கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 10, 2023
பார்வையிட்டோர்: 1,350 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

11 – 12 | 13 – 14 | 15 – 16


13. விடை கிடைத்தது

ஆவூர்ச் சாலையில் இருந்து கரிகாலன் சத்திரம், வழிப்பு போக்கர்கள் தங்குவதற்காக ஏற்பட்டதாயிருந்தாலும், கரிகால் பெருவளத்தான் காலத்திலேயே கட்டப்பட்டிருந்ததன் விளைவாக, அவன் பெயரை அது தாங்கி நின்றாலும், திருமாவளவன் பெயர் நிலைத்த அளவுக்கு அது உரம் பெற்றதாயில்லை. காலத்தின் போக்கு அதன் சுவர்களில் பல இடங்களில் வெடிப்புக் கொடுத்திருந்தது. காரைகள் பல இடங்களில் உதிர்ந்து கிடந்தன. நெடுங்கிள்ளியைப் போன்ற ஒரு மன்னன் தங்குவதற்கு அது சரியான இடமல்லவாயினும் சாலையிலிருந்து தள்ளி, சோலையின் உட்புறத்தில் இருந்தபடியால், அதிலேயே அன்றிரவு தங்கினான் நெடுங்கிள்ளி. தங்கியது மட்டுமின்றி, சோலை முகப்பில் இரண்டு காவலரையும் வைத்திருந்தான் சாலையைக் கண்காணிக்க. 

இருப்பினும், அவன் கண்காணிப்புப் பயன் அளிக்கவில்லை. மாவளத்தான் அந்த சத்திரத்தைப் பற்றி ஏற்கனவே சரியாக அறிந்திருந்தபடியால், அது நெருங்கியதும், புரவிகளை மெதுவாகவும் குளம்பு ஒலிகள் நீண்ட தூரம் கேட்காமலும் நடத்தும்படி தனது வீரர்களுக்குக் கட்டளையிட்டான், தவிர திடீரெனச் சாலையின் பக்கவாட்டில் புகுந்து சோலைக்குள்ளேயே மறைந்தும் விட்டான் வீரர்களுடன். சத்திரம் சிறிது தூரம் இருக்கையிலேயோ தனது வீரர்களைச் சோலையில் நிறுத்திவிட்டு, ‘இங்கேயே நில்லுங்கள், ஏதாவது உதவி தேவையானால் குரல் கொடுக்கிறேன். அல்லது பந்தம் கிடைத்தால் ஆட்டிச் சைகை செய்கிறேன். உடனடியாக விரைந்து வாருங்கள்’ என்று உத்தரவிட்டுத் தனது புரவியை மட்டும் நிதானமாகச் செலுத்திக் கொண்டு, சத்திரத்தின் அருகில் வந்தான். அங்கிருந்த நெருக்கமான மரங்கள் ஒன்றின் மறைவில் சிறிது நேரம் குதிரை மீதேஅமர்ந்திருந்துவிட்டுக் கீழே இறங்கி பூனைபோல் அடிமேல் அடி வைத்துச் சத்திரத்தை நோக்கிச் சென்றான். 

சத்திரத்தின் ஓர்புறம் பல மரங்கள் இருந்ததாலும், சத்திரத்தின் முன் தாழ்வரையிலும் பக்கத்து அறைகளிலும் விளக்குகள் தெரிந்ததாலும், மரங்களின் மறைவில் மெள்ளச் சென்று, பக்க வாட்டு அறையை ஒட்டி நின்ற ஒரு மரத்தின் மீது ஏறி உள்ளே கவனித்தான். அறை விளக்கொளியில் அவனி சுந்தரி மிகுந்த யோசனையுடன் உலாவிக் கொண்டிருந்ததையும், அவள் தனித்தே இருந்ததையும் கவனித்த மாவளத்தான், நெடுங்கிள்ளி காரணமாகவே பூதலனை அவளிடம் இருந்து பிரித்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான். பிறகு மெள்ள அந்த மரக்கிளையில் ஊர்ந்து சென்று, அறைச் சாளரத்தை அணுகி, மிக மெள்ள அழைத்தான். “அரசகுமாரி” என்று. 

அரசகுமாரி அறைக்குள் உலாவுவதை நிறுத்திச் சட்டென்று அழைப்பு வந்த திசையை நோக்கினாள். ஆனாலும் அறைக்குள்ளே விளக்கிருந்த காரணத்தால் வெளியே இருட்டிலிருந்த மாவளத்தானைப் பார்க்க அவளால் முடியாமல் மிரண்டு விழித்தாள். “இங்குதான் மரக்கிளையில் இருக்கிறேன்” என்று மீண்டும் மெதுவாகச் சொற்களை உதிர்த்தான் மாவளத்தான். அரசகுமாரி சாளரத்தை அணுகி வெளியேயிருந்த மரக்கிளையை சற்றுச் சிரமப்பட்டு நோக்கியதும், மாவளத்தான் இருந்த இடத்தைக் கண்டு பிடித்துக்கொண்டதும், அவள் வியப்பு அதிகமாயிற்று. அதைவிட ஒருபடி அச்சம் அதிகமாகவே சொன்னாள், “சென்று விடுங்கள். நெடுங்கிள்ளி பார்த்தால் உங்களைக் கொன்றுவிடுவான்” என்று. 

அதைப் பற்றி மாவனத்தான் கவலைப்பட்டதாகத் தெரிய வில்லை.”வெளியே வரமுடியுமா?” என்று வினவினான் அவன் கிசுகிசுவென்று. 

“முடியாது. அறை பூட்டப்பட்டிருக்கிறது” என்றாள் அவளும் ரகசியமாக. 

“பூதலன் எங்கே?” என்று வினவினான் மாவளத்தான். 

“எதிர் அறையில்” என்றாள் அவள். 

“சரி, பொறுங்கள். மீண்டும் வருகிறேன்” என்று சொன்ன மாவளத்தான் கிளையில் இருந்து பூனையைத் தோற்கடிக்கும் நிசப்தத்துடன் இறங்கினான். பிறகு மெள்ள சத்திரத்தின் பின்புறமாக நடந்து சென்று காவலைச் சோதித்தான். காவல் அங்கு இருந்தாலும், சத்திரத்தை ஒட்டியே இருந்தபடியால் சற்றுச் சுற்றிச் சென்று, அவனி சுந்தரியின் எதிர் அறையின் வெளிப்புறத்தை அடைந்தான். அங்கும் ஒரு மரம் துணை புரியவே அதன் மேலும் ஏறினான். ஆனாலும், கிளை அறைச் சாளரத்தை நெருங்காததால் சற்று எட்ட இருந்தே அறையைக் கவனிக்க முடிந்தது. அங்கு, பூதலனின் பூதாகரமான உருவம் கைகால்கள் பிணைக்கப்பட்டு அறையின் தரையில் உருண்டுகிடந்தது. அந்த நிலையில் எதையும் தான் நேராகச் செய்ய முடியாது என்றாலும், தனறு கச்சையில் இருந்த குறுவாள் ஒன்றை எடுத்துக் குறிபார்த்து சாளரத்தின் சின்னஞ்சிறு மரக்கட்டைகளுக்கு இடையே எறிந்தான். 

குறுவாளும் கட்டைகளைத் தொடாமல் பூதலன் உடல் மெத்தன வீழ்ந்தது. 

பூதலன் சட்டென்று எழுந்திருக்க முயன்றும், முடியாததால் மெல்லத் தன் மீது விழுந்தது எதுவென்று பார்த்தாள். கத்தி என்பதையறிந்ததும், அவன் முகத்தில் சற்று நேரம் வியப்பும் பிறகு மகிழ்ச்சியும் உலாவலாயிற்று. மெதுவாக நெளிந்து புரண்டு, கத்தியை முதலில் தரையில் கிடத்தினாள். அடுத்தபடி அவன் பற்கள் அந்தக் கத்தியின் பிடியைக் கெட்டியாகக் கடித்துக் கொண்டன. மெள்ளத் திமிறி உட்கார்ந்து கொண்ட பூதலன், அந்தக் கத்தியின் கூர்மையான பாகத்தைத் தன் கைக்கட்டுகளின் மேல் செலுத்தி, வாயாலேயே கயிறுகளை ராவிக் கைகளை விடுவித்துக் கொண்டான். கைகள் விடுதலையடைந்ததும், கால்களை விடுவித்துக் கொள்வது ஒரு பொருட்டாயில்லை அவனுக்கு இப்படிக் கால்கள் சுவாதீனப்பட்டதால், கத்தியுடன் எழுந்து, பூதம் போல் நின்ற பூதலன், கைகளை அசைத்தும், கால்களை உதறிக் கொண்டும் தன்னை சரிசெய்து கொண்டான், இரண்டே விநாடிகளில் பிறகு சாளரக் கட்டைகளைத் தனது பெரும் கைகளால் அசைக்க ஆரம்பித்தான். ஏற்கனவே கிலமாயிருந்த கட்டிடப் பக்கங்கள், அவன் அசுர பலத்துக்கு இணங்கியதால் சாளரம் வெகு சீக்கிரம் தனக்கும் கட்டிடத்துக்கும் இருந்த பந்தத்தை உதறிவிட்டு உள்ளே படுத்துக் கொள்ளவே, அதன் மீது ஏறினான் பூதலன். மரத்தில் இருந்த மாவளத்தான் மெள்ள “உஸ்” என்று எச்சரிக்கை ஒலி கிளப்பிவிட்டு, “அந்தக் கயிறுகளையும் எடுத்துக் கொள்” என்று மெள்ளக் கூறினான். 

பூதலன் ஏதும் பேசவில்லை. மீண்டும் அறைக்குள் இறங்கிக் கயிறுகளை எடுத்துக்கொண்டு, சாளரத்தில் இருந்து கீழே அரவம் சிறிதும் செய்யாமல் சுவரைப் பிடித்துக்கொண்டு சரிந்து இறங்கினான். மாவளத்தானும், மரத்தில் இருந்து இறங்கி, அவனைத் தொட்டு காதோடு காதாக, “சத்தம் செய்யாமல் வா” என்று மரங்களின் மறைவில் நடந்து, அவனி சுந்தரியின் அறைக்கு வந்து. அந்த மரக்கிளையையும் சாளரத்தையும் பூதலனுக்குச் சுட்டிக் காட்டினான். பிறகு அங்கிருந்து தனது புரவியையும் சுட்டி காட்டி, “இதில் அரசகுமாரி வரலாம்” என்று கூறிவிட்டுத் தனது வீரர் மறைந்திருந்த இடத்தையும் கையால் சுட்டிக் காட்டினான். அறிந்து கொண்டதற்கு அறிகுறியாகப் பூதலன் தலையசைக்கவே, மாவளத்தான் அந்த இடத்தைவிட்டு அகன்றான். 

பூதலன் மிகுந்த திறமையுடன் தனக்கிட்ட பணியை நிறைவேற்றினான். கையில் இருந்த கயிறுகளை ஒன்றாகப் பிணைத்துக் கொண்டு மரக்கிளையில் ஊர்ந்தான். பிறகு அவனி சுந்தரி இருந்த அறை சாளரத்தை மரத்தில் ஊர்ந்த வண்ணமே அசைத்து எடுத்தான். பிறகு கயிற்றின் ஒரு நுனியை மரக்கிளையில் கட்டி மீதியை அறைக்குள் எறிந்தான். அவனி சுந்தரி அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டதும், மெள்ள மெள்ள கயிற்றை இழுத்த பூதலன், அவளை லேசாக வெளியே ஊஞ்சலாட வைத்துத் தரையில் இறக்கினான். பிறகு தானும் இறங்கி, அவளை மாவளத்தான் புரவியில் ஏற்றினான். அடுத்த சில விநாடிகளில் பூதலனையும் அரசு குமாரியையும் கொண்ட நான்கு புரவிகள் புகாரை நோக்கி நகர்ந்தன. புரவிகளைக் கொடுத்த மாவளத்தானின் இரு வீரர்கள் சோலைப் பகுதிகளின் மறைவில் நடந்து மறைந்தனர். இந்த ஊர்வலம் மறுநாள் புகாருக்குள் புகுந்து புலவர் மாளிகைக்கு வந்தது. 

புலவர் அவர்களைச் சற்றுக் கவலையுடனே வரவேற்றார். பிறகு அரசகுமாரியை நோக்கிச் சொன்னார், “அரசகுமாரி! நீ வந்த காரியம் நிறைவேறிவிட்டது” என்று, 

அவனி சுந்தரியின் கண்களில் நெருப்புப்பொறி பறந்தது. “எந்தக் காரியம் புலவரே?” என்று வினவினாள். 

“சோழ நாட்டைத் துண்டாடும் காரியம்” என்றார் புலவர். 

“என்று கிள்ளிவளவர் கொல்லப்பட்டாரோ, அன்றே பிளந்துவிட்டது” என்றாள் அவனி சுந்தரி, கோபமும் வெறுப்பும் கலந்த குரலில். 

“அப்பொழுது பிரிந்தது மண்ணாசையால்; இப்பொழுது பிரிந்தது பெண்ணாசையால்” என்றார் புலவர். 

அவனி சுந்தரியின் கோப முகத்தில் ஏளனப் புன்முறுவலின் சாயையும் விரிந்தது.”என் மீது நெடுங்கிள்ளி ஆசைப்படுகிறானா?” என்று அலட்சியமாகக் கேட்டாள் அவள். 

“இல்லாவிட்டால், உன்னைத் தூக்கிச் செல்வானேன்?” 

“நீங்கள் எதற்காகச் சிறை செய்தீர்கள் என்னை?” 

“நாட்டைக் காக்க” 

“என்னைச் சிறை செய்தால் நாடு காக்கப்படுமா?” 

“அப்படித்தான் நினைத்தோம்” 

“இப்பொழுதுதான் வந்துவிட்டேனே. நாட்டைக் காப்பாற்றுங்களேன்” இதைச் சொன்ன அவனி சுந்தரி மெல்ல நகைத்தாள். 

புலவர் ஏதும் பதில் சொல்லவில்லை அவளுக்கு. மாவளத்தானை ஏறெடுத்து நோக்கினார். நடந்ததை மாவளத்தான் கூற நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டு, புலவர், “இனி இந்த நாட்டில் ரத்தம் ஓடும். போரைத் தவிர்க்க முடியாது” என்று கூறினார். 

மாவளத்தானுக்கு ஏதும் புரியவில்லை. “ஏன் புலவரே! அரசகுமாரியை மீட்டுவிட்டோம். இனி எதற்காகப் போர்?” என்று வினவினான். 

“மாவளத்தான்…!” என்ற புலவரின் குரலில் வருத்தம் நிரம்பிக் கிடந்தது. 

“உம்” 

“சோழ நாட்டில் சில முறைகள் உண்டு”. 

“உம்” 

“தாயாதியாயிருந்தாலும், மானம் என்று குறுக்கிடும்போது சோழ மன்னர் போர் தொடுப்பார்கள்”. 

“ஆம்” 

“நெடுங்கிள்ளி உங்கள் அண்ணனைக் கொன்றிருக்கிறான். அது மட்டுமல்ல, உங்கள் தலைநகருக்கே வந்து, உங்களால் சிறை செய்யப்பட்ட அரசகுமாரியை விடுவித்து அழைத்துச் சென்று விட்டான். இதைவிடப் புகாருக்கு மானக்கேடு ஏதுமில்லை. முதல் காரணத்துக்காகவே போர் நிகழ்ந்திருக்கும். இரண்டாவது காரணத்துக்குப் போர் மிக நிச்சயம். பெண் குறுக்கிடும் போதெல்லாம் போர்தான். புராணங்களிலும் அப்படித்தான்! வரலாற்றிலும் அப்படித்தான்” இதை மிகுந்த வருத்தத்துடன் கூறினார் புலவர். 

மாவளத்தான் புலவர் சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை, எப்படியும் போரைத் தவிர்க்கலாம் என்றே எண்ணினான். அந்த எண்ணத்துடன் அவனி சுந்தரியைப் புலவர் மாளிகையில் விட்டுத் தான் மட்டும் அரண்மனைக்குச் சென்று அண்ணனைச் சந்தித்தான். அவன் வந்த சமயத்தில், முதன் முதலாக அவனும் புலவரும் சந்தித்த அதே அந்தரங்க அறையிலேயே நலங்கிள்ளி உட்கார்ந்திருந்தான், தீவிரமான சிந்தனையுடன். அவன் சிந்தனையை மாவளத்தான் பிரவேசம் கலைக்கவே, தலையைத் தூக்கிய நலங்கிள்ளி, “சென்ற பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டாய் தம்பி” என்று கூறினான். 

அந்தக் கூற்று மாவளத்தானுக்கு எந்தவித வியப்பையும் அளிக்கவில்லை. தான் அரசகுமாரியுடன் வந்திருப்பதை புகாரின் வீரர்கள் உடனடியாக அரசனுக்கு அறிவித்திருப்பார்கள் என்பதை அவன் உணர்ந்தே இருந்தான். “ஆம் அண்ணா! முடித்து விட்டேன் ஒருவிதமாக உங்கள் ஆணையை. ஆனால், அது வெற்றி கரமானதா அல்லவாவென்பதை என்னால் சொல்ல இயலாது” என்றான். 

புகாரின் மன்னனிடமிருந்து வந்த பதில் அவளைத் திகைக்க வைத்தது. “வெற்றிதான் தம்பி. ஆனால், இந்த வெற்றி போரை, முடிக்கும் வெற்றி அல்ல; போரைத் தொடங்கும் வெற்றி” என் றான் நலங்கிள்ளி, மனம் சிதைந்த குரலில். 

போர் என்றால் எப்பொழுதும் குதூகலப்படும் அண்ணன் குரலில், அன்று துக்கம் தொனிப்பதைக் கண்ட மாவளத்தான். கேட்டான், “புலவர் உன்னையும் சரிப்படுத்தி விட்டாரா?” என்று.

“புலவர் சரிப்படுத்த எதுவும் இல்லை. சம்பிரதாயம் சரிப் படுத்துகிறது” என்றான் நலங்கிள்ளி. 

“சம்பிரதாயத்தை உடைத்தால்?”

“சிலவற்றை உடைக்க முடியாது” 

“ஏன்?” 

“தன்மானம் அதில் சம்பந்தப்படுவதால்” 

“ஆகையால்?” 

“போருக்குச் சித்தம் செய்” 

“படைகளைச் சன்னத்தப்படுத்தவா?” 

“ஆம். உடனே.” 

“நீங்கள்?” 

“நான் வருவதற்கு இல்லை, பதினாறாவது நாள் சடங்கு முடியும் வரை.” 

“அப்பொழுது?” 

“நீ நடத்திச் செல் படையை” 

“எதற்கு? எங்கு?” 

“ஆவூருக்கு”

இதைக் கேட்ட மாவளத்தான் திகைத்தான். “நெடுங்கிள்ளி ஆவூரில்தான் அடைபட்டுக் கிடப்பான் என்பது என்ன நிச்சயம்? ஏன் அவன் உறையூர் செல்லக்கூடாது?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். ஆனால் விடை கிடைத்தது, இரண்டே நாளில். 


14. கைச்சிறை

அவனி சுந்தரியைப் புலவர் மாளிகையில் விட்டு அண்ணனிடம் பேசி, எப்படியாவது போரைத் தவிர்த்து விடலாம் என்று அரண்மனை வந்த மாவளத்தான், அண்ணனும் புலவர் கருத்தையே, கொண்டிருப்பதைக் கண்டதும், வேறு வழியின்றிப் போருக்கு வேண்டிய ஆயத்தங்களை மறுநாள் முதலே செய்ய ஆரம்பித்தான். இருப்பினும், அந்த விஷயத்தில் அதிகத் துரிதத்தைக் காட்டாமலும், சிறிது அலட்சியமாகவே ஏற்பாடுகளைச் செய்யலானான். எப்படியும் இரண்டொரு நாட்களில் போரைத் தவிர்க்கக்கூடிய செய்தி ஏதாவது நெடுங்கிள்ளியிடம் இருந்து வரும் என்ற எதிர்பார்ப்பினால். 

ஆனால் இரண்டு நாட்கள் கழித்து வந்த செய்தி அவனைத் திகிலடையச் செய்தது. நெடுங்கிள்ளி கோழையாகையால், எப்படியும் போரைத் தவிர்க்கும் முறைகளைக் கையாண்டு சமாதானத்திற்கு வருவான் என்றும், உறையூர் சென்றதும் அமைச்சர்களாவது அவன் மனதைத் திருப்புவார்கள் என்றும் மாவளத்தான் நம்பிக்கை கொண்டிருந்தான். ஆனால் அந்த நம்பிக்கை எத்தனை அர்த்தமற்றது என்பது விளங்கியது மூன்றாம் நாள் காலையிலேயே. மூன்றாவது நாள் அரச காரியங்களைக் கவனிக்கவும், வழக்குகளைத் தீர்த்து நீதி வழங்கவும், நீதி மண்டபத்தில் நலங்கிள்ளி உட்கார்ந் திருந்த சமயம், நெடுங்கிள்ளியின் தூதன் ஒருவன் வந்து சேர்ந்து இருப்பதைக் காவலர் அறிவித்தனர். 

அரசனுக்கு சற்று எட்ட அமர்ந்திருந்த மாவளத்தான் சைகை காட்ட, வெளிச் சென்று தூதனை அழைத்து வந்த காவலர், அவனைச் சுதந்திரமாக விட்டதும், தூதன் இரைந்த குரலில் பேசலானான். 

“புகார் மன்னனே! இது எங்கள் மன்னர் நெடுங்கிள்ளி விடுவிக்கும் தூது. வீரர்களைக் கொண்டு அவனி சுந்தரியை விடுவிக்க வழியில்லாமல், நள்ளிரவில் திருடன் போல் நுழைந்து அவளைச் சிறை மீட்ட கோழையான உன்னை, எங்கள் மன்னர், வீரர்கள் திலகம், புகாரின் காவலர், மன்னிப்புக் கேட்கும்படியும், திருடிய பெண்ணைத் திரும்ப அனுப்பவும் ஆணையிடுகிறார். இல்லையேல், படைகளுடன் ஆவூரில் சந்திக்கும்படி அறைகூவுகிறார்” என்ற சொற்களைப் பயமின்றி உதிர்த்தான் தூதன். 

நலங்கிள்ளி மட்டும் சிறிது கண்காட்டியிருக்காவிட்டால், தூதனை அங்கேயே காவலர் வெட்டிப் போட்டிருப்பார்கள். ஆனால் அரசன் எச்சரிக்கைக் காரணமாக, வாட்களின் மேல் வைத்த கையை அகற்றினார்கள். அடுத்தபடி நலங்கிள்ளி மெல்லப் பதில் சொன்னான். “தூதனே! உன் பணியைத் திறம்படச் செய்தாய். உன் மன்னனிடம் சென்று இன்று சொற்களில் காட்டிய வீரத்தைச் செயலிலும் ஆவூரில் காட்டும்படி நான் கூறியதாகச் சொல்” என்று சர்வசாதாரணமாகக் கூறி, அவனைச் செல்லலாம் இன்று கையைக் காட்டினான். 

தூதன் அகன்றதும், மாவளத்தான் தனது கண்களை அரசனை நோக்கித் திருப்பினாள். நலங்கிள்ளியின் இதழ்களில் புன்முறுவல் அரும்பி நின்றது. “மாவளத்தான்! உன் சந்தேகத்துக்கு விடை கிடைத்துவிட்டது” என்று கூறினான் முறுவலின் ஊடே. 

“எதைப் பற்றிச் சந்தேகம் அண்ணா?” மாவளத்தான் கேள்வியில் வியப்பு ஒலித்தது 

“போரைப் பற்றி” 

“நான் சந்தேகம் கொண்டதாக யார் சொன்னது?” 

“நீ செய்யும் நிதான ஏற்பாடுகள்!” 

இதைக் கேட்ட மாவளத்தான் பிரமித்துத் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டான். அரியணையில் இருந்து கொண்டே நலங்கிள்ளி சொன்னான் “தம்பி! எனக்கும் போரில் விருப்பமில்லை. ஆயினும், நம்மையும் மீறிய நிகழ்ச்சிகள் நம்மை ஆட்கொள்ளும் போது, கடமையைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று. 

அந்த அறிவுரையைக் கேட்ட மாவளத்தான், அரச சபையில் இருந்து வெளியேறினான். அடுத்த இரண்டு நாட்களில் படைப் பிரிவுகளை வெகு துரிதமாகச் சன்னத்தம் செய்துவிட்டு, அண்ணன், ஆணையைப் பெற அவன் அந்தரங்க அறைக்குச் சென்றான். அண்ணனுடன் அங்கு புலவரும் – அவனி சுந்தரியுங்கூட இருப்பதைப் பார்த்ததும், சற்று தயங்கினான். அவன் தயக்கத்தைக் கண்ட புலவர் பெருமான், “மாவளத்தான் எதற்கும் தயங்கத் தேவை யில்லை. இப்பொழுதே படையெடுப்புத் தாமதமாகிவிட்டது. ஆகவே உடனடியாகக் கிளம்பு. ஆவூர்க் கோட்டைக்குள் நெடுங்கிள்ளி உணவுப் பொருட்களை சேகரிப்பதற்குள், நீ கோட்டையை வளைக்காவிட்டால், அவனைப் பணிய வைப்பது கஷ்டம்” என்று கூறினார். 

“ஆமாம், தம்பி! ஆவூர்க் கோட்டைச் சுவர்கள் பலமானவை. நமது பாட்டனார் கரிகாலரால் கட்டப்பட்ட திடமான கோட்டைகளில் அது ஒன்று. அதன் கதவுகளை உடைப்பதோ, அகழியைக் கடந்து சுவர்கள் மீது ஏறுவதோ, அத்தனை சுலபம் அல்ல. ஆகவே விரைந்து கோட்டையை வளைத்து விடு” என்று கூறினான், நலங்கிள்ளி. 

இருவரையும் வணங்கி மாவளத்தான் புறப்பட முயன்ற சமயத்தில், அவனி சுந்தரி மெல்லக் கூறினாள் “எதற்கும் பூதலவை யும் கூட அழைத்துச் செல்லுங்கள்” என்று. 

மாவளத்தான் சரேலென அவளை நோக்கித் திரும்பினாள். “எதற்குப் பூதலன்?” என்று வினவவும் செய்தான், தீ விழி விழித்து. அவன் பார்வை இத்தனைக்கும் நீ தானே காரணம் என்று குற்றஞ்சாட்டுவது போலிருந்தது. 

அதை அவனி சுந்தரி கவனித்தாளானாலும், லட்சியம் செய்தாளில்லை. “கோட்டைகளின் பலவீனங்களைப் பூதலன் நன்றாக அறிந்தவன். தவிர உங்களைக் கண் இமையைப் பாதுகாப்பது போல் பாதுகாப்பான்” என்றும் கூறினாள். கன்னரத்து இளவரசி மாவளத்தான் விழிகளில் இருந்த சீற்றம் சிறிதும் தணியவில்லை. பூதலன் உங்களைக் காத்த லட்சணத்தைக் கரிகாலன் சத்திரத்தில் நேரிடையாகக் கண்டேன். அத்தகைய பாதுகாப்பு எனக்குத் தேவையில்லை. தவிர கோட்டையைப் பற்றிச் சோழர்கள் அறியாததைக் கன்னரர் அறிந்திருக்க முடியாது” என்று பதில் கூறினான், சீற்றம் குரலிலும் ஒலிக்க. 

அவனி சுந்தரி அதற்கு நேரிடையாகப் பதில் சொல்லவில்லை. “எங்களை நெடுங்கிள்ளி எப்படிக் கைது செய்தான் என்பதை நீங்கள் அறிந்து இருந்தால் இப்படிக் குற்றம்சாட்ட மாட்டீர்கள். தவிர நீங்கள் வராதிருந்தாலும் நாங்கள் இன்னும் இரண்டு நாளில் தப்பியிருப்போம். அந்த விவாதம் இப்பொழுது வேண் டாம். உங்கள் நன்மையையும் சோழ நாட்டு நன்மையையும் முன் னிட்டுச் சொல்கிறேன் அழைத்துச் செல்லுங்கள் பூதலனை” என் என்றாள், அவனி சுந்தரி திடமான குரலில். 

ஆனால் மாவளத்தான் அவளுக்குப் பதில் ஏதும் சொல்லாமல் அண்ணனிடமும் புலவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினாள். அடுத்த இரண்டு நாழிகைகளுக்கெல்லாம் அரண்மனை வாசலில் முரசுகள் முழங்கின. புலவரும் நலங்கிள்ளியும் அவனி சுந்தரியும் வாயிலுக்குச் செல்ல, அங்குப் புரவி மீது பூர்ண கவசமணிந்து மாவளத்தான் அமர்ந்திருந்தான். நலங்கிள்ளி வெளியே வந்து அரண்மனைப் படிகளில் நின்றதும், தனது வாளை அவனை நோக்கி ஒருமுறை தாழ்த்தி மீண்டும் உயர்த்தினான். மறுபடியும் முரசுகள் முழங்கின. இம்முறை தாரைகளும் ஊதப்பட்டன. இளவரசன் புரவி ராஜ நடைபோட்டு நடந்து செல்ல, முதலில் புரவிப் படையும், அடுத்து யானைப் படையும், பிறகு தேர்களும் காலாட்படையும் அவனைத் தொடர்ந்தன. கடைசிக் காலாட்படை வரிசை அரண்மனையைக் கடக்கும் வரை, அங்கேயே நின்றிருந்த நலங்கிள்ளி, கடைசியாகப் புருடனும் அவனி சுந்தரியுடனும் உள்ளே சென்றான். 

அன்று முழுவதும் அவன் மனதில் நிம்மதி இல்லை. தனது அறையில் ஏதேதோ நினைத்த வண்ணம் உலாவிக் கொண்டிருந் தான். உணவும் அவனுக்கு அதிகமாக உட்செல்லவில்லை. இரவு வந்ததும் உறங்க முயன்றும் உறக்கமும் வராததால் நந்த வனத்தை நோக்கி நடந்தான், அன்றும் பால் நிலவு காய்ந்து கொண்டிருந்தது. நந்தவனத்து மயில்களும் குறுக்கே நடை போட்டன. ஆனால், இந்த இன்பச் சூழ்நிலையில் மனம் சிறிதும் செல்லாது போகவே, மெள்ளப் பளிங்குச் சுனையை நோக்கி நடந் தான். அதன் படிகளில் உட்கார்ந்து சிந்தனையில் இறங்கினான். அதே பளிங்குப்படியில் சில நாட்கள் முன்பு தன்னுடன் அவனி சுந்தரி நடத்திய நாடகத்தை எண்ணிப் பார்த்தான். “அந்த நாடகத்தால் விளைந்த போர்தானே இது” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். “சேசே! என்ன தவறு? என்னைக் காக்கத்தானே அவனி சுந்தரி அந்த நாடகம் ஆடினாள்” என்று தன்னைத் திருத்தி யும் கொண்டான். “பெண்கள் இல்லாவிட்டால் பூசலில்லை” என்று சற்று உரக்கவும் சொன்னான். அதைத் தொடர்ந்து தனது பின்னால் கேட்ட ஒரு நகைப்பொலியின் விளைவாகத் திரும்பிய நலங்கிள்ளி, தனக்கு வெகு அருகாமையில் அவனி சுந்தரி நின்று கொண்டு இருப்பதைப் பார்த்தான். 

பார்த்ததும், குழப்பமடைந்து, “நீ புலவர் மாளிகை செல்ல வில்லை?” என்று வினவினான் சொற்கள் தடுமாற. 

“இல்லை” என்றாள் அவனி சுந்தரி, இம்முறை நகைக்கவில்லை அவள்; புன்னகை பூத்தாள். 

“போனதை நான் பார்த்தேனே. 

“பார்த்தீர்கள்” 

“அப்படியானால்…?” 

“திரும்பியதைப் பார்க்கவில்லை?* 

“எப்பொழுது திரும்பினாய்?”

“திரும்பிக் கொண்டே இருக்கிறேன்?” 

“இன்னும் அரண்மனை செல்லவில்லையா?” 

“இல்லை” 

“இங்குதான் நான் இருப்பேன் என்பது உனக்குத் தெரியுமா?” 

“தெரியாமலா வந்தேன்?” 

“எப்படித் தெரியும்?” 

“மனதுக்கு அமைதி அளிக்கும் இடம் இது, உங்கள் மனதுக்குத் தற்சமயம் அமைதி தேவை. ஆகையால் வேறு எங்கு போவீர்கள்?”

இதைக் கேட்ட பின்பும், அவளுக்குப் பதில் சொல்லவில்லை நலங்கிள்ளி, திரும்பி பார்த்தவன் பார்த்தபடி மலைத்து விட்டான் பல விநாடிகள். அவள் மெல்லக் கேட்டாள். “நான் போகட்டுமா?” என்று. 

”எங்கே?” சினத்துடன் வந்தது நலங்கிள்ளியின் கேள்வி. 

அவன் சினம் அவளுக்கு உள்ளூர மகிழ்ச்சியைத் தந்தாலும், அவள் அதை வெளிக்காட்டவில்லை. “ஏன் என் அறைக்குத்தான்” என்றாள் அவள், எந்த உணர்ச்சியையும் புலப்படுத்தாத குரலில். 

நலங்கிள்ளியின் சினம் அப்பொழுதும் குறைந்தபாடில்லை. “உன் அறை என்று ஒன்று அரண்மனையில் இருக்கிறதா?” என்று விளவினான். 

“இருக்கிறது. நீங்கள் என்னை சிறையில் வைத்த அறை” என்று அவள் நகைத்தாள். 

நலங்கிள்ளி அவளைக் கூர்ந்து நோக்கினான். பிறகு கோபம் தலைக்கேறியதால், அவள் கையைப் பிடித்து இழுத்து தனது பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான். அவன் கைகள் இரண்டும் அவளைச் சற்று முரட்டுத்தனமாக ஒட்டின. அவள் நகைத்தாள் மீண்டும். 

“இம்முறை எதற்காக நகைக்கிறாய்?” என்று வினவினான் நலங்கிள்ளி. 

“சிறை இடம் மாறிவிட்டது” என்றாள் அவள். 

“எப்படி?” 

“அறைச் சிறைக்குப் போகப் பார்த்தேன்; அதற்குப் பதில் கைச் சிறையில் இருக்கறேன்.” 

“கைச் சிறையா?” 

“ஆம். உங்கள் கைகள் இட்டிருக்கும் சிறை,” இம்முறை மிக மயக்கமாக நகைத்தாள் அவள். நலங்கிள்ளி சுய கட்டுப்பாட்டை பண்பாட்டை, அனைத்தையும் அறவே மறந்தான். அவளை மிக முரட்டுத்தனமாக அணைத்துக் கொண்டான். 

அவள், அவன் கைகள் இட்ட சிறையில் கிடந்தாள் சம்மதத்துடன். “இன்னும் பதினாறு நாட்கள் முடியவில்லையே?” என்று இன்பமாக முணுமுணுத்தாள். 

நலங்கிள்ளி சொன்னான், அவள் காதுக்கருகில், “கணக்கை மறந்துவிட்டேன்” என்று.

– தொடரும்

– அவனி சுந்தரி, ராணி முத்து, ராணி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *