துப்பாக்கி
துப்பாக்கியைக் கையில் எடுத்தான். பார்த்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு, இதற்கு வேலை. கடைசி நேரத்தில் எந்தத் தப்பும் நிகழ்ந்து விடக்கூடாது. புறப்பட்டான்.
இதோ, இப்போது செயல்படும் நேரம். கைக்கடிகாரத்தை ஒரு முறை பார்த்துக்கொண் டான். துப்பாக்கியை மெதுவாக உயர்த்தினான். சுட்டான்.
மைதானத்தில் தயார் நிலையில் இருந்த ஓட்டப் பந்தய வீரர்கள் ஓடத் துவங்கினார்கள்!
வெடிக்கப் போகிறது..!
முதல்வர் கலந்துகொள்ளும் பொதுக் கூட்டம் என்பதால் நிறைய போலீஸ். மேடையில் அவர் அமரப் போகும்நாற்காலிக்கு அடியில்வெடிகுண்டு.வெடிகுண்டை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்போகிற தீவிரவாதி மாறு வேடத்தில்!
முதல்வர் அதோ வந்துகொண்டு இருக் கிறார். அவன் சோம்பல் முறித்தான்.
முதல்வர் மேடைக்கு அருகில் காரிலிருந்து இறங்கினார்.
அவன் கொட்டாவி விட்டான்.
முதல்வர் மேடையில் ஏறி, தன் நாற்காலி யில் அமர்ந்தார்.
அவன் ரிமோட்டைக் கையில் எடுத்தான். டி.வி-யை அணைத்துவிட்டுப் படுத்துக் கொண்டான்!
காதலாம்?!
டோக்கன் கொடுத்து இரண்டு காபி வாங்கிய கோபி மேஜைக்கு வந்து, ஒன்றை அவள் முன் வைத்துவிட்டு அமர்ந்து, ‘‘இப்ப சொல்லு தீபா, ஏன் காலையிலேர்ந்து டல்லா இருக்கே?’’ என்றான்.
‘‘கோபி, நீயும் நானும் நட்பா பழகறதை எங்க வீட்ல தப்பா நினைக்கிறாங்க. எஸ்.எம்.எஸ். அனுப்பிக்கிறதும், அடிக்கடி போன்ல பேசிக்கிறதும் அவங்களுக்குப் பிடிக் கலை. எனக்குத் தெரியாம என் ரூம்ல செக் பண்றாங்க. என் போன்ல மெஸேஜ் படிக்கிறாங்க. எனக்கு அவமானமா இருக்கு. சிரிச்சுப் பேசினா காதல் இல்லை, நட்போட ஆணும் பெண்ணும் பழகமுடியும்னு எவ்வளவோ எடுத்துச் சொல்லிட்டேன். புரிஞ்சுக்கவே மாட்டேங்கறாங்க. சொல்லு கோபி, அவங்களுக்கு எப்படிப் புரிய வைக்கிறது?’’
‘‘ஒரு நிமிஷம் இரு, கை கழுவிட்டு வந்துடறேன்’’ என்று டாய்லெட் பகுதிக்கு வந்த கோபி, ஒரு வருஷமாகத் தயங்கி, நான்கு இரவுகள் கண் விழித்து எழுதி எடுத்து வந்த கடிதத்தைக் கிழித்துப் போட்டான்!
அம்மா
இறுதிப் பயணத்துக்குக் காத்திருந்தாள் அம்மா. உறவினர்கள் வந்து மாலை போட்டு அழுதுவிட்டு, பின்புறம் நின்று காபி குடித்தார்கள். அம்மாவின் தங்கப் பல்லையே பார்த்துக்கொண்டு இருந்தான் மகன். எப்படி ஆரம்பிப்பது? யாரிடம் சொல்லி அதை எடுப்பது? கவுரவம் பார்த்துப் பேசாமலிருந்தால் வெட்டியான் கைக்குப் போய்விடுமே!
அம்மாவுக்குக் கடைசி காலத்தில் எல்லாம் செய்த வேலைக்காரியும் அம்மா முகத்தையே யோசனையாகப் பார்த்துக்கொண்டு இருப்பதைக் கவனித்தான். அவள் அவனிடம் வந்து, ‘‘தம்பி, ஒரு விஷயத்தை மறந்துட்டிங்களே!’’ என்றாள்.
‘‘மறக்கலை. அதான், எப்படி எடுக்கறதுன்னு புரியாம…’’
‘‘டாக்டருக்குத் தகவல் சொன்னா அவர் வந்து எடுத்துடப் போறாரு. போன் பண்ணுங்க. அம்மாவோட ஆசைப்படி, அவங்க கண்ணு ரெண்டு பேருக்குப் பயன்படட்டும் தம்பி!’’
– வெளியான தேதி: 27 டிசம்பர் 2006