(1983ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வாளும் விறகுக் கட்டும் | மல்லிநாதர் இல்ல வழக்கம் | ஜலதரங்கம்
காட்டு விறகுக் கட்டை விளக்கு வெளிச்சத்தில் கவனித்து அதில் ஒரு வாள் செருகியிருந்ததையும் பார்த்த தால் சற்று நிதானித்த கோட்டைக் காவலர் தலைவன், “மல்லிநாதரை ஏன் தடை செய்கிறீர்கள்?” என்று மற்ற இரு காவலர்களையும் நோக்கி வினவினான்.
“அவரைத் தடை செய்யவில்லை. உடன் வந்த இந்த வாலிபனைத்தான் தடை செய்தோம்,” என்றான் ஒரு காவலன்.
“இவனைத் தமது ஆள் என்று குருநாதர் சொல்லு கிறார். இவனைப் பார்த்தால் விறகு தூக்கும் ஆளாகத் தெரியவில்லை.” என்றான் இன்னொரு காவலன்.
“விறகு தூக்கும் வேலை பயின்றவனாகவும் தெரிய வில்லை. அவன் தோளில் கட்டைச் சுமந்துள்ள முறையே அதற்கு அத்தாட்சி,” என்றான் முதலில் பேசிய காவலன்.
கோட்டைக் காவலர் தலைவன் முகத்தில் சினத் தின் சாயை பரவியது, “மல்லிநாதரின் சொற்களைச் சந்தேகிக்கும் நிலைக்கு நீங்கள் உயர்ந்துவிட்டீர்களா?” என்று வினவினான் தலைவன்.
“எசமான்!” என்று அச்சத்துடன் அழைத்தான் சச்சரவை ஆரம்பித்த காவலன்.
“என்ன?” தலைவன் கேள்வியில் சினம் அதிகமாகத் தெரிந்தது.
“தாங்கள்தானே சந்தேகப்படக் கூடியவர் யாரா யிருந்தாலும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவிட்டிருக்கிறீர்கள்!” என்றான் காவலன் பயத்துடன்.
“ஆம், இட்டேன்.” தலைவனின் பதில் காட்டமாக இருந்தது.
“அதனால்தான் தடுத்தோம்.”
“அப்படியா!”
“ஆம் எசமான்.”
“நமது கோட்டைத் தலைவர் வந்தால், அவர் யாரையாவது அழைத்து வந்தால், அவர்களையும் தடை செய்வாயா?”
இதற்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்தான் காவலன். அவன் தவிப்பை விலக்க முற்பட்ட தலை வன்,”எந்த உத்தரவுக்கும் விலக்கு உண்டு. தராதரம் பார்த்துப் பணியாற்றுவது விவேகம்,” என்று கூறி விட்டு, “இவர்களுக்கெல்லாம் திறமை போதாது.
மன்னித்துவிடுங்கள். நீங்கள் இல்லம் செல்லுங்கள்,” என்று மல்லிநாதரை நோக்கிக் கூற மல்லிநாதர் சத்ருஞ் சயனை அழைத்துக் கொண்டு கோட்டை வீதி களுக்குள் சென்றார்.
இரண்டு வீதிகளைக் கடந்து போர் வீரர் வீதிக்கு வந்ததும் பலபெரிய வீடுகளைத் தாண்டி நடந்தார். கடைசியாக ஒரு சிறு வீட்டின் முன்பு நின்றவர் வீட்டைச் சுற்றி சத்ருஞ்சயனை அழைத்துக் கொண்டு பின்புறம் சென்று, அங்கிருந்த கொட்டகையில் விறகுக் கட்டைப் போடச் சொன்னார். அவன் தோளி லிருந்து விறகுக்கட்டை இறக்குவதற்கு முன்பு அதன் நடுவிலிருந்த வாளையும் எடுத்துக் கொண்டார்.
வாளைப் பெற்றுக் கொள்ள கையை நீட்டினான் சத்ருஞ்சயன். “இப்பொழுது உனக்கு வேண்டாம்” என்ற மல்லிநாதர் வீட்டுக்குள் நுழைய முற்பட்டவர், “சந்திரமதி?” என்று குரல் கொடுத்தார்.
“இதோ வருகிறேன்” என்று உள்ளிருந்து குரல் கொடுத்த சந்திரமதி, சில வினாடிகளில் வெளியே வந்தாள். வெளியே வந்தவள் சட்டென்று பின் வாசற் படியைத் தாண்டாமலே தனது முக்காட்டைப் போட்டுக் கொண்டு, “இவர் யார்?” என்று கேட்டாள்.
“என் புதிய சீடன்” என்ற மல்லிநாதர், “இவன் தலையில் ஒரு குடம் தண்ணீர் கொட்டு. பிறகு இவன் கிணற்றில் நீராடி விட்டு உள்ளே வரட்டும்” என்று கூறிவிட்டு வாளை ஏந்திய வண்ணம் உள்ளே சென்றார்.
அவர் சென்றதும் முக்காடை நன்றாகவே இழுத்து விட்டுக் கொண்ட சந்திரமதி, “சீடப் பிள்ளையே! சற்று இருங்கள்; தண்ணீர் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல முயன்றவளை, “அம்மனி!” என்று அழைத்தான் சத்ருஞ்சயன்.
அவள் சட்டென்று திரும்பி அவனை நோக்கி னாள். அந்த விழிகளைக் கண்ட சத்ருஞ்சயன் மயக்கம் பிடித்தவன் போல் நின்றான். அந்த விசால விழிகளை, அமுத விழிகளென்று சொல்ல முடியாவிட்டாலும் அவற்றின் கூர்மையின் விளைவாக வேல் விழிகள் என்று சொல்லலாம் என்று நினைத்தான். புழக்கடை விளக்கு வெளிச்சத்தில் அவள் தேகம் மிக மெல்லிய தாகக் காணப்பட்டது. அதிக உயரமில்லாவிட்டாலும் நீண்ட மரமல்லி புஷ்பம் போல விளங்கினாள் சந்திர மதி. அவள் சந்திர முகத்தை வைத்துத்தான் அவளது பெற்றோர் அந்தப் பெயரை அவளுக்குச் சூட்டியிருக்க வேண்டும் என்று சத்ருஞ்சயன் நினைத்தான். அந்த சந்திரமுகத்தில் தலையிலிருந்து பிரிந்து விழுந்த குழல்கள் இரண்டு அந்த முகத்தில் நடுவில் சுருண்டு நின்றன.
அந்தக் குழலின் சுழற்சி, அவள் உதடுகள் குங்குமப் பொட்டின் சிவப்புடன் போட்டி போட்ட தன்றி சிறிது நீரோட்டத்தையும் கலந்து கொண்டதால் அவை மாணிக்கம் போல் பளபளத்த அழகு, இவை அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. ‘ஆனால் இத்தனை அழகிய உதடுகளில் ஒரு கடுமையும் இருப் பது அத்தனைப் பொருத்தமாயில்லை’ என்று சத்ருஞ்சயன் உள்ளூர நினைத்தான். முகத்திலிருந்து கழுத் துக்கு இறங்கிய பார்வை, சற்றே எழுந்தாலும் அடக் கத்துடன் இருந்த மொட்டுகள் தன்னை நோக்கிப் பாயும் மாறன் அம்புகள் போல் இருந்தது அந்த வாலிபனுக்கு. அவள் சிறிய இடையும், கீழே இறங்கிய பருவக்கால் பகுதிகளும் அவனுக்குச் சிறிது பயத்தை யும் கூட அளித்தன.
அவன் அவளைக் கவனித்த சில வினாடிகளில் அவளும் அவனைக் கவனித்தாள். அவன் குழந்தை முகத்தில் ஈட்டிகளெனப் பளபளத்த கண்களும், மெல் லிய அரும்பு மீசையும், கைகளின் நீளமும், கால்களின் உரமும், இடுப்பின் வன்மையும், அவன் மாவீரனென் பதையும், அவன் இளவயதைக் கண்டு அவனிடம் வம்பு வைத்துக் கொள்வது அபாயமென்பதையும் அவள் உணர்ந்தாள்.
இப்படி அவனை அதிகமாகப் பார்த்துவிட்டதால் சிறிது நாணமடைந்த சந்திரமதி, “உடை வைத்திருக் கிறாயா?” என்று கேட்டாள்.
அவளது குரல் குழலோசையைவிட இன்பமா யிருப்பதைக் கண்ட சத்ருஞ்சயன், “நான் நீராடினால் வேறு உடை கிடையாது” என்று தெரிவித்து நிலத்தை நோக்கினான்.
அப்படி அவன் தலை குனிந்து நின்றதை நோக்கிய தால் சற்றே இளநகை கொண்ட சந்திரமதி, “வேறு உடை தருகிறேன். முதலில் நீராடுங்கள்.” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு குடம் நீர் கொண்டு வந்தாள். “அப்படியே உட்காருங்கள்” என்று அவள் பணிக்க, தரையில் மண்டியிட்டு அடங்கி ஒடுங்கி உட்கார்ந்த சத்ருஞ்சயனை நோக்கி நடந்து வந்த சத்திரமதி அவனை நெருங்கியதும் தனது சிற்றாடையைச் சிறிதளவு தூக்கி இடையில் செருகிக் கொண்டாள், ஆடை நனையாது இருப்பதற்காக.
அப்படி அவள் ஆடையைச் சிறிது தூக்கியதில் கண்களுக்குப் புலனான அழகைக் கண்டு பிரமித்தான் அந்த வாலிபன். பஞ்சலோக விக்ரகத்தின் கால்களைப் போன்ற அழகிய உரமான கால்கள், முழங்காலின் மீது சிறிதளவு தலைநீட்டிய மென்மையான தொடைப் பகுதி, மலர்ப்பாதத்தின் செம்பருத்தி இதழ்கள் இவற் றைத் தான் கவனிப்பதை அவள் பார்த்துவிடப் போகி றாளோ என்று கண்களைத் தனது இரு கைகளாலும் மூடிக் கொண்டு தலையைக் குனிந்தான் சத்ருஞ்சயன்.
அவன் கண்கள் பாய்ந்த இடங்களை சந்திரமதி கவனித்தாலும் அதை லட்சியம் செய்யவில்லை. ‘ஆண்களின் பலவீனம்’ என்று வெறுப்புடன் சொல்லிக் கொண்டு, அவன் தலைமீது குடத்து நீரை மெதுவாக விட்டாள். குழல் நனைய வேண்டுமென்பதற்காக குடத்தைச் சுழற்றி நீரை அவன் தலையில் ஊற்றி விட்டுக் குடத்தையும் அவன் எதிரில் பட்டென்று வைத்து, “அந்தக் கிணற்றில் நீராடிவிட்டு வாருங்கள்; உடை எடுத்து வருகிறேன்,” என்று சொல்லி மேலே எடுத்து செருகிய சீலையைத் தொங்கவிட்டு, கண் குத்திப் பாம்பு போல் பார்த்துக் கொண்டிருந்த வாலி பன் கண்களை ஏமாற்றி வேகமாக உள்ளே சென்றாள்.
அவள் போவதைப் பார்த்துக் கொண்டு நின்றான் சத்ருஞ்சயன். அவள் சென்ற வேகத்தில் அழகிய அவள் கழுத்து, முதுகு முதலிய பின்னழகுகளை யெல்லாம் கபளீகரம் செய்து கொண்டு, உடலெங்கும் நீர் சொட்ட நின்றிருந்த சத்ருஞ்சயன் சுயநிலை அடைந்து குடத்தை எடுத்துக்கொண்டு கிணற்றடிக்குச் சென்றான். அங்கிருந்த கயிற்றை எடுத்து நீரைக் குடத்தில் இழுத்து இழுத்து அலுப்புத் தீர நீராடினான். பிறகு கிணற்றின் எதிர் மறைவுக்குச் சென்று தனது கால்சராயையும் அங்கியையும் பிழிந்து கொண்டான்.
அந்தச் சமயத்தில் ஒரு காவிப்பட்டை எடுத்துக் கொண்டு கிணற்றடிக்கு வந்த சந்திரமதியிடம்,”அப் படியே நில்லுங்கள். ஒரு குச்சியால் ஆடையை நீட்டுங் கள்,” என்று கூறினான்.
அவன் நிலை அவளுக்குப் புரிந்தது. அங்கியில்லா மார்பும், அவன் கையில் காட்சியளித்த முறுக்கிப் பிழிந்த துணியும் புரிய வைத்தன. குச்சிகளால் உடையை நீட்டியதும் அதை எட்டி ஒரு கையால் வாங்கினான். உடையை அணிந்த பின்பும் அந்த இடத்தை விட்டு அவன் நகரவில்லை. அவன் அந்தக் காவிப் பட்டை உடுத்திக்கொண்டு வெளி வந்த பிறகு திலக் சாயத்தை நீட்டினாள். அதை எடுத்து நெற்றியில் தரித்துக்கொண்ட சத்ருஞ்சயன் கேட்டான், “இந்த நீராட்டம் எதற்கு?” என்று.
காரணத்தைச் சந்திரமதி விளக்கினாள். யாவும் புதுவிதமாக இருந்தது. ராஜபுத்திரர் வழக்கத்துக்கு விரோதமாகவும் இருந்தது.
– தொடரும்
– சந்திரமதி (குறுநாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1983, வானதி பதிப்பகம், சென்னை.