(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இலங்கை அரசனின் பட்டத்து ராணி அந்த நந்தவனத்தில் உலாவிக்கொண்டு இருந்தாள். மயக்கம் தரும் இந்த மாலை நேரங்களில் வழக்கமா அவள் அங்கேதான் இருப்பாள். அரசன் அவளுக்கா கட்டிய தாடகத்தில் மிதக்கும் வாத்துக்களைப் பார்த்துக் கொண்டிருப்தில் அப்படி ஒரு சந்தோஷம். கார்த்திகை நட்சத்திரங்களோல கூட்டமாக தாய் வாத்தும், குஞ்சுகளும் மிதந்து கொண்டிருந்தன. அவை நீர்ப்பூக்களில் மறைவதும் வெளிவருவதுமாக விளையாடிக் கொண்டிருந்த காட்சியை பார்த்து கொண்டேயிருக்கலாம்.
கடந்த இருபது வருடங்களாக அந்தி நேரங்களை ராணி அவளுடைய அந்தப்புர நந்தவனத்தில் இதுமாதிரித்தான் கழித்து வந்திருக்கிறாள். ராணியின் சௌந்தர்யம் அன்று பார்த்ததுபோல் இன்றும் கண்ணைப்பறிக்கும் மெருகுடன்தான் இருந்தது. ஆனால் அந்த அழகுடன் சேர்ந்து இப்பொழுது ஓர் அசாதாரண ஒளியும் அவள் முகத்திலே படந்திருந்தது. அரசன் அவளுக்காக இன்னொரு படை திரட்டினாலும் அசியப்பட முடியாது. இப்படியான வனப்பும், முகக்காந்தியும், சோபையும் விரதம் காக்கும் உயர்குடிப் பெண்களிடத்தேதான் காணப்படும்.
சாலையில் புத்த தேரிணிகள் கைகளில் பிட்சை பார்த்திரங்களுடன் விஹாரையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய அமைதியான உடையையும், முகத்தில் தெரியும் சாந்தியையும் பார்க்கும்போது ராணியின் மனத்தை என்னவோ செய்யும். சங்கமித்திரை கொண்டுவந்து நட்ட அரசமரத்துக் கிளை இப்போது பெரும் மரமாக வியாபித்து வளர்ந்திருந்தது. அதுபோல அவள் ஸ்தாபித்த சங்கமும் கிளைவிட்டு பரவி மக்களிடையே தர்மத்தை வளர்த்துக் கொண்டிருந்தது ராணிக்கு தேரிணியாகிவிட வேண்டும் என்ற ஆசை மறுபடியும் ஒரு கணம் தலை தூக்கியது.
அரசன் அவளிடத்தே கொண்டிருக்கும் காதலின் பிரவாகம் இன்றுவரை எவ்வளவேனும் குறையவில்லை. மாறாக அவனுடைய பிரமேமையானது நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்தது. ஆயிரம் மகளிர் அந்தப்புரத்தில் இருந்தாலும் அவன் தனது பட்டத்து ராணியிடம் கொண்டுள்ள அன்பின் ஆழத்தை அளக்கமுடியாது. ஆனால் அரசனுடைய கவனம் எல்லாம் சமீக காலங்களில் நீதி சாஸ்திரங்களிலேயே லயித்து இருந்தது. அசோகன் ஸ்தாபித்த நீதி பரிபாலன முறைகளையும், எல்லாளன் அனுசரித்த தர்ம நெறிகளையும் சாஸ்திரம் அறிந்த விற்பன்னர்களோடு தர்க்கித்தான்; தரும நூல்கள் பதினெட்டில் ஒன்றான மனு நீதியை பண்டிதர்களிடம் நுணுக்கமாக கற்றுத் தேர்ந்தான்.
ஓர் அரசனுக்கு இருக்கவேண்டிய காருண்யத்துக்கு ஆதர்சமாகச் சிபிச் சக்கரவர்த்தி அவனுக்கு விளக்கினார். பருத்தினிடம் உயிர் தப்புவதற்காக அந்தப் புறா பறந்துவந்து சக்கரவர்த்தியின் கால்களில் விழுந்து அடைக்கலம் கேட்டதாம். அப்பொழுது பருந்து அரசனை நோக்கி ‘அரசே, மாமிசம் புசிப்பது என் இயல்பு; புறாவை விடும், நான் பசியாற வேண்டும்’ என்று சொன்னது. அடைக்கலம் கொடுத்த புறாவை அரசன் எப்படி நிர்க்கதியாக விடமுடியும்? ‘உனக்கு மாமிசம்தானே வேண்டும், இதோ!’ என்று தன் உடலின் தசையை எடைக்கு எடை அரிந்து கொடுத்தானாம் சிபிச்சக்கரவர்த்தி.
தருமத்திற்கெல்லாம் தருமமாக விளங்கிய சிபிச்சக்கரவர்த்தியின் காருண்யத்தையும், எல்லாளனுடைய நீதி பரிபாலனத்தையும் ஆதர்சமாக ஏற்றுக்கொண்ட அரசன், தொன்றுதொட்டு வழங்கிய நீதி வழுவா நெறிமுறைகளை திரும்பவும் ஸ்தாபிக்க அமர்த்தியர்களைக் கலந்து ஆலோசித்தான். பொத்ததேவி தாரையைப் போன்ற அறிவாளி; தர்ம நூல்களை அறிந்தவள். அவளிடத்திலும் அரசன் அவ்வப்போது ஆலோசனைகள் கேட்டான்.
ஆராய்ச்சி மணியை அரண்மனை வாசலிலே தொங்கவிட்டு எல்லோருக்கும் நீதி பாரபட்சமின்றிக் கிடைக்க வழிவகத்தவன் எல்லாளன். ஒருமுறை அவனுடைய தேர் வேகமாகச் சென்றபோது தற்செயலாக புத்தவியாரையின் ஸ்தூபம் ஒன்றை இடித்து பதினைந்து செங்கல்கள் உதிர்ந்துவிட்டன. எல்லாளன் பதறிப்போய் அந்தப் பாவத்தின் பாரம் தாங்கமுடியாமல் தன்னையே பலி கொடுக்கத் தயாராகிவிட்டான். புத்ததேரர்கள் அவனைத் தேற்றியபின் பதினையாயிரம் செங்கல்கள் பதித்து புதிய நிர்மாணவேலைகள் செய்து பிராயச்சித்தம் செய்துகொண்டானாம்.
இன்னொரு முறை ஒரு கிழவி வெய்யிலிலே அரிசியைக் காய வைத்திருக்கிறாள். அப்போது நேரமில்லாத நேரத்தில் மழை பெய்து கிழவியுடைய அரிசி எல்லாம் நனைந்துவிட்டது. கிழவி அழுதுகொண்டே வந்து ஆராய்ச்சி மணியைப் பிடித்து இழுத்தாள், ‘நல்ல அரசனுடைய ஆட்சியில் காலம் தவறி மழை பெய்யுமா? என்னுடைய அரிசி எல்லாம் நனைந்துவிட்டதே! எனக்கு உண்பதற்கு எதுவும் இல்லையே’ என்று வருந்தி முறையிட்டாள்.
எல்லாளன் ‘மழையின் குற்றம் மன்னன் குற்றமன்று’ என்று கூறி கிழவியை திருப்பி அனுப்பியிருக்கலாம். அல்லாவிடின், கிழவிக்கு வேண்டிய தானியவகை கொடுத்து அவள் துயரைத் தீர்த்தும் இருக்கலாம். ஆனால் எல்லாளன் கிழவியின் துயரத்தின் ஆழத்தை அறிய ‘பசி என்றால் அது எப்படி இருக்கும்?’ என்று தானாக உணருவதற்காக நாட்கணக்கில் உண்ணாவிரதம் இருந்து தன்னை வருத்திக் கொண்டானாம்.
எல்லாளன் வகுத்த இந்த நீதி முறையில் பிறழாது அரசன் பரிபாலனம் செய்து வந்தான். ராணியிடம் இந்த நீதி முறைகளைப்பற்றியும், அவை போதிசத்துவருடைய தர்மோபதேசங்களுக்கு உடன்பட்டதாக இருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் எடுத்துக் கூறுவான். அரசனுடைய கணிப்பில் நீதி சாஸ்திரத்தில் இரண்டு அங்கங்கள் இருந்தன. ஒன்று, ஒருவன் குற்றம் இழைத்தானா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பது. அடுத்தது, அந்தக் குற்றத்திற்கு என்ன தண்டனை என்பதை நிர்ணயிப்பது. அரசனுடைய கருத்தின்படி ஒருவன் குற்றவாளியா அல்லவா என்பதைத் தீர்மானிப்பது வெகு இலகுவானது. ஆனால் குற்றத்திற்கு ஏற்ற தண்டனை வழங்குவதில்தான் அரசனுடைய தர்மம் நிலைக்கிறது என்று அவன் நம்பினான்.
கொலை செய்தவனைக் கழுவேற்றிக் கொல்வதுவும், ராஜத் துரோகியை யானையின் காலில் இடறுவிப்பதும், அரச கட்டளையை மீறியவனை சுண்ணாம்புக் காளவாயில் போடுவதும் அரசனுக்கு சரியாகப் படவில்லை. கருணையின் வடிவான போதிசத்துவருக்க இந்தத் தண்டனைகள் உகந்ததாக இருக்காது என்றே அரசனுக்கு தோன்றியது. எல்லாளன் காட்டிய நெறிப்படி, போதிசத்துவருக்கு ஏற்புடையதான நீதி சாஸ்திரங்களை கடைப்பிடிப்பதில் அரசன் வெகு தீவிரமாக இருந்தான். அரசனுடைய இந்தப் போக்கு மந்திரி பிரதானிகளுக்கு அதிசயமாக இருந்தது.
‘தசரதன் ஆணைப்படி ராமன் வனாந்தரம் ஏகிவிட்டான்’ என்று கைகேயி கூறியதும் பரதன் அதிசயப்பட்டு ‘ராமன் என்ன குற்றம் செய்தான்? பிறர் பொருளை அபரித்தானா? நிரபராதிகளைத் தண்டித்தானா? அன்றி பிறர் மனைவியை காமத்துடன் பார்த்தானா? என்று கேட்கிறான். இப்படி கடுமையான குற்றங்களுக்குத்தான் வனாந்தர சிட்சை என்று தொன்றுதொட்டு இருந்தது. மனுதர்மத்தை அணைத்து நின்ற இந்தத் தண்டனைகள் எப்பொழுது இப்படி கடூரமாக மாறின என்ற தர்ம விசாரத்தில் அரசன் அடிக்கடி மூழ்கிவிடுவான்.
ராணி பொத்தாதேவி தன் தங்க ஆசனத்தில் சாவதானமாக அமர்ந்துகொண்டு சேடிப்பெண்ணை கண் நிமிர்ந்து பார்த்தாள். அந்தச் சைகை அர்த்தமாகியதுபோல ராணியின் தாதி தன் கையிலிருந்த இரண்டு வெற்றிலைப் பெட்டிகளையும் அரசியின் முன்னே வைத்தாள். ஒன்று முற்றிலும் வெள்ளியினால் செய்தது; நிறைந்த வேலைப்பாடுகளைக் கொண்டது. அதுதான் பொத்தா தேவியுடையது. மற்றது தங்கத்தால் இழைத்து மின்னிக்கொண்டிருந்தது. அரசனுக்கு மாத்திரம் பிரத்தியேகமானது.
அரசனுடைய வெற்றிலையை பொத்ததேவியே மடித்துக் கொடுப்பாள். தன்னுடையதையும் தானே செய்துகொள்வாள். எது காரணம் கொண்டும் இதைமாத்திரம் சேடிப்பெண்கள் செய்வதை அவள் அனுமதிக்கமாட்டாள். அது மாத்திரமல்ல, எதற்காக ராணி இரண்டு வெற்றிலைப் பெட்டிகள் வைத்திருக்கிறாள் என்ற விஷயமும் ஒருவரும் அறியாத பரம ரகஸ்யமாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது.
பொத்தாதேவி, பதினாறு வயது நிரம்பு முன்பேயே அந்த நாட்டு சேனாதிபதியை மணந்து கொண்டவள். அப்போது அரசனாயிருந்தவன் சுப்பராஜன் என்பவன். அவன் அதற்க முன்பு சாதாரண வேலைக்காரனாக இருந்தவன். அவனும் அப்போது அரரையாண்ட மன்னனும் ஒரே முகச்சாயல் கொண்டவர்கள். ஒருநாள் அரசன் விளையாட்டுக்காக வேலைக்காரனுக்கு ராஜவேஷம் போட்டு தன் வேலைக்காரனுடைய உடையை அணிந்து வேடிக்கை பார்த்தான். மந்திரி பிரதானிகள் வேலைக்காரனை வணங்குவதைப் பார்த்து எள்ளி நகையாடினான், உண்மையான மன்னன். இதுதான் தருணமென்று நயவஞ்சகமா அரசனைச் சிரச்சேதம் செய்துவிட்டு ராஜ்யத்தை அபகரித்துக் கொண்டான், வேலைக்காரனான சுப்பராஜன்.
அரசனாகிவிட்டாலும் அன்றிலிருந்து சுப்பராஜனுக்கு தன்னைக் கொல்ல சதி நடக்கிறதென்று ஒரு பயம் இருந்துகொண்டே வந்தது. ஒரு முறை குறிசொல்பவனிடம் தன் எதிர்காலம் பற்றிக் கேட்டான். அதற்கு அவன் ‘அரசே!தங்களுக்கு ஓர் எதிரி ஏற்கனவே பிறந்திருக்கிறான்; வசபன் என்று பெயர். அவன் தங்களைக் கொன்று இந்த ராஜ்யத்தை உங்களிடமிருந்து அபகரிப்பான்’ என்று கூறிவிட்டான்.
அன்றிலிருந்து சுப்பராஜனுக்கு நித்திரை கெட்டது. சேனாதிபதியைக் கூப்பிட்டு வசபன் என்னம் பேர் உள்ள எல்லோரையும் சிறைப்பிடித்து சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டான். சேனாதிபதியும் அப்படியே சேவகர்களை நாட்டின் நாலு திசைகளிலும் அனுப்பி வசபன் என்ற பேர் உள்ளவர்களை எல்லாம் பிடித்து சிரத்சேதம் செய்தான்.
இந்த நேரம் பார்த்து வடக்கே கிராமத்தில் இருந்து சேனாதிபதியின் சொன்த மருமகன், வசபன் என்று பெயர் கொண்டவன், வந்து சேர்ந்தான். அவனுக்கு அரசனுடைய விநோதமான கட்டளை பற்றிய விஷயம் ஒன்றுமே தெரியாது. பதினெட்டு வயது நிரம்பிய அழகிய யுவன் அவன். சேனாதிபதியின் தயவில் அரசனுடைய படையில் சேர்வதற்காக வந்திருந்தான்.
சேனாதிபதிக்கு தர்ம சங்கடமாகிவிட்டது. மனைவியுடன் கூடி ஆலோசித்தான். அடுத்த நாள் அதிகாலையில் மருமகனைக் கூட்டிக்கொண்டுபோய் அரசனிடம் ஒப்படைத்து சிரச்சேதம் செய்துவிடுவது என்று முடிவாகியது.
பேசிவைத்தபடி அடுத்தநாள் அதிகாலையில் சேனாதிபதியும் வசபனும் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டார்கள். பொத்தாதேவிக்கு இந்தக் காட்சி வயிற்றை பிசைந்தது. எனினும் வழக்கம்போல மடித்த வெற்றிலைச் சுருளை கணவனிடம் கொடுத்து இருவரையும் வழியனுப்பி வைத்தாள்.
சேனாதிபதி வெற்றிலைப் பிரியர். அன்றாட காரியங்களை தாம்பூலம் தரிக்காமல் அவர் தொடங்குவதேயில்லை. அரண்மனை வாசலில் வெற்றிலைச் சுருளை விரித்தார். அதிலே எல்லாம் இருந்தது. ஆனால் சுண்ணாம்பு இல்லை. ஒருநாளும் மறக்காத பொத்தாதேவி அன்று சுண்ணாம்பை மறந்துவிட்டாள். சுண்ணாம்பு இல்லாத வெற்றிலையில் சுகமில்லை. அந்தக்கணம் அவருக்கு வெற்றிலை போட்டே ஆகவேண்டுமென்று இருந்தது. அவர் வசபனை வீட்டுக்கு அனுப்பி சுண்ணாம்பு எடுத்துவரச் சொன்னார்.
அங்கே பொத்தாதேவி வசபனை எதிர்பார்த்து நின்றாள். அவளுக்கு மனது பொறுக்கவில்லை. தன்னுடைய கணவனின் துரோக எண்ணத்தை வசபனிடம் கூறிவிட்டாள். தான் வேண்டுமென்றே சுண்ணாம்பை வைக்கவில்லையென்றும், அவனை உடனேயே தப்பி ஓடிவிடும்படியும் கூறினாள். அது மாத்திரமல்ல, ஒரு துணியிலே அவனுக்கு ஆயிரம் பொற் கழஞ்சுகளையும் முடிந்து கொடுத்தாள்.
முன்பின் பார்த்திராத தன்னிடம் இவ்வளவு கருணை காட்டிய பொத்தாதேவியை வசபன் முதன் முறையாகத் தலை நிமிர்ந்து பார்த்தான். தேவலோகத்து அப்சரஸ்போல அவள் இருந்தாள். அவனால் நம்ப முடியவில்லை. கண்களிலே அவனுக்கு நீர் துளிர்த்தது. பொத்தாதேவி, அவளும் இளம்பெண்தானே! அவள் கண்களிலும் நீர். அப்படியே அள்ளிப் பிடித்து அவள் உதட்டிலே முத்தமிட்டு விட்டான். பிறகு திரும்பிக்கூடப் பாராமல் ஓடிப்போனான்.
பொத்தாதேவி அந்தச் சிந்தனைகளில் இருந்து விடுபட்டு வெற்றிலையை எடுத்து வாயினுள் போட்டு சுவைக்கத் தொடங்கினாள். சேடிப் பெண்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாகச் சென்று தீபங்களை ஏற்றினார்கள். அந்த மங்கிய வெளிச்சத்தில் சாயைகள் போவதும் வருவதுமாக இருந்தது. அவள் மன ஓட்டத்துடன் ஓத்துப்போனது.
தெருவிலேயும் சந்தடி குறைந்துவிட்டது. வண்டியில் மாடுகள் மந்தகதியில் அசைந்தாடிக்கொண்டு சென்றன. ரத ஓட்டம் முற்றிலும் நின்று விட்டது. மனித அரவம் இன்னும் அடங்கவில்லை.
இன்னும் மன்னரைக் காணவில்லை. இவ்வளவு நேரங்கழித்து அவர் அந்தப்புரத்திற்கு வந்ததேயில்லை. இன்று அரண்மனையில் அப்படி என்ன முக்கியமான காரியமாயிருக்கும்? ஏதாவது விசேஷமான வழக்கா இருக்கலாம்? மன்னர் இப்பொழுதெல்லாம் இப்படியான வழக்குகளுக்குத் தான் தன் நேரத்தை எல்லாம் செலவிடுகிறார்.
இரண்டு பௌர்ணமிகளுக்கு முன்பும் இப்படித்தான் ஒரு வழக்கு. அரசன் வழங்கிய தீர்ப்பைப் பற்றி பண்டிதரும் பாமரரும் ஒன்றாகச் சிலாகித்து பேசினார்கள். நெடுஞ்சாலை ஒரத்திலே தன்னிச்சையாக ஒங்கி வளர்ந்து நின்ற விருட்சத்தை ஒரு துஷ்டன் வெட்டிச் சாய்த்துவிட்டான். அரசன் அனுமதியின்றி மரங்களை வெட்டுவது மகா பாபமான செயல். அதுவும் சாலையோரங்களில், மனிதனுடைய வசதிக்காக வைத்த மரங்களை வெட்டுவது மிகவும் பாரதூரமான குற்றமாகும்.
மரங்களைப் பேணுவது காலத்திலிருந்து கடைபிடிக்கப் பட்டு வந்த வழக்கம். அவனுடைய பிரதானமான கல்வெட்டுகள் எல்லாம் ‘மனிதர்களுடைய வசதிக்கும், பிராணிகளுடைய நலத்துக்குமாக அரசன் ஆணையால் நெடுஞ்சாலை ஓரங்களில் கிணறுகள் வெட்டப்பட்டன, மரங்கள் வைக்கப்பட்டன’ என்று கூறும். அப்படியிருக்க இந்த மூடன் கருணையே இல்லாமல் இப்படி மரத்தை வெட்டிவிட்டானே!
வழக்கமா இந்தக் குற்றத்திற்கு தண்டனை ஐம்பது கசையடி. ஆனால் மன்னருடைய தீர்ப்பு எல்லோரையும் ஆச்சிரியத்தில் அடித்தது. அதே சாலையில் நூறு மரங்களை நடும்படி குற்றவாளிக்கு ஆணை பிறப்பித்தார் அரசர். அந்த தீர்ப்பிலே உள்ள மதி நுட்பத்தையும், அதனால் ஏற்படும் நன்மையையும் பற்றி எல்லோரும் பேசிப்பேசி மகிழ்ந்தார்கள்.
‘நாட்டிலே உள்ள வழக்குகளுக்கெல்லாம் தீர்ப்பு வழங்கும் மன்னர் என்னுடைய குற்றத்திற்கு என்ன தண்டனை கொடுக்கக் கூடும்’ என்று பொத்தாதேவி தன்னையே அடிக்கடி கேட்டுக் கொள்வாள். மனு நீதி சாஸ்திரத்தில் அவளுக்கு மன்னிப்பு இருக்கிறதா?
இரண்டு வருடங்களாக வசபன் காடுகளிலே ஒளிந்து திரிந்து படை திரட்டினான். இந்தக்காலங்களில் எல்லாம் பொத்தாதேவி அவனை ஒருகணம் தானும் மறந்தாளில்லை. அவனைப்பற்றியே செய்திகள் அடிக்கடி வந்த வண்ணமாகவே இருந்தன. விதியின் உந்துதலால் அப்பொழுது பொத்தாதேவி தனது இரண்டாவது குற்றத்தை செய்யும்படி நேரிட்டது.
ஒரு சேதாந்திரி வடக்கு நோக்கி போய்க்கொண்டிருந்தார். பொத்தாதேவி அவர் கையில் ஒரு வெற்றிலைச் சுருளைக் கொடுத்து வசபனைக் கண்டால் அவன் கையில் அதைத் தரும்படி வேண்டிக் கொண்டாள். அவருக்கு ஆச்சரியம்! வெற்றிலைச் சுருள் அவ்வளவு நாளைக்குத் தாங்குமா! ஆனால் அந்த தேசாந்திரி ஒன்றுமே கேட்கவில்லை. ‘அப்படியே’ என்று கூறி சுருளை வாங்கிப் போய்விட்டார்.
பொத்தாதேவி எதிர்பார்த்தபடி ஒருநாள் வசபன் திடுதிடுப்பென்று திரும்பி வந்துவிட்டான். சுண்ணாம்பு இல்லாமல் அவள் அனுப்பிய வெற்றிலையின் சூசகமான செய்தியை அவன் உணர்ந்து கொண்டான். கடம்ப மரங்களின் மறைவில் அவளைச் சந்தித்தான் வசபன். ஆசை தூண்ட அடக்கம் இழந்து அவளைத் தழுவினான்; பொத்தாதேவி அவன் வசம் ஆனாள்.
வெகு சீக்கிரத்திலேயே வசபம் பெரும்படையுடன் வந்து சுப்பராஜனின் படைகளை முறியடித்து ராஜ்யத்தைக் கைப்பற்றிக்கொண்டான். வசபனுக்கு எதிராக அவளுடைய கணவன் போர்க்களத்தில் சேனாதிபதியாக மிகவும் சௌகரியத்துடன் போர் புரிந்தான். இருந்தும் சமரிலே படுகாயம் பட்டு உயிர் நீத்தான்.
வசபன் அரசனானவுடன் முதற் காரியமாக பொத்தாதேவியை மணந்து ராணியாக்கிக் கொண்டான். அவனுடைய ராஜ்யத்தில் மக்கள் எல்லாம் மிக மகிழ்ச்சியாக இருந்தார்கள். அளவற்ற கருணையுடன் அவன் செய்த ராஜ்ய பரிபாலனத்தில் மனிதர்களும், மரங்களும், மிருகங்களும், பட்சிகளும்கூட சந்தோஷமாக இருந்ததாகப் பேசிக்கொண்டார்கள்.
ஏதோ ஒரு பெரிய குற்றத்திற்க பிராயச்சித்தம் செய்வது போல வசபன் ஸ்தூபங்களைக் காட்டினான். கோட்டைச் சுவர்களை உயர்த்தி நாலு வாசல்களிலும் புத்த விஹாரங்களை ஸ்தாபித்தான். பன்னிரெண்டு மிகப்பெரும் வாவிகளைக் கட்டி வாய்க்கால்கள் வெட்டினான். விஷேச தினங்களிலும், விழாக்களின் போதும் முப்பத்திரண்டு இடங்களில் பால் சோறும், தேனும் கொடுக்க ஆக்ஞை பிறப்பித்தான். மக்கள் இவனுடைய நீதி வழுவாத ஆட்சி நீடிக்கவேண்டும் என்று புத்த பகவானை வேண்டிக்கொண்டார்கள்.
சேடி ஒருத்தி ஓடிவந்து அன்று நடந்த அதிசயமாக வழக்கைப் பற்றி ராணியிடம் கூறினாள். ராணி ‘அது என்ன வழக்கு? பிபரமாகச் சொல்?’ என்றாள். ‘இது ஒருகுடியானவத்தம்பதிகளுக்கிடையில் ஏற்பட்ட தகராறு. மனைவி கணவன் மீது வழக்குத் தொடுத்திருக்கிறாள்!’ என்றாள். அப்படி அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே மன்னர் வந்துவிட்டார். சேடிகள் மறைந்து கொண்டார்கள்.
அரசனை எழுந்து வரவேற்றாள் ராணி. அரசனின் முகத்தில் என்றும் இல்லாத ஒரு பரவசம் நிறைந்திருந்தது. மிகவும் கஷ்டமான காரியத்தை சாதித்தபின் மனதில் பரிபூரணமான சாந்தியுடன் கூடிய ஒரு ஒளி ஏற்படுமே,அதுதான்.
‘ஸ்வாமி! இன்றைய வழக்கைப் பற்றியே எங்கும் பேச்சாக இருக்கிறது. என்ன நடந்தது? கூறுங்கள்’ என்றாள்.
‘இன்று நடந்தது ஒரு சிறிய விவகாரம்தான். ஆனால் இதன் தீர்ப்பு மிகவும் பாரதூரமானது. ஒரு முரட்டுக் குடியானவனிடம் ஒரு மாடு இருந்தது. இந்த மாட்டை நம்பித்தான் அவர்கள் ஜ“வனம் நடந்தது. மனைவி பால், தயிர், மோர் என்று விற்று வந்தாள்.’
‘இந்த மாடு கொஞ்சம் முரண்டு பிடித்தது. இந்த மூர்க்கன் அதை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துவான். மனைவி எவ்வளவு சொல்லியும் கேட்பதில்லை. இன்று காலை அந்த வாயில்லாப் பிராணியைப் போட்டு அடித்திருக்கிறான். இவளுக்கு பொறுக்க முடியவில்லை. ஓடிப்போய் தடுத்தபோது அந்த மூடன் இவளையும் சேர்த்து அடித்திருக்கிறான். அப்பொழுதுதான் இவள் நேராக வந்து ஆராய்ச்சி மணியை இழுத்திருக்கிறாள்’.
‘அதிசயமாக இருக்கிறதே! என்ன தீர்ப்பு வழங்கினீர்கள்?’
‘அதிலேதான் பிரச்சனை. பசுவதை என்பது மிகவும் கொடூரமானது. வழக்கமான இப்படியான குற்றத்திற்கு தண்டனை ஒரு நாழிகை நேரம் சுண்ணாம்பு காளவாயில் அவனைப் போடுவதுதான்.’
‘அதுதான் தீர்ப்பா?’
‘இல்லை; அப்படிச் செய்தால் யாருக்கு என்ன பிரயோசனம்?’
‘எங்கள் நீதி சாஸ்திரங்கள் குற்றத்துக்கு தண்டனை கொடுப்பதை விட குற்றம் இழைத்தவன் பச்சாதாபப்பட்டு திருத்துவதையே வலியுறுத்துகின்றன. போதிசத்துவர் போதித்ததும், எல்லாளன் கடைப்பிடித்ததுவும் அதுதான்!’
‘இந்தத் துன்மார்க்கன் வாட்டசாட்டமாக இருப்பான். வெகு போஜனப் பிரியன் இவனுக்கு நான் இவனுடைய மனைவி கையாலேயே தண்டனை வழங்கிவிட்டேன்.’
‘ஐயையோ! புதுவிதமாக இருக்கிறதே! என்ன தண்டனை?
‘ஒரு மண்டல காலத்துக்கு இவர் பால், தயிர், மோர், நெய் ஒன்றும் உணவுடன் சேர்த்துக்கொள்ள முடியாது. அதுதான் தண்டனை. அதை நிறைவேற்றும் பொறுப்பையும் அவனுடைய மனைவியிடமே விட்டுவிட்டேன்.
‘அது எப்படி முடியும்? இந்த மூர்க்கன் அவளைப்போட்டு வற்புறுத்தி களவாகவோ, பலாத்காரமாகவோ உண்டுவிடுவானே?’
‘அதுதான் இல்லை, தேவி. நீ அந்தப் பெண்ணினுடைய முகத்தைப் பார்த்திருக்க வேண்டும். பதிவிரதை அவள். அப்படியான ஒரு சாந்தி அவள் முகத்தில் வீசியது உயிர் போனாலும் அவள் இதை மீறமாட்டாள். நிறைவேற்றியே தீருவாள்’.
‘கணவன் இதை எப்படி ஏற்றுக்கொண்டான்?’
‘அதுவா, அவன் முகம் பேயறைந்தது போல ஆகிவிட்டது. சுண்ணாம்பு காளவாயில் போடுவார்கள் என்று நினைத்து வந்தவன் தீர்ப்பைக் கேட்டதும் நடுநடுங்கிவிட்டான். ஒரு வேளைச் சாப்பாட்டுக்குக் கூட அவனால் தயிர், நெய், மோர் இன்றி இருக்க முடியாது. ஒரு மண்டலம் தாங்குவானா?
‘ஸ்வாமி, இதனால் இம்சைப்பட்ட பசுவின் துக்கம் எப்படித் தீர்ந்துபோகும்?’
‘அங்கேதான் இருக்கிறது, கணவனுடைய சாப்பாட்டில் மீதமாகும் பணத்தில் மாட்டுக்கு நல்ல தீவனம் வாங்கிக் கொடுத்து அதன் கஷ்டத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் தீர்ப்பு. அது மாத்திரமல்ல, இந்தத் தடியன் இந்த தண்டனையில் ஒரு சுற்று இளைத்துவிடுவான். அடுத்தமுறை இவன் அடிக்கும்போது அடி பலமாக விழாது’ என்று சொல்லிவிட்டு மன்னன் நகைத்தான். எட்டத்தில் நின்ற சேடிப்பெண்களும் சிரித்தார்கள்.
ராணியினுடைய முகம் இப்போது மாறிவிட்டது. பௌர்ணமி போன்ற இருந்த முகம் இப்படித் திடீரென்று கறுத்து சிந்தனையில் ஆழ்ந்தது.
‘என் இதய ராணியே! என்ன சிந்தனை? என்றான் அரசன்.
‘அரசே! மிகப் பிரியமான ஒன்றைத் தவிர்ப்பதுகூட கடுமையான தண்டனைதான் என்று கூறுகிறீர்கள் நியாயம்தான்! அது பிராயச்சித்தம் ஆக முடியுமா?’
‘ராணி, குற்றம் செய்த ஒருவனை யானையின் காலில் இடறுவிப்பதும், கழுவில் ஏற்றுவதும், ஆற்று நீரில் போடுவதும் மாத்திரம் என்ன நியாயம் ஆகும்? போதிசத்துவரின் போதனைகளுக்கு எதிரானதல்லவோ? குற்றம் இழைக்கப்பட்டவனுக்கு அதனால் என்ன பரிகாரம்?’
ராணி சிறிது நேரம் பேசாமலிருந்தாள்.
‘ஸ்வாமி, உங்களுடைய நீதி பரிபாலனத்தை இந்த உலகமே போற்றுகிறது. கணவனுக்கு துரோகம் இழைத்த பெண்ணுக்கு என்ன தண்டனை?’ என்றாள். அவள் குரல் நடுங்கியது. தரை பார்த்த கண்களில் நீர் கோத்து நின்றது.
அப்பொழுது அரசன் அவளுடைய கைகளை எடுத்துக்கொண்டாள். ‘பிரியமானவளே! என்னுடைய மனம் இன்று மிகவும் குதூகலத்தில் இருக்கிறது. காரணம் தெரியாமல் சந்தோஷம் பொங்குகிறது. இந்த நேரத்தில் கவலை தரும் எந்த விஷயத்தையும் நான் ஏற்கமாட்டேன். நீ இழைத்தது துரோகம் அல்ல; மிகவும் காருண்மையான செயல். அநியாயமாக சம்பவிக்க இருந்த ஓர் உயிர்ப்பலியை நீ தடுத்திருக்கிறாய் இது எப்படிக் குற்றம் ஆகும்? இதைத் தடுக்காவிட்டால் அல்லவோ நீ கொலைகாரியாக மாறியிருப்பாய்! ஆத்மாவின் குரலைக் கேட்கும் எந்தப் பெண்ணும் செய்யக் கூடிய காரியம்தான் இது. அதற்குதண்டனை என் இதயத்துள் சிறைவாசம்தான்’ என்று சொல்லிக்கொண்டு அவளை இறுக அணைத்தான்.
சேடிப் பெண்கள் மெதுவாக அந்த இடத்தைவிட்டு அகன்று போனார்கள்.
‘ராணி இருபது வருடங்களாக நீ எனக்கு வெற்றிலை மடித்து தருகிறாய். எங்கள் வாழ்க்கையில் இந்த வெற்றிலையை நான் என்றுமே மறக்கமுடியாது. இன்று நான் உனக்கு தாம்பூலம் மடித்துத் தருவேன்’ என்று சொல்லிக் கொண்டே தங்கத்தினால் இழைத்த அந்த வெற்றிலைப் பெட்டியை தன் பக்கம் இழுத்தான்.
ஏதோ பாம்பைக் கண்டு அரண்டது போல ‘வேண்டாம்! வேண்டாம்!’ என்று தடுத்தாள் ராணி.
‘இது என்ன ராணி? இரண்டு வெற்றிலைப் பெட்டி ஒன்று வெள்ளி உனக்கு; மற்றது தங்கம் எனக்கு. ஏன் இந்தப் பாகுபாடு? இப்படிச் சொல்லிக்கொண்டே அரசியினுடைய வெள்ளிப் பெட்டியை மெல்லத் திறந்தான். திறந்தவன் அப்படியே ஆச்சரியப்பட்டு நின்றுவிட்டான்.
‘ஸ்வாமி, நான் சுண்ணாம்பு போடுவதே இல்லை’.
‘என்ன? எத்தனை காலமாக?’
‘இருபது வருடங்கள்’ என்றாள் ராணி, கீழே பார்த்தபடி.
ஒரு தபஸ்வினியின் ஒளி அவள் கண்களில் வீசியது. கண்களில் நீர் கோத்தபோது அது இன்னும் பிரகாசமாக ஜொலித்தது.
நீதி வழுவாது பரிபாலனம் செய்யும் அரசனுக்கு அந்தக் கணம் எல்லாம் புரிந்தது.
– 1996-97, வடக்கு வீதி (சிறுகதைத் தொகுப்பு), மணிமேகலைப் பிரசுரம், நவம்பர் 1997
– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.