கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 14,000 
 
 


சென்ற நூற்றாண்டின் ஆரம்பம்;ஆங்கிலேயர்களின் கை சிறிது சிறிதாக ஓங்கிக்கொண்டிருந்த காலம். மேவார் ராஜ்யத்தின் பழையசிறப்பெல்லாம் மறைந்துவிட்டது; பழைய வீரம்ஒடுங்கி விட்டது. பெயரளவில் மாத்திரம்ராணாவாக இருந்து கொண்டு பீம்சிங் அதைஆண்டு வந்தார்.அவரது குமாரி தான் கிருஷ்ணகுமாரி. பதினாறுவயது நிரம்பிய இளமை மயில். ஏற்கெனவே அவளை மார்வார் ராஜாவுக்குத் திருமணம் செய்துகொடுப்பதென்று நிச்சயத்திருந்தார்கள். ஆனால் திருமணமாகுமுன்பே அந்த ராஜா எதிர்பாராமல்இறந்து விட்டார்.

இந்த நிலையில் மற்றொரு ராஜபுத்திர ராஜ்யமான ஜய்ப்பூரிலிருந்து ஒரு படை உதயபூருக்கு வந்துசேர்ந்தது. கிருஷ்ணகுமாரியைத் தங்கள் மன்னர் ஜகத்சிங் என்பவருக்குக் கொடுக்க வேண்டுமென்றதிருமண வேண்டுகோளுடன் அந்தப் படை வந்திருந்தது.

ஜகத்சிங்கின் வேண்டுகோள் வந்த பிறகு, மேவார் ராணா பீம்சிங் பல விதத்தில் யோசனை செய்தார்.அதற்கு ஒப்புக் கொண்டு விடுவது என்று தீர்மானித்தார். இல்லையென்றால், தேவையற்ற போர்மூளும். ஜகத்சிங்குக்குத் தமது சம்மதத்தைத் தெரிவித்து தூது அனுப்பினார்.

இதற்கிடையே, ஏற்கெனவே முதலில் நிச்சயித்து இறந்த மார்வார் தேசத்திற்குப் புதிய வாரிசுவந்திருந்தார். அவர் பெயர் ராஜா மான்சிங்! அவருக்கு விஷயம் தெரிய வந்தது. அவர் உடனே மேவார்ராணாவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் ‘‘தங்கள் மகள் கிருஷ்ணகுமாரி ஏற்கெனவே எங்கள்தேச ராஜாவுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள்! அவர் இறந்து விட்டதால், அவருக்குப் பதிலாக சிங்காதனம்ஏறிய எனக்குத்தான் கிருஷ்ணகுமாரி உரியவள். இதற்கு எதிராக முனைந்தால், அதன்விளைவுகளுக்குத் தாங்கள் பொறுப்பு ஆவீர்கள்!’’ என்று எழுதியிருந்தார்.

மேவார் ராணா திகைப்பில் ஆழ்ந்து விட்டார். இருந்தும் ஜகத்சிங்குக்கு வாக்கு நேர்ந்து விட்டதால்,அதை மாற்ற வழியில்லை என்பதை உணர்ந்தார்.

மேவார் ராணாவின் நிலை ராஜா மான்சிங்குக்குத் தெரிய வந்தது. உடன் வெகுண்டெழுந்தார் அவர்.படைகளைத் திரட்டிக் கொண்டு, தமக்கு எதிராகக் கிருஷ்ணகுமாரியை மணக்கத் துணிந்தஜகத்சிங்குடன் யுத்தம் செய்யத் தயாரானார். ஜகத்சிங்கும் மனம் தளரவில்லை. தனக்குநிச்சயிக்கப்பட்ட பெண்ணை இழந்து விட அவரும் தயாராக இல்லை. இவ்விதம் ஒரு பெண்ணுக்காக இரு ராஜ்யங்கள் போர்த் தயாரிப்பில் ஈடுபடலாயின.

இதில் ஒரு வேடிக்கை!

மராத்திய மன்னர் சிந்தியா, ஏற்கெனவே கிருஷ்ணகுமாரியின் அழகைப் பற்றிக்கேள்விப்பட்டிருக்கிறார். அவர் இந்தப் பூசலில் இறங்க வேண்டும் என்று தீர்மானித்தார். ராஜாமானுக்குஆதரவாக படையைத் திரட்டிக் கொண்டு மேவார் தலைநகரான உதயபூரை முற்றுகையிட்டார்.

மேவார் ராணா மனம் கலங்கினார். தமது மந்திரி கிஷன்தாஸ¤டன் வெகு நாழிகை ஆலோசித்தார்.மாலை நேரமாகி இரவும் வந்து கொண்டிருந்தது. ஒரு முடிவும் அவர்கள் எடுக்கவில்லை.

அப்போது இருட்டில் வெளி வாசலில் ஓர் உருவம் தென்பட்டது. இளவரசி கிருஷ்ணகுமாரி, மெள்ளநடை நடந்து உள்ளே வந்தாள். எளிய தோற்றம்தான்! அவள் மீது நகைகளோ, அணிகலன்களோஅதிகம் இல்லை. பல மராத்தியப் படையெடுப்புகளுக்கு ஆளான ராணா, தமது குடும்பஅணிமணிகளைக் கூடக் கப்பப் பணமாக மராத்தியர்களுக்கு கொடுக்க வேண்டி வந்தது.

‘‘அப்பா’’ என்றாள் மெல்லியதாக. ‘‘நான் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும். உங்கள் தீர்மானம்என்ன என்று என்னிடம் சொல்லலாமா?’’ என்றாள்.

‘‘இப்போது ஆங்கிலேயர்களின் உதவியைப் பெறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்’’குரல் கமறச் சொன்னார் ராணா.

‘‘ஆங்கிலேயர்கள் உதவியையா? வேண்டாம்… அவர்களை விட்டு விடுங்கள்.!’’

‘‘வேறு வழி?’’

‘‘சிந்தியா சொல்வதற்கு இசைந்து விடுங்கள்…’’திடுக்கிட்டார் ராணா!

கிருஷ்ணா திரும்பினாள். விழிகளைக் கைகளால் துடைத்தாள்.

அவள் போன பிறகு ‘‘கிஷன்தாஸ்!’’ என்றார் ராணா.

‘‘ஜகத்சிங்குக்கு என் பெண்ணைக் கொடுக்கப் போவதில்லை என்று சிந்தியாவுக்குத் தெரிவி. ராஜாமானுக்கே கொடுத்து விடுகிறேன்’’ என்றார் தலை குனிந்தவாறு.

சிந்தியாவுக்குச் செய்தி போய்ச் சேர்ந்தது. அவர் தம் படைகளுடன் திரும்பிப் போகலானார். இந்தச்செய்திகள் ஜகத்சிங்குக்குப் போய்ச் சேர்ந்தன. நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்துவது என்பதுராஜ புத்திரர்களிடையே பெரிய அவமானமாகக் கருதப்படும். எனவே, கோபம் கொண்டு பெரியபடையைத் திரட்டினார் அவர். ராஜா மானுடன் (மார்வார் அரசர்) போர் செய்யத் தயாரானார்.

ராஜா மானும் கிருஷ்ணகுமாரியை விட்டு விடத் தயாராயில்லை. சிந்தியாவின் மறைமுக ஆதரவுதனக்குக் கிடைக்கிறது என்று தெரிந்ததும், அவரும் பெரும் படை ஒன்றைத் திரட்டலானார்.

இதனால் போர் மூண்டது. இரு படைகளும் சந்தித்தன. பெரும்போர் தொடங்கியது. போர் ஆறுமாதங்கள் நடந்தன. இருதரப்பாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை! பெரிய சோதனையாக இருந்தது.

இந்தச் சமயத்தில் ஜகத்சிங்கின் பீரங்கிப் படைத் தலைவன் அமீர் என்பவன் எதிரிப்படை ராஜாமானுடன் சேர்ந்து விட்டான்.

இதனால் எல்லா நாடுகளும் கஷ்டப்பட்டன. ஜனங்கள் வறுமையில் ஆழ்ந்தார்கள். அமீர் மிகவும்வருந்தினான். இதற்கு ஒரு தீர்வு காண விரும்பினான்.

மேவார் ராணாஜிக்கு வேண்டப்பட்ட ஒருவரைச் சந்தித்தான் அமீர். தனது திட்டத்தை விவரித்தான்.

‘‘ராணாவிடம் நான் சொல்வதைத் தெரிவியுங்கள்! ஒன்று அவர் தமது வாக்குறுதியை மறந்து விட்டுகிருஷ்ணகுமாரியை ராஜாமானுக்குக் கொடுக்க முன் வர வேண்டும்! அது அவருக்கு அவமானம்தருவதோடு ஜகத்சிங்குடன் தீராப் பகையையும் உண்டாக்கி விடும். அப்படிச் செய்யாமல்ஜகத்சிங்குக்குக் கொடுத்தால் ராஜா மானின் சீற்றத்துக்கு அவர் ஆளாக வேண்டும். மேவாரையும்ராணாவையும் அழித்துவிட ராஜா மான் தயங்க மாட்டார். எனவே, இரண்டு வழியிலும் ஆபத்துஉண்டு. இவை இரண்டையுமே தவிர்க்க வேண்டுமானால், மூன்றாவது வழி ஒன்று இருக்கிறது’’என்றார் அமீர்.

‘‘என்ன வழி?’’

‘‘கிருஷ்ணகுமாரி இறந்து விடுவதுதான்!’’வந்தவர் திடுக்கிட்டார்.

‘‘யோசனை வேண்டாம், உங்களை இங்கே அழைத்திருப்பதன் காரணமே இதற்குத்தான். போங்கள்,ராணாவிடம் அமீரின் யோசனை இதுதான் என்று தெரிவியுங்கள்!’’ என்று அழுத்தத்தோடு கூறினான்அமீர்.

அமீரின் மூன்றாவது வழியைக் கேட்டதும் ராணா அதிர்ந்து போய் உட்கார்ந்தார். ஏற்கெனவேபொருளெல்லாம் இழந்து நொந்து போயிருந்தார் ராணா! ஒரு அரசருக்குரிய குறைந்த வசதிகளைக்கூட அவர் இழந்திருந்தார். அமைச்சரவையில் இருந்தவர்களும் அமீர் சொன்ன வழியை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றார்கள்.

ராணா தம் முடிவை ராணியிடம் தெரிவிக்க மூன்று நாட்கள் ஆயின. அதை ஏற்றுக் கொள்ளராணிக்குப் பல நாட்களாயின. புகழ் பெற்ற செளரா வம்சத்தைச் சேர்ந்தவள் ராணி. ஒருகுடும்பத்துக்காக ஒருவரை இழப்பதெல்லாம் அவர்கள் இரத்தத்திலேயே ஊறி வந்த ராஜபுத்திர வழக்கம்.

இருப்பினும் தனது உயிருக்கு உயிரான ஒரே மகளை, பதினாறு வயது நிரம்பிய இளங்கன்னியைஇழப்பதென்றால்?

‘‘அம்மா, அழாதே! என்றைக்கு எனக்கு நிச்சயிக்கப்பட்டவர் இறந்தாரோ, அன்றைக்கே என் விதிஎனக்குப் புரிந்து விட்டது. எனக்காக வருந்தாதே. எனக்காக எத்தனை சண்டைகள் நடந்து விட்டன!இன்னும் எத்தனை நடத்த மன்னர்கள் காத்திருக்கிறார்கள்! நாட்டையும், ஊர்களையும், மக்களையும்பாழடித்து விட்டார்கள் இவர்கள். கேவலம் ஒரு பெண்ணுக்காக எவ்வளவு அநியாயம் செய்யத்தயாராயிருக்கிறார்கள்! என் விதி இது! அப்பா எடுத்த முடிவு சரியான முடிவு. எனக்காகப் பலராஜ்யங்களில் உள்ள பல்லாயிரம் மக்கள் உயிர் இழப்பதை விட நான் என்னையே இழக்கத் தயாராகஇருக்கிறேன் அம்மா! இதில் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை’’ என்றாள் கிருஷ்ணகுமாரி.

அவளது நிர்மலமான முகத்தை உற்று நோக்கினாள் ராணி. துக்கம் அடைத்து வந்தது.

குறித்த நாள் வந்தது. கிருஷ்ணகுமாரி வெண்மை நிறத்தில் உடை தரித்து, குடும்பக் கடவுள்களைவணங்கினாள். பிறகு தன் அறைக்கு வந்தாள். எளிமையான பஞ்சணை மீது படுத்துக் கொண்டாள்.

ராணி ஒரு பாத்திரத்தை எடுத்து, அவள் முன்பாக வந்தாள். கண்களில் கண்ணீர் பொழிந்து வந்தது.அந்த அறையில் அவர்களைத் தவிர, ஒரு பணிப்பெண் மாத்திரம் இருந்தாள்.

‘‘ஏன் அம்மா அழுகிறாய்? என் வாழ்க்கையின் துக்கங்கள் இன்றோடு முடிகின்றன என்று நீ மகிழ்ச்சிகொள்! ராஜபுத்திர குலத்தில் ஒரு பெண் பிறந்தால் தியாகத்திற்காகவே தான் அவள் பிறக்கிறாள்! என்தியாகம் எனக்குப் பெருமை! உனக்கும் பெருமை! நம் நாட்டிற்கே பெருமை!’’ கூறிவிட்டு அவள்சட்டென்று பாத்திரத்தில் இருப்பதை வாங்கிக் குடித்தாள். மறுகணம் உள்ளே ஒரு தீ பாய்வதுபோலிருந்தது.

சிறிது நேரம் ஆகியது. இளவரசியின் உயிர் இன்னும் நீங்கிவிடவில்லை. விஷம் சரியாக வேலைசெய்யவில்லை என்று தெரிந்தது. மீண்டும் ஒரு பாத்திரத்தில் விஷம் கொண்டுவரப் பணிப் பெண்விரைந்தாள்.

இரண்டாவது பாத்திரத்தை நடுங்கும் கைகளில் ஏந்தினாள் இளவரசி. விஷத்தை இரண்டாவதுதடவை அருந்தினாள்.

அந்த தடவையிலும் எதிர்பார்த்தது நடக்கவில்லை,. ஆகவே, அதிக உக்கிரமான கலவையில் விஷம்மேலும் இரு தடவைகள் கொண்டுவரப்பட்டன. நான்காவது தடவையில் பலன் கிடைத்தது. இளவரசிகிருஷ்ணகுமாரி கண்களை மூடினாள். பஞ்சணையில் மீளாத் துயிலில் ஆழ்ந்து விட்டாள்.

அரண்டு புரண்டாள் ராணி. அரண்மனை முழுதும் வீறிட்டுக் கொண்டு அலைந்தாள்.நான்கு நாட்கள் உணவும் தண்ணீரும் இல்லாமல் அவள் வாழ்ந்தாள். ஐந்தாவது நாள் அவள்எதிர்பார்த்தது அவளுக்கும் கிடைத்தது. மரணம் அவளையும் தழுவியது. மேவார் ராஜ்யம் முழுவதும் துக்கம் ஒரு கிரகணம் போல் இறங்கியது.

மக்கள் துயரத்தில் கண்ணீர் வடித்தார்கள்.சீக்கிரமே மேவார் களை இழந்தது! நாடு முழுவதும் பஞ்சம் நிறைந்தது; நகரங்கள் அழிந்தன. மக்கள்வெளி ராஜ்யங்களுக்கு ஓடலானார்கள். ஒரு பெண்ணைக் கொன்ற தோஷத்திற்கான சாபம் போல்ராஜபுதனம் முழுவதுமே அழியலாயிற்று என்று சரித்திரக்காரர்கள் கூறுகிறார்கள். அந்த அழிந்தமேவாரை நேரில் கண்ட ஆங்கிலத் தளபதி கலோனல் டோடும் (ராஜபுதன சரித்திரம் எழுதியவர்)இது குறித்து உருக்கமாக எழுதியுள்ளார்.

முடிவு?

கி.பி. 1817_ல் மேவார் ராணா ஆங்கிலேயப் பாதுகாப்புக்குள் அடங்குவதாகப் பத்திரங்களில் கையெழுத்திட்டார்.

எண்ணுறு வருடங்களாகச் சுதந்திர ராஜ்யமாக விளங்கிய மேவார் தனது சுதந்திரத்தைக் கடைசியில் இழந்தது.

– ஸ்ரீவேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) (1931-2013) தமிழ் பொதுவாசிப்புக்கான நாவல்களை எழுதிய எழுத்தாளர். ஸ்ரீ.வேணுகோபாலன் என்ற தன் சொந்தப் பெயரில் வரலாற்று நாவல்களையும், புஷ்பா தங்கதுரை என்ற புனைபெயரில் சமூக நாவல்களையும் எழுதினார்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *