(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தமிழ்நாட்டின் பொற்காலம் என்று ஏதாவது ஒரு காலப் பகுதியைச் சுட்டிக்காட்ட வேண்டுமானால், அது சங்க காலமே என்பதைத் திட்டமாகச் சொல்லலாம். அக்காலத்தில் தனித் தனி யாக உதயமாகிப் பிற்காலத்தில் ஒன்றாகத் திரட்டப்பட்ட புறநானூறு என்ற பழம்பெரும் நூல், தமிழர் ஆதி வரலாற்றைச் சிறப்புடன் நமது கண்ணில் காட்டியிருக்கிறது. அந்த நூலில் கண்ட சில முக்கியப் பாட்டுகளையும், அப்பாட்டுகளில் இருந்து சரித்திரப் பேராசிரியர்கள் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியாரும், டாக்டர் என். சுப்பிரமணியமும் எடுத்து வகுத்துத் தந்த ஆதாரங்களையும் கொண்டு, “அவனி சுந்தரி” கதை புனையப்பட்டு இருக்கிறது. – சாண்டில்யன்.
1 – 2 | 3 – 4
1 – திறந்த கதவில் தரிந்த ஓவியம்
விலங்கு பகையல்லாது கலங்கு பகையறியாத” பூம்புகார் நகரத்தின் அந்தப் பழைய பொற்காலம் பறிபோய்விட்டதை உணர்த்தவே, கீழ்த் திசைக் கடல் குமுறி எழுந்து ஓ வென்று ஊழிக்கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது. அதைப் பட்டினப் பாக்கத்தின் அரச வீதியில் இருந்த தமது மாளிகைக் கூடத்தில் இருந்தே காதில் வாங்கிக் கொண்ட புலவர் கோவூர் கிழாரின் மனதில் இருந்த வேதனையை முகத்தில் காட்டுவதற்கு ஏற்பட்டது, போல், “கொடுங்கான் மாடத்”தில் இருந்த யவனர் சித்திர விளக்கு, நன்றாகச் சுடர்விட்டு எரிந்து கொண்டு இருந்தது. புலவர்; பெருமான், சிறிது நேரம் அந்தத் தீபத்தை உற்று நோக்கிவிட்டு, சற்று எட்ட இருந்த சாளரத்தை நோக்கிச் சென்று வெளியே கண்களைச் செலுத்தினார். கடல்கோள் விளைவித்த நாசம் புலவரின் கண்களுக்குத் தெளிவாகவே தெரிந்தபடியால், அவர் மனதின் வேதனை முகத்தில் மட்டும் தெரியாமல் நாசி மூலம் பெருமூச்சாக வும் வெளிவந்தது.
புகாரின் பாதி இடங்களை கடலரசன் விழுங்கிவிட்டபடியால் அதன் முகப்புப்புறப் பெரு மதில்களும் கரையோரப் பரதவர் குடியிருப்புகளும் மற்றப் பெரும் கட்டிடங்களும் பாதி இடிந்தும் இடியாமலும் விகாரக் காட்சி அளித்தன. “கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே” என்ற விதிக்கு இணங்க தங்கள் கம்பீ ரத்தை மட்டும் தளர்த்தாமல், ஒரு காலத்தில் தாங்கள் அடைந்து இருந்த பெருமையை அவை வெளிப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண்ட புலவர், அந்த நிலையிலும் அம்மாநகரின் கடற்புறமும் நகர்ப்புறமும் சிறிது பயங்கரத்தையே அளித்ததைக் கவளித்தார்.
இந்த நொந்த நிலையில் அக்கூடத்தின் கதவு திறக்கப்பட்டதையோ, அதன் மூலம் நுழைந்த ஒரு வாலிபன் “புலவர் பெருமானே, புலவர் பெருமானே’ என்று இரு முறை அழைத்ததையோ அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சாளரத்துக்கு வெளிப்புறத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
உள்ளே வந்த இளைஞன் மூன்றாம் முறை புலவர் பெருமானை அழைக்காமல் அவரைப் பார்த்தபடியே நின்றான், பல விநாடிகள். அவன் நின்ற நிலையிலேயே அரச தோரணை இருந்தது. அவன் விசாலமான அழகிய முகத்தை சற்றே பக்கங்களில் மறைத்துத் தொங்கிய கருமையான தலைக்குழல் பகுதிகள் அந்த முகத்துக்கு ஒரு கம்பீரத்தையும் அளித்தன. இரண்டொரு சமயங்களில் அந்தக் குழல்கள் காற்றில் விலகியதால், காதுகளில் துலங்கிய மகர வளையங்கள் இரண்டும் அவன் முகத்தைத் திருப்பிய சமயத்தில் அசைந்த விதத்தில் கூட ஒரு கண்ணியம் தெரிந்தது. விசாலமான நெற்றியில் அவன் வாள்போல் தீட்டியிருந்த திலகமும், ஈட்டிக் கண்களும் ஈட்டிகளால் உடலில் ஏற்பட்டிருந்த சில தழும்புகளும் அவன் வீரத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. அவற்றின் குரூரத்தைத் தணிக்கவோ என்னவோ, அவன் அரும்பு மீசையின் கீழே யிருந்த அழகிய உதடுகளில் ஒரு கம்பீரப் புன்முறுவல் சதா தவழ்ந்து கொண்டிருந்தது.
புலவரை மூன்றாவது முறை அவன் கூப்பிடாவிட்டாலும் கூடத்தின் ஒரு மூலைக்கு அவன் நடந்து சென்ற தோரணையிலும் கால்கள் பரவிய உறுதியிலும் ஒரு தீர்மானமும் திடமும் இருந் தன. பெரியவரை, அவரது சிந்தனையில் இருந்து இழுக்கக் கூடாது என்ற காரணத்தால் அந்த வாலிபன் காலரவம் கேட்காமல் பூனை போல் நடந்து சென்று ஒரு மாடத்தில் இருந்த ஒலைச் சுவடியை யும், விளக்கையும் எடுத்து இன்னொரு மாடத்தில் இருந்த இருக்கையில் வைத்தான். புலவர் உட்காருவதற்கு வேண்டிய புலித்தோல் ஒன்றையும் அவரது இருக்கையில் விரித்துவிட்டு. அந்த ஆசனத்துக்கு எதிரில் கையை மார்பில் கட்டிக் கொண்டு மவுனமாக நின்றான்.
தீபம் இடம் மாறியதால், திடீரென்று தமது பக்கத்தில் இருந்த ஒளி மறைந்த காரணத்தால் புலவர் கோவூர் கிழார் சட் ன்று திரும்பினார். கூடத்தின் நடுவில் நின்று கொண்டு இருந்த இளைஞனைப் பார்த்துத் திகைத்து, “நீ வந்து எத்தனை நேரமாகிறது?” என்று வினவினார், கவலை ஒலித்த குரலில்.
இளைஞன் இதழ்களில் புன்முறுவலை நன்றாக விரியவிட்டான். ஒரு விநாடி. பிறகு பதில் சொன்னாள்,”அதிக நேரமாகவில்லை” என்று.
மேற்கொண்டு புலவர் கேள்வி ஏதும் கேட்கவில்லை: ஆசனத்தில் இருந்த ஒலைச்சுவடியையும் பார்த்து விளக்கையும் நோக்கி னார். அவர் நோக்கு பிறகு இளைஞனின் இடையிலும் நிலைத்தது. அதில் வழக்கமாக இருந்த வாள் இல்லை. அதற்குப் பதில் நீண்ட எழுத்தாணி ஒன்று விலை உயர்ந்த கற்கள் பதித்த பிடியுடன் காணப்பட்டது. அதைக் கண்ட புலவர், நகைத்தார், பெரிதாக.
இளைஞன் புலவரை நோக்கித் தலை தாழ்த்தி வணங்கினான் ஒரு முறை! பிறகு கேட்டான் “ஆசிரியர் நகைக்கும் காரணம் புரியவில்லையே? ” என்று.
“வாளைக் காணோம்” என்றார் புலவர்.
“ஆம்.”
“பதிலுக்கு எழுத்தாணி இருக்கிறது.”
“ஆம்!”
“அது இருக்கும் இடத்தில் இது இருக்கக் காரணம்?”
“அதைவிட வலிமை வாய்ந்தது; அது செய்யும் தொழிலை நிரந்தரமாக்குவது.”
ஆசிரியர் தமது சீடனை உற்று நோக்கிவிட்டுச் சொன்னார்: “நலங்கிள்ளி! இப்பொழுது சோழநாட்டுக்குத் தேவை புலவர்கள் அல்ல; வீரர்கள்”.
நலங்கிள்ளியின் முகத்திலும் புன்முறுவலின் சாயை மறைந்து சற்றுத் துன்பரேகை படர்ந்தது. “புலவர் பெருமானே! வாள் சாதிப்பது அதிகமல்ல. அதை நீங்கள் இதுவரை நோக்கிக் கொண்டிருந்த நாற்புறமும் நிரூபித்திருக்கிறது. புகாரின் முகப்புப் பகுதி புறக்கண்களில் இருந்து மறைந்துவிட்டது. ஆனால், அகக் கண்களில் இருந்து மறையாத, காலத்தால் அழிக்க முடியாத காட்சிகளைத்தானே நீங்கள் பாடம் சொல்லிக் கொடுக்கிறீர்கள்? அவற்றை எழுதி வைத்த புலவர்கள் சிறந்தவர்கள் அல்லவா!” என்று வினவினான், சோழனான நலங்கிள்ளி.
புலவர் ஆம் என்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்தாள். பிறகு சற்று எட்டச் சென்று ஒரு மாடத்தில் இருந்த தமது தலைப் பாகையை அணிந்து கொண்டு கூடத்தின் மத்திக்கு வந்து ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். இளவரசனும் மேற்கொண்டு பேச் சுக் கொடுக்காமல் ஓலைச்சுவடிகளை எடுத்துக் கொண்டு விளக்கின் பக்கத்தில் அடக்கமாக அமர்ந்து, இடைக்கச்சையில் இருந்த எழுத்தாணியையும் உருவிக் கையில் பிடித்துக் கொண்டாள்.
புலவர் சற்று நேரம் கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் இறங்கினார். பிறகு கண்களைத் திறந்து எதிரே அடக்கத்துடன் உட்கார்ந்திருந்த சீடனைக் குனிந்து நோக்கி. “இளவரசனே! நேற்று எதுவரை எழுதியிருக்கிறாய்?” என்று வினவினார்.
“என் முதாதையர் கரிகாற் பெருவளத்தார் தோள் வலி தீர, எதிரிகளை வென்ற கதை வரை எழுதியிருக்கிறேன்” என்றான் நலங்கிள்ளி.
“சரி, மேற்கொண்டு எழுதிக்கொள்” என்ற புலவர் மனப் டத்தில் இருந்ததை அலட்சியமாக உதிர்க்கத் தொடங்கினார். “வடவர் வாடக் குடவர் கூம்பத் தென்னவன் திறல்கெட” என்ற பட்டினப்பாலைப் பகுதியை மறுபடியும் சொல்லிவிட்டு, வடநாட்டு அரசர்களையும், சேரமானையும், பாண்டியனையும் கரிகாலன் முறி யடித்த வரலாற்றை விளக்கலானார். இப்படி அவர் சுவடியின் உதவியின்றி மனப்பாடத்திலேயே பாடம் சொல்வதைக் கேட்டு நலங்கிள்ளி வியப்பின் வசப்பட்டாலும், எழுதுவதை நிறுத்தாமல் எழுத்தாணியைத் துரிதமாக ஓட்டிக் கொண்டே சென்றான். புலவ ரும் மடை திறந்தது போல் பட்டினப்பாலைப் பகுதிகளைச் சொல் லிக் கொண்டு சென்றவர், திடீரென ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு, “நலங்கிள்ளி ஒரு முக்கிய விஷயம் மறந்து விட்டேன்” என்றார்.
இப்படி, திடீரென்று கிழாரின் உரை நின்றதால் எழுத்தாணி யும் நின்று விடவே, தனது ஈட்டிக் கண்களை புலவரை நோக்கி உயர்த்திய நலங்கிள்ளி “என்ன விஷயம் ஆசிரியரே?” என்று வினவினான் சிறிது கவலையுடன், ஏதோ முக்கிய காரணம் இல்லா மல் பாடத்தைப் பாதியில் ஆசிரியர் நிறுத்தமாட்டார் என்ற நினைப்பால்.
புலவர் உடனடியாகப் பதில் சொல்லாமல் சிறிது சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு அவராக விஷயத்தைச் சொல்லாமல், “நெடுங்கிள்ளியிடம் இருந்து செய்தி ஏதாவது வந்திருக்கிறதா?” என்று கேட்டார்.
“இல்லை, ஏதும் வரவில்லை” என்றான் நலங்கிள்ளி, எதற்காகப் புலவர் கேட்கிறார் என்பதை உணராமல்.
“எனக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது” என்ற கோவூர் கிழார். தனது மடியில் இருந்த ஓர் ஓலையை எடுத்து நலங்கிள்ளியிடம் கொடுத்தார்.
நலங்கிள்ளி அதைப் பிரித்துப் படித்தான். பிறகு ஏதும் புரியா, மல் புலவரை ஏறெடுத்து நோக்கினான்.
“என்ன எழுதியிருக்கிறது அதில்?” என்று வினவினார்,புலவர்.
நலங்கிள்ளி ஓலையின் மீது கண்களை ஓட்டி, “நெடுங்கிள்ளி யின் அரண்மனைக்கு அவனி சுந்தரி வந்திருக்கிறாள்” என்று சற்று இரைந்தே படித்தான். ஆனால், அவன் முகத்தில் குழப்பமே இருந்தது.
“இன்னும் புரியவில்லையா உனக்கு?” என்று வினவினார் புலவர்.
“புரியவில்லை. யார் இவள் அவனிசுந்தரி?”
“கன்னர நாட்டவள்”
“இருந்தால் என்ன?”
“நிகரற்ற அழகுடையவள்”
“அப்படியா! “
“அது மட்டுமல்ல…”
“வேறு என்ன?”
“சோழ நாட்டைப் பிடிக்க வந்த சனியன்”
இதைக் கேட்ட நலங்கிள்ளியின் முகத்தில் வியப்பு மலர்ந்தது.
“சற்று விரிவாகத்தான் சொல்லுங்களேன்” என்று கேட்டான் பணிவுடன் புலவரை நோக்கி.
“பிறகு சொல்கிறேன், எழுது” என்று பணித்த புலவர். பட்டினப்பாலையை மேலும் சொல்ல, இளவரசன் எழுதிக் கொண்டே போனான்.
அந்தச் சமயத்தில் அந்த மாமணிக் கூடத்தின் பக்கக் கதவு லேசாக திறக்கப்பட்ட ஒலி கேட்டு பாடம் சொல்வதை நிறுத் தாமலே கண்களை அந்தப்புறம் திருப்பிய கோவூர் கிழாரின் முகத்தில் மிதமிஞ்சிய திகில் படர்ந்தது.
அவர் கண்களுக்கு எதிரே கதவை ஒரு கையால் பிடித்த வண்ணம் நின்றிருந்தாள் ஓர் அழகி. அவளைக் கண்டதால் அவர் உதடுகள் அடைத்துப் போனாலும், நலங்கிள்ளி மட்டும் தனது முகத்தை உயர்த்தவில்லை. புலவர் வாயில் இருந்து வார்த்தைகள் ஏதும் சில விநாடிகள் வராது போகவே “புலவர் பெருமானே!” என்று அழைத்துத் தலையை சற்றே நிமிர்ந்தான். அவர் கண்களை அவன் கண்களும் தொடர்ந்தன. பாதி மட்டும் திறந்த கதவை ஒட்டி நின்ற அழகிய ஓவியம் அவனைத் திக்பிரமையடையச் செய் தது. “இது யார் புலவரே?” என்று வினவவும் செய்தான் பிரமையின் விளைவாக.
வெறுப்புடனும் பயத்துடன் உதிர்ந்தன புலவர் வாயில் இருந்து சொற்கள். “இவள்தான் அவனிசுந்தரி”.
2 – இதோ அத்தாட்சி
மயன் செதுக்கிவிட்ட சித்திரப்பாவையென அழகெல்லாம் திரண்டு நின்ற பெண்தான் அவனிசுந்தரி என்பதைக் கேட்டதும் வாலிபனான நலங்கிள்ளி விவரிக்க வொண்ணா வியப்பில் ஆழ்ந்தான். கவிஞர்கள் வர்ணிப்புக்கும் அப்பாற்பட்ட கவர்ச்சியுடன் காட்சியளித்த அந்தக் காரிகையைப் பற்றிப் புலவர் சொன்னது எல்லாம் உண்மையாக இருக்க முடியுமா என்ற சந்தேகங்கூட, அவளைப் பார்த்ததும் ஏற்பட்டது அந்த வாலிபனுக்கு. ஆகவே அவன் நீண்ட நேரம் அவளைத் தன் கண்களால் துருவித் துருவிப் பார்த்தான்.
பால்வடியும் குழந்தையின் முகம் போலக் களங்கம் சிறிதும் தோன்றாத அந்த முகத்தின் அழகு அவன் உள்ளத்தை அப்படியே கொள்ளை கொண்டது. லேசான சலனமுற்ற கண்கள் மருண்ட மானின் விழிகளை அவன் நினைவுக்குக் கொணர்ந்தன. அவன் இத யத்தைக் கவ்வவும் செய்தன. நீண்ட தூரப் பயணத்தை அறிவிக் கு ம் வகையில் அவள் பிறை நுதலில் துளிர்த்திருந்த நாலைந்து வியர்வைத் துளிகள் கூட, முத்துக்களைப் போல அழகுக்கு அழகு செய்தன. காற்றில் அலைந்து அந்த முத்துக்களில் வளைந்து பதிந்து கிடந்த இரண்டு மூன்று முடியிழைகள், இயற்கை ஏதோ அவள் நுதலுக்குச் சித்திரம் தீட்டிய பிரமையை உண்டாக்கின.
நுதலுக்கு மேலேயிருந்த கரிய கூந்தல் நன்றாக எடுத்துப் பின்னப்பட்டு வைர மாலை யொன்றால் சுருட்டிக் கட்டப்பட்டு இருந்தது, பிறைச் சந்திரனை மறைக்க முயலும் நீருண்ட மேகத்தை நினைவுபடுத்தியது. நுதலுக்குக் கீழே கரேலென்று இயற்கை வரைந்திருந்த விற்புருவங்கள், தங்கள் அம்புகள் குறிதவறாதவை என்பதைக் காட்டுவதற்காக ஒரு முறை மேலே இறங்கின.
காதல் அம்புகளை வீசிய சலன விழிகளில் ஏதோ ஒரு சிரிப் பும் ஆழமும் இருந்தன. விழிகளை வகுத்து நின்றது போலும், இணைக்கவிடாத கரைபோலும், தெரிந்த அழகிய நாசி. அதிகக் கூர்மையும் இல்லை,சப்பையும் இல்லை. எந்த அளவில் இருக்க வேண்டுமோ அந்த அளவில் இருந்தது.
அந்த நாசியில் இருந்து விரிந்த செழித்த மாம்பழக் கன்னங் களில் திட்டாகத் தெரிந்த குங்குமச் சிவப்பு அவள் நாணத்தால் ஏற்பட்டதா அல்லது இயல்பே அப்படியா என்று நிர்ணயிக்க முடி யாத நிலையை ஏற்படுத்தியிருந்தது.
அந்த அழகிய கன்னங்களை இணைத்துக் கிடந்த பவள உதடு களில் இருந்த ஈரமும், அவை சற்றே விலகியிருந்ததால் உள்ளே தெரிந்தும் தெரியாமலும் இருந்த இரு முத்துப் பற்களும், அவை உதடுகளா அல்லது அமுதம் சிந்தும் சுரபியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.
இதழ்களுக்குக் கீழேயிருந்த முகவாயும் அதற்குக் கீழே இறங்கிய சங்குக் கழுத்துமே மயக்கத்தைத் தந்தனவென்றால். கழுத்திற்கும் கீழே அளவோடு எழுந்த அழகுகள் இரண்டு, துறவிகளையும் அலைக்கழிக்கும் திறன் தங்களுக்கு உண்டென நிமிர்ந்து திமிறியே நின்றன.
அவள் நீண்ட மலர்க் கைகளில் ஒன்று கதவைப் பற்றியிருந்த தால் இருப்பது பொய்யோவென ஐயுறும்படியிருந்த சிற்றிடை சிறிது ஒருபுறம் தள்ளிக் கிடந்ததன் காரணமாக, அதற்கு அடுத்த பெரும்பகுதி ஒன்று தனியாகத் தள்ளி நின்றது, அவள் ஏதோ நாட்டிய பாணியொன்றைக் கையாளுவதாகப் பிரமை ஊட்டியது. ஒரு காலை இன்னொரு கால் மீது மாற்றி வைத்து அவள் நின்ற நிலை கூட மலைக்கத்தக்கதாகவே அமைந்திருந்அப்படி ஒரு கால் மீது இன்னொரு கால் பாவி நின்றதால், அவள் அழகிய வாழைத் தொடைகள் இணைந்து விட்டதால் இடையே அகப்பட்டுக் கொண்ட மெல்லிய அவள் சேலை, எத்தனையோ மனோ தர்மங்களுக்கு இடங்கொடுத்தது.
இப்படி அவளை அணு அணுவாக ஆராய்ந்த சோழன் நலங்கிள்ளி, “இந்த அழகியிடம், இந்தக் குழந்தை முகத்திடம், என்ன தவறு இருக்க முடியும்? புலவர் எதற்காக இல்லாத பொல்லாத கற்பனையெல்லாம் செய்கிறார்?” என்றே நினைத்தான்.
புலவர் பெருமானான கோவூர் கிழார், நலங்கிள்ளியின் பார்வையையோ அவன் முகத்தில் ஏற்பட்ட மாறுதலையோ கவனிக்கத் தவறவில்லை என்றாலும், அந்த நிலையில் தான் சொல்லக் கூடியது ஏதுமில்லையென்பதை உணர்ந்தார். விதி ரூபத்தில் வந்து மதிமயக்கும் அந்த மாயை நலங்கிள்ளியைச் சூழ்ந்து வருவதைத் தம்மால் தடுக்க முடியாது என்பதையும் புரிந்து கொண்டார். ஆகவே இருக்கும் நிலையைச் சீர்படுத்திக் கொள்ள, “உள்ளே வரலாம். ஏழைப் புலவன் இருப்பிடத்தின் கதவுகள் யாருக்கும் திறப்பவை” என்று கூறினார்.
அவர் சொற்களைக் கேட்டதும், அரச தோரணையில் அவருக்கும் தலைவணங்கினாள், அவருக்கு எதிரே அமர்ந்து தன்னை அணு அணுவாக எடை போட்டுக் கொண்டிருந்த வாலிபனுக்கும் தலை வணங்கினாள், அவனிசுந்தரி, பிறகு மெல்ல அவ்விருவரையும் நோக்கி நடந்தும் வந்தாள்.
அவள் நடந்தபோது அவள் எடுத்து வைத்த அடி ஒவ்வொன்றிலும் அழகு அள்ளிச் சொரிவதைக் கண்டான் வாலிபனான நலங்கிள்ளி காலசைவு அவள் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை அசைவுகளை, திருப்பங்களை, எழுச்சிகளின் விளம்பரங்களைத் தெரியப்படுத்துகின்றன என்பதைப் பார்த்த நலங்கிள்ளி, அந்த நடைக்கும் அசையாத மார்பின் தன்மையை மட்டும் கண்டு, சிலப்பதிகாரத்தின் ஆரம்பச் செய்யுள் எத்தனை உண்மையானது என்று நினைத்தான். அவனியின் மார்புக்கு மலைகளை உவமை சொன்னதும் நதிகளை மலைகளாக இளங்கோ விவரித்ததும் எத்தனை உண்மை என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். “அதோ அவள் மார்பில் அசையும் இரு முத்து மாலைகளே வளைந்தோடும் நதிகளைப் போலத்தானே இருக்கின்றன?” என்று தனக்குள் சிலப்பதி கார ஆசிரியரை சிலாகித்தான். இத்தனை நினைப்பிலும் தான் சிலாகித்தது சிலப்பதிகார ஆசிரியரையோ அவர் கவிதையையோ அல்ல என்பதையும், எதிரே எழில் குலுங்க வந்த பிரத்தியட்ச தேவதையே என்பதையும் அவன் உணரவும் செய்ததால், உள்ளுக்குள் சிறிது வெட்கத்தைக்கூட அடைந்தான்.
மெல்ல மெல்ல நடந்து வந்த அவனிசுந்தரி, நலங்கிள்ளியை நேரே நோக்கா விட்டாலும், பக்கவாட்டில் வீசிய ஒரு பார்வை யிலேயே அவன் மன நிலையை உணர்ந்து கொண்டாள். “எப்பேர்ப்பட்ட வீரனும் பெண்ணைப் பார்த்தால் விழுந்துவிடுகிறான்” என்று தனக்குள்ளே சொல்லிச் சிரித்துக் கொண்டாள். அந்த ஒரு பார்வையில் கிடைத்த நலங்கிள்ளியின் வீரமுகம் தன் மனதை எதற்காக அப்படி அல்லல்படுத்துகிறது என்பதை நினைத்துப் பார்த்து உள்ளூர வியப்பும் கொண்டாள். எந்த ஆண் மகனுக்கும் இடங் கொடாத தன் மனம், நெடுங்கிள்ளியைத் துச்சமாகத் தூக்கி எறிந்த தன் உள்ளம், இந்த வாலிபனை மட்டும் உதாசீனப்படுத்தவோ உதறித் தள்ளவோ சக்தியற்று விட்டதை நினைத்து சிறிது அஞ்சவும் செய்தாள், அந்த அஞ்சுகம். அந்த அச்சத்தில் உள்ளம் நிலைகுலைந்தது என்றாலும், தான் வந்த பணியை நினைத்துத் தன்னை சிறிது கடினப்படுத்திக் கொண்டாள்.
அவள் தந்தை அவளுக்கு இட்ட உத்தரவு அந்த சமயத்தில் அவள் உள்ளத்தில் பெரிதாக எழுந்து நின்றது. கன்னர நாட்டு மாளிகையின் அந்தரங்க அறையில் அமைச்சர்கள் முன்னிலையில் “அவனிசுந்தரி! பெரும் பணியை முன்னிட்டு நீ சோழ நாடு செல்கிறாய் என்பதை மறவாதே! எந்தச் சோழ நாட்டின் வலிமையால் நமது நாடு வலிமை இழந்ததோ, எந்த சோழர்களின் வீரத்தை உலகம் பறைசாற்றுவதால் நம் வீரத்தின் ஒளி குன்றிக் கிடக்கிறதோ, அந்த சோழ நாட்டை இரண்டாகப் பிளந்துவிடு. அதற்காக உன்னைப் பலியிட்டுக் கொள்வதானாலும் தவறு இல்லை. செல் பெண்ணே” என்ற தந்தையின் உத்தரவு அவள் இதயத்துக்குள் பெரிதாக ஒலித்தது.
இத்தனை விவகாரங்கள் உள்ளத்தை நிரப்ப நடந்து வந்து புலவருக்கு எட்டவே நின்ற அவனி சுந்தரி, “புலவர் பெருமான் பெருமை எங்கள் நாடு வரை எட்டியிருக்கிறது. தங்களைக் காணக் கொடுத்து வைத்தது எனது பாக்கியம்” என்று மிக அடக்கத்துடன் கூறினாள்.
புலவர் பெருமான் உடனடியாக அவளுக்குப் பதில் ஏதும் கூறவில்லை. உறையூரில் இருந்தவள் இங்கு எதற்காக வந்து இருக் கிறாள் என்று உள்ளூரக் கேட்டுக் கொண்டார். அதுவும் யாரும் அறியாமல், எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல், உறையூரில் இருந்து புகாருக்கு எப்படி அவள் வரமுடிந்தது என்பதும் வியப்பாயிருந்தது, புலவருக்கு. ஆகவே, கன்னரத்து இளவரசியை ஏறெடுத்து நோக்கிவிட்டுச் சொன்னார், “கன்னர நாட்டு இளவரசி யின் பெருமையும் இந்த நாட்டை எட்டியிருக்கிறது” என்று.
அவர் சொற்களில் அடக்கமிருந்தது. ஆனால் அவற்றில் ஒலித் தது புகழ்ச்சியா இகழ்ச்சியா என்பது மற்றவர்களுக்குப் புரியா திருந்தாலும் அந்த சூட்சமத்தை அவனி சுந்தரி கண்ணிமைக்கும் நேரத்தில் புரிந்து கொண்டாள். மெல்லப் புன்னகையும் கொண்டாள். “பெருமையா சிறுமையா புலவரே?” என்று வினவவும் செய்தாள் புன்னகையின் ஊடே.
புலவர் கண்களில் புத்தொளியொன்று திடீரெனத் தோன்றி மறைந்தது. “இளவரசியிடம் என்ன சிறுமை இருக்க முடியும்?” என்று கேட்டார், ஏதும் புரியாதது போல.
இளநகையை நீக்கித் துன்பநகை கொண்ட கன்னர நாட்டு இளவரசி கூறினாள், “புலவர் பொய் சொல்லக்கூடாது” என்று.
“என்ன பொய் சொல்லிவிட்டேன்?” என்று எரிச்சலுடன் அதுவரை இருந்த நிதானத்தைக் கைவிட்டுக் கேட்டார் புலவர்.
“சோழ நாட்டைப் பிடிக்க ஒரு சனியன் வந்திருப்பதாக நீங்கள் கூறவில்லையா சற்று முன்பு” என்று கேட்டாள் அவனி சுந்தரி துன்பம் தோய்ந்த குரலில்.
“அது…அது…” என்று குழறினார் புலவர்.
“உண்மைதான் புலவரே! நான் சோழ நாட்டைப் பிடிக்க வந்த சனியன் தான். சந்தேகம் வேண்டாம்” என்றாள் அவனி சுந்தரி, துயரத்திலும் கம்பீரம் குன்றாமல்.
“அது ஆத்திரத்தில் சொன்ன வார்த்தை…” என்று சமா தானம் சொல்ல முயன்றார், புலவர்.
சமாதானம் தேவையில்லை என்பதைக் குறிப்பிடக் கையைச் சிறிது அசைத்த அவனி சுந்தரி, “புலவரே! நீர் சொன்னது முற்றி லும் உண்மை. சோழ நாட்டைப் பிடிக்கவந்த சனியன் தான் நான். இன்றுடன் சோழ நாடு இரண்டாகப் பிளக்கிறது” என்று கூற வும் செய்தாள்.
இதைக் கேட்ட புலவர் சரேலென ஆசனத்தில் இருந்து துள்ளி எழுந்தார். அவர் எழுந்ததால் நலங்கிள்ளியும் எழுந்தான்.”என்ன சொல்கிறாய் மகளே?” என்று கேட்டார் பீதி தொனித்த குரலில், கோவூர் கிழார்.
“இன்றில் இருந்து சோழ நாடு இரண்டுபடுகிறது. அதற்கு அத்தாட்சியும் கொண்டு வந்திருக்கிறேன்” என்ற அவனி சுந்தரி. ‘பூதலா! பூதலா!’ என்று சற்று இறைந்து கதவை நோக்கிக் கூவினாள். அடுத்த விநாடி பயங்கர மீசையுடனும் ராட்சத உரு வத்துடனும் ஒரு வீரன் உள்ளே நுழைந்தான் கையில் ஓர் உடலை தாங்கி.
அந்த உடலைக் கண்ட புலவர் பெருமானும், நலங்கிள்ளியும் பேரதிர்ச்சி கொண்டு, பேசும் திறனை அறவே இழந்து, சிலைகள் போல நின்றுவிட்டார்கள் பல விநாடிகள். பயங்கர மவுனம் அந்தக் கூடத்தை ஆட்கொண்டது.வெளியே கடலில் இருந்து எழுந்த பெருங்காற்று ஊழிக்காற்றுபோல் “ஊ”வென இறைந்து கூச்சல் இட்டது. சோழ நாட்டில் பிரளயம் ஏற்பட்டுவிட்டதைக் கோவூர் கிழார் மட்டுமல்ல, நலங்கிள்ளியும் உணர்ந்து கொண்டான்.
– தொடரும்
– அவனி சுந்தரி, ராணி முத்து, ராணி பப்ளிகேஷன்ஸ், சென்னை.