(1970ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம்-4
விசுவநாத நாயக்கனை வேதனை புரட்டிப் புரட்டி வேகவைத்தது. துங்கபத்திரையை மறக்க வேண்டும் இல்லாவிட்டால் தாய்த்திருநாட்டின் கொற்றவன் கூற்றுவன் ஆகிவிடுவான் என்று துர்ஜதி எச்சரிக்கை விடுத்துப் போனது அவனது உள்ளத்தைக் குடைந்துகொண்டே இருந்தது. இதற்கெல்லாம் மேலாக விசுவநாதனை இன் னொரு பயம் வேறு பிடித்து உலுக்கிக்கொண்டிருந்தது. தன்னுடைய காதல் ரகசியம், மதுரைக்குப் போயிருக்கும் பேராண்மை மிக்க தனது தந்தைக்குத் தெரிந்துவிடக் கூடாது என்ற கவலைதான் விசுவநாதனை தீராத சோகத் தில் தள்ளி வைத்திருந்தது. அச்சம் ஒரு பக்கம், ஆசை ஒரு பக்கம். தோல்வியின் துயரத்திற்கு மருந்து உண்டு; வறுமையின் பொறுமைக்கு ஆறுதல் கிடைக்கும்; காதல் ரகசியத்தை யாரிடம் கூறி சாந்தி பெறுவது? துங்கபத்திரை ஒருவளைத் தவிர வேறு துணை இருப்பதாக அவனுக்குப் புலப்படவில்லை. வழக்கமாக அவளைச் சந்திக்கும் வெள்ளிக் கிழமை வரும்வரை துர்ஜதியார் அவிழ்த்து விட்டுப் போன சோகப் பெருஞ்சுமையை எப்படித் தாங்கிக்கொண்டு இருப்பது என்பதையே எண்ணி எண்ணி அவன் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அப்போது இரவு வந்து விட்டது. நட்சத்திரங்கள் முளைத்துவிட்டன. நாணம் இருந்த மணப் பெண்ணைப் போல் பிறை நிலவு மிதந்து கொண்டிருந்தது. விசுவநாதன் எதிர்பார்க்கவில்லை. பலகணி வழியாக ஓர் ஓலை விழுந்தது.
அன்புள்ள அத்தானுக்கு,
நலம், நலம் விழைகின்றேன். இன்று இரவு நிலா சாய்ந்த பிறகு தவறாது, மறவாது என்னைச் சந்திக்க வேண்டு கிறேன். அத்தானைக் காண நான் நிலா முற்றத்தில் காத் திருப்பேன். மறந்து விடாதீர்கள் அத்தான்! அவசரம், அவசியம்!
தங்கள்,
துங்கபத்திரை.
துன்பத்தால் சருகாகிக் கொண்டிருந்த விசுவநாதன் இதயத்தில் இந்த முடங்கல் தண்ணீர் தெளித்தது. கண்ணீர்ப் பெருவெள்ளத்தில் அடித்துக்கொண்டுபோன கடந்தகால இன்ப நினைவுகளை அவன் மனக்கண் முன் நிழலாட விட்டது. நகரம் துயில் கொண்ட பிறகு துங்கபத்திரையோடு அவன் நெளிந்தும், வளைந்தும், புரண்டும், சுருண்டும், துள்ளியும், தோய்ந்தும் விளையாடிய சம்பவங்கள் அவன் உடம்பில் சோர்ந்து சிடந்த ரத்த ஓட்டத்தை ஆர்த் தெழுந்து ஓடச் செய்தது. அணி மிகு பெரும் கோலம் பூண்டு அத்தாணி மண்டபத்திற்குப் போகும் அரசனைப்போல் காவலர் இழை யும் கன்னி மாடம் செல்ல ஆயத்தமானார்.
அமைதியான இரவு நேரம் – குளிர்ந்த நிலவு. அல்லி ராஜ்யம் நடத்தும் இரவு நேரம். நந்தவனத்து கன்னிப் பூக்களின் நறுமணம் வாடைக் காற்றையும் அமிழ்த்திவிட்டு சபதம் கூறி வந்தது. கவிகள் கண்டால் எளிதில் விட்டுவிட மாட்டார்கள். அழகு பெண்களிடம் இல்லை. அமைதியில் தான் இருக்கிறது என்று பாடத் தொடங்கி விடுவார்கள். தனது ஐராவதம் தேவேந்திரன் தவமாதர்களுடன் விளையாடப் போனது இது போன்ற இரா காலத்தில்தான் என்று வர்ணிக்கவும் தலைப்பட்டு விடுவார்கள். முதுமைக்குச் சபலத்தையும், வாலிபத்திற்கு வெறியையும் திணிக்கும் சுவை யான பொழுதில் விசுவநாத நாயக்கன் அந்தப்புரத்திற்குப் போனான். விஜய நகரத்திலுள்ள ஒவ்வொரு மரத்திற்கும், மதிலுக்கும் கண்கள் இருப்பதாகவே அவனுக்குப்பட்டது. கிளிகள் சிறகடித்தது காவலர்களின் பேச்சுக் குரலாக உறுத்தியது. நடுங்கிப் போனான். மனந்தான் ஈகையைப் பிறப்பிக்கிறது; அன்பை வளர்க்கிறது. அதைப் போல் வீரத்தைச் சுரப்பதும் மனம்தான். மனம் பீதி கண்டிருக்கும் போது பரந்த மார்பும் புஜபலமும் பயன்படுவதில்லை. அழுகித் தொங்கும் வெள்ளரிப் பழத்தைப் போல் உடம்பு கலகலத்துப் போகிறது.
விசுவநாதன் அந்தப்புரத்துக் கோட்டைச் சுவரை நெருங்கும்போது, மயக்கம் கண்டவனைப்போல் நடந்தான். சொந்தமில்லாத சொத்தைத் திருடப்போகும் கொள்ளைக் காரனாகத்தான் அவன் தன்னை நினைத்துக்கொண்டான். அவன் அந்தப்புரத்திற்குள் நுழைந்து நிலாமுற்றத்தை அடையும்போது இளவரசி குறிப்பிட்ட நேரம் வந்துவிட்டது. வாடிக்கையாக அவள் வரும் ரகசியப் பாதைப் பக்கமாக விசுவநாதன் உட்கார்ந்து இருந்தான். அவள் வருவதாக இருந்தால் மாடத்தில் விளக்கு எரியும்; மல்லிகை மணக்கும்; திராட்சை பழங்கள் உதிர்ந்து விழும். அன்று இந்த அறிகுறிகள் எதையும் காணோம்.
கிழக்கு வெளுக்கப் போவதை உணர்த்த மேகத் திட்டுக் களில் சாம்பல் பூக்கத் தொடங்கியது. அலுத்துச் சலித்துப் போன விசுவநாதன் சாளரத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று அந்தப்புரத்தின் ஒரு மூலையி லிருந்த மனோரஞ்சிதப் பந்தல் ஆடியது. விசுவநாதன் முகத்தை மூடிக்கொண்டு பன்னீர்மரத்தின் மறைவில் ஒதுங்கிக்கொண்டான். மனோரஞ்சிதப் பந்தல் மறுபடியும் அசைந்தது. கோபத்திற்காளான சந்நியாசியின் சாபத்திற் குள்ளான அபலைப் பெண்களைப்போல் மற்ற செடிகள் எதுவும் ஆடவில்லை; அசையவில்லை; கல்லாய்ச் சமைந்து நின்றன.
விசுவநாதனுக்கு மனம் குழம்பியது. தன்னைப் போல் இன்னொருவன் யாரோ அந்தப்புரத்தில் ரகசிய நாடகம் நடத்தி வருவதாக அவன் நினைத்தான். அது பொய்யல்ல என்பதை அடுத்த கணம் அவன் கண்ட காட்சி உறுதிப் படுத்தியது. இளவரசனைப் போன்ற ஒரு ஆடவனைத் தொடர்ந்து ஒரு பெண் – இருவருமாக மனோரஞ்சிதப் பந்தலுக்குள்ளிருந்து வெளியே வந்தார்கள்; முகம் தெரிய வில்லை. ஆடவனின் நடை மட்டும் பார்த்தது, பழக்கப் பட்டது. துரத்திப் பிடித்துவிட முடியும். துணிவில்லை. திருடனைத் திருடன் பிடிப்பதா? விசுவநாதன் திகைத்துப் போனான். இனிமேல் அந்தப்புரத்தில் துங்கபத்திரையை சந்தித்துப் பேச முடியும் என்ற நம்பிக்கையை அவன் இழந்துவிட்டான். ஆனால் இளவரசி ஏமாற்றிவிட்டாள் என்று அவள் மீது அவன் கோபப்பட வில்லை. மனோரஞ்சிதப் பந்தலுக்குள்ளிருந்து வந்த காதலர்களைப் பார்த்துவிட்டுத் தான் வெளிவராமல் இருந்துவிட்டாள் என்று விசுவநாதன் திடமாக நம்பினான்.
“என் கண்களையே நம்ப முடியவில்லை! எதிர்காலத்தை எண்ணிப் பார்க்காமல் இப்படி நடப்பான் என்று நான் நினைக்கவே இல்லை.”
“நெருப்பில்லாமலா புகை கிளம்பும்! எங்காவது காதல் இறுதிவரை ரகசியமாக இருந்ததுண்டா? ரகசியம் தெரியும் வரை காதல் உலகத்தை ஏமாற்றுகிறது. தெரிந்த பிறகு உலகம் காதலைக் கொன்றேவிடுகிறது.”
“தயவுசெய்து நீங்கள் வெளியில் சொல்லக்கூடாது. நமக்குத் தெரிந்ததோடு இருக்கட்டும். விசுவநாதன் இதை இனிமேல் என்னிடம் மூடிமறைக்க முடியாது. நேரம் வரும் போது அவனைக் கண்டிக்கத் தவற மாட்டேன்.”
”நன்மைக்காகத்தான் இதை நான் உன்னிடம் தெரி வித்தேன்.நீ இல்லாவிட்டால் நான் மன்னரின் காதிலேயே போட்டிருப்பேன். நம்மைப் போல் அவர் பார்த்திருந்தால் அந்த இடத்திலேயே விசுவநாதனின் தலையைக் கொய்திருப் பார். விஜயநகர் வரலாற்றுக்கு ஒரு மாபெரும் இழுக்கு ஏற்பட்டிருக்கும். நீ எப்படியும் விசுவநாதனின் மனத்தை மாற்றி விடவேண்டும். நீ நினைத்தால்தான் முடியும். அவன் ரகசியம் உனக்குத் தெரிந்துவிட்டது. இனி அவன் உன் னிடம் கடன் பட்டவனைப்போல் நடந்து கொள்வான்; பயப்படுவான்.”
“தவறு! நாங்கள் ஒருவருக்கு ஒருவர் அந்நியரல்ல. அவனுடைய பலவீனம் ஒன்று எனக்குத் தெரிந்து விட்டால், என்னுடைய பலவீனம் ஒன்றை நானாக அவனிடம் தெரி வித்து விடுவேன். இந்த முறையை நாங்கள் பின்பற்ற விட்டால் எப்போதோ ஒருவர்க்கொருவர் எதிரியாகி இருப் போம்; கொலைகூட நடந்திருக்கும்.”
“என்னமோ, அரசாங்கத்திற்கு நான் காட்ட வேண்டிய விசுவாசத்தைக் காட்டிவிட்டேன். துரோகம் என்னுடைய பரம்பரைக்கே இல்லை. நான் போய் வரட்டுமா?”
“இப்படியேவா போகிறேன் என்கிறீர்கள்!”
“நல்ல வேளை நினைவுபடுத்தினாய். இப்படியே போனால் என் மகள் கைகொட்டிச் சிரிப்பாள். ‘அப்பா இனிமேல் கொஞ்ச நாளைக்கு அம்மாவாகவே இருங்களேன்’ என்பாள்.”
“உங்களுக்குப் பெண் வேடம் மிகப் பொருத்தமாக இருக்கிறது; வயதே தெரியவில்லை.”
“நானும் பெண் வேடம் போடாமல், நீயும் உனது சுய உருவத்தில் வந்திருந்தால் விசுவநாதன் நம்மைப் பார்த்த வுடன் அடையாளம் கண்டுவிடுவான்; கதை கெட்டுவிடும். அவன் நம்மைப் பார்த்துவிட்டாலும் ஒன்றும் புரியாமல் குழம்பவேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்த வேலை யைச் செய்தேன்.”
“அரியநாதனும், துர்ஜதியும்தான் இந்த வேஷத்தில் வந்திருக்கிறார்கள் என்று சந்தேகிக்கவாவது முடியுமா?”
அரியநாதர் மாளிகையில் நடைபெற்ற இந்த உரை யாடல் எவருக்கும் தெரியாமல் நிகழ்ந்தது. துர்ஜதி பெண் வேடத்தைக் களைந்து விட்டுப் புறப்பட்டார். தனது திட்டத் தின் முதற்படி வெற்றிகரமாக முடிந்து விட்டதாகவே அவர் பரவசப்பட்டுக் கொண்டார்.
அத்தியாயம்-5
”கங்கா…! கங்கா’
கங்கா கதவைத் திறந்தாள்!
“ஏப்பா. இரவெல்லாமாகவி எழுதினீர்கள்? வீட்டிலிருந்து எழுதக் கூடாதா?”- கங்கா குமந்தையைப் போல் கொஞ்சலாகக் கேட்டாள்.
“கவியா எழுதினேன்? நாடகமல்லவா ஆடிவிட்டு வந்திருக்கிறேன். எல்லாம் உனக்காகத்தான் கங்கா! நெருப்பு வைத்துவிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் வெடித்து விடும். கண்ணே கங்கா! வா மகளே உட்கார்!”
“என்னப்பா,நாடகம் என்கிறீர்கள். நெருப்பு என்கி றீர்கள், வெடிக்கப்போகிறது என்கிறீர்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை அப்பா! சண்டையைப் பற்றிச் சக்கரவர்த்தி பாட்டு எழுதச் சொன்னாரா?”
“பைத்தியம்! பைத்தியம்! விசுவநாதன் காதல் காட்சி யைக் கையும் களவுமாகக் காட்டிக் கொடுத்துவிட்டேன். ஒருபோதும் சமாளிக்க முடியாது. அவ்வளவுதான், அவன் தீர்ந்தான்! அவன் எதிர்காலம் பாழ்! அவனுடைய இன்பக் னவுகள் தூள்! கங்கா குதூகலப்படு! நலங்கனியும் பாடல் புனையும் சைவப் பெரும் புலவன் நாசவேலை செய்ய ஆயத்த மாகி விட்டானே என்று நினைக்கிறாயா? நிகழ்காலம் என்னு டையது. என் காலத்தில் உனக்கு வாழ்வில்லையானால், எதிர்காலம் உன்னைத் தின்றுவிடும்!” துர்ஜதியின் பேச்சில் ஜ்வாலை பறந்தது.
கங்கா வெகுளி; உணர்ச்சியின் அடிமை. திரும்பத் திரும்பக் குழைந்தாள். அந்தக் குழைவில் கவர்ச்சி இருந் தாலும், பொலிவிருந்தாலும் கள்ளங் கபடமற்ற பேதைமை மேலோங்கி நின்றது.
“ஏப்பா என்னைக் காட்டிலும் இளவரசி அழகா? என்னைக் காட்டிலும் சிவப்பா? நிறைய நகை போட்டிருந் தாளா? கூந்தல் வெகு நீளமோ?’ – சிறிதும் வினயமில் லாமல் சிரித்துக்கொண்டே கேட்டாள்.
“அவளை யார் பார்த்தது?” – துர்ஜதி சொன்னார்.
”என்னப்பா, முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறீர்கள்? கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்துவிட்டேன், என்று இப்போதுதான் சொன்னீர்கள். அதற்குள்ளே மறைக்கிறீர் களே!’ என்று இடைமறித்தாள் கங்கா.
“எல்லாம் நீ நற்கதி அடைவதற்காக உன் தந்தை துர்ஜதி செய்த சதி குழந்தாய்! இளவரசி துங்கபத்திரை எழுதியதைப் போல் ஒரு பொய்ஓலை எழுதி விசுவநாதன் வீட்டில் போட்டேன். விசுவநாதன் அதைப் படித்துப் பார்த்துவிட்டு அதன்படி இளவரசியைச் சந்திப்பதற்காக இரவோடு இரவாக அந்தப்புரத்திற்கு ஓடோடி வந்தான். பாவம் காத்துக் கிடந்தான். இந்தக் காட்சியைக் காண் பதற்காக நான் அரியநாதனை அழைத்துக்கொண்டு போனேன். என் பேச்சை முதலில் நம்பாத அரியநாதன் நேரில் கண்ட பிறகு நம்பாமல் இருக்க முடியுமா? மலைபோல் நம்பிவிட்டான். இன்றைக்கே மன்னரிடம் சொன்னாலும் சொல்லி விடுவான், நம் மன்னர் ஒரு மாதிரி!”
”பாவம் நாகமருக்கு ஒரே பிள்ளை செத்துப்போய் விட் டால் என்ன செய்வதப்பா!”
“ஏய் கங்கா! எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் எதிரியிடம் இரக்கம் காட்டக் கூடாதென்று! போர் உள்ளே போ” என்று எரிந்து விழுந்தார் துர்ஜதி.கங்கா உள்ளே போனாள். அப்போது வாசற்பக்கமிருந்து, “மன்னிக்க வேண்டும். முன்னறிவிப்பு இன்றி வருகிறேன். வணக்கம்” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டார் துர்ஜதி. தளபதி சிங்கராயன் உள்ளே நுழைந்தான்.
“என்ன தளபதியாரே. தலைவிரிகோலமாய் வந்திருக் கிறீர்கள்? உடல் நலமில்லையோ?’
“உடல் நலத்திற்கென்ன குறை! உள்ளம்தான் சூடேறி யிருக்கிறது. நாமொன்று நினைக்க, நம் மன்னர் ஒன்று நினைக்கிறார். நான் பதவியை ராஜினாமாச் செய்ய முடிவு செய்துவிட்டேன்.”- மலை முகட்டிலிருந்து உருண்டு விழும் பாறை போல், வார்த்தைகளைக் கொட்டினான் சிங்கராயன்.
”காரணம்? மன்னருக்கு உம்மீது நம்பிக்கைக் குறைவு ஏற்பட்டுவிட்டதா?”
“விசுவநாதன் நேற்று வரை சிப்பாயாக இருந்தவன், இன்று அவன் வடஎல்லைக் காவற்படையின் தலைவன். அவமானம்! அவமானம்! எனக்கும் அவனுக்கும் வேறுபாடு வேண்டாமா?”- ஆத்திரம் பொங்கப் பேசினான் சிங்கராயன்:
“உண்மைதான். விசுவநாதன், வீரனாக இருந்தாலும் எல்லைகாக்கும் பொறுப்பான பணிக்கு விசுவநாதனைத் தலைவ னாகப் போட்டிருக்கக் கூடாது…..எனக்குத் தெரியவே இல்லையே! எப்போது நியமித்தார்கள்?’ துர்ஜதி. சிங்கராயன் கோபத்தில் நெய்யைக் கொட்டினார்.
”புலவரே, அரசரின் ஆலோசனைக் குழுவில் நீங்கள் இடம் பெற்றிருப்பதால் கூறுகிறேன். அரசாங்கத்தின் போக்கு இப்படியே நீடிக்குமானால் விஜ நகரப் பேரரசு உண்மையான ஊழியர் பலரை இழக்க நேரிடும் என்பதை மறந்துவிடக் கூடாது.”- சிங்கராயனின் பேச்சில் ஏமாற்றத் தின் எதிரொலி இருந்தது; தோல்வியின் சாயல் தென் பட்டது.
“பதறாதீர்கள், மன்னரிடம் இதுபற்றிப் பேசுவோம். ஆனால் ராஜினாமா என்ற பேச்சே இருக்கக் கூடாது. அது பலவீனம்! நம் நாட்டுக்கே இழுக்கு. சிங்கராயரே, நான் யார் மீதும் தனி அன்பு காட்டுவதில்லை. என் இதயத்தில் யாருக்கும் இடம் ஒதுக்குவதுமில்லை. யாஈடைய நல்ல குணமும் என்னைக் கவர்ந்ததில்லை. நானாக விரும்பி யார் மீதாவது விருப்பம் வைப்பதுண்டு. புத்திசாலிகள் அதைப் புரிந்து கொள்வார்கள். நான் நினைத்தால் உம்மை நாகமர் இருக்கும் இடத்திற்கு உயர்த்த முடியும். ‘மகாமண்டலே சுவரர்’ என்ற பட்டத்தையும் தேடித் தருவேன்… கங்கா இங்கே வா!” – துர்ஜதி தளபதியிடம் பேசிக்கொண்டே கங்காவை அழைத்தார்.
கங்கா வந்தாள். மங்கா ஒளியுள்ள அவள் விழிகள் தெளிந்த நீருக்குள் அலையும் மீன்களைப் போல் விளையாடின.
“கங்கா தளபதியை வணங்கு! இவர்தான் விஜய நகரத்தின் எதிர்கால மண்டலேசுவரர்! நினைவில் வைத்துக் கொள். உனக்கு ஞாபக மறதி அதிகம்.” துர்ஜதியின் அறிமுகத்தில் வினயம் இருந்தது.
”மன்னிக்க வேண்டும். தங்களுக்கு மகப் பேறே இல்லை யென்று எண்ணியிருந்தேன். கங்கா…கங்கா…!” சுவை கூட்டி அடிக்கடி சொல்லிப் பார்த்தான் சிங்கராயன்.
“ஆம்! கங்காதான் அவள் பெயர். தென்னாட்டில் நதியின் பெயரைப் பெண்களுக்கு வைப்பது மரபு. அதுவு மல்ல, குளிர்ச்சியையும் இன்பத்தையும் எது எது மக்களுக் குத் தருகிறதோ, அதன் பெயர்களையெல்லாம் பெண்களுக்கு வைப்பார்கள். மல்லிகைப்பூ, மகிழம்பூ, மனோரஞ்சிதம் என்று பெண்களுக்குப் பெயர் வைப்பதும் இதனால்தான். பூக்களில் குளிர்ச்சியுண்டு, இனிமையுண்டு! கவிஞர்கள் நிலவைப் பெண்ணாக வர்ணிப்பதும் இதற்காகத்தான்!”- துர்ஜதியின் இந்தப் பெயர் ஆராய்ச்சியை சிங்கராயன் கவனிக்கவில்லை. அவன் ஒரு புது ஆராய்ச்சியில் திளைத் திருந்தான்.
“புலவரே, நிலவில் மலர் பூப்பதுண்டா?” என்று கேட்டான்.
‘இதென்ன கேள்வி! நிலவில்தானே பூக்கள் மலர்கின்றன!”
“தவறாகப் புரிந்து கொண்டீர்கள். நிலவின் முகத்தில் மலர் பூப்பதுண்டா என்று கேட்டேன்” என்றான் சிங்கராயன்.
புலவர் சிரித்தார்.
“அதோ பாருங்கள் சுவரில் ஒரு சித்திரம் இருக்கிறது. நிலவு போன்ற கண்கள் மலர்ந்திருக்கின்றன. அதைத்தான் கேட்டேன்” என்றான் சிங்கராயன்.
“அருமையான கற்பனை!” என்று சிரித்தார் துர்ஜதி. அவரருகில் நின்ற கங்கா அதைப் புரிந்து கொண்டு தலை யைக் கவிழ்த்துக் கொண்டாள். தான் ஒரு அழகி என்ற கர்வம் அவள் தலையைக் கனக்க வைத்துவிட்டது. பெண் படைப்பு, ஆடவர்களுக்கு நேர்மாறான படைப்பு. ஆடவனை மயக்க,அவன் உள்ளத்தைப் புகழ வேண்டியிருக்கிறது. பெண்ணை மயக்க,அவள் உருவத்தைப் புகழ்ந்தால் போதும். நல்லவன் என்று பெயர்பெற ஆடவன் விரும்பினால், அழகி என்று பெயர் பெற பெண் விரும்புகிறாள். ஒன்றுக்கொன்று எவ்வளவு வேறுபாடு!
சிங்கராயன் கங்காவைப் புகழ்ந்தது அவள் தலையில் பனிக்கட்டியைத் தூக்கி வைத்தது போல் இருந்தது. அவள் உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது. மின்னற்கொடி போல் ஓடி மறைந்துவிட்டாள்.
அத்தியாயம்-6
மதுரைக்குச் சென்ற நாகமநாயக்கர் அபரிமித வெற்றி அடைந்தார். சோழப் படையை வென்று, வீரசேகரனைக் களத்திலேயே கொன்றுவிட்டார். செழுமை மிக்க சோழ நாட்டை விஜயநகரின் காலடியில் படைத்து ராயர் மைத்துனன் செவ்வப்பரை பிரதிநிதியாக்கினார் நாகம் நாயக்கர். பாண்டியனுக்குப் பதி கிடைத்தது. ராயர் மகிழ்ந்தார். சிப்பந்திகளுக்கு இன்பத் தொகை அளித்தார். விஜயநகர் முழுதும் வெற்றி விழாக் கொண்டாட வேண்டு மென்று அவர் தீர்மானித்தார். ஆனால் அவர் எதையும் நினைத்தவுடன் நினைத்தபடி செய்து விடுவதில்லை. அஷ்ட கஜங்களின் ஆலோசனையை அவர் மீற மாட்டார்.
அல்லாசானி பெத்தன்னா தலைமையில் நந்திதிம்மன்னா, துர் ஜதி, மாதய்யகாரி மல்லன்னா, பிங்கள சூரன்னா முதலிய புலவர்கள் மன்னனின் அழைப்பிற்கிணங்க அவசரக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
பெரும் புலவர் பெத்தன்ன மன்னரின் விருப்பத்தை வழி மொழிந்து பேசினார். மகாமண்டலேசுவரருக்கு வரவேற்பளித்துக் கௌரவிக்க வேண்டுமென்று பேசினார். மன்னரின் பொன் முகத்தில் புன்முறுவல் அரும்பி நின்றது. ஆனால் அது நிலைக்கவில்லை. புலவர் துர்ஜதி பேச எழுந்தார்.
“நாம் மதுரையை வெற்றி கொண்டது கடினமான காரியமல்ல. நாகம நாயக்கருக்கு இது எளிதான காரியம். மதுரை வெற்றியை நாம் பெரிதாக மதித்தால் – அதற்கென ஒரு வெற்றி விழா கொண்டாடினால் – எதிரிகள், குறிப்பாக வடநாட்டு வேந்தர்கள் நம்முடைய பலத்தை தவறாகக் கணக்குப் போடுவார்கள்! இலுப்பைப் பூவா நமக்குச் சர்க்கரை? மன்னர்பிரானை எனது மாற்று யோசனையை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். அடுத்த திங்களில் விஜயநகரப் பேரரசின் இரண்டாவது நூற்றாண்டின் நிறைவு விழா வருகிறது. முதல் நூற்றாண்டுத் திருநாள் நம் நாட்டின் தேசீயத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டதாக ஏடுகள் கூறுகின்றன. அந்தக்காலத்தில் விஜயநகரம் பலம் பெறவில்லை. நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லாமல் இருந்தது. பூசல்கள் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த தாகவும் தெரிகிறது. இப்போது நாம் அப்படியல்ல. விஜய நகரம் இன்று ஒரு வலிமை மிக்க பேரரசு. நமக்கு வாய்த் திருக்கும் மன்னர் – தெய்வம் போல் வந்து துணைவர். அவருடைய காலத்திலே கொண்டாட இருக்கும் இரண் டாவது நூற்றாண்டு விழா உலகத் திருவிழாவரகத் திகழ வேண்டும். அந்த விழா வந்து கொண்டிருக்கிறது. விஜய நகர மண்ணில் தோன்றிய ஒவ்வொரு வீரனின் ரத்தத் திலும் ஊறிப்போயிருக்கும் மல்யுத்த வெறி இப்போது முதற்கொண்டே தலைதூக்கித் திரியத் தொடங்கிவிட்டது. நகரில் எங்கு பார்த்தாலும் மல்யுத்தப் பயிற்சிகள் நடை பெறுகின்றன. இந்த நேரத்தில் நாம் மதுரை வெற்றிக்கு இன்னொரு விழா – சிறிய விழா நடத்துவது உசிதமல்ல. நாகமரும் அதை விரும்பமாட்டார். அவர் அடக்கம் நிறைந்த மாவீரர். புகழை விரும்பாத பெருந்தன்மையாளர்” என்று துர்ஜதி தீர்மானத்தோடு பேசினார். அவரது குரல் ஆலயமணி ஓசைபோல் ஒலித்தது. இருபதாண்டு காலமாக பெத்தன்னாவின் தலைமையில் துர்ஜதி அரசரின் ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தார். ஒரு தடவைகூட பெத் தன்னாவின் தீர்மானத்தை துர்ஜதி எதிர்த்ததில்லை. வெட்டிப் பேசியதில்லை. அரசர் முதல் அத்தனை அதிகாரி களும் பெத்தன்னாவுக்கு அவ்வளவு மரியாதை கொடுத்து வந்தார்கள்.ஆனால் இந்த முறை துர்ஜதி எதிர்த்துப் பேசி விட்டார். ஆம்; பெத்தன்னாவின் தீர்மானம் சபையில் எடுபடவில்லை. நாகம நாயக்கருக்கு தனி வரவேற்பில்லை என்று முடிவாயிற்று. நாகமருக்குச் செல்வாக்கு அதிகரித் தால் விசுவநாதனின் பதவி உயர்ந்துகொண்டே போகும் என்றுதான் துர்ஜதி அவ்வாறு எதிர்த்துப் பேசினாரோ?
சக்கரவர்த்தி ராயர் துர்ஜதியின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டாலும், தனது சிறப்பதிகாரத்தைப் பிரயோகிக்காமல் இல்லை. நாகம் நாயக்கரின் மதுரை வெற்றிக்கு அவரை மதுரைக்கு மந்திரி யாக்கிவிட்டார் சக்கரவர்த்தி ராயர். சபையில் கையொலி எழுந்தது. பெருந்தன்மை மிக்க பெத்தன்னா துர்ஜதியைத் தட்டிக் கொடுத்து தோல்வியை மறக்கடித்துக் கொண்டார்.
பிறந்த பொன்னாட்டின் இரண்டாவது நூற்றாண்டு விழா தன்னுடைய காலத்தில் வருவதை எண்ணிப் பெருமைப்பட்டார் கிருஷ்ணதேவ ராயர். துயரம் வருகிற போதும் நினைத்தது நடக்கமுடியாமல் போகும்போதும் மக்களின் அன்பை எண்ணி மகிழும் பெரும் குணம் தொடக்கத்திலிருந்தே ராயரிடம் குடிகொண்டிருந்தது. இதனால்தான் அவர் எதையும் உற்சாகத்தோடு செய்ய முடிந்தது. தமிழ்ப் பெருமக்கள் ராயர் என்றும், தெலுங் கர்கள் ராயலு என்றும், கன்னட மாந்தர் ராறு என்றும், பரிவுடன் அழைப்பதற்குப் பாத்திரமாக விளங்கியதற்குக் காரணமே அவரது சிரித்த மூகமும், சினம்கொன்ற தன்மையும்தான்.
ராயருக்கு மல் யுத்தத்தில் அளவு கடந்த பிரியம். தினந்தோறும் காலையில் மேனி முழுதும் நெய் பூசிக் கொண்டு, இரண்டு நாழிகை மல்யுத்தம் செய்துவிட்டுத் தான் குதிரை ஏறுவது வழக்கம். இதற்காகவே ராயர் அவர்கள் அவரது மலையக்கூட மாளிகையில் கைதேர்ந்த மல்லர்களை வளர்த்து வந்தார். போர் விளையாட்டுப் பயிற்சிகளில் அவர் பங்கேற்று இருக்கும்போது, தான் ஒரு சக்கரவர்த்தி என்று நினைப்பதில்லை. லெட்சோப லெட்சம் மக்களின் தலைவன் என்பதையே மறந்துவிடுவார். மேலங்கி இருக்காது. முதுகுத்திரை போடமாட்டார். மல்லர் களுடனும் மற்ற வீரர்களுடனும் மனம் திறந்து பேசுவார். இது போன்ற பயிற்சிக் காட்சிகள் அடிக்கடி மக்கள் கண் களில் படக்கூடாது என்பதற்காகவே அதற்கென ஒரு தனி மாளிகை எழுப்பினார். மலையக் கூடம் என்பது அந்த மாளிகையின் பெயர். கொலு மண்டபம் இருந்த மாளிகை புவனவிஜயம் என்று அழைக்கப் பெற்றது. மலையக்கூடத் திற்கும் புவன விஜயத்திற்கும் தொடர்பு இல்லை. அந்தப் புரம் வேறு தனி. எந்தப்புரம் இருந்து பார்த்தாலும் உள் கட்டிடம் தெரியாமல் உயர்ந்த மதில் சுவர்கள் அதனைச் சுற்றிக் காவல் புரிந்து கொண்டிருந்தன.
அடிக்கொருமுறை அன்னியர் படையெடுப்பாலும் ஆக்கிரமிப்புகளாலும் நொந்து நொடிந்து போன கலா சாரத்தை, துடிக்கும் இளம் வாலிபர்களின் ரத்தத்தை போர் முகத்தில் அள்ளித் தெளித்து அபிஷேகம் செய்து வெற்றி மேல் வெற்றி பெற்று அழியாச் செல்வமாகத் திகழ்ந்த விஜயநகர சாம்ராஜ்ஜியத்திற்கு இரண்டாவது நூற்றாண்டின் நிறைவு விழா வென்றால், அந்த விழாவை வெறும் திருவிழா என்று கூறிவிடமுடியுமா? தன் குழந்தைக்குப் பிறந்த நாள் என்றால் ஏழையும் மகிழ்கிறான்; குழந்தையின் குமிண் சிரிப்பில் அவனது குடும்பக் கவலை யெல்லாம், புதையுண்டு போகின்றன. மடியிலே பணம் இல்லாவிட்டாலும் மனத்திலே பரவசம் கூத்தாடுகிறது; குடிசைக்குள்ளேயே இந்தக் குதூகலம் என்றால், ஒரு பேரரசு இரண்டாவது நூற்றாண்டு விழா -சிறப்புக்கு சொல்லவா வேண்டும்! ஒரே கோலாகல மயம் – இன்ப வெள்ளம்!
ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஆயிரம், பதினாயிரம் என்று பரிசுத்தொகை நிர்ணயிக்கப்பட்டது. கத்திச் சண்டையா அதற்குத் தங்கவாள். வேல் எறிதலா? அதற்கு வைரப்பதக்கம். கலைக்கூத்தா? பவளமாலை. இசைப் போட்டியா? பொன் ஆபரணக் குவியல். இப்படி ஒவ்வொரு போட்டிக்கும் மன்னரே பரிசுகளைத் தேர்ந்தெடுத் தார். மன்னர் சிரித்தால் மந்திரிக்கு லாபம் கிடைக்கும். ஆனால், விஜய நகரத்தில் மன்னர் சிரிப்பில்தான் மக்களின் ஜாதகமே அடங்கியிருந்தது.
பெரியவர்கள், சில காரியங்களை மறந்து விட்டவர்கள் போல் தோன்றுவார்கள். தெரியாதவர்களைப் போல் அமைதியாக இருப்பார்கள். காலமென்னும் களித்தரையில் வேர் விட்டுத் தோற்றம் இழந்து நிற்கும் புளிய மரங்களைப் போன்றவர்கள் அவர்கள். பார்வை இருக்காது; பலன் உண்டு! சக்கரவர்த்தி ராயரும் அப்படித்தான். எல்லா விளையாட்டுகளுக்கும் பரிசுகளை விதித்தவர் அவருக்கு அதிக மாகப் பிடித்திருந்த மல்யுத்தத்திற்கு மட்டும் விதிக்காமல் விட்டுவிட்டார். அரசியல் அதிகாரிகள் அனைவரும் ஒரு முறைக்குப் பத்து முறை பட்டியலைப் பார்த்தார்கள். மன்னர் மறந்துவிட்டார் என்று அவர்கள் நினைப்பு. ராயர் சிரித் தார். மற்றவர்கள் எல்லோரும் அவர் முகத்தை நோக்கினார்கள்.
“பிற நாட்டுக்காரர்கள் கண்டு மிரளத்தக்க வகையில் நம் நாட்டில் வளர்ந்தோங்கி இருக்கும் மல்யுத்தத்திற்கு என்ன பரிசு வைக்கலாம் என்பதை நாம் இப்போது முடிவு கட்ட வேண்டும். அகிலத்தில் எங்கும் இதுவரை தந்திராத பரிசாகவும், புதுமையாகவும் இருக்கவேண்டும்.” என்றார் ராயர்.
சபையில் பெத்தன்னா இருந்தார். துர்ஜதி இருந்தார். தளபதி இல்லாமல் இருக்குமா? சிங்கராயனும் இருந்தான் வழக்கம் போல் அரியநாதன் மன்னருக்குப் பின்னால் இருந்தான்.
பெத்தன்னா கருத்தரங்கைத் துவக்கி வைத்தார். அவர் தானே புலவர் குழுவின் தலைவர்!
“விஜயநகரத்திற்கு கட்டியம் கூறி வாழும் சின்னஞ்சிறு ராஜ்ஜியங்களுக்கு ராஜப்பிரதிநிதியாக அனுப்பலாம்” என்றார் பெத்தன்னா.
“இதற்கு வேறு ஏதாவது மாற்று யோசனை இருக் கிறதா?” என்று மன்னர் சபையைப் பார்த்துக் கேட்டார்.
சபையில் சிறிது நேரம் அமைதி நிலவியது. பின் சிங்கராயன் பேசினான்:
”வெற்றி வீரர்களுக்குப் பதவிகளைத் தருவது ராஜ வம்சத்தில் பரம்பரைப் பழக்கமாகி விட்டது. என்னைக் கேட்டால் மல்யுத்த வீரர்களுக்கு எடைக்கு எடை தங்கம் கொடுக்கலாம் என்பேன்” என்றான் சிங்கராயன்.
“மன்னர் விரும்புவது புதுமையை! எத்தேசமும் உத்தேசித்துக் கூட இருக்க முடியாத பெரும்பரிசைத் தர விஜயநகரம் விரும்புகிறது. எடைக்கு எடை தங்கம் தருவது புதிதல்ல. கலிங்க தேசத்தில் தந்திருக்கிறார்கள். தென் பாண்டிய நாட்டில் கருவூலத்தையே திறந்து விட்டிருக்கிறார் கள். நான் சின்னவன் அனுபவமில்லாதவன் – என் ஆசையை யும் தெரிவிக்கிறேன். மல்யுத்தத்தில் வெற்றி பெறுகிறவன் விஜயநகரத்தில் அவன் விரும்பும் ஒரு குமரிப் பெண்ணை திருமணம் புரிந்து கொள்ளலாம், என்று பரிசு வைக்கலாம். உலகில் இதுவரை எங்கெனும் இதுமாதிரி எந்த அரசாங்க மும் வைத்ததில்லை” – என்று அமைதியாகத் தெரிவித்தான் அரியநாதன். நறுக்குத் தெரித்ததுபோல் முகத்தைச் சுழித்துப் பேசி அவனுக்குப் பழக்கமில்லை. கருமை ஏறாத அருகம் புல்லைப் போன்ற இளமீசைப் பருவத்தில் உள்ள அவன், துணைக்குத் துணையாக இருந்த தோழன் விசுவநாதனை துங்கபத்திரைக் கரைக்கு அனுப்பிவிட்டு தனிமையில் கிடந்து தத்தளித்துக் கொண்டிருக்கும்போது அவன் தொண்டையில் உரம் எப்படிச் சுரக்கும்! பிள்ளைப் பூச்சியின் ஓட்டத்தைப் போல் அவன் பேச்சு முட்டி மோதி வெளிக் கிளம்பியது.
மன்னர் முகத்தில் இன்பக்குறிக்களை அரும்பியது. அரியநாதன் கருத்தில் புதுமை இருப்பதுபோல் அவருக்கும் பட்டது. துர்ஜதியைப் பார்த்தார். கருத்துத் தெரிவிக்கா மல் இருந்தவர் அவர் ஒருவர்தான். அதுவரை பிடித்து வைத்த பிள்ளையாரைப் போலிருந்த துர் ஜதியும் இப்போது நிமிர்ந்து உட்கார்ந்து விட்டார். அரியநாதன் தெரிவித்த கருத்து அவருக்குத் திசை காண்பித்து விட்டதுபோல் தோன்றியது. புறாவுக்கு விரித்த வலையில் புள்ளிமான் விழுந்ததுபோல் இருந்தது. தென்புடன் பேசினார். அரியநாதன் வெளியிட்ட கருத்தில் திருத்தம் – சிறு திருத்தம். மல் யுத்தப் போட்டியில் கலந்து கொள்பவன் திருமணமாகாதவனாக இருக்க வேண்டும். அவன் விஜய நகர சாம்ராஜ்ஜியப் பிரஜையாகவும் இருக்க வேண்டும். மணமாகாத குமரிப்பெண் அவனுக்குப் பரிசு. அரசாங்கம் கண்டிப்பான உத்தரவிட்டு விஜய நகரத்தில் உள்ள கன்னிப் பெண்கள் அனைவரையும் அன்று அரசசபைக்கு வந்திருக்கச் செய்ய வேண்டும்!” இப்படி ஒரு கருத்தை வெளியிட்டார் துர்ஜதி.
சக்கரவர்த்தி ராயருக்கு இந்தக் கருத்து மிகவும் பிடித்த மானதாக இருந்தது. இந்த முடிவை ஏற்றுக் கொள்ளும்படி சபைக்குச் சிபாரிசு செய்தார். சபை அங்கீகரித்தது.
காலை புலர்ந்தது. நாடெல்லாம் பேரிகை முழங்கியது. வாழ்த்தாத இதயமெல்லாம் மன்னரை வாழ்த்தியது. அவர் களில் கட்டிளம் காளையர்களும் இருந்தார்கள். பெட்டிப் பாம்பாய் வீடுகளுக்குள் சிறை இருந்த பெண்களும் இருந் தார்கள்.
பிறந்த வீட்டில் பிரிவு உபசாரத்திற்கும், புருஷன் வீட்டில் அன்பழைப்பிற்கும் இடையில் நீந்தும் விஜயநகரப் பட்டுப் பூச்சிகளுக்கு, மன்னரின் பரிசுத் தீர்மானம் கனவுலகைத் திறந்து விட்டது. பெயர் பெற்ற மல்யுத்த வீரர்களின் உருவங்களெல்லாம் அவர்களின் கனவு ராஜ்ஜி யத்தின் கதாநாயகர்களாகத் திகழ்ந்தார்கள். உண்மைக்கும் கனவுக்கும் இதுதான் வேறுபாடு. வாழ்க்கையில் எல்லோ ருடைய எண்ணங்களும் வெற்றி பெறுவதில்லை. கனவில், நினைத்தவர்கள் எல்லாம் நினைத்தபடி வெற்றி பெறுவார்கள். வாழ்க்கை சுரங்கத்துத் தங்கம். கனவு தங்கநிற மேகத் திரள்.
“கங்கா!… கங்கா’ மாளிகைக் கதவைத் தட்டினார் துர்ஜதி. அவர் முகத்தில் வெற்றிக்களை திருநடனம் புரிந் தது. இளமையின் ஒவ் வாரு துடிப்பும் அவருக்கு எதிர் காலப் பலனை உணர்த்திக் கொண்டிருந்தது.
கங்கா கதவைத் திறந்தாள்.
”கங்கா!”
”அப்பா”
“காலத்தின் மகாத்மியம் என்ற நூலை தீட்டினேனே அப்போது கூட நான் இவ்வளவு மகிழ்ச்சி அடைந்ததில்லை. இன்று எனக்கு அவ்வளவு இன்பம்.”
“என்னப்பா இன்று இவ்வளவு சந்தோஷம்! இளவரசி யின் காதல்,மன்னர் காதுக்கு எட்டி விட்டதா?”
“வா சொல்லுகிறேன். முதலில் கொஞ்சம் சுக்குச்சாறு கொண்டு வா, தொண்டை கமறுகிறது. எல்லாம் உனக் காகத்தான் கங்கா!” என்று குழந்தை போல் பேசினார் துர்ஜதி.
கங்கா நடந்தாள். அவள் நடையைப் பார்த்துப் பெரு மூச்சு விட்டார் புலவர். ஓர் அழகான பெண்ணைப் பெற்று விட்ட ஆணவப் பெருமூச்சு அது.
கங்கா, வெற்றிக்கு வழி வகுத்துவிட்டேன். கண்ணே! விசுவநாதன் இனி உன் காலடியில்! அடுத்த கிழமை இந்தச் சரணாகதிப் படலம் நடக்கப் போகிறது” துர்ஜதி இடிபோல் முழக்கமிட்டு சிரித்துக் கொண்டே சொன்னார்.
“சொப்பனம் கண்டீர்களா அப்பா? நேராக அரண்மனையிலிருந்து வருகிறீர்களா! நீங்கள் அன்றிலிருந்து இப்படியேதான் புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று சிரித்தாள் கங்கா.
”கங்கா…” – துர்ஜதிக்கு கோபம் வந்து விட்டது. அனலாகி விட்டார். நாக்கில்லா மண்புழுக்களைப் போல் மண்டை நரம்புகள் புடைத்துக் கிளம்பி விட்டன. கண்கள் இரண்டும் விளக்காக எரிந்தன. எப்போதாவதுதான் அவருக்கு இப்படி வரும். வந்தால் பலி கொள்ளாமல் போகாது.
“அதிகாரத்தை மறந்து, அந்தஸ்தை மறந்து உனது எதிர்கால வாழ்க்கைக்காக அல்லும் பகலும் மூளையை உருக்கிக் கொண்டு அலைகிறேன்.நீ என்னை கேலியா செய் கிறாய்? தருதலை! தாய்ப்பிள்ளை என்று பார்த்தால் தலைக்கு மேல் போகிறாயே!” கனல் பறக்க பொழிந்தார்.
கங்காவுக்குக் கண் கலங்கி விட்டது. வண்டியில் பூட்டிய புதுக் காளைபோல் வெறித்து தலை கவிழ்ந்து விட்டாள்.
“கங்கா!”
அவள் பேசவில்லை. குனிந்த தலை நிமிரவில்லை.
“என்னைப் பார் கங்கா! நான் யார்? இந்தச் சரீரம் யாரால் வளர்க்கப்பட்டது? எந்த அரசாங்கத்தின் தயவால் நான் இந்நிலைக்கு உயர்ந்தேனே அந்த அரசாங்கத்தின் ரகசியங்களையே இன்று விலை கூறத் துணிந்து விட்டேன். யாருக்காக! எனக்காகவா? எல்லாம் உனக்காக! இப்போது பொன்னும் பொருளும் எனக்குத் துரும்பாகத் தெரிகின்றன. உலகத்தை ஒரு சுண்டைக்காயாக நினைக்கிறேன். உன் சுகந் தான் எனக்குச் சாந்தி. உன் சிரிப்புதான் எனக்குச் செல்வம். உன் நன்மைக்காக யார் யாரை இழுத்துப் போட் டிருக்கிறேன் தெரியுமா? விசுவநாதனைக் கவிழ்க்க ஒரு அற்புதமான திட்டத்தை நானும் அரியநாதனும் சேர்ந்து வகுத்திருக்கிறோம். இதிலிருந்து விசுவநாதன் தப்புவதற்கு மார்க்கமே இல்லை.”
கங்கா தலையைத் தூக்கினாள். பிடித்தமானவர்களைப் பற்றிப் பேசினால் மனம் புரண்டு படுக்கிறது. மயிர்க்கால் களை மூளை சுண்டி இழுக்கிறது. தண்ணீரின் சூடு தணிகிறது. முக பாவங்களின் பொருளே தலை கீழாகத் திரும்பி விடு கின்றன.
துர் ஜதி தொடர்ந்தார். “அடுத்த கிழமை நமது நாட்டில் தேசியத் திருநாள். மல்யுத்தத்தில் வெற்றி பெறுகிற வனுக்கு அவன் விரும்பும் குமரிப் பெண்ணே பரிசுப் பொருள் அதோடு விஜயநகரத்தில் அவனுக்கு நிகரான யுத்த வீரன் இல்லை என்ற பட்டயமும தரப்படும். மல் யுத்தத்திலே வெறி பிடித்துத் திரியும் விசுவநாதன் இதில் கலந்து கொள்ளாமல் இருக்கப் போவதில்லை. அவனை வெற்றி கொள்ள யாரும் பிறக்கப் போவதும் இல்லை. அவன் வெற்றி பெற்றால் அவனுக்கு பிடித்தமான அழகியை மணந்து கொள்ளலாம். நான் நிச்சயமாக நம்புகிறேன். உன்னைக் காட்டிலும் சிறந்த அழகி நமது நாட்டில் இல்லை. அரியநாதன்; அவனுடைய அருமைத் தோழன் இளவரசியின் காதலி லிருந்து மீளுவதற்காக இந்த ஏற்பாட்டைச் செய்தான். நான் இதை உனது எதிர்காலத்திற்காக பயன் படுத்திக் கொண்டேன். என் மனதிலே இப்படி ஓர் எண்ணம் இருக் கிறது என்று அரியநாதனுக்குத் தெரிந்திருந்தால் இந்தப் பரிசுத் திட்டத்தையே தகர்த்து எறிந்திருப்பான் அவன் சூரன். கவனம் இருக்கட்டும். நான் உனக்குச் சொல்ல வேண்டியதில்லை.விசுவநாதன் மேல் நம் நாட்டில் பல பெண் கள் குறி வைத்திருக்கிறார்கள். அவன்தான் வெற்றி பெறு வான் என்று எல்லோரும் நினைப்பது நியாயம்தான். சோளக் கொல்லைப் பொம்மை போலிருக்கும் சோணங்கிகள் கூட கவர்ச்சிகரமாக அலங்கரித்து வருவார்கள். கங்கா உனக்கு அவனைத் தெரியும். அவனும் உன்னைப் பார்த்திருப்பான். சாதுர்யமாக நடந்து கொள்! மயிலுக்கு ஆடக் கற்றுக் கொடுப்பதில்லை, பூவுக்கு மலரப் போதிப்பதும் கிடை யாது!” துர்ஜதி முடித்தார்.
கங்கா கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவள் இட்டிருந்த கண் மை இழகி ஓடியது.
துங்கபத்திரா நதிக்கரையில் பருவதம் போல் விளங்கிய விட்டலசாமி கோயிலின் கல்லரண் ஓரத்தில் விசுவநாதன் முகாம் அமைத்திருந்தான். இருபதுக்குக் குறையாத அழகிய வர்ணக் கூடாரங்கள் மணற் படுகையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் போடப் பட்டிருந்தன. தலைநகரிலிருந்து வரும் அரண்மனைச் சேவகர்களுக்கு அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக ஒரே ஒரு கூடாரம் மட்டிலும் இரு வண்ணத்திரையால் அமைக்கப்பட்டிருந்தது. அதுதான் விவசுநாதனின் கூடாரம். அதில்தான் அவன் எப்போதும் இருப்பான். அருணோதயத்திற்கு முன் எழுந்து ஆறு கல் தூரம் அவனது வெண்புரவியில் ஏறி வேகம் காட்டிப் பறப்பான். கரையோரத்து கரிய கொழுந்து மணல் குதிரையை பிடித்து விடுவதுபோல் மேலெழுந்து பரவும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்ப்பான். அந்நியர் அரவம் தட்டுப் படுகிறதா என்று கண்காணிப்பது தானே அவனது முதற் பணி. எதிர்க்கரையில் எறும்புபோல் உருவம் தெரிந்தாலும் உறங்க மாட்டான். இடுப்பில் தொங்கும் குழலை எடுத்து ஊதி விடுவான். அதுகேட்டு கோயிலடிவாரத்தில் முடங்கிக் கிடக்கும் படை வீடு துணுக்குற்று அணிவகுத்து நிற்கும். எதிரியின் எண்ணத்தை நோட்டம் கண்டு சொல்லும் அறிவிப் பாளர்கள் விட்டலசாமி கோயிலின் மூல கோபுரத்தின் சிகரத்திலிருந்து வழியைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கி விடுவார்கள். விசுவநாதன் இந்த அரும்பணிக் குழுவின ருக்குத் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதிலிருந்து அவன் நிலை உயர்ந்தது. விஜயநகரத்தில் அவனுக்கு மரியாதை விரிந்தது. பருவம் கடந்த புகழ் என்று பேசாதவர்கள் இல்லை.
அன்று இரவு அவன் எதிர்ப்பார்க்கவில்லை. நடு நிசியில் குதிரையின் குளம்படிச் சத்தம் கேட்டது. காவல் முறைக் காரர்கள் வேலும், வாளும் ஏந்திய வண்ணம் கூடாரங்களை வலம் வந்து கொண்டிருந்தார்கள்.
குளம்படி ஓசை வரவர நெருங்கிக் கொண்டிருந்தது விசுவநாதன் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தாள். இரும்புக் கவசம் பூட்டி எறிவாளைக் கையிலெடுத்துக் கொண்டு கூடாரத்திற்கு வெளியில் வந்து நின்றான். கோபுரத்தில் இருந்த அறிவிப்பாளன் அங்கிருந்தபடியே குரல் கொடுத்தான். “வெள்ளைக் குதிரை ஒன்று தன்னந் தனியாக மழை வேகத்தில் வருகிறது. குதிரையிலிருப்பவன் கையில் தீப்பந்தம் வைத்திருக்கிறான்’ என்றான் அந்த அறிவிப்பாளன்.
விசுவநாதன் அவனுடைய குதிரைமீது ஏறி நின்றபடி ஏறிட்டுப் பார்த்தான். வெகு தூரத்தில் தீப்பொறி பறப்பது மட்டும் தெரிகிறது. இந்தக் குதிரை எதிரிகளின் வடதிசைப் பக்கமிருந்தும் வராமல், தலைநகர் பக்கமிருந்தும் வராமல், கீழ்கோடியிலிருந்து வந்துகொண்டிருந்தது.
பீரங்கி விசைக்காரர்கள், வடக்கு முகம் பார்த்து நின்ற பீரங்கி வண்டிகளை கிழக்கு முகமாகத் திருப்பி வைத்துக் கொண்டார்கள்.
குதிரை அருகில் வந்து விட்டது; தீப்பந்தம் எல்லோ ருக்கும் நன்றாகத் தெரிந்தது.
குதிரையின் குளம்படி ஓசை விசுவநாதனுக்குப் பழகிய ஓசையாகத் தெரிந்தது. அவனது குதிரைமீது நின்று அவன் கூர்மையாகக் கவனித்தான். சில வினாடிகளுக்குப் பிறகு அது சக்கரவர்த்தி ராயரின் குதிரை என்பதை அறிந்தான். குதிரை பக்கத்தில் வந்துவிட்டது. தனது எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பார்வை இடுவதற்காகவே ராயர் நேரடியாகவே வருவ தாகவே விசுவநாதன் நினைத்தான். அந்த நினைப்பு மாறு வதற்குமுன், குதிரை கூடாரத்து அருகே வந்துவிட்டது.
“என்ன விசுவம் பயந்து விட்டாயா?” என்று குதிரையை விட்டுக் குதித்தார் அரியநாதன்.
“அரியா வந்திருப்பது! அரசரென்றே கருதிவிட்டேன், அரி. நகரத்தில் அமைதிதானே? அரண்மனையில் ஏதும் குழப்பம் இல்லையே?” – விசுவநாதன் சுகம் விசாரித்தான்.
எங்கும் அமைதி. எங்கும் சுகம். மதுரையில் நமக்கு அமோக வெற்றி ! நாகமர் பாண்டியனுக்குப் பதில் அளித்து விட்டார்; சோழன் களத்திலேயே இறந்தான்.”- அரிய நாதன் உற்சாகத்தோடு சொன்னான்.
விசுவநாதன் சிரித்தான். அவனது அன்னை மங்கம்மா வின் மதிநுட்பம் அவனை இன்பத்திலாழ்த்தி விட்டது. ஒரு கணம் சொப்பனத்திலிருந்து மீண்டான்.
“விகவநாதன், அடுத்த திங்கள் விஜயநகரப் பேரரசின் இரண்டாவது நூற்றாண்டு விழா வருகிறது. விழாச் செலவுக்காக மன்னர் பத்து லெட்சம் பொன் ஒதுக்கி விட்டார். சிறப்பான ஏற்பாடுகளெல்லாம் துரிதமாகத் தயாராகி வருகின்றன. விழாவில் போட்டிகளுக்கு குறை வில்லை. அதிலும் ஒரு சிறப்பு ! இதுவரை எந்த நாட்டிலும் வைத்திராத ஒரு புதிய பரிசைத் தர நமது அரசாங்கம் முடிவெடுத்து விட்டது. விஜயநகரப் பேரரசின் கீர்த் திக்கு உத்திரவாதமாக விளங்கும் மல்யுத்தப் போட்டிதான் விழாவில் பிரதானமானது. போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்குப் பொன்மட்டும் அல்ல, பொருள் மட்டும் அல்ல, பெண்ணும் கொடுக்க நமது மன்னர் தீர்மானித்து விட்டார்.” அரியநாதன் பேசினான்.
விசுவநாதனின் மெய் சிலிர்த்தது.
“ஆம் விசுவம்! மல்யுத்தப்போட்டியில் வெற்றி பெற்ற வன், விஜயநகர சாம்ராஜ்ஜியத்தில் திருமணமாகாத எந்தக் குமரிப்பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளலாம். போட்டியில் திருமணமாகாத விஜயநகரப் பிரஜைதான் கலந்து கொள்ளலாம் விசுவம், நாடே உன்னைத்தான் எதிர்பார்க்கிறது! மன்னர்பிரான் கூட உன் பெயரைத்தான் குறிப்பிட்டார். விசுவநாதன் காலத்தில் அவனை வேறொருவர் மல்யுத்தத்தில் வெற்றி கொள்வதை நாம் விரும்பவில்லை என்று மன்னரே வாய்விட்டுக் கூறினார். இத்தகவலைத் தெரிவிக்கத்தான் நான் ஓடோடி வந்தேன்.நாள் நெருங்கி விட்டது. வெகு தூரமில்லை. ஓய்வில் பயிற்சி செய். வெற்றி உனக்குத்தான் கிடைக்க வேண்டும். நீ இதில் தோற்றால் எதிரிகள் ஏற்றங்கொண்டு விடுவார்கள். சிங்கராயன் பழிதீர்க்க நினைப்பான். அவன் கூட இந்தப் போட்டியில் கலந்து கொள்வதாகக் கேள்வி. கவனமிருக்கட்டும்! நான் புறப்படட்டுமா? மன்னர் தனிமையில் உறங்கிக் கொண்டிருக் கிறார். காவலர்கள் என்னைச் சந்தேகிக்காமல் இருக்கட்டும் என்பதற்காகவே நான் மன்னர் குதிரையில் வந்தேன். என்னைக் கண்டதும் மன்னர்தான் நகர்வலம் போகிறார் என்று எண்ணிக் கொண்டு அவர்கள் இருந்து விட்டார்கள்.” – என்று கூறி, அரியநாதன் திரும்பினான்.
விசுவநாதனுக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.மல் யுத்தப்போட்டியே அவன் மனக்கண்முன் நிகழ்வது போல் கனவு கண்டான். மன்னர் அவனைத் தழுவுவதும், அன்னை மங்கம்மாள் அவனுக்கு ஆரத்தி எடுப்பதும், மதுரையிலிருந்து அவனது தந்தை நாகமர் வாழ்த்துச் செய்தி அனுப்புவதும் அவனுக்குக் காட்சிகளாகத் தோன்றி மறைந்தன.
– தொடரும்…
– துங்கபத்திரை (நாவல்), முதற் பதிப்பு: பெப்ரவரி 1970, வானதி பதிப்பகம், சென்னை.