கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: April 20, 2023
பார்வையிட்டோர்: 2,546 
 

(1983ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்னுரை

 ̆சந்திரமதி’ என்ற இந்தச் சிறு நாவல் மேவார் ராணா அமரசிம்மன் வாழ்வில் ஏற்பட்ட ஒரு சிறு சம்பவத்தைக் கொண்டு புனையப்பட்டிருக்கிறது. சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகள் அக்பரிடம் போரிட்டு மேவார் சுதந்திரத்தைக் காப்பாற்றிய ராணா பிரதாப சிம்மன் தனக்குப் பின்னால் மேவாரின் சுதந்திரம் பறிபோய்விடும் என்று நம்பினான். சுகத்துக்காக சுதந்திரம் தியாகம் செய்யப்படும் என்று எண்ணினான். ஆகவேதான் இறக்கும் தருவாயில் தனது படைத் தலைவர்களிடம், “சுகத்தை நாடி சுதந்திரத்தை இழக்க மாட்டோம்” என்று சத்தியமும் வாங்கிக் கொண்டான்.

ஆனால் பிரதாப் எதிர்பார்த்ததுதான் நடந்தது. அவன் மகன் அமரசிம்மன் ராணாவானதும் உதயபூர் ஏரிக்கரையில் சலவைக்கல் அரண்மனை ஒன்றைக் கட்டினான். பிரிட்டிஷ் வியாபாரிகளிடம் இருந்து ஒரு பிரும்மாண்டமான கண்ணாடியை வாங்கித் தனது தர்பார் மண்டபத்தை அழகு செய்தான். நாட்டை மறந்து போக வாழ்க்கையில் மூழ்கினான். இந்த நிலையைத் திருத்த சலூம்ப்ரா வம்சத்தவனான சந்தசிம்மன் முயன்றான். ராணாவின் தர்பார் மஹால் கண்ணாடி மீது கல்லெறிந்து அதை உடைத்து, ராணாவையும் சிம்மாசனத்திலிருந்து கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் புரவியில் ஏற்றி மற்ற படைத் தலைவர்களை நோக்கி, “ராணா பிரதாப்பின் மகனை அவமானத்திலிருந்து காப்போம் வாருங்கள்” என்று கூவினான் உணர்ச்சிப் பெருக்கால்.

அன்று முதல் மீண்டும் சுதந்திரப் போர் துவங்கியது முதலில் ஒம்ஸ்தலா என்ற ஒண்டாலா கோட்டையைத் தாக்கி அப்துல்லாவைக் கொன்று விட்டான் அமரசிம்மன் இது சம்பந்தமான விபரங்கள், அமரசிம்மன் போச வாழ்க்கை முதலிய சகலமும் கர்னல் ஜேம்ஸ் டாட் எழுதிய ராஜபுதனச் சரித்திரக் குறிப்புகளில், ANNALS AND ANTIQUITIES OF RAJASTHAN என்ற நூலில், முதல் பாகமான மேவார் தொகுப்பில் பக்கம் 121 முதல் 123 வரை காணட் படுகின்றன. அந்த வரலாற்று ஆதாரங்களை வைத்து இந்நாவல் புனையப்பட்டிருக்கிறது.

இந்தச் சிறு நாவல் ‘குங்குமம்’ மலிவுப் பதிப்பாக வந்த போது மிகவிரைவில் செலவாகிவிட்டது. இப்பொழுது எனது நிரந்தர பப்ளிஷர் வானதி அதிபர் திரு.திருநாவுக்கரச இதை வழக்கமான புத்தக வடிவில் கொண்டு வந்திருச் கிறார். அவருக்கும் இந்தப் புத்தகத்தை எழுதத் துரிதப் படுத்திய ‘குங்குமம்’ காரியாலயத்தாருக்கும், எப்பொழுதும் என்னை ஆதரித்து வரும் தமிழ்ப் பெருமக்களுக்கும் எனது நன்றி உரித்தாகும்.

– சாண்டில்யன்

1. பெண் பிடி படலம் | 2.வாளும் விறகுக் கட்டும்

சலூம்ப்ரா வம்சத்தவனான சத்ருஞ்சயன் இப் பொழுது ராஜபுதனத்தில் ஒண்டாலா என்று வழங்கப் படும் ஓம்ஸ்தலா கோட்டையை மாலைக்கதிரவன் மலை வாயிலில் மறைவதற்கு முன்னரே அடைந்து விட வேண்டுமென்ற எண்ணத்துடன் மலை வழியில் வேகமாகவே நடந்தானென்றாலும், அது முடியாத தென்று முடிவுக்கு வந்ததால் சிறிது இளைப்பாறலாம் என்று எண்ணமிட்டவன் திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டான். ஒரு வினாடி மலைவழி யிலிருந்த ஒரு பாறைமீது காலை வைத்து எண்ணத்தை ஓட விட்டவன் தனது தந்தை அந்தப் பயணத்தின் ஆரம்பத்தில் சொன்ன அறிவுரையை நினைத்துப் பார்த்தான்.

தந்தையும் தானும் உட்கார்ந்திருந்த இடத்தையும் நினைத்ததால் சிறிது கவலையும் துன்பமும் அவன் இதயத்தே ஓடி முகத்திலும் அவற்றின் சாயை படரவே, “மொகலாய சாம்ராஜ்யத்தைக் கால் நூற்றாண்டு தன்னந் தனியாக ஆட்டி வைத்த ராணாபிரதாப் இறந்த இடம் அது. பெஷோலா ஏரியின் சிறு குடிசை தான். ஆனால் எத்தனை வீர நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ராணா படுத்த இடம் அது? எந்தவிதப் பிரமாணத்தை வாங்கிக் கொண்டு அவர் உயிர் நீத்த புனித நிலம் அது?” என்று நினைப்பை ஓட்டிய சத்ருஞ்சயன் தனது தந்தை அந்தக் குடிசையை எத்தனை புனிதமாக மதித்தார் என்று எண்ணமிட்டான்.

குடிசைத் தரையில் உட்கார்ந்த நாற்பது வயது சலூம்ப்ரா தனது மகனைப் பார்த்து, “உன்னை இங்கு ஏன் உட்கார வைத்திருக்கிறேன் தெரியுமா?” என்று வினவினார்.

“அரண்மனை இருந்தும் நீங்கள் இங்கு பிடிவாத மாக வசிப்பதுதான் காரணமாயிருக்க வேண்டும்” என்றான் சத்ருஞ்சயன்.

“அதல்ல காரணம்” என்ற பெரிய சலூம்ப்ரா, “மகனே, உனக்குச் சத்ருஞ்சயன் என்று பெயர் வைத் திருக்கிறேன். நீ சத்ருக்களை ஜெயிக்கவேண்டும். சத்ருக்களை ஜெயித்தவர் வாழ்ந்த குடிசை இது. உனக்கும் அந்தப் பலமும் நெஞ்சுறுதியும் வரட்டும் என்பதற்காகத்தான் இங்கு நான் உன்னுடன் ஜீவிக் கிறேன். ராணா பிரதாப் இறக்கும்போது எங்களிடம் ஒரு சத்தியம் வாங்கிக்கொண்டார். அரண்மனை சுகத்துக்கு ஆசைப்பட்டு மானத்தையும் சுதந்திரத்தை யும் மொகலாயரிடம் இழந்து விடாதீர்கள் என்று சொன்னார். என் மகனை சுக வாழ்விலிருந்து காப்பாற்றுங்கள் என்றும் உறுதி வாங்கிக் கெண்டார். அந்த உறுதி என்ன ஆயிற்று பார்த்தாயா?” என்று வினவினார்.

சத்ருஞ்சயன் சிறிது சிந்தித்தான். பிறகு சொன்னான், “பார்த்தேன்” என்று.

“என்ன பார்த்தாய்?” தந்தை கேட்டார் உணர்ச்சியுடன்.

சத்ருஞ்சயன் முகத்திலும் உணர்ச்சி பரவிற்று. “நமது புது ராணா அரண்மனை கட்டி விட்டார், நல்ல சலவைக்கல்,” என்றான் சத்ருஞ்சயன்.

“சலவைக் கற்களை அவரே தொட்டுத் தடவித் தேர்ந்தெடுத்தார்,” என்றார் பெரிய சலூம்ப்ரா.

“அப்படித்தான் கேள்வி” என்றான் சின்ன சலூம்ப்ரா.

“கேள்வியாவது – நானே நேரில் பார்த்தேன்,” என்ற தந்தையின் குரலில் கடுமை ஒலித்தது.

சத்ருஞ்சயன் வேகமாக யோசித்தான் “அப்பா! நேற்று அந்தப் புது அரண்மனையைப் பார்வையிட ஒரு வெள்ளைக்காரர் வந்தாரே, அவர் யார்?” என்று வினவினார்.

தந்தையின் முகத்தில் சிந்தனைக்குப் பதில் சீற்றம் படர்ந்தது. “அவர் ஒரு கண்ணாடி வியாபாரி. நமது புது அரண்மனை தர்பார் மஹாலில் பெரிய கண்ணாடி அமைக்க அளவெடுக்க வந்திருக்கிறார்,” என்றா பெரிய சலூம்ப்ரா.

“அப்புறம்?” என்று சத்ருஞ்சயன் வினவினான்.

“நல்ல கட்டில் மெத்தைகளுக்கு ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகிவிட்டது. ராணா நன்றாகத் தூங்கலாம். ராணா தூங்கினால் மேவாரும் தூங்கும்”, என்ற சலூம்ப்ரா, “சத்ருஞ்சயா! இங்குதான் நமது கடமை வருகிறது,” என்றார்.

“என்ன தந்தையே?” என்று வினவினான் சத்ருஞ்சயன்.

“ராணாவை உறங்கவிடக் கூடாது, மேவாரை அழியவிடக் கூடாது. நான் ராணா பிரதாப்புக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்”, என்றார் பெரிய சலூம்ப்ரா.

“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று சத்ருஞ்சயன் கேட்டான்.

தந்தை நீண்ட நேரம் சிந்தனையில் இறங்கினார் “ஒண்டாலா என்றொரு பட்டணமிருக்கிறது. கேட்டிருக்கிறாயா?” என்று வினவினார்.

“மேவார் சமஸ்தானத்தின் நாற்பது நகரங்களில் அது ஒன்று,” என்று பதில் சொன்னான் மகன்.

“ஆம். ஆனால், பலமான கோட்டையை உடையது. வீரர்களின் இருப்பிடம். அபாயம் ஒன்று அதைச் சூழ்ந்து நிற்கிறது. அங்கு நீ செல்ல வேண்டும்”, என்றார் தந்தை.

அமைக்க அளவெடுக்க வந்திருக்கிறார்,” என்றா பெரிய சலூம்ப்ரா.

“சரி தந்தையே!”

“புரவி ஆகிய எந்த வாகனமும் கூடாது. பாத யாத்திரையாகச் செல்.”

“உத்தரவு!”

“அங்கு எப்படியாவது கோட்டைக்குள் புகுந்து விடு.”

சத்ருஞ்சயன் தலையை அசைத்தான், ஆமோதிப்பதற்கு அறிகுறியாக. “அந்தக் கோட்டைக்குள் ராஜ வீதிக்குப் போகாதே. வீரர் தெருவென்று தனியாக ஒரு தெரு இருக்கிறது” என்று துவங்கிய தந்தை தன யனை நோக்கினார்; சொற்களைச் சிறிது தேக்கினார்.

“சொல்லுங்கள் தந்தையே. அந்தத் தெருவில் நான் யாரைப் பார்க்க வேண்டும்?” என்று மகன் வின வினான்.

“மல்லிநாதர் என்ற போர் ஆசான் இருக்கிறார். அவரைச் சந்தித்து சந்திரமதி இருக்குமிடத்தை விசாரி,” என்றார் தந்தை.

சத்ருஞ்சயன் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. “யார், சந்திரமதியா! பெண்ணா?” என்று வினவினான்.

“ஆம். அவள் சாதாரணப் பெண் அல்ல” என்ற தந்தை உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்திருந்து, “சத்ருஞ்சயா! அவளை எப்படியாவது இங்கு அழைத்து வரவேண்டியது உன் பொறுப்பு,” என்று சொன்னார்.

மகனும் எழுந்திருந்தான்; வியப்புடன் தந்தையை நோக்கினான். ”தந்தையே! நீங்கள் இடும் உத்தரவு ஓர் ஆண் பிள்ளைக்கு இடும் உத்தரவு அல்லவே. அதுவும் ஒரு வீரனுக்கு இடும் உத்தரவாகவும் தெரிய வில்லையே,” என்று கேட்கவும் செய்தான். அவன் குரலில் கசப்பும் வெட்கமும் தெரிந்தன.

“சத்ருஞ்சயா! போய்ப் பார், பிறகு விளங்கும் உனக்கு. எப்படியாவது அவளை இங்கு கொண்டு வா,” என்றார் பெரிய சலூம்ப்ரா.

“கொண்டு வந்து என்ன செய்வதாக உத்தேசம்?” என்று சத்ருஞ்சயன் கேட்டான்.

“அவளை ராணாவுக்கு மணம் முடிக்க வேண்டும். அவள் மேவார் ராணியானால் மேவார் பிழைக்கும்,” என்று பெரிய சலூம்ப்ரா மகனைப் பார்த்துப் புன் முறுவல் செய்தார்.

சத்ருஞ்சயன் முகத்தில் வியப்பு விரிந்தது “மேவார் ராணா பெண் கேட்டாலே போதுமே, அவருக்கு யார் பெண் கொடுக்க மறுக்க முடியும்? பெரிய பதவி அல்லவா மகாராணி பதவி!” என்று வினவினான் வியப்பின் ஊடே.

தந்தையின் முகத்தில் வருத்தத்தின் சாயை படர்ந் தது. “இருமுறை பெண் கேட்டு அனுப்பினோம்.ஒரு முறை அவள் இரு வளையல்களை அனுப்பினாள். இரண்டாவது முறை சேலை ஒன்றை அனுப்பினாள். இதில் ஏதாவது ஓர் அவமானத்திற்கே ஒண்டாலா மீது போர் துவக்கியிருக்கலாம். ஆனால் அந்தப் பெண்ணின் இறுமாப்பை நாட்டின் நலனை முன்னிட்டுச் சகித்துக் கொண்டோம்” என்ற தந்தை சலூம்ப்ரா, “மகனே! உன் மீதுதான் நான் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன்!” என்றார். பிறகு மகன் முகத்தைப் பார்க்க நாணி நிலத்தின் மீது பார்வையைச் செலுத்தினார்.

சத்ருஞ்சயன் மனம் பெரும் போர்க்களமாயி ருந்தது. ‘ஒரு பெண்ணை இஷ்ட விரோதமாகத் தூக்கி வருவது மொகலாயருக்கு சகஜம். இந்து சமுதாயம் அதற்கு ஒப்புக் கொள்ளாதே’ என்று நினைத்தான்.

மகன் மனத்திலோடிய எண்ணங்களைப் பெரிய சலூம்ப்ரா புரிந்து கொண்டார். “நாட்டு நன்மை முன் னிடும்போது சொந்த உணர்ச்சிக்கு இடமில்லை” என்று மகனை நோக்கிக் கூறி, சரேலென குடி சையைவிட்டு வெளியேற முயன்றவர் சற்றுத் திரும்பி, “தாமதம் செய்யாதே; எங்கும் உட்காராதே. புறப்படு,” என்று திரும்பவும் ஒருமுறை சொல்லி விட்டுப் போனார்.

சத்ருஞ்சயன் ராணா பிரதாப் மடிந்த இடத்தைப் பார்த்தான்; பெருமூச்செறிந்தான்; பிறகு குடிசைக்கு வெளியே நடந்தான். தனது வீட்டுக்குக் கூட அவன் செல்லவில்லை. ஓம்ஸ்தலா நகரத்தை நோக்கித் தனது பயணத்தைத் துவங்கினான். இடையிலிருந்த வாளே துணையாகப் பாதயாத்திரை செய்து ஒண்டாலா கோட்டையருகில் வந்தான். நீண்ட பயணத்தின் விளைவாகச் சற்று உட்கார நினைத்துப் பழைய நிகழ்ச்சிகளை எண்ணினான். தந்தைக்கும் தனக்கும் நடந்த சம்பாஷணை முழுவதையும் நினைத்துப் பார்த்தான். அப்பொழுதுகூட தந்தை ஆணையை நிறைவேற்றுவது தர்மத்துக்கும் நியாயத்திற்கும் சலூம்ப்ரா வம்ச வீரத்திற்கும் பொருந்துமா என்று நினைத்து, நிச்சயமாகப் பொருந்தாது என்ற முடிவுக்கு வந்தான். ஆனால் தந்தை சொல்லை மீறும் திறன் இல்லாததால் பெருமூச்செறிந்துவிட்டு அந்த மலைவழியில் நடக்க முற்பட்டான். சிறிது தூரத்தில் ஏதோ சலசலப்பு ஏற்படவே அந்தத் திக்கில் கண்களைச் செலுத்தினான். சுமார் நூறு ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள் ஒரு பெண்.

சிறிது தூரம் வந்ததும், ஒரு மரத்தில் கட்டப் பட்டிருந்த காளையை அவிழ்த்து அதன்மீது ஏறி உட் கார்ந்து அதன் மூக்கணாங் கயிற்றை அதன் கொம் பிலேயே சுற்றி விட்டாள். பிறகு இடையில் ஒரு புல் லாங்குழலை எடுத்து மிக ரம்மியமாக ஊத ஆரம்பித் தாள். அவள் ஊத மாடு நகர்ந்தது. ஆடுகளும் வரிசையாக நகர்ந்து சிறிது நேரத்தில் ஆடுகள் மலை வழியைக் கடந்தன. கடைசியாக மாட்டில் வந்த பெண் காளை மீது ஒரு புறத்திலே இரு கால்களையும் போட்டுக் கொண்டு அனாயாசமாக உட்கார்ந்திருந் தாள். அவள் கண்கள் மூடிக் கிடந்தன. இதழ்கள் குவிந்து குழலில் ஊத எங்கும் இன்னிசை படர்ந்தது.

அவளைக் கைதட்டிக் கூப்பிட முயன்ற சத்ருஞ் சயன் எடுத்த கைகளைத் தொங்கப் போட்டுக் கொண் டான். அப்பொழுது பக்கத்திலிருந்து ஒரு குரல் எழுந் தது – “நீ புத்திசாலி” என்று. திரும்பி நோக்கினான் சத்ருஞ்சயன். அவன் பக்கத்தில் ஒரு பெரியவர் நின்றிருந்தார். “என்ன சொன்னீர்கள்?” என்று அவரைக் கேட்டான் சத்ருஞ்சயன்.

“உன்னைப் புத்திசாலி என்று சொன்னேன். நீ கைகளைத் தட்டியிருந்தால் உன் உயிர் இத்தனை நேரம் எமலோகம் போயிருக்கும்,” என்றார் பெரியவர்.

“நீ யார்?” சத்ருஞ்சயன் கேள்வி துரிதமாகப் பிறந்தது.

“மல்லிநாதன்” என்றார் பெரியவர். பிறகு அவர் கேட்டார், “நீ யார்? எந்த ஊர்?” என்று.

“உதயபூர்” என்று ஊரின் பெயர் மட்டும் சொன்னான் சத்ருஞ்சயன்.

பதிலுக்குப் பெரியவர் பைத்தியம் பிடித்தது போல நகைத்தார். “ராணாவுக்குப் பெண் பிடிக்க வந்திருக்கிறாயா?” என்றும் கேட்டார் நகைப்பின் ஊடே.

சத்ருஞ்சயன் பிரமை பிடித்து நின்றான்.

– தொடரும்

– சந்திரமதி (குறுநாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1983, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *