(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“மெய்யடியார்களே…”
ஒலிபெருக்கியினூடாக வந்த அந்தக் கம்பீரமான குரலைக்கேட்ட கூட்டம் ஒரு கணம் ஸ்தம்பித்தது. தங் களில் யாரும் மெய்யடியார் களல்ல என்று சொல்வது போல, மீண்டும் பழைய பரபரப்பு அங்கு மேலோங்கி நின்றது. குழந்தைகள் கும் மாளமடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். பெண் கள் தேர்த்திருவிழாவுக்கு வரமுடியுமோ வென ‘நாட் கணக்குப் பார்த்துக் கொண்டும், அடுத்தவளின் சேலை, நகை, கண்ணோட்டம், ஒய்யாரம் என்பனவற்றைப் பற்றி சல்லாபித்துச் சிரித் துக்கொண்டும் நின்றார்கள். கோவிலின் தெற்குப்புற அரசமரநிழலிலும், அதற்குக் கிழக்கே நின்ற பூவரசமர நிழலிலும் ஒதுங்கி நின்ற – நகரிலே உத்தியோகம்பார்க்கிற – திருவிழாவுக்காக லீவில் ஊருக்கு வந்திருந்த ‘வெள்ளைவேட்டி கைக்கடிகார மனிதர் கள்’- நகரின் அரசியல் நிலை பற்றியும் மந்திரிமார்கள் வைத் திருக்கிற இரகசியத் திட்டங்கள் பற்றியும், ஆட்சிப்போக்கி லுள்ள ‘மாபெரும்’ குறைகளைப்பற்றியும், ‘ எல்லாம் தெரிந் தவர்களாக’ மற்றவர்களை நம்பச்செய்யப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சொல்பவற்றையெல்லாம் வேதவாக்காகச் சிலர் நம்பித் தலையாட்டிக் கொண்டிருந் தார்கள். கிராமத்துப் பத்திமான்கள் சிலர் அங்குமிங்கும் ஓடி அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்,
“எல்லாம் வல்ல எங்கள் பெருமான் வேட்டைக்குக் கிளம்பிக்கொண்டிருக்கின்றார். அழகிய குதிரைவாகனத்தில் அவர் பவனி வரப்போகிறார். அந்த அழகுக்காட்சியைக் காணத் தயாராகுங்கள், உங்கள் மனத்திலுள்ள குறைகளை வேதனைகளை அவனிடம் முறையிட்டு அவற்றை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்”.
‘வேட்டைக்குக்’ கிளம்பி, ‘பவனி’ வரப்போகின்ற இறை வனிடம், தங்கள் குறைகளை ‘முறையிட்டு’ அவற்றை நிவர்த் திக்க அடியார்கள் தயாரானார்கள்.
இறைவன் குதிரைவாகனத்தில் ஆரோகணித்து எழுத் தருளினான். அவனை வண்ண வண்ண மலர்மாலைகளினாலும், துணிவகைகளினாலும் அலங்கரித்திருந்தனர், அவனின் ஒரு கரத்தில் ஒரு நீண்டதண்டைச் செருகியிருந்தனர்: மறுகரத்தில் அம்புடன்கூடிய வில்லொன்றைச் செருகியிருந்தனர்; மறுகரத்தினால் இறைவன் குதிரைக் கடிவாளத்தைப் பற்றியிருந்தான்.
இந்த இறைவனுக்கு ஐந்து கரங்கள்; அவன் விக்கினங் களைத் தீர்க்கும் விக்கினேஸ்வரன்; கணபதி; விநாயகன் , அவன் சில வேளைகளில் கோபம் கொண்டிருப்பான்; சில வேளைகளில் மிகமிக மகிழ்ச்சியாய் உல்லாசமாய் இருப்பான்; சிலவேளைகளில் தூங்கிவழிந்துகொண்டிருப்பான்; சிலவேளை களில் எதையுமே இலட்சியம் செய்யாத மோன நிலையில் இருப்பான். இப்போது அவன் சிறிது புன்னகை பூத்த மாதிரி எனக்குத் தெரிந்தது.
அவனைப்பற்றியும் என்னைப்பற்றியும் நான் இன்னும் நிறையச் சொல்லவேண்டும். அவன் ஊரின் வடக்குப் பகுதி யில் கோவில் கொண்டிருந்தான். எங்கள் கிராமத்தில் ஓரளவு குறிப்பிடக்கூடிய ஒரு பணக்காரனுக்கு இருக்க வேண்டிய அளவுக்கும் கூடுதலான சொத்துக்களைப் பெற் றிருந்தான். இப்போது, நானும் அவனும் கண்ட கண்ணில் குசலம் விசாரிக்கின்ற நண்பர்கள் போலத்தானிருக்கின் றோம். எந்த நேரமும், ஒரு செல்லப்பிள்ளைக்கு இருக்க வேண்டிய செருக்கோடுதான் அவனிருந்தான். அவன் என் னிலும் பார்க்க எத்தனை – எத்தனையோ மடங்கு வயதில் பெரியவன். நான் பிறந்து வளரத் தொடங்கிய காலத்தில் எனக்கு அவனை என் பெற்றோர் அறிமுகம் செய்துவைத்தனர். அப்போது நான் அவனில் மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். உண்மையில், சொல்லப்போனால் – அவன் எனக்கு ஏதும் செய்துவிடுவானோ என்ற பயங்கலந்த மதிப்பு வைத்திருந்தேன். சிறிது காலத்தில் எனது ஆசைகளையும், தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக அவனுடைய சகாயத்தை எதிர்பார்த்து அவனை மதித்துவந்தேன். சிலவேளைகளில் எனது தேவைகள் நிறைவேறாதபோதும், எனது ஆசைகள் நிறை வேறாத நிராசைகளான போதும் மனங்கொதித்து அவனை அலட்சியப்படுத்தவும் பார்த்தேன். இப்போது எங்கள் உறவு ஒரு சௌஜன்யமான நிலையிலுள்ளது. அவன் வீட்டில் நிகழும் விசேடங்களுக்குப் போகவேண்டுமென்ற அளவுக்கு அவனோடு இன்னும் கொஞ்சம் நெருங்கிய தொடர்பு கொள்ள வேண்டுமென்ற அளவுக்கு – அந்த உறவு நெருங்க வேண்டுமென்று எனக்கொரு ஆசை.
வேட்டை ஊர்வலம் கிளம்பிற்று. – குழந்தைகள் ” அரோகராக்’ கோஷம் எழுப்பினர்; சிலர் வெற்றிக் கொடிகளை முன்னால் பிடித்து துள்ளித் துள்ளிச் சென்றனர்; சிலர் தீப்பந்தங்களை உயரப்பிடித்து பவ்விய மாக நடந்தனர். பஜனைக் கோஷ்டி ஒன்று இறைவனைப் பின்தொடர்ந்தது. ஆண்டவனின் அனுக்கிரகத்துக்கு ஆளாக விரும்பிய, வாட்டசாட்டமான இளைஞர்கள் சிலர் – ஒருவர் மாறி ஒருவராய் அவனைச் சுமந்தனர். பெண்கள் கூட்டம் வண்ணங்களாய் அசைந்தது.
இறைவன் தன் பரிவாரங்களுடன் வேட்டைக்குப் புறப் பட்டான். நானும் பரிவாரங்களில் ஒருவனாக அசைந்து நடந்தேன். அங்கங்கு நடந்த வேடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு நடந்தேன், இடைக்கிடை ஞாபகம் வந்தவனாக எழுந்தருளும் இறைவனின் ‘திருமுகத்தைப்’ பார்த்துக் கொண்டு நடந்தேன். அவன் முகத்தில், அதே புன்னகை மாறாது அப்படியே இருப்பதாகத்தான் எனக்குப்பட்டது.
கோவிலின் தென்மேற்குப் புறத்தில், தோட்டக் கிணறு களைச் சுற்றி நின்ற தென்னை மரங்களின் இடைவெளிகளூடாகவும், ஆங்காங்கேயிருந்த வீடுகளைச்சுற்றி சோலையாய்க் கவிந்திருந்த மரங்களினூடாகவும் மாலைச்சூரியன் தன்கதிர்களைப் பரப்பி நின்றான். மெல்லிய காற்று ஊர்ந்தது. இனிய கீத அலைகளாம் நாதஸ்வர ஓசை மிதந்தது.
இயந்திர இயக்கமான நகரவாழ்வின் வேதனைகளால் மரத்த மனதை, கிராமியத்தின் உயிர் துடிக்கும் அழகுகளில், இயக்கங்களில், அப்பாவித்தனங்களில் இலயிக்கவிட்டு என்னை மறந்திருந்தேன் நான். பெண்கள் கூட்டத்தில், இறைவனை நோக்கி சிரசின் மேல் கரங்களைக் குவித்திருந்த அந்தப் பெண்ணின் முகம் திடீரென என் கண்களை உறுத்திற்று.
பிறந்தது முதற்கொண்டு இருபது வயது இளைஞனாகும் வரை கிராமத்து அப்பாவி மனிதர்களுள் ஒருவனாகவே நான் வாழ்ந்தேன். அந்தச் சூழலிலேயே துள்ளி விளையாடி னேன் ; அந்தச் சூழலிலேயே படித்தேன். அந்தச் சூழலிலேயே அந்தந்தப் பருவத்துக் கனவுகளும் கண்டேன். அந்தச் சூழ லிலேதான் இன்பங்களையும் துன்பங்களையும் சுமக்கும் சுமை தாங்கியாக நான் வளர்ந்தேன். அப்போதெல்லாம்கூட நான் அந்தப் பெண்ணை எதிர்ப்படுவதுண்டு; பழகியதுண்டு; இரண்டொருமுறை அவளுடன் பேசிச் சிரித்த ஞாபகம்கூட உண்டு.
அப்போதெல்லாம் உறுத்தாத அவளின் அந்த முகம் – சின்ன வாயினூடாக வெளியே தெரியும் அந்த முன் வாய்ப்பற்களைக்கொண்ட அந்தமுகம் என் கண்களை உறுத்தியது. –
அவள் எளிமையான வெளிர்நிற கைத்தறிச் சேலைகட்டி இருந்தாள். என்னிலும்பார்க்க நாலைந்து வயது. கூடிய வளாகவிருந்தும், வயதின் முதிர்ச்சி தெரியாத இளம் பெண் போலவே அவள் காட்சிதந்தாள். கரங்களை தலை மேற் குவித்து, கண்களை மூடி தன்னை மறந்து நின்றாள் அவள். அவள் கழுத்தில் தங்கத்தாலி மின்னிற்று.
எப்படி இவ்வளவு நிர்ச்சலனமாக- அமைதியாக இருக்க முடிகிறது அவளால்? எப்படி இவ்வளவு அடக்கமாக-பவ்வியமாக ஆண்டவனை வழிபட முடிகிறது அவளால்? எப்படித் தன்னை மறந்து குதூகலத்தில் திளைக்க முடிகின்றது அவளால்? எப்படித்தான் வாழ்வின் உயிர்த்துவமான இயக்கத்தோடு சங்கமிக்க முடிகிறது அவளால்?
டும் டும் டும்மென மேளம் முழங்கிற்று. வழியில் ஒரு வீட்டின் வாசலில், நிறைகுடம் வைத்திருந்தார்கள். அர்ச் சகர் மந்திர உச்சாடனம் செய்து ஆண்டவனுக்குத் தீபம் காட்டினார். பித்தளை நிறைகுடம் மாலை வெயிலின் இடை நுழைந்த கிரணங்கள் பட்டு மஞ்சளாய் மினுங்கிற்று. ஒருவர் இளைஞர்களின் தோளிலிருந்த, குதிரை வாகனத்தில் ஏறி, சிவந்த பட்டொன்றை ஆண்டவனுக்குச் சாத்தினார். ‘அரோ கராக்’ கோஷம் முழங்கிற்று. அவளும் கைகூப்பி நின்றாள்.
நான் இறைவனைப் பார்த்தேன். அவனின் அந்த மர்மப் புன்னகையே தெரிந்தது.
ஊர்வலம் அசைந்து நகர்ந்தது. ஒரு கார் போவதற் காக வீதியில் ஓர் ஓரமாக ஊர்வலத்தை ஒதுக்கச் சிலர் முனைந்தார்கள். இடுப்பில் கட்டிய சால்வையை அவிழ்த்து உதறி, ”பாதைக்கு அரோகரா, பாதைக்கு அரோகரா” என்று ஒருவர் சத்தமிட்டார். இன்னொருவர், வீதியோர மாயிருந்த வேலியில் ஒரு பூவரசங்கொப்பைப் பிடுங்கி, ”வழியைவிடுங்கோடா” என்று குழந்தைகள் நின்றபக்கமாக உறுமினார்.
ஒருவிதமாக அந்தப் பெரிய கார் ‘பவனியைக்’ கடந்து சென்றது. அதனுள் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் முன் சீற்றில் அருகருகே அமர்ந்திருந்தனர். ஆணே காரைச் செலுத்தினான். பெண் பவனியை வேடிக்கைபார்த்து எதை யெதையோ ஆணுக்குச் சொன்னாள்.
கோடைவரட்சியினால் காய்ந்திருந்த நிலத்திலிருந்து கார் சென்றதினால் புழுதி கிளம்பிப் பரவிற்று.
“சரியான புழுதியப்பா” என்றார் ஒருவர்.
“வேட்டை என்றால் புழுதி பறக்காதா”என்றார் மற்ற வர்.
ஒரு கூட்டம் குலுங்கிச் சிரித்தது. நான் எழுந்தருளும் இறைவனைப் பார்த்தேன். அவனும் அப்படியேதான் சிரித்துக்கொண்டிருந்தான். வேட்டைக்குப் புறப்பட்டவன் முகத்தில் ‘வீரத்தைக்’ காணோம். என்ன அர்த்தம் பொதிந்த பரிகாசமான சிரிப்பு!
வேட்டையாடும் இடத்திற்கு இன்னும் கொஞ்சத் தூரமே இருந்தது. வீதியிலிருந்து இறங்கி, கிழக்கே சிறிது தூரத்தில் தெரியும் கோவிலுக்குப் பின்புறமுள்ள செம்மண் வெளியில் வேட்டைக்கான களம் அமைத்திருந்தார்கள், நிலத்தைக் கூட்டித் துப்புரவு செய்து நீர் தெளித்துப் புனிதப்படுத்தி இருந்தார்கள், வெளியின் நடுவில், கொழுத்த கன்னிவாழை ஒன்றை நட்டு. உரப்படுத்தியிருந்தார்கள். வாழையைச் சுற்றிக் கிட்டத்தட்ட முப்பதுயார் விட்டத்தில் கூட்டம் வட்டமாகக் குழுமிற்று. இறைவன் வட்டமான கூட்டத்தின் நடுவில், பாயப்போகும் புலியாகத் தன் நெருங்கிய பரிவாரங்களுடன் நின்றான்.
நடப்பட்டிருந்த வாழையைச் சுற்றித் துரிதகதியில் அவனைச் சுமந்து கொண்டு ஓடினார்கள்; ஒருவிதமான பெருமித நடையில் மூன்று முறை அதனைச் சுற்றி வந்தார்கள். குதிரை முன்னங்கால்களைத் தூக்கித் தூக்கி ஆடிற்று. வயதான அர்ச்சகர், கூரான கத்தியைப் பிடித்துக்கொண்டு, வாழைக்கு அருகில் நின்றார். இறைவனை முன்னும் பின்னுமாகக் கொண்டு ஓடினார்கள்.
மூன்றாம் முறையாக இறைவன் பின் சென்று முன் வருகையில், அர்ச்சகர் கத்தியை ஓங்கி வாழையை வெட்டினார்; அதேகதியில் மறுமுறையும் வெட்டினார்; முதல் வெட்டில் துண்டானமாதிரி வாழை அடுத்த வெட்டில் துண்டாகவில்லை. டும், டும் டும்மென மேளம் முழங்கிற்று; நாதஸ்வரம் கனராகத்தில் நீண்டொலித்தது; சங்கு ஓங்காரித்தது: கூட்டம் பக்திக்கோஷம் எழுப்பிற்று.
இறைவனுக்குப் பன்னீர் தெளிக்கப்பட்டது; வெட்டப் பட்ட வாழைத்துண்டுகளில் குங்குமத் திரவியங்களிட்டு நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து இறைவனுக்கு ‘பஞ்சாலாத்தி’ தீபம் காட்டப்பட்டது. வேட்டையாடப்பட்ட இரையின் ஒருபகுதி துணியில் பொதியாக குதிரை வாகனத்தின் முன்னங்காலொன்றில் கட்டப்பட்டது.
அந்த முகத்தில் எங்கிருந்து இந்தப் பிரகாசம் வந்தது…? அந்த முகம்…? நாலைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் பாடசாலைக்குப் போகும் வழியில் எதிர்ப்பட்டு தத்தளிக்கும், அந்தச் சோகம் தோய்ந்த, வரண்ட, விரக்தியான முகம்…? நீல உடைகளின் பின்னணியில், மஞ்சளாய் அவள் தாலி மினுங்க, குங்குமப் பொட்டிட்ட நெற்றிமேடு சுருங்க அவள் புன்னகை பூத்தாள். அவள் இன்னமும் என்னை மறக்காதிருக்கின்றாள். அவள் என்னை மறக்கமுயலாமல் இருக்கின்றாளோ அல்லது முடியாமலிருக்கிறாளோ?
வேட்டை முடிந்து ஊர்வலம் கிளம்பிற்று.
உயிர்சுமந்த புள்ளிகள் பல்வேறு சுருதிபேதங்களாய் அசைந்தன.
எங்கிருந்து இந்தப் பேரமைதி கவிந்தது…!
எப்படி இந்தப் பரபரப்பு அவிந்தது…!
உணர்ச்சிகள் வடிந்து அடங்கிய பின்னெழும் அமைதியும் இது போன்றதா…!
உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் பின்னெழும் ஆழ்ந்த அமைதி; பூரணத்துவமான அமைதி; அழகின் -ஆத்மார்த்தமான கவித்துவம் நிரம்பிய அமைதி……
இதுதானா பேரின்பம்! வாழ்க்கையின் சாரமே இதுதானா!
நான் இறைவனைப் பார்த்தேன். அவன் எல்லாம் தெரிந்தவனாக, அமைதியாக, மெல்லிய புன்னகை பூத்தான்,
அந்த இறைவனுக்கு ஐந்து கரங்கள்; அவன் விக்கினங்களைத் தீர்க்கும் விக்கினேஸ்வரன்; கணபதி; விநாயகன்.
– 1971 – கோடுகளும் கோலங்களும் – அலை வெளியீடு – மார்கழி 1976
– சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.