‘ஏதாவது அற்புதம் நிகழ்ந்து, யாராவது வந்து, இந்தாடி ராசம்மா – இந்தா பத்து ரூவா, உன் ஆசையைக் கெடுப்பானேன்? போய்க் கண் குளிரப் பார்த்துவிட்டு, யார் கண்லேயும் படாம மறு ரயிலிலேயே திரும்பி வந்துவிடு என்று சொல்ல மாட்டார்களா?’ என்று நினைத்துத் தவித்தது ராசம்மாவின் உள்ளம்..
“ஊம்! உலக பாசத்துக்கு மதிப்பு வச்சு அப்படிக் கூடச் செய்துவிடுமா என்ன? வாங்கின பணத்தை வேலை செஞ்சு கழிச்சுடுவோம்கற எண்ணம் இருக்கறப்பவே மூணு ருவா அதிகமாத் தர யோசிக்கற மனுஷாளைத்தானே முழுக்க முழுக்க இந்த உலகம் தாங்கி நிக்கறது!” அலுப்புடன் கூடிய ஒரு பெரு மூச்சு. அது நிரைசையின் உருவாய் – வெளிவந்தாற்போல் பாம்பின் சீறலாய் வெளிவந்து மறைந்தது. அதைத் தொர்ந்து அவள் கண்களில் திரையிட்ட நீர்க் கசிவு எதிரில் தெரியும் பொருளைத் தெளிவில்லாமல் தோன்றச் செய்ய, மனம் பிரளயமாய்க் குமுறிக் கொண்டிருந்தது.
இனி எந்த வழியுமே இல்லை. டிக்கெட் இல்லாமல் ரயில் ஏறலாம். அது ஏனே அந்தப் பித்துக்குளிக்குச் சரியானதாய்த் தோன்றவில்லை. இப்படியும் இருக்கலாமா அவள்? அவளுக்கு இனி கண்ணியம் ஏது? மானமும் வெட்கமும் எதற்கு? அவளுடைய அப்பாவித்தனத்திற்கு, வெள்ளை மனத்திற்குக் கிடைத்த அவ்வளவு பெரிய பட்டத்திற்குப் பிறகு இனி என்ன வேண்டிக் கிடக்கிறது?
“நரசிம்மா, பெரிசு பண்ணாதேடா! மானம் போயிடும்டா! கத்தாதேடா! கொஞ்சம் கூட வாயைத் திறக்காதே. குழந்தை வர நேரம்டா இது. நீ வா. வான்னா வா. வந்துடு. கெஞ்சிக் கேட்டுக்கறேன். ஊஹூம். கை வைக்கக் கூடாது. எதுவும் நடந்ததாவே காட்டாதே!” போலி நடிப்பாய்க் கெஞ்சிய மாமியார்க்காரியின் சமாதானக் குரலைத் தொடர்ந்து – அன்று நரசிம்ம மூர்த்தியாக மாறவிருந்த அவர் – குடையைக் கண்டு மிரண்ட பசுவாய்ப் பின்னிட்டுச் சென்ற காட்சி இப்போதுதான் நடப்பது போல் ராசம்மாவின் எதிரில் தோன்றி உடம்பை ஒரு குலுக்கு குலுக்கி வியர்க்க வைத்துவிட்டது.
பயந்து போய்ப் பின் புறமாய்த் திரும்பிப் பார்த்த அவள், – ஊரில் கிராக்கி எதுவும் கிடைக்காத ஒத்தை ஜட்கா வண்டி மட்டும் தள்ளாடி ஆடிய படி ஸ்டேஷனை நோக்கி வருவதைப் பார்த்தாள்.
‘இந்த வண்டியிலாவது யாராவது இறங்கி அன்றைய பாட்டுக்கு ஏதாவது இரண்டு காசு சம்பாதிக்க உதவ மாட்டார்களா?’ என்ற எண்ணம் போலும் அந்த வண்டிக்காரனுக்கு. அவனுக்காவது அந்த நம்பிக்கை இருக்கிறது. அவளுக்கு? – அவனையும் தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்த ராசம்மா ஏதோ ஒரு தைரியத்தில் நின்று கொண்டிருந்த அந்த ஒத்தை கம்பத்தடியிலிருந்து ஸ்டேஷனை நோக்கி நடந்தாள். வேலியின் இந்தப் புறமாய் இருந்த மரத்தடி சிமிண்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்தாள்.
ஏதோ ஒரு நம்பிக்கை மெதுவாய் அவள் மனத்தில் உருவாயிற்று. அவளுக்கு நம்பிக்க ஒரு கேடா? உள் மனம் ஏசிக் காட்டியது.
இனி எதுவும் கிடையாது. ‘ஏதோ’ யாரோ சொல்லியிருப்பார்கள். அதை – அந்த வார்த்தையை மெய்ப்பிக்க ஏனோ தானோ என்ற மனநிலையில் நூறோடு நூற்றொண்ணாக ஒரு பத்திரிகையை அனப்பி வைத்திருப்பார்கள். அது ஊரெல்லாம் சுற்றி விட்டு அவளை வந்து சேர்ந்தும் விட்டது. அப்பா! அந்தச் சிறு காகித மடிப்புதான் எவ்வளவு கனமாக இருக்கிறது! அதற்கு ஏது இவ்வளவு சுமை? நல்ல வேளையாக நாலு கிளாஸ் வரை படித்தது வீண் போகவில்லை. இல்லாவிட்டால் யாரையாவது அல்லவா படித்துச் சொல்லச் சொல்ல வேண்டியிருக்கும்.
இரண்டு கைகளால் மார்பை மூடினாற்போல், அணைக்க அந்தக் காகிதம் சலசலத்தது. அத்தோடு அந்த மஞ்சள் துண்டம் அவளை நெருடி விட மனம் புல்லரித்தது. மறு கணமே அவலம் சூழ்ந்த இன்றைய நினைவு வந்து வேதனையை மீட்டி விட்டது. ‘ச்சீ! எனக்கு எதற்கு வேதனை? நான் நெஞ்சறிய எந்தப் பாவமும் செய்யவில்லையே! அன்போடு அவர் கட்டிய அந்த மாங்கல்யம் தந்த செல்வமல்லவா அவன்! அவனுக்கு – என் செல்லக் குழந்தைக்குக் கல்யாணம்!
‘துராங்காரி! அவள் செய்த ஜோடனைக்கு அவர் என்ன செய்வார்? அவர் கண்ணால் கண்டு விட்டார். கண்ணால் கண்டதும் காதால் கேட்டதும் நிஜமல்ல – என்பதையெல்லாம் அறியும் வயதோ நிலையோ அவருக்கு வரவில்லை. அதுதான் நமது கஷ்ட காலம். அதன் விளைவை அனுபவிக்கிறோம். உண்மையும் ஒரு நாள் தெரியாமலா போகும்? தானாக அன்றைக்கு உணர்ந்து அழட்டும். நமக்கென்ன வந்தது?’
வரப்போகும் ரயில் வண்டி பக்கத்து ஸ்டேஷனுக்கு வந்து விட்டதைக் குறிக்கும் மணியடித்தாகிவிட்டது. பிளாட்பாரத்தில் லேசான நடமாட்டம். ஒதுப்புறமாக இருந்தவர்கள் – முன்னும் பின்னும் நடந்து மூட்டை முடிச்சுக்களை ஒன்று சேர்த்துக் கொண்டு வண்டியை வரவேற்கத் தயாராகி விட்டார்கள். குழந்தையும் குஞ்சுகளும் பேச்சில் வீசிய மழலைச் சொற்கள் – விசித்திரமான சந்தேகங்கள் எல்லாம் காற்றில் கலந்து வந்து அவள் காதைத் தொட்டன.
மெதுவாக அந்த மரத்தடித் திண்ணையில் இருந்து எழுந்திருந்தாள். ஒரு தடவை முன்னும் பின்னும் பார்த்தாள். ‘பிளாட்பாரத்தின் வலது பக்கத்து ஓரம் வழியாகப் போனால் கடைசீ பெட்டியிலாவது ஏறிவிடலாம். அநேகமாக அந்த ஓரத்தில் பெண்கள் பெட்டிதான் நிற்கும். எத்தனையோ தடவை அவள் பார்த்திருக்கிறாள். பெண்கள் எல்லாம் ‘பெண்கள் வண்டியி’லேயா ஏறிவிடுகிறார்கள்? எண்ணத்தைச் செயலாக்கும் துணிவு மெதுவாக அவளிடம் உருவாக, தயாராகக் கொண்டு வந்திருந்த பையுடன் அந்தப் பக்கமாக நடந்தாள்.
நல்ல வேளையாக அவள் போகும் அந்த மூலையில் யாரும் உள்ளூர்காரர்கள் நிற்க மாட்டார்கள். அது ஒரு சௌகரியம். வண்டி வருவது தூரத்தில் வானை நோக்கி எழும்பிய புகை மூட்டத்திலிருந்து விளங்கியது.
“வாங்கோ!”
அவளையும் வாயைத் திறந்து வரவேற்கும் நபர்கள்! அவளுக்கே ஆச்சரியம்தான்.
“எங்கே! ஊருக்கா?” அவள் கேட்டு வைத்தாள். எப்போதோ அவர்கள் வீட்டில் பிறந்தநாள் என்று சமைக்கப் போயிருந்த சொந்தம். அவள் வீட்டுக்குப் போகாவிட்டாலும், அந்தக் கிராமத்திற்கு அடிக்கடி சமயா சமயத்திற்கு வேலைக்குச் செல்லும்போது கண்ணில் படும் பரிசய உறவு பெரிய மனுஷி.
‘இவளையாவது கேட்கலாமா?’ சீ! இதென்ன நினைவு?’ தன்னையே கடிந்து கொண்டாள். ‘அடக் கடவுளே! இவர்களெல்லாம் நாம் ஏறும் பெட்டியில் ஏறாமல் இருக்க வேண்டுமே!’ அவள் மனம் தெய்வத்தை இறைஞ்சியது.
“நீங்களும் இந்த வண்டிக்குத்தான் வரேளா?” அவள் கேட்டாள். அவள் பெயர் என்னமோ? கழுத்து நிறைய ஏதோ தங்க மயம்.
‘என்ன சொல்வது? இல்லை என்பதா, ஆமாம் என்பதா? இதென்ன சோதனை?’ அவள் இதயம் புலம்பிக் கொண்டிருந்தது.
“மைதிலி! இங்கே வா; பாபுவைப் பார்த்துக்கோ, இதோ வந்துடறேன்!” என்றான் அந்த இளம் பெண்ணின் கணவன். நல்ல காலம் தெய்வம் அவள் பக்கம் போலும். அந்த மைதிலியின் கணவன் இவளைக் காப்பாற்றி விட்டான்.
‘வரேன்!’ அவள் விடைபெற்று தன் மகனிட செல்ல, இவள் – ராசம்மா – இரும்புக் கிராதி அருகில் நின்றாள். யாரையோ வண்டியல் எதிர் பார்த்து வந்தது போன்ற தோற்றத்தை உண்டாக்கிக் கொண்டாள். அதற்காக அவள் அதிகம் கஷ்டப்பட வேண்டியிருக்கவில்லை.
அந்த ஊருக்கு வந்த பன்னிரெண்டு வருஷ காலமாகஅவள் வேலை செய்யும் வீட்டார்கள் காரியமாக எத்தனையோ பேரை ரயிலடியில் ஏற்றிவிடவும் வரவேற்கவும் வந்து வந்து பழக்கம். ஆகவே, ஸ்டேஷன் மாஸ்டர், போர்ட்டர் யாரும் அவளை எதுவும் கேட்பதில்லை. அப்படியிருக்க இன்று மட்டும் ஏன் அவள் மனம் நிலை கொள்ளாமல் தவிக்கறது?
‘இதோ இந்த பாபு மாதிரி ஊரார் குழந்தைகள் இருக்கவில்லையா? அவன் மட்டும் ஏன் நம்மிடம் ஒட்டாமலே வளர்ந்துவிட்டான்? அவன் என்ன செய்வான்? பாவம் குழந்தை! ரெண்டு மூணு வயசு வரையில் பசமாகத்தான் காலை சுற்றிக்கொண்டு வந்தான். பிறகு அவனையும் பிரித்து வைத்து விட்டார்கள். முதலில் அதெல்லாம் வெளிப்படையாகவா தெரிஞ்சது? ‘எல்லாத்தையும் நம்பினோம் – நாசமாய்ப் போனோம். நம் தலையிலே நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டோம்…’
‘கிராதகி! வயதான உன்னை வையக்கூடாது. ஆனாலும் உனக்கு இந்த வஞ்சகம் உதவாது, நீ சொன்னதை மகன் கேட்கலைன்னு சமயம் வந்தப்ப உன் சொரூபத்தைக் காட்டிட்டயே!’ – மனதுக்குள்ளே வைதாள். அவள் வசவும் – ஏக்கமும், பொருமலும், சாபமும் பலிக்க ஆரம்பித்து விட்டால்? அதைக்கூட நினைத்தாள் அவள். ‘ ஐயோ! நாம் ஏன் இதையெல்லாம் நினைக்க வேண்டும்? அவள் கஷ்டப் பட்டால் அதெல்லாம் கூட அவரைத்தானே பாதிக்கும்! பச்சாத்தாபப் பட்டாள். ‘நம்மைக் கண்டால் ஆகாவிட்டாலும் அந்தக் குழந்தையை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்திருக்கிறாள்!….’ கணவனையும செல்வனையும் நினைத்து சாபத்தின் உக்கிரத்தை தானாகவே தணித்துக் கொண்டாள் ராசம்மா.
கடகடவென்று பயங்கரமான பேரொலிகளுடன் பிளாட்பாரமே ஒரு கணம் நடுங்குவது போல் ரயில் வண்டி வந்து நின்றது.
ராசம்மா இன்னும் நின்றுகொண்டுதான் இருந்தாள். அவள் பார்வை வண்டியில் ஏறுபவர்கள், இறங்குபவர்கள் அனைவரையும் கவனித்து, பெண்கள் பெட்டியையும் நோட்டமிட்டது.
“ஏண்டி இப்படி வந்து நிக்கறே? பர்வதம்தானே அனுப்பி வெச்சா? என் லெட்டர் என்னிக்கி வந்தது? நல்ல வேளை, வந்தே! வருவியோ மாட்டியோன்னு தவிச்சுப் போயிட்டேன்.” ராசம்மாவின் அருகில் உரிமையுடன் கேட்ட குரல் அவளை அதிரச் செய்துவிட்டது.
ராசம்மா, குடியிருப்பதாகப் பேர் பண்ணிக் கொண்டு, கொல்லைக் கோடியில் ஒரு சிறு அறையில் இரண்டொரு பாத்திரங்களைப் போட்டு வைத்துக் கொண்டிருக்கும் வீட்டுக்குடைய – பர்வதத்தின் நாத்தனார் மங்களம்தான்.
“இல்லே மாமி! நான் இந்த வண்டியிலே…” தொண்டை வரை வந்த வார்த்தைகளை நிறுத்திக் கொண்டுவிட்டாள். ஏன்? அவள் முடிவு மாறிவிட்டதா?
மங்களத்தம்மாளின் கையிலிருந்த தகர டின் ஒன்றையும், சாக்கு மூட்டையையும் வாங்கிக் கொண்டாள்.
‘அடேயப்பா! என்ன கனம்! கல்லையா கட்டி வச்சுக் கொண்டு வருவாள்? அண்ணன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் முறுக்கும் தேன் குழலும் டின் டின்னாகச் செய்து கொண்டு வருகிறாள். – நமக்கும்தான் வரும்.’ அந்த வீட்டில் வாழ்ந்த காலத்தில் இரண்டொரு தடவை வந்த மீனாட்சியைப் பற்றி நினைத்தாள். ‘அப்பா! லேசுப் பட்டவள் இல்லையே! அவள் வச்ச கொள்ளியுமல்லவா மாமியாரை ஆட்டி வைத்தது!’ மனத்தின் பாரத்தோடு பொருளின் பாரமும் சேர ‘வேகு வேகெ’ன்று நடந்து மங்களத்தை பின் தங்கச் செய்துவிட்டு வயல் வரப்பில் இறங்கிக் குறுக்கு வழியாக ஊரை நோக்கி நடந்தாள்.
மங்களத்துக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. அவள் கையில் மூட்டை முடிச்சு எதுவும் இல்லை. ஒரு சின்னக் கித்தான் பை. அளவான பித்தளைத் தூக்கு. பின்னோடு வம்பு பேச ஊர் மனிதர்கள். ஆகவே தன் பிரதாபத்தை யெல்லாம் அளந்துகொண்டே மெதுவாக நடந்தாள்.
வீட்டில்…?
“நல்ல வேளைடீ! சொல்லணும்னு நினைச்சு, தபல் வந்தபோது உன் ரூமண்டை வந்தேன். ஏதோ நினைவா கொல்லைப் பக்கம் போயிட்டேன். உனக்கு எப்படித் தெரிஞ்சிது?” பதில் பேச விடாமல் கேள்வி மாரி பொழிந்த பர்வதம் ராசம்மாவிடமிருந்த டின்னையும், சாக்கு மூட்டையையும் வாங்கி ஊஞ்சலில் வைத்துவிட்டு டப்பியிலிருந்து நாலணா நாணயம் ஒன்றை எடுத்து அவளிடம் தந்தாள். அதுதான் கூலி! அத்தோடு அவள் நன்றி உணர்வும் கைமாறிவிட்டது.
“ஒரு பத்து ரூபா மொடையா இருக்கு தாங்கோன்னு கேட்டேன். இல்லைன்னுட்டேள்.” அழாத குறையாக தன் உள்ளத்து ஆற்றாமையை யெல்லாம் சேர்த்து வைத்துக் கேட்டபடியே, அந்த நாலணாவைப் பெற்றுக் கொண்டு தன் அறைப் பக்கம் போகக் காலெடுத்தாள் ராசம்மா.
பர்வதத்துக்கு அப்போதுதான் தன் தவறு தெரிந்தது. ஏதோ சந்தோஷத்தில் டப்பாவை அவளெதிரில் வைத்துத் திறந்ததற்காக நொந்துகொண்டாள்.
‘ஒரு வேளை மனசை விண்டு வைத்தாற் போல் உண்மையைக் கூறிக் கேட்டிருந்தால் பணம் கிடைத்திருக்குமோ?’ அந்த நாலணாவை வெங்கடாஜலபதி படம் பொறித்த டப்பாவில் போட்டுவிட்டு, ஏதோ ஒரு நப்பாசையில் மறுபடியும் அதில் இருந்த சில்லறைகளை எண்ணினாள்.இதுவரை அதை ஒட்டக் காலி செய்து துடைத்ததே இல்லை. அதற்கான அவசியமும் அவளுக்கு வந்ததில்லை. வேலை செய்யும் தினங்களில் அந்தந்த வீடுகளிலேயே சாப்பாடு கிடைத்துவிடுவதால், வயிற்றுப் பாட்டுக்காக அதிகம் கவலைப் பட்டதில்லை. கை சில்லறையை எண்ணியது. கண்கள் ஆச்சரியத்தை உமிழ மறுபடியும் எண்ணிப் பார்த்தாள். டப்பியின் அடியில் மெத்தென்று போடப்பட்ட காகித மடிப்பை எடுத்துவிட்டு எல்லாவற்றையும் தரையில் கொட்டி சத்தம் ஏற்படாமல் எண்ணி முடித்தாள்.
இந்தத் தடவை அவள் ஏமாறவில்லை. ‘காலையில் எண்ணியபோது இரண்டே முக்காலுக்கும் குறையாக இருந்தது. இப்போது எப்படி ஐந்து ரூபாயாக ஆயிற்று? ‘பர்வதம் தந்த நாலணா ராசியான காசோ?’ மனம் பூராவும் உவகை நிறைந்து, இரண்டொரு பைசாக்களை மட்டும் பெட்டியிலேயே போட்டுவிட்டுத் தெய்வப் படங்களுக்கெதிரில் வணங்கி எழுந்தாள்.
‘இனிக் கவலையில்லை. போகும்போது டிக்கெட் வாங்கக் காசிருக்கிறது. வரும்போது தர மாட்டார்களா என்ன? ஆனால், வண்டிதான் இருக்கா இல்லையோ?’ புதுக்கவலை ஒன்று பீடிக்க அறையை சாத்தித் தாழ் போட்டுவிட்டு, குலுக்கினால் திறந்துகொள்ளும் ஓட்டைப் பூட்டையும் மாட்டிவிட்டுக் கூடத்துப் பக்கம் வந்தாள் ராசம்மா.
“ஏண்டி ராசம்இ கூப்பிடக் கூப்பிட அப்படி வந்துட்டியே? மறுபடியும் எங்கே கிளம்பிட்டே?” பர்வதத்தின் எதிரில் தன் அதிகாரத்தைக் காட்டிய மங்களம், கைப்பையிலிருந்த பர்ஸிலிருந்து சில்லறையை எடுக்கப் போனாள்.
“அதெல்லாம் அப்பவே தந்தாச்சு.” வெடு’க்கென்று குறுக்கிட்டுச் சொன்ன பர்வதம் ராசத்தைப் பார்த்தாள். “எங்கே கிளம்பிட்டே? கொஞ்சம் இரு. ஒரு வேலை இருக்கு.” என்ற ஜாடையில் கையமர்த்தி விட்டு உள்ளே போனாள்.
‘இதேதடா வம்பு? அடுத்த வண்டிக்குக் கூட விடமாட்டார்கள் போலிருக்கிறதே. வாயை விட்டுச் சொல்லிவிடலாமா? என் பிள்ளையின் கல்யாணத்திற்குப் போகிறேன் என்று? – திடீரென்று சொன்னால் என்ன நினைப்பார்கள்? ‘நீ கெட்ட கேட்டுக்கு உனக்குக் கலியாணத்துக்குப் பையன் வேற இருக்கான? அட்றா தகிடிகைன்னானாம்!’ அப்படி ஏதாவது கேட்டுவிட்டால்…? பர்வதம் கேட்கக் கூடியவள்தான்! யோசித்தவாறு ராசம்மாள் மவுனமாக நின்றாள்.
“இந்தா விடுவிடுன்னு போயி, ஜகன்னாத செட்டி கடையிலே சர்க்கரை போடறாளாம். அதை வாங்கிண்டு டெய்லர் கடையிலே தைக்கக் கொடுத்த ரவிக்கையையும் வாங்கிண்டு வா.” தயாராகக் கொண்டு வந்த பத்து ரூபாய் நோட்டையும், பையையும் தந்து. “ஜல்தியா வரணும். ஊம்!” என்று சிறு குழந்தைகளை விரட்டுவது போல் முடுக்கி விட்டாள்.
‘என்ன அகம்பாவம்! அந்தஸ்துக்கு மரியாதை வேண்டாம்? வயசுக்குக் கூடவா மரியாதை காட்டக் கூடாது? உன்னை விடப் பெரியவள்தானே நான். பரிசாரகம் பண்றவளானா உன்கிட்டெல்லாம் பேச்சு வாங்கணுமா என்ன?’ என்று நினைத்தது மனம். ஆனால், – “சரி மாமி!” என்றது வாய். இயந்திரம் போல், பையையும் பணத்தையும் வாங்கிக்கொண்டபடியே தெருவில் இறங்கினாள் ராசம்மா. அவள் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது.
‘சர்க்கரையை வாங்கித் தந்து விட்டு மறுபடியும் போனா ரயில் கிடைக்குமோ கிடைக்காதோ? யாரைக் கேக்கறது? நாலரை வண்டி போன கையோட ஒரு வண்டி மறுபடியும் கிழக்காப் போகுமே, அதைப் பிடிக்க முடியணுமே! கடவுளே! இதென்ன சோதனை? பெத்த குழந்தையை சீராட்டி தாலாட்டி வளர்க்காத போனாலும், ஒரு நாளும் கிழமையுமா என்னைச் சீண்டி, பத்திரிகை அனுப்பின பிறகு கூட போய்க் கண்ணாலே பார்க்க முடியாமப் போயிடுமோ? இந்தச் சந்தர்ப்பத்திலாவது என் அவல வாழ்வுக்கு விடிவு வரும்னு நம்பினேனே? அது கூட உனக்குப் பொறுக்கவில்லையா?’ ஓட்டமும் நடையுமாகக் கடைப் பக்கம் போனாள். அப்படியே ஒரு முறை ஸ்டேஷனுக்கும் போனாள்.
அவள் நம்பிய தெய்வம் அவளைக் கைவிடவில்லை என்பதற்கு அறிகுறியாகப் பர்வதத்தின் மகன் ராமமூர்த்தியைக் கண்டாள். “ராமு, உங்க அத்தை வந்திருக்கிறாள். ஒரு ஒத்தாசை பண்றியா?”- சர்க்கரையும் துணியும் அவன் கைக்கு மாறின. கண்களில் நீர் கசிய அவள், அவனிடம் கேட்டுக்கொண்ட வேண்டுகோள்…..?
“இதுக்கேன் மாமி இவ்வளவு பயப்படறேள். பக்குவமா நான் சொல்லிடறேன். உங்க பையன் வேறே நான் வேறேயா?” அவன் சொன்ன பதிலால் அவள் பொங்கிப் பூரித்து விட்டாள். வரும் செலவுக்கம் ரூபாய் கிடைத்து விட்டது.
அடுத்த அரை மணியில் வந்த எக்ஸ்பிரஸ் வண்டி அவளையும் அவளது தூய்மையான அன்பு உள்ளத்தையும் சுமந்து கொண்டு பெருமிதத்துடன் ஓடியது.
கலியாண வீட்டுக் கோலாகலங்களுக்கு இடையே வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்து கொண்டிருந்தான் வைத்தி. அவன்தான் அந்த வீட்டுக்கு முக்கியமான, நம்பிக்கை வாய்ந்த நிர்வாகி. அவன் கண்கள் அடிக்கடி தெருவை கவனித்தன. ஏனோ மனம் அலை பாய்ந்துகொண்டிருந்தது.
‘கேள்விப்பட்டது பிசகோ?’ என்று சந்தேகப் படும் அளவுக்கு நேரம் வளர்ந்து கொண்டிருந்தது. அவன் மனம் ஏமாற்றத்தை ஏந்தத் தயாராகிக் கொண்டிருந்தது.
“டும் டும் டும்…!” கெட்டி மேளம் கம்பீரமாக ஒலிக்க மாங்கல்ய தாரணம் முடிந்து விட்டது. ஊர்க் கும்பல் பூராவும் கூடத்தை அடைத்துக் கொண்டு நிற்க, வாண்டுப் பயல்கள் மட்டும் வாசற் பக்கத்தில் பந்தலடியில் கொட்ட மடித்துக் கொண்டிருந்தார்கள்.
“மாமா! மாமா! வாசல்லே ஒரு கார் வந்திருக்கு. ரயில்வே ஸ்டேஷன்லேர்ந்து யாரோ ஒரு மாமியை….” வைத்தியின் கையும் காலும் பரபரக்க சேதி சொல்ல வந்த பையனையும் அதிகம் ஒலிபரப்ப விடாமல் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தான்.
மணமேடையில் வேலையில்லாத நரசிம்மனும் வைத்தியைத் தொடர்ந்தான். அவன் வாசலில் கண்ட காட்சி…! “ ராஜம் நீயா?” ஆர்வம் பொங்கும் கண்களுடன் அவளை தன் மனைவியைக் கை கொடுத்துத் தூக்கினான். அவள் பேசவில்லை. பேச முடியாத மயக்கம் ஆட்கொள்ளுமுன் ‘அவர் நம்மைச் சந்தேகப் படவில்லை…& என்ற நினைவு அவளுள் எழுந்தது. அவன் கைகளுக்கு இடையில் அகப்பட்ட அவள், துவண்ட நிலையில் அடங்கிக் கிடந்தாள். இந்தப் பிறவி இதோடு போதும் என்ற மன நிறைவை அடைந்தபடியே மயங்கிக் கொண்டிருந்தாள்.
“வண்டி நிக்கறதுக்குள்ளாற இவங்க அவசரமா எதிர்ப் பக்கமா இறங்கினாங்க. மண்டையில அடிங்க. நல்ல காலமா டாக்டரம்மா இருந்தாங்க. ‘ஃபர்ஸ்ட் எய்ட்’ கொடுத்து இன்ஜெக்ஷன் போட்டு எல்லாம் ஆச்சு. பையிலே இந்த பத்திரிகை இருந்துச்சு. நம்ம வூடுதானேன்னு அழைச்சிட்டு வந்துட்டேன்.” டாக்ஸிக்கார ராஜகோபால் விவரித்துக் கொண்டிருந்தான்.
“அம்மா வந்தாச்சா?” மாலையும் கழுத்துமாய் கல்யாணியையும் அழைத்துக் கொண்டு அவள் எதிரில் வந்து நின்று, “அம்மா! அம்மா!” என்று குரல் கொடுத்த மூர்த்தி அம்மாவின் மிரண்ட கண்களில் பொதிந்த பாசத்தை மட்டும் இனம் கண்டு பரிதவித்து நெகிழ்ந்து போனான்.
“சரி வாங்கோ, ரொம்ப பேச வைக்கக் கூடாது.” யாரோ அவர்களை அழைக்க, தம்பதிகள் மண மேடைக்குச் சென்றார்கள்.
“நான்தான் சொன்னேனே? பெத்த வயிறுடா இது. ஏதோ போதாத காலம். அவளுக்குப் பிடிச்ச சித்தப் பிரமையிலே வீட்டை விட்டுக் கிளம்பிட்டா. பார்! சமயத்துக்கு வந்து சேர்ந்துட்டா.”
‘இது யாருடைய குரல். வைத்தியினுடையதா? அவன் இங்குதான் இன்னும் இருக்கிறானா? அடப்பாவி! வீட்டில் அவரும் மாமியாரும் இல்லாத போது, கொல்லைப் பக்கமாய் வந்து என்னை சந்தி சிரிக்க வைச்சு, சந்தேகிக்கப் பண்ணி வீட்டை விட்டு விரட்டினியே! எனக்கு சித்தப் பிரமைன்னு வேறே இப்ப பேர் வெச்சுட்டியா?’ அப்போதுதான் சற்று மயக்கம் தெளிந்த ராசம்மா மறுபடியும் உணர்விழந்து விட்டாள்.
“நான் பாவிடீ! ராஜம்! ராஜம்! கண்ணைத் திறந்து ஒரு தரம் பாரேன்! பார்த்தாதான் எனக்கு நிம்மதி வரும். யாரை நினைச்சு உன்னை ஓட வெச்சேனோ அவள் வந்தும் கூட இந்த வீட்டில் வாழவில்லைடீ…..” புலம்பித் தவித்த மாமியார்க்காரியின் குரல் அவள் காதில் விழுந்ததோ இல்லையோ, அவள் கண் திறக்கவில்லை.
நரசிம்மன் எதுவும் பேசாமல் சிலையாக நின்றான்.
“இதோ பாருங்க, வீணாக் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டாம். மாலையும் கழுத்துமாப் பார்க்கவாவது மயக்கம் தெளிஞ்சுதே, அது போதும்….” அங்கே வந்த வைத்தி அவளைப் பார்த்தான்.
‘எவ்வளவு நல்ல பெண்ணை உன் வார்த்தையைக் கேட்டுச் சந்தேகித்தேன். அப்ப எனக்கு புத்தி இருந்ததா? அன்னைக்குப் பண்ணின பாவத்துக்கு ஈடு பண்ணிவிட்டேன்.’ கண்ணில் தளும்பிய நீரைத் துடைத்தபடியே ராசம்மாவைப் பார்த்துவிட்டுப் போனான் வைத்தி.
அவளிடமிருந்து கண்டெடுக்கப் பட்ட பத்திரிகையில் காணப்பட்ட எழுத்து யாருடையது என்று தீர்மானிக்க நடந்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. பாவம், அவர்கள் வைத்தியின் இடது கை எழுத்தை எங்கே பார்த்திருக்கறார்கள்!
தன்னால் ஏற்பட்ட பிரிவு தன்னாலேயே மீண்டும் சேர்க்கப்பட்டது என்ற நிம்மதியில் வளைய வந்த வைத்தியும் கூட ராசம்மா அந்த வீட்டுப் பந்த பாசங்களை விட்டுச் செல்லத் தீர்மானித்து விட்டதை அறிந்திருக்கவில்லை.
பதினெட்டு மணி நேரம் கழித்து அதிர்ச்சிகளைத் தாங்க முடியாத அவளது இதயம் நின்றுவிட்டதாக டாக்டர் அறிவிக்கப் போவதை அறியாத அந்த கலியாண வீடு இந்தப் புதிய செய்தியையும் அசை போட்டுக் கொண்டு மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தது.
– தினமணி கதிர் – 28–04–1967 – நட்சத்திரக் கதை