கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 18, 2019
பார்வையிட்டோர்: 20,539 
 
 

சமீபத்தில் எனக்குப் பரிச்சயமாகி நண்பரான திருவாளர் விசுவம் என் கண்களுக்கு ஒரு விந்தையான மனிதராகத் தென்பட்டார். இளங்காலை நேரங்களில் நடைபயிலும் பெசன்ட் நகர் மேட்டுக்குடி மக்களின் கடற்கரைப் பகுதியில்தான் அவர் எனக்கு அறிமுகமானார். அறுபது வயதானாலே எது வருகிறதோ இல்லையோ சொல்லாமலே ஆஜர் ஆவது மூட்டுவலி; ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான இந்தத் தொல்லையையும், துன்புறுத்தலையும் விரட்ட மருத்துவர்கள் உபதேசிப்பது உடற்பயிற்சியைத்தான். என்ன உடற்பயிற்சி? ’ஸிக்ஸ் பேக்’ உள்ள பலகை போன்ற மார்பையா, வயிற்றுப் பகுதியா? ம்ஹும், அதெல்லாம் இல்லை.

உடம்பில் சேர்ந்துள்ள தேவையற்ற அதிக எடையைக் குறைக்க அவர்கள் சொல்வது நடைப்பயிற்சியை.

கையில் காசில்லாத இளம் பருவத்தில் பஸ்ஸுக்கு டிக்கட் வாங்கப் பணமில்லாத மனிதர்கள் இன்று செல்வச்சீமான்களாகிக் காரில் வந்திறங்கி நடைபயிலுவதைக் காணலாம்.

இவை எல்லாவற்றையுமே நாம் வளர்ச்சி அல்லது காலத்தின் கட்டாயம் என்று ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இந்த நடைப்பயிற்சியில் சோர்வைப் போக்க ஒருநாள் உட்கார்ந்த சிமென்ட் நாற்காலியின் மறுபுறத்தில் விசுவம் அவர்களைச் சந்தித்தேன்.

அவர் என்னைப் பார்த்து ஒரு சிறிய புன்னகை செய்தார். நானும் செய்தேன்; பார்த்தவுடனே நட்பைக் காட்டும் இனிய முகம். முன் வழுக்கையற்ற தலை. சிரிக்கும் கண்கள். சிறிய உதடுகள். முதுமைக்கும் ஓர் அழகு உண்டோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும் அளைவான தேகம்; முகம்.

“நான் டாக்டர் விசுவம். ஓய்வு பெற்ற விஞ்ஞானி” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

நான் என்னை அறிமுகம் செய்து கொண்டேன்; ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி என்று.

மாறிக்கொண்டே இருக்கும் வானிலை, எல்.நினோவின் தாக்கத்தில் சென்னையை வெள்ளக்காடாக்கிய மழை. வானிலையைவிட மோசமாக மாறிக்கொண்டே இருக்கும் இன்றைய அரசியல் என்று மேலெழுந்தவாரியாகச் சில உலக சமாச்சாரங்களைப் பரிமாறிக் கொண்டு விடைபெற்றோம்.

பின்னர் வந்த நாட்களில் நாங்கள் நண்பர்களானோம். ஒருநாள் அவர் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். விசாலமான மூன்று படுக்கையறைகள் கொண்ட ப்ளாட் அது. மிக நேர்த்தியாகக் கலைநுணுக்கத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சுவரில் பல இடங்களில் கறுப்பு வெள்ளையில் பென்சில் சித்திரங்கள் சட்டமிடப்பட்டு மாட்டப்பட்டிருந்தன.

எனக்கும், நுண்கலைகளுக்கும் வெகு தூரம் என்பதால் நான் அதைப்பற்றி ஒன்றும் விசாரிக்கவில்லை.

பணத்தில் அதிகம் புழங்கிய காரணத்தால் பிளாட்டின் விலை என்ன என்று கேட்டேன். விசுவம் சிரித்தார். “சொந்தமில்லை, வாடகைதான்” என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

“ஸயின்டிஸ்ட்’ என்கிறீர்கள். நீங்கள் சொந்தமாக வீடுகூட வாங்கிக்கொள்ளவில்லையா?” என்றேன்.

“இல்லை, வாங்க வேண்டும் என்று தோன்றவில்லை. வேலையில் இருந்த நாட்களில் ஆபீஸ் குடியிருப்பில் இருந்து விட்டேன். அப்புறம், ஒற்றை ஆசாமிக்காக எதற்கு ஒரு சொத்து என்று தோன்றியது. அதனால் வாங்கவில்லை…”

எனக்குள் சட்டென்று உறைத்தது.

அந்த வீட்டில் பெண் எவரும் இருக்கும் அடையாளம் இல்லை; வேறு எவரும் இல்லை.

“உங்கள் மனைவி, மற்றும் குடும்பம்…”

விசுவம் மெல்லிய புன்னகை செய்தார்.

“எதுவும் இல்லை…” என்று சொல்லிவிட்டு, “உட்காருங்கள்… நீங்கள் காபி இல்லை டீ சாப்பிடுவீர்களா? சர்க்கரை போடலாமா?” என்று கேட்டார்.

“எதுவாயிருந்தாலும் பரவாயில்லை; சர்க்கரை போடலாம்,” என்றேன். பின்னர் அவர் காட்டிய ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தேன்.

ஹாலின் ஒரு பகுதியில் இருந்த நூதனமான ஷெல்ஃபில் பல புத்தகங்கள் இருந்தன. எனக்குப் புத்தகங்கள் படிக்கும் வழக்கம் அறவே கிடையாது. நான் காசு கொடுத்துப் புத்தகம் வாங்கிப் படிப்பதை வீண் செலவு என்று நினைப்பவன்.

இவர் வாங்குபவர் போல… பெண்டாட்டி, பிள்ளை இல்லாத ஆசாமி. காசை எப்படியெல்லாமோ செலவு செய்கிறார் என்பதில் ஆச்சர்யமில்லை! அதற்குள் விசுவம் இரு கோப்பைகளில் காபியுடன் வந்து ஒரு கோப்பையை என்னிடம் நீட்டினார்.

அவர் உட்கார வேண்டும் என்பதற்காகக் காத்திருந்த நான், “நீங்கள் கல்யாணமே செய்துகொள்ளவில்லையா… இல்லை…” என்று இழுத்தேன், ’மனைவியை இழந்தவரா அல்லது விவாகரத்து ஆனவரா?’

விசுவம் மீண்டும் புன்னகை செய்தார். அதற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு விளங்கவில்லை.

“மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் திருமணம் செய்து கொண்டுதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா என்ன?” என்றார் ஆங்கிலத்தில்.

எனக்கு அவருடைய விதண்டாவாதமான கேள்வி எரிச்சலை மூட்டியது.

இவர் ஏதோ தன்னை அதிமேதாவி என்று நினைத்துப் பேசும் பேச்சுக்கு பதிலடி தரவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

“உலகின் வழக்கம் அதுதானே? நீங்கள் விஞ்ஞானி என்பதால் வித்தியாசமாக நினைத்திருக்கிறீர்கள் போல…” என்றேன் நானும் ஆங்கிலத்தில்.

விசுவம் இப்போது வாய்விட்டுச் சிரித்தார்.

“நான் நினைக்கவில்லை; ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நம் கண்ணுக்குத் தெரியாத விதி நிர்ணயிக்கிறது…” என்றார்.

எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. நேரடியாகக் கேட்ட கேள்விக்கு இந்த ஆசாமியின் குதர்க்கமான பதில் எனக்குப் பிடிக்கவில்லை. என் முகம் போன போக்கில் இருந்து அவர் என் மனசைப் படித்திருக்க வேண்டும்.

“ஐ’ம் சாரி. உங்கள் கேள்விக்கு நேரிடையான பதில். நான் திருமணமே செய்துகொள்ளவில்லை.”

ஏதேனும் வியாதியோ? பார்த்தால் அப்படித் தெரியவில்லையே!

“ஏன்…?”

“பல காரணங்கள். தவிர, நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்த சமயத்தில் நான் அந்த வயதைக் கடந்துவிட்டேன்…”

“ஓ…”

நான் சராசரி மனிதன். இருபத்து ஐந்து வயதில் வேலை கிடைத்த ஓர் ஆண்டுகளுக்குப் பின் எனக்கு என் பெற்றோர் பார்த்துத் திருமணம் செய்து வைத்தனர். கல்பனா என் மனதிற்கேற்ற மனைவி. மறு வருஷமே விவேக் பிறந்து விட்டான்; அடுத்த இரண்டு ஆண்டுகளில் அபர்ணா.

“எனக்கு ஒரு மகன், ஒரு மகள்…” என்றேன் நானாக.

விசுவம் புன்னகையுடன் “வெரிகுட்.” என்றார்.

“இருவரும் இந்தியாவில் இல்லை…” என்றேன். அப்போது என் குரலில் பெருமை என்னையறியாமல் தொற்றிக் கொண்டது.

விசுவத்தின் புன்னகை மறையவில்லை.

“விவேக் கலிஃபோர்னியாவில் இருக்கிறான். திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அபர்ணா ஆஸ்திரேலியாவில் பெர்த்தில் இருக்கிறாள். அவளுக்கும் மணமாகி விட்டது. ஒரு ஆண் குழந்தை…” என்றேன்.

“டிபிகல் இந்தியாவின் இன்றைய ‘மிடில் கிளாஸ்’ குடும்பம்.” என்றார் விசுவம்.

அவரின் இந்தப் பதிலில் பொதிந்திருந்த நக்கல் எனக்கு மீண்டும் கோபத்தை உண்டாக்கியது.

“நீங்கள் அதுபோல் நினைப்பதில் வியப்பில்லை.” என்றேன் சுருக்கென்று.

“ஐ’ம் சாரி அகைன். நான் உங்களை அவமதிக்க அந்த மாதிரி சொல்லவில்லை.” என்றார் அவர்.

“இட்ஸ் ஆல்ரைட்.” என்றேன் அலட்சியமாக.

சில நொடிகள் காபியைக் குடிப்பதில் சென்றது. காபி உண்மையிலேயே மிகவும் நன்றாக இருந்தது.

“நீங்கள் தயாரித்த காபி வெரிகுட்.” என்றேன் சற்று சமாதானமடைந்தவனாக.

“தாங்க்யு…” என்றார் அவர் புன்னகை மாறாமல்.

“இவையெல்லாம் உங்கள் புத்தகங்களா?” என்றேன் ஏதோ பேச வேண்டுமே என்பதற்காக.

“ஆமாம், அவைதான் எனக்கு நெருங்கிய நண்பன்.” என்றார் விசுவம்.

எனக்கு சிரிப்பு வந்தது.

“அவை என்ன உங்கள் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளுமா என்ன?” என்றேன் கேலியாக.

இப்போது விசுவத்தின் முகம் தீவிரமடைந்தது.

“ஒருவகையில் உங்கள் கேள்விக்குப் பதில் ’ஆமாம் என்றுதான் சொல்வேன் .” என்றார்.

’சரி… இவர் சரியான ’நட்கேஸ்’, என்று மனதிற்குள் நினைத்துகொண்டவன், “புத்தகங்களுக்காகப் பணம் செலவு செய்வதை வீண் என்று கருதும் கூட்டத்தைச் சேர்ந்தவன்,” என்றேன் அழுத்தமாக.

விசுவம் யோசனை செய்பவர் போல் தோன்றினார்.

“இருக்கலாம்… அது உங்கள் அபிப்ராயம். அதை மறுத்துப் பேச நான் விரும்பவில்லை” என்றார். தொடர்ந்து, “நீங்கள் வாழ்க்கையில் எதை முக்கியமாகக் கருதுகிறீர்கள்?” என்றார்.

“இது என்னுடைய அபிப்ராயம் என்று சொல்ல மாட்டேன். பலருக்கும் இதுதான் முக்கியமாகத் தோன்றும்; பணமும், பதவியும் முதலில். பின்னர் குடும்பம், குழந்தைகள், அமைதியான, நோய் நொடியில்லாத வாழ்க்கை… ம்… இவைகளைத் தவிர வேறென்ன வேண்டும்?” என்றேன்.

நான் பேசும்போது என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அவர் சற்றுநேரம் தன் முகத்தைத் திருப்பி வெளியே தெரிந்த பால்கனிக்கு அப்பால் வானத்தை வெறித்துப் பார்த்தார். பின் மெதுவான குரலில் சொன்னார்.

“உண்மைதான்… ஆனால், இவைகள்தான் வாழ்க்கையில் அவசியம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இன்று பெரும்பாலான மக்களுக்கு இவை எல்லாமே இல்லை என்றாலும், பல கிடைத்திருக்கிறது…”

“இருக்கலாம். நான் அவற்றைப் பற்றி சிந்திப்பதில்லை. என் வாழ்க்கையைப் பொறுத்தவரை நான் வேண்டியதெல்லாம் நான் விரும்பிய வகையில் கிடைத்து விட்டன,” என்றேன் நான்.

விசுவம் புன்னகை செய்தார்.

“மகிழ்ச்சி… முதன் முறையாக வாழ்க்கையில் திருப்தியுடன் இருக்கும் ஒருவரைப் பார்க்கிறேன்.” என்றார் தொடர்ந்து.

நானும் புன்னகை செய்தேன்.

“பிறகென்ன… நான் கிளம்புகிறேன்…” என்று எழுந்த என்னை விசுவத்தின் தலைக்குப் பின்னால் மாட்டியிருந்த ஒரு படம் – இல்லை படங்கள் சட்டெனத் தடுத்து நிறுத்தின.

நான்தான் முதலிலேயே சொன்னேனே? சுவரில் பல பென்சில் சித்திரங்கள் அங்கங்கே இருந்தன என்று. ஆனால் இது பென்சில் சித்திரமல்ல; புகைப்படங்கள். அதுவும் சற்றுப் புதுமையாக இருந்தது. நான்கு ‘ஃப்ரேம்கள்’ ஒன்றுக்கொன்று ’டயமண்ட்’ போல் இணைக்கப் பட்டிருந்தது.

அதில் நான்கு முகங்கள்; இளைஞர்கள்; மூவர் முகத்தில் மகிழ்ச்சி தெளிவாகத் தெரியும் முகங்கள்.

யாரோ இவர்கள்… அதில் ஒன்று….

“மிஸ்டர் விசுவம்… இதென்ன ஃபோட்டோ? யார் இவர்கள் எல்லாம்? உங்களுக்குத்தான் குழந்தைகள் இல்லை என்றீர்களே?” என்றேன் சற்று வியப்புடன்.

விசுவம் காபிக் கோப்பைகளை எடுத்துச்கென்று சமையலறையின் மேடையில் வைத்துவிட்டு வந்தார்.

“இவர்களா…?” என்றார் என்னிடம். நான் இன்னமும் அந்தப் புகைப்படங்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“யெஸ்…”

“என் நண்பர்கள்…”

“நண்பர்களா?” என்றேன் ஆச்சர்யத்துடன்.

“ஏன், இருக்கக் கூடாதா?” என்றார் விசுவம்.

“ம்… இருக்கலாம், ஆனால் இவர்கள் எல்லோருமே உங்களைவிடச் சிறியவர்களாக இருக்கின்றரே. இவைகள் அவர்களின் இளம் வயதில் எடுத்த புகைப்படங்களா?”

“இல்லை, நான்கு வருஷங்களுக்குள்தானிருக்கும்.”

“அப்படியா, இத்தனை இளைய வயதினர் உங்களுக்கு எப்படி நண்பர்களாக இருக்க முடியும்?” என்றேன் திகைப்பில் இருந்து விடுபடாமல்.

“நட்புக்கு வயது வரம்புகள் உள்ளனவா என்ன?” என்று ஆங்கிலத்தில் கேட்டார் விசுவம்.

அவர் கேள்வி எனக்கு மீண்டும் அவரின் குதர்க்கமான பேச்சாக எரிச்சலைக் கிளப்பியது.

“இல்லையா… இல்லாமலா ’ஜெனரேஷன் கேப்’ என்று காலம் காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்…?” என்றேன் வேகமாக.

விசுவம் கோபம் கொள்ளவில்லை.

“சரி… நண்பர்கள் என்று சொல்லவில்லை. எனக்குப் பிடித்தவர்கள் என்று சொல்லலாமா?” என்றார் சமாதானமாக.

எனக்கு அவர் பேச்சு வாஸ்தவத்தில் புரியவில்லை.

“பிடித்தவர்கள் என்றால் எந்த வகையில்… உங்கள் மாணவர்களா?” என்றேன்.

“ம்… இரண்டு பேர் மாணவர்கள். மற்ற இருவரும் எனக்குத் தொழில் வழியில் அறிமுகமானவர்கள்.”

“உங்கள் ‘ட்ராயிங் ரூமில் ஃப்ரேமில்’ தொங்கவிடும் அளவுக்கு நெருக்கமானவர்களா?” என்றேன் சற்று வியப்பு, எரிச்சல் இரண்டும் கலந்து.

விசுவம் சிரித்தார்.

“உங்களுக்கு நேரம் இருக்கிறதென்றால் நான் விளக்குகிறேன். சற்று உட்காருங்கள்…” என்றார்.

எனக்கு அவரின் விளக்கத்தைக் கேட்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. ஏன் என்பதைப் பிறகு சொல்கிறேன்.

நான் உட்கார்ந்ததும் அவர் தன் பங்குக்கு அந்தப் புகைப்படங்களை சில விநாடிகள் பார்த்தார். பின் பார்த்தபடியே பேசினார்.

“இந்த நான்கு போட்டோக்களில் மேலே இருப்பவன் கிருஷ், மீசை வைத்திருப்பவன் ஆனந்த், கண்ணாடி போட்டிருப்பவன் ஜான், கீழே இருப்பவன் ஹரி” என்றார்.

“இவர்களிடமிருந்து நான் சில நல்ல குணங்களைக் கற்றுக் கொண்டேன். நம்ப முடிகிறதா?” என்றார் என்னைப் பார்த்து.

’இவர் குதர்க்கமான ஆசாமி என்று நினைத்த எனக்கு இப்போது இவர் பெரிய குழப்பான ஆசாமி என்று தோன்றியது. இவரில் பாதி வயதுகூட இல்லாத சின்னப் பசங்களிடமிருந்து இவர் எதைக் கண்டு அதிசயப்பட்டுப் போனார், இல்லை கற்றுக் கொண்டார்?’ என்று எண்ணினேன்.

“இந்தச் சின்னப் பசங்களிடமிருந்து இத்தனை பெரிய விஞ்ஞானி என்ன கற்றுக் கொண்டிருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்?” என்று என் மனசைப் படித்தவர் போல் கேட்டார்.

நான் ’ஆமாம்’ என்கிற வகையில் தலை அசைத்தேன்.

“கிருஷ்யைப் போன்ற ஓர் பரோபகாரியை நான் பார்த்ததில்லை; எவருக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும் உடனே முன்சென்று செய்வான். எனக்குப் பல உதவிகள் செய்திருக்கிறான். ஆனந்த் ஒரு சிறந்த ஆர்டிஸ்ட். இந்த அறையில் நீங்கள் பார்க்கும் அத்தனை பென்சில் சித்திரங்களும் அவன் வரைந்தவைதான். ஜான் வில்லியம்ஸைப் போன்ற அமைதியான குணம் கொண்ட இளைஞனைப் பார்க்கவே முடியாது. எந்த ஒரு பிரச்சினையையும் அவன் பார்க்கும் கோணமே வித்தியாசமாக இருக்கும். ஹரி நான் சந்தித்ததிலேயே முதல் சந்திப்பிலேயே தன் அசாத்திய புத்திசாலித்தனத்தாலும், வெளிப்படையாகப் பேசும் குணத்தினாலும் என்னைக் கவர்ந்தவன்…” என்று நிறுத்தினார்.

“இதுபோன்ற குணங்கள் பலரிடம் இருக்கலாமே? இவர்கள் அப்படி என்ன ஸ்பெஷல்?” என்றேன்.

“இருக்கலாம்; ஆனால் இன்றைய வேகமான, வணிக ரீதியாக மாறிக்கொண்டு வரும் காலத்தில் இவர்கள் என்னையும், என் மனதையும் புரிநது கொண்டு நண்பர்களானவர்கள்.”

“இவர்கள் உங்களுடன் இன்னும் தொடர்பில் இருக்கிறார்களா?”

விசுவம் சிரித்தார்.

“இருக்கிறார்கள்… உங்கள் பெண், பிள்ளைகள் வெளிநாடுகளில்தானே இருக்கிறார்கள். வாரம் ஒருமுறை அல்லது மாசம் ஒருமுறை உங்களுடன் ’ஸ்கைப்’ பில் பேசுவார்களா? சில சமயங்களில் சமயங்களில் அதுகூட இராது. அவரவர்களுக்கு அவர்களது வேலை, குடும்பம் என்று ஆயிரம் இருக்கும். அதை நான் எதிர்பார்ப்பது என்ன நியாயம்?”

“அது சரி… நீங்கள் ஏன் உங்கள் நெருங்கிய சொந்தம் போல் அவர்கள் ஃபோட்டோவை மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றேன் நான் விடாமல்.

விசுவம் என்னிடம் நேர்ப்பார்வையாகப் பார்த்து அமைதியாகக் கேட்டார்.

“நிறைய வீடுகளில் அவரவர்களுக்குப் பிடித்த சுவாமிப்படங்களை, பிரபலங்களின் படங்களை, காந்தி, நேரு, அண்ணா, எம்.ஜி.ஆர். என்று தலைவர்களின், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் படங்களை மாட்டி வைக்கிறார்கள்… அவர்களெல்லாம் சொந்தம் என்பதாலா…?”

“இல்லை… அது வந்து…”

“இருங்கள், நானே சொல்கிறேன். அந்தப் படங்களில் உள்ள முகங்கள் அவர்கள் மனதிற்கு ஒரு நல்லுணர்வைத் தருகிறது. மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த இளைஞர்கள் என் மனதைத் தொட்டவர்கள். அவர்கள் முகங்களைப் பார்க்கும்போது என் மனசு மகிழ்கிறது. அவ்வளவுதான்… உறவும், பகையும், அன்பும், நெருக்கமும், நட்பும், பக்தியும் நாமே உருவாக்கிக் கொள்ளும் உணர்வுகள்தானே? பார்த்தால்தான் உறவா? பேசினால்தானே நேசமா? அருகில் இருந்தால்தான் அன்பா? அன்பிற்கும், பாசத்திற்கும் எல்லைகள், கட்டுப்பாடுகள் கிடையாது… உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை… இரண்டு குழந்தைகளைப் பெற்று வளர்த்தவர்,” என்றார் விசுவம்.

“இந்த இரண்டாவது பையன் ஆனந்த்… இவனை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன்.

“ஓ… நான் அவன் படித்த கல்லூரியின் கலை விழாவில் பேசச் சென்றபோது அறிமுகம் ஆனான். நானும் சித்திரங்கள் வரைவேன்… நீங்கள் இந்த வீட்டிற்குள் வந்ததுமே புரிந்து கொண்டிருப்பீர்களே… அதைப் பார்த்து ஆர்வம் கொண்டு வந்தவன். நான் வரைந்தது இங்கிருப்பதில் ஒன்றுதான்… மற்றவை எல்லாம் அவன் கைவண்ணம்தாம். பென்சிலால் ஓவியம் வரைவதில் அபாரத் திறமை உண்டு…”

“ம்…”

“ஆனால் பாருங்கள், அவன் பெற்றோர்கள் இவனது இந்தத் திறமைக்கு ஆதரவாளர்கள் இல்லையாம். அதனால், அவன் அதைப்பற்றி வீட்டில் பேசவே மாட்டானாம்.”

“ஐ… ஸீ…”

“உங்களைப் போன்ற வங்கி அதிகாரிக்குச் சொல்லித் தரவேண்டியதில்லை. தோழமை உள்ள உறவுதான் தொடரும் என்று… ஏனோ அவர்கள் வீட்டில் அந்தச் சூழ்நிலை இல்லை… இப்போது அவனும் யு.எஸ்.ல்தானிருக்கிறான்…”

“ம்ஹும்…” என்று நான் பொதுவாகப் பதிலளித்தேன்.

“சரி, பார்க்கலாம்…” என்று அவரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன். திடீரென்று எனக்கு என் வாழ்க்கையில் ஏதோவொரு பள்ளம் விழுந்தது போல் தோன்றியது.

காரணம் அவர் வீட்டில் நான் பார்த்த ஆனந்தின் படம், என் மகன் ’விவேக்’ கினுடயது. ’விவேகானந்தன்’ முழுப்பெயரை நாங்கள் ’விவேக்’ என்றும், அவனுடைய நெருங்கிய நண்பர்கள் ‘ஆனந்த்’ என்றும் அழைத்தனர். நான் பார்த்து, உணர்ந்து, பாராட்டாத அல்லது தெரியாத என் மகனின் முகத்தை இந்த மனிதர் பார்த்துணர்ந்து உறவு கொண்டாடுகிறார்.

வெறும் பதவியையும், பணத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நானும், என் மனைவியும் உறவின் பல நிறங்களைப் பார்க்கத் தவறிவிட்டோம்.

ஏதோ நினைத்துக் கொண்டவன் போல் திரும்பி ’விடுவிடு’ வென்று விசுவம் வீட்டிற்குச் சென்று ‘காலிங் பெல்’ லை அழுத்தினேன்.

ஒரு விநாடிக்குப் பின் கதவைத் திறந்த விசுவம், திகைப்படைந்தவராய், “ஏன் ஸார்… எதையாவது மறந்து விட்டீர்களா?” என்று கேட்டார்.

“இல்லை… தாங்க்ஸ்…” என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *