கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 9,812 
 
 

(கிளிநொச்சிபிராந்திய கிராமம்-இலங்கை)

அது ஒரு சாதாரண மாலைப் பொழுது.கணேஸ் மாஸ்டர் தனது சின்ன மகள் மாலதிக்கு அ,ஆ.இ சொல்லிக் கொண்டிருந்தார்.மனைவி குசினியில் சமைத்துக்கொண்டிருந்தாள்.அவர்களின் கேற்றைத் திறந்துகொண்டு யாரோ வருவது போலிருந்தது.மாஸ்டர் தனது படிப்பித்தலை நிறுத்திக்கொண்டு வந்தவர்களை நிமிர்ந்து பார்த்தார்.

நான்குபேர் வந்து நின்றார்கள் அவர்களில் மூவர் துப்பாக்கி வைத்திருந்தார்கள் நாலாவது பேர்வழி அவர்களுக்குத் தலைவர்கள்போல் எடுப்பாக நின்றான்.அவன் துப்பாக்கி கையிலில்லாமல் இடுப்பிற் சொருகப் பட்டிருந்தது.

அவன் மாஸ்டரைப் பார்த்துப் புன்னகைத்தான். புன்னகை போலி என்ற அப்படமாகத் தெரிந்தது.

‘மாஸ்டர் உங்களோட கதைக்கவேண்டும் ‘என்றான். அவன் குரல்,அவரிடம் கதைக்கவேண்டும் என்பதை ஒரு உத்தரவாக ஒலித்தது.

உள்ளுக்குச் சமையல் செய்த மனைவி கருணாவும்;, படித்துக் கொண்டிருந்த அவரின் பத்து வயது மகன் சீலனும் வெளியே வந்து ஹோலின ;ஓரமாக நின்றார்கள்.

மகள் மாலதி சட்டென்று எழுந்து ஓடிப்போய்த்தாயின் பின்னால் மறைந்து கொண்டாள்.

மாஸ்டர் அவர்களை ஏறிட்டுப் பார்த்தர். வந்திருந்த மூவருக்குப் பதினான்கு அல்லது பதினைந்து வயதாகவிருக்கலாம். அதில் ஒருத்தன் இவரைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். மாஸ்டருக்கு, அந்த முகத்தை எங்கேயோ பார்த்த மாதிரியிருந்தது. ஆனால் இருட்டு நேரத்தில் ஒன்றையும் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.

மாஸ்டர் தான் போட்டிருந்த கண்ணாடியைக் கழட்டித் தன் வேட்டிமுனையாற் துடைத்துக்கொண்டார். ‘ஒரு இருபது நிமிசம் கதைக்கவேண்டும்’.வந்திருந்தவர்கள் தலைவனாகத் தெரிந்தவன் சொன்னான்.

இவர்கள் ‘கதைக்கக்’ கூட்டிக்கொண்டுபோன யாரும் திரும்பி வந்த ஞாபகம் அவருக்கில்லை.

‘இருட்டாக் கிடக்கு….இஞ்ச வைத்துக் கதைத்தால் என்ன?’ தனது பயத்தைக் காட்டாமல் மாஸ்டர் சாதாரண குரலில் வினவினார்.

‘வீணாக நேரத்தை மினக் கெடுத்தவேண்டாம் மாஸ்டர்’ வந்திருந்த ‘தலைவனின்’ குரலில் கடினம்.

மாஸ்டர் அவரின் மனைவியைத் திரும்பிப் பார்த்தார். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளம்போல் வழிந்து கொண்டிருந்தது.

மகன் சீலன் சூனியமான பார்வையுடன் தன் முன்னால் மேடையேறும் நாடகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றான். ஐந்து வயது மகள் மாலதி, ஆடிக்கொண்டிருக்கும் தனது முன் பல்லைத் தன் நாக்காற் தட்டிக்கொண்டு தாயின் பின்னால் மறைந்திருந்து,வந்திருந்தவர்களைப்பயத்துடன்; சாடையாக எட்டிப் பார்த்தாள்.

‘மருந்தை எடுத்துக்கொண்டு போங்கோ’ மனைவி அவசரமாகச் சொன்னாள். மாஸ்டர் இனிப்பு வியாதிக்காரன் ஒழுங்காக மருந்தெடுக்காவிட்டால் அவருக்கு மயக்கம் வந்து விடும்.

‘நாங்க கெதியா அவரைக் கொண்டு வந்து விடுவம்’ தலைவன் முன்செல்ல, மாஸ்டருக்குப் பின்னால் மூன்று துப்பாக்கி தூக்கிகளும் தொடர்ந்தார்கள். வெண்ணிலவு இந்தத் துப்பாக்கி தூக்கிகளைக் கண்டு முகில்களுக்குள் ஒளிந்து கொண்டது.

மெல்லிய காற்றுப் பனைவடலியின் மென்னசைவில் தனது துயரத்தை வெளியிட்டது.தனது வீட்டுக் கேற்றடிக்கு வந்ததும் தனது குடும்பத்தைத் திரும்பிப் பார்த்தார். மனைவி முந்தானையை வாயில் வைத்து,குழந்தைகளுக்குக் கேட்காமல் அழுது கொண்டிருந்தாள்.

தாய்க்குப் பக்கத்தில் நின்ற மகன் சீலனைக் காணவில்லை. மகனுக்குப் பத்து வயதென்றாலும், அக்கம் பக்கங்களில் நடக்கும் பயங்கரங்களைத் தெரியாதவனல்ல.

தனது குடும்பத்தின் உருவங்கள் பார்வையிலிருந்து மறைந்ததும் அவர்களுக்கும் அவருக்குமுள்ள தூரம் விரிகிறது. அவர்களுக்கு இனி யார் துணை?அவர்களுக்கு இனி யார் துணை? அவர் பல தடவை அந்தக் கேள்வியைத் தனக்குள் கேட்டுக் கொள்கிறார்.

பிறந்த மண்ணில் வாழமுடியாத அவல நிலையில் ஊரை விட்டோடிய தமிழர்களில் ஒருத்தனான அவரது சினேகிதன்,’ கணேஸ், பேய் அரசாட்சி செய்யும்போது பிணம் தின்னிகள் தெருவில் அலையும்.. எப்படியும் இந்த ஊரை விட்டு ஓடப்பார்’என்று சொன்னான்.

மாஸ்டருக்குக் குடும்பத்துடன் வெளிநாடு செல்ல வசதி கிடையாது. அத்துடன் அவர் யாருக்கும் எந்தத் தீமையும் செய்யாதவர். நேர்மையான,பண்பான, இரக்கமான,மனிதத்தைக் கௌரவிக்கும் ஆசிரியர் என்று பெயர் எடுத்தவர்.’ நிலவுக்குப் பயந்து பரதேசம் போகமுடியுமா? நான் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லையே?’ என்ற நண்பனிடம் வேதாந்தம் பேசினார் மாஸ்டர்.

உலகம் வியக்கும் வகையில், தமிழ்ப் பகுதிகளில் நடக்கும் மாற்றங்களைக் கண்டு,அவரின் நாற்பது வயதுக்கிடையில்,நானூறு வருட அனுபவம் கண்ட முதிர்ச்சி மனப் பான்மை கொண்டவர் மாஸ்டர். பிறந்தவன் இறப்பு வரும் வரைக்கும் வாழந்து தொலைக்கவேண்டும் என்ற விரக்தியுடன் வாழும் தமிழர்களில் அவரும் ஒருத்தர்.

‘வாழ்ந்து தொலைக்கவேண்டும்’ என்ற கடினமான வார்த்தைகளின்; பரிமாணத்தைப் பல பயங்கர அனுபவங்களுடன் சேர்த்து வாழப்பழகப்பட்வர்களில் அவரும் ஒருத்தன்.அத்துடன் அவருக்குத் தான் பிறந்த மண்ணில் மிகவும் விரும்பம் சின்ன வயதில் ஓடித்திரிந்த பனைவடலியின் மெல்லிய தென்றலில் அன்புத் தடவலில் வளர்ந்தவர் அவர். அந்த இனிய நினைவுகள் அவரை அந்த மண்ணுடன் இறுக்கி வைத்திருந்தது.அந்த இனிய நினைவுகள் பவித்திரமானவை. ஆனாலும், நேற்று ருசித்த இனிப்பு இன்று வாய்க்கு வராது என்ற தத்துவத்தையும் உணர்ந்து கொண்டவர் அவர்.

அவரை ஏற்றிக் கொண்டு போகும் வெள்ளை வாகனம்,அவருக்குப் பரிச்சயமான பனைவடலிகளைத் தாண்டி ஏதோ ஒரு ஊருக்குள்ளால் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வாகனத்திற்குள் இன்னும் சிலர் இருப்பது இருட்டின் மங்கிய வெளிச்சத்தில் தெரிகிறது. அவர்களின் முகத்தை அந்த இருளில்,அவராற் பார்க்க முடியவில்லை. பார்த்தாலும் அவர்களின் முகத்தில் எந்தவிதமான ‘உயிர்ப்பும்’ இருக்குமென்ற அவர் நினைக்கவில்லை. இருண்ட முகங்களில் வெறும் மரண பயத்தையும், திகிலையும்தான் காணமுடியும் என்று அவர் நினைத்துக் கொண்டார்..

தமிழர்கள் தமிழர்களை மிருகங்களாக நடத்தும் பரிபாலனசபையில் அவர்கள் ஒரு வெற்றுத் தசைப் பிண்டங்களா?. அவருக்கு முன்னாலிருந்தவரின் முகத்தில் இரத்தம் வழிந்து கிடப்பது சாடையான வெளிச்சத்தில் சட்டென்று தெரிகிறது. அவரின் மகள் மாலதிக்கு, அவளின் பாற் பற்கள் ஆடுகின்றன. அதை அவள் நாக்காற் தட்டிக் கழட்டப் பார்க்கிறாள்..அல்லது, பல் ஆடும்போது,நரம்பில் உண்டாகும் சிறு அழர்ச்சியின் அதிர்ச்சியான வேதனையால் சிலவேளைகளில் அழுகிறாள், சிலவேளைகளில், தனது பல்லையாட்டினால் வேதனை தரும் என்ற தெரிந்து கொண்டும் ஆட்டிப் பார்த்துத் தன் வேதனையைத் தாங்கிக் கொண்டு சந்தோசப் படுகிறாள்.

தனது பல் கழன்று விழும்போது இரத்தம் வருமா என்று கேட்டாள்.

வுண்டிக்;குள் படிந்த சாடையான இருளுடன்,அவர் கண்கள் பழக்கம் கொண்டபோது, இரத்தம் வழிந்து கொண்டிருப்பவரின் முன் பற்கள் இருந்த இடம் வெறுமையாக இருப்பது தெரிந்தது. வயது வராத மாலதியின் நாக்கின் விளையாட்டால்,அவள் பற்கள் நர்த்தனம் ஆடுவதுபோல், மாஸ்டருக்கு முன்னாலிருப்பவரின் பற்களும், துப்பாக்கி தூக்கிகளான,வயது வராப்போர்வீரர்களின்’வீர விளையாட்டிலும்’ பலியாகியிருக்கலாம்.

வுண்டியில் இருந்த ஒருத்தரும் மற்றவர்களுடன் பேசிக் கொள்ளவில்லை. பேசுவதற்குப் பலவிடயங்களிருந்தாலும் அவை, அவர்கள் வாழும் பேயாட்சியின் ஆதிக்கத்தின் முன் அர்த்தமற்றவையாகிவிட்டன என்று அங்கிருக்கும் பலருக்கும் தெரியும். அவர்கள் ஒருத்தரை ஒருத்தருக்குத் தெரியாதவர்கள், ஆனால் ஏதோ ஒரு விடயத்தில் அவர்கள் சிந்தனை,துப்பாக்கி தூக்கிகளுக்கு எதிராக வெளிப்பட்டதால் இன்று சிறை பிடிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டவர்கள்.

அவர்கள் இனி எந்தத் தொடர்பையும் வெளியுலகத்துடன் வைத்துக்கொள்வார்களா என்ற கேள்விக்குப் பதில் தெரியாதவர்கள். அவர்கள் பேசிய மொழி, பழகிய உலகம்,வாழ்ந்த வாழ்க்கை எல்லாம் இந்த வண்டிக்குள்; அடைபட்டதும் ‘வெற்றுத்’தனமான பிரபஞ்சத்திற்கு ஓடிவிட்டதை ஓரளவு தெரிந்தவர்கள். என்ன படித்தும், என்ன தெரிந்திருந்தும் அவற்றிக்கு அடையாளம் தெரியப் படாத,மதிப்புக்கொடுக்கப் படக்கூடாத உலகத்துக்கு அழைத்துச் செல்லப் படுபவர்கள்.

மாஸ்டர் தனது வாழ்நாளில், ஆனா, ஆவன்னா, இனாவில் ஆரம்பித்து, ஒரு மொழியின் பரிமாணங்களை இலக்கணத்திற் சொல்லிக் கொடுத்த அவரின் பழைய மாணவர்கள் பலர் எங்கோ போனார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? என்ன மாதிரியான உலகத்தில் அவர்கள் பிரசன்னமாகவிருக்கிறார்கள் என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது.

நீண்ட நேரம் ஓடியபின்,அவர்களைக் கைதிகளாகக் கொண்டுபோகும் அந்த வண்டி நின்றது. அடர்த்தியான தென்னை,மாமரத் தோட்டத்தின் நடுவே ஒரு பிரமாண்டமான வீட்டுக்கு முன் அந்த வேன் நின்றது.

‘கைதிகள்’ இறக்கப் பட்டார்கள். மாஸ்டரை வண்டியில் ஏற்றியபோது,தன் முகத்தைத் திருப்பிக் கொண்ட ஒரு துப்பாக்கி தூக்கியின் முகத்தை, அந்த வீட்டுக்கு முன்னாலிருந்து வந்த வெளிச்சத்தில், மாஸ்டர் ஏற இறங்கப் பார்த்தார். அவர் அவனுக்கு, அவனது ஐந்தாவது வயதில்,அ,ஆ,இ சொல்லிக் கொடுத்தவர்!.

அண்ணலும் நோக்கினார்,அவனும் நோக்கினான்,

இருவர் பார்வைகளும் இறந்துபோன காலத்தை ஞாபகப்டுத்தி மோதிக் கொண்டன. அவன் பெயர் தர்மேந்திரன். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் ஆனால் அவனது ஐந்தாவது வயதில், ‘எதையாவது செய்து’ மற்றவர்களின் கவனத்தைக் கவருபவனாக இருந்தது அவருக்கு ஞாபகம் வருகிறது. அவனுக்கு இன்னும் மீசை வரவில்லை. பால் மணம் மாறாத முகம்.பதற்றத்தடன் அவன் மாஸ்டரின் பார்வையைத் தாங்காமல் இருட்டில் தன் பார்வையாற் துளாவினான்.

அவனின் வீட்டைச் சுற்றியிருந்த பனைவடலியைச் சுற்றியோடி வாழ்ந்த சூடிகையான அந்த இளம் குருத்து,இன்று இருளின் துணையுடன்,மனிதரின் உயிரைப் பலியெடுக்கும் எமனாக,துப்பாக்கி தூக்கியாக நிற்பதைக் கண்ட ஆசிரியரின் மனம் தனக்கு முன்னால் நிகழும் நிஜத்தைப் புரியாமல் ஒரு கணம் நிலை குலைந்தது. கலி காலத்தின் கோரம் கையில் ஒரு துப்பாக்கியுடன்,எமனாக உருவெடுத்திருக்கிறதா?

வண்டியில் வந்த அத்தனைபேரம், வீட்டைச் சுற்றிக் கிடந்த சில கட்டிடங்களைத் தாண்டி அழைத்துச் செல்லப் பட்டார்கள். பெரிதும் சிறிதுமாகப் பல கட்டிடங்கள்,அவற்றின் சிலதிலிருந்து,முக்கல்கள், முனகல்கள், மரண வேதனைக் குரல்கள் அவ்வப்போது வந்து கொண்டிருந்தன. அந்தச் சூழ்நிலயும், சத்தங்களும் அவர் தனது இளமையிற் பார்த்த படங்களில் வரும் சித்திரவதைக் கூடங்களை ஞாபகப் படுத்தின.

இந்த அக்கிரமங்களை என்னாற் பார்க்க முடியாது என்பதுபோல்,வானத்தில் நிலவு அடிக்கடி மேகத்தில் தன்னை மறைத்துக்கொண்டது. அல்லது,எங்கள் வேலையை நீ பார்க்கக் கூடாது என்று இந்தத் துப்பாக்கி தூக்கிகள் நிலவுக்கும் உத்தரவு போட்டார்களோ தெரியாது.

மாஸ்டருக்கு, என்ன நடக்கிறது என்ற புரியவில்லை.அவரிடம் இருபது நிமிடம்; பேசவேண்டும் என்று சொல்லிக் கூட்டிக்கொண்டு வந்தவர்கள் என்ன செய்கிறார்கள்?. இப்போது அவர்கள் சொன்ன எத்தனையோ ‘இருபது நிமிடங்கள’; கழிந்து ஓடிவிட்டன.

வீட்டில் அவர் மனைவி அழுதுகொண்டிருப்பாள் என்ற தெரியும்.

நித்திரை செய்யும் பாவனையில் அவரின் மகன், தனியாயிருந்தழும் தாயையும், தந்தை இழுத்துச் செல்லப் பட்ட பாதையையும் இருளின் துணையோடு பார்த்துப் பெருமூச்சுவிடுவான் என்பதும் அவருக்குத் தெரியும்.

மாஸ்டருக்குப் பசியாலும் களைப்பாலும் அசதியாகவிருந்தது. அவர் இனிப்பு வியாதிக்காரன் சரியான நேரத்திற்கு மாத்திரைகள் எடுத்துச் சரியான நேரத்துக்குச் சாப்பிடாவிட்டால் அவருக்கப் பிரச்சினைகள் வரும் உடம்பிலுள்ள சக்தி குறைந்தால், அவருக்கு மயக்கம் வரும்.

மூளை வேலை செய்யவேண்டிய சக்தியற்றுப் போனால், மூளை தடுமாறி அதனால் அவருக்கு வலி வரும். அவருக்கு உடனடியாக இனிப்பு வியாதி மாத்திரை தேவை. அத்துடன் அவருக்குச் சாப்பாடு தேவை. முக்கியமாக அவருக்குகு; குடிக்கத் தண்ணீர் தேவை.

இருளில் சில மணித்திலயாலங்கள் துப்பாக்கி முனையிற் தடுத்தி நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கைதிகள் உள்ளுக்கு அழைத்துச் செல்லப் பட்டார்கள். அந்த அறையில் ஒரு பெரிய மேசையைச் சுற்றி,மூனறு கதிரைகள் போடப் பட்டிருந்தன. இருவர் இரு கதிரைகளில் உட்கார்ந்திருந்தார்கள். மூன்றாவதில், இவரை இருபது நிமிடங்களக்குப் பேசவென்று அழைக்க வந்த ‘தலைவன்’ வந்து உட்கார்ந்தான். எல்லோருக்கும் ஆண்மையைப்(?) பிரத்திபலிக்கும் மீசையிருந்தது. ஓருத்தனுக்கு முறுக்கி விடத்தக்கதான பெரிய மீசை.அவன் முகத்தில் அளவிட முடியாத குருரம் பரவிக் கிடந்தது.

கதிரையில் உட்கார்ந்திருந்தவர்களில் ஒருத்தன் அவரை ஏற இறங்கப் பார்த்தான். அதன் பிறகு ஒருத்தன் மாறி ஒருத்தன் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். அவர் ஒரு ஆசிரியர் என்பதும், அதைத் தொடர்ந்த அவரது வாழ்க்கைச் சரித்திரம் என்பதெல்லாம் அவர்களுக்கத் தெரிந்திருந்தது.

‘விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, சமுகத்தில் முக்கியமாகவிருப்பவர்களின் அவசியமான கடமை என்ன வென்று தெரியுமா’ என்று ஒருத்தன் கேட்டான்.

விடுதலைப் போராடத்தில் பங்கு பற்ற மாணவர்களை ஏன் ஊக்கப் படுத்தவில்லை என்று இன்னொருத்தன் கேட்டான்.

அவர் தனது இளமையிற் படித்த ஹிட்லரின் நாஷியத் தத்துவங்கள் ஞாபகத்திற்கு வந்தன. ‘ஆரிய இனத்தின் மகிமையை நிலைநாட்ட, உலகெங்கும் பரப்ப ஆரிய இளைஞர்கள் முன்வரவேண்டும்.’ இப்படிப் பிரசாரம் செய்து ஹிட்லர்,இளம் தலைமுறையினரை மூளைச்சலவை செய்தான். ஆரிய பேரசை நிலை நாட்ட மறுத்தவர்கள், அவர்களின் தத்துவத்தை எதிர்த்தவர்கள் ஜேர்மனியிற் கோடிக்கணக்காகக் கொலை செய்யப் பட்டார்கள்.

இங்கும் இன்று தமிழ்ப் பகுதிகளில் அதே பிரச்சாரம் மேற் கொள்ளப் படுகிறது. அதை எதிர்த்த மாற்றுக் கருத்தாளர்கள், பத்திஜீவிகள், மற்றைய கட்சிகள் மண்ணோடு மறைந்து விட்டார்கள். இன்று இந்தத் துப்பாக்கி தூக்கிகள், கல்வி மூலம் அறிவையும் அறத்தையும், பண்பையும்,கலாச்சாரத்தையும் படிப்பிக்கும் ஒரு அப்பாவி ஆசிரியரைக் கொண்டுவந்து பல கேள்வி கேட்கிறார்கள்.

அவரின் வாழ்க்கையின் பல கேள்விகளுக்குப் பதில் மறு மொழி எழுதிய காலம் எல்லாம் எப்போதொ முடிந்து விட்டது. இன்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அவரால் முடியாதிருக்கிறது. அவரிடம் படிக்க வந்த குழந்தைகளை ஏன் புதைகுழிக்கு அனுப்பவில்லை என்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவரால் மறுமொழி சொல்ல முடியவில்லை.

அவர் ஒரு ஆசிரியர்,ஆனா, ஆவன்னா ,இனா சொல்லிக் கொடுப்பவர். அறிவு சாராத அரசியலின் ஆணவமான இழிசெயல்கள்ளை அவர் சொல்லிக் கொடுக்கவில்லை.

‘ஒரு ஆசிரியர் மாணவர்களுக்குப் படிப்பிப்பதை நான் படிப்பித்தேன்’ ஆசிரியர் தனது ஆசிரிய தாரக மந்திரத்தின் உண்மையைச் சொன்னார். கேள்வி கேட்டவர்கள் ஆசிரியரைப் பார்த்துச் சிரித்தார்கள். அது ஆணவமான சிரிப்பு ஆயுதம் துக்கியதால் வந்த வெற்று வீரத்தின் பிரதி பலிப்பு, ஆசிரியரைப் பார்த்துச் சிரித்த இழிவான சிரிப்பு.அதைப்பார்த்ததும் அவர் இளமையில் அவர் செய்து விளையாடி மகிழ்ச்சி கண்ட ஒரு குருரமான விளையாட்டு ஞாபகம் வருகிறது.

அவரும் அவரின் சில சினேகிதர்களும், பனைவடலிகளில் ஓடித்திரியும் ஓணான்களை சிறை பிடித்து, அதன் வாயில் புகையிலையைத் திணித்து,அதன் வாலைக்கட்டி விட்டு ஓடவிட்டு ரசிப்பார்கள் புகையிலை மயக்கத்தில் ஓணான் தனது தலையை ஆட்டி அங்குமிங்குமாக ஓடும். அந்த ஓணானின் மயக்க நிலைச் செயல்களைப் பார்த்து. அதன் பரிதாப நிலையைப் பார்த்து அவரும் அவரது சினேகிதர்களம் சிரித்து மகிழ்வார்கள். ‘என்ன இது, வாயில்லாப் பிராணிகளை வதைப்பது விளையாட்டா, இது ஒரு குருரமான விளையாடடு’ கணேஸ் மாஸ்டரின் தகப்பன் ஓடிவந்து ஓணானுக்கு விடுதலை கொடுப்பார். அந்த நினைவு மாஸ்டரின் நினைவில் நிழலாடியது.

இன்று,அவர் ஒரு ஓணான்,அவரை யார் அவிழ்த்து விடுவார்கள்?

அவர் ஒரு வலிமையற்ற ஆசிரியர்.அவர்கள் ஆயுத முனையிலுள்ள ஆணவக்காரர்கள்,; அவரை இழிவான வார்த்தைகளால் அவமானம் செய்கிறார்கள்.

அவர்களுக்கு எதிரான மற்ற இயக்கங்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

அவர்களைப் பற்றி, ஊரில் அவர்களின் நடவடிக்கைகள்பற்றி அவர் விளக்கம் சொல்ல முடியுமா? அவர்களின் கேள்விகள் தொடர்கினறன.

அந்தக் கேள்விகளுக்கு மறுமொழி அவருக்குத் தெரியாது. அவர் ஒரு சாதாரண ஆசிரியர்.

‘ இந்த நாய்களிடம் இப்படிக் கேள்வி கேட்டால் சொல்லவா போகிறார்கள்’?

கதிரையிலிருந்த ஒரு மீசைக்காரன் ஆத்திரத்துடன் அவரைப் பார்த்துக் கத்தினான்.அவன் கோபத்துடன் தனது மீசையை முறுக்கிக் கொண்டான்.

ஆசிரியருக்கு அவனை எங்கேயோ கண்ட ஞாபகம் வருகிறது;.

அவன்தான், சில வருடங்களுக்கு முன் யாழ்பாணம் பெரிய கடைக் கம்பமொன்றில் துரோகிகள் என்ற பெயரில் பல தமிழர்களைக்; சிலுவையலறைந்த இலட்சிய வீரன்! மிகத் தமிழுணர்வு கொண்டவன். அது,ஹிட்லரின் ஆரிய உணர்வை விட மேலானது.

அவர்கள் விடாமற் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பதைத் தவிர்த்து விட்டு மாஸ்டரின் ‘உடம்பைக்’ கவனித்தார்கள். அவர் கட்டி வைக்கப் பட்டு தாக்கப் பட்டார். கேள்வி மேல் கேள்விகள் கேட்கப் பட்டன.

நாற்பது வயதான உடம்பு,அவரின் சரிபாதி வயதுமடையாத ‘போராளிகளின் ஆத்திரத்தில்’ பந்தாடப் படும்போது, உள்ளத்திலிருந்து உணர்ச்சிகள் ஒழுங்காக வேலை செய்து அவர்களின் கேள்விகளுக்கப் பதில் சொல்லப் படும் என்று எதிர்பார்க்கிறார்களே?’

அவர் சரியான மறுமொழி சொல்லவில்லை என்ற ஆத்திரத்தில் ஒருத்தன் அவர் முகத்தில் அவனது ஆத்திரத்தையெல்லாம் சேர்த்து வைத்து ஒரு குத்து விட்டான். அவர் முன் பற்கள் சொல்லாமல் கொள்ளாமல்,அவரிடமிருந்து இரத்தக் களரியுடன் விடை பெற்றன மாஸ்டரின் பற்கள், வயது காரணத்தால் ஆடிக்கொண்டிருக்கும் மாலதியின் பற்களை முந்திக் கொண்டு அவர் முன்னால் நிர்க்கதியாய்க் கிடந்தன.

‘படித்தவன் என்ற மமதையா உனக்கு? எழிய நாய்கள்.. இனத் துரோகிகள்..’ இப்படியான வசைபாடல்கள், ஆயுதம் தாங்கிய,தூக்கிகளின் வாயிலிருந்து வெளிப் பட்டு, சாடையாகத் திறந்திருந்த ஜன்னலுக்கப்பால் தெறித்து விழுந்து ஓடிக்கொண்டிருந்தன.

அவர் எப்போது மயங்கி விழுந்தார் என்று அவருக்கத் தெரியாது. உடம்புக்கும் உணர்வுகளுக்கும் ஒரு தொடர்பும் இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவரை அவர்கள் தர தரவென்று அந்த கொங்கிறிட் தரையில் இழுத்தக் கொண்டு சென்றார்கள்.

மாஸ்டர் ஒரு அறையிற் தள்ளப் பட்டார் அந்த அறையில் இரும்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுத் தலை கீழாகக் கட்டித் தொங்கப் பட்டிருக்கும் தமிழர்கள் ஒருகாலத்தில், மாஸ்டரைப்போல், சமுதாயத்தின் ‘கௌரவமான’ மனிதர்களாக இருந்திருக்கலாம்.இன்று,அவர்கள் ஆயுதம் தாங்கிய அரக்கர்களால்,இருட்டறைகளில் வெளவ்வால்களாகத் தொங்கிக் கொண்டிருந்தார்கள். புதிதாகத் தள்ளப் பட்ட மனிதரில் பரிதாபமோ, அல்லது அவர் யாரென்று பார்க்கவேண்டும் என்ற ஆவலோ அந்த அறையிற் சிறைப்பட்டிருபபவர்களுக்கு இருக்காது என்று அவராற் தெரிந்து கொள்ள முடியாது.

கொஞ்ச நேரத்தில், ஒரு துப்பாக்கி தூக்கி மயங்கிக் கிடந்த அவர் முகத்தில் நீரை வாரியிறைத்தான்.

அவர் ஒரு இனிப்பு வியாதிக்காரன,அதனால் அவருக்கு அடிக்கடி தாகம் வரும் அத்துடன் அடிக்கடி சலம் போகும். இப்போது சலம் மட்டுமல்ல,அவர்கள் அடித்த அடியில் மலமும் போயிருந்தது,அத்துடன அவரின் உடம்பிலிருந்து வழியும் இரத்தவாடையும் சேர்ந்து அருவருப்பான மணத்தைப் பரப்பியது.

முகத்தில் அடித்த நீரால், சாடையாக உணர்வு வந்த அவருக்குத் தாகம் உயிரை எடுத்தது. ‘தண்ணி…தண்ணி’அவர் முனகினார். அவருக்கு யர்ரும் நீர் கொடுக்கவில்லை. இவருக்கு உணர்வு வந்ததும்,அவரிடம் பல கேள்விகள் கேட்க இன்னும் அவர்கள் தயாராகவிருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியாது.

அவர், விடாமல், தண்ணி..தண்ணி என்ற முனகினார். அவரது மாணவனாக ஒருகாரத்தில் அவரிடம் படித்த தர்மேந்திரன் அங்கு அவருக்குக் காவலாக நின்றிருந்தான். அவருக்கு நா வரண்டது. அவருக்கு எதுவும் கொடுக்கக்கூடாது, உயிருடன் வைத்துக் கேள்விகள் கேட்கவேண்டும் என்பது அவர்களின் உத்தரவாக இருக்கலாம். அவரின் வேண்டுதல்கள் அவனின் காதுகளில் படவில்லை என்ற பாவனையில் அவன் நின்றிருந்தான்.

அந்த சிறுவயதுப் போராளிக்கு மாஸ்டரின் பரிதாமான நிலை எந்த இரக்கத்தையும் உண்டாக்கவில்லை.

அவர் ஒருகாலத்தில் அவனுக்குச் சொல்லிக் கொடுத்த ஆனா என்றால் அன்பு, ஆவன்னா என்றால் ஆதரவு இனா என்றால் இரக்கம் என்ற கல்வியறிவு அவனது கருத்திலிருந்து, துப்பாக்கிக்குப் பயந்து என்றோ ஓடிவிட்டது என்று அவருக்குத் தெரியது.அவன் இன்று, ஆனா என்றால் அதர்மம்,ஆவன்னா ஆயதம்,இனா என்றால் இழிசெயல்கள் என்ற நியதிக்கு அவன் பழக்கப் பட்டுவிட்டான் என்று அவர் தெரிந்து கொள்ளமுதல் அவர் உயிர் போய்விட்டது.

– ‘தாயகம்’ கனடா, பிரசுரம் 13.11.1992.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *