“ரமாவும் லலிதாவும் புதிதாக வேலைக்குச் சேர்ந்த அந்த அலுவலகத்தில் இரண்டு சூப்பரண்டுகள் இருந்தார்கள்.
ஒருவர் ராமபத்ரன்.
எளிமையாக இருப்பார். ஒரு போதும் குரல் உயர்த்திப் பேசாதவர்.
மிகவும் ரிசர்வ்டாக இருந்ததால், ‘ராமபத்ரன் ஒரு சிடுமூஞ்சி. பாசமாய்ப் பழகத் தெரியாதவர் என்று நினைத்தார்கள் ரமாவும், லலிதாவும்.
அதே அலுவலகத்தில் இன்னொரு சூப்ரண்ட் எழிலரசன்.
“ஹாய்…! எப்படி இருக்கீங்க…?”
குசலம் விசாரிப்பார்.
பார்க்கும்போது புன்னகைப்பார்.
“சாப்டீங்களா…? டீ குடிச்சீங்களா?” விசாரிப்பார்.
எழிலரசனின் இந்த ஃபார்மல் விசாரிப்புகளில் திருப்தியுற்ற அந்த மங்கையர்கள் சூப்ரண்ட் எழிலரசனின் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள்.
அன்று ரமாவும் லலிதாவும் டூவீலரில் வந்து கொண்டிருந்தபோது இரண்டு ரௌடிகள் தவறான திசையில் வந்து இவர்கள் வண்டியில் இடித்ததோடு, தகாத வார்த்தைகளைப் பேசினார்கள்.
அந்த நேரத்தில் எழிலரசன் தன் காரில் இவர்களைக் கடந்து போனார். இவர்களைப் பார்த்துவிட்டுப் பாராததுபோலப் போவதை அவர்களும் பார்த்தார்கள்.
சில நிமிடங்களுக்குப் பின் அந்த வழியே தன் டூவீலரில் வந்த ராமபத்ரன், நின்று ஸ்டாண்ட் போட்டுவிட்டு அந்த ரவுடிகள் இருவரையும் எச்சரித்தார்.
மீறிப் பேசினார்கள் ரௌடிகள். அடித்து உதைத்து விரட்டினார் அவர்களை.
‘அமைதியாய் அலுவலகத்தில் இருக்கும் இவரா இப்படி?’ ஆச்சர்யத்தில் உரைந்தார்கள்.
“கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு படபடப்பில்லாம நிதானமா ஆபீஸ் வந்து சேருங்க”
ரமா லலிதாவிடம் சொன்னார்.
சொல்லும்போது முகத்தைக் கூடப் பார்க்கவில்லை ராமபத்ரன்.
பிரசன்ன வதனத்தோடு ஃபார்மல் விசாரிப்புகளை அள்ளி வீசும் எழிலரசன் ஸீரோ வாகத் தெரிந்தார்.
“என் வழி தனி வழி!” என்றுச் சொல்லிச் செல்லும் ஹீரோவாகத் தெரிந்தார் ராமத்ரன்.
– கதிர்ஸ் – ஜனவரி-2023