என் ஒன்றுவிட்ட அக்காள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 14, 2021
பார்வையிட்டோர்: 3,893 
 

பாகம் 1

என் பெரியப்பா பெண் விசாலி என் தந்தை சாயலாகவே இருந்ததைப்பற்றி நான் அதிகம் யோசித்ததில்லை – பாமா அதைக் கிளறியவரை.

அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா ஆகியவர்களால்தான் ஒருவரின் முகச்சாடை வருகிறது என்று படித்திருக்கிறேன். சித்தப்பா?

அமெரிக்காவில், ஒரு வெள்ளைக்காரத் தம்பதிகளுக்கு கறுப்பாக பெண்குழந்தை பிறந்ததாமே! ஆறு தலைமுறைகள் கழிந்த பின்னரும் அப்படி நடக்க வாய்ப்பிருக்குமாம். அதுமாதிரி இருக்கக்கூடாதா, என்ன!

பாமாவும் என் பெரியம்மா பெண்தான். ஊர்வம்பு அவளுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.

ஆனால், என்றாவது ஒரு நாள் என் குடும்பத்தைப்பற்றியே அப்படி ஒரு குண்டைப் போடுவாள் என்று நான் நினைத்தும் பார்த்ததில்லை.

“ஒன்னோட அக்கா, தங்கைக்கெல்லாம் நீ வீடு வித்த காசை பங்குபோட்டுக் குடுக்கணும், இல்லியாடா?” என்று ஆரம்பித்தாள் பாமா.

அப்பா பரம கஞ்சன். அண்மையில்தான் இறந்துபோனார்.

‘அம்மாவைத் திட்டமுடியவில்லை. அதனால், என் பொண்ணுக்கு காமாட்சிங்கிற அம்மாவோட பேரைச் சுருக்கி வெச்சிருக்கேன்,’ என்று அடிக்கடி, சிரிக்காமல், கூறுவார்.

ஆனால், காமு அவருக்கு ரொம்ப செல்லம். அவளைத் திட்டி நான் பார்த்ததே இல்லை. நான்தான் அடி வாங்குவேன். ஒன்றும் இல்லாததற்கெல்லாம்.

அந்த அப்பா இறந்ததும்தான் தெரிந்தது அவருடைய பிசுநாரித்தனத்திற்கான காரணம். என் பெயரில் இரண்டு வீடுகள் வாங்கிப்போட்டிருந்தார்.

உயிருடன் இருந்தபோது மகனிடம் காட்டாத அன்புக்கு எப்படி ஈடு செய்யலாம் என்றோ? நான் அப்படி நினைக்கவில்லை.

நான்தானே அவருடைய அந்திம காலக்கடன்களைச் செய்தாக வேண்டும்! அதைத் தவிர, நான் உயிரோடு இருக்கும்வரை அவருக்காக வருடாந்திர திவசம் வேறு கொடுத்தாகவேண்டும். அவருடைய ஆத்மா அப்போதுதான் சாந்தி அடையுமாம். இனி அவர் எப்படிப் போனால் எனக்கென்ன?

அந்த மனிதருடைய சொத்து மட்டும் எனக்கெதற்கு என்ற வீம்பு எழுந்தது எனக்குள்.

அப்போதுதான், இப்படி ஒரு கேள்வி!

“காமு ஒருத்திதானே என்னோட தங்கை? `அக்கா தங்கைக்கெல்லாம்’னு சொல்றியே!” என்றேன், எனக்குள் கிளர்ந்த எரிச்சலைக் கேலியாக மாற்றி.

“போடா அசடு! ஒனக்கு வெளுத்ததெல்லாம் பால்!” என்று முகத்தைச் சுளித்தாள் பாமா. “விசாலி எங்கம்மாவுக்குப் பிறந்த பொண்ணுதான். ஆனா, எங்கப்பா அவ அப்பா இல்லே!” என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டாள்.

“என்ன சொல்றே?” என்றேன் குழம்பியவனாக.

விதவையாகி, தாய்வீட்டுக்கே வந்தபின், பாமாவுக்கு வேறு பொழுதுபோக்கே கிடையாது என்றுதான் நினைக்கத் தோன்றியது. எந்த சினிமா நடிகை திருமணம் ஆகாமலேயே தாயாகி இருக்கிறாள் என்பதுபோன்ற அதிமுக்கியமான சமாசாரங்கள் அவளுக்கு அத்துப்படி.

‘யார், என்ன பண்ணறான்னு ஓயாம வம்புக்கு அலைஞ்சா இப்படித்தான் மூளை குழம்பிப்போகும்,’ என்று பாமாவிடம் சுடச்சுடச் சொல்ல வந்ததை அடக்கிக்கொண்டேன்.

“நீயே யோசி!” என்றாள்.

அதன்பின் நாங்கள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. என்னைக் குழப்பியதோடு தான் வந்த காரியம் முடிந்துவிட்டதென்ற திருப்தியுடன் போனாள் பாமா. இதற்கென்றே வந்திருக்கிறாள், தடிச்சி!

யோசிக்க ஆரம்பித்தேன்.

பாமா சொல்வதில் உண்மை இருந்தால், விசாலி என் சொந்த அக்கா. ஆனால், வேறு அம்மாவுக்கு, குறிப்பாக என் பெரியம்மாவுக்கு, பிறந்தவள். அப்படியானால் அவளுடைய அப்பா?

புரிந்துகொள்ளவே புரியாத அளவுக்கு அதுவரை இறுகியிருந்த பல முடிச்சுகள் இப்போது அவிழ்கிறமாதிரி இருந்தது.

ஒரு முறை, அப்பா என்னை தபாலாபீசுக்கு அனுப்பினார்.

“அப்படியே எனக்கு ஒரு இன்லண்டு கவர் வாங்கிண்டு வாடா, குழந்தை,” என்றாள் பாட்டி.

அடுத்த இரண்டு நாட்களும் அப்பா என்னைத் துளைத்தெடுத்தார்: “பாட்டிகிட்ட கேட்டு அந்த கவருக்கான காசை வாங்கிக் குடுத்துடு!”

அப்பா வேலை நிமித்தம் ஊர் ஊராகப் போவார். அதனால் நானும், தங்கை காமுவும் பாட்டி வீட்டில் வளர்ந்தோம். எங்களுக்கான செலவுக்கு அப்பா காசு கொடுத்திருக்கமாட்டார். பாட்டிக்குத்தான் தாத்தாவின் பென்ஷன் வந்துகொண்டிருந்ததே என்று அவர் எண்ணம் போயிருக்கும்! கருமி வேறு எப்படி யோசிப்பார்!

தன் குழந்தைகளை அன்புடன் பார்த்துக்கொள்ளும் ஒருத்திக்கு, அதுவும் சொந்த அம்மாவுக்கு, அரை ரூபாய்கூடப் பெறாத ஒரு கவர் வாங்கிக்கொடுக்க அப்பாவுக்கு ஏன் மனம் இல்லாமல் போயிற்று? இதற்கெல்லாமா கணக்கு பார்ப்பார்கள்? அப்படி என்ன பணத்தாசை?

எனக்கு வந்த கோபத்தில், பள்ளிக்கூடத்தில் நோட்டுப் புத்தகம் வாங்கவென்று அப்பா கொடுத்த காசை, “பாட்டி குடுக்கச் சொன்னாப்பா,” என்று அப்பாவிடமே திருப்பிக் கொடுத்தேன்.

இந்த மனம் இருக்கிறதே, சில சமயம், ஏன் பழைய குப்பைகளை எல்லாம் தனக்குள்ளே அடக்கி வைத்திருக்கிறது என்ற எரிச்சல் அதன்மேல் எழுகிறது.

நானும் விசாலியும் ஒரே வயதுதான். அவள் என்னைவிடச் சில மாதங்களே பெரியவள்.

எங்களுக்கு ஐந்து வயதிருக்கும். அந்தப் பிசாசு என்னைக் கடித்துவிட்டது.

பதிலுக்கு, நான் விசாலியின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டேன்.

என் கன்னத்தின் கீழ்ப்பகுதியில் ரத்தம் வடிந்துகொண்டிருந்தது. வலியால் நான் கத்தவில்லை, அழவுமில்லை. `சாண்பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை!’ என்று பாட்டி அடிக்கடி என் மன உறுதியைப் புகழ்வாளே! அது பொய்ப்பிக்க விடலாமா?

எங்கிருந்தோ, அப்பா விரைந்து வந்தார். எதுவும் கேட்காது, என்னை அவர் இடுப்பிலிருந்த பெல்டைக் கழற்றி அடித்தார். கை ஓயும்வரை.

“அம்மா இல்லாத குழந்தைடா!” என்று பாட்டி தடுத்திருக்காவிட்டால் அன்று நான் யமலோகம் போயிருப்பேன்.

இன்றும், முகச்சவரம் பண்ணிக்கொள்ளும்போது, அந்த தழும்பைத் தொடாது பண்ணிக்கொள்ள வேண்டிய நிலை. இல்லாவிட்டால், ரத்தம் கொட்டும். அப்பாவிடம் அடிவாங்கிய நாளுக்கு ஒரு நினைவுச்சின்னம்.

அதன்பின், விசாலி என்னுடன் சண்டை போடவேயில்லை. பெரியமனுஷிமாதிரி நடந்துகொண்டாள்.

முன்பெல்லாம் அவளுடைய இந்த மாற்றம் எனக்கு வேடிக்கையாகப் பட்டது.

“என்னடி, விசாலி? பத்ரகாளியா இருந்தவ எப்படி இந்தமாதிரி சாந்த சொரூபியா மாறினே?” என்று கேட்டுச் சிரிப்பேன்.

இப்போது சிரிப்பு வரவில்லை.

பெரியம்மா அந்த வயதிலேயே அவளிடம் சொல்லியிருப்பாளோ, `அவன் ஒன் சொந்தத் தம்பி, டீ!’ என்று?

பாகம் 2

அதன்பின், `அப்பாவுக்கு ஏனோ என்னைப் பிடிக்கவில்லையே!’ என்ற வருத்தத்தில் அவர் மனதை எப்படிக் கவரலாம் என்று யோசித்தேன். புத்தகப் புழுவாகவே மாறினேன். ஆனால், என்னைப் பார்த்தாலே அப்பா முகத்தில் இருக்கும் சிரிப்பு மறைந்துபோய்விடும்.

காமுதான் அப்பா பெண்ணாயிற்றே! அவளும் என்னை மதித்ததில்லை.

புத்தகங்கள் மனிதர்களைவிட எவ்வளவோ தேவலாம் என்று தோன்றிப்போக, கூடியவரை தனிமையை நாடினேன்.

பதின்ம வயதில், எனக்கு எல்லாவற்றிலும் சிரத்தை தொலைந்தது.

“இப்போல்லாம் சரியாவே சாப்பிடறதில்லே. ஒனக்கு என்னடா வந்திருக்கு?” என்று உருகிய பாட்டியும் மறைந்தபின், `எனக்கு யாருமே இல்லை!’ என்ற கசப்பான நிதரிசனம் எழுந்தது.

அவ்வப்போது, விசாலி வருவாள், `சித்தப்பா!’ என்று கொஞ்சியபடி. அவளை விட்டுவிட்டுப் போக பாமா மட்டும் வருவாள். ஆனால், தங்கமாட்டாள், `வீட்டை யார் பாத்துக்கறது?’ என்ற சாக்குடன்.

அப்படி ஒரு நாள்.

“டேய்! இதைப் பாரேன்!” என்று ஒரு புத்தகத்தைக் காட்டியபடி, கட்டிலில் உட்கார்ந்திருந்த விசாலி சற்று நகர்ந்துகொண்டாள். “இப்படி ஒக்காரு, வா!”

இரவில் தூக்கத்தைக் கெடவைக்கிற — பெண்கள் சம்பந்தமான — கெட்ட கனவுகள் ஏன் வருகின்றன, குழந்தை எப்படி உருவாகிறது என்றெல்லாம் மண்டையைக் குடைந்துகொண்டிருந்த வயது அப்போது.

அந்தப் புத்தகத்தைப் பார்த்து இருவரும் சிரித்துக்கொண்டிருந்தோம். எங்கள் சுவாரசியத்தில் அப்பா வந்ததைக் கவனிக்கவில்லை.

பொறியில் மாட்டிக்கொண்டு செத்த எலியைத் தூக்கிப்போடுவதுபோல், என் காதைப் பிடித்து, தரதரவென்று வெளியே இழுத்துப் போனார்.

அவர் தோளுக்குமேல் வளர்ந்த பிள்ளை என்பதால் அன்று அடிக்கவில்லை. அடித்திருக்கலாம்.

“இனிமே எந்தப் பொண்ணு பக்கத்திலேயாவது இப்படி இளிச்சுண்டு ஒக்காருவியா?” என்று பலவாறாக, அவர் வாயிலிருந்து வெளியே வந்த வார்த்தைகளைக் கேட்டால் எவருக்கும் கூசிப்போகும். எனக்கு உயிரே போவதுபோல் இருந்தது.

எல்லாவற்றிற்கும் காரணமாக இருந்த விசாலியையோ அப்பா எதுவும் கேட்கவில்லை. அவள்தான், கால் தடுக்கி, அவிழ்ந்த தாவணியைக் கையில் பிடித்தபடி ஓடிவிட்டாளே!

அன்றுதான் கடைசியாக நான் அப்பாவுடன் பேசியது. அப்பா எதிரில் நின்றது. விசாலி வருவதும் நின்றுபோயிற்று.

அப்பாவின் சொத்துக்கு நான்தான் ஒரே ஆண் வாரிசு. அதனால்தான் இந்த ஆட்டம் ஆடுகிறாரோ?

(காமுவின் கல்யாணத்தின்போது தங்கநகை, ரொக்கம் என்று செலவழித்துவிடுவார். வரதட்சணை வாங்குவது சட்ட விரோதம் என்று பெயர்தான். ஆண்பிள்ளையைப் பெற்றவர்கள் எப்படியோ கறந்துவிடுவார்கள்).

சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்ற உறுதியோடு, மீண்டும் படிப்பில் அக்கறை செலுத்தினேன்.

அன்று, `கூடப்பிறந்தவளுடன் என்ன சல்லாபம்?’ என்று வெளிப்படையாகக் கண்டிக்க முடியவில்லை அப்பாவால். தன் கையாலாகாத்தனத்தால்தான் அவ்வளவு ஆத்திரம் என்று இப்போதுதானே புரிகிறது!

கல்யாணமானதும், விசாலிக்கு வாடகை வீடு சுலபமாகக் கிடைக்கவில்லை. மாடியில் குடியிருந்தவர்களை அப்பா விரட்டாத குறையாக அனுப்பிவிட, அங்கு விசாலியும், அவள் கணவரும் குடிபுகுந்தார்கள்.

“எத்தனை நாளுக்குத்தான் இப்படி ஒண்டிக்கட்டையா இருப்பே?” விசாலி கரிசனப்பட்டாள்.

அசுவாரசியமாகச் சூள்கொட்டினேன்.

இனிமே எந்தப் பொண்ணு பக்கத்திலேயாவது ஒக்காருவியா?

அப்பாவின் குரல் என்னைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டே இருந்ததை அவளிடம் சொல்லியிருக்க முடியுமா?

அடுத்த பல நாட்கள் அலுவலகத்தில் மும்முரமான வேலை. ஆனால், என் மனம் என்னவோ ஓயவில்லை.

விசாலியிடம் அப்பா வாடகை எதுவும் வாங்கவில்லை என்று எனக்குத் தெரியும். அப்போது அதைப்பற்றிப் பெரிதாக எண்ணத் தோன்றவில்லை.

இப்போது நினைத்துப் பார்க்கிறேன் – நாலணா பெறாத கவருக்கான காசை அம்மாவிடமிருந்து வாங்கிக்கொடு என்று நச்சரித்தவர் எப்படி தாராளத் தர்மப்பிரபுவாக மாறினார்?

தன்னைப் பெற்றவளைவிட விசாலி என்ன, அவ்வளவு நெருக்கமான உறவா?

அப்படித்தான் இருக்கவேண்டும்.

யாரைக் கேட்பது?

“அம்மா! யார் வந்திருக்கா, பாரு!” பாமா கலகலப்பாக வரவேற்றாள்.

பெரியம்மாவை எப்போதோ ஒருமுறை ஒரு கல்யாணத்தில் பார்த்ததுதான். அப்போது நெற்றியில் குங்குமப்பொட்டு இருந்ததாக ஞாபகம்.

பெண் குழந்தைகளுக்குப் பிறந்ததிலிருந்தே நெற்றியில் பொட்டு வைக்கிறார்கள். குழந்தை எவ்வளவு அவலட்சணமாக இருந்தாலும், பிறர் கண் பட்டுவிடுமோ என்ற பயம்! தன் குஞ்சு பொன்குஞ்சு என்று காக்கை மட்டும் நினைக்காது போலும்!

வாழ்வில் நடுவில் கணவன் என்று ஒருவன் வருவான். அவன் மறைந்ததும், அவனுடன் பொட்டும் மறைந்துவிட வேண்டுமாம். இது என்ன நியாயம்?

விதவையான பெண் தன்னை அலங்கரித்துக்கொண்டால், அவளுடைய அழகைப் பார்த்து எவனாவது சொக்கிவிட்டால் என்ன செய்வது என்று எவனோ ஆணாதிக்கக்காரன் வகுத்த சதி இது.

மனைவியை இழந்தவனுக்கு இப்படி எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

பல தடவை இந்த பாரபட்சத்தைப்பற்றி யோசித்திருக்கிறேன்.

‘நான் செத்தால், நீ பொட்டும் பூவும் வெச்சுக்கோ,’ என்ற என் மனைவியிடம் அழுத்தமாகச் சொல்லவேண்டும்.

அந்த எண்ணம் எழுந்தபோதே சிரிப்பு வந்தது. இன்னும் கல்யாணமே ஆகவில்லை, பண்ணிக்கொள்ளும் ஆசையும் எழவில்லை. மனைவி மட்டும் எங்கிருந்து வந்தாள்?

பெரியம்மா அடையாளம் தெரியாத அளவுக்கு வற்றலாக ஆகியிருந்தாள்.

சிமெண்டுத் தரையில், சுவற்றில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தவள் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

மன்னிப்புக் கோரும் வகையில் பாமா லேசாகச் சிரித்தாள். “அம்மாவுக்கு எதிலேயும் பிடிப்பு கிடையாது. ஒரே இடத்திலே ஒக்காந்து, செவத்தைப் பாத்துண்டு இருப்பா,” என்று தாய் அங்கிருப்பதையே மறந்தவள்போல் கூறிவிட்டு, “நீ உள்ளே வா!” என்று வரவேற்றாள்.

“ஏன் இப்படி..?”

பாமா அசுவாரசியமாகச் சூள்கொட்டினாள். “ஒனக்குத் தெரியாதா?” என்று கேட்டுவிட்டு, “நீ வந்தாத்தானே?” என்று தானே பதிலும் சொல்லிக்கொண்டாள். “அப்பா போனதிலிருந்தே இப்படித்தான். எனக்கு அப்போ பதிமூணு வயசு. அன்னியிலேருந்து வீட்டு நிர்வாகம் என் கையிலேதான்!”

பாமா சாவி கொடுத்த கடிகாரம். பேச ஆரம்பித்தால் ஓயமாட்டாள். “விசாலி பிறந்தப்புறம் எங்கேயோ தொலைஞ்சு போயிட்டார் அப்பா. ராணுவத்தில சேர்ந்திருக்காருன்னு தகவல் கிடைச்சுது. நிஜமோ, பொய்யோ! அம்மா காத்துக் காத்துப் பாத்தா. அப்புறம்தான்..,” நெற்றிப்பொட்டை அழிப்பதுபோல் ஒரு சைகை. “யாரோ குரு சொன்னாராம், அவர் இனிமே திரும்பி வரமாட்டார்னு!”

அதன்பின் அவள் சொன்னதெல்லாம் சரியாகக் காதில் விழவில்லை.

சற்றுப் பொறுத்து பாமா கூறினாள், “யாரோ தப்பு பண்றா. அதுக்கு எங்கப்பா தண்டனை அனுபவிக்கணும்னு அவர் தலையெழுத்து!” என்று பெருமூச்செறிந்தவள், “எங்காத்துக்காரர் போனதும் நல்லதுக்குத்தான்னு நினைச்சுக்கறேன். இல்லாட்டா, அம்மாவை யார் பாத்துப்பா?” என்று முடித்தாள்.

பாகம் 3

நான் தேடி வந்தது கிடைத்துவிட்டதென்று தோன்றியது. புறப்பட்டேன்.

“வராதவன் வந்திருக்கே. ரெண்டு நாள் தங்கிட்டுப் போகமாட்டியோ? எனக்கும் பொழுது போனாப்போல இருக்கும்!” என்றாள் பாமா உபசாரமாக.

“செடிக்கெல்லாம் தண்ணி விடணும். வாடிப்போயிடும்”.

“பிள்ளை இல்லாக் குறை போக, செடி வளக்கறயாக்கும்! என்னமோ, போ!’ என்று சலித்துக்கொண்டாள். “யாரோட சாபமோ, நம்ப ரெண்டு குடும்பமும் இப்படி ஆயிடுத்து. காமுவுக்கோ குழந்தையே இல்லே. டெஸ்ட்யூப் பேபியாமே, அதையெல்லாம்கூடப் பண்ணிப் பாத்துட்டா. எந்த பிரயோசனமும் இல்லே. அவளுக்கும் நாப்பது வயசு ஆகப்போறது. இனிமே எங்கே!” என்று பெருமூச்செறிந்தாள். “விசாலிக்கு ஒரே பிள்ளை. அதுக்கும் வியாதி. சின்ன வயசில எப்படிடா டயாபடீஸ் வரும்?” நீட்டி முழக்கினாள் பாமா.

பாமாவும் அவள் வம்புப்பேச்சும்! நான் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருந்தால் இவளுக்கென்ன?

யாருக்குக் குழந்தை பிறக்கவில்லை, ஏன் இன்னும் கருத்தரிக்கவில்லை என்று யோசித்தே காலம் தள்ளுகிறாள் போலிருக்கிறது.

அங்கிருந்து கிளம்பியதும், விடுதலை கிடைத்துவிட்டதுபோல் ஓர் உணர்வு உண்டாயிற்று.

வாசலிலேயே வரவேற்றாள் விசாலி. “எங்கடா போயிட்டே, ரெண்டு நாளா? ஒன்னைப் பாக்கலாம்னு வந்தேன். செடியெல்லாம் வாடிப்போயிருந்தது. கிணத்திலே தண்ணி இறைச்சு, வாளி வாளியா கொண்டுவந்து விட்டேன்,” மூச்சு இறைக்கப் பேசினாள். இப்போது சொந்த வீட்டுக்குப் போய்விட்டாள்.

“ஒங்கம்மாவைப் பாத்துட்டு வரேன்,” என்றேன் சுருக்கமாக. குரல் என் ஏமாற்றத்தைக் காட்டிக்கொடுத்தால், அதை அவள் கவனித்ததாகத் தெரியவில்லை.

“சொல்லியிருந்தா நானும் ஒன்கூட வந்திருப்பேனே!” என்றவளைக் கவனிக்காது நான் உள்ளே நடந்தேன்.

அடுத்து என்ன செய்வது என்று வரும் வழியிலேயே தீர்மானித்திருந்தேன்.

எனக்கு நேரம் கிடைத்தபோதெல்லாம் தோட்டத்தில்தான் இருப்பேன். பச்சைப்பசேலென்று செடிகளையும், வண்ண வண்ணமாகப் பூக்களையும் பார்த்தால் ஏற்படும் புத்துணர்வு பரண்மேல் ஏறினால் கிடைக்குமா? அதனால் பரணைச் சுத்தப்படுத்த வேண்டும் என்று தோன்றியதேயில்லை.

விசாலி புறப்பட்டுப் போனதும், முதல் வேலையாக ஏணிமேல் ஏறி பரணுக்குப் போனேன்.

ஒரே ஒரு புகைப்பட ஆல்பம் கிடைத்தது, `எந்த நிமிடமும் உதிர்ந்துவிடுவேன்!’ என்று என்னைப் பயமுறுத்தியபடி. தூசி தட்டி, கவனமாகப் புரட்டினேன்.

விசாலி!

அவளுக்கு அப்போது மூன்று வயதிருக்கலாம். அப்பாவின் மடியில் ஒன்று. அப்பா அவளைத் தூக்கிப்போட்டுப் பிடிப்பதுபோல் இன்னொன்று. அவளுடைய சிரிப்பைவிட அப்பா முகத்திலிருந்த பேரானந்தம்!

எனக்கும் அதே வயதுதானே அப்போது? என்னை அப்பா தூக்கிக் கொஞ்சியதாக ஞாபகமே இல்லையே! என்னைப் பிடிக்காமல் போக நான் அப்படி என்ன தவறு செய்தேன்?

காற்றைவிட வேகமாக ஓடியது என் எண்ணம்.

அண்ணாவின் குழந்தைமேல் அத்தனை பாசமா? ஒரு வேளை, தன் சாயலாகவே இருக்கிறாள் என்றோ?

என்னால் நம்ப முடியவில்லை. அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் சாயலில் துளிக்கூட ஒற்றுமை கிடையாது. விசாலியின் வீட்டில் பெரிதாக மாட்டியிருந்த புகைப்படத்தில் பார்த்திருக்கிறேனே!

ஒருவேளை, உம்மணாமூஞ்சி பெரியம்மா சிறுவயதில் கலகலப்பாக இருந்தாளோ?

எப்படி நடந்தது இந்த அசிங்கம்?

பெரியம்மா இணங்கித்தான் இருக்கவேண்டுமா, என்ன? ஒரு வேளை, அப்பாதான்..!

செய்தாலும் செய்திருப்பார். அவருடைய முரட்டுத்தனம் என்னைவிட நன்றாக வேறு யாருக்குத் தெரியும்?

தான் செய்த தவற்றால் அப்பாவுக்கு ஆண் இனத்தின்மேலேயே வெறுப்பு ஏற்பட்டிருக்கவேண்டும். அதற்குப் பலி நான்.

என் மனக்குட்டை குழம்பியது. இனிமேல் பாமா எது சொன்னாலும் நம்பக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

நம்பாமல் எப்படி இருப்பது?

ஆல்பத்தை தூக்கியெறியாத குறையாக கீழே போட்டேன். அதிலிருந்து தூசி பறந்தது.

அம்மாவுக்கு இவர்களுடைய கள்ள உறவு தெரியுமோ?

ராத்திரி தூக்கம் வரவில்லை.

எதற்கும் இன்னொருமுறை நன்றாகத் தேடிப்பார்க்கலாம் என்று தோன்றியது.

தெருவில் ஸ்கூட்டர் சப்தமும், பேச்சுக்குரல்களும் கேட்டன. விடிந்துவிட்டது!

ஓடாத குறையாக, கொசுக்கடியையும் பாராட்டாது, கொல்லைப்புறத்திற்குப் போனேன். அன்றலர்ந்த மல்லிகையும், நைட் குவீன் என்று இரவில் மலரும் வெள்ளைநிறப் பூக்களும் பரப்பிய நறுமணம் என் மூக்கில் ஏறவில்லை.

ஏணியை மீண்டும் உள்ளே தூக்கிவந்தபோது, `என்ன கனம் கனக்கிறது, சனியன்!’ என்று, காரணமில்லாமல் அதைத் திட்டினேன்.

பரணுக்குள்ளே ஒரு மூலையில் கட்டுக்கட்டாக புத்தகங்கள். குறுக்கேயும் நெடுக்கேயும் சணல் கயிறு போட்டு இறுகக் கட்டியிருந்தது. எல்லாம் இன்றுவரை பிரபலமாக இருக்கும் ஒரு தமிழ் பத்திரிகை.

எனக்குத் தெரிந்து, அப்பா ஆங்கில தினசரியைத்தவிர வேறு எதையும் படித்ததில்லை.

இந்தக் குப்பையை எல்லாம் அம்மாதான் படித்திருக்கவேண்டும். படிக்க அவ்வளவு ஆசையா?

அப்போதுதான், என்னைப் பெற்றவளைப்பற்றி எதுவுமே தெரியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் ஏற்பட்டது.

இதைத் தூக்கிப் போடவேண்டும் என்று ஏன் யாருக்கும் தோன்றவில்லை?

`ஏதோ விஷயம் இருக்கிறது,’ என்று அந்தப் புத்தகக்கட்டை அலக்காகத் தூக்கிக் கீழே போட்டேன். தூசி பறந்தது.

தும்மியபடி, சணலை அறுத்தேன்.

பத்திரிகைகள் தேதிவாரியாக அடுக்கப்பட்டு இருந்தன. நான் பிறந்த வருடம் வெளிவந்தவை அவை என்று மேலேயிருந்த அட்டை காட்டியது.

அலட்சியமாக ஒரு முறை புரட்டினேன். முக்கியமானதாக எதுவும் தெரியவில்லை.

அம்மாவின் நினைவாக அப்படியே வைத்திருப்பார்களோ?

அப்போது எழுந்த அடுக்குத்தும்மல் மேற்கொண்டு துப்பறியும் ஆசையை வென்றது.

‘காலை வேளையில், இது என்ன வேண்டாத வேலை!’ என்று என்னையே திட்டிக்கொண்டேன்.

ஒரு மனைவி இருந்திருந்தால் அவளும் இப்படித்தான் வசைபாடி இருப்பாள் என்று தோன்ற, அந்த குழப்பத்திலும் சிரிப்பு எழுந்தது.

ஒவ்வாமையை நீக்க நான் அவ்வப்போது எடுத்துக்கொள்ளும் மருந்தை எடுக்க அலமாரியைத் திறந்தேன். பாக்கெட் காலி!

எரிச்சலுடன், இருபத்துநான்கு மணி நேரமும் திறந்திருக்கும் மருந்துக்கடையை நோக்கிப்போனேன்.

மருந்து நாக்கில் பட்டவுடனேயே தும்மல், மூக்கில் புழு நுழைவதுபோலிருந்த வேதனை எல்லாம் நின்றுபோயிற்று.

மீண்டும், பாமா, விசாலி, அப்பா, பெரியம்மா எல்லாரும் வரிசையாக நினைவில் எழுந்தார்கள்.

‘நம் எண்ணங்களை ஒரேயடியாகக் குலைக்கவும் ஏதாவது மருந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று தோன்ற, தலையில் அடித்துக்கொண்டேன்.

இந்த இழவுக்காகத்தான் பலரும் குடிக்கிறார்கள். ஆனால், ஒரு கோப்பை மதுவில் மூளையிலுள்ள செல்களில் பத்து லட்சம் அழிந்துவிடுமாமே!

அப்பாவின் அன்பைப் பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சிறு வயதில் கஷ்டப்பட்டுப் படித்து வளர்த்துக்கொண்ட மூளையை அழிப்பதாவது!

அப்பா-விசாலியின் உறவுபற்றிய உண்மை தெரியும்வரை நிம்மதி கிடைக்காது என்று புரிந்தது. பற்களைக் கடித்தபடி ஒரு பத்திரிகையைக் கையில் எடுத்தேன்.

பொருளடக்கம் என்ற பகுதியில், ஒரு கதையின்கீழ் சிவப்பு மையால் கோடிடப்பட்டு இருந்தது.

அப்படி என்னதான் இருக்கிறது அதில்?

பக்கங்களை வேகமாகப் புரட்டி, கதையைப் படிக்க ஆரம்பித்தேன்.

‘எனக்கு இரு மாமன் மகன்கள்,’ என்று ஆரம்பித்திருந்தது கதை.

பாகம் 4

`இது என்ன நடை, நான்காவது பாட புத்தகத்தில், `அரசனுக்கு ஒரே ஒரு மகள்!’ என்று எழுதியிருப்பதுபோல! இப்படி எழுதினால், இன்று குப்பையில் போட்டுவிடுவார் பத்திரிகை ஆசிரியர்!’ என்று உதட்டைச் சுழித்துக்கொண்டு, அடுத்த பத்திரிகையைக் கையில் எடுத்தேன்.

அதே தலைப்பில் மற்றொரு கதை! அப்போதுதான் புரிந்தது அது தொடர்கதை என்று.

`எனக்கு இளையவனான பரமுவைத்தான் பிடிக்கும். எப்போதும் என்னைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பான். பெரியவன் முசுடு! என்னைக் கிள்ளி அழவைத்துவிட்டு, ஓடுவான்’.

ஏதோ சந்தேகம் தட்ட, கதை எழுதியவரின் பெயரைப் பார்த்தேன். பூரணி.

அம்மா பெயர் அன்னம் என்று தெரியும். முழுப்பெயர் அன்னபூரணியாக இருக்கலாம்.

நடை சகிக்காவிட்டாலும், தொடர்ந்து படித்தேன். அம்மா எழுதிய கதை ஆயிற்றே!

`நாங்கள் பள்ளி விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டில் சந்தித்துக்கொள்வோம். அப்போதெல்லாம் ஒரே அமர்க்களம்தான்.

`நான் தாவணி போட்டுக்கொள்ள ஆரம்பித்ததும், நானும் பரமுவும் ஒன்றாகச் சினிமா பாட்டு பாடுவோம். அவன் வேண்டுமென்றே அபஸ்வரமாகப் பாடுவான். அப்போதுதானே என்னைச் சிரிக்கவைக்க முடியும்?’

அதற்குமேல் என்னால் படிக்க முடியவில்லை. புத்தகத்தைக் கீழே எறிந்துவிட்டு, யோசிக்க ஆரம்பித்தேன்.

பெரியம்மா அப்பாவுக்கு உறவுமுறைதான் என்று தெரியும். அப்படியானால், அப்பாதான் பரமுவா? அவர் சிரித்தே நான் பார்த்ததில்லையே!

அடியிலிருந்த புத்தகத்தை எடுத்தேன். அந்த தொடர்கதையைக் காணோம். முடிந்திருக்கும். ஆனால், `வாசகர் கடிதம்’ என்ற தலைப்பு என் கவனத்தை ஈர்த்தது. ஏனெனில், அதே சிவப்பு நிறக்கோடு, அடியில்.

ஒரு வேசிதான் இம்மாதிரியான கதைகளை எழுதுவாள். அண்ணனை மணந்துகொண்டுவிட்டு, தம்பியுடன் கள்ளக்காதலா? சீச்சீ! ஆபாசம்! தான் கெட்டது போதாதென்று, படிக்கிறவர்கள் மனதையும் கெடுக்கவேபோல் எழுதியிருக்கிறாள்.

அந்தப் புத்தகத்தினுள்ளேயிருந்து ஏதோ தினசரியிலிருந்து கிழிக்கப்பட்ட ஒரு துண்டுக்காகிதம் விழுந்தது.

“எழுத்தாளினி திருமதி அன்னபூரணி கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கும்போது, தவறி உள்ளே விழுந்து மரணமடைந்தார்”.

அம்மா ஏதோ விபத்தில் உயிரிழந்ததாகப் பாட்டி சொல்லி இருக்கிறாள். விவரங்களுக்காக நான் துருவியபோது, ஒரேயடியாக அழ ஆரம்பிக்க, நான் அதற்குப்பின் அந்தப் பேச்சையே எடுத்ததில்லை.

‘செத்தவர்கள் எப்படிப் போனால் என்ன? போய்விட்டார்கள். அவ்வளவுதான்!’ என்று நினைத்து, சமாதானப்படுத்திக்கொண்டேன் அப்போது.

இப்போதோ, அம்மாவைப்பற்றிக் கண்டபடி எழுதியிருந்தவன்மேல் ஆத்திரம் எழுந்தது. ஆனால், அந்தக் கடிதத்தில் பொதிந்திருந்த பொருள் என்னை யோசிக்கவைத்தது.

பெற்ற அம்மா வெவ்வேறாக இருந்தாலும், நானும் விசாலியும் ஒரே அப்பாவுக்குப் பிறந்தவர்கள்!

கணவர் தனக்குச் செய்த துரோகத்தைத் தாளமுடியாது, எழுத்துமூலம் ஒரு வடிகாலைத் தேடியிருக்கிறாள் அம்மா.

துரதிர்ஷ்டவசமாக, ஒரு பெண் கதை எழுதினால், அது அவளுடைய கதையாகத்தான் இருக்கும் என்று நம்புகிற உலகத்தில் நாம் வாழ வேண்டியிருக்கிறது.

பலரும் அம்மாவைச் சந்தேகக்கண்ணோடு பார்த்திருப்பார்கள். அவமானம் தாங்காது, அம்மா கிணற்றில் குதித்துத் தற்கொலை பண்ணிக் கொண்டிருக்கவேண்டும். `விபத்து’ என்று குடும்பத்தார் சமாளித்திருப்பார்கள்.

`அம்மா! கதை எழுதி, பெயரும் புகழும் கிடைக்கும் என்று யோசித்தாயோ? அது உன் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிட்டதே!’

முதன்முறையாக, நான் பார்த்தேயிராத அம்மாவுக்காக அழுதேன்.

எங்கோ மணியோசை கேட்டது.

“ஏண்டா? எத்தனை நேரமா கூப்பிடறது?” மிரட்டலாக வந்தது பாமாவின் குரல். “விசாலிக்கு அபார்ஷன் ஆயிடுத்தாம். அவ மாசமா இருந்ததே யாருக்கும் தெரியாது,” என்று தெரிவித்தவளின் குரலில் வருத்தம் ஒலித்தது. “உடனே ரத்தம் கொடுக்கணுமாம். நீ போ!”

“உங்க ரத்தம் இவங்களுக்குச் சேராது,” என்று மருத்துவர் கூறியபோது தெரியவில்லை, இனி எவர் ரத்தம் கொடுத்தாலும் பலனில்லை என்ற நிலைக்கு விசாலி போய்விடுவாள் என்று.

அவளுடன் சேர்ந்து விளையாடிய நாட்கள் எல்லாம் நினைவில் எழுந்தன. ரத்தபந்தம் என்பது இதுதானா?

என் செடிகளுக்காக கிணற்றில் தண்ணீர் இறைத்ததால் இப்படி ஆகியிருக்குமோ?

அப்பா விட்டுப்போனவற்றில் ஒரு வீட்டை விசாலிக்குக் கொடுத்திருக்கலாமே என்று நினைத்துக்கொண்டேன். காலம் கடந்தபின்.

காரியத்திற்கு பாமா வந்தாள்.

“நீ சொன்னதை ரொம்ப யோசிச்சேன், பாமா. விசாலிக்கு ஏன் என் ரத்தம் ஒத்துப்போகலே?” என்று கேட்டபோது அவள் சிரித்தாள்.

“நீ அவளோட சொந்த அண்ணாவா, என்ன?”

‘என்ன குழப்புகிறாள் இவள்?’

“நீதானே சொன்னே?” என்று இழுத்தேன்.

“அட அசடு!” என்று பெரிதாகச் சிரித்தாள் பாமா.

துக்கம் விசாரிக்க வந்தவர்கள் எங்களை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்.

“நான் ஒன்கிட்ட சொன்ன அன்னிக்குத் தேதி என்ன, தெரியுமா? ஏப்ரல் ஒண்ணு!”

அப்படியே அவள் கழுத்தை நெரிக்கவேண்டும்போல ஆத்திரம் எழுந்தது. `குடும்பத்தில் ஒரு சாவு போதும்!’ என்று அடக்கிக்கொண்டேன்.

என்னை முட்டாளாக்கிப் பார்த்ததில் இவளுக்கு அவ்வளவு ஆனந்தமா? கோபத்தினூடே, உண்மை தெரிந்த நிம்மதி. உரக்கச் சிரிக்கவேண்டும்போல் இருந்தது.

பாமாவோ அழ ஆரம்பித்தாள், ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு. ` என்னிக்கோ இவனோட அப்பா செய்த தப்புக்கு இந்த அப்பாவிமேல் பழிதீர்த்துக்க நினைச்சேனே! பாவம், தனியா இருந்துண்டு, ஓயாம படிச்சுப் படிச்சு, ஏற்கெனவே அரைப்பைத்தியம் மாதிரி இருக்கான்!’

அழுகையினூடே சற்றுச் சிரிப்பும் வந்தது அவளுக்கு. ‘நல்ல வேளை, நான் நடந்ததை அவன்கிட்டே சொன்னபோது, அது ஏப்ரல் மாசம்! தேதி ஒண்ணோ, என்னமோ, யார் கண்டது!’

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *