மெலிந்த உடலுடன் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த பங்கஜம் சிறிது புரண்டு மற்றொரு புறம் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டாள். கவரில் மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி ஆறு அடித்தது.
”ஹும்! மணி ஆறு அடிச்சுடுத்தா? மருந்து சாப்பிட வேண்டும். என்றைக்கு இந்த மருந்து சாப்பிடும் காலம் ஒழியப் போகிறதோ! இருக்கிற ஸ்திதியைப் பார்த்தால் என் மண்டையோடுதான் இந்த மருந்துக்கும் முடிவு ஏற்படும் போலிருக்கிறது. ஈசுவரா! பணம், காசு, பதவி என்று ஆசைப்படவில்லையே! ஏதோ இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தியாகத்தானே வாழ்ந்து வருகிறோம். நல்ல ஆரோக்கியத்தை அளிக்கக்கூடவா உனக்கு மனசு வரவில்லை? ஒரு நாளா? இரண்டு நாளா? மூன்று வருஷ காலமாய் இதே பாடாய்ப் போய்விட்டதே! என்னைக் கட்டிக்கொண்டிருக்கும் அந்தப் புருஷருக்குத்தான் என்ன சுகம்” என்று மிகுந்த சலிப்புடன் வாய்விட்டுக் கூறிக் கொண்டே படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள் பங்கஜம்.
கட்டில் அருகில் முக்காலியின்மேல் இருந்த சிறிய மருந்து சீசாவை நடுங்கிய கரத்துடன் கையில் எடுத்துக்கொண்டாள். பத்து சொட்டுக்கள் எண்ணி ஒரு அவுன்ஸ் தண்ணீரில் விட்டுக் கொண்டாள். உள்ளக் கலக்கத்தினால் அவள் கண்களில் துளிர்த்த கண்ணீர்ச் சொட்டுக்களும் அதே சமயத்தில் அவளுடைய ஒட்டி உலர்ந்து போன தாடைகளில் உருண்டு வழிந்தன. பகவானைத் தியானம் செய்துகொண்டு மருந்தைக் குடித்தாள். பிறகு இரண்டு தலையணைகளை எடுத்துச் சுவரோடு பொருத்தி அவற்றின் மேல் சாய்ந்து கொண்டாள். எதிரே மாட்டியிருந்த கண்ணாடியில் தன் உருவத்தைக் கண்டு, ஒரு வறண்ட புன்னகை அவள் இதழ்களில் தோன்றி மறைந்தது. அவள் மனம் என்ன என்னவோ எண்ணங்களெல்லாம் எண்ணித் துன்புற்றது.
வாயிற்புறமிருந்து ‘கிரிங், கிரிங்’ என்று சைக்கிள் மணியின் சப்தம் ஒலித்தது. பங்கஜம் சட்டென்று சிந்தனையிலிருந்து விழிப்படைந்தாள். தன் கடைவிழிகளில் தேங்கி நின்ற கண்ணீரைச் சடுதியில் துடைத்துக் கொண்டு தலை மயிரைக் கோதி விட்டுக் கொண்டாள்.
”அம்மா, ஐயா வந்துவிட்டாங்க” என்று தெரிவித்துவிட்டு வாயிற்புறம் ஓடிக் கதவைத் திறந்தான் வேலைக்காரப் பையன்.
ஸ்ரீவத்ஸன் தன் முகத்து வேர்வையைக் கைக்குட்டையினால் துடைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான். அவன் முகம் சோர்ந்து, மிகுந்த களைப்புற்றவன் போல் தென்பட்டான்.
உற்சாகமற்றிருப்பினும் பரிவு தோய்ந்த குரலில் தன் மனைவியைப் பார்த்து, ”எப்படி இருக்கிறது, பங்கஜம்? டாக்டர் வந்திருந்தாரா? நான் இன்னும் சீக்கிரமே வந்திருப்பேன். நாளைய தினத்திற்குள் சீக்கிரமாய்ச் செய்து முடிக்க வேண்டிய ஒரு முக்கிய வேலையைப் பற்றி பிரஸ்தாபித்த வண்ணம் எனது ஆபீஸர் என்னை வெகுநேரம் நிறுத்திக் கொண்டு விட்டார்” என்று கூறிக்கொண்டே பங்கஜத்தின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் ஸ்ரீவத்ஸன்.
பிரேமையுடன் அவளுடைய முகத்தருகே குனிந்து பொழுது கலங்கிப்போன அவளது நேத்திரத்தைக் கண்டு, ஸ்ரீவத்ஸன் திடுக்கிட்டு, ”கண்மணீ, அழுதாயா? நீ எப்பொழுது இந்த அசட்டுத்தனத்தை விடப் போகிறாய்? மனத்தை அலட்டிக்கொள்ளாமல் இருந்தால்தான் உன் வியாதி அதிகரிக்காமல் இருக்குமென்று டாக்டர் படித்துப் படித்துக் கூறுகிறார். நீயோ இப்படி அகாரணமாய் வருந்தி, குருட்டு யோசனைகள் செய்து உன் உடல் நிலைமையை இன்னும் பாழாக்கிக் கொள்கிறாய்! என் வார்த்தைகளுக்கு முன்பெல்லாம் நீ எவ்வளவு மதிப்பு வைத்திருந்தாய்? இப்பொழுது மாத்திரம் ஏன் இப்படிப் பச்சைக் குழந்தை மாதிரி நடந்து கொள்கிறாய்?” என்று பங்கஜத்தை அன்புடன் கடிந்து கொண்டான்.
பங்கஜம் பதில் கூறாமல் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள். எவ்வளவு முயன்றும் அவளால் அப்பொழுது தன் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. ஸ்ரீவத்ஸன் அவள் கன்னங்களை இலேசாக வருடியபடி, ”கண்ணே! வேண்டாம், இப்படி அழாதே. மார்பு படபடப்பு ஜாஸ்தியாகிவிடும். உன் மனத்தில் இருப்பதைச் சொல். உன் இஷ்டம் எதுவானாலும் நிறைவேற்றி வைக்கிறேன். உன் குறை என்ன? தயங்காமல் சொல்” என்று அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளைத் தேற்றினாள்.
சிறிது நேரத்தில் பங்கஜம் தன்னைச் சுதாரித்துக் கொண்டு தன் கணவன் முகத்தை ஆவலுடன் பார்த்தபடி, ”உண்மையாகவா? என் இஷ்டம் எதுவானாலும் அதன்படி மறுக்காமல் செய்வீர்களா?” என்றாள்.
”உன் இஷ்டம் என்ன? முதலில் அதைச் சொல்.”
”நீங்கள் இன்னொரு விவாகம் செய்துகொள்ள வேண்டும். அதுதான் என்னுடைய நெடுநாளையக் குறை!”
பங்கஜத்தின் வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீவத்ஸனின் இதயத்தில் சொல்ல முடியாத வேதனை உணர்ச்சி உண்டாயிற்று. அந்த வேதனை எங்கே தனது முகத்தில் பிரதிபலிக்குமோ என்று அஞ்சி அதை மறைக்க அவன் சிரமப்பட்டு வரவழைத்துக் கொண்ட ஒரு மாதிரி அலட்சிய பாவத்துடன், பலமாய்ச் சிரித்தான்.
”பங்கஜம், நீ இறந்துபோன பிறகல்லவா அந்த யோசனை! அதைப்பற்றி இப்பொழுது என்ன?”
”இல்லை, நான் உயிருடன் இருக்கும்பொழுதே நீங்கள் ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து மணம் செய்து கொண்டால்தான் என் மனம் நிம்மதியடையும். நான் அனுபவிக்கும் வியாதியைவிட உங்களுக்குத் துளிக்கூட இல்லற இன்பமும் சௌக்கியமும் இல்லாமல் போய்விட்டனவே என்ற கவலைதான் என்னை அதிகமாக வாட்டுகிறது. ஏன், இந்தப் பெருங்கவலையே என்னைக் கொல்லாமல் கொல்கிறது என்று கூடச் சொல்வேன். என் இஷ்டத்தைப் பூர்த்தி செய்வீர்களா?” என்று தன் நாயகன் கழுத்தைக் கட்டிக் கொண்டு செஞ்சினாள் பங்கஜம்.
அவள் வார்த்தைகளைக் கேட்டு ஸ்ரீவத்ஸன் இடிந்து போய் உட்கார்ந்தான். சில வினாடிகள் கழித்து, ”பங்கஜம் உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன? எதற்காகக் கனவிலும் நடக்க முடியாத ஒரு காரியத்தைச் செய்யும்படி என்னைத் தூண்டுகிறாய்? இல்லை, நான் உன்மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தைப் பரீட்சை செய்து பார்க்கிறாயா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை” என்றான் வியப்புடன்.
”புத்தி சுவாதீனத்துடன்தான் பேசுகிறேன். உங்கள் அன்பின் ஆழத்தை நான் அறிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இனிமேல்தான் புதிதாய்ப் பரீட்சை செய்து பார்க்க வேண்டுமா?
நாளெல்லாம் உழைத்து விட்டு மாலை வீடு திரும்பினால், குதூகலத்துடன் உங்களுக்கு வரவேற்பு அளித்து உற்சாகமூட்டக் கொடுத்து வைக்காத பாவியாகி விட்டேன் நான்! நானும் எவ்வளவு நாட்கள்தான் பொறுத்துப் பார்ப்பது? மூன்று வருஷகளாய் இதே கண்ணறாவிப் பிழைப்புத்தான். ஆபீஸில் முதுகு ஓடிய வேலை செய்து சிரமப்படுவது போதாதென்று கிருஷலட்சுமியாகிய நான் செய்ய வேண்டிய வீட்டு வேலைகள் பல உங்கள் தலையில் விழுகின்றன. இது மட்டுமா? பல இரவுகள் எனக்காகக் கண் விழித்துச் சிசுருஷை செய்வதனால் உங்கள் உடம்பும் நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வருகிறது. என்னால் இந்தக் கஷ்டத்தைப் பார்த்துக் கொண்டு இனிமேல் சும்மா இருக்க முடியாது. நீங்கள் என் விருப்பப்படி நடந்தால்தான் என் மனம் சாந்தி பெறும். என்ன? மௌனமாக எங்கேயோ பார்க்கிறீர்கள். என் மேல் கோபமா?” என்று வினவியபடி, இவ்வளவு நாழியாக உணர்ச்சி வேகத்தில் படபடப்பாய்ப் பேசிய தன் ஆயாசம் தாங்காமல் மேல்மூச்சு வாங்க ஸ்ரீவத்ஸனின் மடியின்மேல் தலை சாய்த்தாள் பங்கஜம்.
ஸ்ரீவத்ஸன் வேதனையுடன் பெருமூச்சொன்று விட்டு, தன் மனைவியின் முதுகைப் பிரேமையுடன் தடவிக் கொடுத்தான். சில நிமிஷ நேரம் தம்பதிகளிடையே ஆழ்ந்ததோர் மௌனம் குடிகொண்டிருந்தது. சிந்தனையில் ஆழ்ந்திருந்த ஸ்ரீவத்ஸனின் மூளையில் முன்வெட்டுப் போல் ஒரு நூதன எண்ணம் மின்னிற்று.
”பங்கஜம், இந்த விஷயத்தில் அவசரப்பட்டு என்னால் ஒன்றும் தீர்மானிக்க முடியாது. எனக்குச் சிறிது காலம் அவகாசம் கொடு. பிறகு என் சம்மதத்தைத் தெரிவிக்கிறேன்” என்றான்.
பங்கஜம் மகிழ்ச்சியுடன் தன் கணவன் மடியிலிருந்து தலையைத் தூக்கி எழுந்து உட்கார்ந்தாள். ”பார்த்தேளா? இப்பொழுதே எனக்குப் பாதி நிம்மதி ஏற்பட்டு விட்டது. என் லட்சியம் விரைவில் நிறைவேறிவிட்டால் மனத்திற்கும் பூரண சாந்தி பிறந்து விடும். அதனால் என் தீராத நோய்கூடக் குறைந்து தேகத்திற்குத் தெம்பு (பலம்) உண்டாகுமென்று நம்புகிறேன்” என்று ஆர்வத்துடன் கூறிவிட்டுத் தன் கணவனின் கரங்களைப் பற்றி ஆசையுடன் தன் கண்களில் ஒற்றிக்கொண்டாள்.
***
ஸ்ரீவத்ஸன் பங்கஜத்தை மணம் செய்துகொண்டு ஏழு வருஷங்கள் ஆகியிருந்தன. அவளை அவன் வாழ்க்கைத் துணைவியாக வரித்தபொழுது எல்லோரையும்போல் அவளும் நல்ல ஆரோக்கியமும், அழகும், யௌவனமும் வாய்ந்த மங்கையாகத்தான் இருந்தாள். மண வாழ்க்கை நடத்த ஆரம்பித்த மூன்று வருஷங்களுக்குப் பிறகு பங்கஜத்தைத் தாய்மைப் பட்டம் நெருங்கிக் கொண்டிருந்தது. துரதிருஷ்டவசத்தினால் ஆறாம் மாதத்திலேயே அவளுக்குக் குறைப் பிரசவம் ஆகி மிகவும் கஷ்டப்பட்டாள். அந்தச் சமயத்தில் சரியான வைத்திய உதவியும், பராமரிப்பும் இல்லாத காரணத்தினாலோ, அல்லது போதாத வேளையினால்தானோ அவள் உடல் நிலையில் ஒன்று மாறி ஒன்றாகப் பலவிதச் சிக்கல்களும் கோளாறுகளும் ஏற்பட்டன. நாளடைவில் இதே சாக்காய்ப் பங்கஜத்தின் இருதயமே வெகுவாய்த் துர்ப்பலமாகிவிட்டது. ஸ்ரீவத்ஸன் சாதாரணச் சம்பளக்காரன்தான். தன்னிடம் ஏற்கனவே இருந்த சொற்பப் பிதுரார்ஜித சொத்து முழுவதும் செலவழித்துத் தன் அருமை மனைவிக்கு வேண்டிய உயர்தர வைத்தியமும் இதர சௌக்கியங்களும் அளித்து வந்தான். வியாதி வெக்கை ஒன்றும் இல்லாமல் இருந்தால் அந்தச் சம்பளத்தைக் கொண்டே இரண்டு ஆத்மாக்களும் எவ்வளவோ சௌகரியத்துடன் வாழ்ந்திருக்கலாம். மருந்துகளும் டாக்டர் ‘பில்’லும் ஆளை விழுங்கும்பொழுது அவர்கள் மிகச் சிரமத்துடன்தான் குடும்பம் நடத்தி வந்தார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?
இருதய சம்பந்தமான நோய்களைக் கண்டுபிடித்துக் குணம் செய்வதில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ‘ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்’டைக் கொண்டு தன் மனைவியின் தேக நிலைமையைப் பரிசோதிக்கச் செய்தான் ஸ்ரீவத்ஸன். அவர் வந்து பார்த்துவிட்டு நோயாளி பூரண ஓய்வு எடுத்துக் கொண்டு மனத்தையும் தேகத்தையும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது அத்தியாவசியமென்பதைத் தெளிவாகக் கூறி அதன்படி நடந்து கொண்டால் அவள் உடம்பு இன்னும் மோசமான நிலைமைக்கு வராமலிருக்கலாம் என்று எச்சரித்தார்.
***
ஸ்ரீவத்ஸனுக்குத் தன் மனைவி இந்த இளவயதில் இப்படி நோயாளி ஆகிவிட்டாளே என்ற துயரமும் கவலையும் ஏற்பட்டனவே ஒழிய, ‘நித்திய ரோகி’ என்று அவள் மேல் சிறிதும் வெறுப்போ, அலட்சியமோ ஏற்படவில்லை. அதற்கு மாறாக அவன் அவள் மேல் வைத்திருந்த அன்பும் கனிவும் பன்மடங்கு அதிகமாகி, அவளை ஒரு குழந்தையைப்போல் கருதி ஓய்ச்சல் ஒழிவு இன்றி அவளுக்குச் சிருஷை செய்து வந்தான். வீட்டிலுள்ள சில்லறை வேலைகளைச் செய்யச் சொற்பச் சம்பளத்தில் ஒரு வேலைக்காரப் பையனை அமர்த்திக் கொண்டு சமையல் முதலிய வேலைகளை எல்லாம் இப்பொழுது ஸ்ரீவத்ஸனே செய்யும்படி ஆயிற்று.
பங்கஜத்தின் உடல் நிலை விசித்திர நிலைக்கு வந்து விட்டது. அதாவது ஒரு மாதம் சேர்ந்தாற்போல் கட்டிலோடு கட்டிலாய்ப் படுத்திருந்து பூரண ஓய்வு எடுத்துக் கொண்டால் அவள் உடம்பு தொந்தரவு ஒன்றுமில்லாமல் சாதாரணமாக இருக்கும். அதை நம்பிக் கொண்டு அவள் தன் கணவன் வீட்டில் இல்லாத சமயங்களில், எழுந்து சற்று காலாற நடமாடி, ஏதாவது சுலபமான வேலைகளைச் செய்யப் போவாள். ஆனால் அந்தப் பழைய நிலை எப்படியோ அவளை நெகிழ்ந்துகொண்டுவிடும். மார்பு படபடப்பு வந்து படுத்து விடுவாள். மறுபடியும் மாதக் கணக்காய்ப் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் பேச்சே கூடாது. ”பூப்பட்டால் சிவக்கும்; நீர் பட்டால் கொப்புளிக்கும் அவளது பொன்னான திருமேனி” என்றாலும் மிகையாகாது.
நன்றாக உண்டு உடுத்து ஓடியாடித் திரியும் இந்தச் சின்ன வயதில் இப்படிப் படுக்கையே கதி என்று கிடந்தால் யாருக்குத்தான் அலுப்புத் தட்டாது? பங்கஜத்தின் முக்கியமான கவலை தன் கணவனுக்குத் தன்னால் ஒருவித சுகமும் சந்தோஷமும் இல்லாமற் போய் விட்டனவே என்பதுதான். இந்தக் குறையைத் தீர்க்கும் பொருட்டுத்தான் அவள் ஸ்ரீவத்ஸனை மற்றொரு கல்யாணம் செய்து கொள்ளும்படியாக மனப்பூர்வமாய் வேண்டிக் கொண்டாள். அவன் அதற்கு இணங்க மாட்டான் என்று அவள் அறிவாள். ஆனால் அவனை எப்படியாவது தாஜா செய்து தன் விருப்பத்தின்படி நடக்கச் செய்யலாமென்ற, திடமான நம்பிக்கை அவளுக்கு இருந்தது. மேலும் ஸ்ரீவத்ஸனுடைய ஜாதக ரீதியாய் அவளுக்கு உபய களத்திரப் பிராப்தம் இருப்பதாக ஒரு சோதிடன் கூறியிருந்ததை அவள் மறக்கவில்லை.
”ஒரு புருஷனுக்கு இரண்டு மனைவியர் இருந்தால் வீண் சண்டையும் சச்சரவும்தான் ஏற்படுமே தவிர, இதனால் அந்தக் கணவனுக்குத் துளிச் சுகமும் கிடையாது என்று பொதுவாய் உலக மக்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை நான் பொய்யாக்கி விடுகிறேன். இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டினால்தானே சப்தம் கேட்கும்? நான் எல்லா விஷயங்களிலும் ஒதுங்கியிருந்து சர்வத்தையும் புதிதாய் வருகிறவளுக்கே விட்டுக்கொடுத்து விடுகிறேன். என் உயிர் உள்ளவரைக்கும் எனது பிரிய பர்த்தாவின் முக தரிசனம் மட்டும் கிடைத்துக் கொண்டிருந்தால் அதுவே எனக்குப் பரம திருப்தி. நான் மிகவும் நல்லவளாயும், அவளிடம் உண்மை அன்புடனும் நடந்து கொண்டால், தானே அவளுக்கும் என்னிடம் கொஞ்சமாவது பிரியம் ஏற்படாமலா போகும்? பார்க்கலாம், என்னுடைய இந்த இலட்சியம் எவ்வளவு தூரம் பெற்றி பெறுகிறதென்று!”
மேற்கூறியபடி யோசனைகள் பல செய்வதிலேயே காலங் கடத்தி வந்தாள் பங்கஜம்.
இதற்கு நடுவில் சில மாதங்கள் தேய்ந்தன. ஸ்ரீவத்ஸனுக்கு எதிர்பாராத விதமாய் வேலையில் உயர்வு ஏற்பட்டுச் சம்பளமும் அதிகமாயிற்று. இதனால் தம்பதிகள் இருவரும் இன்னும் கொஞ்சம் சௌகரியமாகவே வாழ்க்கை நடத்தச் சாத்தியமாயிற்று. சமையல் முதலிய வீட்டு வேலைகளைச் செய்யப் பிரத்தியேகமாக ஒர் ஆளை ஏற்பாடு செய்தான் ஸ்ரீவத்ஸன். பங்கஜத்தின் உடம்பிலும் இப்பொழுது கொஞ்சம் தெம்பு உண்டாகி வீட்டோடு சிறிது நடமாடவும் ஆரம்பித்தாள்.
எப்பொழுதும் போல் ஒரு நாள் மாலை ஆபீஸிலிருந்து வீடு திரும்பிய ஸ்ரீவத்ஸன் சந்தோஷத்துடன் தன் மனைவியைக் கூப்பிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான்.
”பங்கஜம், நீ அன்றைய தினம் சொன்னாயே, அது எப்பேர்ப்பட்ட முதல் தரமான ‘ஐடியா’ என்று எனக்கு இப்பொழுதுதான் புலப்படுகிறது. என் சிநேகிதர்கள் மூலமாகப் பெண் தேட ஏற்பாடு செய்யலாமென்று இருக்கிறேன்” என்றான்.
தன் கணவன் மற்றொரு விவாகம் செய்து கொள்ளச் சம்மதிப்பதாக வாய் திறந்து என்றைய தினம் கூறப்போகிறாரோ என்று பல மாதங்களாக ஆவலுடன் ஏங்கிக் கொண்டிருந்த பங்கஜத்திற்கு, இன்று ஸ்ரீவத்ஸன் தன் எண்ணத்தை வெளியிட்டதும், சந்தோஷத்திற்குப் பதிலாக, எக்காரணத்தினாலோ பகீரென்று கலக்கமும் வேதனையும்தான் எழும்பின. ஆனால் அவள் கெட்டிக்காரி. மனத்திற்குள் உண்டான உணர்ச்சியைக் கடிந்து கொண்டு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டாள். புன்சிரிப்புடன் தன் கணவனை ஏறிட்டுப் பார்த்து, ”எனக்கு இப்பொழுதுதான் நிம்மதி உண்டாயிற்று! நீங்கள் எங்கே பிடிவாதமாய் ‘மாட்டேன்’ என்று சொல்லி விடுவீர்களோ என்று பயந்து கொண்டிருந்தேன்’’ என்றாள்.
ஸ்ரீவத்ஸன் பங்கஜத்தின் தியாகப் புத்தியையும் திட சித்தத்தையும் கண்டு அயர்ந்து போனான். அவள் முகத்தில் ஏதாவது மாறுதல் தென்படுகிறதாவென்று ஆராய்ந்தறிய விரும்புபவன் போல் சில வினாடிகள் கண்கொட்டாமல் அவள் வதனத்தைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் அவள் எதிரில் நின்றான்.
பங்கஜம் சிரித்துவிட்டாள். ”அதென்ன? அப்படி வைத்த கண் வாங்காமல் என்னைப் பார்க்கிறீர்கள்?” என்றாள்.
ஸ்ரீவத்ஸன் தன் மனைவியை அருகில் இழுத்து அவள் கரங்களைப் பற்றித் தன் இருதயத்தின் மேல் வைத்து அழுத்திக் கொண்டான். ”பங்கஜம், நிஜமாக நீ பிறகு வருந்தமாட்டாயே! புதியவள் வந்த பிறகு நான் உன்னை முன்போல் நேசிப்பதில்லையென்றும், நேரத்தையெல்லாம் அவளுடன் கூடிக் குலாவுவதிலேயே கழிப்பதாகவும் என்னைக் குற்றம் சாட்ட மாட்டாயே?” என்றான்.
”மாட்டவே மாட்டேன்! என்னை என்ன அத்தனை சஞ்சல புத்திக்காரி என்று நினைத்து விட்டீர்களா? நீங்கள் எந்த விதத்திலாவது ஆனந்தமாகவும் உல்லாசமாகவும் இருக்க வேண்டுமென்பதுதானே என்னுடைய ஆசை. நான்தானே முதல் முதலாக உங்களை இந்த விஷயத்தில் தூண்டியவள்?” என்று சிறிது ரோஷத்துடன் தன் கணவனுக்குப் பதில் அளித்தாள் பங்கஜம்.
மேற்சொன்ன சம்பாஷணை நடந்து சில தினங்களான பின் ஒருநாள் ஸ்ரீவத்ஸன் தஞ்சாவூரில் இருக்கும் ஒரு பெண்ணைப் போய்ப் பார்த்து வருவதாகச் சொல்லிப் புறபபட்டுச் சென்று சீக்கிரத்திலேயே திரும்பிவிட்டான்.
அவன் திரும்பி வந்ததும் பங்கஜம் ஆவல் துள்ள, ”என்ன, பெண் எப்படி இருக்கிறாள்? உங்கள் மனத்திற்குப் பிடித்திருக்கிறாளா? நிறம் எப்படி? என்னைவிடச் சிவப்பா? தலையில் மயிர் நிறைய இருக்கிறதா? உயரமா? குட்டையா?’’ என்று இப்படியாக ஒரே மூச்சில் பல கேள்விகள் போட்டு ஸ்ரீவத்ஸனைத் திணற அடித்தாள்.
ஸ்ரீவத்ஸன் பங்கஜத்தின் ஆவலைக் கண்டு கெட்டியாய்ச் சிரித்தான். ”பங்கஜம், உன் கேள்விகள் எல்லாவற்றிற்கும் விடைகள் கூற வேண்டிய அவசியமே இல்லையென்று நினைக்கிறேன். பெண் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அசல் கொழுக்கட்டை மாதிரி இருக்கிறது. தஞ்சாவூரிலிருந்து என்னோடு ரெயிலில் பிரயாணம் செய்து ஒருவர், மைசூரில் இருக்கும் ஒரு பெண்ணை மிகவும் பலமாகச் சிபாரிசு செய்கிறார். அதையும் போய்ப் பார்த்துவிட்டு வரலாமென்றிருக்கிறேன். ஒருக்கால் பெண் மனத்திற்குப் பிடித்திருந்தால் அங்கேயே விவாகத்தை முடித்துக் கொண்டு கையோடு பெண்ணையும் அழைத்து வந்து விடலாமென்றிருக்கிறேன். உனக்கு இந்த ஏற்பாடு சம்மதம்தானே?” என்றான்.
பங்கஜம், மறுபேச்சுப் பேசாமல் தன் சம்மதத்தைத் தெரிவிக்க, ஒருவிதப் பாசாங்கு உற்சாகத்துடன், வேகமாய்த் தலையாட்டினாள்.
மறுவாரம் ஸ்ரீவத்ஸன் ஏற்கனவே உத்தேசித்திருந்தபடி பெண் பார்க்க மைசூருக்குப் புறப்பட்டுச் சென்றான். அவன் மைசூர் போய்ச் சேர்ந்த மறுதினம் பங்கஜத்திற்கு அவனிடமிருந்து ஒரு தந்தி கிடைத்தது.
”உன் மனோபீஷ்டத்தை இன்று காலை நிறைவேற்றி விட்டேன். வீணாவுடன் புறப்பட்டு நாளை மாலை அங்கு வந்து சேருகிறேன்.”
– ஸ்ரீவத்ஸன்
தந்தியைப் படித்ததும் பங்கஜத்திற்கு அவளையும் அறியாமல் துக்கம் துக்கமாய் வந்தது. நன்றாக விம்மி அழுது தீர்த்தாள். பிறகு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, ”சீ இதென்ன பைத்தியக்காரத்தனம்! நானாகத்தானே அவரைத் தூண்டித் தூண்டி இன்னொரு பெண்ணை விவாகம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினேன்! இப்பொழுது ஏன் என் மனம் கிடந்து இப்படித் தவியாய்த் தவித்துத் துன்புறுகிறது? தெய்வமே, கடைசியில் என் மனத்தைத் தளரச் செய்து என்னைக் காட்டிக் கொடுத்துவிடாதே! என் கணவரின் சந்தோஷந்தானே எனது பாக்கியம்? பாவம், அந்த உத்தமசீலன் எனக்காக எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்? ஏன் இன்னமும்தான் பாடுபடுகிறார்! அவர் பொருட்டு இந்த அற்பத் தியாகத்தை மனமாரச் செய்யத்தக்க மன உறுதிகூட எனக்கு இல்லாவிட்டால் நானும் ஒரு மனுஷியாவேனா? தர்மபத்தினி என்ற பெயருக்கு அருகதை உள்ளவளாவேனா? ஈசவரா, என் புத்தி பேதிக்கும்படி செய்யாதே! உன்னைக் கெஞ்சி வேண்டிக் கொள்ளுகிறேன்!” என்று கடவுளைப் பிரார்த்தித்தாள்.
சில நிமிஷங்களுக்கெல்லாம் அவள் மனம் சிறிது சமாதானமடைந்தது. தந்தியை எடுத்து மற்றுமொரு முறை படித்துப் பார்த்தாள். ”வீணா! வீணா! எவ்வளவு இனிமையான பெயர்! பெயரைப்போல் அவளும் இனிமையான குணம் வாய்ந்தவளாகவே இருப்பாளென்று நம்புகிறேன்” என்று தனக்குள் கூறிக் கொண்டாள்.
கடந்த இரண்டு மாத காலமாய்ச் சுமாராய்த் தேறிக் குணமடைந்திருந்த அவளது சரீர நிலைமையை அன்றைய அதிர்ச்சி (தந்தி சமாசாரத்தினால் ஏற்பட்டது) பலமாய்ப் பாதித்து விட்டது. இருதயப் படபடப்பு அதிகமாகி, எழுந்திருக்கக்கூட சக்தியில்லாமல் படுத்து விட்டாள்.
மறுநாள் சாயந்தரம் மைசூரிலிருந்து வீணாவுடன் டாக்சியில் வந்திறங்கிய ஸ்ரீவத்ஸன், வீட்டு வாயிலில் நின்று கொண்டு பங்கஜம் தன்னை வரவேற்பாள் என்று எதிர்பார்த்தான். அவளை அங்கே காணாமல் பதைபதைத்த உள்ளத்துடன் வீணாவை ரேழி மூலையில் நிற்க வைத்துவிட்டுப் பங்கஜம் வழக்கமாய்ப் படுக்கும் அறையை நோக்கி ஓடினான்.
பங்கஜம் இலேசாகப் புன்னகை புரிந்துகொண்டே படுக்கையின்மேல் தன் முழங்கைகளை ஊன்றியபடி சிரமத்துடன் எழுந்திருக்கப் பார்த்தாள். ஸ்ரீவத்ஸன் ஒரே தாவலில் அவளைச் சமீபித்து, ”கண்மணீ, வேண்டாம்! எழுந்திருக்காதே! சும்மா படுத்துக் கொள். எப்போது முதல் உடம்பு சரியாக இல்லை? இப்படித்தானா உன் சக்களத்திக்கு வரவேற்பு அளிப்பது?” என்று வருத்தத்துடன் வினாவினான்.
250px-Veena
பங்கஜம் தன் கணவன் கேட்டதற்குப் பதில் அளிக்கவே இல்லை! யாரையோ ஆவலுடன் தேடுபவள்போல் அவன் கண்கள் அறையின் வாயிற்படிக்கு அப்பால் சுழன்று அலைந்தன. ”எங்கே வீணா? கூடவே அழைத்து வருவதாகத் தந்தி கொடுத்தீர்களே!” என்று கேட்டாள் பதற்றத்துடன்.
”அவசரப்படாதே, பங்கஜம். வீணா வந்திருக்கிறாள். ரேழியில் நிற்க வைத்துவிட்டு வந்திருக்கிறேன். போய் அழைத்து வருகிறேன்” என்றுரைத்து வெளிப்புறம் வந்தான் ஸ்ரீவத்ஸன்.
பங்கஜத்தின் இதயத் துடிப்பு இப்பொழுது பன் மடங்கு அதிகரித்தது. அடக்க முடியாத ஆவலுடனும், இன்னதென்று விவரிக்க முடியாத ஒருவிதக் கலக்கமடைந்த உள்ளத்துடனும் தனது சக்களத்தியின் வருகையை எதிர்பார்த்தவண்ணம் படுத்திருந்தாள்.
ஸ்ரீவத்ஸன் மறுபடியும் பங்கஜத்தின் அறைக்குள் வந்தபொழுது பச்சை வர்ண உறையினால் மூடப்பட்டிருந்த ஒரு வீணையைத் தழுவித் தாங்கியபடி உள்ளே பிரவேசித்தான். வீணையின் சொந்தக்காரியான தனது சக்களத்தி பின்னாலேயே வருவாள் என்று எதிர்பார்த்த பங்கஜத்திற்குப் பெருத்த ஏமாற்றம் உண்டாயிற்று.
ஸ்ரீவத்ஸனுடைய மந்தஹாஸ வதனத்தில் இப்பொழுது குறும்புத்தனம் கூத்தாடியது. ஏதோ பெரிய காரியத்தைச் சாதித்துவிட்டவன்போல் வெற்றிப் பார்வையுடன் பங்கஜத்தைப் பார்த்தான். பங்கஜத்திற்கு ஒன்றுமே விளங்கவில்லை.
”வீணை அவளுடையதா? எங்கே அவள்” – பங்கஜத்தின் பேச்சில் மறுபடியும் அதே படபடப்பும் ஆவலும் ஒருங்கே த்வனித்தன.
ஸ்ரீவத்ஸன் வீணையைக் கீழே வைத்துவிட்டுத் தன் மனைவியின் அருகில் உட்கார்ந்தான்.
சாவதானமாய், ”பங்கஜம் இதோ இருக்கும் இந்த வீணைதான் அவள்! இந்த ‘வீணா’தான் உன் சக்களத்தி; உனக்கு இன்னும் புரியவில்லையா?” என்று சொல்லி வீட்டுக் கரைகாணா வாஞ்சையுடன் பங்கஜத்தின் வதனத்தை நிமிர்த்தித் தன் முகத்தை அதனுடன் சேர்த்தான். அவள் இதழ்களும் அவன் இதழ்களும் கூடிக் கலந்தன.
பங்கஜத்திற்கு இன்னும் விஷயம் சரியாக விளங்கவில்லை. சில வினாடிகள் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பவள் போல் தென்பட்டாள். பிறகு, ”அப்படியானால் நீங்கள் நேற்று இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளவில்லையா? பெண் பார்க்க தஞ்சாவூர் போனது, பெண் பிடிக்கவில்லையென்று திரும்பி வந்தது, பிறகு மைசூர் பெண்ணைப் பார்க்கப் போனது, அங்கிருந்து எனக்குத் தந்தி அடித்தது, இவையெல்லாம் சுத்தப் புரட்டா” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
”ஒரு விதத்தில் எல்லாம் பொய், மற்றொரு விதத்தில் நிஜம்! நான் தஞ்சாவூர் போய் வந்ததும், பிறகு மைசூர் போய் இன்று திரும்பி வந்ததும் என்னவோ வாஸ்தவந்தான்! ஆனால் பெண் பார்க்கப் போகவில்லை. தஞ்சாவூரில் தயாரிக்கப்படும் நல்ல வீணையொன்றை நேரில் பார்த்து வாங்கி வரலாமென்று அங்கே சென்றேன். ஆனால் அந்த ஊர் வீணை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லையானதால் வாங்காமல் திரும்பி வந்து விட்டேன். பிறகு என் குருவுடன் மைசூருக்குச் சென்று அவர் பரீட்சித்துச் சம்மதித்த பின் இந்தப் பழகிய வீணையை வாங்கிக் கொண்டு வந்தே சேர்ந்தேன்” என்றான் ஸ்ரீவத்ஸன்.
”உங்கள் குருவா? அவர் யார்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே! இதெல்லாம் என்ன கண்கட்டு வித்தை?”
கண்கட்டு வித்தையுமில்லை ஒன்றுமில்லை, கண்ணே! என் குருவைப்பற்றி நான் இவ்வளவு நாட்களாக உன்னிடம் சொல்லாமல் இருந்ததற்கு என்னை மன்னித்துவிடு. உனக்குப் பிரமாதமாய் உடம்புக்கு வந்து நீ அடிக்கடி படுத்த படுக்கையாய்க் கிடக்க ஆரம்பித்ததிலிருந்து என் மனத்திற்கும் அசாத்திய அலுப்பும் சோர்வும் ஏற்பட்டுவிட்டன. அதை மறந்திருப்பதற்காக நான் கடந்த மூன்று வருஷங்களாக ஒரு பிரபல வீணை வித்துவானிடம் ரகசியமாய் வீணை கற்று வருகிறேன். எனக்குத் திறமையுடன் வீணை வாசிக்க வந்த பிறகு, ஒரு நாள், இந்த உண்மையை உன்னிடம் வெளியிட்டு உன்னை அதி ஆச்சரியத்தில் மூழ்கடிக்க வேண்டுமென்று உத்தேசித்திருந்தேன். பிரதி தினமும் மாலை, ஆபீஸ் வேலை முடிந்ததும் நேரே அந்த வித்துவான் வீட்டிற்குச் சென்று ஒரு மணி நேரம் அவரிடம் சிக்ஷை பெற்றுப் பிறகு வீட்டிற்குத் திரும்பும் பழக்கத்தை வைத்துக்கொண்டிருந்தேன். விடுமுறை தினங்களில்கூட ஆபீசில் ‘ஸ்பெஷல் வொர்க்’ இருக்கிறதென்று உன்னிடம் புளுகிவிட்டுப் போய்க் கொண்டிருந்தேனே, அதெல்லாம் வீணை பயிலுவதற்காகத்தான். எனக்கு ஏற்கனவே சங்கீதத்தில் அபார ஆசையும் கொஞ்சம் ஞானமும் இருந்தபடியால் என் குரு எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே நான் இந்த மூன்று வருஷத்திற்குள் வீணை வாசிப்பதில் தேர்ச்சி அடைந்துவிட்டேன். இது நிற்க, சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் நீ திடீரென்று இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளும்படி என்னை வற்புறுத்தியபொழுது எனக்கு இந்த வேடிக்கையான எண்ணம் எப்படியோ உதித்தது. அதாவது, உன் இஷ்டப்படியே நான் வேறு கல்யாணம் செய்து கொள்வதாக உன்னிடம் கூறிவிட்டு, ஒரு நாள் திடீரென்று ஒரு நல்ல வீணையை வாங்கிக் கொண்டு வந்து உன் எதிரில் காட்சியளித்து, ”இவள்தான் உன் சக்களத்தி. என் இரண்டாம் மனைவி என்பதாக உன்னிடம் அறிமுகப்படுத்த நினைத்திருந்தேன். அவ்விதமே இன்று செய்து விட்டேன். பங்கஜம், என் செல்வமே, என் இதய பீடத்தில் உன் ஒருத்திக்குத்தான் ஸ்தானம் உண்டு. அதில் இன்னொருத்தி வந்து ஆக்கிரமிக்க என் மனம் ஒரு நாளும் சம்மதிக்காது. இது சத்தியம்!” என்று ஆவேசத்துடன் புகன்று பங்கஜத்தை இறுகத் தழுவி முத்தமிட்டான் ஸ்ரீவத்ஸன்.
”கடைசியில் என்னை இவ்விதம் ஏமாற்றிவிட்டீர்களே! நான் கொண்டிருந்த உன்னத லட்சியம் அநியாயமாய்ச் சிதைந்து போயிற்றே!” என்று உதட்டைப் பிதுக்கினாள் பங்கஜம்.
”பங்கஜம், நான் உன்னை ஏமாற்றவில்லை! நீயாகத்தான் ஏமாந்து போனாய்! உன் அந்தராத்மாவைக் கேட்டுப் பார்! அது உனக்குச் சரியான விடையளிக்கும்!”
பங்கஜம் வெட்கித் தலை குனிந்தாள். கண்களில் நீர் ததும்ப, ”ஆம், நீங்கள் சொல்வது முற்றும் மெய்தான்! என் திடசித்தத்திலும் தியாக புத்தியிலும் அபார நம்பிக்கை வைத்துக் கடைசியில் ஏமாந்து போனேன். உங்களிடம் என் தோல்வியை ஒப்புக் கொள்வதில் எனக்குக் கொஞ்சமும் அவமானம் இல்லை! உங்கள் தந்தியை நேற்றுப் படித்தவுடன் என் மன உறுதியெல்லாம் சிதறிப்போய் இடி விழுந்தவள்போல் ஆகிவிட்டேன். பலே பேர்வழி நீங்கள்! நல்ல நாடகம் நடித்தீர்கள்! ஆனால் எனக்கு இன்னுங்கூடச் சந்தேகந்தான். உங்கள் ஜாதகரீதிப்படி உங்களுக்கு உபயகளத்திரப் பிராப்தம் இருக்கிறதே! ஜாதகம் பொய் சொல்லுமா?” என்றாள்.
”நம் வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் ஜாதகரீதிப்படிதான் நடக்கின்றனவா? ஜாதகம் கணிப்பதில் எவ்வளவோ தவறுகள் ஏற்படுகின்றன. அப்படித் தப்பாய்க் கணிக்கப்பட்ட ஜாதகத்தைப் பார்த்துக் கூறப்படும் பலன்களும் தப்பாகத்தானே இருக்கும்? எனக்கு என்றைக்குமே ஜாதகத்திலும், ஜோசியத்திலும் நம்பிக்கை இல்லை. நீயும் இந்த ‘உபய களத்திர’ யோசனையை விட்டு ஒழி. எனக்கு மன உற்சாகமும் ஆனந்தமும் ஏற்பட வேண்டுமென்றுதானே நீ என்னை மறு விவாகம் செய்து கொள்ளும்படி தூண்டினாய். அவை இரண்டையும் நான் இப்பொழுது வீணை வாசிக்கும் சமயத்தில் பரிபூரணமாய் அனுபவித்து வருகிறேன். நீயும் ஒரு சங்கீதப் பித்துத்தானே. என் வீணா கானத்தைக் கேட்டு நீயும் ரசித்து இன்புறுவாய் என்று நம்புகிறேன். இதோ பார். இப்பொழுது உன் எதிரிலேயே உன் சக்களத்தி வீணாவோடு கொஞ்சிக் குலாவப் போகிறேன். நீ ஏற்கனவே எனக்கு வாக்களித்தபடி பொறாமைப்படாமல் இருக்க வேண்டும் தெரியுமா?” என்று கண் சிமிட்டிக் கொண்டே கூறிவிட்டு அந்த அழகான மைசூர் வீணையை உறையை விட்டு எடுத்துச் சுருதி கூட்டினான்.
ஸ்ரீவத்ஸகுடைய விரல்களால் பிரேமையுடன் வருடிக் கொஞ்சப்பட்ட ‘வீணா’வின் தேகத்தினின்று கணீரென்று வெளிக் கிளம்பிய ‘சுந்தரி நீ திவ்யரூப’ என்ற கல்யாணி ராக கீர்த்தனை, பங்கஜத்தை இனிமையான நாத வெள்ளத்தில் மிதக்கச் செய்தது. அவளுடைய உள்ளத்தில் என்றுமில்லாத சாந்தி நிறைந்தது. அவளுடைய நீண்ட நேத்திரங்களில் ஆனந்த புஷ்பம் துளிர்த்தது.
***
கமலா பத்மநாபன்
(1913 – 1945)
தஞ்சாவூரைச் சேர்ந்த டெபுடி கலெக்டரான, பிரம்மஞான சபையைச் சார்ந்த டி.வி.கோபாலசாமி ஐயரின் பேத்தி. சங்கீதத்திலும் தத்துவத்திலும் தேர்ச்சி பெற்றவர். வயலின் கற்றிருந்தார். முதலில் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கினாலும், அவரின் பெரும் கவனம் தமிழின் மீதே இருந்தது.
இருதய நோயால் பாதிக்கப்பட்ட இவர் இளம் வயதில் (32) இயற்கை எய்தினார். 1933ல் இருந்து 1942 வரை சுமார் பத்து வருடங்களில் இவரின் படைப்பாற்றல் வியக்க வைப்பவை.
எழுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்து குறு நாவல்கள் மற்றும் குறிப்பிடத்தக்க இதழ்களான பாரதமணி, ஜகன் மோகினி, கலைமகள், சுதேசமித்திரன் போன்றவற்றில் கட்டுரைகளும் குறிப்புகளும் எழுதியவர். அவரின் காலத்தில் புரட்சிகரமான கருத்துகளைக் கொண்டவராக மதிக்கப்பட்டவர்.