கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 19,538 
 
 

“நான் வேணா இருக்கட்டுமாப்பா… அப்பாகிட்ட சொல்லிக்கலாம். ஒம்பதாம் மாசத்தை ஒட்டிகூடப் போகலாமாம்,’ சௌம்யா காதருகே வந்து கேட்டபோது, ஒரு கணம் “இருந்துவிடச்’ சொல்லிவிடலாமா என்று மனசு அடித்துக் கொண்டது. கட்டுப்படுத்திக் கொண்டேன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. நீ கௌம்பு. நான் பார்த்துக்கறேன். பாம்பே இங்கு இருக்கு. நான் வந்து பார்த்துக்கறேன்… நீ ஏன் டென்ஷன் ஆகற…?’

சொன்ன வார்த்தைகள் அனைத்தும் பொய். முடிந்தால், கூடவே இருந்துவிட வேண்டும் என்றுதான் பரபரத்தது. இல்லை, அவளோடு பாம்பேவரை போய்விட்டு வரலாம். எப்படி இருந்தாலும் பிரிவு பிரிவுதான். சௌம்யா பதில் சொல்லாமல் பக்கத்தில் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டாள். இன்னும் ஆறுதலாகச் சொல்லி இருக்கலாமோ? வயிற்றுக்கு முட்டுக் கொடுத்தாற்போல் படுக்கை.

அன்பின் முகங்கள்!

வெளியே சத்தம் அடங்கி, அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில். மின்விசிறிச் சத்தம் மட்டும் உரக்கக் கேட்டது. விடியற்காலை எழுந்த அலுப்பு. சீமந்தம், சீமந்தம் என்று இரண்டு மாதங்களாக ஏற்பட்ட பரபரப்பு ஒருவழியாக முடிந்தது. மாமனார், மாமியார், உறவினர்கள் என்று அனைவரும் பாம்பேயில் இருந்து வந்து இறங்கி இருந்தார்கள். இன்னும் இரண்டு மூன்று மணி நேரத்தில் கிளம்பிவிடுவார்கள். ஏற்கெனவே மாலை விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார் மாமனார். நாளை காலை அவரது அலுவலகம் அவரை கபளீகரம் செய்து விடும்.

சௌம்யா தலையணைமேல் கைபோட்டுக் கொண்டு, குழந்தை மாதிரிப் படுத்திருந்தாள். இவளுக்கும் எனக்குமான சம்பந்தத்துக்கு வயது பத்து மாதங்கள்கூட இராது. இப்போதுதான் தாலி கட்டினது போலிருக்கிறது. தேனிலவு போனது, கோவில்கள் சுற்றியது, நண்பர்களின் வீடுகளில் விருந்துகள்… எல்லாம் இப்போதுதான் முடிந்தது போலிருக்கிறது. நடுவே இரண்டு முறை பாம்பே போய் வந்தாயிற்று. அவளுடைய அம்மாவும் இரண்டு மூன்று முறை வீட்டுக்கு வந்து போனார்கள். பார்த்துக் கொண்டே இருந்தபோது, சௌம்யா கருத்தரித்தாள்.
வாந்தியும், சோர்வும் வாட்டின. நிமிர்ந்து படுக்க முடியாமல் திண்டாட்டம். ஆயாசம், லேசான எரிச்சல். எல்லாம் மகிழ்ச்சியோடுதான். எழில் சேர்ந்த அலுப்பு. சோர்விலும் ஒரு கொஞ்சல். குழந்தை வளருகிறது என்பதே ஆச்சர்யம் அளித்தது. இதெல்லாம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருக்கிறது போலிருக்கிறது.

அவளுக்கு வலித்தால், எனக்கு என்னவோ செய்தது. குற்றவுணர்வு வாட்டத் தொடங்கிய நாட்கள் அவை. சின்னப்பெண். அதிகபட்சம் இருபத்து மூன்று வயதுதான். தேவையில்லாமல் மூர்க்கத்தனத்துக்குப் பலியாக்கிவிட்டோம் என்று வருத்தப்படாத இரவுகள் இல்லை. எல்லா அப்பாக்களும் இப்படி மருகியிருப்பார்களோ? தெரியவில்லை. ஆனால், ஒரு கணமும் சௌம்யா கோபித்ததில்லை. சுள்ளெனப் பேசியதில்லை.

சென்னை எங்கே? பாம்பே எங்கே? இந்தியும் மராட்டியுமே படித்தவளுக்கு, தமிழ் படித்தவனைச் சேர்த்துவைத்த இயற்கையை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. இருபத்து மூன்று வருடங்கள் எங்கே கண் தெரியாத இடத்தில் படித்து, வேலைக்கு போய், பெண்ணுக்கான அமைதியெல்லாம் கற்று… திடீரென்று ஒருநாள் தேவதை போல் இறங்கி வந்தாள். அது நாள்வரை கண்ட கற்பனைகளெல்லாம் ஒரு நொடியில் விலகிப் போய்விட்டது. எனக்கு இவள்தான் என்று எப்படி மனசு ஏற்றுக் கொண்டது? எதற்குமே பதில் இல்லை.

“டயர்டா இல்லையா. படுங்களேன்?’

சௌம்யா தலைநிமிர்த்திக் கேட்டாள். பக்கத்தில் நெருக்கமாகப் படுத்துக்கொண்டேன். அவளது மூச்சுக் காற்று சீராக உயர்ந்து தாழ்ந்தது. பூக்களும் செண்டும் வியர்வையும் கலந்த மிருதுவான வாசனை. முத்தம் கொடுக்கத் தோன்றியது. பரந்த நெற்றிமேட்டில் இதழ் பதித்தேன். வேகம் அடங்கிய, ஆவல் நீங்கிய ஆதுர முத்தம். நெருங்கித் தலைபுதைத்தாள்.

குழந்தையைச் சுமக்கும் மற்றொரு குழந்தை! சட்சட்டெனக் காட்சிகள் ஓடிக்கொண்டே இருந்தன. ஜீன்ஸ், டி-ஷர்ட்டில், சுடிதாரில், ஷார்ட்ஸில் என்று விதவிதமான கனவுக் காட்சிகள். அழகு, அழகு, அப்படியொரு அழகு! புன்னகையால் புதைத்தவள். மயக்கும். எனக்கா, எனக்கா, எனக்கா… இப்படியொரு பொக்கிஷம் என்று ஒவ்வொருநாளும் மயக்கம்!

எனக்குச் சொல்லத் தெரிந்ததில்லை. திரும்பி எதையும் எப்படிச் செய்யவேண்டும் என்று யோசித்ததில்லை. அவள் கேட்ட சொற்ப விஷயங்களையும் நான் செய்து கொடுத்திருக்கிறேனா? ஞாபகமில்லை. லாண்ட் மார்க் போக வேண்டுமென்றாள். சர்க்கஸ் பார்க்க வேண்டுமென்றாள். எதையுமே நிறைவேற்றித் தரவில்லை. எது தடுத்தது? ஏன் செய்யவில்லை? என் மேலே வெறுப்பு கனன்றது. ஏதோ காரணங்கள், என்னென்னவோ சால்ஜாப்புகள்! செய்திருக்க வேண்டும்…

ஏழைக்குக் கிடைத்துவிட்ட பொக்கிஷம். எப்படி அதைப் பாதுகாக்கவேண்டும் என்று தெரியவில்லை! மதிப்பும் தெரியவில்லை, மனசும் தெரியவில்லை! இழந்த காலங்கள் திரும்பிவராது என்பது எவ்வளவு பெரிய சோகம்? எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.

வெளியே அம்மா எழுந்து, சமையலறைக்குப் போனது தெரிந்தது. மாலை ஆரம்பித்துவிட்டதா? காபி கடை தொடங்கிவிடும். அப்புள், சௌம்யா கிளம்பி விடுவாள். சட்டென்று தொண்டையைத் துக்கம் அடைத்தது. நேரம் யாருடைய உணர்வுக்கும் இடம்தராமல் ஓடிக்கொண்டே இருந்தது.
சமையலறைச் சத்தம் சற்று நேரத்தில் அதிகமானது. ஒவ்வொருவராக எழுந்துகொண்டார்கள். மாமனாரும் மாமியாரும்தான் வேகம். ஏற்கெனவே மூடிய பெட்டிகளைத் திறந்து என்னவோ எடுத்துவைத்தார்கள். காலடிச் சப்தம் அதிகமானது. அறையை நோக்கி யாரோ நடந்துவந்தார்கள்.

“புஜ்ஜி… எழுந்துக்கறீயாடி செல்லம்… டைமாச்சி… தலை வாரிக்கணும்.’

பாதித் திறந்த கதவு வழியே மாமியாரின் குரல். புஜ்ஜிக்கு இன்னொரு புஜ்ஜி பிறக்கப் போகிறது! இப்போதெல்லாம் ஏனோ இப்படியெல்லாம் யோசிக்கச் சொல்கிறது. சௌம்யா சட்டென எழுந்து கொண்டாள். நான் கண்களை மூடிக்கொண்டேன். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. தடுக்க முடியாது என்பதும் தடுக்கக் கூடாது என்பதும் நாகரிகம் சொல்லித் தந்தது.

இயல்பு.. இயல்பு. நடிப்பானாலும் இயல்பே முக்கியம். அதைவிட, சௌம்யா உடைந்துவிடக் கூடும். இந்த நேரம், அவளைப் போகவேண்டாம் என்று சொல்லிவிடலாம். அவளும் அதற்குத்தான் காத்திருக்கிருக்கிறாளோ என்னவோ? ஆனால், சொல்லக்கூடாது. இது பிரசவம். தாய்மையின் முதல் அடி. அம்மாவோடும் பாட்டியோடும் பிறந்த வீட்டில் அரவணைப்போடும் இணங்கி இருக்க வேண்டிய காலம். ஒரு விதை முளைவிடும் தருணம். மண்ணின் கதகதப்பும் நெருக்கமும் வாஞ்சையும் மிக மிக அவசியம்.

தலையை உதறிக்கொண்டு எழுந்துகொண்டேன். யோசனையைத் தள்ளிப்போட முயன்றேன். தலையணையை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு, முகம் கழுவிக் கொண்டேன். வெளியே மாமனாரும் இதரரும் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.

“வண்டிக்குச் சொல்லியாச்சு இல்லையாம்மா?’

“சொல்லியிருக்குப்பா.. பத்து, பதினொரு பேர் போற மாதிரி வண்டி வரும்ப்பா…’

உள்ளே மட்டைத் தேங்காய் வைத்த வெற்றிலைப் பாக்கு தயாராகிக் கொண்டிருந்தது. என் அம்மா, சௌம்யாவிடம் ஏதோ சொல்லிச் சொல்லிச் சிரித்துக் கொண்டு இருந்தாள். அவர்கள் பிரிவதும் கஷ்டமாகத் தான் இருக்க வேண்டும். ஒரு மாதிரி அனிமேஷன் படம் மாதிரிப் பரபரப்பும் பேச்சுகளும் நகர்ந்து கொண்டிருந்தன.

“ஏர்போர்ட் வரீங்களா மாப்ளே?’

“நான் வராமையா?’

யாரோ இரண்டு பேர் சிரித்தார்கள். அதில் சௌம்யா குரலும் கேட்டது மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்து அரைமணி நேரத்தில் டெம்போ டிராவலர் வந்து நின்றது. சௌம்யாவோடு அவள் பெற்றோர், உறவினர்கள், நானும் அப்பாவும் அம்மாவும் கூடக் கிளம்பினோம். சௌம்யா கைகளையே பிடித்துக் கொண்டு இருப்பதுபோல் தோன்றியது. கைகளைக் கோத்துக்கொள்வது அவள் ஸ்டைல் என்று மனசு சமாதானம் அடையவில்லை. ஏதோ விட்டு விலகி விடுவோமோ என்ற அச்சம் அவள் ஸ்பரிசத்தின் செய்தியென்று நான் கற்பனை செய்துகொள்ளவே விரும்பினேன். சின்னச் சின்ன வார்த்தைகள், வாக்கியங்கள், கெஞ்சல்கள், சிணுங்கல்கள்… பேச்சு மறந்தே போய்விட்டது. உணர்வுகள் வெளிப்படத் தெரியாமல் தவித்தன.

நான் செய்வதறியாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஏர்போர்ட்டில் இறங்கிக் காத்திருப்போர் இருக்கைகளில் அமர்ந்தபோதும், சௌம்யா கைகளைக் கோத்துக் கொண்டு இருந்தாள்.

“டெய்லி கூப்பிடுங்க…’

“டிரெஸ் எல்லாம் அயர்ன் பண்ணி பீரோவுல இருக்கு… அயர்ன்காரனை வாரம் ஒரு தரம் வந்து வாங்கிக்கச் சொல்லியிருக்கேன்…’

“பைக்குல போகும்போது நோ ஸ்பீட் ப்ளீஸ்…’

“நோ ஜங்க் ஃபுட், இட்லி சாப்பிடுங்க…’

“நோ டிரிங்க்ஸ் ப்ளீஸ்…’

“டோண்ட் கம் வெரிலேட். அம்மா வில் பி வெரி டயர்ட்…’

“எப்ப நான் பஸ் பண்ணினாலும், ப்ளீஸ் டேக் த கால்… டோண்ட் மேக் மி வெய்ட்…’

இன்னும் எதைச் சொல்லியிருந்தாலும் நான் மண்டையை ஆட்டியிருப்பேன். அவளது சுடிதாரும் மேடிட்ட சின்ன வயிறும் வாசனையும் கெஞ்சல்களும் மெல்லிய விரல்களும் என்னைப் பைத்தியமாக்கிக் கொண்டிருந்தன. மாமனார் யாரிடமோ போனில் பேசிக் கொண்டே நடந்தார். லவுஞ்ச் அருகே நெருங்கியதும், சௌம்யா சட்டென்று என்னைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டாள். கண்ணோரம் திரண்ட நீர், கலவரப்படுத்தியது. அழக்கூடாது என்று என்னையே நான் சமாதானப்படுத்திக் கொண்டேன்.

“டோண்ட் டு திஸ். கிளம்பு. நான் அடுத்த வாரமே வரேன்…’ என்னால் முடிந்த வரை உற்சாகம் தேக்கி, தொண்டை அடைப்பு நீக்கி, பேசிப் பார்த்தேன். வார்த்தைகள் சிக்கிக்கொண்டன.

“வரேன் மாமா..’ சட்டென சௌம்யா என் அப்பா, அம்மா கால்களை நெருங்க, அம்மா கண்களில் பொட்டுக் கண்ணீர். “டோண்ட் வொர்ரி மை சைல்ட்,’ என்றார் அப்பா. உள்ளே செக்கிங் போகும் வரை, நின்று திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நகர்ந்தாள் சௌம்யா. கையசைப்பு மட்டுமே மிச்சமிருந்தது.
வீடு திரும்ப, சாப்பிடப் பிடிக்கவில்லை. வழியெங்கும் அம்மாவும் அப்பாவும் கூட பேசவில்லை. அவர்களும் சாப்பிடாமல் படுத்துக் கொண்டார்கள். அறையில் போய்ப் படுத்துக் கொண்டேன். பேண்டையோ சட்டையையோ கழற்றத் தோன்றவில்லை. மேலே மின்விசிறி சுழற்றிச் சுழற்றி அடித்தது. எங்கோ காலண்டர் படபடத்த சப்தம். தண்ணீர்க்குழாய் திறந்த ஒலி. மொத்த அறையில் நான் மட்டுமே. சற்றுத் துடைத்துவிட்ட வெறுமை. இருபத்தைந்து ஆண்டுகளாகத் தனியாகத்தான் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் வலி தெரிந்ததில்லை. சௌம்யா இல்லாத வெறுமை, வலி தந்தது. அறையின் நீளமும் அகலமும் பயமுறுத்தின. கண்களை மூடித் தலையணையில் முகம் புதைத்தேன். என்னை அறியாமல் அதுவரையில்லாத அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

– ஏப்ரல் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *