கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 3, 2017
பார்வையிட்டோர்: 7,882 
 
 

எழுதியவர்: மதி நந்தி

ஹௌரா ஸ்டேஷனின் பிரும்மாண்டமான தகரக் கொட்ட கையின் கீழே நின்றுகொண்டு இரு சகோதரிகளும் நாற்புறமும்திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள். அங்கே நடமாடும் ஒவ்வொரவரின் முகத்தையும் உற்றுப் பார்த்தார்கள். யாரும் அவர்களைப்பொருட்படுத்தவில்லை, எல்லாருக்கும் அவரவர் வேலையிருந்தது.

அவர்கள் விசாலமான கொட்டகைக்குக் கீழே மக்களின் நடமாட்டத்துக்கும் இரைச்சலுக்கும் நடுவே விக்கித்துப்போய்நின்றார்கள். ஸ்டேஷன் முழுவதுக்கும் கேட்கும்படியாக ஏதோ ஒரு குரல் கேட்டது. சகோதரிகள் ஒருவரையொருவர்பார்த்துக் கொண்டார்கள். பிறகு அந்தக் குரல் கேட்டது. சட்டென்று ஓய்ந்துவிட்டது. சிறியவள் விரலால் சுட்டிக்காட்டினாள். “அதோ பாரு!” அது ஓர் ஒலி பெருக்கிக் கருவி.

சிறியவள் தொண்டையைக் கனைத்துக்கொண்டு, “இப்போ என்ன செய்யறது?” என்று கேட்டாள்.

பெரியவள் ஒரு பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டாள். அங்கே அவர்களுடைய அண்ணன் சுவரின் மேல் சாய்ந்தகொண்டு விரல்களால் தலைமுடியைக் கோதிக் கொண்டிருக்கிறான். இப்போது கையை எடுத்து விரல்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் மயிரை ஊதித் தள்ளி விடுவான்.

“வா, அந்த பக்கம் போகலாம்” பெரியவள் சொன்னாள்.

இருவரும் கூட்டத்தைப் பிளந்துகொண்டு முன்னேறினார்கள். டிக்கெட் கௌண்டர்களுக்கு முன்னால் மனித வரிசைகளைக்கடந்துகொண்டு, அங்குமிங்கும் தரையில் படுத்துக்கிடந்த ஜனங்களைத் தாண்டிக்கொண்டு, அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு வழிவிட்டுக் கொண்டு அவர்கள் கடைசியில் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள் தங்குமிடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.இருவரும் ஒரு பெஞ்சின் ஓரத்தில் உட்கார்ந்தார்கள். ஜன்னல் வழியே சாலை தெரிந்தது. அங்கு வரிசை வரிசையாக பஸ்கள்நின்றுகொண்டிருந்தன.

பிரயாணிகள் தங்குமிடத்தில் மங்கலான வெளிச்சம், இறுக்கமான ஒருவகை நெடி, சற்றுத் தொலைவில் தண்ணீர்க் குழாய்,டிக்கெட்டுக்காக நின்று கொண்டிருக்கும் பெண்களின் வரிசை, வெளியூர்ப் பயணிகள்..

“அக்கா, தண்ணி குடிக்கணும்”

“குடிச்சுட்டு வா”

தங்கை தண்ணீர் குடிப்பதைப் பெரியவள் தூரத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தாள். தங்கை தண்ணீர் குடிக்கும்போதுஅவளுடைய ரவிக்கை மார்புப்பக்கம் சற்றுத் தூக்கிக்கொண்டது. அவளுக்கருகில் தண்ணீரெடுக்கக் குடத்துடன் நின்ற ஒருவன்அந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறான், சங்கடமாயிருந்தது பெரியவளுக்கு.

“தூபான் எக்ஸ்பிரஸ் இன்னிக்கு லேட்”

பெரியவள் திரும்பிப் பார்த்தாள். பேசியது அவளுக்கருகில் உட்கார்ந்திருந்த பெண்தான் – “இன்னும் எவ்வளவு நேரம் காத்துக்கிட்டு இருக்கணுமோ?

“யாராவது வராங்களா?” பெரியவள் கேட்டாள்.

அந்தப் பெண் சிரித்தாள். சிரித்தவாறே ஒரு தடவை அந்த அறை முழுவதையும் பார்த்துக் கொண்டாள். “நேத்திக்கே அவர்வர்றதாகக் கடுதாசி வந்தது. ஸ்டேஷனுக்கு வந்தேன், அவர் வரலே, இன்னிக்கு வரலாம்.”

இப்போது இங்கிருந்து தங்கையைப் பார்க்க முடியவில்லை. பெரியவள் எழுந்து நின்றாள்.

“நீங்க எங்கேயாவது போகப் போறீங்களா, இல்லை யாரையாவது வரவேற்க வந்தீங்களா?”

“இல்லே, நாங்க போறதுக்காகத்தான் வந்திருக்கோம்” என்று சொல்லி நிறுத்திக் கொண்டாள் பெரியவள். அவள் கொட்டகைக்குக் கீழே கூட்டத்துக்கும் கூச்சலுக்கும் நடுவில் நின்று கொண்டு தங்கையைத் தேடினாள். அடிமேலடி வைத்து முன்னேறிஸ்டேஷனின் முக்கிய வாயில்களில் ஒன்றையடைந்தாள். அங்கிருந்து ஹௌரா பாலம் தெரிந்தது. பாலத்தைக் கடந்தால்கல்கத்தா. கல்கத்தாவில் சந்து ஒன்றில் அவர்கள் ஒரு வீட்டின் கீழ்த்தளத்தில் குடியிருக்கிறார்கள். — அவள், அவளுடைய அம்மா,அண்ணன், தம்பி, தங்கை. அவர்கள் தங்கியிருந்த அறை குளிர் காலத்தில் நடுக்கும், கோடைகாலத்தில் பொசுக்கும். தென்றல்அவர்கள் வீட்டு மேல்மாடியில் வீசிவிட்டுப் போய்விடும். காற்று, மேகம், வெயில் எல்லாம் போகும், மாலை நேரம் வந்து போகும்.உடம்பைக் கழுவிக்கொண்டு மொட்டை மாடிக்குப் போவதற்குள் அந்தி கழிந்துவிடும்..

அவள் மூக்கையுறிஞ்சி முகர்ந்தாள். ஏதோ ஒரு மணம். அப்பாவை மயனத்துக் கொண்டு செல்லும்போது அண்ணன்ஒரு சின்ன பாட்டில் கொண்டு வந்தானெ, அதிலிருந்த திரவமும் இந்த மாதிரிதான் மணத்தது. காலி பாட்டிலைத் தங்கை எடுத்துவைத்துக் கொண்டாள்… இப்போது அவள் எங்கே.

***

“டில்லி பாரு! ஆக்ரா பாரு!” என்று சொல்லிக் கொண்டே கைப்பிடியைச் சுற்றுவான் அந்த ஆள். குதுப்மினாரின் படம்,தாஜ்மகாலின் படம் இவையெல்லாம் ஒவ்வொன்றாக வந்து விட்டுப் போகும். அந்த ஆள் ஒரே மாதிரிக் குரலில் கத்திக்கொண்டேயிருப்பான். கைப்பிடியைச் சற்று மெதுவாகச் சுற்றும்படி அவனிடம் சொன்னாள். அவன் சளியை உறிஞ்சுவது போல்முகத்தை வைத்துக்கொண்டு சிரிப்பான்.

ஸ்டேஷனில் அங்கங்கே தொங்கவிடப்பட்டிருந்த படங்களைப் பார்த்த தங்கைக்கு அந்த ஆளின் நினைவு வந்தது.அவன் டில்லி ஆக்ராவுக்கெல்லாம் போயிருக்கிறானா என்று அவள் அவனைக் கேட்டாள். அவன் அவளுடைய கேள்விக்குப்பதில் சொல்லாமல், பயாஸ்கோப் பெட்டியின் துவாரங்களில் கண்களைப் பொருத்திக்கொண்டு நின்றிருந்தவர்களை ஈவிரட்டுவதுபோல கையால் விரட்டத் தொடங்கினான். அந்த ஆளை இப்போது நினைவுக்கு வந்தது தங்கைக்கு.

வெகு நாட்களுக்குப்பிறகு அந்த பேட்டைக்கு ஒரு புதிய பயாஸ்கோப்காரன் வந்தான். பழைய ஆள் ஏன் வரவில்லையென்றுபல நாட்கள் யோசித்திருக்கிறாள் தங்கை. அவள் அவனைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் அவள் மனக்கண்முன்னால் குதுப்மினார், தாஜ்மகால், ஆகாயவிமானம், ஜடாயு சண்டை எல்லாம் வரிசையாக வந்து போகும்…

படங்களைப் பார்த்துக்கொண்டே வந்தவள் இன்னொரு பெண்ணுடன் உரசிக் கொண்டாள். திரும்பிப் பார்த்தாள்.அவள் இவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். படத்தின் கீழே ஏதோ ஆங்கிலத்தில் எழுதியிருந்தது, அவள் அதை எழுத்துக்கூட்டிப் படித்துவிட்டு அந்தப் பெண்ணை ஓரக்கண்ணால் பார்த்தாள். அந்தப் பெண்ணின் உடையிலிருந்து ஒரு நல்லவாசனை வந்தது. தங்கை மெதுவாக அந்த வாசனையை உறிஞ்சினாள். சாக்லேட் சுற்றியிருக்கும் ஜிகினாக் காகிதத்திலிருந்தும்இந்த மாதிரி வாசனைதான் வரும்.

“அது ஒண்ணும் இவ்வளவு அழகாயில்லே” அந்தப் பெண் சொன்னாள். தங்கை அவளைத் திரும்பிப் பார்த்தாள்.

“நாங்க போன பூஜை லீவிலே போயிருந்தோம். போகவர எவ்வளவு கஷ்டம்! ஓட்டல் வாடகையும் ரொம்ப ஜாஸ்தி!”இன்னும் நிறைய நேரம் அந்த பெண்ணின் அருகிலேயே நின்று அந்த வாசனையை முகர்ந்து நெஞ்சுக்குள் சேர்த்து வைத்துக்கொள்ள ஆசை தங்கைக்கு. “அழகாகயில்லையா அங்கே? ஏன்?” என்று கேட்டாள்.

“அப்படியொண்ணும் அழகாயில்லே, அதெல்லாம் ஒரே காடு, புதர். அங்கே யாரு போவாங்க…! இதோ இருக்குகொனார்க்கோட படம். இந்த கொனார்க்கிலே பார்க்கக் கூடியது நெறைய இருக்கு…”

“நீங்க போயிருக்கீங்களா?”

“என் நாத்தியோட புருசன் போயிருக்கார்.”

“இப்போ எங்கே போறீங்க?”

“ராணி கஞ்ச்.”

“யார்கிட்டேப் போறீங்க?”

அந்தப் பெண் சிரித்தாள். படங்களில் பெண்கள் சிரிப்பார்களே அந்த மாதிரி. பிறகு ஏதோ சொல்ல வந்தவள்,சொல்லாமல் மறுபடி சிரித்தாள். இதைப் பார்த்துத் தங்கையும் சிரித்தாள்.

“அடுத்த வருடம் அவருக்கு லீவு கிடைச்சா, நாங்க காஷ்மீர் போகப்போறோம்.”

“அக்கா, ஏழாம் நம்பர் பிளாட்பாரத்திலேருந்து ரயில் கிளம்பப் போகுது. சீக்கிரம் வா!” என்று சொல்லிக்கொண்டுவந்த, அரை டிராயர் அணிந்த ஒரு பையன் சூட்கேசைக் கையிலெடுத்துக் கொண்டான். அந்தப்பெண் பிரம்புக் கூடையைக்கையில் தொங்கவிட்டுக்கொண்டு, “நான் வரேன்” என்றாள்.

அவர்கள் போனார்கள். தங்கையும் சற்று முன்னேறி இரும்புக் கிராதியில் கையை வைத்துக்கொண்டு ஏழாம் நம்பர்பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருக்கும் ரயிலைப் பார்த்தவாறு நின்றாள்.

***

இவ்வளவு சத்தம் இருந்தாலும் ஒன்றும் காதில் நுழையவில்லை அக்காவுக்கு. அவள் இரும்புத்தடி போல் தூணில் சாய்ந்து கொண்டு நின்றாள். காக்கியுடையும் தலையில் சிவப்புத் தொப்பியும் அணிந்த ஒருவன் அவள் பக்கம் வந்தான். தமக்கைக்குஒன்றும் காதில் விழவில்லை. அவன் அவளைக் கடந்து போனான், கடக்கும்போது ஒரு தடவை அவள் பக்கம் பார்த்தான்.

பிரயாணிகள் தங்குமிடத்துக்கே போய், அங்கே காத்திருப்பது நல்லது என்று அவளுக்குத் தோன்றியது. ஒருவேளை தங்கைஅங்கே போயிருக்கலாம்.

அங்கே பெஞ்சுகளில் காலியிடமில்லை. தமக்கை சுவரில் சாய்ந்து கொண்டு நின்றாள். முன்பு அங்கிருந்து போன பெண்மறுபடி அங்கே வந்தாள். உட்கார இடமில்லாதது கண்டு, தமக்கைக்கருகில் வந்து நின்றுகொண்டு, “இன்னும் வரலே”என்று சொன்னாள்.

“யாரு வராங்க?” என்று ஒப்புக்குக் கேட்டாள் தமக்கை. ஏதாவது பேசவேண்டுமே!

அந்தப் பெண்ணுக்குப் பெரிய பெரிய கண்கள். இரண்டு கண்கள் முகங்களுக்குப் பொருத்தமாயிருக்கும். அப்படிப்பட்டகண்கள் இப்போது அவளுக்குப் பொருத்தமாக மாறிவிட்டது. அவளுடைய மோவாய்க்குக் கீழே வயதால் ஏற்பட்ட மடிப்புசற்று அசைந்தது.

“யாரா? ஒருத்தருமில்லே…”

இதே வார்த்தைகளை வேறொரு குரலில் கேட்டிருக்கிறாள் தமக்கை… சின்னச் சித்தி அவள் கையில் இரண்டு ரூபாயைக்கொடுத்துவிட்டு, “நீ இப்படி அடிக்கடி வந்தா நான் என்ன பண்ணுவேன்?” என்றது ஞாபகம் வந்தது. அப்போது சித்தியின்அறையில் அவளுடைய அடுத்த வீட்டுக்காரி ஒருத்தி இருந்தாள். அவளுடைய கேள்விக்குச் சித்தி சொல்லிய பதில் வெளியேபோய்க் கொண்டிருந்த தமக்கையின் காதில் விழுந்தது “யாரா? ஒருத்தருமில்லே…”

“முப்பது ரூவாக் கூடச் சம்பளம்னு நூத்தம்பது மைல் தூரத்திலே வேலைக்குப் போயிட்டாரு. இதுக்கு என்ன தேவை?எனக்கு பள்ளியிலே கிடைக்கறதையும், இவர் இங்கேயே ஏதாவது சம்பாதிச்சா அதையும் வச்சிக்கிட்டு ஏழு பேருள்ள குடும்பத்தைநல்லா நடத்தலாமே!”

இதை ஆமோதிப்பது போல் தலையாட்டினாள் தமக்கை.

“நான் சொல்றதைக் கேக்கறதில்லே அவர். எட்டு வருசமாப் பார்த்துக்கிட்டு வரேன், ஆனா எங்க கலியாணதுக்கு முன்னாலேஎன் காசைத் தொடக்கூட மாட்டார்…”

“ஒங்க புருசன் எங்கே வேலை செய்யறார்?”

“டி.வி.சி.யிலே.”

“எங்க அண்ணன் அங்கே வேலைக்கு முயற்சி பண்ணினார். கிடைக்கல்லே.”

“அப்படியா? என் புருசனே ரொம்பப் பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்காரே …! நான் அவரைக் கேட்டுப்பாக்கறேன்… நீங்க இங்கேதானே இருப்பீங்க…? இல்லே, ரயிலுக்கு நேரமாயிடுச்சா ?”

“இல்லே, நேரமாகலே… நான் இங்கேயே இருப்பேன்”, தான் சொன்ன வார்த்தைகளே தமக்கையின் நெஞ்சிலிருந்து கிளம்பிஅவளுடைய காதுகளை நிறைந்தன “நான் இங்கேயே இருப்பேன்.:

“நான் இன்னொரு தடவை போய்ப் பார்த்துட்டு வரேன்.”

அந்தப் பெண் போனாள். தமக்கையும் அவளுக்குப் பின்னால் சிறிது தூரம் போனாள். அந்தப் பெண் கூட்டத்தில்மறைந்ததும் தமக்கை திரும்பி வந்து ஸ்டேஷன் வாயிலில் நின்றாள். மாலை மங்கி வரும் நேரம். பஸ் ஸ்டாண்டில்பிரயானிகள் பஸ்களின் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய முகங்கள் துருப்பிடித்த டப்பா மாதிரிதெரிகின்றன. மஞ்சள் வெயில் ஹௌரா பாலத்தின்மேல் விழுகிறது. ஹூக்ளியில் நின்று கொண்டிருக்கும் கப்பலிலிருந்துஊதல் ஒலி. தள்ளு வண்டியிழுக்கும் கூனன் தள்ளாடியவாறே வண்டியை பாலத்து மேட்டின் மேல் இழுத்துக்கொண்டுபோகிறான். பஸ் டிரைவர் பஸ்ஸிலிருந்து இறங்கிப் பீடிப்புகையை ஊதித் தள்ளுகிறான்…

லிலுவாவில் பெண்கள் விடுதி ஒன்று இருக்கிறது. வீட்டிலிருந்து ஓடிப்போக முயன்று பிடிப்பட்டவர்களைப் போலீஸ்முதலில் அங்கே வைத்திருக்கும்.

“நாங்க இங்கேயே இருப்போம்…! எங்களுக்கு வீடு வாசல் எதுவுமில்லே!… அப்படீன்னு பொலீஸ்கிட்டே சொல்லணும்,சொல்லுவீங்களா ?” அவர்களுடைய அண்ணன் அவர்களைக் கேட்டான். அவர்களுடைய அண்ணனிண் முகமும் இந்த அந்திமாலைபோலத்தானிருந்தது…

தமக்கை மறுபடி ஸ்டேஷனுக்குள் வந்தாள்…


இரும்புக் கிராதியைப் பிடித்துக் கொண்டு, ரயில் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தங்கை. ரயிலின் ஜன்னல்களுக்குப்பின்னால் தெரிந்த முகங்கள் பிளாட்பாரத்தைப் பார்த்துச் சிரிக்கின்றன. இதே மாதிரி சிரித்துக்கொண்டே தானும் பிரயாணம்செய்ய ஆசையாயிருக்கிறது அவளுக்கு.

ரயில் லைன்களுக்குக் குறுக்காக ஒரு பெரிய பாலம். பிளாட்பாரத்திலிருந்து போகும் சாலை உயர்ந்துகொண்டேபோய்அந்தப் பாலதோடு இணைகிறது. மூன்று மனிதர்கள் கைகளில் பைகளுடன் அதில் நடந்து போகிறார்கள். அவர்கள் ஒரு மலைமேல் ஏறிக்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது..

தமக்கை தனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள் என்பது அப்போதுதான் நினைவு வந்தது அவளுக்கு.

தங்கை பிரயாணிகள் தங்குமிடத்தில் தமக்கையைக் காணாமல் மறுபடி பெரிய கொட்டகைக்குக் கீழே வந்தாள்.அங்கே ஒரு கிழவன் எடை பார்க்கும் இயந்திரத்தில் தன் எடையைப் பார்த்துக் கொண்டான். தன் எடை அச்சிடப்பட்டசீட்டைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நடந்துபோய்விட்டான்.

“ரயில் புறப்பட இன்னும் மூணு நிமிஷந்தான் இருக்கு. இன்னும் வந்து சேரலே! கொஞ்சங்கூடப் பொறுப்பே இல்லே!”

தங்கை திரும்பிப் பார்த்தாள்.

ஆறேழு ஆண்களும் பெண்களுமடங்கிய ஒரு குழு.

“அவங்களுக்காகக் காத்துக்கிட்டிருந்தா ரயில் போயிடும்.”

“பின்னே என்ன செய்யறது?”

அவர்கள் தங்களுக்குள் ஏதோ விவாதித்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து போய்விட்டார்கள்.

சற்று நேரத்துக்குபின் மூக்குக் கண்ணாடியணிந்த பெண்ணொருத்தி அங்கே ஓட்டமும் நடையுமாக வந்தாள். ஒல்லியாகஇருந்தாள். ஏழாம் வகுப்பு மாணவிபோல் தோன்றினாள்.

அந்தக் குழுவிலிருந்தவர்கள் இவளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்களென்று தங்கைக்குப் புரிந்தது.

“அவங்க இப்பத்தான் போனாங்க” என்று சொன்னாள்.

“போயிட்டாங்களா?” அந்தப் பெண் தன் கையிலிருந்த தோல் பையை இன்னும் இருகப் பிடித்துக் கொண்டாள். மூக்குக் கண்ணாடியை நன்றாக மூக்கின்மேல் பொருத்திக் கொண்டாள். பிறகு ‘இப்போது என்ன செய்வேன்?’ என்பதுபோல் பார்த்தாள்.

“நீங்க தனியாப் போக முடியாதா?”

“ஏன் போக முடியாது? ஆனா அவங்களோட போனா வீட்டைச் சுலபமாக கண்டுபிடிக்கலாம்.. அடே நீங்களா?”

கடைசிக் கேள்வி அப்போதுதான் அங்கு வந்த ஒரு இளைஞனிடம் கேட்கப்பட்டது.

அவன் பரபரப்போடு நெருங்கினான்.

“நீங்க இப்பத்தான் வரீங்களா?”

“ஆமா, நீங்க?”

“நானுந்தான்”

“பின்னே என்ன செய்யறது? ரயில் போயிடுச்சு.. ஒரு ஊர்வலத்திலே டிராம் ஆப்பிட்டுக்கிட்டது..”

“இந்த ஊர்வலமெல்லாம் எப்பத்தான் ஓயுமோ..? சரி, இப்ப என்ன பண்ணப் போறீங்க? ரயில் போயிடுச்சே!”

“கல்யாணத்துக்குப் போறோம். வீடு திரும்ப ராத்திரி பத்து, பதினொரு மணி ஆகும்னு வீட்டிலே சொல்லிட்டு வந்திருக்கேன்.இப்போ திரும்பிப் போனா எல்லாரும் கேலி பண்ணுவாங்க.”

“சரி வாங்க, ரயில்லே பாண்டெல் வரைக்கும் போயிட்டு வரலாம்.”

“அதுக்கு முன்ணனாலே ஏதாவது கொஞ்சம் சாப்பிடணும்.”

அவர்களிருவரும் போய்விட்டார்கள்..

இப்போது ஸ்டேஷன் விளக்குகள் எல்லாம் எரிந்தன. ஒரு ரயில் வந்து நின்றது. ஜனங்கள் கூட்டங்கூட்டமாக ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்கள். இவ்வளவு கூட்டத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை தங்கைக்கு. அவள் பிரயாணிகள் தங்குமிடத்துக்குமறுபடி திரும்பி வந்தாள்.


“நாசமாப் போறவனே! கொஞ்சம் முன்னாலே போயிருக்கக் கூடாது?” என்று சொல்லித் தம்பியின் கன்னத்தில் அறைந்துவிட்டாள் அம்மா. அவன் அழைப்பில்லாமல் ஒரு கல்யாண விருந்துக்குப்போய் அங்கே அடிவாங்கிக்கொண்டு வந்திருந்தான்.தமக்கைகளைப் பார்த்துவிட்டுக் குய்யோ முறையோ என்று அழுதான் அவன். அப்போது அவன் முகமும் இது மாதிரிதான்சப்பட்டையாயிருந்தது.

தான் பார்த்துக்கொண்டிருந்த படங்களுக்கு இன்னும் அருகில் வந்தாள் தமக்கை. ரயில் விபத்துக்குள்ளாகி இறந்தவர்களின் படங்கள் அவை. கண்ணாடி போட்ட ஒரு சட்டத்துக்குள் அவை ஒட்டப்படிடிருந்தன. அவளுடைய முகத்தின் நிழல்கண்ணாடியில் விந்தத. அதில் தன் முகத்தை நன்றாகப் பார்ப்பதற்காகச் சற்று ஓரமாக நகர்ந்தாள். அப்போது படங்களிலிருந்த முகங்கள், அவலட்சணமாக, பயங்கரமாகத் தெரிந்தன..

அண்ணன் ஒருநாள் கத்தினான், “நான் என்ன செய்யறது? முயற்சி பண்ணிக்கிட்டுத்தானே இருக்கேன்!”

தமக்கை அந்தக் கண்ணாடிக்குக் கீழே தன் அண்ணனின் முகத்தையே கண்டாள். அவளுக்குத் தன் அண்ணன்மேல்இரக்கம் ஏற்பட்டது. ரயிலில் அரைபட்டு இறந்தவர்களுக்காக வேதனைப்பட்டாள் அவள்.

புருஷனின் வரவுக்காகக் காத்திருந்த பெண் இப்போது தமக்கையின் பார்வையில் பட்டாள். அவள் தன் கணவனோடுபோய்க்கொண்டிருந்தாள். கணவனின் கைகளில் ஒரு சூட்கேஸ், ஒரு படுக்கை. தமக்கை ஓடிப்போய் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு, “இவரோட விலாசத்தைக் கொடுங்க. என் அண்ணனை வந்து பார்க்கச் சொல்றேன்” என்று சொன்னாள். சொல்லிவிட்டு அந்தப் பெண்ணின் பெரிய பெரிய கண்களை, கீழே தொங்கும் மோவாயை, உடைந்துபோன, மண் அடுப்பு போன்ற உதடுகளைப் பார்த்தாள்.

“அங்கே வேலைக்குறைப்பு நோட்டீஸ் போட்டுட்டாங்களாம்.”

அந்தப் பெண் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தமக்கை. யாரோ அவளுடைய தோளில் சூட்கேசையும் படுக்கையையும் சுமத்தினாற் போலிருந்தது அவளுக்கு. மயக்கம் வந்தது. கண்ணிமைகள் கனத்தன. சிரமப்பட்டுக் கண்ணைத் திறந்துபார்த்தாள். தங்கை இதற்குள் திரும்பி வந்திருக்கலாம்.

பிரயாணிகள் தங்குமிடத்துக்கு வந்த தமக்கை அங்கு தங்கை வந்திருப்பதைக் கண்டாள்.

இருவரும் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார்கள். பிறகு பெரியவள், “இங்கே உக்காந்திருந்து என்ன பிரயோசனம்? அந்தப்பக்கம் போகலாம், வா” என்று சொன்னாள்.

அவர்கள் எழுந்து ஸ்டேசனின் மறுகோடிக்கு வந்தார்கள்.

“இப்போ நாம என்ன செய்யறது?” சிறியவள் கேட்டாள்.

பெரியவள் சற்று யோசித்துவிட்டு, “இங்கே கொஞ்ச நேரம் நிக்கலாம்” என்றாள்.

அப்போது அந்த ஆண்-பெண் ஜோடி உணவு விடுதியிலிருந்து வெளியே வந்தது. “இப்போ இவங்க சுத்தப் போவாங்க”என்று தங்கை நினைத்தாள்.

தங்கை எச்சில் துப்பினாள், இருமினாள், முதுகைக் குனிந்து கொண்டு வாந்தியெடுக்க முயன்றாள். தமக்கை அவளுடையமுதுகைத் தடவிக் கொடுத்தாள், அவளைத் தன் மார்போடு கட்டிக் கொண்டாள், பிறகு கேட்டாள், “ஏதாவது சொன்னியா?”

“இல்லியே”

“ஒனக்குப் பசிக்குதா?”

“இல்லே.”

மறுபடி உணவு விடுதியின் கதவு திறந்தது. கப்பலின் சங்கு ஒலித்தது.

“சங்குச் சத்தம் மாதிரி இருக்கு, இல்லே?” தங்கை சொன்னாள்.

“ஆமா.”

“அக்கா, ஒனக்கு ஞாபகம் இருக்கா? ஒரு தடவை அப்பாவோடே ஆத்தங்கரைக்குப் போனபோது ஒரு ரயில் இஞ்சின்மேலே ஏறினமே!”

“ஆமா.”

“டிரைவர் என்னைத் தூக்கி வச்சுக்கிட்டான். அவனுக்கு ஒரு தங்கப் பல் இருந்தது.”

“இஞ்சின் விசில் ஊதினபோது நீ பயந்துபோய் அவன் நெஞ்சிலே ஒளிஞ்சுக்கிட்டே.”

தங்கை சிரித்தாள்.

“இதோ பாரு!” தமக்கை சொன்னாள்.

மணமகன் மணமகளை வீட்டுக்குக் கூட்டி வருகிறான். புதிய பெட்டி, புதுப் படுக்கை, புது உடைகள், நகைகள்.மணமகள் இயந்திரம் மாதிரி நடக்கிறாள். மணமகன் சிகரெட் புகையை இழுக்கிறான்.

“பார்திதியா அக்கா, அவன் முன்மண்டை வழுக்கை!”

“ஆமா.”

“ரொம்ப வயசாயிடுச்சு மாப்பிள்ளைக்கு.”

“ஆமா.”

“அண்ணனோட அந்த சிநேகிதன் ஏன் அப்பறம் வரல்லே?”

“எனக்கென்ன தெரியும்?”

“ரொம்ப நல்லாப் பேசுவான் அவன்”

தமக்கை ஒன்றும் பேசவில்லை.

“அவன் ஒருநாள் சாக்லேட் வாங்கிக்கிட்டு வந்தான், ஞாபகமிருக்கா?” தமக்கையிடமிருந்து பதில் இல்லாவிட்டாலும்தொடர்ந்து பேசினாள் தங்கை, “அவனுக்கு ஒன்னைப் பிடிச்சிருக்குன்னு அம்மா சொன்னா.”

“பேசாமே இரு இப்போ!”

தங்கையின் கண்களில் நீர் நிறைந்தது. அவள் தனக்கு வந்த இருமலை அடக்குவதற்காகக் குனிந்து கொண்டாள். மெல்லியகுரலில் “தண்ணி வேணும்” என்றாள்.

“குடிச்சுட்டு வா.”

தங்கை போகவில்லை. தமக்கைக்கு மயக்கம் வரும் போலிருந்தது. அவள் கண்கொட்டாமல் முன் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“இப்போ என்ன செய்யறது?” தங்கை கேட்டாள்.

“தெரியாது.”

“அண்ணன் என்ன சொன்னான்?”

தமக்கை ஞாபகப்படுத்திக்கொள்ள முயன்றாள்.

“இப்போ அவங்க வருவாங்களா?”

“ஏன்?”

“இல்லேன்னா நாம எதுக்காக இங்கே வந்திருக்கோம்?” தமக்கை நாற்புறமும் திரும்பிப் பார்த்தாள். மனிதர்கள், வெளிச்சம்,ஒலிகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு மறுபடியும் வெறிச்சென்று நேரே பார்த்தாள். பிறகு சோர்ந்த குரலில்சொன்னாள், “அவங்க வருவாங்க. வந்து ‘நீங்க யாரு, எங்கே போகணும், ஏன் போகணும்?’ இப்படியெல்லாம் கேப்பாங்க.நாம என்ன சொல்லணும், தெரியுமா? ‘நாங்க அக்கா-தங்கை. எங்களுக்கு சொந்தக்காரங்க ஒருத்தருமில்லே. நாங்க பம்பாய்போய் அங்கே சினிமாவிலே சேரப் போறோம்’னு சொல்லணும், அவங்க நம்ம விலாசத்தைக் கேப்பாங்க. நாம சொல்லக்கூடாது.அவங்க நம்மைப் பிடிச்சுக்கிட்டுப் போய்ப் பெண்கள் விடுதிக்கு அனுப்பிடுவாங்க..”

“அங்கே என்ன பண்ணுவாங்க?”

“எனக்குத் தெரியாது.”

“அக்கா, வா. நாம ஓடிப் போயிடுவோம்..”

கொஞ்சங் கொஞ்சமாகப் பெரியவளின் சோர்வு கலைந்தது. அவள் நிதானமாகக் கேட்டாள், “எங்கே போறது?”

“எங்கே வேணும்னாலும் போகலாம்.”

“அப்பறம்?”

தமக்கை கைகளை நீட்டித் தங்கையைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். தலை குனிந்து “பயந்துட்டியா?”என்று கேட்டாள்.

தங்கை தமக்கையின் நெஞ்சில் முகத்தைப் பதித்துக்கொண்டு வெட வெட வென்று நடுங்கத் தொடங்கினாள். தமக்கைஅவளுடைய முதுகில் கையை வைத்துக்கொண்டு தானும் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

ஒருத்தி நினைத்தாள் – மனிதனின் முகம் துருப்பிடித்த டப்பா மாதிரி.

இன்னொருத்தி பார்த்தாள் – ரயிலின் முகம் சிரித்தவாறு போய்க்கொண்டிருந்தது.

மதி நந்தி (1921 – 2010)
வடக்குக் கல்கத்தாவில் ஒரு மேற்குடியில் பிறந்தார். தானியங்கிப் பொறியிலில் டிப்ளமோ பெற்றவர். அரசுப் போக்குவரத்துத் துறையில் இரண்டாண்டுப் பயிற்சிக்குப்பின் பி.ஏ பாஸ் செய்து பத்திரிகைத் துறையில் பணி செய்யத் தொடங்கினார். இப்போது கல்கத்தாவின் தினசரியொன்றில் விளையாட்டுப் பகுதியின் ஆசிரியர். கிரிக்கெட் பிரியர். கிர்க்கெட் விளையாட்டைக் கருவாகக் கொண்டு மூன்று நூல்கள் எழுதியுள்ளார். தேஷ் பத்திரிகையில் வெளியான சாத் (1956) கதை மூலம் வாசகர் கவனத்தை ஈர்த்தார். அனாவசிய விவரங்களற்ற, நேரடியான முறையில் கதை சொல்கிறார். யதார்த்த மண்ணில் உறுதியாக நின்றுகொண்டு மனிதன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார். நடுத்தர, கீழ் மட்டத்து மக்களின் வாழ்க்கையைத் திறம்படச் சித்திரிப்பவர்.

– தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள், 1971.

– அனைத்திந்திய நூல் வரிசை, வங்கச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1997, தொகுப்பு: அருண்குமார் மகோபாத்யாய், வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *