கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 14,190 
 
 

பதினான்கு ஆண்டுகள் சொந்த ஊருக்கே வராமல் இருந்தது வரமா? சாபமா? என்று தெரியவில்லை. இதே காலக் கணக்கில் இராமன் போனது வனவாசம். நான் போனது பண வாசம். சொந்த ஊரில் பஞ்சாயத்துப் பள்ளியில்தான் படிப்பு என்றாலும் நகரத்தில் அமைந்த கல்லூரிப் படிப்பும் கிடைத்த வேலையும் வாழ்க்கையையே தடம் மாற்றிப் போட்டன. பொறியியல் படிக்க ஹாஸ்டலில் சேர்ந்தபோதே சொந்த ஊரோடு இருந்த உறவுச் சங்கிலி அறுந்து போக ஆரம்பித்திருக்க வேண்டும். அதன் பின் நகரத்தில் கிடைத்த வேலை, சென்னை வாசம், கூடப் பணிபுரிந்த யமுனாவையே கட்டிக் கொண்டது, அவளும் சென்னைப் பெண்ணாகவே அமைய, மாமியார் வீடு ஒத்தாசையாய் இருக்க, கிட்டத்தட்ட சொந்த ஊர் மறந்து போனது.

ஒற்றைப் பனைஅப்பா இறந்த பிறகு, அம்மாவும் அக்கா வீட்டோடு செட்டிலாக, எனக்கு ஆஸ்திரேலியாவில் டாலர் கணக்கில் வேலை கிடைக்க, யமுனாவோடும், ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று நான் பெற்றெடுத்த பெண் குட்டியோடும், சிட்னியிலேயே செட்டில் என்றாகிவிட்டது. பணிச்சுமையாலும், வளர்ப்பைப் பற்றிய பயத்தாலும் இன்னொன்று பெற்றுக் கொள்ளக் கூடத் தோன்றாமல் போய்விட்டது. அப்பா இறந்தபோது ஊர் வந்தது. இடையில் நான்கு முறை தாய்நாடு வந்தபோது அம்மாவை சென்னைக்கே வரச் சொல்லி பார்த்துவிட்டுப் போகும்படி ஆயிற்று.

ஒவ்வொருமுறையும் அம்மா ஊருக்கு வந்து பார்த்துப் போ என்றுதான் சொல்வாள். பின்பு மகனுக்கு ஆயிரம் வேலை இருக்கும் என்று அவளே அவளைத் தேற்றிக் கொண்டு சென்னைக்கு வந்துவிடுவாள். இங்கே மாமியார் வீடும் அம்மாவை நன்கு கவனித்துக் கொள்ள எந்தவித ஈகோவும் இல்லாமல் வந்துபோய் இருக்கிறாள். சம்பந்தியோடு எப்போதும் வீராப்பாய் முறைத்துக் கொண்டிருக்கும். எத்தனையோ மாப்பிள்ளைகளின் பெற்றோர்களைப் போல அம்மாவும் இருந்திருந்தால் ஒருவேளை அவளைப் பார்க்கவாவது ஊருக்கு வந்து போயிருப்பேனோ என்னவோ? எப்படியோ கங்காருகளின் வாசனையில் சொந்த ஊர் வெள்ளாடுகளை மறந்தாகிவிட்டது.

ஆனால் கொஞ்ச வருடங்களாகவே சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது. சம்பாதித்துக் குவித்த டாலரும், சொகுசு வாழ்க்கையும் அந்நிய மண்ணில் ஏதோ ஒரு வெள்ளைக்காரனின் கம்பெனிக்குச் செய்த வேலையையே செய்து கொடுத்து அவனைப் பில்லியனராகவும், அதற்கு உபகாரமாக நான் குறு மில்லியனராகவும் மாறிக் கொண்டே இருக்கும் செக்குமாட்டுப் பிழைப்பும் போரடித்தது. சீக்கிரமாய் சொந்த நாடு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் அலையடித்துக் கொண்டே இருந்தது. செக்குமாட்டுப் பிழைப்பும் போரடித்தது. ஆனால் சொந்த கிராமத்தில் இருக்க முடியுமா? என்று தெரியவில்லை. சென்னையில் ஜாகையை அமைத்துக் கொண்டு சொந்த ஊரில் சொந்தமாய் இருக்கும் நிலத்தோடு இன்னும் கொஞ்சம் நிலம் வாங்கிக் கொண்டு பள்ளியோ, கல்லூரியோ ஆரம்பிக்கலாம் என்கிறாள் மனைவி. எனது எண்ணத்தை நான் வெளியே இன்னும் சொல்லவே இல்லை. சொன்னால் சிரிப்பாள். இல்லை மறுப்பாள். எல்லாரது மனைவிகளையும் போல்.

ஊருக்குப் போய் ஆற அமர உட்கார்ந்து பேச வேண்டும். எனது விருப்பத்தைச் சொல்ல வேண்டும். என்னவோ தெரியவில்லை, இந்த முறை சொந்த ஊர் போக வேண்டும் என்றவுடன் மனைவிக்கும் மகளுக்கும் ஏக குஷி. அதிலும் மகளுக்கு இந்தியாவில் இரயிலிலும், பேருந்திலும் செல்ல ஆசை. நான்தான் காரிலேயே அழைத்து வந்துவிட்டேன். இதோ ஊரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு மெல்போர்னில் நடந்த ஒரு கருத்தரங்குக்குப் போனபோதுதான் ஊரின் அருமையை முதன்முதலாய் நான் உணர்ந்தேன். இயற்கை விளைபொருட்களின் புவிசார் காப்புரிமை பற்றிய உலகளாவிய கருத்தரங்கு அது. அதன் இணை அமைப்பாளராக எங்கள் நிறுவனமும் இருந்தபடியால் நிறுவனத்தின் பிரதிநிதியாக நான் கலந்து கொண்டேன். சுவாரஸ்யமற்றுக் கழிந்த ஒரு மாலை நேர அமர்வில் இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ஒருவர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை நிமிர்ந்து பார்க்க வைத்தது. பனை மரங்களின் பயன்பாடு பற்றியும், பனைப் பொருட்கள் மற்றும் பனஞ்சாறு பற்றிய நுண்ணிய செய்திகளையும் உள்ளடக்கிய அக்கட்டுரை சொந்த ஊர் பனையடிப்பட்டியை நோக்கி என் எண்ணங்களைத் துரத்தியது.

மழைக்காலத்தில் மட்டும்தான் தண்ணீர் கரை புரண்டு ஓடும் என்றாலும் வைப்பாற்றை நம்பித்தான் ஊரே இருந்தது. கரை முழுவதும் பனை மரங்கள். ஊரில் பெரும்பாலும் எல்லாருக்கும் சொந்தமாகக் கணிசமாகப் பனைமரங்கள் இருந்தன. நல்லதம்பி நாயக்கருக்கு மட்டும் முப்பது ஏக்கரில் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் இருந்தன. அவரே எண்ணியிருக்கமாட்டார். நாகர்கோவில் பக்கமிருந்து பல குடும்பங்கள் பனங்காட்டிற்குள் குடிசை போட்டுத் தங்கியிருக்கும். குத்தகைக்குப் பனை ஏறுபவர்களில் ஆண்கள் பனை ஏறுவார்கள். பெண்கள் பெரிய பெரிய அண்டாக்களில் கருப்பட்டியைக் காய்ச்சிக் கொண்டே இருப்பார்கள். கருப்பட்டி வாசம் சுத்துப்பட்டிக்கே வீசும். டவுசரும் அணியாமல் பள்ளிக்கூடமும் போகாமல் சிறுவர்கள் பனங்காட்டு வண்டலில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். பங்குனி சித்திரை வந்துவிட்டால் பதநீர் சீசன் களைகட்டும். ஓலையில் மடித்துக் கட்டி பட்டையின் மணமும் அதில் ஊற்றப்படும் சுண்ணாம்புப் பதநீரும் பலரைஅடிமையாக்கும்.

எங்கிருந்தோ கூட்டம் கூட்டமாக ஆட்கள் வருவார்கள். பதநீர் குடித்துவிட்டுச் செல்வார்கள். எங்கள் ஊர் சுண்ணாம்பு பதநீருக்காகச் சொத்தையே எழுதிக் கொடுக்கலாம் என்று பேசிக் கொள்வார்கள்.

அதிகாலையில் பனையேற ஆரம்பித்தால் இரவு வரை ஏறிக் கொண்டும் இறங்கிக் கொண்டும் இருப்பார்கள். பனையேறிகளின் வயிறு ஒட்டிப் போயும், நெஞ்சு விடைத்துக் கொண்டு அகலமாகவும் இருக்கும். பலரது நெஞ்சில் சிராய்ப்புகள் விழுப்புண்கள் போலிருக்கும். இழுத்துக் கட்டிய கோவணமும், இடுப்பில் சொருகிய பாலை அரிவாளும், பனம்பட்டையில் நேர்த்தியாகச் செய்த கூம்பு வடிவப் பெட்டியில் பதநீர் கலயத்தின் உட்புறம் தடவச் சுண்ணாம்புமாக போருக்குக் கிளம்பும் வீரனைப் போல் எப்போதும் இருப்பார்கள். பனையேறுவது நல்ல உடற்பயிற்சி. அவர்களில் யாரையுமே நான் “கொழு கொழு’ என்று பார்த்ததில்லை.

வழிவிட்டான் என்னோடு படித்தவன். அவன் அப்போதே பனை ஏறுவான். இடது கையினால் ஆட்காட்டி விரல் பாதிக்கும் மேல் மொட்டையாகி இருக்கும். கேட்பவர்களிடம் எல்லாம் சளைக்காமல் சொல்வான்.

“”மரத்து மேலே ஏறி பாளை சீவுனேன். பிடி தவறி அருவா பட்ருச்சு. தோலு மட்டும் ஒட்டிக்கிட்டு தொங்கிக்கிட்டு இருந்து அப்பிடியே கரகரன்னு அறுத்து இடுப்புல தொங்குன காலிக் கலயத்தில போட்டுட்டு மிச்சமிருந்த நாலு மரத்துலயும் வேலைய முடிச்சிட்டுத்தான் இறங்குனேன். அப்புறமா மாட்டுவண்டி கட்டிக் கோவில்பட்டிக்குக் கூட்டிப் போனாங்க. சீக்கிரமா வந்துருந்தா ஒட்ட வச்சுருக்கலாமுன்னு பெரிய டாக்டர் சொன்னாரு. ”

பனைகள் அடர்த்தியாக இருந்தால் வழிவிட்டான் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு அப்படியே மாறிவிடுவான். இப்போதும் ஊரில்தான் இருக்கிறான் என்று அம்மா ஒருமுறை சொன்னதாக ஞாபகம்.

ஊரில் யாருமே கள் இறக்குவதில்லை. முதன்முதலாய் சாராயக் கடைக்கு அரசாங்கம் அனுமதிக்க, எங்கள் பகுதியே போராட்டத்தில் இறங்கியது. சாராயக் கடை வேண்டாம். அதற்குப் பதிலாக கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று போராடியது.

கால்சியமும் நைட்ரஜனும் கலந்திருக்கும் பனங்கள் உடம்புக்கு உறுதியையும் சத்தையும் தரக்கூடியது. கொஞ்சம் போதை வரும். ஆனால் சாராயத்தைப்போல் கெடுதியில்லை. சாராயம் குடும்பத்தை அழிக்கும். ஆனால் எங்களுக்குக் கள் இறக்க அனுமதியளித்தால் கிராமப்புறத் தொழில் தழைக்கும். கிழங்கு, நுங்கு, பழம், ஓலை, மட்டை,மரம் என்று ஒவ்வொன்றும் பயன்படும் என்றெல்லாம் பிரசாரம் நடந்தது.

எளியவர்களின் குரலை எந்த அரசாங்கமும் கேட்காது என்பது உலகவிதி. எங்கள் ஊரின் மிக எளிய மக்களின் குரலுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை.

போராட்டக்குழு அமைக்கப்பட்டது. நல்லதம்பி நாயக்கர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போராட்டம் வீரியமானது. ஆண்களும் பெண்களும் முழு வீச்சில் இறங்கினார்கள். நல்லதம்பி நாயக்கர் விஷய ஞானம் உள்ளவர். போராட்டக்காரர்களுக்குச் சாப்பாடு, காப்பி, வடை என்று அவர் தோட்டத்திலேயே சமைத்துத் தர ஏற்பாடாயிற்று. ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரமிருந்த தேசிய நெடுஞ்சாலையே போராட்டக் களமானது. தினமும் பஸ் மறியல் நடக்கும். போலீஸ், தாசில்தார் வருவார்கள். பேசுவார்கள். நம்ப வைப்பார்கள். மறுநாள் மறந்தும் போவார்கள். மீண்டும் பஸ் மறியல். சப் கலெக்டர் வருவார். பேசுவார். போவார். ஒன்றும் நடக்காது. மீண்டும் பஸ் மறியல். கடைசியில் கலெக்டர் வந்தார்.

“”சாராயக் கடை திறப்பது பாலிஸி டெசிஸன். கவர்ன்மென்ட் முடிவ ஒங்க நானூறு பேருக்காக மாத்த முடியாது”

அதிகாரத் தொனி அப்பட்டமாய் வெளிப்பட்டது. ஊர்க்காரர்கள் சார்பாக நல்லதம்பி நாயக்கர்தான் பேசினார். போராட்டம் ஆரம்பித்த நாளில் இருந்து அவர்தான் பேசுகிறார். கொஞ்சநாட்களாக அவருக்கும் தொண்டை கட்டித்தான் போகிறது.

“”ஐயா… எங்களுக்குச் சாராயம் வேண்டாம்”

“”வேண்டாம்னா குடிக்காதீங்க”

“”நாங்க யாரும் குடிக்க மாட்டோம். அதனாலதான் வேண்டாம்கிறோம்”

“”நல்லதம்பி நாயக்கரக் கேட்டுத்தான் கவர்மென்ட் முடிவெடுக்கணும்னு சொல்றீங்களா? ”

“”ஐயா நீங்க அதிகம் படிச்சவங்க… சாமர்த்தியமாக பேசுவீங்க…. நாங்க படிக்காதவங்க…. மடக்கி மடக்கிப் பேசத் தெரியாது. மடங்கிப் போகவும் தெரியாது”

நாயக்கரின் பேச்சில் உறுதியிருந்தது. கலெக்டரின் பேச்சில் கோபம் இருந்தது. மறிக்கப்பட்ட வாகனங்கள் தெற்கே எட்டயபுரம் வரையிலும், வடக்கே பந்தல் குடி வரையிலும் நீண்டிருந்தது. சாலையோரப் புளிய மரத்திலிருந்த பருத்த குரங்கு ஒன்று போலீஸ் வாகனத்தின் மேற்கூரையிலும் டொம் என்று குதிக்க, மரக்கிளையின் குலுங்கலில் கொத்துக் கொத்தாய் புளியம் பழங்கள் கலெக்டரின் தலையில் தெறிக்க, கல்வீச்சு நடந்ததாய் நினைத்து லத்தி சார்ஜ் நடந்தது.

பத்து நமிட வெறியாட்டத்தில் நாயக்கரின் மண்டை பிளந்தது. பலத்த அடி. பலருக்கு இரத்த காயம். பெண்கள் ஓட முடியாமல் தடுக்கி விழுந்தார்கள். விழுந்து கிடந்தவர்களைத் தூக்கி வீசியெறிந்தது போலீஸ்.

கொத்துக் கொத்தாய் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள். நல்லதம்பி நாயக்கர் கோமா நிலைக்குச் சென்றார். ஊருக்குத் தகவல் பரவ, ஊரில் இருந்த மற்றவர்கள் அப்போதுதான் ஏலம் எடுத்துத் திறக்கப்பட்டிருந்த சாராயக் கடையை உடைத்து நொறுக்கினார்கள். ஏலம் எடுத்தவர் வெளியூர்க்காரர். போலீஸýக்குப் போனார். மற்றவர்களும் விரட்டி விரட்டிக் கைது செய்யப்பட்டார்கள். அவர்களோடு சேர்ந்து பஸ் மறியலில் அடிபட்டவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோமா ஸ்டேஜில் இருந்த நல்லதம்பி நாயக்கர்தான் முதல் குற்றவாளி. நினைவு திரும்பாமலேயே நாயக்கர் இறந்து போனார். சிலர் நிரந்தர ஊனமாகிப் போனார்கள். இராமச்சந்திர மாமாவுக்கு முன்னால் இருந்த நான்கு பற்களும் நொறுங்கிப் போய் தாடை எலும்பு உடைந்து போனதில் முகம் விகாரமாகிப் போனது.

போராட்டம் மறந்துபோய் நாயக்கரின் மரணமே மற்றவர்களின் துயரமாகிப் போனது. இவ்வளவு சொத்து இருந்தும், ஊருக்காகப் போராடும் குணத்தோடு வாழ்ந்தவரின் மகன் விவரமில்லாதவராய் இருந்தது ஊராரின் சோகத்தை அதிகமாக்கியது. சிறுவயதிலிருந்தே கொஞ்சம் புத்தி மந்தமாய் இருந்தார் நாயக்கரின் மகன். போராட்டம் அடங்கிப் போனது. என்ன காரணத்தாலோ உடைக்கப்பட்ட சாராயக் கடையும் திறக்கப்படாமலேயே போனது.

இந்தப் போராட்டத்தின் முடிவு துயரமாகிப் போனாலும் போராட்டத்தால் பனையடிப்பட்டியின் புகழ் பல மாவட்டங்களுக்குப் பரவியது. அப்போது நான் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். சிலநாள் பஸ் மறியலுக்கு நானும் போயிருக்கிறேன். போராட்டம் தீவிரமாகும்போது பள்ளிக்கே கூட லீவுவிட்டிருக்கிறார்கள். பிற்பாடு கல்லூரிக்குப் போனபோது ஊர் பேரைச் சொன்னாலே, “”ஓ… கள் இறக்கிற கோஷ்டியா… மாப்ளே… ஒருநாள் ஒங்க ஊரு கள்ளக் குடிக்கணும் மாப்ளே…” என்பார்கள்.

எங்கள் ஊரின் சில்லுக் கருப்பட்டியும், ஒலைக் கொட்டானும் மிகப் பிரபலம். ஓட்டு வீட்டிற்குக் கைமரமாக எங்கள் ஊரின் வைரம் பாய்ந்த பனங்கட்டைகளையே விரும்பி வாங்கிப் போவார்கள். அதையெல்லாம் விட கள்ளே எங்கள் ஊரின் அடைமொழியாகிப் போனது. இத்தனைக்கும் கள் இறக்கியதே இல்லை. இறக்க அனுமதிதான் கேட்டார்கள். அதற்கே இந்தப் பெயர். எல்லாம் அரசாங்கம் ஏலம் விட்ட சாராயக்கடையால் வந்த வினை.

அருப்புக்கோட்டையைத் தாண்டி கார் போய்க் கொண்டு இருந்தது. இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் வைப்பாறு வந்துவிடும். வைப்பாறு தாண்டினால் ஊர் எல்லை. பல்வேறு சிந்தனைகளில் தூரம் கடந்ததே தெரியவில்லை. என்னைவிட மனைவிக்கும் மகளுக்கும் ரொம்ப ஆர்வம். திருமணத்தை ஒட்டி ஒருமுறையும், அப்பா இறந்தபோது சிலநாட்களும்தான் ஊருக்கு வந்திருந்தாள் மனைவி. குழந்தைக்கு அந்த வாய்ப்புக் கூட இல்லை. பத்து வயதாகிறது. இப்போதுதான் மகளின் பாதம் ஊரில் படப் போகிறது.

மகளுக்குப் பனை மரங்களை அறிமுகப்படுத்த வேண்டும். புத்தகத்தில், டி.வி.யில் பார்த்திருப்பாள். ஒருமுறை பெரியாண்டவர் கோயிலில் எனக்கு மொட்டை போட்டபோது எடுத்த கருப்பு வெள்ளைப் புகைப்படத்தைச் சென்னைக்கு வந்த அம்மா காட்டியபோது, பின்புலத்தில் தெரிந்த பனைமரங்களைக் காட்டி, “”வாட் ஈஸ் தீஸ்?” என்று கேட்டாள். “”தேய் ஆர் பாம் ட்ரீஸ்” என்று சொன்னதோடு தந்தை மகற்காற்றும் கடமை முடிந்துபோனது.

இப்போது நேரடியாய்க் காட்ட வேண்டும். முடிந்தால் பனை ஏறிகளின் இடுப்பில் ஏற்றி பாதி மரம் ஏற்றிக் காட்ட வேண்டும். நுங்கு வண்டி செய்து ஓட்டச் சொல்ல வேண்டும். காட்பரீஸ் தின்று மரத்துப்போன நாக்கில் சில்லுக் கருப்பட்டியை ஊட்டிவிட வேண்டும். நம் ஊர் சில்லுக் கருப்பட்டிக்கு புவிசார் காப்புரிமை வாங்கித் தர வேண்டும். மனைவியிடம் நிதானமாகப் பேசி முடிவெடுத்து இப்பகுதியிலேயே பனைத் தொழில் சார்ந்த சிறிய நிறுவனம் தொடங்கி நிறையப் பேருக்கு வேலை கொடுக்க வேண்டும்.

ஊரை நெருங்கும்போது எழுப்பிவிடச் சொன்னாள். பாவம், பயணக் களைப்பில் அசந்து தூங்குகிறாள் மனைவி. அவளது மடியிலேயே குட்டியும் ஒருக்களித்துக் கிடக்கிறது.

வைப்பாறு கடந்தது. கார் கண்ணாடியை இறக்கிவிட்டுக் கொண்டேன். எல்லையில் இருக்கும் பெரியாண்டவர் கோயிலைக் கடக்கும்போது ஏதோ வெறிச்சென்று இருப்பதுபோல் உணர்ந்தேன். ஏதோ ஒன்றைத் துடைத்தெடுத்த உணர்வு ஏற்பட்டது. உற்றுப் பார்த்தேன். அடர்த்தியாய் இருந்த பனை மரங்களைக் காணவில்லை. “தொழிற்பேட்டை உங்களை அன்போடு வரவேற்பதாய்’ ஒரு பெரிய பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது.

கார் நகர்ந்து செல்லச் செல்ல உண்மை உறைத்தது. பெரிய பெரிய காம்பவுண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்ட சிறிய, பெரிய தொழிற்சாலைகள் முளைத்திருந்தன. சாலையை அகலமாக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. கிளைச் சாலைகள் நிறைய இருந்தன. விதவிதமாய் லாரிகள் வந்து போய்க் கொண்டிருந்தன. இதோ இரட்டைக் கிணறு. இதைத் தாண்டினால் நல்லதம்பி நாயக்கர் தோட்டம். முப்பது ஏக்கரில் முண்டியடித்து நிற்கும் கூட்டப் பனைகள் எதையும் காணவில்லை. இருந்த சுவடே இல்லை. “வெல்டன் ஈராஸ்’ என்று பித்தளையில் பெயர் பொறிக்கப்பட்ட பெரிய தொழிற்சாலை இரண்டு பெரிய புகைபோக்கிகளில் புகை கக்கிக் கொண்டு தடதடத்தது. வாசனை இனம் புரியாத வகையில் நாற்றமெடுத்தது. முன்புறமிருந்த பெரிய மைதானத்தில் நிறைய லாரிகள் லோடு ஏற்றிக் கொள்ள நின்று கொண்டிருந்தன.

கேட்டிற்கு வெளியே ஒரு டீக்கடையும், புரோட்டா ஸ்டாலும் புதிதாய் முளைத்திருந்தன. அந்தக் கடையை ஒட்டி ஒரே ஒரு ஒற்றைப் பனை அனாதையாய் நின்று கொண்டிருந்தது.

இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. அம்மாவுக்கு கொள்ளை சந்தோசம். மருமகளும் பேத்தியும் சொந்த ஊர் வந்திருப்பது ரொம்ப சந்தோசம். ரொம்ப நாள் பூட்டிக் கிடந்த வீட்டை நான்கு நாட்களுக்கு முன்பே வந்து சுத்தம் செய்து தயார்படுத்தி வைத்திருந்தாள். அக்காவும் வந்திருக்கிறாள். யார் யாரோ வந்தார்கள். விசாரித்துப் போனார்கள். பலரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. பலருக்கு என்னைத் தெரியவில்லை. வழிவிட்டான் மட்டும் நீண்டநேரம் இரவு பேசிக் கொண்டிருந்தான். ஆனால் இன்னும் பேசப் பாக்கி இருக்கிறது.

அக்கா வீட்டிலிருந்து அம்மா போனில் பேசும்போது எப்போதாவது பேச்சுவாக்கில் சொல்வாள்.

“”ஊர் ரொம்ப மாறிருச்சுப்பா… முன்ன மாதிரி இல்லை… ”

“”எடத்துக்கு ரொம்ப ரேட்டு ஏறிப் போச்சுப்பா… யார் யாரோ கேட்டு வர்றாங்க”

பெரியவர்கள் எல்லாரும் வயதானால் சொல்லுகிற சராசரி வார்த்தைகள் என எதையுமே நான் பெரியதாய்க் காதில் போட்டுக் கொண்டதில்லை. ஊரின் மாற்றம் இப்படியிருக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

காலையில் சீக்கிரமே எழுந்துவிட்டேன். வழிவிட்டானும் வந்துவிட்டான். வீட்டிற்கு வெளியே சாலையை ஒட்டியிருந்த வேப்ப மரத்தின் கீழ் அமர்ந்திருந்தோம். என்னை உரசிக் கொண்டு நின்றபடி மகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“”ஆரம்பத்துல யாருமே நெலத்த விக்கச் சம்மதிக்கலப்பா… பணமூட்டையோடு வந்து ஒண்ணுக்கு மூணா வெலை பேசுனதுல ஒவ்வொருத்தரா வித்துப்புட்டாக ”

“”வித்தவுக இப்ப என்ன செய்றாக”

“”பல பேரு டவுணுப் பக்கம் போய்ட்டாக… நெலங் குடுத்தவுகளுக்கு செல கம்பெனிக தகுதிக்குத் தக்கன கொஞ்சம் வேல கொடுத்துருக்கு. அதுல செய்றவுக செய்றாக… ”

“”நல்லதம்பி நாயக்கரு இதுக்காகவா உசுர விட்டாரு ”

“”அட போப்பா…நீ… வேற… மொதல்ல சின்னச் சின்ன கம்பெனிகதான் வந்திச்சு… பெரிய கம்பெனிகளுக்கு மொத்தமா நெலம் தேவப்பட்டதால கிடைக்கல… இந்த ஈராஸ் கம்பெனிக்காரன் தான் மொதல்ல காரியத்தைச் சாதிச்சான்”

“”அதென்ன கம்பெனி”

“” ஏதோ… வெளிநாட்டுச் சரக்க உள்ளூர்லேயே தயாரிக்கானாம். பீரூ… பிராந்தினு… இப்ப இங்க கவுருமன்டுதான ஒயின் ஷாப்ப நடத்துது. அதுக்கெல்லாம் சரக்கு இங்கியேயிருந்துதான் போவுது. அதுக்கு முப்பது ஏக்கருல நிலம் வேணும்னு அலைஞ்சாங்க. எவனோ ஒரு புரோக்கரு மூலம் நல்லதம்பி நாயக்கரு மகனைச் சரிக்கட்டி வாங்கிப்புட்டாக… பல கோடி கைமாறிச்சுனு சொல்லுதாக… பாவம் நாயக்கரு மகனுக்குத்தான் அத எண்ணக் கூடத் தெரியலயாம். இப்ப அவரும் இங்கில்ல…தாய் மாமன் ஊரோட போய்ட்டதாக் கேள்வி”

பேசிக் கொண்டிருக்கும்போதே பல வாகனங்கள் கடந்து போயின. “ஸ்டாஃப் பஸ் ‘ என்று நெற்றியில் பெயர் தாங்கிப் பணியாளர்களை அழைத்து வந்தன.

ராமச்சந்திரன் மாமா மகனும் கம்பெனி யூனிபார்ம் அணிந்து டிப்டாப்பாய் கிளம்பி வந்தான். நெஞ்சுப் பகுதியில் “வெல்டன் ஈராஸ்’ என்று எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது.

“”மாமா எப்படி இருக்கீங்க.. பல வருஷமா ஊர மறந்துட்டீகளே” கேட்டுவிட்டுச் சிரித்தான்.

“”நல்லா இருக்கேன் மாப்ள… கம்பெனில வேலை செய்றீகளாக்கும்”

“”ஆமா மாமா… கன்பார்ம் ஆயிட்டேன். பி.எப்., கிராஜுவிட்டி எல்லாம் உண்டு. பிக் அப் அன்ட் டிராப்புக்கு பஸ் உண்டு. ஊருக்குள்ள இருந்து கம்பெனி ஒன்னரைக் கிலோ மீட்டர்தான். இருந்தாலும் பஸ் பெஸிலிட்டி இருக்குல்ல… ஏன் நடக்கணும்? என்ன சொல்லுதீக?”

என்ன செய்வதென்று தெரியவில்லை.

“”ஒங்க நேச்சர் ஆஃப் ஒர்க் என்ன? மாப்ள”

“”புரொடக்ஷன் மாமா… எய்ட் அவர் டூட்டிதான். அநேகமாக அடுத்த மாசம் குவாலிட்டி கன்ட்ரோலுக்கு மாத்துவாகன்னு நெனைக்கிறேன்…”

தூரத்தில் பஸ் வந்தது. விடைபெற்றுக் கிளம்பி பேருந்து நிறுத்தம் நோக்கிப் போனான்.,

அவனைப் பார்த்துக் கொண்டே என் மகள் கேட்டாள்.

“”அந்த அங்கிள் என்ன வேலை பண்றார்ப்பா?”

“”புரடெக்ஷன் ஜாபும்மா”

“”அப்படீன்னா?”

“”ஐ… மீன்….”

“”சாராயம் காய்ச்சுற வேலை பாப்பா…”

பளிச்சென்று சொன்னான் வழிவிட்டான். அதற்குமேல் என் மகளிடமும் கேள்வியில்லை. அவனிடமும் பதில் இல்லை.

கூட்டப் பனை தேடி வந்தவன், ஒற்றைப் பனையாய் உணர்ந்தேன்.

– பெப்ரவரி 2012

தினமணி – காரைக்குடி புத்தகத் திருவிழா-2012 இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில்
முதல் பரிசு ரூ.5,000 பெற்ற கதை.

Print Friendly, PDF & Email

1 thought on “ஒற்றைப் பனை

  1. ஹ்ம்ம், மனதுக்கு ரொம்ப வேதனையாக இருந்தது. நமது நாட்டின் இயற்கை வளங்களை நம்மை கொண்டே அழிக்கும் இந்த அயோக்கியர்களை என்ன செய்வது? எப்படி தடுப்பது? தவிர நமது இப்போதைய தலை முறைகளுக்கு நமது இயற்கையின் வளத்தை அறிவுறுத்த தவறியதற்கு சரியான பாடம்… ஆனால் ஒன்று,,நிச்சயம் இயற்கை ஒரு நாள் பெரும் சீறல் சீரும். அப்போது……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *