கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 12,392 
 
 

வேலைக்குப் போவதற்கு,விடியற்காலை ஏழரை மணிக்கு வீட்டுக்கதவைத் திறந்தபோது, தூரத்தில் தபாற்காரன் வருவது தெரிந்தது.

பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த தபாற்காரன்,இலட்சுமியைக் கண்டதும் புன்முறுவலுடன் இலட்சுமிக்குக் கைகாட்டினான். எப்போதோதும் ஒரே குறித்த நேரத்தில் தபாற்காரன் வந்தாலும் சிலவேளைகளில் இலட்சுமி கொஞ்சம் முந்திப் பிந்தி வேலைக்குப்போகும்போது,எப்போதோ இருந்து விட்டுத்தான் அந்தத் தபாற்காரனை இலட்சுமி சந்திப்பாள்.

‘குட்மோர்ணிங் மடம்’ தபாற்காரன் அவளிடம் கடிதங்களை நீட்டினான். அவள் அவனுக்குக் குட்மோர்ணிங் சொன்னாள்.

அவன் முகத்தில் மகிழ்ச்சி.அவளைப் போலவே அந்தத் தபாற்காரனும் ஒருகாலத்தில் தனது ஊரைவிட்டு லண்டனுக்குப் பிழைக்க வந்திருக்கலாம்.வெளிநாட்டர்கள் ஒருத்தரை ஒருத்தர் காணும்போது பழைய ஞாபகங்கள் வரலாம் யார் கண்டார்கள்?

அதிலும் அவன் அவளைப் போலவே ஒரு சிறு கிராமத்திலிருந்து வந்திருக்கலாம். பட்டணத்திலிருந்து வந்தவர்கள் ஏனோ தானோ என்று பழகுவார்கள் என்பது அவளின் கணிப்பு. அது சிலவேளைகளிற் பிழையாகமிருக்கலாம்.

தபாற்காரன் இலட்சுமியின் கைகளில் மூன்று கடிதங்களைக்கொடுத்தான்.அவற்றை வாங்கிய கையோடு அவனுக்கு நன்றி சொல்லி விட்டுத் தெருவைக்கடந்து ரெயில்வேய் ஸ்ரேசனுக்கு விரைந்தாள்.

கடிதங்கள் எங்கேயிருந்து வந்திருக்கிறது என்று பார்க்கக்கூட நேரமில்லாத அவசரம்.

சித்திரை மாதக்குளிர் அவள் முகத்தில் முத்தமிட்டது.நேற்றுப் பெய்த மழையில் துப்பரவு செய்யப்பட்டது மாதிரித் தெரிந்த தெருவில் அங்குமிங்குமாக ஈரம் படிந்து கிடந்தது.

‘பிக்கடில்லி லைன்’ என்றழைக்கப்படும் பாதாள ரெயின்,அதில் அடைந்து கிடந்த பிரயாணிகளால் நிறைமாதக் கற்பவதிமாதிரி புடைத்துத் தெரிந்தது.

அவள்; அந்த மனித மூட்டைகளுடன் தன்னையும் புதைத்துக்கொண்டாள்.அவளுக்கு அருகில் நின்றவன் சுமார் ஆறடி மூன்றங்குலமான தோற்றத்தில் உயர்ந்து வளர்ந்திருந்தான், அவனின் கமர்க்கட்டுக்குள் இவளின் மூச்சு சிக்கியபோது,கமர்க் கட்டுக்குள்ளிருந்து வந்த நாற்றத்தால் வயிற்றைக்குமட்டியது. அதிலிருந்து தப்பிக் கொள்ள ஓரமாக ஒதுங்கிக் கொண்டாள்.

அடுத்த ஸ்ரேசனிற் பலர் இறங்குவார்கள். அப்போது அவள் இருக்க ஒரு இடம் கிடைக்கலாம்.அதோ அந்த மூலையில் வழக்கம்போல் (பெரும்பாலும்) உட்கார்ந்திருக்கும் இளம்பெண் தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை விட்டுக் கண்களைப் பக்கத்தில் பரவவிட்டபோது இலட்சுமியின் பார்வையுடன் அவள் பார்வை மோதிக்கொண்டது.

கொஞ்ச நாளைக்குமுன் அந்தப்பெண் இந்தியப் பெண் எழுத்தாளரான் அருந்ததி ராயின் ‘புழன ழக ளஅயடட வாiபௌ’ படித்துக்கொண்டிருந்தாள். அப்போது அவள் சட்டென்று இலட்சுமியை ஒரு தரம் உறுத்துப் பார்த்தாள்,அந்த நாவலில் வரும் ஏதோ ஒரு இந்தியப் பெண்பாத்திரம் இலட்சுமியை ஞாபகப் படுத்தியிருக்கலாம்.

அடுத்த ஸ்ரேசன் வந்தது,ட்ரெயின் நின்றது.

சிலர் இறங்கினார்கள்,பலர் ஏறினார்கள்.இருக்க இடம் கிடைத்ததும் இலட்சுமி அமர்ந்து கொண்டாள் அவள் இறங்கும் இடம் வர இன்னும் எட்டு ஸ்ரேசன்கள் தாண்டவேண்டும்.

ஓவ்வொரு ஸ்ரேசனிலும் ஒவ்வொரு நிமிடம் ட்ரெயின் நிற்கும். ,சிக்னல் பெயிலியர் போன்ற சில காரணங்களால் இடையில் சில தாமதங்கள் வரும். எப்படியும் அவளிறங்கும் இடம் வர இன்னும் பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் எடுக்கலாம்.

ட்ரெயினிலுள்ள பலரின் கைகளில் லண்டன் பாதாள ட்ரெயின் பத்திரிகையான’மெட்ரோ’இருந்தது. அதின் முன்பக்கத்தில், குடும்பப்; பிரச்சினை காரணமாகத் தன் இரு மகள்களையும் கொலைசெய்து விட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட ஒரு தகப்பனைப்பற்றிய செய்தி பெரிதாகப் போடப்பட்டிருந்தது.

அவள் தனது கைப் பையில் வைத்துக் கொண்ட, கடிதங்களை வெளியில் எடுத்தாள்.ஒன்று, டெலிபோன் பில், எவ்வளவு தொகை வந்திருக்கிறதோ என்ற மனப்பயத்தில் அந்தத் தபாலுக்கு முகம் கொடுக்க அவள் அப்போது விரும்பவில்லை.

மற்றது,ஏதோ ஒரு கம்பனியிலிருந்து ‘எங்கள் சாமானை வாங்குங்கள்’ என்று கவர்ச்சியான பெரிய விளம்பரத்துடன் வந்திருந்தது.

எரிச்சலுடன் அதை ஒதுக்கி வைத்து விட்டு மூன்றாம் கடிதத்தை உடைத்தாள்.

ஓரு கல்யாண அழைப்பிதழ் அது.ஆங்கிலேய ஸ்டைலுடன் அழைப்பிதழ் அது. றிச்சார்ட்டுக்கும் ஜெசிந்தாவுக்கும் கல்யாணமாம்!

யார் றிச்சார்ட்? யார் இந்த ஜசிந்தா?

இலட்சுமியின் கேள்வி அடுத்த ஸ்ரேசனில் ட்ரெயின் நின்றபோது தடைப்பட்டது.

ஓன்றிரண்டு மனிதர்கள் றிச்சார்ட் என்ற பெயரில் அவளுக்கு பல்கலைக்கழகச் சக மாணவர்களாகவும், வேலைசெய்யும்போது சக உத்தியோகத்தர்களாகவும் அறிமுகமாகியிருக்கிறார்கள்.

திருமண அழைப்பிதழ் அனுப்பும் அளவுக்கு நெருக்கமாக யாருடனும் பழகியது கிடையாது.

பல கேள்விகள் மனதில் வலம் வரக் கையிலிருந்த கவரை உடைத்தாள். அழைப்புடனிருந்த சிறிய துண்டுக் கடிதம் அவளின் மடியில் விழுந்தது.

‘ டியர் லட்சுமி, அந்த பனிக்காற்றடித்த இரவில் அந்த எங்கள் சந்திப்பு நடந்திருக்காவிட்டால் இன்று நான் இந்த முடிவை- திருமண முடிவை எடுத்திருக்க மாட்டேன. தயவு செய்து எனது திருமணத்திற்கு வரவும்.;’ அன்புடன் றிச்சார்ட்

இலட்சுமியின் உடலில் சட்டென்று பரவிய உஷ்ணத்திற்குக் காரணம், ட்ரெயில் ஒருத்தரை ஒருத்தர் முண்டியடித்துக்கொண்டு நெருக்கமாகப் பிரயாணம் செய்வது மட்டுமல்ல என்பது அவளுக்குத் தெரியும்.
ஓரு சில வினாடிகள் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

பத்து வருடங்கள்! 1990

பத்து வருடங்களுக்கு முன் பின் முகம் தெரியாத. றிச்சார்ட் என்ற ஓவியனைச் சந்தித்ததை ஞாபகப் படுத்திக்கொண்டாள்.

‘அன்புடைய பிரயாணிகளே,அடுத்த ஸ்ரேசனிலிருந்து சரியான சிக்னல் வராதபடியால்,இந்தப் பிரயாணத்தைச் சில நிமிடங்கள் தாமதிக்க வேண்டி வரும் என்பதைத் துக்கத்துடக் கூறிக்கொள்கிறேன்’.ட்ரெயின் ட்ரைவரின் இந்த அறிவிப்பு தங்கள் வேலைக்குச் சரியான நேரத்துக்குப் போகவேண்டும் என்று அவசரப் பட்டுக்கொண்டிருந்த பல பிரயாணிகளின் முகத்தில் அதிருப்தியைக் காட்டியது.

சிலர்’இச்’ என்று சத்தம் செய்து தங்கள் அதிருப்தியைக் காட்டிக்கொண்டார்கள்.ஒரு சிலர் தங்கள் பார்வையை ;மெட்ரேர் பத்திரிகையோடு இணைத்து விட்டு ‘இப்படி அடிக்கடி நடப்பதுதானே’ என்ற பாவனையிலிருந்தார்கள்.

இவர்களிற் பலரை,திங்கட்கிழமை தொடக்கம் வெள்ளிக் கிழமை வரைக்கும் தனது வேலைக்குப் போகும்போது இலட்சுமி சந்திப்பதுண்டு.

இவர்கள் எல்லோரும் காலையில் எழுந்து,பனி, குளிர்,மழை,காற்று,பவர்கட்,சிக்னல் பெய்லியர்,ரெயில்வேய் ஸ்டிரைக்,தீவிரவாதிகளின் (ஐ.ஆர்.ஏ)வெடிகுண்டுப் பயமுறுத்தல்கள் என்று பல விடயங்களுக்கு முகம் கொடுத்துப் பழகியவர்கள்.முன்பின் தெரியாதவர்கள்,ஆனாலும் இந்த ட்ரெயினிற் போவதால் மட்டுப் ‘பிரயாணிகள்’ என்ற தொடர்பை வைத்துக் கொண்டவர்கள். ஓவ்வொருவரும் ஒவ்வொரு உலகம். ஓவ்வொருத்தரும் தங்கள் ‘தனி’ உலகில் ஒதுங்கிக் கொள்பவர்கள். இவர்களின் பெயர்கள் என்ன வென்று இலட்சுமிக்குத் தெரியாது.

ஆனால் ஒரே ஒரு இரவு சந்தித்துக்கொண்ட றிச்சார்ட் இவளின் பெயரை ஞாபகம் வைத்தக்கொண்டு திருமண அழைப்பிதழ் அனுப்பியிருக்கிறான்.

ட்ரெயின் ஓடிக்கொண்டிருந்தது. அவள் நினைவும் எங்கேயோ பறந்தது.

பத்து வருடங்கள் என்பது மிகவும் நீண்ட காலம்.அவன் இவள் பெயரை ஞாபகம் வைத்துக்கொண்டதே இவளுக்கு ஆச்சரியமாகவிருக்கிறது.

அது ஒரு அழகான பின்னேரம்.

தெற்கு லண்டனிலுள்ள காம்பர்வெல் பைனாட்ஸ் கல்லுர்ரிக்கு,இலட்சுமியின் சினேகிதியின் இறுதிவருடப் படிப்பின் கண்காட்சிக்குச் சென்றது நினைவிற் தட்டுகிறது.

அங்கு மாணவர்களாகவிருக்கும் இளம் கலைஞர்களின் கற்பனையிற் பிறந்த காட்சிகள், சிலைகள்,ஓவியங்கள் என்று எத்தனை காட்சிகள்!

‘இந்த ஓவியத்தை வரைந்தவன் ஒரு ஆணாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்’ இலட்சுமி தனது சினேகிதிக்குச் சொன்னாள்.

ஏகாதிபத்தியத்தின் சின்னமான பிரிட்டிஷ் பாராளுமன்றத்தைச் சிறையில் வைத்திருப்பதாக அந்தச் சித்திரம் இலட்சுமியின் கவனத்தைக் கவர்ந்தது.

அந்தச் சித்திரத்தைப் பார்த்ததும் வாய்விட்டுச் சிரித்து விட்டாள் இலட்சுமி.

‘இந்த ஓவியன் ஆசிய நாட்டிலிருந்தோ அல்லது ஆபிரிக்க நாட்டிலிருந்தோ வந்திருக்கு வேண்டும். பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலுள்ள தனது ஆத்திரத்தை இப்படிக் காட்டியிருக்கிறான்’

இலட்சுமி இப்படிச் சொன்னதும்,அவளின் சினேகிதி ஜனட் ,இலட்சுமியை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

‘இலட்சுமி, அதை வரைந்த மாணவன் ஒரு இங்கிலிஸ்காரன்,பிரித்தானியரின் ஏகாதியத்தியத்தை,அடிமை வியாபாரத்தை எதிர்த்துப் போராடியவர்கள் ஆங்கிலேயர்கள் என்று உனக்குத் தெரியாதா?’ ஜனட் ஆச்சரியத்துடன் இலட்சுமியைக் கேட்டாள்.

அது நடந்து ஆறு மாதங்களுக்குப் பின் பல சம்பவங்கள் நடந்தன. பருவங்கள் மாறின. லண்டன் பனிக்காற்றில் அடிபட்டுக் கொண்டிருந்தது. அழகிய வசந்தகாலம் இறந்த காலமாகிப் போனபின்,அதைத் தொடர்ந்து இலையுதிர்காலம், குளிர்க்காற்று,அப்புறம் என்ன,உடலை ஊடறுக்கும் கொடிய குளிர்காற்றும் பனியும்தான்.

‘எனது நண்பன் ஒருத்தனின் பார்ட்டிக்குப் போகிறேன் நீயும் வருகிறாயா’? ஜனட் இலட்சுமியைக் கோட்டாள். ஜனட் ஒரு ஓவியை. உலகெங்கும் பல ஓவியர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பவள். நேற்று அறிமுகமாவர்களின் இன்று மறந்து போகுமளவுக்கு பிஸியாகவிருப்பவள். பார்ட்டி என்று திரியாதவள். அப்படியானவள் பார்ட்டிக்குப் போவதாயிருந்தால் அது அவளின் நெருங்கிய சினேகிதர்களில் ஒருத்தராகத்தானிருக்கவேண்டும்.

ஜனட்,வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்தையும் மிகவும் கவனமாகச் செலவழிப்பவள்.அவளைச் சுற்றியிருப்பவர்கள் சிறந்த பாடகர்கள், ஓவியர்கள்,சிற்பிகள், எழுத்தாளர்கள் என்று பல தரப்பட்டவர்கள். அவளுடன் பார்ட்டிக்குப் போவது என்பது ஒரு புதிய அனுபவம் பல தரப்பட்ட புத்தி ஜீவிகளைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

அந்த உலகம,; சாதாரண பணப் பித்துக்களின் போட்டி பொறாமைக்கு அப்பாற்பட்டது. கலைக்கும் மனிதத்துவத்திற்கும் முதலிடம் கொடுப்பது.

‘நான் உன்னை வந்து கூட்டிக்கொண்டு போகமுடியாது. நீ நான் சொன்ன விலாசத்திற்கு வருகிறாயா?’ ஜனட் அவசரமாக எங்Nகுயோ ஓடிக்கொண்டிருந்தபோது டெலிபோனில் இலட்சுயைக் கேட்டாள்.
ஜனட் பார்ட்டிக்கு வரச்சொன்ன இடம்,நேரம்,என்பதைக்குறித்துக்கொண்டாள் இலட்சுமி. முன்பின் தெரியாத இடத்திற்குப்; பார்ட்டிக்குத் தனியாகப்போகப் அவ்வளவு விருப்பமில்லாவிட்டாலும் ஜனட்டுக்குத் தொந்தரவு கொடுக்காமல் தனியாகப்போக ஒப்புக் கொண்டாள்.

லண்டனில் நத்தார்ப்பண்டிகை கொண்டாடப்பட்டு, அந்தச் சந்தோசத்தில் அதிகம் குடித்து,அதிகம் சாப்பிட்டு, அடுத்து வரப்போகும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஆங்கிலேயர், நத்தார்ப்பண்டிகையைத் தங்கள் குடும்பத்துடன் கொண்டாடுவார்கள். புத்தாண்டைத் தங்கள் சினேகிதர்களுடன் கொண்டாடுவார்கள்.

முதல் வருடத்திற்கு முதல் நாள்,அவ்வருடத்தின் கடைசி நாள்.
லண்டன் வழக்கம்போல் புத்தாண்டைக் கொண்டாடும் போதையில் முதல் நாளே தள்ளாடத் தொடங்கி விட்டது.

அன்று பின்னேரம் சரியான குளிர்.சாடையாகப் பனியும் கொட்டியது.
இரவு எட்டு மணிக்கு ஜனட் சொன்ன இடத்திற்குப் பாதாள ரெயிலில் போய்ச் சேர்ந்தாள் இலட்சுமி.

இலட்சுமி விலாசத்தைப் பார்த்துக்கொண்டாள்.

லண்டனின் நடுமத்தியிலுள்ள ஒரு பெரிய மாடிக்குடியிருப்பு.

பாதுகாப்பான இடமாகத் தெரியவில்லை. பதினான்காம் மாடியில் ஜனட் தந்த விலாசமிருக்கிறது. லிப்டில் ஏறியதும்,’;சரியான இடத்திற்குத்தானா வந்திருக்கிறேன்?’ என்ற சந்தேகம் வந்தது.
லிப்டில் சலம் ஒரு மூலையிலும் குப்பை மறுபக்கத்திலும் அசுங்கப் படுத்திக்கொண்டிருந்தது.

நல்லகாலம் இலட்சுமியுடன் யாரும் குடிகாரர்கள் லிப்டில் ஏறவில்லை.அப்படி நடந்திருந்தால் அவளுக்கு மூச்சே நின்றிருக்கும். அவள் சரியான பயந்தாங்கொள்ளி.

பிளாட் நம்பரைத்தேடிக் கதவைத் தட்டியபோது பதினான்காம்; மாடிக்கப்பாற் வெளியிற் தெரியும் லண்டனின் இரவுக்கோலம் ஒரு மாயாலோகம் போலிருந்தது.

தெருவில் நடக்கும்போதும்,பஸ்ஸில் பிரயாணம் செய்யும்போதும்,ரெயினில் போகும்போது ஜன்னலாற் தெரியும் லண்டனுpன ;காட்சிகளுக்கும்;, இப்போது பதினான்காம் மாடியின் ஜன்னலாற் தெரியும் லண்டனுக்கும் எத்தனையோ வித்தியாசம்.

பனியடிக்கும் அந்த இரவில் லண்டன் தெரு லைட்டுகள் அழுது வடிந்து கொண்டிருந்தன.தெருக்கள் மங்கிய வெளிச்சத்தில் பாம்புகள் மாதிரி வளைந்து நெளிந்து ஊர்வது போலிருந்தது.

கதவு திறந்தது.

இப்படி ஒரு சோடி நீலவிழிகளை இலட்சுமி இதுவரை கண்டதில்லை. கடலின் அலைகள் நிலவில் தெரிவதுபோல் அவனின் கண்கள் இரவின் லைட்டில் பள பளத்தன. அவனின் பொன்னிறத் தலை வெளிச்சத்தில் ஜாலம் காட்டியது.

சரியான இடத்திற்குத்தானா வந்திருக்கிறேன்? இரண்டாவது தடவையாக அவள் தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். புத்தாண்டுப் பார்ட்டி நடப்பதற்கான எந்த அறிகுறியும் அந்த பிளாட்டில் கிடையாது.

‘ஓ..நீ லடசுமியா? நீ வருவதாக ஜனட் இப்போததான் போன் பண்ணிச் சொன்னாள்.’ அவன் மலர்ச்சியுடன் சொன்னான்.

அவள் தயக்கம் இன்னும் இறுகியது. இவன்தானா றிச்சார்ட்?

‘கம் இன்’ வெளியிலிருந்து வரும் குளிர்காற்றுக்கு உடலைச் சிலிர்த்துக்கொண்டு அவன் தனது பிளாட்டின் கதவைத் திறந்தான்.

அவள் அந்த பிளாட்டில் காலடி எடுத்து வைத்ததும் அவள் கண்ட ஓவியம் அவளை ஆச்சரியத்தில்ச் சிலிர்க்கப் பண்ணியது.

அது, ஒரு சோடிக் கண்கள்! கிட்டத்தட்ட ஆறடி உயரம்,நாலடி அகலமாகவிருக்கலாம்.அவளை அந்த விழிகள் உறுத்திப் பார்த்தன.

‘ஐயம் சாரி ..நான் என்னை அறிமுகப் படுத்தவில்லை.. நான் றிச்சார்ட் பிறவுன்..ஜனட்டின் பைனார்ட்ஸ் கல்லுர்ரிச் சகமாணவன்..ஜனட் சொல்லியிருப்பாள் என்று நிகை;கிறேன்.’ அவன் கைகுலுக்கினான் அவனது கைகள் மிகவும் மென்மையாகவிருந்தன. ஓவியம் தீட்டும் பிரஷ் தவிர வேறெதையும் அவன் தொட்டதில்லையா என்று யோசிக்கப் பண்ணியது.

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தைச் சிறை பிடித்ததான ஓவியத்தை வரைந்தவன் இவன்தானா?
அவள் ‘ஹலோ ஹவ் டு யு டு’ சொல்லிக் கொண்டாள்.

அந்த பிளாட்டில் வேறும் யாருமிருப்பதாகவோ அல்லது புத்தாண்டுப் பார்ட்டி நடப்பதற்கான அறிகுறியோ எதுவம் கிடையாது.

‘ இன்று இங்க பார்ட்டி நடப்பதாக ஜனட் சொன்னாள’ இலடசுமி தயங்கிக் கொண்டு சொன்னாள்.

‘ஓ.. வழக்கம்போல் ஜனட்,நான் பார்ட்டியைக் கான்சல் பண்ணியதைச் சொல்ல மறந்து விட்டாள் என்று நினைக்கிறேன். ஒன்றிரண்டு நாட்களுக்குச் சரியான பனி பெய்யும் என்று டெலிவிஷனிற் சொன்னார்கள். ஆட்களைக் கூப்பிட்டுக்; கஷ்டம் கொடுக்க விரும்பமில்லை; என்று பார்ட்டியைக் கான்சல் பண்ணி விட்டேன்..ஆனால் ஜனட்டையும் உன்னையும் எதிர்பார்த்தேன்’

‘ஜனட் எப்போது வருவாளாம்’

ஜன்னலுக்கப்பாற் தெரிந்த லண்டனில் இரவுக் காட்சிகளில் கண்களைப் பதித்தவாறு அவனைக் கேட்டாள்.

‘ தெரியாது. அவளுடைள சினேகிதி ஒருத்திக்குப் பிரசவ வேதனையாம். ஓருமாதம் முந்திய பிரசவ வேதனையாம். அந்தச் சினேகிதி தனனுடைய கணவருடன் ஜனட்டையும் ஹொஸ்பிட்டலுக்கு வரச் சொல்லிக் கெஞ்சினாளாம்.ஹொஸ்பிட்டலில் அட்மிட் பண்ணி விட்டு வருவதாகச் சொன்னாள்.’
அவன் சொல்லி முடிப்பதற்குள் டெலிபோன் மணியடித்தது.

‘மன்னிக்கவும் லட்சுமி. றிச்சார்ட் பார்ட்டியைக் கான்சல் பண்ணியதை உனக்குச் சொல்ல மறந்து விட்டேன். அத்தோடு உனக்குத் தெரியும்தானே ஆன்சலா ஸிம்சனை, அவளுக்கு ஒரு மாதம் முந்திப் பிரசவ வேதனை வந்து விட்டது. அவளுடன்; ஹொஸ்பிடலுக்குப் போய்விட்டு உடனடியாக வருகிறேன்’

ஜனட்டின் குரலில் மன்னிப்புக் கேட்கும் தொனி மண்டிக் கிடந்தது.

ஜனட் வாய்மொழி தவறாத அரிச்சந்திரனுக்குத் தங்கையாகவோ தாயாகவோ இருக்க வேண்டியவள்- வாக்குத் தவறாதவள். எப்படியும் வந்து சேருவாள்.

இலட்சுமி தர்மசங்டத்துடன் உட்கார்ந்தாள்.

வாசற்கதவைத் திறந்தபோது தென்பட்ட பிரமாண்டமான அந்த ஒருசோடிக் கண்கள்போல் பல சோடிக் கண்கள் அந்த பிளாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அவளையுற்றுப் பார்த்தன அவை சிறியவை, பெரியவை. கருணையானவை. காதலைப் பிரதிபலிப்பவை, ஏக்கத்தை, இரக்கத்தை, விரக்தியை, வெறுப்பை, வெறியை, வெறுமையை என்று பல உணர்வுகளை வெளிப்படுத்துபவை.
ஆண்கள், பெண்கள் குழந்தைகள், என்று பலரின் கண்கள்.

வெளியிற் சரியான பயங்கரக் காற்றடிப்பதின் அறிகுறி, அடிபடும் ஜன்னலின் எதிரொலியில் பிரதி பலித்தது.

திரும்பிய பக்கமெல்லாம் பல விழிகள் அவளை உற்றுப் பார்தன.

றிச்சார்ட் தனது சமயலறைக்குள் ஏதோ செய்து கொண்டிருந்தான்.

‘ஜனட்டுக்கு லசானியா என்றால் நல்ல விருப்பம் அதுதான் செய்திருக்கிறேன்..உனக்கும் அந்தச் சாப்பாடு பிடிக்கும் என்று நினைக்கிறேன்;’ அவன் சொல்லிக் கொண்டிருந்தான். இவளிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் அவன் பேச்சை நிறுத்தினான்.

‘தயவு செய்து எனக்காகக் கஷ்டப்படவேண்டாம்..ஏதோ பசிக்குச் சாப்பிட்டாற் போதும்’ இலட்சுமி அவசரமாகச் சொன்னாள் அவனுக்குச் சிரமம் கொடுக்க அவள் விரும்பவில்லை.
அவன் சிவப்பு வைனை ஊற்றிக் கொண்டான்.

‘தயவு செய்து எனக்கு வைன் ஊற்ற வேண்டாம்.. ஏதும் பழரசம் இருந்தாற்போதும்..’ அவள் அவசரமாகச் சொன்னாள்.

‘இந்தியப் பெண்கள் வைன் எடுக்க மாட்டார்களா?’

‘அப்படி ஒன்றுமில்லை….’அவள் சொல்லி முடிக்க முதல் ‘அப்படியானால் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு வாங்கி வைத்திருக்கும் சாம்பேயினை உடைக்கட்டுமா’? அவன் களங்கமற்ற குரலிற் கேட்டான்

அவள் அவனை இப்போது நேரடியாகப் பார்த்தாள்.

அவனின் கேள்வி குழந்தைத் தனமானதா அல்லது குறம்புத்தனமானதா என்று அவளால்ச் சொல்ல முடியவில்லை.

அவனுக்கு மறுமொழி சொல்லாமல் ஆப்பிள் ரசத்தை ஊற்றிக் கொண்டாள். தனது கேள்வியை அவள் ரசிக்கவில்லை என்பதை அவன் புரிந்து கொண்டான்.

அவன் ஜாஸ் இசையைத் தனது சிடியில் போட்டான்.ஜோன் கொக்கரனின் உணர்வு தழும்பும் ஜாஸ் இசை; அவளுக்கு விருப்பமானது.அவள் முகபாவத்திலிருந்து அவள் ஜாஸ் இசையை ரசிக்கிறாள் என்று தெரிந்தது.

‘பியானோ இவையும் ஜாஸ் இசையும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்’ அவள் தனது கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துக்கொண்டபடி சொன்னாள். நேரம் இரவு பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது.

‘ உனக்கு ஜாஸ் இசை பிடிக்கும் என்;று ஜனட் சொல்லியிருந்தாள்’ அவன் அவளைப்பார்த்துச் சொல்லிக்; கொண்டு சமைக்கத் தொடங்கினான். சாப்பாட்டு மணம் பசியைக் கிண்டியது.

‘ஜனட் எங்கே தொலைந்தாள்’,இலட்சுமி தனக்குள்ச் சொல்லிக் கொண்டாள்.

மோபைல் டெலிபோன் அதிகம் பழக்கமற்ற காலமது.

அவன் இன்னொரு கிளாஸ் சிவப்பு வைனை ஊற்றிக் கொண்டான். அப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது அவன் ஒரு போத்தல் வைனையும் முடித்து விட்டான் என்று. புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் அவன் அன்று பின்னேரத்திலிருந்து வைன் எடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது.

சாப்பாடு தயார். சுhம்பேயின் போத்தல் சாப்பாட்டு மேசையில் தனியாக உட்கார்ந்திருந்தது

‘ஜனட்டுக்காகக் காத்திருப்போமா?’அவன் கேட்டான்.

‘உங்களுக்குப் பசியாயிருந்தால் சாப்பிடுவோம்..’ அவள் மரியாதைக்காகச் சொன்னாள். ஜனட் எப்போது தரிசனம் தருவாள் என்று தெரியாது.

அருமையான சமயல், அவன் ஒரு சிறந்த ஓவியன் மட்டுமல்ல நல்ல சமயற்காரனும்தான்.

எப்போது ஜனட் வருவாள்?

புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு லண்டனின் மையத்திலுள்ள ட்ரவல்ஸ்கார் சதுக்கத்தில் திரளும் மக்கள் தொகையால் இன்று லண்டன் பப்ளிக் போக்குவரத்து அல்லோ கல்லோலமாகவிருக்கும்.

அவனின் ஓவியங்கள் பல பக்கங்களிலிமிருந்து அவளை எடைபோட்டன.அவளின் பார்வை அவனின் ஓவியஙகளில்; முட்டிமோதித் தர்மசங்கடத்தையுண்டாக்கியது.,அவள் தனது பார்வையைச் சாப்பாட்டிற் செலுத்தினாள்.

‘இந்தக் கண்கள் எரிச்சலைத் தருகின்றனவா?’ அவன் இவளது கண்களைக் கூர்மையாக ஊடுருவியபடி கேட்டான்.
அவள் அப்படியொன்றும் இல்லை என்ற தோரணையிற் தலையாட்டிக் கொண்டாள். அது பொய் என்று அவள் கண்கள் சொல்லியது.

சாப்பாடு முடிந்தது.

‘இந்தக் கண்கள்…’.இப்போது அவன் அவள் நேரே உட்கார்ந்து அவள் கண்களை ஆழமாக அளவெடுத்தான். அவள் சட்டென்று எழுந்து ஜன்னற் பக்கம் போனாள். வெளியில் புத்தாண்டுப் பேரலைகள். பட்டாசுகள் வெடித்தன். மக்கள் கலகலப்பாகப் பேசிக்கொண்டோ பாடிக்கொண்டோ வீதிகளில் போய்க்கொண்டிருந்தார்கள்.
ஜனட் எப்போது வந்து சேருவாள்?

றிச்சார்ட் இரண்டாவது போத்தல் வைனை உடைத்தான்.

இலட்சுமிக்கு ஜனட்டில் எரிச்சல் வந்தது. இந்தத் தர்மசங்கட நிலைக்குள் அகப்படுவோம் என்று தெரிந்தால் அவள் இந்த இடத்திற்கு வந்திருக்க மாட்டாள்.

அவன் அவள் பின்னால் வந்த நின்று ஜன்னலுக்கப்பால் புத்தாண்டுப் பூரிப்பில் திகழும் லண்டனை ரசித்தான்.

‘ஜனட் இன்னும் வரவில்லை என்று கோபமா அல்லது இதுவரைக்கும் முன் பின் தெரியாத என்னுடன் இருக்கப் பயமா?’

அவன் கேட்டான்.

அவளின் மனத்தில் நடக்கும் போராட்டத்தை அப்படியே படம் பிடித்த கூர்மை குரலிற் தொனித்தது.

இரண்டுமில்லை.. நீ எனது சினேகிதி ஜனட்டின் சகமாணவன். கவுரமற்றவர்களுடன் அவள் பழகுவது கிடையாது.’அவள் சொன்னாள்

‘சிலருக்குப் பொய் சொல்லத் தெரியாது.

அவன் வாய்விட்டுச்சிரித்தான்.

பனிக்காற்று பயங்கரமாக வீசியது.

இருண்ட இரவில் வானத்திலிருந்து மல்லிகை மலர்கள் கொடடுடவதுபோல் பனி ஆகாயத்தைப் பொத்துக் கொண்டு கொட்டிக்கொண்டிருந்தது.

‘எத்தனையழகான காட்சி..உலகத்துக் குப்பைகளையெல்லாம் புத்தாண்டு பிறக்கமுதல் பனிமழையால் கழுவிவிட இயற்கைத்தாய் அவசரப்படுகிறாள்.. புத்தாண்டு புனிதமாகப் பிறக்கட்டும.?’

அவன் அவள் பின்னால் நின்று பேசியதால் அவனின் உஷ்ணமான மூச்சு அவளின் கழுத்துக்களைத் தடவிச் சென்றது.

இவனின் ஓவியத்தைக் கலைக் கல்லுர்ரியிற் பார்த்து ரசித்ததுக்கு இதுவா தண்டனை?

அவன் நேரத்தைப் பார்த்தான்.

இன்னும் அரைமணித்தியாலத்தில் புத்தாண்டு பிறக்கப்போகிறது….அதற்கிடையில் எப்படியும் ஜனட் வந்து சேருவாள். பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டில் இந்த நேரத்தில் காலடி எடுத்து வைப்பது பெரிய கஷ்டம்.ஆஞ்சலாவின் கணவர் எப்படியும் அவளை இங்கு கொண்டு வந்து சேர்ப்பார்’

அவன் டிவியைப் போட்டான். ட்ராவல்ஸ்கர் சதுக்கத்தில, வானத்தைப் பொத்துக்கொண்டு கொட்டும் பனியில்,ஆயியமாயிரம் இளம் சந்ததியினர்,சாதி மத பேதமின்றி புதுவருடத்தை எதிர்பார்த்து ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைப் பார்க்க மிகவும் சந்தோசமாகவிருந்தது.

‘இவர்கள் எல்லோரும் இந்த ஒரு நாள் என்றாலும் ஒருபேதமும் காட்டாமல் சந்தோசமாக ஆடிப்பாடுகிறார்கள். இப்படியே ஒவ்வொருநாளுமிருந்தால் உலகத்தில் எந்தப் பிரச்சினையம் வராது. அதுசாத்தியம் என்று நினைக்கிறாயா?’

அவள் அவனைப் பார்க்காமல்’;எனக்குத்;’ தெரியாது என்ற பாவனையிற் தலையாட்டினாள்.

ஓரு சில நிமிடங்கள் இருவருக்குமிடையில் மவுனம்.

‘இலட்சுமி… உனக்கு இங்கிருப்பது…என்னுடன் தனியாகவிருப்பது பயமாக அல்லது தர்மசங்கடமாகவிருந்தால் இப்போது உடனே ஒரு டாக்சியைக் கூப்பிட்ட்டுமா.சாரி என்னால் இந்த நிலையில் ட்ரைவ் பண்ண முடியாது?’

உலகமே புத்தாண்டுப் பிறப்பின் பூரிப்பில் ‘தள்ளாடிக்கொண்டிருக்கிறது. தாராளமாகக் குடிக்கும் பெரும்பாலானவர்கள் டாக்ஸியிற்தான் ஓடிக்கொண்டிருப்பார்கள்.இந்த நேரத்தில் டாக்சிக் காரன் அளவற்ற பிஸியாகவிருப்பான்.

சில நிமிடங்களில்,ஒரே நேரத்தில் லண்டனிருக்கும் எண்ணிக்கையற்ற கிறிஸ்தவ தேவாலயங்களிலிருந்து ஆராதனை மணியொலித்து புத்தாண்டின் புதுவரவை வரவேற்றன.

டிவியில் ட்ராவல்ஸ் சதுக்கத்திலிருந்து ‘ஹப்பி நியு இயர்’ கோசம் வானைப் பிழந்தது. தெருவெல்லாம் பட்டாசுகள் வெடித்தன.

றிச்சார்ட் சாம்பேயின் போத்தலைத் திறந்தான். இரண்டு கிளாஸ்களில் ஊற்றிக் கொண்டான்.
தனது சாம்பேயின் கிளாஸை உயர்த்தி ‘ஹப்பி நியு இயர் இலட்சுமி’ என்றான்.;

அவள் தனது பழரசக் கிளாஸை உயர்த்தி,’ஹப்பி நியு இயர் றிச்சார்ட்’ என்று முணு முணுத்தாள்.
அதே நேரம் டெலிபோன் மணியடித்தது.

ஜனட் பேசினாள்,

‘ ஐயம் சாரி லட்சுமி.. ஆன்ஞ்சலாவின் நிலை சரியில்லை. நிறைய இரத்தம் போய்விட்டது. குழந்தையின் நாடித்துடிப்பும் சரியில்லை. அவளை விட்டு வர என்னால் முடியவில்லை. றிச்சார்ட் உன்னை நன்றாகக் கவனித்துக் கொள்வான்..ஹப்பி நியுஇயர்,என்ஜோய் த நைட்’

இலட்சுமி தனது ஓவர் கோர்ட்டைத் தூக்கிக் கொண்டாள். ‘றிச்சார்ட் பிளிஸ் டாக்சிக்குப் போன் பண்ண முடியுமா?’
அவள் குரல் கடுமையாகவிருந்தது. அவளின் ஆத்திரம் ஜனட்டில் மட்டுமல்ல என்று றிச்சார்ட் புரிந்து கொண்டான்.ஆனால் அவன் அவளுக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லையே?

டாக்சிக்காரன் மிகவும் பிஸியாக இருப்பதாகவும், இவர்கள் கூப்பிடும் அந்த இடத்திற்கு வர இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேல் எடுக்கும் என்று சொல்லப் பட்டது.

‘சரி நான் கொண்டுபோய் விடுகிறேன்’ அவன் தள்ளாடியபடி எழுந்தான்.

அவன் குடித்திருக்கிறான் அவன் ட்ரைவ் பண்ணுவது ஆபத்தைக் கொண்டுவரலாம் என்று அவளுக்குத் தெரிந்தாலும் எப்படியும் அங்கிருந்து போகவேண்டும் என்று அவள் அவசரப் பட்டாள்.

அவர்கள் றிச்சார்ட்டின் பிளாட்டிலிருந்து கீழே வந்ததும் பனிக்காற்றின் பயங்கரம் அப்பட்டமாகத் தெரிந்தது. அவர்களுக்குக் கண் திறக்க முடியாமல் பனி கொட்டிக் கண்களை மறைத்தது.அவனின் கார் பனியிற் புதைந்து கிடந்தது. கடந்த சில மணித்தியாலங்களாகக் கொட்டிய அந்தத் தீவிர பனி உலகைத் தன் வெண்போர்வையால் மூடிவிட்டது.

நேற்றைய குப்பைகளை இன்று கழுவிவிடுகிறேன் என்ற பிடிவாதத்துடன் பனி கொட்டிக்கொண்டிருந்தது.

தட்டுத்தடுமாறிக் காரில் ஏறியுட்கார்ந்து காரை ஸ்ரார்ட் பண்ண முயற்சித்தால்……

இலட்சுமிக்கு வீரிட்டுக் கத்தவேண்டுமபோலிருந்தது.கார் ஸ்ரார்ட் பண்ண முடியாத அளவுக்குக் குளிரில் உறைந்துவிட்டது.

‘ஐயம் சாரி லட்சுமி…றியலி சாரி….’நாங்கள் மாடிக்குப்போய் டாக்சிக்கு வெயிட் பண்ணுவோம்.’
அவன் மன்னிப்புக் கேட்கும் தோரணையிற் சொன்னான்.

அவள் மவுனமானாள்.

‘என்னுடைய சினேகிதன் ஒருத்தன் மதுவைத் தொடாதவன்..அவனைக் கேட்டுப் பார்க்கிறேன்?’
அவனின் குரலின் மென்மையும்,அதிற் தொனித்த பரிவும் அவளின் கோபத்தைக் கொஞசம் குறைத்தது.

புதுவருடப் பார்ட்டிகளுக்குப் போவோரின் ஆரவாரங்கள் கொட்டும் பனியுடன் போட்டி போட்டன.

காரால் இறங்கியதும் பக்கத்தில் டெலிபோன் பூத் இருக்கிறதா என்று தேடினார்கள்.பக்கத்தில் தென்பட்ட டெலிபோன் பூத்தில் டெலிபோன் கழட்டபட்ட வன்முறை தெரிந்தது.

இன்னொரு தரம் பதினான்காம் மாடிக்கு அவனின் பிளாட்டுக்குப் போகவேண்டும்!

இருவரும் மவுனமாகப் பனியில் நனைந்து கொண்டு நடந்தார்கள். லிப்ட்டை அண்டியதும், கரடுமுரடான குரலில் ஆரவாரமாகப்பேசிக்கொண்டு சில மொட்டைத்தலை வெள்ளையர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் வெள்ளை நிற இனவாதிகள்.நாஷனல் ப்ரண்ட் என்று அழைக்கப்படுபவர்கள்.

‘ஏய் பாக்கி..’ இலட்சுமியை நோக்கிக் கத்தினார்கள். ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த எவருமே அவர்கள் பார்வையில் ‘பாக்கிகள் தான் (பாகிஸ்தானியர்கள்).

றிச்சார்ட் தனக்கு முன்னால் நிற்கும் வளர்ந்து கொழுத்த நான்கு முரடர்களையும் கோபத்துடன் ஏறிட்டுப் பார்த்தான்

வந்திருந்த முரடர்களில் ஒருத்தன் றிச்சார்ட்டின் முகத்தில் பட்டும் படாததுமாகத் துப்பினான். இன்னொருத்தன் எகத்தாளமாகச் சிரித்துக்கொண்டு றிச்சார்ட்டை நெருங்கினான். முகத்தில் நக்கல்.

மற்ற இருவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார்கள்.மதுவாடை அசிங்கமாக அத்தனைபேரிடமிருந்தும் பரவியது.

பனி எல்லோரையும் நனைத்துத் தள்ளிக்கொண்டிருந்தது.

‘புதுவருடக் கொண்டாட்டத்திற்கு இந்த இந்தியச் சரக்குத்தானா கிடைத்தது?’

இப்படிக்கேட்டுக்கொண்டு, அந்த இனவாதிகளில் ஒருத்தன் றிச்சார்ட்டின் சேர்ட்டைப் பிடித்திழுத்தான.

அதே கணம் அவனுக்குப் பக்கத்தில் நின்றிருந்த இனவாதி றிச்சார்ட்டின் முகத்தில் ஒரு பயங்கரக் குத்து விட்டான். றிச்சார்ட் நிலை தடுமாறினான்.

அடுத்த கணம்; தலை பக்கத்திலிருந்த கொங்கிறுட் போஸ்டரில் அடிபட ரிச்சார்ட் கீழே விழுந்தான்.இரத்தம் பட்டென்று அவன் நெற்றியிலிருந்து சீறிப்பாய்ந்தது.

இலட்சுமியின் பயங்கர அலறலை அடக்குவதுமாதிரிப் பனிக்காற்று பேய்த்தனமாக வீசியது. அவளின் அலறல் கேட்ட சிலர் ஓடிவந்தார்கள்.

‘என்ன நடந்தது?’

வந்தவர்கள் விசாரித்தார்கள். அவர்களைக் கண்டதும் றிச்சார்ட்டைத் தாக்கிய முரடர்கள் கேவலமான வார்த்தைகளாற் பேசிக் கொண்டு ஓடினார்கள்.

உதவிக்கு வந்தவர்களில் ஒரு ஆங்கிலேயன் றிச்சார்ட்டுக்குக் கைகோடுத்து அவன் எழும்ப உதவி செய்தான்.

‘பிரிட்டிஷ் வெள்ளையினவாதிகள் புத்தாண்டுப் பரிசு தந்து விட்டுப் போகிறார்கள்’.

தனது மூக்கிலிருந்து வழியும் இரத்தத்தைக் கையாற் துடைத்துக்கொண்டு பதில் சொன்னான் றிச்சார்ட்.

இலட்சுமி, தனது கைப்பையிலிந்து எடுத்த கைக்குட்டையால் றிச்சார்ட்டின் இரத்தத்தைத் துடைத்தாள்.

‘போலிசுக்குப் போன் பண்ண வேண்டும்..ஆம்புலன்சுக்குப் போன்பண்ண வேண்டும்;’ உதவிக்கு வந்த கூட்டம் அவசரப் பட்டது.

‘ என்னை அடித்தவர்கள் என்ன தங்களின் விலாசத்தையா தந்து விட்டுப் போகிறார்கள் போலிசாருக்குச் சொல்ல. புத்தாண்டைச் சாட்டாக வைத்துக் கொண்டு இப்படிச் சில மொட்டையர்கள் தங்களிடம் அகப்பட்டவர்களை அடிப்பது அடிக்கடி நடக்கும் விடயம்தானே, எனது பிளாட் அதோ இருக்கிறது. உங்கள் உதவிக்கு நன்றி’ றிச்சார்ட் தனக்கு உதவிக்கு வந்த ஆங்கிலேயர்களுக்குச் சொன்னான்;.

அவர்கள் சென்றதும்,றிச்சார்ட்டைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு இலட்சுமியும் றிச்சார்ட்டும் அவனின் பிளாட்டுக்குப் போகும் லிப்டை நோக்கி நடந்தார்கள்.;.

‘ஹொஸ்பிட்டலுக்குப் போவது நல்லது, அல்லது டாக்டருக்கென்றாலும் போன்பண்ணிக் கூப்பிடுவோம்’ இலட்சுமி ஆதரவுடன் சொன்னாள்.

‘லட்சுமி,இன்று புதுவருடக் கொண்டாட்டத்தில் மதுவெறியில் நடக்கும் விபத்துக்களும்,அடிபிடி சண்டைகளும் ஹொஸ்பிட்டலை இப்போதே நிறைத்திருக்கும்.அந்த அமளியில் எனது மூக்கால் இரத்தம் வடிவதைப் பெரிய விடயமாக எடுக்கமாட்டார்கள்’

‘மூக்கால் வடியும் இரத்தத்தைப் பற்றிக் கவலையில்லை றிச்சார்ட் ஆனால் உனது தலையில் அடிபட்டதே அதுதான் எனக்குப் பயமாகவிருக்கிறது.அதனால் உனது மூளையில் ஏதும் தாக்கம் ஏற்பட்டிருந்தால்….’அவளின் குரலிற் படிந்திருந்த கரிசனம் அவனை உற்றுப் பார்க்க வைத்தது.

‘அப்படி ஏதும் பெரிதாக அடிபட்டிருந்தால் இத்தனைக்கும் மயங்கி விழுந்திருக்க மாட்டேனா’அவன் அவளைத் திருப்திப் படுத்தச் சொன்னான்.

புதினான்காம் மாடி வந்து விட்டது. கதவைத் திறந்ததும் அவனின் ஓவியமான அந்தப் பெரிய கண்கள் அவளை வரவேற்றன.

;’இந்த ஓவியத்திலிருப்பவை உனது காதலியின் கண்களா’அவள் தன்னையறியாமல் அவனிடம் கேட்டாள்.

‘என்ன சொன்னாய்?’ அவன் தனது மூக்கால் வடியும் இரத்தத்தை; துடைத்தபடி அவளைக் கேட்டான்.

‘வீடு முழக்கப் பலதரப்பட்ட கண்களை ஓவியங்களாக வரைந்து வைத்திருக்கிறாயே அவற்றில் பெரும்பாலானவை உனது காதலியின் கண்களா என்று கேட்டேன்’

அவன் அவளை நேரே பார்த்தபடி,’இதுவரை எனக்குக் காதல் ஒன்றும் வரவில்லை.’ என்று சொன்னான் குரலில் ஒரு வித குறும்புத் தனம்.

திரும்பிய இடமெல்லாம் கண்களாக் இருப்பது அவளுக்குத் தர்ம சங்கடமாகவிருந்தது.

அவனது நெற்றிக் காயத்தைக் கழுவ,அவனது சமயலறைக்குச் சென்று ஒருபாத்திரத்தில் குளிர் நீர் எடுத்துக் கொண்டு வந்தாள் சமயலறையிலும் கண்கள்!

‘லட்சுமி, நாங்கள் எப்போதும் யாருடைய பார்வையிலோ பட்டுக்கொண்டிருப்போம். அதுபோல மற்றவர்களும் எங்கள் பார்வையிற் பட்டுக்கொண்டிருப்பார்கள். மனிதர்கள் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுமே எப்போதும் தங்கள் பாதுகாப்பை,பிரயாணத்தை,தேடலையோ தங்கள் பார்வையினாற்தானே முன்னெடுக்கிறார்கள்.எங்கள் ஆத்மாவின் ஜன்னலகள் எங்கள் கண்கள்,எங்களுக்குக் கிடைத்த வாழ்க்கையின் பாதையைக் கடக்க,அந்தப் பாதையில் எங்களுடன் இணைந்து கொள்ளும் உறவுகளை, எங்களுக்குத் தொந்தரவு செய்பவர்களை அடையாளம் காண,இனிமையான விடயங்களை அடையாளம்காண எங்கள் பார்வை முக்கியமானது என்று நினைக்கிறேன்’ இலட்சுமி கொடுத்த ஈரத்துணியால் தன் மூக்கில் வழியும் இரத்தத்தைத் துடைத்துக் கொண்டு அவன் விளக்கம்; சொன்னான்.

‘அதற்காக வீடுமுழதும் இப்படியா..@ அவளது தர்மசங்கடம் அவனுக்கு ஆச்சரியமாவிருந்திருக்கவேண்டும். இன்னொருதரம் அவளை உற்றுப்பார்த்தான். அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

‘லட்சுமி உன்னை மட்டமாகப்பேசிய வெள்ளையினவாதிகளுக்காக உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன்’ அவன் குரலில் அவளிடம் உண்மையாகவே மன்னிப்புக் கேட்கும் பாவம் தெரிந்தது.

‘என்னை மட்டமாகப்பேசியது பெரிதில்லை, உங்களுக்கு அடித்ததுதான் ஆத்திரமாகவிருக்கிறது. ஓரு வெள்ளை நிறமற்ற பெண்; ஒரு வெள்ளை ஆங்கிலேயனுடன் போனால் ஏன் அப்படி ஒரு ஆத்திரம், அவர்கள் இன்னும் உலகத்தை ஆளவேண்டும் என்று நினைக்கிறார்களா?’ இலட்சுமியின் குரலில் ஆத்திரம்.

‘லட்சுமி வன்முறை என்பது அறிவற்ற கோழைகளின ஆயுதம் என்று உனக்குத் தெரியாதா?’அவன் ஆயாசத்துடன் சோபாவில் சாய்ந்தான்.

‘ஐய்யோ தூங்கிப்போய்விடாதே’ இலட்சுமி பதறினாள்.

‘ஏன்’ அவன் சோபாவில் கால்களை நிமிர்த்திப் படுத்துக்கொண்டு அவனைக்கேட்டான்.

‘ஏன் என்றால் உனக்கு மூளையில் அடிபட்டிருக்கிறது. மூளை தாக்கப்பட்டிருந்தால் உனக்கு மயக்கம் வந்தாலும் தெரியாமற்போய்விடும்.’

அவன் மறுமொழி சொல்லாமல் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

அவளின் பரிவும் ஆதங்கமும் அவனின் தாயை ஞாபகப் படுத்தியிருக்கவேண்டுமோ என்னவோ அவளை நன்றியுடன் நோக்கினான் றிச்சார்ட்.

‘தயவு செய்து விழித்திரு. தலையில் அடிபட்டதால் ஒரு பிரச்சினையும் இல்லை என்று தெரியும் வரை விழித்திரேன்’

அவளின் கெஞ்சல் அவனைச் சிரிக்கப் பண்ணியது.

அவன் நித்திரை கொள்ளாமல் விழித்திருக்கவேண்டும் என்று காப்பி போட்டுக் கொடுத்தாள்.

அவளின் தாய்மையான செயல்களை அவனை வியக்கப் பண்ணியிருக்கவேண்டும்.

‘ஏன் நான் வரைந்த ஓவியற்கள் எனது காதலியின் கண்களா என்று கேட்டாய்?’

அவள் கொடுத்த காப்பியை வாங்கிப் கொண்டு கேட்டான்.

‘பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களின் உருவங்களை…..’ அவள் சொல்லி முடிக்கவில்லை’

‘.. எங்கள் கலைக் கல்லூரி விழாவில் தொங்கிய எனது ஓவியத்தைப் ரசித்ததாக ஜனட் சொன்னாள்’ அவன் பேச்சை மாற்றினான்.

‘ஆமாம், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆளும் சின்னத்தை ஒரு ஆங்கிலேயன் வரைந்திருந்தது ஆச்சரியமாகவிருந்தது’

‘ ஆங்கிலேயர்கள் எல்லாம் இனவாதிகள் இல்லையே’

அவள் மறுமொழி சொல்லவில்லை. நேரத்தைப் பார்த்தாள் அதிகாலை மூன்று மணியாகிக் கொண்டிருந்தது. வெளியில் புத்தாண்டு ஆரவாரம் கொஞ்சம் குறைந்து கொண்டு வந்தது.

‘என்னைப் பற்றிப் பயப்படவேண்டாம் நான் மூளையில் இரத்தப் பெருக்கு வந்து செத்துப்போக மாட்டேன்…என்னுடைய சினேகிதர்கள் யாரையும் கூப்பிட்டு உன்னை வீட்டுக்கு அனுப்பட்டா?’

‘வேண்டாம் நீ என்ன சொன்னாலும் உன்னை இந்த நிலையில் விட்டுப்போக நான் விரும்பவில்லை. என்னாற்தானே உனக்கு அடிவிழுந்தது’

அவளின் தாய்மையின் தொனி அவனைப் புல்லரிக்க வைத்தது. ‘ ஒரு கொஞ்ச நேரத்துக்கு முன் இங்கிருந்து ஓடநினைத்தாய் எனக்குப் பயந்தா?’ அவனின் கேள்வி அவளைத் தர்மசங்கடத்திலாழ்த்தியது.

‘ நான் உனக்குப் பயந்தோட நினைத்தேன் என்று ஏன் முடிவு கட்டுகிறாய்?’அவளின் திடமான குரல் அவனை நிமிர்ந்து பார்க்கப் பண்ணியது.

அவன் மூன்றாம் தடவையாக அவளை ஊன்றி நோக்கினான். அவள் இப்போது அவன் பார்வையைத் தாங்காமல் முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை.

”பெரும்பாலான கலைஞர்கள் மனிதத்தை நேசிப்பவர்கள்,அழகை ஆராதனை செய்பவர்கள், ஆக்கிரமிப்புக்கள், ஆதிக்க மோதல்களுக்கு எதிரானவர்கள்.குழந்தைகள்போல் தங்களின் கற்பனையுலகில் வாழ்பவர்கள்….பெண்களை’

..அவன் தான் சொல்லிக் கொண்டிருந்ததை இடை நிறுத்தி விட்டு அவளைப் பார்த்தான்.

‘பெண்களை…’ அவள் தொடர்ந்தாள்.

‘;பெண்களை ரசிப்பவர்கள்,நேசிப்பவர்கள்,மதிப்பவர்கள். ஆணுக்குத் தேவையான அத்தனையையும் கொடுப்பவர்கள் பெண்கள். அன்பு,காதல் எனபதின் அர்த்தங்களை ஒருஆணுக்குப் புரிய வைப்பவர்கள். பெண்களிற் பெரும்பாலோர் பூசைக்குரியவர்கள்..அவர்களைப் புசித்து முடிக்க நினப்பவர்கள் வாழ்க்கையின் அற்புதங்களின் ரகசியம் தெரியாதவர்கள.;..புரிந்து கொள்ளத் தைரியமற்றவர்கள்’அவன் சொல்லி முடித்துவிட்டுச் சரிந்து படுத்தான்.

‘தயவுசெய்த தூங்கி விடாதே” அவள் பதறினாள்.

‘நான் தூங்கவில்லை ..யோசிக்கிறேன்.

‘எதைப்பற்றி?’

‘இறந்தகாலத்தைப்பற்றி’

‘துக்கமான சம்பவங்கள்பற்றியா?’ அவள் குழப்பத்துடன்; கேட்டாள்.

‘இல்லை..என்வாழ்க்கையில் சந்தித்த சில வித்தியாசமான பெண்கள் பற்றி’

‘உனக்கு இதுவரையும் காதல் வரவில்லை என்றாயே?’ அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்.

‘உறவுகள் இருந்திருக்கவில்லை என்று சொன்னேனா?’ அவன் அவளைக் கேள்வி கேட்டான்.

‘இளமையின் பசியா’ அவளி குரலில் கிண்டல்

‘ இல்லை..இயற்கையின் நியதி, வாழக்கையில் வரும் சூழ்நிலைகளின் தாக்கங்கள்’அவன் ஒரு ஆசிரியன் மாதிரிப் பதில் சொன்னான்.

இருவரும் மவுனம்.

அவள் எழுந்தாள். அவள் கழிவறைக்குப்போய்த் திரும்பி வந்தபோது அவன் நிச்சயமாத் தூங்கியிருந்தான்.
எழுப்புவதா இல்லையா?

அவனது சீரான மூச்சிலிருந்து தெரிந்தது அவன் ஆழ்ந்த நித்திரையிலிக்கிறான் என்று.

அவளைச் சுற்றியிருந்த பல ஓவியக் கண்கள் அவளை உறுத்துப் பார்த்தன் பல கேள்விகள் கேட்டன. பயந்து ஓடப்பார்த்தாயா என்று கிண்டல் செய்வதாப் பட்டது.

ஓவ்வொரு ஓவியத்தையும் உற்றுப் பார்த்தாள்.

பின்னர் ஒவ்வொன்றாகக் கழட்டித் திருப்பிவைத்தாள்.

அவனும் உறங்கினான் அவனின் அத்தனை ஓவியங்களும் இப்போது உறங்கிக் கொண்டிருந்தன.

அவளும் அப்படியே தூங்கிப் போய்விட்டாள்.

அவள் எழும்பியபோது அவன் தனது ஹாலின் ஜன்னல்களைத் திறந்து இரவு பெய்த பனியால் மூடப்பட்டு வெள்ளை வெளேரென்று தெரிந்த லண்டன் மாநகரை ரசித்துக் கொண்டிருந்தான்.

‘பனிக்காற்று ஓய்ந்து விட்டது’என்றான்.

ஹாலின் மூலையில் அவள் தூங்கிக்கொண்டிருப்பதை வரைந்த படம் அவளின் கண்ணிற் பட்டது.

‘உலகத்தை உற்றுப் பார்க்காமல் தூங்கிய அழகிய விழிகள் இவை’ அவன் இலட்சுமியைப் பார்த்துச் சிரித்தான்.

அவன் முகம் இரவிற் தெரிந்ததை விடத் தெளிவாக, அழகாக, கம்பீரமாக, கவர்ச்சியாகத் தெரிந்தது. அவனின் ஆழ்கடலின் நிறத்தைக் கொண்ட நீலவிழிகளின் நேர்பார்வையில் அவள் தடுமாறினாள்.

‘சாரி, உனது ஓவியக் கண்களையெல்லாம் திசை திருப்பி வைத்துவிட்டேன்’ அவள் மன்னிப்புக் கேட்கும் குரலிற் சொன்னாள்.

‘நேற்றிரவு நான் அடிபட்டபோது,தாய்மையைத் தாங்கித் தவித்த உனது கண்களை வரைய நீ அனுமதி தருவாயோ என்ற தயக்கத்தில.;..’ அவன் கொஞ்சநேரம் அவளை ஏறிட்டுப் பார்த்தான் எதையோ தேடும் பார்வையது. அவள் தர்மசங்கடத்துடன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

‘உறங்கும் உன் கண்களின் அழகை ரசிக்க சந்தர்ப்பம் தந்ததற்கு உனக்கு எனது நன்றி லட்சுமி” றிச்சார்ட் பிறவுனின் குரலில் குறும்பு.

அவர்களின் அந்த இரவு சந்திப்பின் ஒன்றிரண்டு மாதங்களின் பின் றிச்சார்ட் நியுயோர்க போய்விட்டதாக இலட்சுமி கேள்விப் பட்டிருந்தாள்.

29.04.2000.

கிட்டத்தட்ட பத்து வருடங்களின் பின் அவனைச் சந்தித்தாள் இலட்சுமி.

இந்தக் கலயாண மண்டபத்தில் அவனைக் காணுவது வேடிக்கையாகவிருந்தது.

அதை விட ஆச்சரியம் அவனின் மணப் பெண் ஒரு இந்தியப் பெண். ஜசிந்தா சாமுவெல்.

‘ஹலோ லட்சுமி, பிளிஸ் மீற் மை வைவ் ஜசிந்தா..’ றிச்சார்ட்டின் குரல் இனிமையானது என்று இலட்சுமி அன்று நினைத்தாள். அவள் அவனைச் சந்தித்த அந்த புத்தாண்டுப் பண்டிகை இரவில் அவனைப் பற்றிக் கிரகித்தது அவனின் ஓவியங்களின் பின்னணியிற்தான்.

ஜனட் கல்யாணத்திற்கு வந்திருந்தாள்.

அந்தக் கல்யாண மண்டபம் இந்தியர்களாலும் வெள்ளையினத்தவர்களாலும் நிறைந்து வழிந்தது.

‘ என்ன வென்று ஜசிந்தாவை றிச்சார்ட் சந்தித்தானாம்?’ இலட்சுமி ஜனட்டைக் கேட்டாள்.

‘ஓ. ஜசிந்தா ஒரு றிப்போர்டர்,அவனது சித்திரக் கண்காட்சிக்கு ஜசிந்தா வந்து அவனைப் பேட்டி எடுக்கச் சந்தித்து..அப்படித்தான் ஆரம்பித்ததாம் அவர்களின் உறவு’

ஜசிந்தா தங்கள் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுடன் உறவாட இலட்சுமியும் ஜனட்டும் நின்றிருந்த பக்கம் வந்தபோது. ஜசிந்தாவையும் லட்சியையும் ஒரேயடியாகப் பார்த்த ஜனட் தனது தலையைச் செறிந்து கொண்டு எதையோ தீவிரமாக யோசிப்பது தெரிந்தது.

இலட்சுமி ஜனட்டின் முகபாவத்திற்கும் குழப்பத்துக்கும் காரணம் தெரியாமல் தவித்தாள்.

தூரத்தில் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த றிச்சார்ட்டின் முகத்தில் குறும்பு விளையாடியது.

” உனக்கும் ஜசிந்தாவுக்கும் ஏதோ ஒரு ஒற்றுமையிருக்கிறது’ஜனட் சொல்வது இலட்சுமிக்குப் புரியவில்லை. என்ன ஒற்றுமை?
இருபெண்களும் வெள்ளையினம் இல்லையென்பதைத் தவிர வேறு என்ன ஒற்றுமை?

திடிரென்று ஜனட் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

‘எனக்கு இப்போது தெரிகிறது என்ன ஒற்றுமை என்று….’

‘என்ன பிதற்றுகிறாய் ஜனட்.. என்னத்தை; தெரிந்து கொண்டாய்’ இலட்சுமி குழம்பிப் போய்க் கேட்டாள்.

ஜனட் ஆச்சரியத்துடன் இலட்சுமியைப் பார்த்துச் சொன்னாள்,

‘ லட்சுமி உனக்கும் ஜசிந்தாவுக்கும் ஒரேமாதியான கண்கள்’!

(யாவும் கற்பனையே)

– லண்டன்-சித்திரை-2000

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *