கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 30, 2021
பார்வையிட்டோர்: 13,799 
 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி – 1 – 14

காட்சி – 15

இடம்: கொலைக்களம்

முதல் கொலைஞன்: தாயே! இந்த வழியா தப்பிப் போயிடுங்க.

மங்கை: என்னை வெட்டும்படி அல்லவா மஹாராஜாவின் கட்டளை.

இரண்டாவது கொலைஞன்: எங்க மஹாராணியா இருக்குற ஒங்க எப்படியம்மா கொல்றது. ஐயோ பாவம்! ஒங்களுக்கா இந்த கெதி வரணும்.

மங்கை: கொனை விலக்க முடியாத விதியை நினைத்து….வேதனைப்படுவதால் பயன்? கப்பல் அலகாளக் கிழித்துச் செல்லலாம்…ஆனால் அவைகனே அழித்துச் செல்ல முடியாது. கட்டளையைத் தவறாதீர்கள் கடமையை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு நீங்களே துன்பத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.

முதல் கொலைஞன்: அம்மா! சொல்றத்த கேளுங்க. எப்படியாச்சும் ஒங்க உசுர காப்பாத்திக்கிங்க.

மங்கை: வாழ்வதற்கு இச்சை இருந்தாலல்லவா…நான் அப்படிச் செய்து கொள்ள வேண்டும். கொலைஞர்களே! என்னைத் தடுக்காதீர்கள். சாவு….எனக்கு மிகவும் இனிப்பாக இருக்கிறது. என்னைச் சாக வையுங்கள். மரணங்கூட மனிதன் செய்து முடிக்கவேண்டிய கர்மங்களில் ஒன்றுதானே! அப்பா… சாவு….வாழ்வதைப்போல் அவ்வளவு பயங்கரமான ஆபத்து நிரம்பியதல்ல. என்னைச் சாகவிடுங்கள். சுக்கிலத்தில் ஆரம்பமான சரீரம் என்றைக்கோ ஒருநாள் சாம்பலாகித்தானே தீர வேண்டும். வெட்டுங்கள் – சோதனைபும், சந்தேகங்களும் உலவிக் கொண்டிருக்கம் கொண்டிருக்கும் இந்தச் சண்டாள பூமியை விட்டுப் புன்சிரிப்புடன் என் ஆவி…பிரேத் உலகத்துக்குப் போகட்டும்! வெட்டுங்கள்… அழுகையும் அவஸ்தைகளும் நிரம்பிய என் வாழ்க்கை …..இன்றோடு அஸ்தமிக்க வேண்டும். அதற்காக வெட்டுங்கள். பூக்களின்மேல் புரண்டு பழக்கப்பட்ட என் சரீரம …கழுகின் பாதங்களின் கீழ் புரளட்டும்…அப்பா….என் அரசரின் ஆலிங்கனத் தால் வயிற்றிலிருக்கும் சிசு…மனித உலகத்தின் பழிச்சொல்லுக்கு ஆளாகாமல்….என் மரண ரத்தத்திலேயே மரணமாகட்டும்! மண்ணும் மலையும் மௌனமாகத் தூங்குவது போல் நானும் தூங்கிவிடுகிறேன். தயவுசெய்து வெட்டிவிடுங் கள். நான் பிறந்த பூமியாவது என் ரத்தத்தால் குளிரட்டும்.

தேவி! நான் புறாவைப்போல் கபடமற்றவள். தர்மம் தவறாதவள். ஆனால்… அரசாங்கம் சந்தேகப்பட்டு இதோ என்னைக் கொல்லப்போகிறது கொல்லட்டும். நான் சாவதைப் பார்த்தாவது இந்த சாம்ராஜ்யத்தின் மக்கள் சந்தோஷப் படட்டும். ஆனால் என்மீது வீணாகச் சந்தேகப்படும் அவர் களுக்கு…நரகத்தில் முட்களைத் தவிர வேறு ஆகாரம் கிடைக்காது தாயே! ஆராயாமல் அவசரப்பட்டு, ஆத்திரத்தால் தீர்ப்பளித்த நீயும் ஒரு நீதியுள்ள அரசனா? அட பாபி…என் கும்பி கொதிக்கக் கூறுகிறேன். சாவு லோகத்தில்…உனக்கு நெருப்புக் கட்டிகள் தான் படுக்கையாக இருக்கும்.

உதிரும் இந்தக் கண்ணீர்; என் உபத்ரவம் நான் வைத்திருக்கும் ஆசைகள் அத்தனையும்…இன்னும் கொஞ்ச நேரத்தில் என்னோடு இறந்துபோகும் …ஆனால் அக்னி சாட்சியாக என் மணாளர் கட்டிய ….இந்த மாங்கல்யம் மாத்திரம் எந்தக் காலத்திலும் மரணமாகாது. ப்ரபு…. நீங்கள் எங்கிருக்கிறீர்கள். கருவிகரணங்கள் ஓய்ந்து ஒடுங்கப்போகும் இந்தக் கடைசி நேரத்தில் கூட உங்களைப் பார்க்கக் கொடுத்து வைக்காத பாவியாகிவிட்டேன். என் நேரம் நெருங்குகிறது. போகிறேன் ஸ்வாமி போகிறேன். சாவு என்னை அழைக்கிறது; அதன் சந்நிதானத்திலே சந்தோஷமாகத் தூங்கப் போகிறேன். நான் நிரபராதி என்பதை உலகத்தார்க்கு நிரூபிக்க முடியாமல் ; பிறந்த மண்ணிலேயே புழுதி யாகிவிடப் போகிறேன். ஸ்வாமி – கடைசியாக உங்களை ஒன்று வேண்டிக்கொள்கிறேன். தாங்கள் என்றைக்காவது திரும்பிவந்தால் – மங்கையர்க் காசி; சத்தியத்துக்காக வாழ்ந்து சந்தேகத்துக்காக இறந்து காட்டினாள் – என்பதை மனித ஜாதிக்குச் சொல்லுங்கள். அப்பா இனி தாமதம் வேண்டாம்.

[என்று சொல்ல, கொலைஞர்கள் அவளை வெட்ட, அவள் வெட்டுப்படாதது கண்டு பயந்து ஓடிவிடுகின்றனர். பிறகு]

மங்கை: அட தெய்வமே! அடிக்கடி துன்பத்துக்கே திரும்பிவரும்…உலகமல்லவா இது! இதில், என்னை ஏன் இன்னும் நடமாட வைக்கிறாய்?

[என்று கூறி அவ்விடத்தை விட்டுப் புறப் பட்டுப் போகும் போது, இடைவழியில் பிரசவமாக. இதைக்கண்ட ஒரு மறவன் அவளைத் தன் குடிசைக்கு அழைத்துக் கொண்டு வருகிறான்.]

காட்சி – 16

இடம்: காளிகோவில்

[காளிகோவிலில் பூஜை நடக்கிறது. பூசாரி மீது ஆவேசம் வர]

பூசாரி: அடே! எங்கடா சிசு பலி.

ஒருவன்: இதோ கொண்டாரேன் தாயே.

[என்று கூறி அவ்விடத்தை விட்டு, மறவன் குடிசையில் உள்ள மங்கையர்க்கரசியின் குழந்தையைப் பலி கொடுக்கத் தூக்கிக் கொண்டு போகிறான். பிறகு, மங்கையர்க்கரசி வந்து பார்க்க மகனைக் காணாமல் கதறிக் கொண்டு குடிசையைவிட்டு ஓடி, ஒரு மலை உச்சியிலிருந்து குதிக்கிறாள்.]

காட்சி – 17

இடம்: அரண்மனை

[மதுராங்கதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது, காளி அவன் கனவில் தோன்றி]

காளி: ஏ ராஜன்! காட்டில் இருக்கும் என் கோவிலில்…உனக்குப் பின்…பட்டத்துக்கு வரக்கூடிய ராஜபுத்ரன் ஆபத்தில் இருக்கிறான். சீக்கிரம் போ.

[என்று கூற, மன்னன் விழித்து]

மதுராங்கதன்: அம்பிகே! இது உன் அருளா? உன் உத்தரவா? இதோ வருகிறேன்.

(என்று கூறி, உடனே ரதத்தில் ஏறி வருகிறான்.)

காட்சி – 18

இடம்: காளிகோவில்

காளி சந்நிதானத்தில் மங்கையர்க்கரசியின் குழந்தையை வெட்ட, பூசாரி கத்தியை ஓங்குகிறான். அப்போது, மறவன் ஓடிவந்து)

மறவன்: வேண்டாம்…வேண்டாம். இந்தப் பச்சக் கொழந்தய பலி கொடுக்கவேண்டாம்.

பூசாரி: அடே! இவனைக் கட்டுங்கடா.

[என்று சொல்ல அப்போது மதுராங்கதன் அங்கே வந்து பூசாரிமீது அம்பு எய்து குழந்தையைத் தூக்க, அப்போது]

மறவன்: மஹாராஜா? இந்தக் கொழந்தய நான் தான் வளத்தேன். கொல்ல வேண்டாமுன்னு தடுத்தேன். என்னைக் காப்பாத்துங்க.

மதுராங்கதன்: சரி, நீயும் என்னுடன் வா.

[என்று சொல்லி, அவனையும் அழைத்துக் கொண்டு போகிறான்.]

காட்சி – 19

இடம்: தெரு

(மலையிலிருந்து குதித்தும், அமர அமுதத்தின் சக்தியால் ஆவி பிரியாத மங்கையர்க்கரசி, ஒரு வீதி வழியாக அழுதுகொண்டு வர, இதைக் கண்ட அவ்வூர் தாசி வஞ்சி அவளைப் பார்த்து]

வஞ்சி: நீ யாரம்மா? ஏன் அழுவுறே?

மங்கையர்க்கரசி: நான் ஒரு அனாதை.

வஞ்சி: ஐயோ பாவம்! அழாதே. என் வூட்டுக்கு வாம்மா. என் மவளைப்போல ஒன்னக் காப்பத்துறேன்.

[என்று மங்கையர்க்கரசியைத் தன் இல்லத்துக்கு அழைத்துக்கொண்டு வருகிறாள்.]

காட்சி – 20

இடம் : மதுராங்கதன் அறை

(மதுராங்கதன், மந்திரி, ராணி வசந்தவதி, எல்லோரும் உட்கார்ந்திருக்கின்றனர். காளி கோவிலிலிருந்து எடுத்துவந்து வளர்க்கும் மன் னனின் வளர்ப்பு மகன் சிறுவன் சுதாமன், ராணியின் மடியில் அமர்ந்திருக்கிறான். சுதாமன் மன்னனைப் பார்த்து]

சுதாமன்: அப்பா…எனக்கு நேரமாகிறது. பகவானைப் பிரார்த்திக்கவேண்டும்.

மதுரா: சுதாமா பிரார்த்தனை….பாபத்தை வெல்லுகிறது.

சுதா: அது ஒருவனை, இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கும் அழைத்துக்கொண்டு போகிறது.

மதுரா: சபாஷ்! மகனே! நீ ஒரு முத்து உள்ள கரும்பு.

வசந்தவதி: நட்சத்திரங்களின் சந்திரன்.

மந்திரி: சந்தேகமென்ன!

சுதா: அப்பா நான் பூஜைக்குப் போகிறேன்.

[என்று தன் அறைக்கு வந்து பூஜை செய்ய, விளக்கு பெரிதாகிறது. சுதாமனும் பெரியவனாகிறான்.]

காட்சி – 21

இடம்: மதுராங்கதன் அறை

[மன்னன் தன் அறைக்குவந்த சுதாமனைப் பார்த்து]

மதுராங்கதன்: சுதாமா, இந்த ராஜ்யபாரத்தை இனி மேல் நீ ஒப்புக்கொள்.

சுதாமன்: அப்பா! நானோ வாலிபன். வஸ்துக்களிடம் சீக்கிரமாக வசப்படுபவன். இப்போதே எனக்கு ராஜ்யபாரமா?

மதுரா: சுதாமா…நானோ, கண்ணிலிருக்கும் சொந்த வெளிச்சமெல்லாம் செலவழிந்துவரும்…கிழப்பருவம் அடைந்தவன். வயோதிகன்…வாழ்ந்து அலுத்துவிட்டவன். இனிமேல் இந்தக் கிரீடத்தின் சுமையை என்னால் தாங்கமுடியாது.

சுதா: அப்பா! நீங்கள் அனுபவமும், அரச பரிபாலனமும் நன்றாக அறிந்தவர்கள். உங்களாயேலே முடியாது என்றால்… மானிட எண்ணங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாதிருக்கும் இந்தப் பருவத்தில் என்னால் நிர்வகிக்க முடியுமா? அப்பா, வைரம் பாய்ந்த மரத்தில் ஒரு மதயானையைக் கட்டி விடலாம். ஆனால், வளைந்து கொடுக்கும் செடியில்….ஒரு சாதுவான ஆட்டைக்கூட கட்ட முடியாது.

மதுரா: சுதாமா! உன் விவாதம் இனிமையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும்…இந்த அரசாங்கத்தின் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டியது உன் கடமை அல்லவா?

சுதா: ஆம்! என் கடமைதான். ஆனால்….தாங்களும் தங்கள் மூதாதைகளும், மக்களை ஆயுள் வரைக்கும் அடிமைப்படுத்தி ஆண்டுவரும்…இந்த சர்வாதிகார ஆட்சியை நான் விரும்பவில்லையப்பா.

மதுரா: அப்படி என்றால்?

சுதா: இனிமேல் – ஒரு நாட்டை மகுடங்கள் ஆட்சி, செய்யக்கூடாது. மக்களின் எண்ணங்கள் தான் ஆளவேண்டும்.

மதுரா: அப்போது…பழைய சம்பிரதாயங்கள், கொள்கைகள் எல்லாம் …..

சுதா: பறந்துதான் போகும்.

மதுரா: அப்படி என்றால்….சர்வாதிகாரம்…அரசனுக்கு தெய்வத்தால் கொடுக்கப்பட்ட வரமாயிற்றே…அதன் கதி?

சுதா: அது – இனிமேல் உயிரோடு உலவ முடியாது. இதுபோன்ற ஆதிகால ஞாபகமெல்லாம்…அஸ்தி வாரத்தோடு அழியவேண்டியதுதான்.

மதுரா: என்ன சொன்னாய்? ஹூம்! காலம் மாறி விட்டது.

சுதா: அதனால் தான் நாமும் மாறவேண்டும் என்று சொல்கிறேன். அப்பா! இனி இங்கே …எதேச் சதிகாரம் இருக்காது. பூலோக தெய்வங்கள், மன்னர்கள் என்ற பூச்சாண்டி பலிக்காது. ஆள்பவனும் அடிமையும் இருக்கமாட்டான். மக்கள் சிந்தனையை இருட்டாக்கி வைத்திருக்கும் முட நம்பிக்கைகள்…உயர்வு, தாழ்வு என்ற வித்தியாசம், இவைகள் எல்லாம்…பூண்டோடு பொசுங்கிவிடும். அப்பா..இது புதுயுகம் பழமைகள்.. படுசூரணமாகிவிடும். புதுமைகள் பூத்து மணம் வீசும்.

மதுரா: சுதாமா! உணர்ந்தேன். சென்று போன நாட்களின் பழக்க வழக்கங்கள்…இனி நின்றுபோக வேண்டியதுதான். சரி, இன்று முதல் நாட்டின் நலங்கருதி அடிக்கடி மாறு வேடத்துடன்…நகர் சோதனை செய்து வா.

[என்று கூற சுதாமன் போகிறான்]

காட்சி – 22

இடம்; தாசி வீடு

[விஷ இருட்டில், சில காலிகள் மங்கையாக்கர சியைப் பலாத்காரமாக இழுத்துக் கொண்டு போவதை , நகர் சோதனை செய்து வரும் சுதாமன் கண்டு, அவர்களிடமிருந்து அவளைக் காப்பாற்றி, அவள் மீது மோகமடைந்து அரண்மனை திரும்புகிறான்.]

காட்சி – 23

இடம்: அரண்மனைத் தோட்டம்

[சுதாமனும் அவன் நண்பன் ஜீவாம்ருதமும் ஒரு மரத்தின் பக்கத்தில் நின்றபடி]

சுதா: நண்பா….அன்று காப்பாற்றினேனே அந்தக் காம மோகினியை…

ஜீவா: ஜயையோ…! அவ ஒரு மோசமான தாசிப் பெண்.

சுதா: அதனால் பரவாயில்லை. வண்டு எச்சில்படுத்திய மலர்களை, தெய்வங்கூட அல்லவா, மாலையாக அணிந்து கொள்ள மனமார ஒப்புக் கொள்கிறது.

ஜீவா: இளவரசே! நீங்களே இப்படி நடக்க நினைக்கலாமா! இது – பாபம்.

சுதா: இல்லை! வாலிபத்தின் பரவசம்!

ஜீவா: சொல்றதைக் கேளுங்க இது விபசாரம்.

சுதா: இது, என்போன்ற வேந்தர்க்கெல்லாம், கிண்ணத்துக்குள் புயல் வீசுவது போன்ற ஒரு சின்ன விஷயம். நண்பா! நட்சத்திரங்கள் சாகாத இன்றிரவு நொச்சிப் பூக்கள் உதிரும் கடைசி யாமத்துக்குள், அவள் கரும்புத் தோளில் சாய்ந்து …கந்தர்வ லீலை புரியாவிட்டால் என் ஆவி நிச்சயம் நிலைக்காது. என் ஆசையை நிறைவேற்ற சீக்கிரம் ஏற்பாடு செய். புறப்படு.

ஜீவா: அப்ப.. சரி இதோ போகிறேன்

[என்று கூறிப் போகிறான்.]

காட்சி-24

இடம்: தாசி வீடு

[நீல இரவு, ஓடும் சந்திரன் ஒட்டிக் கொண்டி ருக்கும் உல்லாசமான நேரம். வஞ்சி, சில நகை புடவை இவைகளைக கையில் வைத்தபடி, மங்கையர்க்கரசியைப் பார்த்து]

வஞ்சி: தங்கம், இதைப் போட்டுக்க, இந்தா பொடவை ஹூம்….சிங்காரிச்சிக்க.

மங்கை: அம்மா! குப்பையில் கிடக்கும் என்னை இன்று கோபுரத்தில் வைக்கிறீர்களே. என்றுமில் லாமல், இன்று எனக்கு என்ன வாழ்வு வந்து விட்டது. அழுவதற்காகவே பிறந்துவிட்ட எனக்கு இந்த அலங்காரம், ஆடம்பரம் இதெல்லாம் எதற்கம்மா ?

வஞ்சி: எதுக்கா? இன்னங் கொஞ்ச நேரத்துலே நம்ப தேசத்து இளவரசர் இங்கே வரப்போகிறார். அதுவும் ஒன்னப் பாக்கத்தான்.

மங்கை: என்ன ! இளவரசரா? புனிதமான செங்கோலைத் தாங்கும் புவிராஜன? என்னை ஆபத்திலிருந்து காப்பாற்றிய, அந்தப் புண்ணிய புருஷரா?

வஞ்சி: ஆமாம். அவரே தான்.

மங்கை: என்ன பாராளும் வேந்தரா, இந்தப் பேதையைப் பார்க்கப் பாதி ராத்திரியில் வரப்போகிறார்?

[என்று கூறும் போது, இளவரசன் வந்து கதவைத்தட்ட, வஞ்சியும் மாமாவும் அவனை வரவேற்று ஆலிங்கன அறைக்கு அனுப்ப, சுதாமனைப் பார்த்து மங்கையர்க்கரசி வணங்கியபடி]

மங்கை: வாருங்கள். இப்படி அமருங்கள் அரசே ! நீங்கள். சமயத்தில் செய்த உதவியை…நான் சாகும் வரையிலும் மறக்கமாட்டேன். நீங்கள் ஒரு வீரனாக விளங்கினீர்கள்…அதற்காக ஆனந்தப்படுகிறேன். என் துன்பத்தைத் துடைத்தீர்கள்… அதற்காகத் தலைவணங்குகிறேன். என்னை ஆபத்திலிருந்து காப்பாற்றினீர்கள். அதற்காக நன்றி செலுத்துகிறேன்.

கதா: ஆபத்தில் உதவி செய்வது மனித தர்மம். அதிலும் நான் அரசன். செய்ய வேண்டிய கடமையைச் செய்தேன்.

மங்கை: நீங்கள் கடமையாகக் கருதலாம். ஆனால் நான், அதை எனக்காக நீங்கள் செய்த தியாகம் என்றே எண்ணுகிறேன்.

சுதா: உன்னைப் போன்ற கட்டழகியைச் சந்திப்பதற்குக்…கடவுள் எனக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தாரே என்பதற்காக….நான் சந்தோஷப்படுகிறேன். உன் அழகு லாவண்யம்…என் இருதயத்தைப் புது வசந்தமாக்கிவிட்டது. ஆஹா! அழகு என்பது….

மங்கை: கண்ணுக்கு வரும் போதை!

சுதா: அது – சந்தோஷத்தையும், சாந்தத்தையும் உண்டாக்குகிறது.

மங்கை: இல்லை இல்லை – அழகு சஞ்சலத்தையும், சாவையுந்தான் சிருஷ்டிக்கிறது.

சுதா: நீ மிகவும் நன்றாகப் பேசத் தெரிந்திருக்கிறாய். அறிவும் அழகும் உள்ள உன்னைப் பார்க்கும் போது…எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது தெரியுமா?

மங்கை: உங்களுக்கு மட்டுமா என்ன! எனக்குங்கூட உங்கள் மீது ஒருவிதமான அன்பு ஏற்படுகிறது.

சுதா: ஆஹா! உன் நெஞ்சம் என் நெஞ்சமாகவே ஆகிவிட்டது. அன்பே…இப்போது, நாம் ஒரே பறவையின் இரண்டு இறக்கைகளாகி விட்டோம் – இனிமேல், நீ அங்கே ஏன் ஒதுங்கி நிற்கிறாய். கண்ணே ! உன் பொன் பர்வதத்தில் புஷ்பிக்கலாம் என்று பூரித்திருக்கிறேன். உன் ஓவிய உதட்டில்…அந்திவானமாகத் தூங்க ஆசைப்படுகிறேன். உன் கண்ணுக்குள்….கருமணியாக வேண்டுமென்று நான் காத்திருக்கிறேன். அலையில் பிறவாத அமுதமே!….என் அருகில் வா.

மங்கை: புனிதமான செங்கோலைத் தாங்க வேண்டிய…புவி ராஜன் தானா நீங்கள்?

சுதா: ஆம் பாராளும் மன்னரையெல்லாம் …என் பாதத்தில் வணங்கச் செய்யும்…இந்நாட்டின் இளவரசன் நான் தான். இனிமேல் நீதான் என் மகுடத்தை அலங்கரிக்க வேண்டிய மஹாராணி! அன்பே! இந்தச் சுடாத இரவில், அன்னத்தின் இறகுகளால் சிருஷ்டிக்கப்பட்ட மஞ்சத்தில் படுத்து, மான் விழியால் கதை பேசி மன்மத நித்திரை செய்வோம் வா!

மங்கை: இளவரசே! நீங்கள், பிரஜைகளின் பிதா அல்லவா. பெண்களை பெற்ற தாயாகவும், சொந்த சகோதரியாகவும் கருதவேண்டிய நீங்களா இப்படி விபரீதமாக நடந்து கொள்வது? வேண்டாம்.

சுதா: வேண்டவே வேண்டாம். உன் தேன் முத்தங்களைத்தவிர எனக்குத் தேவேந்திரப் பட்டம் கிடைப்பதானாலும் வேண்டாம்.

மங்கை: மன்னனே! மனுநீதி தவறாமல் ஆட்சி செய்ய வேண்டிய உங்களுக்கா இந்த மயக்கம்? யுவராஜா! ஸ்பரிசத்தால் யானையும்; ரூபத்தால் விட்டில் பூச்சியும்; வாசனையால் வண்டுகளும் மாண்டு மடிவதைப்போல்…கேவலம் அசங்கியமான காமத்தால் அழிந்துவிடப் பார்க்கிறீர்களே! அரசே! தெய்வ தர்மத்தை மறந்து….இப்படிப்பட்ட சரீர பாபம் செய்வதால் அல்லவா நரகத்துக்கு இன்னும் ஆயுள் நீடிக்கிறது. மேலும்…டாபத்தின் பிரதி நிதியாக விளங்கும் விபசாரத்தில் ஈடுபட்டால் தர்மம்….உங்களைச் சிம்மாசனத்திலிருந்து தள்ளி விடும் அரசே.

சுதா: பரவாயில்லை. இந்த சாம்ராஜ்யம் எனக்குக் கொடுத்திருக்கும் கிரீடத்தையும், வாளையும், உன் புன்சிரிப்புக்காக இப்போதே தூக்கி எறியத்தயாராக இருக்கிறேன்.

மங்கை: வேந்தே.. நான் வெட்கம், ரோஷம், மானம், மட்டுமரியாதை விவஸ்தை இவைகளை இழந்து வாழ விரும்பும் தாசியல்ல! மரணம் வரையிலும் மானத்துடன் இருக்க ஆசைப்படும் மங்கை நான். பாபத்துக்கு பயப்படுபவள். கர்மங்களால் சத்தியம் தவறாமல் – கால வித்தியாசத்தால் இருக்கதிக்குள் ஆளான என்கதை …கண்ணீர் நிறைந்தது.

சுதா: அதை மாற்றி உனக்கு ஆனந்தம் உண்டாக்கத் தானே-இந்த அர்த்த ராத்திரியில் வந்திருக்கிறேன்

மங்கை: யுவராஜா!… சன்மார்க்கத்தை ஸ்தாபிக்க வேண்டிய நீங்கள் தாசி வீட்டுக்கு வந்திருப்பது சரியல்ல. இளவரசே சொல்வதைக் கேளுங்கள். எட்டிப் பழத்தின் வெளிவர்ணத்தைக் கண்டு ஏமாற வேண்டாம். தாசி யார் தெரியுமா? தெரிந்தால் இங்கே வந்திருப்பீரா? தாசி வீதியில் போவோரை வலிய அழைத்து….ஈரமாகப் பேசி ஏமாற்றும் வஞ்சகி. அவள் சரீரம் – பலபேர் மிதிக்கும் படித் துறை. உதடு – தாதவிடாய் தீர்க்கும் தண்ணிர்ப் பந்தல். அவள் வீடு ஒரு சந்தைக்கடை. வேந்தே! சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட சகல நரகங்களும் உற்பத்தியாகும் இடமல்லவா இது. இங்கே நின்றாலே பயம் ஒட்டிக்கொள்ளும். தயவு செய்து போய் விடுங்கள்.

சுதா: போவதா? உன் காவிய உதட்டில் கந்தர்வரசம் பருகாமல் போவதா? நீ இல்லாமல் இனிமேல் என் நீலவிழிக்கு நித்திரைபே வராது கண்ணே! காம போகத்தை அனுபவிக்கக் கடவுள் உண்டாக்கியிருக்கும் இரவு நேரத்தில், உன் ஸ்பரிசத்தால் என்னைப் பரசவமாக்கு ! எங்கே…

[என்று கூறி அவளைத் தழுவுவதற்கு நெருங்கும்போது, அவள் மார்பிலிருந்து பால் சுரந்து அவன்மீது அடிக்கிறது. இதைப் பார்த்து பீதியடைந்து சுதாமன் ஓடுகிறான்.]

காட்சி – 25

இடம்: அரண்மனை

[அரண்மனையில், மங்கையர்க்கரசியின் படத்தைக் கண்டு மந்திரியைப் பார்த்து]

சுதா: இது யாருடைய படம்?

மந்திரி: இவள் தான்…முன்பு இந்நாட்டு இளவரசியாக இருந்த….மங்கையர்க்கரசி. பாபம்! விபசாரியாகி விட்டாள். அதற்காக…மரண தண்டனை விதிக்கப் பட்டு…மாண்டு மண்ணோடு மண்ணாகி விட்டாள்.

சுதா: நிஜமாகவே இறந்துவிட்டாளா?

மந்: ஆம்! நிச்சயமாகவே இறந்துவிட்டாள்.

சுதா: அதுதான் இல்லை. இவள் சாகவில்லை. இவளுக்கிருந்த மரணந்தான் செத்துவிட்டது. இவள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறாள்.

மந்: இருக்காது இளவரசே!

சுதா: அப்படி இவள் உயிருடன் இருந்தால்?

மந்: இவளுக்கும், இவளுக்கு உடந்தையாக இருப்பவாகளுக்கும் தக்க தண்டனை விதித்தே தீர வேண்டும்.

சுதா: இப்போது, இவள் இந்நாட்டில் உள்ளதாகி வஞ்சி வீட்டில் வசித்து வருகிறாள். இவளையும் இவளைச் சேர்ந்தவர்களையும்….உடனே கைது செய்யும்

[என்று கூற அமைச்சன் போகிறான்.]

காட்சி – 26

இடம் : தாசி வீடு

[வஞ்சியும், மாமாவும் கூடத்தில் நிற்கின்றனர். அப்போது மங்கையர்க்கரசி அறையிலிருந்து வெளியே வந்தபடி]

மங்கையர்க்கரசி : அம்மா.

வஞ்சி : அம்மா என்னடி அம்மா. ஆசயா வந்த இளவரசனை அடிச்சி வெரட்டினியடி சண்டாளி. போடி வெளியே.

[என்று மங்கையர்க்கரசியைப் பிடித்துத் தள்ள, அவள் சிந்திய கண்ணீருடன்]

மங்கை: அம்மா. திக்கற்ற என்னை இப்படி திடீரென்று விரட்டுகிறீர்களே. நான் உங்கள் வயிற்றில் பிறக்காவிட்டாலும் ஆறுதல் அளித்துக் காப்பாற்றிய நீங்களும் எனக்கு ஒரு அன்னை அல்லவா? நான் தங்கள் மகள் அல்லவா தாயே…தாயே.!

வஞ்சி: தாயாவது – மகளாவது போடின்னா.

மங்கை: என் பாபத்தின் பொழுது. இன்னுமா அஸ்தமிக்கவில்லை. தேவி ! நான் படும் வேதனையைக் கண்டு இந்நேரம்…பசையற்ற பாராங்கல் கூட பரிதாபப்பட்டிருக்குமே! உன்னையே சதா பூஜிக்கும் என்மீது …உனக்கு இரக்கங்கிடையாதா? ஆற்றில் தத்தளிப்பவனை…அவன் பகைவன்கூட பார்த்துக் கொண்டிருக்க மாட்டானே! தாயே! உப்புக் கரிக்கும் அழுகையும் – உபத்ரவங்களும் அளிப்பது தான், உன் தர்மமா? இல்லை – அலை அலையாய் அடிக்கும் துன்பத்தில்…நான் எப்போதும், அவஸ்தைப் படவேண்டும் என்பதுதான் என் தலை விதியா? ஈஸ்வரி – பாபங்கள் செய்ய பயப்படாத இப்பிரபஞ்சத்தில் – என்னை உயிரோடு வைத்து இன்னும் ஏன் சித்ரவதை செய்கிறாய். ஐயோ! கல்லுங் கர்ஜனையும் நிரம்பிய காட்டில், நான் அன்றைக்கே செத்திருந்தால், என் ரத்தத்தின் ஈரத்தல்…புல்லும் பூண்டுமாவது, செழிபாக வளர்ந்திருக்குமே!

[என்று கதறிக் கொண்டிருக்கும்போது, அரசாங்க சேவகன் வந்து]

சேவகன்: எல்லோரையும் கைது செய்து அழைத்து வரும்படி அரசாங்கத்தின் உத்தரவு.

[என்று கூறி எல்லோரையும் அழைத்துக் கொண்டு போகிறான்.]

காட்சி-27

இடம் : கந்தர்வலோகம்

[காந்தரூபன் கனவில்; மங்கையர்க்கரசி முக்காடிட்டபடி, ஒரு குளக்கரையின் பக்கம் வர, அவளைப் பார்த்து]

காந்தரூபன்: கண்ணே! தெய்வரூபத்தைத் திரையிட்டு மறைப்பானேன்! ஓஹோ! உன் வதனத்தின் விசித்திரங்களை …வானம் திருடிக்கொள்ளுமென்றா? அதிருக்கட்டும் – இப்படி வெகு நேரங்கழித்து வருகிறாயே! என்னை விரகத்தால் வேதனைப்படுத்த வேண்டும் என்பதுதானே உன் விருப்பம்?

மங்கையர்க்கரசி: இல்லை ப்ரபு! உங்களைத் துன்பப்படுத்த, என் இதயம் இடந்தருமா? ஸ்வாமி வானம், இப்போதுதான் என் விழிகளுக்கு , வர்ணம் வைத்தது. பளிங்கு ஓடை, இப்போதுதான் என் பாதச் சிலம்புகளுக்குப் பாடல் கற்றுக் கொடுத்தது. காயாம்பூவிடம் கன்னம் கொஞ்ச நேரம் கதை பேசிக்கொண்டிருந்தது.

காந்த: நட்சத்திரங்கள் உன்னை , நாட்டியமாடச் சொல்லியிருக்கும். சந்தனச் சந்திரன், உன்னைச் சங்கீதம் பாடச் சொல்லியிருக்கும்…ஏன் ! அப்படித் தானே!

மங்கை: போங்கள்! எதற்கெடுத்தாலும் கேலிதான்!

காந்த: அடேயப்பா! வந்துவிட்டதா? மங்கையர்க்கரசி கோபம் கொஞ்ச நேரம் உள்ள பைத்தியம் என்பதை நீ அடிக்கடி மறந்துவிடுகிறாய். இந்தக் கொஞ்சலான வார்த்தைகளுக்கே இவ்வளவு கோபமா?

[என்று அவள் கன்னத்தை தடவ]

மங்கை: ஸ்வாமி! வானம், இந்தத் தடாகத்தில் தன் முகத்தைப் பார்த்துக் கொள்கிறது.

காந்த: நானும், உன் கன்னத்தில் என் முகத்தைப் பார்த்துக் கொள்கிறேன்.

மங்கை: ப்பு, அதோ பாருங்கள். என் புன்சிரிப்பில் ருதுவான அந்த புஷ்பம் ….

காந்த: அழகாக இருப்பதால் வண்டுகளிடம் அகப்பட்டுக்கொண்டு அவஸ்தைப்படுகிறது. அழகான வஸ்துவுக்கு எப்போதுமே ஆபத்துதான். அது அபாயத்திலிருந்து தப்ப முடியாது.

மங்கை : ஏன்? அந்த ரோஜா புஷ்பம் ஆபத்திலிருந்து தன்னை காப்பாற்றிக்சொள்ள அதன் அடியில் முட்களை வைத்திருக்கவில்லையா? கரந்த உண்மைதான்! ஆனால், அந்த முட்களால் தேனைக் குடிக்கவரும் வண்டுகளைத் துரத்த முடிவதில்லை .

மங்கை: ப்ரபு, இப்படி எல்லாம் விசித்திரமாகப் பேச…

காந்து: எனக்குக் காவியங்கள் கற்றுக்கொடுக்கவில்லை. உன் கண்கள் தான்.

[என்று கூற மங்கையர்க்கரசி அவன் மடியில் படுத்தபடி]

மங்கை: ப்ரபு…மன்மதன் நம்மீது…புஷ்பங்களால் போர் செய்யும் இந்த போதையான நேரத்தில் இனிப்பாக இன்னும் ஏதாவது சொல்லுங்களேன்

காந்த: கண்ணே! ஓராயிரம் காதற் கதைகளை அள்ளித்தரும் உன் உதட்டின் ஓவியத்தை … ஜோதி அஸ்த மனம் ஜெபிக்க முடியுமா? உன் சங்கீதப் பேச்சின் இனிமையை – செங்கோட்டி யாழ் தான் சிருஷ்டிக் குமா? உன் கண்களிடம் நான் கற்றுக் கொள்ளும் கலா மந்திரங்களைக் – காதல் கிரந்தங்களில் காண முடியுமா? கண்ணாடி மண்டலம் போன்ற உன் கை நகங்களின் வெளிச்சத்தை வானத்தில் குடியிருக்கும் வெண்ணிலாவில் பார்க்க முடியுமா?

மங்கை: ஸ்வாமி! நினைவுகள் மௌனமடைந்தால் – ஞானியாகலாம். நம் இன்பம் மௌனமடைந்தால் நாமே ஸ்வர்க்கமாகிவிடலாம்!

காந்த: கண்ணே ! உலகத்தில் மிகவும் மயக்கமான வஸ்து – மது என்று எந்த மடையமோ தெரியாமல் எழுதி வைத்து விட்டான. உண்மையாகவே பிரபஞ்சத்தில் மிகவும் போதையான பொருள் பெண்தான்.

மங்கை: ப்ரபு…இந்த மலர்களுக்கு மட்டும் பேசத் தெரிந்திருந்தால் …

காந்த: நம் போக ரகஸ்யங்களைப் பொன்வண்டுகளிடம் வினோதமாக வெளிப்படுத்திவிடும்.

மங்கை: உங்களையும் இந்த இனிமையான ஸ்பரிசத்தையும் தவிர உலகத்தில் நான் வேறு ஒன்றையும் வேண்டேன் ஸ்வாமி.

காந்த: அன்பே! நான் அடுத்த ஜன்மத்தில் – ஒரு புல்லாகப் பிறந்துவிட்டால்…

மங்கை: அதன்மேல் நான் ஒரு பனித்துளியாக இருந்து விடுவேன் ப்ரபு!

காந்த: கண்ணே!

மங்கை: ஸ்வாமி!

காட்சி – 28

இடம் : நீதி மன்றம்

[ஆசனங்களில் மதுராங்கதன், மந்திரிகள், நாசுகேது, புலிகேசி, சுதாமன் முதலான வர்கள் அமர்ந்திருக்கப் பக்கத்தில் மறவன் நிற்கிறான். வஞ்சி, மாமா, கொலைஞர்கள் எல்லோரும் ஒரு புறத்தில் நிற்க, மங்கையர்க்கரசி குற்றவாளிக் கூண்டில் முக்காடிட்டபடி நிற்கிறாள். மன்னன் மங்கையர்க்கரசியைப் பார்த்து]

மதுராங்கதன்: பெண்ணே! நீ யார்? உன் பெயர்?

மங்கையர்க்கரசி: மஹாராஜா…நான் ஒரு அனாதை. என் பெயர் ….அதைச் சொல்லுவதால் ஒருவருக்கும் ஒரு பயனுமில்லை..

சுதாமன்: என்ன கண்ணியமாகக் கதைக்கிறாள். அப்பா! இங்ள் கைதேர்ந்த ஒரு கணிகை மகள். ஒரு வேசி வீட்டில் தான்..இவளை நான் நகர் சோதனை செய்யும் போது சந்தித்தேன். இவளால் நகரத்து வாலிபர்களே நாசமாகிவிடுவார்கள்.

நாசு: ராஜ சபையில் முகத்திரை எதற்கம்மா?

மங்கை: நான் ஒரு பெண். என் முகத்தை என் கணவர் தவிர வேறு யாரும் பார்க்க உரிமை கிடையாது. இந்த உரிமையைக் கூடவா மன்னர் பறிக்க நினைக்கிறார்.

சுதா: கணவன்! நல்ல ஜாலக்காரி இவள். முகங்காட்டி முத்து நகை காட்டி, சித்து விளையாடிச் சீமான் களின் செல்வத்தைச் சூறையாடும் இவள்… மணாளனைத் தவிர மற்றவர்க்கும் முகத்தைக் காட்ட மாட்டாளாம்! மஹாராஜா! இவள், வாலிபத்தில் புஷ்பத்தைப் போலவும், வயோதிகத்தில் பழத்தைப் போலவும் இருக்க இச்சைப்படும் ஒரு வேசி. இந்தப் புனிதவதியின் திருமுகத்தைத் தாங்களே பாருங்கள்.

[என்று கூறித் தன் வாளால் அவள் முகத்திரையை எடுத்து]

சுதா: அப்பா! இவள் தான் இந்த மஹாராஜ்யத்தின் மானத்தைக் கெடுத்த மங்கையர்க்கரசி.

மதுரா: என்ன! மங்கையர்க்கரசியா? அவளாயிருக்க முடியாது. எங்கேயாவது வீழ்ந்த நட்சத்திரம் விண்ணுக்குத் தாவுவதுண்டா? அவளுடைய மக்கிப்போன எலும்புகள் கூட, காலாந்தரத்தில் கல்லாக மாறியிருக்குமே. அச்சண்டாளியாவது இன்னும் சாகாமல் இருப்பதாவது!

நாசு: இளவரசர் பிதற்றுகிறார்.

புலிகேசி: இல்லை. நிழலைக் கண்டுபிடிக்க வெளிச்சத்தை ஏற்றுகிறார்.

மதுரா: சுதாமா…இந்தப் பெண், மங்கையர்க்கரசி தான் என்பதற்கு என்ன ஆதாரம்?

சுதா: இளவரசியின் படத்தைப் போன்றிருக்கும், இவள் உருவமே இதற்கு அத்தாட்சி.

நாசு: உப்பும் கற்பூரமும் உருவத்தில் ஒன்றாகத்தான் இருக்கிறது. அதற்காக, இரண்டும் ஒரே பொருளாகிவிடுமா? மஹாராஜா…. இது ஏதோ இந்திர ஜாலமாக இருக்கிறது. எதற்கும் கொலையாளிகளை விசாரிப்போம்.

மதுரா: கொலைஞர்களே! கொலை செய்யக் கொண்டு போன மங்கையர்க்கரசியை என்ன செய்தீர்கள்?

கொலையாளிகள்: ராணி அம்மாவ வெட்டுனம். வெட்டுப் படல்லே. உட்டுட்டு நாங்க ஓடியாந்துட்டோம் மஹாராஜா.

மதுரா: முழுப் பொய்யர்கள். இதில் ஏதோ சூதிருக்கிறது.

[என்று கூறி மங்கையர்க்கரசியை பார்த்து]

மதுரா: உண்மையாக நீ மங்கையர்க்கரசி தானா?

மங்கை: ஆம்! இந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் தங்கள் மருமகள் மங்கையர்க்கரசி நான்தான்.

மதுரா: ஆ… மங்கையர்க்கரசி….

புலிகேசி: மண்ணில் விழுந்திருக்க வேண்டிய மழைத்துளி.

மங்கை: சிப்பியில் விழுந்து விட்டது. அதனால் என்ன முத்தாகத்தானே பிறக்கும்.

சுதா: அரச ஆக்கினைக்கும், இந்நாட்டின் ஆயுதங்களின் கூர்மைக்கும் இவளுக்கு பயமிருந்தால் இப்படிப் பேசுவாளா மஹாராஜா?

மதுரா: மாயக்காரி. உன்னை இன்னுமா பூமி விழுங்காமல் விட்டு வைத்திருக்கிறது. மாமிச் பலவீனத் தினால் உற்பத்தியாகும் காம இச்சையில் மதி மயங்கி, பதி தர்மத்தையே : பாழ்படுத்திய பாபி . இந்தக் கிரீட வம்சத்தின் கௌரவத்தையே கெடுத் துக் குட்டிச்சுவராக்கி விட்டாயே , கிராதகி! இத்தனை ஆண்டுகளாகியும், அன்று கண்ட மேனி இன்னும் அழியாமல் அப்படியே இருக்கிறதே! நஞ்சு – ஒரே ரூபத்தில் நாசப்படுத்தும். உன் சதிக்கு எத்தனை ரூப ஜாலங்கள். சண்டாளி / உன்னை நானே சித்ரவதை செய்கிறேன்.

[என்று கூறி அவளை வெட்டுவதற்கு வாளை ஓங்க.]

மங்கை: ஆத்திரப்படாதீர்கள் அரசே! இந்த மஹாராஜ்யத்தில், மன்னனுக்கு ஒரு நீதியும், மற்றொருவருக்கு ஒரு நீதியும் இல்லையே?

மதுரா: இல்லை. ஆராய்ச்சி மணியின் நாக்கு அசையாமல் ஆட்சி செய்யும் இந்த மதுராங்கதன் கொற்றத்தில் மாந்தர்க்கெல்லாம் ஒரே நீதிதான்.

மங்கை: அப்படி என்றால் – கள்ளத்தனமாக ஒரு பெண்ணைக் கற்பழிக்க வந்தவன், மன்னன் என்றாலும் குற்றவாளிதானே மகாராஜா?

மதுரா: ஆம்! விஷம்… வேந்தனுக்கு மட்டும் அமுதமாகுமா?

மங்கை : நல்லது அரசே…உங்கள் இளவரசர் இவர் தானே?

மதுரா: ஆம்!

மங்கை: ஓஹோ செங்கோலின் முகம் சாயாமல் ஆள வேண்டிய…சிம்மாசன வேந்தர் இவர்தானா? வீரத்தால் சத்துருக்களை வென்று விவேகத்தால், தர்மத்தை நிலைநாட்ட வேண்டிய, இந்நாட்டின் இளவரசர் இவர்தானா? மன்னுயிரையும் தன்னுயிராகக் காத்து, நீதி தள்ளாடாமல் ஆட்சி செலுத்த வேண்டிய – இளவரசர் இவர் தானா?

புலிகேசி: ஆம்! சத்தியத்துக்குச் சாட்சியாக இருந்து வரும் இந்தச் சர்ப்புத்திரர்தான் இத்தேசத்தின் இளவரசர்.

மங்கை: சர்ப்புத்திரர்….அர்த்த ராத்திரியில் வந்து, களங்கமற்ற ஒரு பெண்ணைக் கைப்பிடித்து இழுக்க வந்தவர் சர்ப்புத்திரர். மானத்தோடு வாழும் ஒருத்தியிடம், தன்பட்டம் பதவிகளைப் பிரஸ்தாபித்து, மையலுக்கு அழைப்பவர் சர்ப்புத்திரர். நகர் சோதனை செய்வதாகச் சொல்லி ஒரு நங்கையின் கற்பைக் கபளீகரம் செய்ய வந்தவர் சர்ப்புத்திரர்.

மதுரா: யார்? சுதாமனா!

மங்கை: ஆம்! இவர் பொன் கொடுத்து, நேற்றிரவு என்னிடம் போகத்துக்காக வந்தது; நீதி கூறியும், நிராகரித்தது; ஒப்புக்கொள்ள மறுத்த என்னை, உபத்ரவப்படுத்த முயன்றது; இதெல்லாம் உண்டா இல்லையா என்று, உங்கள் சர்ப்புத்திரரையே கேளுங்கள்?

சுதா: அப்பா! இது… நிஜம் நெருங்க முடியாத பொய். இவளை நான் கண்டு பிடித்துவிட்டேன் என்பதற்காக, என்மீது கதை ஜோடிக்கிறாள்.

புலிகேசி: அப்படித்தான் இருக்க வேண்டும்.

சுதா: அப்பா! இவள் பேச்சை நம்பவே நம்பாதீர்கள்

மதுரா: அப்போது.. உன் வார்த்தையை மட்டும் நான் நம்ப வேண்டுமா?

சுதா: ஆம்! நான் மன்னன்.

நாசு: அதனால் என்ன…மாமிச ருசியில் தடுமாறி விழக்கூடிய நீங்களும், ஒரு மனிதன் தானே!

சுதா: நான், புனிதமானவன்.

நாசு: இப்படிப் பிரஜைகள் அல்லவா அழைக்க வேண்டும்.

மதுரா: வஞ்சி! இந்தப் பெண் சொல்வதெல்லாம்….

வஞ்சி: வாஸ்தவந்தாங்க.

பஞ்: ஆமாம் மஹாராஜா.

மதுரா: இப்போது என்ன சொல்கிறாய்.

[என்று கேட்கச் சுதாமன் தலைகுனிந்து குற்றவாளிக் கூண்டில் ஏறியபடி]

சுதா: வேலிக்கு இட்டமுள் என் காலுக்கே வந்து விட்டது.

நாசு: புலிகேசி! பரிந்து பேசினிரே இப்போது பர்த்தீரா? கண்ணாடி, இருட்டையும் பிரதிபலித்துக் காட்டு மென்று ஏமாந்து விட்டார் இளவரசர்.

மதுரா: அடே பாவி. இந்த நாட்டின் வருங்கால நீதிமானாக விளங்குவாய் என்றல்லவா நினைத்திருந்தேன். அதை நொடியில் பாழடித்து விட்டாயே கொடிய துரோகி.

சுதா: தந்தையே! நான்…

மதுரா: ச்சி. வாயை மூடு. எட்டிப் பழத்தைத் தேன் குடத்தில் வைத்து… அது இனிப்பைத்தரும் என்று எண்ணி ஏமாந்து விட்டேன். வண்டலைச் சந்தனச் மென்று நம்பி , விவேகமிழந்தேன். கடல் நீரைத் குடி தண்ணீர் என்று நினைத்துக் கருத்திழந்தேன். கள்ளன்; கபடன்; முறை தவறி நடக்கும் மிருகத்திலும் இழிந்தவன்.

சுதா: அப்பா….

மதுரா: அப்பா என்று அழைத்து, இன்னும் எனக்கு ஆத்திரத்தை முட்டாதே. அயோக்யா! அதர்மங்களுக்குத் தலைமை வகிக்கும்…உன் கைக்கு ஒரு செங்கோலா? சத்தியங் கெட்டுப்போன உன்னைத் தாங்க ஒரு சிம்மாசனமா?

சுதா: வேந்தே…களங்கமுள்ள சந்திரனை…

மதுரா: ஆடை அணியத் தெரியாத ஆகாயம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் இந்த நீதி ராஜ்பம், உன் போன்ற நீச்சனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. பிரதானிகளே! ஏற்கெனவே நம்மால் கொடுக்கப் பட்ட மரண தண்டனையிலிருந்து தப்பித்து, மறு படியும் நம்மிடமே அகப்பட்டுக் கொண்ட இந்த நீலிக்கும் ; நீதியை நிலைநிறுத்த வேண்டிய மன்ன னாக இருந்தும், சோரத்தனம் செய்ப இச்சைப்பட்ட இவனுக்கும் என்ன தண்டனை விதிக்கலாம் என்பதை நீங்களே சொல்லுங்கள்.

மறவன்: மஹாராஜா! ஒரு வார்த்தை

மதுரா: என்ன?

மறவன்: நம் இளவரசர் இந்தம்மாவோட பிள்ளை தாங்க.

மதுரா: என்ன!…. இது நிஜந்தானா?

மறவன்: காட்டிலே பிரசவிச்சிக் கஷ்டப்பட்டுகிட்டு இருந்த இவுங்கள நான்தான் காப்பாத்துனேன். காளி பலிக்குக் கொண்டாந்தது இவுங்க கொழந்தயதாங்க.

மதுரா: ஆ! இந்த விலைமகளுக்குப் பிறந்தவனா இவன்! சரிதான்…இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

சுதா: என்ன! தொட்ட புருஷனுக்குத் துரோகம் செய்த நீயா என் தாய்?

மங்கை: நீயா! என் சொந்த மார்பின் திவலையை உண்டு வளர்ந்த செல்வமகன்?

மதுரா: ஆம்! உன் மகன் தான். என் குலப்பெருமையை தாயும் மகனும் சேர்ந்தல்லவோ குலைத்து விட்டீர்கள்.

சுதா: தாயா? நிஜமாகவே நீ என் தாயா? என்ன பாதகம் செய்யத் துணிந்தேன். ஆஹா! அநீதிகூட அங்கீகரிக்க முடியாத அதர்மமல்லவா செய்து விட்டேன். என் போன்ற பாபிக்கு, நரகங்கூட நிற்பதற்கு இடந்தராதே. சண்டாளி!…உன் சிற்றின்ப இச்சையின் சின்னயா நான்? உன் அற்ப ஆசையின் அடையாளமா நான்? உன் காம ஆவேசத்தின் கருவா நான்?….என்ன? நான் ஒரு ஒரு விபசாரியின் மகனா?

மங்கை: மகனே! நான் மாசற்றவள். நெருப்புச் சூரியன்மீது ஆணையிட்டுச் சொல்லுகிறேன். நான் நிரபராதி.

மதுரா: கவியுடன் காம நித்திரை செய்த இந்தக் கள்ளி, ஆணையிட்டு ஆளை வேறு மிரட்டுகிறாள்! விபசாரி.

மங்கை: ஆ ! நானா விபசாரி? புருஷனை இழந்த நேரத்திலிருந்து, பொட்டும் புஷ்பமும் இழந்து, கொட்டும் இந்தக் கண்ணீ ருடன், ஒரு கருகிய மொட்டைப் போல், காலத்தைக் கழித்துவரும் நானா விபசாரி? நீலவிழியில் தோன்றி நித்திரைக்குள்ளேயே செத்துப்போகும் சொர்ப்பனத்தில் கூட சோரம் போகாத நானா விபசாரி? மகனே! இந்தப் பரிசுத்தமான மாங்கல்யத்தைப் பாதுகாப்பவள் விபசாரியா?

மதுரா: பத்தினி தர்மம் பேசுகிறாள், இந்தப் பதிவிரதாசரோன்மணி.

சுதா: பரபுருஷர்களின் ஆலிங்கனத்தால் பாழ்பட்ட நீ, அலங்கார வரர்த்தைகளால், உன் அயோக்கியத் தனத்தை மறைத்துக் கொள்ளப் பார்க்கிறாயா?

மங்கை: மகனே! பரம்பரை பரம்பரையாக, பரிசுத்தங்கெடாமல் வந்துகொண்டிருக்கும் இந்தப் பத்மினி ஜாதி, ரத்தத்தைப் பாழ்படுத்தவில்லை என்பதை நம்பு. பிறைச்சந்திரன் களங்கத்தை ஏற்காது என்பதை நம்பு. மகத நாட்டு மன்னனின் மகள், ஒரு மாசற்ற மாணிக்கம் என்பதை நிச்சயமாக நம்பு.

சுதா: புண்ணியத்தையும் நரகமாக்கும், உன்னை நம்புவதா? விநோத லீலைகள் புரியும் ஒரு வேசி வீட்டில் இருந்து கொண்டு. அதுவும் அவள் ஏவலுக்குக் கட்டுப்பட்டு நடக்கும், நீயா களங்கமற்றவள்?

மங்கை: மகனே! ஒரு வேசி வீட்டில் காலங்கழித்தேன் என்பதற்காக, நான் விபசாரியா? அப்பா…பாம்பின் சட்டையில் உண்டாகும் அழுக்கு, அந்தப் பாம்புக்குச் சம்பந்தம் உண்டா?

சுதா: முள் இல்லாத ரோஜா. மயக்கம் தராத மது. இதை யார் நம்ப முடியும்? பத்தினி என்பதை நிரூபிக்காதவரையில் நீ விபசாரிதான்.

மங்கை: அப்பா! என் நியாயத்தை நிரூபிக்க, எந்த அத்தாட்சியும் இல்லை. என் அழுகைதான் இருக்கிறது.

புலிகேசி: அழுகை….அதுதான், பெண்கள் செய்யும் சுலபமான தொழிலாயிற்றே! இளவரசே!…ஒரு. மஹா யுத்தம் சாதிக்கமுடியாத காரியத்தை …ஒரு. பெண், தன் கண்ணரால் சாதித்துவிடுவாள்…இவள் அழுகைக்காக அனுதாபங்காட்டினால்….

சுதா: அரசாங்கத்தின் வாள், இந்தத் தடவையும் ஏமாந்து விடும். இரண்டாவது மரணத்திலிருந்தும் தப்பித்துவிடுவாள்.

மங்கை: மகனே! நான் மரணத்துக்கு அஞ்சவில்லை…மரணம் …வாழும் நேரத்துக்கு வரும், ஓய்வுதானே மரணம். வானத்துக்கு இருட்டும்; வாளுக்குக் கவசமும்; விதைகளுக்கு பழமும்: ஏன் தெரியுமா?….ஓய்வு, எல்லாவற்றிற்கும் உண்டு என்பதை உணர்த்திக் காட்டத்தான்.

சுதா: ஒரு மஹா ஞானிக்குக்கூட, உன்னைப்போல் தத்துவம் பேசத்தெரியாது.

புலிகேசி: இது தத்துவமல்ல இளவரசே. தப்பித்துக் கொள்வதற்கு உபயோகிக்கும் தந்திரம். இவள் உயிருக்கு இவ்வளவு நேரம் அவகாசம் கொடுத் ததே பெரிய தவறு. இந்த சாகசக்காரியைச் சிக்கிரம் சித்ரவதை செய்யுங்கள். அப்போதுதான் இங்குள்ள எல்லோருக்கும் சந்தோஷம் ஏற்படும்.

சுதா: ஆம்! கிராதகிட மானைப்போல் பார்க்கத் தெரிந்த உனக்கு, அதன் மானத்தைப்போல் வாழத் தெரிந்ததா? சண்டாளி. சதையின் சிற்றின்பத் துக்காக, அன்னிய புருஷனிடம் அனூாக சுகிர்தம் அனுபவித்து, இந்த மஹாராஜ்பத்துக்கே மாறாத அவமானத்தைத் தேடித்தந்த நீயும் . உலகம் முடியுமட்டும், தாபைப் பெண்டாளவந்த சண் டாளன் என்ற அபகீர்த்தியைத் தேடிக் கொண்ட நானும் இந்தக் கணம் அழிந்துவிடுவதே மேல். சாஸ்திரங்களுக்கு எதிரிகளாகிவிட்ட நாம், இன்னும் சாகாமல் இருப்பதைக் கேள்விப்பட்டால், இந்த சாம்ராஜ்யத்தில் உள்ள குன்றுகள்கூட வெட்கத்தால் குனிந்து கொள்ளும் ! முதலில் உன்னைக்கொன்று, பிறகு இதே வாளை, என் சாவுக்காகவும் எடுத்துக்கொள்ளுகிறேன்.

[என்று கூறி மங்கையர்க்கரசியை வெட்டுவதற்குத் தன் வாளை ஓங்க, அப்போது ஒரு வெளிச்சம் திடீரென்று தோன்றி அந்த வாளை முறித்துவிடுகிறது. இதைக்கண்டு சபை பிரமிக்கிறது சுதாமன் மலைக்கிறான். அப்போது மகனைப் பார்த்து]

மங்கை: மகனே! எந்த மனித சக்தியாலும், என்னை மரணமாக்க முடியாது. அப்பா! அன்றைக்கே இந்தக் கொலைகாரனின் வாள் என் ஆவியைப் பிரித்துவிடும் என்று எண்ணி ஆனந்தப்பட்டேன். ஆனால், அந்த வாளால் என்னைத் துண்டிக்க முடிய வில்லை. பிறகு, பெற்றெடுத்துப் பிர்யமாக வளர்த்த உன்னைப் பறிகொடுத்த போதும் என் உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என்று, மலையின் உச்சியிலிருந்து குதித்தேன். அப்போதும் எனக்கு மரணம் ஏற்படவில்லை. நான் எதிலும் அபாக்ய சாலிதான். துன்பங்களுக்கு விடுதலை தரும் சாவு கூட எனக்குக் கிடைக்கவில்லை. வானத்தின் கீழ், செத்த மாமிசத்துக்குச் சமமாக இருக்கும் நான், இந்த வார்த்தை வேதனைகளை எல்லாம் அனுப் வித்துக்கொண்டு இன்னும் சாகாமலிருக்கப் பூ வத்தில் யாருக்கு என்ன கொடுமை செய்தேனோ. தெரியவில்லை!

(என்று கூறி, நீதிமன்றத்தில் உள்ளவர்களைப் பார்த்து)

உங்களுக்கு, என் நடத்தையில் நம்பிக்கை இல்லையா? முட்களைப் போலத் தலை நீட்டிக்கொண்டிருக்கும் மலையைத் தன் தோகைகளால் போர்த்தும், மபில்கள் உலவும் மகத தேசத்து மன்னன் மகள், புனிதமானவள் என்ற நம்பிக்கை, உங்களில் ஒருவருக்குக்கூட கிடையாதா? என் வார்த்தைகளை நம்பா விட்டாலும், என் வாழ்க்கையின் வேதனையை நம்புங்கள். இரண்டையும் ஏற்க மறுத்தாலும், அஸ்திவாரத் துன்பத்தோடு புறப்பட்டு வரும் என் அழுகையைக் கூடவா நம்ப மறுக்கிறீர்கள்? சொல்லுங்கள்.

[என்று கூற, சபையோர் மௌனமாக இருப் பதைப் பார்த்து]

ஏன், மலையும் சிலையும் போல் மௌனமாகிவிட்டீர்கள். பதில் சொல்லுங்கள்.

[என்று கேட்க, மீண்டும் மௌனமாக இருப் பதைக்கண்டு ஆத்திரத்தோடு]

ஆள் வழக்கற்ற அரசாங்கமா இது? நல்ல கொற்றம்! நல்ல நீதி! நல்ல நியாயம் ! நல்ல தீர்ப்பு! சுமந்த தலையும் சும்மாடு மாற்றும் இந்த துரைத்தனத் தில், என் மன உணர்ச்சிகளை நன்றாகப் புரிந்தும், சந்தேகப்படும் மன்னர் எனக்கு – மாமனார்; என்னுடைய புனிதமான சத்திய வாசகத்தை நம்ப மறுப்பவன் – எனக்குப் புத்திரன்; அதர்மங்களுக்குத் தூபம் போடும் புலிகேசி போன்ற அயோக்யன், இந்நாட்டு அமைச்சன்; பட்ட துன்பங்களை எடுத்துக்கூறியும், பரிதாபப் படாதவர் இத்தேசத்துப் பிரஜைகள்; இப்படிப்பட்ட மனோபாபம் உள்ள நீங்கள், என்னை எப்படி நம்பப் போகிறீர்கள்? எங்கே எனக்கு நீதி கிடைக்கப்போகிறது? என் நியாயம் ; நிருபணமாகப் போகிறது? ஏ பாபத்தின் பரிவாரங்களே! பேதைப் பருவத்தில், பெற்றோருக்கும்; வாலிபத்தில் புருஷனுக்கும், வயோதிகத்தில் பிள்ளை களுக்கும்; அடிமையாகிவரும் பெண்களுக்கு, நீங்கள் விடுதலை கொடுக்காவிட்டாலும், வேதனையையாவது கொடுக்காமலிருக்கக்கூடாதா? ஏ அக்ரமக்காரர்களே ! நீங்கள் , நைந்திருக்கும் நாணலை ஒடிக்காமலும்; மங்கி எரியும் தீபத்தை அணைக்காமலும் இருந்துவிடுங்கள். அது போதும் ! அதுவே, நீங்கள் பெண் இனத்திற்குச் செய்யும் பேருபகாரமாகும். ஐயோ, பிறந்த நேரத்தி லிருந்து, பிரேதமாகும் வரையிலும், துயரங்களையே அனுபவிக்க வேண்டும் என்பதுதான் என் தலைவிதியா? காலையில் அரும்பி, மாலையில் மலர்ந்து, மறு உதயத் துக்குள் மரணக் கதை பேசும், ஒரு மலரின் அற்ப நேர வாழ்வுக்கு இருக்கும் ஆனந்தங்கூட, நான் வாழ்ந்த நேரத்துக்கு இல்லையே! என் துக்கத்துக்கு ஓய்வே கிடையாதா? பறவைகளுக்குக் கூடும்; பாம்புக்குப் புற்றும்; தண்ணீருக்குப் பள்ளமும், ஓய்வுக்காகப் படைத்த தெய்வம், என் ஓய்வுக்கு ஏன் ஒன்றும் படைக்கவில்லை? அட தெய்வமே! சுக துக்கங்கள் சுற்றிக் பொண்டிருக்கும், இந்தப் பாழும் பூமியில், நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன். நான் ஒரு பாம்பாக இருந் தாலும், இந்த உலகம் எனக்குப் பால் கொடுத்து வளர்க்கும். ஒரு வேம்பாக இருந்தாலும், நான் வெட்டுப் படாமல் வளருவேன். ஐயோ! இந்தப் பெண் ஜென்மமே மஹா புண்ஜென்மந்தான். என்ன உலகம் இது? எங்கு பார்த்தாலும் அதர்மந்தானா? உலகத்தில் உண்மைக்கே இடமில்லையா? வேதம், சாஸ்திரம், இவைகளின் வார்த்தைகள் எல்லாம், வெறும் சப்தம் தானா? தேவி! சுக்ரவார விரதம் அனுஷ்ம் அனுஷ்டித்து வந்ததற்கு எனக்குக் கிடைக்கும் சுகம் இதுதானா? அநீதிக்கும் அக்ரமங்களுக்கும் ஆதரவு காட்டுவது தான் உன் கருணையா? துயரங்களுக்குப் பரிகாரம் தேடித்தராத நீயும் ஒரு தெய்வந்தானா? தெய்வம்…. அநாதி காலந்தொட்டு மனிதன் மீது கட்டாயப்படுத்தப் பட்டு வரும் அவசியமில்லாத உளுத்துப்போன ஒரு மூடநம்பிக்கைதான் தெய்வம் ! கடவுளாம் ! தெய்வமாம்! எல்லாம் கட்டுக் கதை! வயிறு வளர்ப்பதற்குச் சூழ்ச்சிக் காரர்கள் உற்பத்தி செய்து வைத்திருக்கும் சொல் வியாபாரம்! கடவுள் எங்குமே கிடையாது.

[என்று கூறிக் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்து]

மங்கை: ஆ! என்ன!…நான் தானா இப்படிப் பேசுகிறேன். அண்ட சராசரங்களையும் காத்து ரட்சிக்கும்…ஆண்டவன் இல்லை என்று யார் சொன்னது! தெய்வம் இருக்கிறது. தெய்வம் இருக்கிறது. தெய்வம் இருக்கும் போது சத்தியம் ஜீவிக்குமே! பகவானும், சத்தியமும் இருக்கும் போது, பஞ்ச சக்திகளிலும் தலைசிறந்த பதிவிரதா சக்தி மட்டும் இல்லாமலா போய் விடும். ஏழு நாள் பரியந்தம் ……. சூரியனை உதிக்காதபடி செய்து காட்டியது….களாயினியின் பதிவிரதா சக்தி மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக மாற்றியது அனுசூயாவின், பதிவிரதா சகதி. இறந்த புருஷனை எமனிடமிருந்து மீட்டுத் தந்தது … சாவித்திரியின் பதிவிரதா சக்தி. பதிவிரதா சக்தி ! பதிவிரதா சக்தி பதிவிரதா சக்தி!

[என்று சொல்ல, அப்போது மங்கையர்க் கரசியின் பதிவிரதாசக்தி கந்தர்வ லோகத்தை எரிக்க, உடனே சசிகலா காந்தரூபனை ஒரு மாலையாக மாற்றி எடுத்துக் கொண்டு மதுராங்கதன் நீதி மன்றத்தில் தோன்றி]

சசிகலா: என்னைக் காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்.

[என்று கூறிக் கொண்டே ஓடிவந்து மங்கையர்கரசியின் காலடியில் வணங்கி]

சசி: அம்மா என்னை மன்னித்து விடுங்கள். இத்தனை விபரீதங்களுக்கும் நான்தான் காரணம்.

[என்று கூறி மதுராங்கதனைப் பார்த்து]

சசி: அரசே! சுதாமன் காந்தரூபனுக்கு பிறந்தவன் தான். மங்கையர்க்கரசி..மாசற்ற மகா உத்தமி. இதோ உங்கள் காந்தரூபன்.

[என்று கூறி மாலையை வீசி எறிய, மாலை காந்தரூபனாக மாறுகிறது. உடனே சசிகலா மறைந்து விடுகிறாள். மதுராங்கதன் தன் மகனைக் கண்டு]

மதுரா: காந்தரூபா!

காந்த: தந்தையே!

[என்று கூறி இருவரும் தழுவிக்கொள்ள, அப் போது கூண்டிலிருந்த மங்கையர்க்கரசி தன் மணாளனைப் பார்த்தவுடன், சந்தோஷப்பட்டுக் கூண்டைவிட்டு இறங்கித் தன் புருஷனிடம் வரும்போது]

சுதா: தாயே! என்னை மன்னித்து விடுங்கள்.

மங்கை: வருத்தப்படாதே அப்பா. எழுந்திரு சுதாமா. உன்னால் தான் மீண்டும் என்பதியை அடையும் பாக்கியத்தைப் பெற்றேன். நமக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது ப்ரபு! இதோ உங்கள் புத்ரன். சுதாமன் எவ்வளவு பெரியவனாகிவிட்டான் பார்த்தீர்களா?

காந்த: சுதாமா!

[என்று கூறித் தழுவிக்கொள்ள, அப்போது மதுராங்கதன் மகன் காந்தரூபனைப் பார்த்து]

மதுரா: காந்தரூபா…இப்போதுதான் என் மனம் குளிர்ந்தது. உன்னைப் பிரிந்ததிலிருந்து…மேகத் தைக் காணாத மயிலைப்போல் மனம் ஒடிந்திருந்தேன். வானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரையிலும் தேடிப் பார்த்தும் கிடைக்காத உன்னை அம்பிகையின் அருளால் அடையப் பெற்றேன்.

காந்த: அப்பா! பிரிந்துபோன நாம் மீண்டும் சேர்வதற்கு அம்பிகையின் அருள் காரணமல்ல, பூலோகத்தின் பத்தினி தெய்வமாகவும் பெண்களின் திலகமாகவும் விளங்கும்…மங்கையர்க்கரசியின் கற்பின் சக்திதான் நம்மை ஒன்று சேர்த்து வைத்தது.

[என்று கூற, அப்போது மாமன் மதுராங்கத்னின் சந்தேகம் செத்துவிடுகிறது. கணவன் காந்தருபன் களிப்படைகிறான். மகன் சுதாமன் அப்பனைப் பார்த்து ஆனந்தப்படுகிறான். மங்கையர்க்கரசி..மனித உலகத்தின் பத்தினி தெய்வமாகிறாள். குழப்பத்திலிருந்து சபை குதூகலமடைகிறது. அவள் கற்பு சாகாத சரித்திரமாகிறது. நீதி வென்று விடுகிறது.]

-முற்றும்-

– மங்கையர்க்கரசி, முதற் பதிப்பு: பிப்ரவரி 1950, சுரதா பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *