அத்தியாயம் 7 – 8 | அத்தியாயம் 9 – 10 | அத்தியாயம் 11 – 12
அத்தியாயம் – 9
“குடலைப் பிரட்டும் துர்நாற்றம்.
பொறுத்துக் கொள்ள முடியாமல் மூக்கைத் துணியால் மூடிக்கொண்டு பிரேதம் சுமந்தனர்.
வழக்கமான திக்கில்தான் இறுதியாத்திரை நகர்ந்தது.
கண்ணில் விளக்கெண்ணை கொட்டிக்கொண்டு கூர்ந்து கவனித்துக்கொண்டே முன்னே போனார் மாதய்யா.
முத்தனூர் எல்லையில் ஜனக்கூட்டம் சற்றே அதிகமாய் இருப்பதாக உணர்ந்தார் மாதய்யா.
பிரேதத்தை முன்னே விட்டுப் பின்னே சென்றார்.
அந்தனூர் எல்லை முடிந்து , முத்தனூர் எல்லைத் தொடக்கத்தில் பிரேதம் மறிக்கப்பட்டது.
“எங்கள் ஊர் வழியா போக விடமாட்டோம்…” வழியை அடைத்து நின்றனர் இளவட்டங்கள்.
இது தானே கூடிய கூட்டமல்ல. வீரமுத்துவால் கூட்டப்பட்ட கூட்டம்.
கூட்டினாலும் கூட்டப்பட்டாலும்… கூட்டத்துக்கு சக்தி அதிகமல்லவா…!
மாதய்யா முன்னே வந்தார்.
“…………….” அமைதியாக நின்றார்.
அமைதியாக இருந்ததை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தரக்குறைவாகப் பேசினார்கள் இளவட்டங்கள்..
இவர்களுடன் பேசக்கூடாது. காரியம் கெட்டுவிடும் என்பதை உணர்ந்தார் மாதய்யா.
அந்தக் கூட்டத்துக்கு தலைவன் போல் இருந்த இளைஞன் அருகில் சென்றார்.
“தம்பீ… ஊரு நாட்டாமை பரந்தாமனை வர சொல்லு. நான் அவருகிட்ட பேசிக்கிறேன்…”.
“யாரும் வர மட்டாங்க. நான் சொன்னா சொன்னதுதான்.”
“ அண்ணன் பேச்சை மீறி எங்க வளீல வந்தா நல்லா இருக்காது சொல்லிப்போட்டேன்…” என்றது ஒரு முறுக்கு மீசை இளசு.
“இனிமேல எங்க ஊர் வழியாக உங்க ஊர் பிரேதங்கள் போகக்கூடாது. அதுதான் எங்க ஊர் பஞ்சாயத்து முடிவு…” என்றான் ஒரு ஹிட்லர் மீசை இளைஞன்.
“எங்க ஊருக்குள்ளே வரக்கூடாது…! வரக்கூடாது…! வரக்கூடாது…!!!” கோஷம் போட்டுக்கொண்டு பாதையை அடைத்து உட்கார்ந்து தர்ணா பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.
இனிமேல் பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தார் மாதய்யா…
“பாடைய திருப்பி ஊருக்குள்ளே கொண்டு போங்க…!”
உத்தரவு போட்டார்.
பிணம் தூக்கிகளும், பின்னால் வருபவர்களும், எப்படி வழி என்று புரியாமலும், மாதய்யாவின் கோபம் உணர்ந்து எதுவும் கேட்காமலும் அனிச்சையாய்த் திரும்பினர்.
“முத்தனூர்ப் பாதை வழியாத்தானே காலங்காலமா போய்க்கிட்டிருக்கு…!”
“வருஷக்கணக்குல வழக்கமாப் போறதை திடீர்னு தடுத்துற முடியுமா… கேக்கறேன்..!.”
“நேத்துப் பேஞ்ச மழையில இன்னைக்கு முளைச்ச காளான் கணக்கா. எவனோ நாலு விடலைங்க போகப்படாதுன்னு மறிச்சதும்… இப்பிடி ஊருக்குள்ளே பொணத்தைக் திருப்பிக் கொண்டு வரானே. ஊரு வௌங்குமா…!”
காலையிலேயே ‘ஒரு காரியம் ஆச்சு’ என்ற கடமைக்காக, குருக்கள் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்துவிட்டு, ஏதோ வேலையாக டவுனுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார் கிச்சாமி.
“நரிக்கு நாட்டாமை கொடுத்தாப்லன்னா இருக்கு… இந்த மாது செய்யறது…”
கிச்சாமி கைத்தடியை ஊன்றிக்கொண்டு, வீட்டுக்குள்ளே நிற்கும் யாரிடமோ சொன்னது மாதய்யாவின் காதில் தெளிவாக விழுந்தது.
மாதய்யா ரௌத்ரமானார்.
“ஸ்வாமி… கிச்சாமி ஸ்வாமி… என்ன சொன்னேள்…? இன்னொருவாட்டி சொல்லுங்கோ…”
“……………………” எதிர்பாராத தாக்குதலால்,புலிக்கு முன் ஆடாய் ஒடுங்கினார் கிச்சாமி.
“நான் நரிக்கு நாட்டமை கொடுத்தாப்ல ஆடறதை நீர் என்னத்துக்கு பார்க்கணும்னேன்.”
குபீர் பாய்ச்சலாய்ப் பாய்ந்தார்.
அதோடு விடவில்லை.
“வாகனத்தைத் தூக்கிண்டு கிச்சாமி பின்னாலயே போங்கோ… அவர் வழி சொல்லுவார்…!”
சொல்லிவிட்டு விரு விருவென்று விலகிக்போவதுபோல பாவனை செய்தார் மாதய்யா.
எதிர்பாராத திடீர்த் தாக்குதலால், கிச்சாமிக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போய்விட்டது.
மாதய்யாவை விட ஏழெட்டு வயது அதிகமான கிச்சாமிக்கே இந்த கதி என்றால் வேறு யார் மாதய்யாவைக் கேட்கமுடியும்…?
“பாதி வழி போன கட்டை, திரும்பி வருதே, ஊரு வெளங்குமா…?”
“ஊருக்கு ஏதோ கேடுகாலம்தான் வந்துருக்குடீ…! பிரேதம் இப்படி அலையறதே…!!”
மேலச் சந்தில் நுழைந்தபோது, “அச்சச்சோ…!!! எல்லைக் கோவில் இருக்கே… அது வழியாவா தூக்கிண்டு போப்போறா…? அது ஆகாதாச்சே…!”
“பல வருஷங்களுக்கு முன்னால எல்லையம்மன் கோவிலுக்கு முன்னால தூக்கிண்டு போனப்போ, தூக்கின நாலுபேருக்கும் கை கால் விளங்காம போயிடுத்தாமே…!” பிரேதத்தின் பின்னால் வந்தவர்களில் ஒருவர் நாலுபேர் கேட்கும் அளவுக்கு சத்தமாக ரகசியம் பேசினார்.
மாதய்யாவுக்கு ஏன் இந்த வீண் வேலை, வாழுகிற வீட்டின் வளர்ந்து நிற்கும் பேயத்தியைக் கூட வெட்ட யோக்யதை இல்லாத சோம்பேறிகள், வீட்டின் சாத்திய ஜன்னல் பின்னாலிருந்து கதைத்தார்கள்.
முக்கால்வாசி மூடிய வாசல் கதவின் பின்புறத்திலிருந்தபடி வாய்க்கு வந்தபடி வம்பு பேசினார்கள்.
மொட்டை மாடியில் மறைவாக நின்றுகொண்டு பழுது சொன்னார்கள்.
தமக்குத் தெரிந்ததையும், தாம் நினைத்ததையும், தங்கள் அபிப்ராயங்களையும், ஒளிந்து மறைந்து புறம் பேசினார்களே தவிர நேரே வந்து பிரச்சனைகளை எதிர்கொள்ள எவரும் வரவில்லை.
மேலச்சந்து திரும்பியதும், நாய்க்கர் ரைஸ் மில் தாண்டிப் போனபோது பிணம் தூக்கிகளுக்கு உதறல் கண்டது.
எல்லையம்மன் கோவில் திருப்பத்தில் கலியன் காத்திருந்தான்.
கோவிலுக்குப் பின்புறம், மாதய்யா காணியில் ஆள் படைகளைக் கொண்டு விடிகாலை முதல் ஆட்களை வைத்து நன்கு செப்பனிட்டு வைத்திருந்தானல்லவா, அந்தப் பாதையில் பிரேதம் சென்றது.
“இன்னிக்கு ரோசப் பட்டுக்கிட்டு தன்னேட பொன் விளையற பூமீல பிரேதத்தை தூக்கிப் போயிட்டாரே… விளையற பூமிக்குக் காட்டுற மரியாதையா இது…”
“ஏன்…? வெளையற பூமில பாடை போனா அச்சானியமானு கேக்கறேன்…”
“இதுக்கப்பறம் இந்த ஊர்ல தலை வுளுந்தா இந்த வளியாப் போவ அனுமதிப்பாரா அவுரு…?”
“இப்போத் தரிசாக் கெடக்கு… கொண்டு போயிட்டாரு… விளையற காலத்துல இப்படி அபரகாரியம் நடந்தா நட்ட வயல்ல போக விட்ருவாரா… கேக்கறேன்…?”
“ஆத்தரத்துல கூடாது’ன்னு பக்கத்து ஊரானுங்க சொன்னதும், அப்படியே ரோஷம் பொத்துக்கிட்டு வருதாக்கும்…”
“அதானே…! நம்ம சரக்கு சரியில்லங்கும்போது, நாமதான் கொஞ்சம் தழைஞ்சிக், குழைஞ்சிக், தணிஞ்சிக் குனிஞ்சிக் குழையடிச்சிக் கூழக்கும்புடு போட்டு, அய்யா அம்மானு அனுசரிச்சிக் கெஞ்சிக் கூத்தாடி, சரிக்கட்டிக்கிட்டுல்ல போவணும்… ரோசப்பட்டா ஆவுமா…?”
“ஊரு நல்லா இருக்க வேணாமோ…? எல்லைதாண்டி உசுரு போனா ஊருக்குள்ளயே கொண்டுவராதேங்கறது தர்ம சாஸ்த்ரம்.”
“பில்லட்லா பத்மநாபய்யா உசுரு டவுன் பெரியாஸ்பத்திரிலதானே போச்சு…”
“அவரை ஊருக்குள்ளே கொண்டு வரலையே… அவருக்கு இல்லாத செல்வாக்கா…”
“பாடியை ஊருக்குள்ளே கொண்டு வந்ததே தப்பு.”
“ஒரு தப்பு நடந்துதேனு பார்த்தா முதல் கோணல் முற்றும் கோணலாயிடுத்தே…”
“பெரிய புரட்சி பண்ணிப்பிட்டதா நினைப்பு…”
“அகால மரணம்னாலே, செத்தவன் மனசுல என்னென்ன ஆசைங்க இருந்ததோ அதைத் தீத்துக்கறவரைக்கும் ஆவியாச் சுத்தும்னு சொல்லுவா.”
“இந்த மரணத்துல பிரேதமாவே ஏகமாச் சுத்தியிருக்கே…”
“ஊருக்கு என்னென்ன கேடுகாலம் வரப்போறதோ…”
இன்னும் என்னென்ன கன்றாவியெல்லாம் பாக்க இருக்கோ…!”
“நாளைக்கு தோப்பனார் சிரார்த்தம்… அதனால அபர காரியத்துல கலந்துக்கக் கூடாது” என்று வீட்டில் இருந்தவர்கள்…
“அடுத்த மாசம் பொண்ணு கல்யாணம் வெச்சிருக்கேன். சாவு வீட்டுக்குப் போகப்படாது…” என்று துக்கத்துக்கு வராமல் இருந்தவர்கள.
“என் வீட்டு நல்லது கெட்டதுக்கு அவாத்துலேந்து, யாரும் வரலை… நாம மட்டும் போகணுமோ…?” என்று துஷ்டியைத் தவிர்த்தவர்கள்.
“அவசரமா ஊருக்குப் போற வேலை…” என்று பொய் சொல்லிவிட்டு வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு வராமல் ஏமாற்றியவர்கள்.
கிச்சாமி போல ஒரு ஃபார்மாலிட்டிக்காக விடிந்தும் விடியாம வந்து
“இப்படி ஆயிடுத்தே..!.”
“இப்படியா ஆகணும்…?”
“இப்படி ஒண்ணு ஆகும்னு கனவுல கூட நினைக்கமுடியுமா…?”
என்று பொத்தாம் பொதுவாக விசாரித்துவிட்டு வீட்டில் முடங்கியவர்கள்.
இப்படியாக ஏதாவது காரணம் காட்டி வராமல் இருந்வர்கள் ‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ…’ என்று பேசிய பேச்சுக்களை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை மாதய்யா.
‘இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.
தேடிச் சோறு நிதம் தின்று
சின்னஞ்சிறு கதைகள் பேசி,
மனம் வாடித் துன்பமிக உழன்று,
பிறர் வாடப் பல செயல்கள் செய்து.
நரை கூடிக் கிழப் பருவமெய்தி,
கொடுங்கூற்றுக்கெனப் பின் மாயும் வேடிக்கை மனிதர்கள் இவர்கள்.
நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை பேசும் வாய்ச்சொல் வீரர்கள் ’
அவர்களை அலட்சியப்படுத்தினார்.
இரண்டு எதிர்பாரா மரணங்கள், மாதய்யாவின் அறுவடை வேலையை காலதாமதம் செய்துவிட்டது.
ஆயிற்று… இன்று மாதய்யாவின் வயல்களில் இரண்டாம் பாட்டம் அறுப்பு தொடங்கியாயிற்று…
பிச்சைக்கண்ணுவின் தலைமையில் அருப்பு கோஷ்டி வேலையைத் தொடங்கிவிட்டது.
கலியன் மேற்பார்வை செய்வதாகப் பேர்தான்… அவனும் அருப்பறிவாளோடு வயலில் இறங்கிவிட்டான்.
வேலை தொடங்கிய விதமே நேர்த்தியாக இருந்தது.
பலமுறை ஒத்திகைப் பார்த்துப் பார்த்து நிபுணத்துவம் அடைந்துவிட்ட நாடகக் கதாபாத்திரம்போல், அளவாக, கச்சிதமாக, நறுக்குத் தெரித்தாற்போல், பளிச் என்று துடைத்து வைத்தாற்போல், பிசிர் இல்லாமல், கச்சிதமாகத் தொடங்கித், சிறப்பாகத் தொடர்ந்தது அறுவடை.
இருபது அறுப்பாட்கள்.
சுறுசுறுப்பாக அறுவடை செய்தார்கள்.
ராணுவத்தில் கமாண்ட் கேட்டவுடன், படை முழுவதும் ஒரே மாதிரி கால் தூக்கி அடித்து ஓசை எழுப்பி, கைத் தூக்கிச் சல்யூட் பண்ணுவது போல அப்படி ஒரு கச்சிதம்.
ஒரு ஆள் முன்னே, ஒருத்தன் பின்னே என்று இல்லாமல் அறுப்பாட்கள் ராணுவத்தினர் அணிவகுப்புப் போல முன்னேறினர்.
எல்லா அறுப்புக் தாளும் அடியறுப்பாக, ஒருத்தரே வயல் பூராவும் அறுத்தாற்போல் அப்படி ஒரு கச்சிதம்.
தாள் அடி இத்தனைதான் விடவேண்டும் என்று அளவெடுத்து கதிர்களின் அடிப்பாகத்தில் மார்க் செய்து அறுத்தாற்போல் அப்படி ஒரு நேர்த்தி, பர்பெஃக்ஷன்.
ஊரில் காளிமுத்து கோஷ்டி, முனியன் கோஷ்டி, தனபால் கோஷ்டி… என மேஸ்திரிகளின் தலைமையில் பெரும்பாலான விவசாயக் கூலிகள் செயல்பட்டார்கள்.
நிலக்காரர்கள், நிலச் சுவான்தார்கள் எல்லோரும் மேஸ்திரியிடம்தான் பேசுவார்கள்.
கூலி நிர்ணயம், வரும், போகும் நேரம், என எல்லாவற்றையும் பேசி மேஸ்திரிக்குத் திருப்திப்பட்டால் கோஷ்டியை அழைத்துச் செல்வார்.
ஒரு கோஷ்டி பேசி, வேண்டாம் என்று மறுத்துவிட்டால் அநேகமாக அந்த முதலாளிக்கு ‘கோஷ்டி அறுப்பு’ அமையாது. ‘தனியாள் அறுப்பு’தான் அமையும்.
‘தனியாள் அறுப்பு’ என்றால்,
‘நாம உழைக்கறோம் எதுக்கு மேஸ்திரிக்கு கமிஷன் கொடுக்கணும்…’ என்று கொள்கைப் பிடிப்போடு உள்ள கூலிகள்.
‘இவன் சங்கம் சேத்துடுவான்…’ என்று எல்லா மேஸ்திரிகளாலும் ஒதுக்கப்பட்ட கூலிகள்.
மேஸ்திரியின் கண்டிப்புக்கு பயந்து ‘இது நமக்கு ஒத்து வராது’ என்று, கோஷ்டியிலிருந்து விலகி வந்த கூலிகள்.
இப்போதுதான் வேலை கற்றுக்கொள்ளும் கத்துக்குட்டிக் கூலிகள்.
வயதாகிவிட்டதால் வேகம் குறைந்துவிட்ட கூலிகள்
‘இயல்பாகவே யாரோடும் ஒத்துப் போகாத கூலிகள்.
இப்படியாக ஏதோ ஒரு காரணத்தாலோ, எதோ ஒரு நிலையாலோ, எந்தக் கோஷ்டியிலும் சேராமல் தனித்து நிற்கும் விவசாயக்கூலிகள்.
அரசியலில் சுயேச்சை வேட்பாளர்கள் மாதிரி, அறுப்பறிவாளை தீட்டிக்கொண்டு, வயல் பக்கம் வருவார்கள்.
இது அறுப்புக்கு மட்டுமில்லை. விதைப்பு, நாற்று பறித்தல், நடவு, களையெடுப்பு என அனைத்து விவசாய வேலைகளுக்கும் பொருந்தும்.
ஆள் தட்டுப்பாடு ஏற்படும்போது அவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
தனியாள் அறுப்புக்கு இன்னார் ஆள் தேடுகிறார்கள் என்று அவர்களுக்கு எப்படியோ தெரிந்துவிடும்.
இப்படி உள்ள சுயேச்சைக் கூலிகள் எல்லோரும் ஒரு வயலில் இறங்கி வேலை செய்வார்கள்.
ஊரில் எல்லோரும் வாங்குகிற கூலியை வாங்கிக் கொள்வார்கள்.
வேலை முடிந்ததும், அன்றைய கூலியை ‘மேஸ்திரி கமிஷன்’ இல்லாமல் கறாராக வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள்.
மறுநாள் வருவார்களா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
“வேலை இருக்குங்களா…?” என்று கேட்டுக்கொண்டு வந்து நிற்கும் கூலிகளிடம், கறாராகப் பேசிக்கொண்டு வயலில் இறக்க வேண்டும்.
இல்லாவிட்டால் முதலாளிகளுக்குக் கடுக்காய் கொடுத்துவிடுவார்கள்.
சுலபமாக மூணுபிடித்து எண்ணி, முதலாளித் தலையில் முக்காடு போட்டுவிடுவார்கள்.
சுதாரிப்பாக இல்லையென்றால், குப்புறத் தள்ளி, முதலாளி முதுகில் கரிக்கோடு கிழித்து ஆடுபுலியாட்டம் ஆடிவிடுவார்கள்.
தனியாள் வைத்து அறுப்பதால் ஒரு விதத்தில் முதலாளிகளுக்கு லாபம்தான் என்றாலும், அன்றன்றைய வேலை சிறப்பாய் முடியும் வரை வயிற்றில் நெருப்புக் கட்டிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.
சரியான சமயத்தில் ஈரத்துண்டைச் சுற்றி கழுத்தை நெறித்து விடுவார்கள்.
தனியாள் செய்த வேலையை கோஷ்டிகள் தொடமாட்டார்கள். எழுதப்படாத கிராமத்துச் சட்டங்களில் இதுவும் ஒன்று.
தொப்ளானை வைத்து விவசாயம் செய்தபோதெல்லாம் “கோஷ்டி சரிப்படாது… கூலி கொடுக்கற நாம சொல்றதை காதுலயே போட்டுக்கமாட்டானுங்க. மேஸ்திரி சொன்னதைத்தான் சென்வானுக…! தனி ஆளுவளையே கூப்புடு…” என்பார் மாதய்யா.
ஊரில் தரும் கூலியை விட எப்போதுமே அதிகமாகத் தரும் தாரளமான கை மாதய்யாவுடையது.
எனவே, ‘மாதய்யா எப்போது நடவு தொடங்குவார்… எப்போது அறுப்பு தொடங்குவார்…’ என்று காத்திருந்து வந்து ஒட்டிக்கொள்வார்கள் கூலிகள்.
“பிச்சைக்கண்ணு கோஷ்டிக்கு சொல்லிப்புடறேன்க… வேலை நறுவிசா இருக்கும்… இந்த முறை பாருங்க மனசுக்குப் பிடிக்கலேன்னா மொதநாளோட கணக்கு தீத்துப்புடுவோம்…”
கலியன் எடுத்த எடுப்பில் சொல்லிவிட்டதால் ‘அதையும்தான் பார்ப்போமே…!’ என்று தலையாட்டிவிட்டார்.
இப்போது நேரில் பார்க்கும்போது மனசுக்கு மிகவும் நிறைவாக இருந்தது.
அறுப்பறுக்கும் தினுசு, அழகு, வேகம், கணக்கு, சுத்தம், பாங்கு, என எல்லாமே திருப்திகரமாக இருந்தது மாதய்யாவுக்கு.
அறுப்பு முடிவை நெருங்கிக்கொண்டிருந்தது.
‘அரி’காச்சலுங்களா…? கட்டு கட்டிப்பிடலாங்களா…?” கேட்டான் பிச்சக்கண்ணு.
அரிக் காச்சல் என்றால் (அறுப்பறுத்த பின் ஒரு நாளைக்கு வயலிலேயே கதிர்களை வெய்யிலில் காய விடுவது. மறுநாள் விடிகாலையில் கட்டு கட்டுவது.
“அரிகாச்ச வேண்டாங்கய்யா…! கருது பொலப்பொலன்னு நெல்லுக் கொட்டுது பாருங்க…”
ஒரு ‘நெற்கதிர்’ எடுத்து ஆட்டிக் காட்டினான் கலியன்.
“சரி… கட்டு கட்டிப்புடச்சொல்லு…”
“கலியன் சொல்றதுதான் சரிங்கய்யா… பத்து நாளுக்கு முன்னே அறுக்கவேண்டிய கருது… அரி காச்சத் தாங்காதுங்க…” என்றான் மாணிக்கமும்.
“அதான் கட்டச் சொல்லிட்டனே…!”
“அய்யா…! நீங்க போயி பூசர (பூவரசு) களத்துல போயி இருங்க. கட்டு ஏத்தி விடுறேன்.” என்றான் கலியன்.
களத்து மேட்டில் நிழல் பரப்பிக் கொண்டிருக்கும் வேப்பமரத்தின் அடியில் போடப்பட்டிருந்தக் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்தார் மாதய்யா.
மருந்துக்கு, ஒரு பூவரசு மரம்கூட இல்லாத இந்தக் களத்துக்கு ‘பூசர களம்’ என்று காரணம் தெரியாமலே எல்லோரும் அழைப்பதை நினைத்து சிரிப்பு வந்தது அவருக்கு.
அந்தப் பெயர் வந்த வரலாற்றை நினைத்துக் கொண்டே எதிரே அறுப்பாட்கள் தங்கள் சாப்பாட்டுகூடைகளை வைத்துள்ள ‘வப்பாட்டிக் கட்டை’ என்று அழைக்கப்படும் அந்த மேடையைப் பார்த்தார். பழைய நினைவுகளில் மூழ்கினார்.
கட்டுக்கள் வரத்தொடங்கவில்லை.
மாதய்யா நீண்ட நேரம் கட்டிலில் உட்காருகிற ரகம் இல்லை. இன்று ஏனோ தெரியவில்லை அப்படி உட்கார்ந்திருந்தார்.
வெற்றிலைச் செல்லத்தைத் திறந்து, வெற்றிலையில் சுண்ணாம்புத் தடவி, மடித்து, விரலிடுக்கில் வைத்துக்கொண்டு, வாயில் சீவல் போடும் வரை உட்காருவார்.
விரலிடுக்கிலிருக்கும் வெற்றிலைப் பட்டியை வாயில் போடும் நேரம், எழுந்துவிடுவார்.
“ஒரு பத்து நிமிசம்தான் ஒக்காருங்களேன்… அங்கியும் இங்கியும் திரிஞ்சிக்கிட்டே இருக்கீங்களே… வயசு என்ன கொஞ்சமாவா ஆவுது…”
இதற்கு முந்தைய அறுப்பில் தொப்ளான் கேட்டதும்,
“அட போடா… இப்படி ஓடியாடித் திரியறதுனாலதான் வயசானாலும் கட்டுக் குலையாம இருக்கேன்…”
அவனுக்குச் சொன்ன பதிலும் நினைவில் வந்து போயிற்று.
இன்று கட்டிலில் உட்கார்ந்த மாதய்யாவுக்கு வெற்றிலை போட்டுக்கொள்ளக் கூடத் தோன்றவில்லை. மேல் துண்டை சுருட்டி தலைக்கு வைத்துக் கொண்டு படுத்தார்.
கட்டு வரத் தொடங்கிவிட்டது.
மாதய்யாவும் எழுந்து உட்கார்ந்துவிட்டார்/
ஆள் படை அதிகம் என்பதாலும், களமும் அருகே இருந்ததாலும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்தில் கட்டுகள் வந்து குவிந்துவிட்டன.
கடைசீ நடையில் மூன்று பேர் கட்டு சுமந்து வந்தார்கள். மற்றவர் ‘ஐலஸா…’ போட்டுக்கொண்டு பெரிய மரத்துண்டு ஒன்றைத் தூக்கி வந்தார்கள்.
‘அடடே… கருவைமரத் துண்டு…, ரெண்டு வருஷமா இப்போ வெட்டலாம் அப்போ வெட்டலாம்னு தள்ளிக்கிட்டே வந்த வேலையைத் தோது தெரிஞ்சி, கட்டு அடிக்க வாகாய் வெட்டிக் கொண்டு வந்துட்டானே…! கலியன்… சிங்கக் குட்டிதான்.’ வியப்போடும் பாசத்தோடும் அவனைப் பார்த்தார் மாதய்யா.
மரம் தூக்கிகள் எல்லாரும் சொல்லி வைத்து ஒரு பக்கத் தோளுக்கு மாற்றிக்கொண்டார்கள்.
“விட்ரலாமா… விடலாமா…” “வி..ட்..டோ…ம்……”
ஒரு சேரச் சொல்லி மரத்தை ‘தொப்’ பென கீழே விட்டார்கள்.
கட்டு அடிக்க வாகாய் மரத்தைத் தள்ளி வைத்தார்கள்.
எல்லையம்மனை வேண்டிக்கொண்டு, கலியன் ஒரு கட்டை உடைத்தான்.
ஒரு ‘அள்ளு’ தாள் எடுத்தான்.
அடிக்க வாகாய் பிரி சுற்றினான்.
‘அடி’மரத்தில் சாய்த்து வைத்தான்.
“அய்யா….வந்து மொத தெரைய அடிச்சித் தொடங்கி வைங்க…”
மாதய்யா, பிரியை இட வலமாய் இறுக்கி லாகவமாய் அழுத்தினார்.
கண்மூடிப் பிரார்த்தித்தார்.
திரையைச் திருகித் தூக்கினார்.
இரண்டு கைகளால் உயர்ந்த திரையை ஒரு சுழற்று சுழற்றி, வலதுபுறமாய் கொண்டுபோய் தலைக்கு மேல் உயர்த்தி ‘ச்ச…ஸ்…க்…க்…” என அடிகட்டையில் பலமாய் அடித்தார்.
தாலி கட்டியவுடன் வயதில் பெரியவர்கள் எல்லாம் மணமக்களை ஆசீர்வதிப்பதுபோல
தாள் நெல் கழன்று, நெல் நாலா பக்கமும் மஞ்சள் மஞ்சளாய்ச் சிதறித் தெரித்தது.
ஒருவர் திரை எடுத்துப் போட, கட்டடிப்பவன் திரையைப் பிரியுள் வாங்கி இறுக்கி ‘தொ..ப…க்… தொபக்…” என அடித்து வைக்கோலை வீசினான்.
வீசப்பட்ட வைக்காலை உதறி உதறி போராய்க் குவித்தனர் ஒருபுறம்.
அவ்வப்போது சுழற்சி முறையில் ஆட்கள் மாறிக்கொண்டனர். எந்த இடத்திலும் இடறல் இல்லாத ஒரு ஒத்திசைவு. (Coordination)
சர்க்கஸில் இயல்பாக காட்சி மாறுவது போல ஒரு மாற்றம்.
அறுப்பறுத்தலில் இருந்த அதே நேர்ந்தி இதிலும்.
ஏகப்பட்ட பக்க வாத்யங்கள் ஒரே நேரத்தில் பிசிர் இன்றி ஒலிப்பதுபோல, உயரம், நடுத்தரம், குள்ளம், பெருந்தலை, இரட்டை மண்டை, ரெட்டை நாடி, நோஞ்சான், சோகை… என்று பல்வேறு உயர-பருமன்களில் இருந்தாலும், கட்டு பிரித்தலும், தாள் போடலும் பிடித்து அடித்தலும், வைக்கோல் வீசலும், தலைக் கொட்டலும், கொட்டுவாயில் சரிந்ததை அள்ளி அணைத்தலுமாக… ஒரு அருமையான தாளவாத்தியக் கச்சேரியைப் போல இனிமையாக, ரசனைக்குறியதாக இருந்தது.
கச்சேரி கேட்கும்போது நம்மை அறியாமல் கண்கள் செருகி தூங்கி விழுவோமே, அதுபோல ஒரு சிறு தூக்கம் போட்டார் மாதய்யா.
“மூணுக்கு நாலு அடி போடு…”
“ஏய் உருலாசு… அடி பலமா போட்றா…”
“முடியலேன்னா நீ தெர போடு பவித்ரன் பயலை கட்டடிக்கக் சொல்லு…”
“போரடீல நெல்லு தங்கப்படாது… ஆமாம்…”
“வைக்கோலை நல்லாப் பிரிச்சிவிட்டுப் ஆத்து…”
“மொத்தை மொத்தையாப் போட்டா சரிஞ்சிரும்…”
மேஸ்திரி பிச்சக்கண்ணு நாட்டாமை பண்ணிக்கொண்டிருந்தான்.
கண்டுமுதல் ‘குன்றாய்க்’ குவிந்துகொண்டிருந்தது.
வைக்கோல் ‘மலையாய்’ உயர்ந்துகொண்டிருந்தது.
“அய்யா…! அய்யா…”
கலியன் கூப்பிட “விருட்”டென எழுந்தார் மாதய்யா.
எதிரில் நெல் குவிக்கப்பட்டிருந்தது பட்டரையாய்.
குவியலில் சாணிப்பாலால் போடப்பட்ட திருகல் குறி.
கச்சிதமாய் தலைக் கொட்டப்பட்ட வைக்கோல் போர்.
நேர்த்தியாய்க் கூட்டிச் சுத்தம்செய்யப்பட்ட களம்… எல்லாவற்றையும் பார்த்தார்.
‘தொடர்ந்து ஐந்து நிமிஷம் கூட கட்டிலில் படுக்காத நான் ஐந்து மணிநேரம் இப்படித் தூங்கியிருக்கேனே..!.’என்று நொந்துகொண்டார்.
“நீங்க தூங்கிக்கிட்டிருந்தீங்களா.. அதான் எளுப்பலை.”
“பட்டரைல திருகல் குறி போட்டுட்டேன்.”
“ஆளு படைங்களை அனுப்பிட்டேன்.”
“இன்னும் ஒரே வேலைதான் பாக்கி. பட்டரையை மூடுணும்.”
“நீங்க கண்டுமொதலைப் பாக்காம மூடப்படாதுன்னு வெச்சிருக்கேன்…”
கலியனின் அணுகுமுறையும், அவன் செய்திருந்த நேர்த்தியான வேலைகளையும் பார்த்தபோது, மாதய்யாவின் மனசு நெகிழ்ந்தது.
“வண்டி பூட்டட்டுங்களா… புறப்படறீங்களா…? நானே வண்டி ஓட்டியாரட்டுங்களா…?”
“ நீ சிரமப்படவேண்டாம் கலியா… வண்டிய பூட்டிக் குடு. நானே ஓட்டிக்கிட்டுப் போயிடறேன்…” என்றார் மாதய்யா.
வண்டியைப் பூட்டி வாகாய் நிறுத்தினான் கலியன்.
“கலியா… நாளைக்கு ஓடைக் காணீலதானே அறுப்பு…”
“ஆமாங்க…”
“ஓடக்காணி ஓரக்கால்ல கெடக்கற கல்லு முட்டுல நட்டுவாக்களி கிளம்பிச்சுன்னு நடவு நட்ட உன் அப்பன் சொன்னான்.”
“பாம்பு கூட கெடக்குன்னான். ஆளு படைங்களை கொஞ்சம் நிகாவா இருக்கச் சொல்லு…”
“அப்ப ஒண்ணு செய்யிறேன்… வெய்ய கௌம்பற வரைக்கும் பட்டரையை ஒடைச்சி களத்துல திராவச் சொல்றேங்கய்யா… சொச்ச ஆளுங்க கருவ மிளாரு கழிக்கட்டும்.”
“கழிச்சி அவங்களையே அடுப்புக்குக் கொண்டு போயிரச் சொல்லு..”
சொல்லிவிட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு கிளம்பினார்.
மாதய்யாவின் மனசு குளிர்ந்திருந்தது.
மனசு குளிர்ந்திருக்கும்போது, உடம்பு நெகிழ்ந்துவிடுகிறது.
உடம்பு நெகிழ்ந்துவிட்டால், ஓட்டம் குறைகிறது.
இதத்தால் குறைந்த ஓட்டம் மிகைப்படுவதில்லை.
தன்னைப் புரிந்துகொண்டு இதமாய் சேவகம் செய்யும் சேவகன் கிடைத்துவிட்டால், எஜமானன் தன்னை இழந்துவிடுகிறான்.
பாரதிக்குக் கிடைத்த சேவகன்போல…,
தனக்குக் கிடைத்த கலியனை, நினைக்க நினைக்க மனசு நிறைந்து காற்றில் பறப்பதைப் போல உணர்ந்தார்.
பழகிய வழியில் வீரன் வண்டியை இழுத்துச் சென்றான்.
கர்ணகொல்லை வாய்க்கால் பாலத்தில் கல் விலகியிருந்த்து.
விலகிய இடுக்கத்தில் ஒரு சக்கரம் மாட்டியது.
சக்கரம் மாட்டியது தெரியாமல் முரண்டு பிடித்தான் வீரன்.
இழுத்த இழுப்பில் மாதய்யா தடுமாறி விழுந்தார்.
நிலைமை அறியாத வீரன்காளை முன்னே பாய்ந்தது.
மாதய்யாவின் காலில் எக்குத்தப்பாய் சக்கரம் ஏறி இறங்கியது.”
வண்டி நின்றது.
“அய்யோ…! என்ற மாதய்யாவின் குரல் கேட்டு, பாலக்கட்டை பிள்ளையார் கோவிலில் ஆடுபுலியாட்டம் ஆடிக்கொண்டிருந்த தனவேலு மகன் மாரிமுத்து ஓடிவந்தான்.
மாதய்யாவைத் தூக்கி நிறுத்தி வண்டியில் அமர்த்தி, வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தான்.
புசு…புசு வென கால் வீங்கிவிட்டதால், ஒரு புறம் குந்தலாம்பாளும், மறுபுறம் மாரிமுத்துவும் கைத்தாங்கலாகப் பிடித்தபடி உள்ளே கொண்டுபோய் கட்டிலில் படுக்கவைத்தனர்.
அத்தியாயம் – 10
“காலில் மாவுக்கட்டு போட்டிருப்பதால், அவசியமானபோது மட்டும், அக்குளில் கவைத் தாங்கியபடி வீட்டுக்குள்ளேயே நடந்து பழகினார் மாதய்யா.
மற்ற நேரங்களில் கட்டுப் போட்டக் காலை நீட்டிக்கொண்டுப் படுக்கையில் உட்கார்வார்.
விளையாட்டாக இரண்டரை மாதங்கள் ஓடிவிட்டது.
கட்டிப்போட்டாற் போல இருக்கிறது அவருக்கு…
ஓடும் பிள்ளையாக எதையேனும் செய்துகொண்டே இருப்பவருக்கு இதைவிட வேறு தண்டணை வேண்டுமா என்ன…?
“மாது…! இன்னும் ஒரு மாசகாலம் ஆகும் கட்டவிழ்க்க…”
“குதிகால் எலும்பு அவ்வளவு சீக்கிரம் முறியவே முறியாது. அப்படி ஒரு அமைப்பு அதுக்கு.”
“முறிந்தாலோ அவ்வளவு சீக்கிரம் சேரவும் சேராது.”
ஜீவபுரம் அருணகிரி டாக்டர் நேற்று கட்டு மாற்றும்போது சொன்னதும் தீராதக் கவலையைக் கொடுத்தது மாதய்யாவுக்கு.
கணேசப்பிள்ளை மாதய்யாவைப் பார்க்க வீட்டுக்கு வந்தார்
ரெவின்யூ டிபார்ட்மெண்ட்டில் டிஸ்ட்ரிக்ட் ‘ப்ரொக்யூர்மெண்ட்’ ஆபீசர் கணேசன்.
இரண்டு ஆப்பிள், இரண்டு சாத்துக்குடி எடுத்து மாதய்யா கையில் கொடுத்தார்.
“மாமி… மாமி…” என்று அழைத்தார்.
“சௌக்கியமா…? என்று கேட்டவாறே கையில் தண்ணீர் சொம்பு, டம்ளருடன் வந்தாள் குந்தலாம்பாள்.
“நல்ல சௌக்யம் மாமி.”
நேத்து ஒரு காரியமா திருச்சி, காந்தி மார்க்கட் போனேனா…”
‘மாஹாளிக் கிழங்கு, அப்பதான் வந்து சரக்கு இறங்கறது…”
“நல்லா தளதளப்பா, தொடச்சி வெச்சாப்ல புத்தம்புதுசா இருந்துதா.”
“உங்களுக்குப் ரொம்ப இஷ்டமாச்சேன்னு ஒரு கட்டு வாங்கிண்டு வந்தேன்…”
தாமரை இலையில் கட்டிய மல்லிகைச் சரத்தையும், மாகாளிக் கட்டையும் மாமி கையில் கொடுத்தார்.
குந்தலாம்பாளுக்கு ஏக சந்தோஷம்.
மாகாளிக் கட்டை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தாள்.
மாகாளியை முகர்ந்தாள்.
கண்கள் செருகச் செருக நறுமணத்தை அனுபவித்தாள்.
வாசனை என்றால் அப்படி ஒரு வாசனை.
புது விளையாட்டுச் சாமான் வாங்கிக் தந்ததும் குழந்தைகள் ஆசையாய், இப்படியும் அப்படியும், திருப்பித் திருப்பிப் பார்த்து சந்தோஷப்படுமே…!
அதுபோல, நினைத்து நினைத்து…
அதை எடுத்து எடுத்துப் பார்த்தாள்…
முகர்ந்தாள்… முறுவலித்தாள்…
முகம் மலர்ந்தாள்…
மகிழ்ந்தாள்… மயங்கினாள்…
மகிழ்ந்து மலர்ந்தாள்…
மலர்ந்து… மயங்கி… மகிழ்ந்தாள்…
‘க…ஷ்..ஷ்………..ஷ்………ஷ்’ ஷென்று கை மிஷினில் காப்பிக்கொட்டை அரைக்கும் ஓசைத் தொடங்கித் தொடர்ந்தது.
டப்’ பென்று அறைத்து முடித்ததும் மிஷின் வாயை உள்ளங்கையால் தட்டும் ஓசையோடு முடிந்தது.
கூடவே ‘ஃபீப்ரி’ (முதல் தரம்) காப்பிப் பொடியின் மணம் நாசியைத் தாக்கியது.
சில நிமிஷங்களில் ‘கம்……!’ மென்ற மணத்துடன், நுரைத் ததும்பும் பசும்பால் காப்பிக் கொண்டு வந்தாள் குந்தலாம்பாள்.
சிதம்பரம் மாலைக் கட்டித் தெருவில் கால் ரூபாய்க்கு கள்ளிச் சொட்டுப் போல் காபி தரும் ‘மாமி காபிக் கடை’
காரைக்கால் பஸ் நிலையம் அருகே ‘வடிவேல் காபி பார்…’
ஆடுதுறை ‘சீதாராம விலாஸ்’
மாயவரம் ‘காளியாக்குடி’
கும்பகோணம் கும்பேஸ்வரன் மொட்டை கோபுர வாசலில் ‘பஞ்சாமி ஐயரின் லக்ஷ்மி விலால் பசும்பால் காபி கிளப்…’
இவையெல்லாம் மனதில் வந்து போனது கணேசனுக்கு.
இங்கே மாமி பாசத்தோடு தருகிறாள்.
அங்கே கால் ரூபாய் வாங்கிக்கொண்டு இதே பாசத்தோடு தருவார்கள் அதுதான் வித்தியாசம்.
காப்பிக்குப் பின் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மாதய்யாவோடு பேசிக்கொண்டிருந்தார் கணேசன்.
ஊர் நிலவரம் கேட்டறிந்தார்.
உறவினர் குசலம் விசாரித்தார்.
தன் உத்யோக காண்டத்தில் கடந்து வந்த கரடு முரடான பாதைகளைப் பற்றி நிறைய நிறையப் பேசிக்கொண்டிருந்தார்.
மதியம் ஒரு மணி முதல் “சாப்டுண்டே பேசலாமே …” என்று தொடங்கி பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை வந்து குந்தலாம்பாள் காது கடிப்பாள்.
பேச்சு சுவாரசியத்தில் “ஆகட்டும்… இப்ப என்ன அவசரம்…” எனத் தள்ளிக்கொண்டேப் போய் இரண்டு மணிக்கு இலை முன் உட்கார்ந்தார் கணேசன்.
அப்பளம், வடை, பாயசம் என மதிய சாப்பாட்டை அமர்க்களப்படுத்தி விட்டாள் குந்தலாம்பாள்.
தலைவாழையிலையில் திருப்தியாகச் சாப்பிட்டார்.
தன் தாயார் பரிமாறி சாப்பிட்டாற்போல ஒரு திருப்தி அவருக்கு.
வயிறு முட்ட முட்ட திணித்துவிட்டாள் குந்தலாம்பாள்.
“கும்பகோணம் வெத்தலைபோடும் ஓய்..!.” வெத்தலைச் செல்லத்தை ஸ்டூலில் நகர்த்தி வைத்தார் மாதய்யா.
தாம்பூலம் தரித்தபின் புறப்பட ஆயத்தமானார் கணேசன்.
கணேசப்பிள்ளை, நல்ல ஆரோக்கியமான கேரக்டர்.
பழமை மறக்காத மாமனிதர்.
மனிதர்களை மதிக்கும் தன்மை அவரிடமிருந்து எல்லாரும் கற்க வேண்டும்.
கிட்டத்தட்ட இருபத்தைந்து வருஷங்களாக அவருக்கு மாதய்யா குடும்பத்தோடு பழக்கம்.
‘டென் ஏ ஒன்’ என்ற நிலையில் தற்காலிகமாக உத்யோகத்தில் நுழைந்தவர் கணேசன்.
அப்போதிருந்த, ‘ப்ர்க்யூர்மெண்ட் ஆபீசர்’ கூத்தபிரானோடு எடுபிடிபோல கூட வருவான்.
எறும்பைப் போலச் சுறுசுறுப்பும்,
தேனீயைப் போல உழைப்பும்,
சிலந்தியைப்போல விடாமுயற்சியும்,
குதிரையைப்போன்ற வேகமும்,
துறவியைப் போன்ற விவேகமும் உடைய கேரக்டர் கணேசனுக்கு.
‘ஜூனியர் அஸிஸ்டென்ட்’ ஆனார்.
தொடர்ந்து உழைத்துப் படித்து, ‘டிபார்ட்மெண்டல்’ தேர்வுகள் எழுதினார்.
முயற்சி மெய்வருத்தக் கூலி தந்தது.
‘ஹெட் க்ளாராக்…’
‘சூப்பரண்ட்…’
‘துணை மண்டல அலுவலர்…’ என்று உயர்ந்துகொண்டே போனார்.
இப்படியாகப் பதவி உயர்வு பெற்றுப் பெற்று இன்று ஜில்லாவுக்கே தலைமை ப்ரொக்யூர்மெண்ட் ஆபீசராக ஆகியிருக்கிறார்.
இன்று ஆபீசரானாலும், அன்று எப்படிப் பழகினாரோ அதே பழக்கம் நீடிக்கிறது.
ஒரு சின்னப் ப்ரமோஷன் வந்து, கேடர் மாறி, சம்பளத்தில் 10 ரூபாய் ஏறிவிட்டால் போதும்…
முன்பு இருந்த கேடரைப் பற்றித் துச்சமாகப் பேசுவதும்,
நொடிக்கு நூறு சலாம் போட்ட அந்தக் கேடரின் உயர் அதிகாரியை சிறுமைப்படுத்துவதும்,
அந்தக் கேடரில் உள்ளவர்களைப், புழுமாதிரி பார்ப்பதும், அலட்சியப்படுத்துவதுமான, சின்னத்தனமான மாக்களுக்கிடையில் கணேசன் ஒரு பத்தரை மாற்றுத் தங்கம்.
இறுதியாகக் கணேசன், தன் உத்யோக நிமித்தம் பசலி விவரங்களைக் குறிப்பாகச் சொன்னார்.
சமீபத்திய தண்டல் விவரங்களை கோடிட்டுக் காட்டினார்.
புறப்படும்முன்மாமியை அழைத்தார்
“மாமா பக்கத்துல நில்லுங்கோ…” என்றார்.
சாஷ்டாங்கமாக விழுந்து நமர்ஸ்கரித்தார்.
மாதய்யாவும் குந்தலாம்பாளும் மஞ்சள் அரிசி தூவி “தீர்காயுஷ்மான் பவ!” சொல்லி ஆசீர்வதித்தார்கள்.
“கலியன்கிட்டே சொல்லி நாளை மதியத்துக்குள்ள இந்த பசலிக்கான தண்டலுக்கு நெல் அளந்து அனுப்பச் சொல்றேன்…” என்றார் மாதய்யா.
“அப்போ நான் உத்தரவு வாங்கிக்கறேன்…”
சந்தோஷமாகத் திரும்பிப் போனார்.
அறுவடையெல்லாம் பூர்த்தியாகிவிட்டது.
கீழே விழுந்து காலை முறித்துக்கொண்ட நாளுக்குப் பிறகு நடைபெற்ற அறுவடை பூராவும், கலியனே பொறுப்பாகப் பார்த்துக்கொண்டான்.
தினமும் சாயங்காலம் வந்து கண்டுமுதல் அறுப்பாட்களுக்கு அளந்த கூலி நெல் போக மிச்சக் கணக்குகளை ஒப்புவிப்பான்.
வளர்பிறையில், நல்ல நாள் பார்த்து, ராசி பார்த்து, குதிர், பத்தாயம், விதைக்கோட்டை அடுக்கும் தாழ்வாரம் போன்ற தானியக் களஞ்சியங்களையெல்லாம் நன்கு சுத்தமாகக் கூட்டி, அலசிவிட்டுத், துடைத்தாகிவிட்டது.
மஞ்சள் பூச்சுப் பூசி, குங்குமப் பொட்டிட்டு, புஷ்பம் சார்த்தி, தான்ய லெக்ஷ்மி அஷ்டோத்தரம் சொல்லி பூஜை செய்தாள் குந்தலாம்பாள்.
வடை பாயஸம் செய்து நைவேத்யம் செய்தாள்.
பாடசாலை வித்யார்த்தியை வரச்சொல்லி பிரசாதம் கொடுத்தாள்.
வழக்கம்போல் ஸ்டூல் பலகைமேல் எறி, பத்தாயத்தில் நெல் கொட்டினாள்.
நெல் நிரப்பலைத் தொடங்கி வைத்தாள்.
பானை பிடித்தவளின் பாக்கியத்தால் குதிர், பத்தாயம் எல்லாம் வழக்கப்படி இந்த ஆண்டும் நிறைத்தாயிற்று.
‘குதிர்’- என்பது தானியக் களஞ்சியம்.
களிமண், ‘வரகு வைக்கோல்’ இரண்டையும் குறிப்பிட்ட விகிதத்தில் பிசைந்துச் செய்யும் கொள்கலன் இது.
கல் கட்டிகள் நீக்கி, குறிப்பிட்ட நேரம் புளித்தபின் கோணிச் சாக்கில் போட்டு நன்கு மிதித்துப் பதப்படுத்தப்படும்.
மெழுகுப் பதத்தில் இருக்கும் களிமண்ணை நன்கு பிசைந்து, ‘கருவடகத்துக்கு’ மாவு பிசைவது போல் சிரத்தையாகப் பிசிந்து பிசிந்து, சப்பாத்தி மாவு போல வீசி அடித்து அடித்துப் பதப்படுத்தப்படும்.
தரையில் ‘ஆசு வட்டம்’ போட்டிருக்கும்.
அந்த வட்டத்துக்கு உள் ஒழுங்கில் வருமாறு களிமண்ணை பிசைந்து வைக்க வைக்க உறை எழும்பும்.
மண் அடுப்பு கட்டுவதைப் போல நிதானமாகவும், சிரத்தையாகவும், பானை வனைவதைப் போல கவனமாகவும் இருக்கும்.
அவ்வப்போது, தண்ணீரில் கை நனைத்து, உபரிச் சரக்கை வழித்தெடுப்பதும், தேவையான இடத்தில் இட்டு நிரப்பலுமாக படிப்படியாக வேலை நடக்கும்.
குதிர் உயரம் ஆறடி.
ஒரு அடி அளவில் ஐந்து உறைகள் .
ஒன்றன் மேல் ஐந்தும் அடுக்கப்படும்.
தலையில் வைக்கும் ஆறாவது உறை சீசாவின் மூடிப் போல மேலே குறுகலாய் இருக்கும்.
குதிரின் மேல் மூடியும் கூடக் களிமண்ணால் செய்த தட்டுதான்.
எல்லா உறைகளையும் அடுக்கியபின், மேல் திறப்பு வழியாகத்தான் நெல் கொட்ட வேண்டும்.
சுலபமாக இருக்குமே என்று முதல் உறையை நிரப்பிவிட்டு அதன்பின் இரண்டாவது உறை வைத்து நிரப்புவதெல்லாம் சரியான முறை அல்ல…
அப்படியெல்லாம் முறையற்று நெல் நிரப்பினால் தரித்திர லட்சுமிதான் வீட்டுக்குள் வருவாள் என்பது நம்பிக்கை.
குதிரின் அடிப்பாகத்தில் உள்ள ஓட்டை வழியாகத்தான் தேவையானபோது நெல் எடுக்க வேண்டும்.
தேவைக்கான நெல் எடுத்தபின், துவாரத்தை தேங்காய்ச் சிரட்டையை களிமண்ணோடு பிசைந்து அடைக்கவேண்டும்.
அவ்வப்போது சாணிப்பாலால் மெழுகியும், செவ்வாய் வெள்ளி சாம்பிராணிப் புகை போட்டும் ‘குதிரை’ தெய்வமாய் வணங்கிய காலமது.
இப்போது குதிரை பார்ப்பதே ‘குதிரைக்கொம்பாக’ இருக்கிறதே.!
பத்தாயம் என்பதும் ஒரு வகை தானியக்களஞ்சியம்தான்.
பெரும்பாலும் மாம்பலகையில் செய்வார்கள்.
வசதிப்பட்டவர்கள் பலாப்பலகையிலும் செய்வதுண்டு.
சதுரம் செவ்வகம் என இரண்டு வடிவங்களிலும் இருக்கும்.
தனித்தனிப் பெட்டிகளாகச் செய்து, ஒன்றன் மேல் ஒன்று அடுக்கினால் அது பத்தாயம்.
தரையில் நிற்கும் அடிப் பெட்டியில் ஆறு கால்கள் பொறுத்தப்பட்டிருக்கும்.
அந்த கால்களின் கோர்வை, கோவில் படிச்சட்டத்தின் நான்கு ஓரக்கால்களின் கோர்வையை ஒத்திருக்கும்.
பத்தாயத்தின் மேல் மூடி திட்டி வாசலோடுக் கூடியக் கோவில் கதவை, படுக்கை வசத்தில் வைத்தாற்போல் இருக்கும்.
அதன் வழிதான் நெல்லை உள்ளே கொட்ட வேண்டும்.
வாயை மூடவும், பூட்டிக்கொள்ள ஏதுவாகவும் நாதாங்கி பொறுத்தப்பட்ட சிறு கதவும் அந்த மூடியில் இருக்கும்.
அடிப்பகுதியில் சதுரமாக ஒரு சிறியத் துவாரம் இருக்கும்.
அதற்குப் பேட்லாக் பொருத்திய ஒரு சின்னக் கதவும் இருக்கும்.
தேவையான நெல் எடுத்தபிறகு, வைக்கோலை பந்து போல அமுக்கி அடைத்தபின், சின்னக் கதவைச் சாத்திப் பூட்டு போட்டுப் பூட்டிவிடலாம்.
பெரும்பாலும் பத்தாயத்தின் மேல் ‘தார்’தான் பூசுவார்கள்.
தார் விலை மலிவு என்பது ஒரு காரணம்.
இன்னொரு காரணமும் உண்டு.
அதில் கை வைத்தாலோ, சாய்ந்தாலோ தார் ஒட்டிக்கொள்ளும்.
தானியக் களஞ்சியம் புனிதமானது.
எனவே, யாரும் அதை தாங்கிப் பிடித்தபடி நிற்பதோ, அதன் மேல் சாய்ந்து உட்கார்வதோ செய்ய செய்யமாட்டார்கள்.
பத்தாயத்தின் புனிதம் காப்பாற்றப்படும்.
சேரு – இதுவும் தானியக் களஞ்சியத்தின் ஒரு வகைதான்.
வைக்கோல் மற்றும் வைக்கோல்பிரி இவைகள்தான் இதற்கு மூலதனம்.
வீட்டிற்குள் வைப்பதில்லை இதை.
தெரு வாசலில்தான் இதற்கு இடம்.
கிராமத்தில் குடிசை வீடுகள் கட்டும்முன் ‘சேரு மோடை’க்கென இடம் ஒதுக்குவார்கள்.
சேரு மோடையை தேவையான அளவுக்கு உயர்த்தியபின், நெல்லைக் கையால் கசக்கி எடுத்தத் தாள் (வைக்கோலை) நீளவாக்கில் குத்துக்கு நிறுத்தவேண்டும்.
தேவையான உயரம் வரும் வரை, பிரியை சுற்றிக்கொண்டே வருதல் வேண்டும்.
தரைபாகத்தில் கதுமையாக (அடர்த்தியாக) வைக்கோலைப் பரப்பிவிட்டு நெல் கொட்ட வேண்டியதுதான்.
வைக்கோலை தெருவில் அலைகிற மாடுகள் இழுத்து விடுமல்லவா…
அப்படி ஆகாமல் இருக்க ‘சேரு’ மேல் சாணிச் சாந்து போட்டு மெழுக வேண்டும்.
பனை ஓலையால் ‘தாழங்குடை’ போல முடைந்து, சேரு மேல் மூடுதல் வழக்கம்.
நாலு அல்லது ஆறு கால்களில் நிற்கும் அந்த பனை ஓலை மூடி; காற்று, மழை, புயல், வெள்ளம் என்ற எல்லா இயற்கைச் சீற்றங்களிலிருந்தும் நெல்மணிகளைக் காக்கும் அளவுக்குக் காத்திரமாய் இருக்கும்.
ஒவ்வொரு முறையும் லாகவமாக மேல் மூடியைத் துக்கிவிட்டுத்தான் நெல் எடுக்க வேண்டும்.
உடலுழைப்புக்கு அஞ்சாத காலமது.
அந்தக் கிராமத்திலேயே, கலியன் (தொப்ளான்) வீட்டில் மட்டும்தான் சேரு உண்டு.
கலியனின் சேரும் நிரம்பியது.
விதை நெல் கோட்டை கட்ட நாள் நட்சத்திரம் பார்த்தாயிற்று.
முதல் நாளே, சொன்னபடி கலியன் வீரமுத்து பேரன் வானமாமலையோடு வந்தான்.
“அய்யா, தம்பி விவசாயம் படிச்சிருக்கு.
“எனக்குப் பளக்கமில்லியா, அதான் கோட்டை கட்ட இந்தத் தம்பியை கூட்டியாந்தேன்.”
“சரி.. கட்டச் சொல்லு…” என்றார் மாதய்யா.
சீராகப் பிரி விடப்பட்ட வைக்கோல் கயறுகளை எண்கோண வடிவில் கீழே நேர்த்தியாய்ப் போட்டான் அந்த இளைஞன்.
நன்கு சுக்காய்க் காய்ந்த வைக்கோலை அதன்மேல் பரப்பினான்.
அந்த இளைஞன் இப்போது விதை நெல்லை நடுவில் கொட்டச் சொன்னான்.
அறுவடையின்போதே சிறப்பு கவனம் செலுத்தி, தனியே காயவைத்துப் பக்குவப் படுத்தப்பட்ட நெல்லைக் கொண்டுவந்து கலியன் அதில் கொட்டினான்.
லாகவமாக இரு கைகளாலும் கட்டியணைத்தபடி, பிரிகளைக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாய் அழுத்தமாகக் கட்டினான் அந்த இளைஞன்.
“அட இவ்வளவு நேர்த்தியா கட்டறியே…! எங்கே கத்துக்கிட்டே…”ஆச்சரியப்பட்டார் மாதய்யா.
என்னோட விவசாய சார், செந்தில்குமார்னு பேரு, அவரே உட்கார்ந்து கோட்டை கட்டற கலையை கத்துக் கொடுத்தாருங்க…”
விதைக் கோட்டைகள் தயார் செய்து முடித்த பிறகு சாணச்சாந்தால் விதைக் கோட்டைகள் மீது அந்த இளைஞன் மெழுகுவதைப் பார்த்து, கலியனும் மெழுகி வெயிலில் உலரவைத்தான்.
6 மாத காலம் பாதுகாக்கப்படும் இந்த விதைக் கோட்டையை விதைப்புக்கு முதல் நாள் தண்ணீர் குட்டையில் தள்ளிவிடுவார்கள்.
ஒரு நாள் ஊறியதும் கரையேற்றிவிடுவார்கள்.
சீராக முளை விட்டு நாற்றங்கால் விடுவதற்குத் தயாராகி விடும் கோட்டை.
“நீங்க கொடுக்கற சம்பளத்துல (சம்பா என்றால் நெல், அளம் என்றால் உப்பு) நான் என்ன கோட்டையா கட்டப் போறேன்..”
இந்தச் சொலவடைக் கூட இந்த விதை நெல் கோட்டை’யைத்தான் குறிப்பிடுகிறது.
‘விதைக்கோட்டை’ கட்டி அடுக்கியாகிவிட்டது.
போடவேண்டிய நெல்லை போட்டாகிவிட்டது.
ஒரு வழியாக அந்த போகத்துக்கான வேலைகள் எல்லாம் பூர்த்தியாகிவிட்டது.
அடுத்த போகத்திற்கு, எருவடி, கிடை மறிப்பு, எலி பிடித்தல், அண்டை வெட்டு, ஏர் உழுதல், பரம்படிப்பு, நாற்றுவிடல்… என வரிசையாக எல்லாம் மாதய்யா வயல்பக்கம் போகமலே நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தது.
ஒரு கதவு அடைக்கும்போது இன்னொரு கதவு திறப்பதாகப் பட்டது மாதய்யாவுக்கு.
இன்று நடவு ஆரம்பம்.
வயல்காட்டுக்குச் செல்ல முடியாவிட்டாலும், மனசு முழுதும் அங்கேதான் இருக்கிறது.
ஒரு உந்துதலில் கையில் கோல் இல்லாமல் நடந்து பழகினார்.
நடக்க முடிந்தது.
கால், அப்படி இப்படிப் புரட்ட முடிந்தது.
வலியில்லை.
எலும்பு நன்கு சேர்ந்துவிட்டது.
‘இவன் இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட்ல இருக்கட்டுமே…’ என்ற எண்ணத்தில் அருணகிரி டாக்டர் ஒப்புக்குக் கட்டு போட்டுள்ள யுக்தி புரிந்தது மாதய்யாவுக்கு.
வாசல் திண்ணைச் சாரணையில் வந்து உட்கார்ந்தார்.
ரொம்ப நாளாக முடங்கிக் கிடந்த கால் கொஞ்சதூரம் நடந்த உடனேயே லேசாக வலித்தது.
‘எப்படியாவது ‘ஒரு எட்டு…’ வயலுக்குப் போய்வந்தால் தேவலை…’ போல் இருந்தது.
வாசல் மூங்கில் பிளாச்சு கேட்டு நகரும் ஓசை கேட்டுத் திரும்பிய மாதய்யாவுக்கு அதிர்ச்சி.
மகன் துரைராமனும், மருமகள் மோகனா, பேத்தி ரஞ்சனி எல்லோரும் வீட்டுக்குள் வந்தார்கள்.
‘ சொல்லாம கொள்ளாம திடீர்னு, இவா என்னத்துக்கு இப்போ வரா…?’
மாதய்யா முகத்தில் கேள்விக்குறி.
முன்பே தெரிந்திருந்தால் வயல்காட்டைப் பார்க்கப் பறந்து போயிருப்பார்…
அவ்வளவு பொருத்தம் அவர்களுக்குள்.
அப்பா மகனுக்குள் ஆரம்பத்திலிருந்தே ஒட்டவில்லை.
தலைமுறை இடைவெளி…
வீட்டுக்கு வீடு வாசப்படி.
மாதய்யாவின் வாதம் கேட்டால் அவர் சொல்வது சரியெனத் தோன்றும்.
அதே துரைராமன் சொல்வதைப் பார்த்தால் அவனிடம்தான் ஞாயம் இருப்பதாகப் படும்.
இந்த இருவருக்கும் இடையிலிருந்து விரிசலை ஒட்டச் செய்யத்தான் ஒருத்தருமில்லை.
ஒட்டவில்லை என்றாலும், விரிசல் அதிகமாகி உடைந்துவிடாமல் இழுத்துப் பிடித்துக்கொண்டு நிற்குமளவுக்கு, ஏதேதோ யுக்தி செய்து, பூசி மெழுகி, ஒருக் கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பது குந்தலாம்பாள்தான்.
அப்பாவையும் பிள்ளையையும் நேரடியாக மோத விடாமல், குறுக்கே நின்று சமாளிப்பதில் குந்தலாம்பாள் கெட்டிக்காரிதான்.
இருந்தாலும், சமயத்தில் உரசல் ஏற்பட்டு, வீடு அமளி துமளிப் பட்டுவிடும்.
“எனக்கு சாப்பாடு வாண்டாம்…” அவர் முறுக்குவார்.
நான் வெளீல போய் கடைல கொட்டிக்கறேன்…” துரைராமன் முரண்டு செய்வான்.
இவர்களைத் தனித்தனியாகச் சமாதானப்படுத்தி, இருவரையும் சாப்பிட வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும் குந்தலாம்பாளுக்கு.
பதினேழு வயதில் அந்த வீட்டுக்கு மருமகளாய் வந்தவள்.
தனக்குப் பிறந்த வீடு, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை மாமா, மாமி என்று தன் பக்க உறவுகள் இருப்பதை நினைப்பதற்குக் கூட நேரம் இருந்ததில்லை அவளுக்கு.
பிறந்த வீட்டுச் சார்பாய் நல்லது கெட்டது எதற்கும் சென்றதுமில்லை அவள்.
குந்தலாம்பாளுக்குச் சொந்த ஊர் சிவகங்கை.
பிதுரார்ஜித சொத்தாக, முன்னோர்கள் விட்டுச் சென்ற வானம் பார்த்த பூமியை குந்தலாம்பாளின் அப்பா நிர்வாகம் பண்ணிக்கொண்டுவந்தார்.
வானம் பார்த்த பூமியில், மழையைக் கண்டுவிட்டால் மக்களுக்குக் கொண்டாட்டம்தானே…!
மாதய்யா, குந்தலாம்பாளை பெண் பார்க்கப் போன நாளில் அடைப்புப் பிடித்துக்கொண்டு
கொட்டினாற்போல அப்படியொரு மழை.
குதிரைவண்டியில் சென்று குடும்பத்தோடு இறங்கினார் மாதய்யா. மழை நீர் கூட வீட்டு வாசலில் பள்ளம் கண்ட இடத்தில் தேங்கி நின்றது.
அரைகுறையாய்ப் பெய்து சூட்டைக் கிளம்பி விடாமல், நன்றாகப் பெய்து காற்றை குளிர்வித்திருந்தது.
“குந்தலாம்பாவும் அவ அப்பாவும் வயக்காட்டுக்குப் போயிருக்கா…”
தகவல் வர, மாதய்யா மகிழ்ந்தார்.
மாதய்யாவின் அம்மா முகம் சுழித்தார்.
“இன்னிக்கு நாங்க வர்றதா தபால் போட்டோமே…!”
கேட்டது மாதய்யாவின் அம்மா.
“தபால் ஏதும் வல்லியே…!”
கை விரித்தாள் குந்தலாம்பாளின் அம்மா.
“இருங்கோ காபி கலக்கறேன்…”
குந்தலாம்பாளின் அம்மா அடுப்படிக்குச் சென்ற நேரத்தில், மாதவன் கொல்லைக்கட்டுக்குப் போய் ‘எத்தனை பசுக்கள் உள்ளன எப்படிப் பராமரிக்கிறார்கள்..” என்று நோட்டம்விடச் சென்றுவிட்டார்.
மாதவனின் அம்மா, உட்கார்ந்து உட்கார்ந்து வழ வழவென்று தேய்ந்த ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு தன் பிறந்தகத்து இரண்டேமுக்காலடி ஊஞ்சலில் ஆடுவதுபோல் கற்பனை உலகில் சஞ்சரித்தாள்.
அது மட்டுமா
“சாப்பிடுங்கோ…”
கடலை உருண்டைகள் கொஞ்சம் தட்டில் வைத்துக் கொடுத்தாள்.
அம்மாவும் மகனுமாய், கடலை உருண்டை தின்றார்கள்.
காப்பி குடித்து முடிக்கும் வரை வரவே இல்லை வயலுக்குச் சென்றவர்கள்.
திரும்பு சவாரிக்காக்க் காத்திருந்த வண்டிக்காரனிடம் சொல்லி வயலுக்கே சென்று குந்தலாம்பாளை, பெண் பார்த்தார் மாதய்யா.
விஷயம் கேள்விப்பட்டதும், வரப்பைத் தாண்டித் தாண்டி ஓடிவந்தாள் குந்தலாம்பாள்.
அவளைப் பார்த்த அம்மா “இந்த ‘வரப்புத்தாண்டி’ வேண்டாண்டா மாது”
மாதய்யா காதருகே சொன்னாள்..
“இந்தப் பொண்ணுதான்ம்மா நம்ம குடும்பத்துக்குச் சரியா வரும்…”
முடிவாகச் சொல்லிவிட்டார் மாதய்யா.
ஒரு சுப முகூர்த்த நாளில் கொடுமுடி வீரநாராயணர் சந்நிதியில் வைத்து மாதவன், குந்தலா திருமணம் விமரிசையாக நடைபெற்றது.
கல்யாணமான கையோடு புது தம்பதியருக்கு ஷேத்ராடனம் போக ஏற்பாடு செய்துதந்தார் குந்தலாம்பாளின் அப்பா.
இப்போது ஊட்டி, கொடைக்கானல் போல, ஷேத்ராடனம்தான் ஹனிமூன் ட்ரிப்பாக இருந்த காலம் அது.
கல்யாணமாகி கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் ஆகிவிட்டது.
படிதாண்டாப் பத்தினியாகவே காலத்தைக் கழித்துவிட்டாள் குந்தலாம்பாள்.
‘நல்லது – கெட்டது’, ‘நாள்-கிழமை’, ‘கல்யாணம்-கார்த்தி’… ‘அது-இது…’, ‘லொட்டு – லொசுக்கு..’ என்று எதற்கும் எங்கும் எப்போதும் போனதே இல்லை.
கல்யாணமாகி, வந்த மூன்றாம் மாதம் மாமனார் இறந்துவிட்டார்.
அதன் பிறகு பதினைந்து வருஷகாலம் மாமியார் திடமாக இருந்தார்.
மாமனார் ஒரு வாயில்லாப் பூச்சி.
என்றாலும் கோபத்துக்கு ஒன்றும் குறைச்சலில்லை.
அசட்டுக்கு அகங்காரம் வந்ததைப் போல எதையாவது தூக்கி எறியும்…
அசட்டு பிசட்டு என்று நடந்து கொள்ளும்.
செய்வது எதுவும் சகிக்காது.
மாமியாரின் கட்டுப்பாட்டில் அகப்பட்டுக்கொண்டு திக்குமுக்காடினாள் குந்தலாம்பாள்.
மாமியாரின் அதிகாரம், மாதய்யாவின் கோபம், மகனின் கோணங்கித்தனம் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, ஒரு பக்குவத்துக்கு வந்துவிட்டவள் அவள்.
சென்றால், உண்டால் கொண்டால் கொடுத்தால் தானே உறவு.
உறவுகள் எட்டிப் போயிற்று.
போகாது கெட்டன உறவுகள்.
காலம் எப்போதும் ஒரே மாதிரி இருந்துவிடுமா என்ன?
சமீப காலமாகக் குந்தலாம்பாளின் அண்ணன், தம்பி என்று எப்போதாவது, இந்தப் பக்கம் வரும்போது வந்து பார்த்துப் போகிறார்கள்.
“அத்திம்பேர்…, சௌக்யமா…” என்று ஆசையாகவும் பாசமாகவும் கேட்டு, ஏதாவது பழத்தைக் கையில் கொடுத்துக் நமஸ்கரிக்கிறார்கள்.
வயதான காலத்தில், இப்படி அனுசரணையாகப் பேச யாராவது வந்தால் குந்தலாம்பாளுக்குச் சந்தோஷமாக இருக்கிறது.
குந்தலாம்பாளின் தம்பி சுப்பாமணிதான் அடிக்கடி வருகிறான். குடும்பத்தில் புகுந்து நல்லதுகெட்டது செய்கிறான்.
வெளியூர்தான் என்றில்லை. வீட்டு வாசற்படித் தாண்டி கடை, கன்னி, கன்மாய், காய்கறிக்கடை, காவேரி என்று கூட எங்கும் போனதில்லை.
அவள் வயதொத்த, காமேஸ்வரியோ, நிர்மலாவோ, வாலாம்பாளோ… தினமும் விடிகாலை காவிரி ஸ்நானத்துக்குச் செல்கிறார்கள்…
ஊம்ஹூம்… அவள் போனதேயில்லை.
அவள் வாங்கி வந்த வரம் அப்படி
காவிரி ஆற்றை நினைத்தாலே குலை நடுங்கும் குந்தலாம்பாளுக்கு.
“ஐயோ… என்று ஒரு குரல் கத்தி அழ வேண்டும்’ போல் தோன்றும். அவ்வளவு கசப்பான அனுபவம் அவளுக்கு…!
“காவிரிக் குளியல் எவ்ளோ சுகம் தெரியுமோ…!
அதுவும் விடிகாலைல அகண்டகாவேரீல குளிக்கறவாளுக்கு எந்த வியாதியும் அண்டாது தெரியுமோ…”
“உஷத் காலத்துல, நன்னா காவேரீல அமுங்கி ஸ்நானம் பண்ணிப்பிட்டு, பித்தளைக் குடத்தை பளிச்சுனு தேய்ச்சி, இடுப்புல காவேரி தீர்தம் சுமந்துண்டு வர்றதுல உள்ள சுகமே அலாதிதான்…
நாள் பூரா சோம்பேரித்தனமே இல்லாம ஒரு சுறுசுறுப்பு உடம்போட ஒட்டிண்டுன்டேன்னா இருக்கும் …!”
“காவேரீல சல சலன்னு ஓடற ஜலத்தைப் பாத்துண்டே இருந்தா அது ஒரு சொகம்.
அதுவும் அகண்ட காவேரீல பட்டுப்பாய் விரிச்சா மாதிரி… இப்படி ஒரு அழகு, ரம்யம்… வேற நதிகளுக்கு உண்டோ தெரியலை…”
படிக்கட்டுல நின்னு கரைல வந்து வந்து மோதிப் போற சுழலைப் பார்க்கணுமே…
“உடம்புல உள்ள உஷ்ணத்தையெல்லாம், நான் எடுத்துக்கறேன் வாடீ’’னு அழைக்கறமாதிரியே இருக்கும்.”
“அப்படிப்பட்ட தாயார்ன்னா காவேரி…”
“அதுவும், நம்ம படித்துறை…அடடா அப்படி ஒரு அகலம், அப்படி ஒரு சொரசொரப்பு…!
ஒரு சோப்பு வாண்டாம், சவக்காரம் வாண்டாம்… கருங்கல் படித்துறைல ரெண்டு நசுக்கு நசுக்கி… சல சலன்னு ஓடுற ஜலத்துல பிரிச்சி ரெண்டு அலசு அலசினாப் போறுமே… துணி தும்பப் பூவாய் வெளுத்துடுமே…”
“காவேரி ஜலம் குடிச்ச வாய் வேற ஜலம் குடிக்குமோ…?”
“தல வலியோ, காச்சலோ… காவேரீல போய் ரெண்டு முங்கு முங்கினா சிட்டாப் பறந்து போயிடும்னேன்.”
“காவேரி ஸ்நாநம் ஆன கையோட சந்தியா வந்தனம் பண்ணி, தாராளமா அர்க்யம் விட்டு,
காயத்ரி ஜபம் சாதிச்சா, காயத்ரி தேவி பிரச்னமாகி கண் முன்னால காட்சி தருவாளாக்கும்…”
இப்படி வருவோர் போவோரிடம் தன் மாமியார் காவேரி மகாத்மியத்தைச் சொல்லும்போது குந்தலாம்பாள் அதை காதில் வாங்கிக்கொள்வாள்.
இப்படி ‘தீர்த்தக்கரை பாவியாக இருக்கிறோமே…’ என்று நொந்துகொள்வாள். தானும் அப்படிக் காவேரியில் குளிக்க வேண்டும் என்று தோன்றும் அவளுக்கு.
மாமனார் இறந்தபோது, காவிரியில் குளிக்க வாய்ப்புக் கிடைத்தது குந்தலாம்பாளுக்கு.
கண்மூடாமல் ராப்பிணம் காத்த தூக்கக் கலக்கம்.
காரியம் செய்யும் மாதய்யாவுக்கு அருகில் மணிக்கணக்காய் நின்றது.
வீட்டு மருமகளாய் வந்தவர்களை கவனிக்கப் பம்பரமாய்ச் சுற்றியது.
இப்படி ஆய்ந்து ஓய்ந்த கட்டையாய், காவிரியில் இரண்டு மூன்று முறை முக்கி எழுந்தாள்.
மாமியார் சொல்லும் மகாத்மியம் எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.
ஆடிப்பெருக்கு நாளில் மாதய்யாவின் குடும்பம் தவிர ஊரே காவிரிக்கரையில்தான் இருக்கும்.
‘கட…கட…கட….கட…கட…’வென சிறுசுகள் சப்பரம் இழுத்துக்கொண்டு வருவது கண்கொள்ளாக் காட்சி.
பெண்கள் சாப்பாட்டுத் தூக்குடனும், கூடையுடனும் சத்தம் போட்டுப் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் காவிரிக்குச் செல்லும் அழகே அழகு.
தூக்குகளிலும், வாளிகளிலும்… கொண்டு வந்த சித்ரான்னங்களைக் காவிரிப் படிக்கட்டில் வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுத்துக்கொண்டே, தானும் தின்னுவது அலாதி சுகம்.
மிளகாயைக் கடித்துவிட்டு ‘ஆ…! உஸ்…ஸ்…! என்றெல்லாம் அலறித் துப்பி காவிரி நீரை அள்ளிக் குடிப்பது… ஆனந்த அனுபவம்.
காவிரித் தண்ணீரை அள்ளி ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வார்கள்.
உடைகளை நனைத்துக்கொள்வார்கள்…
இப்படி தினுசு தினுசாகக் குதூகலிப்பார்கள் ஜனங்கள்.
குந்தலாம்பாளுக்கும் குழந்தை துரைராமனை அழைத்துக்கொண்டு சித்ரான்னங்களுடன் காவிரிக்குப் போய் வர ஆசைதான்.
மாமியாரிடம் கேட்க பயம்.
மாமியாரிடம் கேட்கச் சொல்லி மாதய்யரிடம் சொன்னாலோ அது விபரீதமாகிவிடும்.
துரைராமனுக்கு மூன்று வயது இருக்கும்.
அம்மா “தப்பரம்…. தப்பரம்… என்று நச்சரித்துக்கொண்டே இருந்தான்.
“தப்ப’ரமுமாச்சு, ரைட்’டரமுமாச்சு… பாட்டிக்குத் தெரிஞ்சா அவ்ளோதான்…”
குந்தலாம்பாள் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டார் மாதய்யா.
“கொழந்தைய அழைச்சிண்டு காவேரிக்குத்தான் போயிட்டு வாயேன் கொந்தலா…” என்றார்.
இதைக் கேட்டதும் குந்தலாம்பாளுக்கு உடம்பெல்லாம் ஒரு முறை தூக்கிப்போட்டது.
‘நிஜம்தானா..? கனவா…?.’ கிள்ளிப் பார்த்துக்கொண்டாள்.
நிஜம்தான் என்று தெரிந்தபோது மகிழ்ச்சி ‘ஆடி மாதத்து அகண்ட காவிரி’யைப் போலக் கரை புரண்டு ஓடியது.
இந்த மகிழ்ச்சி ஒரிரு நிமிடங்களுக்குத்தான் நீடித்தது.
“ஏண்டா மாது… உனக்கு புத்தி கித்தி கெட்டுப்போச்சா…”
“காவேரிக்கு அவளைப் போகச் சொல்லி உத்தரவு கொடுக்கறாப்ல இருக்கு…”
தொடங்கிவிட்டாள் மாமியார்.
“இல்லம்மா…! குழந்தை ஆசைப் படறான்… அதான்…!”
மாதய்யா மழுப்பினார்…
“எப்படா மழை வரும்னு, காத்திருந்து குளிச்சவாளுக்கெல்லாம் காவேரீல குளிக்கற ஆசை வந்துடுத்து….”
மருமகளின் பிறந்தகமான வானம்பார்த்த பூமியை ஒரு முறை குத்திக் குட்டினாள்.
“வாண்டாண்டாப்பா… நான் ஏ…து…ம்….சொல்ல….ல…அவ தா…ரா…ள…மா….காவேரி என்ன……. கொள்ளிடத்துக்கும் போகச்சொல்லு…”
“……………………………”
நீ ஆம்படையான் உத்தரவு கொடுக்கறே, நான் குறுக்க பூந்து தடுப்பானேன்…”
“…………………………….”
“வாசல் கால் வந்துடுத்து… அதுக்கு இடமும் கொடுத்தாறது…
இந்தக் கூத்தையெல்லாம் பார்க்கத்தான் பகவான் என்னை இன்னும் உசுரோட வெச்சிருக்கான் போல்ருக்கு…”
“உன் அப்பா உத்தமமா போய்ச் சேர்ந்துட்டார்… ஈஸ்வரா… என்னையும் சீக்கிரம் கொண்டு போப்பா….”
சம்பந்தா சம்பந்தமில்லாமல் , தகரக் கொட்டகையில் விட்டு விட்டு, ஆலங்கட்டி மழை பெய்கிறார்ப்போல் பேசத் தொடங்கிவிட்டாள்.
பாட்டம் பாட்டமாய்ப் பேசிக்கொண்டே இருந்தாள்.
நிறுத்துகிற வழியாகத் தெரியவில்லை.
ஏம்மா… நாளும் கிழமையுமா இப்படி அபசகுனம் பிடிச்சாப்ல பேசறே…
“நான் அவளை போகச் சொன்னேன். வாஸ்தவம்தான்…”
“போகட்டும்னு சொல்லு போகாதேனு சொல்லு. உன்னை மீறி அவ போயிடப் போறாளா..?.”
“ஏன் இப்படிப் புலம்பறேம்மா…”
அந்தாதி போல முடித்த இடத்தைப் பிடித்துக்கொண்டாள்…
“புலம்பறேண்டா நான் புலம்பறேன்..”.
“என்னோட தலையெழுத்துடா…”
“உன் அப்பா இருந்தா இப்படி என் வாயை அடக்குவியா…”
“பெண்டாட்டி சொல் கேட்டுண்டு எதிர்த்துப் பேசுவியா…?”
என்னை… “
“உன் தோப்பனார் புண்யம் பண்ணினவர் போய்ச் சேர்ந்துட்டார்.
நான்… கண்டவாகிட்டேயெல்லாம் வாங்கிக் கட்டிக்கணும்னு விதி..”
“இவ்வளவையும் கேட்டுண்டு நான் இன்னும் உசிரோட இருக்கேன் பாரு… “
“டேய் மாதவா… ‘சாலோட சாய்ச்சி தண்ணி குடிச்சாலும், பெத்த தாய் வார்க்கற தண்ணிதான் தாகம் தணிக்கும்…’ சொல்லிட்டேன்…”
இவ்வளவையும் பேசிவிட்டு, டக் கென்று, ஜபமாலையை எடுத்துக்கொண்டு ராமபஜனை மடத்தை நோக்கிச் சென்றுவிட்டாள்.
புயலடித்து ஓய்ந்தாற்போல இருந்தது வீடு.
மூணு வயது துரைராமன் ‘திருக்… முருக்…’ கென முழித்தான்.
மாதய்யா தலை தாழ்ந்திருந்தது.
குந்தலாம்பாள் கண்களில் தாரையாய்க் கண்ணீர்.
“தீர்த்தக் கரை பாவி’யைப் போல இருந்த குந்தலாம்பாள் , மாமியார் இறந்தபோதும், காவிரியில் குளிக்கவில்லை.
“காவேரீல இழுப்பு அதிகமா இருக்கு. பெண்டுகள் பெரிய வாய்க்காலில் முழுகிடுங்கோ…” என்று சொல்லிவிட்டார்கள்.
‘மாமியார் ஆத்மா சாந்தியடைந்திருக்கும்…’ என்று நினைத்துக்கொண்டாள் குந்தலாம்பாள்.
பாட்டி செத்துப்போனபோது துரைராமனுக்கு பத்து வயசு.
பள்ளிக்கூடத்தில் அவனைப் போட்டாகிவிட்டது.
பிச்சல் பிடுங்கல் இல்லை. என்றாலும் மாமியார் இல்லாத குறை இப்போது பூதாகாரமாகத் தெரிந்தது குந்தலாம்பாளுக்கு.
மாதய்யாவின் கோபத்தை அடக்கும் சக்தியையும், தகுதியையும் மாமியார் மட்டுமே பெற்றிருந்ததை இப்போது உணர்ந்தாள் அவள்.
இருக்கும்போதுதான் நமக்கு எதன் மதிப்பும் தெரிவிதில்லையே…
நஞ்சையும் புஞ்சையுமாக, ஏகப்பட்ட நிலபுலங்களைக் கட்டிக்காத்து, எட்டுக் கண்ணும் விட்டெரிந்து நிர்வாகம் செய்யும் மாதய்யாவுக்கு எப்போது பார்த்தாலும் கோபம்… கோபம்…கோபம்…
இரண்டு தினுசாய் கோபத்தைக் காண்பிப்பார் மாதய்யா.
ஒன்று கத்துவது.
இன்னொன்று அம்மிக் குழவிக் கோபம். கையில் அகப்பட்டதைப் போட்டு அம்மிக்கல்லால் அடித்து நசுக்குவது…
கத்தல் என்றால்…
A.K. Ramanujan என்ற இந்திய ஆங்கிலக் கவிஞர் தன் Obituary என்ற கவிதையில் Being a Burning Type என்று சொல்வதைப்போல
வாயிலிருந்து சரமாரியாக நெருப்பைப் போல வார்த்தைகள் வந்து விழும்.
குபீர் குபீர் என்று பற்றி எரியும்.
சிறிது நேரம் கழித்து தானே சமனமாகிவிடும்.
கிராம சேவகராகவும் இருப்பதால், வீட்டுப் பிரச்சனைகளோடு பொதுப் பிரச்சனைகளையும் தலையில் போட்டுக் கொள்வார் அவர்.
‘பேய்க்கு வாழ்க்கைப் பட்டால் புளியமரம் ஏறித்தானே ஆக வேண்டும்.
நாய் வேஷம் போட்டால் குலைத்துத்தானே ஆக வேண்டும்.’
இந்த சித்தாந்தத்தில் வாழ்ந்த மாதய்யா, நேர்த்தியாய்ப் புளிய மரமும் ஏறினார்,
இன்னிசையாய்க் குலைத்ததார்.
ஊரில் நல்ல பெயர் அவருக்கு.
நாலு மனுஷாளை திருப்திப்படுத்தவேண்டும் என்று இறங்கிவிட்டால், குடும்பம் சீர் குலைகிறது.
குடும்பத்தை மட்டும் சீராகவும் சிறப்பாகவும் வைத்திருப்பவன் பொதுவிவகாரத்தில் தலையிடுவதில்லை.
பொது வாழ்விலும் சாதித்து, சொந்தக் காரியத்தையும் குறையில்லாமல் வைத்திருப்பது குதிரைக்குக் கொம்பு முளைக்கிற கதைதான்.
ஊர் விவகாரத்தில் தலையைக் கொடுத்துவிட்டுத் தவிப்பது ஒரு புறம்.
விவசாயம் பிடிபடாமல் ஆள் படைகள் போக்குக் காட்டி வயிற்றெரிச்சல் கொட்டியது ஒரு புறம்.
இப்படி ஊரையும், சொந்த விவசாயத்தையும் புரிந்துகொள்ளவே தன் முழு கவனத்தையும் செலவிட்டதால், அதையெல்லாம் விட பெரிய சொத்தான மழலைச் செல்வமான துரைராமனை முறையாக கவனிக்க முடியவில்லை.
தன்னை முறையாக கவனிக்காத மாதய்யாவிடமிருந்து மகன் துரைராமனை வெகுதூரம் விலக்கிவிட்டார் வில்லங்கம் கிட்டாவய்யா.
துரைராமனும் மாதய்யாவின் மாற்று துருவமாய் விலகிப்போய்விட்டான்.
இனி இந்த நிலை மாறப்போவதில்லை.
இப்போது என்ன செய்வது…
கால்கள் விண்… விண்… என்று வலித்தது.
இங்கே தொடர்ந்து இருந்தால் மனசு வலியும் சேர்ந்துகொள்ளும் என்று பட்டது.
ஒரு முடிவுக்கு வந்தார் மாதய்யா.
– தொடரும்…
விகடன் மின் இதழான மை விகடன் இதழில், 02.05.2022 அன்று கலியன் மதவு என்ற சமூக நாவல் தொடங்கித் தொடர்ந்து 28.01.2023 ல் அதை நிறைவு செய்யும் வரை, அதைச் சிறப்பாக வெளியிட்டு ஊக்குவித்த ஆனந்த விகடன் ஆசிரியர், மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் – ஜூனியர் தேஜ்
அத்தியாயம்-1
=============
கலியன் மதவு நாவல் முதல் அத்தியாயமே நல்ல விறுவிறுப்புடன் நகர்கிறது. முதல் அத்தியாயத்தின் ஹைலைட்டான அகிலாண்டக் கிழவியின் ஆளுமையை சிறுசிறு சம்பவங்களால் இணைத்து கண்முன்னே கொண்டு வந்திருப்பதும், வட்டார வழக்கிலேயே கதாபாத்திரங்களை பேச வைத்திருப்பதும் வாசகனை சம்பவ இடத்துக்கே அழைத்துச் சென்று கதையோடு ஒன்றச் செய்து விடுகிறது. படித்து முடித்தபின்னும், அந்த கிராம சூழ்நிலையிலிருந்து வெளியே வர வெகு நேரமாகிறது, இது கதாசிரியரின் வெற்றி.
அத்தியாயம்-2
============
‘ஒவ்வொரு பசுவையும் தனிக் கொட்டகையில் கட்டித்தான் கறக்கவேண்டும் என்பது மாதய்யாவின் சித்தாந்தம். கன்றுகளும் குழந்தைகள்தான். ஒரு கன்று தாய் மடியில் பால் ஊட்டும்போது மற்ற கன்றுகள் அதைப் பார்த்து ஏங்கக்கூடாது…’ என்று நினைப்பவர் அவர். ‘ஒவ்வொரு பசுவையும் தனிக் கொட்டகையில் கட்டித்தான் கறக்கவேண்டும் என்பது மாதய்யாவின் சித்தாந்தம். கன்றுகளும் குழந்தைகள்தான். ஒரு கன்று தாய் மடியில் பால் ஊட்டும்போது மற்ற கன்றுகள் அதைப் பார்த்து ஏங்கக்கூடாது…’ என்ற வரிகளின் மூலம் மாதய்யாவின் தயையும், அவர் வாயில்லா ஜீவன்களையும் தம் மக்கள் என்றே எண்ணுவது அவரது உயர்ந்த குணத்தையும் எடுத்துக்காட்டுகிறது. கிராமிய நடையிலேயே கதையை நகர்த்துவது படிப்பதற்கு சுவாரசியமாக உள்ளது
அத்தியாயம்-3
===========
தொப்ளான் என்ற மனிதரை தெய்வ நிலைக்கு உயர்த்திய மாதய்யாவின் சிந்தனைகள் மனதை நெகிழ வைக்கிறது. மரணத்திற்கு பின் கிராமங்களில் கடைபிடிக்கப்படும் சம்பிரதாய சாங்கியங்களை விரிவாகவும் ஊடே பெரும்பாலான கிராமங்களில் இப்போதும் அனுபவித்து வரும் வழிப்பிரச்சினையையும் கண்முன்னே கொண்டு வந்தது.
அத்தியாயம்-4
=============
மாதய்யாவின் மனதை உறுத்திக்கொண்டிருந்த புடல்கொல்லை ரகசியத்தின் விடை கிடைத்ததும் முன்பை விட அதிகமாக சஞ்சலம் அடையத் தொடங்கிவிட்டார்.
இடையிடையே ஊடாடும் மகனைப் பற்றிய நினைவுகளும் அதை விட அதிகமாக மண்ணின் மகத்துவம் அறியாமல் தொலைதூரத்தில் வேலை செய்யும் மகன் மீது கொண்டுள்ள கோபத்தையும் நன்கு உணரமுடிகிறது.
அத்தியாயம்-5
============
மாதய்யாவின் மனைவி குந்தாலம்மாவை சிலாகித்து ஒரு லக்ஷ்மிகரமான உணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள். மகன் தொலைவில் இருந்தாலும் அவன்மேல் உள்ள பரிவை தனது வாக்குகளாலும், செயல்களாலும் அடிக்கடி நினைவு கூர்வது தாய்மைக்கே உரிய குணமாகும்
ராமுவுக்கும் சாவித்திரிக்கும் உண்டான காதலின் நதிமூலத்தையும் ரிஷிமூலத்தையும் இந்த அத்தியாயத்தில் அலசியிருக்கிறீர்கள். அமரர் தேஜ் அவர்களின் சித்திரங்கள் பிரமைக்க வைப்பதோடல்லாமல் கதைக் களத்தை கண்முன்னை நிழலாடவிடுகிறது
அத்தியாயம்-6
=============
ராமு-சாவித்திரி காதல் வெளியுலகிற்கு தெரியவந்ததும் நாவல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்து என்ன என்ற ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது.
அத்தியாயம் – 7
================
வீரமுத்துவின் அட்டூழியங்களுக்கு இராணுவ மிடுக்கோடு மாதய்யா கொடுத்த மிரட்டல் சபாஷ் ரகம்
அத்தியாயம்-8
===============
ராமு-சாவித்திரியின் அவசரமான முடிவு பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது. நிகழப்போகும் பின்விளைவுகளை எண்ணி மனம் பதைபதைக்கிறது
அத்தியாயம்-9
==============
இறுதி ஊர்வலத்திற்காக தனது காணியையே தியாகம் செய்த மாதய்யாவின் செயல் மூட நம்பிக்கைகளை வேறோடு அறுத்தெறியும் புரட்சிகரமான செயல்.
மாதய்யாவின் வயல் அறுப்பு நிகழ்வுகள் எங்களை அந்த கிராமங்களுக்கே நேரடியாக கொண்டு சென்றதைப் போல உணரவைத்தது.
அத்தியாயம்-10
===============
அறுவடைக்குப் பிறகு தானியத்தை சேமித்துவைக்கும் முறைகளையும், பழக்கவழக்கங்களையும் ரசித்து விளக்கியிருக்கிறார் கதாசிரியர். நகரங்களில் வாழும் எங்களுக்கு இது புதுசு.
அத்தியாயம் – 11
=================
ப்ளாஷ்பேக்காக துரை ராமனின் பால்ய காலத்தையும், தந்தை மகனுக்கு இடையிலான மன விரிசலின் சம்பவத் தொகுப்புகள், மாதய்யா-அருணகிரியின் நட்பின் ஆழத்தையும் சிறுசிறு சம்பவங்கள் மூலம் அருமையான நடையில் தந்திருக்கிறார் ஆசிரியர் திரு ஜூனியர் தேஜ்.
கிராம வீடுகளை செப்பனிடும் பணிகளை மிகவும் ரசித்து விளக்கியிருக்கிறார்.
அத்தியாயம் – 12
===============
சொத்து விஷயத்தில் துரைராமனுக்கு இருக்கும் அறைகுறை விவரங்களால் ஏற்படும் வாக்குத் தர்க்கங்களை சம்மட்டியால் அடித்து நேர் செய்ததைப்போல குந்தலாம்பாள் ஒரு தேர்ந்த வக்கீலின் மிடுக்கோடு வாதங்களை எடுத்து வைப்பது சபாஷ் ரகம்.
கிராம பழக்க வழக்கங்கள், கால்நடைகளை அரவணைப்போடு குடும்ப உறுப்பினராக எண்ணும் மனநிலை, வயலில் வேலைபார்ப்பவர்களை உடன்பிறந்தவர்களாக நினைக்கும் அணுகுமுறை இவை எல்லாம் ஆழ்மனதில் பதியும் வண்ணம் கதாசிரியர் திரு ஜூனியர் தேஜ் அவர்கள் அழகாக கூறியுள்ளார்
அத்தியாயம் – 13
==================
வீடிழந்தவர்களுக்கு தனது நிலத்திலேய வீடு அமைத்து சாசனம் செய்து தருவதாக கூறும் மாதய்யாவின் தாராள குணம் மகான்களுக்கு மட்டுமே உரியதாகும். மாதய்யாவை தெய்வத்திற்கு இணையாக கருத வைக்கும் நிகழ்வு இது.
அத்தியாயம் – 14
=================
மாதய்யாவின் ஆன்மிக ஈடுபாட்டையும் ஓரிரு சம்பவங்கள் மூலம் விவரித்திருப்பது சிறப்பு. ஊர்த் திருவிழாவினை மிகவும் விரிவாக கண்முன்னே கொணர்ந்தது ரம்மியமாக அதனுடன் ஒன்றி அருள் பெற முடிந்தது
அத்தியாயம் – 15
=================
மாதய்யாவின் அந்திம நிமிடங்கள் மனதை கனக்க வைத்தது. ஒரு சகாப்தம் ஆடி அடங்கிய வேதனை. கிராம மக்களின் நண்பனாய், மகனாய், சகோதரனாய், தந்தையாய், உறவினனாய் வாழ்வாங்கு வாழ்ந்த மனித நேயம் மிக்க மகாத்மாவாய் எல்லோர் மனங்களிலும் நிறைந்து மறைந்த மாமனிதராய் இருந்த மாதய்யா இன்று இறைவனுக்கு வேண்டியவராய் ஐக்கியமாகிவிட்ட தருணம். மற்ற எல்லாரையும் விட மாதய்யாவின் நிழலாய் இருந்த கலியனுக்கு இது ஈடுசெய்யமுடியாத ஒரு பேரிழப்பு.
அத்தியாயம் – 16
=================
கணவனின் ஈமக்கிரியைகள் எவ்வாறு நடக்க வேண்டம் என்று குந்தலாம்பாய் உறுதியோடு ஆணையிடும் சம்பவம் அவரை பாரதியாரின் புதுமைப் பெண்ணாக எண்ணத் தோன்றுகிறது. துக்கம் ஒரு புறம் இருந்தாலும் ஆகவேண்டிய காரியங்களை கம்பீரத்தோடு முன்னின்று நடத்தும் அவரது துணிச்சல் பாராட்டத் தகுந்தது.
அத்தியாயம் – 17
================
குந்தலாம்பாவின் மூத்த சகோதரி புஷ்பாவிற்கு இழைக்கப்பட்ட சமூக அநீதியை எண்ணிக் குமுறுவதும், அத்தகைய நிலை தனக்கு வரக்கூடாது என்று தீர்க்கமாக எதிர்ப்பதும், பெண்ணினத்திற்கு முன்மாதிரியாயும், வருங்காலப் பெண்களின் வழிகாட்டியாகவும் நிற்பதாக காட்டியிருப்பது கதாசிரியர் திரு ஜூனியர் தேஜ் அவர்களின் புரட்சி சிந்தனையைக் காட்டுகிறது.
அத்தியாயம் – 18
================
கணவனின் நிறேவேறாத கனவுகளை கலியன் துணையோடு அவனை ஒரு குடும்பங்கமாக எண்ணி முன் நின்று நடத்த முற்படுவது அவரது நிர்வாகத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு. பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் ஓர் அம்சமே இது. மேற்பார்வையோடு நிற்காமல் குந்தலாம்பாள் வயலில் இறங்கி வேலை பார்த்தது அவருள் உள்ள ஒரு சமத்துவவாதியை கதாசிரியர் வெளிக்கொணர்ந்துள்ளார். குந்தலாம்பாள் அய்யாம்மாவாக பரிமளித்து வேலையாட்களுடன் சகோதரத்துவத்தோடு வேலைவாங்கும் பாங்கு இவை எல்லாம் She is not only a Boss, she is also a good administrator என்று உணரவைத்தது.
அத்தியாயம் – 19
================
நிலபுலன்களின் மீதுள்ள துரை ராமனின் எதிர்மறையான கண்ணோட்டத்தையும், அவனது வியாபார மூளையில் தோன்றப் போகும் எண்ணங்களையும் கோடிட்டு காட்டியுள்ளார் ஆசிரியர்.
அத்தியாயம் – 20
================
துரையின் புதிய வியாபாரத்தின் வீரியம் ஒரு சில நாட்களிலேயே வெளுக்கத் தொடங்கி தான் தவறான வழியில் செல்கிறோமோ என்ற ஐயத்தின் விதையை மெல்ல விதைக்கத் தொடங்கியுள்ளது தெளிவாக தெரிகிறது
அத்தியாயம் – 21
================
திடீர் வெள்ளப் பெருக்கால் விளையும் நஷ்டங்கள், கஷ்டங்கள் துரை ராமனுக்கு பாடம் புகட்டிவிட்டது. கிட்டாவய்யாவின் சுயரூபத்தை மெல்லமெல்ல உணரத் தொடங்கியதும், கலியன் பால் ஈர்க்கப்படும் துரை ராமனின் மன ஓட்டம் நன்கு காட்டப்பட்டுள்ளது.
அத்தியாயம் – 22
================
மாதய்யாவின் பழைய நினைவுகளை கிளறிவிட்டதால், அவரின் மறைவு மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. கிராமத்தினுள், மாதய்யாவுடன் நாமும் பயணிக்கிறோம்.
அத்தியாயம் – 23
================
அகிலாண்டக் கிழவியின் திருத்தப்பட்ட அறிவுறுத்தலின்படி மாதய்யாவின் சேஷிப்புகளை கலியன் தாயத்தாக கட்டிக்கொண்டது கண்களை பனிக்கச் செய்தது. ‘அந்தக்கனம் முதல் மாதய்யாவை நெஞ்சுக்குள் மட்டுமின்றி நெஞ்சுக்கு வெளியேயும் விசுவாசத்துடன் சுமக்கத் தொடங்கினான் கலியன்’ என்ற வரிகள் நெஞ்சை கனக்க வைத்தது
அத்தியாயம் – 24
=================
வக்கீல் வாதிராஜனின் யதார்த்தனமான நடைமுறை வியாக்கியானங்கள் தொய்ந்து போயிருந்த துரை ராமனை மேலும் துவண்டுபோக வைப்பதாக கதாசிரியர் கூறுவது நூறு சதவிகிதம் சரி. சாட்சிக் காரனின் காலில் விழுவதைவிட சண்டைக்காரனின் காலில் விழுவதே நலம் என்பதை மறுப்பதற்கில்லை.
அத்தியாயம் – 25
=================
குந்தலாம்பாளின் காய் நகர்த்தல்களில் ஒரு சாணக்கியத்தனத்தை காண முடிகிறது. தனது பதியின் கடைசிகால ஆசையான கலியனுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதை நனவாக்க முயல்வது அவரது உதார குணத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
அத்தியாயம் – 26
=================
கலியனுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கில் குந்தலாம்பாள் சாதுர்யமாக களத்தை அமைத்துக் கொடுக்க கலியனும் அதில் கச்சிதமாக விளையாடி எதிர்பார்த்தபடியே கோலடித்துவிட்டான்.
அத்தியாயம் – 27
=================
கலியன் தனக்குக் கிடைத்த காணியை பொதுச்சொத்தாக்கி தனது கிராம மக்களுக்கு செய்த நன்மை பாராட்டுக்குரியது. பணம் படைத்தவர்கள் சுயநலம் மிக்கவர்களாகவும், ஏழைகள் பொதுநலம் பேணுபவர்களாகவும் இருப்பதால்தான் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்கள்.
CONCLUSION
கலியன் மதவு என்ற சமூக நாவலை படைத்த திரு ஜூனியர் தேஜ் அவர்களின் பல்வேறு துறைகளிலும், களங்களிலும் அவருக்குள்ள நுண்ணறிவை கதை முழுவதும் விதைத்திருக்கிறார். ஒரே சமயத்தில் மூன்று நான்கு நாவல்களை படித்த திருப்தி. அத்தியாயங்கள் நீண்டு பல்வேறு நிகழ்வுகளுக்குள் செல்வதால் படிப்பவருக்கு அயற்சியை ஏற்படுத்துகிறது. எனவே சிறுசிறு அத்தியாயங்களாகப் பிரித்து கதையை திருத்தியமைத்து புத்தகமாக வெளியிடலாம். சித்திரங்களை தானே வரைந்தும், போதிய நிழற்படங்களையும் உள்ளடக்கி ஒரு வண்ணமயமான, உணர்வுபூர்வமான, காலத்தை வெல்லும் சமூக நாவலை படைத்த திரு ஜூனியர் தேஜ் அவர்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகள்.
*ஆர். ஹரிகோபி, புது டெல்லி*
அத்தியாயம்-9
==============
இறுதி ஊர்வலத்திற்காக தனது காணியையே தியாகம் செய்த மாதய்யாவின் செயல் மூட நம்பிக்கைகளை வேறோடு அறுத்தெறியும் புரட்சிகரமான செயல்.
மாதய்யாவின் வயல் அறுப்பு நிகழ்வுகள் எங்களை அந்த கிராமங்களுக்கே நேரடியாக கொண்டு சென்றதைப் போல உணரவைத்தது.
அத்தியாயம்-10
===============
அறுவடைக்குப் பிறகு தானியத்தை சேமித்துவைக்கம் முறைகளையும், பழக்கவழக்கங்களையும் ரசித்து விளக்கியிருக்கிறார் கதாசிரியர். நகரங்களில் வாழும் எங்களுக்கு இது புதுசு.