கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 29, 2023
பார்வையிட்டோர்: 2,412 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 17-20 | அத்தியாயம் 21-24 | அத்தியாயம் 25-27

21.விசித்திரச் செயல்கள் 

காஞ்சி நோக்கிப் புறப்பட்ட தங்கள் மூவரில் குமாரனே அதிக சிந்தனையில் ஆழ்ந்து விட்டதையும், அடுத்த நான்கு நாட்களில் களப்பிரர் காஞ்சியைத் தாக்கக்கூடும் என்று தான் சொல்லியும் அதைப்பற்றி அவன் பொருட்படுத்தாததையும் கண்ட பெரிய மறவன், ‘குமாரன் அப்படி என்னதான் யோசிப்பான்?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். ஒருவேளை பல்லவ பீடத்தைப் பார்த்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் அவனை ஊமையாகச் செய்திருக்குமோ என்றும் சிந்தித்தான். தன்மீது குறுவாளை வீசியவன் ஓடிவிட்டதாகத் தான் நினைத்திருக்க, ‘அவன் ஓடவில்லை, உங்களுக்காகக் காத்திருக்கிறான்’ என்று சொன்னானே குமாரன், அதெப்படி அவனுக்குத் தெரிந்தது? புரவி ஓடிய குளம்பொலி நன்றாக எங்கள் காதில் விழுந்ததே’ என்றும் கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்ற பெரிய மறவன் பல விஷயங்களுக்கு விடை காணாமல் தவித்தான். ஆகவே நடந்த விவரங்களை அறிய குமாரனை நேராகவே வினவ முற்பட்டு, “குமாரா!” என்று அழைத்தான். 

பெரிய மறவன் புரவிக்கும் தாமரைச்செல்வியின் புரவிக்கும் இடையே தனது புரவியை நடத்திச் சென்ற குமாரன் சட்டென்று தனது சிந்தனையைக் கலைத்துக் கொண்டு, “என்ன மாமா?” என்று கேட்டான். 

அவன் தன்னை மாமாவென்று அழைத்தது பேரின்பமாயிருந்தது பெரிய மறவனுக்கு. எத்தனை நெருக்கடியையும் சமாளிக்கவல்ல குமாரனைப் போன்ற மாவீரன் தனக்கு மருமகனாகக் கிடைத்துவிட்டான் என்ற நினைப்பு அவனுக்குப் பெரும் ஆறுதலை அளித்தது. அத்துடன் தான் கண்ணை மூடினாலும் தாமரைச் செல்விக்கு ஒரு காவலன் ஏற்பட்டு விட்டான் என்ற எண்ணம் அவனுக்குப் பெரும்மனச்சாந்தியை அளித்ததால், “குமாரா! மருமகனே!’ என்று வாயார மிக அன்புடன் அழைத்தான் பெரிய மறவன். அந்த இருவரும் புது உறவைப் பரிமாறிக் கொண்டதைக் கேட்ட தாமரைச்செல்வி தலைகுனிந்து வெட்கப் புன்முறுவல் செய்தாள். 

அந்தப் புன்முறுவலைத் தனது கடைக்கண்ணால் கவனிக்கவே செய்த குமாரன் அவள் புரவியுடன் தனது புரவியை நெருங்கவிட்டு, அவள் இடையைத் தனது வலது கையால் கிள்ளினான். இடது கை சேணத்தைப் பிடித்திருந்த காரணத்தால், அவன் இடையைக் கிள்ளியதும் தனது புரவியைச் சற்று நகர்த்திய தாமரைச்செல்வி, “உம்” என்று ஒரு எச்சரிக்கை ஒலியையும் கிளப்பினாள். 

பெரிய மறவன் திரும்பி, “என்னம்மா?” என்று வினவியதும் குமாரன் தனது கையை அகற்றிக்கொள்ள, “ஒன்றுமில்லை அப்பா!’ என்று கூறினாள் தாமரைச்செல்வி. 

மருமகன் ஏதோ விஷமம் செய்கிறானென்பதைப் புரிந்து கொண்டாலும் அதைப்பற்றி உற்சாகமேகொண்ட பெரிய மறவன், “குமாரா! உன்னை சற்று முன்பு அழைத்தேன்” என்று சொன்னான். 

“அழைத்தீர்களா?” என்று வினவினான் குமாரன். 

“ஆமாம். உன்னிடம் சில விஷயங்களைக் கேட்க இஷ்டப் பட்டேன்” என்றான் பெரிய மறவன். 

“இப்பொழுதுதான் கேளுங்களேன்” என்ற குமாரன் சிந்தனையிலிருந்து சிறிது மீண்டான். 

“நாம் குகையிலிருந்தபோது…?” 

“உம்.” 

“வெளியே புரவியின் குளம்பொலி வேகமாகக் கேட்டது.” 

“ஆம்.” 

“எதிரி ஓடிவிட்டானென்று நான் சொன்னேன்.” 

“சொன்னீர்கள்.” 

”நீ அதை மறுத்து, எதிரி ஓடவில்லையென்றும் எனக்காகக் காத்திருக்கிறானென்றும் சொன்னாய்.” 

“ஆம்.”

“நீ சொன்னதுதான் சரியாயிற்று.” 

“அது ஒன்றும் வியக்கத்தக்க விஷயமல்லவே” என்றான் குமாரன். 

“விரைந்த புரவி மீண்டும் திரும்புமென்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று பெரிய மறவன் கேட்டான். 

“உங்களைத் தீர்க்காமல் அவன் போகமாட்டானென்பதை ஊகிக்க அதிக அறிவு தேவையில்லை. அவனைத் தவிர பல்லவ பீடத்தின் இருப்பிடத்தை நீங்கள் ஒருவர் தான் அறிந்திருக்கிறீர்கள் என்பது அவனுக்குத் தெரிந்த பிறகு உங்களை எப்படியும் தீர்த்து விடத் தீர்மானிப்பானென்பதை ஊகித்துக் கொண்டேன். அதுவும் உங்களைத் தீர்க்க நேற்று இரவை விடச் சிறந்த சமயம் கிடையாது. ஆகவே புரவியை நமது காது கேட்க வேகமாகச் சுற்றிப் பாறைக்குப்பின்னால் நின்றிருக்கிறான். புரவியின் குளம்பொலி கேட்டதும் அவன் ஓடி விட்டதாக நினைத்து நீங்கள் தலையை வெளியே காட்டியதும் உங்கள் மீது குறுவாளெறியச் சித்தமாக நின்றான். குறுவாளையும் எறிந்தான். அவன் எதிர் பார்க்காதது இரண்டு குளம்பொலியைக் கேட்டு நீங்கள் ஏமாறமாட்டீர் களென்பது ஒன்று. குறுவாளெறிந்த பின் நீங்கள் தப்பமாட்டீர் களென்பது இரண்டு. நீங்கள் முன்னெச்சரிக்கையுடனிருந்து வேகமாக வரும்குறுவாளின் பிடியைப் பக்கவாட்டில் பற்ற உருண்டு விட்ட ஒலி கேட்ட பின்பு அவன் புறப்பட்டுப் போய்விட்டான். இது தான் நடந்தது” என்று விளக்கினான் குமாரன். 

இந்த விளக்கத்துக்குப் பிறகும் ஒரு கேள்வி கேட்டான் பெரிய மறவன்: “நான் உருண்டதும் நான் செத்துவிட்டேனா இல்லையா என்பதை ஏன் வந்து பார்க்கவில்லை அவன்?” என்று. 

“இம்முறை நீங்கள் தனியாக வரவில்லை. நாங்களிருவரும் வந்திருக்கிறோம். ஆகையால் தனது செயலின் முடிவை அறிய முயலவில்லை அவன்” என்றான் குமாரன். 

“நான் உயிருடனிருப்பது அவனுக்குத் தெரியுமா?” -இன்னொரு கேள்வியைத் தொடுத்தான் பெரியமறவன். 

“தெரியும்.” 

“அதை எப்படி ஊகிக்கிறாய்?”. 

“உங்கள் உயிர் போயிருந்தால் தாமரைச்செல்வி கதறியிருப்பா ளென்பதை யாரும் ஊகிக்கலாம். அப்படி எந்த அலறலும் இல்லாததால் உங்களுக்குக் காயம் பட்டிருக்கலாம் என்றுதான் நினைத்திருப்பான்.” 

இப்படித் திட்டமாகக் குமாரன் சொல்வதைக்கேட்ட பெரிய மறவனின் வியப்பு உச்ச நிலையை அடைந்தது. எதிரியின் நினைப்புகளையெல்லாம் தானே எதிரிபோல் சொல்வதைக் கேட்ட பெரிய மறவன், “குமாரா! நான் உயிரோடு இருப்பது தெரிந்தால் எதிரி என்னை சும்மா விடுவானா?” என்று விசாரித்தான், 

“மாட்டான். ஆனால் அதற்கும் மாற்று இருக்கிறது” என்று குமாரன் சொன்னாலும் என்ன மாற்று என்பதை அவன் சொல்ல வில்லை. 

அன்று முழுவதும் மௌனமாகவே பயணம் செய்த குமாரன் காஞ்சியின் முகப்புக்காடு வந்ததும் பெரியமறவனையும் செல்வியையும் இறங்கச் சொல்லி, அங்கிருந்த ஒரு புதருக்கருகில் அழைத்துச் சென்றான். அங்கு பெரிய மறவனை எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்லிவிட்டு எங்கோ சென்று ஒரு முயலை அடிததுக் கொண்டு வந்தான். பெரிய மறவனைப் படுக்கச் சொல்லி முயல் ரத்தத்தை அவன் மார்பின் வலது பக்கத்தில் கொட்டி தாமரைச் செல்வியின் உடையிலிருந்து துணியைக் கிழித்து மார்பில் பெரிய கட்டுப் போட்டான். இரவு இரண்டாம் ஜாமத்தை எட்டியதும் பெரிய மறவனை அவனது புரவியின் மீது குனிந்து படுக்கச் செய்து சேணத்தால் அவன் உடலைக் கட்டினான். பிறகு தாமரைச் செல்வியை புரவியிலேறச் சொல்லி தங்கள் இருபுரவிகளுக்கும் இடையில் பெரிய மறவன் புரவியை விட்டு அதைத் தங்கள் இருவர் புரவிகளுடன் நடக்கச் செய்தான். இந்த நிலையில் காஞ்சி மாநகருக்குள் இரவின் மூன்றாம் ஜாமத்தில் புகுந்தான். மூன்று புரவிகளும் மிக மெதுவாக நடந்தன. இந்த ஊர்வலத்தை காஞ்சியின் புறநகர்க்காவலர் கண்டு என்னவென்று விசாரிக்க, “பெரிய மறவன் மீது யாரோ குறுவாளெறிந்து மரணக்காயப்படுத்தி விட்டார்கள்!” என்று வதந்தியைப் பரப்பிய வண்ணம் மேட்டுக் குடிசையை அடைந்தான் குமாரன். 

அதுவரை புரவி மீது பிணம்போல் படுத்துக் கிடந்த பெரிய மறவன் சட்டென்று எழுந்திருக்க முயன்றதும் அவனைப்பிடித்து மறுபடியும் புரவியில் அழுத்திய குமாரன், தனது புரவியிலிருந்து குதித்துப் பெரிய மறவனைத் தனது தோள்மீது போட்டுக்கொண்டு மேட்டின் மீது ஏறி குடிசைக்குள் சென்று அவனைப் படுக்க வைத்தான். பெரிய மறவனுக்கு அந்த நாடகத்துக்குக் காரணம் புரிந்திருந்தாலும் இயற்கையாக இருந்த உணர்வின் காரணமாக, “இப்படிப் பிணம் போல் கிடக்க என்னால் முடியாது” என்று சீறினான், சற்று எழுந்திருக்கவும் முயன்றான். அவனைப் பிடித்து அழுத்தி மீண்டும் படுக்க வைத்த குமாரன், “மாமா! நீங்கள் பிணம் போல் நடிக்காவிட்டால் நிஜமாகவே பிணமாக்க உங்கள் எதிரி முயல்வான். ஆகையால் சொல்கிறபடி செய்யுங்கள்” என்று அதட்டினான். செல்வியையும் நோக்கி, “நீ குடிசை வாயிலை விட்டு நகராதே. யார் வந்தாலும் உன் தந்தைக்கு சுய உணர்வு இல்லை யென்று சொல்லிவிடு. உணவு மாத்திரம் கொடுத்துக் கொண்டிரு. இவரை வெளியே தலைகாட்ட விடாதே. நான் நகரத்துக்குள் போய் வருகிறேன்” என்றான். 

”நான் நீராடுவது எப்படி?” என்று கேட்டான் பெரிய மறவன். 

“இரண்டு நாட்களுக்கு நீராட்டம் கிடையாது” என்று கூறிவிட்டுப் புறப்பட்டான் குமாரன். 

காஞ்சி மாநகர் விடியற்காலையிலேயே உயிர் பெற்றெழுந்தது. பறவையினங்கள் திருவெஃகாவின் கோபுரப் பொந்துகளிலிருந்து தலையை நீட்டிக் கூவின. பெரிய மணியும் உஷத் காலத்தை வலியுறுத்தப் பெரிதாக அடிக்கப்பட்டது. எங்கும் மக்கள் நடமாட்டம் அதிகரித்தது. நகருக்குள் புகுந்ததும் குமாரன் நீதிபதியின் மாளிகைக்கு பின்புறமிருந்த வாவியில் நீராடிப் புத்துடை அணிந்து நிருபவர்மரைப் பார்க்கச் சென்றான்.நிருப வர்மரும் முன்னதாகவே நீராடி நெற்றியில் கோபி சந்தனம் தீட்டிப் புத்துடை அணிந்து ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார். குமாரன் வந்து வணங்கியதும். ‘குமாரா! எப்படியிருந்தது பயணம்?” என்று விசாரித்தார். 

“பாதகமில்லை. நீங்களும் வந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். நீங்கள்தான் ஏமாற்றி விட்டீர்கள்” என்று கூறினான் வருத்தத்துடன். 

“நான் வரமுடியாததற்குக் காரணமிருந்தது” என்றார் நிருபவர்மர். 

“என்ன காரணம் எசமான்?” என்று வினவினான் குமாரன். “இன்னும் சில தினங்களுக்குள் களப்பிரர் காஞ்சியைத் தாக்குவார்களென்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார் நீதிபதி. 

“எப்படித் தெரியும் தங்களுக்கு?” 

“காவலர் தலைவன் சொன்னான்” என்றார் நீதிபதி. 

“அப்படியானால் அதற்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டாமா?” -குமாரன் கேட்டான் கவலையுடன். 

“அது காவலர் தலைவன் பொறுப்பல்லவா?” 

“நகரப் பாதுகாப்பு என்றால் பல்லவ குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் உங்களுக்குப் பொறுப்பு உண்டல்லவா?” என்று குமாரன் வினவினான். 

”உண்டு.” 

“பாதுகாப்பு விவரங்களை நீங்கள் அறிய வேண்டாமா?” 

“எப்பொழுது அறிவது? என்ன செய்வது? என்பது எனக்குத் தெரியும்” என்றார் நீதிபதி. 

“இந்த விஷயத்தை மன்னருக்குத் தெரியப்படுத்தி உதவி கேட்டால் என்ன?” 

“கூடாது. இந்தச் சிறு விஷயத்துக்கு மன்னரைத் தொந்தரவு செய்வது தவறு. நம்மால் முடியாவிட்டால் அல்லவா மன்னரிடம் உதவி கேட்க வேண்டும்?” என்ற நீதிபதி, “குமாரா! எதற்கும் கவலைப்படாதே. எதையும் சமாளிக்க நான் இருக்கிறேன்” என்றார். 

“அவருக்குத் தலைவணங்கிவிட்டுக் காவலர் தலைவனை சந்திக்க குமாரன் சென்றான். காவலர் தலைவன் பெரும் குழப்பத்தில் இருந்தான். குமாரனைக் கண்டதும், “உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றான். 

“என்னையா?” 

“ஆமாம்.” 

”எதற்கு?” 

“சீக்கிரம் இங்கு களப்பிரர் தாக்குதல் இருக்குமாம்.” 

“யார் சொன்னது?” 

“நீதிபதி.” 

இதைக்கேட்ட குமாரன் சிறிது அதிர்ச்சியடைந்தான். 

“அப்படியானால் காஞ்சியைப் பாதுகாக்க ஏற்பாடு ஏதாவது நடந்திருக்கிறதா?” என்று வினவினான். 

“பாதுகாப்பை நீதிபதி ஏற்றுக்கொண்டு விட்டார். நாம் அவர் சொற்படி நடந்தால் போதும்” என்றான் காவலர் தலைவன். 

”சரி! உங்களிடமிருக்கும் இரண்டாயிரம் வீரர்களை திரட்டுங்கள்” என்றான் குமாரன். 

“படை திரட்ட உத்தரவில்லை நீதிபதியிடமிருந்து” என்றான் காவலர் தலைவன். 

“படை திரட்ட உத்திரவிடும்படி என்னிடம் சொல்லியனுப்பி யிருக்கிறார் நீதிபதி” என்றான் குமாரன். 

காவலர் தலைவன் முகத்தில் பெரும் குழப்பம் தெரிந்தது: “எனக்கு எதுவும் விளங்கவில்லை. விநாடிக்கு ஒரு உத்தரவிட்டால் எதை நிறைவேற்றுவது?” என்று அலுத்துக்கொண்டான். 

“இதுதான் அவர். பிறப்பித்த. கடைசி உத்தரவு, இதை நிறைவேற்றுங்கள். இன்று மாலை நான் படைகளைப் பார்வையிடுகிறேன்” என்று திட்டவட்டமாகவும் அதிகாரத் தோரணையிலும் கூறினான் குமாரன். 

22.நீதிபதியின் நிலை 

களப்பிரர் படையெடுப்பு நான்கு நாட்களில் ஏற்படும் என்று காஞ்சியின் காவலன் அறிந்திருந்தும், அவன் காஞ்சியின் பாதுகாப்பை ஏன் பலப்படுத்தவில்லை? என்பதைப்பற்றிச் சிந்தித்தான் குமாரன். தற்காப்பு ஏற்பாடுகள் தேவையில்லை என்று நீதிபதி கூறிவிட்டதாகக் காஞ்சியின் காவலன் சொன்னதை எண்ணிச் சிறிது வியப்பும் அடைந்தான். ஆனால் அந்த வியப்பு அவனுக்கு பிற்பகல் வரையிலுமே இருந்தது. பிற்பகலில் அவனைத் தேடித் தானாகவே வந்த காஞ்சியின் காவலன், நீதிபதி தமது உத்தரவை மாற்றிவிட்டாரென்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லிவிட்டாரென்றும் கூறினான். 

அவன் சொன்னதைக் கேட்ட குமாரன் முகத்தில் சிறிதும் வியப்பைக் காட்டாமல், “அப்படியா?’ என்று சர்வ சாதாரணமாகக் கேட்டான். 

‘ஆம்” -காஞ்சியின் காவலன் முகத்தில் பெரும் குழப்பம் இருந்தது. குரலிலும் சந்தேகம் ஒலித்தது. 

குமாரன் முகத்தில் மட்டும் எந்தவித மாறுதலுமில்லை. “இந்த உத்தரவை எப்பொழுது பிறப்பித்தார் நீதிபதி?” என்று வினவினான் குமாரன், உணர்ச்சி ஏதுமற்ற குரலில்.

“இன்று காலையில் நீங்கள் என்னைச் சந்தித்தீர்களல்லவா?” 

“ஆம்.” 

“அதைப்போய் அவரிடம் கேட்டேன்.” 

“என்ன கேட்டீர்?” 

“காலையில்தானே பாதுகாப்பு ஏற்பாடுகள் வேண்டாமென்று சொன்னீர்கள்! அதை ஏன் பகலுக்குள் மாற்றி வீட்டீர்கள்? என்று விசாரித்தேன் அவர் இல்லம் சென்று ” -இதைச் சொல்லிவிட்டு சிறிது தயங்கினான் காவலர் தலைவன். 

“அதற்கு அவர் என்ன பதில் சொன்னார்?” என்று குமாரன் கேட்டான். 

“மாற்றியதாக யார் சொன்னது? என்று விசாரித்தார்” என்று காவலர் தலைவன் பதில் சொன்னான். 

“நான் சொன்னதாகச் சொன்னீர்களா?” 

“இல்லை.” 

“வேறு என்ன சொன்னீர்கள்?” 

“இதுவரை எனக்கு நேரடியாக உத்தரவுகளைப் பிறப்பித்து வந்த நீங்கள், இன்று மட்டும் புது உத்தரவை உங்கள் காவலர் தலைவரிடம் ஏன் சொல்லியனுப்பினீர்கள்? என்று காரணம் கேட்டேன.’ 

“அவர் விநாடிகூட யோசிக்கவில்லை. ‘ஆம் ஆம், சொல்லியனுப்பினேன்” என்றார். ‘நம்மைவிடக் காஞ்சியைப் பாதுகாப்பதில் குமாரனுக்கு அக்கறை இருக்கிறது. ஆகவே அவன் எதைச்சொன்னாலும் அவன் சொல்கிறபடி செய்துவிடு. ஆனால் என்ன சொல்கிறான் என்பதை மட்டும் அவ்வப்பொழுது எனக்குத் தெரியப்படுத்து என்றார்” என்ற காஞ்சியின் காவலர் தலைவன், “உங்கள் உத்தரவைத் தனது உத்தரவாக பாவிக்கும்படியும் வலியுறுத்தினார். இது எனக்குப் புதுமையாயிருக்கிறது. யாரையும் நம்பாத நீதிபதி தங்களை இத்தனை தூரத்துக்கு ஏன் நம்புகிறார்? என்பது எனக்கு விசித்திரமாயிருக்கிறது” என்றும் கூறினான். 

“அதில் ஒன்றும் வியப்பில்லை. இத்தனை நாள் அவர் பணிகளை நிறைவேற்ற நம்பிக்கையான மனிதன் யாரும் கிடைக்கவில்லை. இப்பொழுது நான் கிடைத்துவிட்டதால் அவர் இனி என் மூலமாக உத்தரவிட்டுத் தமது பதவிப் பளுவைக் குறைத்துக்கொள்ளப் பார்க்கிறார்” என்றான் குமாரன். 

காஞ்சியின் காவலர் தலைவன் மலைத்தான். “உங்களைச் சில நாட்களாகத்தான் நீதிபதிக்குத் தெரியும்? அப்படியிருக்க இத்தனை நம்பிக்கை ஏற்பட என்ன காரணம்?” என்று வினவினான். 

“அதை அவரைத்தான் கேட்க வேண்டும்” என்ற குமாரன், “நீங்கள் ஏற்பாடுகளை கவனியுங்கள். நான் மீண்டும் உங்களை மாலையில் சந்திக்கிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றான். 

அங்கிருந்து கிளம்பியவன் நீதிபதியிடம் வந்து அன்று மட்டும் தனக்குச் சிறிது ஓய்வு வேண்டுமென்று கேட்டான். ‘ஓய்வா? எதற்கு?” என்று கேட்டார் நீதிபதி. 

“காஞ்சியிலிருக்கும் மருத்துவர் யாரையாவது அழைத்துச் சென்று பெரியமறவனைக் கவனிக்கச் செய்ய வேண்டும்” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினான் குமாரன். 

நீதிபதியின் கண்களில் ஏதோ ஒளி ஒரு விநாடி பளிச்சிட்டு மறைந்தது.’பெரியமறவனுக்கு என்ன வியாதி? நன்றாகத்தானே இருந்தான்?” என்று நீதிபதி கேட்டார் அக்கறையுடன். 

“நேற்றைய நிகழ்ச்சிகளை நான் உங்களுக்குச் சொல்லவில்லை. மன்னிக்க வேண்டும்” என்றான் குமாரன். 

“இப்பொழுதுதான் சொல்லேன்.” 

“பல்லவ பீடத்தைப் பார்வையிட நாங்கள் போயிருந் தோமல்லவா?” 

‘”ஆம்.” 

“அதன் ரகசியம், அது இருக்குமிடம் பெரிய மறவனைத் தவிர வேறு ஒருவனுக்கும் தெரிந்திருக்கிறது.” 

”என்ன?’ அதிர்ச்சியடைந்து தமது ஆசனத்திலிருந்து எழுந்திருந்தார் நீதிபதி. “உண்மையாகவா?” என்று கவலையுடன் விசாரிக்கவும் செய்தார். 

“ஆம் நீதிபதியவர்களே! அவன் அறிந்திருந்தது மட்டுமல்ல, பெரியமறவனைக் கொல்லவும் முயன்றான்…” என்று நிதானித்துப் பேசினான் குமாரன். 

நீதிபதி முகத்தில் கவலையைக் காட்டினார். “இதை நீ காலையில் சொல்லவில்லையே?” என்று கேட்டார் குரலிலும் கவலையைக் காட்டி. 

குமாரனும் துக்கச் சாயையை முகத்தில் படரவிட்டுக் கொண்டான், “தெரிந்தால் நீங்கள் கவலைப்படுவீர்கள் என்று சொல்லவில்லை. பல்லவ பீடத்தின் ரகசியம் அவனுக்குத் தெரிந்திருந்தது மட்டுமல்ல; பெரியமறவனுக்கு அது தெரியு மென்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது” என்று குமாரன் துன்பத்தை முகத்திலும் படரவிட்டுக் கொண்டான். 

“அப்படியானால் ஆபத்து காஞ்சியை நெருங்கும்” என்றார் நீதிபதி. 

“களப்பிரர் படையெடுப்புக்குப் பல்லவ பீடமும் காரணமாயிருக்குமோ?” -குமாரன் குரலில் கவலை ஒலித்தது. 

“அதுதான் காரணமாயிருக்கும்” என்று வலியுறுத்திச் சொன்னார் நீதிபதி. 

“அப்படியானால் அவர்கள் கையாள் யாராவது இங்கிருக்க வேண்டும்.”

“இருக்கிறான் என்பதுதான் நமக்குத் தெரியுமே.” 

”யார் அது?” 

“காஞ்சியின் காவலர் தலைவன்தான். அவன்தான் மாடு திருடுகிறான். விற்கிறான், கள்ளுக்கடை நடந்துகிறான், வேறு யாராயிருக்க முடியும்?” 

“வேறு யாரும் இருக்க முடியாது. அவனைச் சிறைசெய்தால் என்ன?’ -இந்தக் கேள்வியை நேரடியாகவே கேட்டான் குமாரன். 

“அதைவிடக் காஞ்சியை இப்பொழுதே நேரிடையாகக் களப்பிரரிடம் ஒப்படைத்து விடலாம். காஞ்சியின் படைகள் அவன் சொற்படிதான் நடக்கும். தவிர, அவன் மன்னரால் நியமிக்கப் பட்டவன். நாம் மன்னர் உத்தரவின்றி அவனை அகற்ற முடியாது” என்று கடுமையான குரலில் பேசிய நீதிபதி திடீரென்று கடுமையைக் குரலிலிருந்து மாற்றிக் கொண்டு, “அது கிடக்கட்டும், பல்லவ பீடத்தை அறிந்த இன்னொருவனால் உங்கள் யாருக்கும் எந்தத் தீங்குமில்லையே?” என்று கேட்டார். 

“அதைத்தான் சொல்ல வந்தேன். பேச்சு வேறுதிசையில் போய்விட்டது. அந்த இன்னொருவன் குறுவாளொன்றை எறிந்து பெரிய மறவனைக் கொல்ல முயன்றான்” என்று வாசகத்தை குமாரன் முடிக்குமுன்பு, “அப்படியானால் பெரிய மறவன்…?” என்று அவரும் இழுத்தார். 

“இறக்கவில்லை. ஆனால் குறுவாள் மார்பில் பாய்ந்துவிட்டது. படுகாயத்திலிருக்கிறார். அவருக்குத் தான் மருத்துவரை அழைத்துச் செல்கிறேன்” என்று கூறினான். 

“சரி சரி. அதை முதலில் பார். இன்றென்ன? நாளைக்கு வேண்டுமானாலும் ஓய்வு எடுத்துக் கொள். ஆயிரமிருந்தாலும் பெரியமறவன் இந்த ஊரின் பெரிய தனக்காரன்…” 

“தாங்கள்?” 

“நானுந்தான். மறவர் வகுப்பில் அவன் தலைவன். அவனில்லாமல் காஞ்சியில் எதையும் சாதிப்பதும் கஷ்டம். அவனைப் பத்திரமாகப் பார். 

இதைக் கேட்டபின்பு தலைவணங்கி வெளியே சென்ற குமாரன் கொட்டடியிலிருந்து தனது புரவியை அழைத்துக்கொண்டு காஞ்சியின் மருத்துவர் இல்லம் சென்றான். அங்கு மருத்துவரைக் கண்டு பெரிய மறவன் மார்பில் குறுவாள் பாய்ந்துவிட்டதைச் சொல்லி அவசரமாக சிகிச்சைக்கு அழைத்தான். 

மருத்துவர் அப்பொழுது கலுவத்தில் மருந்து அரைத்துக் கொண்டிருந்தார். “மார்பிலா கத்தி பாய்ந்து விட்டது?” என்று வியப்புடன் வினவினார். 

“ஆம்.” 

“அப்படியும் உயிர் போகவில்லை?” 

“இல்லை.” 

“உம்!” என்று உயிர் போகாதது தவறு போல் பெருமூச்சுவிட்டு எழுந்து தமது பெரிய முண்டாசைத் தலையில் அணிந்து மார்பில் ருத்திராட்ச மாலையாட, வேட்டியை இழுத்துச் செருகிக்கொண்டு இரண்டு பெரிய கத்திகளையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார். 

“கத்திகள் எதற்கு?” என்று வினவினான் குமாரன். 

”உஷ்ணத்தை உஷ்ணத்தால் எடுக்க வேண்டும். கத்திக் காயத்தைக் கத்தியால் எடுக்க வேண்டும்” என்று வைத்திய முறையைச் சொன்னார் மருத்துவர். அத்துடன் பேச்சை நிறுத்திச் சில பச்சிலைகளையும் மெழுகு ஒன்றையும் கையில் எடுத்துக்கொண்டு கிளம்பினார். இருவரும் குடிசை மேட்டை அணுகியதும் மருத்துவரை வாயிலில் நிறுத்தி, தான் மட்டும் உள்ளே சென்றான் குமாரன். அவன் உட்புகுந்த சிறிது நேரத்திற்கெல்லாம் தாமரைச் செல்வி பெரிதாகக் கத்தினாள். குமாரன் வெளியே துயரங்கலந்த முகத்துடன் வந்து, ‘மருத்துவரே! உமக்கு இனி இங்கு வேலை யில்லை. பெரிய மறவர் கத்திக் காயத்துக்குப் பலியாகி விட்டார்” என்று கூறினான். 

“எதற்கும் நான் பார்க்கிறேனே?” என்றார் மருத்துவர். 

“பிணத்துக்கு வைத்தியம் செய்ய முடியுமா மருத்துவரே? அந்தப் பெண்ணின் துயரத்தை மேலும் கிளற வேண்டாம்” என்று திட்டமாகச் சொன்னான் குமாரன். 

“ஒருவன் இறந்து விட்டான் அல்லது இல்லை என்று சொல்ல மருத்துவருக்குத்தான் உரிமை உண்டு. எதற்கும் நாடியைப் பார்க்கிறேன்” என்று கேட்டார் மருத்துவர். 

“நாடித்துடிப்பு இல்லை. நான் பார்த்து விட்டேன்” என்று குமாரன் அவரைக் கையைப் பிடித்து மேட்டிலிருந்து இறக்கி அவரது புரவியில் ஏற்றிவிட்டு “நீங்கள் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்றும் உத்தரவிட்டான். 

மருத்துவர் முனகிக் கொண்டு புரவியை நடத்தியவர், நேராக இல்லம் செல்லாமல் நீதிபதியிடமும் காஞ்சிக் காவலர் தலைவனிடமும் சொல்லிவிட்டுப் பிறகே தமது இல்லத்தை அடைந்தார். அவர்சொன்னதை நிதானமாகக் கேட்டுக் கொண்டார். நீதிபதி. பிறகு காஞ்சிக் காவலர் தலைவனை அழைத்து ஏதோ உத்தரவுகளை இட்டார். அவன் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான். இருப்பினும் அவனது மனம் பெரிதும் குழம்பி நின்றது. “படைகளை காஞ்சிக்குத் தென்புறத்தில் நிறுத்தும்படி ஏன் நீதிபதி உத்தரவிட்டார்?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். பெரியமறவன் குடிசைக்கு ஏன் தீ வைக்க வேண்டும்? என்பதும் அவனுக்குப் புரியவில்லை. இருப்பினும் எவன் அழிந்தால் நமக்கென்ன என்று தீர்மானித்தான். துரிதமாக நீதிபதியின் கட்டளைகளை நிறைவேற்றவும் முனைந்தான். 

அன்று நள்ளிரவில் பெரிய மறவன் குடிசை தீப்பற்றி எரிந்தது. காட்டில் அது பெரிய ஜ்வாலையாக எரியவே அதன் புகை நீண்ட தூரம் தெரிந்தது. அதைக் கண்ட அக்கம்பக்கத்துக் குடிசைவாழ் மக்கள் அங்கு விரைந்தார்கள். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. உள்ளிருந்த பெரிய மறவனும் அவன் மகளும் தீக்கிரையாகி விட்டார்களென்று மக்கள் தீர்மானித்தார்கள். 

ஆனால் மறுநாள் காலைக்குள் தீயை அணைத்ததில் அங்கு மார்பில் கட்டுப்போட்ட பெரிய மறவன் உடல் மட்டும் கிடைத்தது. அதுவும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் முகம் கருகியிருந்தது. மார்புக் கட்டு எரிந்திருந்தும் உள்ளேயிருந்த ரத்தம் தோய்ந்த கத்தி கறுத்திருந்ததால் அந்தச் சடலம் பெரிய மறவனுடையதாகத்தான் இருக்கவேண்டும் என்று காவலர்கள் தீர்மானித்தார்கள். தாமரைச்செல்வியின் சடலம் அகப்படவில்லை. அவள் எங்கோ மறைந்து விட்டாள் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். “எங்கு மறைந்திருப்பாள்? குமாரனுடன் ஓடியிருப்பாள்” என்று வதந்தியையும் கிளப்பி விட்டார்கள். ஒருவனுக்குக் கெடுதல் விளையும்போது சமுதாயத்தின் கருணை எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாக அன்று காஞ்சி மக்கள் விளங்கினார்கள். 

மறுநாள் முழுவதும் காஞ்சியில் இதே பேச்சாக இருந்தது. “உங்கள் காவலர் தலைவன் எங்கே?” என்று நீதிபதியைப் பலர் நேரிடையாகவே கேட்டார்கள். 

“எனக்கெப்படித் தெரியும்?” என்றார் நீதிபதி. 

“உங்களுக்குத் தெரியாவிட்டால் காவலரை விட்டுத் தேடச் சொல்லுங்கள்’ என்றார்கள், ஊரின் நாட்டாண்மைக்காரர்கள் நால்வர். 

நீதிபதியின் வீட்டின் முன்பக்கத்தில் கூட்டம் அதிகமாயிருந்தது. அவர்களை அடக்க நீதிபதி சொன்னார். “அவன் எங்கும் ஓட மாட்டான். ஓடுவது அவன் சுபாவமல்ல” என்று. 

அவர் சொன்னதை ஆமோதிப்பவன்போல் நீதிபதி மாளிகைக் குள்ளிருந்து குமாரன் வந்ததைக் கண்ட மக்கள் பெரும் கொதிப்படைந்தனர். “நீ ஒரு நீதிபதியா?” என்று பலரிடமிருந்தும் கூக்குரல் எழும்பியது. நீதிபதி திரும்பி நோக்கினார். அவர் பின்னால் குமாரன் நின்று கொண்டிருந்தான், ஏதும் அறியாதவன்போல். 

காஞ்சி மக்களுக்கு ஒரு சுபாவம் உண்டு. கட்டுக்கு அடங்கியவர்கள்தான். இருப்பினும் அநீதி என்று வந்துவிட்டால், கட்டுத்தறிவிட்டு பிரளயத்தை நிகழ்த்தும் திறனுடையவர்கள். ஆகவே நீதிபதியை நோக்கிக் கும்பலாக முன்னேறினார்கள். அவர்கள் முகத்தில் கொலைக்குறி இருந்தது. “ஒரு ஏழையின் இல்லம் இன்று எரிந்திருக்கிறது” என்று கூவினார்கள். திடீரென்று எங்கிருந்தோ பந்தங்கள் தோன்றின. தமது கதை முடிந்து விட்டதை நீதிபதி உணர்ந்து கொண்டார். குமாரன் அவரை நோக்கிப் புன்முறுவல் கொண்டான். “நீதிபதியின் செல்வாக்கு காஞ்சியில் இவ்வளவுதான் போலிருக்கிறது” என்றும் இகழ்ந்தான். நீதிபதி பெரும்தடுமாற்றத்தில் இருந்தார். 

23.பிராகிருத மொழி எச்சரிக்கை 

மாளிகை முகப்பில் உட்கார்ந்திருந்த தன்னை நோக்கி மக்கள் தாறுமாறாகக் கேள்விகளை எழுப்பியதும், அதைத் தொடர்ந்து பந்தங்கள் பல வந்ததையும் கண்ட நீதிபதி நிருபவர்மர் காஞ்சியில் தனது ஆதிக்கமும் ஆயுளும் இன்றே முடிந்து விட்டதென்று தீர்மானித்தார். சுமார் நூறு பேர்கள் பந்தங்களுடன் வந்ததும் அவரது காவலர்கள் மாளிகையின் பக்கவாட்டிலிருந்து புரவிகள் மீது தோன்றி ஈட்டிகளால் மக்கள் முன்னேறுவதைத் தடை செய்தனர். “எங்களை யார் தடை செய்தாலும் பந்தங்களால் சுட்டுக் கொன்றுவிடுவோம்” என்று கூட்டத்தில் ஒருவன் கூவினான். “எங்களிடம் குறுவாள்களும் இருக்கின்றன” என்று மற்றொருவன் கூச்சலிட்டான். அந்தக் கூச்சலைத் தொடர்ந்து காவலர்களின் தடையை உடைத்த மக்கள் பிரவாகம் முன்னேறினாலும் காவலர் அரணைக் கூட்டத்தால் பிளக்க முடியவில்லை. 

அந்தச் சமயத்தில் நீதிபதியின் பின்னால் நின்றிருந்த குமாரன், “காஞ்சிப் பெருமக்களே! சற்றுப் பொறுங்கள். உங்களுக்குத் திருப்தியான நியாயம் கிடைக்காவிட்டால் பிறகு எது வேண்டுமானாலும் செய்யுங்கள்” என்று கூறினான். 

”பெரியமறவனைக் கொன்றது யார்? அவனை ஏன் கண்டுபிடித்துச் சிறை செய்யவில்லை?” என்று கூட்டத்தில் ஒருவன் கேட்டான். 

‘இரவில் தீ வைத்துவிட்டு ஓடும் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது அத்தனை சுலபமல்லவென்று உங்களுக்கே தெரியும். இரண்டு மூன்று நாட்களில் அவனை எப்படியும் கண்டுபிடித்து விடுவோம். பிறகு அவனை நாங்கள் தண்டிக்க மாட்டோம்!” என்று சிறிது நிதானித்தான் குமாரன். 

”ஏன்?”’-கூட்டத்தில் மற்றொருவன் கேட்டான். 

“இத்தகைய ஒரு தீயச்செயலைப் புரிந்தவனுக்கு சாதாரண வெட்டுப் பாறையோ, தூக்குக் கயிறோ சரியான தண்டனையாக மாட்டாது. அவன் கிடைத்ததும் உங்கள் கையில் ஒப்படைத்து விடுகிறேன். அவனைச் சின்னாபின்னமாகச் சித்திரவதை செய்து கிழித்துப் போடுங்கள்.” -இதை சர்வ சாதாரணமாகச் சொன்னான் குமாரன். 

சித்திரவதையைப் பற்றி சர்வ சாதாரணமாக குமாரன் பேசியதைக் கேட்ட நீதிபதி பெரும் வியப்பில் மூழ்கினார். “மிகவும் கோரமான தண்டனை” என்றார் ஆட்சேபணைக் குரலில். 

“தூங்கும் ஏழையைத் தீ வைத்துக் கொல்வது நல்ல செயலா?” என்று கேட்ட குமாரன், “நீதிபதி! குற்றத்துக்கேற்ற தண்டனை, கொடிய செயலுக்கேற்ற கொடிய ஜெயல்” என்றும் கூறினான். பிறகு பந்தங்களைப் பிடித்து நின்றவர்களை நோக்கி, “காஞ்சிப் பெரு மக்களே! இந்தக் கொலையைச் செய்தவன் யாராயிருந்தாலும் நானே அவனைப் பிடித்து உங்களிடம் ஒப்படைக்கிறேன். இது உறுதி” என்றான். 

அடுத்து இன்னொரு குரல் கிளம்பியது. “தாமரைச்செல்வி எங்கே?” என்று. 

“கேட்டவர் முன்னால் வரட்டும்” என்றான் குமாரன். 

முறைப்பிள்ளை கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னால் வந்தான். “நான்தான் கேட்டேன். கேட்க எனக்கு உரிமையுண்டு” என்றான் முரட்டுத்தனமாக. 

அவனை நோக்கிப் போலித் துன்பத்தை முகத்தில் படரவிட்டுக் கொண்ட குமாரன், “அவளிடம் உனக்கு என்ன அக்கறை?” என்று வினவினான். 

“அவள் எனக்கு முறைப்பெண்” என்றான் முறைப்பிள்ளை. “அவளைக் காணோமென்பது எப்பொழுது தெரியும் உனக்கு?” “இன்று காலை.” 

“அவளைத் தேட முயற்சி ஏதாவது செய்தாயா?” 

“இல்லை.” 

“ஏன்?” 

“நீதான் அவளை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக ஊரில் பேசிக்கொள்கிறார்கள்.” 

“அதனால் தேடவில்லை?” 

“ஆம்” 

“உன் மனைவியாகப் போகிறவளை இன்னொருவன் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டால் நீ செய்ய வேண்டியது என்ன?” 

“அவனைப் பிடித்துக் கொல்ல வேண்டும்.” 

“அதை ஏன் செய்யவில்லை?” 

சிறிது சிந்தித்த முறைப்பிள்ளை, “நீ என்னைக் கொன்று விட்டால் என்ன செய்வது?” என்று கேட்டான். 

குமாரன் இதழ்களில் இளநகை படர்ந்தது. “உன் மனைவியைக் காக்க நீ உயிரை விடுவதில் என்ன தவறு?’ என்று கேட்டான் குமாரன். 

“எனக்கு உயிர் போய்விட்டால் நான் எப்படிக் கல்யாணம் செய்து கொள்வது?’ என்று முறைப்பிள்ளை வினவியதும் கூட்டத்தில் பெரும் சிரிப்பு ஏற்பட்டது. 

கூட்டத்தினர் வெறி மறைந்து விட்டதை அவர்கள் சிரிப்பால் உணர்ந்து கொண்ட குமாரன் நீதிபதியைப் பின்னால் இழுத்துவிட்டு அவருக்கு முன்பாக நின்று கொண்டு, “காஞ்சிப் பெருமக்களே! தாமரைச்செல்வியை நான் எங்கும் மறைக்கவில்லை. பெரிய மறவன் குடிசைக்குத் தீ வைத்த விஷயமும் இப்பொழுதுதான் எனக்குத் தெரியும். நான் இரண்டு நாட்களாக ஊரில் இல்லை. அது நமது நீதிபதிக்கே தெரியும்” என்று பேசிய குமாரன் சற்று நகர்ந்து, “நீதிபதி அவர்களே! நான் போன இடத்தை மக்களுக்குச் சொல்லுங்கள்” என்றான். 

நீதிபதி சங்கீத வித்வான் போல் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். “நான்தான் குமாரனை கடல்மல்லை வரை அனுப்பியிருந்தேன்” என்று கூறினார். 

“எதற்காக?” 

“சொல்.” 

“மழுப்பாதே.” 

இப்படிப் பல குரல்கள் எழும்பியதும் நீதிபதி அச்சத்தின் வசப்பட்டு “அது அரசாங்க ரகசியம். சொல்வதற்கில்லை” என்றார் தீனமான குரலில் 

“அரசாங்கம் மக்களைத் தனது பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எங்களுக்குத் தெரியக்கூடாத ரகசியம் என்ன இருக்க முடியும்?’ என்று கூட்டத்தின் முன்னணியிலிருந்து ஒருவன் கேட்டான். 

இந்தச் சமயத்தில் மீண்டும் கூச்சலும் குழப்பமும் கிளம்பியதும் குமாரன் மாளிகைப் படியில் இறங்கி மேல்படியில் நின்று கூட்டத்தைத் தனது கூரிய கண்களால் நோக்கினான். அந்த விழிகளைக் கண்டு கூட்டம் அச்சமுற்று நின்றது. ‘காஞ்சிப் பெருமக்களே! நான் சமீபத்தில் தான் காஞ்சி வந்திருக்கிறேன். ஆனால் நான் சென்ற காரியத்தைச் சொன்னால், 

அது காஞ்சியைவிட்டு வெளியே சென்றால், இந்த காஞ்சி மாநகருக்கே ஆபத்து” என்று கூறினான் திடமான குரலில். 

“எதுவாயிருந்தாலும் சொல்” என்று முறைப்பிள்ளை கூவினான். 

“இந்த முட்டாளை முதலில் பின்னால் இழுத்துக் கொள்ளுங்கள்” என்றான் குமாரன். 

பலவந்தமாக மற்றவர்களால் பின்னால் இழுக்கப்பட்ட முறைப்பிள்ளை, “நான் முட்டாளல்ல. அவன் உங்களை ஏமாற்றப் பார்க்கிறான்” என்று கூவிக் கொண்டே கூட்டத்தில் மறைந்தான். 

குமாரன் மக்களை நோக்கி, “காஞ்சிப் பெருமக்களே! இந்த மாநகர்மீது களப்பிரர் படையெடுப்பு எந்தச் சமயத்திலும் ஏற்படலாம்” என்று கூறிச் சற்று நிதானித்தான். 

அதற்குப் பதில் ஏதும் வராமற் போகவே, “தென்புறத்தில் நிலைமை எப்படியிருக்கிறது என்று பார்க்க நீதிபதி என்னை அனுப்பினார்? அங்கு நிலைமை ஒழுங்காக இல்லை. இதை நான் தெரிவித்ததும் அங்கு தமது படைகளை நிறுத்துமாறு காஞ்சியின் காவலர் தலைவனுக்கு நீதிபதி உத்திரவிட்டிருக்கிறார். வேண்டுமானால் நீங்கள் காஞ்சியின் காவலர் தலைவனை விசாரித்துப் பாருங்கள்” என்று விளக்கினான் குமாரன். 

இந்தக் கோட்டைப் புளுகைக் கேட்ட நீதிபதி அசந்து போனார். பல்லவ பீடத்தைப் பற்றிய விஷயத்தை அவன் அடியோடு மறைத்து விட்டதை எண்ணிப் பெரிதும் வியந்தார். இருப்பினும் ஏதும் பேசாமல் கூட்டத்தை அவனே சமாளிக்கட்டுமென்று பேசாம லிருந்தார். 

மேலும் குமாரன் பேசினான்: “மக்களே! உங்கள் இல்லம் செல்லுங்கள். பெரிய மறவனைக் கொன்றவனையும் தாமரைச் செல்வியை மறைத்தவனையும் நானே கண்டுபிடித்து விசாரணைக்குக் கொண்டு வருகிறேன். என்வாளின் மீது ஆணையாகச் சொல்கிறேன். இந்த இரண்டு குற்றங்களுக்கும் நீதிபதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. படையெடுப்பு காஞ்சியை நோக்கி இருக்கும் சமயத்தில் நாம் நீதிபதியின் கரங்களை வலுப்படுத்த வேண்டுமே தவிர அவர் வீட்டை எரிப்பதில் எந்தப் பயனும் கிடையாது.” -இதைச்சொன்ன குமாரன் அவர்களை நோக்கித் தலைவணங்கி, “நீங்கள்தான் காஞ்சியின் காவலர்கள். நீங்களில்லாமல் எதுவும் செய்ய முடியாது. உங்கள் அனைவரை யும் நான் பாதுகாப்புப் படையில் சேர்த்துவிட்டேன். நாளைக் காலை முதல் உங்களுக்குப் பயிற்சியளிக்கிறேன்” என்று கூறக் கூட்டம் மெதுவாகக் கலைந்தது. 

கூட்டம் சென்றதும் குமாரனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்ற நீதிபதி கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து குமாரனை நோக்கி, 

‘குமாரா! உனக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார். 

“எதற்கு?”-சாதாரணமாக வினவினான் குமாரன். 

“அந்த வெறியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றியதற்கு” என்றார் நீதிபதி. 

“நான் பொய் சொன்னது என்னைக் காப்பாற்றிக் கொள்ள. உங்களைக் காக்க அல்ல” என்றான் குமாரன். 

“எப்படியோ நானும் பிழைத்துக் கொண்டேன்” என்ற நீதிபதி. “குமாரா! எனக்காக நீ ஏன் பொய் சொன்னாய்?” என்று கேட்டார். 

“உண்மையைச் சொன்னால் பல்லவ பீடத்தின் ரகசியம் வெளிவரும். அந்த இடத்தைக் காட்டு என்று சொன்னால் நான் மறுக்க முடியாது. பல்லவ பீடத்தின் இடத்தைக் காட்டினால் அதன் மகத்துவமும் கெட்டுவிடும்” என்ற குமாரன் நீதிபதியை நோக்கினான். 

“மகத்துவமா! அது என்ன?” என்று வினவினார் நீதிபதி. 

“பல்லவ பீடம் இருக்கும் பாதாள அறைக்கு முன்னால் ஒரு பாறைமீது பிராகிருதத்தில் விவரம் எழுதியிருக்கிறார்கள்.” 

“என்ன விவரம்?” 

‘பல்லவ பீடத்தின் மீது அதற்கு உரிமையில்லாத யார் அமர்ந்தாலும் அவர் மரணம் பத்து நாட்களுக்குள் நிகழும் என்று எழுதியிருக்கிறது.” 

“யாரோ பயமுறுத்த எழுதியிருக்கிறான்” என்று சர்வ அலட்சிய மாகச் சொன்ன நிருபவர்மர் சற்று சிந்தனை வயப்பட்டார். 

‘பயமுறுத்த எழுதினானோ? உண்மையாக எழுதினானோ நமக்குத் தெரியாது. ஒருவேளை உண்மையாயிருந்தால் உங்களையும் என்னையும் போன்றவர்கள் உட்காருவது அபாயம். எதற்காக வீணில் நாம் நமது உயிரை ஆபத்தில் சிக்க வைக்க வேண்டும்? அது தவிர…” 

“அது தவிர?” 

“வேறொன்றும் கவனிக்கத் தக்கது.” 

“என்ன அது?” 

“அதன் இருப்பிடத்தைச் சொன்னதும் அதை எடுக்க மக்கள் கூட்டமாகச் சென்றால் நாம் தடுக்க முடியாது. அதைத் தூக்கிக் கொண்டு வந்தால் நாம் பிராகிருத லிபிமொழியின் விதிகளை மீறியவர்களாவோம். அதை வலுக்கட்டாயமாக யாராவது தூக்கினால் குகை இடிந்து அதன்மீது விழுந்துவிடும். பிறகு அதை எடுக்கவும் முடியாதபடி புதைந்து போகும் என்றும் எழுதி யிருக்கிறது.” 

நீதிபதி சிந்தனை வசப்பட்டார் நீண்டநேரம். “நீ சென்று வா. எதற்கும் பெரிய மறவன் குடிசைக்குத் தீ வைத்தவனைக் கண்டுபிடி” என்றார் முடிவாக. 

“அதைவிட முக்கியமான பணி இருக்கிறது” என்றான் குமாரன். 

“அது என்ன பணி?” -நீதிபதி கேட்டார் புருவங்களை உயரத் தூக்கி, 

“காஞ்சியைக் காக்கும் பணி. களப்பிரர்களை சந்திக்க நாம் சரியான ஏற்பாடு செய்யாவிட்டால் இந்தக் காஞ்சி எரியும், களப்பிரர் பந்தங்களால்” என்றான் குமாரன் மிகுந்த கவலையுடன். 

“அதற்கு என்ன செய்ய வேண்டுமென்கிறாய்?’ 

குமாரன் அவரை உற்று நோக்கினான். முடிவில் அவன் பேசியபோது குரலில் உறுதியிருந்தது. “காஞ்சியின் பாதுகாப்பை என்னிடம் ஒப்படையுங்கள்”’ என்று மிகவும் பணிவுடனும் உறுதியுடனும் கேட்டான். 

பிரமிப்பு நிறைந்த விழிகளை குமாரன்மீது நாட்டினார். “அதற்கு காஞ்சிக் காவலன் போதாது?” என்றும் கேட்டார். 

“போதாது.” 

“ஏன்?” 

“நாம் போராட வேண்டியது களப்பிரர்களுடன் மட்டுமல்ல.” 

“வேறு யாருடன் போராட வேண்டும்?” -கவலையுடன் கேட்டார் நிருபவர்மர். 

குமாரன் பதில் சொன்னான். பதிலைக் கேட்ட நிருபவர்மர் திகைத்தார். குமாரனைக் கொன்று விடுவது போல் பார்த்தார். 

24.வடக்குத் திடல் 

காஞ்சியைக் காப்பாற்ற களப்பிரர்களைத் தவிரவேறு யாருடன் போராட வேண்டும் என்று நீதிபதி எழுப்பிய கேள்விக்கு குமாரன் சொன்ன பதிலைக் கேட்டு நீதிபதி நிருபவர்மர் திகைத்துவிட்டா ரென்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. “களப்பிரர் களுக்கு உதவ அவ்வப்பொழுது செய்தி அனுப்பி அவர்களை எச்சரிக்க உள்ளூரிலேயே ஒருவன் இருக்கிறான்” என்று குமாரன் கூறிய பதிலைக் கேட்டதும் அதிர்ச்சியுற்ற நிருபவர்மர், “அப்படியா! யார் அந்தத் துரோகி?” என்று அச்சமும் வியப்பும் கலந்த தொனியில் விசாரித்தார். 

அவர் விசாரணையைக் காதில் வாங்கிய குமாரன் தனது முகத்தில் கவலையைக் காட்டினான். “அதைத்தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும்” என்று சொன்ன அவன் குரலிலும் கவலை ஒலித்தது. 

அந்தக் கவலையை கவனிக்கவே செய்த நீதிபதி, “அவன் யாரென்பதை ஊகிக்க முடியாதா?” என்று வினவினார். 

“முடியாது.” 

“ஏன் முடியாது?” 

”நாம் ஊகிப்பவன் நிரபராதியாயிருந்துவிட்டால் அதர்மம் செய்தவர்களாவோம்.” 

இதைக்கேட்ட நிருபவர்மர் சில விநாடிகள் சிந்தனையில் இறங்கினார். “ஆம் ஆம். அது தவறுதான். இருந்தாலும் காஞ்சிக்கு ஆபத்து நேரும்போது அத்தாட்சியை நாம் தேடிக்கொண்டிருந்தால் நிலைமை தலைக்குமேல் போய்விட்டால் என்ன செய்வது?” என்று வினவினார் சிந்தனைக்குப் பிறகு. 

குமாரனும் நீதிபதி சொன்னதை ஆமோதிக்கும் வகையில் தலையை அசைத்தான். “இருப்பினும் அடியோடு அத்தாட்சி ஏதுமின்றித் தவறாக ஒருவனைச் சிறை செய்தால் உண்மைக் குற்றவாளி எச்சரிக்கை அடைந்து விடுவான். அதன் விளைவு விபரீதமாயிருக்கும்” என்று கூறினான். 

”உண்மைதான். இருப்பினும் நாம் ஏதாவது நடவடிக்கை எடுத்துத்தானே ஆகவேண்டும்!” என்று நீதிபதி கேட்டார். 

“ஆம்” என்றான் சுரணை அற்ற குரலில். 

நீதிபதி மறுபடியும் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டு உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து கூடத்தில் உலாவவும் முற்பட்டார். பிறகு ஏதோ நினைத்துக்கொண்டு சட்டென்று நின்று, ‘காஞ்சியின் காவலனைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று வினவினார். 

“நினைப்பதற்கு என்ன இருக்கிறது?” என்று பதில் கேள்வி கேட்டான் குமாரன். 

“களப்பிரர் ஒற்றன் ஒருவனைச் சிறையில் அடைத்தோமல்லவா?” 

“ஆம்.” 

“அவனைக் காஞ்சியின் காவலனைத் தவிர வேறு யார் கொன்றிருக்க முடியும்?’ 

”அவன் காவலில் ஒற்றணிருந்ததும் உண்மை. ஒற்றன் கொல்லப்பட்டதும் உண்மை. ஆனால் கொன்றவன் யாரென்பதைப் பற்றி திட்டமான சாட்சி எதுவும் நமக்குக் கிடைக்கவில்லையே” என்றான் குமாரன். 

நீதிபதி தலையை அசைத்தார். கடைசியாகச் சொன்னார். “குமாரா! உன்னைப்பற்றி எனக்கு அதிகமாக எதுவும் தெரியாது. இருந்தாலும் நீ காஞ்சியின் பாதுகாப்பில் அக்கறையுடனிருக் கிறாய். அதைக்காக்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன்” என்று கூறியது மட்டுமின்றி உள்ளே சென்று ஒரு ஓலையில் அதிகாரப் பத்திரமொன்றையும் எழுதி குமாரனிடம் கொடுத்தார். 

அதைப் படித்த குமாரன், “நீதிபதியவர்களே! பெரும் சுமையை என் தலையில் சுமத்தி விட்டீர்கள். அதற்குப் பாத்திரமாக நான் நடந்து கொள்வேன். சந்தேகம் வேண்டாம்” என்று சொல்லித் தலைவணங்கி வெளியே சென்றான். 

அவன் வெளியே சென்றதும் நீதிபதி பெருமூச்சுவிட்டுச் சில ஓலைகளை எழுத்தாணி கொண்டு தீட்டினார். ஒவ்வொன்றையும் தனித்தனி குழல்களில் போட்டு முத்திரையும் வைத்தார். சற்று நேரத்திற்கெல்லாம் நாலைந்து வீரர்களை அழைத்து ஓலைகளைக் கொடுத்து அந்தந்த விலாசங்களில் சேர்த்து விடுமாறு உத்தரவும் இட்டார். அதை வாங்கிக் கொண்ட வீரர்கள் நாலா பக்கங்களிலும் பறந்தார்கள். அதற்குப் பிறகு நிம்மதியுடன் உறங்கினார் நீதிபதி. மறுநாள் காலை எழுந்தபோது முற்றிலும் புதிதான காஞ்சியைக் கண்டார் நீதிபதி. 

காஞ்சியின் தேரோடும் வீதிகளில் சாதாரண மக்கள் வாட்களையும் வேல்களையும் ஏந்திக் கும்பல் கும்பலாகச் சென்று கொண்டிருந்தார்கள். அந்தக் கும்பல்களில் இடையிடையே பயிற்சி பெற்ற வீரர்கள் நின்று அவர்களைச் சீர்படுத்திச் சென்றார்கள். பல நாட்களாக காஞ்சியில் ஓடாத ரதங்கள் இரண்டாவது நாள் ஓடத் தொடங்கின. ஒவ்வொரு ரதத்திலும் ஒரு வில்லவர்கள் விற்களுடனும் அம்புகளுடனும் சென்று கொண்டிருந்தார்கள். தொண்டைமான் இளந்திரையன் காலத்து காஞ்சி மீண்டும் உருவெடுத்து விட்டதாக மக்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். இரவில் கூடப் புரவிப்படையினர் சிலர் காஞ்சியின் வீதிகளில் காவல் செய்யவே, புரவிகளின் குளம்பொலிகளின் சீரான சப்தம் எங்கும் கேட்டுக்கொண்டிருந்தது. 

சின்னஞ்சிறு கள்ளுக்கடைகள் திறந்திருந்தாலும் காஞ்சியின் பெரிய கள்ளுக்கடை மூடப்பட்டது. சுற்றுப் புறங்களில் காவல் பலப்படுத்தப்பட்டது. குமாரன் அடிக்கடி காஞ்சிக் காவலனுடன் காஞ்சி நகர் வீதிகளிலும் சுற்றுப் புறங்களிலும் சுற்றி வந்தான். மக்கள் இந்தப் புதுவிதப் பாதுகாப்பில் பெரிதும் ஈடுபட்டுத் தங்கள் பணிகளை மும்முரத்துடன் செய்தார்கள். நகர்ப்புறத்திலுள்ள பெரிய பட்டறைகளில் ஆயுதங்கள் வார்ப்படம் செய்யப்பட்டு அடிக்கப்பட்ட ஒலிகள் இரவும் பகலும் தொடர்ச்சியாகக் கேட்டன. அம்பின் நுனிக் கூர்ப்புகள் எஃகில் ஆயிரக்கணக்கில் அடிக்கப்பட்டு ஆயுத சாலைகளில் குவிக்கப்பட்டன. மழுங்கிய வேல்கள் தட்டிக் கூர்படுத்தப்பட்டன. 

காஞ்சியின் சுற்றுப்புற மதில்கள் பழுது பார்க்கப்பட்டன. குமாரன் காஞ்சிக் காவலனை அரண்மனையிலிருந்து படைகளைக் கவனிக்குமாறு உத்தரவிட்டான். தான் மட்டும் பெரியமறவன் குடிசையில் தங்கிப் போர் ஏற்பாடுகளுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தான். அப்படி அவன் படைகளின் சிறு பிரிவொன்றைக் குடிசைக்கு முன்பாக உள்ள காட்டில் இருத்திக்கொண்டு நகருக்குள் வராமலே இரண்டு நாட்கள் இருந்துவிட்டபடியால் காஞ்சியின் காவலர் தலைவன் அங்கு சென்று அவனிடம் கட்டளைகளைப் பெற்றுக்கொண்டு வந்தான். 

நீதிபதி இல்லத்தின் முன்பு நடந்த மக்கள் எழுச்சியைக் கண்ட இரண்டு நாட்களுக்குள் காஞ்சியைப் புதுக் காஞ்சியாக குமாரன் மாற்றி விட்டதால் புதிய தளபதி லேசுப்பட்டவனல்லவென்பதைப் புரிந்து கொண்ட காஞ்சியின் காவலர் தலைவன், அவன் சொற்படியெல்லாம் கேட்பதே தனக்குப் பாதுகாப்பு என்ற எண்ணத்தில் சகல விஷயங்களிலும் அவன் யோசனையை நாடினான். 

காஞ்சி புதுக்கோலம் பூண்ட நான்காவது நாள் மாலை காஞ்சியின் காவலர் தலைவன் குமாரனை நாடி பெரியமறவன் குடிசைக்கு வந்தான். குடிசை நன்றாகப் புதுப்பிக்கப்பட்டு பெரிதாகவும் கட்டப்பட்டிருந்தது. குடிசை மேட்டில் காவலர்கள் ஆங்காங்கு உட்கார்ந்திருந்தார்கள். மேட்டு பகுதிக்குக் கீழே புரவி வீரர்கள் காவல் பலமாயிருந்தது. அந்தக் காவலைக் கண்ட காஞ்சிக் காவலர் தலைவன் பிரமித்தவனாய் குடிசைக்குள் சென்று குமாரனைச் சந்தித்தான். குடிசைக்கு மேலே ஓலையால் மூடப்பட்டி ருந்ததைத் தவிர உட்புறத்தில் குடிசைக்கு வேண்டிய எளிமை சிறிதும் இல்லை. சின்னஞ்சிறு பிரம்பு மஞ்சங்கள் சிலவும், ஒரு மூலையில் படுக்கப் பிரம்பினாலேயே நிர்மாணிக்கப்பட்ட தொங்கு மஞ்சமொன்றும் காணப்பட்டன. குடிசையின் உட்புற மூலைகளில் வேல், வால், குறுவாள் முதலிய ஆயுதங்கள் பலவும் குவிக்கப்பட்டிருந்தன. 

காஞ்சியின் காவலர் தலைவன் உள்ளே நுழைந்த போது. கூரையின் வாரையிலிருந்து தொங்கிய பிரம்புப் பஞ்சணையில் மல்லாந்து கிடந்த குமாரன், பெரும் சிந்தனையிலிருந்தான். ஆதலால் காவலர் தலைவன் வந்ததைக் கவனிக்கவில்லை. காவலர் தலைவன் தான் வந்திருப்பதை உணர்த்த தொண்டையைச் சிறிது கனைத்ததும் சிந்தனை கலைந்து எழுந்து பஞ்சணையிலிருந்து இறங்கி, “வாருங்கள் காவலரே! உங்களைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு ஓலையும் எழுதி வைத்தேன். நாளைக் காலையில் அனுப்பலாமென்று. நீங்களே வந்து விட்டீர்கள்” என்று கூறித் தனது கையிலிருந்த ஓலையை அவனிடம் நீட்டினான். 

அதைக் கையில் வாங்கிக்கொண்டு கோடியிலிருந்த விளக்கிடம் சென்று அதன் ஒளியில் அதைப் படித்த காஞ்சியின் காவலர் தலைவன் பிரமையும் அச்சமும் கலந்த பார்வையை குமாரன்மீது திருப்பி, “இது நீதிபதியின் உத்தரவுக்கு மாறுபட்டிருக்கிறதே?” என்றான். 

“நான் மாற்றவில்லை” என்றான் குமாரன். 

‘வேறு யார் மாற்றியது?” என்று காவலர் தலைவன் வினவினான். 

“நீதிபதியேதான். என்னிடம் மாற்றும்படி உத்தரவிட்டார்.” 

“அப்படியானால் தென்புறத்திலிருக்கும் ஒரு பாதிப்படையை வடபுறத்துக்கு மாற்றச் சொல்கிறீர்கள்?” 

‘”ஆம்.” 

“ஏன் இந்த மாற்றம்?” 

“களப்பிரர் படையெடுப்பு தென்புறத்திலிருந்து ஏற்படாது.” “வடபுறத்திலிருந்துதான் ஏற்படுமா?” 

‘”ஆம்.” 

“களப்பிரர்களின் பெருவாரியான படைப்பிரிவுகள் தென் திசையில்தானே இருக்கின்றன?” 

“ஆம்.” 

“அப்பொழுது அங்கிருந்துதானே எதிர்ப்பு வரும்?” 

“வராது. வடபுறத்திலிருந்துதான் வரும்.” 

“எப்படித் தெரியும்?” 

“திருத்தணியில்தான் களப்பிரர் தலைமைப் படை இருக்கிறது.” “உங்களுக்கு எப்படித் தெரியும்?” 

இதற்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை குமாரன். சற்று சிந்தித்து விட்டு, ‘காவலரே! உம்மால் ரகசியத்தைக் காப்பாற்ற முடியுமா?” என்று வினவினான். அவன் குரலில் அதிகாரத்தின் ஒலி இருந்தது 

“கண்டிப்பாய் முடியும்” என்று காவலன் கூறியதும், “இப்படி வாரும்” என்று குமாரன் காவலனை அருகில் அழைத்து அவனிடம் தனது மடியிலிருந்த ஒரு ஓலையைக் கொடுத்தான். 

அதைப் பிரித்துப் படித்த காவலன் முகத்தில் கிலி பிறந்தது. “மிகவும் அக்கிரமம். காஞ்சியை எதிரியிடம் காட்டிக் கொடுக்க இதைவிட வேறு சிறந்த வழி இல்லை” என்று கூறினான் நடுங்கிய குரலில், 

”ஆம்” என்று ஆமோதித்த குமாரன், “நான் கூறியபடி படைகளைப் பிரித்து விடுங்கள். இப்பொழுது நாமிருக்கும் இந்தக் காட்டுக்கு அடுத்தபடி இருக்கும் பெரிய இடைவெளியில் நாம் எதிரிகளை சந்திப்போம்” என்று கூறினான். 

“போருக்கு அதுதான் தகுந்த இடம்” என்று ஒப்புக்கொண்டான் காஞ்சியின் காவலர் தலைவன். 

”இன்னும் நான்கு நாட்களுக்குள் நான் போரை எதிர்பார்க்கி றேன்” என்ற குமாரன், “காவலரே! நீர்தான் இனி எனக்கு உபதளபதி. ரதங்கள் நமக்கு அதிகம் தேவையில்லை. நாலைந்து ரதங்களை மட்டும் இங்கு அனுப்பும். மற்ற ரதங்கள் நகரிலேயே உலா வரட்டும். கடல் மல்லைப் பக்கம் யாரையும் விடவேண்டாம். யாராயி ருந்தாலும் நமது படைகள் தடுத்துச் சிறை செய்யட்டும்” என்றும் திட்டமான உத்தரவிட்டான். 

காவலன் அத்துடன் தளபதியிடமிருந்து விடைபெற்று கொண்டான். அவன் போகுமுன்பு, “யாரிடமும் நாம் பேசியதைச் சொல்ல வேண்டாம்” என்று எச்சரித்து அனுப்பினான் குமாரன். வியப்பும் பிரமையும் கலந்த சிந்தையுடன் காஞ்சியை நோக்கிப் புரவியை நடத்தினான் காவலர் தலைவன். குமாரன் எண்ணியபடியே சகலமும் நடந்தது. அன்றிலிருந்து ஐந்தாவது நாள் இரவு களப்பிரர் படை வெகு வேகத்துடன் வந்தது. காஞ்சியின் வடக்கிலிருந்த பெரும் திடலை நோக்கி. அதை எதிர்க்க குமாரன் சித்தமாக நின்றான், தனது படை வீரர்களுடன்.

– தொடரும்…

– பல்லவ பீடம், முதற் பதிப்பு:, பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *