூரதீபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *