எல்லாம் அவன் செயல்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 24, 2022
பார்வையிட்டோர்: 2,690 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“வெற்றிவேல் முருகனுக்கு”

“அரோஹரா”

“ஆறுமுக வேலனுக்கு…’

“அரோஹரா”

“சிங்கப்பூர் தெண்டாயுதபாணிக்கு”

“அரோஹரா’

ஓடிக்கிட்டிருந்த டேப்பை நெறுத்திப்புட்டு மாலையக் கழட்டுனேன். அப்பாடா இந்த வருடப்பிரார்த்தனய நெறவேத்துன திருப்தி நெஞ்ச நெறக்கிது. டாலரக் கண்ணுல ஒத்திக்கிட்டு மாலைய பட்டுத்துணில வச்சு சுத்தி வழக்கமா வக்கிற டப்பாவுல வக்கிறேன். மயில்தோகய ஒடிச்சுப்புடாம துணியில உருட்டிச்சுத்தி எடுத்து வக்கிறேன். அலகு குத்துன எடத்துல வலிக்கிது. தொட்டுத்தடவிப் பாத்துப்புட்டு துந்நூத்த எடுத்து அப்பிக்கிட்டு எல்லாத்தையும் வக்கிற அட்டப்பொட்டியப் பாக்குறேன். போனு அடிக்கிது.

“என்னங்க… உங்க கூட்டாளியதேன். இதோட நாலு வாட்டி கூப்புட்டாக. நல்லாத்தூங்குனிய… நா எழுப்பல” எம்பொண்டாட்டி போனக் கையில கொடுத்துட்டுப் போனா.

“அலோ ம்… சரி… ம் கொண்டாறேன்..”

நாக்குல வேல் குத்துனதால வலிக்குது. அதுனால ரொம்ப பேச முடியல. வெவரமெல்லாம் கணேசன்ட்ட சொல்லி ஐநூறு வெள்ளியையும் கொடுத்துட்டேன்ல. கணேசன் போயி சொல்லீருக்கான். அதேன் வெள்ளி பத்தாதாம். நாங்க ஆரம்பிக்கிறம். நீங்க கூட நூறு எரநுறு கொண்டுவாங்கிறான் அந்த மோளம் அடிக்கிற பய முத்து. நா என்னலே சொல்லுறது சரிலே’ன்னு சொல்லிப்புட்டு காவடிச்சாமான்லாம் விட்டுப்போயிராம எடுத்து வக்கிறேன்.

அலகுல குத்துன வேல எடுத்துப் பாக்குறேன். பழய நெனப்பு வருது. இதெ எப்புடி ஆரம்பிச்சேன்னு நெனப்பு அந்தக் காலத்துக்குப் போயிறுது. அது ஆயிப்போச்சு பத்துவருசம். படிப்பும் வராமெ வேலயும் பாக்காமெ காவாலியாச் சுத்திக்கிட்டுத் திரிஞ்சேன்.

அப்பதேன் என் அப்பனோட கூட்டாளி முத்தண்ணேன் அவருதேன் என்னெ இதுல இழுத்துவிட்டவரு. கூப்புட்டாரு. தைப்பூசத்துக்கு முருகனுக்கு காவடி எடுக்கிறேன்லே, நீ நல்லா மோளம் அடிப்பியாம்லே, வாலேன்னாரு. நானும் பொட்டப் புள்ளயள சைட்டு அடிக்கலாம் பாக்கலாமுனுட்டுத்தேன் போனேன். அப்பதேன் முருகன் மேல ஒரு ஈர்ப்பு வந்துட்டுது.

அதுக்கு அடுத்த வருஷம் நானும் அலகு குத்தி காவடி எடுக்கணுமின்னு ஏதோ கிறுக்குத்தனமா மனசுல தோனுச்சு. முத்தண்ணங்கிட்ட சொன்னேன். அவரு “வெளயாட்டு இல்லலே இது. வெரதமெல்லாம் இருக்கணும்லே, உன்னாலே முடியுமாலே”ன்னாரு. நானும் அப்ப எனக்கு குடும்பமெல்லாம் ஒண்ணுமில்லேங்கிறதாலே தைரியமா முடியும்னு சொன்னேன். அந்த வருஷம் முத்து அண்ணந் தேன் மொறயா எல்லாம் சொல்லிக்குடுத்து செலவும் பாத்துக்கிட்டாரு. அது ஒரு மறக்கமுடியாத அனுபவம். மொதமொத அலகு குத்துனப்ப சுறுக்குனு ஒரு நொடியில குத்திப்புட்டாக. ரெம்ப வலிக்கல. அப்புறம் புடுங்கரப்பவும் அதுக்குனு இருக்குற வாத்தியாரு துந்நூத்த வச்சுக்கினு டக்குனு புடுங்கிருவாரு. ஓட்டையில துந்தூத்த வச்சு அமுக்கி விட்டுருவாக. அப்புறம் சீக்கிரம் புண்ணு ஆறீரும். செப்டிக் எதுவும் ஆகாம எப்புடிப் புண்ணு ஆறதுன்னு வெள்ளக் காரங்க, சீனாக்காரங்களுக்கு ஒரே ஆச்சரியம். வந்து போட்டால்லாம் புடிப்பாக.

மொத மொத காவடியத் தூக்கிக்கிட்டு பெருமா கோயில்லேருந்து நடந்தப்ப பழக்கமில்லாததால வலி பொறுக்கமுடியல என்னால, டேங்குரோடு கோயிலுக்கு எப்படிப் போயி செலுத்தப்போறேன்னு கண்ணச்சுத்திக்கினு வந்துச்சு. தெரியாம இந்த வெளயாட்டுக்கு வந்துட்டமேன்னு இருந்துச்சு. சோந்து போறாப்பல்லாம் முத்தண்ணந்தேன் முருகன நெனச்சுக்கலே… கொண்டு போயி சேத்துருவான்னு துந்நூத்த எடுத்து நெத்தீல அடிச்சு விடுவாரு.

வழியெல்லாம் மோளம் தாளம் பாட்டு எல்லாம் பின்னி எடுத்துருச்சு. அப்பறம் எப்புடிப் போனேன்னு எனக்கே தெரியல. சன்னதீல முருகனப் பாத்தப்போ முருகந்தான் என்னக் கொண்டு செலுத்துனானோன்னு நெனச்சப்ப என் கண்ணுல தண்ணி பொலபொலன்னு ஊத்தீருச்சு. அது ஒரு பெரமை. அத அனுபவிச்சாதேன் தெரியும். முருகன் மேலே என்னயறியாமலே ஒரு நம்பிக்க வந்துருச்சு.

இப்பிடித்தேன் இது ஆரம்பிச்சுது. அதுக்கப்புறம் தறுதலயாத்திரிஞ்ச எனக்கு ஒவ்வொரு நல்லதா நடக்க ஆரம்பிச்சுது. ஒரு கம்பெனில செக்கூரிட்டி வேல், கல்யாணம், கொழந்த குட்டின்னு ஆயிருச்சு. இன்னக்கி குடும்பத்தோட நிம்மதியா இருக்கேன்னா அது முருகனால் தேன். அந்த முருகனுக்கு நன்றிக்கடனா காவடிப்பிராத்தனய வருஷந்தவறாம செலுத்திக்கிட்டு வாரேன்.

முத்தண்ணந்தேன் எனக்கு குரு, வாத்தியாரு எல்லாம் அவருதேன் எனக்கு முருகனக் காட்டிக்கொடுத்தவருன்னு சொல்லுவேன். அதுக்கு அவரு சொல்லுவாரு “அதெல்லாம் ஒண்ணுமில்லடா… கடவுளு எல்லாருக்கும் ஒரு கயிறு போட்டு புடிச்சு ஏறிக்கோடான்னு ஒரு வாய்ப்புக் குடுப்பாரு. அப்படிக்கெடச்ச வாய்ப்புக் கயிற நீ புடிச்சுக் கரையேறிட்ட அவ்வளவுதே” ம்பாரு. அதென்னமோ அண்ணந்தேன் எனக்கு விரதம் இருக்க சொல்லிக்குடுத்தாரு.

தைப்பூசத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னாலயே விரதம் ஆரம்பிச்சுருவோம். பெரிய காத்தியலுக்குக் கோயிலுக்குப் போம்போதே தைப்பூசத் தேதிய ஐயர்ட்ட குறிச்சு வாங்கியாந்து வச்சுக்குவேன். கூட்டாளி வீடுகளுக்கும் பூசத்தேதியக் குறிச்சுக்குடுத்து சொல்லி விட்டுருவேன். வீடு மொழுகிக் கழுவி சுத்தமாக்கி விரதம் ஆரம்பிக்கிறது. கண்டீசனா பொண்டாட்டிய விட்டுத் தள்ளிப்படுக்கணும். தரயிலதான் துணிய விரிச்சு படுத்துக்குவேன். ஒரு மாதத் துக்கு இறச்சி கவுச்சி சாப்புடுறதில்ல. சவரம் பண்ணிக் கிறதில்ல.

காவடிச்சாமான் பொட்டிய அப்பத்தான் எறக்கி காவடிச்சாமான்லாம் எடுத்துச் சுத்தப்படுத்தி வச்சுக்குவேன். காவடீல கட்டுற வெண்கலச் சொம்புகளப் புளிப்போட்டு வௌக்கி வச்சுக்குவேன். ஒடிஞ்சுபோன மயில் தோகைய மாத்துறது, மற போன கம்பிகளை கணக்குப்பண்ணி சோதி ஸ்டோர் போயி வாங்கியாறது, இடுப்பு பெல்ட், ரிவிட்டு எல்லாம் சரியா இருக்கான்னு பாத்து ரிப்பேர் பண்ணி வச்சுக்குற வேலயெல்லாம் சுறுசுறுப்பா நடக்கும். இந்தச் செலவு ஒரு அம்பது நூறு வெள்ளிக்குள்ளாற வரும். அப்புறம் காவடி பதிவு பண்ணிக்கோணும் பெருமாள் கோயில்லயாவது அல்லது டேங்குரோடு கோயில்லயாவது.

விரதம் ஆரம்பிக்கற அன்னிக்கி குடும்பத்தோட டேங்கு ரோடு கோயிலுக்குப் போயி அர்ச்சன பண்ணி சாமி கும்புட்டு, தங்கம்புடிச்சு வச்சுருக்கிற உத்துராட்ச மாலைய முருகன் பாதத்துல வச்சுக் கழுத்துல போட்டுக்கினு வருவேன். வீட்டுல தெனமும் முருகன் பாட்டப் போட்டு விட்டுருவேன். வீடுபூரா சாம்புராணி புகையா இருக்கும். வீடே கோயிலான மாதிரி இருக்கும். அலகுல குத்துற வேல எடுத்து வெச்சு ரெண்டு நேரமும் பூச பண்ணுவேன். அந்த வேல்தேன் எனக்கு முருகன்னு ஒரு நெனப்பு. காக்க காக்க கனக வேல் காக்க… நோக்க நோக்க நொடியில நோக்கன்னு வருமே கந்தர் சஷ்டி கவசம் அதக்கேசட்டுல போட்டு விட்டுட்டு நானும் கூடவே பாடிப்புடுவேன்ல. நல்லா மனப்பாடமே ஆயிப்போச்சு.

அந்த மாத்தயில என்ட்ட துந்நூரு வாங்க நெறயப்பேரு வருவாக. ‘நல்லாருக்கணும்’னு சொல்லி முருகன நெனச்சு துந்நூத்தப் பூசி விடுவேன். சொரமுன்னும் வயித்து வலின்னும் பச்சப்புள்ளைகளத் தூக்கிக்கிட்டு ஓடியாருவாக. நாஞ்சொன்னா பலிக்கும்னு சொல்றாக. அதுனால இப்பல்லாம் நெறயக் கூட்டம் வர ஆரம்பிச்சுருச்சு, எங்கையிலே என்னா இருக்கு? எல்லாம் அந்த முருகன் செயல்தான். வர்றவுக காணிக்கைய அஞ்சு வெள்ளி பத்து வெள்ளின்னு முருகன் உண்டியல்ல போட்டுப் போவாக. அதயும் இப்ப காவடிச் செலவுக்கு சேத்துக்குறேன்.

மொத்தமா ஆயிரத்தைந்நூறு வெள்ளி செலவாகும். அதுல ஐந்நூறுதேன் சாமி செலவு. ஆயிரத்தத் தனியா எடுத்து வச்சிருவேன். அது பூசத்துக்கு அப்புறம் கூட்டாளிகளுக்கு செலவளிக்கணும். காவடி கூட மோளம் தட்டிக்கிணு பாட்டுப் பாடிக்கிணு வர்றதுக்கு தனியா சம்பளம்னு எதுவும் தர்றதுல்ல. அதுக்குப் பதிலா பூசம் முடிஞ்ச சனி ஞாயிறுல பார்ட்டி வச்சுர்றது வழக்கம் பார்ட்டின்னா குடி, ஆட்டம், பாட்டம் எல்லாம் இருக்கும்.

ஓட்டல் ரூம் அது இதுன்னு செலவு அதிகமா வந்துருதாம். இப்ப அதுக்குதேன் கூட்டாளிப் பய போனு. இதெல்லாம் நெனச்சுக்கினே காவடிப்பொட்டிய பக்காவா சேத்து உள்ள பூச்சி, கீச்சி வந்துறாம அந்துருண்டயெல்லாம் போட்டு மேலே தூக்கி வச்சுப்பிட்டு இறங்குறேன்.

மனசுக்குள்ள பார்ட்டி நெனப்பு எட்டிப்பாக்குது. பயலுவ இன்னேரம் பார்ட்டிய ஆரம்பிச்சுக் கொண்டாடிக் கிட்டு இருப்பாங்க. சந்தோஷமா ஒரு மாச விரதம் முடிவுக்கு வருதுல்ல… எல்லாப்பசியும் தீரப்போறதா ஒரு சந்தோஷந்தேன்.

பார்ட்டிக்கி போறேன்னு சொல்லிப்புட்டு பணத்த எடுத்துவச்சுக்கினு கெளம்புறேன்.

எம் பொண்டாட்டியும் ஒண்ணும் பேசாமே என்னை ஒரு மாதிரியாப் பாத்துக்கினே போறா. வழக்கமா நடக்குறது அவளுக்குத் தெரிஞ்சதுதானே. இவன் ராத்திரிக்கி வரமாட்டான், என்னென்ன தப்பு பண்ணுவானோன்னு அவ நெனக்கிறான்னு எனக்குப் புரியுது. என்ன பண்ணுறது நான் போவாட்டி பயலுவ ஏமாந்து போயிருவாங்களோன்னு இருக்குது.

பார்ட்டி நடக்குற ஹோட்டல் ரூமுக்குப் போயிச் சேந்த போது அங்க ஒரே சத்தமா இருக்குது. கதவைத் தட்டுறேன். அண்ணனான்னு கேட்டுத் தொறக்குறான் ஒருத்தேன். ‘டேய் அண்ணன் வந்துட்டாருடோய்’ங்கிறான் முத்துப்பய. எல்லாரு கையிலேயும் தண்ணிக் கிளாசு. ஒரே மப்பும் மந்தாரமுமாத்தேன் இருக்குது. கோழி பிரியாணி, இறச்சி எல்லாம் தட்டுகள்ல வச்சு அங்க அங்க இருக்குது. “வாங்கண்ணே… வாங்கண்ணே”ங்கிறாங்கெ எல்லாப் பயலும். எனக்கு ஒரே மார்க்கமாவே இருக்குது. கணேசன் பய “இந்தாங்கண்ணேன்னு” கையில ஒரு கிளாசத் தர்றான். நான் “வேணாப்பா”ங்கிறேன். “டே அண்ணனுக்கு பாட்டுலோட குடுடா”ங்கிறேன் முத்துப்பய.

“இல்லப்பா.. வேண்டாம் நான் வீட்டுக்குப்போறேன்’ அப்பிடீன்னுட்டு கணேசனைப் பாக்கிறேன். “என்னண்ணே மாலையத்தேன் கழட்டீட்டியல்ல… ஏன் யோசனை?” அப்படீங்கிறான் கணேசன். அதுக்கு பதில் சொல்லாமெ நா “இந்தாலே இதுல எரநூறு வெள்ளி இருக்கு. நா வாரேன்லா”னு சொல்லிட்டு கெழம்புறேன்.

அலகு குத்தின எடம் இன்னும் வலிக்கிது. தொட்டுப்பாத்துக்கிட்டே எம் ஆர் ட்டீ யப் புடிக்கப் போறேன். எம்பொண்டாட்டி கதவத்தொறக்கும்போது என்னப்பாத்து ரொம்ப சந்தோஷப்படுவாங்கிற நம்பிக்கையோட

(சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் முத்தமிழ் விழா 2007ஐ முன்னிட்டு நடத்திய எழுத்துச் செம்மல் அமரர் சே.வெ.சண்முகம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை.)

– புன்னகைக்கும் இயந்திரங்கள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2008, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *