கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 7,554 
 
 

“இப்போ எம்மூஞ்சியை கண்ணாடியிலே பாக்கணும் போல இருக்கு” சொல்லிக் கொண்டான் பஞ்சவர்ணம் திருப்தியாகச் சாப்பிட்டிருக்கிறோம். களைப்பு முழுமையாகப் போய்விட்டது. இந்த நிலையில் முகத்திற்குப் பிரகாசம் வந்திருக்கும். கண்ணாடியில் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டாள் பஞ்சவர்ணம் “என்னவோ திடீர்னு விருந்து கெடச்ச மாதிரி.”

முதலில் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. யாராவது பெயரைக் கேட்டால் பஞ்சவர்ணம் என்று சொல்கிறபோதே ஒரு வகைத் தாழ்வு மனப்பான்மையால் தலையைக் குனிந்து கொள்வது போலாகிவிடுகிறது அவளுக்கு. கிராமத்துப் பெயராகத்தான் இருக்கிறது. பஞ்சு என்று சொல்லிக் கொள்ளலாம். அல்லது வர்ணம் என்று சொல்லிக் கொள்ளலாம் என நினைத்தாள். பஞ்சு என்பது ஏதோ ஆண் பெயர் போல இருக்கிறது. வர்ணம் என்று சொல்லிக் கொள்வது அவ்வளவு சுலபமானதில்லை என்பது போலத் தோன்றியது. இப்படியெல்லாம் சொல்லிக் கொள்வதற்குப் பதிலாய் புதிதாக பெயரை வைத்துக்கொள்ளலாம். பெயர் எப்போது வைத்தது என்று யாரும் கேட்கப் போவதில்லை. ஸ்ரேயா என்றுகூட வைக்கலாம். ரொம்பவும் புதுப்பெயராக இருக்கிறது. சமீபத்திய திரைப்பட நாயகி ஒருத்தியின் பெயர். ஆனால் இவ்வளவு சமீபத்தில் பெயர் என்பது யாருக்கும் சந்தேகம் வந்துவிடும். தன் வயதிற்கேற்ப கொஞ்சம் பழைய பெயராக இருக்கலாம். பதினெட்டு வயதை எட்டியாகிவிட்டது. ஸ்ரீதேவி என்று சொல்லிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள் பஞ்சவர்ணம்.

புது ஊர். புதுப்பெயருடன் உலாவலாம். புது இடத்தில் வேலைக்குச் சேர்கிற இடத்தில் புதுப்பெயருடன் இருக்கலாம். புதுவாழ்க்கைதான். கிராமத்தைத் தொலைத்துவிட்டு வந்து நகரத்தில் உட்கார்ந்து கொள்ளலாம். புதுப்பெயர், புது அனுபவங்களுடன் நகர வாழ்க்கையைத் துவங்குவது நல்லதுதென்று பட்டது.

“அம்மணி பேர் என்ன,,,” கறுத்த நீலச் சட்டை போட்டிருந்தவன் கேட்டான். கறுத்த நீலச்சட்டை ஜீன்ஸ் துணி சட்டை கெட்டியானது. புழுக்கத்திலிருந்துதப்பித்து குளிர்ச்சியைத் தருவது. குளிர்ச்சி உள்ள நேரங்களில் வெதுவெதுப்பையும். பஞ்சவர்ணம் சட்டையேயே பார்த்துக்கொண்டிருந்தாள். கறத்த நீலச்சட்டையை போட்டிருந்தவனின் தலைமயிர் கறுத்திருந்தது. மீசையிலும் அதே வகையான கறுப்பு அடர்ந்திருந்தது. ‘டை’ போட்டிருப்பான். முகத்திலிருந்து ஓரிரண்டு கோடுகள் அவன் வயதை அதிகமாக்கிக் காட்டின. பஞ்சவர்ணம் என்று வாய் முணுமுணுத்துக் கொண்டது. “ஸ்ரீதேவி”

“நல்ல பேர்தா. நாளெல்லா நல்ல வயசா இருந்தப்போ ஸ்ரீதேவிதா எங்க கனவுக் கன்னி,,,”

“எப்பங்க,,,”

“காலேஜ் போக ஆரம்பிச்சப்போ,,,”

“என்னோட கனவுக் கன்னி எப்பவும் ஹேமமாலினி தான். அவங்க பொண்ணுங்கெல்லா கதாநாயகியா நடிச்சாலும் எனக்கு கனவுக்கன்னி எப்பவும் ஹேமமாலினிதா,,,” வெள்ளைச் சட்டையில் நீலக்கோடுச் சட்டை போட்டவன் ஆஹா,,, என்று சிரித்தபடிச் சொன்னான். “பாரு அம்மினி,,, இவனோட கனவுக்கன்னி ஹேமமாலிலினின்னா இவளோட வயசு என்னன்னு யூகிச்சுப்பாரு,,, கெழடு,,,” நீலச்சட்டைக்காரன் சிரித்து வாசனைப் பார்த்தபடி சொன்னான். நாலைந்து பேர் உணவு விடுதியின் முகப்பில் நின்று கொண்டிருந்தனர். உள்ளிருந்து போன சர்வர் ஒருவன் அவர்களை உள்ளே அழைத்தான். “டிபன் வேணும்னா டிபன். சாப்பாடு வேணும்னா சாப்பாடு. எல்லாமே சூடா இருக்குது. உள்ள வாங்க,,,” நாலைந்து பேர் கும்பல் வீதியில் செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. “உள்ள வந்து உக்காருங்கோ. எதுக்கு எதிர்வெயில்ல நின்னுட்டு.”
பஞ்சவர்ணம் காபி டம்ளரை மேசையின் மீது வைத்தாள். பளபளவென்று கிரைனட் கல்லின் பளபளப்பு மேஜையாகியிருந்தது. “ஜூஸ் ஏதாச்சும் சாப்புடறியா ஸ்ரீதேவி,,,” பல வர்ணத்தில் கட்டம் போட்ட சட்டை போட்டிருந்தவன் கேட்டான். “காபி சாப்புட்டப்புறம் ஜூஸ் சாப்பிட முடியுங்களா” பஞ்சவர்ணம் சிரித்தபடி கோட்டாள். “அதனாலென்ன தொண்டைக்குக் கீழே போயிட்டா எல்லாம் ஒண்ணுதானுங்களே…” காலை சற்றே ஆட்டியபோது அவளின் பை காலில் தட்டுப்பட்டது. இரண்டு சேலைகள், இரண்டு பாவாடை ஜாக்கெட்டுகள் என்று குறைவாத்தான் எடுத்தாள். ஈரிழைத் துண்டொன்றை அவசர கதியில் எடுத்துத் திணித்தது ஞாபகம் வந்தது. முதல் சம்பளம் வாங்குகிற வரைக்கும் இந்தத் துணிகளைப் பயன்படுத்தவேண்டும். அப்புறம் புதுசாகக் கூட வாங்கிக் கொள்ளலாம் என்ற நினைப்பு வந்தது. அவளுக்கு உணவு விடுதிக்குள் அந்த நாலைந்து பேர் நுழைந்து ஒரு மேசையைச் சுற்றி உட்கார்ந்து கொண்டார்கள்.

“அம்மணிக்கு என்ன திடீர்னு யோசனை” கட்டம் போட்ட சட்டைக்காரன் ஒருவகை புன்னகையுடன் கேட்டான். அவன் சட்டைப் பையில் இருந்த சிறு சீப்பை எடுத்து தலையைச் சீவிக்கொண்டான். “சாப்பிடற எடத்திலெ சீப்பு என்ன வேண்டிக் கெடக்குது. ” கறுத்த நீலக் சட்டைக்காரன் கடிந்துகொள்வது போல அவனைப் பார்த்தான். நாலைந்து பேர் கும்பல் பக்கமிருந்து சளசள வென்று சப்தம் கேட்டது.

“அம்மிணிக்கு என்ன திடீர்னு யோசனை. ”

“இல்லே.. வார சம்பளம் கெடைக்குமா. இங்கே மாசச் சம்பளம் குடுக்கற லேலையில சேரப் போறமான்னு யோசனை. ”

“அம்மிணிக்கு எது இஷ்டமோ அதில சேர்லாம். வாரச் சம்பளம் வேணும்னா வாரச் சம்பளம் வாங்கிக்கலாம். மாசச் சம்பளம் ஹாஸ்டல் சாப்பாடு வசதியோட வேணும்னாலும் அதிலே சேந்துக்கலாம். உங்களுக்கு எப்படியோ அப்பிடித்தா அம்மிணி நாங்க சேத்து விடப் போறோம். ”

“ஆமா… இங்கிருந்து பஸ் ஸ்டேண்ட் பக்கந்தானே. ”

“மறுபடியும் பஸ் ஸ்டாண்ட் போகப் போறீங்களா.. எதுக்கு நடந்துட்டு.. சொல்லுங்க ஆட்டோ புடுச்சுட்டு வந்தர்ரன். இனிமேல் உங்க காலு தரையில படக் கூடாது அவ்வளவுதான். ”

பஞ்சவர்ணம் சிரித்துக் கொண்டாள். சரிந்த முந்தானையைச் சரி செய்தபடி எதிரில் இருந்த படங்களைப் பார்த்தாள். எல்லாம் கடவுள் படங்கள் முருகன் வள்ளி தெய்வானையுடன் மயிலில் உட்கார்ந்து கொண்டிருக்கும் படம் ஆறடிக்கு ஆறடி இருந்தது. பல வர்ணங்களில் அது மினுமினுத்துக் கொண்டிருந்தது. அதே அளவுடன் நாலைந்து படங்கள் தென்பட்டன. ஒன்றில் சிவன் சிறுபிள்ளையாகக் கிடந்தார். பனிமலை பின்னால் விரிந்திருந்தது. இது எந்த ஊரில் இருக்கும் சாமி? வடநாட்டில் இருக்கலாம். முனியப்பன்,காட்டு மாரியம்மனை காலம்காலமாய் கும்பிட்டது இப்போது நகரத்திற்கு வந்தாயிற்று. இனி கும்பிட முனியப்பனும் காட்டு மாரியம்மனும் கிடைக்கமாட்டார்கள். புது சாமி கிடைத்துவிடும். இந்த ஊரில் உள்ளூர் திருப்பதி என்றொரு கோயிலை பணக்காரர் ஒருவர் கட்டியிருப்பதாக அவள் கேள்விப்பட்டிருந்தாள். எங்கும் பளிங்குக் கற்களாம். திருப்பதி கோயிலுக்கு இணையாக இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தாள். வேலையில் சேர்வதற்கு முன்பாக அந்த உள்ளூர் திருப்பதி கோயிலுக்குப் போய் விட்டு வரலாம். அதுமாதிரி சந்தர்ப்பம் அமையவேண்டும். அப்படி சந்தர்ப்பம் அமைந்துவிட்டால் அதிஷ்டம்தான்.

“இல்லே பஸ் ஸ்டாண்ட்ல இருந்து எவ்வளவு தூரம்னு தெரிஞ்சுக்க கேட்டேன். ”

அவள் கையில் பையுடன் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியபோது சோர்வாக இருந்தாள். விடியற் காலையில் புறப்பட்டது. பசியில் அசந்து தூங்கியிருந்தாள். வெயில் வேறு உச்சத்திலிருந்தது. பேருந்து நிலையத்தில் இறங்கினால் போதும். வேலை காலி என்ற போர்டுகள். அட்டைகள் நிறைய பேருந்து நிலையத் தூண்களிலேயே தொங்கிகொண்டிருக்கும் என்று சொல்லியிருந்தார்கள். தூண்களைத் தேடத் துவங்கியிருந்தபோதுதான் நீலச் சட்டைக்காரன் அவளருகில் வந்து நின்றான். அவள் தூணில் ஒட்டியிருந்த விளம்பர நோட்டீக்களைப் படிக்க ஆரம்பித்தாள். ஹாஸ்டல் வசதி நல்ல சாப்பாடு நல்ல வேலை என்ற முத்திரை வாசகங்கள் எல்லாவற்றிலும் இருந்தன. நீலச் சட்டைக்காரன் “ஹாஸ்டல்ல சேந்துடுங்க நல்ல வேலை ” என்றான். அவன் திருதிருவென்று விழித்தபடி அடுத்த தூணுக்குச் சென்று இன்னொரு விளம்பரப் பிரசுரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். வெள்ளைச் சட்டைக்காரனும், கட்டம் போட்ட சட்டைக்காரனும் சேர்ந்து கொண்டனர்.

“இந்த ஊர்ல எந்த வேலையும் தெரியாட்டியும் பரவாயில்லே. உடனே சேந்துக்கலாம். நல்ல ஹாஸ்டல் வசதி. நல்ல சாப்பாடு. மூணு வருஷம் முடிஞ்சா முப்பாதியிரம் ரூபா. கல்யாணச் செலவுக்குன்னு ஆகும். ”

வெள்ளைச்சட்டைக்காரன் அவளின் முகத்தைப் பார்த்துச் சொல்லிக்கொண்டிருந்தான். ஏதோ கூச்சம் வந்ததைப் போல அவள் முகத்தைத் துடைத்துக்கொண்டாள். சேலை முந்தானை அழுக்காகி கண்களில்பட்டது. “ரொம்பவும் டயர்டா இருக்கீங்க அம்மிணி. மொதல்ல சாப்புடலாமே பசியில் பேசிட்டு என்ன பிரயோஜனம். ” நீலச்சட்டைக்காரன் வழி காட்டுவது போல வலதுபுறத்தில் கையைக் காட்டினான்.
அவளை மத்தியில் உட்கார வைத்து அவர்கள் மூன்று பேரும் சுற்றி உட்கார்ந்து கொண்டார்கள். வெள்ளைச் சட்டை போட்டவன் எதிலிருந்து கடவுள் படங்களைப் பார்த்து கன்னத்தின் ஓரத்தில் சின்னதாக வணக்கம் சொல்லிக் கொண்டான்.

“சாப்பாடு சொல்லிர்லாமா அம்மிணி.”

“சாப்பாடு டெய்லி திங்கறதுதானே வேற ஏதாச்சும் சொல்லலாம்.”

“சர்வர் வேற காணம்.”

“சர்வருக்கு தெரியறது நமக்குத் தெரியாதா. சாப்பாடு வேண்டா. பூரிக்கிழங்கு இருக்கு. வெஜிடபிள் பிரியாணி இருக்கு. ஒவ்வொன்னிலியும் அம்மிணிக்கு ஒரு பிளேட் சொல்லிர்லாம்.”

“உங்களுக்கு.” பஞ்சவர்ணம் ஆச்சரியமாய் கண்களைச் சுழலலிட்டுக் கேட்டாள்.

“எங்களுக்கென்ன வேண்டிக் கெடக்கு. எங்கயோ இருந்து களச்சு பசியில் வந்திருக்கீங்க. வேலை தேடி வந்திருக்கீங்க சாப்புடுங்க.”

“இல்லம்மா நாங்கெல்லா நல்லா சாப்புட்டாச்சு. எங்களுக்கென்ன காலம் நேரம் கெடைக்குதா. நெனைச்சா சாப்பிடுவதும். நீங்க ரொம்ப தூரத்திலிருந்து வந்திருக்கீங்க. வேலை தேடணும். மொதல்லே பசியாத்திக்கோங்க.”
பஞ்சவர்ணத்திற்கு மலைப்பா இருந்தது. எவ்வளவு அன்பாய் உபசரிக்கிறார்கள். அன்பாய் உணவு விடுதிக்குக் கூட்டி வந்துவிட்டார்கள். வீதியில் போகிறவர்களை அழைத்து துணி வாங்கச் சொல்கிறவர்கள் மாதிரி கையுடன் கூட்டி வந்து விட்டார்கள். சாப்பிட்டபின் பில் கொடுக்கிறபோது அவர்களே பணம் கொடுத்தால் நல்லதுதான். கையில் பணம் குறைவாகத்தான் இருக்கிறது. இவ்வளவு நல்ல மனிதர்களை தன்னிடம் வந்து சேர்ந்தது எதுவாக இருக்கும் முனியப்பனா, காட்டு மாரியம்மனா ஏதாவது கடவுள்தான். இந்த மனிதர்கள்தான் தனக்கு வேலைக்கு வழி காட்டவேண்டும். ஒரு பிளேட் பூரியும் வெஜிடபிள் பிரியாணியும் சாப்பிட்டு காபியும் குடித்தாயிற்று. பூரண திருப்தியுடன் அவர்களைப் பார்த்தாள். நீலச்சட்டைக்காரன், வெள்ளைச்சட்டைக்காரன், கட்டங்கள் போட்ட சட்டைக்காரன் மூவரும் அவளைப் பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். அவள் சொல்லும் பதிலை வைத்துக்கொண்டுதான் அடுத்த அடியை எடுத்து வைக்கவேண்டும் என்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். காத்திருப்பில் ஒருவித எரிச்சலை அம்முகங்கள் வெளிக்காட்டின.

நீலச்சட்டைக்காரன்: அவனது பெயர் எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அவன் எந்த மதத்தினராகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அவன் ஐம்பது வயதை எட்டிக் கொண்டிருக்கிறவன். அவன் பல தொழில்களைச் செய்துவிட்டான். இப்போது செய்யும் தொழில் எத்தைனையாவது தொழில் என்பது அவனுக்கு ஞாபகமில்லை. பட்டியல் போட்டுப் பார்த்ததில்லை. ஓய்வுநேரம் கிடைக்கும்போது அல்லது உடம்பு சுகமில்லாமல் கிடக்கும்போது அப்படியரு பட்டியலைப் போட்டுப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறான். குழந்தைத் தொழிலாளியாகத்தான் பனியன் கம்பெனியில் பத்து வயதில் சேர்ந்தான். அப்போதெல்லாம் எக்ஸ்போர்ட் என்று எதுவுமில்லை. உள்ளூர் வெள்ளைபனியன் தயாரிப்புதான். அவன் வீட்டுப்பக்கம் வரும் பனியன் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவன் அவ்வப்போது ஏதாவது பனியனைக் கொண்டுவந்து பாதி விலைக்கு விற்பான். வயிற்றுப் பகுதியில் நாலைந்தாய் மடக்கினாலும் கசங்காமல் இருக்கிற மாதிரி பனியனை வைத்திருந்து கொண்டு வந்து விற்பான். அவன்தான் அவன் வேலை செய்யும் கம்பெனியில் கொண்டு போய் வேலைக்குச் சேர்த்து விட்டவன். அடுக்கிக் கட்டுவது, லேபிள் வைப்பது என்றிருந்துவிட்டு டைலராக தைக்கக் கற்றுக்கொண்டான். பத்து வருடம் இரவு பகல் என்று பார்க்காமல் வேலை அப்புறம் சின்னதாய் ஒரு செக்ஷன் போட்டு துணியெடுத்துத் தைக்க ஆரம்பித்தான். கூட மூன்று பேர்களை வேலைக்கு வைத்துக்கொண்டான். அப்புறம் எக்ஸ்போர்ட்டில் துணி எடுத்துத் தைத்தபோது ஸ்கூட்டர் வாங்கினான். நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு காலி இடம் வாங்கிப்போட்டான். கொஞ்சம் வளர்ந்து கொண்டிருக்கையில் “டாப்டென்” கம்பெனி ஒன்றில் சப்கான்டிராக்ட் எடுத்தார். நிறைய டெபிட் போட்டார்கள். நஷ்டம் வந்தது. கொஞ்ச காலத்திற்கு செக்ஷன் வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தான். பவர் டேபிள் உட்பட எல்லாவற்றையும் விற்றிருந்தான். கொஞ்சநாள் கட்டிங் மாஸ்டராக வேலைக்குப் போனான். மறுபடியும் செக்ஷன் போடவேண்டும் என்ற ஆசை வந்து இருந்த நிலத்தை விற்று செக்ஷன் ஆரம்பித்தான். இந்த முறை அது பிரிண்டிங்காக இருந்தது. சாயங்களில் விலை ஏற்றம், சாயப்பட்டிறைகளுக்கான நெருக்கடியில்அதைத் கைவிட வேண்டியானது. மீண்டும் தொழிலாளியானான். கூடவே தண்ணீர் வண்டியன்றை வாடகைக்குப் பிடித்து ஒரு ஆளை வைத்து தண்ணீர் விற்றுக்கொண்டிருந்தான். பெரிய லாரிகளில் தண்ணீர் விநியோகம் நடப்பதைப் பார்த்து ஆசைப்பட்டு லாரி வாங்க ஆசைப்பாட்டான். அட்வான்ஸ் என்று கொடுத்த பணம் எதுவும் திரும்பி வரவில்லை. மீண்டும் தொழிலாளியாக ஒரு வருடம் ஓட்டினான். உடம்பு சுகமில்லாமல் வாட்டி வதைத்தது. இனி எங்காவது வாட்ச்மேன் வேலைக்குத் தான் போகவேண்டும் என்று நினைத்திருந்தான். வளர்ந்த மகன் கம்பெனி கட்டிங்கு போகிறான். மகளுக்குத் திருமணம் செய்யவேண்டும். ஏதாவது தொழில் செய்யவேண்டும். இந்த புரோக்கர் வேலை சுலபமானது என்று பட்டது. வேலை தேடி ஊருக்கு வரும் பெண்களை பேருந்து நிலையத்தில் சந்தித்து சாப்பாடு வாங்கிக் கொடுத்து பேசி ஏதாவது கம்பெனியில், மில்லில் வேலைக்கு சேர்த்து விடுவது அவன் வேலையாகிவிட்டது. ஹாஸ்டலில் சேருங்கள் என்ற வார்த்தை எல்லோருக்கும் பிடித்திருந்தது. நல்ல சாப்பாடு ஹாஸ்டல் வசதி என்பது தாரக மந்திரம்.

போய்ச் சேருகிற இடத்தில் ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள். வேலையில் சேர்த்துவிடுகிறேன். கமிஷன் வேண்டும் என்றால் பெண்களும் கையிலிருப்பதைக் கொடுத்துவிடுவார்கள். ஆறு மாதம் ஒரு வருடம் கழித்து அப்பெண்களைச் சேர்த்துவிட்ட இடத்திற்குப் போய் அவர்கள் இருப்பதை நிச்சயித்து இன்னுமொரு கமிஷன் பெற்றுக்கொள்ளலாம். சாப்பாடு இல்லாமல் நகருக்கு வேலை தேடி வரும் பெண்களுக்கு வேலை தேடித் தரும் ஆபத்பாந்தவனாக அவன் இருக்கிறான். பல சமயங்களில் அவனுக்குப் பெருமையாக இருக்கும். கண்களில் நீர் கோர்த்துக்கொள்ளும்விதமாய் தன் வேலையை எண்ணி புளகாங்கிதம் கொள்வான். அந்த பெண்கள் ஹாஸ்டல் வாழ்க்கையை எப்படி அனுபவிக்கிறார்கள். ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வேலை செய்கிறார்கள். விடுமுறை உண்டா. ஊருக்குப் போக பணம் கிடைக்கிறதா என்று யோசித்துப் பார்த்ததில்லை. ஏதாவது யோசிப்பு வந்து மனதைத் தொந்தரவு பண்ணுகிற போதெல்லாம் டாஸ்மாக் கடையை நாடிப் போவான். ‘ஓல்டு காஸ்க்’ பிராந்தி குவார்ட்டரும், குடல் கறி ஒரு பிளேட்டும் அவனின் எல்லா யோசிப்பையும் நிராகரிக்கச் செய்து விடும்.

வெள்ளைச் சட்டைக்காரன்: ஐந்து வருடங்கள் முன்புதான் இந்த ஊருக்கு வந்திருந்தான் இவன். விவசாயம் பொய்த்துப் போன பூமியிலிருந்து வருடத்தில் எல்லா நாட்களும் வேலை இருக்கும் ஒரு தூங்காத நகரத்திற்கு வந்தவன். அவனின் பூர்வீத்தை அறிந்து கொண்ட தொழிற்சாலை மேனேஜர் புது இடத்திற்கு வேலைக்குப் பெண்கள் வேண்டும். உங்களூரில் வேலையில்லாமல் இருக்கும் பெண்களை கூட்டிவரச் சொல்லி பணம் கொடுத்தார். சித்தப்பா வீட்டில் நான்கு பெண்கள் சும்மா இருந்து காலம் கழிக்கிறார்கள். பெரியண்ணன் வீட்டில் அவர் மனைவியும், சின்ன மகளும் கூடத் தயாராக இருப்பார்கள். மனக் கணக்கு போட்டுப் பார்த்ததில் தன் சுற்றம் இருபத்தைந்து பேர்களாவது தேறும் என்று தோன்றியது. எல்லோரையும் இங்க கூட்டி வந்து விடலாம். சந்தோஷப்படுவார்கள் என நினைத்தான். “இந்த கம்பெனியில் எல்லாரும் பொம்பளைகளா வெச்சுக்கலாமுன்னு இருக்கோம். பொம்பளைகன்னா பிரச்சனை இல்லே. யூனியன், போராட்டமுன்னு போக மாட்டாங்க. குடுக்கற சம்பளத்தை வாங்கிக்குவாங்க. ஹாஸ்டல்ன்னு ஒண்ணு கட்டி, சாப்பாடும் போட்டுட்டா எந்த நேரத்துக்கு வேணும்னாலும் போயி எழுப்பிட்டு வந்து வேலை செய்யச் சொல்லலாம். நெறைய சௌகரியம் இருக்கு.”

“எங்க சித்தி பெரியம்மா பொண்ணுன்னு பெரிய கூட்டமே இருக்கு. சொந்தக்காரங்களை எல்லாரையும் கூட்டிட்டு வந்துர்லாம்.” “ஆனா ஒரு கன்டிஷன். எல்லா பொம்பளைகளும் இருபது வயசுக்குள்ளதா இருக்கணும். கல்யாணமாகாத பொம்பளைகளா இருக்கணும். கல்யாணமான பொம்பளைகன்னா குழந்தைக்கு உடம்பு சுகமில்லை, புருஷனோட கோயிலுக்குப் போகணும். திதி, கருமாதின்னு, கல்யாணமுன்னு லீவு கேப்பாங்க. வேண்டா.” சுற்றத்தாருக்கு மறுவாழ்வு தரும் தனது திட்டத்தில் இந்த வரையறை சிரமம் ஏற்படுத்தியது.

அவனுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஊருக்குத் திரும்பிப் போய் இருப்பதைந்து பெண்களைக் கூட்டி வந்தான். ஒவ்வொரு பெண்ணிற்கும் ஐநூறு ரூபாய் வீதம் அவனுக்குக் கிடைத்தது. பெரிய வருமானமாகத் தோன்றியது. சுற்றங்களைப் பார்க்கிற நோக்கில் கிராமங்களுக்குப் போவது. அவர்களுடன் தொழிற்சாலைக்குப் பெண்கள் தேவையாக வேண்டியிருப்பது. ஹாஸ்டல் சொர்க்கம் என்று பிரசங்கம் செய்வது சுலபமாகத்தான் இருந்தது. மலையாளம் தெரிந்த கொச்சுண்ணியின் நட்பு கிடைத்த பின்பு கேரள கிராமங்களுக்குச் செல்லத் துவங்கினான். ஒரு கம்பெனி முழுக்க நேபாளிப்பெண்கள் வேலை செய்வதை அறிந்து கொண்டான். இமயமலைப் பிரதேசங்களுக்குப் போக ஹிந்தியை தலைகீழாகப் பேசும் ஒருவனைத் தேடிக்கொண்டிருந்தான் அவன். சமீபத்தில் ஒரிசாவில் இருந்து வந்தவர்கள் நிறைய தென்படுகிறார்கள். ஒரிசாவிற்கு ஒரு சுற்றுப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தான். சுற்றுப்பயணம் இல்லாத போது நகரின் பேருந்து வண்டி நிலையத்திலும், புகைவண்டி நிலையத்திலும் தென்படுவான். வேலை தேடி வரும் பெண்களை உபசரித்து சரியான இடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது அவனின் உயரிய பணியாக இருந்தது.
கட்டங்கள் போட்ட சட்டைக்காரன்: சின்ன வயதில் இருந்தே பெரிய மெக்கானிக் ஆக வேண்டும் என்பது அவனின் ஆசையாக இருந்தது. பனியன் கம்பெனிக்குப் போய் பிசிர் வெட்டுவது, அடுக்கிக் கட்டுவது போன்ற வேலைகளை செய்யத் தயங்கினான். இரும்புக் கதவு செய்யும் பட்டறை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தான். இரட்டை சக்கர வாகன பட்டறையன்றில் பதினேழாவது வயதில் சேர்ந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பட்டறைக்கு வரும் வண்டிகளை ஓட்டுவது அவனுக்குப் பிடித்தமானதாக இருந்தது. காலையில் பேருந்து நெரிசலான நேரங்களில் பட்டறைக்கு வரும் வண்டிகளில் பின்னால் பேருந்து நிறுத்தத்தில் நின்று சலிக்கும் இளம் பெண்களை ஒட்கார வைத்து தொழிற்சாலைக்களுக்குக் கொண்டு விடுவது அவனின் மகிழ்ச்சிகரமான பொழுது போக்காக இருந்தது. அவனுடன் வண்டியில் பயணம் செய்யும், அவனுடன் உரசிக் கொள்ளவும் பெண்கள் தயாராக இருந்தார்கள்.

ஹேர்பின்செட், பிரா இவற்றுக்காக அவனின் சில்மிஷங்களை உபத்திரவமின்றி மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் பெண்கள் இருந்தார்கள். பெரிய இரட்டை சக்கர வண்டிகளில் பெண்களை ஏற்றி ஊர் சுற்றுவதற்கு பட்டறைக்கு வரும் வண்டிகள் அவனுக்கு பெரிதும் உதவின. அப்படியே பக்கத்து ஊர் லாட்ஜ்களுக்குக் கூட்டிப் போகப் பழகினான். அதில் துய்ந்து விடும் பெண்களை பிறருக்கு அறிமுகம் செய்வான். அவர்கள் எந்த ஊருக்குக் கூட்டிக் கொண்டு போகிறார்கள் என்பதை அவன் கேட்டு அறிந்து கொள்ள ஆவல் கொள்ள மாட்டான். வடமாநிலங்களுக்கு அப்படி அவன் அறிமுகப்படுத்தின பெண்கள் சென்றிருக்கிறார்கள் என்பதும் அவன் செவிகளுக்குச் செய்திகளாய் வந்து சேரும். அதைக் கேட்கையில் எவ்வித உறுத்தலும் இல்லாமல் பரவசப்படுவான். அவன் பெரும்பாலும் புகைவண்டி நிலையங்களில் தான் இவர்களைத் தேடி பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பான். வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வரும் பெண்களும் கல்லூரி, பள்ளி தேர்வு முடிவில் திருப்தியில்லாமல் வீட்டில் இருப்பவர்களின் தொல்லைகளுக்கு பயந்த வெளியூர் வரும் பெண்களும், சித்தி கொடுமை தாங்காது வரும் பெண்களும், வேலை வாய்ப்புத் தேடி வரும் பெண்களில் கணிசமானவர்கள் புகைவண்டிப் பயணத்தைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது அவனின் புள்ளிவிவரக் கணக்கில் எப்போதும் ஒத்து வந்திருக்கிறது. இப்போது அறிமுகமாகியிருக்கும் பஞ்சவர்ணம் என்ற ஸ்ரீதேவி எந்த ஊருக்குப் பொருந்துவாள் என்று அவனால் யூகிக்க முடியவில்லை.

பிருந்தாவன் பூங்காவில் குழல் விளக்குகள் மெல்ல எரிய ஆரம்பித்தன. மூவரும் பஞ்சவர்ணத்தின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். குழல் விளக்குகளின் வெளிச்சத்தில் புல் தரை விசேஷ வர்ணக் கலவையாகியிருந்தது. தூரத்தில் இருந்த சறுக்கில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். புல்வெளியில் பெண்கள் அடக்கமாய் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“இந்த பார்க் பேரு என்ன?”

“பிருந்தாவன் பார்க்,,,” நீலச் சட்டைக்காரன் இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்.

“ஆமா,,, பேர்ல என்ன கெடக்குது ஸ்ரீதேவி.”

“ஆமாங்க,,, ஆமா, பக்கத்திலே என்னமோ பள்ளமா கெடக்குது,,,”

“எங்க ஊரு ஆறு. பெரிய ஆறு. பெரிய சரித்திரம் அதுக்கு இருக்கு,,,”

“தண்ணியெல்லா போகுமுங்களா.”

“போகும். ஒரு காலத்திலெ போச்சு. இப்போ ஊர் சாக்கடையும் சாயப்பட்டறைத் தண்ணியுந்தாபோகுது.”

கட்டங்கள் போட்ட சட்டைக்காரன் ஒரு நிமிடம் நடையாக தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும் பகுதிக்குச் சென்று விட்டு வந்தான். “மத்தியானத்தில் இருந்து இப்பிடியே ஹோட்டல், பார்க்குன்னு திரியறம். ஒரு முடிவுக்கு வர வேண்டாமா,,,” எரிச்சலுடன் சொன்னான். கட்டங்கள் போட்ட சட்டைக்காரன் அகை ஆமோதிப்பது போல சிரித்தான். வாயைக் கோணலாக்கி நாக்கின் உள் இருந்த வெற்றிலைத் துணுக்கை வெளியே எடுத்தான். வாய் சிவந்து இருப்பதை கண்களைக் கீழே தாழ்த்திப் பார்த்துக் கொண்டான்.

“ஆமா ஸ்ரீதேவி,,, ராத்திரி நேரமாயிருச்சு. ஏதாச்சும் முடிவு பண்ணிரு. யார் கூட வர்றே எந்த ஹாஸ்டலுக்கு வர்ரேன்னு சொன்னா செரியா இருக்கும். வேலைமுடியணும் இல்லியா.”

பஞ்சவர்ணத்திற்குக் குழப்பமாகவே இருந்தது. எந்த வேலை என்று யூகிக்க முடியவில்லை. ஏதாவது ஒரு வேலை வேண்டும் இந்த மூன்று பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் இருந்தது. காசை சுண்டிப் பார்க்கலாம். பூவா தலையா பார்க்கலாம். இங்கு மூன்று பேர் இருக்கிறார்கள். பூ, தலை பூ, தலை போதாது. இன்னொரு புறமும் வேண்டும் குழப்பமாக இருந்தது அவளுக்கு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *