தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,586 
 

காலை நேரம்.
வீடு பரபரப்பாக இருந்தது. கணவன் – மனைவி இருவரும், வேலைக்கு கிளம்ப வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு போக வேண்டும். 8:30 மணிக்குள் இதெல்லாம் நடந்தாக வேண்டும்.
மாலினி வழக்கம் போல், 5:30 மணிக்கு எழுந்து, குளித்து, சமையல் வேலை துவங்கியிருந்தாள். பரத் எழுந்து, குழந்தைகளை எழுப்பும் வேலையை செய்தான். சாமிநாதன் விழித்தெழுந்து, பால் வாங்கிவர கிளம்பினார்.
அவர் தெருவில் இறங்கி மறைந்ததும், பரத்திடம் வந்தாள் மாலினி.
“”உங்க அப்பாகிட்ட நீங்க பேசறீங்களா… நான் பேசட்டுமா?” என்று கேட்டாள்.
“”என்ன காலங்காத்தால…”
“”ஆமாம்… இப்ப பேசினால் காலங்காத் தால. ராத்திரி பேசினால் என்ன நடு ராத்திரியில. பிறகு எப்பதான் பேசறதாம்?” குரல் உயர்த்தினாள்.
“”சரி… நானே பேசறேன்.”
இதுவும் ஒரு சேவைதான்!“”வழ வழ கொழ கொழன்னு பேசக்கூடாது. கொஞ்சம் கண்டிஷனா பேசுங்க. அவர் பண்ற காரியத்தால், எத்தனை இடைஞ்சல் வருதுன்னு சொல்லுங்க. இப்படியே போனால், ஒரு நாள் வீட்ல திருட்டு போனாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.
“”அப்புறம் அய்யோன்னா வருமா; அம்மான்னா வருமா… இவருக்கு இந்த வீட்ல என்ன குறை, காபி, டிபன், சாப்பாடு, பேப்பர், “டிவி’ன்னு எத்தனை வசதிகள். அனுபவிச்சுகிட்டு, அக்கடான்னு கிடக்காம, எதுக்கு பக்கத்து தெருவுக்கு காவடி எடுக்கிறார்?
“”வீட்டை விட்டு, ஒரு நாள் போல அங்க ஏன் ஓடறார். அவங்களுக்கும், நமக்கும் ஒட்டா, உறவா? இங்க என் தரப்பு மனுசங்க வர்றதே அபூர்வம். வர்றவங்களையும் வரவேற்க ஆளில்லாமல், வீடு பூட்டி கிடந்தால் எப்படி?
“”பெங்களூருவிலிருந்து வந்த என் பெரியம்மா, வெயில்ல அரை மணி நேரமா வாசல்ல காத்துக்கிட்டிருந்திருக்காங்க. உன்னை பார்க்க வந்ததுக்கு தண்டனையாங்கறாங்க; தேவையா?”
“”அதான் அப்பாகிட்ட பேசறேன்னு சொல்லிட்டேன்ல. அடுப்புல ஏதோ தீயுது பார்,” என்றான். “”க்கும்…” என முனகிக்கொண்டு போனாள் மாலினி.
பாலை மருமகளிடம் கொடுத்துவிட்டு, குழந்தைகளை குளிப்பாட்டி, தானும் குளித்து, வேட்டியை மாற்றிக் கொண்டு வந்தார் சாமிநாதன். குழந்தைகளின் புத்தகப் பையை சரிப்படுத்தினார். “”காபி கலக்கவா…” என்று மாலினி கேட்க, “”நான் அப்புறம் குடிச்சுக்கிறேன். நீங்க கிளம்பற வழியை பாருங்க. நேரமாகுதுல்ல,” என்றார்.
“”நேரமாகுறது எங்களுக்கா, உங்களுக்கா?” என்று கேட்டாள்.
“”எனக்கென்ன அவசரம்? எந்த ஆபீசுக்கு ஓடப் போறேன். வீட்ல இருக்கறவன் எப்ப குடிச்சா என்ன?” என்றார்.
“”வீட்டில் இருந்தால் தான் பிரச்னையில்லையே. நாங்கள் இந்த பக்கம் கிளம்பினதும், வீட்டை பூட்டிகிட்டு, நீங்க அந்த பக்கம் கிளம்பிடறீங்களே…” என்றான் மகனும்.
சாமிநாதன் நிதானித்தார்.
“”என்னடா சொல்ற…”
“”ஆமாம்ப்பா… நீங்க வீட்டை அம்போன்னு விட்டுட்டு, பக்கத்து தெருவுக்கு போயிடறிங்க. இங்கே யாராவது வந்தாலும், பதில் சொல்ல ஆள் இருக்கிறதில்லை. வேணும்ன்னா, அந்த பெரியவரை இங்கே வரவழைச்சு பேசிக்கிட்டிருங்க. இனியும், நீங்க அங்க போய்க்கிட்டிருக்காதிங்க. உங்க நல்லதுக்காகவும் தான் சொல்றேன்,” என்றான் தீர்மானமாக.
எதையோ சொல்ல வாயெடுத்த சாமிநாதன், நிறுத்திக் கொண்டு வேலைகளை கவனித்தார்.
பள்ளி வேன் வந்தது. குழந்தைகளை ஏற்றி அனுப்பினார். சிறிது நேரத்தில் பரத்தும், மாலினியும் கிளம்பினர்.
“”சொன்னது நினைவிருக்கட்டும் அப்பா,” என்று சொல்லி, பைக் எடுத்தான்.
அவர்கள் போனதும், சாமிநாதன் வேகமாக செயல்பட்டார். காபியை கலக்கி ப்ளாஸ்க்கில் ஊற்றிக் கொண்டார். டிபனை பொட்டலமாக கட்டிக் கொண்டார். அன்றைய நியூஸ் பேப்பரை சுருட்டி, வீட்டை பூட்டிவிட்டு, வெளியில் வந்தார். பக்கத்து வீட்டில் சாவி கொடுத்தார்.
“”ஏதாவது செய்தின்னா எனக்கு மெசேஜ் அனுப்புங்க. வந்திடறேன்,” என்று சொல்லிவிட்டு நடந்தார்.
அது பழைய வீடு. வீட்டுக்குள் ஆட்கள் இருக்கின்றனரா என்று சந்தேகப்படும் அளவுக்கு, அமைதியாக இருந்தது. சாமிநாதன் வருகைக்காக, ஒரு குழந்தை மாதிரி ஏக்கத்துடன் கேட் அருகிலேயே நின்று கொண்டிருந்தார் வெங்கட்ராமன்.
சாமிநாதன் வயது தான் அவருக்கும். ரிடையராகி, சில ஆண்டுகள் தான் ஆகிறது.
80 வயதானவர் போல் தளர்ந்திருந்தார். அவர், சூன்யத்தில் சிக்கிக் கொண்டவர் போல் இருந்தார். சாமிநாதனை, தெரு முனையில் பார்த்ததும், வெங்கட்ராமன் முகத்தில் ஒரு புன்னகை.
“”என்ன வெங்கட்… வாசலுக்கே வந்துட்ட… லேட் பண்ணிட்டனா?”
“”நீயாவது லேட்டாகிறதாவது… பங்க்சுவாலிடியில உன்னை அடிச்சுக்க முடியுமா?” என்று, கேட்டை திறந்து விட்டார்.
உள்ளே போய் சோபாவில் உட்கார்ந்து, கொண்டு வந்த பொருட்களை பரப்பினார்.
“”நீ என்ன பண்ணி வச்சிருக்கே வெங்கட்?”
“”உப்புமா கிண்டினேன். உன்னை தான் பார்த்துகிட்டிருந்தேன்.”
“”பேஷ்… நான் பொங்கல் கொண்டு வந்திருக்கேன். எக்சேஞ்ச் பண்ணிக்குவம். காபி முதல்ல…” என்று ப்ளாஸ்க்கை திறந்தார். சுடச்சுட காபி குடித்தனர். சேர்ந்து டிபன் சாப்பிட்டனர். பேப்பர் படிக்கத் துவங்கினர். அதில் வந்த செய்திகளை, விமர்சனம் செய்தனர். கலகலப்பாக நேரம் ஓடியது.
ஏதோ, நினைத்துக் கொண்டவர் போல, “”சாமி… உனக்கு இங்கே வந்து போறதிலே சிரமம் ஒண்ணுமில்லையே?” என்று கேட்டார் வெங்கட்ராமன்.
“”என்ன சிரமம்… நான் வெளியூரில் இருந்தா வரப் போறேன். பக்கத்து தெரு!”
“”தொலைவைச் சொல்லலை. நான் தனிக்கட்டை. கேட்க நாதி இல்லை. நீ அப்படி இல்லை. குடும்பம் இருக்கு; வேலைகள் இருக்கும். மகனோ, மருமகளோ ஏதும் கேட்கறாங்களா?”
“”ஓ கேட்கறாங்களே… அந்த அங்கிள் வீட்டுக்கு இன்னும் கிளம்பாமல் என்ன பண்றீங்கன்னு கேட்கறாங்க. வீட்ல, வெட்டுவெட்டுன்னு இருக்கிறதுக்கு, நான் இங்க வந்து பொழுதை கழிச்சுட்டு போறதில் அவங்களுக்கு ஒரு ஆட்சேபமும் இல்லை.”
“”என் மேல உனக்கு அனுதாபம் சாமி… அதனால கிளம்பி வந்துடற. ஒரு கடமை மாதிரி செய்யற. உன்னை கஷ்டப்படுத்தறேனோன்னு தோணுது. ஆனால், எனக்கு நீ வந்து போறது, ஆறுதலா இருக்கு. கொஞ்சம் தெம்பாவும் இருக்கு. எல்லாம் கைவிட்ட நிலையில், கடவுளா பார்த்து எனக்கு கொடுத்த துணை.”
“”உணர்ச்சி வசப்படாத வெங்கட். கடவுள் யாரையும் கைவிடறதில்லை. உன்னோடு நேரம் கழிக்கறதுல எனக்கும் சந்தோஷம் தான். நீ அனாவசியமா கவலைப்பட்டுக்கற. உனக்கு கிடைச்சிருக்கிற இந்த தனிமை வாழ்க்கைய, ஒரு தவ வாழ்க்கையா நினைச்சுக்க. இந்த ஏகாந்தம் உனக்கு பிடிச்சு போகும். உனக்குன்னு ஒரு ஹாபியை உருவாக்கிக்க. பாட்டு கத்துக்க. ஜோதிடம் கத்துக்க. புது மொழி கத்துக்க. லைப் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்,” என்றார் சாமிநாதன்.
“”நான் எதைத் தான் பழகி வச்சிருக்கேன். ஏமாற்றத்தைத் தவிர?” என்று யோசனையில் விழுந்தார்.
“”மறுபடியும், கவலை எனும் புதை குழியில் சிக்காதே வெங்கட். கவலைப்படுவது கூட ஒரு போதைதான். அதுக்கு எல்லையே இல்லை. குடிக்கறதுக்கு ஏதாவது காரணம் கிடைக்கிறது போல, கவலைப்படறதுக்கும் காரணங்கள் கிடைச்சு கிட்டிருக்கும். மேலே வந்துடு. சிரிக்க கத்துக்கோ. கெக்கபெக்கேன்னு சிரி. பைத்தியக்காரத்தனமா தெரிஞ்சாலும், பைத்தியமாக ஆகாம இருக்கறதுக்கு, சிரிப்பு நல்ல மருந்து. நாளைக்கு வரும்போது, சிரிப்பு அரை கிலோ வாங்கி வர்றேன்,” என்றார்.
வெங்கட்ராமனுக்கு சிரிப்பு வந்தது. அவர்கள் சிரிக்கும் நேரம்தான், பரத் வந்தான்.
அங்கு மகனை எதிர்பார்க்காத சாமிநாதன், கொஞ்சம் திகைத்து, “”வா, பரத்…” என்று அழைத்தார்.
“”முதல்ல நீங்க வெளியில் வாங்க,” என்றான் கடுமையாக.
“”ஏன் பரத்… படிச்சவந்தானே நீ. இப்படிதான் இங்கிதமில்லாமல் நடந்துக்கறதா. உன் செய்கையால், வெங்கட்டுக்கு எத்தனை மன உளைச்சல் உண்டாகியிருக்கும் தெரியுமா?”
“”உங்க செய்கையால், எனக்கு எத்தனை மன உளைச்சல்ன்னு முதல்ல தெரிஞ்சுக்குங்க. காலைல அவ்வளவு சொல்லியும், நீங்க வழக்கம் போல வீட்டை விட்டு போய்ட்டீங்க. வேணும்ன்னா அந்த பெரியவரை இங்க வரவழைச்சு, பேசிகிட்டிருங்கன்னு சொன்னதையும் காதுல போட்டுக்கலை.”
“”அவன் வர்றதாயிருந்தால், நான், ஏன் அங்க போறேன். பரத் உனக்கு தெரியாதுடா, வாழ்ந்து கெட்டவன் மன நிலை. பேருக்கு தான் உயிர் ஊசாலாடிக்கிட்டிருக்குமே தவிர, அவன் ஒரு செத்த பிணம்டா…
“”வெங்கட், இப்ப அப்படிதானாயிட்டான். வெளியில் தலை காட்றதில்லை. யாரைப் பார்க்கவும் கூச்சம். கீழ விழுந்தவனை கைதூக்கி விடறவங்களை விட, அவனுக்காக தொலைவில் நின்னு அனுதாபப் படறவங்கதான் ஏராளம். அந்த அனுதாபமே, சம்பந்தப்பட்டவனை நோகடிக்கும் அம்புகளாய் மாறிடுது.
“”வெங்கட்ராமன், ஒரு நேரத்தில் வசதியா வாழ்ந்தவன். பெரிய சம்பளத்தில் வேலை பார்த்தவன். வீட்டில் எப்போதும் உலை கொதித்துக் கொண்டே இருக்கும். தெரிஞ்சவங்க, தெரியாதவங்கன்னு பேதமில்லாம, வர்றவங்களுக்கெல்லாம் சாப்பாடு, கைச்செலவுக்கு பணம்ன்னு அள்ளி விடுவான்.
“”அவனால், உதவி பெற்று, படிச்சு மேலே வந்தவங்க நிறைய. உறவுன்னு சொல்லிகிட்டு, கடன், கைமாத்துன்னு கணக்கில்லாம வாங்கிக்கிட்டு போனவங்க நிறைய பேர். அளவுக்கு அதிகமா பணத்தை இறைச்சுட்டதால, வீட்டு பொருளாதாரம் சுருங்கிடுச்சு.
“”அப்புறம் குடும்பத்தில் குழப்பம் வந்தது. பிள்ளைங்களுக்குள் சண்டை, சச்சரவு. பாகப் பிரிவினை. ரிடையராவதற்குள் எல்லாம் காலி. ஓட்டாண்டியாயிட்ட மனுஷனை, அவர் மனைவி கூட கை விட்டுட்டாள்… ஆமாம்… இறந்து போயிட்டாள். பையன்கள், அவனவன் குடும்பத்தை பார்த்துகிட்டு போய்ட்டாங்க; தொடர்பில்லை. பணம் கையில் இருக்கும் போது வந்த கூட்டம் எல்லாம், அற்ற குளத்து அறுநீர் பறவைகள் போல், இப்ப அவன் தனி மரம்…
“”பென்ஷன் பணத்துல, தானே பொங்கி தின்னுகிட்டு, ஏகாந்தத்துல பரிதாபமா உட்கார்ந்திருக்கான். நல்லா இருந்த காலத்தை நினைச்சு பார்த்து, உள்ளுக்குள் ஏங்கிப் போறான்.
“”நாம ரொம்ப காலமா வெளியூர்ல இருந்துட்டதால, இங்க நடந்ததெல்லாம் தெரியல. இங்கே வந்த பின், ஒரு நாள் வெங்கட் நினைவு வந்து தேடிப்போன போது, அந்த பரிதாபத்தை பார்த்தேன்.
என்னைப் பார்த்ததும், குழந்தை மாதிரி ஒரு துள்ளல், மகிழ்ச்சி…
“”என் வருகை, அவனுக்கு சந்தோஷத்தை தருது. கொஞ்ச நேரம், பேசிகிட்டிருக்கறபோது, அவன் பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டு, கொஞ்சமாவது ரிலாக்சா இருக்கான். என்னால, அவனுக்கு ஆறுதல் கொடுக்க முடியுதுன்னு நினைக்கும் போது, எனக்கே சந்தோஷமாயிருக்கு. இது, என் பால்ய நண்பனுக்கு செய்யற சேவைன்னு நினைக்கறேண்டா பரத். தப்பா சொல்லு?” என்று கேட்டார்.
ஒன்றும் சொல்லாமல், கதவை திறந்து உள்ளே போன பரத், வீட்டில் மறந்து வைத்துவிட்ட பைலை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான்.
“”வாங்க அப்பா போகலாம்!” என்றான்.
எங்கே என்று கேட்காமல், பைக்கில் அமர்ந்தார்.
அவன் பக்கத்து தெருவில் உள்ள வெங்கட்ராமன் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி, “”இறங்கிக்குங்க,” என்றான்.
“”ரொம்ப நன்றிடா!” என்று இறங்கிக் கொண்டார்.
பைக் போனதும், “”வெங்கட்ராமா…” என்று அழைத்துக் கொண்டே உள்ளே போனார்.
“”பயந்துட்டேன்… உன் பையன் கோவிச்சுக்கிட்டானோ… இனி, உன்னை அனுப்ப மாட்டானோன்னு…”
“”என்னால, உனக்கு இடைஞ்சல்ன்னு நினைச்சுகிட்டுதான், என்மேல் கோபப்பட்டான். “அப்படி இல்லை… ரெண்டு பேரும் பேசி அரட்டை அடிச்சுகிட்டு சந்தோஷமாதான் பொழுது போக்கறோம்…’ன்னு சொல்லி, புரிய வச்சேன். அப்படின்னா சரின்னு, கொண்டு வந்து விட்டுட்டுப் போறான். பேப்பர் படிக்கலாமா; சதுரங்கம் ஆடலாமா?”
“”பேப்பர்ல எப்பவும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு… சதுரங்கம் ஆடலாம்,” என்று செஸ் போர்டு கொண்டு வந்தார் வெங்கட்ராமன்.அடுத்து வந்த நிமிடங்களில், யானைகளும், குதிரைகளும் இங்கும், அங்கும் நகரத் துவங்கின.

– மா. இந்திரகுமார் (செப்டம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *