கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை நாடகம்
கதைப்பதிவு: June 11, 2022
பார்வையிட்டோர்: 19,673 
 

(1960ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குறிப்பு: ‘இளங்கோ’ நாடகம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரம் இயற்றிய ஆசிரியரைப் பற்றிய கற்பனை.

காட்சி : 1

[ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகளுக்குமுன் ; சேர நாட்டில் வஞ்சிமா நகரை அடுத்த பூங்கா ; துறவிகள் சிலர் தம்முள் பேசிக் கொள்கிறார்கள்.]

துறவி-1 : அடிகள் இந்த ஊருக்குப் புதியவராக வருகிறீர்களோ ?

துறவி-2 : இல்லை. முன்பு ஒருமுறை வந்தது உண்டு.

துறவி-1 : குணவாயில்கோட்டம் எங்கே இருக்கிறது? அடிகளுக்குத் தெரியுமோ?

துறவி-2 : அடிகள் போய்ப் பார்த்ததில்லையோ?

துறவி-1 : இல்லை. யான் புதியவன்.

துறவி-3 : (அமைதியாய்க் கண்ணை மூடிக்கொண்டிருந்தவர் கண் விழித்துப் பேசுகிறார்.) அதோ அந்த ஊருணியின் பக்க மாகப் போய் அங்கே தோன்றும் தென்னந் தோப்பைக் கடந்து சாலை வழியாகச் சிறிது தொலைவு சென்றால் குணவாயில் கோட்டம் தெரியும். அங்கே போய்ப் பார்க்க வேண்டியது என்ன உள்ளது ? வீண் வேலை.

துறவி-1: கோட்டத்தைப் பார்க்க அல்ல ; இளங்கோவடிகளைப் பார்த்துவர ; தெரிந்துகொள்ளலாம் அல்லவா?

துறவி-3 : துறவிகள் அங்கே போகாமல் இருப்பதே நல்லது

துறவி-2 : என்ன அடிகள் அப்படிச் சொல்கிறீர்களே ! இளங்கோவடிகள் நாடு அறிந்த துறவி; அரசபதவியை உதறியவர். அவர் வாழும் கோட்டம் -!

(அப்போது இளந்துறவி ஒருவர் அங்கே வந்து திடுக்கிட்டு நின்று, ஒரு புறமாக ஒதுங்கியபடியே அவர்கள் அறியாமல் கேட்டுக்கொண் டிருக்கிருர்.)

துறவி-3 : எல்லாம் வெளிமயக்கே ; அரச குடும்பத்தில் ஒரு பூனை துறவு பூண்டாலும் ஊர் அறியும் ; நாடு அறியும். யானும் நீங்களும் இவரும் துறவு பூண்டால் கேட்பார் இல்லை; போற்றுவார் இல்லை.

துறவி-1 : அதனால் என்ன? துறவின் பெருமை எவரால் விளங்கினால் என்ன?

துறவி-3 : துறவின் பெருமை விளங்குகிறதா? அவராலேயா? அவர் எழுதிய அந்தக் காவியத்தை அடிகள் படித்தது உண்டோ?

துறவி-1 : சிலப்பதிகாரம் தானே?

துறவி-2 : யானும் படித்திருக்கிறேன்.

துறவி-3 : அதில் துறவறத்தின் பெருமையா விளங்குகிறது? சொல்லுங்கள்.

துறவி-1: இல்லறத்தின் பெருமையும் விளங்குகிறது.

துறவி-3 : அப்படிச் சொல்லாதீர்கள். இல்லறத்தின் பெருமைதான் விளங்குகிறது எனச் சொல்லுங்கள். அது தான் பொருந்தும்.

துறவி-2 : இறுதியில் கோவலன் தந்தை, கண்ணகி தந்தை, மாதவி, மணிமேகலை எல்லோரும் துறவு பூண்கிறார்களே.

துறவி -3: இறுதியில் மட்டும் தான். அவ்வளவு தான். அதுவும் எதற்காக? இல்லையேல் அந்த நூலை நாடு போற் அது என்று அஞ்சி அவ்வாறு –

துறவி -1: ஏன்? புகார்க் காண்டத்திலும் மதுரைக் காண்டத்திலும் கவுந்தியடிகளை அமைத்து-.

துறவி -3 : கவுந்தியடிகளையா? இல்லறத்தைப் போற்றுவதற்காக ஒரு துறவியை அமைத்துள்ளார். நினைக்கவும் நெஞ்சம் நாணுகிறது. பேசவும் வாய் கூசுகிறது. “இக் கற்புடைத் தெய்வம் அல்லது வேறு பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்” என்று கவுந்தியடிகள் ஒரு துறவி – தம் வாயால் கூறியதாக எழுதியுள்ளார். அது ஒரு காவியமா? துறவிகள் படிக்கத் தகுந்த நூலா? அதை எழுதியவர் ஒரு துறவியா? அவர் வாழும் இடம் ஒரு பள்ளியா என்று கேட்கின்றேன். தவறு இருந்தால் சொல்லுங்கள்.

துறவி -1: இல்லறத்தில் ஒரு பெண் கற்புடையவளாக வாழ்ந்து விளங்கினால், அதைப் போற்றுவதில் தவறு என்ன?

துறவி – 3 : அதைப் போற்றுவதற்கு எத்தனையோ இல்லறத்தார் இருக்கின்றார்கள். ஒரு துறவிக்கு அதைப் பற்றிக் கவலை என்ன? மனத்தில் பற்று நீங்காத துறவியாக இருந்தால் தான் அப்படி எழுத முடியும். அதனால் தான் வெளிமயக்கு என்றேன்.

துறவி-2 : பற்று எல்லோருக்கும் நீங்கிவிடுமா? அது ஒரு சிலரால்தான் முடியும்.

துறவி -3 : போகட்டும். இன்னொன்று பாருங்கள். நாம் எல்லோரும் சமண சமயத்தவர் தானே?

துறவி-2: ஆம் அடிகளே!

துறவி-3 : நம் சமயத்தில்- அருகன் நெறியில் நம் உள்ளம் அழுந்தியிருக்க வேண்டுமே அல்லாமல், மற்றச் சமயங்களில் மனம் பற்றலாமோ?

துறவி.1: நம் சமயத்தில்-சமண சமயத்தில்-மனம் அழுந்தியிருப்பதும் ஒரு பற்றுத் தானே? சமயப் பற்று நீங்கா விட்டால் முற்றத் துறக்கும் துறவு ஆகுமோ?

(ஒளிந்திருக்கும் இளந்துறவியின் முகத்தில் மகிழ்ச்சி.)

துறவி -3 : அடிகள்! நீங்கள் இவ்வாறு கூறுவது எனக்கு. வெறுப்பாக உள்ளது ! இது ஒரு பேச்சா?

துறவி-1 : நமக்கு ஏன் விருப்பும் வெறுப்பும்? நடுநிலையாக நின்று பற்றற்று ஆய்ந்து உண்மை காண்போம்.

துறவி-3 : அது தான் நம் சமயத்தின் சிறப்பு. அதனால் தான் நம் சமயத்தின் உயர்வு கண்டவர்கள் மற்றச் சமயங்களை மதிப்பதில்லை.

துறவி-1 : மற்றச் சமயத்தவர்களும் இதே காரணம் தான் கூறுகிறார்கள்.

துறவி-3 : அவர்கள் அறியாமையால் கூறுகிறார்கள். யான் அனுபவத்தால் சொல்கிறேன், நம்புங்கள். யான் சைவனாகப் பிறந்தவன் ; பௌத்த நெறியில் உழன்றவன் ; உண்மை உணர்ந்தது சமண சமயத்தில் தான். அதனால் தான் துணிந்து சொல்ல முடிகிறது.

துறவி-2 : (ஊக்கத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்து) அனுபவத்தால் பெறும் தெளிவுக்கு நிகர் இல்லை அடிகள் !

துறவி-3 : சிலப்பதிகாரத்தில் போற்றப்படாத சமயம் எது சொல்லுங்கள்.

துறவி-1 : ஆம்! எல்லாவற்றையும் போற்றி எழுதியுள்ளார்.

துறவி-3 : ஒன்றும் அறியாதவர்களே எல்லாவற்றையும் போற்றுவார்கள்.

துறவி -1: எல்லாம் அறிந்தவர்கள் ஒன்றையும் தூற்றமாட்டார்கள் என்று நேற்று ஒருவர் சொல்லிச் சென்றார்.

துறவி-3 : யார் அவன் ? (கடுகடுப்போடு)

துறவி-1: அவன் ஓர் அறிவிலி.

துறவி -3 : நன்றாய்ச் சொன்னீர்கள் ! அடிகளே! அது தான் உண்மை. இந்த உரைகல்லை வைத்துக்கொண்டு அந்தச் சிலப்பதிகாரத்தை மதிப்பிட்டுப் பாருங்கள். பொன் அல்ல, போலி எல்லாம் என்பது தெரியும். துறவி – 1 : பொன், உரைகல், மதிப்பு, அனுபவம்! பற்றற்ற உண்மை அனுபவம்!

துறவி -3 : அழகுள்ள நங்கை தன் இளமை அழகை, முல்லை முறுவலை, இதழமுதை, பொன்மேனியை ஒருவனுக்குத் தான் நல்க விரும்புவாள். தெளிந்த ஞானியின் மனமும் ஒரு நெறியில் தான் செல்லும்!

துறவி -1: நல்ல உவமை! தெளிவான உவமை! ஞானியின் மனம்! அனுபவ உண்மை ! துறவி -3 : சைவம், வைணவம், வைதிகம், பௌத்தம் எல்லாவற்றையும் போற்றி நூல் எழுதுவதற்கு ஒரு சமணத்துறவி தோன்ற வேண்டுமா? துறவி – 2 : செங்குட்டுவன் மனத்தை மாற்றி நெறிப்படுத்தச் சமண சமயத் தம்பியால் முடியவில்லை.

துறவி -3 : நல்ல வேளையில் நினைவூட்டினீர்கள். மாடலன் என்னும் வைதிக சமயத்தான் வேந்தனுக்குக் குரு. அவன் வேள்வி செய்யச் சொல்கிறான். அரசன் கேட் கின்றான். இதைப் பெருமைப்படுத்தி எழுதுகின்றார் துறவி – சமண சமயத் துறவி – அந்த வேந்தனின் தம்பி. சமணர் கனவிலும் வேள்வியைக் கருதலாமோ?

துறவி-2: ஏன்? பத்தினி வழிபாடும் அத்தகையது தானே?

துறவி – 3 : ஆம்! அதற்கு என்ன ஐயம்? நம் நெறியில் பத்தினி வழிபாட்டுக்கும் இடம் இல்லை ; அதைப் புகழ்ந்து காவியம் எழுதுவதற்கும் இடம் இல்லை.

துறவி-2 : அடிகளைப் போல் உண்மை தெரிந்தவர்கள் உலகம் அறிய எடுத்துரைக்க வேண்டும்.

துறவி-3 : யாரிடம் உரைப்பது? அதற்கு ஒரு செல்வாக்கு வேண்டும். அப்போது தான் சொல்லும் சொல்லுக்கு மதிப்பு உண்டு.

துறவி – 2: உண்மை தான் அடிகள் ! மதிப்பு இல்லாதபோது வாய் திறவாமல் இருப்பதே நல்லது. (ஒளிந்திருந்த இளந்துறவி ஒன்றும் அறியாதவர் போல் அவர்களை அணுகிவருகிறார்).

துறவி -3 : வருக அடிகாள்! வணக்கம். இளந்துறவி : வணக்கம் அடிகாள்!

துறவி-3 : எங்கே இப்பக்கமாக? இளந்துறவி : வாளா வந்தேன். வேலை ஒன்றும் இல்லை.

துறவி -3 : (மற்ற இருவரையும் சுட்டிக் காட்டி) அடிகள்! இவரும் அவரும் குணவாயில் கோட்டம் பார்க்க வேண்டும் என்று என்னிடம் பேசிக்கொண் டிருந்தார் கள். நல்ல இடம், தவறாமல் போய்ப் பார்க்க வேண்டும் என்று யானும் சொல்லிக்கொண்டிருந்தேன். (துறவி 1, 2- இருவரையும் நோக்கி) இவர் குணவாயில் கோட் டத்தில் உள்ளவர். இளங்கோவடிகளின் சீடர். மிக நல்லவர். இவருடன் சென்றால் தக்க உதவிகள் புரிவார்.

துறவி 1, 2 இருவரும் : (இளந்துறவியை நோக்கி) வணக்கம் அடிகாள்! இளந்துறவி : வணக்கம் அடிகாள்!

துறவி -3 : (இளந்துறவியை நோக்கி கோட்டத்தில் அடிகள் நலமாக இருக்கிறார்களா? அரண்மனைக்கு அடிக்கடி போய் வருகிறார்களா? இளந்துறவி : அடிக்கடி போவதில்லை. வேந்தர் அழைத்தால் அங்கே போகிறார்.

துறவி-3 : அடிகளுக்கு என் வணக்கம் சொல்லுங்கள். நாளை மறுநாள் நேரில் வந்து வணங்குவேன்.

இளந்துறவி : அவ்வாறே சொல்வேன். எல்லோருக்கும் வணக்கம். (போகிறார்).

(துறவிகள் மூவுரும் ஒருவரை ஒருவர் திகைப்பும் குழப்பமு மாகப் பார்க்கிறார்கள்).

காட்சி : 2

[குணவாயில் கோட்டம் ; இளங்கோவடிகள் மலர்ந்த முகத்துடன் அமைதியாக எதையோ எண்ணிக்கொண்டிருக்கிறார் ; அவருடைய சீடரான இளந்துறவி அவரை அணுகி எதிரில் நிற்கிறார்.]

இளங்கோ : (இளந்துறவி நிற்பதைக் கண்டு) என்ன ! ஏதாவது சொல்ல வேண்டுமா?

இளந்துறவி : ஆமாம் அடிகள்!

இளங்கோ : என்ன அவ்வளவு புதுமையான செய்தி?

இளந்துறவி : ஊருணிக்குப் பக்கத்தில் உள்ள பூங்காவில் ஐந்தவித்தானடிகளையும் புதிய துறவிகள் வேறு இரு வரையும் கண்டேன். அவர்கள் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

இளங்கோ : ஏதாவது புதிய உண்மைகள், நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை இருந்தால் சொல்.

இளந்துறவி : ஐந்தவித்தானடிகள் உங்களைப் பழித்தும் குறை கூறியும் பேசினார்.

இளங்கோ : அவ்வளவு தானே? கவலை வேண்டா.

இளந்துறவி : துறவியாக இருந்தும் நீங்கள் சிலப்பதிகாரத்தில் இல்லறத்தையே புகழ்ந்திருப்பதாகவும், சமண சமயப் பற்று இல்லாமல் மற்றச் சமயங்களையும் போற்றி எழுதியிருப்பதாகவும் கூறினார். சமணர்க்கு ஆகாத வேள்வியை மாடலன்வாயிலாகப் போற்றி உரைத்திருப்பதாகவும் பழித்தார்.

இளங்கோ : விடு விடு, இது இயற்கை. குறைகாண்பதும் குறைகூறுவதும் மனத்தின் இயல்பு. அவர்களை வெறுக்க வேண்டா; எதிர்க்கவும் வேண்டா. நாளடைவில் திருந்துவார்கள். வாளா விடுக. எதிர்த்தாலும் வெறுத்தாலும், அவர்கள் திருந்துவதற்கு இடையூறு ஆகும்; நம் முன்னேற்றத்திற்கும் தடை ஆகும்.

(அப்போது அரண்மனை ஏவலாள் ஒருவன் வணக்கம் கூறித் திருமுகம் ஒன்றைக் கொண்டுவந்து இளந்துறவியிடம் நீட்டுகிறான். அவர் அதை வாங்கிப் பார்த்து இளங்கோ வடிகளிடம் கொடுக்கிறார். அவர் அதைப் பிரித்துப் படித்துப்பார்த்துப் புன்முறுவலுடன் ஏவலாளைப் பார்த்துச் சொல்கிறார்)

இளங்கோ : மாலையில் யான் வருவ தாக வேந்தரிடம் சொல்.

ஏவலாள் : வணக்கம் அடிகளே! (திரும்பிப் போகிறான்.)

இளந்துறவி : அப்படியானால் உலகம் உண்மை உணர்வதற்கு வழி இல்லாமல் போகுமே.

இளங்கோ : வெறுப்பதாலும் எதிர்ப்பதாலும் உலகம் உண்மையை உணர்ந்துகொள்ளுமா? அவற்றால் மக்களிடையே பிளவுகள் பிரிவுகள் உண்டாகலாம் ; அவ்வளவு தான்.

இளந்துறவி : அடிகளே ! என் மனத்துக்கு அமைதி கூற முடியவில்லையே.

இளங்கோ : எது பற்றி?

இளந்துறவி : நீங்கள் இல்லறத்தைப் புகழ்ந்ததற்கும் மற்றச் சமயங்களைப் போற்றிய தற்கும் காரணம் –

இளங்கோ : உனக்கு ஐயம் எழுந்தால் கேள், சொல்கிறேன். அவர்களை எதிர்ப்பதற்கு என்றும் வெறுப்பதற்கு, என்றும் கேட்காதே. எதிர்த்துச் செல்வது எப்போதும் எளிமை. இயைந்து செல்வதே அருமை. செயற்கு

அரிய செய்யப் பழகு.. இளந்துறவி : அவ்வாறே அடிகள்! இளங்கோ : இல்லறம் துறவறம் இரண்டும் உலகிற்கு வேண்டியவை. எந்தக் காலத்திலும் உலகில் இல் லறத்தை ஒழிக்க முடியாது. அதை நோக்கிக் கண்ணை மூடிக்கொள்வதால் பயன் இல்லை ; அது கோழைத் தன்மை. துறவியும் இல்லறத்தார்க்கு வழிகாட்டி வாழ்விப்பதே கடமை. இளந்துறவி : சமண சமயப் பற்று -? இளங்கோ : தொடக்கத்தில் பற்று வேண்டியது தான். அப்போது மற்றச் சமயங்கள் பொய்யாய்ப் போலியாய்த் தோன்றும். யானும் தொடக்கத்தில் மற்றச் சமயத் தாரைப் பழித்து வாழ்ந்தேன் ; அண்ணனாகிய வேந் தரையும் யான் வெறுத்திருந்த காலம் உண்டு. ஆனால் உண்மை தெளியத் தெளிய, சமய வேற்றுமைகள் குறைந்து குறைந்து ஒற்றுமையுணர்வே வளர்கிறது. சமய உண்மைகள் வேறு ; சமயச் சடங்குகள் வேறு. உண்மைகளை உணர்ந்து ஒழுகுவோமானால், சமயப் பொதுமையே விளங்கும். இல்லையானால் சமயச் சடங்குகளால் வேறுபாடுகளே மிகுதியாகப் புலப்படும். சமயப் பொதுமையை மக்களிடையே பரப்புவதே நம் கடமை. இல்லையானால், நாளடைவில் கண்மூடி வழக் கங்கள் பெருகி, நெறிகளில் மாசு படிந்து, நாத்திகம் வளர்ந்துவிடும். அந்த நிலை வந்தால், இன்று ஒன்றை ஒன்று பழிக்கத் தொடங்கும் சமயங்கள் எல்லாம் ஒரு சேர எள்ளி நகையாடப்படும். சிலர் இன்று உடனே பெறும் பயனை மட்டும் நாடுகிறார்கள். என் மனம் நாளை நின்று விளையும் பயனையே நாடுகிறது. அதனால் தான் காவியத்திலும் பொதுமை திகழுமாறு எழுதினேன்.

இளந்துறவி : அவர்களின் பேச்சைக் கேட்டு யான் வருந்தினேன், உங்கள் உள்ளம் வருந்தவில்லையே!

இளங்கோ : எனக்கும் வருத்தம் உண்டு. ஆனால் அவர்கள் மேல் வருத்தம் இல்லை. அவர்கள் மேல் இரக்கம் தான் தோன்றுகிறது.

இளந்துறவி : வருத்தம் என்ன அடிகளே!

இளங்கோ : திருவள்ளுவர் போன்ற பெருமக்களையும் உன்னையும் என்னையும் வளர்த்துப் பண்படுத்தும் தாய் மொழியாகிய தமிழையும் இந்தத் தமிழ் நாட்டையும் நினைத்துத் தான் வருந்துகிறேன்.

இளந்துறவி : விளங்கவில்லை அடிகளே!

இளங்கோ : ஒரு நாட்டில் வழிகாட்டும் அறிஞர்களிடமும் தலைவர்களிடமும் பொறாமை வாழ்ந்தால், அந்த நாடு வாழாது. ஐந்தவித்தானடிகள் போன்ற அறிஞர் களிடமும் தமிழகத்தை ஆளும் தலைவர்களிடமும் பொறாமை காணும்போதெல்லாம் எனக்கு அந்த வருத் தம் தான் தோன்றுகிறது. நம்மை எல்லாம் வளர்த் துப் பண்படுத்திவரும் தமிழ்மொழியும் தமிழகமும் எப்படி ஓங்கி வாழப் போகின்றன என்று கவலைப்படு கிறேன். பொறாமை ஒரு நச்சுப் பாம்பு. அதன் நஞ்சு ஏறினால் நாடும் மொழியும் நலிந்து போகுமே!

காட்சி : 3

[வஞ்சிமா நகரில் வெள்ளிமாடம் என்னும் அரண்மனையின் உட்புறம் ; ஏவலாள் நிற்கிறான். சிலப்பதிகார ஏட்டுச்சுவடி ஒருபுறம் உள்ளது. வேறு பல ஏட்டுச்சுவடிகளும் உள்ளன. உள்ளே எழுபது வயதுள்ள சேரன் செங்குட்டுவன் மெல்ல உலவுகிறான்.]

ஏவலாள் : வாழ்க எம் வேந்தே!

சேரன் : என்ன செய்தி?

ஏவலாள் : அடிகள் வந்துள்ளார்.

சேரன் : (முகமலர்ந்து) வரச் சொல்.

(ஏவலாள் போகிறான். போன தும் இளங்கோவடிகள் உள்ளே வருகிறார்.)

இளங்கோ : வணக்கம் அண்ணா !

சேரன் : வா தம்பி! இரு.

இளங்கோ : அண்ணி நலம் தானே ?

சேரன் : நலம்தான். நேற்று முதல் ஓய்வாக இருக்கிறேன். ஏதாவது பேசிக்கொண்டிருக்கலாம் என்று அழைத்தேன். (இருவரும் எதிர் எதிரே அமைந்த கட்டில்களில் இருக்கின்றனர்.) நேற்றிரவு வேண்மாளும்யானுமாகச் சிலப்பதிகாரத்தில் வஞ்சிக்காண்டத்தைப் படித்தோம்.

இளங்கோ : ஏன் அண்ணா ?

சேரன் : பொழுதுபோக்காகப் படித்தோம்.

இளங்கோ : ஏதாவது குறை தெரிந்ததா அண்ணா?

சேரன் : குற்றம் குறை காணவில்லை. கால்கோட் காதையில் (சிலப்பதிகார ஏட்டுச்சுவடியில் ஓர் இடம் தேடிக் கண்டு) “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய, இது நீ கருதினை ஆயின் ஏற்பவர், முதுநீர் உலகில் முழுவதும் இல்லை” என்று எழுதியிருக்கின்றாய்.

இளங்கோ : வில்லவன் கோதை உங்களுக்குச் சொல்வதாக.

சேரன் : ஆமாம். இருந்தாலும் உன் கருத்துத்தானே? உன் காவியத்தில் வரும் வில்லவன் கோதை நீதானே?

இளங்கோ : (புன்முறுவலுடன்) ஒருவகையில் உண்மை தான் அண்ணா !

சேரன் : அந்த மூன்று அடிகளுக்கு என்ன பொருள்?

இளங்கோ : பொருள் வெளிப்படைதானே அண்ணா! மயக்கத்திற்கு இடம் இல்லையே.

சேரன் : உலகத்தையே தமிழ்நாடாக ஆக்கக் கருதினால் அது முடியும் என்று எழுதியிருக்கிறாய். தமிழ்நாடு ஆக்குவது என்றால் எப்படி?

இளங்கோ : நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள் அண்ணா ?

சேரன் : உலகத்தை வென்று என் ஆட்சிக்கு உட்படுத்தல் என்று கருதினேன். ஆனால் –

இளங்கோ : அண்ணி என்ன சொன்னார் ?

சேரன் : உலகத்தை வென்று, தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் அங்கெல்லாம் பரப்பி, மற்ற நாட்டு மக்களையும் தமிழர்களாக்கி, தமிழ் நாட்டின் எல்லையை விரிவடையச் செய்தல் என்று வேண்மாள் கூறினாள்.

இளங்கோ : அண்ணியின் கருத்தே அழகான பொருள் அண்ணா !

சேரன் : அது முடியுமா?

இளங்கோ : நீங்கள் அவ்வாறு கருதினால், எதிர்ப்பவர் உலகம் முழுவதிலும் –

சேரன் : இல்லை என்று தான் எழுதியிருக்கிறாய். ஆனால் வேண்மாள் சொன்ன பொருள் வெறுங் கனவாக முடிவது தான். நான் வென்று ஆள்வது என்றால் அது முடியும் ; தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் பரப்பித் தமிழ்நாடு ஆக்குவது முடியுமா ?

இளங்கோ : முடியும் அண்ணா . செய்யக்கூடியது தான். இது வரையில் சேர சோழ பாண்டிய மரபில் எந்தத் தமிழ் வேந்தரும் செய்யாத முயற்சி இது. செய்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். உடனடியாக வெற்றி பெறா விட்டாலும், படிப்படியாகத் தலைமுறை தலைமுறையாக மெல்ல மெல்லவாவது வெற்றி பெற்றிருக்கலாம்.

சேரன் : அப்படியா?

இளங்கோ : ஏன் முடியாது அண்ணா ! கங்கைக் கரையில் வாகை சூடினீர்கள்; வானளாவும் புகழ்பெற்றீர்கள். வெற்றி முழக்கத்தோடு திரும்பினீர்கள். இது சில நாட்களின் ஆரவாரமாக முடிந்தது. இதற்கு முன்பும் கரிகால் சோழன் முதலானவரும் நம் தந்தையும் இவ் வாறு வெற்றிபெற்றுத் திரும்பினார்கள். அந்த வெற்றி நிகழ்ச்சிகள் எல்லாம் பழங்கதையாய்ப் போயின. உங்கள் வெற்றியும் அவ்வாறு பழங்கதையாய்ப் போய் விடுமே! சேரன் : என்ன செய்திருக்க வேண்டும் ? இளங்கோ : அங்கே சில தமிழ்க் குடும்பங்களைக் குடியேற்றியிருக்கவேண்டும். அந்தக் குடும்பங்கள் கங்கைக் கரையில் உள்ள மக்களோடு அன்பாகப் பழகி அவர் களுக்குத் தலைமை தாங்குமாறு செய்திருக்கவேண்டும்; போர்க்களத்தில் தலைமை தாங்குவது நிலையில்லாதது; சில நாள் செயல் அது. வாழ்க்கைக் களத்தில் தலைமை தாங்குவதற்கு வாளும் வேலும் வேண்டியதில்லை ; அறிவும் திறனும் வேண்டும். அறிவும் திறனும் உள்ள சில குடும்பங்களை அங்கே குடியேற்றினால், அவர்கள் அங்கே தமிழைப் பரப்ப முடியும் ; தமிழ்க் கலையைப் பரப்ப முடியும் ; தமிழ்ப் பண்பாட்டைப் பரப்ப முடியும் தமிழ் இலக்கியத்தைப் பரப்ப முடியும். இவைகள் எல்லாம் பரவினால் அங்கு வாழும் மக்கள் நாள டைவில் தமிழ்மக்களாக மாறிவிடுவார்கள். தமிழ் நாட்டின் எல்லை இமயம் முதல் குமரி வரையில் என்று சொல்லப்படுவதாகும். அதைத்தான் ‘இமிழ்கடல்வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய’ என்று குறிப்பிட்டேன்.

சேரன் : இதுவரையில் இந்த முயற்சியை எந்த வேந்தரும் செய்ததாகக் காணோம்.

இளங்கோ : ஒருவரும் செய்யவில்லை. போர் செய்வது. வாகை மாலை சூடுவது, மறுநாள் திரும்பிவிடுவது இவ்வளவு தான் நம் முன்னோர் செய்தவை எல்லாம்.

சேரன் : (சிறிது பொறுத்து) ஆம் ; ஆம். நிலையான தொண்டு அல்ல; அதனால் தான் அடுத்த சில ஆண்டுகளுக்குப் பிறகு கனகவிசயரைப் போல் தமிழரை எள்ளி நகை யாடும் மனப்பான்மை வடநாட்டார்க்கு ஏற்படுகிறது. நீ சொல்வது இப்போது தெளிவாக விளங்குகிறது. நம் முன்னோர் ஏன் அவ்வாறு செய்யவில்லை ? (தலைகுனிந்து எண்ணுகிறான்.)

இளங்கோ : போர் நிகழ்த்தித் தலைகள் உருளச் செய்தல் சில நாளில் முடியும் வேலை. மொழியைக் கற்பித்துக் கலைகள் பரவச் செய்தல் பல ஆண்டுகள் செய்யத் தக்க தொண்டு. உணர்ச்சி மிக்க வேந்தர்கள் உடனே விளையும் சிறு பயனை நாடினார்கள்; நின்று விளையும் பெரும் பயனை நாடவில்லை.

சேரன் : (சோர்வோடு) இப்போது வருந்துகிறேன். யானும் அத்தகைய நிலைத்த பெரும் பயனை நாடவில்லையே .

இளங்கோ : வருந்த வேண்டா அண்ணா!

சேரன் : கங்கைக் கரையில், மலையடிவாரங்களில் தமிழ் பேசும் தமிழ்மக்கள் பலர் இன்னும் வாழ்கின்றார்கள். அவர்கள் திருந்தி நாகரிகமாக நம் போல் வாழ்வதற் காவது முயற்சி செய்திருக்கலாம். அதுவும் செய்யத் தவறினேன். எனக்கு வயதும் ஆயிற்று. இனி ஒரு

முறை படையெடுப்பது எங்கே? இளங்கோ : இத்தகைய நிலைத்த தொண்டு செய்வதற்கு

நல்ல வாய்ப்பு இதுதான். ஏன் எனில், கங்கைக் கரையில் இன்னும் நிலையாக ஒரு மொழியும் கலையும் வேரூன்றவில்லை. அதனால் தமிழ்மொழியையும் கலை யையும் இப்போது பரப்ப முடியும் இன்னும் சில ஆண்டுகள் கழிந்தால், அங்கே அந்நாட்டு மக்களுக்குள் இயற்கையாகப் புது மொழியும் கலையும் தோன்றி வளர்ந்து வேரூன்றிவிடும். அதன் பிறகு அவர்களை வெல்ல முடியாது. நம் முன்னோர்கள் காலத்தில் தமிழ் வளர்ந்த சிந்து நதிக்கரையில் இப்போது தமிழே இல் லாமல் மறைந்தது போல், கங்கைக் கரையிலும் தமிழ் இல்லாமல் மறைந்துபோகும்.

சேரன் : எல்லாம் நம் தவறு தான் ; நம் கடமையைச் செய்யாத தவறுதான்.

இளங்கோ : கங்கைக்கரையில் தமிழ் பேசும் மக்கள் இப்போதே வளம் சுருங்கி வாழ்கின்றார்கள். இனியும் இப்படியே விட்டால், அவர்கள் அங்கே மற்றவர்களுக்கு அடிமைகளாய் வாழ நேரும். அவர்கள் பேசும் தமிழ் இப்போதே சீர்குலைந்த தமிழாக உள்ளது. இவ்வாறே விட்டால், அந்தத் தமிழும் சிதைந்து அழியும் ; அந்த இனமும் குலைந்து மறையும்.

சேரன் : (துயரத்துடன்) என் உள்ளத்தில் வேல் பாய்ந்தாற் போல் உள்ளது!

இளங்கோ : வருந்தவேண்டா அண்ணா ! கடமையைச் செய்வோம். நம் காலத்தில் தொடங்கினால், பின்வருவோர் வெற்றி பெறுவர்.

சேரன் : (சோர்வோடு) நல்லது தம்பி!

இளங்கோ : எந்த மொழி வாழ்ந்தால் எமக்கு என்ன என்று பரந்த நோக்கோடு விட்டுவிடலாம் அண்ணா ! ஆனால் தமிழர் பிறநாட்டார்க்கு இடம் தருவது போல், தமிழ் மொழியும் மற்ற மொழிகளை அன்போடு வாழவிடும். பிறநாட்டார் தமிழர்க்கு இடந்தராமல் துன்புறுத்து வது போல், பிறமொழிகள் வளர்ந்தால் தமிழைத் தேய்க்கவும் மாய்க்கவும் முயலுமே என்று தான் அஞ்சு கிறேன். நம்மை எல்லாம் வளர்த்துப் பண்படுத்திய ஒரு செம்மொழி அப்படி ஆகக் கூடாது என்ற கருத்தால் தான் இதைச் சொல்கிறேன்:

சேரன் : இதில் என்ன ஐயம்? பரந்த பொது நோக்கம் தமிழன் குருதியில் தோய்ந்துள்ளது. மற்றவர்களுக்குப் பகை நோக்கம் ஒன்று தானே தெரியும்?

இளங்கோ : இந்த நிலையில் விட்டுவிட்டால், கங்கைக் கரையில் தமிழைப் பரப்ப நாம் தவறினால், அண்ணா , கங்கைக் கரையில் ஒரு புதுமொழி வளர, அதை அவர்கள் போற்றி வளர்த்து இந்த நாட்டில் கொண்டுவந்து பரப்பும் காலம் வரினும் வரும்.

சேரன் : கொடுமை!

இளங்கோ : கொடுமை அல்ல அண்ணா, அவர்களுக்கு அது கடமை அண்ணா! நாம் ஏன் செய்யவில்லை என்று எண்ணிப் பாருங்கள். உங்களை மட்டும் சொல்லவில்லை. சோழ பாண்டியரும் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் முயற்சி எங்கே? அவர்கள் முயற்சி எல்லாம் இங்கு ஒருவரோடு ஒருவர் பகைத்துப் போர் செய்து வெல்வதிலேயே கழிகின்றது.

சேரன் : அவர்களைச் சொல்லிப் பயன் என்ன? வழி வழியாக வந்துள்ள தீமை அது. வேண்மாளும் நீயும் மாடலனும் அவ்வப்போது எனக்கு வழி காட்டாம் லிருந்திருந்தால், யானும் அதைத்தான் செய்திருப்பேன். கங்கைக் கரையை வெல்வதற்குமுன், காவிரிக் கரையை வெல்லவும் வையைக் கரையை வெல்லவும் முயன்றிருப்பேன் ; முயன்று, தமிழ்நாட்டில் தமிழர் தலைகளை உருட்டுவதிலே தனி மகிழ்ச்சி கண்டிருப்பேன்! என்ன செய்வது? அறியாமை !

இளங்கோ : அண்ணா ! அவர்கள் நோக்கம் வடவேங்கடத்தையும் கடந்து செல்லவில்லையே என்று எண்ணும் போது வருந்துகிறேன். வேங்கட மலை முதல் விந்திய மலை வரைக்கும் வாழும் மக்களை வடுகர், கதநாய்வடுகர், கல்லா வடுகர் என்று சொல்லிச் சொல்லித் தாழ்த்து கிறோம். ஆனால் அவர்களும் தமிழர் தானே? அவர்கள் பேசுவதும் தமிழ்தானே?

சேரன் : ஆம்! நான் அவர்களின் பேச்சைக் கேட்டிருக்கிறேன். நாம் ஏழு என்பதை அவர்கள் ஏடு என்கிறார் கள். கோழியைக் கோடி என்கிறார்கள். மாற்றத்தை மாட்ட என்கிறார்கள். கை என்பதைச் செய் என்கிறார் கள். எலும்பு என்பதை எம்மு என்கிறார்கள். இல், செவி முதலான சில சொற்களை மட்டும் அப்படியே சொல்கிறார்கள்.

இளங்கோ : விந்திய மலையின் அடிவாரம் வரையில் எவ்வளவு பெரிய நிலப் பரப்பு! அவ்வளவு இடங்களி லும் இப்படிப்பட்ட தமிழே பேசுகிறார்கள். அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் வழிவகுத்தோமா? அவர்களிடையே இலக்கியம் பரவத் தொண்டு செய்தோமா? நாகரிகம் குறைந்த மக்கள் என எண்ணி நகையாடுதல் மட்டும் செய்கிறோம். அவர்களிடையே தமிழைப் பரப்புதல் கங்கைக் கரையில் பரப்பு தலைவிட எளிமை யானது. பரப்பினால், ஏடு என்று சொல்லாமல் ஏழு என்றே சொல்வார்கள். கோடி என்னாமல் கோழி என்றே சொல்வார்கள். மாட்ட என்னாமல் மாற்றம் என்றே சொல்வார்கள்.

சேரன் : உண்மைதான். இது எளிதில் செய்யக்கூடியது.

இளங்கோ : இந்தக் கடமையையும் சேர சோழ பாண்டியர் எவரும் செய்யவில்லை. இந்தத் தீவினை வாளா விடாது. நாளை ஒரு காலத்தில், அவர்களின் கொச்சைச் சொற்களே ஒரு மொழியாய் வளர்ந்தாலும் வளரலாம். வளர்ந்து வன்மை பெற்றுவிட்டால், அவர்கள் தமி முரை வெல்லும் வலிய இனமாக மாறினாலும் மாறலாம். தமிழ் வளர்க்கும் மதுரையை அவர்கள் வென்று ஆளும் காலம் வரினும் வரக்கூடும்.

சேரன் : (பெருமூச்சுடன்) அந்தோ !

இளங்கோ : அவ்வளவு ஏன் அண்ணா? நம்மை அடுத்துள்ள எருமை நாட்டை (மைசூரை) நீங்களோ சோழரோ எட்டிப் பார்ப்பதே இல்லை. திறை பெற் றுக்கொண்டு அனுப்பிவிடுகிறீர்கள். அந்தக் குறுநில மன்னர்களும் திறை செலுத்தி விட்டுத் திரும்பிச் சென்றுவிடுகின்றார்கள். அங்குள்ள மக்கள் பேசும் தமிழும் வடுகர்பேசும் தமிழ்போல் சிதைந்து வருகிறது. அவர்களுக்காவது எழுத்தும் கல்வியும் வளரச் செய் தால், தமிழ் இலக்கியம் பரவி நாட்டின் எல்லை குறு காமல் காக்கலாம். இல்லையானால் அங்கும் ஒரு மொழி வளர்ந்து தமிழுக்கு இடையூறாய் வன்மை பெறக்கூடும். சேரன் : நினைக்க நினைக்க நெஞ்சம் வேகின்றது.

(குனிந்த தலையோடு} இளங்கோ : தமிழர் இப்படிக் கடமையை மறந்து மறந்து தான் சிந்துநதிக்கரையை முன்னரே இழந்தனர் ; கங்கைக் கரையை இழந்துவருகின்றனர்; வேங்கடத் துக்கு அப்பால் உள்ள வடுக நாட்டையும் இழக்கின் றனர் ; எருமை நாட்டையும் இழக்கப் போகின்றனர். அண்ணா! அஞ்சுகின்றேன். நாம் பிறந்து வாழும் சேர நாட்டையும் தமிழர் இழந்துவிடுவரோ? ஒருகால் வட வேங்கடத்தையும் தென் குமரியையும் தமிழர் இழக்கும் நிலையும் வருமோ?

[சேரன் மயங்கிக் கட்டிலில் சாய்கின்றான். இளங்கோ விரைந்து எழுந்து அவனிடம் செல்கிறார்.]

காட்சி : 4

[காவிரிப்பூம்பட்டினம் ; கடல்கொண்டு அழிந்த பழைய நகரத்தின் சிதைந்த பகுதிகள்; அங்கே இளங்கோவடிகள் கடலை நோக் கியபடி நிற்கிறார்; விம்முகிறார்; பெருமூச்சு விடுகிறார்.]

இளங்கோ : ஏ! கொடுங் கடலே ! நீயுமா அருமைத் தமிழகத்தைச் சிதைக்க வேண்டும்? தமிழர் தமக்குள் கன லும் பொறாமை சிதைக்கின்ற சிதைவு போதாதா? வேலியாக அமைந்துள்ள நீயுமா சிதைக்கின்றாய்? அன்று பஃறுளியாறும் குமரிக்கோடும் விழுங்கினாய், பரந்த தமிழகம் தெற்கே குறுகிவிட்டது. உணர்ச்சி மிக்க தமிழர் கடமை மறந்து வாழ்ந்ததால் சிந்துவும் கங்கையும் விந்தியமும் இழந்தனர். அன்று தமிழகத் தின் தெற்குப் பகுதியை விழுங்கிய நீ, இன்று கிழக்குப் பகுதியையும் விழுங்கத் துணிந்தனையா ? தமிழக வேந்தர் பொறாமையால் மேற்குப் பகுதியையும் இழக் கத் துணிந்துள்ளனர் போலும்! அந்தப் பொறாமைப் பேயும் நீயுமாக மாறி மாறிச் சிதைக்க முற்பட்டீர்கள். உங்கள் அழிவுவேலையைத் தடுக்கத் தமிழரின் வாளும் பயன்படவில்லை ; ஆண்மையும் பயன்படவில்லை. திற னும் ஒற்றுமையுமே வேண்டியவை போலும்! தமிழர் திறன் ஏந்தியவராய் ஒற்றுமை மிக்கவராய் உங்களை என்று எதிர்த்து அடக்கப் போகின்றனர்?

ஏ! நெடுந்திரைகாள்! எங்கே எமது புகார்? உலகம் ஒருமுகமாய் நோக்கிய அந்தச் செல்வத் துறை முகம் எங்கே? கண்ணகி தவம் புரிந்த அந்தப் பெரு மனை எங்கே? மாதவியின் கலை திகழ்ந்த அந்த அழகிய அரங்கம் எங்கே? கரிகாற்சோழன் அறம் வளர்த்த அந்த அரண்மனை எங்கே ? எங்கே? எங்கே! எல்லாம் விழுங்கிவிட்டீர்களே ! ஆ! நெடுந்திரைகாள்! [சிறிது நேரம் கண்மூடிச் சிந்தனையில் ஆழ்ந்து ஏக்கத்தோடு நிற்கிறார். அப்போது பரதவர் சிலர் அங்குச் சிறிய வலைகளுடனும் பறிகளுடனும் வருகின்றனர். அங்கே நிற்கும் துறவியைக் கண்டதும், கைகுவித்து வணக்கம் தெரிவிக்கின்றனர். இளங்கோ கண்விழித்துப் பார்க்கின்றார்.]

இளங்கோ : நீங்கள் யார் ? இந்த ஊராரோ?

பரதவர்-1 ஆமாம் அடிகள்! இந்த ஊரே.
பரதவர்-2 நாங்கள் பரதவர், அடிகள்!

இளங்கோ : இந்த நகரத்தைக் கடல் கொண்டபோது எங்கே இருந்தீர்கள்?

பரத-1 : நான் மீன் விற்க மருவூர்ப்பாக்கம் போயிருந்தேன். என் மாமன் இவன் (மற்றொருவனைச் சுட்டிக்காட்டி) மீன் பிடிக்கக் கடலுக்குள் போயிருந்தான்.

பரத-3 : மீன் பிடித்துக்கொண்டு படகில் திரும்பிவரும் போது பார்த்தோம் ; பழைய இடம் ஒன்றும் இல்லை. எப்படி எங்கே கரையேறுவது என்று தெரியாமல் திகைத்தோம். அதோ அப்படி வடக்கே நெடுந் தொலைவு போய்க் கரை ஏறினோம். அங்கிருந்து கரையோரமே நடந்து வந்து பார்த்தோம் ; பழைய தெருக்கள் ஒன்றும் காணோம். மருவூர்ப்பாக்கம் முழுவதுமே கடலிலே மூழ்கிக்கிடந்தது.

பரத-2 : இப்போதுகூட உச்சிவேளையில் படகில் போகும் போது, அரண்மனையும் கடைத்தெருவும் பெரிய பெரிய மாளிகைகளும் எல்லாம் கடலின் அடியில் தெரிகின்றன.

பரத-3 : ஆமாம் அடிகள் ! கடலில் அலைகள் ஓய்ந்து அமைதியாக இருக்கும்போது படகிலிருந்து பார்த்தால் பெரிய பெரிய கட்டிடங்கள் தெரிகின்றன. நான் பார்த்திருக்கிறேன்.

பரத -1: பட்டினப்பாக்கத்திலும் எவ்வளவோ அழிந்துவிட்டன.

பரத-3 : எங்கள் வீடுகள் எல்லாம் முழுகிவிட்டன.

பரத-2 : உடைமை எல்லாவற்றையும் அப்படி அப்படியே விட்டுவிட்டு மனைவி மக்கள் எல்லோரும் நெடுந்தொலைவு கடந்து மேற்கே போய்விட்டார்கள்.

பரத-1: எத்தனையோ பேர் கடலில் மறைந்து போய்விட்டார்கள்.

பரத-3 : குடும்பம் குடும்பமாக மாண்டுவிட்டார்கள். .

பரத-2 : ஊரே அல்லோல கல்லோலப் பட்டுவிட்டது.

பரத -3 : பழைய மனிதர்கள் பலரை இன்னும் பார்க்க முடியவில்லை.

பரத-1 : எங்கேயாவது போய்க் குடியேறியிருக்கிறார்களோ ? கடலின் கொந்தளிப்புக்கு இரையாகிவிட்டார்களோ? தெரியவில்லை.

பரத-2 : பழைய வாழ்க்கை அடியோடு போச்சு!

பரத-3 : காவிரிப்பூம்பட்டினத்தின் பேரும் பெருமையும் சீரும் சிறப்பும் எல்லாம் போச்சு!

பரத-1: கண்ணகி அம்மா ஊரைவிட்டுப் புறப்பட்டார்களே அன்றைக்கே எல்லாம் போச்சு!

இளங்கோ : கண்ணகி உங்களுக்குத் தெரியுமா? பார்த்திருக்கிறீர்களா?

பரத-1-: எனக்கும் தெரியும். பார்த்திருக்கிறேன். எங்கள் மாமன் (பரத – 3 ஐச் சுட்டிக் காட்டி) இவனுக்கு அந்த அம்மா குழந்தையாக இருந்த காலம் முதல் கொண்டே தெரியுமாம்.

பரத-3 : ஆமாம் அடிகள் ! மாநாய்கர் வீட்டுக்கு நானும் என் மனைவியும் அடிக்கடி போய்வருவது உண்டு. கடல்வேட்டையில் ஒன்றும் கிடைக்காதபோது அந்த வீட்டின் வாசலில் போய் நிற்போம். வள்ளல் அவர் வாரிக் கொடுப்பார். அதனால், எங்கள் மீன்வேட்டை யில் எப்போதாவது முத்துச் சிப்பி கிடைத்தால், என் மனைவி அதைக் கண்ணகிக்குக் கொடுக்க வேண்டும் என்று எடுத்து வைத்துக்கொள்வாள். இரண் டொரு முறை நானே போய்க் கண்ணகியின் கையில் முத்து ஒன்று இரண்டு கொடுத்துவந்திருக்கிறேன். அந்த அம்மா அப்போது ஐந்து ஆறு வயசு உள்ள குழந்தை. பச்சை முத்து என்றால் குழந்தைக்கு நிரம்ப ஆசை.

பரத-1 : சோழ மன்னர் அரண்மனையிலே கூட அவ்வளவு செல்வமாக எந்தக் குழந்தையும் வளரவில்லையாம். அப்படி வளர்த்தார்களாம் அந்தக் குழந்தையை. இளங்கோ : இருக்கலாம். பரத-3 : நானே கண்ணாரப் பார்த்தது தானே அடிகள். தங்கப் பதுமை போல வளர்ந்தது குழந்தை. கோவல அய்யாவுக்குக் கொடுத்தபிறகும் சீரும் செல்வமுமாக வாழ்ந்தார்கள் எங்கள் தாய்.

பரத-2 : புகுந்த வீடும் பெரிய குடும்பம் தான் அடிகள்!

இளங்கோ : அப்படித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பரத – 2 : இந்தப் பட்டினத்திலேயே சோழ வேந்தர் குடும்பம் முதலாவது என்றால், மாசாத்துவான் குடும்பம் தான் அதற்கு அடுத்தபடி ; அவ்வளவு பெரிய குடும்பம் அடிகள்!

பரத -3 : ஆனால், கோவல அய்யா வேறுவகையாக மாறின பிறகு தான், எங்கள் தாய் கண்ணகியைக் கண்ணால் பார்க்க முடியவில்லை.

பரத-1: அப்போது போய்ப் பார்த்திருக்கிறாயா? மாமா!

பரத -3 : பார்த்திருக்கிறேன் ; ஒரே ஒரு முறை தான். அப்போது அந்த அம்மா வீட்டைவிட்டு வெளியே வரு வதே இல்லை. எப்படியாவது பார்க்க வேண்டும் என்று வீட்டின் எதிரே பகல் எல்லாம் காத்திருந்தேன். கடைசியில் மனம் இரங்கி என்னைப் பார்க்க வந்தார் கள், பார்த்தேன். எனக்கு அழுகை வந்துவிட்டது. (கண்ணீர் கலங்குகிறான்.) பொன் பூத்த கொடி போல் இருந்த எங்கள் தாய், உடம்பில் ஒரு சின்ன நகையும் இல்லாமல், காலில் சிலம்பும் இல்லாமல், கண்ணில் மையும் தீட்டாமல், நெற்றியில் திலகமும் இல்லாமல், கூந்தலில் மலரும் சூடாமல், வாடி இளைத்து என் கண்ணெதிரே வந்து நின்றார்கள். நான் ஒன்றும் பேச முடியாமல் அழுதுகொண்டே திரும்பிவந்துவிட் டேன். (கண்ணைத் துடைக்கிறான். இளங்கோவடிகள் அமைதியாகக் கேட்டுக்கொண் டிருக்கிறார்.)

பரத-2 : கோவல அய்யாவின் மேல் ஒரு குற்றமும் சொல்ல முடியாது. பொல்லாத காலம் அடிகள்!

பரத-1 : தெரியாதவர்கள் மாதவிக்குக் கொடுத்துக் கொடுத்தே செல்வம் எல்லாம் அழித்துவிட்டதாகச் சொல்வார்கள்.

பரத-2 : அது பொய், அடிகள்! நாங்கள் எல்லாரும் கண்ணாரப் பார்த்திருக்கிறோம். வந்தவர்களுக்கு, கேட்டவர் களுக்கு, எல்லார்க்கும் இல்லை என்னாமல் வாரி வாரிக் கொடுத்தே செல்வத்தை அழித்தார் அவர்.

பரத-1 : பக்கத்து நாட்டிலே பாரி என்று ஒரு வள்ளல் இருந்ததாகச் சொல்வார்கள். கோவல அய்யா நாங்கள் கண்ணாரக் கண்ட வள்ளல். மற்றவர்கள் பொன்னையும் பொருளையும் தான் கொடுப்பார்கள். கோவல அய்யா உயிரையும் கொடுக்கிற வள்ளல். மாதவியிடம் மனம் வெறுத்து வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தாராம் ; அப்போது வழியில் எங்கள் சிற்றப்பன் பார்த்துக் கை நீட்டினானாம். இரண்டு காசு எடுத்துக் கொடுத்துவிட்டுத்தான் அப்பால் போனாராம். ஆனால் அப்போது முகம் ஏதோ கலக்க மாக இருந்த தாம் ; தெளிவு இல்லையாம். சிற்றப்பன் என்னிடம் வந்து சொன்னான்.

பரத-2 : ஏன் ? அன்றைக்கு- மணிமேகலைக்குப் பெயர் வைத்தாரே அன்றைக்கு-நாம் எல்லாம் அங்கே போய்ப் பார்க்கவில்லையா? அவரும் மாதவியுமாக இருந்து பொன்னை வாரி வாரி வழங்கினார்களே ! அப்படிக் கொடுத்துக் கொடுத்தே அழித்தார் அந்த அய்யா !

பரத-1 : செல்வத்தைப் பறிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அப்படி வாரி வாரி வந்தவர்களுக்குக் கொடுக்க மா தவிக்கு மனம் வருமா? கோவல அய்யா கொடுத்தால், அதைப் பார்த்துக்கொண்டிருக்கத்தான் மாதவிக்கு மனம் வருமா?

பரத-2 : அந்த மாதவி அம்மா நினைத்திருந்தால், பட்டினத்திலிருந்த அத்தனை பணக்காரரையும் விர லாலே ஆட்டிவைத்திருக்கலாம். அப்படிப்பட்ட வர்கள், மதுரையில் நடந்ததைக் கேட்டதும், என்ன செய்தார்கள் , பார்த்தாயா? தானும் துறவியானார்கள்; தன் வயிற்றில் பிறந்த கட்டழகியையும் மொட்டை அடித்து ஒரு பகலில் துறவி ஆக்கிவிட்டார்களே! யாருக்கு வரும் இந்தத் துணிவு !

பரத-1 : அய்யய்யோ ! அவர்களைப் பற்றித் தவறாக நினைத்தாலும் ஒரு சொல் பழியாகச் சொன்னாலும் தின்னச் சோறு கிடைக்காமல் போய்விடும். உத்தமி, உத்தமி! எல்லாம் எங்கள் கெட்ட காலம் ; இந்தப் பட்டினத்தின் கெட்ட காலம்! அவர்களின் மனம் மாறிப் போச்சு ; வாழ்க்கை மாறிப் போச்சு ; கடலின் கொந்தளிப்பும் இப்படி ஆச்சு ; எங்கள் பட்டினமும் போச்சு.

பரத-3 : ஏல ! நமக்குப் பொழுது ஆகுதே! பரத -2 : ஆமாம் அடிகள் ! எங்களுக்கு விடைகொடுங்கள். வணக்கம்.

பரத-1) வணக்கம் அடிகள்!

பரத-3 | அடிகள் ! வணக்கம்.

[இளங்கோவடிகள் வாய்திறந்து ஒன்றும் கூறாமல் கையை உயர்த்தி அசைத்து விடை தருகிறார்.]

காட்சி : 5

[காவிரிப்பூம்பட்டினம். மரம் செறிந்த சாலையை அடுத்துள்ள ஒரு சத்திரம். இளங்கோவடிகள் அடும்புகாள் அன்னங்காள் நம்மை – மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால் என்ற அடியை மூன்று நான்கு முறை சொல்லிக்கொண்டே அங்கே வந்து நிற்கிறார். பிறகு அங்குள்ள புழுதியை மேலாடையால் விலக்கி, அந்த ஆடையை விரித்து அதன் மேல் அமர்ந்து சிறிதுநேரம் கண் மூடிக் கிடக்கிறார். தம் கையில் உள்ள மூட்டையையே தலை யணையாக வைத்துப் படுக்கிறார். சிறிது நேரத்தில், முன் வஞ்சிநகர்ப் பூங்காவில் பேசிக்கொண்டிருந்த துறவிகள் அங்கே வந்து சேர்கின்றனர். யாரோ படுத்திருப்பதை ஐந்தவித்தா னடிகள் பார்க்கின்றார். வேறு புறமாகப் போய்ப் படுக்க லாம் என்று அப்பால் செல்கின்றார். மற்றத் துறவிகள் இரு வரும் தொடர்கின்றனர்.]

துறவி-1: (ஐந்தவித்தானடிகளை நோக்கி) என்ன உற்றுப் பார்த்தீர்கள் அந்தத் துறவியை?

ஐந்தவித் : குணவாயில் கோட்டத்தில் அந்த இளங்கோ படுத்திருக்கும் போது இப்படித்தான் நீண்ட நெடுங்கோலமாக இருக்கும். அதை நினைத்துப் பார்த்தேன்.

துறவி-2 : (சிறிது அச்சத்தோடு) ஒருகால் அவர் தானோ?

துறவி-1 : (அடக்கத்தோடு) அருகே சென்று பார்த்து வரட்டுமா?

ஐந்தவித் : வேண்டா ; பேசாமல் படுக்கை போடுங்கள். நான் சொல்கிறேன். அந்த அரண்மனைத் துறவி யாவது, இங்கே வருவதாவது, சேரவேந்தன் அவரைத் தனியே அனுப்புவதாவது, அரண்மனையின் சுக போகங்களை விட்டு அவர் இவ்வளவு தொலைவு நடந்து வருவாரா? கனவா? இப்படி ஒரு பாழடைந்த சத்திரத்தின் மூலையில் திக்கற்றுப் படுப்பாரா? பைத் தியமா? நாம் தான் ஏழைகள். இப்படி ஊர்சுற்றி எளிய வாழ்க்கை வாழ்கிறோம். அவருக்கு என்ன? அவர் ஏன் இங்கே வரப்போகிறார்? துறவி-1: ஒருகால், தாம் சிலப்பதிகாரத்தில் எழுதியவை உண்மையா என்று அங்கங்கே கேட்டறிந்து தெளிவதற்காக வரக்கூடும் அல்லவா?

ஐந்தவித் : ஒன்றும் பார்க்காமல் கேட்காமலே குணவாயில் கோட்டத்து மூலையில் இருந்தபடியே கோவலன் கண்ணகி மாதவி எல்லாரையும் பற்றி எழுதி முடித்து விட்டாரே. அவருக்கு உண்மையைப் பற்றிக் கவலை என்ன? ஒருகாலும் வரமாட்டார். அவரோடு நெடுங் காலம் பழகிய நான் சொல்கிறேன், கேளுங்கள். பேசாமல் உறங்குங்கள். (படுக்கத் தொடங்குகிறார்கள். ஐந்தவித்தானடிகளும் இரண்டாம் துறவியும் உடனே படுக்கின்றனர். முதல் துறவி மட்டும் விரிப்பின் மேல் சிறிதுநேரம் கண்மூடி அமைதியாய் இருந்தபிறகு படுக்கின்றார்.)

துறவி – 1: அடிகள் எழுதியதில் உண்மை இல்லாமற் போகவில்லை. நூலைப் படித்தபோது மாதவியைப் பற்றிப் பொய் புனைந்திருக்கிறார் என்றே நானும் கருதி னேன். ஆனால் இந்தச் சிற்றூரில் மாதவியைக் கண்ணால் கண்டவர்களும் பேசிப் பழகியவர்களும் பலர் உள்ளனர். அவர்களைக் கேட்டுப் பல உண்மைகளைத் தெரிந்துகொண்டேன். ஐந்தவித் : என்ன சொல்கிறார்கள்? அந்த அடிகள் எழுதியவை எல்லாம் உண்மை என்று சொல்கிறார்களா? துறவி-1: அப்படி அல்ல. அவர்கள் சொல்வதைக் கேட்டு எண்ணிப் பார்த்தால், மாதவியைப் பற்றி அடிகள் எழுதியவை பொருத்தமாக உள்ளன. ஐந்தவித் : நான் நம்பவில்லை. வேசி வேசிதான். கோவலன் வேசிப் பித்தன் தான்.

துறவி -2 : மன்னிக்கவேண்டும் அடிகள்! யானும் கேட்டுப் பார்த்தேன். கோவலனைப் பற்றி எல்லோரும் நல்லபடியே சொல்கிறார்கள். வள்ளல் என்றும், இரக்கம் மிக்கவன் என்றும், தீமை அறியாதவன் என்றுமே சொல்கிறார்கள். ஐந்தவித் : அது போகட்டும். புகார்க் காண்டத்தில் மாதவியின் ஆடல் பாடல் அழகு அணிகலன் இவற்றை வருணித்திருக்கிறாரே, அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்.

துறவி-1 : மிகமிக அழகாக, காவியச்சுவையோடு பொருந்த அமைந்திருக்கிறது. ஐந்தவித் : அதைக் கேட்கவில்லை. பெண்ணின்பம் அறியாதவர் இளங்கோ என்று சொல்கிறார்களே; அறியாதவ ராக இருந்தால் அப்படி விரிவாக எழுத முடியுமா? – துறவி-1 : அப்படி ஒன்றும் சிற்றின்பப் பகுதி அங்கே இல் லையே. லீலைகள், சில அங்கங்களின் விளக்கங்கள் ஒன் றும் இல்லையே. இதைவிடத் தூய்மையாக ஒரு காவியம் எழுத முடியுமா? வடமொழியில் தான் உள்ளதா ?

ஐந்தவித் : அப்படியா நினைக்கிறீர்கள் ?

துறவி – 1 : சிலப்பதிகாரத்தைப் படித்தால் குணவாயில் அடிகள் தூய ஒழுக்கம் உள்ளவர் என்பது தான் விளங்கும்.

ஐந்தவித் : நான் நேர்மாறாக நினைக்கின்றேனே!

துறவி-1 : வேறு யாரேனும் மாதவியைப் பற்றி எழுதியிருந்தால், கணிகையர்வீட்டையே ஓவியமாக்கிக் காட்டியிருப்பாரே ; அங்கங்களைப் பற்றி நூற்றுக் கணக்கான அடிகளும் லீலைகளைப் பற்றி ஆயிரக் கணக்கான அடிகளும் எழுதிக் காமரசம் ததும்பச் செய்திருப்பார்களே! அவற்றிற்கு இடம் உள்ள காவி யத்தில் தூய காதலும் விழுமிய கலையும் மட்டுமே விளங்குமாறு எழுதிய பெருமையைப் பாராட்ட வேண்டாவா?

ஐந்தவித் : அணிந்த அணிகலன்களை ஒன்று விடாமல் கூறியிருக்கிறாரே.

துறவி -1: அரண்மனையில் பிறந்து வளர்ந்தவர், தம் தாயின் அணிகலன்களைப் பார்த்திருப்பார் ; உடன் பிறந்தாளின் அணிகலன்களைப் பார்த்திருப்பார்.

ஐந்தவித் : வாளா உங்களைக் கேட்டுப்பார்த்தேன்.

துறவி – 1 : பெண் வகையில் அவர்மேல் உங்களுக்கு ஐயமா?

ஐந்தவித் : எனக்கு ஒன்றும் தெரியாது. நூலைப் பார்த்து அப்படிக் கருதினேன்.

துறவி -1 : அதற்கு இடமே இல்லை என்று தான் நான் கருதுகிறேன். அடிகள் ! (இரண்டாம் துறவியைத் தட்டி) நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

ஐந்தவித் : அவர் சுழுத்திநிலைக்குப் போய்விட்டார். அதோ குறட்டை விடுகிறாரே, கேட்கவில்லையா?

துறவி -1: உறங்கட்டும்; களைப்பு என்ன செய்வார்! ஐந்தவித் : இன்னொன்று. நாம் எல்லாம் சேரநாடு, பாண்டியநாடு, சோழநாடு என்று தானே பேசுகிறோம். தமிழ் நாடு என்று யாரும் சொல்வதும் இல்லை, கருதுவதும் இல்லையே. பெரும்பாலும் மற்ற நூல்களிலும் அப்படித் தானே உள்ளது. துறவி -1: ஆமாம் அடிகள்! ஐந்தவித் : அவர் மட்டும் ஏன் அடிக்கடி தமிழ்நாடு, தமிழகம் என்று குறிப்பிடுகிறார். தமிழ் என்றால் ஒரு மொழி தானே? அவர் நூலில் தமிழ்நாடு என்னும் பொருளி லேயே தமிழ் தமிழ் என்று பல இடங்களில் குறிக்கி றாரே ! தமிழ்நாடு என்று ஒரு நாடும் ஓர் ஆட்சியும் இல்லையே. இல்லாததை ஏன் குறிப்பிடவேண்டும்? துறவி -1: மூவேந்தரும் ஒன்றுபட்டால் அப்படி ஆகலாம் அல்லவா?

ஐந்தவித் : ஏன் ஒன்றுபட வேண்டும்? ஆக முடியுமா?

துறவி -1: நாட்டின் நன்மை கருதி -.

ஐந்தவித் : ஒருகாலும் ஆகமுடியாது. உலகம் தோன்றிய நாள் முதல் மூன்று தனி மரபுகள், மூன்று தனி நாடுகள், மூன்று தனி ஆட்சி – எப்படி ஒன்று ஆகமுடியும்?

துறவி -1: ஐம்பத்தாறு தேசமாய், ஐம்பத்தாறு அரசர் ஆண்ட வடநாட்டை மௌரிய வம்சத்தினர் ஒற்றுமைப்படுத்தி ஒருகுடைக்கீழ்க் கொண்டுவரவில்லையா?

ஐந்தவித் : இருந்தாலும் தமிழ்நாட்டில் மூவேந்தர்கள் தம் தம் மானத்தை விட்டு, தம் தம் உரிமையை விட்டு, ஒன்றுபட முடியாது.

துறவி -1: தனி மானத்திற்காகவும் தனி உரிமைக்காகவும் இவர்கள் போராடுவார்களானால், இறுதியில் இந்தத் தமிழ்நாடு இவர்களின் ஆட்சியில் இருப்பதும் போய் விடும். தமிழ்நாட்டைத் தமிழர் ஆள வழி இல்லா மல், வடவர் ஆட்சியின்கீழ் விட்டுவிடும் நிலைமை வந் தாலும் வந்துவிடும். இதை நன்கு எண்ணித்தான், அடிகள் மூன்று நாடுகளையும் ஒருங்கே கூறுகிறார்; கயல் புலி வில் மூன்று கொடிகளையும் ஒருங்கே கூறு கிறார் ; பிளவோ பிரிவோ வேறுபாடோ அந்த நூலில் காணவே முடியாது.

ஐந்தவித் : (கொட்டாவி விட்டுக்கொண்டே) அது மட்டும் உண்மைதான். அடிகளின் மனத்தில் தம் அண்ணன், தம் சேரநாடு என்ற பற்று எள்ளளவும் இல்லாமல் பொதுவாக, நடுநிலையாக எழுதியுள்ளார். அதை மட்டும் மறுக்க முடியாது. சரி, உறக்கம் வருகிறது. உறங்கலாம்.

[இரண்டாம் துறவியின் குறட்டை ஒலி நன்றாகக் கேட்கிறது. சிறிது நேரத்தில் ஒற்றன் ஒருவன் அங்கே வந்து துறவிகள் மூவரும் உறங்குவதைப் பார்க்கின்றான். அணுகிச் சென்று முகங்களை நோக்குகின்றான். அப்பால் செல்கின்றான். இளங்கோவடிகள் உறங்குமிடத்தை அணுகிச் சென்று அவருடைய முகத்தை உற்றுப் பார்க் கின்றான். சுட்டுவிரலை அசைத்து, ஏதோ கண்டுபிடித்த வன் போல் மகிழ்கின்றான். உடை முதலியவற்றைக் கவனிக்கின்றான். இளங்கோவடிகள் அப்போது கனவு கண்டு வாய்வெருவுகின்றார் ; ‘ நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்’ என்ற அடியை அவருடைய வாய் மெல்லச் சொல்கிறது. ஒற்றன் சிறிது நகர்ந்து வந்து மெல்ல உட்காருகின்றான். அடிகள் புரண்டு படுக் கின்றார். ஒற்றனும் மெல்லப் படுத்துக் கவனிக்கின்றான்.]

காட்சி : 6

[மதுரைமா நகரம் ; மேற்குக் கோபுர வாயில் ; இளங்கோவடிகள் அங்கு வருகின்றார்; ஒற்றனும் பின்தொடர்ந்தபடி தொலைவில் வருகின்றான். அடிகள் வாயிலை அணுகியதும் நிமிர்ந்து நோக்கு கின்றார். அங்கு உள்ள கொற்றவைகோயிலைப் பார்க்கின்றார். அங்குச் சிதறிக் கிடக்கும் பல வளையல் துண்டுகளை எடுத்துப் பார்க்கின்றார். போவார் வருவார் அங்கு வளையல் உடைத்துச் செல்வதைச் சடங்காக்கி யிருப்பதை உணர்கின்றார். மீண்டும் வாயிலை நோக்குகின்றார். “கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன், மேல்திசை வாயில் வறியேன் பெயர்கு” என்ற அடிகளை மெல்லச் சொல்கின்றார்; பிறகு பெருமூச்சு விட்டு அந்த அடிகளையே சிறிது உரக்கச் சொல்கின்றார் ; மறுபடியும் சிறிது பொறுத்து, அந்த அடிகளையே, மெல்லச் சொல்கின்றார ; உருகி நிற்கின்றார். பிறகு மேற்கு வாயிலைக் கடந்து செல்லத் தொடங்கு கின்றார். ஒற்றன் அவர் எதிரே சென்று தடுப்பது போல் நிற்கின்றான்.]

ஒற்றன் : வணக்கம் அடிகள்!

இளங்கோ : ஏன் வழிமறிக்கின்றாய்?

ஒற்றன் : பாண்டியர் அரசவைக்கு நீங்கள் வந்துபோக வேண்டும்.

இளங்கோ : ஆணையா? அழைப்பா?

ஒற்றன் : அரசரின் ஆணை.

இளங்கோ : வர இயலாது என்று சொல்.

(ஒற்றன் உடனே கையைத் தட்ட, வீரர் மூவர் வந்து அடிகளுக்கு விலங்கு இட்டு அழைத்துச் செல்கின்றனர்.)

காட்சி : 7

[மதுரைமா நகர் ; பாண்டியன் அவை ; பாண்டியன் வெற்றிவேற் செழியன் வீற்றிருக்கின்றான்; அமைச்சரும் புலவரும் தானைத் தலைவரும் பிறரும் குழுமியுள்ளனர்; வீரர் மூவர் இளங்கோவடி களை விலங்கிட்டவாறு அழைத்துவந்து பாண்டியன் முன் நிறுத்துகின்றனர். அங்குள்ள புலவர்கள் மட்டும் எழுந்து வணக்கம் கூறுகின்றனர்.]

பாண்டியன் : அடிகளே! வருக. வீரர்காள்! தளை களையுங்கள். (வீரர்கள் அடிகளின் கையில் இட்ட விலங்கை அகற்றுகின்றனர்.) அடிகளே! அமர்க.

[இளங்கோவடிகள் சினம் இன்றி அமைதியாக அமர்கின்றார். அமைச்சரும் புலவரும் அச்சத்தோடு அவரையே உற்று நோக்குகின்றனர்.]

பாண்டியன் : காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து நம் ஒற்றன் உம்மைத் தொடர்ந்து வந்தான். செய்திகள் அனைத்தும் அறிவோம். மூன்று நாட்களாக மதுரை நகரில் சுற்றிப் பார்த்து வருகின்றீர். அரண்மனைப் பக்கம் வந்து எம் மைக் காண உமக்குமனம் இல்லை. (தலை அசைக்கின்றான்.) அதிலிருந்தே மனப்பான்மை நன்கு விளங்கு கின்றது. பாண்டியர் மரபின்மேல் உமக்கு உள்ள வெறுப்பு நன்கு விளங்குகின்றது. அதனால் தான் எம் தந்தை செய்த சிறு தவறு உலகெல்லாம் அறியுமாறு ஒரு காவியம் எழுதித் தூற்ற மனம் கொண்டீர். இன்னும் என்ன செய்யப்போகின்றீர்?

இளங்கோ : (அமர்ந்தவாறே, அமைதியாக, படபடப்பு இன்றி) சேரன் தம்பி என்ற முறையில் யான் மதுரைமா நகர்க்கு வரவில்லை; சிலம்பு இசைத்த பாவலன் என்ற முறையிலும் இங்கு வரவில்லை; துறவி என்ற முறையில் வந்தேன். சுற்றிப் பார்த்தேன் ; அதனால் தான் அரண்மனைக்கு வந்து உம்மைக் காணவில்லை.

பாண்டியன் : அடுத்த குற்றச்சாட்டு….

இளங்கோ : பாண்டியர் மரபைப் பழித்துத் தூற்றுவதற்காக யான் சிலப்பதிகாரம் எழுதியதாகக் கூறினீர். என் நோக்கம் அது அல்ல. கற்பின் பெருமையை – கற்புடைய நங்கையின் தவத்தின் சிறப்பை-அறத்தின் ஆற்றலை விளக்குவதே என் நோக்கம். உம் தந்தை செய்த தவறு என்ன என்பதைப் பலர்வாயிலாகக் கேட்டறிந்தே அதைக் குறித்துள்ளேன். அதையும் நன்கு ஆராய்ந்து, நடுநிலையில் நின்று, என் தந்தை செய்ததுபோலவே கருதி உணர்ந்து எழுதியுள்ளேன். உம் தந்தையின் பெருமையும் பாண்டியர் மரபின் பெருமையும் விளங்கும் வகையிலேயே எழுதியுள் ளேன். வளையாச் செங்கோலை வல்வினை வளைத்தது என்று குறிப்பிட்டுள்ளேன். பாண்டியர் மரபை மதுரைக்காண்டத்தில் பல இடங்களில் போற்றி யுள்ளேன். வஞ்சிக்காண்டத்தில் கந்துகவரியிலும் வள்ளைப் பாட்டிலும் பாண்டியர்மரபுக்கு உயர்வு: அமைத்துள்ளேன். மூவேந்தர், மூன்று கொடி என எங்கெங்கும் விடாமல் குறிப்பிட்டுள்ளேன். பாண்டியர் மரபுக்குப் பழி நேராமல் எழுதவேண்டும் என்பதே என் நெஞ்சில் எந்நாளும் இருந்துவந்தது. இயன்றவரையில் நடுநிலையில் நின்று எழுதினேன். ஒன்று கூறுகிறேன் : கண்ணகியின் வாழ்வை யான் காவியம் ஆக்காமல் விட்டிருக்கலாம். ஆனால் மக்களின் மனத்தைக் கவர்ந்த வாழ்வு அது. எங்கேனும் என் றேனும் பிறக்கும் புலவர் ஒருவரின் உள்ளத்தை அது தொட்டே தீரும். அக்காலத்தில் அவர் காவியமாக்கப் புகுந்தால், உண்மை பல மறைந்து, திரிபு பல புகுந்து விடும். அப்போது காவியச் சுவை கருதிப் பாண்டியர் மரபை முற்றிலும் பழித்துத் தூற்றி எழுதினும் எழு தக்கூடும் என்ற அச்சம் என் உள்ளத்தே தோன்று கின்றது. மீண்டும் கூறுகின்றேன். யான் நடுநிலை பிறழாமல் எழுதியுள்ளேன். பிறப்பால், யான் சேரன் தம்பி ; சேர நாட்டான் ; ஆயினும் என் உள்ளத்தே சேரநாட்டின் மேல் தனிப்பற்று இல்லை ; மற்ற நாட்டின் மேல் வெறுப்பும் இல்லை. என் உள்ளத்தே என் அன்புக்கு உரிய தாய் விளங்கும் நாடு, மூன்று பகுதியும் சேர்ந்த தமிழ்நாடு, தமிழகம் ஒன்று தான்.

பாண்டியன் : எம் மரபைப் பழிக்கு இடமாக்கினீர் என்று யாம் அஞ்சவில்லை. அதனால் உம்மைத் தளையிட வில்லை. ஆனால், எம் தந்தையைப் பழித்து எழுதிய ஒருவர் எம் தலைநகரிலேயே மூன்று நாள் திரிந்தும் வாளா விட்டோம் என்ற பழிக்கு அஞ்சினோம். எம் மரபைப் பழித்தவரைத் தடுத்துக் கேட்கும் ஆண்மை உண்டு என்று இன்று உலகிற்குக் காட்டினோம். இது போதும். இனி நீர் போகலாம். போவதற்கு முன் சில சொல்கின்றோம். எங்கள் மரபு சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மரபு; ஆதலின் தமிழ்மொழி வாழும் வரை யில் பாண்டியர் பெருமை வாழும் என்பதை உணர்வீ ராக. உம்முடைய ஒரு நூல் எம் மரபை மாசுபடுத்த முடியாது. இளங்கோ : பட்ட மாசைத் துடைத்துத் துலக்குவதே என் நூல்.

பாண்டியன் : பாண்டியர் இருநிலம் பொது எனப் பொறாத மானம் உடையவர் என்பதை அறிவீர். அறிந்திருந் தும் எம் தந்தைக்கோ பாண்டியர் மரபுக்கோ உங்கள் நூலில் தனிச் சிறப்பும் உயர்வும் தரவில்லையே!

இளங்கோ : மூவேந்தருள் எவர்க்கும் யான் தனிச்சிறப்பும் உயர்வும் தரவில்லை. செங்குட்டுவனுக்கும் தரவில்லை ; சேரர் மரபுக்கும் தரவில்லை .

பாண்டியன் : பாண்டியர் மரபுக்குத் தனிச் சிறப்புத் தந்து போற்றா தவர் பாண்டிய நாட்டின் எல்லைக்குள் கால் வைப்பதே குற்றம். (அழுத்தமாக) அத்தகையவர் பாண்டிய நாட்டிற்கே பகைவர். உணர்வீர்.

இளங்கோ : அரசே! மூவேந்தரும் தனித்தனிச் சிறப்பும் உயர்வும் நாடினால், பொதுவான தமிழகம் என்ன ஆவது!

பாண்டியன் : அதுபற்றி உமக்குக் கவலை ஏன் ?

இளங்கோ : அதுபற்றித்தான் எனக்குக் கவலை.

பாண்டியன் : ஏன்?

இளங்கோ : மூவேந்தர் மரபுகள் விளங்குவதற்காகத் தமிழும் தமிழ்நாடும் தோன்றவில்லை. தமிழும் தமிழ் நாடும் விளங்கவேண்டும் என்பதற்காகவே மூவேந்தர் மரபுகள் தோன்றின. ஆகவே இந்த வேந்தர் மரபு களை விடத் தமிழும் தமிழ்நாடும் நீடு வாழ வேண்டும் என்பதே என் கவலை.

பாண்டியன் : (எள்ளும் குறிப்போடு) தமிழ்நாடு ! தமிழகம்? எங்கிருந்து கற்றீர் இந்தத் தொடர்களை ? பாண்டிய நாடு சோழநாடு சேரநாடு என்று பிரித்துத் தனித் தனியே சொல்லுக. இல்லாத ஒன்றைச் சொல்லி மயக்காதீர்.

இளங்கோ : மயக்கவில்லை அரசே!

பாண்டியன் : ஓ ஓ ! நீரே மயங்குகின்றீரோ?

இளங்கோ : மயங்கவும் இல்லை அரசே!

பாண்டியன் : ஓ! கனவு காண்கின்றீரோ?

இளங்கோ : ஆம் அரசே! கனவு காண்கின்றேன். ஒரு காலத்தில் என் கனவு நனவு ஆகும் என்றும் நம்புகின்றேன்.

பாண்டியன் : என்ன சொன்னீர் ?

இளங்கோ : தமிழகம் ஒரு காலத்தில் ஒன்றுபடும் என்று-.

பாண்டியன் : அந்நிலையில் பாண்டியன் தலைமை மறைய, சேரனே வடவேங்கடம் முதல் தென்குமரிவரையில் ஆள்வான் என்ற கனவா?

இளங்கோ : இல்லை அரசே! சிறிது பொறுமை வேண்டும் அரசே!

பாண்டியன் : பொறுக்கத் தகாதது கூறினீர். மூவேந்தர் மரபுகளுள் இரண்டு மரபுகள் அழியாமல் தமிழகம் ஒன்றுபடுமோ? வேறு எப்படி முடியும்? முன்பின் முரண்படப் பேசி மயக்குகின்றீரோ?

இளங்கோ : தமிழகம் எப்படியேனும் ஒன்றுபடாவிட்டால், மூன்று மரபும் அழிய நேரும் அரசே!

பாண்டியன் : (சீற்றத்துடன் எழுந்து) என்ன கூறினீர்? மூவேந்தர் மரபும் அழியும் என, பாண்டியர் மரபும் அழியும் எனக் கூறினீர் ! என்ன துணிவு ! என்ன கொடிய குற்றம்! தென்னவன் காவல் அழிவதா? அழி வா! அந்தக் காவியம் எழுதியது பெருங்குற்றம் அல்ல; இதுவே பெருங்குற்றம். இந்த ஒரு சொல் சொன்ன தற்காக உம் நாவை எம் வாளால் துணித்திருக்க வேண்டும். உம் துறவுக் கோலம் கண்டு தயங்கினேன்.

[அமைச்சரும் புலவரும் அஞ்சி நடுங்குகின்றனர் ; அரசன் சிறிது சீற்றம் தணிந்து அமர்கின்றான்.]

இளங்கோ : (அஞ்சாமல், அமைதியுடன்) அரசே! என் நோக்கத்தை உணர்ந்தருள்வீர் என்று விரிவாக எடுத் துரைத்தேன். இல்லையேல் முதலிலிருந்தே வாளா வாய்மூடிக் கிடந்திருப்பேன் . யான் கூறுவது எல்லாம், தமிழகம் இனியும் பிளந்தும் பிரிந்தும் சிதைதல் ஆகாது என்பது. மூன்று பிரிவுகளுக்கு இடம் கொடுத் தால் முப்பது பிரிவுகள் வாழும் ; முந்நூறு பிளவுகள் வளரும். தமிழகம் மேன்மேலும் குறுகும்; எல்லை குறுகிக் குறுகிச் சிறு நாடு ஆகும். பிறர் ஆட்சிக்கு உட்பட்டு அல்லலுறும். தமிழ் என்ற மொழியும் தமிழர் என்ற இனமும் மறையும் நிலைமைக்கு இடமாகுமே என அஞ்சினேன். இதைத்தான் கூற முனைந்தேன்.

பாண்டியன் : போதும் உம் பேச்சு. இனி வாய் திறவாதீர். இன்னும் அறுபது நாழிகைக்குள் பாண்டியநாட்டு எல்லையை விட்டு நீங்கிட வேண்டும். இல்லையேல் எங் கிருந்தும் எம் நாட்டு மக்கள் உம்மை வாளா விடார். எம் மரபைப் பழித்த உம் நூல் இனி இந்நாட்டில் வாழாதவாறு யாம் செய்ய முடியும் ; செய்வோம். உம் பெயரும் இந்நாட்டார் அறியாதவாறு செய்ய முடியும் ; செய்வோம். உம் நூலும் மறையும் ; உம் பெயரும் மறை யும். காண்பீர். இனி ஒரு நொடியும் இங்கு நிற்றல் ஆகாது. அகல்வீர்.

(எழுந்து நின்று பொறுமையோடும் உருக்கத்துடனும்) தமிழக வேந்தே! தமிழகத் தலைவரே! யான் இப்போதே உடனே அகல்வேன். அறுபது நாழிகைக் குள் பாண்டி நாட்டு எல்லையைக் கடந்து செல்வேன். அச்சத்தால் அல்ல, அன்பால், அருளால். என் நூல் மறையட்டும் ; என் பெயரும் மறையட்டும். அவை பற்றிக் கவலை இல்லை. யானும் போகிறேன் ; மறை கிறேன். யாக்கை நிலை இல்லாதது. போய் மறைவதே இதன் பெற்றி. ஆனால், அருமைத் தமிழ் மறையாமல் வாழ மனம் கொள்வீர் ; அருமைத் தமிழகம் மறையா மல் விளங்க மனம் கொள்வீர். சிலப்பதிகாரம் என்று ஒன்று இருந்ததாக நினைவும் இல்லாமல் மறக்கப்படும் காலம் வரட்டும் ; ஆயின் தமிழகம் என்ற ஒன்று மறக்கப்படாதிருந்தால் போதும். தமிழ்மொழி மறக் கப்படாதிருந்தால் போதும். அதற்காக வேண்டு கிறேன். தமிழரே ! தமிழகத் தலைவரே! தனிச் சிறப்பு, தனிப் புகழ், தனி மானம் இவற்றை நாடாதீர் ; தேடாதீர். தமிழை, தமிழகத்தை நாடுவீர், தேடுவீர். பொறாமை வேண்டா ; அதனால் விளையும் பிளவும் பிரிவும் வேண்டா ; அவை அனைத்தும் தமிழ்க்கும் தமி ழகத்திற்கும் இடையூறுகள் ; நலிவு செய்யும் நோய் கள். ஆதலின், தமிழகத் தலைவரே! தமிழரே! ஒன்று படுவீர் ; தமிழ் வாழ, தமிழகம் விளங்க, ஒன்றுபடுவீர். யான் போகிறேன் ; மறைகிறேன் ; தமிழ் போகா திருக்க, தமிழகம் மறையாதிருக்க, தமிழரே! வேண்டு வது ஒன்றுதான் ; அது தான் ஒற்றுமை, ஒற்றுமை, ஒற்றுமை -!

[போய்க்கொண்டே இருக்கின்றார். ஒற்றுமை ஒற்றுமை என்ற குரல்மட்டும் கேட்கின்றது.]

– மூன்று நாடகங்கள், முதற் பதிப்பு: நவம்பர் 1960, தாயக வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *