இட்லி இவ்வளவு சூடா வைச்சா எப்படிம்மா சாப்பிடறது, எனக்கு நேரமாச்சு காலேஜ் பஸ் வந்திடும் நான் கிளம்பறேன்.
ஏன் ஸ்ரீ, இட்லி ஆற ஒரு ரெண்டு நிமிஷம் ஆகுமா? ஒரு மணி நேரம் குளிச்சப்ப தெரியலையா கல்லூரிக்கு நேரமாகும்னு… சாப்பிடறதே ரெண்டு இட்லி, அதை ஒழுங்கா சாப்பிட்டு போ.
நான் ஒன்னும் ஒரு மணிநேரம் குளிக்கலை….. நீங்க முன்னாடியே சுட்டு வைக்க வேண்டியதுதானே.
போதும் வாயாடினது, ‘இந்தா….. வாயை திற, நீ கடிகாரம் கட்டிட்டு, பேக்கை எடுத்திட்டு செருப்பு போடுறதுக்குள்ளே, நான் இந்த இட்லியை ஊட்டி விட்டுடுவேன். இரு தண்ணி எடுத்திட்டு வரேன், மறக்காம பர்ஸ்சும், போனும் எடுத்துவை…… அப்பறம் வரதுக்கு நேரமாச்சுன்னா எனக்கு தான் திக்திக்குன்னு இருக்கும்’.
திக்கு திக்குன்னு மட்டுமா இருக்கும்….. “பத்து நிமிஷம் லேட் ஆயிடுச்சுன்னா காம்ப்ளெக்ஸ்யையே கூட்டிடுவீங்க….. மேல் வீட்டு ஆன்ட்டியிலிருந்து கீழ்வீட்டு பாட்டி வரை கேட்ல இருந்து வரிசையா நின்னு விசாரணை கமிஷன் வச்சிட்டு தான் விடறாங்க…. பத்தாதுக்கு நீங்க வேற கண்ணுல தண்ணியோட வாசலில் நின்னுட்டு இருப்பீங்க. நான் என்ன வேணும்னா லேட்டா வரேன் ….. நம்ம ஊரு டிராபிக் உங்களுக்கு தெரியாததா, அப்பவும் எத்தனை தடவை, நேரமாச்சுன்னா நீங்க அழுவீங்கன்னு காலில் அடிப்பட்டா கூட பரவாயில்லைன்னு ஓடி வந்து பேருந்தில் ஏறி இருக்கேன் தெரியுமா”…..
ஸ்ரீ…..இந்தா….தண்ணி குடி, அதே மாதிரி இன்னைக்கும் சீக்கிரம் வா, இல்லைனா வாசலில் நிற்க மாட்டேன் பேருந்து நிறுத்தத்திலேயே வந்து நிற்பேன், உனக்கென்ன தெரியும் என் பயம், எந்நிலையில் இருந்து பாரு தெரியும்.
உங்களை திருத்தவே முடியாது மா…
“என்னை நீ அப்புறம் திருத்தலாம்….. இவ்வளவு நேரம் வாயாடிட்டு இருக்கியே, உனக்கு இப்ப நேரமாகலையா? சும்மா முறைக்காத, கிளம்புடி…..” என்று சொல்லி, சிரித்துக் கொண்டே கையாட்டி விட்டு உள்ளே சென்ற அம்மாவை முறைத்துவிட்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தேன். “ச்சே…. கோபமா வருது அம்மா மேல, எப்பவும் இப்படித் தான். பத்தாததுக்கு அப்பாவை வேற பதட்டமாக்கி போன் மேல போன் பறக்கும், பிரெண்ட்ஸ், ஃப்ரொபசர் எல்லாருக்கும். என் மானமே போகுது,” பேருந்தில் ஏறும் வரை அம்மாவை மனதுக்குள் திட்டிக் கொண்டே வந்தேன்… தோழிகளை பார்த்ததும் கவனம் அரட்டையில் போய் விட்டது.
அன்று கல்லூரி முடிந்து, பேருந்தில் ஏறி முன்னாடியிருந்து மூன்றாவது இருக்கையில் தோழிகளுடன் அமர்ந்தேன். இது ஒரு வசதி, முதல் நிறுத்தமென்பதால் உட்கார்ந்தே போகலாம், கூட்டம் இருக்காது. வழக்கம் போல் அரட்டையடித்து கொண்டிருந்தோம்…பேருந்தும் வழக்கம்போல் டிராபிக்கில் நின்று நின்று ஊர்ந்துக்கொண்டிருந்தது.
விஜி ‘இந்த ப்ரேஸ்லெட் எங்க வாங்கின? ட்ரெண்டியா இருக்கு’.
ஆன்லைன்ல தான் ஸ்ரீ, யார் இப்பெல்லாம் கடை கடையா ஏறி இறங்குறா…
ஸ்ரீ உன்னோட கம்மல் கூட அழகா இருக்கு, சுடிக்கூட, எங்கடி தைக்கிற….
அவளை ஏண்டி கேட்கிற நித்யா, ‘அவ வைக்கிற பொட்டிலிருந்து போடற ஜட்டி வரை அவங்கம்மா தான் தேர்ந்தெடுப்பாங்க, ஆன்ட்டிக்கு செம ரசனை நாம அவங்களையே போன் பண்ணி கேட்டுக்கலாம், இவளை கேக்கிறது வேஸ்ட்’.
போதும் விஜி மானத்தை வாங்காத பஸ்ல உட்கார்ந்திட்டு.
ஹாஹா…..இதுவரைக்கு போகலையா?
ச்சு…. போடி….
ஸ்ரீ… உடனே பார்க்காத, அந்த கருப்பு நிற பைக்காரன் பாரு, இங்கேயே பார்த்திட்டு இருக்கான்.
நான் மெதுவாக முகத்தை திருப்பி பார்த்தேன்… தேடுவதற்கே அவசியமின்றி அவன் ஒருவன் தான் சிக்னலில் முன் வரிசையில் நின்று கொண்டு, இங்கேயே அடிக்கடி திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு இருந்தான். போலீஸ் ட்ரைனிங்- ல் இருப்பவன் போல் மிக நேர்த்தியாக இருந்தான். அடிக்கடி தனக்கு பக்கத்து பைக்கில் இருக்கும் நண்பனோடு பேசிக்கொண்டு, டிராபிக் போலீஸிடம் கை காட்டிக்கொண்டு, அங்கே அருகில் இருக்கும் கடைகளில் இருப்பவரை சத்தமாக கூப்பிட்டுக் கொண்டு… எல்லோரையும் தெரிந்திருக்கிறது இவனுக்கு. இங்கு தான் பக்கத்தில் வசிப்பவன் போல…. ஆ…. தைரியம் தான்…. என்னை பார்த்து புருவம் உயர்த்துகிறான்…. நான் உடனே தோழிகளிடம் பேசுவது போல் திரும்பிக் கொண்டேன்.
என்ன ஸ்ரீ சைட் அடிச்சி முடிஞ்சுதா?
சும்மாயிரு விஜி, நாம அவனை கவனிக்கிறோம்னு தெரிஞ்சா பிரச்சனையாகிடும்.
இவ்வளவு நேரம் இப்படி ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தியே, தெரியாம போயிருக்கும்னு நினைக்கிறியா….
நீயே போதும்டி, போய் அவன் கிட்ட சொல்லிட்டு வருவே போல சும்மாயிரு…
அவளை சும்மாயிருன்னு சொன்னாலும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை, நான் அவனையே ரகசியமாக பார்த்துக்கொண்டிருந்தேன். எல்லோரிடமும் சிரித்து சிரித்து கலகலப்பாக பேசிக்கொண்டு, வண்டியை நிறுத்திவிட்டு போய் என்னை கள்ளத்தனமாக பார்த்துக் கொண்டே ட்ராபிக்கை ஒழுங்கு படுத்த உதவி செய்துக் கொண்டிருந்தான். நான் கவனிக்கவில்லை என்றால் சத்தம் போட்டு பக்கத்தில் இருப்பவனை அழைத்தான். அவன் என்னை ஈர்ப்பதற்காக செய்துக் கொண்டிருந்த அனைத்துமே அதன் வேலையை கச்சிதமாக செய்து கொண்டிருந்தது.
ட்ராபிக் க்ளியராகி விட்டது அவனும் வந்து வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டான்…. இடது பக்கம் பச்சை சிக்னல் விழுந்தது அவனும் என்னை பார்த்து லேசாக தலை அசைத்துவிட்டு மெதுவாக கிளம்………….
ஐயோ! என்னாச்சு…. ஒரே சத்தம்… நேரெதிலிருந்து மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் கிளம்பி வந்த தண்ணி லாரி நடு ரோட்டில் நிக்குது, அவன் வண்டி லாரி சக்கரத்தின் அருகே…எனக்கு தொண்டை உலர்ந்து போய், பேச நாவே எழவில்லை… விஜியை கூப்பிட முயற்சி செய்தும் என்னால் என் உடம்பில் ஒரு அணுவையும் அசைக்க முடியவில்லை, இதயம் அறுந்து விழுந்த பல்லியின் வால் போல் துடித்துக் கொண்டிருந்தது. இன்னமும் அவன் சிரித்தது என் கண்ணுக்குள்ளேயே இருக்கே, இல்லை அப்படி இருக்காது தப்பிச்சிருப்பான்.
அவன் பக்கத்தில் இருந்தவர்கள் அவன் கை காட்டி பேசிக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் லாரியை சுத்தி கூடி விட்டார்கள். சிறுது நேரத்தில் ஆம்புலன்ஸ் சத்தம், என் இதயத்தை யாரோ ராட்டினமாக்கி நீர் இறைப்பது போல் இருந்தது. உண்மை தானா….. ஆமாம் என்பது போல், கூட்டம் ஆம்புலன்ஸ்சுக்காக விலகியதும் அவன் ரோட்டில் லாரி சக்கரத்திற்கு அருகில் அசைவற்று மல்லாந்து நிலையற்று கிடந்தான். “என்னை பார்த்து சிரித்த அந்த கண்கள், எதையோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது. அவனை போலவே ரோட்டில் சரிந்து கிடந்த அவன் வண்டியின் முன் சக்கரம் மட்டும் கட்டுபாடற்று சுழன்று கொண்டிருந்தது”….
விஜி எத்தனை சமாதானம் சொல்லியும் என்னால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை……தலையை அசைத்து அனைவரிடமும் சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டிருந்தவன், இடது சிக்னல் போட்டு விட்டு நேராக வந்த லாரியை கவனிக்காமல் விட்டுவிட்டான். ‘எல்லோருக்கும் சிக்னலை ஒழுங்கு படுத்தி உதவியவன், ஏன் ஒரு தலைக்கவசம் போட்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டான்?’ அவனுக்கு கை ஆட்டிய கடைக்காரர், பக்கத்தில் அவனோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்த நண்பர்கள், டிராபிக் கான்ஸ்டபிள் அனைவருமே அவனை சுற்றி அடையாளம் காட்ட நின்று கொண்டிருக்கிறார்கள். வழி அனுப்பிய அவன் அம்மாவுக்கு தெரியுமா அவன் திரும்ப வீட்டுக்கு உயிரோடு வர மாட்டானென்று.
ட்ராபிக் சரியாகி பஸ் நகர ஆரம்பித்தது….. அந்த விபத்து நடந்த நொடியே கண்முன் வந்து கொண்டிருந்தது. எது எப்படி இருந்தாலும் எல்லாமே முடிந்து விட்டது. ‘நடக்கும்போது கால் இடறுவதுப் போல், முள் குத்துவது போல், வாசப்படியில் தலை இடித்துக் கொள்வதைப் போல். எவ்வளவு சாதாரணமாக ஒரு உயிர் போய்விட்டது’.
“ஸ்ரீ… ஸ்ரீ….. உன்னோட நிறுத்தம் வந்திடுச்சி பாரு இறங்கு…. பார்த்து போ… இல்லை நானும் வரட்டுமா?” என்று என்னை உலுக்கிக் கொண்டிருந்தாள் விஜி.
வேண்டாம் என்று தலையை ஆட்டிவிட்டு இறங்கினேன்….. வீட்டிற்கு போக ரோட்டை கடக்கவே முடியவில்லை… கால்கள் என் இதயத்தை விட அதிகமாக நடுங்கி கொண்டிருந்தது…சைக்கிளுக்குக் கூட பயந்து வெகு நேரம் நின்று கொண்டிருந்தேன். கூட்டத்தோடு சேர்ந்து ரோட்டை கடந்து வீட்டை அடையும்போது, அதிசயமாக கேட்டிலிருந்து வீட்டின் வாசல் வரை யாருமே இல்லை, வீட்டுக்கதவு பூட்டியிருந்தது. எங்கே? என்ற கேள்வியோடு எதிர் வீட்டில் கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கும்போதே, என்னை பார்த்துவிட்டு எதிர்த்த வீட்டு மாமி சிரித்தபடியே வந்து, “அம்மா மார்க்கெட் போயிருக்காங்க ஸ்ரீ” என்று வீட்டுச் சாவியை கொடுத்துவிட்டு சென்றார்கள்.
நான் உள்ளே வந்து ஒரு மணிநேரம் ஆகியும் துணி மாற்றவில்லை, கை கால் அலம்பவில்லை, ஏன் பையைக் கூட தோளில் இருந்து இறக்கவில்லை. விபத்தை பற்றியே இருந்த என் கவனம் மெல்ல மெல்ல அம்மாவிடம் சென்றது கைப்பையை ஓரமாக வைத்துவிட்டு, உள்ளறைக்கும் பால்கனிக்கும் நடந்து நடந்து மேல் தளத்தை தரைதளமாக்கும் முயற்சியில் இருந்தேன். மேலும் ஒரு மணிநேரம் கடந்தது, இன்னும் அம்மாவை காணோமே என்று அலைபேசியில் முயற்சி செய்தால் அது வீட்டினுள்ளேயே ஒலித்துக் கொண்டிருந்தது. வயிற்றில் இருந்த ரசாயன கலவை ஆவியாகி தொண்டைக்கு வருவதுப் போல் ஒரு அவஸ்தை. பயத்தில் என் கற்பனைகள் விரிந்து கொண்டே போனது. அப்பாவுக்கு அழைக்கலாம் என்ற நினைவை செயல்படுத்த முயலும்போதே பால்கனி வழியாக, அம்மா காய்கறி நிறைந்த கனமான பையோடு மாடி ஏற வருவது தெரிந்தது.
அவசரமாக வாசல் கதவை திறந்துக் கொண்டு கீழிறங்கிச் சென்று, அம்மாவின் கையிலிருந்து பையை வாங்கிக் கொண்டு, “ஏன்மா இவ்வளவு நேரம்? ஏன் போன் எடுத்துக் கொண்டு போகலை? நான் காத்திட்டு இருப்பேன்னு தெரியுமில்லை? நான் வந்தே இரண்டு மணிநேரத்துக்கு மேல ஆச்சு, இதுக்குள்ள நீங்க ரெண்டு தடவை மார்க்கெட்டுக்கு போய்விட்டு வந்திருக்கலாம்” என்று கோபத்தில் கண்கள் கலங்க அவர்களை பதில் சொல்ல விடாமல் விசாரித்துக் கொண்டிருந்தேன்.
வீட்டுக்குள் நுழைந்தவுடன், என் தோளை தொட்டு தட்டி, என் பேச்சை நிறுத்திய அம்மா…..”கைப்பேசி எடுக்க மறந்திட்டேன், சீக்கிரமே வந்திடலாம்னு தான் கிளம்பினேன் ஆனா நேரமாயிடுச்சி, இதுக்குப் போய் இமை தடிக்கிற அளவுக்கு அழுதுட்டு சத்தம் போட்டு ஊரையே கூட்டற, எங்கே போயிட போறேன், போய் துணி மாத்திட்டு வந்து இந்த காய்கறியெல்லாம் பிரிச்சி வை, நான் போய் உனக்கு காப்பி போடறேன்” என்று கூறிவிட்டு, அவர்களை பார்த்து நான் முறைத்துக் கொண்டிருப்பதை சட்டை செய்யாமல், சிரித்துக்கொண்டே சமையலறையில் நுழைந்தார்.
சில நேரம் வேலையற்ற காத்திருப்பே மனதில் விபரீதமான எண்ணங்களை முளைவிட செய்கிறது என்று அம்மாவை திட்டினாலும், தினமும் பல விபத்து செய்திகளை படித்தாலும், கண் எதிரே கணநேரத்தில் நடந்த விபத்தை கண்ட பிறகு தான் நாள்தோறும் வீட்டு வாசலில் நின்று கட்டிடங்களை எல்லாம் ஊடுருவி பஸ் நிறுத்தத்தையே பார்த்துவிடும் முனைப்பில் கண்களை லேசராக்கி பதட்டத்தோடு பார்த்திருக்கும் அம்மாவின் பயம் நிறைந்த காத்திருப்புக்கான அர்த்தம் புரிந்தது. அந்நாளின் இரவு முழுவதும் அவன் தலையாட்டி சிரித்ததும், நிலையற்று ரோட்டில் கிடந்ததுமே காட்சியாய் வந்து வந்து போனது. அவனை போலவே நானும் எனக்கான காத்திருப்பின் பொறுப்பை உணராமல் போனேனே இதுவரை. அவனின் வெறித்த கண்களும் அம்மாவின் நீர் நிறைந்த கண்களுமே மாறி மாறி அலையலையாக என்னுள் அடித்து அடித்து அந்த இரவு முழுவதும் என்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தது.
மறுநாள்…
அம்மா….சீக்கிரம் நேரமாச்சு எப்பவும் சுட சுட தான்மா எடுத்திட்டு வருவீங்க….
ரொம்ப அலுத்துக்காதடி எப்பவும் போல நான் தானே உனக்கு ஊட்டப்போறேன்….. நீ மறக்காம போன், பர்ஸ் எல்லாம் எடுத்து வை.
எல்லாம் எடுத்து வைச்சுட்டேன்……சார்ஜ் கூட முழுசா போட்டுட்டேன்…என்று கூறியபடி அம்மா கையிலிருந்த தண்ணீரை வாங்கி பருகிவிட்டு, அவர்கள் முந்தானையில் வாய் துடைத்துவிட்டு, அழுத்தமாக ஒரு முத்தத்தை அம்மாவின் கன்னத்தில் பதித்தேன். புரியாமல் முழித்தாலும் ஒரு நொடியில் கன்னம் கடத்திய உதட்டு சிரிப்பை அறிந்து கொண்ட கண்களோடு நின்று கொண்டிருந்த அம்மாவிடம் சிரித்தபடி தலையசைத்துவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்தேன்…..