எனது நான்காவது கல்யாண நாள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 15,040 
 
 

எனக்கு மறதி எல்லை மீறிப் போய்விட்டது. கடந்த காலத்தின் சம்பவங்கள் மனதை விட்டு நீங்கி மறைந்து விடுவது இயற்கை. ஆனால் எனக்கு சில சமயங்களில் நேற்று என்ன செய்தேன் என்பதே மறந்து போய்விடுகிறது. ஒரு வேளை நேற்று முழுவதும் எழுந்திருக்காமல் நேற்று முன்தினத்தில் இருந்து தூங்கியே ஒரு நாள் முழுவதையும் கழித்து விட்டேனா என்ற கேள்வி தான் எப்போதும் முதலில் எனக்குள் எழும்? இந்த தருணங்களில் எழும் எந்த கேள்விக்கும் எனக்கு எப்போதும் விடை கிடைத்ததே இல்லை. ஒரு பத்து நிமிடம் தனியாக யோசித்துக் கொண்டிருப்பேன். இடையில் எப்போது பேசத் தொடங்கினேன் என்று தெரியாது. நான் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டு எனது மனைவி சமயலறையில் இருந்து ஓடி வருவாள்.

யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்பாள். அவள் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு எதும் பேசாமல் நின்று கொண்டிருப்பேன். ஆனால் என் மனத்தில் நேற்று என்ன செய்தோம் என்ற கேள்வி மட்டும் திரும்பத் திரும்ப எழுந்து கொண்டே இருக்கும். சரி இவளிடமே கேட்டுப் பார்க்கலாம் என்று கேட்டும் விடுவேன். அவளும் எதாவது சம்பவங்களைச் சொல்லி நினைவுபடுத்துவாள். அந்த விசயத்தில் அவள் கெட்டிக்காரி. எப்படித்தான் அவளுக்கு எல்லா நிகழ்வுகளும் நினைவில் இருக்கிறதோ, ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை எல்லாம் கோர்வையாக சொல்லி என் நாட்களை எனக்கு மீட்டுத் தந்துவிடுவாள். “போன வாரம் அசோக் கூட கார் பொம்மை கேட்டானே… அதுக்கு கூட புதன் அன்னிக்கு வாங்கலாம்னு சொன்னீங்க இல்ல? நேத்து லன்ச்க்கு உங்க ஃபிரண்டோட வெளிய போகும் போது ஒரு கடைல அவன் கேட்ட கார் பொம்மய பாத்தேன்னு வாங்கிட்டு வந்தீங்க இல்ல? நியாபகம் இல்லயா?”. அட ஆமாம் என்பேன். “நல்ல வேளை அசோக் யாருன்னு கேக்காம இருந்தீங்க போங்க” என்பாள் சிரித்துக்கொண்டே.

ஆனால் எப்போதும் அவளுக்கு மட்டும் எப்படி எல்லாம் நினைவில் இருக்கிறது என்று நான் கேட்டதே இல்லை. இது போல பல முறை நடந்து இருக்கிறது. அவள் சொல்லி விட்டு சமையல் வேலைகளை கவனிக்க சென்றுவிடுவாள். நான் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு அந்த நாளில் ஒன்றும் செய்யவில்லை போலும் என்று மறுபடியும் மறந்து போய்விடுவேன்.

அப்படி ஒரு சாதாரண நாளை மறந்து போயிருந்தால் பரவாயில்லை. நேற்று எங்களுடைய கல்யாண நாள். அதையே மறந்து போய்விட்டேன். என்ன செய்தேன் என்பதே நினைவுக்கு வரவில்லை. எப்போது வந்திருக்கிறது, இன்று வர? எப்படி என் மனைவியும் அதை நியாபகப்படுத்தவில்லை? அவளும் ஒருவேளை மறந்துவிட்டாளா? ஏதேதோ கேள்விகள் மனதில் எழுந்தவண்ணம் இருந்தது. சாதாரண நாளாக இருந்திருந்தால் அவளிடமே கேட்டிருப்பேன்.

ஆனால் இன்று அவளிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டாம் என்று தோன்றிற்று. எப்படி நான்காவது கல்யாண நாளே மறந்து போய்விட்டது? இந்த நாளுக்காக இவளுக்கு பட்டுப்புடவை பரிசளிக்க வாங்கி வைத்தது கூட நினைவில் இருக்கிறது. ஆனால் நேற்று என்ன செய்தேன் என்பது மட்டும் நினைவிற்கு வரவில்லை. அவள் மேல் கொண்ட அன்பு குறையவில்லை. எப்போதும் போல மறதி தான் இது என்று எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டேன். நேற்று எங்களுடைய கல்யாண நாள் தானா என்பதை ஒரு முறை உறுதி செய்து கொண்டேன்.

இதற்கு மேல் இதை நினைத்து குழம்பிக் கொண்டிருந்தால் அது அவளுக்கும் தெரிந்துவிடும் என்பதால் அலுவலகத்தில் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று குளித்து முடித்து சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிட்டேன். அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. என்றும் போல இன்றும் இருந்தாள்.

அலுவலகம் நடந்து செல்லும் தூரத்தில் தான் இருந்தது. நடந்து போனால் நேற்று கண்ட நிகழ்வுகள் ஏதேனும் நினைவிற்கு வரும் என்ற எண்ணத்தில் காரை விடுத்து விட்டு நடந்து போனேன். நடந்து போகும் போது உலகம் மெதுவாக இயங்குவது போன்ற பிரமை உண்டானது. எனது வீட்டில் இருந்து மூன்று வீடு தள்ளி இருந்த டீக்கடையில் சிலர் சத்தமாக எதையோ பேசிக்கொண்டிருந்தனர். இதுவரை அந்தக் கடையை எனக்கு பார்த்ததாக நினைவில்லை. இந்தக்கடை ஏன் இவ்வளவு நாளாக என் கண்ணில் படவேயில்லை? ஒரு வேளை இன்று தான் புதிதாக தொடங்கப்பட்டதோ? இவர்கள் எல்லாம் நம் தெருவில் வசிப்பவர்களா? தெருவின் முடிவில் பிரதான சாலை அதிக போக்குவரத்தின்றி இருந்தது.

நேரம் 8:45ஐக் காட்டியது கடிகாரம். இன்னும் 15 நிமிடம் இருந்தது. ஒரு 200 அடி தொலைவில் தான் எனது அலுவலகம். நான் மெதுவாக நடந்து போய்க்கொண்டிருந்தேன். நேற்று என்ன தான் நடந்திருக்கும். எதும் நினைவிற்கு வரவில்லை. நான் நடந்து போய்க்கொண்டிருந்த வழி இதுவரை கண்டிராதது போல புதிதாய் இருந்தது. இந்த வழியில் தான் நான் தினமும் காரில் வருகிறேனா? எனக்குள் கேள்விகள் சேர்ந்து கொண்டே போனது. எதற்கும் பதில் இல்லை. அலுவலகத்தில் நேற்று எனக்கு வந்த, நான் அனுப்பின மின்னஞ்சல்களைப் பார்த்தால் எல்லாம் நினைவிற்கு வந்துவிடும் என்று முடிவு செய்துகொண்டு வேகமாக நடக்கலானேன். அதற்குப் பின்பு பாதையில் நடக்கும் விசயங்களில் என் கவனம் செல்லவில்லை.

மின்னஞ்சல் பெட்டியில் எனக்கு வந்தது போலவோ, நான் அனுப்பியது போலவோ எந்த மின்னஞ்சலும் இல்லை. கல்யாண நாளுக்கு என் மனைவிக்கு பரிசளிக்க வாங்கிய பட்டுப்புடவை மேசையில் அப்படியே இருந்தது.

எனது சக ஊழியர்கள் சிலரிடம் நான் நேற்று என்ன செய்தேன் என்று கேட்டுப் பார்த்தேன். என்னை பைத்தியக்காரனைப் பார்ப்பது போல பார்த்தனர் சிலர். நான் செய்ததை நான் தான் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதை விடுத்து தன்னைக் கேட்டால் தான் எப்படி சொல்வேன் என்றனர் சிலர். தான் என்ன செய்தேன் என்பதே தெரியவில்லை என்றனர் சிலர். என்னைப்போலவும் சிலர் இருப்பது ஆறுதலாக இருந்தது. ஆனால் இவர்கள் கல்யாண நாளை அதுவும் நான்காவது கல்யாண நாளை என்னைப்போலவே மறந்திருப்பர்களா என்று எனக்குள் மறுபடியும் கேள்வி.

பொறுமையிழந்து தலை வலிக்கத் தொடங்கியது. வேலையில் கவனம் செல்லவில்லை. மனைவியிடம் பேச வேண்டும் போல தோன்றியது. கூப்பிட்டேன். அவள் மதிய உணவிற்காக காய்கறிகள் வாங்கிக் கொண்டிருப்பதாக கடைத்தெருவில் இருந்து சொன்னாள். எனக்குத் தெரிந்து நான் காய்கறிகள் வாங்கி வர என்றும் கடைத்தெருவிற்கு போனதாக நினைவில்லை. எனக்கு தலை வலிப்பதாகவும் வீட்டிற்கு வருவதாகவும் சொன்னேன்.

ஏன் காரில் இன்று அலுவலகம் செல்லவில்லை என்று கேட்டாள். நான் ஏதும் பேசாமல் சில மணித்துளிகள் இருந்ததால் அவளே ஆட்டோவில் வரும்படியும் சொன்னாள். எனக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனை செல்வதாக மேலதிகாரிக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு புறப்பட்டேன். நேற்று என்ன செய்தேன் என்ற கேள்வி எனக்குள் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தது.

எனக்கு முன்பாகவே என் மனைவி வீட்டிற்கு வந்திருந்தாள். கொஞ்சம் ஓய்வு எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும், நான் தூங்கிவிட்டால் எழுப்ப வேண்டாம் என்று அவள் ஏதும் கேட்பதற்கு முன்பாகவே சொல்லிவிட்டு படுக்கையில் விழுந்தேன். காலையில் இருந்து எனக்குள்ளாக தோன்றிய கேள்விகள் எல்லாமும் ஒவ்வொன்றாக மனதுள் ஒரு மூலையில் தோன்றிக் கொண்டிருந்தது. எப்போது தூங்கிப் போனேன் என்றே தெரியவில்லை.

நான் எழுந்து மணியைப் பார்த்தபோது அது 5ஐக்காட்டியது. இவ்வளவு நேரம் தூங்கிப் போய்விட்டேனா? என் மனைவி என் அருகில் உட்கார்ந்திருந்தாள். சாப்பிட வரும்படி சொன்னாள். இரவு சாப்பிட்டுக் கொள்வதாகச் சொன்னேன். மருத்துவமனைக்கு போய் வரலாமா என்றாள். இப்போது பரவாயில்லை, நாளை சரியாகிவிடும் என்றேன். எனது மகன் அசோக் மழலை மொழியில் எதோ அவனாகவே பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தான். கொஞ்ச நேரம் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தான் காலையில் பழங்கள் வாங்காமல் வந்து விட்டதாகவும், ஏதேனும் வாங்கி வந்து பழரசம் தயார் செய்து தருவதாகவும் சொன்னாள். நானும் வருகிறேன் என்று சொன்னேன். சற்று நேரம் ஆச்சர்யமாக பார்த்தாள். முதல் முறை அவளுடன் துணிக்கடை, நகைக்கடை தவிர்த்து போனேன். அவளுக்கு சந்தோசமாக இருந்திருக்க வேண்டும். முன்பை விட உற்சாகமாக கடைத் தெருவில் யாராரிடம் என்ன வாங்குவேன், அவர்களது பெயர், அவர்களது பேச்சுத்திறமை என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

சில கடைக்காரர்களையும் அறிமுகம் செய்துவைத்தாள். அவர்கள் ஸ்னேகமுடன் சிரித்தார்கள். தான் கடைத்தெருவிற்கு வந்திருப்பது அதிசயமாக இருப்பதாவும், என்னைப் பார்த்ததில் சந்தோசம் என்றும் சொன்னார்கள்.

நான் கடைத்தெருவிற்கு வந்தது சந்தோசமாக இருந்ததாக இரவில் சொன்னாள். இனிமேல் தினமும் உன்னோடு கடைத்தெருவிற்க்கு வருவதாக சொன்னேன். நெடு நேரம் எதைஎதையோ பேசிக்கொண்டிருந்தோம். நேற்றைய நிகழ்வு பற்றிய கேள்விகள் என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியது. மணி இரவு இரண்டு பார்த்ததாக நினைவு. காலை எழுந்த போது மணி 8. சமையலறையில் எனது மனைவி எதையோ செய்து கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

எப்போது தூங்கினாள்? எப்போது எழுந்தாள்? எப்போதுமே எனக்குப் பின்பு தூங்கி எனக்கு முன்பாகவே எழுந்து விடுகிறாள். ஒரு முறை கூட அவள் இரவிலோ, பகலிலோ தூங்கிப் பார்த்ததே இல்லை என்பது எனக்கு அப்போது தோன்றிற்று. நேற்று நேரமாகிவிட்டதல்லவா, கொஞ்ச நேரம் காலையில் தூங்கி இருக்கலாமல்லவா என்று கேட்டேன். எனக்கு அலுவலகத்துக்கு நேரம் ஆகிவிடும் என்பதால் சமையல் வேலைகளை கவனிக்க எழுந்ததாக சொன்னாள். இன்றைக்கு ஒரு நாள் மட்டும் வெளியில் எங்காவது காலை உணவிற்கு போயிருக்கலாம் என்றேன். தனக்கு இது சங்கடமாக இல்லை என்றும், பழகிப்போய்விட்டது என்றும் சொன்னாள்.

இன்றைக்கு என்ன வேலை இருக்கிறது என்று கேட்டேன். இது அவளுக்கு ஆச்சர்யத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். ஆச்சர்யத்துடனே பட்டியலிட்டாள். எல்லா வேலைகளுமே எனக்கான வேலைகள். என்னைப் பற்றியே இவள் சிந்தனை இருக்கிறது. இதுவே என்னுடைய நாட்களை அவள் மறக்காமல் இருக்க காரணமாக இருப்பதாகத் தோன்றியது. என்னுடைய நாட்களை இவள் தவிர வேறு யாரும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது என்று புரிந்தது.

அன்றிரவு எனக்கு முன்பாகவே தூங்கிப் போனாள். எனக்கு மறந்து போன நிகழ்வுகள் எல்லாம் நினைவிற்கு வரத் தொடங்கியிருந்தது,

அதற்குப் பின்பு எந்த நாளும் எனக்கு மறக்கவே இல்லை. நான்காவது கல்யாண நாள் பற்றி அவள் என்றுமே என்னைக் கேட்கவில்லை. ஆனால் அந்த நாளை என்னைப்போல அவளும் கண்டிப்பாக மறந்திருக்க மாட்டாள். அவளுக்காக நான் அன்று பரிசாக வாங்கி வைத்த பட்டுப்புடவை எனது அலுவலக மேசை மீதே இருந்துகொண்டிருந்தது. அதைப்பற்றி அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

Print Friendly, PDF & Email

1 thought on “எனது நான்காவது கல்யாண நாள்

  1. சிறப்பாக வடிவமைப்பு கொண்ட கதை. அருண், வாழ்த்துக்கள். என்னைத் தொடர்பு கொள்ளங்களேன்.. 97899 87842

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *