கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: February 27, 2022
பார்வையிட்டோர்: 17,786 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காதலனும் காதலியும் வீட்டுக்குப் புறம்பே தினைப் புனத்தில் சந்தித்து வந்தார்கள். இந்தக் களவுக் காதல் தலைவியினுடைய உயிர்த் தோழிக்கு மாத்திரம் தெரியும். அயலார் அறியாமல் அவர்கள் சந்தித்துக் குலவுவதில் பல இடையூறுகள் இருந்தன. ஒவ்வொரு நாளும் தலைவன் வந்து போவதென்பது இயலுவதா? அவன் எத்தனையோ பொறுப்புள்ள கடமைகளை மேற்கொண்டவன். அவற் றைக் கவனிக்கும் நிலையில், சில நாட்கள் வந்து தலைவியைச் சந்திக்க முடிவதில்லை.

தலைவன் பகற்பொழுதில் வீட்டுக்குப் புறத்தே திணைப்புனம் முதலிய இடங்களில் தலைவியைச் சந்தித்து அளவளாவுவதைப் பகற்குறி என்று சொல்லுவார்கள். பகற் காலத்தில் குறித்த இடத்தில் சந்திப்பதால் இந்தப் பெயர் வந்தது. இந்தக் களவுக் காதல் ஒவ்வொரு நாளும், பிறர் அறிந்து விட்டால் என் செய்வது?’ என்ற அச்சத்தை உண்டாக்கும். அன்றியும், தலைவன் வராத நாட்களில் அவனைக் காணாமையால் தலைவி மிக்க துன்பத்தை அடைந்து ஒரு வேலையிலும் மனம் செல்லாமல் இருப்பாள்.

இவ்வாறு நடுநடுவே தலைவனைக் காணாமல் வருந்திய தலைவி வீட்டிலே இருந்தாள். அவள் உள்ளம் தலைவனைக் காணாத துயரத்தால் நிரம்பியிருந்தது. ஏதேனும் வேலை யில் ஈடுபடலாமென்றால் ஒன்று கிடக்க ஒன்று செய் யும்படி நேர்ந்தது. மனசை வேறு எதிலாவது திருப்பி விட்டு ஆறுதல் பெறலாம் என்று நினைத்தாள்.

காலையில் தான் நன்றாக மழை பெய்தது; கனமான மழை அவள் வாழ்வது குன்றுகள் அடர்ந்த குறிஞ்சி நிலம். எதிரே கம்பீரமாக ஒரு குன்று நின்றது. அந்தக் குன்றி லிருந்து அருவி சலசலவென்று விழுந்து கொண்டிருந்தது. அதைப் பார்க்கப் பார்க்க உள்ளத்தில் களி துளும்பும். அந்த அழகிய குன்றமும் அதில் உள்ள அருவியும் மலைச் சாரலிலும் மலையடிவாரத்திலும் உள்ள அடர்ந்த காடு களும் மிக அழகான காட்சியை அளித்தன. இயற்கை யழகில் ஈடுபடும் உள்ளமுடையவர்கள் நேரம் போவதே தெரியாமல் அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கலாம்.

இந்தத் தலைவி அழகிய பொருள்களிலே மோகம் உள்ளவள். அழகான காட்சிகளிலே உள்ளத்தைச் சிக்க விடுபவள். தலைவனுடைய அழகிலே மயங்கிப் போனதே, இந்த அழகுக் காதலால் தான் என்று கூடச் சொல்லலாம்.

இப்போது மனசில் உள்ள கவலையைப் போக்கச் சற்று நேரம் மலையையும் அருவியையும் பார்த்து இன்புறலா மென்று வெளியிலே வந்தாள். சலசலவென்று ஓடிய அருவி பெரிய அலைகளை வீசும் கடலைப் போல முழங்கிக் கொண்டிருந்தது. காலையிலே மழை பெய்தது தான் காரணம். அந்தக் குன்றம் அங்குள்ளாருக்குப் பல வகை யில் நன்மை செய்யும் நல்ல குன்றம்; உயர்ந்த குன்றம்; நன்னெடுங் குன்றம். அதன்மேல் அன்று காலை மழை பெய் யவே, அருவி கடலில் திரை ஆரவாரிப்பது போல் ஒலித் துக் குன்றிலிருந்து இழிந்து வந்தது. அதைப் பார்த்தாள். அந்த அருவி கீழே வந்து காட்டினூடே மறைந்தார். நல்ல நீர்வளம் இருப்பதனால் அந்தக் காடு மரங்கள் அடர்ந்து விரிவாக இருந்தது. அகன்று பரந்த கானத்தில் உள்ள அழகை அவள் பார்த்தாள் ; பார்த்துக் கொண்டே இருந்தாள்.

மனம் அந்த அழகிலே மயங்கிக் கவலையை மறக்கும் என்றெண்ணியே அங்கே வந்தாள். நாள்தோறும் காணும் அழகைவிட இன்று குன்றமும் அருவியும் கானமும் மிக்க அழகோடு விளங்கின. நாள் மழை (காலை மழை) பெய்தமையினால் இயற்கையாக அவற்றிற்கு இருந்த அழகு பின்னும் அதிகமாயிற்று. அவள் உள்ளத்தில் கவலை இல்லா மல் இருந்தால் இந்த அற்புதமான காட்சியிலே சொக்கிப் போயிருப்பாள். ஆனால் இன்று எதையும் கண்டு களிக்கும் மன நிலை அவளுக்கு இல்லை. அருவியின் அழகும் குன்றத் தின் கோலமும் கானத்தின் கவினும் அவள் உள்ளத் தினூடே புக இயலவில்லை. அங்கேதான் துயரம் குடி கொண்டிருக்கிறதே! உலகமே இப்போது அவளுக்குச் சுவைக்கவில்லை. காதலனைக் காணாது வாழும் நாள் நல்ல நாள் அன்று; பொல்லாத நாள் ; உள்ளம் சாம்பும் நாள் : உயிர் போகும் நாளைப் போன்ற நாள்.

கண் குன்றத்தைப் பார்த்தது ; கருந்தோ காதலனைக் காணாத துன்பத்தை நினைந்தது. எதிரே அருவி கடலின் அலையைப் போலப் பேரலைகளை மோதி முழங்கியது; அவள் உள்ளக் கடலும் குமுறியது. அடர்ந்த காடு எதிரே படர்ந்திருந்தது; அவள் உள்ளத்தினூடேயும் தெளிவின்றி அடர்ந்த துயரம் பரந்திருந்தது.

குன்றத்தை அவள் பார்த்தாள்; அவள் பார்க்கவில்லை ; கண்கள் பார்த்தன. அப்படிச் சொல்வது கூடப் பிழை. பார்வையென்பது கண்ணும் உணர்ச்சியும் இணையும் போது நிகழ்வது. கண்ணைத்திறந்திருந்தால் மாத்திரம் போதாது. அது பார்வை ஆகாது. அவளுடைய கண்கள் திறந்திருந் தனவே ஒழிய எதிரே நின்ற குன்றத்தைப் பார்க்கவில்லை : அருவியிலே செல்லவில்லை.

அவள் தன் தலைவனைக் காணாத இடம் எவ்வளவு வளப்பமுடையதாக இருந்தால் என்ன? அது வெட்ட வெளிக்குச் சமானம்; பாலைவனத்தைப் போலப் பயனின்றி, அழகின்றி இருப்பது.

உள்ளத்தில் துக்கம் குமுறிக்கொண்டு வருகிறது; காதலனைச் சந்திக்கவில்லையே என்ற துயரம் பொங்கு கிறது. விம்மி விம்மி அழ வேண்டும் போல் இருக்கிறது. அவள் அந்த உணர்ச்சியை அடக்கிக் கொண்டாள். அடக்க அடக்கத் துயரம் மிகுகிறதே ஒழிய அடங்கினபாடில்லை. துயரத்தைத் தாங்கித் தடை செய்யலாமென்று முயல் கிறாள்; அவள் அடக்கும் எல்லையில் அது நிற்கவில்லையே!

பார்த்த கண்களுக்கு இப்போது உண்மையாகவே எதிரே நின்ற காட்சி தெரியவில்லை. அவற்றில் நீர் திரை யிட்டது. சுழன்றது. எழிலை ஏந்திய அந்தக் குளிர்ந்த கண்களில் நீர்த் துளிகள் வட்டமிட்டன. அடக்கிய வரை யில் உள்ளே புதைந்திருந்த துக்கம் கொஞ்சம் உடைப் பெடுத்துக் கொண்டது. இனி அது நிற்குமா? அவள் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். கண்ணீர் இப்போது மிகுதியாகப் பெருகியது. கண்ணிலே ஓர் அருவியே தோன்றி விட்டது! கண்ணைத் துடைக்கத் துடைக்க நீர் சுழன்று கண்கள் கலுழ்ந்தன.

அந்தச் சமயத்தில் அவளுடைய தாய் அங்கே வந்தாள். தன் அருமை மகள் கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற் பதைக் கண்டாள். செல்வமாக வளர்த்த பூங்கிளி போன்ற மடமகள் வருந்துவதா?” இவளுக்கு என்ன வருத்த வந்தது? என்று எண்ணிய தாய் அவளை அணுகினாள்.

“ஏன் அம்மா அழுகிறாய்? என்ன செய்தாய்? யார் உனக்குத் துயரத்தை விளைவித்தார்கள்?” என்று அவள் தலையைக் கோதியபடியே கேட்டாள்.

தலைவி தன் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

“என் கண்ணே! ஏன் இப்படி முகம் வாடி இருக்கிறாய்? அழகாக விளங்கும் பற்கள் தோன்றப் புன்முறுவல் பூப்பாயே! எங்கே, உன் இலங்கு எயிற்றைக் காட்டு; ஒரு சின்ன முத்தமிட்டுக் கொள்கிறேன்” என்று கொஞ்சிக் கொஞ்சிக் கூறினாள்; இனிமையாகக் கூறினாள். அந்தத் தாய்க்குத் தலைவி இன்னும் சின்னஞ் சிறிய குழந்தைதான்.

தாய் இனிய வார்த்தைகளால் பரிவு தோன்றப் பேசவே, தலைவிக்கு உள்ளம் குளிர்ந்தது. மந்திரம் போடு பவர்களுக்கு முன் நாகம் தலை சாய்ப்பது போலவும் வீணை வாசிப்போருக்கு முன் யானை மதம் தெளிந்து மயங்கி நிற் பது போலவும் இருந்தது, தலைவியின் நிலை. இவ்வளவு அன்புடன் பேசுகிற தாயினிடம் உண்மையைச் சொல்லி விட்டால் என்ன? நம் காதலருடைய பெருமையை எல் லாம் எடுத்துச் சொல்லலாமா?’ என்ற வேகம் உண்டா யிற்று. தம்முடைய காதலைத் தாங்களே எடுத்துச் சொல்லுவது நாணமுள்ள மங்கையருக்கு அழகன்று என் பதை அவள் மறந்தாள். நாணம் உயிரைவிடச் சிறந்தது நாணம் போனால் உயிர் போய்விடும். அப்படி இருக்க, தாயின் இன மொழியிலே அந்த நாணத்தை மறந்து வேக மாக உண்மையைச் சொல்லிவிடலாம் என்று நினைத்தாள்.

அவர் பெரிய மலைக்குத் தலைவர். வானத்தளவும் ஓங்கிய மலையை உடையவர். அந்த மலைச்சாரலில் உள்ள காந்தட் பூக்களில் சென்று தாதை ஊதிய நீலமணி போன்ற தும்பிகள் ரீங்காரம் செய்வது வீணை வாசிப்பது போல இருக்கும்; இம்மென்று முழங்கும். அவ்வளவு வளம் பெற்ற மலைக்குத் தலைவர் அவர். அவருடைய மார்பினால் வந்த வருத்தம் இது’ என்று சொல்ல முற்பட் டாள். அப்போதிருந்த வேகத்தில் சொல்லியே இருப்பாள் . ஆனால் –

அவள் உத்தம மகள் அல்லவா? அவள் நாணத்தை ஓட்டினாலும் அது அவளை விட்டுப் போகாதே அது அவளு டன் பிறந்தது அல்லவா? அந்த நாணம் அவள் நாவை இழுத்துப் பிடித்தது. அவள் தன் கண்ணீரைத் தடுக்க முடியவில்லை; ஆயினும் நாவைத் தடுத்துவிட்டாள். உயிரினும் சிறந்த நாணம் அவளிடமிருந்து அகலாமல் நின்றது அவள் அதை மறந்தாளே ஒழிய, விட்டுவிடவில்லை.

ஆனால் அவளை அது மறக்கவில்லை.

இப்போது விழித்துக்கொண்டாள். “ஒன்றும் இல்லை அம்மா! அதோ அந்த அருவியைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஏதோ கண்ணில் வந்து பட்டது. அது தான்” என்று சொல்லிச் சமாளித்துக் கொண்டாள். தொண்டை வரையில் வேகமாக வந்துவிட்ட வார்த்தையை அடக்கிக் கொண்டு, அன்னைக்கு வேறு சமாதானம் சொன்னது அவளுக்கே வியப்பை உண்டாக்கியது.

கண நேரம் அவள் ஏமாந்து போனாள் ; நல்ல வேளை! முற்றும் ஏமாந்து போகாமல் தப்பினாள்; உண்மையை உரைப்பதினின்றும் உய்ந்தாள்.

ஆனால் ஒவ்வொரு நாளும் இப்படிச் சாமர்த்தியமாகத் தப்ப முடியுமா?’ அவள் மனம் வேதனைப்பட்டது.

அன்றைப் பொழுது எப்படியோ கழிந்தது. மறு நாளாவது தன் காதலனைக் காணலாம் என்று அவள் எண் ணியிருந்தாள். அன்று அவள் எதிர்பார்த்தபடியே அவன் வந்தான். தோழியோடு கானத்துக்குள் சென்று அவனைச் சந்தித்தாள். தான் அவனைக் காணாத பொழுது படும் துன்பத்தையும், அதைத் தாய் அறிந்து கேள்வி கேட்பதை யும் அவளுக்கு உண்மையை மறைத்து வேறு கூறுவதில் உண்டாகும் சங்கடத்தையும் அவனுக்கு உணர்த்த வேண்டும் என்று விரும்பினாள். அவன் உணர்ந்தானானால், இனியும் பல நாள் களவிலே வந்து குலவுவதை நீக்கி, மணம் செய்து கொள்வதற்கு உரியவற்றைச் செய்வானென்பது அவள் நினைவு.

ஆனால் இந்தச் செய்தியை அவனிடம் நேர்முகமாகக் கூற நாணினாள். தான் படும் துயரையும் மற்ற இன்னல் களையும் அவன் அறிவது இன்றியமையாதது என்றும் நினைத்தாள். ஆகவே, அவன் அயலில் மறைவாக நிற்கும் போது தன் தோழிக்குச் சொல்பவளைப்போல முதல் நாள் நிகழ்த்தவற்றைற் சொல்லலானாள்.

நாள்மழை தலை இய நன்னெடுங் குன்றத்து மால்கடல் திரையின் இழிதரும் அருவி அகல் இருங் கானத்து அல்கணி நோக்கித் தாங்கவும் தகைவரை நில்லா, நீர் சுழல்பு ஏந்து எழில் மழைக்கண் கலுழ்தலின், அன்னை. ‘எவன்செய் தனையோ? நின் இலங்கெயிறு உண்கு என மெல்லிய இனிய கூறலின், வல்விரைந்து உயிரினும் சிறந்த நாணும் நனிமறந்து உரைக்கல் உய்ந் தேைன, தோழி, ‘சாரல் காந்தள் ஊதிய மணிநிறத் தும்பி தீந்தொடை நரம்பின் முரலும் வான்தோய் வெற்பன் மார்பு அணங்கு’ எனவே.

*தோழி, காலை மழை பெய்த நல்ல உயர்ந்த குன்றத் தில் பெருமையையுடைய கடலின் அலையைப் போல இறங்கி வரும் அருவி அகன்ற பெரிய காட்டிலே சென்று தங்கும் அழகைப் பார்த்துத் துயரைத் தாங்கி நிற்கவும், நான் தடுக்கும் எல்லையிலே நில்லாதனவாக நீர் சுழன்று அழகை ஏந்திய குளிர்ச்சியையுடைய கண்கள் அழுததனால் என் தாய், என்ன செய்தாய்? உன் பல்லை முத்தமிடு வேன்’ என்று மென்மையான இனிய சொற்களைச் சொன் னமையால், நான் மிக விரைந்து உயிரைக் காட்டிலும் சிறந்த நாணத்தையும் மறந்து விட்டு, ‘சாரலிலே உள்ள காந்தள் மலரை ஊதிய தும்பியென்னும் உயர் சாதி வண்டு இனிய யாழ் நரம்பின் ஓசைபோல ரீங்காரம் செய் யும் வான் அளாவிய மலைக்குத் தலைவனாகிய என் காதலனுடைய மார்பு செய்த வருத்தம் இது’ என்று சொல்ல வந்தவள், அவ்வாறு சொல்லாமல் தப்பினேன்.

தோழி, கண் நோக்கி, நில்லா . கலுழ்தலின், அன்னை எனக் கூறலின், என உய்ந்தனன் என்று கூட்டுக.

நாள் மழை – காலை மழை. தலை இய – பெய்த . மால் – பெருமை இழிதரும் – மேலிருந்து கீழே ஓடிவரும். கானம் – காடு. அல்கு – தங்கும்; வேகமாக ஓடாமல் மெல்லச் செல் வதை இவ்வாறு சொன்னாள். தகைவரை – தடுக்கும் எல்லை யில். சுழல்பு – சுழன்று. மழைக்கண் – குளிர்ச்சியை உடைய கண்கள். கலுழ்தல் – அழுதல். எவன் — என்ன. இலங்கு – விளங்குகின்ற. எயிறு – பல்லை. உண்கு – உண்பேன். வாயில் முத்தமிடுவேன் என்பதையே ‘எயிறு உண்கு’ என்று சொன்னாள். இனிய – இனிமையான வார்த்தைகள். வல் விரைந்து – மிக விரைந்து – நனி மறந்து – நன்றாக மறந்து விட்டு. உரைக்கல் உய்ந்தனன் – உரைத்தலின்றும் தப்பி னேன் . காந்தள் குறிஞ்சி நிலத்துக்குரிய மவர்; கண்வலிப்பூ என்று சொல்வதுண்டு. மணி – நீலமணி. தும்பி – உயர்ந்த சாதி வண்டு. தீந்தொடை நரம்பு – கட்டிய நரம்புகளை யுடைய யாழின் இனிய ஓசை; தொடை – கட்டு; இங்கே யாழைச் சுட்டியது. நரம்பின் – நரம்பைப் போல. முரலும் – ஒலிக்கும். வான் தோய் – வானத்தைத் தொடும், மார்பு அணங்கு – மார்பினால் உண்டான வருத்தம்.

‘முன்னிலைப் புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச் சொல் லியது’ என்பது இதற்குரிய துறை. தலைவன் முன்னே நிற் கவும் அவனை நேரே பார்த்துச் சொல்லாமல் வேறு ஒரு வருக்குச் சொல்லும் பாணியில் தலைமகள் தோழியிடம் சொல்லியது’ என்பது இந்தத் துறைக்குப் பொருள்.

இதைப் பாடிய புலவர் நொச்சி நியமங்கிழார் என்பவர்; நொச்சி நியமம் என்ற ஊர்க்காரர் என்பது அதற்குப் பொருள். மரியாதையுடையவர்கள் பெயரைக் கூறாமல் வேறு விதமாகக் கூறுவது வழக்கம், ஊரைச் சொன்னா லும் பேரைச் சொல்லக்கூடாது’ என்ற மரியாதையால் இந்தப் புலவருடைய இயற்பெயர் நமக்குத் தெரியவில்லை. ஊரின் பெயர் மாத்திரம் தெரிகிறது. நொச்சி நியமம் என்ற ஊரில் வேறு பல மக்கள் வாழ்ந்திருக்கலாம். அவர் கள் அந்த ஊருக்குப் புகழை உண்டாக்கவில்லை. இந்தப் புலவர் தாம் உண்டாக்கினார்; அந்த ஊர்ப் பெயரைக் காப்பாற்றினார். அதற்கு அவர் பெயரே சான்று.

இது நற்றிணையில் 17- ஆவது பாட்டு.

– மனை விளக்கு (சங்கநூற் காட்சிகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1951, அமுத நிலையம் லிமிடெட், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *