அவர் பெயர் முக்கியமில்லை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 35,509 
 
 

அந்த இளைஞன் துர்காவை மறுபடியும் கடந்து சென்றான். காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த அரை மணி நேரத்துக்குள் அவனை மூன்று முறை பார்த்து விட்டாள். அந்தப் பையனுக்கு 20 வயது இருக்கக்கூடும். வெளிறிய ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் அணிந்து இருந்தான். இடது கையில் ஒரு பித்தளைக் காப்பு.

இவனைப் போன்ற பையன்கள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ஹாம்சன் பொறியியல் கல்லூரியில் படிப்பதற்காக வீடு எடுத்துத் தங்கி இருப்பவர்கள். அவளது வீட்டுக்குப் போகிற வழியில் உள்ள பிள்ளையார் கோயிலை ஒட்டிய வீட்டில்கூட கல்லூரி மாணவர்கள்தான் தங்கியிருக்கிறார்கள். கொடிகளில் நிறையத் துணிகள் காய்வதைக் கண்டிருக்கிறாள்.

இந்தப் பையனும் அப்படி எங்காவது தங்கியிருக்கக்கூடும். இவனைப்போன்ற இளைஞர்கள் வீட்டைவிட்டு வந்த பிறகு சமைக்கக் கற்றுக்கொள்வதில் காட்டும் ஆர்வத்தை வீட்டில் இருக்கும்போது ஒருநாள்கூட ஏன் காட்டுவதே இல்லை? பெண்கள் எந்த ஊரில், எந்த வேலைக்காகப் போனாலும் தாங்களாகவே சமைத்துத்தான் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும். அல்லது வுமன்ஸ் ஹாஸ்டலில் போடும் சாப்பாட் டினைச் சாப்பிட வேண்டும். மெஸ்ஸில் கணக்கு வைத்துக்கொண்டோ, இரவு நேர பரோட்டாக் கடைகளைத் தேடிப் போய் சாப்பிடும் பெண்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். வேலை ஒன்று, சம்பாத்தியம் ஒன்றாக இருந்தாலும் இரண்டுவிதமான வாழ்க்கை முறைதானே இருக்கிறது.

AvarPeyarMukiyam1

அந்தப் பையன் காய்கறி மார்க்கெட்டில் எந்தப் பொருளையும் பேரம் பேசி வாங்குவது இல்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது. அவன் கையில் ஒரு ஜவுளிக் கடை பை வைத்திருந்தான். காய்கறிகள் வாங்குவதில் அனுபவம் இல்லை என்பது அவன் வாங்கிவைத்திருக்கிற முற்றிய முருங்கைக் காயிலேயே தெரிந்தது. துர்கா காய்கறிகளை வாங்கி முடித்திருந்தாள். இருட்டுவதற்குள் வீட்டுக்குப் போய்விட வேண்டும். வீட்டுச் சாவி அவளிடம் இருந்தது. அலுவலகம்விட்டு ஸ்ரீதரன் வந்து காத்திருந்தால் கத்துவான். புதினா கிடைத்தால் இரவுக்குத் துவையல் அரைக்கலாம் என்று தேடி நடந்தபோது மண்பாண்டக் கடையில் தற்செயலாக அந்த உண்டியலைப் பார்த்தாள். அந்த உண்டியல் மீன் வடிவத்தில் இருந்தது. வெளிர் நீல வண்ணம் அடித்திருந்தார்கள். கண்களும் செவுளும்கூடத் துல்லியம். மீனின் வயிற்றுக்குள் காசு போட்டுவைப்பது என்பது வேடிக்கையானது இல்லையா? துர்கா அந்த உண்டியலைக் கையில் எடுத்துப் பார்த்துத் தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள்.

சிறு வயதில் ஒரு நாள் கோதையாச்சி சொன்ன கதையில் ஒரு மீன் வயிற்றில் 20 தங்கக் காசுகள் இருந்து, அதை ஒரு மீனவன் எடுத்துப் பணக்காரன் ஆன கதை நினைவில் வந்துபோனது. அவள் சிறுமியாக இருந்த நாட்களில் இதுபோன்ற உண்டியல்கள் எதையும் பார்த்தது இல்லை. அப்போது எல்லாம் செம்மண் நிறத்தில் உள்ள மண் உண்டியல்கள்தான் விற்பனையாகின. இப்போதுதான் எத்தனை விதமான உண்டியல்கள்.

சிறு வயதில் காசு சேர்த்துவைத்து தேர்த் திருவிழாவின்போது விதவிதமான பாசி வளையல், ரிப்பன் எல்லாம் வாங்க வேண்டும் என்று துர்கா ஆசைப்பட்டு இருக்கிறாள். எப்போதாவது காரைக்குளத்தில் இருந்து வரும் கதிரேசன் சித்தப்பா மட்டும் ஊருக்குப் போகும்போது அவளுக்கெனத் தனியே பத்தோ இருபதோ ரூபாய்களைத் தந்துவிட்டுப் போவார். மற்றபடி வீட்டுக்கு வரும் விருந்தாளிகளில் அவளுக்குக் காசு தந்தவர்கள் வெகு குறைவு. கூச்சப்பட்டுக்கொண்டு அவள் கேட்கவும் மாட்டாள்.

அவளது தம்பி சிவப்பிரகாசம் அப்படிக் கூச்சப்பட மாட்டான். காசைக் கேட்டு வாங்கிக்கொள்வான். எவ்வளவு ரூபாய் கிடைத்தாலும் சினிமா பார்ப்பது, ஹோட்டலில் போய் பூரி சாப்பிடுவது, பஜ்ஜி வாங்கித் தின்பது என்று இரண்டு நாட்களுக் குள் செலவழித்துவிடுவான். அம்மா அவனை ஓட்டைக் கை என்று திட்டு வாள். அவர்கள் வீட்டில் காசு சேர்ப்பதில் கெட்டியாக இருந்தவள் தமயந்தி மட்டுமே. அவள் துர்காவைவிட மூன்று வயது மூத்தவள். அந்த கெட்டிக்காரத்தனம்தான் இப்போது அவளை அமெரிக்காவில் வாழவைத்திருக்கிறது. சிறு வயதில் கெட்டிக்காரத்தனமாக உள்ள பலர் பெரியவர்களானதும் தோற்றுப்போய்விடுகிறார்கள். சிலருக்குத்தான் அந்தக் கெட்டித்தனம் வாழ்நாள் பூராவும் அமைந்துவிடுகிறது.

துர்கா உண்டியலின் விலையைக் கேட்டாள். மண்பானைகள் விற்பனை செய்யும் அந்தப் பெரியவர் உண்டியலைக் கையில் வாங்கிப் பார்த்துவிட்டு முப்பது ரூவா குடும்மா என்றார். விலை அதிகம் என்று யோசித்தபடியே பார்த்தாள். ”உண்டியலை வாங்கிக் குடும்மா… உன் மக சந்தோ ஷப்படுவா” என்று கடைக்காரர் சொன்னதும் அவளது முகம் மாறியது. திருமணமாகி பதினோரு வருஷங்கள் கடந்த பிறகும் அவளுக்குக் குழந்தை இல்லை. அந்த வலி ஒவ்வொரு விளையாட்டுப் பொருளைப் பார்க்கும்போதும் தெறிக்கவே செய்கிறது. இதற்காகவே டி.வி-யில் குழந்தைகள் தொடர்பான விளம்பரங்கள் வருவதைக்கூடப் பார்க்க மாட்டாள். ஸ்ரீதரன் குழந்தையின்மைபற்றிப் பேசுவதைக்கூட விரும்புவது இல்லை. ஒன்றிரண்டு வருஷங்கள் இருவரும் மாறிமாறி சிகிச்சை எடுத்துக்கொண்டார்கள். ஆனாலும் கர்ப்பம் தரிக்கவே இல்லை. முடிவில் ஒரு நாள் ஸ்ரீதரன் சொன்னான்… ‘துர்கா, பிள்ளை பிறக்கிறப்போ பிறக்கட்டும்… ஒருவேளை பிறக்காமலே போயிட்டா, நமக்குக் கொடுத்துவெச்சது அவ் வளவுதான்னு நினைச்சிக்கிடுவோம். இப்படி ஒவ்வொரு டாக்டர்கிட்டயாப் போயி மருந்து மாத்திரை சாப்பிட்டு மாசக்கணக்கில் காத்துக் கிட்டு இருந்து ஏமாந்துபோறது மனசுக்குக் கஷ்டமா இருக்கு. இதுல உன் தப்பு, என் தப்புனு எதுவும் இல்லை. நமக்குக் கொடுப்பினை இல்லே, அவ்வளவுதான்!’

அதைக் கேட்டு துர்கா அழுதாள். ஸ்ரீதரன் அவளைத் தேற்ற முயற்சிக்கவே இல்லை. நீண்ட அழுகைக்குப் பிறகு அவன் சொன்னதுதான் சரி என்று அவளும் ஏற்றுக்கொண்டுவிட்டாள். எப்போதாவது பின்னிரவில் உறக்கம் பிடிக்காமல் இந்த நினைவு மேலோங்கத் துவங்கிவிடும். அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் முகத்தைப் புதைத்துக்கொண்டு சத்தம் இல்லாமல் அழுவாள். ஸ்ரீதரனும் அப்படித்தான் இருக்கக்கூடும். ஆனால், அவளிடம் அதைக் காட்டிக்கொண்டது இல்லை.

மண்பானை விற்பவருக்கு அவளது சொந்த வலி தெரியுமா என்ன? அவள் அந்தக் கிழவரையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளது நினைப்பு சட்டெனத் தாவி மாறியது. பெண் பிள்ளைகள் மட்டும்தான் உண்டியல் வாங்க வேண்டுமா என்ன? பையன்கள் செலவழிக்கப் பிறந்தவர்கள், பெண்கள் சேமிக்கப் பிறந்தவர்கள் என்று யார் சொன்னது? இந்த உண்டியலே வேண்டாம் என்று சொல்லிவிடலாமா என்று நினைத்தாள். அவளது முகச்சுழிப்பை அறிந்துகொண்டவரைப் போல, ‘இருபத்தைந்து ரூபாய் குடும்மா போதும்’ என்று உண்டியலை அவள் முன்பாக நீட்டினார். ‘வேணாம் இருக்கட்டும்’ என மறுத்தபடி அவள் தனது காய்கறிக் கூடையைத் தூக்கிக்கொண்டு கடையைவிட்டு விலகி நடப்பதுபோல நகர்ந்தாள்.

கடைக்காரக் கிழவர் தனது இருக்கையைவிட்டு எழுந்து நின்று, ‘ஏம்மா வேணாம்கிறே, பதினஞ்சு ரூபாய்க்குத் தர்றேன், வாங்கிக்கோ’ என்றார். அவள் வாங்க வேண்டாம் என்ற நினைப்பில், ”பத்து ரூபாய்க்குத் தருவீங்களா?” என்று கேட்டாள். அவர் நிமிஷ நேரத் தயக்கத்துக்குப் பிறகு, ‘சரி குடு’ என்று உண்டியலை ஒரு காகிதத்தில் மடிக்கத் துவங்கினார்.

இதில் காசு சேர்த்துவைத்து என்ன செய்வது? மாசச் சம்பளம் மொத்தமாக அவளிடம்தானே இருக்கிறது. ஆனாலும் சேமிக்கிற காசுக்குத் தனி மதிப்பு இருக்கவே செய்கிறது. பத்ரிநாத்துக்கு ஒரு முறையாவது போய்வர வேண்டும். அவ்வளவு பனியை நேரில் பார்த்ததே கிடையாது. அதிகபட்சம் அவள் அறிந்த ஜில்லிடல் வீட்டு பிரிஜ்ஜில் உறைந்துபோயிருக்கிற பனிக் கட்டியைச் சுத்தம் செய்ய முயன்று கையை வைத்ததுதான்.

பத்ரிநாத்தில்தான் எவ்வளவு பனி! மலைக்குப் போர்வை போர்த்திவிட்டதுபோல. அங்கே போய் வர எவ்வளவு செலவாகும்? இந்த உண்டியல் மொத்தமாக நிரம்பினாலும் ஆயிரம் ரூபாய்கூடத் தேறாதுதானே? பின் எதற்கு இந்த உண்டியல்? ஆனால், உண்டியலைக் கையில் எடுத்த அந்த நிமிஷம் தான் ஒரு சிறுமிபோல ஆனது சந்தோஷ மாகத்தான் இருந்தது. அதற்கு விலைதான் அந்தப் பத்து ரூபாய் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

கிழவர் உண்டியலை அழகாகக் காகிதத்தால் சுற்றினார். தெரு நாய் ஒன்று சாப்பிட எதுவும் கிடைக்காமல் வாலை ஆட்டியபடியே அவள் காலடியில் இருந்த காய்கறிப் பையை நெருங்கி வந்தது. அவள் கையைக் காற்றில் சூவென வீசி நாயை விரட்டிவிட்டு, பர்ஸைத் திறந்து காசை வெளியே எடுத்துக் கிழவரிடம் கொடுத்தாள். உண்டியலைப் பத்திரமாகக் காய்கறிக் கூடைக்குள் வைப்பது எளிதானதாக இல்லை. இதற்காக அவள் வாங்கியிருந்த புடலங்காய்களையும் தேங்காயையும் வெளியே எடுத்துவைத்தாள்.

அப்போது மார்க்கெட்டின் மேற்கு வாசலில் இருந்து ஒருவன் தலைதெறிக்க ஓடி வருவது தெரிந்தது. அவன் ஓங்காரமான குரலில் அலறியபடியே ஓடிவந்தான். அவனைத் துரத்திக்கொண்டு நாலைந்து பேர் ஓடி வந்தார்கள். கிழவர் கடையைவிட்டு எக்கி வெளியே பார்த்துவிட்டு பீதியான முகத்துடன், ‘ஓரமாப் போய் நில்லும்மா’ என்று சொல்வதற்குள் ஓடிவந்தவன் வாழை மட்டை சறுக்கி, வெங்காயக் கூடையின் முன்பாக விழுந்தான். துரத்தி வந்தவர்கள் விழுந்துகிடந்த மனிதனைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள்.

துர்கா தன் வாழ்வில் முதன்முறையாக ஒரு மனிதனை ஐந்து பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டுவதை அப்போதுதான் பார்த்தாள். என்ன கோரம் இது? விழுந்துகிடந்தவன் எழுந்து கொள்வ தற்காக திமிறித் தவித்தான். அவனது குரல்வளை யில் ஒருவன் காலை வைத்து அழுத்த, மற்றவர்கள் அவனது கழுத்தில், அடிவயிற்றில் இடுப்பில் என அரிவாளால் மாறி மாறி வெட்டினர்.

மரண ஓலமும் ரத்தம் ஒழுகத் துடிக்கும் உடலுமாக அந்த மனிதனை அப்படியே போட்டு விட்டு வெட்டியவர்கள் வெளியேறிப் போனார்கள். துர்காவுக்குப் படபடப்பாக வந்தது. தான் ஒரு கொலையைப் பார்த்திருக்கிறோம். ஒரு மனிதன் துடிதுடித்துச் சாவதைக் கண் முன்னே பார்த்திருக்கிறோம். என்ன அவலம் இது? எதற்காகக் கொன்றார்கள்?

துர்காவின் தொண்டையை யாரோ இறுக்கிப் பிடித்து மூச்சு முட்டச்செய்ததுபோல் இருந்தது. அவள் கைகள் நடுங்கத் துவங்கின. அடிவயிற்றினைக் கைகொண்டு பிசைவதுபோல இருந்தது. அங்கிருந்து ஓடிவிட வேண்டும் என மனது பதைபதைக்கத் துவங்கியது.

கடையில் இருந்த கிழவரைக் கூடக் காணவில்லை. அருகில் இருந்த தேங்காய்க் கடை, இலைக் கடை, இஞ்சி பூண்டு விற்கும் கடை ஒன்றில்கூட ஆட்களைக் காணோம். அவள் ஏன்தான் இன்னமும் அங்கேயே நிற்கிறோம் என்ற குழப்பத்துடன் தன் காலடியில் விழுந்துகிடந்த புடலங்காயைப் பார்த்தாள். அதைக் குனிந்து எடுத்துப் பையில் வைப்பதற்குக்கூட அவளிடம் தைரியம் இல்லை. ஓரக்கண்ணால் செத்துக்கிடந்தவனைப் பார்த்தாள். அந்த மனிதனுக்கு 30 வயது இருக்கக்கூடும். கறுப்பு நிற பேன்ட்டும் ஊதா நிறக் கோடுகள் போட்ட முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தான். கால்கள் திருகி, முகம் ஒரு பக்கம் புதைந்துகிடந்தது.

யார் அவன், எதற்காக அவனைக் கொன்றார்கள். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படியாவது பாதுகாப்பாக வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்ற பயம் அவளுக்குள் நிரம்பத் துவங்கியது. ஒவ்வொரு நாளும் காலையில் ஸ்ரீதரன் அலுவல கத்துக்குக் கிளம்பிப் போன பிறகு, துர்கா காய்கறி வாங்க வருவாள். அப்படி வாங்கி முடித்த பிறகு, தெற்கு வாசல் வழியாக வெளியேறி நடந்து மீரான் பழரசக் கடையில் போய் ரோஸ் மில்க் குடித்துவிட்டு, வெயிலேற நடந்து காந்தி நகரில் உள்ள தனது வீட்டுக்குப் போய்ச் சேருவாள். அதற்கு எப்படியும் 20 நிமிடங்கள் ஆகும்.

இன்றைக்கு ஏன் மாலை நேரம் மார்க்கெட் டுக்கு வந்தோம் என்று தன் மீதே ஆத்திரமாக வந்தது. அவள் பதற்றத்துடன் தனது காய்கறிக் கூடையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித் தாள். அப்போது சங்கரன்செட்டியார் சந்துக்குள் இருந்து நாற்பது ஐம்பது பேர் கையில் அருவாள் கட்டைகளுடன் மார்க்கெட்டினைச் சூறையாடிய படியே வருவது தெரிந்தது. வந்தவர்கள் ‘ஓடு… ஓடு…’ என எதிர்ப்பட்டவர்களை வாழைத்தண்டால் அடித்து விரட்டினார்கள்.

அவளும் ஓடத் துவங்கினாள். அவளால் ஓட முடியவில்லை. உடல் ஏன் இப்படிக் கனத்துப்போயிருக்கிறது. கால்களை எடுத்துவைக்க முடியாமல் மூச்சு வாங்கத் துவங்கியது. காய்கறிக் கூடை வேறு ஒரு பக்கம் இழுத்தது. கேரட்டும் பீட்ரூட்டும் பூசணிக்காயும் விசித்திர மான பொருள்களைப் போலத் தோன்றின. பையை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடலாமா என்று கூட யோசித்தாள். ஆனால், அப்படி விட மனசு வரவில்லை. மிகுந்த பிரயாசையுடன் அவள் கண்களை மூடிக்கொண்டு வடக்கு நோக்கி ஓடினாள்.

கண்களைத் திறந்து பார்த்தபோது வெல்லக் கிட்டங்கி அருகே வந்திருப்பது தெரிந்தது. 200 அடிகூட இருக்காது. இவ்வளவுதான் தன்னால் ஓட முடிந்திருக்கிறதா? வடக்கு வாசலுக்குப் போக இன்னும் நிறைய ஓட வேண்டுமே. ஏன் உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது? அவள் பையை இழுத்துக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித் தாள்.

AvarPeyarMukiyam2

ஜீன்ஸ் அணிந்த பையன் தற்செயலாகக் கண்ணில்பட்டான். அவன் இன்னொரு பக்கம் போய்க்கொண்டு இருப்பது தெரிந்தது. அவனை அழைக்கலாமா என்று யோசிப்பதற்குள் அந்தப் பையன் மறு பக்கம் போய்விட்டு இருந்தான். துர்கா ஓட முடியாமல் ஓடிக்கொண்டு இருந்தாள். யாரோ பின்னால் துரத்திவந்து அவளை அமுக்கிப் பிடித்து விடப்போவதுபோல் உணர்ந்தாள். குதிகால் வலிக்க ஆரம்பித்தது. கெண்டைச் சதைகள் இறுகக் கவ்விக்கொண்டதைப் போலாகின.

துர்கா பத்தாம் வகுப்பு வரை பள்ளி மைதானத்தில் ஓடியிருக்கிறாள். அதன் பிறகு, எம்.எஸ்சி. படிக்கும் வரை ஓடியதாக ஞாபகமே இல்லை. ஒரே ஒரு முறை மதுரையில் ராமேஸ்வரம் ரயிலைப் பிடிப்பதற்காக பிளாட்ஃபாரத்தில் ஓடியிருக்கிறாள். அதுவே மார் அடைப்பதுபோல வந்து ரயிலில் அன்றிரவு சாப்பிடக்கூட முடியாமல் போனது.

அவளுக்குப் பள்ளி வயதில் கூடைப் பந்து விளையாடுவது பிடிக்கும். தடகளப் போட்டியில் வேகமாக ஓடவும் செய்வாள். திருமணத்தோடு எல்லாமும் கைவிட்டுப் போய்விட்டது. இன்றைக் குத்தான் அவள் உடல் எடை எவ்வளவு பெரிய பாரம் என்பதை அவள் முழுமையாக உணர்ந் தாள். இத்தனை வருடங்கள் அந்த மார்க்கெட் டுக்கு வந்து போனபோதும் கிட்டங்கி பக்கம் எல்லாம் அவள் வந்ததே கிடையாது. ஒரே புகையிலை நாற்றமாக இருந்தது. அது சுருட்டுப் புகையிலை மற்றும் பீடி கம்பெனிகளின் கடை கள் உள்ள பகுதி. அந்தப் பக்கம் கடந்தாலே, புகையிலை வாடை மூச்சைத் திணறச்செய்யும். ஆனால், இன்றைக்கு அதற்குள்ளாகத்தான் நடந்தாள்.

இதற்கு மேல் வேகமாக நடக்க முடியாது என்பதுபோல அவளது கால்கள் நடுங்கின. அவள் பெருமூச்சிட்டபடியே நின்று திரும்பிப் பார்த்தாள். அவள் வயதையத்த ஒரு பெண் தனது இரண்டு பிள்ளைகளை இழுத்துக்கொண்டு ஓடினாள். அந்தப் பிள்ளைகள் தாயைவிட வேகமாக முன்னால் ஓடினார்கள். ”ஜெயா… ஓடாதே நில்லு. கேசவ் சொன்னாக் கேளுடா… அம்மா வர்றேன்” என்று அந்தப் பெண் கத்திய படியே அவர்கள் பின்னால் ஓடினாள். அந்தப் பெண்ணாலும் ஓட முடியவில்லை. பிள்ளை களை அழைக்கும் அவளுடைய குரல் உடைந்து சிதறுவதுபோல் இருந்தது. அவள் தன் நெஞ்சைப் பிடித்தபடியே போய்க்கொண்டு இருந்தாள்.

வடக்கே இருந்து அரிசிப் பொரி விற்கும் ஓர் ஆள் தனது சைக்கிளைத் தள்ளியபடியே வேகமாக வந்தான். அவன் பயத்தோடு ஓடிய ஆட்களைப் பார்த்துச் சொன்னான், ”வாழை மண்டியில பெட்ரோலை ஊத்திப் பத்தவெச்சிருக்காங்க. அந்தப் பக்கம் போக முடியாது. தீ கொழுந்துவிட்டு எரியுது. ராமசாமி தியேட்டர் பின்னாடி உள்ள சந்து ஒண்ணுதான் வெளியே போற வழி. படுபாவிப் பயக மார்க்கெட்ல வெச்சு எல்லாரையும் உயிரோடுகொல்லப் போறாங்க. எனக்குக் கண்ணைக் கட்டிக்கிட்டு வருது. எதுக்குத்தான் இப்படி சாதி வெறி பிடிச்சு அடிச்சிக்கிடுறாங்களோ..?”

வாழை மண்டியில் பற்றிய தீயின் காரண மாகக் காற்றெங்கும் புகை குபுகுபு எனப் பரவத் துவங்கியது. கண்ணில் புகைபட்டு எரிச்சல் உண்டாகியது. நெருப்பு பற்றிக்கொண்டுவிட் டால் எளிதாகக் கூரை வேய்ந்த கடைகள் யாவும் தீப்பற்றிக்கொண்டுவிடும். அந்தப் பொரி விற்பவன் சொன்னதுபோல கூட்டத்தோடு சிக்கி சாகப்போகிறோமா? ஏன் இப்படி மார்க் கெட்டில் மாட்டிக்கொண்டு யார் கையாலோ சாகப்போகிறோம்? நினைக்கவே அவளுக்கு அழுகையாகவும் பயமாகவும் வந்தது.

ஆட்கள் அங்கும் இங்கும் ஓடினர். எந்தப் பக்கம் போவது என்று புரியாமல் அவளும் கூட்டத்தோடு நெரிசலில் சிக்கினாள். ஒரு ஆள் மண்டை உடைந்து கன்னத்தில் ரத்தம் வழிய சேமியா பாக்கெட் விற்கும் கடையின் முன்பாக உட்கார்ந்து அழுதுகொண்டு இருந்தான். அந்தப் பக்கம் போகாமல் விலகி இடதுபுறம் ஒதுங்கி நடக்க ஆரம்பித்தாள். சாக்கடை உடைந்து ஓடியது. வழி எங்கும் ஒரே அழுகல் தக்காளிகளும் முட்டைக்கோஸ்இலை களுமாக இருந்தன. அதற்குள் எப்படிக் கால்வைத்து நடப்பது என்றே தெரியவில்லை.

யாரோ சிலர் ஆவேசத்துடன் எதிர்ப் பக்கம் இருந்து ஓடி வந்தனர். நடக்க நடக்க அடைத்துச் சாத்தப்பட்டகடைகளாகத் தெரிந்தன. வெளியேறும் வழியே காணோம். தொலைவில் ஒரு பெண் அலறும் ஓசை கேட்டது. என்ன செய்கிறார்கள் அந்தப் பெண்ணை? எங்கே அது நடக்கிறது? அந்தப் பெண்ணின் அலறல் சத்தத்தைத் தொடர்ந்து, ‘அய்யய்யோ… அய்யய்யோ…’ என்ற கூக்குரல் எழுந்து அடங்கியது.

எந்தப் பக்கம் இருந்து யார் வருகிறார்கள், யாரை அடித்துக் கொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், எலிப் பொறிக்குள் சிக்கிய எலி ஓடுவதுபோலக் குழப்பத்துடன் ஆட்கள் அங்கும் இங்கும் ஓடினர். துர்கா எந்த வழியாகப் போவது என்று புரியாமல் மூடிக்கிடந்த சர்பத் கடையின் மரத் தூணைப் பிடித்துக்கொண்டு சாய்ந்து அழுதாள். அவள் நின்றிருந்த இடத்தில் இருந்து சில அடிகள் தொலைவில் லுங்கி கட்டிய ஆளைப் பத்துப் பேர் சேர்ந்து அடித்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களைக் கடந்துபோனால் மட்டுமே பிரதான சாலைக்குப் போக முடியும். ஆனால், அதை எப்படிக் கடந்து போவது? இத்தனை பேர் சேர்ந்து ஒரு ஆளை உருட்டுக்கட்டையால் தாக்குகிறார் களே என்று துர்காவுக்கு நடுக்கமாக இருந்தது.

துர்கா அப்போதுதான் கவனித்தாள். மூடிக்கிடந்த புகையிலைக் கடை ஒன்றின் சாக்குப் படுதாவுக்குள் அந்த ஜீன்ஸ் அணிந்த பையன் ஒடுங்கி நின்றிருந்தான். அவனும் தன்னைப் போலவே பயந்துபோனவனாக ஒளிந்து இருக்கிறான்போலும். கும்பல் வெளியேறும் வரை ஒதுங்கியிருப்பது நல்லதுதானே என்று தோன்றியது. அவள் மெதுவாகப் படுதாவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

சாக்குப் படுதாவில் இருந்த சிறிய துவாரத்தின் வழியே அந்தப் பையன் அவள் வருவதைக் கண்டிருக்க வேண்டும். தனது கைகளை நீட்டி அவளை மறைவுக்குள் இழுத்துக்கொண்டான். ஆள் உயரப் படுதாவுக்குள் அவள் வந்து நின்றபோது அதற்குள் மறைந்துகொண்டுவிட் டால் வெளியே யாருக்கும் சுத்தமாகத் தெரியாது என்பது புரிந்தது. அந்தப் பையன் இறுக்கமான முகத்துடன் நல்லா உள்ளே வந்து நில்லுங்க என் றான். அவன் கைகளில் காய்கறிப் பை இல்லை. ஒருவேளை வீசி எறிந்திருக்கக் கூடும். அவன் தணிவான குரலில் சொன்னான், ”அந்த சந்து வழியா போனா வெளியே போற வழி இருக்கு. அந்த ஆட்கள் போனதும் வெளியே போயிரலாம்.” அவள் தலையாட்டிக்கொண்டாள். அவள் கணவனைத் தவிர வேறு எந்த ஆணோடும் இவ்வளவு நெருக்கமாக ஒட்டிக்கொண்டு நின்றது இல்லை. அவனது கைகள் தற்செயலாக உரசுவதுபோல உரசிக்கொள்கின்றன. அவனது உடல் மணம், வியர்வை வாடை, மூச்சுக் காற்று, ச்சே… என்ன நினைப்பு அது. இந்தக் கும்பல் கலைந்துபோவதற்கு எவ்வளவு நேரமாகும்?

திருமண நாள் அன்று அவள் கணவனோடு புகைப்படம் எடுப்பதற்கு இவ்வளவு நெருக்கமாக நின்றிருக்கிறாள். அதன் பிறகு இன்றைக்குத்தான் வேறு ஓர் ஆணோடு நின்றிருந்தாள். காய்கறிப் பையைக் கீழே வெச்சிக்கோங்க என அவனாகப் பிடுங்கிக் கீழேவைத்தான். அவன் பக்கம் திரும்பிப் பார்க்கவே வேண்டாம் என்பதுபோல அவள் வேறு பக்கம் பார்த்துக்கொண்டே இருந்தாள். அவன் எதையோ யோசிப்பவனைப் போல நகத்தைக் கடித்துக்கொண்டே இருந்தான்.

எப்படியாவது வீடு போய்ச் சேர்ந்துவிட்டால் போதும் என்றிருந்தது. அந்தப் பையன் பொறுமை அற்றவனைப் போல அடிக்கடி சாக்குப் படுதா வைத் தூக்கி வெளியே ஆட்கள் போய்விட்டார் களா என்று பார்த்துக்கொண்டே இருந்தான். அவனோடு அப்படி ஒன்றாக நிற்பது அவளுக்கு என்னவோ செய்தது. அதை அவனும் உணர்ந் தானா என்பது தெரியவில்லை. வெளியே மாலை அடங்கி இரவு எழுந்தது. சாலையோர விளக்கு களின் வெளிச்சம் அவர்கள் நின்றிருந்த இடத் தின் அருகே நீரைப்போல ஓடியது. துளித் துளி யாகச் சொட்டிக் கடந்துபோவதுபோல நிமிஷங் கள் கரைந்துகொண்டு இருந்தன. அவன்எதையோ நினைத்துப் பெருமூச்சிட்டபடியே தலையைக் குலுக்கிக்கொண்டான். துர்கா அவனைக் கவனிக் காதவள்போலவே நின்று இருந்தாள். அவன் எதையோ பேச விரும்பியவனைப் போல தொண்டையைச் செருமிக்கொண்டான். அவனோடு என்ன பேசுவது என்று அவளுக்குப் புரியாமல் அமைதியாக இருந்தாள். அவளது பையில் இருந்த உண்டியலைக் கவனித்தவனைப் போலக் கேட்டான்…

”இந்த உண்டியலை யாருக்காக வாங்கிட்டுப் போறீங்க?”

”எனக்குத்தான்.”

”இந்த வயசுல உண்டியல்ல சேர்த்துவெச்சு என்ன வாங்கப்போறீங்க?”

”சும்மா சேக்கணும்னு தோணுது… அதான்!”

”உண்டியலை உடைக்கிற நாள்ல அழுவீங்களா?”

”இல்லே… எதுக்குக் கேட்குறீங்க?”

”நான் அழுதிருக்கேன். எங்கப்பா எனக்குத் தெரியாம என் உண்டியலை எடுத்து உடைச்சி காசை எடுத்துட்டுப் போயிடுவார். அதுல இருந்து நான் உண்டியலே சேக்குறது இல்ல!”

ஒரு பள்ளிச் சிறுவனைப்போல அவன் பேசியது அவளுக் குப் பிடித்திருந்தது. இவனோடு பேசுவதில் தப்பொன்றும் இல்லை என்று இணக்கமாக உணர்ந்தாள்.

”ஹாம்சன்ல படிக்கிறீங்களா?” என்று கேட்டாள்.

”ஃபர்ஸ்ட் இயர். நீங்க என்ன படிக்கிறீங்க…” என்றான் அவன்.

வேண்டும் என்றே கேட்கிறான் என்பது புரிந்தது. ”ஹவுஸ் ஒய்ஃப்” என்றாள். அவன் தலையசைத்துவிட்டுத் தனக்குத்தானே சிரித்துக்கொண்டான். எதற்குச் சிரிக்கிறான்? ஹவுஸ் ஒய்ஃப் என்பதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? அவன் ஏதோ யோசனை செய்தவனைப் போல அமைதியாகிவிட்டான். அவளுக்கு அந்தப் படுதாவின் பின் னால் நிற்பது மூச்சுமுட்டுவதுபோல் இருந்தது. கைகளால் முகத்தின் முன்னால் வீசிக்கொண்டாள்.

அந்தப் பையன் அதன் பிறகு அவளிடம் எதுவும் பேசவில்லை. நீண்ட காத்திருப்பின் பிறகு, சாக்குப் படுதாவை விலக்கி வெளியே பார்த் தான். தொலைவில் யாருமே இல்லை. அந்தக் கும்பல் போயிருந்தது. அவள் குனிந்து தனது காய்கறிப் பையை எடுத்துக்கொண்டாள். அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்போல் இருந்தது. மெல்லிய புன்னகையோடு திரும்பி அவனை ஏறிட்டுப் பார்த்த போது, அவன் ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் அவள் தோளைப் பிடித்து இழுத்து, அவள் முகத்தைத் தன் முகத்தோடு பொருத்தி உதட் டோடு அழுத்தி முத்தமிட்டான்.

அவள் விலக்க முயன்றாள். ஆனால், அவன் விடவில்லை. ஐஸ் கட்டியைப் பல்லால் கடித்துத் தின்றதுபோன்ற சிலிர்ப்பூட்டும் முத்தம். அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் நின்ற அவளைவிட்டு விலகி, படுதாவுக்கு வெளியே நின்று சோம்பல் முறித்த வனைப் போலச் சிரித்தான். பிறகு, அவளுடைய கூடையில் இருந்து ஒரு கேரட்டை எடுத்துக் கடித்தபடியே விடுவிடுவெனத் தனியே நடந்து போக ஆரம்பித்தான்.

அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. உதட்டைப் புடைவை யால் அழுத்தித் துடைத்துவிட்டு, முகத்தையும் துடைத்துக்கொண்டாள். மனதில் இருந்த படபடப்பு அடங் கவே இல்லை. எதற்காக இப்படி நடந்துகொண்டான்? மார்க்கெட்டில் நடந்த கொலையும் இதுவும் ஒன்றுதான் இல்லையா? உலகில் எங்காவது ஒரு பெண் இப்படி நடந்திருக்கிறாளா? இந்த முத்தம் எதன் அடையாளம்? உன்னைப் போல எந்தப் பெண்ணையும் சந்தர்ப் பம் கிடைத்தால் என்னால் அடைய முடியும் என்பதை உறுதிசெய்துவிட்டுப் போகிறானா? இது காமத்தில் விளைந்த முத்தம் இல்லை. அதிகாரத்தில், அகம்பாவத்தில், தான் ஓர் ஆண் என்ற திமிரில் விளைந்த முத்தம் இல்லையா? முத்தம்கூடவா இப்படி வன்முறைக் கருவியாகிவிட முடியும்?

உதட்டில் படிந்த அந்த முத்தக் கறையை எப்படி அழிப்பது? யோசிக்க யோசிக்க… அவளுக்குள் குமட்டிக்கொண்டுவந்தது. இது போன்ற ஒரு வன்முறையைப் பற்றி ஸ்ரீதரனிடம் சொன்னால், அவன் எளிதாக எடுத்துக்கொள்வானா? அவனுடைய அம்மாவுக்குத் தெரிந்தால், அவளை வீட்டைவிட்டுத் துரத்திவிட மாட்டாளா? அவளுடைய வீதியில் வசிப்பவர்கள், அவளுடைய சொந்த அக்கா, தம்பிகள் என்ன நினைப்பார்கள்? அவளுக்கு யோசிக்க யோசிக்க… அழுகை முட்டிக்கொண்டுவந்தது.

என்ன வாழ்க்கை இது? ஏன் இப்படிப் பாதுகாப்பே இல்லாத உலகில் வாழ்கிறோம்? எல்லாத் தருணங்களிலும் காம உணர்ச்சி ஆணின் அடிமனதில் பொங்கிக்கொண்டேதான் இருக்குமா? இந்த அற்பப் புத்தி எங்கிருந்து வருகிறது? இதைத்தான் அவனது பெற்றோர்கள் உருவாக்கினார் களா?

சந்து வழியாக நடந்து அவள் பிரதான சாலைக்கு வந்தாள். ஒருவழியாக மார்க்கெட்டைவிட்டு வெளியே வந்துவிட்டோம். இனி பயம் இல்லை. அவள் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். சாலைஎங்கும் போலீஸ்காரர்களாக இருந்தார்கள். வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். கலவரம் காரணமாகச் சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன. வீட்டை நெருங்கி வரவர… அந்தப் பையன். அவன் இயல்பாகப் பேசிய விதம், அவனது முத்தம் என்று ஒவ்வொன்றாக மேல் எழுந்து வர… மனதுக்குள் குமட்டிக்கொண்டு வந்தது.

வீட்டை நெருங்கும்போது சாவியை எங்கே வைத்தேன் என்று கூடையில் கைவிட்டுப் பார்த்தாள். கூடையினுள் உண்டியலை வைக்கும்போது சாவியை வெளியே எடுத்த ஞாபகம் வந்தது. ச்சே… எல்லாம் இந்த உண்டியல் சனியால் வந்தது. இதை ஏன் வாங்கினேன் என்று ஆத்திரமாக வந்தது. உண்டியலை எடுத்து ஆத்திரத்துடன் அருகில் இருந்த வேலிப் புதரில் வீசினாள். அது உடைந்து நொறுங்கிய சத்தம் கேட்டது. சாவி இல்லாமல்போனதால் வீட்டுப் படிக்கட்டில் இருட்டுக்குள்ளாக உட்கார்ந்திருந்தாள். ஸ்ரீதரனிடம் உண்மையைச் சொன்னால் என்ன நடக்கும் என்பதைப் பற்றியே மனதில் நினைத்துக்கொண்டு இருந்தாள். நிஜத்தைச் சொன்னால் அதுதான் உண்மையான கலவரமாக இருக்கும். எதற்காக இதைச் சொல்ல வேண்டும்? சொன்னால் மட்டும் அந்த முத்தத்தை அழித்துவிட முடியுமா என்ன?

ஸ்ரீதரனின் பைக் சத்தம் கேட்டது. இருட்டில் இருந்து எழுந்து நின்றுகொண்டாள்.

”ஏன்டி… இருட்டுல உட்கார்ந்திருக்கே? வீட்டுச் சாவியைத் தொலைச்சிட்டியா?” என்றான். பதில் சொல்லாமல் நின்றாள்.

”யாரோ ஒரு ஆளை மார்க்கெட்ல வெட்டிப் போட்டுட்டாங்க. ஒரே கலவரமாக்கிடக்கு… நீ கோட்டிக்காரி மாதிரி அங்கே போயி மாட்டிக்கிட்டியோனு நினைச்சிப் பயந்துபோயிட்டேன். உனக்கு ஒண்ணும் ஆகலையே!” என்று கேட்டான்.

”நான் மார்க்கெட்டுக்குப் போகலை. தெக்கு பஜார் போயிட்டு வரும்போது சாவியைத் தொலைச்சிட்டேன்” என்றாள்.

”உனக்கு தெக்கு பஜார்ல என்ன வேலை? வீட்ல தின்னுட்டுத் தின்னுட்டுக் கொழுத்துப் போயி ஊர் சுத்துறியா? வீட்டுச் சாவியைக்கூடப் பத்திரமா வெச்சிக்க முடியாம… என்னடி நினைப்பு? வெளியே போய் தனியா இருந்து பாரு… அப்போதான்டி உலகம் புரியும். நானே பலசரக்குல இருந்து துணிமணி, காய்கறி வரைக்கும் பாத்துப் பாத்து வாங்கிப் போடுறேன்ல… அதான் திமிரெடுத்து அலையுறே!” என்றான்.

பதில் பேசாமல் கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள் துர்கா. இதற்குப் போய்… எதற்கு இப்படி அழுகிறாள்… என்று புரியாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான் ஸ்ரீதரன்.

– ஆகஸ்ட் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *