2028, ஜுலை-11, அதிகாலை 5.00 மணி.
அந்தப் பெரிய இயற்கை அனர்த்தம் நிகழ்வதற்கு இன்னமும் இருபத்தினான்கு மணி நேரங்கள் உள்ளன. அதனை அறியாது உறங்கிக் கொண்டிருக்கும் வெள்ளவத்தை வாசிகளைப்போல, சுகந்தன் அதிகாலை உறக்கத்தினை நன்கு அனுபவிப்பான் போல் போர்வையால் உடல் முழுவதையும் இழுத்து மூடிக் கொண்டு ஆழ்ந்த நித்திரை வசப்பட்டிருந்தான். அச்சிறிய மிதவைக் கட்டிடத்தைச் சுற்றி விரிந்து பரந்திருந்த இந்து சமுத்திரம் ஆர்ப்பரிக்காது என்றுமில்லாத அமைதிப் பிடியில் சுகந்தன் போல உறங்கிக் கொண்டிருந்தது. அலைகள் வரப் போகின்ற அபாயத்தை எச்சரிப்பது போல மிக அமைதியாக அலைக்கழித்தன.
ஐ.ஓ.எஸ்.ஏ.எஸ்-1 (இண்டியன் ஓசன் செசிமிக் அனலைசிங் ஸ்ரேசன்-1) பணி அறையில் செசிமிக்கிராஃப் (புவிநடுக்கப் பதிகருவி) முன் அமர்ந்திருந்து, இரவு முழுவதும் கண்மூடாது செசிமிக்கிராஃமை (புவிநடுக்க அலைப் பதிவுத்தாள்) அவதானித்துக் கொண்டிருந்த டேவிட்டின் கண்கள் தம்மை அறியாது சோரத் தொடங்கிய வேளையில் செசிமோகிராஃப் மெதுவாக எச்சரிக்கை ஒலியை எழுப்பியது. திடுக்குற்று விழிப்படைந்த டேவிட் செசிமிக்கிராமில் மேல் கீழாக அசைந்து கொண்டிருந்த நீடில் (ஊசி) முனை படபடத்து கிறுக்கி ஓய்ந்ததைக் கண்டான்.
இந்து சமுத்திரத்தில் 01°12′ 34″ வடக்கு, 82° 18′ 20″ கிழக்கு சந்திக்கும் மெறிடியன் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை அமைப்பில் இருக்கும் சமுத்திர நிலத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் நில நடுக்கத்தை ஒலி மூலம் உணரும் கருவி, அடித்தள அதிர்வை ஒலி கண்காணிப்புக் கருவிக்கு அனுப்ப, அது அதனைப் பெற்றுத் தகவல் பெறும் பகுதியூடாக விண்ணில் நிலைத்திருக்கும் தப்பிரபோன் செய்மதிக்குத் தெரிவிக்க அத்தகவல் உடனடியாக ஐ.ஓ.எஸ்.ஏ.எஸ்-1 நிலையத்தில் இருக்கும் செசிமிக் கிறாஃப்பில் பதிவாகியது.
“ஓ…. மை கோட்…” என அலறியபடி டேவிட், சுகந்தன் உறங்கிக் கொண்டிருக்கும் ஓய்வு அறைக்குள் பாய்ந்து ஓடினான். அவன் அலறலைக் கேட்ட சுகந்தன், படுக்கையில் இருந்து துடித்துப் பதைத்து எழுந்திருந்தான். அதிகாலைக்குரிய ஓர் இனிய கனவினை டேவிட் கலைத்திருந்தான். கனவில் அவன் மனைவி சோமாவும் மூன்று பிள்ளைகளும் அவனுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
“படி… எப்ப வாறியள்?” என மூத்தவள் பமிதா கேட்கிறாள்.
“இந்த நூற்றியிரண்டாவது மாடியில் இருந்து கீழிறங்கி எங்காவது மண் தரையில் உலாவ வேண்டும்” என்கிறாள் சோமா தலையைச் சரித்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தபடி. அது அவளுக்கேயுரிய புன்னகை. அவர்கள் வெள்ளவத்தையின் ‘ருவின்ரவர்’ ஒன்றின் (இரட்டைக் கோபுர மாடி) 102வது மாடியில் வசிக்கிறார்கள். சோமாவின் அலுவலகம் நூற்றிப்பதினைந்தாவது மாடியில் இருக்கிறது. பிள்ளைகளுக்கான பாடசாலை, மூன்றாவது மகன் குணாவுக்குரிய நேசரி, சொப்பிங் கொம்பிளெக்ஸ் எல்லாம் அந்த மாடி வீட்டிலேயே இருந்தன. அவர்கள் தரையில் கால்களைப் பதிக்கும் சந்தர்ப்பம் மிக மிகக் குறைவு. சுகந்தன் வாரத்திற்கொரு முறை வீட்டிற்கு வரும் வேளைகளில் வெளியே கால் பதிப்பார்கள். காலாற நடப்பார்கள்.
தன் பணி நிலையத்தில் இருந்து அவர்களின் ‘ருவின்ரவரை’ ஒவ்வொரு வேளையிலும் சுகந்தன் பார்த்துக் கொள்வான். ஏனெனில் வெள்ளவத்தைக்குச் சரியாக மேற்கே ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் சமுத்திரத்தின் மத்தியில் அவன் பணி நிலையம் ஐ.ஓ.எஸ். ஏ. எஸ் – 1 அமைந்திருந்தது.
சுகந்தனின் அதிகாலைக் கனவை டேவிட்டின் அலறல் குளப்பி விட்டது. துடித்துப் பதைத்து எழுந்திருந்தான்.
“பொஸ்… இரண்டு தசம் ஒன்று றிச்சட் ஸ்கேல் மக்னிரியூட்டில் மெல்லிய புவிநடுக்கம் பதிவாகி இருக்கிறது” என்று பதறினான். சுகந்தன் வேகமாக ஓய்வறையை விட்டு வெளியேறிப் பணியறைக் குள் நுழைந்தான்.
பணியறையில் பல்வேறு எலக்ரோனிக் கருவிகள் அமைக்கப் பட்டிருந்தன. பல்வேறு தரவு விபரங்களுடன் மெனிற்றர்கள் காட்சிப் படுத்திக்கொண்டு இருந்தன. அவற்றிற்கு மையமாகக் காணப்பட்ட ஒரு ஒளித்திரையில் பூமியின் முழு வடிவமும், அதில் அந்த நேரத்தில் உலகின் எவ்வெப் பகுதிகளில் புவி நடுக்க அதிர்வுகள் தோன்றுகின்றன என்பதையும் அப்புவிநடுக்க மையங்கள் (எபிசென்ரர்) எவை என்பதையும் சிவப்பு நிற ஒளிப் புள்ளிகள் காட்டிக் கொண்டிருந்தன. அதை அவதானிக்கில் பூமியில் புவி அதிர்வு ஏற்படாத கணமே இல்லை என்பது புலனாகும்.
இலங்கை இயற்கை அனர்த்த மைய நிலையத்துடன் (எஸ்.எல்.என்.டி.எம். பெ – ஸ்ரீலங்கா நச்சுரல் டிசாஸ்ரர் மனேஜ்மன்ற் பெய்ரோ) கணப் பொழுதில் தொடர்பு கொண்டான். சீஃப் எக்சிகியூட்டிவ் அதிகாரி டாக்டர் விக்கிரம அங்கிருந்தார்.
“இன்னும் இருபது நிமிடங்களுள் கொழும்பு மெகா சிற்றியின் தென்மேற்குக் கரையோரத்தில் 2.1 றிச்சார் அளவில் நில அதிர்வு ஏற்படவுள்ளது. பெரும் அனர்த்தத்திற்கு இடமில்லை . எனினும், ஊடகங்கள் ஊடாக மக்களை எச்சரிக்கவும்.”
“பயப்பட எதுவுமில்லை . வெறி மைனூட் வைபறேசன்…… எனினும், கவனமாக செசிமோகிராஃப்பை அவதானியுங்கள். மூன்று நிமிடங்களுக்கு முதலே ஐ.ஓ.எஸ்.ஏ.எஸ்-2 நிலையத்தில் இருந்து எச்சரிக்கை வந்துவிட்டது. யூ வே லேற்…”
“என்ன டேவிட் உறங்கி விட்டாயா?”
“இல்லை பொஸ்…” என்றான் தயக்கத்துடன் டேவிட்.
செசிமோகிராஃப் நிதானமாக இயங்கியது. அங்கு அமர்ந்த படியே வெள்ளவத்தைக் கரையை நோக்கினான். கொழும்பு மெகா சிற்றி ஒளிர்ந்து கொண்டிருந்தது. பதினைந்து மாடிகளைக் கொண்ட கட்டிடங்களின் தொகுதியாக வெள்ளவத்தைக் கரை தெரிந்தது. மொறட்டுவையிலிருந்து வத்தளை வரையிலான பிரதேசம் மெகா சிற்றியாகப் பரிணமித்திருந்தது. ஸ்கைலாப் கட்டிடங்கள் கொங்கிறீட் காடாக மாறி நெருக்கமாக விளங்கியது. அவற்றினிடையே வானளாவிய இரட்டைக் கோபுரங்களை மலேசிய அரசு தன் நாட்டின் ‘ருவின்ரவர்’ மாதிரி அமைத்துக் கொடுத்திருந்தது. இரண்டு கோபுரங் களும் 105வது மாடியில் பாலம் ஒன்றினால் இணைக்கப்பட்டிருந்தன. அக்கோபுரக் கட்டிடங்கள் முகில் மறைப்பில் மங்கலாகத் தெரிந்தன.
அதில் ஒன்றில் 102வது மாடியில் 12வது இலக்க பிளாற்றில் அவன் குடும்பம் இப்போது உறங்கிக்கொண்டிருக்கும்.
இருந்தாற்போல தொலைபேசி அலறியது. சுகந்தன் பட்டனைத் தட்டியதும் அதன் முன்னுள்ள மொனிற்றரில் மூத்தமகள் பமிதா
தெரிந்தாள். அவள் முகத்தில் கலவரம் தெரிந்தது.
“டி நான் கட்டிலிலிருந்து கீழே விழுந்துவிட்டேன். மெதுவாகக் கட்டில் அதிர்ந்தது. என்ன டடி? எங்களுக்குப் பயமாக இருக்குது.”
“பயப்பட எதுவுமில்லை பமிதா… மெல்லிய புவி நடுக்கம்… இல்லையில்லை ….. புவி அதிர்வு…. வைபறேசன்… அவ்வளவுதான்…. இப்படி இந்த வருடம் பதினொரு தடவை எற்பட்டிருக்குது…”
“மம்மி சொல்றா….. இந்த முறை 0.2 றிச்சார்ட் அதிகமெண்டு…”
கொழும்பு மெகா சிற்றியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் 3.5 றிச்சார் ஸ்கேல்வரை தாக்குப் பிடிக்கக் கூடியவை. பயப்படாதை பமி. ஒன்றுமே நடக்காது…. நீ கண்டதையெல்லாம் படித்துக் குழம்பியிருக்கிறாய்…டார்லிங். நீ மூத்த பிள்ளை . தைரியமாக இருக்க வேணும். தம்பியையும், தங்கச்சியையும் பயமுறுத்தாமல் பார்த்துக் கொள்ள வேணும். ஓ.கே… மம்மி எங்கே?”
“மம்மிக்கு நைற் டுயிட்டி… இன்னமும் வரவில்லை …. வந்திடுவா… வந்ததும் சொல்கிறன்.”
ஒளித்திரை அணைந்தது.
சோம்பல் முறித்தபடி கைகளால் பின் தலையை அழுத்திக் கொண்ட போது, ஜொக் ஒன்றில் கோப்பியுடன் டேவிட் வந்தான். ஒரு ஜொக்கினை அவன் முன் வைத்தான்.
“டேவிட்… நீ போய் ஓய்வெடுத்துக் கொள். ராத்திரி முழுவதும் விழித்திருந்திருக்கிறாய். அவசியமாகில் கூப்பிடுகிறன்.”
டேவிட் ஓய்வு அறைக்குச் சென்றதும், சுகந்தன் எழுந்து கண்ணாடிச் சுவர்களுக்கு வெளியில் வந்தான். சமுத்திரக் காற்று இதமாக வீசியது.
அவன் யாழ்ப்பாணத்தில் பிறந்தான். அவனது பெற்றோர் இருவரும் டாக்டர்கள். அம்மாவும் அப்பாவும் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் பணி புரிந்தார்கள். ஓய்வு நேரத்தில் தனிப்பட்ட வைத்திய சேவையை அப்பா நடத்தினார். எவ்வளவு இனிமையான நாட்கள் ? வசதிகள் கொண்ட வீடு, முன்னாலுள்ள பிள்ளையார் கோயில், கலகலப்பான வீதி, ஒரு தங்கை, ஒரு தம்பி, அம்மப்பா, அம்மம்மா , அச்சிமார் (அன்ரிமார்) என அவர்கள் குடும்பம் இனிமையின் ஆழத்தில் மகிழ்ந்திருந்தது. அந்த இனிமையான நாட்களையும் அவர்கள் வாழ்ந்த கூட்டினைக் கலைத்து அவர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற வைத்த சம்பவம் நிகழ்ந்த போது அவனுக்கு ஒன்பது வயது.
2006, யூலை 23ஆம் திகதி. நள்ளிரவு.
அவனுக்கு இன்னமும் நினைவில் இருக்கின்றது. அவனது வீட்டினை முகமூடிக் கொள்ளையர் துப்பாக்கிகளுடன் சூழ்ந்தனர். உதவிக்கு எவரும் இல்லை . அயலவர்கள் எவரும் உதவிக்கு வரவில்லை. கொள்ளையர் வீட்டைத் திறப்பித்தனர். அனைத்தையும் கொள்ளையிட்டுச் சென்றனர். எதிர்த்திருந்தால் ஈவிரக்கமற்ற அக்கொள்ளையர் அனைவரையும் சுட்டுத் தள்ளியிருப்பார்கள். எத்தனை வீடுகளில் கொள்ளையோடு கொலைகளும் நடாத்தி யிருக்கிறார்கள்? அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் அப்பா யாழ்ப்பாணத்தில் இருக்கப் பிடிக்காமல் கொழும்பில் குடியேறினார்.
சுகந்தனின் படிப்பு கொழும்பில் நிகழ்ந்தது.
சமுத்திரக் காற்று சற்றுப் பலமாக வீசியது. துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்காக நான்கு கப்பல்கள் ஆழ்கடலில் காத்திருந்தன. அவற்றினைப் பார்த்தபடி நிற்கும்போது அருகில் யாரோ நிற்பது போல உணர்வு.
“என்ன பொஸ்… கடும் யோசனை?” டேவிட் கேட்டான். முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன். செசிமோலோஜியில் பட்டம் பெற்றிருந்தான். இன்னமும் கலியாணமாகாத சிங்கள இளைஞன். காதலி ஒருத்தி மொறட்டுவையில் இருக்கிறாள்.
சுகந்தன் சிரித்தான்.
“ஒண்டுமில்லை டேவிட். 2 றிச்சார் புவியதிர்வு அப்படி ஒன்றும் மோசமானதல்ல. இந்த ஸ்கேலில் வருடத்தில் பூமியில் இரண்டு லட்சம் தடவைகளுக்கு மேல் ஏற்படுகின்றது. ஆனால், என் கவலை எல்லாம்… ஒன்றைக் கவனித்தாயா? அதிர்வு ஏற்படுகிற காலம் குறுகியதாக இருக்கிறது. எப்போதாவது இலங்கைக் கரையில் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருதடவை நிகழ்ந்த புவிநடுக்க அதிர்வு, படிப்படியாகக் காலம் குறுகி மாதத்திற்கு ஒரு தடவையாக மாறிவிட்டது…..”
“இதில் கவலைப்பட எதுவுமில்லை. எங்கள் கொழும்பு மெகா சிற்றிக் கட்டிடங்கள் 3.5 றிச்சார் வேகப் புவி நடுக்க அலைகள்வரை தாக்குப் பிடிக்கக்கூடியன. 8.6 றிச்சாருக்கு மேலாகில்தான் ஆபத்து. அப்படி ஏற்படில் கட்டிடங்கள் அனைத்தும் முற்றாகத் தகர்ந்து பெரும் அழிவை ஏற்படுத்திவிடும். 2004ஆம் வருடம் டிசம்பர் 26ஆம் திகதி போன்ற சுனாமியையும் ஏற்படுத்திவிடும்….. அவ்வாறு ஏற்பட இனி வாய்ப்பில்லை. சுனாமி முன்எச்சரிக்கை மையங்கள் பல இந்து சமுத்திரத்தில் நிறுவப்பட்டுள்ளன. மக்களை முன்கூட்டியே எச்சரிக்கலாம்….”
சுகந்தன், டேவிட்டைப் பார்த்துப் புன்னகைத்தான்.
“மனித முயற்சியால் நச்சுரல் டிசாஸ்ரர்களை முற்றாகக் கட்டுப் படுத்திவிட முடியாது. முன்கூட்டி நாம் நிர்ணயிக்கிற கால எல்லைக்கு முன்னேயே நச்சுரல் டிசாஸ்ரர்கள் பல நடந்தேறியிருக்கின்றன. இயற்கையின் சவால்களை முழுமையாக அறிவது அவ்வளவு சுலபமல்ல. மனிதன் இயற்கையைத் தனக்குரியதாக இயைவு படுத்த விளைகிறான். அது சாத்தியமல்ல. என்றும் சாத்தியமாகாது. வெள்ளவத்தையில் இப்படித் திட்டமின்றித் தொடர் மாடிகளைக் கட்டியிருக்கக்கூடாது. அதுவும் தாங்கு சக்தி குறைந்த கடற்கரையோரம். கொன்ரினென்ரல் சிலோப்பிற்கு மிகமிக அருகில். ஈக்குவில் பிரியம்…. ஐசோரசி…… சமநிலைத்துவம் குறைந்து பாதிப்புற வாய்ப்புண்டு. அதுவும் கொழும்பு மெகா சிற்றியில் ஆக 3.5 றிச்சார் அதிர்வை மட்டும் தாங்கும் அளவில் கட்டடிடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.”
“ஸ்ரீலங்கா அமைந்திருப்பது திடமான கண்டத் தகட்டில் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இலங்கை இண்டியன் அவுஸ்ரேலியாக் கண்டத் தகட்டில் அமைந்திருக்கிறது. திடமானது. அசைவிற்குள்ளாகாதது.”
“அது மனிதக் கணிப்பு டேவிட். உன் கருத்தும் அக்கணிப்பும் சரியாகில் நன்மையே நடக்கும் டேவிட்.”
சுகந்தனுக்கு மீண்டும் அம்மப்பாவின் நினைவு வருகிறது. அவர் நாடறிந்த ஜியோகிறயர், புவியியலாளர். அவனுக்குச் சிறு வயதிலேயே பூமி பற்றிய பல விடயங்களைப் புரிய வைத்திருக் கிறார். ஒரு தடவை காற்பந்து ஒன்றை வாங்கி வந்தார்.
“பேரா, இதைப் பார்க்கும்போது உனக்கு என்ன தோன்று கிறது?” என்று அவனிடம் கேட்டார்.
“பூமியின் உருண்டை வடிவம் தெரிகிறது.”
“சரியாகச் சொன்னாய். ஆனால், இன்னொன்றும் உள்ளது. இந்தப் பந்து சிறுசிறு தோல் துண்டுகளால் உருவாக்கப்பட்டது போல பூமி எட்டு பெரிய தகடுகளாலும், ஒன்பது சிறிய தகடு களாலும் ஆக்கப்பட்டிருக்கிறது. இவற்றை ரெக்ரோனிக் பிளேற் என்பர். கண்டக் கவசத் தகடுகள் எனலாம். இக்கவசத் தகடுகளின் விளிம்புகள் மிகவும் பலவீனமானவை. எரிமலைகள், பூகம்பங்கள் என்பன இந்த விளிம்புகளில் தான் ஏற்படுகின்றன. இலங்கை, இந்திய – அவுஸ்திரேலியக் கண்டத் தகட்டில் அமைந்திருக்கிறது. பேரா நமது நாடு ஒரு சொர்க்க பூமி. இங்கு பூகம்பம் ஏற்படாது.
எரிமலைகள் குமுறிக் குழம்பைக் கக்கா…. சில மணி நேரப் பயணத்தில் விரும்பிய காலநிலைப் பகுதியைச் சென்றடைய முடியும்.”
அவன் தன் பட்டப்படிப்பிற்கு ஜியோலோயி (புவிச்சரிதவியல்) ஐத் தேர்ந்து எடுத்துக்கொண்டான். அதிலும் செசிமோலோயி (புவிநடுக்கவியல்) ஐச் சிறப்புக் கற்கையாக எடுத்துக்கொண்டான்.
பல்கலைக் கழகம்……
பல்கலைக் கழகத்தில் தான் அவன் முதன்முதல் சோமாவைச் சந்தித்தான். அவள் அவனுக்கு ஒரு வருடம் இளைய மாணவி. தன் பட்டப்படிப்பிற்கு அவள் கிளைமேற்றோலோயி (காலநிலை யியல்) ஐயும், விசேட கற்கையாக வானிலை எதிர்கூறலியலையும் எடுத்துக் கொண்டாள்.
அவன் அவளுடன் பேசிப் பழகியபோது அம்மாவிடமும், அப்பாவிடமும் இருந்த பயம் அதிகமாக அவளை நெருங்க விட வில்லை . ஆனால், அவர்கள் இருவரும் அவர்களை அறியாம லேயே இருவரது உள்ளங்களிலும் மாறிப் புகுந்து கொண்டனர். ஜப்பானிற்கு ஸ்கொலசிப் கிடைத்து, அவன் மூன்று வருடப் படிப்பிற்காகச் சென்று திரும்பி, உடனடியாக ஜியோலொயிக்கல் அமைச்சில் லேலை கிடைத்தபோது, சோமாவும் அங்கு பணி புரிவாள் என அவன் எதிர்பார்க்கவில்லை.
“எனக்கு வீட்டில் கலியாணம் பேசினார்கள். ஆனால், என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. மனதில் உங்களை வைத்துக் கொண்டு இன்னொருவரை ஏற்க இயலவில்லை” என்றாள் சோமா.
அம்மா சத்தமிட்டாள். “உனக்கென்ன விசரா? அவள் சிங்களப் பெண்…”
“அம்மா இது 2020 ஆம் ஆண்டு… இப்பவும் இப்படிப் பேசலாமா?”
நெருக்கடிகள். அவர்கள் பெற்றோரின் சம்மதமின்றியே திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் கிடைத்த பின்னரும் மனம் மாறவில்லை. பிடிவாதம் அவர்களைத் தடுத்து நிற்கிறது.
எவ்வளவோ நடந்தேறிவிட்டன. அவன் ஐ.ஓ.எஸ்.ஏ.எஸ் -1 இன் சீஃப் எக்சிகியுட்டிவ் எஞ்சினியர். சோமா வானிலை எதிர்வு கூறல் நிலையத்தின் பணிப்பாளர்.
“என்ன பொஸ்?” என்றான் டேவிட்.
“ஒண்டுமில்லை. ஏனோ இன்று என்மனம் சஞ்சலப்படுகிறது. அம்மாவையும், அப்பாவையும் எண்ணிக் கொண்டேன். இன்னமும் அவர்கள் மனம் மாறி எங்களை ஏற்கவில்லை.”
உள்ளே தொலைபேசி கிண்கிணுத்தது. சுகந்தன் உள்ளே விரைந்து பட்டனை அழுத்த சோமா ஒளித்திரையில் சிரிப்புடன் தோன்றினாள்.
“சுகந், சற்றுமுன் றிங்கோ சற்றலையிற் மூலம் கிடைத்த வானிலைப் படத்தைப் பாருங்கள். உங்களுடைய லாப்ரொப்பிற்கு அனுப்பியிருக்கிறேன்.”
“பொறு சோமா….” அவன் லாப்ரொப்பை இயக்கினான். இந்திய இலங்கை நாடுகள் அமைந்த இந்து சமுத்திர வானிலைப்படம் விரிந்தது….“சரி சொல்லு சோமா….”
“இலங்கைக்குத் தெற்கே சுமாத்திரா றென்சி(அகழி)க்கு அருகில் 0° 12′ 04″ நோர்த் 120° 12′ 30″ ஈஸ்ட் மெரிடியன் புள்ளியில் இருந்து அதாவது ஆசிய பசுபிக் கண்டத் தகட்டின் மேற்கு விளிம்பிலிருந்து 3° 12′ 14” நோர்த் 60° 13′ 12” ஈஸ்ட் மெறிடியன் புள்ளிவரை அதாவது, ஆபிரிக்கத் தகட்டின் கிழக்கு விளிம்புவரை ஒரு நேர்கோடு இடில் என்ன தெரிகிறது…”
அவன் செய்மதிப் படத்தினை அவதானமாகப் பார்த்தான். ஜெட் விமானம் சீறிப் பறக்கும்போது ஏற்படும் முகில் கீறுபோல குறித்த இரு புள்ளிகளையும் இணைத்து இந்து சமுத்திரத்தில் கருங்கோடு போன்ற ஒரு தோற்றம் தெரிகிறது.
“எனக்கு வித்தியாசமாகத் தெரியவில்லை . சிற்றஸ் முகில் கீறு (கீற்று முகில்) போலப் படுகிறது… சோமா.”
“அப்படித்தான் நான் முதலில் நினைத்தேன். வடிவாகப் பாருங்கள்… பெரிதாக்கிப் பாருங்கள்… ஒரு றிப்ற்றினுள் (பிளவினுள்) சமுத்திர நீர் வேகமாக இறங்குவது போலில்லை?”
“ஓ… மைகோட்…. யூ மீன்….”
“எங்களுடைய இந்தோ -ஒஸ்ரேலியக் கண்டத் தகட்டில் மிகச் சிறிய ஒரு பிளவு ஏற்பட்டிருக்கிறது. வடக்காயும், தெற்காயும் இழுவிசை தொழிற்பட்டிருக்கிறது…. இந்திய அவுஸ்திரேலிய பிளேற் இரண்டாகிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். எதற்கும் பிளேற் றெக்ரொனிக் டிவிசனுடன் தொடர்பு கொண்டு முடிவு செய்யுங்கள். சற்று நேரம் செல்லப் பேசுகிறேன் ..” ஒளித்திரை இருண்டது.
சுகந்தன் வேகமாகத் தொழிற்பட்டான்.
“அப்படி ஒன்றுமில்லை . அது முகில் கீற்றுத்தான்…. சற்றில்லையிட் படத்தில் பதிவாகியிருக்கிறது. வேறொன்றும் இல்லை. அடுத்த சற்றில்லைட் படத்தை ஆராய்ந்தோம். அப்படியில்லை .” என்றார் டாக்டர் விக்கிரம். சுகந்தன் நிம்மதியாக மூச்சு விட்டான்.
சோமா திரையில் தோன்றினாள். “லேற்றஸ் வானிலைச் செய்மதிப் படங்களைப் பாருங்கள். முதலில் பிளவிருப்பதாகவும், சமுத்திர நீர் புவியினுள் இறங்குவ தாகவும் காணப்பட்ட கீற்றில் இப்போது வாயு வெளிவருவதுபோலக் காட்சி தெரிகிறது……” எனப் படபடத்தாள்.
அவன் பார்த்தான். “பதற்றப்படாதை சோமா. முடிவு எடுத்துக்கொண்டு அதற்கு ஆதாரம் தேடக் கூடாது. எவ்வளவு விற்பன்னர்கள் இப்போது ஆராய்ந்திருப்பார்கள்….. அப்படித் தெரியவில்லை . பிரமைதான் இயற்கையை ஏமாற்றுகிறது….”
“நீங்கள் சொன்னால் சரி. ஒரு குட் நியூஸ் சுகந். இன்று நானும் பமிதாவும் வெள்ளவத்தை தரைச் சந்தைக்குப் போனோம். அங்கு உங்களுடைய அம்மாவும், அப்பாவும் வந்திருந்தனர். எதிரெதிரே சந்தித்துக் கொண்டோம். பமிதா அப்பம்மாவை அடையாளம் கண்டுகொண்டாள். தானாகவே ஓடிப் போய் ‘கிராண்ட் மா’ என உங்க அம்மாவைக் கட்டிக் கொண்டாள். நீங்கள் இருந்திருக்க வேண்டும். அக்காட்சியை எப்படி விவரிப்பேன்……? உங்க அம்மா பமிதாவைக் கட்டிக் கொஞ்சிக் கண்ணீர் விட்டார். ‘
இப்ப எங்களுடன் எங்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். பிள்ளைகளை அணைத்துக் கதை பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு பேசச் சொல்கிறேன்.” அவள் திரையில் மறைந்தாள்.
“பொஸ்…” என்று டேவிட் அலறினான்: “8.9 றிச்சார்…”
“எங்கு ஏற்பட்டிருக்கிறது? எபிசென்ரர் எங்கே?” என்றபடி அவன் பணியறைக்கு ஓடி வந்து பிரதான புவியதிர்வுப் பதிவு மொனிற்றரைப் பார்த்தான். சோமா முன்னர் சுட்டிய பிளவுக்கீறில், 80° 12′ 34” ஈஸ்ட் 0° 38’ 49” நோர்த் மெறிடியன் புள்ளியில் புவிநடுக்க மையம் தோன்றியிருந்தது.
“ஓ… மை கோட்… டேவிட்….. இந்தப் புவிநடுக்கத்தின் அலைகள் இலங்கைக் கரையை அடைய எவ்வளவு நேரம் எடுக்கும் ?…”
“அதன் அலை வேகத்தைக்கொண்டு கணிக்கில் நான்கு மணி நேரம் எடுக்கும். அதற்குள் மெகாசிற்றி மக்களை எச்சரித்துவிடலாம்…”
“டாக்டர் விக்கிரமவிற்குத் தகவலை இணைப்புச் செய்…. நகரத்தின் எச்சரிக்கைச் சங்கை ஒலிக்கச் செய்…”
அவ்வேளை சோமா மீண்டும் திரையில் தோன்றினாள். அவள் பேசுவதற்கு முன் ஒளித்திரையில் தெரிந்த சோமா அப்படியே திடீரெனச் சரிந்து விழுவதையும் அவள் பின்னால் தெரிந்த சுவர் செங்குத்தாக வெடிப்புற்றுப் பிளந்ததையும் சுகந்தன் கண்டான். ஒளித்திரை அணைந்தது.
“ஓ… மை கோட்…. கணிப்பு ரைம் பிழையடா….” என சுகந்தன் அலறினான்.
“டடி… எங்களைக் காப்பாற்றுங்கள்…” என பமிதா ஒளித் திரையில் ஒருகணம் அலறினாள். அது இயற்கையின் கொடூரத்தைக் கண்ட அலறல் ஒலி.
‘ஐயோ….’ என சுகந்தன் கத்தினான். குரல் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.
வெளியே ஓடி வந்த சுகந்தன் வெள்ளவத்தைப் பக்கம் பார்வையைச் செலுத்தினான். அவன் கண் முன்னால் அனைத்தும் காவு கொள்ளப்பட்டன. கொழும்பு மெகா சிற்றியின் தொடர்மாடிக் கட்டிடங்கள் மணல் வீடுகளாகப் பொலபொலவெனச் சரிந்து தரையில் குவிந்து கற்குவியல்களாயின. அந்த இரட்டைக் கோபுர மாடிகள் அப்படியே செங்குத்தாக சளிந்து அமர்ந்தன. அவன் எதுவுமே செய்யவியலாது திகைப்பின் பிடியில் நின்றபோது, அவன் பணிமனை அலையின் உச்சத்திற்கு 30 மீற்றர் வரை காவிச் செல்லப்பட்டு உயர்ந்தது. அப்படியே புரண்டு குப்புறச் சரிந்து நீரில் அமிழ்ந்தது.
– தினக்குரல் 29-09-2006 – கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள், முதற் பதிப்பு: 21-07-2008, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான், மீரா பதிப்பகம், கொழும்பு.