அப்போது எனக்கு பத்தொன்பது வயது. மாலாவுக்கு ஒன்றரை வயது. அவள் என்
தங்கைகளுடன் என் பிறந்த வீட்டிலேயே தானிருப்பாள். என்னைத் தேடவே மாட்டாள்.
மின்விளக்குவசதிகூட இல்லாத அந்த வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். பதினெட்டு
ரூபாய் வாடகை; ஒரே மாதம் அட்வான்ஸ். ஒரு பெரிய அறை, ஒரு சமையலறை நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் இருந்தது.
என் கணவருக்கு தங்கசாலைத்தெரு ’கவர்ன்மெண்ட் பிரஸ்’ஸில் வேலை. போக வர டிராம் வண்டி இருந்தது. பக்கத்திலேயே மாதம் ஒன்றுக்கு பாஸ் ஐந்துரூபாய். விடுமுறை நாட்களிலும் எங்காவது போகவர உபயோகப்படும். அந்தவீட்டில் இரண்டு வருடங்கள்கூட இருக்கமுடியவில்லை. என் இருபதாம் வயதில் எனக்கு ஒரு மகன் பிறந்தான். என்தங்கையின் திருமணம் என்று எல்லாருமே பனாரஸ் போய்வந்தோம். சில மாதங்களே உயிருடனிருந்த என் மகன் போனபின் அந்த வீடே எனக்கு பிடிக்கவில்லை. சென்னையில் டிராமும் நிறுத்தப்பட்டது. நாங்கள் ஜார்ஜ் டவுனுக்கு ஜாகை மாறினோம் லிங்கிச்செட்டிதெருவிலிருந்த ஒரு வீட்டில் குடியேறினோம்.
தங்கசாலை வீட்டில் நாங்களிருந்த எதிர்புறத்து வீட்டில் வசித்துவந்த குமுதாவை விட்டுப்போவது எனக்கு வருத்தமாயிருந்தது நல்ல சிநேகமான பெண். மாடிப்படியின் கீழே அவள் இருந்த ஒற்றை அறை வீடு சிறியதுதான் அதில் சடகோபனும் குமுதாவும் குடித்தனம் செய்தனர். அவருக்கு என்ன வேலை? என்ன சம்பளம் என்று நான் கேட்கவோ அவள் சொல்லவோ இல்லை. அவள் மாநிறம்தான். சுருட்டைமுடி, குறுகுறுவென்றலையும் கண்கள். வெடவெடவென்ற உருவம். நிதானமான உயரம் நிதானமான அழகான உச்சரிப்பில் அய்யங்கார் பாஷை. காலையில்எழுந்து வாசல் படிக்கு கோலம் போட்டவுடன் குளித்துவிடுவாள்.
அவளுடைய சிறிய வீட்டுக்கு இரட்டைகதவுகள். ஒற்றைக்கதவை சாத்தியபடிவைத்து டிபன் தளிகை செய்து புருஷனை சாப்பிடவைத்து டப்பாவில் கட்டிக்கொடுத்து அனுப்புவாள். எதிர்புறமிருந்த அலமாரியில் பெட்டியில் துணிமணிகள். அதன்மேல் இரண்டு தலையணைகள். கதவுமூலையில் பாய், ஸ்டவ் போன்ற சில முக்கியப்பொருள்கள் வைத்திருந்தாள். அலமாரியின் மேல்தட்டில் மளிகைப்பொருள் வைத்திருந்தாள். சுவற்றில் உருமுகம் பார்க்கும் கண்ணாடி, ஒரு நோட்புக் அளவில் ஒரு காலண்டர். ஒருமூலையில் லக்ஷ்மிபடத்தின் கீழே சிறிய விளக்கு. அடியில் கோலம். இரவு சாப்பாடானபின் துடைத்து பெருக்கிவிட்டு பாயை விரித்துப் படுப்பார்கள். ஜன்னல் ஏதுமில்லாததால் ஒற்றைக்கதவு திறந்திருக்கும், குளிர் மழை நாளில் கதவு சாத்துவார்கள். மழைச்சாரல்கூட அடிக்காமல் மாடிப்படி தடுத்துவிடும், அவர்கள் சந்தோஷமாக இருந்தார்கள். சடகோபன் சீக்கிரம் வந்தால் இருவரும் பீச்சுக்கு அல்லது சினிமாவுக்குப் போய்வருவார்கள்.
அவன் பெற்றோரைப் பார்க்கப்போனால் குமுதா தனியாயிருப்பாள். ஏன் மாமியார், மாமனாருடன் தகராறா என்ன? நான் கேட்கவோ அவள் சொல்லவோ இல்லை. உறவினர் என்று வரவோ, பிறந்தகம் என்று அவள் பேசவோ இல்லை. கடிதப்போக்கு வரத்துகூட இருந்ததாக பேச்சில்லை. அப்படி ஒரு சிறிய அறையில் வசிப்பது நன்றாயிருப்பதாக எனக்கும் தோன்றும்.
அவள் வீட்டுக்கு விலக்காகிவிட்டால் வாசப்படி மூலையில் படுப்பாள். அவளுடைய கணவர் சமையல் செய்வார். வாசல் திண்ணையில் படுப்பார். தானும் சாப்பிட்டு அவளுக்கும் கொடுத்து டப்பாவிலும் எடுத்துப்போவார். தினமும் அவள் படுத்த இடத்தில் தண்ணீர் தெளித்து பிறகுதான் உள்ளே நுழைவார்.
அவள் அழகாக சின்னச் சின்ன சாமானை வைத்துக்கொண்டு குழந்தைகளோடு விளையாடுவதுபோல அலம்பித்துடைத்துவைப்பாள். அவளிடம் எப்போதுமே கடுகடுவென்ற பேச்சோ அழுகையோ கோபமோ இருக்காது. தினமும் மொட்டை மாடியில் துணி உலர்த்தி மடித்து பெட்டியில் வைத்துவிடுவாள். ஒரு பொருள் தனியாக கிடக்காது.
காய் நறுக்கி அம்மியில் துளித்துளியாக துவையல் அரைத்து கல்லுக்கு காணாமல் அடைக்கு அரைத்து அதில் எனக்கும் ஒன்று பிள்ளைத்தாய்ச்சி என்று கொடுப்பாள்.
என் மகன் இறந்தபோது மிகவும் மனம் வருந்தி அழுதாள். எனக்கே அவளைப் பார்க்க வருத்தமாக இருந்தது.
அத்தனை அன்புள்ள நல்லபெண், நாங்கள் வீடு மாறிய பிறகு என் பிறந்தகத்தில் அட்ரஸ்விசாரித்து ஒரு முறை வந்து பார்த்தாள். அவர்களும் ஸ்ரீமுஷ்ணம் போய் அங்கேயே ’செட்டில்’ ஆகிவிடப் போவதாகச் சொன்னாள். பிறகு அவர்களுக்கு வரதராஜன் என்று பிள்ளை பிறந்திருப்பதாக என் தங்கை சொன்னாள்.
அவளைப் பற்றி, அந்த நாட்களைப் பற்றி நான் அடிக்கடி சிலாகித்துப் பேசுவது வழக்கம். கேட்கும் என் பேரன் பேத்திகள் “ஒனக்கு குடிசையில் இருக்கக்கூட ஆசைதான். எல்லாரும் எப்போதும் பங்களாவுல இருக்கத்தான் ஆசைபடுவா. நீதான் அதிசயமான பாட்டி’’ என்று கேலிசெய்வார்கள்.
ஆனால், பொதுவாக ’வறுமையில் செம்மை’ என்று யாரும் வாழுவதில்லை. சின்ன கஷ்டத்தைக்கூட சொல்லிச் சொல்லி புலம்பி தான் கஷ்டத்துக்கே பிறந்ததுபோல் காண்பித்துக்கொண்டு மற்றவர்களையும் பரிதவிக்கவைப்பார்கள். இதில் குமுதா போன்ற மெச்சத்தகுந்த நல்ல பெண்கள் அபூர்வம்தான். ’எங்கிருந்தாலும் அவள் நலபடியாக இருக்கட்டும்’ என்று நெகிழ்ச்சியோடு எண்ணிக்கொள்வேன்.
– 23 ஜூலை, 2012
எளிமையான வாழ்வில் இருக்கும் நிம்மதி வேறு எதிலும் இல்லை…