வேலாயுதம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 7,517 
 

நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு அவரை உடனே பிடிக்கும். (அவர் என்றே இருக்கட்டும், ஏனென்றால் இந்தக் கதையின் முக்கிய பாத்திரம் – முக்கிய என்ன, கிட்டத்தட்ட ஒரே கதா பாத்திரம் – அப்ப தலைப்புக்கும் அவர் பெயரையே வைத்து விடலாம்…. ‘வேலாயுதம்’ சரி தானே..! )

அந்தத் துரு துரு கண்கள்… சிரிக்கும் பொழுது தெரியும் தெற்றுப் பல்…. இடது புருவத்திற்கு அருகில் ஒரு சின்ன மச்சம்.. தன் தலையை ஆட்டி ஆட்டிப் பேசும் ஆவல்…. ஒரு பக்கம் தலை சாய்த்துப் பிறர் பேசுவதைக் கேட்கும் உன்னிப்பு.. மெல்லிய உருவம்தான், அதிக உயரம் கூட இல்லை…. கூட்டத்தில் இருந்தால் சட்டென்று தனி ஆளாய்த் தெரிய மாட்டார்… அப்படியே சாதாரண மக்களுடன் ஒன்றரக் கலந்து விடுவார். நன்று மழித்த முகம்… நெற்றியல் ஒரு சிறிய விபூதிக் கீற்று.

சில்லென்று இருந்த அந்த விசாலமான அறையில் ஒரு பெரிய மேஜையின் முன் கம்பீரமாக(?) அமர்ந்திருந்தார் … மேஜை சுத்தமாக இருந்தது… ஒரு தொலைபேசி, ஒரு சில கோப்புகள். அவ்வளவே. முப்பத்தைந்து வயதில் அந்த பெரிய வங்கியின் உயர் அதிகாரி என்று யாராவது அந்த அறையின் வெளியே அவரைப் பார்த்துச் சொன்னால் நிச்சயம் நம்ப மாட்டார்கள்..

அவர் தொலைபேசியை கையில் எடுத்து தனது கீழ் பணிபுரியும் மேல்நிலை அதிகாரியை ஒரு குறிப்பிட்ட கோப்பைக் கொண்டுவருமாறு பணித்தார்… தகவல் பெற்ற அதிகாரிக்கு கலக்கம்… இது சில நாட்களாக நமக்கு தொல்லை கொடுக்கும் கணக்காயிற்றே … இதைக் கேட்கிறாரே … என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறாரோ .. அவருக்கு சற்று கலக்கமாகத்தான் இருந்தது…

வேலாயுதத்திடம் சக ஊழியர்களுக்கு ஒரு பயம் கலந்த மரியாதை உண்டு… முப்பத்தைந்து வயதிலும் திருமணம் செய்து கொள்ளாதவர்… தனிக் கட்டை.. தாய் தந்தை கிடையாது…. நெருங்கிய உறவினர்கள் யாரும் இருப்பதாகவும் தெரியவில்லை…. மெத்தப் படித்த மதிநுட்பம் மிகுந்தவர்… வேலையில் எப்பொழுதும் ஒரு துல்லியம், நேர்மை தவறாதவர் என்ற பெயர் உண்டு… தவறு என்றால் யாரையும் தட்டிக் கேட்கத் தயங்காதவர்…. அதே சமயம் ஏழை எளியவர்க்கு உதவுவதில் அதிக ஆர்வம் காட்டுபவர்….

கோப்புடன் அவர்முன் போய் நின்றார்…

புரட்டிப் பார்த்தவர்முன் அதிகாரி நின்றுகொண்டிருக்க, உட்காரச் சொன்னார்… கொஞ்சம் சுருக்கமாக விளக்கம் கேட்க, அதிகாரி,

“‘வேல்கை’ என்ற நிறுவனத்திற்கு ரூபாய் 500 கோடி கடன் கொடுத்துள்ளோம்… கொடுத்த நாளிலிருந்து வட்டியும் வரவில்லை கடனும் திருப்பிக் கட்டவில்லை…. இப்பொழுது ஆறு மாதமாக எந்தத் தகவலும் இல்லை…. வங்கி அனுப்பும் கடிதங்களுக்கு எந்த பதிலும் இல்லை… கடந்த ஒரு மாதமாக நாம் அனுப்பும் கடிதங்கள் திரும்பி வருகின்றன…. தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை….”

“நேரில் சென்று பார்த்தீர்களா….?”

“இல்லை அடுத்த வாரம்தான் சென்று பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்…..”

வேலாயுதத்துக்கு உடனே கோபம் மூக்குக்குமேல் வர

“ஏன் இவ்வளவு மெத்தனமாக இருக்கீங்க….? 500 கோடி உங்களுக்கு அவ்வளவு ஏளனமாகத் தெரிகிறதா….? இந்தக் கோப்பில் நீங்கள் எழுதியுள்ள கடிதங்கள் மட்டும்தான் இருக்கிறது..? எந்த ஆதாரத்தில் கடன் கொடுத்தீர்கள்….? எனக்கு எல்லாம் தெரிந்தாக வேண்டும்….” என்ற சராமாறிக் கேள்விகளுக்குப் பின் “அந்த கடன் கொடுத்த அணைத்து ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு இன்னும் அரைமணியில் இங்கு வரவேண்டும்….” என்று கத்தினார்….

வேலாயுதம் இவ்வளவு கோபப்பட்டு அவர் பார்த்ததில்லை… எங்கே தன் வேலைக்கு வேட்டு வைத்து விடுவாரோ என்ற பயம் தொற்றிக் கொண்டது… உடன் ஒரு சக ஊழியரையும் அழைத்துக் கொண்டு ஆவண அறைக்குச் சென்றார்… பொறுமையாக அனைத்து ஆவணங்களையும் சேகரித்து வேலாயுதத்தின் அறைக்கு வந்தார். பவ்வியமாக வேலாயுதம் முன் வைத்து, அவர் அமரச் சொல்ல அமர்ந்தார். வேலாயுதம் நிதானமாக அனைத்து ஆவணங்களையும் புரட்டிப் பார்த்தார். ஒரு நாற்பத்தைந்து நிமிட ஆய்வுக்குப் பின் தலை நிமிர்ந்தவர், “இதைத் தவிர வேறு ஏதேனும் ஆவணங்கள் உண்டா…?” என வினவ, “இல்லை…..” என்றார் அதிகாரி.

வேலாயுதம் கண்களில் ஏறிய சிவப்பு இன்னும் குறையவில்லை…. கடுமையாக “நாளை மதியம் மூன்று மணிக்கு இது சம்பந்தமான அனைத்து நபர்களும் (விடுப்பில் இருந்தாலும்) நமது சட்ட ஆலோசகருடன் என்னைச் சந்திக்க வேண்டும். உடனே அனைவருக்கும் தகவல் அனுப்புங்கள்…. மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று உத்தரவு பிறப்பித்து அவரை போகச்சொன்னார்.. ஆவணங்கள் தன்னிடம் இருக்கட்டும் என்று கூறிவிட்டார்…

பரபரப்பான அதிகாரி… சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகவல் தெரிவித்து, சட்ட ஆலோசகரையும் வருமாறு கேட்டுக்கொண்டார்…. அடுத்த நாள் காலை அலுவலகம் ஆரம்பிக்கும் பொழுது வேலாயுதத்தைப் பார்த்து மூன்று மணி மீட்டிங்குக்கு ஏற்ப்பாடு செய்தாகிவிட்டது என்ற தகவலைக் கூற, வேலாயுதம் மவுனமாக தலை ஆட்டினார் …

மதியம் மணி மூன்று… ஐந்து அதிகாரிகளும், சட்ட ஆலோசகரும் வேலாயுதத்தின் அலுவலக அறைக் கதவை மெல்ல தட்ட உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை…. மெல்ல ஒருவர் உள்ளே எட்டிப் பார்க்க உள்ளே வேலாயுதம் இல்லை…. எங்காவது அருகில் சென்றிருப்பார் என்று காத்திருந்தனர்… ஒரு முப்பது நிமிடம் கழித்தும் வேலாயுதம் வரவில்லை… அவர் வரும் வரை அவர் அறையில் அமர்ந்திருக்கலாம் என்று அந்த அறுவரும் வேலாயுதம் அறையில் சென்று அமர்ந்தனர்… இன்னும் ஒரு அரை மணி செல்ல ஒருவர், வேலாயுதத்துக்குப் போன் செய்து பார்க்கலாம் என்று கூற…

“நீங்கள் தொடர்பு கொள்ள முயலும் தொலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது…. சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்…”

மேலும் ஒரு அரை மணி நேரம் கழித்தும் இதே நிலை… மணி ஐந்துவரை காத்திருந்தவர்கள் விசாரிக்க, பகல் உணவு நேரத்திற்குப்பின் அவரை யாரும் பார்க்க வில்லை என்றனர்….

வேலாயுதம் மேஜை எப்பொழுதும்போல் சுத்தமாக இருந்தது.. ‘வேல்கை’ நிறுவனத்தின் கோப்புகள் மட்டும் காணவில்லை….. அந்த ஆறு முகங்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் குழம்பினர்..

அடுத்த நாளும், அதற்கு அடுத்த நாளும் வேலாயுதம் பற்றி எந்தத் தகவலும் இல்லை….

ஒரு வருடம் ஆகிறது….

நீங்கள் அவனை (இன்னும் என்ன மரியாதை..) எங்காவது பார்த்தால் கொஞ்சம் தகவல் சொல்லுங்களேன்… கையில் எந்த ஆதாரமும் இல்லாததால் வங்கி இதைப் பற்றி மூச்சு விடுவதில்லை…

அங்க அடையாளங்கள் ஆரம்பத்திலேயே கொடுத்திருக்கிறேன்…. வேலாயுதம் கையில் வேல் இருக்காது……!

Print Friendly, PDF & Email

2 thoughts on “வேலாயுதம்

  1. எனக்கு ஓய்வு பெறும் சமயம் இப்படி ஒரு மனிதர் அதிகாரியாக இருந்தார். கதையைப் படித்ததும் அந்த டுபாக்கூர் நினைவு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *