கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 7,456 
 
 

” ஜட்.ஜட் ஜடு…ஜட் ஜட் ஜடு ஜும்
ஜடு ஜட் ஜடு…ஜடு ஜட் ஜடு ஜும்”

பறையடிப்பவர்கள் தாளத்திற்கேற்ப அடிபோட்டு ஆடியபடி பறையைப் பிளந்துக் கொண்டிருந்தார்கள். சற்றுமுன் கூளங்களைப் போட்டு கொளுத்தி காய்ச்சியதில் வார்கள் இறுகி, பறை,தப்பட்டைகள் கணகணவென்று பேசுகின்றன. சுற்றிலும் பொடியன்கள் பறை அடிக்கேற்ப ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்

தாஸ் போய்விட்டான். மிதமிஞ்சிய சாராயத்தால் படுக்கையிலேயே செத்துக் கிடந்தான்.. பெரிய சாவு. பிளாட்பாரத்தை மறித்து நாலைந்து கள்ளிப் பெட்டிகளை பரப்பி , அதன் மேல் பிணத்தைக் கிடத்தியிருந்தார்கள்.. தலைப் பக்கம் ஒரு பாக்கெட் ஊதுபத்தி கொத்தாய் புகைந்து, நாலடி தள்ளி ஓடும் சாக்கடையின் நாற்றத்தை மறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு முழம் பூவை முடிந்து மாலை என்று போட்டிருந்தார்கள்.

தாஸ் யார்?,எந்த ஊர்?, எப்படி இங்கு வந்தான்?. போன்ற ரிஷி மூலங்கள் எதுவும் இங்கு யாருக்கும் தெரியாது. ஒரு விதத்தில் இங்கு எல்லோருக்கும் வாழ்கிற இந்த நிமிஷம்தான் நிஜம். வேறு எதுவும் தெரியாது… இதோ இந்த தூங்குமூஞ்சி மரத்தின் கீழ் ஆறடிக்கு ஏழடி விஸ்தீரணம்தான் இவன் இடம், ஏறக்குறைய பட்டா மாதிரி.ஆகிப் போனது. பிளாட்பாரங்களை பாதசாரிகள் உபயோகித்து ரொம்ப காலமாகிவிட்டது. அவைகள் குடியிருப்புகள் ..

தாஸினுடைய குலத்தொழில் தோட்டி வேலை. பாதாளச் சாக்கடையில் மூழ்கி அடைப்பை எடுக்கிறது,புறநகர் பகுதிகளில் செப்டிக்டேங்க் அள்ளுவது, சாக்கடை கால்வாய் தள்ளுவது…இப்படி….பொண்டாட்டி—காமாட்சி,. தடபுடலாக மேளதாளத்தோட, ஊர் கூடி,கல்யாணம்னு ஒண்ணு இவர்கள் வாழ்க்கையில் நடக்கவில்லை.கேட்டால் சிரிப்பான்.

“லேது நைனா! அதி எக்கட்னோ செடி போயிந்தி. வயித்துப் புள்ளையோட இக்கட ஒஸ்தானு.பாவங்கா உந்தி. இன்னாம்மே சொறேன்னு கேட்டேன்.அதி செரின்னு செப்பனு.சேர்த்துக்கிட்டேன், அவுனு. இந்த மண்ணுமேல ஒருத்தரும் ஒஸ்தியில்லே நைனா.எல்லாரு வயித்திலியும் கழியறதுதான் இருக்குது.”

வந்த இரண்டு மாசத்தில காமாட்சிக்குப் பொண்ணு பிறந்தது—லட்சுமி. அடுத்த வருஷம் ஒரு புள்ளை—காசி. பிறந்தான். இரண்டும் இங்கதான் வளர்ந்திச்சிங்க.. பொண்ணுமேல தாஸுக்குக் கொள்ளை பிரியம்.. பொத்திப் பொத்தி வளர்த்தான்.

குண்டுமணிகுண்டுமணியாச் சேர்த்து, பத்து சவரன் நெக்லஸ் செய்தான். தன் கூட்டாளி மவன் தாந்தோனிக்கு கட்டி வெக்கணும்னு ஆசை. நல்ல பையன் தண்ணிலாரி ஓட்டிக்கிட்டு இருந்தான்.. பாவி முண்டை அதுக்குள்ள அவசரம். ஒரு நாள் மாரியின் புள்ளையை இழுத்துக்கிட்டு ஓடிப் போய்விட்டாள். தாஸ் உடைந்து போனான். ஒழியட்டும் சனியன் என்று தண்ணீர் தெளித்து விட்டு விட்டான்.. மீண்டும் என்றைக்காவது அவள் வந்து ஒட்ட முடியாதபடி, இந்த காசி பையன் வேறு அடிக்கடி கறுவிக் கொண்டிருக்கிறான்.. காமாட்சிக்கு இதே கவலைதான். பொண்ணு பேச்சை எடுத்தால் அழுவாள்.

இப்போது லட்சுமி எங்கியோ மீன் மார்க்கெட்ல மீனு வித்து வயித்தை கழுவுகிறாளாம். ஹும்! அவனே சாஸ்வதம்னு ஓடினாள். அவன் வயித்தில புள்ளையையும் கொடுத்துட்டு, கூடவே அவளுக்கு கடுக்காயும் கொடுத்து விட்டான். தலைவிதி. தாஸு இது எதையும் காதுல போட்டுக்கிறது இல்லை.. எப்பவாவது காமாட்சி பொண்ணை நெனைச்சி அழுவறப்போ, தெளிவா இருந்தால் கண்கலங்குவான். இப்பவும் காமாட்சி அழுதுக் கொண்டுதான் இருக்கிறாள்.தாஸுக்கு நிற்கமுடியாத போதை.

“நூ நோரு முயீ!.”—-அவளை எட்டி உதைத்தான்.

‘அந்த ஓடுகாலிய வூட்ல செர்த்தீங்க, அவ்வளவுதான், இங்க ஒரு கொலையே வுயும்,ஹக்காங்!.”—-காசி ஆத்திரமாய் கத்துகிறான். செய்யக் கூடியவன்தான். முரடன், கொஞ்சம் கொஞ்சமாய் அடிதடியில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறான்.

பிணத்தின் பக்கத்தில் சில பொம்பளைகள் உட்கார்ந்து மூக்கைச் சிந்தி கொண்டிருந்தார்கள். ரோட்டோரத்தில் ஒரு துண்டை விரித்து வைத்துக் கொண்டு, லத்தீபும்,ஜனா பையனும் ” தாஸு அண்ணன் பூட்டாருபா!.”—என்று ஜனகராஜ் ஸ்டைலில் அழுது பணம் வசூல் பண்ணிகொண்டிருந்தார்கள்..இன்னைக்கு பாட்டிலுக்கு காசு தேத்தறதே அவங்க குறி. ஒரு இளைஞர் படை மீறின போதையுடன் தள்ளாடிக் கொண்டு வந்து நின்றது. அதில் ஒருத்தன் பத்து ரூபாய் தாளை பறையடிப்பவன் கையில் அமுக்கினான்.

“தோ பார்றா மச்சான்! அடி சுகுர்றா வரணும் ஜட்.ஜட்.ஜடு ஜட்.ஜட்.ஜடு..ஜும்–.தெர்தா?.போட்..போட்… போடு…போடு… உ.ய்.ய்.ய்.ய்ங்.”

”ஜட்.ஜட்.ஜட்.ஜடு..ஜும்,ஜட்.ஜட்.ஜடு…ஜட்ஜட்.ஜடு.ஜும்.”

“ஆ! அப்பிடி போடு…போடே..போட்,..போடே..போட்..போட்…உ.ய்.ய்.ங்.”

ஒரு கிகப்பு கைலி, அழகாய் ஸ்டெப் வைத்து ஆட, கடந்து போகும் பாதசாரிகள் சற்றுநேரம் நின்று ரசித்துவிட்டுச் செல்கிறார்கள்.. எப்படிப்பட்ட மனிதர்களையும் மனசுக்குள்ளேயாவது சற்று ஆடவைக்கும் தாளக்கட்டு அது.. ஒரு கட்டம் வரைக்கும் ஆடுபவர்களின் குஷியும், அடிப்பவர்களின் ஆர்வமும் பொங்கி வழிந்தன.அதற்குமேல் தொய்ந்தது. பத்து மணிக்கெல்லாம் கணகணவென்று வெய்யில் கொளுத்த ஆரம்பித்தது.

அடுத்த ஷெட்யூலுக்கு பறையடிப்பவனிலிருந்து,குந்தி அழும் பொம்பளைகள் வரைக்கும் சாராயம் போட்டு சுதியேற்றணும். அப்பத்தான் சாவு களை கட்டும். டப்பு வேணும். அதுக்கு …?. உடையவன் வரணும். யாரு..?காசி. அவன் எந்த ஏரியாவில சுத்திக்கிட்டிருக்கானோ?.. செப்டிக் டேங்க் அள்ளூம் டேங்க்கர் லாரியில டிரைவராக வேலை செய்கிறான்..

“என்னை வுட்டுட்டு பூட்டிய என் ராஜா!. டேய் காசீ! உன் நைனாவ சூட்றா.பாவீ, நூ எக்கட உந்தியோ தெல்லேதே.ஐயோ! போயி கூட்டியாங்களேன்..”—-ஏற்ற இறக்கங்களுடன் தொண்டை கிழிய கத்திக் கொண்டிருந்த காமாட்சியும் இப்போது ஓய்ந்து விட்டாள். ஒரு மணி வரைக்கும் காசி வரவில்லை. சித்திரை வெய்யில் வறுத்தெடுக்கிறது. கூடியிருந்த கும்பல் கலையத் தொடங்கியது. ஒரு டீ வாங்கித்தரக் கூட நாதியில்லை.சுள்ளென்று பிணத்தின் மேல் வெய்யிலடித்துக் கொண்டிருக்கிறது.

அப்போது வேகமாய் வந்த ஒரு ஆட்டோவிலிருந்து காசி இறங்கினான்.பின்னால் வந்த இரண்டு ஆட்டோக்களில் தடிதடியாய் அவன் தோஸ்துகள் வந்திறங்கினார்கள். காசி வந்துட்டான்…காசி வந்துட்டான்…,அழுகுரல்களின் ஸ்தாயிகள் இப்போது உச்சத்திற்கு உயர்ந்தன..

“ஐயோ காசி தம்புடூ! நைனாவ சூட்றா.”—ஒருத்தி ஆவேசத்துடன் ஓடிவந்து காசியின் காலை கட்டிக் கொண்டு அழுதாள். பச்சை லுங்கியில் எதிர் குடிசை டேவிட் காசியின் கிட்டே வந்து ரகசியமாககாசியின் காதைக் கடித்தான்.

“இவளைப் பார்த்துக்கடா.இந்த டகல்பாஜி வேலைக்கு கூட ரெண்டு பாக்கெட் சரக்கு கேப்பா.”

காசி அவளை விலக்கிவிட்டு,பிணத்தண்டை போய் சற்று நேரம் நின்றான். காமாட்சி பிள்ளையைப் பார்த்துவிட்டு தலைதலையென்று அடித்துக் கொண்டு அழுதாள். ஆத்தாளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தூரமாகப் போய் உட்கார்ந்தான். மாணிக்கம் வந்து பக்கத்தில் உட்கார்ந்தான்.

இன்னாடா கம்னு கீற?.அல்லாரும் உன்னையத்தாண்டா எதிர்பார்த்துக்குனு கீறோம் மோளக்காரன் கூட குந்திக்கினான் பாரு. பொட்டச்சிங்கள்லாம் கவுந்துக்கிச்சி பாரு. யாருக்கும் தெம்பு இல்லடா..”

காசி சற்று யோ சித்து விட்டு, ஜேபியிலிருந்து இரண்டு நூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டினான்.மாணிக்கம் அதை வாங்கவில்லை..

“அய்யே! இன்னாத்துக்கு இது?.கடவாப் பல்லுக்குக் கூட எட்டாது. நம்ம கும்பலைப் பத்தி தெரியாது உனுக்கு?,குஞ்சி,குளுவான் கூட இப்ப கேக்குதுபா.”

“டேய்! ரோதனை பண்ணாத. பத்து நாளா சரியா வேலை ஆப்புட்ல. அஞ்சி வட்டிக்கு வாங்கியாந்து கீறேன். தெர்தா?..”—சொல்லிவிட்டு மேலும் ஒரு தாளை எடுத்து வீசினான். எங்காத்தா கிட்ட ரெண்டு பாக்கெட்டா குடுத்துடு..”

“ஆமா உனுக்கு?.’

“நவுர்றா..உன்னைப் பார்த்துக்கோ.”

அடுத்த அரைமணி நேரத்தில் பாக்கெட் சரக்கும்,காரமாய் மிக்ஸர் பொட்டலமும் விநியோகிக்கப் பட,சாவு களைகட்டத் தொடங்கியது.மூணு மணிக்கெல்லாம் ஜாம்பஜார்,சிந்தாதிரிப்பேட்டை,மிண்ட்,ராயபுரம்,வியாசர்பாடி,..இங்கெல்லாமிருந்து ஆட்கள் வந்து கூட ஆரம்பிக்க, ஒரே கூச்சல்

“ஜடு.ஜட்..ஜடு.ஜட்..ஜடு.ஜும்
ஜட்.ஜட்.ஜடு..ஜட்.ஜட்.ஜடு..ஜும்.”

“எக்கா எயிந்து வாயேம்மே!. பாத்துக்கிணு கம்னு கீற.அய்யே..ஒரு உறைய ஊத்திக்கினே இல்லே? எந்திரிம்மே. ஹக்காங்.”—ஒரு தாவணி பறையின் அடிக்கேற்ப ஆடிக் கொண்டே, உட்கார்ந்திருந்த இன்னொருத்தியை சீண்டிக் கொண்டிருந்தாள்.

“ஆட்றவ ஆடேண்டீ! என்னை இன்னாத்துக்கு இஸிக்கிற?.”—சொன்னவளுக்கு வெட்கம் வந்துவிட, கையினால் முகத்தைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்..

“உங்கக்காவுக்கு ஆடத் தெரியாதாங்காட்டியும். வுடும்மே!நீயே சூப்பராத்தான் ஆட்றே. அத்த இஸிக்காதம்மே வுட்ரு.”—பறை அடிக்கும் ஒரு இளவட்டம் கலாசினான்.’

“ ஜ்யேய்! மூட்றி செர்தான்.எங்கக்கா ஆட்டத்தைப் பத்தி இன்னா தெரியும் உனுக்கு?.லேசுல வரமாட்டா,ஸ்டார்ட் ஆயிடுச்சி..மவனே உன் டங்குவார் டர்ர்ர்… ஆயிரும். ஹக்காங். போன செனிக்கெயமை டேங்க்ல எறங்கி கேஸ் அடிச்சி செத்துட்டானே லிங்கம் பையன், அவன் சாவுல ஆட்னா பாரு எ.ப்.ப்.ப்.பா.”

இப்போது அக்காக்காரிக்கு ரோஷம் வந்துவிட,எழுந்து சேலையை இழுத்து செருகினாள். அவளுடைய ஆட்டம் இங்கே பிரசித்தி போலும், மற்றவர்களோடு காமாட்சியும் கூட பிணத்தை அம்போன்னு விட்டுவிட்டு ஆட்டம் பார்க்க வந்துவிட்டாள்.

“டட்.டட்.டட்..டர..டட்.டட்.டர.ஜும்…டடு.ஜும்..டடுஜும்.
டட்.டட்.டர..டட்.டட்.டர.ஜும்..டடுஜும்…டடு.ஜும்.”

அவள் வில்லாய் வளைந்து அடி போட்டு ஆட,சீழ்க்கையொலி பறந்தது. கள்ளிப் பெட்டி மேல் ஒண்டடுக்காய் கிடத்தியிருந்த பிணத்தின் தலை கீழே சரிந்து கிடந்ததையும், காதினுள் சாரிசாரியாய் போய் வந்துக் கொண்டிருந்த எறும்புக் கூட்டத்தையும் யாரும் கவனிக்க வில்லை.இப்போது காமாட்சி மூன்றாவதாய் ஒரு பாக்கெட் சாராயத்தை கேட்டு வாங்கி ஏற்றிக் கொண்டாள்.

அந்த நேரத்துக்கு செபஸ்டியன் காசியருகில் வந்து உட்கார்ந்தான்.. மடியிலிருந்து ஒரு ஆஃப் ஐ எடுத்து வைத்தான். ஆளுக்குப் பாதியாய் அடித்தார்கள்.தொட்டுக்க பூண்டு ஊறுகாய் ரெடியாக வைத்திருந்தான்.

“டாய்! செபஸ்டீனு! நேத்து ஏண்டா உம் புள்ளைய அடிச்சே?.அப்பவே உன்னை ஒதைச்சிருப்பேன். என் மாப்ளடா அவன்.”

“ஹுக்கும்! கொஞ்சச் சொல்றியா?ஒரு வேலைக்கு துப்பா? நம்ம வேலைக்கு வரமாட்டானாம். பின்ன படிக்கிறதுதானே? ஒவ்வொரு கிளாஸிலியும் மூணு வருசம். அம்பறம் இன்னா பண்றது?. நம்ம தொயிலுதான்னு இஸ்து வுட்டா, அதுக்கும் மாட்டேன்றாண்டா. இந்த கும்பல்ல பொறந்துட்டு செப்டிக் டேங்க்ல எறங்க மாட்டேன்னா எப்பிடி?. அயனான கிராக்கி. வாரினா ஒன்னரை வண்டிதான் ஆவும். மூவாயிரத்துக்கு பேசிவெச்சிருந்தேன்..மாட்டேன்றான்.அதான் ரெண்டு வுட்டேன்..”

“அப்புறம் இன்னா ஆச்சி?.”—-இப்போது அவர்களுக்கு லேசாக போதை உறைக்க ஆரம்பித்திருந்தது.

” மூஞ்சை தூக்கி வெச்சிக்கிணு உள்ளே எறங்கினான். நாலு பக்கெட் வாரி தூக்கியிருப்பான். அந்த நேரந்தானா குடித்தனங்கீற எவனோ ஒரு பேமானிக்கு அவசரமா வரணும்.?.இத்தினிக்கும் மொதல்லியே சொல்லிவெச்சேன்,ஒரு மணி நேரத்துக்கு யாரும் போவாதீங்கடான்னு.”

“இன்னாச்சி?.”

“இன்னாவும்?,குனிஞ்சி வார்றப்போ முதுவுமேல பொத பொதன்னு வுயுந்து,, ஒரே …ரகளை. வெளியே வந்து அயுவுறான்.‘

காசி சிரித்தான்.

“அடிக்காதடா.அல்லாம் சரியாப் பூடும். தொயிலு மேல இதெல்லாம் சகஜந்தானே? சின்னதிலயிருந்து அவனை மழுங்க அடிச்சிருக்கணும்.. மழுங்கட்றா.”
“தம்மாத்துண்ட்ல ஒயுங்காதாண்டா வந்தான். இப்ப பெரிய ஆளாப் பூட்டானாம்.. மார் மசுர காட்டிக்கிணு ஊரை சுத்தி வந்தா போதுமா? பூவாவுக்கு?.”

இப்போது காசி மடியிலயிருந்து ஒரு ஆஃப் ஐ வெளியே எடுத்தான்..

“அடிசக்கை அப்பன் சாவுக்கு தயாராத்தான் வந்துக் கீற. அங்க உன் ஆத்தாளப் பாரு பிளாட் ஆயிருச்சி.. சொம்மா ஆப்புட்ச்சின்னு மூணு பாக்கெட்டை ஏக் தம்முல அடிச்சா?. இப்பிடித்தான்.”—செபஸ்டியன் இளித்தான்.

” வுட்றா! அதுக்கு ஒடம்புக்கு முடியலடா பாவம். நேத்து புதுப் பேட்டையாண்ட வேல. கூவத்தில முட்டிங்காலு சேறு. இந்த வயசில ஆவுமா?. வாணாண்டீ முண்டன்னா கேக்கிறாளா?.. மெலாந்து கெடக்கிறதப் பாரு சாணியாட்டம்..”

“ஐயோ! எப்போவ்! என்னை பெத்து சீரழிஞ்ச என் எ.ப்..பா…!.”—-காசியின் அக்காள் தலைவிரி கோலமாய் ஓடி வந்துக் கொண்டிருந்தாள். கூடவே முந்தானையைப் பிடித்துக் கொண்டு அவள் பிள்ளை. .தன் பெண்ணைப் பார்த்துவிட்டு அம்மாக்காரி ஆவேசமாய் தப்தப் பென்று மாரில் அறைந்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். சடக்கென்று காசி எழுந்தான்.. என்ன நடக்கப் போகிறதோ? என்று எல்லோரும் பதைப்புடன் பார்க்க, எழுந்தவன் நேராய் அக்கா அருகில் போய் நின்றான்.. ஒரு நிமிடம் அக்காளை முறைத்துப் பார்த்து விட்டு,இன்னும் சற்று விலகி தூரமாய் போய் உட்கார்ந்துக் கொண்டான்.வாயைத் திறக்கவில்லை.காமாட்சி அழுகையினூடே பேரனிடம் “அதோ உன் மாமன் பாரு, போயி மடியில உக்காச்சிக்கோ.”—என்று துரத்தினாள்.சமரசத்துக்கு தூது விட்டாச்சி.அது ஓடிப்போய் கபுக்கென்று தாவி ,மாமன் டேய்…டேய்..என்று கத்த, சட்டை பண்ணாமல் ஏறி உட்கார்ந்துக் கொண்டது..சமாதான ஒப்பந்தம் முடிஞ்சது.

பிணத்திற்கு சற்றுத் தூர காலியிடத்தில் பெரிய அலுமினிய பாத்திரத்தில் கறி வேகிறது. இப்பவே வாசனை தூக்குகிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் பிரியாணியும்,சால்னாவும் ரெடியாகிவிடும். பீடியை வலித்தபடி கிளறி விட்டுக் கொண்டிருக்கும் சத்தார்பாய். வத்தலாயிருந்தான். சற்றைக்கொரு தரம் இருமி..இருமி,.அடிவயிற்றிலிருந்து காறி சளியைத் துப்பி கொண்டிருந்தான்.. டி.பி.யாய் இருக்கும்.

நேரம் ஆக ஆக, ராகுகாலம் கழிச்சி ஆறு மணிக்கு மேல பிணத்தை எடுக்கலாம்னு சொல்லிக்கிட்டிருந்த பெருசுகள் கூட மூன்று மணிக்கே எடுக்க முஸ்தீபு காட்டினார்கள்..பிரியாணியின் மணம் அவர்களை துரிதப் படுத்தியது.. சாப்பிடும் போது எல்லாருக்கும் டாஸ்மாக் சரக்கு ஃப்ரீ என்று காசி சொல்லியிருந்தது வேறு எல்லோருடைய நெஞ்சிலும் இனித்துக் கொண்டிருந்தது..

ஆயிற்று பிணம் பயணப் படப் போகிறது.. குளிப்பாட்டும் போது ஒரே ரகளை. அம்மாவும், பொண்ணும் அழக்கூட முடியாமல், நிதானமில்லாமல் தள்ளாடிக் கொண்டிருந்தார்கள்.. காசிக்கு சரக்கு ஓவராய் போய், எழுப்ப முடியவில்லை..கொள்ளி போடவேண்டியவன்.. அவன் முகத்தில் தண்ணீர் அடித்துப் பார்த்தார்கள்.ஊஹும். சட்டென்று போதை தெளியுமென்று ஒரு சொம்பு மோரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து குடிக்க வைத்தார்கள்.. பறையும்,தப்பட்டையும் சதிராட்டம் போட்டுக் கொண்டிருந்தன. ஒருத்தன் அரிச்சந்திரன் மயானப் பாட்டை எடுத்து விட்டு, வந்திருந்தவர்களின் பெயருக்கு சுபோஜெயம் சொல்லி, காசு கறந்துக் கொண்டிருந்தான்.. முடிந்தது.. சுற்றங்களுக்கு ஒரு நாள் சொற்ப மஜாவைத் தந்துவிட்டு, தாஸ் என்னும் சாமானியனின் உடல் பயணப் பட்டு விட்டது.

நாலு மணிக்கெல்லாம் பிணம் தெருக்கோடியைத் தாண்டிவிட, இங்கே ஆறு மணிக்கெல்லாம் இலை போடப் பட்டது.. பிரியாணியும், சாராயமும் மிதிபட்டன.. சுதிக்கு காரசாரமான சால்னா வேறு. சத்தார்பாய் இஞ்சியையும்,பச்சை மிளகாயையும், கொட்டி வைத்திருந்தான்..ராத்திரி பத்து மணி வரையிலும் விருந்து நடந்துக் கொண்டிருந்தது. சாவு வீட்டில் சொல்லிக் கொண்டு போகப்படாது என்பது ஐதீகம். ஆனால் இங்கே ஒவ்வொருத்தராய் வந்து, காசியைத் தட்டிக் கொடுத்து விட்டு, போதையுடன் சொன்னதென்னவோ சரக்கைப் பற்றியும்,பிரியாணியின் ருசியைப் பற்றியும் தான். இந்தப் போதையும், ஆட்டங்களும் மட்டுமில்லை, தாஸ் என்ற ஒரு மனிதனின் அடையாளங்களும் இந்த இரவுடன் முடிகிறது.. விடிந்ததும் இவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது—’எச்சங்கள்’.

கடைசி பந்தியில் சாப்பிட்டுவிட்டு போய்க் கொண்டிருந்த செபஸ்டியனின் பிள்ளையை, காசி பார்த்து விட்டான்..

“டேய்! ஜேம்ஸு! இங்க வாடா!”—–அவன் கிட்டே வந்து நின்றான்…

”இன்னாடா உங்கப்பன் கக்கூஸ் டேங்க்ல எறங்கி வாறச்சொன்னா, மாட்டேன்றீயாமே. இது நம்ம தொயிலுடா கயித.ஒழுங்கா போயி சொல்றத செய்யி போ. போயி வேலையைக் கத்துக்கோ..”

“ வாணா எனுக்கு ஒம்பல.நான் செய்யமாட்டேன். என்னால முடியாது…”
காசி வாஞ்சையுடன் அவன் தோள்மீது கை போட்டான்..

“கயித! சரக்கடிச்சிட்டு எறங்குடா,ஒண்ணுந்தெரியாது.. மனசுக்கு ஒம்பலேன்னு வெச்சிக்கோ. நூறோ,நூத்தைம்பதோ சரக்கு வாங்கி ஃபுல்லா ஏத்திக்கோ,,தோதுக்கு பூண்டு ஊறுகாய் ஒரு பொட்டலம், போறும் நாத்தம், கலீஜு, ஒண்ணுமே தெரியாது..அல்லாம் செரியாப் பூடும். .இங்க அல்லாரும் அப்பிடித்தாண்டா.

– 2007ஆம் ஆண்டுபுதுக்கோட்டை தமுஎகச நடத்திய கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *