கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை நாடகம்
கதைப்பதிவு: July 12, 2022
பார்வையிட்டோர்: 19,320 
 

(1960ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி : 1

கங்கைகொண்டசோழபுரத்து அரண்மனை. கி. பி. 1044. மாலை வேளை.

[சோழ வேந்தன் முதலாம் இராசேந்திரன் கட்டிலில் சாய்ந்தவாறு இசை கேட்டுக்கொண்டிருக்கிறான்.]

பாடல் :
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகளித்த லான்.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேனின்று தான்சுரத்த லான்.

சோழன் : பாட்டுப் போதும். போகலாம். சேனைத் தலைவர் மட்டும் இருக்கலாம்.

(எல்லோரும் போகிறார்கள்.)

சேனைத் தலைவரே! பாட்டு நன்றாக உள்ளத்தைத் தொடுகிறது. எத்தனை முறையோ கேட்டிருக்கிறேன். கேட்கும் போதெல்லாம் செவி குளிர்கிறது. ஆனால் ஒரு வேறுபாடு. இதற்கு முன் இந்தப் பாட்டைக் கேட்ட போதெல்லாம், என் உள்ளத்தில் ஒரு பெரு மிதம் – செருக்கு ஏற்பட்டது உண்டு. இன்று அது ஏற்படவில்லை. காவிரிநாட்டைப் பற்றி அன்பு ஏற் பட்டது. அவ்வளவு தான். இதற்கு முன் அப்படி அல்ல. எனக்கு யாரும் நிகர் அல்ல என்ற பெரு மிதம் ஏற்பட்டது. அது இன்று இல்லை.

சேனைத் : அரசர் பெரும! காரணம் என்னவோ? ஒரு கால், உங்கள் உடல் நிலை காரணமாக இருக்கலாம்.

சோ : நம் படைகள் எப்படி இருக்கின்றன? எங்காவது போருக்குப் போக வேண்டும் என்ற தினவு இருக்குமே! உமக்கும் அந்தத் தினவு – (புன்சிரிப்புச் சிரிக்கிறார்.) என்ன மறுமொழி இல்லையே. சேனைத்: அரசர் பெருமானின் உடல் நிலை தேறட்டும். பிறகு படையைப் பற்றியும் போரைப் பற்றியும் எண்ணலாம்.

சோ : ஆம். உடல் தேறியவுடன், காட்டில் வேட்டைக்குச் செல்வது போல், பக்கத்து நாட்டின் மேல் ஒரு முறை படையெடுக்கலாம். இளைத்தவன் பாண்டியன் இருக்கிறான். (முன்னிலும் மிகுதியாகச் சிரித்து) அவன் நாட்டின் மேல் படையெடுத்து அழிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது அல்லவா? என்ன சொல்கிறீர்? (சேனைத் தலைவர் மறுமொழி கூறாமல் திகைக்கிறார்) சேனைத் தலைவரே ! வாழ்நாள் எல்லாம் இது தான் தொழிலா ? படையெடுத்துப் பாழ்படுத்தும் வீரச் செயலில் இன்னும் சலிப்பு ஏற்படவில்லையா?

சேனைத் : அரசர் பெருமானின் கட்டளைப்படியே–

சோ : என் கட்டளையா? நான் கட்டளையிடும் காலம் கடந்து போய் விட்டது. இப்போது இந்த உதவாத உடம்போடு, இறைவன் கட்டளைக்குக் காத்திருக்கிறேன். ஆனாலும் நான் சொல்லக் கூடியது உண்டு.

சேனைத் : (கலக்கத்தோடு) அரசே!

சோ : நன்றாகக் கேளும். நான் இந்த நாட்டை ஆளப்பிறந்தவன். இந்த நாடு என் நாடு என்று பெருமைப் படலாம். எனக்கு உரிமை உண்டு. ஆனால் பிறர் நாட்டைப் பற்றி ஏன் குறைவாக எண்ண வேண்டும்? பாண்டியர் சேரர் ஆட்சியைப் பற்றி ஏன் குறைவாக எண்ண வேண்டும்?

சேனைத் : உள்ள பெருமை தானே? அரசர்க்கு அது இயல்பு தானே? வழிவழியாக வந்த பெருமிதம்-.

சோ : வழிவழியாக வந்துவிட்டது. அதனாலேயே தகும் என்று சொல்ல முடியுமா?

சேனைத் : எண்ணிப் பார்க்கத் தக்கது, அரசே!

சோ : உம் வீட்டில் நீர் வாழ்கிறீர். ஆனால் பக்கத்து வீட்டைப் பாழ்படுத்த உமக்கு உரிமை உண்டா? பக்கத்து வீட்டை உம் வீட்டோடு சேர்த்துக்கொள்ள உரிமை உண்டா? பக்கத்து வீட்டாரைப் பழிக்கவோ அடக்கவோ உரிமை உண்டா?

சேனைத் : இல்லை, அரசே!

சோ : அப்படியானால், வீட்டுக்கு ஒரு நீதி, நாட்டுக்கு ஒரு நீதியா ?

சேனைத் : அது குடும்பம். இது அரசியல். வேறு வேறு நீதியாக வழிவழியாக இருந்துவருகிறது.

சோ : வழிவழியாக என்று சொல்லிக் குற்றங்களைக் கடைப்பிடித்துவருவது தகுமா?

சேனைத் : விளங்கவில்லை, அரசே!

சோ : விளங்குகிறது. மனம் இடம் தரவில்லை என்று சொல்லும். பழகிய குற்றத்தை விட்டு மனம் வெளியேற முடியவில்லை.

சேனைத் : குற்றமா, அரசே!

சோ : குற்றம் தான். ஆனால் எளிதில் உணர முடியாது. எனக்கே இத்தனை ஆண்டுகளாக உணர முடிய வில்லையே! மகன் இராசாதிராசனைப் பற்றியும் பேரனைப் பற்றியும் சோழர் குடும்பத்தின் எதிர்காலம் பற்றியும் எண்ணிக்கொண்டிருந்தபோது, நேற்று இரவு திடீரென்று ஒளி தோன்றியது.

சேனைத் : இளவரசர் இராசாதிராசனும் பெரிய வீரர் அரசே! அவரும் தம் குடைக் கீழ் எல்லா நாடுகளையும் வென்று அடக்குவார் என்பது உறுதி.

சோ : பிறகு, பேரன்; அதற்குப் பிறகு?

சேனைத் : வழிவழியாகப் புலிக்கொடியே பறக்கும். வேறு எவரும் தலையெடுக்க முடியாது.

சோ : உண்மையாக உணர்ந்து பேசுகிறீரா? என்னைப் புகழ்வதற்காகப் பேசுகிறீரா?

சேனைத் : உள்ளத்தில் உணர்ந்து சொல்கிறேன்.

சோ : அப்படியானால், நெடுஞ்செழியன் முதலான பாண்டியர்கள் பிறந்த மரபு இன்று ஏன் இப்படி இருக்கிறது? இமய வரம்பனும் செங்குட்டுவனும் பிறந்த சேரர் மரபு இன்று என்ன நிலையில் உள்ளது? மீன் கொடியே பறக்கும், வில் கொடியே பறக்கும், வேறு கொடி பறக்க முடியாது என்று அவர்கள் கொண்டிருந்த உறுதி என்ன ஆயிற்று?

சேனைத் : அவர்களின் வழியில் வந்தவர்கள் வீரம் குறைந்து போனார்கள்.

சோ : அந்த நிலைமை சோழர் குடியில் என் பேரனுக்குப் பின் வருவோரில் ஏற்பட்டால் –

சேனைத் : ஏற்படவே ஏற்படாது. (சோர்வுடன்) ஏற்படாது என்று நம்புகிறேன் அரசே!

சோ : நன்றாக எண்ணிப் பாரும். கரிகாலனுக்குப் பிறகு இந்தச் சோழர் குடியிலேயே எவ்வளவு இரக்கம் ஏற்பட்டது! எவ்வளவு வீழ்ச்சியும் ஏற்பட்டது. அந்த நிலைமை இன்னும் நூறு இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு –

சேனைத் : அரசே! உங்கள் திருவாயால் அதைச் சொல்ல வேண்டா.

சோ : அஞ்சுவதில் பயன் இல்லை. அஞ்சுவதால் உண்மை ஒளிந்து கொள்ளாது. உண்மையை யாராலும் மாற்ற முடியாது.

சேனைத் : ஆம்.

சோ : நான் ஏன் இதைச் சொல்கிறேன், தெரியுமா?

சேனைத் : தெரியவில்லை , அரசே

சோ : நீர் என் சேனைத் தலைவராக வந்து எத்தனை ஆண்டுகள் ஆயின? இந்தக் காலத்தில் நடத்திய போர்கள் எத்தனை எத்தனை? நாம் அந்தப் போர்க் களங்களில் உருட்டிய தலைகள் எத்தனை? நம்மால் கொல்லப்பட்ட சிற்றரசர்கள், சேனைத் தலைவர்கள் எத்தனை பேர்! மனக் கண்ணால் பாரும். இரத்த வெள்ளத்தில் எக்களித்து நின்றோம். பெரு வீரர் களின் மலை போல் உடம்புகளைக் கொன்று குவித் தோம். அதில் ஒரு மகிழ்ச்சி கொண்டோம். மதில் களை அழித்தோம். ஊர்களைக் கொளுத்தினோம். மங்கையரின் அலறலைக் கேட்டு மகிழ்ந்தோம். மக்களின் கூக்குரலைக் கேட்டுக் களித்தோம். வெற்றி வெற்றி என்று வெறி கொண்டு ஆரவாரம் செய்தோம். இவ் வளவும் ஏன் ? ஏன்? பிறர் நாட்டில் நம் கொடி பறக்க வேண்டும் என்ற ஆசையால். பிறரைவிட நாம் சிறந்த வர்கள் உயர்ந்தவர்கள் என்ற ஆசையால். ஆனால், நாமே இந்த உலகத்தின் நிலையான தலைவர்களா? இறைவன் ஒருவன் இருக்கிறான். அவன் இதே வெற்றியையும் வெறியையும் மற்றவர்களுக்கு அளிக் கும் காலம் வரும்போது எல்லாம் மாறுகின்றன; தலை கீழ் ஆகின்றன. (ஏவலாள் வந்து எதிரே நிற்கிறான்) என்ன செய்தி!

ஏவலாள் : மருத்துவர் வந்திருக்கிறார். மருந்து உண்ணும் நேரம் ஆயிற்றாம்.

சோ : கவலை இல்லை. இன்னும் ஒரு நாழிகை பொறுக்கலாம். இப்போது உடம்பு நன்றாக இருக்கிறது என்று சொல். (ஏவலாள் போகிறான்).

சேனைத் : என் அறிவே கலங்குகிறது. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

சோ : நெடுங்காலமான வழக்கத்திற்கு மாறாக உண்மையின் ஒளி வீசும்போது, அறிவு கலங்குவது போல் தோன்றும். அறிவு கலங்கவில்லை. மனம் தான் திகைக்கிறது. இருக்கட்டும்.

சேனைத் : அப்படியானால் நீங்கள் நடத்திய போர்கள்?

சோ : எல்லாம் அறியாமையால் நிகழ்த்திய செயல்கள் உலக வரலாற்றில் சில ஏடுகள்! அவை மாறிய பிறகு உண்மை எல்லார்க்கும் தெரியும்.

சேனைத் : இளவரசர்க்கும் சொன்னீர்களா?

சோ : இல்லை. சொல்லும் எண்ணம் இல்லை. சொன்னாலும் பயன் இல்லை. இரண்டு வாரத்திற்கு முன் எனக்கு யாரேனும் சொல்லியிருந்தால் நானே உணர்ந்திருக்க மாட்டேன். இராசாதிராசனும் இப்போது உணர முடியாது. புலவர்கள் பாடிய பாட்டுக்கள், மக்கள் நம்பிய நம்பிக்கை – இவற்றிற்கு எதிரே உண்மை ஒளி வீசக் காலம் ஆக வேண்டும். விதை மரமாவதற்குச் சில ஆண்டுகள் ஆகும். புதுக்கருத்து, பழமையை மாற்றிப் பரவுவதற்குச் சில நூற்றாண்டுகள் ஆகும். பொறுத்திருப்போம். சேனைத் : அப்படிக் காலம் கடந்து வரப்போகும் கருத்தை இப்போது இந்த உடல்நிலையில் எண்ணாதீர்கள் வேந்தே!

சோ : நானா எண்ணுகிறேன்? அந்த உண்மை தானே வந்து ஒளிவீசினால் நான் என்ன செய்வது?

சேனைத் : எனக்கு ஒரே திகைப்பாக இருக்கிறது.

சோ : இப்போது அப்படித்தான் இருக்கும். அடுத்த போர் வரும். அதில் இராசாதிராசனும் நீரும் பல கொலை புரிவீர்கள். பலர் கதறுவதைக் கேட்பீர்கள். பலருடைய வாழ்வைச் சாய்ப்பீர்கள். அப்போது நான் இன்று சொன்ன சொற்கள் உம் நினைவுக்கு வரும். அன்று உணர்வீர்.

சேனைத் : உணராமல் இருந்தாலே நன்றாக இருக்கும். உணர்ந்தால் வாள் ஏந்த மனம் தயங்கும். சோழர் குடிக்கு என் செஞ்சோற்றுக் கடன் கழிக்க இடையூறு ஆகும். ஆகையால் உணராமலே நான் ஒரு போர் வீரனாகத் தொண்டு புரிந்து சோழர் குடிக்காக இரத்தம் சிந்திச் சாக வேண்டும். இதுதான் என் ஆசை.

சோ : உணரும் காலம் வந்து விட்டால், இந்த ஆசை தானே பறந்து போகும். அது போகட்டும். இன்று நான் உம்மோடு பேசுவது ஒரு வேண்டுகோளுக்காகவே.

சேனைத் : வேண்டுகோள் அல்லவே அல்ல. (செவி புதைத்து ) ஆணை என்று சொல்லுங்கள் அரசே!

சோ : என் மகன் இராசாதிராசனுக்கு இயற்கையாகவே உள்ள போர் வெறி போதும். அதை நீர் மேலும் தூண்டிவிடாதிருக்க வேண்டும்.

சேனைத் : அவ்வாறே செய்வேன் அரசே! ஆனால் –

சோ : தயங்காமல் சொல்வீராக.

சேனைத் : இளவரசர் என்னைப் பற்றித் தவறாக எண்ணக் கூடுமே!

சோ : கடமையைச் செய்யும். போர்க்களத்தில் வெட்டிக் குவியும். வீரர்களையும் ஏவி போர் நடத்தும். வேண்டா என்று கூறவில்லை. ஆனால், இராசாதிராசனுக்குப் பலவாறு சொல்லிச் சொல்லிப் பகை வெறி ஊட்ட வேண்டா.

சேனைத் : அவ்வாறே செய்வேன் அரசே!

சோ : நீர் எத்தனை முறை என் செவியில் பகைவரைப் பற்றிச் சொல்லிச் சொல்லி என் நெஞ்சில் கொதிப்பு எழச் செய்திருக்கிறீர்!

சேனைத் : ஆம். செய்தது உண்டு.

சோ : இனி என் மகனிடத்தில் அதைச் செய்யாமல் இருந்தால் போதும்.

சேனைத் : நான் வேண்டுமென்றே பொய்யாக நடித்து செய்யவில்லை அரசே ! உள்ளம் உணர்ந்த உணர்ச்சியையே உங்களிடம் எடுத்துரைத்தேன்.

சோ : போனது போகட்டும், இன்னொன்று சொல்கிறேன். உணர்ந்து பாரும். பாண்டியரும் சேரரும் நம் மேல் அன்பு இல்லா தவராக உள்ளனர். நாம் நடத்திய போர் களும் அழிவுகளுமே அதற்குக் காரணம். ஒருகால், அவர்கள் சோழர் குடியோடு உறவு கொண்டு பழக வாய்ப்புக் கிடைத்தால், அந்த வாய்ப்பை நெகிழ விடக் கூடாது. அந்த நட்பு வளர்வதற்கு நீர் குறுக்கே நிற்கக் கூடாது.

சேனைத் : நல்லது ; உங்கள் கட்டளைப்படியே , வேந்தே!

சோ : இதை இளவரசர்க்கு இப்போது சொல்லுதல் கூடாது. காலம் வரும்போது தானே உணரட்டும். சரி. நீர் போகலாம், எல்லாம் நெஞ்சில் இருக்கட்டும்.

சேனைத் : அரசர்க் கரசே! வணக்கம்.

(ஏவலாள் வருகிறான்)

சோ : மருத்துவரை வரச்சொல்.

காட்சி – 2

கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைச்சர் வீடு. கி. பி. 1044. காலை நேரம்.

[அமைச்சரும் சேனைத்தலைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.)

அமைச்சர் : வேந்தர் இவ்வளவு சோர்வாக எப்போதும் இருந்ததில்லை.

சேனைத்தலைவர் : ஆமாம். மிக மிகச் சோர்வாக இருக்கிறார். உடல் நிலை தான் காரணம்.

அமைச் : உடல்நிலை, உடல்நிலை தான். உள்ளம் தளர்ந்தது என்று கூற முடியாது. அது எப்போதும் எஃகு உள்ளம் தான்.

சேனைத் : அந்த எஃகு உள்ளத்திலும் சிறு சோர்வு வந்திருப்பதாகவே தெரிகிறது.

அமைச் : அப்படியா? இருக்காது, இருக்க முடியாது.

சேனைத் : அரசர் பேசும் பேச்சுக்களால் உணர்கிறேன்.

அமைச் : என்னிடம் பேசியபோதெல்லாம் பழைய நெஞ்சுறுதியையே உணர்ந்தேன். புலிக்கொடியைத் திக்கெங்கும் நாட்டும் பெரு வேந்தரின் வழித்தோன்றல் அல்லவா?

சேனைத் : அந்த வகையில் தான் எனக்கு ஐயப்பாடு உள்ளது. இப்படிச்சொல்வது குற்றம். மன்னிக்கவேண்டும்.

அமைச் : நமக்குள் பேசிக் கொள்ளலாம், சொல்லும். தயங்க வேண்டா. நான் எவரிடமும் சொல்ல மாட்டேன். (சுற்றிலும் பார்த்து) சொல்லும் அய்யா!

சேனைத் : வேந்தர் இராசேந்திர சோழருடைய பெருமையையோ வீரத்தையோ குறைகூறும் நோக்கமே எனக்கு இல்லை.

அமைச் : அதை நான் நன்றாக அறிவேன். என்னிடம் சொல்ல வேண்டுமா? சேனைத்தலைவர் எப்படிப்பட்டவர் என்பதை அரசர் அறிவார்; நாடு அறியும்.

சேனைத் : இப்போது அரசரை இந்த நிலையில் கண்டபோது, என் கண்கள் கலங்கின. நெஞ்சு குமுறியது.

அமைச் : என்ன செய்வது?

சேனைத் : இந்த நிலையிலும் அவருடைய பார்வையிலும் பேச்சிலும் இருந்த அஞ்சாமையை என்ன என்பது?

அமைச் : ஏதோ சோர்வு கண்டதாகச் சொன்னீர். இப்போது அஞ்சாமை என்கிறீர்.

சேனைத் : அஞ்சாமை, அஞ்சாமைதான். அது வேறு. சோர்வும் இருந்தது. அது வேறு. பகைவர்களைப்பற்றிக் கவலைப் படாத அஞ்சாமை, பொருட்படுத்தாத அஞ்சாமை. ஆனால் போர் என்றால் ஆர்வம் காட்டுவதுபோய், எதற்காகப் போர் என்று கேட்கும் சோர்வு.

அமைச் : வேந்தர் உடல் நலம் இல்லாமல் படுக்கையாய்ப் படுத்துள்ள இந்த நிலையில் போரைப் பற்றி நீர் பேசலாமா? என்ன செய்தீர் அய்யா?

சேனைத் : நான் பேசுவேனா? நானாகச் சொல்லவில்லை. அவரே சொன்னார்.

அமைச் : என்ன சொன்னார்?

சேனைத் : என்னைப் பார்த்துப் புன்சிரிப்புச் சிரித்து, ‘என்ன அய்யா ! நம் படைகள் எப்படி இருக்கின்றன? எங்காவது போருக்குப் போக வேண்டும் என்ற தினவு ஏற்பட்டிருக்கிறதா? உமக்கும் அந்த ஆசை இருக்குமே’ என்றார்.

அமைச் : பார்த்தீரா? அப்படி இருக்கும்போது சோர்வு கண்டதாகச் சொல்கிறீரே!

சேனைத் : அந்தச் சிரிப்பின் பொருள் அது தான்.

அமைச்: எது?

சேனைத் : முன்னெல்லாம் இருந்த பைத்தியம் இப்போதும் இருக்கிறதா என்று கேட்பது போல் சிரித்தார்.

அமைச்: அது நீங்களாகக் கருதுவது. தவறு.

சேனைத் : இல்லை இல்லை. உண்மையாக அறிந்து தான் சொல்கிறேன். அவர் கேட்டதற்கு விடை கூறாமல் நின்றேன். சிறிது கழித்து, அவரே மீண்டும் கேட்டார். வேந்தர்பெருமானின் உடல் தேறட்டும், பிறகு அதைப் பற்றி எண்ணலாம் என்று கூறினேன்.

அமைச்: அது தான் சரி. இப்போது ஏன் அந்தப் பேச்சு?

சேனைத் : அப்போது அரசரே கேட்டார். உடல் தேறிய பிறகு, ‘பாண்டியன்மேல் படையெடுக்கலாம் அல்லவா’ என்று கேட்டார்.

அமைச் : பார்த்தீரா? பிறகு, நீர் சொன்னது…?

சேனைத் : அவருடைய குறிப்பை உணராமல், ஆம் என்றேன். சிரித்தார். திகைத்தேன். இன்னும் பாண்டியர் மேல் படையெடுத்து அழிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது அல்லவா என்று திடுக்கிடும்படியாகக் கேட்டார். மறுமொழி கூறாமல் நின்றேன். ‘சேனைத் தலைவரே! வாழ்நாள் எல்லாம் பிறர்மேல் படையெடுப்பது தான் தொழிலா? பகைத்தவர் நாட்டைப் பாழாக்குவது தான் கடமையா? இந்தத் தொழிலில் இன்னும் சலிப்பு வரவில்லையா?’ என்றார். வேந்தரின் கட்டளைப்படி என்று கூறி அமைதியானேன்.

அமைச் : பாண்டியர்மேல் இரக்கம் தோன்றிவிட்டதோ?

சேனைத் : இரக்கம் என்பது அல்ல. வீணாக ஏன் போர் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்.

அமைச்: எது வீண்? எப்படி வீண்? போர் செய்வதை வீண் என்று சொல்வதா? அரசர்க்கு உரிய முதல் கடமை அது தானே? அது எப்படி வீண் ஆகும்?

சேனைத் : நான் சொல்லவில்லை. அரசரும் சொல்லவில்லை.. அப்படிப்பட்ட கருத்து இருப்பதாகச் சொன்னேன்.

அமைச் : என்ன அய்யா, வளைத்து வளைத்துப் பேசுகிறீர்?

சேனைத் : அமைச்சரிடம் பேசும்போது முன்னும் பின்னும் நோக்கி விழிப்பாகப் பேச வேண்டுமே?

அமைச் : சரி, போகட்டும். தொடர்ந்து என்ன சொன்னார்?

சேனைத் : பாண்டியரை – வேண்டுமென்றே எதிர்ப்பதும் போர் செய்வதும் வேண்டா என்றார். அவர்களை அவர்களின் நாட்டில் வாழ விடவேண்டும் என்றார்.

அமைச் : உண்மை அல்ல, உண்மை அல்ல. ஏதோ காரணமாக அப்படிச் சொல்லியிருக்கிறார். உம்முடைய மனத்தின் ஆழத்தைக் காண்பதற்காகச் சொல்லியிருக்கிறார்.

சேனைத் : மேலும் கேளும். இளவரசர்க்கு இத்தகைய வெறிகளை ஊட்டக் கூடாது என்றும் சொன்னார். மனத்திலே வைத்துக்கொள்ளும். இதை நாட்டில் யாரும் அறியக் கூடாது. பகைவரான பாண்டியர் செவிக்கு இது எட்டக் கூடாது.

அமைச் : (இரு செவிகளையும் பொத்திக்கொண்டு) அந்தோ! என்னால் இதை நம்பவே முடியவில்லையே!

சேனைத் : அது மட்டும் அல்ல. பாண்டியரோடு உறவு கொண்டு நட்பாக இருக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத் தால், அதற்கு நான் எந்த வகையிலும் குறுக்கே நிற்கக் கூடாது என்று எனக்குக் கட்டளை இட்டார். இப்படி வேந்தர்களுக்குள்ளும் வேளிர்க்குள்ளும் பகை இருந்துவந்தால், வெளிநாட்டார் இங்கே புகுந்து வேரூன்றுவதற்கு வழி ஆகிவிடும் என்றும் குறிப்பிட்டார்.

அமைச்: என்ன ? புலிக்கொடி பறக்கும் அரண்மனையிலா இப்படி ஒரு பேச்சு நிகழ்ந்தது? தமிழ் நாட்டில் வெளி நாட்டார் புகுவதா? புகுந்து வேரூன்றுவதா? சோழர் மரபு-சோழரின் புலிக்கொடி- உள்ள நாட்டில் வேற்று நாட்டார் ஆட்சி புகுவதா? இப்படி ஒரு கனவு காண்பதும் நம் வீரத்துக்குப் பொருந்தாதே! அரசர் பெருமான் வாயால் இந்தச் சொல் வந்ததா? அவருடைய மனம் அவ்வளவு மாறக் காரணம் என்னவோ? உடல் அவ்வளவு தளர்ந்து போனதா? மருத்துவரைக் கண்டு கேட்க வேண்டும். ஒரு வேண்டுகோள். இதை நீர் ஒருவரிடமும் வெளியிடக் கூடாது. நாட்டுக்கே திமையாக முடியக் கூடியது இது. ஆகையால்

சேனைத் : இறுதியில் அரசரே இந்தக் கட்டளையும் கூறினார். இளவரசர்க்கும் இதைச் சொல்லக் கூடாது என்றார். இளவரசரே உணரக் கூடிய வாய்ப்பு வரும் போது, அவருக்குத் துணையாக இருந்து உதவுமாறு கூறினார்.

அமைச்: இந்தப் பேச்சு நடந்தபோது அங்கே வேறு யாரேனும் இருந்தார்களா?

சேனைத் : ஒருவரும் இல்லை. ஆனால் அடுத்த முறை நீர் அரசரைக் காணும் போது, அவரே உம்மிடம் கூறுவார்.

அமைச் : நல்லது. பொறுப்புப் பெரியது. சிந்தனை செய்வோம். காரணம் காண்போம்.

சேனைத் : விடை பெறுகிறேன். வணக்கம்.

அமைச் : வணக்கம். வெல்க புலிக் கொடி!

சேனைத் : வெல்க , வெல்க ! என்றென்றும் புலிக்கொடி வெல்க!

காட்சி : 3

கங்கை கொண்ட சோழபுரத்து அரண்மனை.

கி. பி. 1044. மாலை வேளை.

[சோழ வேந்தன் முதலாம் இராசேந்திரன் கட்டிலில் சாய்ந்து படுத்தவாறு கோப்பெருந்தேவியிடம் உள்ளச் சோர்வுடன் தன் உடல் நிலை பற்றிப் பேசுதல்.]

கோப்பெருந்தேவி : நீங்கள் இவ்வளவு மனம் தளர்ந்து பேசியதை நான் இதற்கு முன் ஒருநாளும் கேட்டது இல்லையே. (முகத்தில் சோர்வு, கண்களில் கலக்கம்.)

சோழன் : உண்மை தான். நானே உணர்கிறேன். எனக்கும் வயது ஆயிற்று. அரசனாக இருந்தாலும் முதுமையும் மரணமும் உண்டு அல்லவா?

கோப் : (இரு செவிகளையும் பொத்திக்கொண்டு) சொல்லாதீர்கள், அந்தச் சொல்லைச் சொல்லாதீர்கள்.

சோ : மரணம் என்ற சொல்லுக்கா அஞ்சுகிறாய் ? அய்யோ பேதையே!

கோப் : நான் பேதை தான்!

சோ : நான் எத்தனை வீரர்களின் சாவைக் கண்ணால் பார்த்திருக்கிறேன்! எத்தனை போர்களை நடத்தியிருக்கிறேன்! என் காலத்துப் போர்கள் மட்டும் அல்ல, என் தந்தை இராசராச சோழர் காலத்துப் போர்களில் பெரும்பங்கு என் பங்கு தானே!

கோப் : அப்படிப் போர்கள் பல நடத்திய நீங்கள் இப்போது ஏன் தளர்ந்த மனத்தோடு பேசுகிறீர்கள் ?

சோ : மரணம் வருகிறதே என்ற பயத்தால் அப்படிப் பேசியதாக நினைத்து விட்டாயோ! அடி பேதையே! என் மனத்தை நீ உணர்ந்துகொள்ளவில்லை!

கோப் : (கண்களைத் துடைத்துக்கொண்டு) பிறகு ஏன் கலங்குகிறீர்கள் ! என் மனத்தையும் கலக்கிவிட்டீர்களே !

சோ : (தணிந்த குரலில்) மரணம் பற்றிய பயமே எனக்கு இல்லை! உனக்கும் இருக்கக் கூடாது! என் உடம்பு தளர்ந்துவிட்டது! இறுதிப் படுக்கையில் படுத்து விட்டது! ஆனால் !

கோப் : ஆனால் என்ன ? மகன் இராசாதிராசனைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களா?

சோ : அவனைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் ! அவனும் என்னைப் போல், புலி வயிற்றில் பிறந்த புலியே. நம் கொடியின் பெருமையைக் காக்கும் புலி. ஆனால் –

கோப் : (கணவரின் கன்னங்களைத் தடவியவாறே) என்னிடத்தில் சொல்லக் கூடாத அரசியல் சிக்கலா? மகனை வரச்சொல்லட்டுமா?

சோ : வேண்டா, வேண்டா. உன்னிடத்திலேயே சொல்வேன். சொல்கிறேன். இந்தப் படுக்கையிலும் என் மனத்தின் வேகம் அடங்கவில்லை. நான் இளமை முதல் செய்த போர்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வரு கின்றன; பெற்ற வெற்றிகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகின்றன. தந்தை இராசராசர் காலத்தில் நான் செய்த பெருஞ் செயல்களும் நினைவுக்கு வருகின்றன. என் முப்பத்து மூன்று ஆண்டுகளின் ஆட்சிக் காலத்துப் பெருஞ் செயல்களும் நினைவுக்கு வருகின்றன. (சிறிது இருமல், பெருமூச்சு.) எல்லாம் பயனற்றவை, எல்லாம் வீண் என இப்போது தோன்றுகின்றன.

கோப் : (முகம் மாறுதல்) உங்கள் வீர நெஞ்சத்திலா இப்படிப் பட்ட எண்ணம் தோன்றுவது?

சோ : ஆம்! தோன்றுவது விந்தைதான் ! எனக்கே விந்தையாக இருக்கிறது! யானையும் தேரும் குதிரையும் திரட்டி, குடும்பங்களைப் பிரிந்து வருமாறு வீரர்களைத் திரட்டிப் பெரிய படை என்று செருக்குக் கொண்டு, எதிர்த்த நாடுகளை அழித்தேன். பணிந்த நாடுகளை விட்டேன். இது தான் வீரமா என்று இப்போது எண்ணிப் பார்க்கிறேன்! இப்படிப்பட்ட வீரம் வேண் டுமா என்று என் நெஞ்சம் கேட்கிறது! என் மகன் – இளவரசன் – இராசாதிராசனுக்கும் இதே கல்வியைக் கற்பித்துச் செல்ல வேண்டுமா என்று என் நெஞ்சம் கேட்கிறது. அதனால் தான் பெருமூச்சு விட்டேன்!

கோப் : என்ன சொல்கிறீர்கள்?

சோ : உண்மை தான் சொல்கிறேன். நீ எனக்கு ஆரத்தி சுற்றி விடைகொடுத்து அனுப்பிக்கொண்டிருந்தாய்! நானும் ஒவ்வொரு நாடாகப் படையெடுத்து அழித்து வாகைமாலை சூடி அரண்மனைக்குத் திரும்பி வந்து உன்னை மகிழ்வித்தேன். மருமகளும் மகனும் நம்மையே பின்பற்றி நடக்க வேண்டுமா? இது தானா அரசியல்! என் படையில் மாண்ட பெருவீரர் எத்தனை பேர்? எதிரிகளின் படையில் மாண்டவர் எத்தனை பேர்? அவர்களின் மனைவியர் – உன்னைப் போல் ஆரத்தி சுற்றி அனுப்பிய பெண்கள் – இட்ட கண்ணீர் எவ்வளவு ! போர்க்களத்தில் செந்நீரைப் பெருக்கினேன்! மங்கல வீடுகளில் கண்ணீரைப் பெருக்கினேன்!

பணிப் பெண் : மன்னர் மன்னரே! அமைச்சரும் சோதிடரும் வந்திருக்கிறார்கள்.

சோ : வரச் சொல். முன்னே சோதிடரை வரச் சொல்

{கோப்பெருந் தேவியைப் பார்த்துப் போகுமாறு சைகை செய்கிறான். கோப்பெருந்தேவி நீங்கியவுடன் சோதிடர் வருகிறார்.

சோதிடர் : மன்னர் பெரும!

சோ : வருக. (இருக்கையில் அமருமாறு சைகை செய்கிறான்) பார்த்தீர்களா? விளக்கம் வேண்டா. விரிவாகச் சொல்ல வேண்டா. சுருக்கமாகச் சொன்னால் போதும்.

சோதிடர் : இந்த மாதம் 27-ஆம் நாள் வரையில் கிரகங்கள் நன்றாக இல்லை. ஆனால் தங்கள் சோழ குலத்தின் முதல்வனாகிய சூரியனுடைய உதவியால், அந்த நெருக்கடி தீர்ந்துவிடும். அதன் பிறகு –

சோ : போதும்! அந்தக் குறிப்பைத் தெரிந்து கொண்டேன்.

சோதிடர் : வேறு எந்தக் கவலைக்கும் இடம் இல்லை, அரசே!

சோ : போதும், உணர்ந்துகொண்டேன். (மணியை அடிக்கிறான். ஏவலாள் ஒருவன் வந்து நிற்கிறான்.) கொண்டு வா, பரிசு. (சிறிது அமைதி, ஏவலாள் தட்டு நிறையப் பூவும் பழமும் இடையே சில பொற்காசும் வைத்துக் கொண்டுவருகிறான். அதைக் கையால் தொட்டுச் சோதிடரிடம் தருமாறு குறிப்புச் செய்கிறான் சோழன். சோதிடர் அதைப் பெற்று வணக்கம் தெரிவித்து நீங்குகிறார்.) அமைச்சர் வரலாம்.

அமைச்சர் : (கலக்கத்துடன் வந்து நின்று கை குவிக்கிறார்.) நேற்றிருந்து கடாரத்துத் தூதுவன் வந்து காத்திருக்கிறான். அரசர்பெருமானை இப்போது காணமுடியாது என்று சொன்னேன்.

சோ : நல்லது அமைச்சரே ! என் கருத்து அது தான்.

அமைச் : கடாரத்து மன்னன் கொடுத்தனுப்பிய திறைப் பொருள் -?

சோ : அவற்றை என் கண்களால் காண வேண்டா.

அமைச் : இன்னும் ஒன்று உண்டு.

சோ : என்ன? சொல்லலாம்.

அமைச் : அரசியல்!

சோ : அரசியலாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் சொல்லலாம்.. எதுவும் என் மனத்திற்கோ உடம்புக்கோ தீமை செய்ய முடியாது. தயங்காமல் சொல்லலாம்.

அமைச் : பாண்டியர் மறுபடியும் –

சோ : பூசலும் கலகமும் எதிர்ப்பும் செய்வார்கள். இயற்கைதான்! தந்தை இராசராசர் தம் காலத்தில் பாண்டி யரை வென்றார். மறுபடியும் என் ஆட்சியில் துளிர்த் தார்கள். நானும் வென்று அடக்கினேன். இப்போது என் உடல் தளர்ச்சியைத் தெரிந்துகொண்டிருப்பார்கள். மகன் இராசாதிராசனும் தன் காலத்தில் அவர்களின் எதிர்ப்பைத் தாங்கவேண்டி வரும். வீண்வம்பு ! விட்டுவிடுங்கள்!

அமைச்: ஈழத்தை வென்ற வேந்தரா இப்படிப் பேசுவது?

சோ : ஈழத்தை வென்றேன்! என்ன வெற்றி அது! ஈழமன்னன் மகிந்தனை நம் நாட்டுக்கே கொண்டுவந்து பணியச் செய்தேன். அடிமை போல் வாழ்ந்தான், அவன் இறந்தபின் என்ன ஆயிற்று? அவன் மகன் காசிபன் அங்கே முடிசூட்டிக்கொண்டான். சேரனும் பாண்டியனும் அவனுக்குத் துணை செய்தார்கள் ! இனி மகன் இராசாதிராசனும் அங்கே போர்புரிந்து வெல்ல வேண்டுமா? வீண் வேலை !

அமைச் : (கலங்கி) கங்கை கொண்ட சோழரா இப்படிப் பேசுவது? கடாரம் வென்றவரா இப்படிப் பேசுவது? உலகை ஒரு குடைக்கீழ்…

சோ : போதும், போதும் அந்தப் பழங்கதை! புலவர்கள் திரும்பத் திரும்பப் பாடி மன்னர்களின் மனத்தை மயக் கியது போதும். வீரம் என்றும், நிலமகள் என்றும், வெற்றித்திரு என்றும், ஒரு குடை என்றும் அமைச்சர் கள் சொல்லிச் சொல்லி மன்னர்களின் மனத்தைக் கிளறியது போதும்! சேரனுடைய முன்னோரிலும் இமய வரம்பன் என்று ஒருவன் இருந்தான்! அவன் மகன் செங்குட்டுவன் இமயம் வரை போர் புரிந்து வென்றான். இன்று அந்த மரபில் வந்த சேரனுடைய நிலைமை என்ன? எனக்கு அஞ்சி நடுங்கி ஒதுங்கி வாழ்கிறான். இதே நிலைமை, என் பேரனுக்கோ, பேரனுடைய பேர னுக்கோ நேர்ந்தால் வியப்பு இல்லையே! ஆகையால் இது வீண் பெருமைதானே? வீண் முயற்சிதானே?

அமைச் : அரசர்க்கரசே! தங்கள் மனம் இப்படி மாறக் காரணம் என்னவோ? எனக்கு இது பெரிய –

சோ : இந்த மன மாறுதலுக்காக வருந்தக் கூடாது; மகிழ்ச்சி அடைய வேண்டும் அமைச்சரே!

அமைச் : சேரரும் பாண்டியரும் இதை உணர்ந்தால் -! சோ : சோழ நாட்டுக்கு ஆபத்து என்று எண்ணுகிறீர்களா? ஒரு நாளும் இல்லை. அவர்களுடைய மண்ணை அவர்கள் பயம் இல்லாமல் ஆள்வார்கள். அவ்வளவு தானே?

அமைச் : அரச நீதி!

சோ : இதுவரையில் நான் உணர்ந்தது, நீங்கள் உணர்த்தியது எல்லாம் அரசநீதி அல்ல, அநீதி! நாட்டை ஆளக் கிடைத்த வாய்ப்பு, மற்ற நாட்டை அழிக்கக் கிடைத்த வாய்ப்பு ஆகாது!

அமைச் : திருவள்ளுவர் அரசியலில் -!

சோ : பிறர்மனை நயவாமை என்று அறத்துப் பாலில் எழுதியவர் , பிறர்மண் நயவாமை என்று பொருடபாலில் எழுதவில்லையே என்று தான் வருந்துகிறேன்.

அமைச் : (மிகக் கலங்கி) நம் நாட்டின் எதிர்காலம்! சோ : அது நம் கையில் இல்லை!

அமைச் : மற்ற நாட்டு அரசர்களும் உங்களைப் போல் உணர்ந்தால் நல்லது ! அவர்கள் உணர மாட்டார் களே! சோழரின் புலிக் கொடி சீற்றம் தணிந்தது என்று அவர்கள் அறிந்தால் –

சோ : என்ன ஆகும்?

அமைச் : சோழர் மண்ணைக் கவர வேண்டும் என்று படையெடுத்தால் !

சோ : சோழர் படை தடுக்கட்டும். அழிக்க வேண்டா.

அமைச் : புலி பசு ஆயிற்று என்று பிறர் அறிந்தால் -!

சோ : புலி புலியாகச் சீறிச் சீறிக் கண்டது என்ன?

அமைச் : (சிறிது நேரம் பேச்சின்றிக் கலங்கிச் சோர்ந்து) மன்னர் மன்னவ ! ஒரு வேண்டுகோள் ! இந்தப் புதிய சிந்தனையை இளவரசரின் செவியில் விழாமல் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். நாட்டின் நன்மைக்காக வேண்டுகிறேன்.

சோ : இந்தக் கவலை உங்களுக்கு வேண்டா? இந்தப் புத்துணர்ச்சி எளிதில் வராது ! இராசாதிராசனும் என்னைப் போலவே போர் பல நடத்துவான். புலிக் கொடி சீற்றத்துடன் இன்னும் சில தலைமுறை பறக்கும்!

அமைச் : (இரு செவியும் பொத்திக்கொண்டு) சில தலைமுறை தானா? உலகம் உள்ள வரையில், சோழர்குல முதல்வன் சூரியன் உள்ள வரையில் புலிக் கொடி சீற்றத்துடன் பறக்கும்!

சோ : வீண் கனவு ! வீண் பெருமை! (இருமல்) சரி! எவ்வாறோ ஆகட்டும்! இளவரசர்க்குச் சொல்லவில்லை. சொல்லப் போவதில்லை. சொன்னாலும் பயன் விளையப் போவதில்லை. நடப்பது நடக்கட்டும்! என் வாழ்வின் முடிவில் தான் நான் உணர்ந்தேன்! காலம் வரும் போது தான் உண்மையை உணர முடியும். சொல்லி உணர்த்த முடியாது.

அமைச் : (கண்களில் நீர் கலங்கக் கை குவித்து) அரசே!

சோ : மீண்டும் வேண்டிக்கொள்ளத் தேவையில்லை. உறுதிமொழி கொடுத்தேன். இளவரசர்க்கு இதை உணர்த்த மாட்டேன். எனக்கு ஓய்வு வேண்டும். செல்லுங்கள். (அமைச்சர் விடை பெறுகிற வேளையில்) ஒன்று செய்யுங்கள் ; இயற்கையைப் பாடிய பாட்டுக் களையும் இறைவனைப் பாடிய பாட்டுக்களையும் கேட்டு அமைதி பெற விரும்புகிறேன்.

அமைச்: தக்க இசைப் புலவரை அனுப்புவேன்.

சோ : நல்லது (கைகுவித்து அமைச்சருக்கு விடை தருகிறான். பிறகு, தனக்குள்) இமயம் முதல் ஈழம் வரையில்! உலகம் உள்ளவரையில் புலிக் கொடி! சீறும் புலிக் கொடி! இப்படியே, ஒவ்வொரு மன்னனும் எண்ணினால்…! வீண் கனவு ! (இருமல்)

[எங்கிருந்தோ வீணை இசை கேட்கிறது. மாசில் வீணையும் என்ற பாட்டுப் பாடப்படுகிறது.]

– மூன்று நாடகங்கள், முதற் பதிப்பு: நவம்பர் 1960, தாயக வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *