வேலிகளின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 28, 2024
பார்வையிட்டோர்: 1,722 
 
 

(1994 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

1

“சலோ!..”. சொன்னவன், இரண்டு எட்டு முன்னால் வைத்துத் திரும்பிப் பார்த்தான். சிங்கர் கிருஷ்ணனைப் பார்த்தார். கிருஷ்ணன் சிங்கரைப் பார்த்தான். முன்னே போங்கள் என்பதுபோல ஆளுக்காள் தலையாட்டினார்கள். அது பயத்தாலல்ல. மரியாதைக்காக என்பது இருவருக்குமே தெரியும். ஒரு கணத் தயக்கத்துக்குப் பிறகு வயதுக்குக் கிருஷ்ணன் கொடுக்கிற மரியாதையை ஒப்புக்கொண்டவராக-சிங்கர் முன்னால் வந்து அந்தச் சிப்பாய்க் கருகில் போய் நின்றார். அவருக்குப் பின்னால் கிருஷ்ணன் போய்ச் சேர்ந்து கொண்டான்.

திரும்பிப் பார்த்தார்கள். அந்தப் பெரிய விறாந்தை முழுவதும் சனமாய் நின்றது. அம்மா, வேணி அக்கா, பிள்ளைகள் எல்லோருக்கும் முன்னால். கிருஷ்ணனையே பார்த்தபடி நின்றார்கள். உனக்கேன் இந்த இருக்கேலாத வேலை? சாப்பாடெதுக்கு? இங்கே இருக்கிற இந்த மற்றவர்களைப் போல, நீயும் நிண்டிருக்கேலாதா? அவனுக்குக் கேட்டது. போய் மினைக்கெடாமல் பத்திரமாய் வந்துவிடு. என்று அந்தப் பார்வைகள் சொல்லின. கிருஷ்ணன் இதுக்கென்ன பயம்? என்பதாக அவர்களை உற்சாகப்படுத்துவது போல – ஒரு மெல்லிய முறுவலுடன் தலையசைத்தான். 

‘சலோ”-சிப்பாய் திரும்பவும் சொன்னபடி தெருவிலிறங்கினான். சிங்கரும் அவரைத் தொடர்ந்து கிருஷ்ணனும் இறங்கினார்கள். படலைக்கு வெளியே நின்ற நாலு ஆட்கள் இரண்டிரண்டு பேராய் முன்னும் பின்னும் சேர்ந்து கொள்ள ஒரு வரிசை உருவானது. 

இந்த வீட்டிற்கு முன் வீட்டில் சிப்பாய்கள் நிறையப் பேர் நின்றார்கள். அநேகமாக எல்லோருமே மதிலின் மேலால் இங்கு எட்டிப் பார்த்தபடி. முன்னாலிருந்த காவற் கூட்டுக்குள் நின்றவன் ஏதோ உரத்துச் சொல்லிவிட்டுச் சிரித்தான். நெய்யும் கடலையெண்ணையும் கலந்த வடை மூக்கிலடித்தது. அவர்களைப் பார்க்காமல் தாண்டிப் போனார்கள். 

மெல்லத்தான் நடக்க வேண்டியிருந்தது. முன்னால் போகிறவன் ஆறுதலாய்ப் போகிறான் போலும். திரும்பி. தாங்களிருந்த வீட்டின் விறாந்தையில் நிற்பவர்களைத் தெரிகிறதா? என்று பார்க்க நினைத்தான் கிருஷ்ணன். வேண்டாம். இவர்கள் ஏதாவது நினைக்கக்கூடும். அதோடு. இங்கிருந்து பார்த்தால் மதிலுக்கு மேலால் நிற்கிற மரங்கள் மறைக்கும். 

சிங்கரின் நெடிய உருவம். முன்னால் கையெட்டும் தூரத்தில் போய்க் – கொண்டிருக்கிறது வேட்டியின் கீழ் – அவரது ஒவ்வொரு அடியெடுப்புக்கும் அந்தக் கறுத்தத் தோல் செருப்புக்கள் டக்டக் கென்று சீரான ஒலி கிளப்பிக் கொண்டிருக்கின்றன. சிங்கர் வழமையான கோலத்தில் தான் இருக்கிறார். வெள்ளை வேட்டி, நஷனல். வெள்ளைச் சால்வை அது கழுத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்தது. நரை மயிரடர்ந்த தலை. வழமையாகத் திருநீறும் சந்தணமுந் துலங்குகிற நெற்றியில் இன்று திருநீற்றை மட்டும் பார்த்த ஞாபகம். எப்படியோ ஆள் தொண்ணூறு வீதமாவது வழமையான கோலத்தில்! 

கிருஷ்ணன் தன்னைப் பார்த்தான். மண்ணிற பிஜாமா சாரம். ரப்பர்ச் செருப்பு. வெளியே விட்ட வெள்ளை அரைக்கைச் சட்டை. வீட்டிலிருக்கிற கோலம். நேற்று மத்தியானம் குளித்து விட்டுப் போட்ட உடுப்பு… 

பரவாயில்லை. போய் இந்தச் சாப்பாட்டு விஷயத்தை ஒழுங்கு பண்ணிவிட்டு வந்து மத்தியானம் குளித்து மாற்றிவிட்டால் சரி. ஆனால் முகாமிலிருக்கிற சனத்தைப் பார்த்தால் மத்தியானமாவது குளிக்கமுடியுமோ, தெரியவில்லை. வந்து பார்க்கலாம். எப்படியும் இவ்வளவு பேருக்கும் இந்த மூன்று நாலு நாளைக்கும் சாப்பாட்டை ஒழுங்கு பண்ணிக்கொள்ளத்தான் வேணும்.எத்தனை பேர். எத்தனை குஞ்சு குருமன். நாங்கள் போய்க் கதையாமல் சரிவராதாம். 

தெருக்கரையில் ஆங்காங்கே தேங்கி நிற்கிற வெள்ளத்தை விலக்கி நடக்க வேண்டியிருந்தது. கழுவி விட்ட நிலத்தில் காலை வெய்யில் அழகாய் விழுந்தது. நீண்டு நகரும் நிழல்கள். தடம் படாத தெருக்கரை மண். மழை பெய்தது முந்தநாளிரவு. 

எங்கே போகிறோம்? எங்கேயிருக்கிறது செஞ்சிலுவை அலுவலகம்? போனால் உடனே கவனித்து அனுப்பி விடுவார்களென்று பி. கே. சிங் சொன்னான். வேளைக்குத் திரும்பி அம்மன் கோவிலடிப் பக்கம் இருக்கலாம். 

2 

சரிதான். முன்னால் போகிறவன் இடது பக்கமாகத்தான் திரும்பப் பேகிறான். 

திரும்பினார்கள். 

என்ன இது? 

கிருஷ்ணன் திகைத்தான். 

தெருவின் இருபுறத்து வேலிகளும் எரிந்து. கதிகால்கள் கருகி……மதில்கள் உடைந்து. கதிரேசு கடைப் பலகைகள் கூட.

இதென்ன? 

உயிரசைவே இல்லாத வெறுமை உறைத்தது. எங்கோ. ஒருதனிக்காகம் இரண்டு தரம் கத்தியது. ஆட்களை அமுக்குவது போலிருந்த அமைதி இந்தக் கத்தலில் இன்னமும் பெரிதாய்க் கனத்தது. 

சிங்கரை நிமிர்ந்து பாராத்தான். அவருக்கும் உறைத்திருக்க வேண்டும்.-பார்த்துப் பார்த்து நடப்பதில் புரிகிறது. கதைக்க முடியாதா? இயந்திரங்கள் போல முன்னும் பின்னும் கூட வருகிற படை ஆட்கள்….. 

இவர்கள் ஏனிப்படி எங்களைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள். ஏதோ கைதிகளைக் கொண்டு செல்வது போல? இரண்டு சிவிலியன்களைக் கூட்டிப் போக ஏன் இவ்வளவு பாதுகாப்பு?….முன்னால் ஒருத்தன் துவக்கோடு அதை நீட்டிப் பிடிக்கிற விதமும் நடக்கிற நடையும் எச்சரிக்கையாக அடிவைக்கிறான். அங்குமிங்கும் பார்த்தபடி அடுத்தவர்களும் அதே மாதிரி! பின்னால் வருகிறார்கள் -அவர்களைத் திரும்பிப் பார்க்க முடியாது -அவர்களும் அப்படித்தான் வருவார்கள். 

எங்கே போகிறோம்? என்னத்துக்கு இப்படி? முட்டாள்தனமாக வந்து மாட்டிக் கொண்டோமா? வேலியாயிருந்தவற்றின் விளிம்போடு படர்ந்திருந்த பச்சைப் புல் வரிசைக்கும். வாரடித்த வெள்ளைமணற் கரைகளுக்குமிடையில் கரைந்துங் கலைந்துங் கிடக்கிற கரித்திட்டுக்கள். தெருவின் தாரிலும் குறுணிக் கற்களிலும் அவர்களின் முரட்டுச் சப்பாத்துக்கள் நறுநறுக்கிற நடையொலி. அதுமட்டுமே கேட்கிற அமைதி. இந்த வெறுமை, இந்தப் பயங்கரம்…எங்கள் ஊர்தானா இது? இல்லை. இது கனவில்லை. 

நடந்தபடியிருந்தார்கள். பொன்னையர் வீட்டுப் போட்டிக்கோ கூரையின் மேல் அவர் வளவின் முன்மதில் கல்லெல்லாம் ஏறி, அது ஒரு கொத்தளமாகி. ஓட்டையிலிருந்து ஒரு துவக்கு நீட்டிக் கொண்டிருந்தது. 

துரைலிங்கம் வீட்டு வேலி வெட்டி அடிவளவு வரை தெரிகிறது. கார்க்கொட்டிலில் துரையரின் மொறிஸ் மைனர் எரிந்து கருகி வெறுங்கோதாய். இந்தப் பக்கத்துச் சனங்களையெல்லாம் எங்கே கொண்டுபோய் விட்டிருப்பான்கள் ? அம்மன் கோவிலிலா? எங்களைப் போல இந்தக் குறிச்சியும் இவர்களிடம் அகப்பட்டுக் கொண்டதா இல்லை. சுற்றி வளைப்பிற்கு முன்பே மாறிவிட்டதா? 

மணத்தது. 

மணம் நெருங்கி வந்தது. இங்கே எங்கோ கிட்டத்தில்தான். 

அந்தா, குணம் வீட்டு மதிலின்பின், இரண்டு இடங்களில் ஓட்டைகளுக்கூடாக நீட்டிய துவக்குகள், காவற் கூடுகள். குணம் வீட்டுக்கு அந்தப் பக்கமும் அதேபோல் இரண்டு. பாக்கிய மக்கா வீடு. 

பரஞ்சோதியர் வீட்டு மதில்களின் கற்கள்! செல்வத்தின் சைக்கிள் கடையின முன்னாலிருந்த பத்தியின் தகரங்களையுங் காணவில்லை. அவைதான் போலும், மேலே! முழு இடமும் புயலடித்து ஓய்ந்த மாதிரி! இல்லை, இனித்தான் புயலோ? 

முன்னால் போனவன், வலதுபுறம் சட்டெனத் திருப்பினான். பரமசிவம் வீட்டுக்குப் போகிற வண்டில் பாதை! திரும்பினார்கள். 

இதென்ன? மயிர்க் கொட்டி மொய்த்தது போல? இத்தனை பேர்களா? சிலிர்த்தது. 

இதுவுங் கனவில்லை. 

இங்கே ஏன் வந்திருக்கிறோம்? இதற்குள் எப்படி நாங்கள் தேடி வந்த இடம் இருக்க முடியும்?. இத்தனை பேரிருந்தும் எவ்வளவு அமைதி! இந்த முடக்கினுள் இத்தனை சிப்பாய்கள் இருப்பார்கள் என்று யார் நினைப்பார்கள்?. 

வேலிக்கரைகளோடு-வரிசை…வரிசையாய் – குந்தியும் சப்பாணி கட்டியும்…பீடிகளை உறிஞ்சிய படி…. நெய் மணத்தையும் மீறி எங்கும் அது மணத்தது. 

கிருஷ்ணனுக்கு வயிற்றைப் பிசைந்தது. எங்களூரில் இப்படி கூர்க்காக்கள் மொய்ப்பார்களென்று எவராவது எப்போதாவது நினைத்திருக்க முடியுமா? 

இவர்களின் வரிசை நடுவால் நடந்தது. இங்கொன்று அங்கொன்றாக. ஆங்கார உறுமல்கள். முணுமுணுப்புக்கள். இருந்தாற்போல் ஒரு சீழ்க்கை! எல்லாமுகங்களும் ஒரே மாதிரி மரத்துக்கிடந்தன. பார்க்காமல் நடந்தார்கள். திடீரென ஒருவன் தலையை உயர்த்திக் கறுவினான். கத்திய சத்தம் திடுக்கிட வைத்தது. எல்ரிரிஈ என்ற மாதிரிக் கேட்டது. சிரித்தால் என்ன நடக்கும்? இந்த நேரத்திலும் வருகிற சிரிப்பை கிருஷ்ணன் மறைத்துக் கொண்டான். 

பரமசிவம் வீட்டுக்குத்தான் நேரே போனார்கள். கேற்றில் நுழைந்து திரும்பியதும். சிவத்தார் வளவு விரிந்து கிடந்தது. மேலே அடர்ந்த புற்றரையும். இந்த இடத்தில் சந்தடியில்லை. ஆனால், நேரே முன்னால், சற்றுத் தொலைவில் வீட்டின் போர்ட்டிக்கோ பரபரத்துக்கொண்டிருந்தது. 

கொஞ்சத் தூரம் போனார்கள். ஒரு தென்னையருகில் வந்ததும் அழைத்து வந்தவன் இவர்களை நிற்கச் சொல்லிக் கைகாட்டினான். நின்றார்கள். அவன் மட்டும் நேரே போனான். 

இது இவர்களின் இடம். அலுவலகமோ, முகாமோ. எதுவோ. அதிலும் இந்த அமளியைப் பார்த்தால் பரமசிவத்தாரின் பழைய மோட்டார் சைக்கிள் எண்ணெய் சொட்ட நிற்கிற இந்தப் போர்ட்டிகோதான் அவர்களின் கட்டளை மையமாகத் தெரிகிறது.. 

முப்பதடிக்கு முன்னால் அந்தப் போர்ட்டிகோ. அங்கு நடக்கிறதெல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க முடிகிறது. நடுவில் சோஃ பாக் கதிரையில் ஒருவன். அதிகாரி போலும். அவனும் கூர்க்கா. சற்றுத் தள்ளி, ஒரு மேசையின் மேல் தொலை தொடர்புக் கருவிகள். அவற்றின் முன்னால் மூன்று பேர். கதிரைகளில் உட்கார்ந்து மாறி மாறிக் கத்திக் கொண்டிருந்தார்கள். வெவ்வேறு இடங்களுக்கு இங்கிருந்து. கட்டளைகள் போவது மாதிரி இருந்தது. வயர்லெஸ் காரர்களின் பின்னால், அவர்களின் கதிரைகளில் கையை ஊன்றி வளைந்து ஒரு நெட்டை மனிதன். கட்டளைகள் இட்டபடி. அவன் கூர்க்கா அல்ல. நல்ல சிவலை. கறுத்தச்சீருடை. முழுமொட்டையாக மழித்திருந்த தலை. 

இவர்களைக் கூட்டிப் போனவன். கூர்க்காவின் முன்னால் போய் நின்று சல்யூட் அடிக்கிறான். ஏதோ சொல்வது தெரிகிறது. திரும்புகிறான்.

அவன் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருகில் வந்ததும். “ஆவ்!…..” என்றான. 

முகாமிலிருந்து புறப்பட்ட போது வந்த “சலோ” வுக்குப் பிறகு அவன் வாயிலிருந்து வருகிற அடுத்த வார்த்தை இதுதான். 

4

காலுக்குமேல் காலைப் போட்டுக் கொண்டிருந்த அதிகாரி, இவர்களையே உறுத்துப் பார்த்தபடி இருந்தான். தொப்பி மடியிலிருந்தது. அங்குமிங்கும் நரையோடிய தலை. ஐம்பது வயதிருக்கலாம். அருகில் போன பிறகு தான் அங்கே வேறு கதிரைகளில்லாதது கண்ணில் பட்ட கூர்க்கா ஒன்றுமே பேசவில்லை. இவர்களையே இன்னமும் உற்றுப் பார்த்தபடி இருந்தான். 

“குட்மோணிங்” என்றார் சிங்கர். 

அவன் முறைத்தான். 

“வெயிட், தேர்!..” உறுக்கியபடி தூணைக் காட்டினான்.

“விக்ரம்சிங்!” 

அழைத்து வந்தவன் அவசரமாக முன்னால் வந்தான். அதிகாரி சொன்னதை அட்டென்ஷனில் நின்று கேட்டான். சல்யூட் அடித்துத் திரும்பி நடந்தபோது, அந்த விக்ரம்சிங்கின் பின்னால், அவனோடு கூடவந்த நாலுபேரும் போனார்கள் 

கிருஷ்ணன் திடுக்கிட்டான். நாங்கள் இங்கே வந்திருக்கவே கூடாது? சாப்பாடாவது. ஒன்றாவது..போகிறவர்கள். பி. கே. சிங்கின் ஆட்கள். இவர்களைக் கொண்டு வந்து விட்டு விட்டுப் போகிறார்கள்! இனித் திரும்புவது? இந்தச் சூழலில் தனியே இவ்வளவு தூரமும் அரைமைல் தானென்றாலும்-போக முடியுமா? இவர்கள் யாராவது கொண்டு போய் விடுவார்களா? நடக்கிற நடப்பைப் பார்த்தால். போகத்தான் முடியுமா? என்பதே சந்தேகமாயிருக்கிறது. 

கிருஷ்ணன். புறங்கையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். பி.கே.சிங்கின் முகத்தில் பொய்யோ. மெய்யோ புன்சிரிப்பாவது தெரிந்தது. கதிரையிலிருக்கிற இந்தக் கூர்க்கா முகத்தில் அதன் சாயலையே காணவில்லை. பிடித்துத்தின்று விடுகிறவன் மாதிரி.. நெஞ்சு படபடத்தது. 

வீட்டுக்குள்ளிருந்து ஒருவன் வந்தான். கையில் வெள்ளித் தட்டு. அது நிறைய. வெள்ளையாய்ப் பூக்குவியல் போல….தேங்காய்ச் சொட்டு! 

வந்தவன் கூர்க்காவின் அருகே போய்த் தட்டை நீட்டினான். அவன் கையை மட்டும் நீட்டிப் பிடியாக அள்ளிக் கொண்டதும், தட்டுக்காரன் மொட்டத் தலை ஆளின் முன் போய் நின்றான். கிருஷ்ணன் இப்போது தான் கவனித்தான். அந்த ஆளின் தலை முழு மொட்டையில்லை. உச்சிச் சுழியருகில் மட்டும். விரல்தடிப்பில் நீளமாய் எலிவால் போல ஒரு குடுமி. அம்புலிமாமாப் படங்களில் வருகிற சில ஆட்களின் தலை மாதிரி. 

அந்த ஆள், கதிரையில் கிடந்த வெள்ளைத் துவாய் ஒன்றை எடுத்தான். ஒற்றைக் கையால் முகத்தை அழுந்தத் துடைத்தபடி, மற்றக்கையால் சொட்டுகளை எடுத்தான். தட்டுக்காரன் கூர்க்காவின் அருகிலிருந்த சிறியமுக்காலியில் தட்டை வைத்து விட்டு உள்ளே போனான். 

எதிரே இவர்கள் நிற்கிற உணர்வேயில்லாமல் இருவரும் சப்புகிறார்கள்…. கிருஷ்ணனுக்கு எரிச்சல் மண்டியது. இருக்கக் கூட இடந்தராமல் !……சிங்கரைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவர். பக்கத்தில் தோளோடு தோள் முட்ட நிற்கிறார். ஆனால் எப்படித் திரும்புவது? 

கதிரையில் இருக்கிறவனின் பெயர்ப்பட்டி இப்போது வடிவாகத் தெரிகிறது. மேஜர்!…. பெயரைப் படிப்பதற்குள் கூர்க்கா கையை அசைத்து விட்டான்….. இப்போ தெரிகிறது. பதாவோ. பாதாவோ. எப்படி உச்சரிப்பது? 

கறுப்புச் சட்டைக்காரரின் பெயரையும் பார்க்கவேண்டும் போலிருந்தது. அவன். நின்ற நிலையிலையே வயர்லெஸ்காரர்களை அதட்டியபடி வலதுகையால் வாய்க்குள் சொட்டுக்களை எறிந்தபடியிருக்கிறான். கப்டன். வன்பர். அதைக்கூடச் சிலவேளை வான்பர் என்றோ வன்பார் என்றோ உச்சரிக்கவேண்டுமோ? 

பதா. கிருஷ்ணனைக் கூப்பிட்டான். “கம் ஹியர்!’ 

கதிரையில் காலுக்கு மேல் கால்போட்டபடி இருந்து கூப்பிடுகிறான். இது காலவரை இப்படி எவருந் தன்னைக் கூப்பிட்டதில்லை. 

வந்த எரிச்சலுக்கு… 

என்னதான் செய்துவிட முடியும்? கையாலாகாத கோபம். இரண்டடி எடுத்து வைத்தான். 

“நீ இங்கிலீஷ் பேசுவாயா?” 

அது பேசப் போய்த்தானே பிகே-சிங்-இங்கே அனுப்பியிருக்கிறான்! 

“ஓரளவு…” தெரிந்ததாக இவர்களுக்குத் தெரிந்துவிட்டது எவ்வளவு பிரச்சினையாகப் போயிற்று! 

66 

“என்னுடைய கேள்விகளுக்கு ஒழுங்காகப் பதில் சொல்ல வேண்டும்….பொய் சொல்லித் தப்ப நினைக்கக் கூடாது….” 

உறுத்து மிரட்டும் கண்களால் தன் உளஉறுதியைச் சிதறடிக்க முயல்கிறானா இந்த இராணுவத்தான்? 

இதுதான் உணவுக்கு ஏற்பாடு செய்கிற வள்ளல்!

“நீ ஒரு எல்ரீரியா?” 

“இல்லை”

“பொய் சொல்லாதே! சொன்னால்.. “

கிருஷ்ணன் விறைப்பாகச் சொன்னான். 

“இல்லை, நான் ஒரு ஆசிரியன். குடும்பக்காரன்……” 

“ஆசிரியன் என்கிற முறையில் உண்மையைச் சொல்லு. எல்ரிரிஈக்காரர்கள் எங்கே?….இங்கே யார் எல்ரிரிஈ.” 

“இங்கு ஒரு தரும் இல்லை”. 

“நீ ஒரு இளம் ஆள். உனக்குக் கட்டாயம் தொடர்பு இருந்திருக்கும்……” 

”எனக்கு அவர்களோடு எந்தத் தொடர்பும் கிடையாது”. 

“ஷட் அப்!”. 

அவன் கதிரையிலிருந்து துள்ளி நிமிர்ந்தான். கன்னத்துத் தசைகள் துடிப்பது வடிவாகத் தெரிந்தது. இமை கொட்டாமல் இவனையே முறைத்தான். 

“எனக்குப் படிப்பிக்க நினையாதே!” கன்னத்துத் தசைகள் இன்னமும் துடித்தன. 

இதற்கு என்ன சொல்வது? கிருஷ்ணன் பேசாமல் நின்றான். 

“சரி இந்த ஊர் புலிகளின் கோட்டை என்று சொல்லப் படுகிற இடம். நீ இந்த ஊரவன். உனக்கு அவர்களைத் தெரியாது என்கிறாய்! எப்படி நம்புவது? ” அடிக்காத குறையாகக் கையை நீட்டி இரைந்தான் மேஜர். 

“இருந்திருக்கலாம்…..ஆனால் எனக்குத் தெரியாது”. 

“அதெப்படி? …..” பதா, கோபமாய் உறுமி நக்கல் சிரிப்புச் சிரித்தான்.

“என்னை முட்டாளாக்கப் பார்க்கிறாயா?” 

“என்னைச் சொல்ல விடுங்கள்…”. வருவது வரட்டும் என்று கிருஷ்ணன் சொன்னான். 

“இப்போது இங்கே நீங்கள் இவ்வளவுபேர் இருக்கிறீர்கள். உங்களை யார், எவர்? யார் அதிகாரி. யார் சிப்பாய்? எங்கிருந்து வந்தீர்கள். இனி எங்கே இருப்பீர்கள்? இது ஒன்றுமே எங்களுக்குத் தெரியாது. எங்களைப் பொறுத்தளவில் நீங்கள் எங்கே இருந்தீர்கள்- இதைத்தான் நீங்கள் போனபிறகு யாராவது கேட்டாலும் எங்களால் சொல்ல முடியும்!”. 

முடித்தபோது பதற்றமாயிருந்தது. அதிகம் பேசி விட்டேனோ? 

பதா, உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தான். வளைந்த புருவங்களின் கீழ் அந்த இடுங்கிய மொங்கோல் கண்கள் இன்னும் சிறிதாகி அவை கிருஷ்ணனைத் துளைக்க முயன்றன. 

மார்பின் மேல் கட டி க்கொண்டிருந்த கைகளை விலக்கி முகத்தைத் துடைத்தான் கிருஷ்ணன். 

அரை நிமிஷமிருக்குமா? பதா சொன்னான்!

“இங்கே பார்!” 

கிருஷ்ணன் பார்த்தான். 

“இப்போ நான் உன்னை ஓடும்படி சொல்ல முடியும்….ஆனால் நீ எவ்வளவு தூரம் ஓடிவிடுவாயென்றும் நான் பார்த்துவிடுவேன்”. 

அவன் சொன்னது விளங்கச் சில விநாடிகள் பிடித்தன! கிருஷ்ணனுக்கு வியர்த்தது. ‘உன்னைச் சுடுவேன்’ என்பதை இதை விட வடிவாக வேறெப்படிச் சொல்லமுடியும்? 

6 

என்ன செய்ய நினைக்கிறான் இவன்? – கிருஷ்ணனுக்கு நெஞ்சிடித்தது. சிங்கர் பின்னால் நிற்கிறாரா?… 

அந்த மொட்டந்தலை மனிதன் கழுத்திலொன்றும் கைகளில் இரண்டுமாய் – தொலைபேசிகளுடன் மல்லாடியபடியே இங்குமங்கும் பார்த்துக் கொண்டிருக்கிறான். 

“பின்னால் போ!” கூர்க்கா கத்தினான். 

என்ன சொல்கிறான். இவன்? சற்றுமுன் சொன்னதுபோல் சுடப்போறானா? கடவுளே…..அசையவே முடியாதிருந்தது. 

“பின்னால் போய் நில்!….” மேஜர். மீண்டுங் கூவினான். 

”யூ கம் ஹியர்!” என்றான். சிங்கரைப் பார்த்து. 

கிருஷ்ணனுக்கு நம்பமுடியவில்லை: இப்போதைக்கு விட்டிருக்கிறானோ?..தன்னையறியாமலே பின்னால் நகர்ந்தான். 

சிங்கர் முன்னால் போனார். தோளில் கிடந்த சால்வையைச் சரியாக இழுத்துவிட்டபடி நின்றார். 

“இப்போது நீ சொல்லலாம்.!…..” பதா உறுமினான். 

“நான் என்ன சொல்ல வேண்டுமென்கிறீர்கள்?” அந்தக் குரலும் ஆங்கிலத்தின் சுத்தமும் அவனை ஒரு கணம் அசைத்திருக்க வேண்டும். 

“உண்மையை! உண்மையைச் சொல்லு..” 

“நாங்கள் இந்தியாவை எங்கள் தாய்நாடாக மதிப்பவர்கள்”. 

அவரை அவன் முடிக்க விடவில்லை. 

“உன்னுடைய புலுடாவை நிறுத்து! ” கத்தினான். 

“இந்தியாவுக்கெதிரானவர்கள் இந்தியாவுக்குள்ளே கூட இருக்கிறார்கள்!”

-அந்தப் பெரியவரைத் தன் முன்னால் நிற்கவிட்டு. இவன் கதிரையில் கால்மேற்கால் போட்டபடி உட்கார்ந்து கதைக்கிற விதம்! அவருடைய படிப்பென்ன பழக்க வழக்கமென்ன. வயதென்ன. மதிப்பென்ன.. 

இன்று? எங்களை இவர்கள் ஏதோ அடிமைகள் மாதிரி.

இராணுவம் என்கிற திமிர்! ஆயுதங்களும் ஆட்களுமிருக்கிற அகம்பாவம்! 

“ஸோ. உனக்கும் ஒருவரையுந் தெரியாது?” 

“தெரியாது? “

“போய் நில்!. – பதா. கத்தினான். 

“எக்ஸ்கியூஸ் மி….” சிங்கர். நிதானமாகச் சொன்னார். 

“…நீங்கள் எங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள். காலையில் எங்கள் முகாமைப் பார்க்க வந்த உங்கள் கப்டன் பி. கே. சிங். வீடுகளுக்குப் போக நீங்கள் அனுமிதிக்கும் வரை ஊரவர் எல்லோரும் முகாமில் தானிருக்க வேண்டுமென்றார். அதுவரை எங்களுக்கான சாப்பாட்டு ஏற்பாடுகள் பற்றி……” 

“ஷட்அப்!…..” -மேஜர் உச்சக் குரலில் இடைமறித்தான். முகம். 

இரத்தமாய்ச் சிவந்தது. வியர்வையில் பளபளத்தது. 

இரண்டு பேரும். அவன் காட்டினான். 

“…அந்தா அந்த மதிலோடு போய் நில்!” 

7 

மதிற்கரையோடு மாரிப்புல் மெத்தையாகச் சடைத்திருந்தது. சிவத்தார் வீட்டுப் பூ மரங்கள் இந்த மழைக்கு வஞ்சகமில்லாமல் மதாளித்து நின்றன. அவன் கனகாலம் தேடித்திரிந்த சரக்கொன்றைக் கன்றுகள், இந்தா -இதில் கைக்கெட்டும் தூரத்தில் முளைத்து நிற்கின்றன! என்ன வேடிக்கை!. யார் செய்கிற வேடிக்கை இது? 

சிங்கர் அருகோடு நிற்கிறார். ஆளைஆள் பார்த்துக்கொண்டார்கள். அவரின் முகமெல்லாம் வியர்த்திருந்தது. கண்ணாடியைக் கழற்றிவிட்டுச் சால்வையால் ஒற்றிக்கொண்டார். கதைக்கவே பயமாயிருந்தது. 

“என்ன நினைப்பான்களே……..! இப்பிடி வெருட்டினால்? எங்களுக்கென்ன தெரியும்?”

கிருஷ்ணன் திரும்பிப் பார்த்தான். 

எதிரே போர்டிகோ. இங்கே கதைத்தால் கேளாதுதான். 

என்றாலும் பதாவை இப்போது காணவில்லை. 

அம்புலிமாமா ஆள் தொலைபேசியுடன் இன்னமும் அமளியாக இருக்கிறான். அவனோடு மட்டும் ஐந்தாறு ஆமிக்காறர். வீட்டின் கோடிப் பக்கத்தில் சமையல் வேலை நடக்கிறதா? கிடாரங்கள் வாளிகளின் சத்தங் கேட்டுக் கொண்டிருக்கிறது. 

இவர்களின் இடதுபக்கம். கேற் முடக்கின் மறைவில் அந்தக் கையொழுங்கையில் மொய்த்துக் கொண்டிருந்த ஆட்கள் இன்னமும் அங்கேதானிருக்க வேண்டும். 

பீடிப்புகை, காற்றெல்லாம் கலந்திருந்தது. இங்கிருந்து ஒன்றுமே தெரியவில்லை…… 

களைப்பாக இருந்தது. பசியில்லை. ஆனால் தண்ணீர் விடாய்த்தது. காலையில் எழுந்ததற்குப் பச்சைத்தண்ணீர் கூடக் குடிக்கவில்லை! 

“இந்தா, பத்து நிமிஷத்தில் பேசிவிட்டு வந்துவிடலாமென்று கூட்டிக் வந்து… !என்ன நயவஞ்சகம்!”. 

கோபமா கவலையா. பயமா, ஏமாற்றமா எதுவென்றில்லாமல்- எல்லாம் கலந்து மனதை அழுத்தின. 

“இதிலை இருப்பம்” என்று சிங்கரைப் பார்த்தான். 

“ம்ம்?” என்றவர்.உடனே. 

“ஏதும் சொல்லுவாங்களோ?” என்றார். 

“இருந்து பாப்பம்……” காலால் புற்பரப்பை மெல்லத் தடவிவிட்டுக் குந்தினான். சப்பாணி கட்டிக் கொண்டபோது. காலுக்கு இதமாக இருந்தது. 

சிங்கரும் பக்கத்தில் சால்வையைப் போட்டுவிட்டு அமர்ந்தார். 

யாராவது பார்க்கிறார்களா? இல்லை. ஒருவரும் இதைக் கவனித்ததாகத் தெரியவில்லை……. 

புல்லின் பூக்கம்பொன்றைக்கிள்ளி. கிருஷ்ணன் தன்னையறியாமலே பற்களால் நன்னலானான். என்ன நடக்கும்? 

8 

படபடவென்று முறியும் சத்தங்கேட்டுத் திரும்பினார்கள். வளவின் மேற்கு வேலி விழுந்து கொண்டிருந்தது. பென்னாம் பெரிய லொறியொன்று, முக்கிய படி, உள்ளேவர முயன்று கொண்டிருந்தது. உச்சக்கியரில் அதன் உறுமல். 

ஒவ்வொரு கதிகாலாக முறிந்தது. அந்த மூரிவேலி -முடியாமல் – வழிவிட்டுக் கொண்டிருந்தது. ஒரேயொரு வாதநாராயணி மட்டும். 

கொஞ்சம் மொத்தமாக தாக்குப் பிடித்தது. காட்டுக் கத்தியும் கையுமாய், ஒரு சிப்பாய் ஓடி வந்து அதை அடியோடு தறிக்கலானான்….. 

வெட்டிய வேலிக்கப்பால், அடுத்த வளவு. அதுவுந்தென்னங்காணி. முருகேசருடையது. அதையுந் தாண்டி. மதவடி றோட்டுத் தெரிந்தது! முருகேசர் வளவின் றோட்டு வேலி வெட்டித்தான் லொறி இங்கு வந்திருக்கிறது… இந்த வளவுக்கு வருகிற கையொழுங்கையால் பெரிய வாகனங்கள் வரமுடியாதென்று இந்த வேலை பார்க்கிறார்கள்! இப்போது மதவடி றோட்டிலிருந்து வலுசுகமாக வந்துவிடலாம்… 

லொறி, தென்னைகளைத் தாண்டி – வளைந்து வளைந்து வந்து கொண்டிருந்தது. சென்னைத் தெருக்களை நினைவு படுத்துகிறது. அந்தப் புகை மணம். 

இவர்களின் இந்த வேலைகளைப் பார்த்தால் வாகனங்களும் ஆட்களுமாய் -இப்போதைக்கு விட்டுப் போகிற நோக்கம் இருப்பதாய்த் தெரியவில்லை. 

குறுக்குப் பாதையை ஆட்கள் சீர்படுத்துகிறார்கள். இந்த வளவுக்கு இவ்வளவு கிட்டவா. மதவடித்தெரு இருக்கிறது. தெருவுக்கு அந்தப் பக்கம் பள்ளிக்கூடத்தின் பழைய விளையாட்டு மைதானம். 

தண்ணீர்தான் நன்றாக விடாய்த்தது. எங்கே குடிக்கலாம்? அந்தா அந்தத் தகர மறைப்பின் பின்னால் சிவத்தார் வீட்டுக் கிணற்றடி. வெட்டிய வேலிக்கப்பாலும் முருகேசர் வளவுத் துலா தெரிகிறது. முழத்திற் கொன்றாய்க் கிணறுகள் மாரிக்கு முட்டி வழிந்தபடி! ஆனால்? நினைக்க நினைக்க. 

இப்படியே இந்தப் புல்லில் படுத்துவிட வேண்டும் போல் அசதியாயிருந்தது. தங்களைக் காணாமல் முகாமில் என்ன பாடு படுகிறார்களோ இதெல்லாவற்றையும் அநுபவிக்கட்டுமென்று தான் இப்படித் தடுத்து வைத்திருக்கின்றான்கள்! 

என்ஜினை ஒரு தடவை ஓங்கி ஒலித்துவிட்டு, லொறி மாவின் கீழ் வந்து மௌனமாய் நின்றது. 

ஷக்திமான். சாணிநிற உடம்பில் தூசி-இந்த மாரியிலும் சில்லுகளில் சேறு. ட்றைவர் குதித்தான். வேறெவரும் வந்ததாயில்லை. குதித்தவன். தொப்பியைக் கழற்றியபடியே. முன்னால் நின்ற ஆளிடம் ஏதோ உரத்துச் சொன்னான். பாணி பாணி என்று கேட்டது. மற்றவன் பதில் பேசாமல் வீட்டின் பின்னால் போகிறான். ட்றைவர். முகத்தைத் துடைத்தவாறே இவர்கள் பக்கம் பார்ப்பது தெரிந்தது. கிருஷ்ணன்.. பார்வையைத் திருப்பிக்கொண்டான். 

வெய்யில் ஏறிக்கொண்டிருக்கிறது. முகாமைவிட்டுப் புறப்பட்டு இரண்டரை மணித்தியாலம். 

வீட்டின் பின்னாலிருந்து ஒருவன் வருகிறான். ட்றைவருடன் பேசிவிட்டுப் போன அதே ஆள். கையில் பெரிய வெள்ளிச் செம்பு. சிவத்தார் வீட்டுச் செம்போ? ட்றைவர் போய் நீட்டுகிறான்…..ட்றைவர் அண்ணாந்து மடமடவென்று குடிப்பதைப் பார்க்க. கிருஷ்ணனுக்கு இன்னும் விடாய்த்தது. 

சிங்கர். காலை நீட்டி நெட்டி முறித்தார். 

“எழும்புவமா?” 

“ம்ம்….” கிருஷ்ணனும் எழும்பினான். எவருமே பார்க்கவில்லை. 

தண்ணீர் குடித்தவன் புறங்கையால் வாயைத் துடைத்தவாறே செம்பைக் கொடுக்கிறான். அவன் தங்களைப் பார்க்கிறானோ?…இங்கேதான் வருகிறானோ?. 

இரண்டடி முன்னால் வைத்த ட்றைவர். மீண்டும் மற்றவனைக் கூப்பிட்டுச் செம்பை வாங்குவது தெரிகிறது. இவர்களை நோக்கி வருகிறான். 

“தண்ணி குடிக்கிறீங்களா?” அருகில் வந்ததும் செம்பை நீட்டினான். தமிழனா? 

என்ன செய்யலாம்? சிங்கர் தயங்கியபடி வாங்கினார். 

“நீங்க தமிழ் ஆளா?. 

“குடியுங்க”. 

“எங்களை ஏன இப்பிடி நிக்கச் சொல்லியிருக்கு?” குமுறலுடன் கேட்டான் கிருஷ்ணன். 

“என்ன ஆச்சு? ” சொன்னார்கள். 

“விட்டுரு வாங்க……” என்றான். கேட்டுவிட்டு. 

“…..விசாரிக்கிறாங்க நோ ப்ரப்ளம்.!….குடியுங்க…….” 

“நீங்க தான் ஒரு ஆள். இவ்வளவு நேரத்துக்கு. இப்பிடி வந்து மனுசத்தன்மையாய்க் கதைச்சிருக்கிறியள் தண்ணியும் தந்து….” 

“என்னதா இருந்தாலும் நாம ஒரே ஆளுங்க இல்லியா? “

“உங்கட பேரென்ன?” 

“கோபாலன்.” 

சிங்கர் கேட்டார். 

குடித்துவிட்டுச் செம்பைக் கிருஷ்ணனிடம் நீட்டினார். தண்ணீர், நாக்கு, தொண்டை. நெஞ்செல்லாம் நனைத்து சில்லென்று இறங்கியது. 

“நான் மலையாளத்துக்காரன் வர்றேன் சார்”. 

-அவன் அவசரமாகச் செம்பை வாங்கிக்கொண்டு திரும்புவதாகப் பட்டது. லொறியை நோக்கி நடந்தான். சிங்கரும் கிருஷ்ணனும் ஆளை ஆள் பார்த்துக் கொண்டார்கள். என்ன நடந்தது. இவனுக்கு? எங்களுடன் பேசிக்கொண்டிருந்ததை யாராவது பார்த்துவிட்டார்களா? அல்லது. பார்த்தவிட்டால் என்ற பயமா? தான் தமிழன் என்று ஒப்புக்கொள்ள இவனைத் தடுப்பது எது? 

எல்லாமே புதிராக இருந்தது. 

“இருப்பம்…” 

மீண்டும் புல் சணைப்பில் குந்தினார்கள். புல் மணத்தது. 

10

எவ்வளவு நேரம் இருக்க வேண்டும். இன்னும்? என்ன நடக்கப் போகிறது? உடலே ஓய்ந்த மாதிரி…….. 

இடது புறம்-ஒழுங்கை மறைவில் அத்தனை பேரும் இருக்கிறார்களென்றே படுகிறது. போர்ட்டிகோவில் அதே ஐந்தாறு பேர்தான். ஆனால். வீட்டினுள்ளும் பின்னாலும் எத்தனை பேரென்றே தெரியவில்லை. 

ஒருவர் கூட இவர்களிடம் வரவே இல்லை-அந்த கோபாலனைத் தவிர. அவன் எங்கே? வேலி வெட்டிய ஆட்களெல்லாம் எங்கே? பீடிப்புகை நெய்மணம். சமையல்புகை, வாகனங்களின் அருகாமையில் கிளம்பும் புழுதியும் பெற்றோலும் கலந்த நெடி, பச்சைப் புல் வாசம் – என்று ஒவ்வொன்றையும் சுமந்து அலைந்த காற்று. இருந்தாற் போல இரைந்து கடந்தது. தென்னோலைகள் அலையாய் அசைந்தன. திட்டுத் திட்டாய் விழுந்து கிடந்த வெய்யில் ஓடிஓடி, உருமாறி இந்த மாரியிலும் நல்ல வெக்கை. 

சிங்கர், கந்தர்சஷ்டி கவசத்தை முடித்துவிட்டு, தேவாரமொன்றை வாய்க்குள் மெல்ல மிகமெல்ல- சொல்லிக் கொண்டிருக்கிறார். 

“நாமார்க்குங் குடியல்லோம்….நமனை அஞ்சோம்…….” 

நேரம், பன்னிரண்டு இரண்டு. கிருஷ்ணன் மணிக்கட்டைப் பார்க்கும் போதே. அந்தக் கறுத்தப் பிளாஸ்ரிக் டிஜிற்ரல் கடிகாரத்தில், இரண்டு மூன்றாக மாறிற்று -தோன்றித்தோன்றி மறைகிற புள்ளிகளில் தெரியும். அதன் உயிர்த்துடிப்பு…. 

இந்தப் பிரச்சினை மட்டும் இல்லையென்றால். இந்த நேரம் உச்சி வேளைப் பூசைக்காக ஒலிக்கிற கோவில் மணிகள் எல்லாப் பக்கமும் கேட்கத் தொடங்கியிருக்கும். 

இருந்தாற் போல சடசடவென்று, சூட்டுச் சத்தந்தான் கிழக்கே கேட்டது. கிருஷ்ணன். சிங்கரைப் பார்த்தான். துப்பாக்கிகள் ஆக்ரோஷமாய்க் குரைக்கத் தொடங்கின. கிழக்கேதான் கிட்டவுமில்லை. தூரவுமில்லை. 

“சண்டைதான்” 

எங்கள் பாடு? முகாமிலிருக்கிறவர்கள் பாடு? 

வேட்டொலிகள் விடாமல் கேட்டன. இருபுறமும் மாறி. மாறி கூடியும் குறைந்தும்…ஒன்றுக்குள் ஒன்றாய். ஒன்றை மீறி மற்றதாம்…… 

இனி…? – கிருஷ்ணன் முழங்கால்களில் கைகளைக் கட்டிய படி குனிந்து கொண்டான். மயிர்கலைந்த தலையின் நிழல் முன்னால் விழுந்தது. 

வீட்டுப்பக்கம் ஏதோ அசைவு தெரிந்ததில் திரும்பினார்கள் சிப்பாய்கள். வரிசையாக – பெரியதொரு பாம்பு போல் சரசரவென்று அந்த வரிசை. சந்தடியில்லாத அந்த வேகம் பயமாயிருந்தது. உருமறைப்புச் சீருடைகள். இரும்புத் தொப்பிகளை மறைத்த பச்சை மிலாறுகள். ஹோல்ஸ்ரரும். தயாராய்ப் பிடித்த துவக்குகளுமாய். முழங்கால்களருகில் உப்பியிருக்கிற பைகளில் கைக்குண்டுகளோ? நிதானமாய்ப் பதியும் கனத்த காலணிகள். 

வரிசை இப்படித்தான் வருகிறது. முன்னே வந்தவன் நெருங்குகிறான். 

எழும்பலாமா? – வேண்டாம். இப்போ எழும்பினால் பிரச்சினை. கைகால்களை அசைக்கமுடியாத மாதிரியும் இருந்தது. சிங்கரும் எழும்பவில்லை. எழும்பாமலேயிருந்தார்கள். வந்து கொண்டிருந்த வர்களுக்கு இவர்கள் கண்ணிலேயே படவில்லைப் போலும், தம்பாட்டில் கேற்றில் இவர்களைக் கடந்து திரும்பி. அங்கு ஒழுங்கையில் ஏற்கனவே இருந்தவர்கள்? 

வரிசை, வந்தபடியேயிருந்தது. எத்தனை ஆட்கள்! 

உயரமான ஒரு மெல்லிய சிப்பாய். தும்புக்கட்டு மீசையும் ஆளுமாய், வரிசையில் சேராது அருகோடு வந்தான். முதுகில் வயர்லெஸ். ஓடாக் குறையாகத் தாண்டிப்போனான். ஏரியல், உயரமாய். தென்னங்கீற்றுப்போல் அவன் நடைக்கேற்ப துடித்தசைந்தது. 

இப்போது வருகிறவர்கள். இடைக்கிடை இவர்களையும் கவனிக்கிறார்கள். ஒருவன் ஏதோ சொல்லிவிட்டும் போகிறான். 

இருநூறு பேராவது தாண்டியிருப்பார்களா? இன்னமும் வருகிறார்களா….? அடுத்த பக்கத்து வளவுக்குள்ளும் ஆட்களிருக்க வேண்டும். 

அந்த அம்புலிமாமா ஆள். அவன் பெயர் அதற்குள் மறந்துவிட்டது. போர்ட்டிகோவிலிருந்து வெளியே வருகிறான். அதே கறுப்புச் சீருடை. இப்போ. தொப்பி அணிந்து கொள்கிறான். அவன் முதுகிலும் ஒரு வயர்லெஸ். 

பின்னால் இரண்டு பேர் தொடர வேகமாக வருகிறான். 

ஆளைப் பார்த்தால் கம்பீரமாய்த்தானிருக்கிறது. இந்திப்பட நடிகனாய்ப் போயிருக்க வேண்டியவன். இல்லை. நடிப்பென்று பார்த்தால். அந்தப் பி. கே. சிங்கை யாரும் மிஞ்ச முடியாது! என்ன மாதிரிப் பேசி இங்கே அனுப்பினான்! 

கப்டன். நெருங்கித் தாண்டிய போது இவர்களைப் பார்த்தான். போகிற போக்கில் சொன்னான். 

“நீங்கள் போகலாம்!” 

சொல்லி விட்டுப் போனான். 

11 

ஒன்றுமே விளங்கவில்லை. 

இப்போது போகச் சொன்னால்! போகலாமா?….சில வேளை. நினைத்ததும் மீண்டும் நெஞ்சிடித்தது – போகச் சொல்லி விட்டு….? 

“இப்ப போ எண்டா. இதென்ன?” -சிங்கரும் குழம்புவது தெரிகிறது. 

“போவம்?”…- கிருஷ்ணன் திரும்பிப் பார்த்தான். 

கபடனைக காணவில்லை. 

“பாப்பம். இவங்கள் போய் முடியட்டும்…இப்ப எழும்பினாலும் பிழை……… “

சரிதான். போகட்டும் வரிசை வந்து கொண்டேயிருந்தது. 

இவர்களுக்குள் எங்களால் ஆளை ஆள் வித்தியாசங் கண்டு பிடிக்க முடியுமா? ஒரே சாயல் ஒரே நிறம். ஒரே உயரம்…. 

தன்னையறியாமலே தான் அவர்களைக் கவனிப்பதைக் கிருஷ்ணன் உணர்ந்தான். வேண்டாம். ஏதாவது நினைத்தாலும். அங்கே பார்க்கக் கூடாது. 

வலப்பக்கம். யாரோ ஓடி வருவது மாதிரி… 

திரும்பினான்…. 

ஐந்நூறு பேருக்கப்பால் வருகிற ஒருவன். வரிசையை விட்டு விலகித் தங்களை நோக்கிக் கத்தியபடி ஓடி வருவது தெரிகிறது! நீட்டிய துவக்கு….. 

என்ன இது? ஏன் மற்றவர்கள் பிடிக்கவில்லை? ஆவேசங் கொண்டு அவன் கத்துவது இந்தியிலா என்று கூடத் தெரியவில்லை….. 

கடைசிச் சொல் மட்டும் புரிந்தது “எல்ரிரிசு!” அவன் உறுமியபோது, நெற்றியை மறைத்த மயிரும்.. கொலை வெறி துள்ளும் கண்களுமாய். அவன் முகம். மூன்றடிக்கு முன்னாலிருந்தது. ஏறிட்டுப் பார்த்த கிருஷ்ணனின் நெஞ்சில் துப்பாக்கி இடித்தது. கண்களை மூடிக் கொண்டான். 

12 

தானும் அப்போது மூடிக்கொண்டதாகச் சிங்கர் பிறகு சொன்னார். 

– வெளிச்சம் – சித்திரை வைகாசி 1994 

– எழுதப்பட்ட அத்தியாயங்கள், முதற் பதிப்பு: மே 2001, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

ஐயாத்துரை சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார். யாழ்ப்பாண மாவட்டம், மானிப்பாய், சுதுமலை என்ற ஊரில் வசித்து வரும் சாந்தன் மொறட்டுவ உயர்தொழில் நுட்பவியல் கழகத்தில் பயின்ற குடிசார் பொறியியலாளர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி எழுத்தாளர். ஆங்கில…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *