கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 9, 2023
பார்வையிட்டோர்: 3,416 
 
 

(1983ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராட்சஸி | சிறையில் திருமணம் | சாய்ந்த தாமரை

காவலர்களால் சூழப்பட்ட பின்பும், அவர்களில் சிலர் அவன் மீது கொலைக் குற்றம் சாட்டி கூவிய பின்பும், அந்த இடத்திலிருந்து சிறிதும் நகராமலும், காவலரைச் சிறிதளவும் லட்சியம் செய்யாமலும் நின்ற சத்ருஞ்சயன், தன்னையும் காயமடைந்த காவலர் தலைவனையும் விட்டு சந்திரமதி காளையில் ஏறிச் சென்று விட்டதையும், அவள் குழலூதும் சப்தம் அப் பொழுதும் காதில் விழுந்ததையும் எண்ணி, ‘இத்தனை இரக்க மற்றவளா சந்திரமதி?” என்று தன்னைத் தானே வினவிக் கொண்டான்.

இப்படி சந்திரமதியைப் பற்றிய சிந்தனையில் திளைத்திருந்தபடியால் காவலனொருவன் அவனை அணுகியதையோ, அணுகிக் கேள்விகளைக் கேட்ட தையோ உடனடியாக உணர்ந்தானில்லை, சத்ருஞ்சயன்.

அப்படி ஏதும் பதில் சொல்லாத சத்ருஞ்சயனை கேள்வியைத் நோக்கி இரண்டாம் முறையாகக் திருப்பிய காவலரில் ஒருவன், “எங்கள் தலைவரை ஏன் கொன்றாய்?” என்று இரண்டாம் முறையாகக் கேட்டான்.

சத்ருஞ்சயன் அவனை மிகுந்த வெறுப்புடன் நோக்கி, “யாரும் கொல்லவில்லை” என்றான், வெறுப் பின் சாயை குரலிலும் விளங்க.

“ஏன்?” என்று ஏதோ கேட்க வேண்டுமென் பதற்காகக் கேட்டான் காவலன்.

“தவறுதான்.”

“தவறா?”

“ஆம், உங்கள் தலைவன் என்னைக் கொன்றி ருப்பார் முடிந்திருந்தால். ஆனால் நானும் தப்ப வேண்டியிருந்தது.” இதைச் சாதாரணமாகச் சொன்ன சத்ருஞ்சயன் தன்னிடம் கத்தியில்லை என்பதைத் தெரிவிக்கத் தனது கச்சையிருந்த இடத்தைத் தடவிக் காட்டினான்.

அவனிடம் வாளில்லையென்பதை அப்பொழுதே உணர்ந்த காவலன், “உன்னிடம் கத்தியில்லையா?” என்று வினவினான்.

“இல்லை” என்று ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னான் சத்ருஞ்சயன்.

“அப்படியானால் தலைவரை எப்படிக் காயப் படுத்தினாய்?” என்று சந்தேகத்துடன் விசாரித்தான். காவலர் தலைவன் போரில் வல்லவனென்பதையும்,

அவனை சுலபமாக யாரும் தாக்கிக் காயப்படுத்திவிட முடியாதென்பதையும் காவலன் அறிந்திருந்ததால் சத்ருஞ்சயனை வியப்புடன் நோக்கவும் செய்தான்.

சத்ருஞ்சயன் காவலன் வியப்பைக் கவனித்தும் கவனிக்காதவன் போலவே பதில் சொன்னான், “முதலில் உங்கள் தலைவரைக் கவனி. அவர் காயம் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும்” என்று.

அதைப் பற்றி காவலன் லட்சியம் செய்யாமல், “எங்கள் தலைவர் வாளுடன் இருந்தார். அப்படி யிருக்க அவரை எப்படிக் காயப்படுத்தினாய்?” என்று விசாரித்தான்.

பதிலுக்கு எட்ட இருந்த கிளையைக் காட்டிய சத்ருஞ்சயன், “அதோ இருக்கிறது எனது ஆயுதம்” என்றான்.

காவலன் அப்பொழுதும் சுறுசுறுப்பைக் காட்ட வில்லை.”அத்தனை பெரிய கிளையாலா அடித்தாய்?” என்று சினத்துடன் கேட்டான்.

“ஆம், வேறு சிறிய கிளை கிடைக்கவில்லை” என்றான் சத்ருஞ்சயன்.

அப்பொழுதும் அந்தக் காவலன் விசாரணையை முடிக்கவில்லை. ஜஸ்வந்தின் தலையிலிருந்த கட்டைப் பார்த்தான். “தலைவருக்கு யார் காட்டு போட்டது?” என்று கேட்டான்.

“நான்தான்.”

“ஏன்?”

“அவன் சாகாதிருப்பதற்காக.”

“அவரைக் காப்பாற்ற வேண்டிய அவசியம்?”

“ஜீவகாருண்யம்” என்று கூறிய சத்ருஞ்சயன் தனது நிதானத்தை இழந்து, “முட்டாள்! முதலில் உனது தலைவனைத் தூக்கிக் கோட்டைக்குள் எடுத்துச் சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய். என்னை யும் சிறை செய். மீதி விஷயங்களை விசாரணையின் போது சொல்கிறேன்” என்று சீறியதால், காவலன் தனது தலைவனைக் கவனிக்கச் சென்றவன் சிறிது நேரம் அவன் கிடந்த நிலையையும் தலைக்கட்டையும் பார்த்து விட்டு, “இவரைக் காயப்படுத்திய பிறகு நீ ஏன் ஓடவில்லை?” என்று வினவினான்.

காவலன் முட்டாள்தனம் வினாடிக்கு வினாடி அதிகரிப்பதைப் பார்த்ததால் எரிச்சல் வசப்பட்ட சத்ருஞ்சயன். “ஓடிப் பழக்கமில்லை” என்று கூறி விட்டு, “ஜஸ்வந்த்சிங்கை நீ எடுத்துக் கொள்கிறாயா நான் எடுத்துக் கொள்ளட்டுமா?” என்று சீறினான்.

அதற்குமேல் தாமதிக்க விரும்பாத காவலன் மற்றக் காவலர்களை நோக்கி. “உம் எடுங்கள் தலை வரை. எடுத்து ஏதாவது ஒரு புரவிமீது குறுக்கே படுக்க வைத்துக் கோட்டைக்குக் கொண்டு செல்லுங்கள்” என்று உத்தரவிட்டு, “நீயும் என்னுடன் வா” என்று சத்ருஞ்சயனை அழைத்தான்.

மற்ற வீரர்கள் புரவியொன்றின்மீது ஜஸ்வந்த் சிங்கைப் படுக்க வைத்துப் பிடித்துக் கொள்ள, இன்னொருவர் புரவியின் கடிவாளத்தைப் பிடித்து முன் னால் இழுத்துச் செல்ல, காவலர் கூட்டம் கோட் டையை நோக்கி நகர்ந்தது.

இன்னொரு புரவியில் சத்ருஞ்சயன் ஏறிக் கொண்டு, “சரி போவோம்” என்று புரவியை நகர்த்தினான்.

அந்தப் புரவிக்குரியவன், “ஐயோ! அது என் புரவி!” என்று கூவினாலும் அதைப் பற்றிக் கவலைப் படாத சின்ன சலூம்ப்ரா, “நான் சிறைப்பட்டவன் நடந்து வந்தால் கோட்டையை அடைய நேரமாகும்” என்று கூறிவிட்டுத் தன்னைச் சிறை செய்த காவலனுடன் பயணமானான். அந்தக் காவலனும் நடந்து செல்ல சோம்பேறித்தனப்பட்டு, “ஆம் ஆம். இவர் சொல்வது உண்மை. நீ நடந்தே வா” என்று கூறிவிட்டு சத்ருஞ்சயனுடன் கோட்டையை நோக்கிச் சென்றான்.

கோட்டையை அவர்கள் அணுகியபோது இரவு மூண்டு கோட்டை விளக்குகள் முதல் நாளைப் போலவே ஜொலிக்க ஆரம்பித்தன. முதல் நாள்தான் அந்தக் கோட்டையில் நுழைந்ததற்கும் மறுநாள் நுழை வதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்த சத்ருஞ்சயன் லேசாக நகைத்தான்.

‘நேற்று குருநாதருடன் வாளை விறகு கட்டையில் சொருகி திருடன்போல் நுழைந்தேன். இன்று காவலர் தலைவனைக் கொல்ல முயன்ற குற்றத்திற்காகச் சிறைப்பட்டு நுழைகிறேன். நேற்று நுழைந்தபோது நான் பிரம்மசாரி. இன்று கிருகஸ்தன், சந்திரமதியை மணந்தவன் என்ற முறையில் நுழைகிறேன். ஒரே நாளில் மனிதனின் இன்பதுன்பங்கள் எத்தனை மாறுதலடை கின்றன!’ என்று தனக்குள் தனது நிலையை சீர் தூக்கிப் பார்த்த சத்ருஞ்சயன் தன்னை எதிர் நோக்கி யுள்ள தண்டனையைப் பற்றிச் சிறிதளவும் சிந்திக் காமல் காவலருடன் சென்றான்.

அவனைச் சிறை செய்த காவலன் அவனை அந்தக் கோட்டையின் நீதிபதியிடம் அழைத்துச் சென் றான். குற்றவாளியைச் சிறையில் வைக்குமாறும் மறுநாள் விசாரித்துத் தண்டனை அளிப்பதாகவும் நீதிபதி கூறவே காவலன் அவனைச் சிறைக் கூடத் துக்கு அழைத்துச் சென்றான்.

ஒண்டாலாவின் சிறைக்கூடம் நல்ல பாறாங் கற்களால் கட்டப்பட்டிருந்தது. அறைகளில் இரும்புக் கம்பிகள் பலமாகப் பொருத்தப்பட்டிருந்தன. காவ லும் அப்படி ஒன்றும் மோசமில்லை. சிறைக்கூடத்தின் ஆரம்பத் தாழ்வரையில் உட்கார்ந்த சிறைக்கூடத் தலைவன் பெரும் சாவிக் கொத்தொன்றை வைத்துக் கொண்டிருந்தான். காவலன் சத்ருஞ்சயனை அழைத்து வந்ததும், “இன்னொரு கைதியா!” என்று அலுத்துக் கொண்டான்.

“ஆம், பயங்கரமான கைதி. இவனை மிகவும் ஜாக்கிரதையாகக் காவல் செய்ய வேண்டும்;” என்றான் காவலன்.

அப்பொழுது இருந்த இடத்தைவிட்டு எழுந்தி ருக்காத சிறைக் காவலன், “இவன் என்ன குற்றம் செய்தான்?” என்று வினவினான்.

“நமது கோட்டைக் காவலர் தலைவரைக் கொல்ல முயன்றான்” என்றான் காவலன்.

“அவ்வளவுதானா?” என்று சிறைக்காவலன், கொல்லாதது பிசகுபோல் சொல்லிவிட்டு மெல்ல எழுந்திருந்து உட்புறமிருந்த அறைகளை நோக்கிச் சாவிக் கொத்துடன் நடந்தான். அந்த அறைகளில் பல விதமான கைதிகள் இருந்தார்கள். சிலர் நீண்ட காலம் இருந்திருக்க வேண்டுமென்பது அவர்கள் நீண்ட தாடி மீசைகளாலும், கத்தரிக்கப்படாமல் தொங்கிய தலை மயிரிலிருந்தும் தெரிந்தது சத்ருஞ்சயனுக்கு. அவர்கள் அடிக்கடி உணவைப் பார்ப்பதில்லையென்பதற்கு அவர்களின் மெல்லிய தேகங்களே உதாரணமாயிருந் தன. இந்தச் சிறைக்குள் நுழைந்தவனுக்கு சிறையே சமாதியாகும் என்பதை சத்ருஞ்சயன் புரிந்து கொண் டாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் சிறை அதிகாரியைப் பின் தொடர்ந்தான். இரண்டு வரிசை களாக இருந்த அந்த அறைகளைத் தாண்டி கோடி யிலிருந்த ஒரு அறைக்கு வந்த சிறை அதிகாரி சத்ருஞ்சயனை அந்த அறைக்குள் போகும்படி சைகை காட்டினான். அவன் போனதும் அறைப்பூட்டைப் பூட்டி இழுத்துப் பார்த்து, “இனி இவனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்” என்று கூறிவிட்டு சத்ருஞ் சயனை அழைத்து வந்த காவலனுக்குப் போக விடை கொடுத்தான்.

போகுமுன்பு காவலன் சிறை அதிகாரியை நோக்கி, “இவன் மிக அபாயமானவன். எச்சரிக்கை யுடன் கவனியுங்கள்” என்று எச்சரித்தான்.

“இங்கிருந்து இதுவரை யாரும் உயிருடன் வெளியே சென்றதில்லை. வரும்போது நடந்து வரு வான். போகும்போது நான்கு பேர் அவனைத் தூக்கிச் செல்வார்கள். இதுதான் பழக்கம்” என்று உற்சாக மாகச் சொன்ன சிறைக் காவலன் தனது நகைச் சுவையை எண்ணி மிகக் குரூரமாக நகைத்தான்.

அந்த நகைப்பைக் கேட்டதால் கிலி பிடித்த காவலன், “சிறைக் காவலரே! இவருக்கு ஏதும் தீங்கு ஏற்படக் கூடாது இன்றிரவு. நாளை நீதிபதி விசாரிக்கப் போகிறார்” என்று எச்சரித்துவிட்டுச் சென்றான்.

சிறைக்குள் சென்ற சத்ருஞ்சயன் சிறையைச் சுற்று முற்றும் கவனித்து அதிலிருந்து தப்ப ஏதும் வழி யில்லை என்பதைப் புரிந்து கொண்டதால் படுக்க உத் தேசித்துத் தரையை நோக்கினான். தரை கரடு முரடா யிருந்தது. சில இடங்களில் பெயர்ந்தும் இருந்ததால் அதில் படுப்பது கஷ்டம் என்பதை உணர்ந்து கொண்டதால்,

“காவலரே! காவலரே!” என்று கூவினான்.

அப்பொழுதுதான் மீண்டும் ஆசனத்தில் உட் கார்ந்து கொண்ட சிறைக் காவலன் எரிச்சல் பட்டுக் கொண்டு மீண்டும் எழுந்து வந்து,

“ஏன் கூவுகிறாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று வினவினான்.

“படுக்கப் பாய் வேண்டும்” என்றான் சத்ருஞ்சயன்.

அவன் பைத்தியமல்ல என்பதைத் தீர்மானித்துக் கொள்ள அவனை உற்று நோக்கிய சிறைக் காவலன், “பாயா வேண்டும்?” என்று கேட்டான்.

“ஆம். தரை சரியாயில்லை,” என்று சத்ருஞ்சயன் பிளந்து கிடந்த தரைப்பூச்சைச் சுட்டிக் காட்டினான்.

“கவலைப்படாதே. நாளைக்கு இதைப் பூசச் சொல்கிறேன்,” என்ற சிறைக் காவலன் திரும்பிச் செல்ல முயன்றான்.

“ஐயா அதிகாரி!” என்று மீண்டும் குரல் கொடுத்தான் சத்ருஞ்சயன்.

சிறைக் காவலன் திரும்பி, “என்ன?” என்று விசாரித்தான் கடுமையான குரலில்.

“பாய் வேண்டுமென்று சொன்னேன்” என்று நினைவுபடுத்தினான் சத்ருஞ்சயன்.

“மெத்தை வேண்டாமா?” என்று சிறைக் காவலன் கேட்டான் மிகுந்த எரிச்சலுடன்.

“வேண்டாம், பாய் போதும்” என்ற சத்ருஞ் சயனை நிச்சயமாக பைத்தியம்தானென்று தீர்மானித் துக் கொண்டு சென்ற சிறைக் காவலன் தனது ஆசனத்தில் மீண்டும் அமர்ந்து கொண்டு குரானை சிறிது பெரிதாகவே ஓத ஆரம்பித்தான்.

சத்ருஞ்சயன் அதற்குப் பிறகு ஏதும் கேட்காமல் சிறைத் தரையில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்த வண்ணம் சிந்தனையில் இறங்கினான். அன்று பகல் நிகழ்ச்சிகள் அவன் மனத்தில் வலம் வந்ததால் பெரிதும் துன்பத்தின் வசப்பட்டான் சத்ருஞ்சயன்.

‘புஷ்பம் போலிருந்த சந்திரமதி இரக்கமற்ற அரக்கியாக எத்தனை துரிதமாக மாறிவிட்டாள்?’ என்று திரும்பத் திரும்ப நினைத்ததால் அவன் மனம் வெந்து கொண்டிருந்தது. ஜஸ்வந்த் இறந்திருந்தால் அவள் கொலைகாரியாக மாறி இருப்பாளே என்ற எண்ணம் அவனை வாட்டிக் கொண்டிருந்தது.

இப்படி சத்ருஞ்சயன் சிறையில் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் மல்லிநாதர் இல்லத்திலும் இதைப்பற்றி பேச்சு நடந்து கொண்டிருந்தது. நடந்த விவரங்களை மகளிடமிருந்து அறிந்த மல்லிநாதர் சிந்தனையில் ஆழ்ந்தார் நீண்ட நேரம். “வேறு வழி யில்லை. ஜஸ்வந்த் ராஜபுத்திரரில் சீர் கெட்டவன். அவனை அடித்தது சரிதான். ஆனால் உன் புருஷனை ஏன் விட்டு வந்தாய்?” என்று வினவினார் மல்லிநாதர்.

சந்திரமதி தந்தையை ஏறிட்டு நோக்கி, “அவர் வர மறுத்தார்” என்றாள்.

“ஏன்?”

“காயமடைந்த ஜஸ்வந்தைத் தூக்கி வருவதற்காக”

“கடைசியில் சிறைப்பட்டிருக்கிறான்” என்ற மல்லிநாதர், “என்ன குற்றத்துக்குத் தெரியுமா?” என்று வினவினார்.

“தெரியாது” என்றாள் சந்திரமதி.

“ஜஸ்வந்தை மண்டையிலடித்துக் கொல்ல முயன்றதற்கு” என்றார் மல்லிநாதர்.

“அதை நானல்லவா செய்தேன்?” என்று திகைப்பு டன் கூறினாள் சந்திரமதி.

“உன்னை அவன் காட்டிக் கொடுக்க இஷ்டப்பட வில்லை. குற்றத்தைத் தன் மீது போட்டுக் கொண்டான்” என்ற மல்லிநாதர், “இவனை இன்றிரவு தப்ப வைக்காவிட்டால் நாளைக் காலையில் மரண தண்டனை அளித்து விடுவான் கோட்டைத் தலைவன். அப்துல்லா பழைய விரோதங்களை மறப்பவன் அல்ல. இருமுறை பெரிய சலூம்ப்ரா அவனைப் போரில் முறியடித்திருக்கிறார். அதற்குப் பழி வாங்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதைக் கைவிட மாட்டான் அப்துல்லா” என்றும் விளக்கினார்.

“இப்பொழுது என்ன செய்வது?” என்று கேட்டாள் சந்திரமதி.

“சிந்திப்போம்” என்ற மல்லிநாதர், “சந்திரமதி! எதற்கும் இன்றிரவு நீயும் சிறைக்குப்போ என்றார், “உணவருந்தி சித்தம் செய்துகொள்” என்றும் கூறினார்.

உணவை வெகு சீக்கிரம் முடித்துக் கொண்ட சந்திரமதியை அழைத்துக் கொண்டு சிறைச் சாலைக்கு வந்த மல்லிநாதர் கையில் சாவியுடன் ஆசனத்தில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த காவலனை, “முஸபர், முஸபர்” என்று அழைத்து அசக்கினார்.

அவர் அசக்கலால் விழித்துக் கொண்ட சிறைக் காவலன், “யார்? ஆசிரியரா?” என்று வியப்புடன் வினவினான் மல்லிநாதரைப் பார்த்து.

“ஆம் முஸபர்” என்று மல்லிநாதர், “நமது ஜஸ்வந்தைக் கொலை செய்ய முயன்றவன் எந்த அறை யில் இருக்கிறான்?” என்று வினவினார்.

ஓண்டாலா கோட்டையில் எல்லாராலும் மதிக்கப்பட்ட மல்லிநாதர் இந்தக் கேள்வியைக் கேட்டதும் பதிலேதும் சொல்லாமல் சத்ருஞ்சயன் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான். “அதோ சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டிருக்கிறான்” என்று சுட்டிக் காட்டினான் சிறை அதிகாரி.

“பூட்டைத் திற” என்றார் மல்லிநாதர்.

“எதற்கு?”

“இவன் என் பெண்ணை ஏமாற்றி விட்டான்”

“அந்தக் குற்றத்தையும் செய்தானா?”

“ஆம். அதற்குத் தண்டனை அளிக்க வேண்டும்” என்ற மல்லிநாதரை மேற்கொண்டு கேள்வி ஏதும் கேட்காமல் அவரிடம் சாவியைக் கொடுத்து, “குருநாதரே! உங்களுக்கு இந்தக் கோட்டையில் எங்கும் தடை கிடையாது என்பது எனக்குத் தெரியும். கோட்டைத் தலைவர் அப்துல்லாவுக்கோ உங்களிடம் மரியாதை உண்டு. இஷ்டப்பட்ட தண்டனையை இவனுக்கு அளியுங்கள்” என்று கூறிவிட்டுச் சென்று மீண்டும் தனது ஆசனத்தில் அமர்ந்து கொண்டான்.

மல்லிநாதர் சிறைப் பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார். அவரை ஏறெடுத்து நோக்கிய சத்ருஞ்சயன் அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த சந்திரமதியைப் பார்த்து, “இவளை எதற்காக இங்கு அழைத்து வந்தீர்கள்?” என்று வினவினான்.

மல்லிநாதர் அவனைக் கூர்ந்து நோக்கினார். “நீ இருக்க வேண்டிய இடத்தில் இவள் இருக்க வேண்டியவள். தவிர உண்மைக் குற்றவாளி இவள்தான்” என்றவர், “அதிக நேரமில்லை என்னுடன் வாதாட, எழுந்திரு” என்றார்.

எழுந்திருந்த சத்ருஞ்சயன், “சொல்லுங்கள்,” என்றான்.

பதிலேதும் சொல்லவில்லை மல்லிநாதர். தனது கச்சையிலிருந்து இரண்டு மஞ்சள் கயிறுகளை எடுத்து, “இந்தா! இவற்றில் ஒன்றை உன் மனைவியின் கையில் கட்டு. இன்னொன்றை அவள் கழுத்தில் கட்டு” என்றார்.

இரண்டாவது கயிற்றில் மாங்கலியமும் இருந்ததைப் பார்த்த சத்ருஞ்சயன், “இந்தச் சடங்கு இப்பொழுது எதற்கு?” என்று வினவினான்.

“உங்களை உலகமறிய கணவன் மனைவியாக அறிவிப்பது இந்தக் கயிறுகள்தான். இத்துடன் நானும் உனது தந்தையும் செய்து கொண்ட சபதமும் பூர்த்தியாகிறது” என்றார்.

வேண்டா வெறுப்பாக அவள் கையில் கங்கணத்தையும் கழுத்தில் மங்கள நாணையும் கட்டினான் சத்ருஞ்சயன். அதற்குப் பிறகு அங்கு நிற்காத மல்லிநாதர் சிறைக் காவலனிடம் சென்று “முஸபர்!” என்றழைத்து சாவியைக் கொடுத்தார்.

அதுவரை கண்களை மூடிக் கொண்டிருந்த முஸபர், “உங்கள் மகளெங்கே?” என்று கேட்டான்.

“அவனுடன் சிறையிலிருக்கிறாள்” என்றார் மல்லிநாதர்.

“ஏன் குரு?” என்று கேட்டான் முஸபர்.

“உண்மைக் குற்றவாளி என் மகள்தான். அவன் குற்றமேதும் செய்யவில்லை” என்றார் மல்லிநாதர்.

“குரு! உங்களை இந்த நேர்மையால்தான் எல்லாரும் மதிக்கிறார்கள். நியாயத்துக்காக மகளையும் சிறை செய்யும் மகான் உங்களைத் தவிர வேறு யார் இருக்க முடியும்?” என்ற முஸபர், “குரு! ஒன்று சொல்கிறேன், கேட்கிறீர்களா?” என்றுகேட்டான்.

“சொல் முஸபர்” என்றார் மல்லிநாதர்.

“மகளை அழைத்துப் போங்கள். அந்த சைத்தான் சாகட்டும்” என்றான் முஸபர்.

மல்லிநாதர் அதற்கு ஒப்பவில்லை. “முஸபர்! என் மகள் குற்றம் செய்திருக்கிறாள் என்பதை உணர்ந்தும் நான் அவளைச் சுதந்திரமாகவிட்டால் நாளைக்கு இந்தக் கோட்டையே என்னைக் காறித் துப்பும். அவளும் இருக்கட்டும் சிறையில்” என்றார்.

முஸபர் அவரை மீண்டும் கேட்டான், “அந்த சைத்தான் ஆண்பிள்ளை. பெண் பிள்ளை அவனுடன் தங்கலாமா?” என்று.

“அவன் அவள் கணவன்” என்று கூறிவிட்டு மல்லிநாதர் போய்விட்டார் சிறைச்சாலையை விட்டு.

“கணவன் மனைவி. ஒரே சிறை. நாளைக்கு என்ன ஆகிறதோ? இன்றிரவு மஜாவாயிருக்கட்டும்” என்று சொல்லிக் கொண்டு ஆசனத்தில் சாய்ந்தான், சிறை அதிகாரி.

சிறை அறைக்குள் கணவனும் மனைவியும் ஒரு வரையொருவர் எரித்து விடுபவர்கள் போல் பார்த்துக் கொண்டார்கள். “இது ஒரு தந்திரமா?” என்று சீறினான் சத்ருஞ்சயன்.

“இதில் தந்திரமென்ன இருக்கிறது?” என்று அவளும் சீறினாள்.

“சிறையில் இரவில் எதற்காகத் தாலி கட்ட வேண்டும்?” என்று கேட்டான் சத்ருஞ்சயன்.

“பகலில் நடந்ததை ஊர்ஜிதப்படுத்த” என்றாள் சந்திரமதி. பிறகு சிறைச் சுவரில் சாய்ந்து கொண்டாள்.

“சத்ருஞ்சயன் சிறையின் நடுப் பகுதியிலிருந்து அடித்த விளக்கு வெளிச்சத்தில் சந்திரமதியைக் கவனித்தான். அவள் அவன் பார்வையை லட்சியம் செய்யவில்லை. கண்களை மூடிக் கொண்டாள். அந்த நிலையில் அவள் அழகு அவன் மனத்தைப் பெரிதும் அலைக்கழித்தது. அந்தச் சிறு வெளிச்சத்தில் மூடிய கண்களுடன் குவிந்த தாமரை போல விளங்கினாள் சந்திரமதி. இருமுறை அப்படியும் இப்படியும் சிறையில் நடந்த சத்ருஞ்சயன் அவள் முன்பு நின்று, “சந்திரமதி! இது என்ன நாடகம்?” என்றான். பிறகு அவளை வலுக் கட்டாயமாகத் தரையில் உட்கார வைத்து அவளுக்கு எதிரில் தானும் உட்கார்ந்தான்.

“நாடகமாட நான் நடிகையல்ல. பொய் சொல்ல எனக்குத் தெரியாது. நான் செய்த பிழையைப் பிறர் மீது போடும் துர்ப்பழக்கமும் எனக்குக் கிடையாது” என்றாள் சந்திரமதி.

அவன் உட்கார்ந்த நிலையில் அவள் தோளைக் குலுக்கினான். அவள் கண் விழித்துப் பார்த்தாள். அதில் பெரும் குற்றச்சாட்டு இருந்தது. வேதனையும் இருந்தது. கமல இதழ்களைத் திறந்து பேசலானாள் சந்திரமதி.

– தொடரும்

– சந்திரமதி (குறுநாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1983, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *