ஹரிச்சந்திரா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 8,813 
 

நீங்கள் கி.பி 2058 இல் வாழ்ந்திருந்த ஆசாமியாக இருந்திருந்தால் உங்களுக்கு
ஹரிச்சந்திரா பற்றி தெரிந்திருக்கும். 2058 ஆம் ஆண்டு மே மாத தினத்தந்தி,
தினகரன் போன்ற நாளிதழ்களிலேயே நாலாம் பக்கத்தில் ஒரு பத்தி செய்தியாக
அரிச்சந்திரா பற்றிய குறிப்பு வந்தது என்பதிலிருந்தே அது எவ்வளவு முக்கியமான
ஆராய்ச்சி என்று நீங்களே உணரலாம். அதுவும் பேரழகு நடிகை குலாப்ஜமுனா
தனக்கு பெரியதாக இரண்டு செயற்கை மார்பு பொருத்திக்கொண்ட செய்தியும்
படமும் முதல் பக்கத்தை முழுதும் நிறைத்து, அம்புக்குறியிட்ட இடத்தில்தான்
பாலியூரித்தீன் பொருத்தப்பட்டது என்ற விளக்கக்குறிப்போடு வந்த அதே நாளில்தான்
இச்செய்தியும் வந்தது. விகடனும் தன் கலாச்சார வழக்கப்படி 32 ஆம் பக்கத்தில்
சங்கராச்சாரியார் படம் போட்டு ‘அழியும் கலாச்சாரம்’ பற்றிய வருத்தத்தையும்
33 ஆம் பக்கத்தில் குலாப்ஜமுனாவின் பொலிவு தோற்றத்துடன் ‘வளரும் விஞ்ஞானம்’
பற்றிய மகிழ்ச்சியையும் தெரிவித்து 48 ஆம் பக்க மூலையில் அரிச்சந்திரா பற்றியும்
எழுதியிருந்தது.

ஹரிச்சந்திரா மனித குல வரலாற்றிலேயே ஒரு மைல் கல் ஆராய்ச்சி. கி.பி 2051இல்
தொடங்கப்பட்ட திராவிடத்தமிழ் பண்பாட்டு மையமும் உலக கலாச்சாரக்குழுமமும்
ஒன்றிணைந்து செய்த ஆராய்ச்சி அது. திராவிடத்தமிழ் பண்பாட்டு மையம்
தொடங்கப்பட்ட புதிதில் வழக்கம்போல மையத்தலைவரிலிருந்து மைய மேலாளர்,
காசாளர், சிப்பந்தி, சம்பந்தி, வெறும் மந்தி எல்லாரும் விகிதாச்சார முறைப்படி
கூட்டுக்கொள்ளை நடத்தி வந்தனர். அதே போல் வழக்கம்போல கூட்டுக்கொள்ளையில்
ஏற்படும் சச்சரவு காரணமாக தலைவர்கள் மாற்றப்படுவதும், புதிய தலைவர்கள் பழைய
தலைவர்களை தூக்கியும் தூக்காமலும் சாப்பிட்டு ஏப்பம் விடுவதும் வாடிக்கை ஆயிற்று.
சில வாழத்தெரியாத அரசு ஊழியர்களின் காரணமாக கி.பி 2048 இலிருந்தே
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் லஞ்ச ஊழல் செய்யும் முறைகளைப்பற்றி அனுபவம் மிக்க
முன்னாள் அமைச்சர்களும், காவல் அதிகாரிகளும் ஓய்வு பெற்ற நீதிபதிகளும் அடங்கிய
ஒரு குழு மாணவர்களுக்கு கட்டாய பாடமாக நடத்தி வந்தனர். இதனால் பயன் பெற்ற
பல மாணவர்கள் திராவிடத்தமிழ் பண்பாட்டு மையத்தில் ஊழியர்களான பின் தாங்கள்
கற்றவைகளை நடை முறைப்படுத்தி சமுதாய மேன்மைக்கு கோலோச்சினார்கள்.

இதுபோன்ற காலகட்டத்தில்தான் கலியபெருமாள் திராவிடத்தமிழ் பண்பாட்டு மையத்தில்
ஒரு சாதாரண பதவியில் நுழைந்தார். கலியபெருமாள் பிறப்பிலிருந்தே ஏற்பட்ட
ஒரு ஹார்மோன் கோளாறினால் சாதாரண மக்களைப்போல் இல்லாமல் சற்று
வித்தியாசமாகவே யோசித்தார். உதாரணமாக லஞ்சம் ஊழல் போன்றவையெல்லாம்
ஒரு சமுதாயக்கொடுமை என்று நம்பினார். அவை நம்மை முன்னேற விடாமல் தடுக்கும்
என்று பேசினார். இது போன்ற விசித்திரமான கருத்துக்கள் அவருக்கு எப்படி
வந்திருக்கும் என்பதே புதிரானது. இது போன்ற பிற்போக்குத்தனமான சிந்தனைகள்
எல்லாம் கி.பி 2025 லேயே அழிக்கப்பட்டு விட்டன. கி.பி 2000 ஆரம்பித்த போதே பல
நாடுகளில் லஞ்சமும் ஊழலும் உடன் பிறப்புகள் என்றும் அவை மனிதனின் ரத்தத்தின்
ரத்தமாக கலந்து விட்டது என்றும் முற்போக்காளர்கள் நம்பினர். நம் அம்மாவும்
அண்ணாவும் நமக்குக் கொடுத்த அறிவுரையே லஞ்ச ஊழல் திலகங்களாக நாம் மாற
வேண்டும் என்பதுதான். ஆனால் நாம் முன்பே சொன்னது போல் அவ்வப்போது
மனிதர்களுக்குள் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகள் மனித சரித்திரத்தையே சமயத்தில்
மாற்றி விடுகின்றன. காந்தி என்ற தனி மனிதருக்கு ஏற்பட்ட கோளாறு கிட்டத்தட்ட
100 வருடங்களுக்கு பலரை அகிம்சை என்ற அசட்டு நம்பிக்கையில் ஆட்டி வைத்தது.
நல்ல வேளையாக திரைப்படங்கள் என்ற விஞ்ஞான சாதனத்தின் தொடர்ந்த
மூளைச்சலவையால் நமக்குள் இருந்த மிருகவெறி தூண்டப்பட்டு நம் முன்னேற்றப்
பாதைக்கு வித்திடப்பட்டது. இன்றும் நம் சமுதாயத்தில் பல பிரச்சினைகள் குண்டு
வெடிப்பின் மூலமும் கை கால் போன்ற உறுப்புகளை உடலிலிருந்து செயற்கையாக
நிரந்தரமாக பிரிப்பதன் மூலமும்தான் தீர்க்கப்படுகின்றன. இவையெல்லாம் திரைப்படங்கள்
நமக்கு வடித்து கொடுத்த வரைபடங்கள் அல்லவா? ஆனால் இந்த கலிய பெருமாளும்
காந்தியின் புத்தகங்களை படித்தோ அல்லது அவர் போன்ற பழமைவாதிகளுடன்
தொடர்பு கொண்டோ அகிம்சை, உண்மை, நேர்மை போன்ற உபயோகமற்ற
எண்ணங்களை வளர்த்துக் கொண்டார்.

கலியபெருமாளின் எண்ணங்கள்தான் சமுதாயத்துக்கு உபயோகமற்றதாக இருந்ததே
ஒழிய அவருடைய அறிவுத்திறன் மிகவும் உபயோகமானதாய் இருந்தது. லஞ்ச
ஊழல்களில் அவர் நம்பிக்கை அற்றவராக இருந்ததால் அவருடைய பங்கு
மற்றவர்களுக்கு வினியோகிக்கப் பட்டதால் எல்லோருக்கும் அதிகம் கிடைக்கவே
அவரை எல்லோருக்கும் பிடித்தே இருந்தது. எந்த சமுதாயத்திலும் நல்லவர்களை
அவர்களுக்கு முன் புகழ்ந்து பேசி அவர்கள் பின்னால் கேலி செய்வது போல்
கலியபெருமாளையும் வித விதமாக கேலி பேசி வந்தனர். இருப்பினும் உலகக்
கலாசாரக் குழுமத்திலிருந்து ஆராய்ச்சிக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்
என்று அறிந்தது முதலே அதை எப்படியாவது அடைவதற்கு சற்று வேலைத்திறன் காட்ட
வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக கலியபெருமாளை அவர் வேலை செய்யும் மின்
கணினி துறையின் தலைவராக அறிவிக்க வேண்டியதாய் ஆயிற்று. கலியபெருமாளும்
தன் திறமைக்கும் அறிவுக்கும் பொறுமைக்கும் ஆண்டவன் கொடுத்த பரிசு என்று
பிற்போக்குத்தனமாக அகமகிழ்ந்து அதனை ஏற்றார்.

கலியபெருமாள் துறைத்தலைவராக பொறுப்பேற்ற பத்து நாளிலேயே அவருக்கு
திராவிடத்தமிழ் மைய இயக்குனர் டாக்டர் கலைஞர் கவிஞர் கதாசிரியர் பேராசிரியர்
இசையமைப்பாளர் புரட்சித்தலைவர் புரட்சிக்கழுத்தர் புரட்சி இடுப்பர் இதய தெய்வம்
கிட்னிதெய்வம் கல்லீரல்தெய்வம் நுரையீரல்தெய்வம் இலக்கியக்கடல் இலக்கிய
ஏரி இலக்கியக்குட்டை வாழும் வள்ளுவன் கோடு கிழிக்கும் கம்பன் ஏடு புரட்டும்
இளங்கோ மதிப்பிற்குரிய உயர்திரு திருதிரு முன்னாள் முதல்வர் பின்னால் புதல்வர்
நிரந்தர மந்திரி பதவி போனால் எந்திரி மரியாதைக்குரிய வணக்கத்திற்குரிய
அன்புனேசன் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. ஒவ்வொரு முறையும் டாக்டர்
கலைஞர் கவிஞர் கதாசிரியர் பேராசிரியர் இசையமைப்பாளர் புரட்சித்தலைவர்
புரட்சிக்கழுத்தர் புரட்சி இடுப்பர் இதய தெய்வம் கிட்னிதெய்வம் கல்லீரல்தெய்வம்
நுரையீரல்தெய்வம் இலக்கியக்கடல் இலக்கிய ஏரி இலக்கியக்குட்டை வாழும்
வள்ளுவன் கோடு கிழிக்கும் கம்பன் ஏடு புரட்டும் இளங்கோ மதிப்பிற்குரிய உயர்திரு
திருதிரு முன்னாள் முதல்வர் பின்னால் புதல்வர் நிரந்தர மந்திரி பதவி போனால்
எந்திரி மரியாதைக்குரிய வணக்கத்திற்குரிய அன்புனேசன் அவர்களுடைய பெயரை
குறிப்பிடும்போதும் அவரை டாக்டர் கலைஞர் கவிஞர் கதாசிரியர் பேராசிரியர்
இசையமைப்பாளர் புரட்சித்தலைவர் புரட்சிக்கழுத்தர் புரட்சி இடுப்பர் இதய தெய்வம்
கிட்னிதெய்வம் கல்லீரல்தெய்வம் நுரையீரல்தெய்வம் இலக்கியக்கடல் இலக்கிய ஏரி
இலக்கியக்குட்டை வாழும் வள்ளுவன் கோடு கிழிக்கும் கம்பன் ஏடு புரட்டும் இளங்கோ
மதிப்பிற்குரிய உயர்திரு திருதிரு முன்னாள் முதல்வர் பின்னால் புதல்வர் நிரந்தர
மந்திரி பதவி போனால் எந்திரி மரியாதைக்குரிய வணக்கத்திற்குரிய அன்புனேசன்
அவர்கள் என்றே குறிப்பிட வேண்டும் என்பதும் அதில் ஒன்று குறைந்தாலும் அவரை
அவமதித்தாக கருதப்படும் என்ற அரசாணை இருப்பதாலும் அவரை குறிப்பிடுவதில்
சிக்கன நடவடிக்கையை முன்னிட்டு அவர் என்றே இந்த ஆராய்ச்சிக் கட்டுரையில்
குறிப்பிடப்படுகிறது. இதன் பொருட்டு இதற்குண்டான அவமான விலக்கு கட்டணம்
ரூ 45000 மும் காசோலை எண் 111 கோவிந்தா வங்கி, நாமக்கட்டி தெரு,
மொட்டைக்குப்பம் மூலம் செலுத்தப்பட்டது என்பதையும் இந்த ஆராய்ச்சிக்
கட்டுரையிலேயே தெரிவிக்கப் படுகிறது.

கலியபெருமாள் ‘அவரின் அறைக்குள் நுழைந்ததுமே ‘அவர்’ கலியபெருமாளை
ஏற இறங்க பார்த்தார்.

‘ம்..ம்..ம்.. நீங்கதான் அந்த கலியபெருமாள்ன்றதா?’ என்றார் அவர் அந்த ‘அந்த’
என்ற வார்த்தைக்கு சற்று அழுத்தம் கொடுத்து.

‘ஹி ஹி ஆமாம் சார்’ – கலியபெருமாள்.

‘என்னங்க இது. நீங்க வந்தவுடனே இந்த பத்து நாளா லஞ்சம் கலெக்ஷன் சரியாவே
இல்லையே’ – அவர்.

‘இப்பவெல்லாம் வேலைக்கு ஆளுங்களுக்கு பதிலா கம்ப்யூட்டரை போட்டுட்டேங்க.
வேலையும் வேகமாகவும் நடக்குது. நிறையவும் ஆவுது.’

‘அது சரிங்க. இப்ப வேலை ஏன் செஞ்சீங்கன்னா கேட்டேன். புதுசு. ஆர்வக்கோளாறுல
எதோ செஞ்சிருப்பீங்கன்னு பெரிய மனசு பண்ணி உட்டேன் இல்ல. வேலைக்கேத்த
லஞ்சம் கலெக்ஷன் ஏன் இல்லைன்னு தானே கேட்டேன். இன்னும் சொல்லப்போனா
வேலை நிறைய செஞ்சிருந்தா நிறைய இல்ல கலெக்ஷன் ஆவணும்?’ – அவர்

‘அதான் கம்ப்யூட்டர்ங்கள புரோகிராம் பண்ணி வேலை செஞ்சேன்னு
சொன்னேனுங்களே’ என்றார் கலியபெருமாள்.

இந்த புடாக்குக்கு எப்படி புரிய வைப்பது என்று யோசனையில் ஆழ்ந்தார் அவர். சற்று
நேரம் பொறுத்து’ ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு லஞ்சம் வாங்கலாம்னு அரசாங்கமே
நிர்ணயம் பண்ணியிருக்குது தெரியுமில்ல. நாம நம்ம யூனியன் ரூல்ஸ்படி அதுக்கு மேல
பத்து பெர்சென்ட் வெச்சி வாங்கிட்டிருக்கோம். யூனியன்ல இப்பவே ஏன்யா இவ்ளொ
கொறைவா வாங்கறீங்க. மிச்ச ஸ்டேட்ல எல்லாம் 25 % வாங்கறான்னு பிரெஷர்
பண்ணிட்டிருக்காங்க. நாம் எதோ கொஞ்சம் காந்தியவாதிங்கன்றதால நேர்மையா
15% ஓட நிறுத்திக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கோம். இதெல்லாம் தெரியுமா
இல்லையா? போன வாரம் கூட சர்குலர் அனுப்பினேனே’ என்றார் அவர்.

‘சர்குலர் பார்த்தேங்க’

‘சர்குலர் பாத்த லட்சணமா இது? இப்போ பத்திரிகைக்கெல்லாம் நியூசு லீக் ஆகி
சட்ட சபையில இன்னிக்கு எதிர்க்கட்சிங்க கிழிக்கப் போறாங்க. அதுக்குள்ள
எதுனா செய்யா ன்னு முதலமைச்சர் போன் பண்றாரு. எதிர்க்கட்சிங்களுக்கு பொறை
போட்டாதானேங்க ஆட்சி நடத்த முடியும்? இல்லேன்னா எதிர்க்கட்சிங்க
சட்டசபையிலயே வேட்டி அவிழ்ப்பு போராட்டம் பண்ணுவாங்க. யார் மானம் போவும்
சொல்லுங்க’ என்றார் அவர்.

‘வேட்டிய யார் அவிழ்க்கறாங்களோ அவுங்க மானம்தான்’ என்று சொல்ல வந்தார்
கலியபெருமாள். அப்புறம்தான் யார் வேட்டியை யார் அவிழ்த்தாலும் அதை பார்ப்பவர்கள்
மானம்தான் போனதாக கருதப்படும் என்று கி.பி 2010இல் இயற்றப்பட்ட அரசாணை
அவருக்கு நினைவுக்கு வந்தது.

‘ சரி சரி போனது போகட்டும். இன்னும் மிச்சம் இருக்கற டொன்டி டேஸ்ல எவ்வளோ
முடியுமோ அவ்ளோ கலெக்ட் பண்ணி கொண்டு வந்திருங்க நான் அட்ஜஸ்ட்
பண்ணிக்கிறேன்’ என்று பெருந்தன்மையாக பேசினார் அவர்.

‘நான் சொன்னத நீங்க சரியா புரிஞ்சுக்கலைன்னு நெனைக்கிறேன். கம்ப்யூட்டர்
புரோகிராம் பண்ணி பண்ற போது வேலைல சாக்கு சொல்ல முடியாதுங்க. வேலை
ஒண்ணு முடிஞ்சுரும். இல்லேன்னா ஏன் முடியலைன்னு சொல்லிரும்’ என்று விளக்கினார்
கலியபெருமாள். தொடர்ந்து’ வேலைய முடிக்காம இழுக்கறபோதுதான் லஞ்சம் வாங்க
முடியும். அந்த மாதிரி கம்ப்யூட்டர்ங்களால பண்ண முடியாது’ என்றும் விளக்கினார்.

‘அப்போ எந்த முட்டாள் வேலை முடியற மாதிரி புரோகிராம் எழுதினது?’ – அவர்

‘ நான் தான்’

‘அப்படித்தான் இருக்கும்னு நெனச்சேன்’ என்று தன் நுண்ணறிவை பாராட்டிக்கொண்டார்
அவர். ‘சரி அப்ப ஒண்ணு செய்யுங்க. இப்ப எல்லா புரோகிராமையும் அழிச்சுட்டு
வேலைய மெதுவா செய்யற மாதிரி ரீபுரோகிராம் பண்ணிடுங்க. அப்பப்ப சமயத்துக்கு
ஏத்தா மாதிரி சாக்கு சொல்லவும் புரோகிராம் பண்ணிடுங்க.’ என்று இலவச
அறிவுரையும் வழங்கினார்.

‘அந்த மாதிரி புரோகிராமை யாரும் மாத்திர கூடாதுன்னுதான் உலகக்கலாசார
குழுமம் ஆளுங்க அதை ரீட் ஒன்லியா பண்ணிட்டாங்க. அதை திருப்பி அழிக்க
முடியாது. புதுசா அவுங்க கிட்டேர்ந்து கம்ப்யூட்டர் வாங்கிதான் புரோகிராம் பண்ணனும்’
என்றார் கலியபெருமாள்.

‘பாருங்க. உங்களுக்கு கொஞ்சம் முன் ஜாக்கிரதை இல்லாததுனால எப்படிப்பட்ட
இக்கட்டுல மாட்டிக்கிட்டோம் பாருங்க’ – அவர். ‘சரி அவுங்க கிட்டேந்து புதுசா
ஒரு கம்ப்யூட்டர் வாங்கி அதை நல்லா பொய் சொல்ல பழக்கி விடுங்க’ என்றார்.

இப்படியாக ஆரம்பித்ததுதான் ஹரிச்சந்திரா ப்ராஜக்ட். உ.க.குழுமத்திடமிருந்து ஒரு
கம்ப்யூட்டரை வாங்கி அதற்கு ஹரிச்சந்திரா என்று பெயர் வைத்து தினமும் அதனை
பொய் சொல்ல வைக்க மன்றாடுவார் கலியபெருமாள். சாதாரணமான பொய்களை
சொல்ல வைக்க சாதாரணமான கட்டளைகளே போதுமானதாக இருந்தது. ஆனால்
சமயத்திற்கு ஏற்றாற்போல புளுக வைப்பதுதான் கஷ்டமாயிருந்தது. ஒரு
பிறப்புச்சான்றிதழ் கொடுக்க வேண்டுமென்றால் லஞ்சத்திற்கு ஏற்றாற்போல்
இழுத்தடிக்கவோ அல்லது இழுத்தடித்ததற்கு ஏற்றாற்போல் லஞ்சம் வாங்கவோ
தெரியவில்லை. கட்சிக்கு ஏற்றாற்போல் கள்ளஓட்டு வேட்பாளர் சான்றிதழ்
கொடுக்கத்தெரியவில்லை. பாலம் கட்டாமலே பணக்குவியலுக்கு பாலம்
கட்டத்தெரியவில்லை. அரசுக்கு சொந்தமான நிலங்களையும் தொழில்களையும்
ஓசைப்படாமல் மடக்கிப்போடத் தெரியவில்லை. இவற்றை எல்லாம் ஒன்று விடாமல்
ஹரிச்சந்திரனை வைத்து செய்தே காட்டிவிடுவது என்று பிடிவாதமாக உழைத்த
கலியபெருமாள் கடைசியில் 2058 மே மாதம் மேற்குறிப்பிட்ட தேதியில் அதனை
சாதித்தார்.

லட்ச லட்சமாக லஞ்சப்பணத்தை மேஜையின்மேல் கொட்டிய கலியபெருமாளைப்
பார்த்த அவர் ‘கடைசியில எப்படிங்க அந்த கண்ராவி கம்ப்யூட்டரை பொய் சொல்ல
வெச்சீங்க?’ என்றார்.

‘நானும் ரொம்ப நாள் தப்பான ரூட்லயே போயிருக்கேன். அப்புறம்தான் புரிஞ்சுது.
பொய் சொல்றதுக்கு அடிப்படையான விஷயமே ஆசைதாங்க. ஆசை இல்லாத எந்த
மண்ணாங் கட்டியாலயும் பொய் சொல்ல முடியாதுங்க. அதுவும் அந்த ஆசை
அடக்க முடியாத ஆசையா ஆயிடுச்சுன்னா அப்புறம் எந்த புண்ணாக்கா இருந்தாலும்
பொய் சொல்லாம இருக்க முடியாதுங்க. அதன்படி மொதல்ல அந்த கம்ப்யூட்டருக்கு
உணர்ச்சிகளை பத்தி நெறைய புரோகிராம் குடுத்தேன். அதுக்கே உணர்ச்சி வர்ற
மாதிரி புரோகிராம் எழுதினேன். அப்புறம் தினமும் நடிகை ஜிலேபினாவோட கவர்ச்சிப்
படம் ரெண்டு காட்டிட்டே வந்தேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அதிகம் பண்ணி
தினமும் நூறு இருனூறு ன்னு படம் பாக்க உட்டேன். ஒரு ஸ்டேஜுல படம்
பாக்கலைன்னா வேலையே ஒடாதுன்னு பண்ணி உட்டேன். அப்புறம் அது தானாவே
பொய் சொல்ல ஆரம்பிச்சுடுச்சு. திருட்டுத்தனமா ஜிலேபினா படத்தை மெமரியில சேவ்
பண்ண ஆரம்பிச்சுடுச்சு. அது ரீட் ஒன்லியா. அதனால அத சேவ் பண்ண முடியல.
வேலை செய்யாம படம் பாக்க ஆரம்பிச்சுருச்சு. அப்படியே அதுக்கு திருட்டு தம்மு,
கள்ளச்சாராயம், மூக்குப்பொடி, பான் பராக் னு எல்லாம் பழக்கம் ஆயிடுச்சு. சுருக்கமா
சொல்லப்போனா அதுவும் ஒரு நவனாகரீக மனுஷனா ஆயிடுச்சு. இப்ப கடைசியா
நான் வர்றபோது கள்ள ஓட்டு போட நூதனமான நானூறு வழிகள் னு புஸ்தகம்
எழுதிக்கிட்டிருந்தது’ என்று முடித்தார் கலிய பெருமாள்.

‘கிரேட் ஒர்க் கலியபெருமாள். ஒண்ணு கவனிச்சீங்களா. எல்லா உயிர்களிலயுமே
மனுஷனுக்கு மட்டும்தான் இந்த பொய் சொல்ற உயர்ந்த குணம் இருக்கு பார்த்தீங்களா?
அதைத்தான் நம்ப முன்னோர்கள் ஆறாவது அறிவு ன்னு சொன்னாங்க. நாம
பகுத்தறிவு ன்னு சொல்றோம். மனித இனம் வாழ்க’ என்று வியந்தார் அவர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *