கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 1, 2024
பார்வையிட்டோர்: 1,894 
 
 

 (1993ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)   

அதிகாரம் 3-4 | அதிகாரம் 5-6 | அதிகாரம் 7-9

அதிகாரம்-5

“அறிவேன் மகளே, அறிவேன் ! இரவில் வந்தும் கூட என்னை வந்து பார்க்க முடியவில்லை அல்லவா உன்னால்! நீ என்ன நினைத்திருப்பாய், எப்படி இருந்திருப்பாய், அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உன் மனம் எப்படி மாறியிருக்கும் என்பதை யெல்லாம் ஊகிக்க என்னால் முடியாதா? நான் ஒரு மன்னவன் மட்டுமல்ல, ஒரு தந்தையும் கூட, ஒரு தந்தை மட்டுமல்ல இளைஞனாக இருந்தவனும் கூட!” என்றார் சோழ மன்னர்.

“இல்லை அரசே, நான்… அதாவது நான் வரும் போது ஈரமாக இருந்தேன். அதனால் நான் வரும் போது மீண்டும் இங்கே வரமுடியாமல், நான் வரும் போது…” என்று ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொன்னாள் கதலி. 

சிரித்தார் சோழர். “எப்போது உளறுவார்கள் என்பதற்குப் புதிய இலக்கணமா வேண்டும்? நீயும் உளறத்தான் போகிறாய், அந்த தளபதியை பாரி சந்திக்கும்போது அவனும் உளறத்தான் போகிறான், எனக்குப் புரியாதா இதெல்லாம்!” என்றார் சோழ மன்னர். 

“நீங்கள் அதற்குள் இப்படி கணக்கிட்டு விட்டீர்களே” என்றாள் கதலி. 

“இதிலே கணக்கிடுவதற்கு என்ன இருக்கிறது? இரண்டும் இரண்டும் நாலு என்றால் அது இக்கரையிலே சொன்னாலும் அவ்வளவுதான், அக்கரையிலே சொன்னாலும் அவ்வளவுதான்” என்றார் சோழ மன்னர். 

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!” என்று அழுத்தமாக அதை மறுக்க விரும்பியது போல் கூறத் தொடங்கினாள் கதலி. 

“அப்படியில்லை என்றால், வேறு எப்படியாவது இருந்திருக்கும். இதிலே நீ மறுத்துப் பேசினால் பேசப் பேச உன் அந்தரங்கம்தான் விளங்குமே தவிர வேறு எந்தக் காரணம் கொண்டும் உன்னால் மறுக்க முடியாது. இந்த நோயினுடைய ஆழமான தன்மையையும், இது எப்போது பிடிக்கும், எப்படி வளரும், வளர்ந்து விட்டால், எப்படி நாக்கு உளறும் என்பதையெல்லாம் நான் நன்றாக அறிவேன். இப்பொழுது உன் அண்ணனிடம் செல். எப்போது என்ன நடத்தலாம், என்ன பேசலாம் என்பதை அவனே, என்னிடத்தில் பேசட்டும்” என்றார் சோழ மன்னர். 

“இல்லை, அரசே! அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை!” என்றாள் கதலி. 

“மீண்டும் மீண்டும் அதையே சொல்லாதே! நீ சொல்ல வேண்டியது ஒன்றுதான். ‘பேசுங்கள்’ என்று சொல். இல்லையென்றால் வேண்டாம் என்று சொல். அந்த இரண்டு வார்த்தையில் இருந்து விவரங்கள் ஊகித்துக் கொள்கிறேன்” என்றார் சோழ மன்னர். 

தலை குனிந்தபடி நின்றாள் கதலி. 

“நீ நிற்பதிலே இருந்து எனக்குப் புரிகிறது. யார் ஊமையாக நிற்கிறார்களோ, அவர்கள் சம்மதம் தெரிவிக்கிறார்கள். நான் சொன்னதை நீ மறுக்கவில்லை என்று பொருள். அவ்வளவுதானே!” 

“நல்லது செங்கணா ! அடுத்து நீ செய்ய வேண்டியது ஒன்றுதான். நான் பாரி மன்னரிடம் பேசுகிறேன். நீ தளபதி வானவரையனைப் பார்த்துப் பேசு. ‘உன்னை என் தங்கை விரும்புகின்றாள். விரும்புகிற அவளை நீ மணம் முடிக்க விரும்புகிறாயா’ என்பதை மட்டும் கேள். பிறகு மணம் முடிப்பது எங்கே எப்படி என்பதை எல்லாம் நானும் பாரி மன்னரும் தீர்மானிக்கிறோம்” என்றார் சோழ மன்னர். 

“நல்லது அரசே!” என்றான் அவன்! 

அவன் முன்னால் நடக்க, விடைபெற்றுக் கொள்ளுகின்ற மனம்கூட இல்லாமல் பின்னாலே நடந்தாள் கதலி. 

“இதோ பார் கதலி, என்னிடம் சொல்லிக் கொள்ளாமலேயே நீ போகின்றதைப் பார்க்கின்ற போது, உனது உள்ளம் எங்கே லயித்திருக்கிறது, எங்கே இணைந்திருக்கிறது என்பது எனக்குத் தெரிகின்றது!” என்றார் சோழ மன்னர். 

பின்னாலேயே போன கதலி, அரண்மனை வாசலைத் தாண்டியதும், “அண்ணா! அவர் சொல்வது போல் ஒன்றுமில்லை. எங்களுக்குள் வேறொன்றுமில்லை. அவர் முன்னாலே போய் ஒரு மணல் மேட்டில் சிக்கிக் கொண்டார்! பின்னாலே நான் போனேன். என்னைக் கொண்டுபோய் சேர்த்த காவிரி அன்னை அவர் அருகிலேயே சேர்த்தாள். அங்கிருந்து மெதுவாக கைத்தாங்கலாக அணைத்த படி நான் கரையில் கொண்டு வந்தேன்” என்று கதையை சொல்லத் தொடங்கினாள். 

“இதோ பார்! இந்தக் கதையெல்லாம் வேண்டாம்! கைத்தாங்கலாக ஒருவனை அணைத்த பிற்பாடு கதை எப்படி வளரும், எங்கே வளரும் என்பது மன்னருக்குத் தெரியும். ஒருவேளை எனக்குத் தெரியாமல் இருக்கலாம், அம்மா! காரணம், நான் உன் அண்ணன் அல்லவா? கண்கள் குற்றம் செய்து விட்டால் இமைகள் தண்டிக்க முடியாது அல்லவா?” என்றான் செங்கணான். 

வாயை மூடிக்கொண்டு அவன் பின்னாலேயே போனாள் அவள். “என்ன அண்ணா பேசப் போகிறாய்?” என்று திடீரென்று கேட்டாள், பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று. “எப்போது திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றா? இங்கேயே வைத்துக் கொள்ளலாமா அண்ணா!” என்றாள் அவள். 

“பார்த்தாயா? இதற்கு மேல் நான் என்ன பேச வேண்டும் உன்னோடு. நீ நேரே வீட்டுக்குப் போ. நான் மண்டபத்துக்குப் போகிறேன்.” 

“ஏன்? அண்ணா நானும் மண்டபத்துக்கு வருகிறேனே…” என்றாள் அவள். 

“நீ மண்டபத்திற்கு வந்து இனி என்ன ஆக வேண்டியிருக்கிறது. ஆகவேண்டியவை அனைத்தும் ஆகிவிட்டது. இனி ஆகவேண்டியது ஒன்றுதான். வேண்டுமானால் நீயும் வா!” என்றான் அவன். 

“ஏன் அண்ணா, இப்படியும் அப்படியும் பேசுகிறீர்கள். நானும் வருகிறேன்” என்று இருவருமாக மண்டபத்தை நோக்கி விரைந்தார்கள். 

மண்டபத்துக்குள் அவர்கள் நுழைகின்றபோது, அங்கேயும் இந்தப் பேச்சுதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

பாரி மன்னர், வானவரையனைப் பார்த்து, “உண்மையைச் சொல்! அப்படியென்றால் நான் உடனேயே பேசி முடிக்கிறேன்” என்று இறுதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். 

“அவரும் சொல்ல வேண்டியது இல்லை, இவளும் சொல்ல வேண்டியது இல்லை. எல்லாம் உண்மை தான். இனி பேச வேண்டியது தான் பாக்கி” என்றபடி உள்ளே வந்தான் செங்கணான். 

“நல்லது. நான் பேசட்டுமா, நீங்கள் பேசுகிறீர்களா?” என்றார் பாரி மன்னர். 

“நீங்களும் பேசுங்கள்! நாங்களும் பேசுகிறோம்” என்று சிரித்தான் செங்கணான். 

செங்கணான், வானவரையன் அருகில் சென்று, “தளபதியாரே! அப்படியொன்றும் என் தங்கை இடந்தவறி, முறை தவறி, காதலித்து விடவில்லை. அவளுக்கு புரிகிறது ! மரபு தெரிகின்றது! ஒரு தளபதியின் தங்கை, இன்னொரு தளபதியைத்தான் காதலிக்க வேண்டுமென்று! அதனால்தான், ஒரு தளபதி கண்ணுக்குத் தெரிகிற வரையிலும் காத்திருந்து, ஆடி பதினெட்டு வரும் வரையிலே பொறுத்திருந்து, அவனைத் தண்ணீரிலே குதிக்க வைத்து, தானும் பின்னாலே குதித்து வந்து இந்தக் அவன். காதலைச் செய்து முடித்திருக்கிறாள்” என்றான் அவன்.

சிரித்தபடி நின்ற வானவரையன், “நல்லது. நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்களோ, அப்படியே” என்றான்.

இருவரும் கண்ணாலேயே பார்த்துக் கொண்டார்கள். 

நாளை நிச்சயிப்பதற்காக, பாரி மன்னர் மாலையிலே சோழ மன்னரைச் சந்திப்பதாகச் சொல்லி அனுப்பினார்.

தளபதி வானவரையர் உறந்தையிலேயே திருமணம் முடித்துக் கொண்டு விட்டாராம் என்ற செய்தி, பாரி மலை நாடெங்கும் பறம்பு மலை மேகங்கள் எங்கும் பரவியாகி விட்டது. 

மலைத் தோட்டங்களுக்கு நடுவிலே, குளிர்ந்த சூழ்நிலையிலே நடைபெற வேண்டிய அந்தத் திருமணத்தை காவிரிக் கரையிலே நடத்தி விட்டாரே! ஏன்? என்று கூட அங்கிருந்த மங்கையரும், காளையரும் ஆச்சரியப்பட்டார்கள். 

தளபதி வானவரையரை மணம் முடிக்க வேண்டும் என்று காத்திருந்த இளம் மங்கையர் பலர் இது குறித்து வாடினார்கள், வதங்கினார்கள்! 

நம்முடைய காதலை முன்கூட்டியே அறிவிக்காமல் போனோமே என்று கலங்கிய கன்னியரும் உண்டு. திருமணம் முடிந்ததாகச் செய்தி வந்து விட்டது. அவர்கள் இன்னும் வரவில்லையே என்று கலங்கினாள் ஒருத்தி. 

“யாராம் அந்தக் கதலி? எப்படி இருப்பாளாம்? பேரழகியாமே…” என்று, கேள்விக் கணைகளைத் தொடுத்தாள் ஒருத்தி! 

“அது என்னவோ, இதுவரையிலும் இந்த மண்ணிலே தோன்றிய மங்கையரில் அப்படி ஒரு பெண் பிறந்தது இல்லையாம்” என்று தன் ஆச்சரியத்தை பத்து மடங்கு அதிகமாகக் காட்டிக் கொண்டாள் இன்னொருத்தி. 

கார் மேகங்கள் குடை பிடிக்கவும், வெண் மேகங்கள் ஆலவட்டம் வீசவும் தயாராக நின்று கொண்டிருந்தன. 

பறம்பு மலையின் இலை வள்ளிக் கிழங்குகளிடையே ஓடுகின்ற அணில்கள்கூட இது பற்றியே பேசுவதுபோல தோன்றிற்று பறம்புமலை மாதருக்கு.

அந்த வாழைத் தோட்டத்து கிளிகள் எல்லாம் வாழ்த்துரைக்கத் தயாராக நின்று கொண்டிருந்தன. அது ஒரு தளபதியின் திருமணமாக அல்லாது இளவரசரின் திருமணமாகவே கொண்டாடப் பட்டது பறம்பு மலையெங்கணும். 

அதோ! அந்த மாவடிச்சுனை, புதியதோர் பளிங்கு மேனியைக் குளிப்பாட்டப் போகிறோம் என்று உற்சாகத்தில் தாவித் தாவி விழுந்தது. 

திருமணம் ஆன செய்தி வந்ததில் இருந்து பறம்பு மலையின் பல இல்லங்களில், பெரும் மூச்சே, மூச்சாக எழுந்து கொண்டிருந்தது, பல மங்கையரிடம். 

“மலை மாதரிடம் என்ன குறையென்று, நிலப்பரப்பில் பெண் எடுத்தான், வானவரையன்” என்று அமைச்சர்கள் கூடப் பேசிக் கொண்டார்கள். 

எந்த நாளிலும் பறம்பு மலை மக்கள் கொள்வதும், கொடுப்பதும், தங்களை யொத்த மலைவாழ் மக்களிடமே, அல்லது வேளிர் குலத்தில் மட்டுமே. அந்த மலைக்கு இது ஒரு புதிய கதை தான். 

மலை வாசத்திலோ, மலை அடிவாரத்திலோ, வாழ்ந்து பழக்கம் இல்லாத ஒருத்தி அங்கே வந்து சேரப் போகிறாள். அவளை மலைவாசி ஒருவர் கொண்டு வரப்போகிறார். இரண்டு பேரும் அழகானவர்கள், காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 

அந்தச் சிறிய குன்று, இப்படி போர்க்களப் பட்ட போது, அந்த மலையின் அடிவாரத்தில், ஓர் அழகான புரவி, மலையின் மீது ஏற ஆரம்பித்தது. அந்தப் புரவியில் அமர்ந்திருந்தவன், ஒரு தூதுவன். அவன் அந்த மலையில் இருந்து, பாரி மன்னனோடு சோழ மண்டலம் சென்றவன். 

மலையின் உச்சியில் இருந்து, அந்தப் புரவியின் வருகையைப் பார்த்துக் கொண்டிருந்த மங்கையர் பலரும், காளை பலரும் ஏதோ செய்தி வருகிறது என்பதை உணர்ந்தார்கள். 

செய்தி வரும் போது தான் புரவி அந்த வேகத்தில் வரும். அந்தப் புரவியுடைய வருகை அவர்களுக்கு அறிவித்த செய்தி ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்த செய்திதான். 

ஆனாலும்கூட இன்னும் ஏதாவது அதிலே புதுமையிருக்கலாம் என்று எண்ணியவாறு அவனுடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து அரண்மனை முற்றத்தில் அவர்கள் காத்திருந்தார்கள். வேறு என்ன செய்தி? அதே செய்திதான். 

திருமணம் முடிந்துவிட்டது-தளபதிக்கு! வந்து கொண்டு இருக்கிறார்கள்-பாரி மன்னரும் மற்றவர்களும்; மணமக்களை வரவேற்க, மலை தயாராகட்டும் என்பதே மன்னரது மடலாக அமைந்து இருந்தது. 

சோழ மண்டலத்திலிருந்து, மணமகளது உறவினர்கள் நூற்றிருவர் வருகிறார்கள். அவர்களையும் வரவேற்று உபசரிக்கத் தயாராக இருக்க வேண்டுமென மன்னவர் எழுதியிருந்தார். 

அந்த மடலைக்கொண்டு வந்த தூதுவன் அதில் உள்ள செய்தியை மட்டும் சொல்லிவிடவில்லை. மேலும் சில விளக்கங்களையும் சொன்னான். 

“புதிய புதிய வாழைத்தார்களைக் கொண்டு  வந்து நிரப்புங்கள். புதிய தேனை எடுத்து வாருங்கள். புதிய பலாப்பழங்களைச் சேகரியுங்கள். பழந்தேன் எங்கிருந்தாலும் அவற்றைப் பத்திரப்படுத்தி வையுங்கள். புதிய பழங்கள் பறித்துக்கொண்டு வந்து சேருங்கள். இலை வள்ளிக் கிழங்குகளைப் பறித்துக் கொண்டு வந்து அவற்றை நறுக்கிப் பத்திரமாக வைத்திருங்கள்! வருகின்ற மணமக்களுக்கும், அவர்களைச் சார்ந்த உறவினர்களுக்கும், மலை எப்படிப்பட்டது என்பதை காட்டியாக வேண்டும். மலையிலே கொடுப்பவன் மட்டுமில்லை, இந்த மலையே கொடுக்கின்ற மலைதான் என்பதை, அவர்கள் அறியவேண்டும்”- இந்த விளக்கத்தையும் அவன் கூறினான். 

போட்டி, பொறாமை, களவு மூச்சு, நீங்கிய மாதர்கள் பலர் அந்த வேலையிலே ஈடுபடத் தொடங்கினார்கள். ஏராளமான பொருட்கள் சேகரிக்கப்பட்டன. ஏராளமான பொருட்களைக் கொண்டு வந்து அரண்மனையிலே குவித்தார்கள், அரண்மனை வீரர்கள். 

பாரி மன்னரும், பாரி மகளிரும், மணமக்களும்; மலையின் உச்சிக்கு வந்து சேர்ந்தபோது, முழவு ஒலித்தது! பெருங்கூட்டம் குலவியிட்டு வாழ்த்தியது! “பாரி மன்னர் வாழ்க!” என்ற குரல் எங்கும் எழுந்தது “மணமக்கள் வாழ்க! வளர்க! நூறாண்டு வாழ்க!” என்று முதியவர்கள் வாழ்த்தினார்கள். 

வந்த மணமக்களில் கதலி, மிகவும் உற்சாகமாக காணப்பட்டாள். 

நிலப்பரப்பிலே காவிரி அருகிலே இருந்த காலத்தைவிட, அவள் இன்னும் பிரகாசமாக இருந்தாள். இந்த மலையே எனக்கு உகந்த மலை என்பதுபோல மலையின் ஒவ்வொரு பகுதியிலும் நின்றபடியே அவள் பார்த்தாள். இது நம்முடைய மலை, நாம் வாழப்போகும் மலை, இனி இதுவே நமது தாயகம் என்கின்ற எண்ணங்களெல்லாம் அவள் உள்ளத்தில் ஓடத் தலைப்பட்டன. 

பாரி மகளிர் இருவரும் பக்கத்தில் நின்று கொண்டு, “இந்த மலை உனக்குப் பிடிக்கிறதா?” என்று கேட்டார்கள். 

“நான் தான் முன்பே சொன்னேனே, எது புகுந்த இடமோ அந்த இடமே தாயகம் என்று” என்றாள் கதலி. 

பறம்பு மலை பவுர்ணமி காலத்தில் பேரழகாகத் தோன்றும். அது வசந்த காலம், பவுர்ணமி நேரம். 

அந்த இரவில், மணமக்களுக்கு, மலையின் வெளிப் புறத்திலேயே வரவேற்புத் தரப்பட்டது. 

சோழ மண்டலத்தில் இருந்து அவர்கள் கூடவே வந்த புலவர்கள் எல்லாம் வாழ்த்திசைத்தார்கள். அவர்கள் மணமக்களைத் தவற விட்டுவிட்டார்கள். முற்றிலும் பாரியைப் பற்றியே பாடினார்கள். இடையிடையே பாரி மணமக்களை நினைவு படுத்திக் கொண்டேயிருந்தார். 

மலையின் வெளித்தோற்ற விருந்திலே, கை நிறைய எடுத்த தேன் முழங்கை வழியே வழிய வழிய அதை உண்டு சுவைத்துக் கொண்டிருந் தார்கள் விருந்துக்கு வந்தவர்களும், மலை வாழ் மக்களும். 

அந்தத் தேனைத் தாங்கள் சுவைப்பதை மணமக்கள் காணவேண்டும் என்பது போல் அவர்கள் ஆசைப்பட்டார்கள். 

இப்படித்தானே உங்கள் வாழ்க்கை அமையப் போகிறது என்பதும், அதிலே மறைந்து நின்ற கருத்தாகும். அதைப் பார்த்துப் பார்த்து சுவைத்த மணமக்கள், நள்ளிரவில், பாரி மன்னரால் கொண்டு விடப்பட்டு, தங்கள் இல்லம் சேர்ந்தார்கள். 

வானவரையனது இல்லம் மலைவாழ் மக்களின் இல்லத்திலே சற்றுப் பெரிய இல்லமாகும். குளிருக்கு அடக்கமான பலபகுதிகள் அதிலே உண்டு. ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துக்கொண்டுவந்தாள் கதலி. 

உச்சியில் இருந்து பார்த்தால் நிலப்பரப்பு தெரிகின்றபடி அதன் அமைப்பு இருந்தது. அது கட்டப்பட்ட இடமும் அப்படியேயிருந்தது அதைப் பார்த்துக்கொண்டே வந்தபோது, வானவரையனது உடன் பிறந்தாளும் பெற்றோரும் அவளை வரவேற்றார்கள். 

“பெற்றோரும், உடன்பிறந்தோரும், இல்லாமலேயே நாங்கள் திருமணத்தை முடித்துக்கொண்டு விட்டோம். இது ஒரு தவறுதான். எங்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத, மன்னிக்க முடியாத தவறு தான். ஆனால், சில மகத்தான காரியங்கள் அவசரமாக நடைபெற்று ஆக வேண்டுமென்று வரும்போது, சில ஒப்புதல்களை, ஒப்புரவுகளை நீக்கிவிட்டே பார்க்க வேண்டி இருக்கிறது” என்று மன்னிப்புக் கோரினாள் கதலி. 

“தவறு இல்லை, அம்மா! என் மகன், மலையில் இருந்து கீழே இறங்கும்போது, இப்படி ஒரு அற்புதமான கனியொன்றினைக் கொண்டு வருவான் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கனியை அவன் கையிலே எடுக்கும்போது, நாங்கள் கூட இல்லையே தவிர, அவன் அதைச் சுவைக்கும் போது, இந்த இல்லத்தில்தானே சுவைக்கப் போகிறான். அவர்கள் வாழ்க்கை இங்கேதானே நடைபெறப் போகிறது. அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி தரத்தக்க ஒன்றாகும்” என்றார்கள் அவர்கள். 

கனமான மரங்களால் அமைக்கப்பட்ட ஓர் அறை. அதன் நடுவிலே, மிகப் பெரிய ஒரு மஞ்சம். அதன் மீது மயில் இறகுகளாலேயே தைக்கப்பட்டு இருந்ததால் பஞ்சணை என்ற வார்த்தை அதற்குப் பொருந்தாதுதான். ஆனாலும், பஞ்சைவிட அது மென்மையாக இருந்தது. 

சுற்றிலும் இருந்த சாளரங்களில் மெல்லிய துணி விளையாடிக் கொண்டிருந்தது. 

அது, வானத்து நிலவின் ஒளிதான் சாளரத்தை வட்டமிடுகிறதோ என்பது போலத் தோன்றிற்று. 

நிலவினுடைய ஒளி, அந்தச் சாளரத்துத் திரைச் சீலைகளில் பட்டு, உள்ளே வந்தபோது, அது இன்னும் புதுமையான வெள்ளித் தகடாக ஜொலித்தது. 

அந்த ஒளியில், கதலியினுடைய மேனி இன்னும் பன்மடங்கு ஒளிவீசுவதை, அவன் கண்டான். 

அந்த மஞ்சத்தில் அவன் சாய்ந்தபோது, அவள் பக்கத்தில் அமர்ந்தாள். 

புதிய அனுபவத்திற்கு இரண்டு பேரும் தயாரானார்கள். பக்கத்தில் அமர்ந்த அவளை, அப்படியே கையோடு எடுத்து, அணைத்து, தன் மார்பகத்தில் சேர்த்துக் கொண்டான், அவன். 

மெல்லிய பூப்போன்ற அந்த உடலும் அந்த இதழ்களும் அவனுடைய உடலோடு ஐக்கியமான போது, இணைந்து நின்றபோது, அவற்றில் இருந்து ஒரு புதிய காந்த சக்தியே உருவாகி வெளியேறுவது போல் அவனுக்குத் தோன்றிற்று. 

மெதுவாக வீசிய தென்றல்காற்று, குளிரைத்தான் கொண்டு வந்தது என்றாலும், உடம்பிலே இருந்த சூடு அந்தக் குளிரையும் சூடாக்கிற்று. 

இருவரும் பக்கம் பக்கமாகப் பள்ளிகொண்டார்கள். அப்போதுதான் உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை, கதலியின் அழகை அவன் முழுமையாக அனுபவித்தான். 

ஒரு நீண்ட வாழைத்தண்டை, சேலை சுற்றிப் போட்டு இருப்பதாகவே அவனுக்குத் தோன்றிற்று. முழுக்க முழுக்க ஒரு மேனி, இப்படி தங்கத்தால் செய்தது போல அமைவது என்பது எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை. அப்படி ஒரு பெண்ணுக்கு வாய்த்து, அவளே தனக்கும் வாய்த்து விட்டால் – அவனைப் போன்ற பேறு பெற்றவனாகவே அவன் கருதிக் கொண்டான் 

அவளது பொன் போன்ற அங்கங்களை அவன் தீண்டும் போதெல்லாம், அவளாலே அமைதியாகப் படுத்திருக்க முடியவில்லை. அவள் துள்ளியதிலும் துவண்டதிலும், கால்களைத் தேய்த்துக்கொண்டதிலும் ஒரு புதிய உற்சாகத்தையும், புதிய ரசனையையுமே அவன் கண்டான். 

மனிதன் அடையக்கூடிய இன்பங்களில் எல்லாம் பெரும் இன்பம், ஒரு பெண்ணிடம் காணுகின்ற இன்பம். ஆனாலும், ஏனோ அதற்கு சிற்றின்பம் என்று பெயர் வைத்தார்கள்! ஒரு பெண் அடையக்கூடிய இன்பங்களில் எல்லாம் மிகச் சிறந்த இன்பம் அவளுக்கு மனம் விரும்பிய காதலன் தருகின்ற இன்பம். 

அந்த இரண்டு பேரும், மனமொத்த வாழ்க் கையை அனுபவித்து முடித்தபோது, பொழுது ‘நான் புலரட்டுமா?’ என்று கேட்டுக்கொண்டே, வெள்ளியை தூக்கி விளக்காகக் காட்டிற்று. 

அதிகாரம்-6

“முல்லைக்குத் தேர் கொடுத்தாராமே பாரி வள்ளல், அந்த முல்லைக்கொடி எங்கிருக்கிறது? உயர்ந்த வாழ்க்கையையும் மன்னவனுடைய வரவேற்பையும் பெற்ற அந்தக் கொடியினை நான் காணவேண்டும்” என்றாள் கதலி. 

“அந்த முல்லைக்கொடி நன்றி மறக்காமல் நாள் தோறும் பூத்துக் கொண்டிருக்கிறது. போய்ப் பார்க்கலாமே!” என்றான் வானவரையன். 

இருவரும் தேர் ஏறி அங்கு சென்றார்கள். ஏழு ஆண்டுகளுக்கு முன்னே நடைபெற்ற அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, அடிக்கடி அரண்மனையினுடைய ஆட்களும் வெளியில் இருந்து வருவோரும் அதனைப் பார்த்து வந்த காரணத்தால், அந்த இடம் திருவிழாக் கோலம் கொண்டு காட்சி அளித்தது. 

முல்லை, தேரின்மீது நின்று கம்பீரமாகச் சிரித்தது. அந்தத் தேரைச் சுற்றிலும் அது படர்ந்து கிடந்தது. தேரையே மறைத்துக் கொண்டிருந்தது. மறைத்துக் கொண்டிருந்த முல்லைக்கொடியை விலக்கிக் கொண்டு உள்ளே மன்னவர் அமருகின்ற சிங்காசனத்தைப் பார்க்க வேண்டும் போல் அவளுக்குத் தோன்றிற்று. ‘தானே அமர்ந்து செலுத்துகின்ற அந்தத் தேரை எவ்வளவு உயர்ந்த உள்ளம் இருந்திருந்தால் மன்னவர் ஒரு கொடிக்குக் கொடுத்திருப்பார்! அந்தக் கொடிக்கு அழகான பந்தல் அமைந்திருந்தாலே போதும். ஆனால், அந்த நேரத்தில் பந்தல் அமைக்க ஆளைத் தேடாது, தான் அமர்ந்திருந்த தேரையே கொடுத்தாரே மன்னவர்! இவர் அல்லவா வள்ளல்’ என்று எண்ணியபடி, அந்தத் தேரைச் சுற்றிச் சுற்றி வந்தாள் கதலி. 

தேரினுடைய ஒவ்வொரு பகுதியையும் பார்த் தாள். அதன் நான்கு சக்கரங்களும் பூமியோடு ஒன்றி ஒட்டிக் கொண்டு நிற்பதனைக் கண்டாள். அந்தத் தேரைத் தொட்டு வணங்கினாள். 

“மன்னவன் முல்லைக் கொடிக்குத் தேர் தருகின்றான். ஆயின், அவனது உள்ளம் எவ்வளவு மென்மையானது. எவ்வளவு கலைத்தன்மை பொருந்தியது. அதிலே வள்ளல் தன்மை மட்டுமில்லை, ஒரு கலைஞனுடைய உயர்ந்த மனப்பான்மை அடங்கியிருக்கிறது.” 

மன்னவன் பாரி, உயர்ந்த கலைஞன். அவன் தன் மனையாட்டி இறந்ததற்குப் பிறகு மறு வாழ்க்கை இல்லாமல் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறானே, அதுவும் எவ்வளவு பக்குவமானது. எல்லாவற்றையும் அந்த ஒரு அந்த ஒரு சில நேரங்களில் சிந்தித்தபடியே சுற்றிச் சுற்றி வந்தாள் கதலி. 

“நீ எத்தனை தடவை சுற்றிப் பார்த்தாலும், பார்க்கப் போவது ஒரே ஒரு தேரைத்தான்” என்றான் வானவரையன். 

அந்தத் தேரையே பார்த்து முடித்துவிட்ட பாவனையில், “வேறு ஏதேனும் நான் பார்க்க வேண்டிய இடம் இருக்கிறதா?” என்று கேட்டாள் கதலி 

“இந்த மலை நாட்டில் எல்லாமே நீ பார்க்க வேண்டிய இடம் தான்; எங்களுடைய மன்னவரைத் தாலாட்டுவது போல் அமைந்து இருக்கின்ற இந்த மலை ஒவ்வொரு நாளும் உணவூட்டி, உயிரூட்டிக் கொண்டு இருக்கிறது. இந்த மலையிலே வாழ்கின்ற மக்கள் குறைந்த ஆயுளில் சாவதில்லை. குறைந்த அளவு அவர்கள் நூறாண்டு காலமாவது வாழ்ந்தே முடிக்கின்றார்கள். மிகச் சிறிய வயதிலேயே இறந்து போவோர் இந்த மலையிலே குறைவு,தெரியுமா உனக்கு?” என்றான் அவன். 

“போர் இல்லாமல் நாடு அமைதியாக இருக்குமானால், அந்த அமைதியான சூழ்நிலையில், மக்கள் நீண்ட நாள் வாழ முடியும். அதிலேயும் மலைவாழ் மக்கள் வாழ முடியும் என்று நானும் நம்புகிறேன்” என்றாள் கதலி. 

இருவரும் அந்த மலை முழுவதையும் சுற்றிப் பார்த்தார்கள். மாவடிச்சுனைக்கு அவர்கள் சென்ற போது, ‘என்னிடம் கொஞ்சம் குளிக்க மாட்டாயா?’ என்று கேட்பது போல் அந்த மாவடிச்சுனை மேலும் கீழுமாக அசைந்து அசைந்து ஆடிற்று. 

“நான் இதிலே குளிக்கட்டுமா” என்று கேட்டாள் கதலி. 

“நீ குளி, நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்” என்றான் அவன். 

“இதென்ன வேடிக்கை, நீங்கள் சற்று மறைவாக இருந்தால் தானே, நான் குளிக்க முடியும்!” என்றாள் கதலி. 

“கணவனுக்கு மனைவி மறைவாகவும், மனைவிக்குக் கணவன் மறைவாகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது மற்றவர்களுக்கு மத்தியிலேதான். இங்கு தாராளமாக நீ குளிக்கலாம்” என்றான் வானவரையன். 

“இது நன்றாக இருக்கிறது! எந்தக் குலமங்கையும் அதற்கு ஒப்பமாட்டாள். அவளுக்கு வயதே ஆகிவிட்டால் கூட, கடைசி வரையிலே கணவனுக்கு முன்னே நாணமுற்றவளாகத்தான் இருப்பாள். எங்கே கொஞ்சம் மறைந்திருங்கள்” என்றாள் அவள். 

அவன் மறைந்திருக்கிறேன் என்று சொல்லி விட்டு மரத்தின் பின்னாலே போய் உட்கார்ந்தான். ஆடைகளைக் களைந்து, நீரிலே தலையை நீட்டினாள் கதலி. 

அடிக்கடி அவன் தன்னைப் பார்த்து விடுவானோ என்பது போல் பயந்தபடி, இந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள். இவனும் மெதுவாக அவளைப் பார்க்கவேண்டும் போல் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தான். “சே! சே! என்ன இது? நீங்கள் கொஞ்சம் எழுந்து போய்விடுங்கள். நான் மெதுவாக நடந்தே வந்து விடுகிறேன்” என்று நாணத்தோடு சொன்னாள் கதலி. 

“சரி, நான் போய்விடுகிறேன்!” என்று சத்தம் போட்டுக் கொண்டே எழுந்து அவன், நேரே அவள் குளித்துக் கொண்டிருக்கும் இடத்தை நோக்கி வந்தான். 

“அய்யோ, அய்யோ! என்ன இது” என்று பதறிப்போய் துடித்தாள் அவள். 

“நான் போய்க் கொண்டு தானே இருக்கிறேன்” என்றான் அவன். 

“அய்யோ! நீங்கள் வந்து கொண்டு அல்லவா இருக்கிறீர்கள்” என்று கதறினாள் அவள். 

“நான் வந்தால் என்ன, போனால் என்ன, நான் பார்க்க வேண்டிய உடல்தானே இது! என்னைத் தவிர இந்த மலையும் பார்க்கும்போது, இந்த மரங்களும் பார்க்கும் போது, இந்தச் சுனையும் தழுவும் போது, எனக்கு மட்டும் அந்த உரிமை இல்லாமல் போய் விடுமா?” என்று தானும் ஆடைகளைக் களைந்து குளிப்பதற்கு இறங்கினான் அவன். 

நாணம் தாங்காத கதலி, ஓடிப்போய் தனது. ஆடைகளை எடுத்து, தன்னை மறைத்துக்கொண்டு, “நீங்கள் எப்படி வேண்டுமானாலும் குளியுங்கள், நான் உண்மையில் மறைந்தே இருக்கிறேன்” என்று மரத்தின் பின்னே வந்து உட்கார்ந்தாள். 

அவனும் நன்றாகக் குளித்த பிறகு, இருவரும் ஆடைகளை மாற்றிக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டார்கள். 

“எவ்வளவு இனிமையான சூழ்நிலை; எவ்வளவு அற்புதமான மலை! இந்த வாழ்க்கை யாருக்கு அமைகிறதோ, அவர்கள் உண்மையிலேயே நீண்ட நாள் வாழத்தான் செய்வார்கள்” என்று வியந்து கொண்டே வந்தாள் கதலி. 

“இந்த மலை மட்டும் அழகல்ல, இந்த மலைக்கு நீ வந்ததே தனி அழகு! என்னுடைய வாழ்க்கையில் இனிமேல் நான் கோழை ஆகிவிடுவேனோ என்று நான் அஞ்சுகிறேன். ஏனென்றால், ஒரு பெண்ணினுடைய கடைப்பார்வை படும் பொழுது தான் மனிதனுடைய உள்ளத்து வீரங்கள் எல்லாம் ஒடுங்கி விடுகின்றன. அந்த வீரம் முழுவதும், மனைவியினுடைய காதலில் ஐக்கியப்பட்டு விடுகிறது. அதன் விளைவாக அவன் வாள் தூக்குவதற்குக்கூட அஞ்சுகிறான்” என்றான் வானவரையன். 

“நீங்கள் சொல்வது தவறான தத்துவம். எப்போது நல்ல மனைவி வாய்த்துவிடுகின்றாளோ, அப்போது வீரன் இன்னும் பல மடங்கு வீரனாகி விடுகிறான். என்னுடைய வருகையும், என்னுடைய வாழ்க்கையும், உங்களுடைய அரவணைப்பும், எனக்குக் கிடைத்ததும், எந்த நேரத்திலும் உங்களை மேலும் மேலும் வீரனாக்குமே அல்லாது கோழை ஆக்காது” என்றாள் கதலி. 

“என்னை அவை வீரனாக்குமானால், அந்த வீரம், இந்த மலையைக் காக்கவே பயன்படும்” என்றான் அவன். 

“இந்த மலையை நீங்கள் காக்கும்போது, அதைக் காக்கக் கூடிய திறனோடுதான் நானும் வந்திருக்கிறேன்” என்றாள் அவள். 

“நான்தான் பார்த்தேனே, காவிரி நதியை எதிர்த்து நீச்சலிடவும், அடித்துக் கொண்டு போகிற ஓர் ஆடவனைத் தானே தூக்கி வருகிறேன், என்று சொல்லிவிட்டு நதியிலே விழவும், உனக்கு அவ்வளவு துணிச்சல் இருக்கும்போது, இந்த மலை என்ன, இதுபோன்று பத்து மலைகளைக் காப்பாற்றக் கூடிய துணிவு உனக்கு உண்டு என்பதை நான் நன்கு அறிவேன்” என்றான் அவன். 

“நாம் இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டேயிருந்தால், அது நன்றாக இருக்கிறதா?” என்று இடைமறித்துக் கேட்டாள் கதலி.

“அதிலேதானே சுகமே இருக்கிறது!” என்றான் அவன். 

“இப்படி தினசரி புகழ்ந்து கொண்டே இருந்தோமானால் வாழ்க்கை மிகச் சீக்கிரத்தில் முடிந்து விடும். அதனாலேதான், இலக்கியத்திலே ‘ஊடல்’ என்று ஒன்றை வைத்தார்கள். இங்கே நான் கொஞ்சம் கோபம் கொள்கிறேன். நீங்கள் கொஞ்சம் வேகமாகப் போங்கள், பார்க்கலாம்…!” என்றாள் அவள். 

“ஐயையோ! கோபம் கொண்டால், நான் சரணாகதி அடைந்து விடுவேன்” என்றான் அவன். 

“யார் சரண் அடைகிறார்களோ, யார் ஊடலில் தோற்று விடுகிறார்களோ, அவர்களே வென்று விடுகிறார்கள் என்பது திருக்குறள் அல்லவா!” என்றாள் அவள். 

“ஆமாம்! அறியாமல் போனேன்! நானே தோற்றுவிடுகிறேன்” என்றான் அவன். 

“இல்லை, இல்லை; நான்தான் தோல்வி அடைவேன்!” என்றாள் அவள். 

“தோல்வி அடைவதில் இவ்வளவு போட்டியா?” என்று கேட்டான் அவன். 

“தோல்வி அடைந்தால்தானே கூடல் சுகமாக இருக்குமாம்” என்றாள் அவள். 

இருவரும் இல்லத்துக்குள் நுழைந்தபோது,  “இது பட்டப் பகல்” என்பதனை அவனுக்கு நினைவுபடுத்தினாள், அவள். 

“புதிதாகத் திருமணம் ஆன தம்பதிகளுக்கு பகலுமில்லை இரவுமில்லை” என்று கதவைச் சாத்தினான் அவன். 

– தொடரும்…

– பாரிமலைக் கொடி (நாவல்), முதற் பதிப்பு: 1993, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *