கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை நாடகம்
கதைப்பதிவு: February 23, 2024
பார்வையிட்டோர்: 2,051 
 
 

(2013ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி 5-6 | காட்சி 7-8 | காட்சி 9-11

ஏழாம் காட்சி 

(மேடையில் சாலை போன்ற அமைப்பு. கதிரவன் மறைந்து கொண்டிருக்கும் மாலை நேரம். புலவர் உருத்திரங்கண்ணனார், சிந்தனை வயப்பட்டு நடந்து கொண்டிருக்கிறார். சில நிமிடங்களில் ஓர் இளம்பெண் அவரைப் பிடித்து இழுக்கிறாள். அந்த இளம்பெண் வேறு யாருமல்ல. மல்லிகை) 

உருத்திரங்கண்ணனார்: யார் நீ? பண்பாடற்ற முறையில் என்னைப் பிடித்து இழுக்கிறாய்? 

மல்லிகை : உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் பெருமானே. அங்கே நீர் ஆதாரத்திற்காக வெட்டி வைத்த பள்ளம் இருக்கிறது. அது தெரியாமல் ஏதோ சிந்தனையில் மூழ்கிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள். 

உருத்திரங்கண்ணனார் : மன்னிக்க வேண்டும். தங்கள் உதவிக்கு நன்றி. என் பெயர் தங்களுக்கு எப்படித் தெரிந்தது? 

மல்லிகை : தங்களைத் தெரியாதவர் இந்த ஊரில் யார் உண்டு? சாலையில் செல்லும்போது கவனமாகச் செல்லுங்கள். ஒவ்வொரு முறையும் என்னைப் போல் யாராவது வந்து உதவ மாட்டார்கள் அல்லவா? (சிரிக்கிறாள்) 

உருத்திரங்கண்ணனார்: மிகப் பெரிய பள்ளம். விழுந்தால் எழுந்து வருவதும் எளிதாக இருக்காது. இங்கு அக்கம் பக்கத்தில் ஆள் அரவம் இல்லை. நன்றி தங்கள் பெயர்… 

மல்லிகை : மல்லிகை. அரண்மனை ஆடல் நாயகி முல்லையின் தங்கை. 

உருத்திரங்கண்ணனார் : ஓ! இப்பொழுது நினைவுக்கு வருகிறது தங்கள் முகம். சகுந்தலா நாட்டிய நாடகத்தில் மேனகையாக வந்தீர்கள். சகுந்தலையை துஷ்யந்தன் புறக்கணித்த நேரத்தில் அவள் அம்மா என்றழைக்கும்போது வானிலிருந்து வருவது போல் தோன்றி சகுந்தலையிடம் பேசும் காட்சியில் நன்றாக அபிநயம் காட்டினீர்கள். நீங்களும் தனியாகவே நன்றாகவே நாட்டியம் ஆடலாமே. நன்றாக ஜொலிப்பீர்கள். 

மல்லிகை : தங்கள் ஆலோசனைக்கும் பாராட்டுக்கும் நன்றி. என் தமக்கை நிலவென்றால் நான் அவள் அருகில் இருக்கும் விண்மீன். 

உருத்திரங்கண்ணனார் : இது தங்கள் தன்னடக்கத்தைக் காட்டுகிறது. இல்லையென்றால் நாட்டியத்தாரகை என்ற பெயர் முல்லையைத் தவிர வேறு யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்று விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். 

மல்லிகை : ஏதேது? ஒற்றுமையாக இருக்கும் சகோதரிகளிடையே போட்டியை உண்டாக்க நினைக்கிறீர்கள் போலிருக்கிறது. 

உருத்திரங்கண்ணனார் : நான் அந்த மாதிரி தவறான கண்ணோட்டத்தில் கூறவில்லை. நீங்களும் ஆவர்த்தனம் காட்டி திறமைகளை வெளிப்படுத்தலாமே ஏன் அவரது நிழலிலேயே இருக்கிறீர்கள் என்று கேட்க விரும்புகிறேன் ஒரு கலைச்சுவைஞன் என்ற முறையில். 

மல்லிகை : எனக்கு நாட்டியத்தில் ஓகோ என்று வரவேண்டும் என்ற விருப்பம் இல்லை. என் அக்காவுக்கு நடனம்தான் மூச்சு. நடனம்தான் பேச்சு. அவளுடைய ஆடல் நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைய உறுதுணை புரிவதுதான் என் பணி. 

உருத்திரங்கண்ணனார் : நீங்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்கள். வியப்புக்குரிய மங்கை நீங்கள். 

மல்லிகை : அருகில்தான் எங்கள் இல்லம். வந்து செல்லலாமே. 

உருத்திரங்கண்ணனார் : மற்றொரு சந்தர்ப்பத்தில் வருகிறேன். இந்த மஞ்சள் சேலை உங்களுக்கு எடுப்பாக இருக்கிறது. 

மல்லிகை : அப்படியா? சாலையில் பள்ளமா மேடா என்று பார்க்காத அளவுக்கு என்ன சிந்தனை? சொல்லக்கூடும் என்றால் சொல்லுங்கள். 

உருத்திரங்கண்ணனார் : நாடு காக்கும் தமிழ் மன்னன் ஒருவன் எழுதிய சங்கத் தமிழ்க் கவிதையை எளிய சொற்கோலத்தில் மனதிற்குள் வடித்து வந்தேன். 

சோழமன்னன் கிள்ளிவளவன், அன்னதானம் தந்த பண்ணன் என்ற வள்ளலைப் பற்றிப் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்று உள்ளது. பண்ணன் கிழவன். இளைஞனான மன்னன், தன் ஆயுள் அமையட்டும் பண்ணனுக்கு என்று வாழ்த்துகிறான். 

மல்லிகை : மன்னரின் பாடலை தங்கள் வார்த்தையில் சொல்லுங்கள் மகிழ்வுடன் செவிமடுக்கிறேன் நான். 

உருத்திரங்கண்ணனார் : பசிப்பிணிப் போக்கும் வள்ளல் பண்ணன். 

அவன் வீடு தேடி அலையும் என் கண்கள் 
மிகத் தொலைவில் ஆரவார ஒலிகள் 
உணவு வழங்குவோரின் பரிவுக் குரல்கள். 
இரை தூக்கிப் போகும் எறும்புகள் போல 
உணவோடு சிறுவர்கள் மேட்டின்மேலே 
மனதுக்கு மகிழ்ச்சியூட்டும் 
இந்தக் காட்சி உணர்த்துகிறதே பண்ணனின் மாட்சி. 
பண்ணனின் வீடு எங்கே சொல்வீர் பல்லுலகீர்! 
இளைஞனான என் ஆயுளே அந்தக் கிழவனுக்கு 
வாய்க்கட்டும் இந்த நிலவுலகில் 

மல்லிகை : எளிய சொற்கோலம் நன்றாக இருக்கிறது. ஓதுவது ஒழியேல். 

உருத்திரங்கண்ணனார்: எழுதுவதற்கும் ஓதுவது வேண்டும் என்று குறிப்பிடுகிறீர்களா… 

மல்லிகை : தாங்கள் படிக்கப் படிக்க இதுபோல் நிறைய எழுதுவீர்கள் அல்லவா? அதனால் ஒளவைப் பாட்டி சொன்னதை உரைத்தேன். இருட்டப் போகிறது. எங்கள் அன்னையார் தேடுவார். நான் விடைபெறுகிறேன். 

உருத்திரங்கண்ணனார்: மீண்டும் சந்திப்போமோ? 

மல்லிகை : சந்திக்க வேண்டும் என்றிருந்தால் கண்டிப்பாக சந்திப்போம். (போகிறாள்) 

உருத்திரங்கண்ணனார்: பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத என் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி விட்டாளே இந்த மங்கை? (தளபதி மேடையின் இடப்பக்கத்திலிருந்து வருகிறார்) 

தளபதி : இளைய நண்பருக்கு வணக்கம். 

உருத்திரங்கண்ணனார் : வணக்கம். நண்பருக்காக அன்றிரவு தங்களிடம் கோபித்துக் கொண்டு பேசி விட்டேன். தளபதியார் மன்னிக்க வேண்டும். 

தளபதி: நமக்குள் என்ன இருக்கிறது? போதை தலைக்கேறி நானும் ஏதோ பிதற்றி விட்டேன். மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். மன்னித்து விடுங்கள். 

உருத்திரங்கண்ணனார் : ஐயா. நீங்கள் பெரிய மனிதர். நான் சிறியவன். இப்படி எல்லாம் பேசலாமா? ஒரே ஒரு வேண்டுகோள். 

தளபதி : சொல்லுங்கள். 

உருத்திரங்கண்ணனார் : இந்த மதுபானப் பழக்கத்தை விட்டு விடுங்களேன்… தங்களுடைய பெருமையை சீர்குலைக்கிறதே அந்தப் பழக்கம்… 

தளபதி : என்னுடன் தொடர்பில் உள்ள நண்பர்கள் அரசரும் நீரும் மட்டும்தான். அரசரும் அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருக்கிறார். நீரும் சொல்கிறீர். போதைப் பழக்கத்திலிருந்து விடுபட முயற்சி செய்கிறேன். சரி. முகத்தில் என்ன தனி ஒளி? காதலில் விழுந்து விட்டீரா? 

உருத்திரங்கண்ணனார் : நானாவது காதலில் விழுவதாவது? தங்களுக்குத் தெரியுமா? இதுவரை நான் காதல் கவிதை எழுதியதே இல்லை. 

தளபதி : இனிமேல் எழுதுவீர். 

உருத்திரங்கண்ணனார் : என்ன சொல்கிறீர்… 

தளபதி : எழுதும் வேளை வரும் என்று கூறினேன். மஞ்சள் பறவை அழகாக இருக்கிறது அல்லவா? 

உருத்திரங்கண்ணனார் : மஞ்சள் பறவையா? எங்கே…? 

தளபதி : நான் வரும்போது தொலைவிலிருந்து பார்த்தேன். இப்பொழுது காணோம். 

உருத்திரங்கண்ணனார் : பறந்து போயிருக்கும். 

தளபதி : இருக்கும் இருக்கும். நான் விடைபெறுகிறேன். பார்ப்போம். 

(தளபதி போவதுபோல் பாவனை செய்கிறார்) 

உருத்திரங்கண்ணனார் : நானும் விடைபெறுகிறேன். இலக்கிய உலா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். அரசியாரும் மற்றவர்களும் காத்திருப்பார்கள். (உருத்திரங்கண்ணனார் மேடையின் இடப்பக்கமாக செல்கிறார்) (தளபதி அங்கேயே நிற்கிறார்.) 

(இருட்டத் தொடங்கியதன் அடையாளமாக சில விளக்குகள் மட்டும் அணைக்கப்படுகின்றன. தளபதி நிற்கும் இடத்தில் உள்ள இடத்தில் ஒளி பாய்ச்சப்படுகிறது. தாமரை மேடையின் வலப்பக்கத்திலிருந்து வருகிறாள். தளபதியின் அருகில் வந்து நிற்கிறாள்.) 

தாமரை : படைத் தலைவருக்கு வணக்கம். 

தளபதி: வணக்கம். வாருங்கள். உடல் நிலை குணமாகி விட்டதா? அரசர் மிகவும் வருத்தப்பட்டார். 

தாமரை : உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வருகிறது. மாமன்னரிடம் நான் வழங்கிய தகவல்களைக் கொடுத்து விட்டீர்களா? 

தளபதி: கொடுத்து விட்டேன். ஏன் முகம் வாடியிருக்கிறது? எதற்கும் அஞ்சாமல் சாகசப் பணிகளை மேற்கொள்பவர் முகத்தில் வாட்டம் என்றால் எனக்கு வியப்பாக இருக்கிறது.

தாமரை : நானும் பெண்தானே… என் மனம் கல்லிலா செய்யப்பட்டிருக்கிறது. 

தளபதி: சில பெண்களின் உள்ளங்கள் பாறாங்கல்லாகத்தான் இருக்கின்றன. 

தாமரை : என்ன சொல்கிறீர்கள்…? 

தளபதி : அது சொந்தக் கதை. ஒருநாள் விரிவாகச் சொல்கிறேன். தாமரை வாடியிருப்பதற்குக் காரணம் என்ன? சொல்லுங்கள். 

தாமரை : தங்களிடம் கூறுவதற்கு என்ன? தாயகம் வந்து சேர்ந்ததும் என்னைத் தீர்த்துக் கட்ட சிலர் ஏற்பாடு செய்துள்ளனர் என்று தகவல் கிட்டியது. அதனால்தான், ஆண்வேடமிட்டு அரண்மனை நோக்கி வந்து கொண்டிருந்தேன். அப்போது ஆள் அரவமற்ற மழை நேரத்தில் என்னை அடையாளம் கண்டு என்னைத் தாக்க முற்பட்டனர் இரண்டு குண்டர்கள். நான் அவர்களிடமிருந்து தப்பிக்க கல்மண்டபத்தில் ஒளிந்திருந்தபோது மழை வலுத்துவிட்டது. அங்கேயே படுத்திருந்தேன். தங்கை வந்து பார்த்தாள். அழைத்துச் சென்று விட்டாள். 

தளபதி : தங்களைத் தாக்கியவர்கள் யார் என்று நான் கண்டு பிடிக்கிறேன். இதைப் பற்றி அன்று சந்தித்த போது கூறவில்லையே. 

தாமரை : அப்போது அவகாசம் அமையவில்லை. 

தளபதி : சேர வேண்டிய இடத்தில் சேர்த்து விட்டீர்கள். பிரிந்தவர்கள் கூடினால் பேசவும் வேண்டுமோ? என்பார்களே… 

தாமரை : நன்றாகச் சொன்னீர்கள் போங்கள். பேசிப் பேசியே கொல்கிறார்கள் தங்கையும் புதல்விகளும். இதற்கு அந்தத் தடியன்களாலேயே கொலை செய்யப்பட்டு மேலே போயிருக்கலாம். 

தளபதி : ஏன் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்… கோழி மிதித்து குஞ்சு சாகாது என்பார்களே. அதுபோலவே குஞ்சு மிதித்து கோழி செத்து விடுமா என்ன..? அவரவர் கோணம் அவரவருக்கு. பெற்ற பிள்ளைகளாக இருந்தாலும் தங்கள் கோணத்தில் பார்க்க மாட்டார்கள். ‘உங்கள் குழந்தைகள் உங்கள் மூலம் வருகிறார்களேயன்றி அவர்கள் உங்கள் குழந்தைகள் அல்லர். வாழ்வின் குழந்தைகள்’ என்று இமயத்துக்கு அப்பால் வாழ்ந்த ஒரு புலவன் எழுதி யிருப்பதாக மகாராணி அரசரிடம் சொல்லிக் கொண் டிருந்தார். புதல்விகளிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் நீங்களாக இருங்கள். அவர்கள் அவர்களாக இருக்கட்டும். வாழ்க்கை சில விஷயங்களைப் புரிய வைக்கும்போது அவர்கள் தங்களைப் புரிந்து கொள்ளும் நேரம் வரலாம். வராமலும் போகலாம். அதற்காக நீங்கள் உடைந்து போகாதீர்கள். ‘போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும்’ என்று கவியரசு சொன்னதைக் கவனத்தில் கொள்ளுங்கள். 

போற்றுபவர்களில் முகம் தெரியாதவர்கள் இருப்பார்கள் தூற்றுபவர்களில் தங்கள் உடலிலிருந்தே வந்தவர்கள் இருப்பார்கள். இதற்கெல்லாம் துவண்டு விடாதீர்கள். சோராமல் தங்கள் பணியைத் தொடருங்கள். 

தாமரை : தங்கள் தெம்புரை என் கலக்கத்தைப் போக்கியது. தெம்பைத்தந்தது. மிக்க நன்றி. தங்களால் உரை ஆற்றவும் முடியும் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன். 

தளபதி : உரையாவது ஒன்றாவது. என் மனதில் தோன்றியதைச் சொன்னேன். கலங்காமல் இப்படி புன்னகை அரசியாக இருங்கள். காலத்தை வென்று நீண்ட காலம் வாழ்வீர்கள். 

ஒரே ஒரு வேண்டுகோள். சொல்லலாமா என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். 

தாமரை : சொல்லுங்கள். 

தளபதி : சின்னஞ்சிறுசுகளிடம் தங்கள் கணவர் பெயரைத் தெரிவித்து விட்டாலே நெருடல் நீங்கிவிடும். அதை வெளிப்படுத்தாமல் இருக்கக் கூடாது. இருவரும் குமரிகளாக இருக்கிறார்கள். காலாகாலத்தில் நல்லது நடக்க வேண்டும் என்றால் தந்தையாரின் பெயர் அவசியம் அல்லவா? 

தாமரை : மறைத்து நான் என்ன சுகம் காண்கிறேனா? கணவரின் மூத்ததாரத்து மகன் குணசேகரன், நான் சோழநாட்டில் இருக்கும்போதே ஓலை அனுப்பினான். 

தளபதி : தாங்கள் இருக்கும் இடம் அவனுக்கு எப்படி தெரிகிறது! உளவுத்துறையில் கருப்பு ஆடுகள்… 

தாமரை : அவன் மூர்க்கன். முரடன். கல்நெஞ்சக்காரன். 

தளபதி : என்ன சொல்லி மிரட்டினான்? அதைச் சொல்லுங்கள். 

தாமரை : என் புதல்விகளுக்குத் தகப்பன் யார் என்பதை எந்தக் காரணம் கொண்டும் வெளிப்படுத்தக் கூடாது. மீறினால் அவர்கள் உயிர் பறிக்கப்படும் என்று தகவல் அனுப்பினான். 

தளபதி : என்ன… தாமரை அம்மா… அவனுக்கு எல்லாம் நீங்கள் அஞ்சுவதா? துணிச்சலாக பல செயல்கள் புரிபவர் நீங்கள். 

தாமரை : அச்சப்பட வேண்டியவற்றுக்கு அச்சப்பட்டுத்தான் தீர வேண்டும். அஞ்சுதல் அஞ்சாமை பேதைமை என்றாரே திருவள்ளுவர்… 

தளபதி : அவனை அடக்கி வைப்பதற்கான வழிவகைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் புதல்விகளிடம் உண்மையைக் கூறி விடுங்கள். காலம் கடத்தாதீர்கள். 

தாமரை : சரி நான் போய் வருகிறேன். மீண்டும் சந்திப்போம். விடைகொடுங்கள். 

தளபதி : நன்றி. 

(தாமரை மேடையின் வலப்பக்கம் நோக்கிச் செல்கிறாள்) 

(திரை) 

எட்டாம் காட்சி 

(மாலை நேரம். மேடையின் பின்னணியில் குகை போன்ற அமைப்பு. மிகப் பெரிய கற்பாறை ஒன்று இருக்கிறது. அதன்மீது ஒரு சாமியார் உட்கார்ந்திருக்கிறார். மேடையின் இடப் பக்கத்திலிருந்து நாம் முன்பு சந்தித்த வளர் இளம் பருவத்து இளைஞன் மாரி வருகிறான்.) 

மாரி : அடிகளுக்கு வணக்கம். அடியேனுடைய காணிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். (பழங்களை அவர் காலடியில் சமர்ப்பிக்கிறான்) 

ஏழுமலை : உனக்கு என் ஆசிகள். முழு நிலவு நாளில் நான் குகையிலிருந்து வெளியே வருவேன் என்பதை அறிந்து வந்திருக்கிறாய். நீ சும்மா வரமாட்டாயே. வேறு யாரையாவது அழைத்து வந்திருப்பாயே… 

மாரி : நானாக அழைத்து வரவில்லை. அவர்களாகத்தான் வந்திருக்கிறார்கள்…. 

ஏழுமலை : யார் அவர்கள்?… 

மாரி : தங்கள் மகள் மரகதம்… 

ஏழுமலை : என்ன… 

மாரி : அடிகள் மன்னிக்க வேண்டும். மரகதம் என்ற மங்கையும் அவரது தலைவியும் வந்திருக்கிறார்கள். தங்கள் தரிசனம் காண…

ஏழுமலை : குகையில் இருக்கும் சாமியாரைக் காண சும்மா வருவார்களா?… அவர்கள் வயிற்று வலிக்கு வைத்தியம் தேடி என்னிடம் வந்திருப்பார்கள்… சரி. வரச் சொல். சந்திக்கிறேன். 

(மாரி மேடையின் இடப்பக்கம் செல்கிறான். சற்று நேரம் கழித்து மரகதம், மரிக்கொழுந்து இருவருடன் திரும்பி வருகிறான்) 

(மரகதமும் மரிக்கொழுந்தும் விழுந்து வணங்குகிறார்கள்) 

மரகதம் : பெரியப்பாவுக்கு வணக்கங்கள்… 

ஏழுமலை : பெரியப்பா என்று அழைக்காதே என்று எத்தனை முறை சொன்னாலும் புரியாதா உனக்கு?… 

மரகதம் : மன்னிக்க வேண்டும் பெரியப்பா… மன்னிக்க வேண்டும் அடிகளே… இவர் மரிக்கொழுந்து என்ற பெயர் கொண்டவர். நாட்டிய ஆசிரியை. நான் இவரது வீட்டில்தான் பணி செய்து வருகிறேன். 

மரிக்கொழுந்து : அடிகளுக்கு வணக்கம். 

ஏழுமலை : பிரச்சினைகள் துரத்தினால் சாமியாரைத் தேடி வருவதா? இதுநாள் வரை என்னைச் சந்திக்கும் எண்ணம் தோன்றியதா? 

மரிக்கொழுந்து : அடிகள் சீறியருளக் கூடாது. பிரச்சினைகள் துரத்தியதால் வருகிறேன் என்று தாங்கள் கூறியது சரிதான். தேவரீர் எங்களுக்கு அருள்புரிய வேண்டும். 

ஏழுமலை : என்ன வேண்டும்? சொல்லுங்கள். 

மரிக்கொழுந்து : தாமரை அக்காள் திரும்பி வந்து விட்டார். அவரை மர்மங்கள் சூழ்ந்திருப்பதால் என் புதல்விகளுக்குத் திருமணம் பேசுவதில் இடர்ப்பாடு ஏற்படுகிறது. இவை எல்லாம் தீருமா….? 

ஏழுமலை : வளர்த்த பெண்கள் மீது அஞ்ஞானமாக நீ வைத்துள்ள பாசம் துறவியான என்னையே நெகிழ வைக்கிறது. உன்னுடைய தமக்கை கற்புக்கரசி. நாட்டுக்காக அர்ப் பணிப்பு உணர்வுடன் உளவுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். 

மரிக்கொழுந்து: என் தமக்கை உளவாளியா? 

ஏழுமலை : ஆம். செண்பகத்தீவின் ஒற்றர் படையின் முக்கியப் பிரமுகரே அவள்தான். அரசாங்கம் மறைத்து வைக்கும் சில இரகசியங்களை என்னைப் போன்ற துறவிகள் வெளிப் படுத்தக் கூடாது. இருப்பினும் சுருக்கமாக சில விவரங்களைக் கூறுகிறேன். கேட்டுக் கொள். 

சிற்றாடையும் பாவாடையும் அணிந்து உன்னுடன் பல்லாங்குழி ஆடிய காலத்திலேயே அவள் வேவுத் தொழிலில் இறங்கி விட்டாள். கோயிலுக்குப் போகும் போதும் அங்காடிக்குப் போகும்போதும் உங்களோடு இருப்பாள். ஆனால் அவளுடைய பணியைக் கச்சிதமாக முடிப்பாள். பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு இங்கே கோடை விழா நடைபெற்றபோது அப்போதைய பேரரசர் கேசவவர்மனின் அழைப்பின்பேரில் சேரர் சோழர் பாண்டியர் மூவேந்தரும் இங்கு வருகை தந்து மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தனர். அப்போது பாண்டிய மன்னனை நமது செண்பகத் தீவில் வைத்துத் தீர்த்துக்கட்ட மதுரையிலிருந்து ஆட்கள் வந்திருந்ததை மிகவும் காலதாமதமாக அறிந்து கொண்ட தாமரை, கடைசி நேரத்தில் பாண்டிய மன்னனைக் காப்பாற்றி விட்டாள். 

அப்போது அவளுக்குப் புகழ்மாலைகள் குவிந்தன. அவள் சூல் கொண்டிருந்த நேரம்.ஆம்.அவளுக்குத் திருமணம் ஆகி விட்டிருந்தது. அவளுடைய கணவன் அன்றைய தலைமை அமைச்சன் வர்த்தமான தாசன். யயாதி கதையில் யயாதி மன்னன், மனைவி தேவயானியுடன் வந்த பணிப்பெண் சர்மிஷ்டையுடன் இரகசியமாகக் குடித்தனம் நடத்தி பிள்ளை பெற்றது போலத்தான் நடந்தது உன் அக்காள் குடித்தனம். சோழ மகாராஜா, இப்படிப்பட்ட புத்திகூர்மை உள்ள பெண்ணை தமது நாட்டிற்குத் தர வேண்டும் என்று மன்னரிடம் கேட்டு விட்டார். மன்னரால் தட்ட முடியவில்லை. சோழநாட்டில் ஒற்றர் பணிக்குச் செல்ல உன் அக்காள் ஆயத்தமாகும்போது அவளுடைய கணவன் தடுத்தான். அரச கட்டளையை மீற முடியாது என்றாள் தாமரை. அப்படி ஆனால் குழந்தை பிறந்ததும் என்னிடம் ஒப்படைத்து விடு. எனக்கும் உனக்கும் பந்தம் இல்லை என்று வெட்டிக் கொண்டு விட்டான். 

தஞ்சையில் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். அப்போது செண்பகத் தீவுக்காகவும் வேவுப் பணி பார்க்கிற பொறுப்பை பேரரசர் அவளிடம் ஒப்படைத்திருந்தார். குழந்தைகளைக் கணவன் வீட்டிற்கு எடுத்துச் சென்றாள். கணவன் பெற்றுக் கொண்டான். தாமரை மீண்டும் கப்பல் ஏறி சோழ தேசம் சென்றாள்.அமைச்சனின் முதல் தாரம் குழந்தைகளை தன்னால் வளர்க்க முடியாது என்று நிராகரித்து விட்டாள். மூத்ததாரத்து பிள்ளைகளும் எதிர்த்தனர். 

வேறு வழி இல்லாமல் பெருந்தேவனார் வசம் குழந்தைகளை ஒப்படைத்தான் கணவன். அவர் தனிக்கட்டை என்ன செய்வார்? சில நாட்கள் பணிப் பெண்ணின் துணையோடு குழந்தைகளைப் பராமரித்து வந்தார். நிலைமை அறிந்த தாமரை, குழந்தைகளைத் தங்கையிடம் ஒப்படைத்து குழந்தைகளை வளர்க்கக் கூறுங்கள் என்று புலவருக்கு ஓலை அனுப்பி வைத்தாள். 

மரிக்கொழுந்து : காலஞ்சென்ற தலைமை அமைச்சரின் மனைவியா என் தமக்கை…? அதை ஏன் என்னவோ அரண்மனை இரகசியம்போல் காக்க வேண்டும்…? 

ஏழுமலை : (சிரிக்கிறார்) உன் அக்கா கைம்பெண் அல்ல. 

மரிக்கொழுந்து : அப்படி என்றால்… 

ஏழுமலை : அவள் கணவனோடு வாழ்ந்தது சில காலமே ஆனாலும் கணவன் அவன்தான். அவன் இறக்கவில்லை. அதனால் அவளைக் கைம்பெண் என்று கூற முடியாது. 

மரிக்கொழுந்து : அப்படி ஆனால்… தலைமை அமைச்சர் எங்கே…? 

ஏழுமலை : இந்த வனப்பகுதியில்தான் பித்தனாய்ச் சுற்றிக் கொண்டிருக்கிறான். தாமரையின் குழந்தைகளைக் கைவிட்டு விட்டோமே என்கிற சுயபச்சாதாபம், கழிவிரக்கம், குற்ற உணர்வு, இதனால் பணிகளைச் சரிவர அவனால்ஆற்ற முடியவில்லை. அப்போது செண்பகத்தீவில் சமூக விரோதிகள் சமூகங்களுக்கு இடையே கலவரம் ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்தனர். அதை அவன் கவனிக்கவில்லை. அப்போது யுவராஜாவாக இருந்த இன்றைய மன்னர் கலவரத்தை ஒடுக்கி சமூக விரோதிகளைச் சிறையில் அடைத்தார். இவன் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது அறிந்து அரசர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்தார். பதவியில் இருக்கும்போதே அவனுடைய மூத்த மனைவியும் புதல்வர்களும் பாடாய்ப் படுத்தினார்கள். செல்லாக் காசான பிறகு மதிப்பார்களா? மனநோயாளியை வீட்டில் இருந்து விரட்டினார்கள். நான் தரும் பழம், காய், கிழங்குகளை உண்டு இங்கேதான் இருக்கிறான். இந்த வனத்தில் திரிகிறான்.

மரகதம் : பெரியப்பா… மன்னிக்கவும். சுவாமிகளே..எதிர் காலத்தைத் தெரிந்து கொள்ளத்தான் அவர் வந்தார். தாங்கள் இறந்தகாலம் பற்றிய பல அதிர்ச்சித் தகவல்களைத் தந்திருக்கிறீர்கள். எங்கள் அம்மா தாங்குவாரா… 

ஏழுமலை : உங்கள் எசமானி தாங்காமல் வேறு யார் தாங்குவார்கள்…? தாமரை வாய் திறக்கமாட்டாள். தாமரையிடமிருந்து இந்த சேதிகளை இவள் அறிய வாய்ப்பில்லை. அதனால், இறைவன் என்னைக் கருவியாக்கி இவளுக்கு இறந்த காலத்தைக் காட்ட வைத்திருக்கிறான். 

மரிக்கொழுந்து : வருங்காலம்… 

ஏழுமலை : எல்லாம் நன்றாக நடக்கும். போய் வா. 

மரிக்கொழுந்து: மாமாவின் இந்த நிலை… 

ஏழுமலை : உன் அக்காளுக்குத் தெரியாது. அரசு தரப்பினர், பக்கத்துத் தீவுகளுக்கு உல்லாச யாத்திரை சென்றவர், திரும்பி வரவில்லை என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அவளுடைய உள்ளுணர்வு கணவன் எங்கோ உயிரோடு இருப்பான் என்று சொன்னாலும் அவளுக்கு கணவன் மீதும் இல்லறம் மீதும் இருந்த ஆர்வம் போய் விட்டது. அவளுக்குப் பிடித்தமான பணிக்கு இடைஞ்சலாக இல்லறம் இல்லையே என்பதில் அவளுக்கு நிம்மதிதான். 

மரிக்கொழுந்து : எனக்கு ஒன்றும் பேச வார்த்தை வரவில்லை. தாங்கள் எனக்குத் தந்த தகவல்களுக்கு நன்றி. உத்தரவு பெற்றுக் கொள்கிறோம். 

மரகதம்: அடிகளே. அடியேனையும் வாழ்த்துங்கள். 

(இருவரும் தரையில் விழுந்து வணங்குகிறார்கள்) 

ஏழுமலை : இருவருக்கும் ஆசிகள். நலமே சூழும். போய் வாருங்கள். 

(இருவரும் இடப்பக்கமாக வெளியேறுகிறார்கள் 

மாரி : எங்கோ குகையில் இருந்து கொண்டிருக்கிறவர் தாங்கள் இறந்த காலம் நிகழ்காலம் வருங்காலம் எல்லாம் அறிந்தவர்கள் ஆக இருக்கிறார்கள். அடிகளே! தங்களுடைய பேராற்றல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒரு விண்ணப்பம். 

ஏழுமலை : கேள் மாரி. 

மாரி: என் வருங்காலம் எப்படி இருக்கும்…? 

ஏழுமலை : என்னுடைய வாழ்த்துக்கள்…. 

மாரி : அடிகள் இப்படி சொன்னால்… 

ஏழுமலை : சரி உனக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். ஊருக்குள் போய் முரசு அறைந்து கூறிவிட மாட்டாயே. 

மாரி : கண்டிப்பாக எவரிடமும் தெரிவிக்க மாட்டேன்.

ஏழுமலை: சமீபத்தில் நம் திருவிழா காண சுற்றுலா வந்த சில அறிவியல் அறிஞர்கள், இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்களில் நமது செண்பகத் தீவும் அருகில் உள்ள சின்னஞ்சிறு தீவுகளும் ஆழிப்பேரலையில் மூழ்கி விடுவதற்கான அபாயம் இருப்பதாக அரசரிடம் கூறியிருக்கிறார்கள். குடிகளைக் காக்க வேண்டிய அரசர், நமது ஜனங்களை அப்படியே புலம் பெயரச் செய்து சமவெளி பகுதிக்கு அழைத்துச் சென்று விடலாமா என்று யோசிக்கிறார். அந்தத் திட்டத்தை நிறைவேற்றத்தான் தாமரை என்னும் மாது ஒற்றை நபர் இராணுவம்போல் செயல்பட்டு வருகிறார். அதெல்லாம் சாத்தியம் ஆகாவிட்டால் நம் அனைவருக்குமே எதிர்காலம் இல்லாமல் போகலாம். 

மாரி: புலம் பெயர்தலை மக்கள் ஏற்பார்களா? 

ஏழுமலை : குறு முனிவர் அகத்தியர் தென்புலத்தை சமன்படுத்த வடபுலத்திலிருந்து மக்களை அழைத்து வந்து குடியேற்றினார் என்று புராணம் பகர்கிறது. மக்கள் பல்வேறு காரணங்களுக்காக புலம் பெயர்ந்துள்ளனர் என்று வரலாறு கூறுகிறது. கிருஷ்ணர் வடமதுரையிலிருந்து துவாரகைக்கு மக்களை அழைத்துச் சென்றார் அல்லவா? 

மாரி: ஆழிப்பேரலை கபளீகரம் செய்யுமா? கூறுங்கள். 

ஏழுமலை : காவிரிப் பூம்பட்டினத்தைக் கடல் கொண்டதாகச் சொல்வார்கள். குமரிக் கண்டம் என்ற பெயரில் தமிழ் மக்கள் வாழ்ந்த இலெமுரியாக் கண்டம் இருந்ததாகவும் வரலாறு சொல்கிறது. கடல் கொண்ட தென்னாடு என்று இதனைக் குறிப்பிடுகிறார்கள். ஆழிப் பேரலையால் சில சமயம் காணாமல் போன புதிய தீவுத் திட்டுகள் உண்டாகும் என்றும் அறிவியலாளர்கள் கூறுவது உண்டு. என்ன உன் முகத்தில் அவநம்பிக்கைக் குறி? 

மாரி: அடிகள் மன்னிக்க வேண்டும். நான் வயதில் சிறியவன்தான். எனினும் தங்களைப் போன்ற பெரியவர்களின் தொடர்பால் சிறிதளவு பக்குவம் கிடைத்திருக்கிறது. மாற்றத்தை என்றும்விரும்பாத ஜனங்கள், சொந்த ஊரை விட்டுப் புலம் பெயர சம்மதிப்பார்களா? 

ஏழுமலை : இங்கேயே உயிர் துறப்போம் என்று அடம்பிடிக்கலாம். அரசர் முடிவு என்னவோ? என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். இறைவன் திருவுள்ளம் எப்படியோ… 

(அய்யோ என்று குரல் ஒலிக்கிறது.) 

ஏழுமலை : அங்கே என்ன சத்தம் என்று பார்த்து விட்டு வா. 

(மாரி போய்விட்டு திரும்புகிறான்.) 

மாரி : தாங்கள் சொன்னீர்களே அந்த முன்னாள் அமைச்சர் கல் தடுக்கி பாறையில் மோதி தலையில் அடிபட்டு மூர்ச்சையாகி விழுந்து விட்டார். 

ஏழுமலை : பாவம். சரி அவரைத் தூக்கிக் கொண்டு குகைக்குள் வா. சிகிச்சை அளிக்கிறேன். 

மாரி: அப்படியே செய்கிறேன் அய்யா. 

(மாரி போகிறான்). 

(திரை)

– தொடரும்…

– அமைதிப் புறா (நாடகம்), முதற் பதிப்பு: ஜூலை 2013, கௌரி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *