கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: February 27, 2022
பார்வையிட்டோர்: 15,688 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இல்லற இன்பத்துக்கு இன்றியமையாதவள் காதலி ஆனால் கணவன் மனைவியருடைய காதல் வாழ்க்கைக் கும், அவர்கள் ஆற்றவேண்டிய அறச்செயல்களுக்கும் உற்ற துணையாக இருப்பது பொருள். செல்வம் இன்றி உலகத்தில் எதைத்தான் சாதிக்க முடியும்? பொருள் இல்லார்க்கு இவ்வுலகமே இல்லை.

இந்த உண்மையை உணர்ந்தவன் காதலன் . ஆகவே தன்னுடைய இல்லற வாழ்வு பொருளின்றி நலியக் கூடா தென்று எண்ணினான். வெளி நாடுகளுக்குச் சென்று பொருளீட்டும் விருப்பம் அவனுக்கு உண்டாயிற்று. அதற் குரிய ஆற்றலும் அறிவும் படைத்தவன் அவன் ; ஊக்கமும் உறுதியும் உடையவன். அப்படிப் பொருள் தேடச் சென் றால் திரும்பிவரச் சில காலம் ஆகும். அதுவரையில் தன் காதலியைப் பிரிந்திருப்பது அவனுக்குத் துன்பமாகத் தான் இருக்கும். ஆயினும் மனவுறுதியினாலும் சென்ற இடத்தில் செய்யவேண்டிய முயற்சிகளினாலும் அந்தப் பிரிவுத் துன்பத்தை அவன் ஒருவாறு ஆற்றிக்கொள்ளலாம்.

அவனுடைய காதலியோ? திருமணம் ஆனது முதல் இதுவரையில் அவள் அவனைப் பிரிந்ததே இல்லை. இப் போது ஏற்படப் போகும் பிரிவில் அவள் வாடி வதங்கிப் போவாள். – இதை நினைக்கும்போது அவன் உள்ளம் சங் கடத்துக்கு உள்ளாயிற்று,

அவன் பிரிந்து போவது கிடக்கட்டும். “நான் போய் வருகிறேன்” என்று அவளிடம் சொல்ல வேண்டுமே!

போன பிறகு, தன் கடமையை அவள் உணர்ந்து ஒருவாறு ஆறுதல் பெற்று இருக்கலாம். போகும் செய்தியைக் கேட்கும் பொழுது அம்பு பட்ட மான் போல இடர்ப்படு வாள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அவள் முகத்துக்கு நேரே நின்று இந்தச் செய்தியைச் சொல்லி அதனால் அவள் படும் வேதனையைக் கண்ணினால் காண முடியுமா? அதைக் காட்டிலும் துயரந் தரும் செயல் வேறு இல்லை.

‘நாம் பிரிந்து போகத்தான் வேண்டும். அதைத் தவிர்க்க முடியாது. ஆனால் இந்தச் செய்தியை நாமே நேரில் தெரிவித்து, அவள் படும் பாட்டைக் கண்டு மனம் கலங்காமல், வேறு ஏதேனும் வழி செய்யலாமே! பிரிவை உணர்த்தும் வேலையை நாம் ஏன் மேற்கொள்ள வேண்டும்? அவளாகத் தெரிந்து கொள்ளட்டுமே! – அல்லது வேறு யாரிடமாவது இதைச் சொல்லி அவளுக்குச் சொல்லும் படி…’

அவன் இவ்வாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது அவனுடைய காதலியின் உயிர்த் தோழி அங்கே வந்தாள். அவளைக் கண்டதும் சமய சஞ்சீவியே அவனுக்குக் கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. “நல்ல வேளை! நீ வந்தாய்” என்று தன் முகத்தில் புன்ன கையை வருவித்துக் கொண்டே அவளைப் பார்த்துச் சொன்னான்.

“ஏன், என்ன விசேஷம்? நான் இங்கேதானே இருக்கிறேன? இன்றைக்குப் புதிதாக வந்து குதித்து விட வில்லையே!” என்றாள் தோழி.

“அப்படி அன்று. நான் ஒரு சிக்கலான நிலையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதை எப்படி நீக்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நீ வந்தாய்”

“சிக்கலைச் சிடுக்காக்கவா?’

“என்ன, அப்படிச் சொல்கிறாய்? சிக்கலை விடுவிக்க நீ வந்துவிட்டாயென்று மிக்க மகிழ்ச்சியை அல்லவா அடைந்தேன்?”

“அது என்ன சிக்கல்?”

“உன்னுடைய தோழியின் துயரத்தை நீ ஆற்ற வேண்டும்.”

“துயரமா? அவள் இருக்கும் இடத்தில் துயரத்தின் நிழல் கூட வராதே! நீங்கள் இருக்கும் போது, இறைவன் அருளால் நீங்கள் இருவரும் இன்பக் கடலில் ஆழ்ந்திருக் கும்போது, அவளுக்குத் துயரம் ஏது?”

“சொல்வதை முழுவதும் கேள். நான் பொருள் ஈட்டும் பொருட்டு வெளி நாட்டுக்குப் போகிறேன். சில காலம் உன் தோழியைப் பிரிந்திருக்க நேரும். மாலையில் நான் வீடு வர ஒரு கணம் தாழ்த்தாலும் நான் வரும் வழி மேல் விழி வைத்துப் பார்த்து வாடும் அவள், எவ்வாறு இந்தப் பிரிவைப் பொறுத்திருப்பாள் என்றுயோசித்தேன். போகாமல் இருந்து விடலாம் என்றாலோ, நான் போய் வருவது இன்றியமையாதது. இந்த யோசனையில் நான் ஆழ்ந்திருக்கும் போது தான் நீ வந்தாய்.”

“நான் பொருளை ஈட்டித் தருவேனென்று நினைக்கிறீர்களா?” என்று சிரித்துக்கொண்டே தோழி கேட்டாள்.

“வேடிக்கை கிடக்கட்டும். பிரிவுக் காலத்தில் என் ஆருயிர்க் காதலிக்கு ஆறுதல் கூறி அவளைப் பாதுகாப்பது உன் கடமை. அதோடு இப்போது உடனே செய்ய வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது.”

“என்ன அது?”

“நான் பொருள் தேடும் பொருட்டுச் செல்கிறேன் என்ற செய்தியை நீயே அவளிடம் சொல்ல வேண்டும்.”

“நீங்களே சொல்லி விடையும் பெற்றுப் போவது தான் தக்கது.”

“நான் சொல்வதும் அவள் மனமுவந்து விடை கொடுப்பதும் நடக்கிற காரியமா? அவளுக்கு முன் இதைச் சொல்வதற்கே என் நா எழாது; ஒருவாறு துணிந்து சொல்லிவிட்டாலும் அவளிடம் உண்டாகும் வேதனையைக் கண்டேனானால், அப்புறம் அவளை விட்டுச் செல்லக் கால் எழாது.”

“நன்றாக இருக்கிறது நீங்கள் சொல்வது! உங்களால் முடியாததை நான் மாத்திரம் செய்ய முடியுமா? அடுத்த வீட்டுப் பிராமணா, பாம்பைப் பிடி, அல்லித் தண்டு போல் குளிர்ந்திருக்கும்’ என்ற கதையாக இருக்கிறதே!”

“நீ இந்த உபகாரத்தைச் செய்யத்தான் வேண்டும். களவுக் காலத்தில் நீ செய்த உபகாரங்களையெல்லாம் நான் மறக்கவில்லை அவற்றைப் போல் இப்போது இந்த உதவியை நீதான் செய்ய முடியும். அவள் உள்ளம் அறிந்து, செவ்வி அறிந்து, தக்க சொற்களால் பக்குவ மாகச் சொல்லும் ஆற்றல் உனக்கு உண்டு. நீ வேறு, அவள் உள்ளம் வேறு என்பது இல்லை. இந்தச் செய்தியைச் சொல்லி, நான் வரும் வரையிலும் ஆறுதல் கூறிப் பொழுது போக்கிக் கொண்டிருந்தால், நான் விரைவில் வந்து விடுவேன்.”

தோழி அவன் கூறுவதில் உள்ள நியாயத்தை உணர்ந் தாள். தலைவன் விரும்பியபடியே செய்ய ஒப்புக் கொண்டாள்.

“நீங்கள் போகும் நாடு எங்கே இருக்கிறது?”

“நம் நாட்டுக்கு அப்பால் நெடுந்தூரத்தில் பாலை நிலம் ஒன்று உண்டு. அதற்கு அப்பால் உள்ள நாட்டுக்குச் செல்லப் போகிறேன்.”

“அந்தப் பாலை நிலத்தைக் கடந்தா செல்லவேண்டும்?” என்று தோழி கேட்டாள்.

“ஆம்.”

“நீரும் நிழலும் அற்ற பாலைவனத்தில் எப்படிப் போவது? உணவும் புனலும் தங்க நிழலும் இல்லாமல் சுடுகாட்டைப் போல விரிந்து கிடக்கும் என்று சொல்வார் களே ! அதன் வழியாகப் போவது அரிதல்லவா?”

“அது செல்வதற்கு அரிய வழிதான். ஆனாலும் வேற்று நாட்டுக்குப் போவதற்கு அந்த ஆரிடை (அரியவழி)யைத் தவிர வேறு புகல் இல்லை. வாழ்க்கையில் தனியின்பத்தைப் பெறுவார் யாரும் இல்லை. இன்ப துன்பங்கள் மாறி மாறித் தான் வரும். வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருளை ஈட்ட வேண்டுமானால் அதற்கு முன் இந்த அரிய பாலை நில வழியைக் கடந்து தான் செல்ல வேண்டும். பின்னாலே வரும் இன்பத்தை எண்ணி முன்னாலே எதிர்ப்படும் துன் பங்களைப் பொறுத்துக் கொண்டால் தான் செய்யும் செயல் நிறைவேறும்.”

தோழி சிறிது சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். “உணவு கிடைக்காத அந்த வழியில் எப்படிப் போவது?” என்று கேட்டாள் .

“உணவு கிடைக்காது என்று சொல்வதற்கில்லை. நாம் நாள்தோறும் உண்ணும் அறுசுவை உண்டி அங்கே கிடைக்காது என்பது உண்மைதான். ஆனாலும் அங்கேயும் இயற்கை வழங்கும் உணவு ஒன்று உண்டு.”

“இயற்கை தரும் உணவு என்றால் எனக்கு விளங்க வில்லையே!”

“பாலை நிலத்தில் அங்கங்கே சில இடங்கள் பசிய நில மாக இருக்கும். பாலை நிலத்தை அடுத்த வேற்று நாட்டு நிலப்பரப்பு வேறு இருக்கிறது. அங்கே விளாமரங்கள் இருக்கின்றன. எவ்வளவோ காலமாக வளர்ந்த மரங்கள் அவை. வேர் ஆழமாகச் சென்றிருக்கும். பார் பகும்படி கீழ் இறங்கின வேரையுடைய மரங்கள் அவை. நீண்டு உயர்ந்த கிளைகளை உடையவை”

“அப்படியா! அங்கே மரங்களும் உண்டென்று சொல்லுங்கள்”

“ஆம்; விழுமிய கொம்புகளையுடைய விளாமரங்கள் இருக்கும்; மிக உயரமாக வளர்ந்தவை. அவற்றின் அடி மரம் பொரிந்து சுரசுரப்பாக, உடும்பின் தோல் போல இருக்கும். தூரத்திலிருந்து பார்த்தால் உடும்புகள் ஒட் டிக்கொண்டாற்போல அந்த மரம் தோற்றம் அளிக்கும்.”

‘அதெல்லாம் சரி; வேர் இருக்கும், கொம்பிருக்கும், மரம் இருக்கும் என்று சொல்கிறீர்களே! அவைகளெல் லாம் இருந்து என்ன பயன். பழம் உண்டா?”

“மரத்திலிருந்து பழங்கள் தாமே காம்பினின்றும் இற்று விழுந்து கிடக்கும். கீழே பச்சைப் பசேலென்று படர்ந்து பரவியிருக்கும் பசிய பயிரின் மேல் உதிர்ந்து அந்த விளாம் பழங்கள் பந்துகளைப் போலத் தோற்றம் அளிக்கும். அழகான பச்சைக் கம்பலத்தைப் பரப்பி மக ளிர் பந்தாடுகிறார்கள்; பிறகு விளையாட்டெல்லாம் ஒழிந்து பந்துகளை அப்படி அப்படியே போட்டுவிட்டுப் போனால் எப்படி இருக்கும்? அந்த மாதிரி, கம்பலத்தைப் போன்ற பைம் பயிரின் மேல் விழுந்த விளாம்பழங்கள் இருக்கும். அங்கே இருப்பவர்களுக்கும் வழி நடப்பவர்களுக்கும் அந்த வெள்ளிலே (விளாம்பழம்) உணவாக உதவும், அத் தகைய வழியிலே தான் நான் போகப் போகிறேன்”

“அப்படியா! போகும் வழியில் பைம் பயிரும் விழுக் கோடுடைய நெடிய விளாமரமும் ஆட்டு ஒழிந்த பந்து போல வீழ்ந்த வெள்ளிலும் இருக்குமானால், அச்சமின்றிச் செல்லலாமே. அதோடு, வேற்று நாட்டுக்குச் சென்றால் பொருள் வேறு கிடைக்கும்” என்று தோழி கூறித் தலை வனை வாழ்த்தினாள்.

தலைவன் தன்னுடைய சிக்கலான நிலையில் ஓர் அரிய உதவி கிடைத்ததே என்று எண்ணி ஆறுதல் பெற்றான். செல்வதற்கரிய வழியிலே விளாம்பழம் கிடைத்தது போல இருந்தது அது.

மனத்துக்குத் துன்பத்தை அளிக்கும் செய்தியைத் தலைவிக்கு எப்படித் தெரிவிப்பது என்ற யோசனை இப்போது தோழிக்கு வந்துவிட்டது. தலைவியின் உள்ளம் அறிந்தவளாகையால் எப்படியாவது மெல்லச் சொல்லி விடலாம் என்று துணிந்தாள். என்ன தந்திரமாகச் சொன்னாலும் தலைவி வருந்துவாள், அவள் முகம் வாடும் என்று நினைத்தாள். “எப்படி அவர் போவதற்கு உடம் பட்டாய்?” என்று கூட அவள் கேட்பாளோ என்ற ஐயம் வேறு எழுந்தது. ‘எப்படியானாலும் அவளுக்குச் சொல்லி விட வேண்டியது தான்’ என்று முடிவு கட்டினாள். மெல்லச் சொல்லிவிட்டாள். ஆனால் தலைவி என்ன செய்தாள். தெரியுமா? அதுதான் ஆச்சரியம்!

தலைவன் பிரியப் போகிறான் என்பதை அவள் முன்பே குறிப்பாக உணர்ந்திருந்தாள். ஊருக்குப் போகிறவர்கள் அதன் பண்பு குழந்தைக்கு இனிய பண்டங்களைக் கொடுத்துப் போக்குக் காட்டுவது போலச் சில நாட்களாகத் தன் காதலன் வழக்கத்தையும் விட அதிகமாக அருமை பாராட்டி வருவதை அவள் கவனித்தாள். இல்லறத்தின் பெருமை யையும், பொருளின் இன்றியமையாத் தன்மையையும், ஆடவர்களின் கடமையையும் அவன் இப்போதெல்லாம் எடுத்துக் கூறுவதை அவள் கேட்டாள். காரணம் இல்லா மல் அவற்றை அவன் எடுத்துச் சொல்வானா? அவன் தான் பிரியப் போவதை முன்கூட்டியே அவளுக்குக் குறிப்பாகப் புலப்படுத்தும் செயல்கள் அவை. அதனால் தலைவிக்கு அவன் பொருளீட்டப் பிரியப் போகிறான் என்பது தெரியும்; அந்தப் பிரிவை ஏற்பதற்கு ஆயத்தமாகவே இருந்தாள்.

இப்போது தோழி மிகவும் தியங்கித் தியங்கிச் செய்தி யைச் சொன்னாள் . விளாம்பழம் உணவாகக் கிடைக்கும் அருவழியிலே போகப் போவதை உரைத்தாள். மிகவும் நிதானமாக, பொறுமையாகத் தலைவி அவள் சொன்ன வற்றைக் கேட்டாள்.

“நல்ல காரியம் செய்தாய்!” என்று தலைவி கூறிய போது தோழிக்குத் தூக்கி வாரிப்போட்டது, அதை அவள் எதிர்பார்க்கவே இல்லை. முகம் வாடித் துன்புழந்து தன்னைக் கடிவாள் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவளோ, “நன்று செய்தனை” என்றல்லவா சொல்கிறாள்! மேலும் தலைவி பேசுவது காதில் விழுந்தது.

“சேயிழையே!” இப்படித் தலைவி தோழியை விளித் தாள். செம்பொன்னாலாகிய இழைகளை அணிந்தவள் தோழி என்பது இன்றைக்குத்தானா அவளுக்குத் தெரியும்? தன் உள்ளத்தில் கோபம் இன்மையைத் தெரிவிப்ப தற்காக அப்படி அருமையாக அழைத்தாள். பிறகு-?

“விளாம் பழத்தை உணவாகப் பெறும் வேற்று நாட் டுக்குச் செல்லும் வழியிலே செல்லுவோம் நாம் என்று அவர் சொன்னார் என்றாய்.”

தலைவி தோழி சொன்னதை அரைகுறையாகக் கேட்க வில்லை; நன்றாகக் கேட்டிருக்கிறாள் ; உணர்ந்திருக்கிறாள். அவள் பேச்சே அதைத் தெரிவிக்கிறது.

“அப்படி அவர் சொல்ல, சேயிழையே, நீ அது நல்ல காரியம் என்று விருப்பத்தோடு உடம் பட்டாயே! நீயும் நல்ல காரியத்தையே செய்தாய்!”

தோழிக்கு வியப்பின் மேல் வியப்பு உண்டாகிவிட்டது. அவர் பிரிய எண்ணுவது தவறு; அவர் பிரிந்து செல்லுவ தற்குத் துணையாக நின்றது அதைவிடத் தவறு’ என்று சொல்வாளோ என்ற அச்சம் அவளுக்கு இருந்தது. தலைவி சொல்வது அதற்கு நேர்மாறாக இருக்கிறது. அவர் போவதும் நல்லது; அதற்கு நீ உடம்பட்டதும் நல்லது’ என்றல்லவா சொல்கிறாள்?

“அவர் போவது நல்லதா?” என்று தோழி கேட்டாள்.

“ஆம். ஆடவர்களுக்கு அது நல்லது. சோம்பிக் கிடந்து, பெரியவர்கள் வைத்த பொருளை அழித்து வாழ்வது வாழ்வு அன்று. பணம் ஈட்டவேண்டுமென்று மனத்திலே நினைத்தால் போதாது. அதைச் செயலிலே கொண்டுவர வேண்டும். ஆகவே அவர்கள் தூங்கிக் கிடக்கமாட்டார்கள். பொருள் ஈட்டுவதற்காகச் செல் வார்கள். திரை கடல் ஓடியும் திரவியம் தேடுவார்கள். இருந்த இடத்திலே பொருள் நம்மைத் தேடி வந்து குவியாது. போய்த்தான் தேடவேண்டும். வீட்டை விட்டு அகலாமல் இருந்தால் பொருளை எப்படிச் சேர்க்க முடியும்? ஆதலின் செயல்படும் மனத்தினராகிச் செய் பொருளுக்காக வீட்டைவிட்டு அகல்வார்கள். அவர் களே ஆண்மை உடையவர்கள்; ஆள்வினையிற் சிறந்த வர்கள்; உத்தமமான ஆடவர்கள். அப்படி அகல்வது பொருளீட்டுவதற்குரிய இயல்புதான். அது அதன் பண்பே.”

தோழிக்கு, “அது அதன் பண்பே!” என்ற முடிவு காதில் தண்மையாக விழுந்தது. ‘தலைவியினுடைய அறிவு தான் எவ்வளவு சிறப்பானது!’ என்று வியந்து, செயல் மறந்து நின்றாள் அவள்.

‘பார்பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு
உடும்பு அடைந் தன்ன நெடும்பொரி விளவின்
ஆட்டொழி பந்திற் கோட்டு மூக்கு இறுபு
கம்பலத் தன்ன பைம்பயிர்த் தாஅம்
வெள்ளில் வல்சி வேற்றுநாட்டு ஆரிடைச்
சேறும் நாம்’ எனச்சொல்லச், சேயிழை!
நன்றெனப் புரிந்தோய்; நன்று செய் தனையே;
செயல்படு மனத்தர் செய்பொருட்கு
அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே!

சிவந்த பொன்னால் ஆன அணிகளை அணிந்த தோழி ! ‘பூமி பிளக்கும் படி இறங்கிய வேரை உடைய, உயர்ந்த கிளைகளையும் உடும்பு ஒட்டிக்கொண்டாற் போன்ற நீண்ட பொரிதலையும் உடைய விளாமரத்தின், விளையாட்டு (நின்ற பிறகு) ஒழிந்து கிடந்த பந்துகளைப் போலக் கிளையிலிருந்து (முதிர்ந்தமையாலே ) காம்பு இற்று, பச்சைக் கம்பலத்தைப் போன்றுள்ள பசிய பயிரின் மேல் விழுந்து கிடக்கும் பழமாகிய உணவை உண்ணுவதற் குரிய , வேற்று நாட்டுக்குச் செல்லும் (கடப்பதற்கு) அரிய வழியில் போவோம் நாம் ” என்று (தலைவன்) சொல்ல, ‘நல்லது’ என்று கூறி அதை விரும்பி உடம்பட்டாய். நீ நல்ல காரியத்தைச் செய்தாய்; ஆடவர் (தம் எண்ணத் தைச்) செயலாகச் செய்யும் உள்ளத்தைப் படைத்த வராகி, தாம் ஈட்டும் பொருளுக்காக (வீட்டை விட்டு) அகன்று செல்வர்; அப்படிச் செல்வது பொருள் தேடும் செயலின் இயல்பே ஆகும். (வருந்துவதற்குரிய காரணம் ஒன்றும் இல்லை.)

சேயிழை ! சேறும் என்று சொல்ல, புரிந்தோய்; செய்தனை ; ஆடவர் அகல்வர்; அது பண்பு என்று கூட்டுக.

பார் பக – பூமி பிளக்க. வீழ்ந்த- இறங்கிய. விழுக் கோடு – உயர்வையுடைய கிளை. அடைந்தன்ன – பொருந் தினாற் போன்ற. பொரி – பொரிதலையுடைய , ஆட்டு ஒழி பந்தின் – விளையாட்டினின்றும் ஒழிந்த பந்துகளைப் போல . கோட்டு மூக்கு இறுபு – கிளையிலிருந்தும் காம்பு இற்று. கம்பலத்தன்ன – கம்பளத்தைப் போன்ற பைம் பயிர் – பசிய பயிரிலே . தாஅம் – விழுந்து கிடக்கும். வெள்ளில் – விளாம் பழம். வல்சி – உணவு. ஆர் இடை- அரு இடை ; கடப்ப தற்கரிய இடைவழியிலே. சேறும் – செல்வோம். சே இழை – செம்பொன்னாலான அணிகளை அணிந்தோய். புரிந்தோய் – விரும்பினாய். செயல்படும் மனத்தர் – நினைத்ததைச் செய லாகச் செய்யும் கருத்துடையவர்.

துறை : பொருட் பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது.

‘பொருள் ஈட்ட என் காதலியைப் பிரிந்து செல்வேன். என்று தலைவன் கூற, அந்தப் பிரிவுக்கு இணங்கிய தோழியினிடம் தலைவி அவள் செய்த செயலை அறிந்து மகிழ்ந்து சொல்லியது’ என்பது இதன் பொருள்.

இந்தப் பாடலைப் பாடியவர் பெயர் தெரியவில்லை. இது நற்றிணையின் 24-ஆம் பாட்டு.

– மனை விளக்கு (சங்கநூற் காட்சிகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1951, அமுத நிலையம் லிமிடெட், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *