என்னை பற்றி நான் அறிய

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: February 21, 2023
பார்வையிட்டோர்: 2,426 
 
 

அந்த அடர்ந்த காட்டில் குதிரைகளின் ஓசை மட்டும் டக்.டக். என தாள கதியில் கேட்டுக்கொண்டிருந்தது. சற்று உற்று கேட்டால் தாள கதி இரு விதமாக ஒலிப்பதை காணலாம். இதிலிருந்து குதிரை ஒன்றல்ல, இரண்டாக நடந்து செல்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். சற்று நெருங்கி பார்த்தால் சற்று முன்னால் வந்து கொண்டிருக்கும் குதிரையின் மேல் உட்கார்ந்திருக்கும் உருவம் வாட்டசாட்டமாய் இருப்பதையும் அதன் தோள்கள் அகன்றும், குதிரையில் லகானை பிடித்திருக்கும் கைகள் நன்கு முறுக்கேறி இருப்பதையும், அந்த கைகள் ஏராளமான போர்களை கண்டிருக்கலாம் என்பதற்கு அங்கங்கு உடலில் காணப்படும் காய்ந்து போன காய வடுக்களும் உணர்த்தும் எண்ணம் என்னவென்றால் இதில் வருபவன் சாதாரணமான வீரனாய் இருக்க வாய்ப்பில்லை என்பது தெரிகிறது. அதே போல் அந்த குதிரையை தொடர்ந்து அதே தாள கதியில் வரும் குதிரையில் மேல் உட்கார்ந்திருக்கும் உருவமும் சாதாரணமானதல்ல என்பதும் தெரிய வருகிறது. காரணம் முன் சென்ற உருவத்தை போலவே நல்ல ஆகிருதியும், உடற்கட்டை பார்த்தால் மிக சிறந்த வீரனென்றும், கண் வீச்சு நான்கு புறமும் சுழலுவதை பார்த்தால் முன் சென்றவனுக்கு பாதுகாவலாய் வந்து கொண்டிருப்பவனோ என்ற எண்ணம் தானாக எழுகிறது. இந்த உச்சி வேளையில் இருவரும் எதற்காக தனியாக இந்த அடர் வனத்திற்குள் நுழைந்திருக்கவேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. வாருங்கள் அருகில் சென்று என்ன பேசுகிறார்கள் என்று கவனிப்போம்.

என்ன வீரசிம்மா அமைதியாக வருகிறாய்?

நான் தங்களிடம் எப்படி சொல்வது என்கிற சிந்தனையில் வந்து கொண்டிருக்கிறேன் அரசே?

நீ என்ன சொல்ல வருகிறாய் என்பதை நான் உணராமல் இல்லை, வீர சிம்மா?

புரிந்தும் ஏன் புரியாதது போல் மகா ராணியிடம் நடந்து கொள்கிறீர்கள் அரசே?

உன்னிடம் மகாராணி என்ன சொன்னாள் என்பதை கூறு? அதன் பின் நான் என்ன நினைக்கிறேன் என்பதை சொல்கிறேன்.

முதலில் தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். உங்களிடம் நான் பணிபுரிந்து கொண்டிருப்பதற்கே உங்கள் சுற்றத்தார் புகைந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அச்சம் கூட ஏற்படுகிறது.

அச்சமா? உனக்கா வீர சிம்மா எத்தனை போர்களில் களம் கண்டிருக்கிறோம். நான் இளவரசராய் இருந்த காலம் தொட்டு என்னுடன் இருந்திருக்கிறாய்? எனக்கு தெரியாதா உன்னுடைய அச்சம் இது வல்லவென்று.

உண்மைதான் அரசே தாங்கள் நல்ல ஆன்மீகவாதி என்பதில் எனக்கோ மகாராணிக்கோ எவ்வித சந்தேகமுமில்லை. தினமும் இறைவனை பூஜிக்கிறீர்கள். ஒரு மன்னனுக்கு இருக்க கூடிய சுய கட்டுப்பாடுகளை பொது வாழ்க்கையில் காட்டுகிறீகள். ஆனால்…

சொல் சொல்ல வந்த்தை தயங்காமல் கூறு?

மகாராணி கவலைப்படுவது என்னவென்றால் தாங்கள் ஏன் அரண்மனை வாழ்க்கையில் ஒட்டி வாழ மறுக்கிறீர்கள்.அரண்மனையில் எண்ணற்ற பெண்டீர்களும், இன்பமூட்டும் கேளிக்கைகளும், பொழுது போக்குகளும் தங்கள் அரண்மனையில் அன்றாடம் நடைபெற்று கொண்டிருக்கிற பாட்டும், கூத்தும், இவைகள் எதிலும் ஈடுபடாமல் மகா ராணியுடன் பேசுவதுடன் மட்டும் நிறுத்தி கொள்கிறீர்கள். வாரிசுகளுடன் கூட அதிக ஒட்டுதலை காண்பிப்பதில்லை. இதை எல்லாம் மகாராணி கவனித்து தாங்கள் எங்காவது ஆன்மீக பாதைக்கு சென்று விடுவீர்களோ என பயப்படுகிறார்கள்.

வீர சிம்மனின் இந்த குற்ற சாட்டுகளுக்கு மென்மையான சிரிப்பை மட்டும் உதிர்த்த அரசன் வீர சிம்மா நீ சொன்ன அனைத்தையும் நான் ஒப்புக்கொள்கிறேன். சில நேரங்களில் இந்த வாழ்வு என்பது நிலையற்றது என்ற எண்ணம் எனக்கு வருகிறது உண்மைதான். அதே நேரத்தில் கடவுள் என்னை படைத்து இங்ஙனம் வைத்திருப்பது எனக்காக இல்லை என்பதும் என் எண்ணம்.. கண்டிப்பாய் என்னால் என்னை சுற்றி உள்ளோர் பலனடைய வேண்டும் என்ற எண்ணம் கூட இருக்கலாம். இருந்தாலும் நான் இன்னமும் இல் வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் தான் உள்ளேன்

நன்று, நான் தங்கள் உள்ளம் உணர்கிறேன். இருந்தாலும், இப்பொழுது வேட்டைக்காக வந்த நாம், என்னை கண்ணை காட்டிவிட்டு இப்படி தன்னந்தனியாக வந்தது ஏன்? நம்முடன் வந்தவர்கள் இப்பொழுது நம்மை தேடிக்கொண்டிருக்க மாட்டார்களா? மகாராணிக்கு என்ன பதில் சொல்வார்கள்.

நான் என்பது யார்? இதை தனித்து உணர இதை விட எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது. இருந்தாலும், நான் என்னவானேன் என்பதை காண ஒரு சாட்சி தேவையல்லவா, அதற்காக உன்னை என்னுடன் வர சொன்னேன்.

உங்களின் எண்ணங்களின்படி பணி செய்வதுதான் எனது கடமை. சரி அடுத்து என்ன செய்யலாம்? நம்மிடம் இந்த குதிரை. ஆளுக்கு ஒரு வாள், ஒரு சில குறுவாள்கள், இவைகள் மட்டுமே உள்ளன.

இவைகள் போதும் வேட்டையாட?

மன்னா..சற்று நில்லுங்கள் ஏதோ சல சலப்பு…

மன்னரும், வீர சிம்மனும் குதிரையை மெல்ல நிறுத்தி சலசலப்பு கேட்ட இடத்திற்கு மெல்ல குதிரையை ஓட்டி சென்றார்கள். அங்கிருந்த அடர்ந்த புதரை வீர சிம்மன் தன் வாளால் ஒதுக்கி விட்டு பார்க்கிறான்.

ஆஹா..இதனுள்ளே இவ்வளவு பெரிய புல்வெளியா? எத்தனை மான்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன? ஆச்சர்யமாக இருக்கிறது. சரி என்ன செய்யலாம்? மன்னரிடம் கேட்டான் வீர சிம்மன்.

சரி நாம் வந்த வேலையை தொடங்கலாம், அங்கு பார் அந்தகூட்டத்திலிருந்து தனித்து மேயும் அந்த மான் மீது கண் வை.

எதை பற்றியும் கவலைப்படாமல் மேய்ந்து கொண்டிருந்த மான் தன்னை யாரோ உற்று பார்க்கிறார்கள் என்பதை உள்ளுணர்வின் மூலம் உணர்ந்து கொண்டதோ என்னவோ சட்டென தலையை தூக்கி பார்த்து மெல்ல அந்த கூட்டத்தை விட்டு இன்னும் சற்று ஒதுக்கு புறமாக மறைவிடத்தை நோக்கி நகர்ந்தது.

அதுதான் அது செய்த தவறு. தன்னை வேட்டையாட காத்திருக்கும் இருவருக்கும் வசதி செய்து கொடுப்பது போல தனித்து வந்ததால், அரசருக்கும், வீரசிம்மனுக்கு இதை குறி வைத்து பாய்வது சுலபமாகி விட்டது.

மான் பாய்ந்து பாய்ந்து சென்று இருவருக்கும் போக்கு காட்டி கொண்டிருக்க இதனால் அதிக உற்சாகம் அடைந்த இருவர் மானை சுற்றி ஒரு அரை வட்டம் அடித்தது

போல் சுற்றி வர நன்கு குறி வைக்க அவகாசத்தை எதிர்பார்த்து காத்திருந்த அரசர் சட்டென தன் இடையில் இருந்த குறுவாளை எடுத்து மானின் உடலை நோக்கி வீசினார்.

அவர் வீசிய குறுவாள் மானின் உடலில் தைத்தது இவர்களுக்கு தெரிந்தாலும் அதையெல்லாம் சாதாரணமாய் உதறி ஓடும் என்று நினைத்து கொண்டிருந்த பொழுது சட்டென மான் அப்படியே சுருண்டு விழுவதை இருவரும் வியப்புடன் பார்த்தனர்.,

மானின் அருகில் இவர்கள் செல்ல முற்படுகையில் எதிர்புற காட்டுக்குள் இருந்து ஒரு வேட்டுவன் கையில் வில்லுடன் மானை நோக்கி வந்தான்.

இரு அணியினரும் மானை நோக்கி வர மான் அதற்குள் இறந்து விட்டிருந்தது.

மானின் அருகில் வந்த வேடன் மானின் உடலில் தைத்திருந்த அம்பினை பிடுங்கி எடுத்து தன் தோள் பின் புற கூடையில் போட்டுக்கொண்டு கீழே கிடந்த மானை எடுத்து தன் தோளில் போட்டு நடக்க ஆரம்பித்தான்.

சட்டென ஒரு வாளால் அவன் தடுக்கப்பட்டு மரியாதையாய் அந்த மானை இங்கு விட்டு செல். வீர சிம்மனின் குரலில் ஒர் உறுமல்.

வேடன் இருவரையும் ஏளனமாய் பார்த்து இது என்ன நியாயம், நான் வீழ்த்திய மானை எடுத்து போக எனக்கு உரிமையில்லையா?

நன்றாக பார், இது நீ வீழ்த்திய மானா? மானில் இந்த புறத்தில் ஆழமாய் தைத்திருந்த குறுவாளை அதன் உடலில் இருந்து பிடுங்கி எடுத்து காட்டினான்.

வேடன் சிரித்து என் அம்புக்கு பலியான பின்புதான் இந்த குத்து வாள் குத்தியிருக்க முடியும்.

ஏன் குத்து வாள் தைத்தபின்பு உன் அம்பு தைத்திருக்கலாமல்லவா?

விவாதங்கள் வளர்ந்தன.

இவர் யார் தெரியுமா?

வீரசிம்மனின் தோளில் கையை வைத்து என்னை பற்றி எதுவும் சொல்லாதே என்று சமிக்ஞை செய்தான் அரசன்.

சட்டென புரிந்து கொண்ட வீர சிம்மன் சரி கடைசியாக என்ன சொல்கிறாய்?

ஓடுகிற மானை என் அம்பை விட உங்கள் குத்துவாள் வேகமாக சென்று மானின் உயிரை பறித்திருக்கும் என்பதை நம்பக்கூடிய அளவில் நீங்கள் நிருபித்து காட்டி விட்டு இந்த மானை எடுத்து செல்லுங்கள்.

வீர சிம்மன் மன்னனை பார்க்க அவன் சரி என்று தலையசைத்தான்.

ஏன் உன்னுடன் வந்தவன் பேச மாட்டானா? அவன் என்ன ஊமையா? வேடனின் கேள்விக்கு வெகுண்ட வீரசிம்மனை தோளை தொட்டு அமைதி படுத்தினான் மன்னன்.

இப்பொழுது மான் கூட்டத்தை மூன்று ஜோடி கண்கள் கவனித்துக்கொண்டிருக்க, அந்த கூட்டத்துக்குள் இருந்த ஒரு மானை வேடன் கை காட்டினான். அவ்வளவுதான் அந்த மான் குறிவைக்கப்பட்டு இருவராலும் விரட்டப்பட்டது. தன் உயிரை காப்பாற்றி கொள்ள பாய்ந்து ஓடி சென்ற மான், தன் வீரத்தை நிருபிக்க அதை விரட்டி சென்ற மன்னன், மன்னனுக்கு ஏதும் ஆகி விடக்கூடாதே என்று அவனுக்கு இணையாக ஓடி வந்த வீரசிம்மன்

இப்படி ஒரு பெரிய கண்ணாமூச்சி ஓட்டத்தின் முடிவில் அந்த மான் மன்னனின் நான்கைந்து குறுவாள்கள் பட்ட பின்பே கடைசியில் உயிர் விட்டது.

இறந்து கிடந்த மானின் அருகில் வந்த வேடன் இப்பொழுது ஒப்புக்கொள்கிறேன், இவரின் குறுவாள் பட்டு மான் இறந்திருக்கலாம், என்றாலும் அவரின் ஒரு குறுவாளுக்கு அந்த மான் விழுந்து இறந்தது என்பதை இப்பொழுதும் ஏற்க முடியாது. பரவாயில்லை. நீங்கள் இந்த இரு மான்களையும் எடுத்து கொண்டு போங்கள் சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் நடந்தான் வேடன்.

நில்..நில்..அவனை விரட்டி கொண்டே சென்றார் மன்னர். நான் ஒத்து கொள்ளுகிறேன், என் குறுவாளால் அந்த மான் இறந்திருக்க வாய்ப்பில்லை. உன் அம்பு பட்டுத்தான் அது வீழ்ந்திருக்க வேண்டும், நீ தாராளமாய் இந்த இரு மான்களையும் எடுத்து செல்லலாம்.

வேடன் சிரித்தான், நண்பரே நீங்கள் யாரென்று எனக்கு தெரியாது, ஆனால் மானை கொன்றது யார் என்பதில் தான் நம் இருவருக்கும் பிரச்சினை வந்தது. என்னை பொறுத்தவரை இது முடிந்து போன விசயம். நான் ஏதாவது வேட்டையாடி எங்கள் இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆகவே தயை கூர்ந்து வழி விடுங்கள். நான் செல்ல வேண்டும்.

மன்னன் உறுதியாய் சொன்னான். ஒத்துக்கொள்கிறேன், அப்படி நீ எனக்கு விட்டு கொடுத்து நான் பெற்று கொள்வது எனக்கு அவமானம். இருந்தாலும் உன்னை தொல்லை படுத்துவதற்காக சொல்லவில்லை. இந்த இரு மான்களையும் நாங்களே சுமந்து உங்கள் இருப்பிடம் கொண்டு வருகிறோம். அதற்கு மட்டும் அனுமதி அளித்தால் போதும்.

வேடன் யோசித்தான், சரி எடுத்து வாருங்கள், ஆனால் ஒன்று அங்குள்ளவர்களிடம் இது நீங்கள் அடித்த மான் என்று சொல்லுவேன். சரி என்று தலையசைத்து, மன்னனும், வீரசிம்மனும் ஆளுக்கு ஒரு மானை தூக்கி குதிரையில் போட்டுக்கொண்டு நடந்தனர். குதிரை சற்று தடுமாற்றத்துடன் வேடனின் இருப்பிடம் நோக்கி நடந்து சென்றது. வேடன் அவர்கள் முன்னால் வழி காட்டி சென்றான்.

வேடனின் குடியிருப்பில் இவர்கள் வேட்டையாடி கொண்டு வந்த மானை பெற்று கொள்ள மறுத்தனர். இருந்தாலும் வேடனின் வற்புறுத்தலால், மான்களை பெற்றுக்கொண்டு அவர்கள் இருவரையும் விருந்தினராக இங்கேயே தங்கி மறு நாள் செல்லுமாறு கூறினர்.

வீரசிம்மன் மன்னனை பார்த்தான். மன்னனோ அளவு கடந்த மகிழ்ச்சியுடன் அவர்களுடன் தங்கியிருக்க சம்மதித்தான்.

இரவு அவர்கள் இருப்பிடத்தில் ஒரே ஆட்டம் பாட்டமுமாக இருந்தது. அனைவரும் ஆடிப்பாடி போதையேற்றும் ஏதோ பானங்களை குடித்துக்கொண்டு, இவர்கள் கொண்டு சென்ற மானை தீயில் வாட்டி உண்டனர். மன்னனும் அவர்களுடன் தன்னை மறந்து ஆட்டம் பாட்டம் இவைகளில் ஈடுபட்டு களித்தான்.

வீர சிம்மன் மன்னனின் மகிழ்ச்சிக்கு காரணம் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதே கானகம்..குதிரையின் தாள ஒலி…. மன்னனின் முகத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி. வீர சிம்மன் ஒன்றும் புரியாமல் மன்னனின் முகத்தை பார்த்துக்கொண்டு வந்தான்.

என்ன வீர சிம்மா பார்க்கிறாய். நான் ஏன் மகிழ்ச்சியாய் இருக்கிறேன் என்றா?

யோசித்து பார், அங்கு என்னை மன்னன் என்றூ அறிமுகப்படுத்தி இருந்தால் அவர்கள் என்னிடம் காட்டியிருப்பது போலியான அன்பாகத்தான் இருக்க முடியும்.

அது மட்டுமல்ல மானை அடித்தது, அவனே என்றாலும், நான் மன்னன் என்று தெரிந்திருந்தால் உடனே விலகியிருப்பான். அது மட்டுமல்ல அவர்கள் கூட்டத்துடன் நான் என்னை மறந்து களித்து உறவாடியிருக்க முடியுமா?

இப்பொழுது நான் என் அரண்மனைக்கு போனவுடன் என்ன நிகழும், எனக்கு அளிக்கப்பட்டும் மரியாதை, கெளரவம் இவைகளில் எந்தளவுக்கு போலித்தனம் கலந்திருக்கும். இதைத்தான் நான் வெறுக்கிறேன். நான் யார்? உண்மையில் என்னை நானே புரிந்து கொள்ள ஆறு மாத்ததிற்கு ஒரு முறை, அல்லது வருடம் ஒரு முறை திக் விஜயம் செல்ல வேண்டும். நாம் இருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்ன சொல்கிறாய்?

மன்னனின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என்ற புன்னகையுடன் அப்படியே ஆகட்டும் சொல்லி தலையசைத்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *