வைராக்கியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 6, 2024
பார்வையிட்டோர்: 512 
 
 

(1970ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

இந்தக் கதை

மதுரை சிறையில் உருவாகி திருச்சி சிறைச்சாலையிலே முடிந்தது. 

முடிந்த கதை, திருச்சி சிறையில் 37-வது அறைக்குச் சென்றது. அந்த அறையில்தான் கலைஞர் மு.க. இருந்தார். இரண்டு நாட்கள் கழித்து அவர் இந்தக் கதையைத் தரும்போது “இந்தக் கதை இப்போது எழுதியிருப்பது போல் இரண்டு மடங்கு விரித்து எழுதினால், கதை சுவையாக இருக்கும்” என்று சொன்னார். பேராசிரியர் அன்பழகன் அவர்களும் அதே கருத்தை வலியுறுத்தினார். நான், கதையைத் திரும்ப விரித்து எழுதி முடிப்பதற்கும், சர்க்கார் எங்களைத் திடீரென்று விடுதலை செய்வதற்கும் சரியாக இருந்தது. விடுதலையாகும் பொழுது சிறை அதிகாரிகளால் எடுத்துக் கொள்ளப்பட்ட இக்கதை திரும்ப எனக்குக் கிடைக்கவே இல்லை. 

அந்தக் கதையை மீண்டும் எழுதத் தூண்டினார் தினகரன். தோழர் தினகரன் ஆண்டில் இளைஞர், உறுதியான லட்சியவாதி. அவரது வேண்டுக்கோளுக்கிணங்கி மூன்றாம் முறையாக எழுதப்பட்ட இக்கதை, தினகரனின் கிழமை இதழான “தென்னகத் தலைவனில்’ வெளி வந்தது. 

படிப்பவர், சுவையும் பயனும் பெறுவர் என நம்புகிறேன். 

எஸ் எஸ்.தென்னரசு 
14-12-62


1. குண்டு பாய்ந்தது 

நெடுஞ் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் அந்த ஒற்றையடிப் பாதை, மூன்று கல் தொலைவு கடந்து ஒரு பழங்காலத்துக் கெட்டி மச்சு வீட்டின் முகப்பைத் தொட்டது. அந்தப் பெரிய வீட்டுக்கும், அந்த வீடு இணைந்திருந்த குக்கிராமத்திற்கும் கூப்பிடு தூரம். கண்டதேவி என்பது அந்தச் சிற்றூரின் பெயர். 

கண்டதேவியில் பெரிய வீடுகள் பல இருந்தன. அத்தனையும் பொலிவிழந்திருந்தன. வாழ்ந்து முடிந்த மூதாட்டிகளைப் போல் அந்த வீடுகளின் சுவர்கள் வெடிப்புகள் விழுந்து காணப்பட்டன. ஆனால், நெடுஞ் சாலையிலிருந்து விலகிச் செல்லும் அந்த ஒற்றையடிப் பாதை தொடும் பெரிய வீடு மட்டும் மராமத்துப் பாரிக்கப்பட்டு, பார்ப்பதற்குக் குளிர்ச்சியாக இருந்தது. அந்த வீட்டு முகப்பில் ‘சிங்கராயர்’ என்று எழுதி யிருந்தது, பளிச்சென்று நன்றாகத் தெரிந்தது. பழைய வீட்டுக்குப் புதிதாக வண்ணம் பூசியிருக்க வேண்டும். 

முகப்பு வாசலில் இரண்டு வேப்பங் கன்றுகள்; அப் போதுதான் அவை இரண்டும் கிளை பிரிந்திருந்தன. அவைகளை வைத்து ஆறுமாதங்களுக்கு மேலிராது. வீட்டு வாசலில் மோட்டார் சக்கரங்களின் தடங்கள் இழையோடிக் காணப்பட்டன. அடிக்கடி அந்த வீட் டுக்குக் கார்கள் வந்து போய்க் கொண்டு இருந்திருக்க வேண்டும். வீட்டுக்குக் கொஞ்சம் தள்ளி நெடி துயர்ந்த மதில்களையுடைய அம்மன் கோயிலுக்கு எதிரே இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் போலீஸ் ஸ்டேசன் வைக்கப்பட்டிருந்தது. துப்பாக் கியைத் தரையில் நிறுத்திய வண்ணம் ஒரு போலீஸ் காரன் மண்டபத்து வாசலில் நின்று கொண்டிருந்தான். அவன் நிற்பதைப் பார்த்தால் எதையோ ரகசியமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. 

பௌர்ணமி நாள் அது; மாலை வேளை. கீழ்ப்பால் நிலவு எழுந்தது. எதிர்த்து மேல் திசையில் நின்ற கதிரவன் மலைவாயிற் சென்றுவிட்டான். அப்போது பழையகாலத்து மோட்டார் ஒன்று சிங்கராயர் வீட்டு வாசலில் வந்து நின்றது. அரைக்கால் சட்டைபோட்ட வாலிபனொருவன் கம்பீரமாகக் காரை விட்டு இறங்கி வீட்டுக்குள் சென்றான். அவன் நடை மிடுக்கும், உடை ஒயிலும் அவன் தான் அந்த வீட்டுக்குச் சொந்தக்கார னான சிங்கராயன் என்பதைக் கோடிட்டுக் காண்பித் தது. சிங்கராயனின் காலடிச் சத்தம் கேட்டதும் பணியாள் ஒருவன் ஓடிவந்து கதவைத் திறந்துவிட்டு அடக்கத்துடன் நின்றான். 

“என்னடா இன்று சாப்பாடு?”-வேட்டைக்குப் போய் களைத்து வந்தவனைப் போல் அதிகாரத்துடன் கேட்டான் சிங்கராயன். 

“சீரகச்சம்பா சோறு, புளிக்குழம்பு, வரால் இறைச்சி, வள்ளைக் கீரை மசியல்” என்று வேலையாள் பதில் சொன்னான். 

“சரி பரிமாறு!”…என்று சொல்லிவிட்டு சிங்க ராயன் குறிச்சியில் சாய்ந்தபடி பக்கத்திலிருந்த பத் திரிகை யொன்றைப் புரட்டிப் படித்தான். அவனுக்கு மனம் ‘திக்’ என்றது. செய்தியைத் திரும்பக் கூர்ந்து படித்தான். 

“பிரபல வழிப்பறிக் கொள்ளைக்காரனும், பல போலீஸ் அதிகாரிகளை அவமானப்படுத் தியவனும், காடுகளில் மரங்களை வெட்டி அழித்தவனுமான ‘மரம் வெட்டி என்ற மானகிரியைச் சுட்டுப் பிடிக்க சர்க்கார் உத்தர விட்டிருக்கிறது. அவனை உயிருடனோ, சுட்டுக் கொன்றோ சர்க்காரிடம் ஒப்படைப்பவர்களுக்கு ரொக்கப் பரிசும், சர்க்காரின் நற்சாட்சிப் பத்திரமும் கொடுக்கப்படும்” 

  • இதைப் பார்த்ததும் சிங்கராயனுக்குக் கண் பஞ்சடைந்து விட்டது. 

மானகிரி சிறு பிள்ளையிலிருந்தே எனக்கு நெருங் கிய நண்பன். நன்றாகப் படித்தவன். பள்ளிப் பரு வத்தில் மானகிரியிடம் காணப்பட்ட நடவடிக்கைகள் அவனொரு சிறந்த அரசியல்வாதியாக வருவான். சக்தி பெற்ற மேடைச் சொற்பொழிவாளனாகப் பெயர் பெறுவான் என்று பலரை கணக்குப்போட வைத்தன. ஆசிரியர்களெல்லாம் அவன்மீது அளவு கடந்த அன் பைச் சொரிந்தார்கள். குளித்து திருநீறு பூசாமல் பள்ளிக்கு வரமாட்டான். ஆனால், காலம் அவனைப் பயங்கரக் கொள்ளைக்காரனாக்கிவிட்டது.-சிங்கராயன் ஒரு கணம் இப்படி எண்ணிப் பார்த்தான். 

சாப்பாடு வைக்கச் சொன்னதையும் மறந்து சிங்கராயன், தன் நண்பன் மானகிரியைப் பற்றிய சிந்தனையில் திளைத்து விட்டான். 

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை நான் அவனைக் காளையார் கோயில் தெப்பத் திருவிழாவில் பார்த்தேன். அவன் நரிக்குறவன் வேடத்தில் திரு விழாவுக்கு வந்திருந்தான். அப்பொழுதே அவனைத் தேடி போலீஸ் வலைவிரித்துக் கொண்டிருந்தது. அவ னைப் பெற்ற தாயாரும், கூடப்பிறந்த தங்கை செவந்தி மாலையும் ஒளிந்து மறைந்து கொண்டே அவனோடு பேசவேண்டியிருந்தது. போலீஸ் கெடுபிடி அப்படி! நான்கூட அவனைப் பார்க்கவில்லை. அவனாக என்னைக் கூப்பிட்டான். இருவருக்கும் மனம் கசிந்து விட்டது. ‘மானகிரி, உனக்கு ஏன் இப்படி மனம் கெட்டுவிட்டது? உனக்கும் போலீசுக்கும் என்ன பகை?’ என்று கேட் டேன். அவன் சிரித்தான்; அந்தச் சிரிப்பில் பழி வாங்கும் சக்தி இருந்தது. சபதம் வீரிட்டது, ‘சிங்க ராயா, மனிதனுக்குக் கோபம் வராதா? அது இயல்பு. அந்தக் கோபத்தை ஒருமுறையாவது மன்னிக்கக் கூடாதா? அந்த எண்ணம் போலீஸ் இலாகாவுக்கு அறவே இல்லை. கோபத்தால் விளைபவைதான் கொடிய குற்றங்கள் என்று அறிந்தும், குற்றங்கள் மலிவதற்குத் தான் அந்த இலாகா நாள்தோறும் விதை தூவுகிறது. என் தங்கச்சி செவந்திமாலையை ஒரு துடுக்குக்க ரன் அடிக்கடி குளத்தங்கரையில் கேலி செய்து வந்திருக்கிறான். நான் அவனை இரண்டுமுறை கண்டித்துப் பார்த்தேன். அவன் கேட்கவில்லை. அவன் மனத்தில் ஏதோ தவறான ஆசை பூத்திருக்கிறது. ஒரு நாள் என் தாயாரும், செவந்தியும் நாடகம் பார்த்துவிட்டுத் திரும்பும்போது, அதே துடுக்குக்காரன் நையாண்டி செய்திருக்கிறான். நான் அவனை மறுநாளே நேரில் கண்டு எச்சரித்தேன். அவன் பணிந்து போவதாகத் தெரியவில்லை. ‘உன் தங்கை என்ன அந்தப்புரமா?’ என்று கேட்டுவிட்டான். எனக்கு கோபம் வந்து விட்டது. வராதா? தங்கையென்று ஒருத்தி யிருந் தால், அண்ணன் அடிக்கடிகோபக்காரனாகத்தான் மாறு வான். அந்தக் கோபம் கூடாததாகக்கூட இருக்கலாம். அது வேறு பிரச்னை. இடுப்பில் பேனாக்கத்தி யிருந்தது. அவ்வளவுதான். அவனுடைய மூக்கை அறுத்து விட் டேன். இது பழைய கதை! இதற்கு நான் தண்டனையும் அனுபவித்து விட்டேன். அதற்கப்புறம் நான் சிறையி லிருந்து வெளி வந்ததிலிருந்து நமது வட்டாரத்தில் எந்த வழக்கானாலும், எந்தத் திருட்டானாலும் போலீஸ் இலாகா தவறாமல் என்னை ஈடுபடுத்திவந்தது. நானும் மனிதன் தானே! எனக்கு உணர்ச்சி யிருக் காதா? மானம் இருக்காதா? அதற்குப் பிறகுதான் தனித்து சிக்கும் சப்இன்ஸ்பெக்டர்களையெல்லாம் என்னைக் குதிரை தூக்கவைத்தேன்: அவர்களது உடுப்பு களை கழற்றி என் காலடியிலே போட்டுவிட்டு, எனக்கு ‘சலாம்’ போடச் செய்தேன். கோயில் கொள்ளை வழக்கிலிருந்து கொப்பனாபட்டி சுப்ரமணிய செட்டி யாரின் தோட்டத்தை அழித்த வழக்குவரை என்னைத் தான் முதல் எதிரியாகப் புனைந்து போலீஸார் வழக்குப் போட்டார்கள். அதற்குப் பிறகு நான் என்ன செய் வது? கொள்ளைக்காரனாகித்தானே தீரவேண்டும். உல கத்தில் எனக்கு என்ன வேலை இருக்கிறது? நீயே சொல்லு! பெரிய பெரிய வீடுகளிலெல்லாம் கொள்ளை அடித்தேன். எனக்கு என்று வீடு கட்டிக் கொண்டேனா? என் தங்கச்சிக்கு வைர மூக்குத்தி, செய்து கொடுத் திருக்கிறேனா? வரிகட்ட முடியாமல் மாடு, மனைகளை ஈடுகொடுக்கும் ஏழைகளின் இல்லங்களில் தூவினேன். இல்லாவிட்டால் ஏழைகளின் மத்தியில் ‘மானகிரி வள்ளல்!’ என்ற பட்டம் கிடைத்திருக்குமா? நீ கெட்டிக் காரன் திடீர்ப் பணக்காரனாகிவிட்டாய். உன்னைப் போல் புத்திசாலித்தனமாக திட்டமிட்டுக் கொள்ளை யடிக்க எனக்குத் தெரியவில்லை. செட்டி நாட்டுக் கோயில்களில் உள்ள ஒரு தங்கக் கலசத்தைக்கூட விட்டு வைக்கவில்லையாமே? அவ்வளவு தங்கத்தையும் என்ன செய்தாய்? நீ கார் வைத்திருப்ப தாகக் கேள்விப்பட் டேன். எனக்கு மெத்த சந்தோஷம்! நீயாவது சந் தோஷமாய் இரு! ஆனால் ஒன்று! எந்தப் போலீஸ் அதி காரியையும் நம்பிவிடாதே நீ; அவர்களுக்கு உபகாரம் செய்வாய்? அவர்கள் உனக்கு உலை வைத்துவிடு வார்கள். எச்சரிக்கையாகப் பிழைத்துக் கொள். கொள்ளையடித்தது போதுமென்று நீ இருந்துவிட்டால் கூட என்னைப் பொறுத்தவரை உத்தமன் தான்! இன் னும் சொன்னால் கௌரவமாகக் கூட இருக்கும். நான் அப்படியல்ல; என் மனம் கெட்டு விட்டது. என் வாழ்க்கை முறிந்த பாலமாகிவிட்டது. இதோ எனது உயிர். என் முன்னால் நிற்கும் என் தங்கைக்கும் என் அன்னைக்குமாகத்தான் தொடுக்கிக் கொண்டிருக் கிறது”- சிங்கராயன் சிலையாகச் சமைந்து விட்டான். 

இரவு மணி பத்துக்கு மேலாகிவிட்டது. உண வுக்குப் பின் சிங்கராயன் கைக் கெடிகாரத்தை எடுத்து மேஜைமேல் வைத்துக் கொண்டு வடக்கு முகமாக உட் கார்ந்திருந்தான். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நெடுந்தூரத்தில் ஒரு மோட்டார் உருவம் தெரிந்தது. சிறுகச் சிறுக அந்த மோட்டார் விளக்குப் பெரி தாகிக் கொண்டே வந்து திடீரென்று அணைந்து விட்டது. 

சிங்கராயன் வீட்டுக்குள் ஓடி கைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கார் விளக்குத் தெரிந்த திசை நோக்கி நடந்தான். சற்று தூரம் சென்றதும் எதிரே ஒருவன் கை விளக்கோடு ஓடிவந்தான். சிங்கராயன் அவனை நிறுத்தினான். 

“பஞ்சுப் புலி!” 

“யாரது சிங்கராயரா? குடி கெட்டுவிட்டது. கோயில் சேவகன் பார்த்து விட்டான்.” 

“விவரமாகச் சொல்! என்ன நடந்தது?” 

“திட்டப்படி பித்தளை நகைகளை வைத்துவிட்டு, தங்க நகைகளை மாற்றும்போது, இரண்டு பெரிய பெருச்சாளிகள் சண்டையிட்டுக் கொண்டு ஓடி வந்து கோயில் மணிக் கதவுகளில் மோதிவிட்டன. அவ்வளவு தான். அத்தனை மணிகளும் கணகணத்துக் கத்தி விட்டன. சேவகர்கள் விழித்துக் கொண்டார்கள். நாங்கள் தப்பித்தது பெரும்பாடாகிவிட்டது. சேவகர் நமது மோட்டாரை அடையாளம் கண்டிருப்பார் களோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. அதற்காகத்தான் நமது காரை பாதையை விட்டுக் கீழே இறக்கி நிறுத்திவிட்டு வந்திருக்கிறேன். ஒரு வேளை அவர்கள் நம்மைப் பின் தொடரலாம் அல்லது நாளை நமது ஊர் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுக்கலாம். இந்தத் தொல்லைக்குப் பயந்துதான் நான் அடிக்கடி என் தலையில் அடித்துக் கொள்கிறேன், நீங்கள் எப்படியாவது நம் ஊர் சப்இன்ஸ்பெக்டா தங்கப்பாண்டியனை நயந்து வைத்துக் கொள்ள வேண்டுமென்று; அவர் தயவிருந்தால் நமக்கு அச்சமே இல்லை.’- என்று அடுக்கிக் கொண்டே போனான் பஞ்சுப்புலி. 

இருவரும் பேசிக்கொண்டே வீட்டுக்குப் போனார் கள்! இரவு படுக்கை கொள்ளவில்லை சிங்கராயனுக்கு! துப்பாக்கி ரவைகளை கிடுச்கி வைத்தபடியே படுக்கை யில் சாய்ந்தான். அவனுக்கு அது பழகிப்போன காரியம், தொழிலே அதுதானே ! 

கை கொட்டிச் சிரிக்கும் பள்ளிச் சிறுவர்களுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் பைத்தியக்காரனைப் போல், வானத்தில் நட்சத்திரங்கள் மததியில் நிராதரவாக நின்று தவித்துக் கொண்டிருக்கிறது நிலவு. அதன் குளுமையை அனுபவிக்கத் தரையில் யாருமில்லை கானகத்தில் உதிர்ந்த முல்லைப் பூக்களைப்போல் நிலவின் குளுமை நாதியற்றுச் சிந்திக் கொண்டிருந்தது. 

இரவின் எழில் மறைந்து விட்டது. பனிப் புன் னகை திரள் திரளாகப் படையெடுக்கும் நேரம் வந்து விட்டது. காட்டிலே அலைந்து விட்டு, வீட்டுத் தோட் டத்திலே களைப்பாறும் மானின் ஈர மயிரைப் போல் செடி, கொடிகள் நனைந்துவிட்டன. அதற்கும் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு கோயில் நந்தவனத்தில் ஒரு ஆள் அரவம் தென்பட்டது. அது ஆளல்ல! ஒரு பெண் மெள்ள மெள்ள நந்தவனத்து மண்சுவரைத் தாண்டிக் கொண்டு சிங்கராயன் வீடு நோக்கி வந்து கொண் டிருந்தாள். அந்தப் பெண் தாழம்பூ வைத்திருந்தாள். ‘கம்’மென்று அது மணம் வீசிக் கொண்டிருந்தது. அவள் – அந்தப் பெண் நேராக சிங்கராயர் வீட்டுக் கொல்லைச் சுவரில் எறினாள். எப்படி உள்ளே இறங் கினாள் என்றே தெரியவில்லை. அவ்வளவு சீக்கிரத்தில் அவள் உள்ளே குதித்து விட்டாள். வாசலிலே படுத் திருந்த பஞ்சுப்புலி மட்டும் விழித்துக் கொண்டான். அவன் காதுகள் பாம்பின் காதுகள். ஊசி விழுந்தாலும் விழித்துக் கொள்வான். அந்தப் பெண் வீட்டிற்குள் இறங்கி உள் முற்றத்திற்குள் வருவதற்குள் ளாகப் பஞ்சுப்புலி மெதுவாகப் போய் சிங்கராயரை எழுப்பிவிட்டான். போலீஸ் படை வருவது போலவும் தன்னைக் கைது செய்வது போலவும் கனவு கண்டு கொண்டிருந்த சிங்கராயன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான். பஞ்சுப்புலி செய்தியை விவரித்தான். சிங்கராயன் கைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு நீலப் போர்வையால் முக்காடிட்ட வண்ணம் கதவோ ரத்தில் ஒளிந்து நின்றான். உருவம் சரியாகப் புலப்பட வில்லை சிங்கராயனுக்கு. ஆனால் அந்த உருவத்தின் கையில் துப்பாக்கிபோல் ஓர் ஆயுதமிருந்ததை மட்டும் சிங்கராயன் கண்டு கொண்டான். 

ஆயுதம் தாங்கிய இருவர் மோதும்போது முந்திக் கொண்டவன் தான் தப்ப முடியும் என்று அவன் எண் ணினான். ஆகவே ஜன்னல் இடைவெளியில் குறி வைத்து எதிர்நோக்கி இருந்தான் சிங்கராயன். அந்த உருவம் சுவர் ஓரமாக அவன் படுத்திருந்த பகுதிப் பக்கம் தவழ்ந்து வந்து கொண்டிருந்தது. சிங்கராயன் முதலில் சுட்டுவிட்டான். “டுமீல், டுமீல்” என்று ஒலி கிளம்பியது. வீடு அதிர்ந்தது. அதன் எதிரொலி ஊரையே ஆட்டிவிட்டது. பஞ்சுப்புலியும் இன்னொரு பணியாளும் வேகமாகச் சென்று பிணத்தை ரத்த வெள்ளத்திலிருந்து தூக்கப் போனார்கள். அப்போது தான் அவர்கள் திகிலடைந்தார்கள். 

“சிங்கராயரே!” 

“என்னடா?” 

“நீங்கள் சுட்ட புலி, பெண் புலி.” 

“பெண்ணா!” என்று ஆச்சரியத்துடன் ஓடிவந்து பார்த்தான். அந்தப் பெண்ணுக்கு வெங்காயச் செடி யின் தூறுபோல் கொத்து கொத்தாக மீசைகள் இருந் தன. விளக்கை ஏற்றிப் பார்த்தான். அவன் உடல் நடுங்கியது; பெருமூச்சு விட்டான். பெண் வேடம் தாங்கி வந்த தனது ஆருயிர் நண்பனான மானகிரியைத் தான் சிங்கராயன் சுட்டுவிட்டான். பணக்கார வீட்டுப் பெட்டகங்களில் பள்ளி கொண்டிருந்த வெள்ளி தோட்டாக்களை ஏழைகளுக்கு வழங்கிய வள்ளலை சிங்க ராயனின் தோட்டா சவமாக்கி விட்டது. மானகிரி, அவன் இடுப்பில் சொருகியிருந்த கடிதத்தைக் கூட சிங்கராயன் முதலில் பார்க்கவில்லை. அவனது பணி யாள் பஞ்சுப்புலி எடுத்துக் காண்பிக்கும்வரை அவன் பார்க்கவில்லை. 

அன்புள்ள தோழனுக்கு, 

என்னைச் சுடுவதற்கு அரசாங்கம் உத்தர விட்டிருப்பதை நீ அறிந்திருப்பாய். எவ்வகை யிலும் நான் நிம்மதியாகச் சாவதற்கு மார்க்கமில்லை! எனக்கு இரண்டு ஆசைகள். என் தாய்க்குப் பிடித்த பெண்ணை நான் திரு மணம் செய்துகொண்டு பெற்ற மனத்தைக் குளிர வைக்க வேண்டுமென்பது ஒன்று. அது இனி நிறைவேறாது. இன்னொன்று என் தங் கையின் திருமணம். அவள் இளமையில் நொந்து வளர்ந்தவள். குழந்தைப் பருவத்தி லிருந்தே செவந்திமீது முழு அன்பை வைத்திருந்தேன். ஒரே தங்கையல்லவா! ஏற்கனவே அவளுக்கு நான் திருமணத்தை முடித்திருக்க வேண்டும், அதில் தவறிவிட்டேன். 

நண்பா, நீ எனக்காக ஓர் உதவி செய்ய வேண்டும்; எதிர்பாராத வகையில் நான் சுட்டுக் கொல்லப்பட்டால் என் தாயாருக்கு ஆறுதல் கூறி என் தங்கைக்கு எப்படியும் திரு மணத்தை முடித்து வைத்துவிட வேண்டும். உன்னால் செய்யக் கூடிய உதவி தான்! நான் எத்தனையோ பேருக்கு உதவி செய்திருக் கிறேன். சிரிக்கத் தெரியாதவர்களை யெல்லாம் சிரிக்க வைத்திருக்கிறேன். ஆனால் என் குடும்பம் அழுது கொண்டிருக்கிறது; ஏதாவது பண உதவி தேவைப்பட்டாலும் அடுத்த முறை கொண்டுவந்து தருகிறேன். நான் உனக்கு எந்த உதவியும் செய்ததில்லை. ஆனால் நீ எனக்குச் செய்தே தீரவேண்டிய கட்டம் வந்துவிட்டது. மன்னிக்கவும், உன்னிடம் இந்தக் கடிதத்தைத் தந்துவிட்டுப்போக வந் தேன். நீ வெளியூர் போயிருந்தால் என்ன செய்வது என்பதற்காகத்தான் கடிதம் எழுதி வைத்திருக்கிறேன். 

என்னிடம் மூன்று துப்பாக்கிகள் வைத் வைத்திருக்கிறேன். உனக்காக ஒரு துப்பாக்கி கொண்டு வந்திருக்கிறேன், பயன் படுத்திக் கொள். எனது அன்னையையும், அருமைத் தங்கச்சி செவந்திமாலையையும் கைவிட்டு விடாதே! 

உண்மைத் தோழன் 
மானகிரி. 

-கடிதத்தைப் படிக்கும் போதே சிங்கராயனுக்குக் குலை நடுங்கியது. உடம்பெல்லாம் வியர்த்து பூத்து விட்டது. கையை நறுக்கிக் கொண்டவனைப் போல் துடித்தான். பஞ்சுப்புலி தாங்கிப் பிடிக்காவிட்டால் சிங்கராயன் மயக்கம் போட்டு விழுந்திருப்பான்! 

சிங்கராயனைப் படுக்கையில் போட்டு பஞ்சுப்புலி விசிறிக் கொண்டிருந்தபின், அப்போது அவனுக் கொரு யோசனை தோன்றியது. அந்த யோசனைப்படி சிங்கராயன் செய்தால் உள்ளூர் சப்இன்ஸ்பெக்டரின் அன்பைப் பெறுவதோடு மட்டுமல்லாமல் அந்த வட்டாரத்தில் எதையும் துணிந்து செய்யத் தைரியம் பிறக்கும் என்று பஞ்சுப்புலி தனக்குள்ளே நினைத்துக் கொண்டு, சிங்கராயன் எழுந்தவுடன் அவனிடம் சொன் னான். சிங்கராயனுக்குப் பஞ்சுப்புலியின் திட்டம் மிகவும் பிடித்திருந்தது. அந்தத் திட்டத்தினால் இரண்டு காரியங்கள் சித்தியாகுமென்று சிங்கராயன் தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டான். 

பொழுது விடிந்தது, இரண்டு பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார்கள். சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டியன் சிங்கராயனின் பிரவேசத்தைக் கண்டு வியப்படைந்தார். 

“தங்களிடம் கொஞ்சம் தனித்துப் பேச வேண்டும்!” 

“என்னிடமா? நான் யாரிடமும் ரகசியம் வைத் துக் கொள்வதில்லை!” 

“முக்கியமான தகவல், கேட்டால் குதூகலமடைவீர்கள்!”. 

“பரவாயில்லை, இங்கேயே சொல்லலாம் யார் இருக்கிறார்கள் தாராளமாகச் சொல்லுங்கள்”-சப் இன்ஸ்பெக்டர் அலட்சியமாகவே பேசினார். 

“இன்ஸ்பெக்டர் சார்! என்னை மன்னிக்கவேண்டும். விபரம் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அன்பு கூர்ந்து கொஞ்சம் உள்ளே வாருங்கள், இது உங்கள் முன்னேற்றப் பிரச்சினை” என்று சிங்கராயன் அணைத் துப் பேசினான். 

“என் இலாகாவைப் பொருத்த விஷயமாக இருந் தால் சொல்லுங்கள்; வேறு விஷயம் எனக்குப் பிடிக் காது, எழுந்து வாருங்கள்” என்று வேண்டா வெறுப் பாக எழுந்து தனி அறைக்குப் போனார் சப்இன்ஸ்பெக் டர். அவருடன் சிங்கராயனும் சென்றான். பஞ்சுப்புலி ஸ்டேஷன் முன் வெராந்தாவிலேயே அமர்ந்திருந்தான். அவனுக்குப் பக்கத்தில் ஒரு போலீஸ்காரன் நின்று கொண்டிருந்தான். 

வெளியில் நின்ற போலீஸ்காரன் பஞ்சுப்புலியைப் பார்த்து கண்ணைச் சுழித்தான். பஞ்சுப்புலி புருவத்தை நெறித்தான். 

“உங்கள் சப்இன்ஸ்பெக்டருக்கு சுக்கிரதி சை ! ப தவி உயரப்போகிறது.” என்று ஜாடையாகச் சொல்லிக்கூட வைத்தான் பஞ்சுப்புலி. 

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சிங்கராயன் வெளியில் வந்தான். 

“படு குழியில் விழுந்த யானைகூட தப்பிவிடலாம்; பேராசையில் சிக்கிய மனிதன் தப்பவே முடியாது!” பஞ்சுப்புலி தத்துவம் பேசத் தொடங்கினான். 

“என்னடா பஞ்சுப்புலி! காலையிலே கஞ்சா கிடைத்துவிட்டதா?” என்று கிண்டல் செய்தான் சிங்கராயன். 

“ஸ்டேஷனுக்குள் போகும் போது என்ன என்று கூடக் கேட்காத சப்-இன்ஸ்பெக்டர் கொஞ்ச நேரத்தில் எப்படி உருகிப் போனார் பார்த்தீர்களா?” என்றான் பஞ்சுப்புலி. 

அப்போதுதான் பஞ்சுப்புலியின் தத்துவம் சிங்கராயனுக்குப் புரிந்தது. 

2. சபதம் 

“தங்கப்பாண்டியனாம்! பெற்ற வயிறு பற்றி யெறிய கொன்று விட்டான் சண்டாளன். சின்னவயதில் சிறைக்குப் போய், சிங்கத்தமிழன் எனப் புகழ் பெற்று என்னைக் கொல்லாமல் கொன்றுவிட்டு போய் விட் டான், என் செல்ல மகன் மானகிரி. 

“இப்படி அற்ப சொற்ப வயதில் குடும்பம்- பிள்ளை என்றால் என்னவென்று அறியாமல் துர்மரணம் ஆவான் என்று நான் நினைக்கவில்லை. குலதெய்வங் களுக்கெல்லாம் காணிக்கை செலுத்தியிருக்கிறேன். என் கையால் லஞ்சம் வாங்காத போலீஸ்காரர்களே இல்லாத அளவுக்கு மொத்தமாகவும் சில்லரையாகவும் கொடுத்து அழுதிருக்கிறேன். இத்தனையும் என் மகன் அச்சமில்லாமல் வீட்டோடு வாழ வழி செய்யவேண்டும் என்பதற்காகச் செய்தேன். என் மகன் வீட்டுச் சோறு சாப்பிட்டு ஆறு வருஷங்களுக்கு மேலாகிவிட்டது. யார் வைத்த தீயோ என் வீட்டைப் பற்றி எரிகிறது! குடி கெடுத்த தெய்வங்களா! உங்களுக்கு அடுக்குமா? டேய் தங்கப்பாண்டியா! என் குடும்பத்தைப் போல் உன் குடும்பமும் அலைமோதிப் போகாதா? உன்னுடைய பெண்டு பிள்ளைகள் நிம்மதியாகவா சாகப் போகிறார் கள்! வினை விதைத்தவன் தினை அறுத்ததில்லையடா.”- மானகிரியின் கொலைச் செய்தி யறிந்த அவனது தாய் சிலம்பாயி பொறுமி அழுதாள். புழுதியில் புரண்டு புரண்டு கதறினாள். அவள் குடியிருந்த தெருவே வீட்டு முன் திரண்டு ஆறுதல் கூறியது. ஆறுதல் எடுபடக் கூடியதா? வீடு எரிந்தால் சமாதானம் கூறலாம்: திருடு போனால் ஆறுதல் சொல்லலாம். போனால் திரும்பாத ஊருக்கு – ஒரே மகன் போனதற்காக துடிக்கும் மனத்தை ஆற்ற முடியுமா? அந்த வயோதிகத்தாய் தனக்கு ஒரு மருமகள் வருவாள் என்று மனக்கோட்டை கட்டியிருக்கலாம். அவளுக்கொரு பிள்ளை பிறக்கும்; பிறந்தால் பாட்டன் பெயர் வைக்கவேண்டுமென ஆசைப்பட்டிருக்கலாம். 

ஏழை வீட்டில் ஏற்படும் சாவு; வெடிச்சரத்தில் தீ வைப்பது போன்றது. தொடர்ந்து பல ஆசைகளுக்கு அது கொள்ளி வைத்துவிடுகிறது. எப்போதோ எடுத்த புகைப்படம் -மான கிரியுடையது. அந்தப் படத்திற்கு ரோஜா மாலை போட்டு விட்டு வாசலில் மாட்டி விட்டாள் சிலம்பாயி. தனக்காக எதையும் தரும் அண்ணன் மீது ஆறாத பற்றுக் கொண்டிருந்த செவந்தி மாலையும் கண்ணீர் சொரிந்தாள். வாய் விட்டுக் கதற அவளுக்கு வயது இடம் தரவில்லை. கன்னிப் பெண்! பதினெட்டு வயது! 

சிலம்பாயிக்கு வயது ஐம்பதுக்குமேல் இருக்காது. திடகாத்திரமான உடற்கட்டு! ஆடவர்களைப் போல் ஐந்தரையடி உயரமிருப்பாள். உயரத்திற்கேற்ற சதைப் பிடிப்பு. வெண்கலக் குரல் – வெடு வெடுவென்று பேசினாலும், சுபாவம் என்னவோ சாந்தமானது தான். வெற்றிலைக் காவி படிந்த பற்கள். தெருவில் நடக்கும் குடும்பச் சண்டை, வாய் துடுக்கால் ஏற்படும் கன்னிப் பெண்களுள் கெடுபிடி போர் இவைகளுக்கெல் லாம் பரிகாரம் காணும் பொறுப்பு அவளிடம் இருந் தது. அவள் நியாயம் தவறி பஞ்சாயத்துச் செய்த தில்லை. இருப்பவர்களுக்கு ஒரு முடிவு இல்லா தவர் களுக்கு ஒரு முடிவு என்ற பேச்சே அவளிடம் இருந்த தில்லை. சிலம்பாயி யாருக்கும் பயந்தவளல்ல; பார்ப்ப தற்குப் பயிற்சி பெற்ற பயில்வானைப் போலிருப்பாள். வெள்ளைப் புடவை தான் அவள் உடுத்துவது. விதவை தானே! 

மானகிரியிடமிருந்து சிலம்பாயி எதையும் எதிர் பார்த்திருந்ததில்லை. சாணம் தட்டி விற்பதுதான் அவளுக்குத் தொழில். அது அவளுக்கு நல்ல தொழில். குடும்பச் செலவு போக மீதம்கூடக் கண்டாள். அந்தத் தொழிலில் தெருப் பிள்ளைகள் சாணம் கொண்டுவந்து கொடுப்பார்கள். பதிலுக்குக் காசு கொடுப்பாள்; தவறினால் தவிடு கொடுப்பாள். மொதீதத்தில் அவள் அந்தத் தெருவுக்கு நாட்டாண்மைக்காரிபோல் கீர்த்தியுடன் வாழ்ந் தாள். எப்போதாவது போலீஸ்காரர்கள் நடுநிசியில் மானகிரியைத்தேடி ஆராவயலுக்கு வருவார்கள். தேவ கோட்டைக்கும் ஆராவயலுக்கும் நாலுகல் தொலைவு. கண்டதேவிக்கும் ஆராவயலுக்கும் அதைவிடக் குறைவு. ஆராவயலில்தான் சிலம்பாயி குடியிருந்தாள். 

மானகிரியை சப்இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொன்று விட்டார் என்ற செய்தி மறுநாள் பகல்பொழுதிலேயே சிலம்பாயிக்கு எட்டிவிட்டது. அவள் கோபப் பட்டதைப் பலர் பார்த்திருக்கிறார்கள்; அவள் முச்சந்தி யில் நின்று ஆடவர்களை அறை கூவி அழைத்து பேசிய தையும் பலமுறை கேட்டிருக்கிறார்கள். ஆனால் கண்ணீர் வடித்ததை – புலம்பி அழுததை-குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைத்துக் கதறியதை அது வரை யாரும் பார்த்ததில்லை. ரத்தபாசம் அவள் வீரத் தைக் கரைத்து, ஆணவத்தை புதைத்துப் புழுவாக துடிக்க வைத்த சோகக்கட்டத்தை அன்றுதான் மக்கள் பார்த்தார்கள். அவள் தனிப்பட்ட ஒரு வகுப்பைச் சேர்ந்தவளாக இருந்தாலும் ஊருக்கே உறவினளாக வாழ்க்கை நடத்தினாள். எல்லோரும் அவளை முறை வைத்து அழைத்துப் பழகி இருக்கிறார்கள். ஆகையால் அவளது துயரத்தைத் தாங்கமுடியாமல் கண்ணைத் துடைத்துக் கொண்டார்கள். 

கத்திக் கத்தி அவள் தொண்டை வற்றி விட்டது. தேம்பித் தேம்பி செவந்திமாலையின் முகம் விம்மி புடைத்து விட்டது. 

பொழுது சாயப்போகும் நேரம். தரையில் சூடு தணிந்து விட்டது. கதிரொளி நெடுஞ்சுவர்களுக்குப் பழுப்பு வர்ணம் கொடுத்துக் கொண்டிருந்தது. அப்போது தெருக்கோடியில் ‘டுப் டுப்’ என்று சத்தம் கேட்டது. எல்லோரும் பதையை விட்டு விலகி நின்றார் கள். சிங்கராயனும் பஞ்சுப்புலியும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினார்கள். சிலம்பாயி அவர்களை லட்சியம் செய்யவில்லை. செவந்திமாலை மட்டும் நாணத் துடன் விலகி போய் சுவர் ஓரத்தில் நின்றுகொண்டாள். 

“நடந்ததை நினைத்து வருந்தி என்ன ஆகப்போ கிறது! எழுந்திருங்கள்” என்று சிலம்பாயிக்கு சமா தானம் சொன்னான் சிங்கராயன். 

சிலம்பாயி பைத்தியம் பிடித்தவளைப்போல் ஒன்றும் பேசாமல் நின்றாள். அவள் முகம் சிவந்திருந்தது. அவளது கண்கள் கனிந்த நாவல்பழங்களைப்போல் கசிந்துருகின. 

“என்னை தெரியவில்லையா உங்களுக்கு! நான் தான் சிங்கராயன். முதலில் உள்ளே வாருங்கள் போய்ப் பேசலாம்”-சிலம்பாயியை உரிமையுடன் கையைப் பற்றித் தூக்கினான் சிங்கராயன். 

“என்னை எங்கே கூப்பிடுகிறீர்கள்? என் மகன் உள்ளேயா இருக்கிறான்? இதோ படம். அவன் உள்ளே யுமில்லை வெளியேயுமில்லை! அவன் எங்களைப் பிரிந்து போய் விட்டான். யாருக்கும் வணங்காத மகன், என் மகன். மானம் காக்கும் மறவனுக்கு வாழ்க்கைப்பட்டு புலியைப்போல் பிள்ளையைப் பெற்றேன். மானகிரி! நீ எப்படிச் செத்தாயோ! சாகும்போது என்ன நினைத் தாயோ! விக்ரகம் போன்ற உன் தங்கையை விட்டுப் போய் விட்டாயடா!” என்று மீண்டும் புலம்ப ஆரம்பித்து விட்டாள் சிலம்பாயி. 

“செவந்தி மாலையை நான் பார்த்துக் கொள் கிறேன். திருமணந்தானே, நீங்கள் கவலைப்படாதீர் கள்” என்று உருக்கமாகப் பேசினான் சிங்கராயன். 

சிலம்பாயி வீறிட்டெழுந்தாள். “செவந்திமாலைக் குக் கல்யாணமா?” என்று கர்ஜித்தாள். அந்தக் கர்ஜனையைத் தொடர்ந்து ஒரு பயங்கரச் சிரிப்பு! உயர்ந்த படிக்கட்டிலிருந்து செப்புப் பாத்திரத்தை உருட்டிவிட்டதைபோல் அந்தச் சிரிப்பொலி கேட்டது. 

“தம்பி!” 

“என்ன வேண்டும் உங்களுக்கு!” 

“எனக்கு இனி என்ன தேவைப்படப் போகிறது! வேண்டியதைத்தான் கொடுத்துவிட்டானே, அந்தத் தங்கப் பாண்டியன்! நான் தான் இனி அவனுக்குச் சன் மானம் கொடுக்கவேண்டும். அரசாங்கம் என் மகனைச் சுட்டதற்கு அவனுக்குச் சன்மானம் கொடுக்கப் போ கிறது. அதற்கு முதலில் நான் கொடுக்கும் பரிசைத் தான் தங்கப்பாண்டியன் பெற்றுக் கொள்ளப்போகிறான்” என்று கூவினாள். 

சிலம்பாயிக்குப் புத்தி தடுமாறி விட்டதாக எல்லோ ரும் எண்ணிக்கொண்டார்கள். சிங்கராயனும், பஞ்சுப் புலியும்கூட அப்படித்தான் நினைத்து விட்டார்கள். 

சிலம்பாயின் குரல் அடங்கவில்லை. “தம்பி இதோ என் மகள்! வயது பதினெட்டு! சிங்கத்தின் மகள்! புலிக்குத் தங்கச்சி! நான் மறத்தி! வீரனுக்கு மனைவி யானேன்! வீரனையே பெற்றெடுத்தேன். எங்கள் குடும்பமே மானத்திற்காக வாழ்ந்த குடும்பம். போன யுத்தத்தில் என் புருஷனைப் பறிகொடுத்தேன். இன்று மகனை இழந்தேன். இருப்பது ஒரே மகள். அவள் பத்தரைமாற்றுத் தங்கம். மானத்தோடு வாழ்ந்த என் தெரு மக்களின் முன்பாகவே கூறுகிறேன். என் வாழ்க் கையில் இனி ஒரே ஒரு ஆசை! இந்த ஆசையை நிறை வேற்ற என் மகளையே நான் பணயப்பொருளாக வைக்கிறேன்.” 

“அவசரப்பட்டு எதையும் பேசாதீர்கள்”- சிங்கராயன் குறுக்கிட்டான். 

“தெரியும் தம்பீ! நான் பைத்தியக் காரியல்ல! விவரம் தெரிந்துதான் பேசுகிறேன். எவன் என் மகனைத் துடிக்கத் துடிக்க வைத்துக் கொன்றானோ அந்த சப் இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டியனை எவன் கொன்று வருகிறானோ, அவனுக்குத்தான் என் மகளை நான் மனப் பூர்வமாகத் தானம் செய்யப் போகிறேன். என் மக ளுக்குச் சுயம்வரம் இனிமேல் தங்கப்பாண்டியனின் பலி பீடத்தில் தான் தம்பி! இது என் சபதம்! இதில் மாற்றம் இல்லை. மகளே சிவந்திமாலை! உன் அண்ணனுக்சாக உன் வாழ்க்கையை நீ தியாகம் செய்துதான் தீரவேண்டும்! உனது எதிர்காலத்தைப் பற்றி நீ கனவு காணாதே! நீ யாரையும் காதலிக்காதே! உனக்கு இனி காதல் இல்லை; சுகம் இல்லை! வாலிபத்தின் எண்ணங்களை உன் இதயத் திலிருந்து எடுத்து விடு! என் சபதத்தை நிறைவேற்று செவந்திமாலை ! செவந்திமாலை!” 

சிலம்பாயி கதறி ஓய்வதற்கும் செவந்திமாலை மயங்கி அவள்மேலே விழுவதற்கும் சரியாக இருந்தது. சிங்கராயனும் பஞ்சுப்புலியும் அப்படியே சிலை யாகிப் போனார்கள்; கூட்டத்தில் பேச்சு இல்லை. 

சிங்கராயன் மட்டும் தனக்குள்ளேயே பேசிக் கொண்டான்: மானகிரியைச் சுட்ட பெயர் தங்கப் பாண்டியனுக்குச் சேராவிட்டால் தனக்கு இன்னொரு ஆபத்து சிலம்பாயி உருவில் வந்திருக்கக் கூடும் என்று சிங்கராயன் மனச்சாந்தி பெற்றுக் கொண்டான். 

3. மனப் போர்

அழகான பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற இலக்கண மில்லை கவர்ச்சி, பார்ப்பவர் களின் மனத்தைப் பொறுத்தது. ஆடவர்களுக்குப் பிடித்தமான அழகிய ரோஜா மலர் பெண்களுக்குப் பிடிப்பதில்லை. பெண்கள் விரும்பும் மல்லிகைப் பூவை ஆடவர்கள் ஏற்பதில்லை. இரண்டிலும் அழகுண்டு, வசீகரமுண்டு. 

செவந்திமாலை கருத்தப் பெண் தான். ஆனால் அவள் அழகுக் கறுப்பு வாலிபர் நடுவே காந்தக் கல்லாக உலவினாலும் காலிகளுக்கு நடுவே அவள் கனலாகத் திரிந்தாள். 

சிங்கராயன் அவளைப் பலமுறை பார்த்திருக்கிறான். பேசியுமிருக்கிறான். இதயம் மறைவிடத்திலிருப்பதால் எடுத்த எடுப்பில் யாரையும் புரிந்துகொள்ள முடிவ தில்லை. பூக்களைப் பார்க்கும்போது பறித்துச் சூடிக் கொள்ள நினைக்கிறார்கள்; யுவதிப்பெண்களைப் பார்க்கும் போது அவளோடு மணக்கோலத்தில் இருப்பதுபோல் உணர்வு தட்டுகிறது, ஆடவர்களுக்கு. சிங்கராயன் அப்படித்தான் நினைத்து நினைத்து உருகுகிறான். கன்னிப் பெண் செவந்தி மாலையைச் சந்தித்த போதெல்லாம் கவர்ச்சிக்கப் பட்டிருக்கிறான்; கனவு கண்டிருக்கிறான். ஆனால் அவள் நண்பனின் தங்கை அல்லவா? பேர் பெற்ற பலசாலியுடன் பிறந்தவளல்லவா! – இந்த அச்சம் சிங்கராயனின் உள்ளத்தில் எழாமலில்லை. எழுந்தது. ஆசையை அச்சம் விலங்கிய தால் சிங்கராயன் திகைத்துப் போயிருந்தான். இப்போது அவனுக்கு வழி திறந்து கிடந்தது. ஆனால் சிலம்பாயி விடுத்த சப தம் அவன் உள்ளத்தை உலுக்கியது. அப்படியொரு வீரமான பெண்ணை அவன் அதற்குமுன் பார்த்தது இல்லை. 

ஒருவேளை தாயின் சபதம் செவந்திக்குப் பிடிக்கா திருந்தால்? ‘தன்னுடைய இளமைப் பருவத்தை பலி யிட பார்க்கிறாள் அன்னை’ என்று அவள் உள்ளூர எண்ணிக் கொண்டிருந்தால்? சிங்கராயனுக்கு இப்படி ஒரு சபல நினைப்பும் இருந்தது. 

‘தவறு! செவந்தி அவள் அண்ணன் மீது உயிரையே வைத்திருக்கிறாள். மானகிரிக்காக அவள் எதையும் செய்வாள்.’ அடுத்த கணம் அவன் மனம் இப்படித் திரும்பிக் கொண்டது. இரண்டிற்கும் இடையே அவன் மனம் குழம்பித் தவித்தது, 

4. ஆணை

சிலம்பாயிக்கு மனம் அமைதி கொள்ளவில்லை. வினாடிக்கு வினாடி அவள் தனது சபதத்திற்கு உயிர் கொடுத்துக் கொண்டிருந்தாள். எங்கே மனம் மாறி விடுகிறதோ என்ப தற்காக மகன் படத்தை அடிக்கடி பார்த்து வேகம் ஊட்டப் பெற்று வந்தாள். 

ஒரு நாள் சிலம்பாயிக்கு ஓர் ஒலை வந்தது. அதில்… 

“மானகிரியின் அன்னை அறிவது. மானகிரி யின் மரணச்சேதி என் உள்ளத்தை வேல் கொண்டு குடைகிறது. அவரது சாவு வீரர் களுக்குச் சவால் விடுகிறது. திங்கள் காலை அவ்விடம் வருகிறேன். நேரில் பேசலாம். 

இங்ஙனம்,
வீரணஞ் சேர்வை 

…என்று வரையப்பட்டிருந்தது. 

சிலம்பாயிக்கு இதுவரை வீரணனைப் பற்றிய நினைவே இல்லை. ஏழாண்டுகளாக வீரணனுக்கும் மானகிரி குடும்பத்திற்கும் அறவே தொடர்பில்லாமல் போய் விட்டது. 

மானாமதுரையிலிருந்து மதுரைக்குச் செல்லும் நெடுவழியிலுள்ள திருப்பாச்சேத்திக்குத் தெற்கே இரண்டு கல் தூரத்திலுள்ள அரவங்காடுதான் வீர ணனின் சொந்த ஊர். 

வீரணன் பல முறை தண்டிக்கப் பெற்றவன். அவனுக்கு உடம்பில் தழும் பில்லா த இடமில்லை. வீரணன், மானகிரிக்கு கைவாகனமாக இருந்திருக் கிறான். நீட்டிய இடத்தில் பாயும் வேட்டை நாயாகவும் தீட்டிய இடத்தில் பற்றும் தீக்குச்சியாகவும் மானகிரியிக்குப் பயன் பட்டிருக்கிறான். 

ஒரு தடவை மானகிரியின் வீட்டிலிருந்து கைப் பற்றப்பட்ட தங்க நகைகளை நீதி மன்றத்தில் ஒப் படைக்காமல் தனக்கு எடுத்துக் கொண்ட ஒரு போலீஸ் அதிகாரியை பதம் பார்த்து வரும்படி வீரண னுக்கு ஆணையிட்டிருந்தார் மானகிரி. அதிகாரியின் தலையைக் கொண்டு வரப் போன வீரணன், அதிகாரி மனைவியின் கண்ணீருக்கு இணங்கி அவனது தலையைக் கொய்யாமல் நகையை மட்டும் மீட்டு வந்தான். மானகிரிக்கு இந்த மன்னிப்பு அறவே பிடிக்கவில்லை. வீரணன் போலீஸுக்கு வேவுக்காரனாக இருப்பானோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. அந்தச் சந்தேகம் உறுதிப்படும் வகையில் மானகிரி மீது பொய் வழக்கைத் தொடுத்து இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டார் அதே போலீஸ் அதிகாரி. இந்த சம்பவத்திலிருந்து வீரணனுக்கும் மானகிரிக்கும் உறவு கெட்டிருந்தது. 

பல ஆண்டுகளாக மானகிரியின் குடும்பத்துடன் தொடர்பில்லாதிருந்தது வீரணனுக்கு பலக் குறைவா வும் பார்ப்பவர்களுக்கு ஏளனமாகவும் தோன்றுவது போலவும் உறுத்திக் கொண்டிருந்தது. உள்ளத்தில் ஏற் பட்டிருந்த அந்தக் கீரலைப் போக்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வீரணன் விரும்பி யிருக்கக் கூடும். இல்லாவிட்டால் உணர்ச்சியும் உருக்க மும் நிறைந்த அப்படி ஒரு கடிதத்தைச் சிலம்பாயிக்கு எழுதி இருக்க மாட்டான். 

கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடி திங்கட் கிழமை யன்று வீரணன் ஆராவயலுக்கு வந்தான். சிலம்பாயி விம்மி, விம்மி அழுதாள். மானகிரியின் மரணத்தை இசை கூட்டிச் சொல்லுவது போல் துயரத்தைத் தொடுத்து வைத்தாள். வீரணனுக்கும் கண் கலங்கியது. வீட்டிற்குள் தேம்பும் குரல் கேட்டது. இருட்டுக்கும் ஓர் ஒளி உண்டல்லலவா? அந்த ஒளியில் உள்ளே செவந்திமாலையின் கண்கள் கண்ணீரில் மூழ்கி மின்னு வதைப்பார்த்தான் வீரணன். செவந்தி மாலையை எட்டு வயதில் ஒட்டுப் பள்ளிக்கூடத்திற்குப் போகும் போது பார்த்தவன் வீரணன். இப்போது அவள் தகதக வென சந்தனப் பொம்மை போல இருந்தாள். 

அன்று அவள் மாமா என்று வாஞ்சையோடு அழைத்துக் கொண்டு வீரணனிடம் ஓடிவருவாள். வீர ணன் இரண்டணாக் கொடுப்பான். சீனி மிட்டாய் வாங்கித்தின்று உதடுகளைச் சிவப்பாக்கிக் கொண்டு திண்ணைப்பள்ளிக் கூடத்திற்கு ஓடிப் போவாள். அந்த செவந்திமாலையா இப்போது இப்படி இருக்கிறாள்? இன்று அவள் ஒரு நிலவு. அவளைச் சுற்றி நட்சத் திரங்களைப்போல் ஆயிரக்கணக்கான வாலிபர்கள். செவந்தியைப் பார்த்ததும் காலம் கொடியது என்று வீரணனுக்குப் பட்டது. பள்ளிச் சிறுமியை மலர வைத்துப் பூமணக்கச் செய்யும் அதே காலம், மின்ன லிடும் தங்கக் கட்டி போன்ற மேனியை உருக்கி ஓடாக்கிவிடுகிறது என்று அவன் நினைக்கலானான். வீரணன் நினைத்ததில் தவறில்லை. மனித வளர்ச்சிக்கு ஒரு நடுப்புள்ளி உண்டு. பருவம் அந்த நடுப் புள்ளியைத் தொடும்வரை எல்லாம் ஏற்றம் உள்ள தாக இருக்கும். வாழ்க்கையில் பொலிவும், புகழும் வந்து வந்து அலைமோதும். பருவம் நடுப்புள்ளியைத் தாண்ட ஆரம்பித்ததும் நரம்புகள் தளரும். முயற்சிகள் குன்றும்; களைப்பும் பலவீனமும் ஏற்படும் அதுவே பெரும் நோயாகி விடும். இதெல்லாம் குறைபாடுகளா? காலச்சக்கரம், தானாக ஓடும், சாரதி இல்லாத வண்டி. பலரது வாழ்க்கைச்சரித்திரங்கள் சுழன்று விளையாடிக் களைத்துப் போய் அந்த வண்டிச் சக்கரத்தில் சிக்கி கூழாகி விடுகின்றன, 

இப்போது சிலம்பாயி அந்தக் கட்டத்திற்கு வந்து விட்டாள். தெருவில் நின்று கொண்டு ஆவேசக் குர லில் அவள் போட்ட சபதத்தை வீரணனிடம் சொன் னாள். வீரணனுக்கு உடம்பு சில்லிட்டது. 

“என்னடா வீரண்ணா முகம் சுளிக்கிறாய். நீ ரத்தத்தை சந்தனமாக்கி சிரித்த ஒரு வீரனின் சிநேகிதன் என்பதை மட்டும் மறந்து விடாதே!” 

“நானா மறப்பேன். ‘கையில் இப்போது ஆயுதம் இல்லையே’ என்று கவலைப்படுகிறேன்; வேறொன்றுமில்லை” என்றான் வீரணன். 

“ஆயுதமா, என்ன ஆயுதம் வேண்டும் உனக்கு? மானாகிரி வீட்டிலா ஆயுதம் இல்லையே! இது ஆயுதக் கிடங்கு உனக்குத் தெரியாது!”-வெறி பிடித்தவளைப் போல் பேசினாள் சிலம்பாயி. 

வீரணன் யோசித்தான். ஏதோ ஒரு பழைய சம்ப வத்தை அவன் நினைவுக்குக் கொண்டு வர முயன்றான். “வீரணா என்ன இன்னும் சிந்திக்கிறாய்?” சிலம் பாயி கேட்டாள். 

“எங்காவது துப்பாக்கி கிடைக்குமா என்று யோசிக்கிறேன்” என்றான் வீரணன். 

சிலம்பாயி பலமாகச் சிரித்தாள். அது ஏளனச் சிரிப்பு. 

“துப்பாக்கியா வேண்டும்? எத்தனை வேண்டும்? வா என்னோடு” என்று எழுந்தாள் சிலம்பாயி. 

எழுந்தவுடன் வீட்டுக்குள்ளே போய் ஒரு மண் வெட்டியை எடுத்து வந்தாள். சிலம்பாயின் நட் வடிக்கைகளும் பேச்சும் வீரணனுக்கு விக்கிரமாதித்தன் கதை படிப்பது போல இருந்தது. 

சிலம்பாயி உள்ளே போனாள். வீரணன் பின்னாடிச் சென்றான். இருவரும் தோட்டத்திற்குள் சென்றார்கள். 

அங்கே ஒரு சிவலிங்கத்தின் சிலை. சிலம்பாயி அந்தச் சிலையைத் தூக்கி வைத்துவிட்டு அந்த இடத் தில் வெட்டும்படி சொன்னாள். வீரணன் வெட்டினான். ஒரு ஆள் மட்டத்திற்கு வெட்டிய பிறகு தகரப் பெட்டி ஒன்று வந்தது. அந்தப் பெட்டிக்குச் சாவி சிலம்பாயி வசமிருந்தது. சிலம்பாயி பெட்டியை திறந்தாள்: அதில் ஒரு சிறிய கைத் துப்பாக்கியை, துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. அது புது துப்பாக்கிதான், அதற்குரிய நூறு தோட்டாக்களும் பெட்டிக்குள்ளேயே இருந்தன. சிலம்பாயி அவைகளை வீரணனிடம் கொடுத்தாள். 

“வீரணா, இப்போது நீ கொலை செய்யப் போக வில்லை. ஒரு சபதத்தை நிறைவேற்றப் போகிறாய். ஒரு யுவதி, வாழாமல் சாகப்போவதைத் தடுத்து அவளை வாழச் செய்யும் புனிதப் பணிக்குப் போகிறாய். ஒரு தாயுள்ளம் நிராசையுடன் மூழ்கிப்போகாமல் தூக்கி நிறுத்துவதற்காகப் போகிறாய். எனக்கு நம் பிக்கை தெரிவித்து விட்டுப் போ! வீரணா, துப்பாக் கியை விட்டுவிடாதே! போன வருஷம் தான் மானகிரி இந்தத் துப்பாக்கியைக் கொண்டு வந்து கொடுத்தான். பத்திரமாக வைத்திருக்கச் செய்தான். தொண்டி ராவுத்தருடையது என்று அவன் சொன்னதாக எனக்கு நினைவு!” என்று உணர்ச்சியூரப் பேசினாள் சிலம்பாயி. 

வீரணன் கண்கள் கலங்கின. அவனுக்கு உணர்ச்சி கொப்பளித்தது; குமுறினான். 

“குலதெய்வத்தின் மீது ஆணை. மானகிரி மறவனின் வீரத்தின்மீது ஆணை. எனது தூய உள்ளத்திற்கு இது ஒரு சவால்! உங்களின் வீர சபதம் எனக்குத் துணை நிற்கட்டும்! விரைவில் வெற்றியுடன் வந்து மான கிரியைப் பெற்ற-புலிக்குகை போன்ற உங்கள் வயிற் றில் தேன் பாய்ச்சுகிறேன்” என்று வாக்குறுதியளித்தான் வீரணன். 

பொழுது சாய்ந்தது. சிவலிங்கத்தை மீண்டும் இருந்த இடத்தில் வைத்து விட்டு வருவதற்குள் இருட்டி விட்டது. 

5. துவரிமான் துப்பாக்கி

மானாமதுரையில் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் குடியிருந்த வீடு ஆற்றோரத்தில் இருந்தது. மாளிகை போன்ற பெரிய வீடு அது. 

வீரணன் அங்கு சென்று, இடம் கண்டு, திட்டம் போடுவதற்கே இரண்டு, நாட்களாகி விட்டன. தங்கப்பாண்டியனைச் சுட்டுக் கொன்று அவனது உத்தியோக உடைகளை சிலம்பாயியின் காலடியில் சமர்ப்பிப்பது வீரணன் போட்ட திட்டம். 

தங்கப்பாண்டியனுக்கு மானாமதுரைப் பிராந்தி யத்தில் நல்ல புகழ் இருந்தது. போக்கிரிகள் பயந்து நடுங்கினார்கள். வழிப்பறியும் கலவரங்களும் சோர்ந் திருந்தன. 

தங்கபாண்டியன் வழக்கமாக இரவு பத்துமணிக்கு மேல் தான் வீடு திரும்புவார் என்பதை அறிந்திருந் தான் வீரணன். தங்கப்பாண்டியன் வீட்டுக் கொல்லை யிலிருந்த தென்னை மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண் டான். தலையில் கருப்புத் துணியால் தலைப்பாகை கட்டியிருந்தான். பார்ப்பவர்கள் அடையாளம் கண்டு கொள்ள முடியாதபடி ஒட்டுமீசை வைத்திருந்தான். 

தங்கப்பாண்டியன் களைத்துப்போய் வீட்டுக்கு வந் தார். அப்போது மணி பதினொன்று. இன்ஸ்பெக்ட ரோடு இன்னொருவரின் பேச்சுக் குரல் கேட்டது. வீரணன் உற்றுக் கேட்டுத் திகிலடைந்தான். அது சிங்க ராயனின் குரல். சிங்கராயனை ஏற்கனவே வீரணன் அறிவான். இருவருக்கும் நல்ல பழக்கம் உண்டு. இன்ஸ்பெக்டரும் சிங்கராயரும் வெகுநேரம் வரை பேசிக்கொண்டிருந்தார்கள். இரவு ஒரு மணிக்கு மேல் சிங்கராயன் விடை பெற்றுக்கொண்டு போனான். 

தங்கப்பாண்டியன் இடுப்பில் இருந்த கைத் துப் பாக்கியை எடுத்து மேஜைக்குள் வைத்தார். விளக் குகள் அணைந்தன. எங்கும் ஒரே அமைதி. வீரணன் மரத்திலிருந்து இறங்கி படுக்கையறையை நெருங்கி விட்டான். தங்கப்பாண்டியன் புரண்டு படுத்தார். வீரணன் கதவருகே போகும்போது படுக்கை அறைக் குள் பேச்சுக்குரல் கேட்டது! 

“நல்ல நேரத்தில் கவனப்படுத்தினீர்கள் சிங்க ராயரே! எனது பதவி உயர்வுக்கு எவ்வளவு காரண மாக இருந்தீர்களோ, அதைப் போல் என் உயிரைக் காப்பாற்றுவதற்குப் பெருந் துணையாக வந்திருக்கி றீர்கள். என்னைக் கொன்றவனுக்கு, மானகிரியின் தாயார் தன் மகளைக் கட்டிக் கொடுக்கப் போகிறா ளாக்கும்… நான் ஒரு மதயானை; குறி வைத்தால் எதிரி சாகும்வரை விடமாட்டேன். பேதைச் சிரிக்கி அவளுக் கென்ன தெரியும்!”- தங்கப்பாண்டியன் தூக்கக் கலக் கத்தில் புலம்பியதை வீரணன் கவனிக்காமலில்லை. மானகிரியின் சாவுக்கும் சிங்கராயனுக்கும் ஏதோ தொடர்பிருக்கிறது என்பது மட்டும் வீரணனுக்குப் புரிந்தது. 

குற்றவாளிகள் அகப்பட்டுவிட்ட பிறகு ஊமை களாகவும் ஒன்றும் தெரியாதவர்கள் போலவும் அடங்கி விடு கிறார்கள். அவர்கள் வெளியில் இருக்கும் போது அவர்களது புத்தி வெகுநூதனமாக வேலை செய்கிறது. இல்லாவிட்டால் தூங்கும் இன்ஸ் பெக்டரைச் சுட்டு வீழ்த்துவதற்கு மூன்று மணி நேரம் பிடிக்குமா? காலை மூன்று மணிக்குமேல்தான் வீரணன் இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டியரை சுட்டான். அது வரை வீரணன் புத்தி பல புதிய காரணங்களைக் கற்பித்துக்கொண்டிருந்தது. 

காலையில் நகர் முழுவதும் செய்தி பரவியது. போலீஸ் மேலதிகாரிகள் வந்து விழுந்தார்கள். மானா மதுரை முழுவதும் போலீஸ் மயமாகவே இருந்தது. 

போலீஸ் தலைமையதிகாரி மதுரையிலிருந்து வந்து ஷூட்டிங் நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டார். தங்கப்பாண்டியனின் பிணத்திற்கருகில் கைத் துப் பாக்கி கிடந்தது. அது புதிய துப்பாக்கி! வீரணன் விட்டதுதான்! அந்தத் துப்பாக்கியில் அரசாங்க முத் திரை பதிந்திருந்தது. போலீஸ் அதிகாரி அந்தத் துப்பாக்கியை அரசாங்கத்தின் அனுமதி பெற்று வாங்கப்பட்டது என்று தீர்மானித்தார்; ஆனால் அது யாருடைய துப்பாக்கி என்று உடனறிய அவரால் இயலவில்லை. 

ஒரு வாரத்திற்குப்பிறகு சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு தினசரிப் பத்திரிகையில் தங்கப்பாண்டியன் கொலையைப் பற்றி ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாயிற்று. 

“இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டியன் கொலை சம்மந் தமாக தொண்டி துவரிமான் ராவுத்தர் கைது செய்யப் பட்டிருக்கிறார். தங்கப்பாண்டியன் வீட்டில் போலீசார் கண்டு பிடித்த துப்பாக்கி துவரிமான் ராவுத்தருடைய யது என்று சொல்லப்படுகிறது. தற்போது துவரி மான் ராவுத்தர் மதுரைச் சிறையில் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். அவரைச் சந்திக்க எவரும் அனுமதிக்கப்படுவதில்லை.” 

-இந்தச் செய்தி அந்த வட்டாரத்தையே அதிரச் செய்தது. துவரிமான் ராவுத்தரின் குண தோஷங்கள் கடைவீதிகளில், தேனீர் கடையில் விமர் சிக்கப்பட்டன. 

வீரணன் இரவோடு இரவாகவே மானாமதுரை விட்டுப் புறப்பட்டு விட்டான். ஆனால் மறுநாள் இரவு வந்த பிறகுதான் அவன் ஆராவயல் போக முடிந்தது. 

ஏனென்றால் போலீஸ் இலாகாவைப்பற்றி அவன் நன்கு அறிந்தவன். குறிப்பிட்ட வழக்கிற்காக கைது செய்யப் படும் ஒருவன், விசாரணையின் போது அவன் நிரபராதி யாகிவிடுவான் என்று ஜாடையாகத் தெரிந்தாலும் அவனை வெளியில்விட போலீஸ்காரர்களுக்கு மனம் வராது. அவன் கொட்டடிக்குள் இருக்கும் போதே. அவன்மீது இன்னொரு வழக்குப் பதிவாகிவிடும். எதிரி யோடு சமமாக ஓடி ஆடி விளையாட முடியாத கால் பந்தாட்டக்காரர்கள் பந்தை உதைப்பதற்குப் பதி லாக எதிரிகளின் கால்களை உதைப்ப துண்டு; விளை யாட்டுப் போட்டியில் இதுவும் ஒரு வெற்றி முறை! ஆனால் போலீஸ் இலாக்காவுக்கு இது ஒன்றுதான் வெற் றிக்கு வழி. 

வீரணன்,ஊர் அடங்கியவுடன் சிலம்பாயி வீட்டுக் கதவைத் தட்டினான். சிலம்பாயி கதவைத் திறந்தாள். வீரணன் பரபரப்புடன் உள்ளே நுழைந்தான். சிலம் பாயி, ஏற்கனவே தங்கப்பாண்டியன் கொலைச் செய்தி யைக் கேள்விப்பட்டிருந்தாள். இருட்டில் மின் மினி தெரிவது போல், துன்பமான அவளது முகத்தில் சிறு புள்ளியளவு இன்பம் பொட்டிட்டு நின்றது. 

”வீரணா!” 

“முடித்துவிட்டேன்!” 

“நெற்றியைக் காண்பி!” 

“என்ன…என்ன அது?” 

“ஆரத்தி” 

“ஸ்…ஸ்! அதிக ஆரவாரம் வேண்டாம்! நான் ஊருக்குப் போய் விட்டுப் பத்து நாட்கள் கழித்து வருகிறேன்.” 

“செவந்தி திருமணம்! கூட்டிக் கொண்டு போ!”

“அதைப் பற்றி யோசிக்க வேண்டும் ! ஒரு விஷயம், தங்கப்பாண்டியனுக்கும், கண்டதேவி சிங்கராயனுக் கும் தொடர்பிருக்கிறது. மானகிரியின் சாவுக்கும், சிங்கராயனுக்கும்கூட சம்மந்தமிருக்கும் போல் தெரி கிறது. எச்சரிக்கையாக இருங்கள்! எதையும் வெளியில் காட்டிக் கொண்டு விடாதீர்கள். நான் போலீஸ் நடவடிக்கை அறிந்து வருகிறேன்”-என்று சொல்லி விட்டு வீரணன் புறப்பட்டு விட்டான். 

சிலம்பாயின் கடைக்கண் நனைந்திருந்தது. செவந்தி மாலை முகத்தைத் தலையணையில் புதைத்துக் கொண்டு கிடந்தாள். 

6. இரகசியத் திருமணம்

‘தங்கப்பாண்டியன் கொலை வழக்கில்’ உயிர் இல்லாமல் இருந்தது. போதிய சாட்சிகள் கிடைக்காததால் போலீஸ் இலாகா உற்சாகமில்லாமல் விழித்தது. துவரிமான் ராவுத்தர் அவர் நிலையைச் சொன்னார். 

“தங்கப்பாண்டியனைச் சுட்டு வீழ்த்திய துப்பாக்கி என்னுடைய துப்பாக்கியாக இருக்கும். ஆனால் அந்தக் கொலைக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. யுத்த காலத்தின் போது தனிப்பட்டவர்கள் வைத்திருக் கும் துப்பாக்கிகளை அரசாங்கம் பறி முதல் செய்தது. அந்த நேரத்தில் என் வசமிருந்த துப்பாக்கி களவு போய்விட்டது குறித்து நான் ஏற்கனவே போலீசுக்கு அறிவித்திருக்கிறேன். அந்த அறிவிப்பின் நகல் என் னிடமிருக்கிறது. இதுவரை போலீஸ் இலாகா காணாமற் போன என் துப்பாக்கியைக் கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுத்துக் கொண்டதாகத் தெரிய வில்லை. ஆகவே இந்தத் துப்பாக்கியை வைத்து என்னைக் குற்றவாளியாக்க நினைப்பது நியாயமாகாது.” என்று போலீஸ் அதிகாரியிடம் ராவுத்தர் சொன்னார். ராவுத்தர் மறுநாளே விடுதலை செய்யப்பட்டார். வழக்கு பிசுபிசுத்து விடும்போல் இருந்தது. புலன் விசாரணையின் பேரால் வழக்கு தொடர்ந்து பதிவில் இருந்து வந்தது. போலீசார் துப்புத் துலக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 

ராவுத்தர் விடுதலையானது சிலம்பாயிக்கு சந் தோஷமாக இருந்தது. தன்னுடைய மகள் செவந்தி மாலையின் திருமணம் அச்சமின்றி நடைபெறும் என்று அவள் உற்சாகமாக இருந்தாள். திருமண ஏற்பாடுகளை பையப் பையச் செய்ய ஆரம்பித்தாள். விரைவிலே வருவதாகச் சொல்லி விட்டுப் போன வீரணனை அவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். 

வீரணனுக்குக் கொலை வழக்கு சுறு சுறுப்பில்லாமல் போனது நிம்மதியைத் தந்தாலும் போலீஸ் இலாகா எந்த நேரத்திலும் பிடித்துவிடக்கூடும் என்ற அதிர்ச்சி இருக்கத்தான் செய்தது. 

ஆறு மாதங்கள் வரை திருமண த்திற்குச் சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டு வந்தான் வீரணன். ஆனால் சிலம்பாயிக்கு மனம் நிலை கொள்ளவில்லை. 

மானகிரி மறவன் அடிக்கடி கனவில் தோன்றி- தங்கை செவந்திமாலையைத் தட்டாமல் வீரணனுக்குக் கொடு- என்று வற்புறுத்துவது போல் அவள் நடந்து கொண்டாள், 

வீரணன் திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டு போவதில் சிலம்பாயிக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அது நியாயமாக இருக்கவேண்டிய சந் தேகம். ஏனென்றால் அவனுக்கு ஒரு கை இல்லை அல்லவா ! ஒருவேளை, அதற்காகத்தான் வீரணன் ஒதுங் கிக் கொண்டு இருக்கிறான். என்று சிலம்பாயி ஐயுற்றாள். ஒரு நாள் இரவு, வீரணன் வீட்டிற்கு வந்த பொழுது அவளது மனதில் ஏற்பட்டிருந்த சந் தேகத்தை அவிழ்த்துவிட்டாள். “செவந்திமாலை மலங் காட்டில் விளைந்த மணமுள்ள மரிக்கொழுந்து! அவளை நீ மணந்து கொள்வது பார்ப்பதற்கு பொருத்தமில் லாமல் தோன்றும் என்பதை நானும் உணர்கிறேன். தியாகம், சுகத்தை இழப்பது பாசம் சொத்தை இழப்பது மகன் மேல் உள்ள பாசத்திற்காக என்னுடைய பொருளை உன்கையிலே ஒப்படைக் கிறேன். அவ்வளவு தான்! ஆனால் ஒன்று என்னுடைய விருப்பத்திற்காக செவந்தி மாலையை நான் கசக்க வில்லை. அவள்தான் தன் அண்ணன் மீதுள்ள ஆசை யினால் தன்னையே தியாகம் செய்து கொண்டாள். நீ இல்லாமல், தங்கப்பாண்டியனைக் கொன்றது ஒரு குஷ்ட ரோகியாக இருந்தாலும் செவந்திமாலை புன்னகை யோடு அவனை ஏற்றுக் கொள்வாள். நீ எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதே. திருமணத்திற்கு நாள் குறித்தாக வேண்டும். நகைகளையும், நாணயங் களையும் பெட்டகத்தில் பூட்டிப் பாதுகாக்கலாம். பருவப் பெண்ணுக்கு பாதுகாப்பே இல்லை. அவர்களை கண்ணாடிப் பாத்திரத்தைப் போல் பாதுகாக்காவிடில், குடும்ப கௌரவமே உடைந்துவிடும்”- என்று சிலம் பாயி சிமிழ் விளக்கிற்குப் பக்கத்தில் நின்றுகொண்டு படபடவென்று பேசினாள். வீரணன் அறிவாளை பக்கத்தில் வைத்தபடி அம்மியின் மேல் உட்கார்ந்திருந்தான். அவனுடைய நடவடிக்கைகளிலும் படபடப்பு இருந்தது. 

வீரணன், சிலம்பாயி பேசி முடிந்ததும் அமைதியாக பதில் சொன்னான். “நீங்கள் பேசியதில் அர்த்தம் இருக்கிறது. செவந்திமாலை வயதில் எனக்கு மிகவும் இளையவள். அவள் சிறுமியாக இருந்தபோது அவளுக்கு பலமுறை நான் சீனிமிட்டாய் வாங்கிக் கொடுத்திருக்கேன். கோயில் திருவிழாக்களுக்கு நான் கூட்டிப்போயிருக்கிறேன். அப்போது ஒச்சம் இல்லாம லிருந்தேன். ஆனால் இப்போது எழிலும், வயதும் இருவருக்கும் முரண்பட்டிருக்கிறது. பார்ப்பவர்களுக் கும் முறையற்ற திருமணமாகத் தெரியும். இவைகளை எல்லாம் மறந்து உங்களுடைய விருப்பத்திற்கு உடன் பட நான் விரும்பினாலும், அது செவந்திமாலைக்குப் பேரிடியாக முடியும். நான் சொல்வதைக் கேட்டு வருத் தப்படாதீர்கள்! நீங்கள் ஆத்திரப்பட்டுப் பலர்பேர் முன்னிலையில் வீர சபதம் செய்திருக்கிறீர்கள். அது போலீஸ் வரை எட்டி இருக்கிறது.” என்று சபதம் போட்டு பேசிய வீரணன் திடீரென்று அந்த இடத்தில் மட்டும் குரலை அடக்கிப் பேசினான். 

சிலம்பாயி திகைத்தாள். இருவரும் எழுந்து ஒதுப் புறயாகப் போனார்கள். வீரணன் ரகசியமாக ஏதோ சொன்னான்; சிலம்பாயி பெருமூச்சு விட்டாள். அவள் எதற்கும் திகைத்ததில்லை. அன்று திகைத்தாள். இருவருக்குமிடையே அமைதி நிலவியது. திரும்ப இருவரும் வீட்டிற்குள் நுழையும்போது இருவர் முகங் களிலும் களை இல்லை. பயமும், அதிர்ச்சியுமே முற்றுகை யிட்டிருந்தன. சிலம்பாயி மூக்கில்மேல் விரல் வைக்க வில்லை. அயர்ந்து போய் உட்கார்ந்து விட்டாள். 

வீரணன் விடை பெற்றுப்போக எழுந்தான். சிலம் பாயி எழுந்து பின்தொடர்ந்து தெரு வரைக்கும் போனாள். பிரியப்போகும் நேரத்தில் வீரணனிடத்தில் ஏதோ மெதுவாகச் சொன்னாள். வீரணன் தலையைச் சாய்த்துகேட்டுக்கொண்டு, “உங்களுக்கு அவசரமானால் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை; ஆராவாரமில்லாமல் அங்கே வந்து விடுங்கள். தாலி வேண்டாம்! வெறும் மாலை போதும். நான் வெள்ளிக்கிழமை இரவு அங்கு வந்து விடுகிறேன்,” என்று சொல்லிவிட்டுச் சேவல் கூவுவதற்குமுன் ஊரைத்தாண்டி விட்டான் வீரணன். 

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு வீரணனுக்கு சிங்க ராயனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் செவ்வாய் கிழமை அன்று சங்கரப்பதிக்கோட்டை, யானை மடுவில் தன்னைச் சந்திக்கும்படி சிங்கராயன் எழுதியிருந்தான். வீரணன் இப்படி ஒரு அழைப்பை எதிர்பார்க்கவில்லை; ஏதோ ஒரு சதி என்று கருதி ஆயுதங்களோடு எச்சரிக் கையாக அந்த இடத்திற்குப்போக ஆயத்தமானான் வீரணன். 

சங்கரப்பதிக்கோட்டை தேவகோட்டையிலிருந்து காரைக்குடிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் பாழ டைந்து கிடக்கிறது. மருது சகோ தரர்கள் காலத்தில் அது கட்டப்பட்டது. அந்தக் கோட்டைக்கு எதிரில் சிறிய குளம் இருக்கிறது. அந்தக் குளத்தில் தான் கோட்டைக்குச் சொந்தக்காரர்கள் யானைகளைக் குளிப் பாட்டி இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பள்ளத்திற்கு யானை மடு என்று பெயர் வரக்காரணம் இல்லை. 

வீரணனும், சிங்கராயனும் அந்திசாய்ந்த பிறகு அந்த யானை மடுவில் சந்தித்தார்கள்; சிங்கராயனோடு, அவனுடைய நிழல் பஞ்சுப்புலியும் வந்திருந்தான். சிங்கராயன் பேசினான்: “இங்கிருந்து பதினைந்து மைல் மேற்கே திருக்கோஷ்டியூர் என்ற கிராமம் இருக்கிறது. அங்கே உள்ள பெருமாள் கோயில், பாதிஊரை அடைத்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கோயிலுக்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன; மிகவும் பழமையான கோயில். பாடல் பெற்றது அந்தக் கோயில்: கோபுரத்தில் உள்ள கலசம் முழுவதும் தங்கத் தாலானது; ஐந்தடி உயரம். நெடுநாட்களாக அந்தக் என்னை உறுத்திக்கொண்டிருக்கிறது. வீரணா, நான் எந்தச்சாமிக்கும் பயந்ததில்லை. பொன் என்றால் அது யாருக்கும் பயன்பட வேண்டும். பயன்படும் போதுதான் அதன் விலை மதிப்புத் தெரியும். பயன் படாத போது எந்தப் பொருளும் சக்தி இழந்து விடுகிறது. 

கோயில் கோபுரத்தின் மேல் ஒளி வீசும் பொற் கலசம் எனக்குக் கிடைக்குமானால் அதன்மேம்பாட்டைக் கடலுக்கு அப்பாலுள்ள நாடுகளுக்கு எடுத்துக் காட்டு வேன். இதற்கு முன் எத்தனையோ சிற்பங்களை இங் கிருந்து கடத்தியிருக்கிறேன். திருப்புவனம் கோயில், சதுர்வேத மங்கலம் கோயில், கோட்டையூர் கோயில், கண்டனூர் கோயில், புதுவயல் கோயில்களிலும் நான் அழகு அழகான சிற்பங்களைப் பெயர்த்திருக்கிறேன். நமது நாட்டுச் சிற்பங்களுக்கு வெளி நாடுகளில் நல்ல விலை மதிப்பு ! ஆனால் நான் இப்போது போட்டிருக்கும் திட்டம் மிகவும் விரிவானது. மானகிரி இருந்தால் அவனுடைய உதவியை நான் நிச்சயமாகப் பெற்றிருப் பேன். அவன் இறந்தது என் துர்பாக்கியம் தான். பரவாயில்லை, அந்தச் சோகத்தை இப்போது நினைக்க வேண்டாம். மானகிரிக்கு அடுத்தப்படியாக உன்னைத் தான் என் மனம் நினைத்தது. நீ எதற்கும் பயப்பட் வேண்டியதில்லை. போலீஸ் இலாகாவில் எனக்கு வேண்டியவர்கள் பலபேர் இருக்கிறார்கள். வழக்குப் போட்டாலும், நமக்குத் தண்டனை கிடைக்காது; கோபுரத்தில் ஏறி எனக்கும் பழக்கமில்லை. நீ அதில் பெயர் பெற்றவன். இந்தத் திட்டம் நம் மூவருக்குள் மட்டுமே இருக்கட்டும்” சிங்கராயன் சுவைத்துப் பேசினான். 

சிங்கராயன் பேச்சை அமைதியோடு கேட்டுக் கொண்டிருந்த வீரணன். கடைசியாக ஒரு நெடு, மூச்சு விட்டான். இலேசாக இதழ் விரிய ஒரு சிரிப்பும் சிரித் தான். “தப்பாக நினைக்காதே! நான் திருட்டுத் தொழிலைக் கை கழுவி விட்டேன். வாழ்க்கையின் நடுப் பகுதியிலிருந்தாவது நிம்மதியாக இருக்கலாம் என்று முடிவு கட்டிவிட்டேன்; நான் குற்றவாளியாகவே பிறக்கவில்லை. அதேபோல் கொலைகாரர்களும் திருடர் களும் பிறக்கும் போதே அப்படிப் பிறப்பதில்லை. கோபம் ஒருவனைக் கொலைகாரனாக ஆக்கி விடுகிறது. ஆசை ஒருவனைத் திருடனாக மாற்றி விடுகிறது. இரண்டுக்கும் மூல காரணம் முட்டாள் தனம். பலமுறை சிறைக்குப் போய் தொல்லைகளை அனுபவித்து, உலகத் தில் சிறை ஒன்றைத் தவிர வேறுபுகலிடம் எனக்கு இல்லையென்று கருதி, திருடுவதும் பின் சிறைக்கு வருவது மாகப் பாதிவாழ்க்கையைக் கழித்து விட்டேன். நடந்து முடிந்த என் வாழ்க்கையில் ஒரு நாள் கூட நான் வயிறு குலுங்கச் சிரித்ததில்லை. போலீசுக்குப் பயமின்றிப் படுத்ததில்லை. என்ன வாழ்க்கை! போலீஸ்காரன் கை யால் அடிக்கடி குத்தப்பட்டு, கன்னிப்போன உடம்பு என் உடம்பு. உறவினர்களும், நண்பர்களும் பேசிய கேலிப் பேச்சுக்களைக் கேட்டு நைந்துபோன உள்ளம் என் உள்ளம். இதோபார்! கோபத்திற்கு அடிமையாகி எனது இடது கையை இழந்திருக்கிறேன். என் உடம் பெல்லாம் இரத்தவடுக்கள்! இந்த வடுக்களை ஒரு குறிக் கோளுக்காகப் பாடுபடக்கூடிய ஓர் அரசியல் கட்சிக்காக நான் ஏன் பெற்றிருக்கக்கூடாது என்று நினைத்து நினைத்து இப்போது அழுகிறேன். மனிதன் என்றால் அவனுக்கொரு நல்ல குறிக்கோள் இருக்கவேண்டும். அந்தக் குறிக்கோளின் வெற்றி- லாபம், தனக்குக் கால் பங்காகவும், மற்றவர்களுக்கு முக்கால் பங்காகவும் இருக்கவேண்டும். சிங்கராயா, நான் ஒரு கொள்ளைக்கு யோசனை கூறக்கூடியவனாக ஆகிவிட்டேனே என்று மிகவும் வருந்துகிறேன். நீ எனக்குப் பழைய நண்பன். நான் இப்போது உனக்குப் புதிய தோழனாக உன் வாழ்க்கையில் புதிய பாதையை ஏற்படுத்த விரும்பும் உத்தமத் தோழனாகத் தோன்ற ஆசைப்படுகிறேன். நீ என்னை மன்னிப்பதானால் நான் உன்னிடம் சிறிது பேச விரும்புகிறேன், கேள். 

“நமக்கெல்லாம் மூத்தவன் மானகிரி. பேராற்றல் மிக்கவன். அவனை எதிர்க்க ஆளில்லாமலே இருந்தது. கடைசியில் அவன் வாழ்க்கை நிம்மதியாகவா முடிந்தது? பாவம்! சின்னஞ்சிறிய தங்கை! வயோதிகத்தாய். இருவரையும் துடிக்கவிட்டு அவன் செத்தான். அவனுக்கு நான் நண்பனாக இருந்ததின் பயனை இப் போதுதான் உணர முடிந்தது. அந்தக் காலத்தில் நாங்கள் புதைத்து வைத்த நகைகளை இப்போது தோண்டியெடுத்து அவர்களுக்குக் கொடுத்தேன். நான் மட்டும் இல்லாவிட்டால் மானகிரி குடும்பம் திகைத்துப்போயிருக்கும்.”-வீரணன் உருக்கமாகப் பேசினான். சிங்கராயனுக்கு அது பிடிக்கவில்லை. 

“நான் உன்னை இங்கு அழைத்தது உன்னிடம் உப தேசம் கேட்பதற்காக அல்ல, உன்னுடைய உதவி எனக்குத் தேவையில்லை! ஆனால் ஒன்று. நான் சம்பந்தப்பட்டிருக்கும் இந்தக் கொள்ளையின் இரகசியம் எப்போதாவது வெளிவருமானால் அதற்கு நீ தான் பொறுப்பு. நீ எந்த லோகத்திற்குப் போனாலும் அங்கும் நான் உன்னைப் பின்தொடர்ந்து வருவேன்” என்று ஆ ஆவேசத்துடன் சிங்கராயன் பொறிந்து தள்ளினான். 

வீரணன் பெருந்தன்மையோடு சிரித்தான். அந்தச் சிரிப்பில் மகத்தான வீரசக்தி அடங்கியிருந்தது. சிங்கராயனின் கோபக்கனல் வீச்சை, வீரணன் சிரித்துக் காட்டிய சிரிப்பு, சவாலுக்கு அழைப்பது போல் இருந்தது. 

வீரணன் சுருட்டைப் பற்றவைத்துக்கொண்டு அடுத்தகணமே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான். 

சிங்கராயனும், பஞ்சுப்புலியும் பள்ளத்திலிருந்து கிளம்பி கோட்டைக்குள் வந்தார்கள். கோட்டைக்குள் ஒருவன் அவர்களுக்காக முயல் கறி சமைத்துக் கொண்டிருந்தான். துணைக்கு சாராயம் இருந்தது. மூவரும் விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தார்கள். 

“ஆபத்து வரும்வரை காத்திருப்பது அறிவீனம்” என்றான் பஞ்சுபுலி. 

“அவன்தான் சிக்க மறுத்துவிட்டானே! இதற்கு மேல் அவனை எப்படிக் கெஞ்சுவது”-சிங்கராயன். 

“புதிர் போடாதே! விளக்கமாகச் சொல்!” என்றான் சிங்கராயன். 

“வீரணனை வலையில் சிக்க வைக்கவேண்டும் என்ற நமது முயற்சி தோற்று விட்டது” என்றான் பஞ்சு புலி பதிலுக்கு! 

“அவன் தான் சிக்க மறுத்து விட்டானே! இதற்கு மேல் அவனை எப்படிக் கெஞ்சுவது” சிங்கராயன் பதில் சொன்னான். 

“நான் இந்த வலையைச் செல்லவில்லை. சர்க்கார் சிறையைச் சொல்லுகிறேன். எப்படியாவது வீரணனை மீளமுடியாத வழக்கில் சிக்க வைக்கவேண்டும். நமது தொழிலிலிருந்து விடுபட்டு ஒருவன் நமக்குப் புத்தி சொல்ல வந்தது இதுதான் முதல் தடவை”-பஞ்சுப் புலி அழுத்தமாகப் பேசினான். 

“எனக்குக்கூட ஆத்திரமாகத்தான் இருக்கிறது” பஞ்சுப்புலி, “தங்கப்பாண்டியன், கொலை வழக்கில் இவனைச் சிக்க வைத்தால் என்ன?”-சிங்கராயன் உணர்ச்சியோடு சொன்னான். 

“வாய்ப்பேச்சை மறந்து விடாதீர்கள். நேற்று எனக்கு ஒரு தகவல் வந்தது. செவந்திமாலை மூன்று மாத கர்ப்பமாம்!” என்றான், பஞ்சுபுலி. இதைக் கேட்டதும் சிங்கராயனுக்குத் தூக்கி வாரிப்போடட்து. இருந்தாலும் தன் உள்ளத்தைச் சரிப்படுத்திக் கொண்டான். 

“பஞ்சுபுலி, இது ஒரு நல்ல சேதிதான்! மானகிரி மறவனின் தாய் விடுத்த சபதம் நினைவிருக்கிறதா? அந்தச் சபதத்தோடு, மூன்று மாத கர்ப்பத்தை ஒட்டினால் ஏதாவது கதை கிடைக்குமா? நன்றாகச் சிந்தித்துப்பார்.” 

“கதை என்ன? அருமையான படமே கிடைக் கிறது” என்று சொல்லிக் கொண்டே குடிவெறியில் சிங்கராயனிடம் ஏதோ சொன்னான் பஞ்சுபுலி, 

“தொலைந்தான்” என்று மூவருமாகக் கூவிக் கூவிச் சிரித்தார்கள். 

7. புதுத் திருப்பம்

ஆராவயலில் திருவிழாக் காலம் ஒரு நாள் இரவு இரண்டு மணி வீட்டுக் கதவு தட்டப் பட்டது. சிலம் பாயி தூக்கக் கலகத்தோடு எழுந்து வந்து கதவைத் திறந்தாள். மூன்று போலீகஸ்ாரர்களும், ஒரு சப் இன்ஸ்பெக்டரும் வாசலில் நின்றார்கள். 

“உன் பெயரென்ன?” 

“சிலம்பாயி!” 

“உன் மகள் பெயரென்ன?” 

“செவந்திமாலை” 

”அவளைக் கூப்பிடு.” 

“அவள் தூங்குகிறாள்”. 

குடிசையில் தூங்குவதைக் காட்டிலும், கெட்டிக் கட்டிடத்தில் தூங்கினால் சுகமாக இருக்கும்; எழுப்பு! போகலாம்”- போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சொன்னார். ஆணவத்தோடு இறைந்தார். 

“என்னங்க! கேலியா செய்றீங்க!’- சிலம்பாயி அவள் சுபாவத்தில் பேசினாள். 

“இவள் எழுப்ப மாட்டாள். மானகிரியைப் பெற்றவளாச்சே! ஏ! கான்ஸ்டபிள் அவளை எழுப்பு!” என்றார் சப் இன்ஸ்பெக்டர். 

ஒரு போலீஸ்காரன் வீட்டிற்குள் புகுந்தான். சிலம்பாயி அவனை வழி மறித்து நிறுத்தி விட்டு தானே போய் செவந்திமாலையை எழுப்பி வந்தாள். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இருவரையும் கைது செய்வ தாகச் சொல்லி கண்ட தேவி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போனார். 

மறு நாள் மத்தியானம் வரை சிலம்பாயிக்கு விவரம் தெரியவில்லை. அந்திக்குப் பிறகு வீரணன் ஒரு போலீஸ்காரன் மூலமாக தகவல் சொல்லி அனுப்பி யிருந்தான். பிறகுதான் கைது செய்யப்பட்ட விவரம் சிலம்பாயிக்குத் தெரிந்தது, 

மறு நாள் பெரிய போலீஸ் அதிகாரி விசாரணைக்கு வந்தார். ஸ்டேஷனுக்கு வெளியே பெரிய கூட்டம்! கொலை வழக்கல்லவா! வீட்டில் எத்தனை பேர் பெர்ழுது போக்க வழியில்லாதவர்கள் இருக்கிறார்கள். 

விசாரணை தொடங்கியது. சிலம்பாயி கண் கலங்கி நின்றாள். அவளுக்குப் பின்னால் வளர்கடாக் குட்டிபோல் வெறித்த பார்வையுடன் செவந்திமாலை நின்றாள். 

“சிலம்பாயி!” 

“உனக்கு எத்தனை பிள்ளைகள்!”

“ஆண் ஒன்று, பெண் ஒன்று!” 

“கூடப் பிறந்தவர்கள் இல்லையா?” 

“ஒருவன் இருக்கிறான். அவன் பர்மாவில் இருக் கிறான். அங்கே அவனுக்கு கணக்கு வேலை. சித்திரவேலு அவன் பெயர்.” 

“உன் மகன் செத்தது எப்படி என்று தெரியுமா?” ‘அந்த வயிற்றெரிச்சலைக் கேட்காதீர்கள்!” 

‘இது விசாரனை; கேட்பதற்குப் பதில்சொல்!’ 

“சுட்டுக் கொன்று விட்டான் ஒருபாதகன். பெயர் தங்கப்பாண்டியன் என்று சொன்னார்கள்!” 

“அதற்காக நீ சபதம் செய்ததுண்டா?” 

“ஆமாம் செய்தேன்! ஏன், செய்யக் கூடாதா?”

“கேட்பதற்கு மட்டும் பதில் சொல். நீ என்னைக் கேள்வி கேட்காதே!” 

‘இன்னும் கேட்க வில்லையே!” 

“மூடு வாயை! நீ சபதம் செய்தாயே அதன் படி நிறைவேற்றி வைத்தாயா?” 

“ஆகா சந்தேகமென்ன அதில்!” 

“நீ செய்த சபதத்தை நிறை வேற்றவில்லை என்கிறேன்”. 

“யார் சொன்னது அப்படி! நான் மறத்தி! மானத்திற்காக வாழ்பவன்!” 

சப் இன்ஸ்பெக்டர் உளனமாகச் சிரித்தார்.

“ஏன் சிரிக்கிறீர்கள்? பொய் சொல்கிறேன் என்றா?” 

“ஆம், நீ பொய்தான் சொல்கிறாய்! உன் மகள் கர்ப்பமாகிவிட்டாள் என்பதை மறைப்பதற்காக அப்படி சொல்கிறாய்!”-இன்ஸ்பெக்டர் ஏளனமாகச் சிரித்துக்கொண்டே கேட்டார். 

“எசமான்! கோபத்தைக் கிளறாதீர்கள்! நாக்கைப் பிடுங்கிக் கொண்டு இந்த இடத்திலேயே செத்து விடுவேன்.” 

“நடிக்காதே! அப்படியானால் உன் மகள் கழுத்தில் தாலி எங்கே?”-சப் இன்ஸ்பெக்டர் குறும்புத்தனமாக இந்தக் கேள்வியைப் போட்டார். 

சிலம்பாயிக்குத் தலை சுழல்வது போல்தான் இருந் தது. இருந்தாலும் விழித்துக் கொண்டாள். 

“என் மகள் செய்து கொண்டது காந்தர்வமணம்! அதற்கு ஏது தாலி?” 

“காந்தர்வமணம் என்றால் புருஷன் பெயரைச் சொல்லலாமே?!” 

“ஏன் தராளமாகச் சொல்லலாம்! செவந்தி, ஏன் பயப்படுகிறாய்? மாப்பிள்ளை பெயரைச் சொல்லம்மா! நமக்கு என்ன!” 

செவந்திமாலை அட்டைபோல் ஊறிக் கொண்டே இன்ஸ்பெக்டரின் மேசையருகில் வந்து நின்றாள். 

இன்ஸ்பெக்டர் அவளை ஏறிட்டுப் பார்த்தார். செவந்தி முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள். 

“ஏன் விழிக்கிறாய்? கொலை செய்து விட்டு யாராலும் தப்பிக்க முடியாது! சர்க்கார் ஒன்றும் தூங்கவில்லை. உன் புருஷன் பெயயென்ன?’ 

“சிங்கராயர்!”-குபீரென்று சொன்னாள் செவந்தி. இன்ஸ்பெக்டருக்கு முகமெல்லாம் வியர்த்து விட்டது. வீரணன் ரகசியமாக போலீஸ்காரன் மூலம் சொல்லியனுப்பியபடி தான் செவந்திமாலை சொன்னாள் என்றாலும், அவளுக்குத் துயரம் நிலை கொள்ளவில்லை. அவளும் மயக்கமுற்றுத் தரையில் சாய்ந்தாள். 

சப் இன்ஸ்பெக்டர் கடிகாரத்தைப் பார்த்தார் மணி பன்னிரண்டு! 

“இப்போது சிங்கராயன் வீட்டில் தான் இருப்பான். உடனே அவனைக் கைதுசெய்யுங்கள்! அவசரம்!” என்று சப் இன்ஸ்பெக்டர் உத்தரவு போட்டார். 

  1. புதுக்கனல் 

தங்கப்பாண்டியன் கொலை வழக்கு மீண்டும் தெம்பு பெற்றெழுந்தது. பத்திரிகைக் காரர்களுக்கு லட்ச ரூபாய் நன்கொடை கிடைத்தது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. 

கீழ்க்கோர்ட், வழக்கை விசாரித்து மேல் கோர்ட் டுக்கு அனுப்பி வைத்தது. நேற்றுவரை போலீசுக்கு நண்பனாக இருந் தசிங்கராயன் இப்போது இலாகாவுக்கு எதிரியாகிவிட்டான். போலீஸ் இலாகா ஒரு எலிப் பொறி போன்றது. அதில் எலி தான் விழவேண்டு பென்பதில்லை. தவறிப்போய் அணில் விழுந்தாலும் அது பிடித்துக் கொள்ளும். 

வழக்கிற்கு உயிர் கொடுத்தது ஒரே ஒரு சாட்சி. அந்தச் சாட்சி ஒரு போலீஸ்காரன். தங்கப்பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட அன்று இரவு, நெடுநேரம் வரை தங்கப்பாண்டியனோடு அவரது வீட்டில் சிங்க ராயன் ரகசியமாகப் பேசிக்கொண்டு இருந்தான் என்பதற்கு அந்தப் போலீஸ்காரன் ஒரு சாட்சியம்; தங்கப்பாண்டியன் மனைவி ஒரு சாட்சியம், இந்தச் சாட்சியங்களைக் கொண்டு தங்கப்பாண்டியன் சாவுச் கும் சிங்கராயனுக்கும் தொடர்பிருக்கிறது என்று நீதி பதி முடிவு கட்டிவிட்டார். சில வழக்குகளில், கொலை செய்தவன் – நான் தான் கொலை செய்தேன் என்று அறிவாளையே நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து காண்பித்தாலும், சாட்சியங்களை நோக்கும்போது குற்றம் ருசுவாகவில்லை என்று நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து விடுகிறார்கள். அந்த வழக்குகளைப் போல் இதுவும் ஒரு விசித்திரமான வழக்கு! விசித்திர மான தீர்ப்பு! யாரும் எதிர் பார்க்கவில்லை-சிங்கராய னுக்குத் தூக்குத் தண்டனை! 

சிங்கராயன் ஐகோர்ட்டுக்கு அப்பீல் செய்திருந் தான். அதுவரை அவன் சிறையில் வைக்கப்பட்டிருந் தான். அவன் வைக்கப்பட்ட இடத்திற்குப் பெயர் ‘கண்டம்.’ தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளை, தேதி குறிப்பிடும்வரை வைக்கப்படும் இடத்திற்குப் பெயர் தான் ‘கண்டம்’ என்பது. சாவின் கோட்டை வாசல் அது. தூக்குக் கயிற்றை முத்தமிடும்போது துடிக்க வேண்டிய துடிப்பைக் காட்டிலும், பெரும்பாலோர் கண்டத்திலிருக்கும்போதே கைதிகள் துடித்து அயர்ந்து விடுகிறார்கள். சாவை அனுபவித்துச் சாகும் கட்டம் அது. 

சிங்கராயன் கண்டத்தில் பத்து மாதங்கள் இருந் தான். முடிவில் அவன் எதிர்பாராத தீர்ப்புக் கிடைத் தது. தூக்குத் தண்டனை ரத்தாகி ஆயுள்தண்டனை யாவது கிடைத்தால் போதும் என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான். ஆனால் வழக்கில் அவன் விடுதலையே பெற்றுவிட்டான். 

“ஒரு கொலை எப்போதும் ஒரு சதிக்குப் பின்னர் தான் நடைபெறும். ஆனால் இந்த வழக்கில், கொலைக் குப் பின் போலீசின் துணையோடு சதி நடைபெற்றிருக் கிறது. ஷேக்ஸ்பியர் கதைகளில்கூட இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றதில்லை. இந்தச் சாட்சியங்களை வைத்துக் கீழ் கோர்ட் எப்படித்தான் தூக்குத் தண் டனை கொடுத்தது’ என்று எனக்குப் புரியவில்லை” என்று உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். 

சிங்கராயனுக்கு மறுபிறப்பு கிடைத்தது போலாயிற்று. 

ஆனால், அந்த உணர்வு அவனுக்கு நீண்டு, நிலைக்கவில்லை. அவன் மனதில் ஒரு வெறி கொழுந்து விடத் தொடங்கி விட்டது. 

“ஒன்று என்னைத் தண்டனைக்குள்ளாக்கிய செவந் தியைத் தாரமாக்கி, அவளை வாழாவெட்டியாக்க வேண்டும்; அல்லது அவள் புருஷன் வீரணனுக்கு தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும்!”- இந்தச் சபதமே சிங்கராயன் உள்ளத்தில் வேரூன்றிப் புதுக் கனலாகச் சுடர் விட்டது. 

சிங்கராயனுக்குச் சிறை ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்தது. சிறை அவனுக்கு சீர்திருத்தப் பள்ளி யாகத் தோன்றவில்லை. எந்தக் குற்றத்திற்காக ஒருவன் சிறைக்கு அனுப்பப்பட்டாலும், அவன் விடு தலைபெறும் போது மனம் மாறிவருவதில்லை; இவ்வளவு தானா சிறை-என்ற அலட்சியத்தோடுதான் வருகிறான் என்று சிங்கராயன் அறிந்து கொண்டான். சிறை வாழ்வைப் பற்றி சிங்கராயன் நிறையக் கேள்விப்பட்டிருப்பான். ஆனால் உள்ளே அவன் எதிர்பார்த்தது நடந்திருக் காது. நல்லவன் உள்ளே போய் விட்டால்கூட, கடலில் பாலைக் கலந்தது போல் அவன் மனமும் கெட்டுப் போய்விடுவதைச் சிங்கராயன் கண்டான். முதன் முறையாக மூன்று மாதத் தண்டனை அடைந்து விடு தலை பெற்றவன் மறுமுறை தண்டனையை உயர்த்திக் கொள்ள எண்ணி ஆறு மாதத்திற்குரிய குற்றம் புரி கிறான். இப்படி ‘சிறைவாசத் தியாகம்’ உயர்ந்து கொண்டே தான் போகிறது. சிறை அப்படி இருக் கிறது. மனமாற்றத்திற்கு உள்ளே சிகிச்சை இல்லை. சகல வியாதிகளுக்கும் ஒரே மிளகுத் தண்ணீரைக் கொடுக்கும் சித்த வைத்தியரைப் போல் சிறைச்சாலை யில் எதற்கெடுத்தாலும் அடி, உதைதான் பரிகாரம்! இதையும் சிங்கராயன் உணர்ந்தான். குற்றவாளி களையும் அடித்து திருத்த நினைப்பது குதிரைக்குச் சங் கீதம் கற்றுக் கொடுப்பதற்குச் சமம். இப்போது இருக்கும் சிறைச்சாலைகள் குற்றவாளிக்குக் குறிப் பிட்ட காலத்திற்கு ஓய்வு கொடுத்து அனுப்பும் அர சாங்க இலவச உணவு விடுதிகள் அவ்வளவு தான்! 

சிங்கராயன் இதற்கு முன் தண்டிக்கப்பட வேண் டிய எத்தனையோ வழக்குகளில் ஈடுபட்டிருக்கிறான். ஆனால் ஒரு முறை கூட சிறைக்குப் போனதில்லை. இப்போதுதான் முதல் முறையாக சிறைக்குள் போனான். சிறைக்குள்ளேயும் கொள்ளையடிக்கப்பட வேண்டிய ஆட்கள் இருப்பது அதற்கு முன் அவன் அறிய மாட் டான். பொருள் சேகரிப்பதற்கே சிலபேர் சிறைக்கு வருகிறார்கள் என்பதும் அவனுக்குத் தெரியாது. ஒரு நிரபராதி திருட்டுக் குற்றத்தில் பொய்ச் சாட்சியத் தால் தண்டிக்கப்பட்டாலும் சிறைக்குள்ளே அவனுக்கு திருட்டுத் தொழிலைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் கிடைப்பார்கள் என்பதும் சிங்கராயன் அறியாத ஒன்று. சிறை ஓர் உலகம்; சிறிய உலகம்; பெண்ணில் லாத உலகம். பூச்செடியில் மலரும் அழகிய பூக்களைப் பார்த்ததும் அவனுக்கு வீட்டுக் கொடிக் கயிற்றில் ஊஞ்சலாடும் வர்ணப் புடவைகள் கவனத்திற்கு வந்தது; இசை ஒலி, வசந்தமான எண்ணங்களைத் தாண்டி அவன் உள்ளத்தை வலை பின்ன வைத்தது. சிறை உலகம் சிலரை சுயநலமிகளாக்கி விடுவதுண்டு ! அரசியல்வாதிகளும் அதில் விதிவிலக்கல்ல! அவர்கள் வேண்டுமானால் கயநலத்திற்கு ‘சிக்கனம்’ என்ற புனைப் பெயரைச் சூட்டலாம் பேசத் தெரிவதால்! 


நெப்போலியனுக்கும், நெல்சனுக்கும் ஏற்பட்ட பகை சரித்திரத்தில் புகழ் பெற்றதைப்போல் வீரண னுக்கும் சிங்கராயனுக்கு மிடையே ஏற்பட்ட சபதங் களும், வீர உரைகளும் ஏரிக்கரைகளில் பாடப்பெறும் ஏற்றப் பாடல் வரை முற்றிவிட்டன. தென் பாண்டிச் சீமையில், செம்புலிங்கம், சடையன், சிங்கம் புணரி கருத்தச்சாமி, மதுரைக் கருவாயன்! மணிக்குறவன்,- இவர்களுக்குத்தான் நாட்டுப் பாடல்கள் வழக்கில் இருந்து வந்தன. புகழ் பெற்ற அந்தக் கொள்ளைக் காரர்களின் புகழ்பாட்டுக்களுடன் ‘செவந்திமாலை சிந்தும்’ இடம் பெற்றுவிட்டது. 

ஆனால் அந்தப் பாடலை பாடியவர்கள். இருவரில் யாரையும் ஆதரித்துப் பாடவில்லை. இரண்டு கதாநாய கர்களைக் கொண்ட வீரக் கதையாகவே அதை மதித் தார்கள். மாலிபர்கள் கூடும் இடங்களில், திருவிழாக் காலங்களில், கன்னிப் பெண்களின் கூட்டத்தில் கூட் வீரணன் பெரியவனா, சிங்கராயன் பெரியவனா என்ற சச்சரவுகள் மூண்டுவிடுவதுண்டு. நேற்று நான் சிவகங் கையில் வீரணனைப் பார்த்தேன்? ஒரு கை இல்லா விட்டால் தேங்காய்க் குடுமிபோன்ற அவனது மீசையே சிங்கராயனைச் சுழற்றிச் சுழற்றி அடித்துவிடும் போலிருக்கிறது – என்பான் ஒருவன். 

“பூ! நீ சிங்கராயனைப் பார்த்ததில்லை, அவனுக்குத் தழும்பில்லாத இடமே இல்லை. குதிக்காலில் சூடு வாங்கியிருக்கிறான். முதுகில் ஒரு முழத்திற்கு ஒரு பெரிய தையலே போட்டிருக்கிறது. இவை களில் எல்லாம் சாகாமலா, வீரணன் கையால் சாகப்போகிறான். ஒருநாளும் நடக்காது- என்பான் மற்றொருவன். இப்படி இரண்டு கட்சிகளுக்குள்ளும் ம் ஆள் கூடிவிடும். உடனே போலீஸ் வந்து கூட்டத்தைக் கலைக்க வேண்டும்! இதுபோல் எத்தனையோ தேரோட் டங்களில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அடிக்கடி ஏற்பட்ட இதுபோன்ற சில்லரைத் தகராறுகளுக்கு முடிவு காலம் அண்மையில் கிட்டவில்லை. இரண் டாண்டு காலத்திற்குப் பிறகு தான் கிடைத்தது. 

தேவகோட்டை நகரையொட்டி இரவுசேரி என்ற ஒரு சிறு குடியிருப்பு இருக்கிறது. அந்தப் பகுதி மக்கள் ஆண்டுதோறும் தெருக்கூத்து நடத்தி மகிழ்வதுண்டு. இராமநாதபுரம் மாவட்டத்திலேயே இரவு சேரிக்கூத்து பெயர் பெற்றது. அந்த ஆண்டில் புகழ் பெற்ற நாடக நடிகர்கள் இரவுசேரி நாடகத்தில் சந்திப் பது மரபாகிவிட்டது மட்டுமல்லாமல் பெருமையாக வும் கருதப்படலாயிற்று. 

அந்த ஆண்டு நாடகத்திற்கு திருப்பரங்குன்றத் தைச் சேர்ந்த பாலகுரு வந்திருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. மறுநாள் மயான காண்ட நாடகத்திற்குச் சக்திவேல் ஆசாரி வரப்போவ தாகவும் பேசிக் கொள்ளப்பட்டது. கூட்டம் அளவுகடந்து காணப்பட்டது. மூன்றாம் நாள், கண்ணகி நாடகம் நடந்து கொண்டிருந்தது. கோவலன் மாதவி வீட் டுக்கு வந்து கொண்டிருக்கிறான். இளவரசனைப்போல் அங்கே அலங்காரமாக வீற்றிருந்தான் கோவலன். மாதவி உபசரணை செய்து கொண்டிருக்கிறாள். முன் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு நாட்டாண்மை காரருக்கு ஒரே கோபம்! ஊர்ப் பெரியவர்களெல்லாம் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கும்போது, ஒரு கூத் தாடிப் பயல் என்ன திமிரோட கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறான்!- என்று கோவலன் இருந்த தர்பாரைப் பார்த்து அவர் கோபப்பட்டுப் பேசிவிட்டார். நாடகத்தில் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. 

தாசி வீட்டுக்கு வந்திருக்கும் ஒரு பணக்கார இளைஞன் மாதவியிடத்தில் கைகட்டி வாய்பொத்தியா நிற்பான்? என்றெல்லாம் நாடகக்காரர்கள் சமா தானம் சொல்லிப் பார்த்தார்கள். நாட்டாண்மைக் காரர் அதிகார வெறியில் ஊறிப்போன மட்டையல்லவா! 

எந்தச் சமாதானமும் அவரிடம் எடுபடவில்லை. நாடகத்தில் குழப்பம் ஏற்பட்டது. அலையெனத் திரண்டிருந்த கூட்டம் பொறுமித் தத்தளித்தது. திடீ ரென சில குறும்புக்காரர்கள் கூட்டத்திற்குள் பாம்பை வீசி விட்டார்கள். அவ்வளவு தான்! ஒரே இறைச்சல்! தருணம் பார்த்து வேல் கம்புகள் வெளியேறிவிட்டன. வெட்டு! குத்து!! விடாதே!! அவன் தான் சிங்கராயன்! அவன் தான்!! அவன் தான்!! என்ற சத்தம் வானைப் பிளந்தது. அரை நாழிகைக்குள் நாடக மைதானம் உடைந்த முட்டைக் கூடுபோல் காலியாகிவிட்டது. 

மறுநாள் பொழுது ஒரு பயங்கரமான கொலைச் சம்பவத்தோடு விடிந்தது. சிங்கராயன் படுகொலை!- என்று நகர் முழுவதும் பேசிக் கொண்டார்கள். கால் நடையிலும் சைக்கிள்களிலும், சிலர் வண்டிகளியிலும் கொலைக்களத்தை நோக்கப் போய்க் கொண்டிருந் தார்கள். தேவகோட்டையிலிருந்து கண்டதேவி செல்லும் பாதையிலுள்ள ஒரு மண்டபத்தில் சிங்க ராயன் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாகச் செய்தி உலவியது. 

மண்டபத்தைச்சுற்றி பலத்த பாதுகாப்புப் போடப் பட்டிருந்தது. பொது மக்கள் நெருங்க முடியவில்லை. சிங்கராயன் பிணம் ஒரு கல் தூணில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. 

ஆனால் தலையைக் காணவில்லை. தலையில்லாத முண்டம் அது. பஞ்சுப்புலி மட்டும் தேம்பித் தேம்பி அழுதுகொண்டு போலீஸார் பாதுகாப்பில் உட்கார வைக்கப்பட்டிருந்தான். பிணத்திற்குப் பக்கத்தில் செருப்புக்கள் சிதறிக்கிடந்தன. கூடியிருந்த ஆயிரக் கணக்கான மக்களும் ஒரே முடிவாகப் பேசிக்கொண்டார்கள்-வீரணன் செய்த வேலை தான் இது என்று! வீரணன் ஆதரவாளர்கள் அதே இடத்தில் ரகசியமாக கைகளையும் குலுக்கிக் கொண்டார்கள். வழக்குப் பதிவாயிற்று! 

கீழ்கோர்ட், மேல்கோர்ட் நீதிபதிகளும் தீர்ப்புகளை எழுதி விட்டார்கள். 

“கொலைகளத்தில் காணப்பட்ட செருப்பு வீரண னுடையது என்பதை வீரணனே ஒப்புக்கொள்கிறார். வீரணன் அன்று நாடகத்திற்குப் போயிருக்கிறார். வீரணனுக்கும் சிங்கராயனுக்கும் நெடுநாட் பகை. பகைக்குக் காரணமான செவந்திமாலையும் இந்தக் கொலைக்கு உடைந்தையாக இருந்திருக்கிறாள் என்பதற் குப் பஞ்சுப்புலியின் சாட்சியம் போதிய ருசுவாக இருக்கிறது. ஆகவே இந்தக் கொலை திட்டமிட்டுச் செய்யப்பட்டது என்று தீர்மானித்து வீரணனுக்கும் அவன் ஆசை நாயகி செவந்திமாலைக்கும் ஆயுள் தண்டனை விதிக்கிறேன்”-அன்று நீதிபதிகளின் தீர்ப்பு ஒரு முகமாகப் பேசின. 

வீரணனும், செவந்தியும், நீதிபதியை வணங்கி விட்டுப் போலீசார் பொறுப்பிற்குப் போனார்கள். செவந்தியின் இடுப்பில் இருந்த அவளது கைக்குழந்தை சிரித்தது நீதிபதியைப் பார்த்து! ‘என் பிறப்பையே கதையாக்கி விட்டு, பதினைந்தாண்டு காலத்தைச் சிறைக்குள் செலவிடப்போகிறேன்’ என்று அந்தக் குழந்தை நினைத்தா சிரித்தது? 

பொழுது விடிந்தால் தீபாவளி. வீரணனும் செவந்தியும் சிறைச்சாலைக்குள் நுழைந்தார்கள். கணவன், மனைவி என்ற உறவு முகப்பு வாசலுடன் இறந்துவிடும்! இருவரும் தனித் தனிக் கொட்டடிக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். இருவர் உள்ளங் களிலும் தெம்பு இல்லை; ஒளிகுன்றி இருள் கவ்வி இருந்தது. 

வீரணனும், செவந்திமாலையும் வைக்கப்பட்டிருந் ததோ ஒரு மத்தியசிறைச்சாலை. அந்தச் சிறைக்கு யாரோ ஓர் அரசியல்வாதி மரண விலாஸ் மாளிகை என்று பெயர் வைத்துவிட்டுப் போய் இருக்கிறான். அந்தச் சிறையிலிருந்து எந்த ஆயுள்கைதியும் தண் டனை முடிந்து உயிரோடு வெளியே வந்ததில்லையாம். 

எல்லாச் சிறைகளிலும் மருத்துவமனைகள் உண்டு. வீரணன் அடைப்பட்டுக்கிடந்த அந்தச் சிறையில் எல்லா நோய்களுக்கும் கடல் நீர் தான் மருந்து. அழுக்கு உருண்டைதான் மாத்திரை. சிறை மருத்துவமனையில் கைதிகளை அவ்வளவு எச்சரிக்கையாகப் பாதுகாத்து வருகிறார்கள். 

9. கடலுக்கப்பால்

இரங்கூனில் முகல் சாலையில் ஒரு செட்டியார் கடையில் கணக்கு வேலைப்பார்த்து வந்தார் செவந்தி மாலையின் மாமன் சித்திரவேலு. சிறுவனாக இருந்த போதே அவர் பர்மாவுக்குப் போய் விட்டவர். பர்மிய ஆசிரியை ஒருத்தியை சித்திரவேலு அங்கேயே திரு மணம் செய்துகொண்டார். பிழைப்புத்தேடி ஓடிய சிலபேர் பெற்ற தாயையும் பிறந்த நாட்டையுமே மறந்து விடுவதுண்டு. சித்திரவேலுவுக்குக் கோபமில்லா விட்டாலும் தாய் நாட்டின் மீது கவனமில்லாமலிருந் தது. இந்த நேரத்தில் தான் சிங்கராயன் கொலை வழக்கு பர்மிய பத்திரிக்கைகளில் சிறப்புடன் வெளி வந்தது. 

சித்திரவேலு பர்மியப் பெண்ணை மணமுடித்துக் கொள்ளுமுன் செவந்திமாலையைத் தாரமாக்கிக் கொள்ள நினைத்தகாலமும் உண்டு. அது நடைபெறாமல் போனதிற்கு ஒரே காரணம் மானகிரியின் நடவடிக் கைகள் சித்திரவேலுவுக்குப் பிடிக்காததுதான். எந்த நேரமும் போலீசின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக் கும் வகையில் ஒரு கன்னிப் பெண் உள்ள குடும்பத்தைக் கெடுத்து வைத்தது மானகிரியின் பெரிய முட்டாள் தனம் என்பது சித்திரவேலுவின் அசைக்க முடியாத நம்பிக்கை. தமிழ் நாட்டிலிருந்து பர்மாவுக்கு வரும் பலர் மானகிரியின் கீர்த்தி பற்றிப் பேசுவதுண்டு. அப்போதெல்லாம் சித்திரவேலு உக்கி உக்கிச்சாவார். மானகிரி தனக்கு மருமகன் என்று வெளியில் சொல்லிக் கொள்வதில்லை. அவ்வளவு ஒதுங்கி இருந்த சித்திர வேலுவின் இதயத்தை சிங்கராயன் கொலை வழக்கு மெதுவாகத் தடவிப்பார்த்தது. அந்த வழக்கு கண்ணுக் குத்தெரியாத அரும்பு முள்ளைப் போல் தூங்கும் போதும் தொழில் புரியும் போதும் சித்திரவேலுவை கருவிக்கொண்டே இருந்தது. அந்தக் கொலை வழக்குப் பற்றிய முழு விபரமும் அறிய சித்திரவேலுவுக்குத் தணியாத ஆசை. அந்த நேரத்தில் அதே முகல்சாலையில் புதிதாகத் தொழில் செய்வதற்குத் தமிழ் நாட்டிலி ருந்து ஒருவர் வந்திருந்தார். அவர் பெயர் தீர்த்தப்ப செட்டியார். அவரை அணுகி மேற்கொண்டு விபரங் களைச் சேகரிக்கத் திட்டமிட்டார் சித்திரவேலு. இரு வருக்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டுவிட்டது. சிங்க ராயன்- வீரணன் பகை உணர்ச்சிபற்றி கதை கதை யாகச் சொன்னார் தீர்த்தப்பர். இடை இடையே செவந்தியின் பெயரும் அடிப்பட்டது. மொத்தத்தில் சிங்கராயன் கொலைக்குக் காரணமே செவந்திதான் என்று ஒவ்வொரு தடவையும் கதையை முடித்தார் தீர்த்தப்பர். அப்போதெல்லாம் சித்திரவேலு நெஞ்சில் முள் தைத்தாற்போல் முகத்தைச் சுளிப்பார். 

இரங்கூனில் புத்தர் விழா வந்தது. தமிழர்களும் அந்த விழாவில் குதூகலத்தோடு கலந்து கொள் வதுண்டு. வீட்டுக்கு வீடு விருந்தும் வேடிக்கைகளும் நடந்தன. தீர்த்தப்பர் மதுபானப்பிரியர் என்பது அன்றுதான் சித்திரவேலுக்குத் தெரிந்தது. பகல் முழு வதும் தீர்த்தப்பர் போதையிலேயே இருந்தார். போதை உயர உயர, சிலருக்குப் பேச்சே பாட்டாகி இதயம் சூன்யமாகப் போய் விடுவதுண்டு! மனதில் ஒளித்து வைத்திருந்ததை எல்லாம் வெளியில் கொட் டும் போதுதான் மனம் காலியாகி விடுகிறது. 

மனதில் தேக்கி வைத்திருப்பதைப் பேசும்போது மட்டும் குடிகாரன் பேசினாலும் கவையாக இருக்கும்; சேமிப்புக் காலியாகி விட்ட பிறகு நிதானமுள்ளவன் பேசினாலும் கொடூரமாகத் தெரியும். பேச வேண்டும் என்பதற்காக எதையாவது பேசுவார்கள். அதில் சுவை இருக்காது. இனிமை இருக்காது. கட்டாந்தரையில் பதமில்லாத மண்வெட்டி கொண்டு வெட்டுவதுபோல் இருக்கும். ஆனால் தீர்த்தப்பர் சுவை ததும்பப் பேசினார். தாய் நாட்டுச் சேதிகள் அந்நிய நாட்டி லிருப்பவர்களுக்கு அதிக இன்பத்தைத் தந்தன. 

தீர்த்தப்பர் பேச்சு சித்திரவேலுவுக்கு வேடிக்கை யாக இருந்தது. தீர்த்தப்பரும் அடிக்கடி சிரித்துக் கொண்டே இருந்தார். அப்போது இரண்டு பாமிய பிச்சைக்காரர்கள் இனாம் கேட்பதற்காகத் தீர்த்தப்பரை அணுகி வந்தார்கள். வந்தவர்கள் இருவரும் அந்தத் தெருவுக்கு பழகிப்போன பிச்சைக்காரர்கள். 

தீர்த்தப்பர் இரண்டு காசுகளைத் தூக்கி எறிந்தார். அவர்களுக்கு அது போதவில்லை; கோபமாகத் தூக்கி எறிந்தார்கள். 

“பிச்சைக்கார நாய்களா? வெளியே போங்கள்!” என்று விழுந்தார் தீர்த்தப்பர். 

“பிழைக்க வந்த எச்சிலைகள் நம்மையே எட்டி மிதிக்கின்றன” என்று பர்மிய மொழியில் பிச்சைக் காரர்கள் திரும்பித் திட்டினார்கள். 

தீர்த்தப்பருக்கு ஆவேசம் கிளம்பி விட்டது. 

“நான் யார் தெரியுமடா? வட்டிக்கடைச் செட்டி பிள்ளையல்லடா? கம்பி எண்ணி காராகிரகம் வரை ஏறி இறங்கியவன். மரியாதையாக வெளியேறி விடுங் கள்!” – தீர்த்தப்பரின் கண்கள் அரளிப் பூக்கள் போல் சிவந்து விட்டன. 

சித்திரவேலு திகைத்தார். சிறை காராகிருகம் என்பதெல்லாம் அவருக்கு கதைகளோடு சரி. தீர்த்தப் பரின் பேச்சு சித்திரவேலுக்குச் சண்டைப் படம் பார்ப்பது போலிருந்தது. அவர் தகறாறை முற்ற விடாமல் தீர்த்தப்பரை அணைத்துக்கொண்டே விட் டிற்குள் போய் விட்டார், போதை தெளிந்ததும் எல்லாவற்றையும் விவரமாக கேட்க வேண்டுமென்று சித்திரவேலுவுக்கு விருப்பம்! எப்பொழுது விடியும் என்று காத்திருந்தார். 

10. எதிர்பாராதது

விமானத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு மட்டும் சிறை பிருந்தாவனத்தைப் போல் வனப்புள்ள தாக தெரியும். கிளிக் கூண்டுகளைப் போல் சிறு சிறு தொட்டிகள், மாட்டுக் கொட்டகைகளைப் போன்ற நீண்ட சதுரமான சமயலறைகள் இவைகளுக்கு மத்தி யில் வாயில்லாப் பூச்சிகளைப் போல் ஆயிரம் இரண் டாயிரம் உயிர்கள் எறும்புகள் மாதிரி வரிசை வரியை யாக ஊர்ந்து கொண்டிருக்கும். இதுதான் விமானத் திலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும் சிறைத்தோற்றம். ஆனால், உள்ளே மனிதன் மாடாக வேலை பார்க்கிறான்; சிறையிலுள்ள மாடுகள் வயிறு புடைக்க கஞ்சி குடித்து விட்டு கொட்டத்தில் சாய்ந்து கிடக் கின்றன. வெளி மாடுகளுக்கும், சிறை மாடுகளுக்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு. சிறை மாடுகளுக்கு எலும்பே இருக்காது! சதைகள் கொத்துக் கொத்தாகத் தொங்கும்; அவைகளுக்குதான் சிறையில் வேலையே இல்லையே! மாடுகள் இழுக்க வேண்டிய வண்டியைக் கைதிகள் தானே இழுக்கிறார்கள்! இப்படிப்பட்ட சிறைச் சாலையில்தான் வீரணன் இருந்தான். அவனுக்குச் சிறை புதிதா என்றால் இல்லை, ஆனால் அவனுக்குத் தரப்பட்ட வேலைதான் வினோதமானது. சமையலறையில் ஈ அடிக் கும் வேலை அவனுக்கு. ஒரு கிண்ணத்தில் கருப்பட்டிச் சாற்றை வைத்துக்கொள்ள வேண்டும். முதலில் கருப் பட்டிச் சாற்றை தரையில் தெளிக்க வேண்டும். ஈக்கள் அந்தத் துளிகளில் மொய்க்கும். உடனே கைகளில் உள்ள குச்சிகளால் அந்த ஈக்களை அடித்துக் கொல்ல வேண்டும். இப்படி அவன் ஒரு நாளைக்குப் பத்தாயிரம் ஈக்களை துவம்சம் செய்யவேண்டும்! குறைந்தால் காலில் சங்கிலி போடுவார்கள். ஒற்றைக் கொட்டடி யில் போட்டு அடைக்கும் தண்டனைதான் கொடியது. யாருடனும் பேச முடியாது. யாரும் அந்தப் பகுதிக்கே வர மாட்டார்கள். அணிலைப் பார்த்துச் சிரிக்கலாம். காகத்தைப் பார்த்துப் பேசலாம். 

புழு பூச்சிகளை உள்ளங்கைகளுள் எடுத்து வைத்துக்கொண்டு கொஞ்ச லாம். இதுதான் முடியக் கூடியது. 

செவந்திமாலைக்குத் தந்திருந்த வேலை அவளுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். சிறை அதிகாரிகளின் மனைவி மக்களது உடுப்புக்களைத் துவைப்பது. குழந்தை களைக் குளிப்பாட்டுவது முதலியன. சுருக்கமாகச் சொன் னால் தாதி வேலை. சிறைக் காவலர்களின் வரிசை வீடும், சிறையின் பெரிய அதிகாரியின் மாளிகையும் சிறையை ஒட்டியேதான் இருந்தன. கைதிகள் வளர்த்துவிட்ட அடர்த்தியான சோலைக்குள் அந்த வீடுகளும், மாளிகையும் புதையுண்டு கிடந்தன. உதிரும் இலைகளைப் பொறுக்குவதற்கும், விழுகின்ற காக்கை எச்சங்களை நீக்குவதற்கும் கைதிகள் காத்துக் கொண்டிருக்கும்போது, அந்த மாளிகைகள் அழகாக இருப்பது அதிசயமல்லவே! வீரணனுக்கு தெரிந்த சிறைத் துயரம் செவந்திக்குத் தெரியவில்லை. காலையில் ஈயும் எறும்பும் மிதக்கும் சிறைக் கஞ்சியைக் குடித்து விட்டு செவந்தி அதிகாரி வீட்டுக்கு வருவாள். பகல் உணவு குழந்தைக்கும் அவளுக்கும் அங்கேயே கிடைக்கும். மாலை ஆறு மணிக்கு அவள் சிறைக்குப் போய்விட வேண்டும். செவந்திக்கு பேச்சுத் துணைக்குக் குழந்தையிருந்ததால் அவள் தமிழை மறந்துவிட வில்லை. சிறை அதிகாரி வீட்டுப்பெண்கள் செவந்திக்குத் தாலாட்டுக் கூடப் பழகிக் கொடுத்தார்கள். அவள், கைப் பிள்ளைக்காரியா இருந்தபோதிலும், சிறையில் அவளுக்கு குறை தெரியவில்லை. ஆனால் மனக்குறை அவளை அரித்துக் கொண்டிருந்தது. மனக்குறை பசிப் பிணியைவிடக் கொடியது. உணவிலுள்ள சக்தியை மனக் குறை அரிக்க ஆரம்பித்தால், இரும்பு போன்ற உடலும் ஈசலிறகாகிவிடுமே! 

செவந்திக்கு சுவை உணவுகள் கிடைத்தன. கொஞ்சுவதற்கு மழலை கிடைத்தது. அமர்வதற்கு குளிர்ந்த நிழல் இருந்தது. இருந்தும் அவள் முகத்தில் இன்பம் இல்லை. மனத்தில் அமைதியில்லாதபொழுது நிலவு கசக்கிறது. அதிலும் அவள் ஆயுள் கைதி. நிலவு அவளை எரித்தது; பூச்செடிகள் ஆடி அடி அவளை நையாண்டி செய்தன. அவைகளைக் கோபிக்க அவ ளுக்கு அதிகாரம் ஏது? தொடக்கூட அவளுக்கு மன வலிமை இல்லை. சிறையில் ‘பூ’ வைத்துக் கொள்ள கூடாது. 

அடை மழைக்காலம் அது! மழை ‘சோ’ வென்று கொட்டிக் கொண்டிருந்தது! செவந்திமாலை ஜெயிலில் பெரிய அதிகாரி வீட்டிற்கு வந்திருந்தாள். அதிகாரி அன்னை இரக்கம் உள்ளவள். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மனைவி அவள்! அந்த அம்மையார் மகன் ஜெயிலுக்குப் புறப்படும் போதெல்லாம் வாசல்வரை வந்து அனுப்பிவைத்து விட்டுப் போவாள். “யாரையும் அடிக்காதே! வாயால் கண்டித்து வை! பாவம்! ஏழைப் பிள்ளைகள்!” என்று ஒவ்வொரு நாளும் மகனிடத்தில் கனிந்த குரலில் சொல்லிவைப்பாள். அந்த அம்மை யாருக்கு செவந்திமாலை மீது அன்பு இருந்தது. வீட்டு உணவுகளெல்லாம் அதனால் செவந்திக்குத் தாராள மாகக் கிடைத்து வந்தன. 

ஒருநாள் செவந்திக்குச் சிறை முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது. அது ரங்கூனிலிருந்து வந்த கடிதம். சிறை அதிகாரியின் பரிசோ தனைக்குப்பின் அந்தக் கடிதம் செவந்தி கைக்கு வந்தது. செவந்தி கடிதத்தை திலகவதி அம்மையாரிடம் கொடுத்தாள். சிறை அதி காரியின் அன்னையின் பெயர் அதுதான். திலகவதி அம்மையார் சோபாவில் படுத்தபடி மூக்குக் கண்ணா டியை மாட்டிக் கொண்டிருந்தார். செவந்தி அவரது கால்மாட்டில் உட்கார்ந்திருந்தாள். திலகவதி யம்மைக்கு விருத்தாப்பியப் பருவம். குரலில் ஆயிரம் நெளிவுகள் தெரிந்தன. உடுக்கை அடிப்பவனிடம் எதிர்காலத்தை கேட்கும் பாவனையில் திலகவதியம்மை யாரின் வாயசைவுகளையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள் செவந்தி. 

”அன்புள்ள செவந்தி மாலைக்கு, உனது தாய் மாமன் சித்திரவேலு பிரியமுடன் எழு தும் மடல். உன்னுடைய வாழ்வு இப்படிக் கருகிப் போகும் என்று நான் எதிர்பார்க்க வில்லை. நினைத்தாலே நெஞ்சம் வெடித்து விடும்போலிருக்கிறது. சரி போகட்டும்! உன் மீது தொடரப்பட்டிருந்த கொலைவழக்கு விசித்திரமாக இருக்கிறது. நீயும், வீரணன் என்பவரும் சேர்ந்து சிங்கராயன் என்பவரைக் கொன்றதாக உங்களுக்குத் தண்டனை தரப் பட்டிருக்கிறது. ஆனால், எந்தச் சிங்கராயன் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டதோ, அதே சிங்கராயன் இரங்கூனில் தீர்த்தப்பர் என்ற பெயரில் தொழில் புரிந்து வருகிறார். அவர் எனக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார். எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. இதற்கு மேல் நான் என்ன செய்ய வேண்டும் என்ப தற்கு வீரணனை கலந்து ஆலோசித்து எழுத வேண்டியது. 

இப்படிக்கு
சித்திரவேலு, இரங்கூன். 

திலகவதியம்வையார் படித்து முடித்ததும் செவந்தி யைப் பார்த்தார். செவந்தி மயக்கம் போட்டுக் கிடந் தாள்; அவளது குழந்தை வெரந்தாவில் தவழ்ந்து கொண்டிருந்தது. திலகவதி அம்மாள் சிறைக்குத் தகவல் அனுப்பினார்: செவந்தி, சிறை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மறுநாள் குணம் பெற்றாள். 

பதினைந்து நாட்கள் கழித்து சித்திரவேக்குப் பதில் கடிதம் எழுதினாள் செவந்தி. திலகவதி அம்மையாரே தன் கைப்பட கடிதம் எழுதிக் கொடுத்தார். 

“உயர்திரு மாமா அவர்களுக்கு, மருமக ளின் அநேகக் கோடி வணக்கம்: தங்களது கடி தம் கிடைத்தது. அதில் மிகவும் அவசியமான தகவல் எழுதப்பட்டிருந்தது. நானும் வீரண னும் சேர்ந்து கொன்ற தாகச் சொல்லப்பட்ட சிங்கராயர் இரங்கூனில் இருப்பது உண்மை தானா என்று இன்னும் நான் நம்பவில்லை. ஒரு வேளை, எங்கள்மீது தொடரப்பட்ட வழக்கு கண்கட்டு வித்தையாகவும் இருக்கலாம். சிங்க ராயன், தமிழ்நாட்டுக்கு வந்து சொல்ல வேண்டிய இடத்தில் ‘நான் சாகவில்லை’ என்று சொன்னால் எங்களுக்குப் புது வாழ்வு கிடைக் கலாம். முயற்சி செய்யுங்கள். 

பிரியமுள்ள மருமகள், 
செவந்திமாலை 

11. அன்னையும் அதிகாரியும்

மூன்று மாதங்களுக்குப்பின் ஒரு நாள்! 

அன்று மாலைப் பொழுது சாய்ந்து விட்டது. கைதிகள் கூண்டுக்குள் போகும் சமயம் மழை தூறிக் கொண்டிருந்தது. சிறையதிகாரி ஜகதீசன் கைப் பிரம் பைச் சுழற்றிக்கொண்டு வேகமாக அவரது அறைக்குள் நுழைந்தார். அவரது முகம் கம்பீரமாக இருந்தது. அப்பொழுது தான் சிறைக்குள் யாரோ ஒரு கைதியைப் பதம் பார்த்துவிட்டு வந்திருக்கிறார், சிறை மதில்கள் கோயில் மதில்களைப்போல் உயர்ந்தவை; வெளியில் இருக்கும் மாடி வீடுகள்கூடக் கண்ணுக்குத் தெரியாது. அவ்வளவு உயரம்! குருவிப் பொந்துகளைக்கூட அந்தச் கவர்களில் பார்க்க முடியாது. எங்காவது செதில் போயிருந்தாலும் உடனே பூசி விடுவார்கள் அதிகாரிகள். 

ஒரு கைதி- குல்லாயில் சிவப்புப் புள்ளி வைத்த ஆயுள் கைதி-மதில் ஓரமாக பயந்து பயந்து நடந்து வந்தான். அவன் அதிகாரியின் அறையை நோக்கித் தான் வந்தான். அவன் முகத்திலே பீதி இருந்தது. பார்ப்பவர்களுக்கு அந்த கைதி தப்பித்து ஓட எத்த னிப்பவன் போலத்தான் தெரிந்தது. 

அதிகாரி மிகவும் நுணுக்கமான புத்தியுள்ளவர். எத்தனையோ ஆயிரக்கணக்கான மனோ நிலை யுடைய வர்களுடன் பழகுபவரல்லவா! அவர் அறையிலிருந்த படி ஜன்னல் வழியாக அந்தக் கைதியை கவனித்துக் கொண்டே இருந்தார். அந்தக் கைதி, ஒரு பூச்செடிக் குப் பக்கத்தில் போய் பூக்களைப் பறித்தான். பறித்த பூக்களை தன் குள்ளாவுக்குள் வைத்துக்கொண்டு, 

மீண்டும் நடந்தான். நடையின் வேகம் வரவர அதிகரித்தது. அதற்குள் அதிகாரியின் அறை வந்து விட்டது. ஒருவருக்கும் தெரியாமல் அதிகாரியின் அறைக்குள் நுழைந்துவிட வேண்டுமென்ற ஆசையில் குபீரென்று அறைக்குள் பாய்ந்தான். அவன் வேறு யாருமல்ல வீரணன் தான். 

உள்ளே ஜெகதீசன் கைத்துப்பாக்கியை நீட்டிய படி வாசற்படியில் நின்றார். 

“எசமான் என்னை மன்னிக்க வேண்டும். நான் ஒரு ஆயுள் கைதி; செவந்தி மாலையின் கணவன். நான் தங்க ளிடம் பிச்சை கேட்க வந்திருக்கிறேன். உயிர் பிச்சை கேட்க வந்திருக்கிறேன். நான் யாரைக் கொன்ற தாக தண்டிக்கப் பட்டேனோ அவன் இரங்கூனுக்கு போய் விட்டு வந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. செவந்தி கொட்டடியிலிருந்து சொல்லியனுப்பி இருக்கிறாள். அவன் நாளை இரவு சிறைமதில் ஓரமுள்ள தங்களது வீட்டுத் தோட்டத்திற்கு வருவ தாசுச் சொல்லி அனுப் பியிருக்கிறான். நான் சத்தியத்திற்குக் கட்டுப்பட் டவன். மானத்திற்காக குற்றங்களைச் செய்தவன். கொலை எனது தொழில் அல்ல. கடவுளை வேண்டுவது போல் வேண்டுகிறேன். அவனோடு பேசுவதற்கு மட்டும் எனக்கு அனுமதி அளியுங்கள். என் மனைவியின் பெயரில், எனது குழந்தையின் பெயரில் ஆணையிட்டுக் கெஞ்சுகிறேன். நான் ஓட மாட்டேன் ”என்று அழுது புலம்பி தொப்பிக்குள் இருந்த மலர்களை அதிகாரி ஜெகதீசன் பா தங்களில் கொட்டி, வணங்கி, கண்ணீ ரால் கழுவினான் வீரணன். 

ஜெகதீசன் நெறி தவறாதவர். கீழ் உத்தியோகத்தி லிருந்து உயர்த்தப்பட்டவர். சிறைக்குள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டிய கட்டங்களில் எல் லாம் அன்பினாலும், ஒழுக்கமான பேச்சுக்களாலும் அமைதி கண்டவர் என்ற புகழ் அவருக்கு இருந்தது. மனச் சான்றுக்குப் புறம்பாக அவர் எதையும் செய்வதில்லை. ஆனால், வீரணன் கூறிய வழக்கு விபரம் அவர் உள்ளத்தைக் குடைந்தது. ஜெகதீசன் பிரம் பைப் பிடித்தபடி ஒரு கணம் சிலையாக நின்றார். உடலைப் போர்த்தியிருந்த உத்தியோகச் சட்டை அதில் தொங்கிக் கொண்டிருந்த புகழ்ப் பட்டையங்கள் முதலியவைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டார். அதன் பிறகு அவர் வாய் அசைந்தது. 

“வீரணா, இதெல்லாம் சட்ட விரோதம்! எனது உத்தியோகக் கௌரவத்திற்கு உகந்த தல்ல! போய்விடு! எழுந்து ஓடிவிடு!” என்று, சம்பிரதாயத்திற்காக முகத்தை நெருப்பாக்கிக் கொண்டு பேசி விட்டு, அந்த இடத்தைவிட்டகன்று விட்டார் கெஜதீசன். அவர் உள்ளத்தில் மறு ஏற்பட்டது போன்ற ஒரு சிறு உணர்ச்சியுடன் அவர் பங்களாவுக்குப் போய்விட்டார். வீட்டில் திலகவதி அம்மையார் மகனுக்காக எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். 

”ஜெகதீசா!” 

“அம்மா!” 

“ஏன் இவ்வளவு தாம தம்?” 

“அதிகாரிகள் எப்போதுமே கோபமாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பணியாளர்களிடத்தில் மரியாதையை எதிர்பார்க்கக்கூடாது.” 

“என்னப்பா அப்படி நடந்து விட்டது?” 

“எனது, உத்தியோகக் காலத்தில் நடக்காத ஒன்று, இன்று நடந்துவிட்டது! ஒரு கைதி, வேறு யாருமில்லை, செவந்திமாலையின் புருஷன், ஒரு மணி நேரம் ரகசியமாக வெளியே வந்து போக, அனுமதி கேட்டு விட்டான்.” 

“கேட்டால் என்ன? அவன் ஆயுள் கைதி! இனி அவனுக்கு வாழ்க்கை இல்லை! நீ இரக்கமுள்ளவன் என்று கேட்டிருக்கிறான். தவறு ஒன்றுமில்லையே. ஜெகதீசா!”

“அம்மா, நான் சட்டப்படி நடக்க மாட்டேன், வளைந்து கொடுத்துவிடுவேனென்று குறைத்து என்னை எண்ணியிருக்கிறான் அவன்!’ 

“ஐயோ ஜெகதீசா! அவன் அப்படி நினைத்து இருக்கவே மாட்டான். அவன் மனைவியைத் தெரியுமே உனக்கு! அவளும் அப்படிப்பட்டவளல்ல! வீரணன் உன்னைக் கேட்டிராவிட்டால் நான் உன்னைக்கேட்டிருப்பேன்.” 

”அம்மா!” 

”ஆம்; அவர்களது விடுதலை, கண்ணுக்குத் தெரி கிறது. அதை நாம்தான் எடுத்துக் கொடுக்கவேண்டும். ஒரு மணி நேரம் வேண்டாம்! ஜெகதீசா, ஒரு நாழிகை போதும்!” – திலகவதி அம்மையார் மகன் தன் பேச்சைக் கேட்பானென்ற நம்பிக்கையில் சிரித்துக் கொண்டே பேசினார். 

“அம்மா! அது மட்டும் நடக்காது! அரசாங்கம் என்மீது நம்பிக்கை வைத்து ஆயிரம் கொலைக் கைதிகளை ஒப்படைத்திருக்கிறது. நான் அரசாங்கத்திற்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டேன்.” 

“தம்பீ, அவர்களது வழக்கு தெரியுமா உனக்கு! விசித்திரமான வழக்கு! உன்னைப் போல் எல்லா அதி காரிகளும் நீதிமான்களாக இருந்திருந்தால் வீரணனுக் கும் செவந்திமாலைக்கும் தண்டனையே கிடைத்திருக் காது. செத்துப் போனதாகச் சொல்லப்பட்டவன், உயிரோடு இருக்கிறான். எந்த நீதிபதி இவர்களுக்குத் தண்டனை கொடுத்தார்? எப்படிக் கொடுத்தார், ஜெக தீசா! உன்னைப்போல் நான் பட்டப்படிப்புப் படிக்க வில்லை. ஆனால் ஒன்றை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்! உன்னைப் போன்ற ஒரு பெரிய அரசாங்க அதிகாரி தவறாக நீதி சொன்னதை மாற்றி, உண்மை யான நீதியை நிலை நாட்டவேண்டுமானால் நீ தவறாமல் இந்த உதவியைச் செய்யத்தான் வேண்டும்; அவன் தப்பமாட்டான் என்பதற்கு நான் பொறுப்பு!’ -திலகவதி அம்மையார் உருக்கமாகப் பேசினார். 

“அம்மா! ‘கடமையில் தவறாதே’ என்று அறி வுறுத்தும் நீங்களா இப்படிப் பேசுகிறீர்கள்!” 

“நான் தான்!-பேசவில்லை, பெற்ற மகனிடத்தில் மண்டியிட்டுக் கேட்கிறேன்.”

“அம்மா!” 

”பேசாதே ஜெகதீசா! எனக்காக அதைச் செய்!” என்றாள் திலகவதி அம்மையார். 

ஜெகதீசன் முகத்தைச் சுளித்துக் கொண்டே மாடிக்குப் போய்விட்டான். 

பங்களாவில் அமைதி நிலவியது! சாப்பிடுவதற்குக் கூட ஜெகதீசன் கீழே இறங்கவில்லை. 

மறுநாள் இரவு. காவல்காரன் ஒன்பது மணி அடித்தான். காவலர்கள் மதிலோரமாக ரோந்து சுற்றிக் கொண்டிருந்தார்கள். வீரணன் மட்டும் கொட்டடியிலிருந்து அழைத்து வரப்பட்டான். அவன் உள்ளம் குழம்பியிருந்தது. ‘முதல்நாள் செய்த தவறுக் குத் தண்டனை கிடைக்கப் போகிறது’ என்று பயந்து கொண்டே நடந்து வந்தான். 

‘வீரணா!” 

“எஜமான்!” 

“பங்களாவுக்கு வெளியே போகக் கூடாது. சரி யாகப் பத்துமணி அடிக்கும் போது நீ கோட்டைக்குள் இருக்கவேண்டும்! போ!” என்று தலையைக் கவிழ்த்துக் கொண்டே சொன்னார் அதிகாரி. கடமையில் தவறி விட்டதாக அவருக்கு மனம் உறுத்தியது. கடிகாரத் தையே பார்த்துக் கொண்டிருந்தார். 

12. கனவல்ல!

அதிகாரியின் பங்களாத் தோட்டத்தில் மரங்கள் அடர்த்தியாக இருந்தன. தோட்டத்தைச் சுற்றிக், கைதிகள் மண்சுவர் எழுப்பியிருந்தார்கள். சுவர் உயரக்கட்டை; நிலவு மழை மேகத்தையும் துளைத்துக் கொண்டு மங்கலாகத் தெரிந்தது. திட்ட மிட்டபடி ராவுத்தரைப்போல் சிங்கராயன் கை கட்டிக்கொண்டு சுவருக்கு வெளியே நின்றுகொண்டிருந்தான். முதலில் வீரணனுக்கே அடையாளம் தெரியவில்லை. தலையி லிருந்த பட்டுத் தொப்பியைக் கையில் எடுத்த பின்னர் தான் வீரணனால் அவனைத்தெரிந்துகொள்ள முடிந்தது. 

“வீரணா! சௌக்கியமா?” 

“இதோ என்னைத்தான் பார்க்கிறாயே!” 

“ஏதோ நடந்துவிட்டது! நடப்பதைக் கவனிப் போம்!” 

“இனிமேல் நீ தான் எல்லாம் செய்யவேண்டும்.” “செய்வதைப் பற்றி ஒன்றும் இல்லை! என்னை அவ தூறாகக் குற்றம் சாட்டிய செவந்திமாலையை நினைத்தால் இன்னும் என்மனம் துடிக்கிறது வீரணா!” 

“விட்டுத்தள்ளு! அவள் சின்னப்பெண் தானே!” 

“வீரணா வருத்தப்படாதே! நான் இரங்கூனை விட்டுப் புறப்படும்போது சித்திரவேலு விடத்தில் ஒரு நிபந்தனை போட்டு விட்டுத்தான் வந்திருக்கிறேன்.” 

“என்ன அது! என்னிடம் சொல்லக் கூடாதா? எங்களை விடுதலை செய்யும் உனக்கு எது வேண்டு மானாலும் நாங்கள் செய்வோம்!” 

“எனக்குப் பொன் வேண்டாம்! பொருள் வேண் டாம்! எனது வாழ்க்கையில் தணியாத வெறி! செவந்தி மாலை என் கைக்கு வரவேண்டும்! அவளைப் பழிவாங்க வேண்டும்.” 

“என்ன!” 

“விடுதலை என்றால், சாமான்யமா, வீரணா?” 

“சிங்கராயா!” 

சிங்கராயன் சிரித்தான். 

“சிங்கராயா, இந்த பேரத்திற்காகவா இங்கு வந்தாய்?” 

சிங்கராயன் மீண்டும் பலமாகச் சிரித்தான். வார்த் தைகள் பழுத்தன. 

தோட்டத்திற்குள், மாலையில் கைதிகள் வேலை பார்த்து விட்டு வைத்துப்போன மண்வெட்டி ஒன்று கிடந்தது. வீரணன் அதைக்கொண்டு முழுபலத்தையும் தாங்கி சிங்கராயனைத் தாக்கிவிட்டான். 

சிறைக்காவலன் மணி பத்தடித்து விட்டான். வீரணன் மண்வெட்டியைப் போட்டுவிட்டு, சிறைக்குள் ஓடினான். அதிகாரி ஜகதீசன் உலாத்திக்கொண்டே நின்றார். வீரணன் அவர் காலில் விழுந்தான். ஜெகதீசன் அந்த வணக்கத்தை ஏற்றுக்கொள்ளும் தோரணையில் புன் முறுவல் பூத்தார். 

இரவு முழுவதும் தூங்கவே இல்லை. ஏதோ பாடிக் கொண்டே இருந்தான் அவனையுமறியாமல் வந்த பாட்டுக்கள் அவை. 

பொழுது விடிந்தது. வீரணன் பைத்தியம் பிடித்த வனைப்போல் வரிசையில் நின்றான். கஞ்சி ஊற்றப் பட்டது. உப்புக்கூட வாங்காமல் வழக்கமான மரத்தடிக்குப்போய் கண்ணை மூடிக்கொண்டு குடித்தான். 

கூட்டாளிகள் வந்து பேசினார்கள். 

பதில் பேசவில்லை, அவன். வேலைக்குப்போக அழைத்தார்கள். 

அதற்கும் அவன் பதில் பேசவில்லை. அவனுக்கென விடப்பட்டிருந்த ஒட்டுத் திண்ணையில் போய் தலையைச் சாய்த்துவிட்டான். 

பிற்பகலுக்குமேல், வெளித்தகவல்கள் படிப்படி யாக உள்ளே வந்தன! 

நமது சிறைக்கு எதிரே உள்ள பாதையில் ஒரு பெரிய பணக்காரன் இறந்து கிடக்கிறான். கார் அடித்து விட்டதாம், பாதிராத்திரியில் ஓலம் கேட்டதாம்!” என்று ஒரு தகவல் வந்தது. 

“இல்லை! ஒரு பெண்ணைக் கடத்திக்கொண்டு வந்தானாம் ஒரு சேட்! பெண்ணுக்குச் சொந்தக்காரன், பெண்ணை மீட்டுக்கொண்டு, சேட்டை வெட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டானாம். அந்தப் பெண் இப்போது போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறாளாம்.” -இப்படி ஒரு தகவல். 

ஒட்டுத் திண்ணையில் சாய்ந்து கிடந்த வீரணனுக்கு இந்த வதந்திகள் உலவுவது தெரியாமலில்லை. தெரியும்! ஒரு மாதகாலம் அந்த வதந்திகள் சிறைக்கூடத்தையே அரற்றிக்கொண்டிருந்தன. 

ஒரு நாள் பகல், பெரிய பெரிய அதிகாரிகளெல் லாம் சிறைக்கு வந்திருந்தார்கள். சிறை மிகவும் சுத்த மாக வைக்கப்பட்டிருந்தது. சிறையதிகாரியின் பணி யாள் ஒருவன் வந்து வீரணனை அழைத்துப்போனான். வீரணன் உயிர் அவனிடத்தில் இல்லை. உயிர் போய் விட்டது போன்ற உணர்ச்சி! 

சிறை அதிகாரியின் அறையில் பல பெரிய அதிகாரி கள் உட்கார்ந்திருந்தார்கள். வீரணனுக்கு முன்பே செவந்திமாலை அழைத்து வரப்பட்டிருந்தாள். கைக் குழந்தையும் அவள் இடுப்பில் இருந்தது. 

யார் முகத்திலும் குணத்தைக் கண்டு பிடித்து விடலாம். போலீஸ் இலாக்கா அதிகாரிகளின் முகத்தில் மட்டும் எந்த அறிகுறியையும் காண முடியாது. உத்தி யோகத்திற்குப் போகும்போதே இரு தயத்தைக் கழற்றி மனைவியிடம் கொடுத்து விடுகிறார்கள் என்பது வீரண னின் பழைய சித்தாந்தம். அன்றும் அந்தச் சிந்தாந்தம் அவன் நினைவுக்கு வந்தது. 

“வீரணா, உனக்கும் உன் மனைவிக்கும் அரசாங்கம் ஒரு தனி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சிங்கராயன் என்ற பேர்பெற்ற கொள்ளைக்காரனை நீயும் உன் மனைவி யும் சதி செய்து தேவகோட்டை யருகே கொன்றது ஏற்கனவே சர்க்காரின் கவனத்திற்கு வந்திருக்கிறது. ஆனால் சென்ற மாதம் இதே சிறைச்சாலைக்குச் சற்றுத் தொலைவில் நடைபெற்றுள்ள கொலையை அரசாங்கம் கவனித்து நோக்கிய பின்னர், இப்போது கொல்லப் பட்டவன் தான் சிங்கராயன் என்று சர்க்கார் தீர்மானித் திருக்கிறது. ஆகையால் பழைய வழக்கில் பல பொய்ச் சாட்சிகளைக்கொண்டு, உன்னையும் உன் மனைவியையும் தண்டிக்க நேர்ந்தமைக்கு சர்க்கார் வருந்தி உங்கள் இருவரையும் விடுதலை செய்து, உங்களுக்கு உதவித் தொகையாக ரூ. 10001-யும் தந்திருக்கிறது” என்று வந்திருந்த பெரிய அதிகாரி ஒருவர் எடுத்துச் சொன்னார். 

வீரணன் முதலில் நம்பவில்லை. சிறை அதிகாரி ஜெகதீசன் அவனருகில் வந்து வீரணன் முதுகைத் தட்டி “குற்றவாளிகள் பிறப்பதில்லை. முட்டாள் தனம் மனிதனைக் குற்றவாளியாக்கி விடுகிறது. கோபம் அவனைக் கொலைகாரனாக மாற்றி விடுகிறது. கோபப் படாமல் வாழக் கற்றுக்கொள், செவந்தி உனக்கும் தான்!” என்றார். 

ஜெகதீசன் கடைக் கண்ணில் நீர் அரும்பி நின்றது. ஆயிரக்கணக்கான கைதிகள் எட்டி நின்று, புது மணத் தம்பதிகளைப் பார்ப்பது போல் பார்த்தார்கள். 


ஜெகதீசன் மாளிகை அமைதியாக இருந்தது. வீரணன் செவந்தியை அழைத்துக்கொண்டு திலகவதி யம்மையாரைப் பார்க்கப்போனான். அவன் கையில் இரண்டு மாலைகள் இருந்தன. 

திலகவதியம்மையார் வீட்டுக்குள்ளே சாம்பிராணி புகை போட்டுக் கொண்டிருந்தார். 

“அம்மா!” 

“செவந்தி! வீரணா! எனக்கு ரொம்ப சந்தோஷம்! நீங்கள் புதுப்பிறவிகள்! அமைதியாகப் பிழைக்கப் பழகிக்கொள்ளுங்கள். செவந்தி இங்கேயே இருக்கலாம்! எனக்கும் துணையாக இருக்கும்” என்றாள் 

செவந்தியின் கண்களில் நீர் பூத்தது. 

செவந்தி, திலகவதியாரின் கழுத்தில் மாலையைப் போடப்போனாள்! 

“எனக்கு ஏன் மாலை, உள்ளே வா! என் பிள்ளைக்குப் போடு! நல்ல பிள்ளைகளைப் பெற்றேன். கடமை தவறாத வர்கள் என் பிள்ளைகள்! அவர்களுக்குப்போடு மாலையை!” என்று செவந்தியை உள்ளே அழைத்துப் போனாள் திலகவதி அம்மையார். 

உள்ளே இரண்டு படங்கள் இருந்தன. ஒன்று சிறை அதிகாரி ஜெகதீசன் படம்! இன்னொன்று… செவந்திக்கு அடையாளம் தெரியவில்லை. திலகவதியார் முகத்தைப் பார்த்தாள். 

“இவன் தான் ஜெகதீசன்! இதோ இருக்கிறானே இவன் இளையவன். ஆனால் இப்போது இல்லை. சுட்டுக் கொன்றுவிட்டார்கள். பெயர் தங்கப் பாண்டியன்” என்று திலகவதியார் சொல்லி முடிப்பதற்கும் வீரணன் அந்த அறைக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது. 

”ஐயோ, தாயே!” என்று கதறினான் வீரணன். என்ன “வீரணா! வீரணா! என்ன உடம்பிற்கு! சொல்லு!” திலகவதியார் கேட்டார்! 

வீரணன் மயங்கிக்கிடந்தான். விழித்துப் பார்க் கும் பொழுது, திலகவதியாரும். செவந்திமாலையும் விசிறிக்கொண்டிருந்தார்கள். வீரணன் பெரியம்மாளை வணங்கினான். அடுத்து செவந்தியைப் பார்த்தான். 

“சாகும் வரை கண்கண்ட தெய்வமான இந்த நாச்சியாருக்கே உழைக்கப் போகிறேன்” என்றாள். 

“அதைத்தான் நானும் சொல்ல இருந்தேன்” என்றான் வீரணன். 

கைக் குழந்தை – பெண் குழந்தை தவழ்ந்து வந்தது! 

“தாயே, எனக்கு அனுமதி வழங்கவேண்டும்; என் குழந்தைக்கு திலகவதி என்று பெயர் வைக்கப்போகிறேன்” என்றான் வீரணன். 

திலகவதியம்மையார் சிரித்தார். அந்தச் சிரிப்பில் பெருந்தன்மை, தியாகசீலம் எல்லாம் சேர்ந்து நின்றன.

– ஐந்தருவி (ஐந்து குறுநாவல்கள்), முதற் பதிப்பு: பெப்ரவரி 1970, இளங்கோ பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *