கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 22, 2024
பார்வையிட்டோர்: 1,755 
 
 

(1970ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மணிக்கதவுகள் 

முடியுடை வேந்தர்கள் கொலுவிருந்து நாடாண்ட காலத்தில் மன்னர்கள் வருவதும், போவதும் முற்றுப்பெறாத ஒரு தொடர்கதையாக நிகழ்ந்து கொண்டிருந்தது. தந்தை இறந்து போனதும் மூத்தமகன் முடி சூட்டிக்கொள்வான்; இளைய மகனுக்கு ஒரு திவான் பதவி கொடுக்கப் படும். அது ஒவ்வொரு ராஜ்யத்திலும் தவறாது நடந்து வந்திருக்கிற சம்பவம். ஆனால், குறிப்பிட்ட ஓர் இலட்சியத்துக்காக ஒரு புதிய அரசை நிர்மா ணித்து, அந்த அரசு சாம்ராஜ்யமாகப் புகழ்பெற்று, இறுதியில் அந்த லட்சியத்துக்காகவே கண்களை மூடிய சரித்திரம் உலகத்திலேயே மிகக் குறைவு. 

இந்திய உபகண்டத்தின் தென்பகுதியில் எத்தனையோ அரசுகள் வாழ்ந்தன. ஆனால் அவை களின் பிறப்பு எவருக்கும் சரியாகத் தெளிவாக வில்லை. சரித்திரத்தில் அவன் போனான், இவன் வந்தான் என்று இருக்கிறதே தவிர, ஆதியில் ராஜ்யத்தை எவன் உண்டாக்கினான் என்பதற்குச் சரியான கணக்கைக் காணோம். 

மேலை நாட்டில்கூட அடிமைத்தனத்தை எதிர்த்துத்தான் பெரும் போர்கள் நிகழ்ந்திருக்கின்றனவே தவிர, ஒரு கலாசாரத்தை அழித்து இன்னொரு கலாச்சாரத்தை நிலைநாட்டப் போர்கள் உண்டானதாகத் தெரியவில்லை. 

வாணிபத்திலும், அரசியலிலும் திறமைபெற்று இன்று பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே எதிர்க்கக் கூடிய வல்லமை பெற்ற அமெரிக்காகூட, சுதந்தி ரத்திற்காக அமைந்ததுதான். உலகத்திலேயே, தென்கிழக்கு ஆசியாவில் தெக்கணத்தில்தான் கலாசாரத்திற்காகவும், பண்பாட்டு விடுதலைக்காகவும் பெரும் பெரும் யுத்தங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவைகளில் விஜய நகர சாம்ராஜ்யத்தில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கிளம்பிய எழுச்சி மகத்தானது. 

தென்னாட்டில் மகமதியர்கள் மதக் கோட்பாடு களையும், அவர்களின் அரசியல் பரிபாலனத்தையும் அறவே ஒழித்துக்கட்ட நிறுவப்பட்ட புதிய அரசு விஜயநகர சாம்ராஜ்யம். “அரச பதவி வேண்டும்; அரண்மனை வாழ்க்கை வேண்டும்” என்பதற்கு விஜயநகர சாம்ராஜ்யம் உருவாக்கப்படுகிறது என்று மக்கள் கருதிவிடக்கூடாது என்பதற்காக, மகமதிய சாம்ராஜ்யத்தை எதிர்ப்பதற்காகவே விஜயநகரம் உருவாகிறது என அதன் அமைப்பாளர்கள் பகிரங்க மாகத் தெரிவித்ததாகச் சரித்திர ஆசிரியர்கள் அனை வருமே பெருமையோடு கூறியிருக்கிறார்கள். அவர் கள் பெருமைப்பட நியாயம் இருக்கிறது. உண்மையும் அதுதான்

தென்னாட்டைக் கைப்பற்றிய மகமதியப் படை மதுரை மீனாட்சியம்மன் கோயிலைத் தகர்த்து எறிந்தது. ஆலயச் சிற்பங்களைப் பொடி செய்தது. நவரத்தினங்களைச் சூறையாடியது. வைகைப் படுகையில் வசீகரமாகத் தோற்றமளித்த கூடல் நகரமே அழிந்தது. அந்த நேரத்தில் மகமதிய அரசை எதிர்ப்பதற்குத் தமிழகத்தில் நாதியில்லை

போர் முரசு கொட்டியவர்களும் புதை குழிக்குப் போனார்கள். அப்போதுதான் ஆந்திர மண்ணில் ஒரு இரட்டைக் குரல் ஒலித்தது. ‘மகமதிய ராஜ்ஜி யத்தைத் தென்னாட்டில் பரவ விடமாட்டோம்; எங்களுடைய பிணத்தின் மேல் முகமதியப் படைகள் நடந்து செல்லட்டும்’ என்று அந்த இரட்டைக் குரல்கள் பேசின. அவர்கள் தான் – இந்திய சரித்தி ரத்தை ஆங்கிலேயர் எழுதினாலும், அமெரிக்கர் எழுதினாலும், மறைக்க முடியாத பேரும் புகழும் பெற்ற ஹரிஹரர், புக்கர் என்ற பெயரைப் பெற்ற வர்கள். அவர்கள் இருவரும் ஹொய்சலர் படைத் தலைவரான சங்கமனின் புதல்வர்கள். 

கி.பி. 13-ம் நூற்றாண்டில் சிங்கேரி மடத்தில் பிரதம சீடராக விளங்கிய வித்யாரண்யர் என்பவரின் பேராதரவில் ஹரிஹரரும்,புக்கரும் விஜய நகர சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்கள். ஆதியில் அவருடைய பெயரால் தலைநகரம் வித்யா நகரம் என்றழைக்கப்பட்டதென்றும், அந்தப் பெயர் தான் நாளடைவில் விஜயநகரம் என்று வழக்கத்திற்கு வந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது

சாம்ராஜ்யத்தின் தொடக்கத்திலிருந்து அரசுரி மைக்காக எத்தனையோ குழப்பங்கள் அந்த அரச பரம்பரைக்குள்ளே எழுந்திருக்கின்றன. விஜய நகர ஆட்சியில் – அரண்மனையில் ஐந்து கொலைகள், அந்தப்புரத்தில் அறுபது சதிகள் நடக்காமல் ஒருவர் தலையிலிருந்து இன்னொருவர் தலைக்கு மகுடம் மாறியதில்லை. ஆனால், கிரீடம் சூடிய எவரும் விஜய நகர சாம்ராஜ்யம் அமைக்கப்பட்டதின் ஜீவலட்சியத்தை மறக்கவில்லை. அவர்களில் கிருஷ்ணதேவ ராயரின் வரலாறு போர்த் தழும்புகள் பெற்றது; அழியாப் புகழ் பூத்தது. அரசு அமைக்கப்பெற்று 170 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர் பட்ட மேற்றார். எனினும், எதிரிகளால் அவரது முன் னோர்கள் அடைந்த அல்லலை, அபகீர்த்தியை அவர் மறந்துவிடவில்லை. இல்லாவிட்டால் அவர் சங்ககாலத்து கரிகால் சோழனைப்போல், இடைக் காலத்தில் நரசிம்ம பல்லவனைப்போல், பிற்காலத்தில் ராஜேந்திர சோழனைப்போல் உன்னதச் சிறப்பை அடைத்திருக்க முடியுமா? 

ராயர் ராஜ்ஜியபாரம் ஏற்ற காலத்தில் கோடானு கோடி அரசியற் பூசல்கள் தென்னாட்டில் முளைவிட்டுக் கிடந்தன. ஆனால் ராயர், சுல்தான்களின் எதிர்ப்புகளையும் சூதுத்திட்டங்களையும் மட்டுமே பொருட்படுத்தினார். அதற்காக ராயர் ஆற்றியிருக்கும் தொண்டினை எந்த சரித்திரப் பேராசிரியர்களாலும் விழுங்கிவிட முடியாது. ராயரின் ஆற்றல் அத்தகையது. 

இத்தகைய அருமையும் பெருமையும், அன்பும் பண்பும் கொண்ட பேரரசரின் காலத்தில் நிகழ்ந்த தாக வரலாற்றில் குறிக்கப் பெற்றிருக்கும் சில இனிய சம்பவங்களைக் கொண்டு இந்தப் பெருங் கதை வடிவம் பெற்றிருக்கிறது. சரித்திரத்தில் வரும் நல்லவர்களின் பெயருக்கு இழுக்கு ஏற்படா மல் சரித்திரக் கதைகள் எழுதவேண்டும் என்பார்கள். இதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரு கதை நல்லவர்களை மட்டும் கொண்டு நிகழ்வதில்லை. கெட்டவர்கள் இருந்தால்தான் கதையே உருவாகி றது. அந்தக் கெட்டவர்கள் யார்? நல்லவர்களையே கெட்டவர்கள் ஆக்கி விடுவதா? அது தவறு. நல்ல வர்கள் சிலரின் இருதயத்தைக் குழப்பி, அவர்களை கெட்ட சிந்தனைகளுக்கு இழுத்துப் போய் பின் நல்லவர்களாக்கலாம் — இது ஒரு வழி. அல்லது நல்லவர்களை நல்லவர்களாகவே வைத்துவிட்டு சில கற்பனைப் பாத்திரங்களைப் பிறப்பித்து அவர்களைக் கெட்டவர்களாக்கி இறுதியில் அழித்துவிடுவது; ன்றேல் பிரித்துவிடுவது இது மற்றொரு வழி. நான் இந்தக் கதையில் இரண்டு வழிகளையும் கையாண்டிருக்கிறேன். 

குறிப்பிடத் தகுந்த வகையில் பதினைந்து பாத்திரங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் ராயர், அவர் மகள் துங்கபத்திரை, அடில்ஷா விசுவநாத நாயக்கன், நாகம நாயக்கன், இந்த ஐவர் நீங்கலாக மிகுதிப் பாத்திரங்களை நானே உலவ விட்டிருக்கிறேன். அவைகளில் சில கற்பனை. 

விஜயநகர சாம்ராஜ்ய வரலாற்றை மாணவர் களுக்கென பாடப் புத்தகங்களாக வெகுபேர் எழுதி யிருக்கிறார்கள். இன்னும் சிலர் நாடகமாகவும், காவியமாகவும் வரைந்திருக்கிறார்கள். அவற்றுள் பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார், டாக்டர் ராசமாணிக்கனார் எழுதிய வரலாற்று நூல்களை பல இடங்களில் நான் பக்கத்துணையாகக் கொண்டிருக்கிறேன். 

இந்தக் கதையில் ஒரே ஒரு சிக்கல் இருக்கிறது. ராயர் அவர் மகளை விசுவநாத நாயக்கனுக்கு மணம் செய்து கொடுத்தார் என்பதைச் சிலர் எதிர்க்கி றார்கள். வேறு சிலர் ராயர் மகளுக்கும் விஸ்வநாத னுக்கும் இடையில் காதலே வளர்ந்திருந்தது என்கிறார்கள். இந்த சந்தேகத்தால், சரித்திரத்தில் யார் பெயரும் கெட்டுவிடப் போவதில்லை. ஆகையால் மேலே கூறப்பட்டிருக்கும் கருத்துக்களில் எனக்குப் பிடித்த ஒரு கருத்தைத் தழுவி கதையைப் பின்னி இருக்கிறேன். விஜயநகர சாம்ராஜ்யத்தின் செல்வாக்கான மத்திய காலத்தையும், பாண்டிய மண்டலத்து நாயக்க வம்சத்தின் தொடக்க காலத்தையும் சுட்டிக்காட்டும் இந்தப் பெரும் கதையை கூடுமான வரை தென்னகத்துப் பண்பாடு குன்றாத வகையில் எழுத முனைந்திருக்கிறேன். நாவல் சுவை படவேண்டும் என்பதற்காக என்னுடைய ஆற்றலுக்கும் சிந்தனைக்கும் கட்டுப்பட்ட கற்பனைச் சம்பவங்கள் பல இங்கே ணைக்கப்பட்டிருந்தாலும், இந்து சாம்ராஜ்யத்தை உயர்த்துவதற்காக மகமதிய சாம்ராஜ்யத்தைக் குறைத்தோ, மகமதிய சாம்ராஜ் யத்தைக் குறைப்பதற்காக இந்து சாம்ராஜ்யத்தை ஏற்றியோ எந்த இடத்திலும் வலியப் புகுத்தவில்லை. அவ்வாறு புகுத்தினால் உண்மையான வரலாற்றுக்கு இழைக்கும் பெரும் துரோகமாக முடியுமென்பதை நான் அறிவேன். 

நான் இந்தப் பெருங்கதைக்கு, ‘துங்கபத்திரை’ என்று தலைப்பிட்டமைக்கு முக்கிய காரணம் உண்டு. ராயர் கண்ட பேரரசின் வடஎல்லையாக இருந்த ஜீவநதியின் பெயர் துங்கபத்திரை. அதுவே முகமதிய அரசின் தெற்கு எல்லையாகவும் இருந்தது. அந்த எல்லையின்மீது எப்பொழுதும் கவனம் இருக்க வேண்டும் என்பதற்காகவே ராயர் அவருடைய அருமை மகளை துங்கபத்திரை என்று செல்லமாக அழைத்தார். அவர் ஒரு நாளைக்கு ஆயிரம் முறை “துங்கபத்திரை” என்று கூவி மகளை அழைப்பார். எல்லையின் அப்போதெல்லாம் அவருக்கு வடக்கு நினைவு வரும். கதையின் மகுடத்திற்கு இது தவிர வேறு காரணங்கள் இல்லை. 

குறிப்பிடத் தகுந்த முன்னேற்பாடுகளுடன் உற்சாகமாக எழுதிய நாவல் இது. வரலாற்றுப் புதினங்களைத் தொடர்ந்து எழுதுவேனா என்பது இதைப் படிப்போரின் எண்ணிக்கையைப் பொறுத்தது. 

எஸ்.எஸ்.தென்னரசு 

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம்-1

வண்ண முந்தானையின் மென்மையான தழுவலில் ஒண்டிக் கிடக்கும் வாலைக் குமரியின் வசீகர உடலைப் போல், துங்கபத்திரா நதியின் அரவணைப்பில் விஜய நகரம் மணக்கோலம் பெற்று விளங்கியது. தலைநகரை அமைத்த திருச் செல்வர்கள் எதிரிகளின் போர்த் திட்டங்களைத் துல்லியமாகக் கணக்கிட்டுத்தான் கட்டி யிருக்க வேண்டும். மையத்தில் திலகமாக விளங்கிய அரண்மனையைச் சுற்றி ஏழு கற்கோட்டைகள் கம்பீர மாக வளர்ந்து நின்றன. ஒரு கோட்டை மதிலுக்கும் இன்னொரு கோட்டை மதிலுக்கும் இடையில் ஏழு கல் தூரம் இருந்தது. விளைநிலங்கள், வீரர்களின் இல்லங்கள் முதலியன முதல் மூன்று கோட்டை மதில்களுக்கிடை யில் அமைந்திருந்தன. மிகுதியுள்ள மதில் சுவர்களுக் கிடையில் விலை உயர்ந்த ஆடை ஆபரணக் கடைகள் அமைக்கப்பெற்றிருந்தன. 

செல்வத்திற்கும் செழிப்பிற்கும், அமைதிக்கும் அரசியல் நெறிக்கும் பெரும் புதையலாக விளங்கிய விஜயநகரப் பேரரசிற்குக் கிருஷ்ணதேவராயர் மகுட பதியாக பொறுப்பேற்றுக் கொண்ட காலம் நடந்து கொண்டிருந்தது. அரசர்க்கு அரசன் ராயர் எழுதிய ‘ஜாம்பவதி பரிணயம்’ என்னும் நாடகத்தைப் புகழ் பெற்ற பம்பாவதி ஆலயச் சன்னதிக்கு எதிரே அரங் கேற்றுவதற்கான சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பொழுது புலர்ந்தால் மேளம் கொட்ட இருக்கும் திருமண வீட்டைப் போல், அரை குறையாக இதழ் விரித்து அருணோதயத்தை எதிர்நோக்கி இருக்கும் அல்லிக் குளத்தைப்போல், தலைநகரம் அலங்காரத்துடன் தோன்றியது. தெருவெல்லாம் தோரணங்கள்! வீடெல்லாம் கோலங்கள்; ஆலயங்களில் சிறப்பான ஆராதனைகள்! பிரஜைகளின் புன்முறுவலுக்குத் தொண்டு புரியும் மன்னருக்குப் ‘பெரும் புலவன்’ என்ற பட்டத்தை தரப்போகும் விழா அல்லவா அது!”அந்தப்புரத்து மந்த காசத்தில் திளைத்தபடியே, ‘ஆறுகால பூஜை நடைபெறு கிறதா? அறுசுவை உண்டி கிடைக்கிறதா?” என்று கேட்கும் சுகவாசி அல்ல எம் மன்னர்! அவர் வீரர்; விவேகி; கண்டதை, கேட்டதை, வென்றதை, கவியாகப்பாடி இலக்கியமாக வடிக்கும் பேராற்றலும் பெற்றவர்” என்று விஜய நகர் மாந்தர் அனைவரும் உவகை பூத்துக் கிடந்தனர். 


கோயில், கோடான கோடி விளக்கலங்காரத்தோடு திகழ்ந்தது. அரண்மனை வாசலிலிருந்து புறப்பட்டு ஆலயத்து ராஜகோபுரத்தைத் தொடும் நெடும்பாதை வழியாகத் திரண்டிருந்த மக்களின் பேராரவாரத்தோடு மன்னர் கோயிலுக்குள் நுழைந்தார். அவருக்குப் பின்னால் அவருடைய நாடக இலக்கியம் ஒளிவிடும் முத்துப் பல்லக் கில் எடுத்து வரப்பட்டது. ராயர் பட்டத்திற்கு வந்தபின், அப்போதுதான், இரண்டாவது முறையாக பம்பாவதி ஆலயத்திற்கு வந்திருந்தார். அவருக்கு முடிசூட்டு விழா நடந்தபோது ஒரு முறை ஆலயத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது அவருடைய முடிசூட்டு விழாவின் நினைவாக விஜயநகர சாம்ராஜ்ய அமைப்பாளர்களான ஹரிஹரர், புக்கர் உருவங்களை வெள்ளியில் சிலையாக வடித்துக் கொடுத்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. ராயர் அதிகாரிகள் புடைசூழ அந்த இடத்திற்குச் சென்றார். அந்தச் சிலைகள் கவனிப்பாரற்று அன்று வைத்த இடத்தி லேயே எண்ணெய் படிந்து கிடந்தன. அது மட்டுமல்ல; அந்த இரண்டு சிலைகளின் அழகிய வெள்ளி மூக்குகள் துண்டிக்கப்பட்டிருந்தன. அருகில் சென்று இந்த அலங் கோலத்தைக் கண்ட ராயரும் அப்படியே ஒரு சிலையாகி விட்டார். உல்லாசத்தைத் துறந்து உருவாக்கிய இலக் கியத்தை மன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம் என்ற பூரிப்பில் மிதந்து கொண்டிருந்த அவருடைய இதயத்தையும் முகத்தையும் அந்தச் சிலைகள் கறுக்கி விட்டன. அருகில் நின்ற மண்டலேசுவரர் நாகம நாயக்கர் ராயரின் கவனத்தினை வேறு பக்கம் திருப்ப எண்ணி, “அதோ பல்லக்கும் வந்துவிட்டது; ஏடுகளை எடுத்து வாசிக்க வேண்டுமே! பண்டிதர்கள் முன்கூட்டியே வந்திருக்கிறார்கள்!” என்றார். 

“மண்டலேசுவரரே, இந்த மூலவர்களின் அவயவங்கள் பங்கப் பட்டிருப்பதற்கான காரணத்தை அறிய வேண்டும். திருடர்கள் உடைத்திருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. மூக்கை உடைப்பதற்குப் போதிய அளவு நேரத்தையும் தைரியத்தையும் பெற்ற திருடன் ஏன் சிலைகளையே தூக்கிப் போயிருக்கக் கூடாது? நமது அரசாங்கத்தை அவமானப் படுத்துவதற்குரிய அறிகுறியாகவே எவனோ ஒரு வினயக் காரன் இந்தச் சிலைகளின் மூக்கைத் தகர்த்து எடுத்துப் போயிருக்கிறான்?”- ராயர் இந்த வார்த்தைகளை அவருடைய மனக்குகையிலிருந்து மிகுந்த விசனத்தோடு அள்ளித் தூவினார். 

ஜரிகைப்பட்டு அணிந்து, சந்தனமும் புனுகும் மணக்க பண்டிதர் ராஜா அய்யர் கூடத்திற்குள் நுழைந்தார். 

“பண்டிதரே, நமது வழிகாட்டிகளின் சிலைகளைப் பார்த்தீரா?” – ராயர் கண் கலங்கக் கேட்டார். 

“ஹ……! பிரபு, இது விஜயநகர சாம்ராஜ்யத்திற்கே அவமானம்! மனிதனுக்கு மூச்சு முக்கியம்; அந்த மூச்சுக்கு மூக்கு மிக அவசியம்……! விஜயநகர சாம்ராஜ்யத்தின் முச்சை அடைத்துவிடுவோம் என்ற இறுமாப்பில் நமது எதிரிகள் இவ்வாறு செய்திருக்கிறார்கள்” என்று அபிநயத் துடன் கூறினார் ராஜா அய்யர். மற்றவர்களுக்கு விகட மாகத் தெரிந்தாலும், பண்டிதர் ராஜா அய்யர் கூற்றில் உண்மை இருப்பதாகவே ராயர் கருதினார். நாகமநாயக்க ரும் அதனை மறுப்பதற்கில்லை. 

“பண்டிதரே, நீர் கூறுவது முற்றிலும் உண்மை. எதிரிகள் என்றால் யார்? பீஜப்பூர் சுல்தானே நமது பகைவர்? மரியாதை தெரியாதவர்கள்! பகைவர்களில் கூட கெளரவமான பகைவர்களைத்தான் விஜய்நகரப் பேரரசு மதிக்கும் என்பதை அவர்கள் அறியார்கள் போலும்! நாகமரே! பண்டிதர் கூறுவதில் எவ்வளவு தான் உண்மையிருந்தாலும் நாம் முறைப்படி கோயில் நிர்வாகிகளை விசாரித்தே ஆக வேண்டுமல்லவா! ஆலயச் சிப்பந்திகளை தீர விசாரித்து அறிய வேண்டியதை அறிந்து அரசாங்கத்திற்கு தெரிவிக்கும் பொறுப்பை அரியநாதரிடம் ஒப்படையுங்கள்! அதுவும் நாளையே ஒப்படையுங்கள்! அடுத்த கிழமைக்குள் விசாரணையின் முடிவு நமது பேரவைக்கு வந்தாக வேண்டும்!” என்று கூறிவிட்டு ராயர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். 


நாடக அரங்கைச் சூழ்ந்து மேகம் போல் மக்கள் திரண்டிருந்தார்கள். மன்னர் மக்கள் மத்தியில் அமர்ந்து அவருக்கும் மக்களுக்குமுள்ள தொடர்பையும்,நன்னம்பிக்கை யையும் வெளிப்படுத்தினார். 

நாடகம் தொடங்கி முதலங்கம் முடியும் கட்டம் வந்தது. ராயரும் அவர் தம் பரிவாரமும் உற்சாகத்தில் மூழ்கி இருந்தனர். அப்போது அரண்மனைக் காவலன், மக்களுக்கிடையே அமைக்கப்பட்டிருந்த ஒற்றையடிப் பாதை வழியாக மன்னரை நெருங்கிக் கொண்டிருந்தான். முன் வரிசையி லிருந்த பண்டிதர் ராஜா அய்யர்தான் முதலில் அவனைக் கவனித்தார். உடனே இதை அவர் நாகமரிடம் கூறினார். நாகமர் மன்னரைப் பார்த்தார். மன்னர் அவனைக் கவனிக்கு முள் அவன், அவரருகில் வந்துவிட்டான். 

“ருக்மாங்கதா, என்ன இப்படி வியர்க்க வியர்க்க வருகிறாய்? அரண்மனை யானைகள் அமைதியாகத்தானே இருக்கின்றன?” என்று கேட்டார் பண்டிதர் ராஜா அய்யர். 

”மதுரையிலிருந்து தூதர் வந்திருக்கிறார்; மன்னர் பிரானைச் சந்திக்க வேண்டுமாம்! அவசரமாம்! தூதர் துடிக் கிறார்” என்றார் ருக்மாங்கதன். 

ராயர் அவசர அவசரமாக அரண்மனைக்கு விரைந்தார். நாள் நட்சத்திரம், சாஸ்திரம் சம்பிரதாயம், சகுனம் இவை களின் ஏகப் பிரதிநிதியாக நிற்கும் இந்து சாம்ராஜ்யத்தின் தலைவராக இருக்கும் கிருஷ்ணதேவராயர் உள்ளத் தில் அன்று நடந்த சம்பவங்கள் மனத்தைக் குடைந்தன. 

அரண்மனைக்குள் நுழைந்து, ராயர் நேராக விருந்தினர் விடுதிக்குப் போனார். அங்கே தூதுவன் இல்லை. பாண்டியமன்னன் சந்திரசேகரனே உட்கார்ந்திருந் தான். ராயர் திகைத்தார். 

“வருக சந்திர சேகரரே. நலம்தானே! மதுரையிலிருந்து தூதர் வந்திருப்பதாக அல்லவா சொன்னார்கள்! மடையன், தரம் அறியாதவன்! சேகரரே, வருத்தப்படா தீர்கள். காவலன் புதியவனாக இருக்கக் கூடும். அதனால் அவன் விபரம் அறியாது கூறியிருப்பாள்” என்று வரவேற்பு ரையைத் தொடங்கினார் ராயர். 

“இல்லை மன்னவரே! காவலன் மீது தவறில்லை; நான் தான் தூதுவனைப்போல் வேடமிட்டிருந்தேன். நான் அவ் வாறு கிளம்பாவிட்டால் மதுரையில் என்னுடைய எதிரிகள் என்னைத் தீர்த்திருப்பார்கள்.” சந்திரசேகரபாண்டியன் சொன்னான். 

“மதுரையில் உமக்கு எதிரிகளா? ஏன் அவ்வளவு தூரத்திற்கு விட்டு வைத்தீர்? எதிரிகள் நாலாயிரம் என்றாலும் நான்கு பேரைத் தண்டித்தால் போதுமே! மற்றவர்களெல்லாம் கொற்றத்திற்கு அடிபணிந்து விடுவார்களே” என்றார் ராயர். 

“எதிரிகள் என்றாலும் உள்நாட்டு எதிரிகளல்ல மன்னவரே! திடீரென்று பாண்டியநாட்டின் மீது சோழர்கள் படையெடுத்துவிட்டார்கள், நான் எதிர் பார்க்கவே இல்லை!” 

”என்ன! வீரசேகரரா இந்த அநீதியைப் புரிந்தார்! என்னால் நம்பமுடியவில்லையே! ஒரே நாட்டில் ஒரே மண்ணில் இவ்வாறு ஓராயிரம் பிணக்குக்கள் இருந்தால் அயலார் புகுந்து ஏன் நம்மை வெற்றிகொள்ள மாட்டார்கள்?’ – ராயர் பெருமூச்சு விட்டுப் பேசிக்கொண்டிருக்கும் போது பண்டிதர் ராஜா அய்யர் அங்கே வந்தார். 

”ஜெய விஜயீபவ சக்கரவர்த்தி பாண்டியருக்குக் கிரகம் சரியில்லை சோழனுக்கு இது நல்லநேரம். நேர பலனைப் பாராமல் நாம் இதில் தலையிடுவது உசித மல்ல. பாண்டியன் தோற்றால் அந்த அவமானம் நம்மைத் தாள் விரட்டிப் பிடிக்கும்!” என்று ஆரம்பித்தார் ராஜா அய்யர். 

“என்ன சொன்னீர்? நமது படை போனால் கூடவா பாண்டியர் தோற்றுவிடுவார்?” என்று உரக்கப் பேசினார் ராயர். 

“ஆம் பிரபு! பலன் அப்படித்தான் பேசுகிறது. இந்த ஏழைப் பார்ப்பான் எப்போதாவது உங்களிடம் இப்படிப் பேசியதுண்டா?” பண்டிதர் பவ்யமாகப் பேசினார். 

“யார் தோற்றாலும் சரி, இதனால் விஜயநகரப் பேரரசுக்கே பெரும் அழிவு வந்தாலும் கவலை இல்லை. அநீதியை எதிர்ப்பதில் ஒருபோதும் தயங்கக் கூடாது.” 

“ஜெய விஜயீபவ….! படைத் தலைவர்கள் யார்?” பண்டிதர் குறுக்கே கேட்டார். 

“ஒரு படைக்கு விசுவநாதன், இன்னொரு படைக்கு அரியநாதன். போதாதா?” – ராயர் பதிலிறுத்தார். 

“மன்னிக்க வேண்டும் சக்கரவர்த்தி. நான் இவர் களுடைய வீரத்தைச் சந்தேகிப்பதாக எண்ணக்கூடாது. விசுவநாதனும், அரியநாதனும் வல்லவர்கள்தான். ஆனால், போர் அனுபவம் குறைந்தவர்கள்.” – ராஜா அய்யர் மறுபடியும் எடுத்துரைத்தார். 

”அனுபவம் எதற்கு? ஆற்றல் போதாதா? அதுவும் இரண்டு பேர்! ஒருவன் புலி, இவனொருவன் சிங்கம்! பண்டிதரே கவலையை விடும்! வெற்றி நமக்குத்தான்!” என்று அடித்துப்பேசினார் ராயர். 

“ஜெய விஜயீபவ… என் ஆசையை நான் தெரிவிக்கிறேன். ஒன்று தாங்களே படைக்குத் தலைமை வகிக்க வேண்டும்; அல்லது மண்டலேசுவரர் நாகமநாயக்கர் தலைமை வகித்துச் செல்லவேண்டும். சோழனின் ஜாதகத்தைக் கணித்துச் சொல்கிறேன். பிரபு, இதைத் தட்டிக் கழித்துவிடாதீர்கள்.” – பண்டிதர், ராயரின் முடிவைத் திருப்பிவிட முனைந்தார். 

“என்ன பண்டிதரே! நீங்கள் கூறுவதைப் பார்த்தால் இன்னும் கொஞ்ச நாளில் சோழன் தென்னாட்டையே கபளீகரம் செய்துவிடுவான் போல் இருக்கிறதே!” 

“அடியேன் அபிப்பிராயமா இது? இல்லை, அவன் பலனின் தீர்ப்பு! இல்லாவிட்டால் பாண்டியநாட்டின் மீது ஆக்ரமிப்புச் செய்வானா?” 

“உண்மைதான்! அப்படியானால் நாகமரையே அனுப்பி வைப்போம்!” 

“இதயம் குளிர்ந்தது எம்பெருமானே! நமது நாகமர் வடிவத்தில் அர்ச்சுனன், வைரநெஞ்சில் இராவணன்…!” 

“சந்தேகமென்ன பண்டிதரே, இந்தப் பேரரசின் எல்லையை விரித்தது அவரது வாள்தானே! ஹரிஹரரும் புக்கரும் உடன் பிறந்தவர்களாக இருந்து சாம்ராஜ்யத்தை எழுப்பினார்கள்; நானும் நாகமரும் உடன் பிறக்கவில்லை. அவ்வளவுதான்!” என்று ராயர் கூறும்போது அவரது கண்களில் நடந்து முடிந்த போர்க்களமெல்லாம் முகம் காட்டி மறைந்தன. அகண்ட மார்பு வீங்கி வற்றியது. ஒரு கணம் கனவு கண்டவரைப் போல் இருந்த ராயர் துணுக்குற்று எழுந்தார். 

பாண்டியன் புன்முறுவல் பூத்தான். இழந்த மதுரை, ராயரின் பேருதவியால் மீண்டும் கிடைத்துவிடும் என்ற உறுதி பெற்றான். பாண்டியன் அந்த இடத்தை விட்டு விடைபெறும்போது ராயர் அவனுக்குக் கூறிய ஆறுதல் மொழிகள் அவனைச் சிகரத்திற்குத் தூக்கிப் போய்விட்டன. 


நான்மாடக்கூடல் நகர்நோக்கி நாகமநாயக்கர் புறப் பட்டுப் போன அன்றிரவு! கோட்டைக் காவலர்கள் நகரின் ஒவ்வொரு சுற்று வட்டத்தையும் பார்த்து விட்டு உள் வளைவுக்குள் நுழைந்தார்கள். ”இவ்வளவு நேரம் நாகமர் விஜயநகர் எல்லை கடந்திருப்பார்; நாளை மாலைக்குள் காவிரிக்கரை சேர்ந்து விடுவார்” என்று அந்தக் காவலர்கள் பேசிக்கொண்டே சுற்றி வந்தார்கள். கிழக்கு வெளுப்பதற்குச் சில நாழிகைகளே மீதமிருக்கும். அப்போது அரசவையின் முகப்புக் காவலன் ருக்மாங்கதன் வேகமாக வந்தான். கோட்டைக் காவலர் கால்கடுக்க நடந்து அலுத்து பன்னீர் மரத்தடியில் உட்கார்ந்து கால் நாழிகை கூட ஆகவில்லை. 

“என்ன ருக்மாங்கதா! என்ன விடியுமுன் வந்து விட்டாய்? உன் முறை தீர்ந்துவிட்டதா!” என்று கேட்டான் கோட்டைக் காவலர்களில் ஒருவன். 

“இல்லை; இருவரும் என்னோடு வாருங்கள். பண்டித மணி ராஜா அய்யரை யாரோ கொலை செய்துவிட்டார்கள். விஜயநகரத்தில் இதுவரை நடைபெற்றிராத விபரீதம் இப்போது நிகழ்ந்து விட்டது. இந்தப் பழி, யார் தலையில் விழுகிறதோ தெரியவில்லை.” என்று பேசிக்கொண்டே ருக்மாங்கதன் கோட்டைக் காவலர்களை அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான். அரசவை நடைபெறும் பளிங்கு மண்டபத்திற்குப் பக்கத்தில் ஒரு மூலையில் மூட்டை ஒன்று காணப்பட்டது. அழுக்குத் துணியால் கொண்ட அந்த மூட்டையில் பண்டிதமணி ராஜா அய்யரின் தலைப்பாகை பிரிந்து கிடந்தது. அவர் ஏட்டுச் சுவடிகளை அடுக்கி வைத்திருக்கும் வெள்ளிப்பெட்டி திறந்து கிடந்தது.எடுகள் எதுவும் உருப்படியாக இல்லை. அவர் அணிந்திருக்கும் தங்கக் காப்புகளும் அங்கேயே வளைந்து நெளித்துக் காணப் பட்டன. அவருடைய பொன்னாடை, பாதுகைகள் முப்புரி நூல் முதலியவைகளும் அந்த மூட்டையில் தென்பட்டன. காவலர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்தார்கள். 

”ருக்மாங்கதா, அரண்மனையில் நெடுநாட்களாக இந்தச் சதி நடந்து வந்திருக்க வேண்டும்! இல்லாவிட்டால் நாகமர் போன அன்றே இந்தக் கொலை நடந்திருக்குமா? நாகமர் என்றைக்குப் போவார் என்று எதிர்பார்த்தே இந்தக் கொலைகாரன் நமது பண்டிதமணியைக் கொன்றிருக்க வேண்டும். கோழைப் பிறவி! இப்போது அவன் என்முன் வந்தால், அவன் மூளையைச் சிதறடித்துவிடுவேன்!” என்று வீரியம் பேசினான் ஒரு காவலன். அந்த நேரத்தில் மன்னர் துயில் கொண்டிருந்த சித்திரச்சாலைப் பக்கமாகச் செருப்புச் சத்தம் கேட்டது. காவலர் மூவரும் வெவ்வேறு திசைப் பக்கமாகப் பிரிந்து ஓசையைக் கவனித்தார்கள். அந்தக் காலடி ஓசை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது. காவலன் ருக்மாங்கதன் மட்டும் ஓசையைப் பின் தொடர்ந்து அரண்மனைக்குள் நடந்து கொண்டே இருந்தான். கறுப்பு உடை உடுத்திய ஒரு குட்டையான உருவம் இடுப்பில் கத்தியோடு மன்னர் தூங்கும் சித்திரச் சாலைக்குள் அப்போதுதான் அடியெடுத்து வைத்தது. ருக்மாங்கதன் இதைப் பார்த்துவிட்டான். அந்தக் குட்டையான உருவம் மன்னருக்குச் சற்றுத் தொலைவில் ஒரு தாழ்வான கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த விசுவநாத நாயக்கனின் அருகில் போய், “வீராதி வீரனே உன் தந்தை நாகமனின் வீரத்தி லும் செல்வாக்கிலும் நம்பிக்கை வைத்து உன் எதிர்காலத் தைப்பற்றி இன்பமான கனவு கண்டு கொண்டிருக்கிறாயா? பரிதாபத்திற்குரிய வாலிபனே, உன்னுடைய மனக் கோட்டை மட்டுமல்ல, விஜயநகரப் பேரரசின் மனக் கோட்டையே இன்று எரிந்து சாம்பலாகப் போகிறது!” என்று மெல்லப் பேசியது ருக்மாங்கதன் காதில் அரையும் குறையுமாக விழுந்தது. பண்டித மணியைக் கொன்ற அதே கொலைகாரன்தான் ராயரையும் கொல்ல வந்திருக்கிறான் என்று ருக்மாங்கதன் முடிவு கட்டிவிட்டான். அவனுக்கு மனம் நிலை கொள்ளவில்லை. அவன் விஜயநகர சாம்ராஜ்ஜி யத்திற்கும் மகமதியப் படைக்கும் நடைபெற்ற பெரும் போர் களில் உயிரை விட்டுப் போர் புரிந்து அழியாத் தழும்புகளைப் பெற்றவன். அதற்கும் மேலாக அவனுடைய அருமைத் தந்தையை மகமதியர்களின் ஆக்கிரமிப்பிற்குப் பலியிட்டவன். ‘ருக்மாங்கதா ஆபத்து வேளையில் ஆலோசனைக்கு இடமில்லை. அண்ணலுக்குப் பக்கம் போய் விட்டான் அந்நியன்’ என்று மனச்சான்று அவனை உறுத்தியது. அப்போது, ருக்மாங்கதன் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதுவரை தூங்குவது போல் பாவனை செய்து கொண்டிருந்த விசுவநாத நாயக்கன், அந்தக் கொலைகாரன் மன்னர் பக்கம் திரும்பியதும் எழுந்து தூணின் மறைவில் நின்றுகொண்டான். ருக்மாங்கதனுக்கு மூச்சு வந்துவிட்டது. சாம்ராஜ்ஜியம் காப்பாற்றப்பட்டு விட்டதாக நினைத்துப் பூரித்தான். 

கொலைகாரன் மேற்கு நோக்கி ‘ஆண்டவரே, அன்புரு வான அல்லாவே! நான் செய்யப்போகும் இந்தக் கொலைக்கு என்னை மன்னித்து பீஜப்பூர் வெற்றிக்கு அருள் புரிவீராக!” என்று வேண்டிக் கொண்டு இடுப்பிலிருந்த கத்தியை உருவினான்.அன்று மட்டும் விசுவநாத நாயக்கனும், ருக்மாங்கதனும் இருந்திராவிட்டால் ராயர் இறந்திருப்பார்; விஜயநகர சாம்ராஜ்ஜியம் அன்றோடு அஸ்தமித்திருக்கும். மகமதியர் ஆதிக்கம் தென்னகத்தில் வேரூன்றியிருக்கும். 

பொழுது விடிவதற்குள் இந்தப் பொல்லாத செய்தி நகர் முழுதும் பரவிவிட்டது. மகமதிய வீரனொருவன் மன்னரைக் கொல்லச் சதி செய்ததை விசுவநாத நாயக்கன் கண்டு பிடித்துவிட்டான் என்று ஆடவரும் பெண்டிரும் கண்ட கண்ட இடங்களிளெல்லாம் பேசிக்கொண்டார்கள். அவர் களில் விசுவநாதனைப் புகழ்ந்து, மன்னரின் ஆயுளை வாழ்த்தாதவர்கள் இல்லை. 

அத்தியாயம்-2

அரசவை கூடியது. லட்சோப லட்ச மக்கனின் இதய பீடங்களில் ஆழப் பதிந்திருந்த கிருஷ்ணதேவ ராயர் கம்பீரமாக அவையில் அமர்ந்திருந்தார். கைது செய்யப்பட்ட மகமதிய வீரன் ராயரின் எதிரே நிறுத்தப் பட்டிருந்தான். ராயரின் மெய்க்காப்பாளர்களான விசுவாத நாயக்கனும், அரியநாதனும் மன்னருக்கு வலத்திலும், இடத்திலும் இடம் பெற்றிருந்தனர். பண்டிதமணி ராஜா அய்யர் தவிர மற்ற அவைப் புலவர்கள் அனைவரும் அவைக்கு வந்திருந்தார்கள். அரசவையில் எல்லோருக்கும் அந்தக் குற்றவாளியைக் கடுமையாகத் தண்டித்து விடவேண்டும் என்றுதான் விருப்பம். ராயருக்கும் அந்த ஆசைதான் மேலோங்கி நின்றது. ஆனால் ராஜா அய்யரின் மேலான ஆலோசனைக் காக அவர் காத்திருந்தார். அப்போது கோட்டைக் காவலர்கள் அவைக்குள் வந்து கடந்த இரவு கண்டெடுத்த துணி மூட்டையை மன்னர் முன் படைத்தார்கள். சபை அதிர்ச்சி அடைந்தது; அதிலிருந்த பொருள்களைப் பார்த்து. 

”இந்தக் கொடியவன்தான் நமது பண்டிதமணியையும் மாய்த்திருக்க வேண்டும். இவனைச் சித்திரவதை செய்வதே உகந்த தண்டனை” என்று சபையில் பெருங் கூச்சல் கிளம்பியது. 

குற்றவாளி சிரித்தான். அந்தச் சிரிப்புக்குத்தான் எத்தனை அர்த்தங்கள்! 

அதுவரை வாய்திறக்காதிருந்த ராயர் பேசத் தொடங்கினார்: 

“இந்தச் சபை என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக் கிறதோ அந்த அளவுக்கு என் வேண்டுதலை மதித்துக் கௌரவிக்கும் என்று நம்புகிறேன். இந்தக் குற்றவாளி நமது பண்டிதமணியின் பிணத்தை நம்மிடம் ஒப்படைத்து விட்டால் இவன் செய்த இரண்டு குற்றங்களையும் மன்னித்து, துங்கபத்திரையின் வடகரையில் அவிழ்த்து விடலாம்” – ராயரின் இந்த முடிவை சபை அரை  மனத்துடன் ஒப்புக்கொண்டது. கூண்டில் நின்ற மகமதிய வீரன் அப்போதும் வாய் நெளியாமல் சிரித்தான். அவன் சிரிக்கச் சிரிக்க ராயர் மூகம் சிவந்துகொண்டே வந்தது. 

தளபதி சிங்கராயன் கண்களில் ஆவேசம் கொப்பளித்து நின்றது. ‘சக்கரவர்த்தி, இவன் பைத் தியம்போல் நடித்து பரிதாபத்திற்குள்ளாகப் பார்க் கிறான். இவனைப் பரிசோதிக்க வேண்டும். என்று இரைந்து பேசிவிட்டு குற்றவாளியின் ஆடைகளைப் பரிசோதித்தான் சிங்கராயன். சபை சிங்கராயனின் துணிகரச் செயலை மிகுந்த அக்கறையுடன் கண்காணித்தது. சிங்கராயன் குற்றவாளியின் ஆடைகளைப் பார்த்துவிட்டு அவனுடைய கையுறைகளைக் கழற்றினான். அதிலிருந்து இரண்டு வெள்ளித்துண்டுகள் ‘கணீர்’ என்று தரையில் விழுந்தன. “அரசே பார்த்தீர்களா? நமது சாம்ராஜ் யத்தின் மானம்! பம்பாவதி கோயிலில் எழுந்தருளி இருக்கும் நமது மூலவர்களின் மூக்குகள்!* என்று கனல் தெறிக்க முழங்கினான். 

அமைதியே உருவான அரியநாதனுக்குக்கூட கோபம் பீரிட்டு விட்டது. “பெருமானே! இந்தக் கொலைகாரன் நெடுநாட்கள் இங்கு தங்கி இந்தக் கொடுஞ் செயலைப் புரிந்திருக்கிறான், இன்னும், இவனை விசாரிக்க வேண்டும். இவன் சதிக்கு உடன்பட்டு துணைபுரிந்தவர்கள் அனை வரையும் தண்டிக்க வேண்டும். ஒருவன் தப்பினாலும் நமது விஜயநகர அரசு விஷம் கலந்த பாலாகிவிடும்” என்று வேண்டுகோள் விடுத்தான் அரியநாதன்.விசுவநாத நாயக்கன் செவிகளில் இந்த உரைகளெல்லாம் ஏறவில்லை. சபையின் நடவடிக்கைகளுக்கு வெகுதூரத்திற்கப்பால் அவனுடைய சிந்தனை விளையாடிக் கொண்டிருந்தது. அரச காரியங்களில் அழைப்பின்றித் தலையிட்டு ஆலோசனைகள் கூறும் பண்டிதமணியைப் பற்றித்தான் அவனுக்குச் சிந்தனை. விளைவைப் பற்றி அவன் கவலைப் படவில்லை. சபையின் முடிவையும் அவன் நம்பியிருக்க வில்லை. அவன் கருத்தைக் கொட்டிவிட அவன் துடித் தான். “மன்னர் பிரானே, இந்தச் சபையின் அசைக்க முடியாத நம்பிக்கைக்குப் புறம்பான ஒரு எதிர்க் கருத்தை இங்கே நான் வெளியிட விரும்புகிறேன். மாமேதை பண்டிதமணி ராஜா அய்யர் இன்று சபைக்கு வரவில்லை. ஆனால், சபையோ அவர் கொலையுண்டார் என்று கருதுகிறது. அதை நான் நம்பவில்லை. மகமதிய வீரனைப் போல் வேடமிட்டு குற்றவாளியாக நிற்பவன் வேறு யாருமல்ல. நமது பண்டிதமணி ராஜா அய்யர்தான் என்பது என்னுடைய தெளிவான வாதம். குற்றவாளி அவனுடைய குரலைவெளிப்படுத்தாதது இதற்கு ஒரு சான்று என்று விசுவநாத நாயக்கன் அவனது கருத்தைக்  கக்கிவிட்டான். 

சபையில் பேரலைபோல் சலசலப்பு ஏற்பட்டது. விசுவநாதனின் ஆருயிர் நண்பன் அரியநாதன் தனது நண்பன் பெரும் பழிக்கு ஆளாகி விட்டதாக எண்ணி கைகளை நெறித்தான். துணைக்குரல் கிடைக்காமல் தனிக் குரலைக் கொடுத்துவிட்டு ராயரின் தீர்ப்பை எதிர் நோக்கியிருந்தான் விசுவநாதன். ஆனால் ராயரும் சபை யின் பக்கம் சேர்ந்து கொள்வாரென்று அவன் நினைக்க வில்லை.”விசுவநாதன் வாலிபன். ரத்தக் கொதிப்பில் அவன் பேசுகிறான். சபை அவனை மன்னிக்க வேண்டும்” என்று ராயர் பேசிவிட்டு விசுவநானைப் பார்த்தார். அந்தப் பார்வை விசுவநாதனைச் சுட்டுப் பொசுக்கியது. விசுவநாதனின் கண்களில் நீர்வடிந்தது. 

இந்த நேரத்தில் ராஜசபையின் கவனத்தை ஓர் அபயக் குரல் கவர்ந்து பற்றியது. பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கோல்களால் கெடுக்கப்பட்ட புண்ணான கண் களையுடைய ஏழை ஒருவன் ஊன்றுகோலின் துணையுடன் சபையை நோக்கி வந்துகொண்டிருந்தான். அவன் கண்களிலிருந்து ரத்தம் ஆறெனப் பெருக்கெடுத்து ஓடியது. 

”சக்கரவர்த்தி! சக்கரவர்த்தி! என் கண்களைப் பாருங்கள் பிரபு! இனி நான் வாழலாமா? புவியாளும் மன்னவரே, கவி எழுதிப் பிழைக்கும் நான் எப்படி வாழ் வேன். நீதி கேளுங்கள்; அந்த நாசக்காரனை பழிக்குப் பழி வாங்குங்கள்” என்று அந்தக் குருட்டுக் கவிஞன் புலம்பினான். 

சபையில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அனுதாபம் தெரிவித்துக்கொண்டனர். மன்னர் ராயர் கண்கலங்கிப் போனார். 

“பெரியவரே! உம் நிலைகண்டு சபை ஆறாத் துயர் அடைகிறது. அந்தக் கொடியவனைக் கண்டு பிடித்து கடுமையாகத் தண்டிக்க சபை உறுதி கூறுகிறது. நடந்ததைத் தெரிவியுங்கள்! குற்றம் களைய மன்றம் இருக் கிறது. சுற்றம் பாரா நீதிமான்கள் இருக்கிறார்கள். உங்களுடைய துயரத்தைத் துடைக்க, அரசாங்கம் பெருமுயற்சி எடுத்துக் கொள்ளும்: பெரு முயற்சி எடுத்துக் கொள்ளும்!” என்றார் ராயர். 

“ஆண்டவனே! நான் ஒரு ஏழைக் கவிஞன். அதுவும் மகமதியக் கவிஞன். நாங்கள் எங்கள் பாட்டன் காலத்திலிருந்து இந்த விஜய நகரத்தில்தான் குடி இருந்து வருகிறோம். எங்கள் குடும்பத்தில் இந்து முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லை; தெய்வத் திரு உருவே! இதுவரை நான் இந்த இந்து சாம்ராஜ்ஜியத்திற்குத் தீங்கு நினைத்ததில்லை. நேற்று அஸ்தமனத்திற்குப் பிறகு, பகல் மேல் இருள் பூசிக் கொண்டிருந்த வேளையில் ஒரு தீயவன் என் இல்லத்திற்குள் நுழைந்தான். இடமளித்து அமரச் செய்தேன். ‘கருப்பட்டி’ என்றான் அவன். ‘ஆம் என்னைக் கருப்பட்டிக் கவிஞன் என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள். என்ன வேண்டும் ஐயா’ என்று வினவினேன். ‘உமக்கு அல்லாவின்பால் பக்தி இருந்தால், அவன் புகழ் உலகம் முழுவதும் பரவ உனக்குப் பிரியம் இருந்தால், இன்று இரவு நீ எனக்கு ஒரு உபகாரம் செய்ய வேண்டும். என்றான். ‘அதற்கென்ன, செய்கி றேன்!” என்றேன். இதற்கு அவன் என்ன செய்தான் தெரியுமா? ‘இன்றிரவு மகமதியன் வேடமிட்டு விஜயநகர மன்னரைக் கொன்றுவிடப் போகிறேன் என்றான். ‘அடப்பாவி! இந்துவாகப் பிறந்து இந்து சாம்ராஜ்யத் திற்குத் துரோகம் செய்கிறாயா?” என்று இரைந்து கூவினேன் நான். இதைக் கேட்டதும் அவன் சிரித்தான். சிரிப்பல்ல அது பெருமானே! சினம் கொண்ட மலைப் பாம்பின் பெருமூச்சு! உடனே அவன் ‘கிழவா! என்னை இந்து என்ற நினைத்தாய்? நன்றாக என் முகத்தைப்பார்!’ என்றான். நான் நிமிர்ந்து பார்த்தேன். அவ்வளவுதான், கையிலிருந்து குத்தீட்டியால் என் கண்களைக் குத்திவிட்டு ஓடி விட்டான்! அந்த வேதனையுடன் அவனை எட்டிப் பிடித்தேன். அவனது இருப்பிலிருந்த லை மட்டும் என் கையில் சிக்கிவிட்டது. இதோ இருக்கிறது அந்த ஓலை” என்று கூறி கருப்பட்டிக் கவிஞன் ஓலையை மன்னர் முன் தடுமாறிக்கொண்டே ஒப்படைத்தான். அவன் ஊர்ந்த பாதை நெடுக ரத்தம் சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருந்தது. 

பனிமலர் போல் நனைந்திருந்த கண்களுக்கு ஓலையின் சாரத்தைப் புரிந்துகொள்ளும் சக்தி இல்லை; குரலில் தடுமாற்றம் இருந்தது. 

அன்புள்ள ராஜாக் கிளிக்கு, 

நீவிர் இத்தனை ஆண்டுகாலமாக விஜய நகரில் பீஜப்பூர் ஒற்றனாக இருந்தும் இதுநாள் வரை கிருஷ்ண தேவராயரை தீர்த்துக் கட்ட முடியாதது கவலைக் குரியதே! இன்னும் ஒரு கிழமைக்குள் ராயரின் மரணச் செய்தி நமது சுல்தானை இன்பத்திலாழ்த்த வேண்டும்; அல்லது நீவிர் பீஜப்பூர் வந்து சேர வேண்டும். தாமதம் கூடாது. 

இங்ஙனம், 
ஒற்றர் படைத் தலைவன், பீஜபூர். 

குழப்பத்தைக் கிளறிவிட்ட இந்த ஓலையால் குற்றவாளி யைக் கண்டு பிடிக்க முடியுமா என்பதை சபையுள் கேள்விக் குறியாக எழுந்தது. 

“பெரியவரே, விஜயநகரப் பேரரசுக்குச் சூழ்ந்து வரும் பேராபத்தைக் கவனப் படுத்தியதற்கு அரசாங்கம் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. ஆனால், தங்கள் விழிகளையும் பிடுங்கிவிட்டு என்னையும் கொல்ல எத்தனித்த அந்தக் கொலைகாரனைக் கண்டு பிடிக்க உங்களால் அடை யாளங்கள் ஏதாவது தெரிவிக்க முடியுமா?” என்று ராயர் துக்கத்துடன் கேட்டார். 

அடையாளம் எதற்கு அண்ணலே, அந்தப் பொல்லாதவன் பெயரே எனக்குத் தெரியுமே! அவன் நமது அரண்மனைப் பெருச்சாளி அதிபரே!” 

“பெயர் சொன்னால் சபைக்குத் தெரியுமா?” மன்னர் கேட்டார். 

“அவன் பெயரையா சபைக்குத் தெரியாதென்கிறீர்கள்! மன்னிக்க வேண்டும் தேசப் பிதாவே! இந்தப் புனித மன்றம் என்னுடைய வாக்கு மூலத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும். கேடு நினைக்காதவன், எவருக்கும் ஊறு விளை விக்காதவன், ஏடும் எழுத்தாணியும் தவிர ஏதொன்றும் அறியாதவன் தெரிவிக்கிறேன்; அந்தக் குற்றவாளி தொத்துக் கிளியாக மன்னரின் தோள்பட்டையில் நின்று செவியைக் கடிக்க நினைத்தவன்; தொண்ணூராயிரம் யானை எதிர்த்தாலும் தோள்வலிமை காட்டி வெற்றிக்கு உத்திர வாதம் கூறும் நாகமநாயக்கர் இல்லாத நேரத்தில் மன்னரின் உயிரைக் குடிக்க நினைத்தவன்; பூனை போல் குழைந்து வாழ்ந்து பீஜப்பூர் கொடியை விஜயநகர்க் கோட்டையில் பறக்கவிடத் திட்டமிட்டவன். அவன் யார் தெரியுமா? அவையோரே, உண்மையைச் சொல்ல துணிந்த மைக்கு என்னை மன்னியுங்கள். அவர் பெயர் பண்டிதமணி ராஜா அய்யர்! ராஜா அய்யர்!! ராஜா அய்யர்!!! என்று கதறிக் கதறி சபையில் விழுந்தான் அந்தக் கிழவன். 

மன்னன் தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது. தேள் கொட்டிய தொட்டில் குழந்தை போல் சபை வீறிட்டுக் கத்தியது. 

அதுவரை குற்றவாளிக் கூண்டில் அமைதியாக நின்ற அந்த மகமதிய வீரன் பலமாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பொலி பண்டித மணியின் குரலைச் சபைக்கு நினைப் பூட்டியது. மன்னரும் அதைக் கவனித்தார். அவர் மனம் இருப்புக் கொள்ளவில்லை. எழுந்தார். இந்துவாகப் பிறந்த நீ மகமதியன் வேடமிட்டு என்னைக் கொல்ல வந்த காரணம் என்ன? நீ ஒரு மகமதியனாக இருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன். எதிர்நாட்டான், எவனையும் கொல்ல நினைப்பதுண்டு என்று அமைதி பெறுவேன்.நீ ஓர் இந்து பெரும் புலவன்! பண்டிதமணி ! நீ ஏன் என்னைக் கொல்ல எத்தனித்தாய்? நீ சொல்” என்று ராஜா அய்யரைப் பார்த் துக் கேட்டான் மன்னன்; ராஜா அய்யர் பதில் சொல்ல வில்லை. ஊமையாக நின்றார், தரையில் சாய்ந்து கிடந்த குருட்டுக் கிழவன் தலையைத் தூக்கிப் பேசினான்.”நன்றாக மகிழுங்கள் மன்னவரே, நன்றாக மகிழுங்கள்! அவன் இந்து அல்ல! மகமதியன்! இந்துவாக நடித்தான்! இது நூற்றுக்கு நூறு மெய் மகாராஜா! என்னை நம்புங்கள்! குற்றுயிராகக் கிடக்கும் கருப்பட்டிக் கவிஞன் கொற்றவனைக் காத்த பெருமையுடன் கண்களை மூடுகிறேன்’ என்று கூறிவிட்டு அந்தக் கவிஞன் தரையில் தலையைச் சாய்த்தான். மறுபடி அவன் எழுந்திருக்கவில்லை. 

மன்னரால் இந்தத் துயரத்தைத் தாங்க முடியவில்லை. நன்றியுள்ள பிரஜையின் சாவும், நண்பனைப் போல் நடித்த வனின் துரோகமும் விஜயநகரப் பேரவையை அன்று வாட்டி எடுத்து விட்டன. அவைப் புலவர்கள் ஆளுக்கொரு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். மன்னர் எதற்கும் தலைசாய்க்கவில்லை. ஆகாய வீதியில் பறந்து கொண்டிருந்த அவருடைய உருக்குலைந்த சிந்தனை, சபையிலிருந்த விசுவ நாதனையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. “பண்டிதமணி தான் மாறு வேடத்தில் வந்து மன்னரைக் கொல்ல முயன் றிருக்கிறார்” என்று விசுவநாதன் தெரிவித்ததை நினைந்து நினைந்து அவர் வியப்பிலாழ்ந்திருந்தார். சபையும் அதை நினைத்துப் பார்க்காமலில்லை. எதிலும் அடக்கமாகப் பேசும் அவைப் பெரும் புலவர் அல்லாசானி பெத்தன்னா பேச எழுந்தார். சபை அவருடைய கருத்தைக் கேட்க நிமிர்ந்து உட்கார்ந்தது. 

“வீர பரம்பரையில் தோன்றிய நமது இளைஞர் விசுவநாத நாயக்கர் விஜயநகரப் பேரவையின் பாராட்டு தலுக்குரியவர். புலவர் குழுவின் சார்பில் சர்வ வல்லமை பெற்ற நமது சக்கரவர்த்தியின் கவனத்திற்கு ஒரு வேண்டு கோளைச் சமர்ப்பிக்கிறேன். மன்னவரின் உயிர் காத்த விசுவநாத நாயக்கருக்கு அரசாங்கம் வெகுமதி அளிப்ப தோடு, பதவி உயர்வும் கொடுத்து கௌரவிக்க வேண்டும். அத்துடன் இன்னொரு துணைக்  கோரிக்கை, இந்தக் குற்றவாளி ராஜா அய்யரை நமது கோட்டையின் எதிரி லுள்ள சதுக்கத்திலிருக்கும் இரும்பு கூண்டில் அடைத்துப் போடவேண்டும். அய்யர் சாகும்வரை அதற்குள்ளேயே கிடந்து உழல் வேண்டும். அப்போதுதான் குறுகிய பரப்புள்ள கூண்டிலடைபட்டுக் கிடப்பதைக் காட்டிலும் நாக்கை அறுத்துக் கொண்டு செத்து விடலாம் என்ற எண்ணம் இந்த அய்யருக்குத் தோன்றும். சதிகாரர் களுக்குச் சரியான தண்டனை இதுதான்” என்றார். 

சபை இதை ஏற்றது; சக்கரவர்த்தியும் ஆக்ஞை பிறப்பித்து விட்டார். 

வண்ண மயிலின் தோகை போன்ற வசீகர முதுகுத் திரை தரையில் தவழ, ராயர் எழுந்து நடந்தார். 

அரியநாதனும் விசுவநாதனும் அவரைப் பின் தொடர்ந்தனர்.  

அத்தியாயம்-3

அரண்மனையைச் சுற்றிய அரசர் வீதியில் ஒரு கருங்கல் மாளிகை. நடந்து முடிந்த நாடக அரங்கைப்போல் அந்த மாளிகை வெறுங் கூடாக இருந்தது. உள்ளே ஒரு பெண்- முதுமையைத் தொடும் வயதினள்; விரிந்த மார்புடைய ஒரு புஜபல பராக்கிரமசாலியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந் தாள். அவள் அணியும் மஞ்சளும், குங்குமமும் நிலைக்க வேண்டிய ஆசை அவளுடைய ஏக்கத்தில் ஒளிந்து கொண் டிருந்தாலும், அதையெல்லாம் மிதித்துத் துவைத்துவிட்டு வேறொரு சபலம் பீறிட்டுக் கிளம்பி நின்றது. தந்தையைப் போல் மகன் புகழ்பெற வேண்டும்; வீரன் என்ற பட்டத் தைப் பெற்று அரசரின் அன்பைப் பெறவேண்டும். என்பதே அந்தப் பெண்மணியின் தணியாத ஆசையாக இருந்தது. அவள், இதை அந்த உருவப்படத்தின் எதிரே நின்று, வேண்டுகோளாகக் கேட்டுக் கொண்டு நின்றாள். அப்போது விசுவநாத நாயக்கன் உள்ளே நுழைந்தான். அவனது முகத்தில்தான் என்ன கவர்ச்சி; என்ன உற்சாகம்! 

“அம்மா, முதல் வெற்றி எனக்குத்தான்! பிறகுதான் அப்பாவுக்கு” என்று கூவினான். 

“உன் தந்தை இனி வெற்றிபெற வேண்டியது என்னடா இருக்கிறது? பெற வேண்டிய வெற்றிகளையெல்லாம் பெற்று விட்டார். மன்னர் அவருக்குச் சூட்ட வேண்டிய விருதுகளை யெல்லாம் சூட்டி விட்டார்; இனி நீதானடா கண்ணே உன் தந்தையின் பெயரைக் காப்பாற்ற வேண்டும்” என்று வாஞ்சையுடன் அடுக்கிக் கொண்டே போனாள் அந்தப் பெண்மணி. 

“அம்மா, உனக்குச் செய்தி தெரியுமா? பண்டித மணி ராஜா அய்யர் ஒரு மகமதிய ஒற்றன்.நமது மகிபரைக் கொல்லுவதற்கு இத்தனை நாள் அவன் மாறு வேடம் போட்டு உலவி இருக்கிறான். நேற்று இரவு நான்தான் அவனைப் பிடித்துக் கொடுத்தேன். அதற்காக இன்று, ராஜ சபையே என்னைப் புகழ்ந்தது. பெரும்புலவர் பெத்தன்னா எனக்குப் பரிசுகள் வழங்கி கௌரவிக்க வேண்டு மென்று பேசினார். அஷ்டகஜப் புலவர்கள் யாருமே இதை மறுக்கவில்லை. அப்பா இருந்து இதைப் பார்க்க முடிய வில்லையே என்ற கவலைதானம்மா எனக்கு” என்றான் விசுவநாதன். 

“அப்பா இருந்திருந்தால் இதெல்லாம் ஒன்றுமே நடந்திருக்காது” என்றாள் அவன் தாய். 

“என்னம்மா, இப்படிச் சொல்லிவிட்டீர்கள்! அப்பா இருந்தால் பெத்தன்னா என்னைப் பாராட்டமாட்டாரா? பரிசு கிடைக்காதா?” ஆச்சரியத்துடன் கேட்டான் விசுவநாதன். 

“நான் சொல்வது புரியவில்லை உனக்கு. அப்பா இருந் திருந்தால் ராஜா அய்யர் மன்னரைக் கொல்லவே எத்த னித்திருக்கமாட்டார். அவர் இல்லை 

அவர் இல்லை என்று தெரிந்துதான் வந்த காரியத்தை முடிக்கப் பார்த்திருக்கிறான். அல்லது அந்த ராஜா அய்யர்தான் உன் தந்தையை மதுரைக்கு அனுப்பவே ஏற்பாடு செய்திருக்க வேண்டும்” என்று துல்லிதமாகக் கணக்கிட்டுச் சொன்னாள் அந்தப் பெண்மணி. 

“அம்மா! எப்படித் தெரிந்தது உங்களுக்கு? சொல்லி விட்டீர்களே! அரண்மனையில்கூட இன்று அப்படித்தான் பேசிக்கொண்டார்கள்!” என்று பரபரப்புடன் கூறினான் விசுவநாதன். 

அப்போது வாசல் கதவை யாரோ தட்டினார்கள். குலமரபுப்படி விசுவநாதன் தாயார் மறைவிடத்திற்குப் போய் விட்டாள். விசுவநாதன் வாசல் கதவைத் திறந் தான். அவைப்புலவர் துர்ஜதி உள்ளே நுழைந்தார். எவரையும் தலைகுனியச் செய்யும் அவருடைய படர்ந்த நெற்றியும், ஆழ்ந்த எண்ணங்களை எதிரொலிக்கும் பார்வை யும் விசுவநாதனையும் பக்தனாக்கி விட்டன. மிகுந்த மரியாதை யுடன் புலவரை உள்ளே அழைத்துச் சென்று அமரவைத்து சுவை நீர் படைத்தான். துர்ஜதி இதற்கு முன் பலமுறை நாகமரைச் சந்தித்து ராஜகாரியங்களைப் பற்றிப் பேச அங்கு வந்திருக்கிறார். ஆனால் நாகமநாயக்கர் இல்லாதபோது வருவது இதுதான் முதல்முறை. விசுவநாதன் இதை உணர்ந்து கொண்டான் என்பதை அவனது வரவேற்பும், உபசரணையும் புலப்படுத்தின. 

விசுவநாதா, அரசருக்கு இன்று உன் மேல் அளவு கடந்த பிரியம். அகம் குளிர. முகமலர உன்னையே பார்த் துக் கொண்டிருந்தார். எனக்கும் பூரண திருப்தி ” – துர்ஜதி யார் நளினமாகப் பேசத் தொடங்கினார். 

“பெரியவர்களின் அன்பிற்குத்தான் நான் தவம் கிடந் தேன் புலவர் பெருமானே! அதுவே எனக்குப் பெரும் பரிசு” விசுவநாதன் மிகுந்த அடக்கத்துடன் சொற்களை விழுங்கி விழுங்கி அவிழ்த்து விட்டான். 

“விசுவம்,ஒன்றை மறந்து விடாதே! இனிமேல் தான் நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசன் அன்பும் அரவத்தின் பாசமும் ஒரே தன்மை உடையது. அச்சம், அயர்வு அபிலாஷை எதுவும் இனிமேல் உன்னிடம் தலைக் காட்டக்கூடாது. மன்னரின் அன்பைப் பெற்றவன். மற்ற வர்களின் பொறாமைக்கு ஆளாவது அரண்மனை மரபு. எந்த உட்பகைக்கும் கட்டுப்படாமல் இருக்க வேண்டும். இன்று நீ எவ்வளவு பரவசப்படுகிறாயோ அந்த அளவுக்கு ஆயிரமாயிரம் கண்கள் உன்னுடைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தொடங்கிவிடும் என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். உன் தந்தை மகாமண்ட லேசுவரர் எனக்கு உற்ற நண்பர். மற்றவர்களிடம் சொல் லாததை யெல்லாம் என்னிடம் சொல்லுவார். கொற்றவன் குடும்பத்து ரகசியங்களைக்கூட நாங்கள் விடிய விடியப் பேசிக்கொள்வோம். வருங்காலத்தில் உன்புகழ் அவர் புகழை உறுதிப்படுத்த வேண்டும்; உன் கீர்த்தியில் தான் அவருடைய கிழப்பருவம் அமைதிபெற முடியும். உலகில் எந்த ரகசியமும், யாருக்கும் தெரியாமல் நெடுநாள் வாழ்ந்த தில்லை. ஆகையால், எந்தக் காரியத்தையும் ரகசியமாகச் செய்துவிடலாம் என்று எண்ணி விடக்கூடாது”- துர் ஜதி யாரின் இந்த அறிவுரையைக் கேட்டுக்கொண்டே நின்ற விசுவநாதனுக்கு இடை மறுத்து ஏதாவது பேசவேண்டும் போல் தோன்றியது. 

“மனமறிந்து பிழை செய்ய மாட்டேன். குடும்பத்தின் தரமறிந்து நடக்க முயல்கிறேன்.”- ஆலயத்து மூலவிக்ர கத்திற்கு முன்னின்று வரம் கேட்கும் பக்தனைப்போல் விசுவ நாதன் பதில் சொன்னான். 

புலவர் சிரித்தார். அந்தச் சிரிப்பில் வினயம் இருந் தது. பால்ய காலத்துக் குறும்பு இருந்தது. ”நீ அஞ்சு வதற்கு இடமில்லை. நம் மன்னர் பிழை பொறுப்பார்; மன்னிப்பார். ஆனால் தொடர்ந்து பிழை செய்தால் யார் தடுத்தாலும் விடமாட்டார். விசுவநாதா? இதுவரை செய்ததை மறந்துவிடு! புதுப் பிழை புரியாதே!” என்று விகடத்தோடு பொடி வைத்துப் பேசினார் துர்ஜதியார். இருபொருளில் பேசுவதில் இணையற்றவர் என்று மன்ன ரிடம் பதக்கம் பெற்றவரல்லவா அவர்! 

விசுவநாதன் திகைத்தான். புலவரின் பீடிகை அவனது ரத்த ஓட்டத்தைக்கூட தடைசெய்து விடும்போல் இருந்தது. ஒரக்கண்ணால் அவன் தாயார் மங்கம்மா மறைந்திருந்த அறையைப் பார்த்தான். உள்ளே இருந்தபடி அவள் ஒரு மரப்பொந்தின் வழியாக துர்ஜதியாரின் அறிவுரையைக் கவனித்துக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. துயரம் ஒருபடி உயர்ந்தது. 

”இவர், அவைப் புலவர் தானே, நமது சொந்த வாழ்க் கையில் தலையிட இவருக்கென்ன உரிமை இருக்கிறது என்று று கருதி விடாதே! நல்வழி கூறுவது என் தொண்டு. என் வழி மூள்வழி என்றால் நானே அவர்களை நெருஞ்சிக் காட்டில் தூக்கி எரிந்து விடுவேன். எதையும் உன்னிடம் மூடி மறைத்துப் பேச விரும்பவில்லை. நீ என்னிடம் எவ்வளவுதான் மறைத்தாலும் நான் நம்ப மாட்டேன். இதோ பார் விசுவநாதா! அந்தப்புரத்திலிருந்து எனக்கு நம்பகமான தகவல் கிடைத்திருக்கிறது. நீ இளவரசி துங்கபத்திரை மீது வைத்திருக்கும் காதலைத் துறந்து விட வேண்டும். நீ விவரம் அறிந்தவன். குருகுலவாசம் செய்து அந்நிய நாட்டு வரலாறுகளும், அரச தந்திரமும் கற்றவன். எந்த மன்னனாவது அவன் மகளின் காதலை மதித்து அவன் விரும்பிய காதலனுக்கு மணம் செய்து கொடுத்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறாயா? தென்பாண்டி நாடாகட்டும் பொன் கொழிக்கும் சோழதேசமாகட்டும், சேயிழை மலிந்த சேர மண்டலமாகட்டும், எங்காவது அரச குமாரியின் காதல் கை கூடியதுண்டா?” துர்ஜதியார் உணர்ச்சி பொங்கப் பேசினார். “புலவீர்!’ என்று குறுக்கே நிறுத்தினான். 

“பொறு! இன்னொரு கொடுமை மறந்து விடாதே! எந்த மன்னனும் இதுவரை காதல் குற்றத்திற்காக தன் மகளைக் கண்டிப்பதில்லை. மகா கவிகளைக் கொண்டு காதல் காவியங்களைப் படிக்கச் சொல்லி இன்புற்று மகிழ்ந்த மாமன்னர்கள் கூட அந்தப்புரத்து மோகனாஸ்திரத்திற்கு அடிமைப்பட்ட அப்பாவி வாலிபர்களைத்தான் தூக்கு மேடைக்கு அனுப்பியிருக்கிறார்கள். இந்த விஜயநகர சாம் ராஜ்யத்தில் எத்தனை எத்தனை வீரவாலிபர்கள் நாட்டுக்கும் நகரத்திற்கும் பயன்படாமல் நாரிமணிகளின் நளினப் பொன் மேனியில் மதிமயங்கி மடிந்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். இலக்கியத்தில் வரும் தாய் நாட்டின் சிறப்பைப் புகழும் புலவர் அதே இலக்கியத்தில் வரும் காதலையும் மனமுருகப் படித்தின்புறுகிறார். ஆனால், அந்தக் காதலால் நல்லிளங்காளைகள் நாட்டை மறந்து விடுகிறார்களே என்று புலவர் புழுங்கிச் சாகிறார். காதல் வேண்டுமா? நாடு வேண்டுமா? என்று குழம்பித் தவித்துக் கையிலிருக்கும் எழுத்தாணியால் நெஞ்சில் குத்திக் கொண்டு துடிக்கிறார். இந்த வேதனையை நான் எத்தனையோ முறை அனுபவித்திருக்கிறேன்!” 

“ஐயா” 

“இடையூறு செய்வதாக எண்ணாதே! நண்பரின் மகனுக்கு எதிர்காலத்தைக் காட்டுகிறேன். சக்கரவர்த்தி ராயர்மேல் நமக்கு உள்ள அன்பு குறைந்து விடக்கூடாது; ‘நீதி விளக்கேற்றி வைக்கும் மேதை; நாதியற்ற மக்களுக்கு வாழ்வளித்த வள்ளல் என்ற புகழுரைகளுக்கு அவர் பாத்திரமல்லர் என்ற எண்ணம் நமதுள்ளங்களில் தளிர்விட வாய்ப்பளித்து விடக்கூடாது. மன்னர் ராயருக்கும் மகா மண்டலேஸ்வரர் நாகமநாயக்கருக்கும் உன்னால் பகை மூளு மானால், அதைவைத்து எதிரிகள் ஒரு பெருங்காவியமே தீட்டி விடுவார்கள். நாடு துண்டுபடும், நாட்டவர் துன்புறுவர். அன்னியர் புகுவர்; அதன்பயனாய் புண்ணிய விஜய நகரம் நேர்த்தியும் கீர்த்தியும் பெற்ற நேர்மையாளர் பலர் சதியின் பெயரால், — குற்றச்சாட்டின் பெயரால் மன்னரின் மனத்தாங்கலுக்கு இலக்காகி தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள்.”- என்று விட்ட இடத்திலிருந்து தொடங் கினார் துர்ஜதி. 

விசுவநாதனால் இதற்குமேல் தாங்கமுடியவில்லை. கண்ணீர் பொல பொல வென்று கொட்டியது. புதிதாகக் கூண்டிலடைக்கப்பட்ட கிளியே, சுவைக் கனிகளை வெறுத்து சுதந்திர வாழ்வை எண்ணிக் கண்ணீர் வடிக்கும் போது, ஆர்ப்பரிக்கும் போர்ப்புரவிகளை முறியடிக்கும் ஓர் இளைஞன் கண்ணீர் வடிப்பது தவறல்ல என்று தான் அவன் நினைத்தான். ஒருவன் தன் காதலை மறப்பது புதுப்பிறவி எடுப்பதற்குச் சமம். புதுமணப்பெண் பெற்றோரை மறந்து புருஷன் வீட்டிற்குப் போகும்போது அடையும் மன நிலைக்கும் காதலைத் துறக்கும் வாலிபன் உள்ளத்திற்கும் வேறு பாடில்லை. மணப்பெண் துடிப்பது பாசத்திற்காக; வாலிபன் அலறுவது நேசத்திற்காக! 

துர்ஜதி ஆசனத்தை விட்டு எழுந்தார். “என்பணி முடிந்து விட்டது விசுவநாதா! இனி உன் பணிதான் அந்தப்பணி உன் தந்தை பெயரையும் உன் பெயரையும் விஜயநகர் வரலாறு களங்கப்படுத்தாததாக அமைய வேண்டும். உலகத்தில் எந்த மனிதனும் ஓர் அழகான பெண்ணின் கணவன் என்பதற்காக மரியாதை பெற்றதில்லை. பொழுது விடிந்தால் பொழுது சாய்ந்தால் தினசரி போர் முகங்களைக் கண்டு கொண்டிருக்கும் உன் போன்ற படை வீரனுக்கு உன் குணமறிந்த உத்தமிதான் பத்தினியாக வரவேண்டும். யோசித்து முடிவுக்கு வா. தீ இன்று அநீதிக்குப் பிறகு என்னைச் சந்திக்க முயற்சி செய். நன்வழி கூறுவதே என் தொண்டு! என்வழி முள்வழி என்றால், நானே அவர்களை நெருஞ்சிக் காட்டில் தூக்கி எறிந்து விடுவேன் இது என் குணம்” என் இறுதியாகக் கூறி விட்டு துர்ஜதி விடைபெற்றுக்கொண்டார். 

விசுவநாதன் முகத்தைத் துடைத்துக் கொண்டு அன்னை மங்கம்மா இருந்த அறையைத் திறந்தான். உள்ளே அவள் மயங்கிக் கிடந்தாள். துர்ஜதியின் பேச்சு அவளைத் துவள வைத்து விட்டது. விசுவநாதனின் எதிர்காலத்தைக் கேடு சூழ்ந்து விடுமோ என்று அவள் அஞ்சிக்கிடந்தாள். அவள் முகத்தில் வியர்வை பூத்திருந்தது. விசுவநாதன் நடுக்கத் துடன் அவளைத் தேற்றினான். பதிலுக்கு அவள் எதுவும் பேசவில்லை. வியர்வைத் துளிகளோடு விழிநீர் சங்கமமாகி இருந்தது. 


அரண்மனைக்கு வடக்கே உள்ள தாமரைப் பொய்கை யின் கரையில் சித்திரம்போல் ஒரு சாந்துக் கட்டிடம் இருந்தது. பார்ப்பவர்களுக்குப் பரம்பரை பரம்பரையாக அந்த வீட்டில் ராஜ குடும்பத்தினரே வாழ்ந்து வருவது போல் தோன்றும். அவ்வளவு அழகாகவும், எடுப்பாகவும் அந்தவீடு விளங்கியது. முகப்பு வாசலையும், முன் வீட்டை யும் இணைக்கும் பூங்காவனத்தில் மல்லிகைப் பந்தல் பட்டுப் போல் விரிந்து படர்ந்து கிடந்தது. சில நேரங்களில் அந்த மல்லிகையின் நறுமணத்தில் கட்டுண்டு, இளவரசி துங்கபத்திரையை பூவேண்டி அனுப்புவதுண்டு. அந்த வீட்டில் முல்லை மொட்டுப்போல் எல்லையில்லா அழகி ஒருத்தி உலவினாள். அவள் கன்னிப்பெண். தன்னிகரில்லா அழகி என்ற கர்வம் வேறு அவளிடம் வளைந்து கிடந்தது. சின்னவயதிலே சுட்டிப்பெண் என்ற பெயரெடுத்தவள். பருவ வயதில் கேட்கவேண்டுமா? மானாய் ஓடி, மயிலாய் ஆடி அந்த மாளிகையையே அதிரடித்து வந்தாள். 

கொஞ்ச நாட்களாக அவன் மனத்தில் ஒரு புதிய எண்ணம் குடி புகுந்திருந்தது. வீட்டுப்புறா போல் இருந்த அவள் உள்ளம் கோயில் புறாபோல் அலையத் தொடங்கி விட்டது. அமுதம்போல் சமைத்துப் போட்டவள் அலுத்துச் சலித்துச் போனவளைப் போல், உப்பில்லாமல், சுவையில்லாமல் சமைக்கத் தொடங்கினாள். பூஞ்சிட்டுக் களைப்போல் அவள் விழிகள் கணநேரத்திற்குள் பல இடங் களைத் தொட்டுத் தடவித் திரும்பின. எப்போதிருந்து இந்தக் குணம். இந்தக்கோலம்! அவருடைய அகமும் புறமும் சூழப் பரவிக் கிடக்கும் புதிய குறும்புகளை இதழ் விரித்து எத்தனை நாளாயிற்று? தாயில்லாப் பிள்ளையாக அவளை வளர்த்து வரும் அவளுடைய தந்தை துர்ஜதிக்குத் தான் தெரியும்! விசுவநாதன் காதலுக்கு வெடிவைத்து விட்டு அவரும் இப்போது தான் வீட்டுக்குள் நுழைந்தார். வெற்றி தோல்வி தெரியாமல் அவர் முகம் எண்ணெய் படிந்து இருந்தது. பசித்த வயிறு போல் கண்கள் பள்ளம் பாய்ந்து கிடந்தன. 

“கங்கா!” 

“அப்பா!” 

“தண்ணீர் கொண்டு வா” 

புத்திரி கங்கா வெள்ளிக் குவளையில் பழரசம் கொண்டு வந்து கொடுத்தாள். 

“வினை விதைத்து வந்திருக்கிறேன் கங்கா! விளைச்சல் உனது சாமர்த்தியத்தைப் பொறுத்தது மகளே!” என்றார். 

“வினையா விதைத்து விட்டீர்கள்.” அதிர்ச்சியோடு கேட்டாள் கங்கா. 

“பைத்தியக்காரப் பெண்ணே! உலகத்தில் எல்லோரும் புத்திசாலியாகி விடுவார்களா? வினை விதைத்து விட்டு தினை அறுப்பவன்தான் அதிசமர்த்தன். உன் பிதா வினை தான் விதைப்பான்; தினைதான் அறுப்பான்; அஞ்சற்க மகளே” என்றார் துர்ஜதி. படமெடுத்தாடும் நாகத்தைப் போல் அவரது அரை வட்டப் புருவங்கள் குனிந்து நிமிர்ந்தன. 

“என்னப்பா பேசுகிறீர்கள்? எனக்கு ஒன்றுமே விளங்க வில்லையே!” 

“உனக்கா விளங்காது? நீ ஊரை வளைத்துத் தோரணங் கட்டி விடுவாயே!… கங்கா, நீ தாயில்லாப் பிள்ளை என்பதற்காக தள்ளாத வயதையும் பொருட் படுத்தாமல் உழன்று கொண்டிருக்கிறேன். நீ போயிரு. இப்போது விசுவநாதன் வருவான்! இவ்வளவு நேரம் அவன் மனம் உடைந்து தவிடு பொடியாகியிருக்கும்” என்றார் துர்ஜதி. 

கங்கா சிரித்துக் குமுறி விட்டாள். காவிரிபோல் அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது. 

“கங்கா, ஆடாதே! உன் ஆட்டத்திற்கு இன்னும் அஸ்திரம் பலமாகவில்லை. அவனோ இப்போது அந்தப் புரத்து மோகன லாகிரியில் சொக்கிக் கிடக்கிறான். நீயோ தலைகால் தெரியாமல் அபிநயம் பிடிக்கிறாய்.” 

“உங்கள் மகள் மனம் விட்டுக் கேட்கிறேன். அவர் கிடைக்கவில்லை என்றால், உங்களுக்குப் பின் எனக்கு வேறு துணை ஏது அப்பா?”- கங்கா கெஞ்சினாள். 

“அவன் மறுத்தால் என்னசெய்வது குழந்தாய்?” 

“பெருங் கவிஞர் பெத்தன்னாவுக்கே அரும்பெரும் யோசனைகள் கூறும் தாங்களா அப்பா இப்படிப்பேசுவது! அஷ்ட கஜங்கள் மன்னரின் இஷ்டகஜமாக பீடுநடை போட்டு உலவும் தங்களுக்குத் தெரியாத வழியா எனக்குத் தெரியப் போகிறது?” – கங்கா பத்திரகாளி வேஷம் போட்டாள். 

“கங்கா உள்ளத்தைக் கிள்ளாதே” துர்ஜதி அழுத்தமாகக் கூறினார். 

“அப்பா!” 

”கங்கா, உனக்குத்தான் சொல்லுகிறேன்.’ 

“அப்பா, நீங்கள் கண்களை அகட்டிப் பார்த்தால் கனல் பொழிகிறது என்கிறார்கள்; குரலை உயர்த்திப் பேசினால் புலி சீறுகிறது என்கிறார்கள்; நெற்றியைச் சுளித் தால், புருவத்தை நெறித்தால் நேர் வைரிகள்கூட சரண் அடைந்துவிடுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். நிரபராதியைக் குற்றவாளியாக்கும் துணிச்சல், குற்ற வாளியை விடுதலை செய்யும் ஆற்றல் – இவ்வளவு இருந்தும் உங்கள் மகளுக்கு ஏற்றவரை – அவள் விரும்பு பவரை இணங்க வைக்க முடியாதா அப்பா உங்களால்! அப்பா நீங்கள் மனம் வைத்தால் முடியும்.” – கங்கா கண்ணீர் பொங்கப் பேசினாள். குரல் வலிக்கக் கத்தினாள். 

“கவலைப்படாதே கங்கா! நல்வழி கூறுவது என் தொண்டு! என்வழி முள் வழி என்றால் அவனை நானே நெருஞ்சிக் காட்டில் தூக்கி எறிந்து விடுவேன்’ என்று அவனிடம் தெரிவித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன். இதனால் நாகமருக்கும் எனக்கும் தீராப் பகை மூண்டாலும் சரி, ராயர் மதிப்பை நான் இழந்தாலும் சரி, கங்கா உன் கழுத்தில் விசுவநாதனை மாலை சூட வைக்கிறேன். இது சபதம் கங்கா, இது சபதம்!’ – கர்ஜித்தார் துர்ஜதி. 

“சபதம் தோற்றால் ” – தூபமிட்டாள் கங்கா. 

“சபதம் தோற்பதா? நடக்காது கங்கா, உன் உயிரைக் குடிக்கக் கூடிய சபதத்திலா நான் தோற்பேன்?” அடித்துப் பேசினார் துர்ஜதி. கங்கா சிரித்தாள். 

“அப்பா நான் சாகமாட்டேன். சபதத்தில் நீங்கள்  தோற்றாலும் நான் சாகமாட்டேன். என் கண்களைப் பாருங்கள்; உங்களுடைய கண்கள், நெற்றியைப் பாருங்கள். உங்களுடைய பரந்த நெற்றி. உங்கள் தந்திரம் எனக்கும் உண்டு. உங்கள் சூழ்ச்சி என்னிடமும் இருக்கிறது.’- களத்தில் குதித்த வீரனைப்போல் பேசினாள் கங்கா. 

“கங்கா என்ன பிதற்றுகிறாய்? உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா?” 

“அப்பா! விசுவநாதர் நமது இல்லம்தேடி வரவில்லை யானால் உங்களுடைய அறிவுரையை அவர் மதிக்கவில்லை என்று பொருள்.” கங்கா – துர்ஜதியின் கெடுமதிக்குச் சூடேற்றினாள். 

துர்ஜதி, கங்காவின் சொற் சிலம்பத்தில் படிந்து விட் டார். துர்ஜதியின் பலவீனத்தைப் புரிந்து கொண்ட அவர் மகள், தந்தையின் கண்களை கனல் என்றாள். அவரது உயர்ந்த நெஞ்சு நிமிர்ந்தது. விம்மிப் புடைத்தது. வீர சபதம் கூடப் புரிந்து விட்டார். மனிதனை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்தால், குணத்தில் நீங்கள் தங்கக் குன்று என்று வர்ணித்தால் அவன் தலை கவிழ்ந்து விடுகிறது. எதிரியையும் அவன் மன்னித்து விடுகிறான். கஞ்சனும் வள்ளலாக மாறிவிடுகிறான். 

பொழுது புலர்ந்தது. படுக்கையிலிருந்து கண் விழிக் கும்போது விசுவாமித்திரனைப்போல் வெடுவெடுவென்று பேசினார் துர்ஜதி. 

”கங்கா, ருத்திர தாண்டவம் தொடங்கி விட்டது. இனி மித்திர பேதம் பார்ப்பது இழுக்கு. இப்பொழுதே போகி றேன். சிங்கராயனைப் பார்த்துச் செய்ய வேண்டியதைச் செய்கிறேன்” துர்ஜதி பூபாளம் பாடத் தொடங்கினார். 

”சிங்கராயருக்கும் விசுவநாதருக்கும் உறவு அதிகமப்பா. சிங்கராயர் சொன்னால் விசுவநாதர் கேட்பாராக்கும்…!” தாகத்தோடு பேசினாள், கங்கா. 

”நன்றாகச் சொன்னாய். கீரியும் பாம்பும் கூடி விளையாட லாகுமா? பாலைக் குடிக்காதே என்று பூனையை கேட்டுக் கொள்வதற்கு வாலைச் சுற்றிவரும் நாயிடமா சிபாரிசுக்குப் போவார்கள். நம் எதிரிக்கு எதிரியை நாம் புகழ்ந்தால் நம் எதிரி இணங்குவான்; உள்ளம் கலகலத்துப் போகும். கங்கா – என் அருமை மகளே, உன் தந்தை என்ன செய்யப் போகிறான் என்பதைக் கவனி. படைக்குள் பிளவு, கட்சி – உட் கட்சிப் போராட்டம், அரண்மனைக்குள்ளேயே குழப்ப மெல்லாம் நடக்கப்போகிறது. என்றைக்கு ஒரு வாலிபப் பயல் என் சொல்லை மதிக்க வில்லையோ அவனை விட்டு வைப்பது தவறு!கங்கா கதவை மூடிக்கொள்! 

வேலை இல்லை யென்றால் மல்லிகை எடுத்து மாலை தொடுத்துக் கொண்டிரு நள்ளிரவானாலும் நான் போன காரியத்தை சித்தி பெறாமல் திரும்பமாட்டேன். பதனம் கங்கா! பதனம்” என்று கூறிவிட்டு, துர்ஜதி வெளிக் கிளம்பினார். அவருடைய பாதக் குறட்டின் ஓசை விசுவ நாதனின் குதிரை நடைபோல் இருப்பதை எண்ணி கங்கா புளகாங்கிதம் அடைந்தாள். 


தளபதி சிங்கராயன் தர்பாருக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். பொன்மயமான முத்திரைகள் பதித்த நீலவர்ணப் பட்டாடைகள் தளபதியின் கம்பீரத்திற்கு சவால் விட்டன. 

துர் ஜதியார் உள்ளே நுழைந்தார். “வாழ்க நின் புகழ்!” என்று இச்சகமாகப் பேசிக் கொண்டே புகுந்தார். 

”வருக இளம்பருதிக்கு முன்னே இன்று இலக்கியத் தைப் பார்க்கிறேன். புலவரே இன்று உமக்குப் பல்லக்கு வரவில்லையா?”_ சிரித்துக் கொண்டே கேட்டான் சிங்கராயன். 

“ஏன் வராது? நான் வந்த வேலை பல்லக்கில் வர வேண்டிய வேலை அல்ல. அதனால்தான் என் பட்டுக் கொடையை மட்டும் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன்.” 

”சொந்த அலுவலோ?” 

“சுயநலம் கலந்த பொதுநலத்திற்காக வந்திருக்கிறேன். தளபதியாரே, இதில் நான் வெற்றி பெற்றால் சாந்தி அடைவேன் : நீர் கீர்த்தி பெறுவீர்,” என்று ஆரம்பத்திலேயே விசையைத் திருகினார் துர்ஜதி. 

சிங்கராயன் நிமிர்ந்து உட்கார்ந்தான். “விஜயநகரத்தின் துரோகம். இப்படி தலைவிரித்தாடும் என்று நாம் எதிர்பார்க்கவேயில்லை” என்று துர் ஜதி பேச ஆரம்பித்தார். 

“இனி ஒவ்வொருவரும் விழிப்போடு இருக்கவேண்டும். ராஜா அய்யர் ஒரு மகமதியராக இருப்பார் என்று மதிப் பிடவாவது முடிந்ததா?” என்று மெய் வருத்தம் காட்டத் தொடங்கினான் தளபதி சிங்கராயன். 

“ஓஹோ…… நீங்கள் ராஜா அய்யரைக் குறிப்பிடுகி றீர்களா? அதுதான் நடந்துபோன கதையாகிவிட்டதே”- துர்ஜதி அலட்சியமாகப் பதில் சொன்னார். 

“வேறென்ன சொல்கிறீர்கள் எதுவும் புதுக்கதை நடந்துவிட்டதா? யார் அவன்?” என்று வியப்போடு கேட்டாள் சிங்கராயன். 

“புதுக்கதைதான். அதுவும் காதல்கதை அல்லவா நடந்து விட்டது. இல்லாவிட்டால் நான் ஏன் துடித்துக் கொண்டு வரப்போகிறேன். அரசர் கேட்டால் ஊன், உறக்கம் கொள்ளமாட்டார். குடியிருந்த வீட்டில் கொள்ளி வைக்கலாமா? அவன் அப்படிச் செய்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை.”- துர் ஜதியாரின் அடிப்படை தலை சிறந்த இசைவாணரின் ஆலாபனைபோல் இருந்தது. 

“புலவரே, மன்னருக்கு இழுக்கு என்றால் உமக்கும் எனக்கும் ஏற்பட்டது போல் இல்லையா? பகையை விடக்கூடாது. பதிகத்திலேயே பிடுங்கி எறிந்துவிட வேண்டும். விவரமாகச் சொல்லுங்கள்” என்றான் சிங்க ராயன். 

“மானங்கெட்ட காரியத்தை விவரமாக எப்படி விளக்குவது தளபதியாரே! இளவரசி துங்கபத்திரைக்கும் விசுவநாதனுக்கும், கள்ள உறவு. கண்ணாரக்கண்ட அந்தப் புரச் சிப்பந்திகள் வாயாரப் புலம்பிவிட்டுப் போகிறார்கள். என்னால் துயரத்தைத் தாங்கமுடியவில்லை. இரவெல்லாம் இமை கூட்டவில்லை’ – துர்ஜதி பேசும்போது அவரது உதடுகள் துடித்தன. 

இதைக் கேட்டதும் தளபதிக்கு நாடி தளர்ந்துவிட்டது. 

“அவர்களுக்குள் காதல் இருக்கலாம். பணியாளர் கள் பார்த்திருக்கவும் கூடும். ஆனால், வேந்தர் இதை நம்புவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. துர் ஜதியாரே, கொற்றவன் உயிர்காத்த உத்தமன் என்று விஜயநகரம் அவனைப் புகழ்ந்து கொண்டிருக்கிறது; பரிசும் பட்டயமும் தர மன்னர் காத்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் விசுவநாதன் மீது எந்தக் குற்றத்தைச் சுமத்தினாலும் மன்னர் ஏற்றுக்கொள்ள மாட்டார். இளவரசி துங்கபத்திரைக்கும் விசுவநாதனுக்கும் கள்ளக்காதல் வளர்வது உண்மையாக இருந்தாலும், நாம் அதற்கு காலமறிந்து வினை மூட்ட வேண்டும். வெறும் வாயை மென்று கொண்டிருந்த நமக்கு இன்று அவல் கிடைத்திருக்கிறது. அவசரப்படாதீர்கள்’ என்றான் சிங்கராயன். 

துர்ஜதியன் முகத்தில் கரிப்புகை படிந்தது. ஆனாலும் அவரது வேகம் தளர்ந்துவிடவில்லை. மனம் வெந்த புண்ணைப்போல் எரியத் தொடங்கியது. உலகில் பலரைக் கோழையாக்கும் தோல்வி, சிலரைப் புலியாக்கி பிராயச் சித்தம் தேடிக்கொள்கிறது. துர்ஜதி நிமிர்ந்து பார்த்தார். சுவரில் எதிரே புலி ஒன்று வாலை முறுக்கிக்கொண்டு நின்றது.

– தொடரும்…

– துங்கபத்திரை (நாவல்), முதற் பதிப்பு: பெப்ரவரி 1970, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *