புலவர் வேந்தர்கோனின் வரலாறிலிருந்து பிரிக்க இயலாத இன்னும் சில பக்கங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 21,733 
 
 

கூலிம் பட்டணத்திலிருந்து புலவர் வேந்தர்கோன் ஜொகூர் பாசிர் கூடாங் ஊருக்குக் குடிபெயர்ந்போது அவர் சுப்பிரமணியத்திற்குத் தர வேண்டிய கடன் தொகை மலேசிய ரிங்கிட் 1240. மலிகைக்கடைக்கு 230. வாடகை வீட்டுக்கு மூன்று மாத பாக்கி. ஒரு மாதத்துக்கு முன்னூறென்றால் மூன்று மாதத்துக்கும் சேர்த்து 900 ஆயிற்று. அவரின் ஆதர்ஸ வாசகர் ஒருவருக்கு 80 வெள்ளி. அவர் வீட்டைக்காலி செய்து ஒரு வாரம் கழித்தே சுப்பிரமணியத்துக்கும் மற்றெல்லா கடன்காரனுக்கும் வெளிச்சமானது. அவர் குடி பெயர்ந்தது தெரிய வந்து அதிர்ச்சியடைந்துபோனார்களே ஒழிய எங்கே போனார் என்று தெரியாமல் போனது வேதனையளித்தது. அவ்வப்போது அவரைப்பற்றி வரும் பத்திரிகை செய்திகளைப் பார்த்தால்தான் ஆயிற்று. மற்றவர்களுக்கு இன்னும் தெரியாது. கடன்காரர்கள் எல்லாருமே இளிச்சவாயன்கள் அல்ல. கடன் கட்டிமுடிக்கும் வரை விட்டேனா பார் என்று விரட்டிப்பிடித்தவனும் உண்டு.

ஒரு முறை குடியிருந்த ஊரைக் காலி செய்துவிட்டு வேற்றூருக்கு போனபோது, விபரமான கடன்காரன் ஒருவன் ஒரு செய்தியைப் பத்திரிகையில் பார்க்கிறான். பத்திரிகை செய்தி பின் வருமாறு:

‘கடந்த ஆண்டு மறைந்த பெரும்புலவர் தேசமுத்து நினைவாக நடத்தப்பட்ட மரபுக்கவிதைப்போட்டியில் புலவர் வேந்தர்கோனுக்கு இரண்டாவது பரிசாக மலேசிய ரிங்கிட் 200 கிடைத்திருக்கிறது. அவர் முகவரிக்கு தகவல் அனுப்பியும் பரிசளிப்பு நிகழ்வுக்கு வரவில்லை. எனவே கீழ்க்காணும் முகவரியோடு தொடர்புகொண்டால் அவருக்கான பரிசு அனுப்பிவைக்கப்படும்’ என்ற செய்திதான் அது. ஆனால் பத்திரிகை முகவரியைப் பிரசுரிக்கவில்லை. நம் பத்திரிக்கை படைப்பாளனுக்கு ஒதுக்கிய நான்கு வரிகளே அதிகம் என்று எண்ணியதாலோ என்னவோ மேலும் இரண்டு வரிகளுக்கு இடம் தரவில்லை. நிர்வாக ஆசிரியர் பிழையைப்பார்த்து செய்திப்பிரிவு ஆசிரியரைக்கேட்டபோதுதான் விபரம் தெரிந்தது. நடிகையின் டு பீஸ் படத்தை முழுசாகப்போடுவதற்கு முகவரியைக் கபளீகரம் செய்ய வேண்டியதாயிற்று என்ற பதிலில் திருப்தியடைந்து போனார் நிர்வாக ஆசிரியர்.

மறு வாரம் புலவர் பெருமான் தான் பரிசுபெற்ற விபரம் பத்திரிகையில் வந்த புல்லரிப்பில் அதே பத்திரிகைக்குக் கடிதம் எழுதி தன் முகவரியைக் கொடுத்திருந்தார்.

அதற்குக்கீழே இன்னொரு செய்தியும் வந்திருந்தது.

“தனக்குப்புலவர் தரவேண்டிய கடன் 400 ரிங்கிட். எனவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புலவர்க்குத்தரவேண்டிய 200 வெள்ளியை எனக்கு அனுப்பிவைத்தால் மகிழ்ச்சியைவேன். புலவர் என்னிடம் வாங்கிய கடனுக்காக‌ அவரே கையொப்பமிட்ட தாஸ்தாவேஜை அனுப்பியுள்ளேன். இதனைப்பிரசுரம் செய்வதில் அடியேனுக்கு ஆட்சேபனையில்லை,” என்ற செய்திதான் அது.

பத்திரிகைகளுக்கு கிளுகிளுப்பான செய்தி கிடைத்துவிட்டபடியால் பிரசுரித்துவிட்டனர். அதற்குப்பிறகு பத்திரிகையில் அது தொடர்பான செய்திகள் வரவில்லையென்பதால் நம் யூகத்துக்கே தீனியாகிப்போயிற்று. இந்தியர் சார்ந்த எட்டு அரசியல் கட்சிகளில் எத்தனை உட்பிரிவுகள் உள்ளன. அவர்களுக்கு நடக்கும் நாற்காலி குடுமிப்பிடி சண்டைகளின் செய்திக்குச் சூடான தலைப்புகள். பட்டம் கிடைத்தவருக்கு ஒரு பக்க முழுச்செய்தி விளம்பரம். அரசியல் தலைவர்கள், அமைச்சர்களுக்கு முழு பக்க பிறந்த நாள் வாழ்த்து விளம்பரம், கொலைக்களமாகிப்போன இந்திய இளைஞர் செய்திகள், சினிமா நடிக நடிகைகள் உதிர்த்த பொன்மொழிகள், அவர்களின் நான்காவது கணவன் விவாகரத்து, அவர்கள் நாய்க்குட்டிக்கு தரும் உணவு என பொதுமக்களுக்குப்பயன் தரும் செய்திகளை விலாவாரியாக போடுவதற்கே இடமில்லாத போது துக்கடா செய்திகளை எப்படிப்போடுவார்கள்?

சரி புலவரின் சரிதைக்கு வருவோம்.

புலவர் பெருமானின் பெருமைகளைச் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. அதில் இன்னும் சிலவற்றை கீழே தருகிறேன்.

பல்வேறு ஊர்களில் அவர் குடியிருந்தபோது அவர் வாங்கிய கடன் பட்டியல் வருமாறு:

1. கோலாலம்பூர் தம்பி பிள்ளை தெருவில் மலிகைக்கடைகாரர் ரி.ம 248.45 காசு
2. அலோர்ஸ்டாரில் பழைய இரும்புக் கடை வியாபாரி ரெங்கசாமியிடம் ரி.ம 2040.00
3. ஈப்போவில் முடிதிருத்தம் நிலையம் வைத்திருக்கும் கவிஞர் பால கணேசனிடம் ரி.ம 550.00
4. சுங்கைப்பட்டாணி வாசகர் வட்டத்தலைவி மலர்விழியிடம் ரி.ம 320.00
5. தைப்பிங் முடித்திருத்தும் நிலையம் வைத்திருந்த புலவர் ஈரநிலாவிடம் ரி.ம 120.00
6. தெலொக் இந்தான் காசியப்பனிடம் ரி.ம 3450.00
7. சிரம்பான் டத்தோ சிவசாமியிடம் ரி.ம 1050.00
8. பழைய அச்சு மிசின் வைத்திருந்த தமிழ் ஒலி பிரிண்டிங் பிரஸ் தமிழமுதனிடம் ரி.ம 1820.00
9. சித்தியவான் தமிழ்த்தொண்டர் ராமையா பிள்ளையிடம் ரி.ம 2080.00
10. குவந்தான் முனீஸ்வரர் கோயில் தர்மகர்த்தாவிடம் ரி.ம 3050.00
11……….
12………
13…………

(கிடைத்த விபரங்களின் பட்டியல் மட்டுமே இது)

இவர்களெல்லாம் ஒரு வகையில் தமிழ் படைப்புலகுக்கு ஈர்க்கப்பட்டவர்கள். புலவரின் காத்திரமான கவிதைகளைப்படித்துவிட்டு அவரை நேரில் பார்க்கவேண்டுமென்று ஆசைப்பட்டவர்கள். பத்திரிகைகளில் அவரின் கவிதைகள் பிரசுரமானபோது அதனைப்படித்துவிட்டு தங்களில் கருத்துகளை எழுதியவர்கள். அல்லது புலவரின் கவிதைத்தொகுப்பு பெறப்பட்டு அவரின் கவிதையில் காணப்பட்ட சமூகச் சீர்திருத்தக்கருத்துகளால், சொல்லாடல்களிலும், கவித்துவத்தாலும் மனம் பறிகொடுத்து நேரடியாக அவருக்குக் கடிதம் எழுதி தங்களில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டவர்கள். அல்லது எழுத்துறையில் ஈடுபட்டு பத்திரிகைகளில் கதை கவிதை எழுதி மேலும் வளரத்துடித்துக்கொண்டிருந்தபோது ஏதோ ஒரு நிகழ்வில் புலவரைச் சந்தித்து அவரோடு அறிமுகமாகி தங்களின் உறவை வளர்த்துக்கொண்டவர்கள் அல்லது புலவரிடம் யாப்பிலக்கணம் கற்றுக்கொண்டு கவிதை எழுதிப்பழகியவர்கள். இப்படித்தான் நாடு தழுவிய அளவில் நண்பர்கள் வட்டம் மற்றும் வாசகர் வட்டங்கள் மாவட்டங்களாயின.

அவர்கள் நேரடியாகத் தனக்கு எழுதிய கடிதங்களிலிருந்தும், பத்திரிகைகளில் தன் கவிதையைப்பற்றி சிலாகித்து எழுதிய தன் அபிமான வாசகர் கடித்தத்தை வெட்டிச் சேகரித்து வைத்து அவர்கள் முகவரி தேடி நேரடியாகச்சந்தித்து நட்பை வளர்த்துகொண்டார். தான் புத்தகம் போடப்போகிறேன் உங்களுடைய ஆசியுரை என் நூலில் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அவர்களை மெய்சிலிர்க்க தன்னுடைய அபிமானிகளாக மாற்றிக்கொண்ட பின்னர்தான் புது ஊரில் தம் பணத்தேவை அதிகரித்துவிட்டதென புலம்பி தன தேவைகளை தன் அபிமானிகளிடமே தீர்த்துக்கொண்டார்.

அவரின் வாழ்வாதாரமாக தன் புலமையையே நம்பினார் என்பது அவரைப்பற்றிய மிகச்சுவாரஸ்யமான தகவல்.

தான் பெரும்புலவன் என்றும் தனக்கான தேவையை தன்னை தடுத்தாட்கொண்ட தமிழே செய்துவிடுமென்றும் தன் எழுத்து நண்பர்களிடம் சொல்லிப்பெருமை கொள்பவர். தமிழ் சரிவர சோறுபோடாத பூமியில் கவிதை புனைதல் என்ற சொற்பத் திறனை வைத்துக்கொண்டு இந்த ஐம்பது வயது வரை நகத்தில் அழுக்குப்படாமல் வாழ்ந்துவிட்டாரே என்பதே அதற்கான சாட்சி. இவரின் சாகசங்களை வைத்துப்பார்த்தால் இப்படி வாழ்தல் சாத்தியமாகும் என புலவர் பெருமக்கள் நம்பக்கூடும். சில புலவர்கள் அவரின் அடிச்சுவற்றைப் பின்பற்றவும் கூடும். அது அவர்களின் தலையெழுத்து.

சித்தியவானுக்கு அவர் இடம் மாறிச்சென்றதே தன் புலமை மீது நம்பிக்கை கொண்டதால்தான் என அவரின் சரித்திரத்தைத் திருப்பிப்பார்ப்பவர் அறிவர்.

அங்கே திடீரென ஒரு பணக்காரன் தோன்றியிருந்தார். சாதாரண தோட்ட வேலையைத் தன் வயிற்றுப்பிழைப்புக்காக் நம்பி வந்த நாகராஜன் உபரி நேரத்தில் சாமியும் (டத்தோ கிராமாட்) ஆடி வந்தார். சாமி ஆடலில் அவர் வீட்டுக்குத்தேவையான சேவல், ஆடு, கருவாடு, பீர், சாராய வகையறாக்கள் சேர்ந்துவிடும். சில சமயங்களில் தன் பக்திமான்கள் பணமாகவும் தட்சணை வைத்துவிட்டுப்போவார்கள். இவரைச் சாமிபார்க்க வருபவர்களில் பலர் மெக்னம், டோட்டொ நாலு நம்பருக்கு வருபவர் கூட்டம்தான் பெரிது. இதில்தான் தான் மிகப்பெரிய பணக்காரனாக பரிணாமம் பெறக்கூடும் என் அவரே நம்பியிருக்கமாட்டார். அவரிடம் நம்பர் கேட்டவர் பலருக்கு ஒரிரு எண்கள் வித்தியாசத்தில் அதிர்ஷ்டம் உரசிக்கொண்டு போக சிலருக்கு யோகம் அடித்தும் இருக்கிறது,. அப்போதெல்லாம் அவர் வீட்டில் சமையல் வாசம் தூக்கலாக இருக்கும். அவர் சாமி ஆடிப் பெரும்பிழைப்பு பிழைப்பதற்கு நம்பர் தெய்வத்தின் அருட்கருணையாக்கும்.

அப்படித்தான் ஒரு சீனரும் இவரின் சக்தியைக்கேள்விப்பட்டு சாமி பார்க்க வந்திருக்கிறான். மெக்னம் நாலு நம்பர் கேட்டு அந்த நம்பரில் தனக்கு 100 ரிங்கிட்டுக்கு எடுத்துகொண்டு சாமிக்கும் 50 ரிங்கிட்டு எடுத்துக்கொடுத்துவிட்டு போய்விட்டான். அது ஒரு ஸ்பெசல் டிரா (சிறப்புக்குலுக்கு – ஜேக்போட்). ஒரு மில்லியனுக்கு மேலாக எகிரி நின்றது கூட்டுத் தொகை.

அந்த அதிர்ஷ்டம் அந்தச்சீனருக்குத்தான் எழுதி வைத்துவிட்டது போல அடிக்க, சாமியின் வாழ்க்கையையும் தலை கீழாகப் புரட்டிப்போட்டிருந்தது.

மறு நாள் காலையில் எழுந்தபோது கந்தல் ஏழையாக இருந்தவர் கடும் பணக்காரனாக மாறி இருந்தார் நாகராஜன். வாழ்க்கையையே நாலு நம்பரிடம் ஒப்படைத்திருந்த சீனன் “சாமி” “சாமி” என்று காலில் விழுந்து தனக்குக்கிடைத்ததில் நன்றிக்கடனாக ஒரு பங்கை அவர் வங்கியில் சேர்த்துவிட்டிருந்தான். சாமிக்கு யோகம் காலடி வரை உருண்டு “என்னை அள்ளிக்கோ” என்று திரண்டிருக்கிறது. சாமியால் நம்பவே முடியவில்லை.

சாமியினால் வந்த பணம் சாமி காரியங்களுக்கே சேர வேண்டுமென்று அறிவுரை வழங்க நாகராஜன் உடனடி வள்ளலாக மாறியிருந்தார். பத்திரிகைகளில் அவர் பெயர் அடிக்கடி தலைகாட்டி, யாரிந்த வள்ளல் என வினவ வைத்துக்கொண்டிருந்தது.

இப்படித்தான் நாகராஜன், சாமியாகி, வள்ளலாகி சமூகம் கொண்டாடும் ஒரு பிரமுகராகியிருந்தார்.

இதையெல்லாம் பத்திரிகையில் பார்த்து வந்த இன்னொரு நூலுக்கான ஆள் கிடைத்துவிட்ட பூரிப்பால் புதிய இடத்துக்கு மாற முடிவெடுத்தார். இவரிடம் அடைக்கலமாவதால் தன் வாழ்நாள் விமோசனமடையக்கூடும் என் நம்பியே சித்தியவானுக்கு மாற்றங்கண்டு குடியேறியிருந்தார் புலவர் புயல்.

தான் ஒரு தன்னிகரற்ற தமிழ்ப்புலவர் என்று தன்னை அறிமுகப்படுத்திகொண்டார். வேட்டியும் முறுக்கு மீசையும், மிடுக்கான மொழியும் கழுத்தில் கையில் ஜொலிக்கும் தங்கமும் அவரின் ஆளுமையை முன்னிறுத்தியது. சுய பந்தாவுக்காக இந்த வகையறாக்களை எப்போதும் துறந்தது கிடையாது.

புலவர் என்ற சொல் வள்ளலுக்கு அமானுட பிம்பத்தை தோற்றுவித்திருந்தது. அச்சொல்லை சில சினிமா கேள்விப்பட்டிருந்தாலும் அப்பேற்பட்ட ஆளுமை தன் கண் முன்னால் பிரசன்னமாகியிருந்ததை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

தன் பையிலிருந்து தான் எழுதிய கவிதை நூல்கள் மேசை மீது அடுக்கியபோது அவர் மேலும் வியப்படைந்தவரானார். நூல்களைப்பார்த்திருக்கிறார். ஆனால் நூல்கள் யாத்தவரை பார்ப்பது இதுதான் முதல் முறையென்பதால் நூல்கள் மேல் அவருக்கிருந்த மதிப்பைவிட நூலாசிரியர்மேல் மீதான் மரியாதை மேலும் அதிகரித்தவண்ணமிருந்தது.

வள்ளலின் தொண்டைப்பற்றி கேள்விப்பட்டே மெய்சிர்த்துப்போய், பார்க்க வந்ததாகக் குறிப்பிட்டவர். அன்னார் மேல் பிள்ளைத்தமிழ் பாட உத்தேசித்துள்ளதாகக் கூறினார் வேந்தர்கோன்..

வள்ளல் பேந்தப்பேந்த விழிக்க ஆரம்பித்தார். பிள்ளைத்தமிழ் என்பதன் பொருளை அவர் குழந்தைத் தமிழ் என்றும், பிள்ளை ஜாதிமார் தமிழ் என்றும் மனதுக்குள் குழம்ப ஆரம்பித்திருந்தார்.

தான் தானைத்தலைவரைப்பற்றி பிள்ளைத்தமிழ் பாடிய நூலைக்காட்டி, இதுபோன்ற நூல் ஒன்றை அவர்மேல் பாடப்போவதாகக்குறிப்பிட்டார்.

அந்த காலத்தில் கடவுள் மேல்தான் இவ்வாறான இலக்கியம் இயற்றப்பட்டதாகவும் இப்போது கடவுள்போல பெருவாழ்வு வாழும் மனிதர் மீதும் பாடலாம் என்ற இலக்கணத்தைத் தானே அமைத்ததாகவும் கூறினார் புலவர் வேந்தர்கோன்..

வள்ளல் பெருமான் கூனிக்குறுக ஆரம்பித்தார். புலவர், நூல், பிள்ளைத்தமிழ், கடவுள் போன்ற பிருமாண்டங்களை அவர் நேருக்கு நேர் எதிர் நோக்குவது இதுதான் முதல் முறையென்பதால் அந்த விஸ்வ ரூப தரிசனத்திலிருந்து மீள்வதற்கு சில நொடிகளாயிற்று.

“என்னங்க புலவரே நான் சாதாரண மனுஷன் என்னப்போய்……”

“அப்படிச்சொல்லாதிங்க….. இந்த மாதிரி சமூக மரியாதையோடு வாழ்ந்த மனிதர் ஒருவர் இருந்தார்னு வருங்காலத்துல தெரியாமப்போயிடும். உங்கள் அடியொற்றி மத்தவங்களும் இதுபோல செய்யணுமில்ல? சமூகத்தொண்டு செய்ரவங்கள பாராட்டறது புலவர் கடமை. இது சங்க காலத்திலிருந்து வர ஒன்னு. நீங்க இதுக்கு சம்மதிக்கணும். வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்னு வள்ளுவனே சொல்லியிருக்கான்”

முதன் முறையாக கவிதை மொழியைக்கேட்டு பொருள் புரியாமல் திணறிக்கொண்டிருந்தார் வள்ளல்.

“வேற ஏதாவது ஒதவி வேணுமுனா கேளுங்க…. நான் கொடுத்துதவுறேன்….. எம்மேல புக்கெல்லாம் வேணாம்”

“நீங்க வேணாம்னு சொல்லக்கூடாது…… நான் பாடுறதா முடிவெடுத்துட்டேன்… இந்த முடிவுகூட நானே எடுக்கல. மானுடத்துக்கு நீங்க ஆற்றிவரும் சேவையினாலயோ, தெய்வ கிருபையாலேயோ, ஏதோ ஒன்னு என்ன இங்க இழுத்து வந்திருக்கு….”

வள்ளல் அதற்கு மறுப்பே சொல்லக்கூடாது என்கிறதுபோல புலவரின் தொனி இருந்தது.

“நான் ஒங்ககிட்ட பணம் கேக்க வந்ததா நெனக்கக்கூடாது… ஒங்க பக்தருங்களே இதுக்கான செலவ ஏத்துக்கிறதா சொல்லியிருக்காங்க”. புலவரின் மொழியில் வள்ளலின் கௌரவம் மெருகேறிவிட்டிருந்தது.

அப்போது மேசைமேல் கிடந்த அந்த புத்தகத்தை கையில் எடுத்தார் வள்ளல்.

அதில் அச்சிடப்பட்ட வார்த்தைகள் பத்திரிகையில் வருவதுபோல இல்லாமல் ஐந்தைந்து சொற்களாக மேலிருந்து கீழாக நேர்த்தியாக அடுக்கியதுபோல இருந்தது. குட்டி குட்டி தலைப்புகள் கருமையாகக் காட்சி அளித்தன. சில பக்கங்களில் வண்ணப்பைப்படங்கள் மின்னின. இரண்டு வரிகளைப் படித்துப்பார்த்தார். ஒன்றுமே பிடிபடவில்லை.

மீண்டும் புரட்ட ஆரம்பித்தார். ஏடுகள் கண்கட்டி வித்தைக்காரன் கையில் உள்ள சீட்டுக்காட்டைப்போல சித்திரமாய் சரிந்து இறங்கின. மௌனமாகப் புத்தகத்தைப் புரட்டிய பிறகு…….

“பரவால்ல புலவரே நீங்க இவ்ளோ சொல்லும்போது நான் செய்லேன்னா நல்லாருக்காது. எவ்ளோ செலவாகும் சொல்லுங்க நானே கொடுத்திடுறேன், எனக்காக மத்தவங்க கொடுக்கிறது நல்லாருக்காது,” என்று இறங்கி வந்தார். ஊர் மாற்றலாகி வந்தது இந்தமுறையும் பலன் கொடுப்பதாக இருந்தது. முதல் குலுக்கிலேயே பண மரம் தடங்களில்லாமல் உதிர்ந்தது அவரை உற்சாகப்படுத்தியது. சரித்திரம் பதிவு செய்து வைக்க மறந்த மாமனிதர்களைப்பற்றிய வரலாறை எழுதுவதே தன் வாழ்வின் நோக்கமாகவும் கொண்டிருந்த புலவர் பெருமானுக்கு இது இன்னொரு சாதனையாக அமையும்.

புலவர் கணக்குப்போட ஆரம்பித்தார்.

பிள்ளைத்தமிழ் நூல் 1200 பிரதிகள் அச்சிடும் செலவு ஆறாயிரத்தைத்தாண்டி, அதிகபட்சம் ஆறாயிரத்து நானூறு வரை ஆகும். அதனை வள்ளலாரிடமிருந்தே கறந்துவிடலாம். அதற்கான வார்த்தைகள் புலவரிடம் மேமிச்சமாகவே இருக்கிறது. நூல்வெளியீட்டுக்கு அழைப்புக்கார்டுகளை புத்தகம் அச்சிடும் செலவிலேயே சேர்த்துவிடலாம். மண்டபம் ஒலிபெருக்கி தேநீர் வடை பலகாரம் எல்லாம் வள்ளல் சாமி ஆடி வரம்பெற்ற பக்தரைத்தேடிப்பிடித்துத் தலையில் கட்டிவிடலாம். முதல்நூல் வெளியீட்டு மொத்தக்குத்தகையாளர், பிரமுகர், இருக்கவே இருக்கிறார் இந்திய சமூகத்தின் சாதனைத் தலைவர் டத்தோசிரி சாமியப்பன். அவரின் செயலாளரிடம் தேதி வாங்கி விடலாம். எத்தனையோ இலக்கியக்கூட்டங்களில் டத்தோசிரியின் முன்னிலையில் அன்னாரின் சாதனைகளைக் கவிதையாகப்பாடி முகமன் தேடிகொண்டவர். வேந்தர்கோன் என்று டத்தோசிரி புலவரை விளிப்பதே இவருக்குக்கிடைத்த அரும்பெரும் அங்கீகாரம் – பாக்கியம். கற்றாருக்குக் கைகட்டி நின்றவிடமெல்லாம் சிறப்பு. எனவே தேதி கிடைப்பது அசகாய சாதனையல்ல. முதல் நூல் வாங்கவும் பிரமுகர் கிடைப்பதில் பிரச்னை இருக்காது.

முதல் நூல் பெறுநர், சிறப்பு நூல், திறப்பு நூல் பெறுநர் என மூன்று நான்கு பிரமுகரை அழைத்து ஆளுக்கு பத்தாயிரம் ஐயாயிரம் என வாங்க வைத்துவிடலாம். டத்தோ வருகிறார் என்ற தகவலே முதல் நூல் பெறுநரின் பட்டியலை கனமாக்கிவிடும். வள்ளலுக்கு இல்லையென்றாலும் சாதனைத் தலைவரின் வரம் வேண்டி (அடுத்த சட்டமன்ற சீட், நாடாளுமன்ற சீட், செனட்டர் சீட், டத்தோ பட்டத்துக்கான சிபாரிசு, ரோடு கட்டட கண்ட்ராக்ட் இத்யாதி இத்யாதிக்கெல்லாம் டத்தோவின் கடைக்கண் தரிசனம் இல்லாமல் நடக்காது) நிகழ்ச்சிக்கு வரும் அரசியல் பிரமுகர் எண்ணிக்கை ஆயிரம் ஐநூறு நூறு எனக் கொடுத்து வாங்கும் குட்டித் குட்டித்தலவர்கள், வாசக பெருமக்கள் என மண்டபத்தில் ஐந்நூறு பேரையாவது சேர்த்து விடலாம். ஆறு மாத பட்ஜெட்டில் துண்டு விழாது. புத்தகத்தை வாங்கிச்செல்லும் பலருக்குத் தமிழ் தெரியாது. கனத்த தமிழில் யாத்த கவிதைகளைப் படித்துப்புரிந்துகொள்ளும் அளவுக்கு தமிழ்த்தெரிந்தவரும் இல்லை. வீட்டில் போய் நூலை ஒரு மூலையில் தூக்கிப்போடுவர். கடைசி அத்தியாயம் வரை படித்துக்கிழிப்பது அவர்களின் செல்ல நாய்க்குட்டிகளாகத்தான் இருக்கும். படித்துக்கிழிக்கத்தானே புத்தகம், யார் கிழித்தால் என்ன?

இன்னொரு ஆறு மாதத்துக்கு தம் குடும்பச்செலவுக்கும் தன் தனிப்பட்ட செலவுக்கும் சிக்கல் வராது என்று நினைக்கும்போது அவரின் மீசை மேலும் மேல் நோக்கிச்சுருண்டது. தனிப்பட்ட செலவு என்று நான் சொன்னது அவர் பரத்தையர் திருமேனி தழுவும் படலத்தையும் சேர்த்துதான். திங்கள் இருதரமாவது மறுதாரம் மன்றல் நாடிப்போகவில்லையென்றால் ஜன்ம விமோசனம் பெறாது புலவருக்கு. அப்புறம் மாதுநாடிப் போவற்கு மதுநாடவேண்டுமல்லவா அதையும் சேர்த்தே கணக்கிட்டதுதான் ஆறு மாத பட்ஜட். பணமிருந்தால் ரெமி மார்ட்டின், தட்டுப்பட்டால் பட்டை – மறுதாரம் விஷயத்திலும்.

நூல் வெளியீட்டுக்கான அழைப்பையெல்லாம் அடித்து வள்ளலிடம் காட்டியபோது வள்ளலுக்கு நம்பிக்கை மேலோங்கியது. புலவர் ஒவ்வொரு வேலையையும் முடித்துவிட்டு வள்ளலிடம் வந்து நிற்கும்போது வெறுங்கையோடு திரும்பியது என்பதே கிடையாது.

நூல் வெளியீடு நடக்கும் நாளின் காலையிலிருந்தே ஒரு செய்தி கசிந்தவண்ணமாக இருந்தது. டத்தோசிரி நிகழ்வுக்கு வருவாதாயில்லை என்ற செய்திதான் அது. டத்தோசிரிக்கு மாலையணிவித்து பிரதிபலனாக தயவைப்பெற நினைத்த பிரமுகர் கூட்டத்தார் விழிப்படைந்து ஓர்டர் கொடுத்து விட்ட மாலையை கேன்சல் செய்திருந்தார்கள். டத்தோசிரி வரவில்லையென்றால் நிகழ்ச்சிக்கு போவது பலனளிக்காது என முடிவெடுத்திருந்தனர். நூல் பெறுநர் பட்டியலில் இருந்த உள்ளூர் பிரமுகர்களும் நூல் வெளியீட்டு நிகழ்வுக்குப்பதில் ரெஸ்ட் ஹவுஸில் நண்பர்களோடு நள்ளிரவுவரை மிதந்துவிட்டு வரலாம் என மனதை மாற்றிக்கொண்டனர்.

மண்டபத்தில் போடப்பட்ட நாற்காலிகள் பல பிட்டச்சூடு பாக்கியம் பெறாமலேயே கிடந்தன. பெயர் எழுதி ஒட்டப்பட்ட பிரமுகர் இருக்கைகள் காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போயின. டத்தோசிரிக்காக புலவர் தயார் செய்து வைத்திருந்த ஆளுயர மாலை அவர் வரவில்லையெனவானால், உள்ளூர் டத்தோவுக்கு ஆகும் என ஆறுதல் அடைந்திருந்தார். கூட்டம் எதிர்ப்பார்த்தபடி இல்லை. நிகழ்வு நூலுக்கு என்பதைவிட ஆளுக்குத்தான் என்பதை இந்த நிகழ்வும் நிரூபித்தவண்ணமிருந்தது. வள்ளலிடமிருந்து வரம் பெற்றவர்கள் மட்டுமே கொஞ்சம் பேர் அமர்ந்திருந்தனர். இம்மாதிரி நூல் வெளியீட்டை முன்பின் பார்த்ததில்லை, என்னதான் நடக்கிறது என்பதை வேடிக்கை பார்க்கும் கூட்டமாக இருந்தது.

உள்ளூர் டத்தோ மண்டபத்துக்குள் ஆவேசமாகவே நுழைந்தார். கை நீட்டியவரிடம் மட்டுமே சுரத்தில்லாமல் கைகுலுக்கினார். எல்லோரிடமும் வணங்கி தானே நெருங்கி கைகுலுக்கிகொள்ளும் மரபை மீறியிருந்தார் அன்று. மேடையிலும் யாரிடமும் பேசவில்லை. புலவரின் வரவேற்பையும் வாங்கிக்கொள்ளவில்லை. வள்ளலிடமும் சரியாக முகங்கொடுக்கவில்லை. முகத்தில் எண்ணெய் கொதித்தபடியே இருந்தது.

புலவரே எழுதிய தமிழ் வால்த்தை (வால்த்துதான்) ஒரு பெண் பாடினாள். வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. பின்னர் பிரமுகர் பேச அழைக்கப்பட்டார்.

“எனக்கு இந்த நிகழ்ச்சிக்கு வர விருப்பமில்லை. இப்போ கட்சி தேர்தல் நேரம். இரு தலைவர்கள் களத்துல எறங்கி இருக்காங்க. போட்டி பலமா இருக்கு. டத்தோசிரி நேத்து ராத்திரி எனக்குபோன் பண்ணி, எல்லாம் நீ செய்ற சதியாயான்னு கோவமா கேட்டாரு. மொதல்ல எனக்கு ஒன்னுமே புரியல. தான் நிகழ்ச்சிக்கு வர்ரதா டத்தோ சிரி பத்திரிகையில பாத்துதான் தெரிஞ்சிக்கிட்டாரம். யாரும் அவருக்கிட்ட டேட் கேக்காமலேயே பத்திரிகையில விளம்பரம் பண்ணிட்டதா கோவப்பட்டாரு. அவரு வர்ரதா செய்தியா போட்டுட்டு அவர் வர்லேனு ஆனப்பறம் இது ஒரு ஏமாத்து வேலன்னு நெனச்சி ஏமாந்த கட்சிக்காரங்க அவருக்கு ஒட்டுப்போடமாடாங்கன்னு ரொம்ப ஆவேசப்பட்டாரு. நீதானயா உள்ளூருல இருக்க உனக்குத்தெரியாதா. என்ன இதுக்கையா அங்க இருக்க…….? (மசிறு என்ற வார்த்தையை அந்த கோபத்திலும் சபையில் சொல்ல வில்லை) என்ன கூப்பிட்டு ஒரு வார்த்த சொல்லியிருக்கலாமே. வேற நிகழ்ச்சிய ரத்து பண்ணிட்டு வந்திருப்பனே. கடசி நேரத்துல ஒன்னுமே செய்முடியலையே. என் முதுகில குத்துறதுக்கு நீயும் தயாராயிட்டியா. இந்த எடத்துல பதினைஞ்சி ஓட்டிருக்கு. பதினைஞ்சி ஒட்டுல எட்டு ஒட்டு எதிர்த்தரப்புக்கு உலுந்தா என் பதவி ஒலிஞ்சது. அதுக்கெல்லாம் நீ ஒடந்தையா இருக்கியோன்னு….. சொல்லக்கூடாத வார்த்தையெல்லாம் சொல்லிட்டாரு” எனப் பேசிக்கொண்டே இருந்தார். நிகழ்ச்சி பற்றியோ, வள்ளல் பற்றியோ, வேந்தர்கோன் பற்றியோ, நூல் பற்றியோ ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அது அவருக்கு அனாவசியம்.

கடந்த பொதுத் தேர்தலில் சீட் கிடைக்கவே பெரும்பாடாகிவிட்டது உள்ளூர் டத்தோவுக்கு. கூட இருந்தவர் குழி பறிக்க மூவர் இவர் வகித்த இடத்துக்கு டத்தோசிரியை ரகசியமாக சந்தித்து அவரின் ஆசியைப்பெற நூல்விட்டு கால்பிடித்துக்கொண்டிருந்தனர். இவரைப்பற்றிய புகார்கள் ஏற்கனவே நிரம்பி வழிந்து கொண்டிருந்தன . இந்த லட்சணத்தில் அடுத்த தேர்தல் வேறு நெருங்கிக்கொண்டிருந்தது. முதுகில் குத்தும் வேலை ஆரம்பித்திருந்தது. மூன்றாவது தவணைகுத் தன் பெயர் விடுபட்டு விடுமோ என்ற அச்சத்தில் அரசியல் ஆடுகளத்தில் காயைப் படு கவனமாக நகர்த்திக்கொண்டிருந்தபோதுதான், வேந்தர்கோன் மூலமாக அவரை நோக்கி அஸ்திரம் புறப்பட்டிருந்தது. இந்த அஸ்திரத்தில் ரணமாகி விட்டபடியால் டத்தோவின் வார்த்தைகள் காத்திரமாகிவிட்டிருந்தன. தன் கோபத்தை இறக்கிவிடும் வடிகாலாக மேடையைப் பயன்படுத்திவிட்டு யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் போயேபோய்விட்டார் டத்தோ. “டத்தோ….. டத்தோ…..” என்று பின் தொடர்ந்தவர்களை உதறிவிட்டபடியே ரேஸ் குதிரையைப்போல விரைந்தார். இந்தப் பேச்சு தன் தலைவரின் மீது தான் கொண்டுள்ள அப்பழுக்கற்ற விசுவாசத்திமேல் தூவப்பட்ட மாசைத் தட்டித்துடைத்திருக்கும் என்று எண்ணியிருக்கக்கூடும் டத்தோ. டத்தோசிரி காதுவரைக்கும் செல்லக்கூடிய வாய்ப்பும் உண்டு.

இதற்குமேல் நிகழ்ச்சி எப்படி நடந்தது எவ்வளவு வசூலானது என்றெல்லாம் கூறி உங்களையும் வேதனையில் ஆழ்த்த என் மனம் ஒப்பவில்லை. ஒரே ஒரு முறை டத்தோசிரியின் செயலாளருக்குப் போன் செய்து பேசிவிட்டு தொடர்ந்து தொடர்பு வைத்துக்கொள்ளாமல் இருந்துவிட்டதால் வந்த வினை என்பது வேந்தர்கோனுக்கு மட்டுமே தெரியும் ரகசியம்.

வேந்தர்கோனும் வெற்றிலை வாயும்

வேந்தர்கோனின் மனைவிக்கு புலவர் கொண்டிருந்த கவி இயற்றும் திறமை பற்றியெல்லாம் பெரிதாக ஒன்றும் தெரியாது. மூனாப்போடு முற்றுப்புள்ளி. தனக்கு முக்கியமாக செய்யவேண்டியதை புலவர் செய்துவிடவேண்டும். வெற்றிலைப்பாக்கு வேண்டும், பக்கத்து வீட்டாரோடு கதைக்க தமிழர் வீடாகப்பார்த்து வாடகையெடுக்கவேண்டும் (சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் தன் வீட்டுக்காரனைப் பற்றியும் பிரஸ்தாபிக்க), காலையிருந்து நள்ளிரவு வரை சீரியல் பார்த்து பிம்பங்களுக்காக கண்ணீர் வடிக்கவேண்டும், இல்லையென்றால் வீட்டில் ரணகளம்தான். புலவர் வேலைவெட்டியெல்லாம் ஒன்றும் செய்யாமல் கவிதை நூல் வெளியீடு என அலைந்துகொண்டு தன்னைச் சரிவர கவனிக்காமல் இருப்பதில் அவளுக்கு அடங்காத கோபம் இருந்து வருகிறது. நல்லவேளையாக வெற்றிலைபோடும் பழக்கமுள்ளவள்ளவளாக இருந்ததனால் அவளின் ஆவேசம் அவ்வப்போது வடிந்து போக வசதியாக இருந்தது. காறி காறி துப்புவதற்கே அடிக்கடி வெற்றிலைபோட்டுக் கொள்கிறாளோ என்னவோ?

– மார்ச் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *