(1998ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-38
அத்தியாயம்-36
வாணாதிராயனிடம் அதிவீரன் எல்லா விஷயங்களையும் கூறி, திறமை வாய்ந்த வீரர்களை துணைக்குக் கேட்டான்.
”எனது ஒரே குறிக்கோள், திருமங்கை தஞ்சாவூரை அடைந்துவிடக்கூடாது! அப்படி விட்டால் அந்தத் திருமணம் நடந்துவிடும். அது விருப்பமில்லாத திருமணம்!” என்றான் அதிவீரன்.
“விருப்பமில்லாத திருமணமா? எப்படிச் சொல்கிறீர்கள்? தாங்கள் இதுபற்றி திருமங்கையிடம் பேசினீர்களா!” என்றார் வாணாதிராயன்
“அவள் எனக்கு ஓலையே எழுதி இருக்கிறாள்!” என்றான அதிவீரன்.
“சரி, மதுரை நாயக்கர் என்ன சொல்கிறார்?”
“பெண்ணுக்காகச் சண்டையைக் கிளப்பினோம் என்று அவகீர்த்தி ஏற்படக்கூடாது! எனவே, அந்தப் பெண்ணை வேறு விதத்தில் அபகரித்து வந்துவிடுங்கள்” என்று சொன்னார்
“நல்லது! அது சுலபமான வேலைதானே?”
“இல்லை! இதில் வீரபாளையக்காரரின் வீரர்கள் நிறைய இருக்கிறார்கள்”.
வாணாதிராயன் பல்லை நறுநறுவென்று கடித்தார்.
“சொந்தத் தாய்க்குச் செய்யும் துரோகம் இது! இந்த நாயக்கர் இல்லாவிடில் தெற்கே இவர்கள் பாளையத்தில் டெல்லி துருக்கியர் புகுந்திருப்பார்களே! அதைப் புரிந்து கொண்டார்களா? பாதுகாப்பு கிடைத்தவுடன் தன்னைப் பாதுகாப்பவனையே பதம் பார்க்க நினைக்கிறார்களே, துரோகிகள்!” என்றார்.
“அவர்கள் நினைப்பு இந்த மதுரை ராஜ்ஜியம் அவர்கள் கையில் வரவேண்டும் என்பது!” என்றான் அதிவீரன்.
“முடியுமா ஸ்ரீ பாண்டியரே! நீங்களே சொல்லுங்கள்! ஒருகாலத்தில் இந்த வடக்கு அவ்வளவு தொந்திரவு கொடுக்காமல் இருந்தது. இப்போது இப்போது சுல்தானிய ராஜ்ஜியங்கள் காத்திருக்கின்றன. இந்தத் தெற்கு முழுவதையும் எப்போது விழுங்கலாம் என்று! இந்த நிலையில் மதுரை நாயக்கர் தானே பலமாக நின்று யாரும் தெற்கே வரவிடா வண்ணம் காத்து நிற்கின்றார்கள். நாயக்கர்கள் மட்டும் இல்லாவிட்டால், இவர்கள் தனித்து நிற்பார்களா? எழுபத்திரண்டு பாளையம் என்றால் எழுநூற்றிரண்டு சண்டைகள்!” என்றார் வாணாதி.
“அதைத்தான் ஒரு குடைக்கீழ் கொண்டுவரப் பார்க்கிறார்கள்!”
“சரி! அப்படியாயினும் பழைய பாண்டிய வம்சத் =தினர் தாங்கள்தானே! தங்களை அல்லவா அரசராகக் கருத
வேண்டும். இதைவிட்டு நேற்று வந்த இந்தப் பாளையக்காரர் களா ஒரு குடைக்கீழ் ஆளப்போகிறார்கள்! வீண் பேச்சு!” என்றார் வாணாதி.
“எனக்கும், என் அண்ணனான வரதுங்கராமருக்கும் எவ்வளவோ தூது விட்டுப் பார்த்தார்கள். ஆனால், இதில் சேர மறுத்துவிட்டோம்!” என்றார்.
“நீங்கள்தான் புத்திசாலிகள்!”
“எங்கள் பழம்பெருமைக்கு வேண்டி. மீண்டும் மதுரை கிடைத்தால் மகிழ்ச்சி அடைவோம்! ஆனால், எங்கள் பழைய மாண்பை நினைத்து மக்களைக் கைவிட நினைக்கவில்லை. மக்களை சந்தோசமாக வைத்திருப்பதுதான் நமது நோக்கம்! காலம் மாறிவிட்டது. நாலு திசைகளிலும் அபாயம் வந்து விட்டது!”
“ஆமாம், பாண்டியரே கடல்வழியாக நமக்கு எப்போதுமே ஆபத்து வந்ததில்லை. இப்போது வந்துவிட்டது”
“ஆமாம்! கடல்வழியே பரங்கியர் வர ஆரம்பித்து விட்டனர். இவர்கள் வடக்கே கடலோரத்தைப் பிடித்து கோட்டை கட்டி விட்டார்களாமே!”
“நானும் கேள்விப்பட்டேன்! இப்படி நமக்கு நாலா விதத்திலும் ஆபத்து வந்து நிற்க, எல்லோரும் சேர்ந்து ஒரு குடைக் கீழ் இருப்பதை விட்டு சின்னா பின்னமாகச் சிதையப் பார்க்கலாகுமா?”
“உண்மை, நண்பரே! முன்பு சிறு சிறு ராஜ்ஜியங்களில் சின்ன ஆட்சி அமைத்து சவுகரியமாக இருந்தோம்! இப்போது அப்படி முடியாது பெரிய ராஜ்ஜியம் அமைக்க முடியாவிட்டாலும் நாலு பேர் ஒன்றுகூடி பெரிய ராஜ்ஜியம் போல காட்டினால்தான் எதிரி பயப்படுவான்!” என்றான் அதிவீரன்.
இருவரும் பிறகு அந்த திருமங்கையை எப்படி மீட்பது என்று ஆலோசனை செய்து, இரவிலே ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
அதிகாலையில், தங்களில் திறமைமிக்கவர் நூறு பேரை மட்டும் சேர்த்துக் கொண்டு வடக்கு நோக்கி புறப்பட்டார்கள்.
இதில் வாணாதி ராயனும் சேர்த்துகொண்டார்.
அல்லியை அதிவீரன் சேர்த்துக்கொள்ள, வாணாதி தமது தாசி பொன்னம்மாவையும் அழைத்துக் கொண்டார்.
யாவரும் குதிரைகளில் ஆரோகணித்து சுற்று வேகமாகச் சென்றார்கள்.
எங்கேயும் தங்கவே இல்லை. குதிரைகளுக்காக வேண்டி ஆங்காங்கே சிறிது ஓய்வு எடுத்தார்கள்.
மணப்பாறை அருகில் திருமங்கை கூட்டத்தார் போயிருப்பது தெரிந்தது.
அவர்கள் கூடியமட்டிலும் பிரதான பாதைகளை விடுத்து சில மறைவு வழிகளில் சென்றார்கள்.
அதிவீரன் ஆங்காங்கே புத்தி கூர்மையுடன் வினவி, அவர்கள் போன திசைகளைப் புரிந்து கொண்டான்.
மணப்பாறையை அடுத்த காட்டு மார்க்கத்தில் அவர்கள் போயிருப்பதாக அறிந்து, அதைப் பின்பற்றினார்கள்.
ஒரு நாழிகை தூரத்தில் சிறு சிறு குன்றுகளாக இருந்த பகுதியில் அவர்கள் அன்று இரவுக்காக இறங்கி இருப்பது தெரிந்தது.
அவர்கள் அந்தக் குன்றுகளுக்குப் பின்புறத்தில் போய், குதிரைகளை மறைவாகக் கட்டினார்கள்.
தாகம் தணிந்து, சிறிது நேரம் மாலைக் காற்றில் சுவாசித்துவிட்டு. ஒரு தாழ்வான குன்றின்மேல் ஏற ஆரம்பித்தார்கள்.
பாறைகள் நிறைந்த குன்று அது.
அதன் மீது வாணாதி, அதிவீரன், அல்லி மூவரும், ஏறலாம் என்பதுபோல் இருந்தது.
கைகளில் நிறைய சிராய்த்துக் கொண்டு உடையெல்லாம் பொத்தல் போட,
அந்த உச்சிப்பாறை மீது ஏறி அமர்ந்தார்கள்.
மறுபுறம் பார்த்த அதிவீரன். “எல்லோரும் குனியுங்கள்! படுத்துக்கொள்ளுங்கள்!” என்றான்.
எல்லோரும் அப்படியே செய்தார்கள்.
பிறகு பாறையில் சிறிது சிறிதாக கையால் நகர்ந்து,
முன்னால் சென்று தலையை மட்டும் தூக்கிப் பார்க்க-
திருமங்கை குழுவினர் அங்கே இருந்தார்கள்.
சாதாரண மனிதர்கள் போல வீரர் ஆள் நின்றார்கள்.
திருமங்கையின் கூடாரம் பிரத்தியேகமாகத் தெரிந்தது.
“பூசல் இல்லாது திருமங்கையை அபகரிக்க வேண்டும்! சரி! ஆனால் நடைமுறையில் அது முடியாது போலிருக்கிறதே” என்றார் வாணாதிராயன்.
அதிவீரன் பேசவில்லை.
பிறகு, “ஏன்?” என்றான்.
“அவளைக் கடத்தினால் அவர்கள் எப்படியும் கண்டு பிடித்து விடுவார்கள்! பூசல் வரும்!”
“நாம் ஜெயிப்போம்” என்றான் அதிவீரன். “அது பெரிதல்ல! ஆனால் மதுரை நாயக்கரின் வாக்கைக் காப்பாற்றுவதுதான் பெரிது.”
“வேறு என்ன செய்யலாம்?”
“ஓலையைக் கட்டி அம்பு எய்து பார்க்கலாம்!”
“ஓ! அது நல்ல வழி! ஆனால் இலக்குப் பார்த்து விட வேண்டும். மற்றவர்கள் அறியக்கூடாது”.
“நான் விட்டுப் பார்க்கிறேன்” என்றான் அதிவீரன்.
“இப்போது வேண்டாம்! இருட்டட்டும்” என்றார் வாணாதிராயன்.
காத்திருந்தார்கள். இருட்டியது.
ஒரு ஓலை நறுக்கில் செய்தி எழுதி, அதை அம்பில் கட்டினார்கள்.
அதிவீரன் இழுத்துவிட்டான்.
பிறகு எல்லோரும் ஆவலோடு பார்க்க, சிறிது தூரம் வரைதான் அம்பு கண்ணில் பட்டது.
அதற்குமேல் படவே இல்லை.
எதாவது நடவடிக்கை தெரிகிறதா என்று காத்திருத்து பார்த்தார்கள்.
எதுவும் தெரியவில்லை.
அம்புகள் பல விட்டும் அவை எங்கே போய் விழுகின்றன என்று தெரியவில்லை.
இந்த நிலையில் அல்வி கூறினாள், “ஏன் சுவாமி! இருட்டான இந்த நேரத்தில் திருமங்கை கூடாரத்துக்கு நான் போக முடியும்!” என்றாள்.
இருவரும் திரும்பி அவளைப் பார்த்தார்கள்.
”ஆமாம்! கீழே இறங்கி இந்தப் பின்புற வழியாக நான் பெண்கள் கூடாரத்துக்குப் போகமுடியும்! யாராவது என்னைப் பார்த்தால் கூட நான் ஒரு தோழி என்று சொல்லிக் கொள்வேன்! எப்படியும் என்னால் உள்ளே நுழைய முடியும்!” என்றாள்.
அது நல்ல யோசனை என்று இருவரும் ஆமோதித்தார்கள்.
பிறகு எல்லோரும் கீழே இறங்கினார்கள். குன்றுகளின் இடைவழியே சற்று நடந்து அந்தக் கூடாரங்கள் இருக்கும் இடத்தைப் பார்த்துக் கொண்டார்கள்.
அல்லியிடம் என்ன செய்யவேண்டும். என்று விவரமாகக் கூறி,
அவளைச் சாதாரணமாக சேடி போல் வேடம் தரிக்க வைத்து, இருட்டில் அனுப்பி வைத்தார்கள்.
பிறகு அவளுக்காக அந்த இருட்டில் காத்துக் கொண்டே இருந்தார்கள்.
நாழிகை ஏறிக்கொண்டிருந்தது.
நடு இரவையும் தாண்டிவிட்டது.
போனவள் என்ன ஆனாள் ஏது ஆனாள் என்பது பற்றி, எதுவுமே தெரியவில்லை.
அத்தியாயம்-37
கீழே குன்றின் பாரிசத்தில் கூடாரங்கள் திளைத்திருந்தன.
பட்டுப்போன்ற இருட்டு எங்கும் பரவி இருந்தது!
அதை ஆங்காங்கே கிழித்துவிடுவது போல் தீவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன.
அல்லிக்கொடி அந்த இடத்தை அணுகிய போது, குறிப்பிட்ட இடங்களில் காவலர்கள் இருந்தார்கள்.
ஆனால், அவர்கள் அதிக எச்சரிக்கையில் இருக்க வில்லை.
எனவே இருட்டில் பதுங்கி. சில இடங்களில் தரையோடு தவழ்ந்து, பெண்கள் கூடாரத்தை அணுகினாள்.
அங்கே சற்று பெரிதாக இருந்த திருமங்கையின் இருககையை அடையாளம் காண முடிந்தது.
ஆனால், வாயிலில் பாதுகாப்பு ஆசாமி திடமாக நின்று கொண்டிருந்தான்.
அவனைக் கடந்து செல்வது கடினம். அவனுக்கும் கூடார வாயிலுக்கும் நடுவே தீவர்த்தி ஒன்று எரிந்து கொண்டிருந்தது.
யோசித்தாள். கீழே தரையோடு தரையாகத் தவழ்ந்து கூடாரத் துணியை விலக்கி உள்ளே போகத்தீர்மானித்தாள்.
அதில் நிறைய பயம் இருந்தது. ஆனால் தவழ்ந்து போகும்போது காவலன் அவளைக் கவனியாதது ஆச்சரியமாக இருந்தது.
உள்ளே ஒரு ஐந்து போல நுழைந்தாள் அவள்!
அங்கே திருமங்கை சற்று சிவந்த முகத்துடன் எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.
திடீரென்று அவள் பார்வை அல்லியிடம் செல்ல, ஆச்சரியத்தில் கண் விரிந்தது.
“இளவரசி! நான் தங்கள் சிநேகிதி! என்னை அதிவீர ராமன் அனுப்பியிருக்கிறார் பயப்படாதீர்கள்?” கூறி, எழுந்தாள். அல்லி.
இருவரும் உடனே பேச ஆரம்பித்தார்கள்.
அல்லி எப்படியாவது திருமங்கையை சந்தித்து அவளை அழைத்து வருவாள். அல்லது, அவளைக் காப்பாற்றிவிட திட்டமாவது யோசித்து வருவாள் என்று நினைத்தார்கள், அதிவீரனும் வாணாதிராயனும். அல்லி திரும்பி வரவில்லை.
இளம் காலையில் அவர்கள் இருவரும் இன்னும் விழிக்கக்கூட இல்லை.
அதற்குள் ஏதோ பூசல் சத்தம் கேட்டு விழித்துப் பார்க்க,
நூறுபேர் கொண்ட ஒரு கும்பல் ஒன்று வாணாதி ராயனின் ஆடகளைச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்தது.
எல்லோரையும் தூக்க நிலையில் சந்தித்து அந்தத் தாக்குதல் நடந்துகொண்டிருந்தது.
யாரும் இவ்வனவு இளம் காலையில் எதிரிகள் தாக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
வாணாதியின் படைகன் 30 பேர் மடிய எஞ்சியவர்கள் ஆயுதம் ஏதும் கையில் இல்லாமல் மறைவிடங்கள் தேடி ஓட ஆரம்பித்தார்கள்.
“மோசம் போனோம்!” என்றார் வாணாதி. “பாளையக்கார ஆட்கள் நம் படை ஆட்களை முறியடித்து விட்டார்கள்!” என்றார்.
குன்றின் மேடு ஒன்றில் இருந்த அவர்கள் இருவரும் திடுக்கிட்டு செயல் இழந்து நின்றார்கள்.
“இது எப்படி தேர்ந்தது?” என்றான் அதிவீரன்.
“நண்பரே! அவர்கள் அல்லியைப் பிடித்திருப்பார்கள். அவளை மிரட்டி நம்மைப் பற்றிய செய்திகளை அறிந்திருப்பார்கள்!” என்றார் வாணாதி.
“இப்போது புரிகிறது” என்றான் அதிவீரன். “நம்மை எப்படியும் தேடிவருவார்கள். நாம் என்ன செய்வது?” என்றார் வாணாதி.
அதிவீரன் யோசித்தான்.”அப்படியானால் இங்கிருந்து நாம் போய்விடுவது நல்லது”.
“மறைந்துகொண்டு போவதா?”
“ஆமாம்!”
“இழுக்கு அல்லவோ?”
“நமது ஆட்கள் சிதறிவிட்டபோது தனிமையாக நாம் சண்டையிடுவது சரியல்ல! அவர்கள் நிறையபேர்! இதனால் மறைந்து போய்விடுவது நல்லது! இது அவமானம் அல்ல! தந்திரம்!” என்றார்.
வாணாதி சற்று தயங்கினார்.
“இல்லை வாணாதி! நாம் இங்கே நின்று சண்டை யிடவாம்! இருவரும் அனாவசியமாய் இறந்து விட்டால்… “
“அது வீரமரணம் இல்லையா?”
சிரித்தான் அதிவீரன்.
“வீரமரணம் எல்லாம் தர்மயுத்தம் நடந்த நாளில்தான் பேசமுடியும்! இப்போது நாட்கள் மாறிவிட்டன. சண்டை செய்யும் முறையும் மாறிவிட்டது எனவே நாமும் நமது பாணியை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றான் அதிவீரன்.
“அப்போது என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்றார் அவர்.
“அவர்கள் இளம் காலையில் நம்மைச் சொல்லாமல் புரியாமல் தாக்கினார்கள். இதுவே தர்மம் இல்லை! எனவே நாம் மறைந்துவிடுவது இழுக்கல்ல! நல்லது! பிறகு படை திரட்டி வருவோம்! அவர்களை முறியடிப்போம்! அதுதான் சரியானது! பொருத்தமானதும் கூட!” என்றான் அதிவீரன்.
வாணாதி கடைசியில் அவர் சொல்வதற்குத் தலையை சாயத்தார்.
இருவரும் உடனே குன்றின் வேறு பாரிசத்தில் இறங்கினார்கள்!
பாறைப்பாங்கான பிரதேசம் வழியே, மறைந்து சென்று தப்பித்துவிட்டார்கள்.
அடுத்து இருவரும் சோழவந்தான் வந்தார்கள். மதுரை நாயக்கருக்கு விவரமாகச் செய்தி சொல்லி அனுப்பினார்கள்.
“எப்படியும். திருமங்கையை மீட்கப்போகிறோம்! உத்தரவு கொடுங்கள்!” என்றார்கள்.
மதுரை நாயக்கர் இரவுக்கிரவே வியாபாரி போல் வேடம் தாங்கி வந்து அவர்கள் இருவரையும் சந்தித்தார்.
“படை எடுத்துப் போகவேண்டாம்! இன்னும் பொதுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று அதுவரை காத்திருங்கள்!” என்று கூறினார்.
ஆனால் வாணாதியும் அதிவீரனும் இந்தச் சமயத்தில் மட்டும் பிடிவாதமாக இருந்தார்கள்.
நாயக்கர் அவர்களைப் பாராட்டிவிட்டு, “அப்ப” என்றார் வாணாதி,
“சரி இதை நான் விதித்த விதி என்று நினைத்துக் கொள்கிறேன். அச்சுதப்பன் நம்மிடம் வெளிப்படையாக யுத்தப் பிரகடனம் செய்யவில்லை. எனவே நாங்களும் வெளிப்படையாக உங்களுடன் கலந்து கொள்ளாமல் மறை முகமாகப் படை அனுப்பி கலந்து கொள்கிறோம்.”
“ஆ!” என்று மற்ற இருவர்களும் கைகொட்டி வீரப்பநாயக்கரின் அந்த யோசனையை ஒப்புக் கொண்டார்கள்.
உடனே அதிவீரன் ”சுவாமி! ஒரே ஒரு வேண்டுகோள்!” என்றான்.
“கேளுங்கள்!”
“உங்கள் படைகளை அழைத்துப் போகிறோம். ஆனால் அவை சண்டையிடாமல் எமக்குப் பின்னணியாக ஒரு காத தூரத்தில் இருக்கட்டும். எங்கள் படையால் முடியவில்லை என்றால் தங்கள் படையின் உதவியையும் பெற்றுக் கொள்கிறோம், சம்மதமா?” என்றான் அதிவீரன்.
“ஆமாம். சுவாமி!” என்று வாணாதி குறுக்கிட்டார். “இந்த யுத்தத்தின் பொறுப்பை எங்களிடமே விட்டுவிடுங்கள்! தங்களுக்காகத் தங்கள் சிநேகிதச் சிற்றரசர்கள் இதைச் செய்தோம் என்ற பெயர் எங்களுக்கு நிலைக்கட்டும்!” என்றார்.
“அப்படியே ஆகட்டும்!” என்று சொல்லி நாயக்கர் விடைபெற்றார்.
நல்ல முகூர்த்தவேளை பார்த்து படை புறப்பட்டது.
படைகள் புறப்பட்டு இரவு வேளைகளில் மட்டும் பிரயாணம் செய்தது.
படை ஒன்று வருவதை எதிரிகள் சீக்கிரம் அறிந்து விடக் கூடாது என்பதற்காக இந்த முறை கையாளப்பட்டது.
தினம் தினம் இரு அரசர்ளும், வேவுகாரர்களிடமிருந்து செய்திகள் வரும் என்று காத்திருந்தார்கள்.
இரண்டாம் நாள் இரவில்தான் செய்தி வந்தது.
“பிரபுக்களே! திருமங்கை கோஷ்டியார் திடீரென்று காணாமல் போய்விட்டார்கள்!” என்று கூறினார் வேவுகாரர்,
“என்ன?” என்று இருவரும் திடுக்கிட்டு கேட்டார்கள்.
“ஆமாம் சுவாமி!”
“திருச்சிராப்பள்ளிக்குச் சென்றார்களா, இல்லையா?”
“அங்கே போனார்கள் என்பது தெரியும். அதன் பிறகு அவர்கள் திருவரங்கத்தை நோக்கிப் போனார்கள் என்று கேள்விப்பட்டோம்”
“அங்கே எதற்கு?”
“திருவரங்கப் பெருமாளைத் தரிசிப்பது தனது விரதம் என்று கூறினாளாம்”
“சரி! திருவரங்கம் சென்றார்களா?”
“புறப்பட்டுப் போனது வரை பார்த்த ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் திருவரங்கத்தை அடைந்தார்களா. என்று தெரியவில்லை,”
“அங்கே விசாரித்தீர்களா?”
“செய்தோம்! திருவரங்கத்துக்கு வந்ததாகவோ, அதை விட்டுப் போனதாகவோ எந்தச் செய்தியும் வரவில்லை!”
“இதென்ன விசித்திரமாக இருக்கிறது” என்றார் வாணாதி.
“ஒருவேளை இனி எல்லாம் ரகசியமாக நடக்க வேண்டும் என்று பாளையக்காரர் தீர்மானித்திருப்பாரோ?”
“இருக்கலாம்! ஏற்கனவே மணப்பாறையில் ந. சம்பவம் அவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கலாம்?”
“சரி! இப்போது வேறு என்ன செய்திருக்கிறார்கள் நமது வேவுகாரர்கள்?”
“திருவரங்கத்திலிருந்து தஞ்சாவூர் போகும் வரை உள்ள பாதைகளில் திவீரமாக விசாரித்து வருகிறார்கள். அதன் சுற்றுப் பாதைகளிலும் வேவு பார்த்து வருகிறார்கள்!”
“நல்ல யுக்தி” என்றார் வாணாதி.
“ஒரு வேளை அவர்கள் தஞ்சாவூர் போய்விட்டாலும் அதையும் கவனிக்க சிலர் மாறுவேடம் பூண்டு தஞ்சாவூருக் குள்ளும் போயிருக்கிறார்கள்!” என்றார் வேவுக்காரர்.
“ஆகா பிரமாத வேளை ஆயிற்றே! சரி, நாங்கள் இதே வழியில் தஞ்சாவூர் போவது சரிதானே!”
“தாங்கள் இரவுப் பிரயாணத்தை மேற்கொண்டது மிக்க சரி! தாங்கள் செய்யும் பாட்டைகளை முன்கூட்டியே கவனிக்கவும். ஒற்றர் தலைவர் ஏற்பாடு செய்திருக்கிறார்!” என்றார் வேவுகாரர்.
அந்த வேவுகாரர் இந்தச் செய்திகளைக் கூறி, இரண்டு நாழிகை இராது.
இன்னொரு வேவுகாரர் அவசர அவசரமாக வந்து இறங்கினார்.
அரசர்களிடம் அடிபணிந்து ஒலை ஒன்றைக் கொடுத்தார்.
அதை இருவரும் படித்ததும் திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.
அத்தியாயம்-38
திருச்சி அருகில் வல்லத்தில் திருமங்கை கோஷ்டியாரின் கடைசித்தண்டு.
இனி அவர்கள் தஞ்சாவூருக்குப் போகவேண்டியது தான்.
அதற்கான சகுனத்தையும் முகூர்த்தத்தையும் பார்த்திருந்தார்கள்.
அவர்கள் வந்திருக்கும் செய்தி தஞ்சை மன்னர் அச்சு தப்ப நாயக்கருக்குப் போய்விட்டது.
தஞ்சையை விழாக்கோலத்தால் அலங்கரிக்கச் சொல்லி விட்டு, மணமகளை எதிர்கொண்டு அழைப்பதற்கு அவனும் நல்ல நேரம் பார்த்திருந்தான்.
வல்லத்திலிருந்தே, மேளதாளத்துடன் மணமகள் வர வேண்டும் எனறு ஏற்பாடு
குறிப்பிட்ட வியாழக்கிழமை மதியம் இந்த அழைப்பு நடப்பதாகக் குறிக்கப்பட்டது.
இந்த ஏற்பாட்டுச் செய்தி ஒற்றர்கள் மூலம் அதிவரனுக்கும் வாணாதிராயருக்கும் போய்ச் சேர்ந்தது.
ஏற்கனவே பெரிய படை படை ஒன்று அவன் தலைமையில் கூடிவிட்டது.
வாணாதிராயன் ஏற்கனவே தஞ்சைக்குப் பெரிய விரோதி.
அவர் ஆத்திரத்தில் துடியாகத் துடித்துக் கொண்டிருந்தார்.
வல்லத்துக்குப் போகும் காதவழியைக் கணக்குப் பார்த்தார்கள்.
மணமகளாக திருமங்கை அங்கிருந்து புறப்படும் அந்த வியாழக்கிழமை மதியத்திற்குள்,
அவர்கள் (அதிவீரன், வாணாதி, வரதுங்கராமன்) படைகள் அங்கே போய்ச் சேர்ந்துவிட முடியாது.
எனவே அவர்கள் அவசரமாக ஆலோசித்தார்கள்.
ஒரு சிறு படையுடன் வாணாதி வாயுவேகமாக போய். திருமங்கை கோஷ்டியைத் தடுத்து நிறுத்துவதாக வாக்களித்தார்.
அதிவீரனுக்குத் தானும் அவகுடன் செல்ல வேண்டும் என்று தோன்றியது.
அதை அவரது அண்ணன் வரதுங்கராம பாண்டியன் தான் நிறுத்தி வைத்தார்.
அதிவீரன் உணர்ச்சிவசப் படக்கூடியவன்.
அவன் மனதைப் பறித்துக் கொண்ட இரண் பெண்கள் இதில் சிக்கி இருப்பதால் அதிவீரன் உணர்ச்சி வசப்பட்டு ஏடாகூடமாக ஏதாவது செய்துவிடுவான் என்று நினைத்த வரதுங்கராமர் அவனைப் போகவேண்டாம். என்று தடுத்தார்.
எனவே வாணாதிராயன் மட்டும் அனுப்பப்பட்டார்.
வாணாதி அதிபராக்கிரமசாலி குதிரை இயக்குவதில் வல்லவன்! அவன் தனது படையினரில் கை தேர்ந்த முப்பது பேரை தேர்ந்தெடுத்து தன்னுடன் வரச்சொன்னான்.
ல்லோரும் மாற்றுக் குதிரைகளுடன் புறப்பட்டார்கள்.
வியாழன் விடியுமுன் கடைசி யாமத்தில் அவர்கள் வல்லம் போய்ச் சேர்ந்தார்கள்.
சற்றே ஓய்வு எடுத்துக் கொண்டு தங்கள் வேவுகாரர் இருவரை அனுப்பி விஷயத்தை அறிந்து வர வீரபாளையத் தாரின் தண்டுக்கு அனுப்பிவைத்தார்கள்.
வேவுகாரர்கள் திரும்பி வர, இரண்டு முகூர்த்தம் ஆகியது.
கொண்டுவந்த செய்தி சாதகமானது அல்ல!
வீரபாளையக்காரரின் ஆலோசனைக்கு இணங்க, திருமங்கையை வல்லத்திலிருந்து அழைத்துப் போசு, தஞ்சை அச்சுதப்பன் பெரிய படையொன்றையே அனுப்பி இருந்தான்.
வெறும் முப்பது பேரை வைத்துக்கொண்டு அந்தப் படையை வெல்ல முடியாது! என்ன செய்வது?
வாணாதிக்கு ஆத்திரம் பீறிட்டது என்ன செய்வது என்று துடியாய்த் துடித்தான்.
இந்த சமயத்தில் அவனது படைத் தளபதி அவனுக்கு ஆலோசனை கூறினான்.
ஒரு காரியம் மட்டும் செய்துவிட முடியும்!
தந்திரத்தால் ஏதாவது செய்து திருமங்கையை அபகரித்து வந்துவிட வேண்டும்.
முடியுமா அது?
ஊரில் சென்று கோவில் தாசிகள் சிலரை அழைத்து வந்தார்கள்,
வல்லம் கோவில் பெருமாள் பெயரைச் சொல்லி, அவரிடமிருந்து பரிசில் வந்திருப்பதாக பாளையக்காரரின் தண்டுக்குள் நுழையத் திட்டம் போட்டார்கள்.
தேவதாசிகள் இது செய்வதற்குப் பிரதி உபகாரமாக ஏராளமான பொன் நகைகள் கொடுப்பதாகவும், இந்தக் காரியம் முடிந்த பின்னர் மதுரைக்கு அவர்களை அழைத்துப் போய் அங்கே குடியிருக்க இடமும் நில மான்யமும். கொடுப்பதாக உறுதி கூறினார்கள்.
பாளையக்காரர் தண்டுக்கு முன்னமே செய்தி அனுப்பிவிட்டு, விடிந்து சில நாழிகைகளில் மேௗதான் வாத்தியங்களுடன் பல்லக்கில் புறப்பட்டார்கள்.
தாசிகள் அனைவரும் நல்ல தந்திரசாலிகளாக இருந்தார்கள்.
பாளையக்காரரின் பாசறையில் அவர்களுக்குப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
உள்ளே போனவர்கள் இளவரசி திருமங்கையின் தண்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
அங்குப் போனபிறகு, திருமங்கையை சந்தித்து ரசிய மாக அவளிடம் தாங்கள் யார். எதற்கு வந்திருக்கிறோம். என்பதெல்லாம் தெரிவிக்க,
திருமங்கை முகத்தில் அதுவரை இருந்த துக்கக் குறிகள் மறைந்தன.
ஆனாலும் திருட்டுத்தனமாக அந்தக் கூடாரத்தை விட்டு எப்படி வெளியேறுவது?
திருமங்கையை தாசி வேடம் பூணச் சொல்லி அவளை வெளிக்கொண்டு போய்விடலாம்.
ஆனால், அவளுக்குப் பிரதியாக அங்கே ஒரு பெண்ணை விட்டுப் போகவேண்டும்.
யாரை விடுவது.
“சகோதரிகளே! நான் இளவரசியை மீட்பதற்காக வந்தேன். ஆனால் என் ரகசியம் வெளிப்பட்டுவிட்டது. இளவரசியிடம் இப்போது தாதி போல இருக்கிறேன். என்னைத் தாதிப் பெண் என்றே சொல்லிவிட்டார்கள் இளவரசியார்.
இன்னும் சிறிது நேரத்தில் இளவரசியைக் குளிப் பாட்டி அலங்காரம் செய்யப் போகிறார்கள்.
ஒரு யோசனை! இளவரசியின் ஸ்தானத்தை என்னால் எடுத்துக்கொள்ள முடியும்?
அவளைப் போலவே என்னால் பேசமுடியும். நடிக்க முடியும். இத்தனை நாள் பழக்கத்தில் வந்த திறமை அது. இளவரசியை நீங்கள் தாசி வேடத்தில் அழைத்துப் போங்கள்.
குளிக்கிற நேரத்தில்தான் இந்த மாறட்டம் நடக்க வேண்டும்.
ஏனெனில் இளவரசியை அலங்கரிக்க தஞ்சை அரண்மனையிலிருந்து விசேஷத் தாதிகள் வந்திருக்கிறார்கள்! குளித்தபின் என்னைத்தான் (அல்லி) அவர்கள் இளவரசியாக நினைக்கவேண்டும்.
இது சம்மதமா?
சீக்கிரம் ஆலோசியுங்கள்?” என்று அல்லி கூறினாள்.
எல்லோரும் ஆலோசித்ததில் அது ஒன்றுதான் சிறந்த வழி என்று ஒத்துக்கொண்டார்கள்.
குளிக்கும் நேரம் வந்தது. அல்லியை இளவரசியாக மாற்றினார்கள்.
தஞ்சைத் தாதிகள் அல்லியை அலங்கரிக்க ஆரம்பித்தார்கள்.
அடுத்த முகூர்த்தத்தில் கோவில் தாசிகளின் கும்பல் வல்லத்திலிருந்து புறப்பட்டது.
அதில் திருமங்கை இருந்தாள்.
பணிப்பெண் போல வேடம் தரித்திருந்தான்.
வாணாதிராயன் கும்பலை அடையும் வரை அவளுக்கும் ஏனைய கோஷ்டியினருக்கும் மனம் ஒரு நிலையில் இல்லை!
போய்ச் சேர்ந்ததும், வாணாதி அவளைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துப்போய் விட்டான். வல்லத்திலிருந்து அல்லி தஞ்சை அழைத்துப் போகப்பட்டாள்.
மறுநாள் காலையில் அச்சுதப்பன் அவளைத் திருமணம் செய்து கொண்டான்.
திருமணம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதிவீரன் படைகள் வல்லம் வந்து சேர்ந்தன.
அன்று மாலையில்தான் அச்சுதப்பனுக்குத் தான் திருமணம் செய்தது அல்லி என்ற தாசிப்பெண் என் தெரிந்தது.
தப்பித்துப்போன திருமங்கையைப் பிடிக்க ஒரு படையை அனுப்பினான்.
வல்லத்துக்கு வந்த படைகளை அதிரன் படைகள் தடுத்து நிறுத்த யுத்தம் ஒன்று ஆரம்பித்தது.
யுத்தம் மூன்று நாட்கள் நடந்தன.
அதிவீரன், வரதுங்கன். வாணாதிராயன் மூவரும் எதிரியைக் கடுந்தாக்குத் தாக்கினார்கள்.
வல்லம் போர் தமிழ்ச் சரித்திரத்தில் பெயர் பெற்றது. அந்த அத்திரமயமான சண்டையில் அச்சுதப்பன். படைகள் முறியடிக்கப்பட்டன.
புறமுதுகுகாட்டி அவை தஞ்சைக் கோட்டைக்குள் ஓடி ஒளிந்தது.
கைப்பற்றப்பட்ட ஏராளமான பொருட்களுடன் மூன்று மன்னர்களும் மதுரை திரும்பப் புறப்பட்டார்கள்.
ஒரு நாழிகை வழிபோன பிறகு, மறைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து திருமங்கை அவர்களோடு வந்து கலந்து கொண்டாள்.
அதிவீரனது கூடாரத்துக்குள் அவன் நுழைய, அவன் அவளை ஆலிங்கனத்துடன் ஏற்றுக்கொண்டான்.
”வீரனே!” என்று தளும்பும் மகிழ்ச்சியுடன் திருமங்கை அவனைத் தழுவிக்கொண்டாள்.
அதிவீரராமனுக்குக் கண்கள் கனத்தன. ஆனந்த மயமாக அவனுக்கு அந்தக் கணம் தோன்றினாலும், மனதில் சின்னக் குறை புகுந்துவிட்டது.
அன்று பகல் நேரத்தில் தஞ்சையிலிருந்து அவனுக்கு ஏற்கனவே ஏற்றுச் செய்தி வந்துவிட்டது.
தான் ஒரு தாசியைத்தான் மணம் கொண்டோம் எனறு அறிந்தவுடன் அல்லியை சிறைச்சேதம் செய்ய உத்தரவு வழங்கினான்.
அல்லி அன்று மாலைக்குள் தலை துண்டிக்கப்பட்டாள்.
மகிழ்ச்சியும் சோகமும் பொங்க அதிவீரன் மதுரையை அடைந்தான்.
வீரப்பநாயக்கர் அவனுக்கும் மற்ற இருவர்க்கும் மான்யங்கள் கொடுத்து மதுரையில் தங்கி இருக்கச் சொல்லி பிறகு விமரிசையாக வழி அனுப்பினார்.
அல்லியைப் பிடித்து வரப்போன அதிவீரன் அல்லி இல்லாமல் ஊர் திரும்பினான்.
அல்லிக்குப் பதிலாக திருமங்கை அவனது பத்தினியாக தென்காசி திரும்பினாள்.
நீலத் தலைப்பாகைக்காரர்கள் எல்லாம் மதுரை நாயக்கரின் உளவுக்காரர்களே என்பது அதிவீரனுக்குத். தெரியவந்தது.
‘அல்லி! அல்லி!’ என்று அதிவீரனின் மனம் வெகு நாள் புலம்பியது.
அல்லி கொடுத்த இன்ப உடல் உறவுகளை எல்லாம் நினைத்து ‘ரதி லீலை’ நூலை எழுதினான்.
‘ரதி லீலை’ என்ற வட மொழி நூலின் ஆசிரியர் பெயர் கொக்கோகர்!
கொக்கோகரின் திறமையை எண்ணி வியந்து அவர் பெயரையே தனது நூலுக்குச் சூட்டினான், அதிவீரராமன் என்கிற மன்மதப் பாண்டியன்!
நூலை எழுதிய அவன் அரங்கேற்றி புகழ் அடைந்தாலும் அல்லியின் தியாகம்தான் அவன் கண் முன்னால் நின்றது.
அவளை நினைக்கும் போதெல்லாம் அவன் கண்கள் ஒரு சொட்டுக் கண்ணீரை உதிர்த்தன.
அப்போதெல்லாம் அவன் அருகில் ஆறுதல் சொல்வதற்கு திருமங்கை இருந்து வந்தாள்.
ஆனால் அவளை மீறியும் துக்கம் வரும்போது இருவரும் சேர்ந்து கண்ணீர் உகுத்தார்கள்,
ஆயுள்வரை அவர்கள் அல்லியை மறக்கவே இல்லை.
(முடிந்தது)
– மன்மதப் பாண்டியன் (நாவல்), முதல் பதிப்பு: 1998, பூம்புகார் பதிப்பகம், சென்னை.