வெள்ளைப் பாப்பாத்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 7,005 
 
 

மினி சைக்கிளின் இரும்பு கேரியரில் அமர்ந்துகொண்டால் ருக்குவின் பிட்டம் கொடிமலருக்குத் தலையணையாகிவிடும். பெடலை மிதிக்கும்போது விளம்பித லயத்தில் தலை அசைந்து தாலாட்டுவதுபோல இருக்கும்.

அவள் பள்ளிக்கு மட்டம் போடத்தொடங்கிய ஒருசில நாட்களுக்கு முன்புதான் இறுதியாண்டு சோதனை முடிந்திருந்தது. இரவல் பாடப் புத்தகங்களை ஒப்படைத்துவிட்டு, தேர்வுத் தாட்களையும் முடிவு அட்டையையும் பெற்றுக்கொள்ளச் சொல்லி கதிர்வேலுவை ஆசிரியர் ஏவும் வரை பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றே அவளுக்குத் தோன்றவில்லை. அன்றைய தினத்தைத் தவறவிட்டால் வருட இறுதி விடுமுறை நீண்டுவிடும். பொதுவாக இறுதி ஆண்டுத் தேர்வு முடிந்தபின் பாடங்கள் நடக்காது. என்றாலும் ஆர்.எம்.டி உணவு கிடைக்கும் என்பதால் அம்மாதான் தினமும் அவளைப் பள்ளிக்குச் செல்லும்படி விரட்டிக்கொண்டிருந்தாள்.

கேரியர் அழுத்துவதில் தொடைகளில் நோவெடுத்தது கொடிமலருக்கு. சைக்கிள் போகும் வேகத்தில் குளிர்க்காற்று உரசி உதடுகள் அதிர்ந்தன. அவள் கைகள் அவ்வப்போது தன்னிச்சையாக ரிப்பனைப் பிடித்துப் பார்த்துக்கொண்டன. இம்முறை தேர்வில் முதலாவதாக வந்தால் அம்மா வெள்ளை ரிப்பன் வாங்கி தருவதாகக் கூறியிருந்தாள். இரட்டைப் பின்னல் பின்னி சடை போட்டு, கறுப்பு ரிப்பனால் மடித்துக் கட்டும்போது தலையில் அதன் இருப்புத் தெரிவதே இல்லை. வெள்ளை ரிப்பன் கட்டிக்கொண்டால் இரண்டு வெள்ளை வண்ணத்துப்பூச்சிகள் தலையின் இருபக்கமும் அமர்ந்திருப்பதுபோல இருக்கும் என கற்பனை செய்துகொண்டாள். அம்மா சைக்கிளில் வேகமாகப் போகும்போது அவை தலைக்கு மேலாக பறக்கும். வெள்ளை வண்ணத்திகள் தன் தலைக்கு மேல் பறந்து அவள் பார்த்ததில்லை.

வெள்ளை வண்ணத்திகள் என்றால் அவளுக்குக் கொள்ளை விருப்பம். ஓவியப் பரீட்சையில் ஆசிரியர் வண்ணத்துப்பூச்சியை வரையச் சொன்னபோதுகூட அவள் தாளுக்கு நடுவில் சிப்பி ஓடுகளைப்போல கூர் மழுங்கிய இரு முக்கோணங்களை இடம், வலமாக வரைந்து அதன் பின்புலத்தில் கரும்பச்சையைப் பூசியபோது வெள்ளை வண்ணத்தி பளிச்செனப் பிரகாசிக்கத்தொடங்கியது. வெள்ளை வண்ணத்தி என்பது முழுக்கவும் வெள்ளைதான் என்பதால் உணர்வுக் கொம்புகள் இரண்டை மட்டும் கறுப்பு வண்ணப்பென்சிலால் கீறியபோது அதன் வலது இறக்கையில் மெல்லிய அசைவு தெரிவதாக உணர்ந்தாள். அவள் பார்த்ததிலேயே அதுதான் பெரிய வெள்ளை வண்ணத்துப்பூச்சியாக இருந்தது. எனவே அதனால் வான் நோக்கி உயரமாகப் பறக்கமுடியும் என நினைத்துக்கொண்டாள்.

அதிக உயரம் பறக்காமல் தரையோடு சுற்றிக்கொண்டிருக்கும் வெள்ளை வண்ணத்திகளை முன்பு தோட்டத்தில் கண்டிருக்கிறாள். அவை பரிசுத்தமானவை. அப்போதெல்லாம் அப்பா இருந்தார். காண்டா கம்புகளின் இரு முனையிலும் நிரப்பப்பட்ட ரப்பர் பால் வாளிகளுடன் அப்பா நடந்து செல்லும்போது காலை வெயிலில் அவைகளின் வெண்மை ஒளிரும். அவை மத்தியில் போய் நின்றால் சிண்ட்ரலா கார்ட்டூனில் வரும் தேவதையைச் சுற்றி வெளிபடும் ஒளிக்கீற்றுபோலத் தன்னிலிருந்து ஒளிப்புள்ளிகள் வெளியேறிப் பறப்பதாக உணர்வாள். அவள் தேவதையாகும் பொழுதெல்லாம் கையில் மந்திரக்கோள் ஒன்று கிடைத்துவிடும். அவள் முதலில் அப்பாவுக்குதான் தோள்பட்டை வலிக்கக்கூடாது என வரம் கொடுப்பாள். வரம் கிடைத்த அடுத்த நிமிடமே ‘தோள்பட்டை வலிக்கவேயில்லை பாப்பா’ என அப்பா உற்சாகமாக நடக்கத் தொடங்குவார். சில சமயம் ஓடுவார். வெள்ளை வண்ணத்திகள் பறந்து வேறு திசைக்கு போகும்வரை அவள் தேவதையாகவே ரப்பர் பாத்திகளில் சுற்றிக்கொண்டிருப்பாள்.

பள்ளி வரும் முன்பே ருக்கு சைக்கிளை நிறுத்தியதால் திடுக்கிட்டு கண் விழித்தவள் பிட்டத்திலிருந்து கன்னங்களை அகற்றி “லாம்பு” என்றாள். எல்லா களைப்பும் சுருங்கிச் சுருண்டு வியப்பானது. கூலிம் பட்டணத்தில் மட்டுமே ஒருதரம் அவள் சமிக்ஞை விளக்குகளைப் பார்த்திருக்கிறாள். அப்பா அழுவதை முதலும் கடைசியுமாகப் பார்த்ததும் அன்றுதான். சமிக்ஞையில் சிவப்பு விளக்கு பனி சூழந்த மெல்லிய விடியலிலும் பிரகாசமாக ஒளிந்தது. அவள் அவ்வளவு அருகில் சமிக்ஞை விளக்கைப் பார்த்ததில்லை. எடுத்துச் சப்பினால் இனிக்கும் எனத்தோன்றியது. திரும்பிப் பின்னால் பார்த்தாள். ஒன்றிரண்டு மோட்டார் வண்டிக்குப் பின்னால் தலைமை ஆசிரியரின் ஆரஞ்சு நிற கார் இருப்பதைக் கண்டதும் உற்சாகமானாள். அதில்தான் கணபதியும் இருப்பான். அவனுக்கு முன்பே தான் பள்ளிக்குப் போய் ஜெயிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டாள். “லாம்பு விட்டோன்னே வேகமா மிதிங்கம்மா” என உறுமிக்கொண்டே பிட்டத்தை முட்டினாள்.

ருக்கு ஒன்றும் பேசவில்லை. எவ்வளவு எழுப்பிவிட்டும் எழாமல் தாமதித்த கொடிமலரின் மேல் கோபமாக வந்தது. பள்ளியில் அவளை இறக்கிவிட்டபின் மர ஆலைக்கு ஓடவேண்டும். தாமதமாகப் போனால் ‘கெப்பாலா’ கத்துவான். அதையாவது பொறுத்துக்கொள்வாள். மரச்சட்ட அடுக்குகளின் மறைவில் மாட்டிக்கொண்டால், மன்னிப்புக் கேட்பதாகத் தோளில் கை வைப்பான். கை வைப்பவனை முறைத்துக்கொண்டால் வங்காளதேசிகளுக்கு அன்றைய ‘ஓட்டி’யைக் கொடுத்து வாய்ப்பைக் கெடுத்துவிடுவான். ‘ஓட்டி’ கிடைத்ததால்தான் ருக்குவால் கொஞ்சமாவது செலவுகளைச் சமாளிக்க முடியும். கொடிமலர் அப்பா வாங்கிய கடன்களின் வட்டியைக் கட்டவாவது அவளுக்குக் கெப்பாலாவின் கரிசனம் வேண்டும். கெப்பாலாவுக்குத் தோளைத் தாண்ட தைரியம் இல்லை என்பதால் ருக்கு பல நேரங்களில் மரக்கட்டையாக இருக்கப் பழகிக்கொண்டாள். துணிச்சல் வந்து அவன் வரம்பு மீறும் நாளில் தான் உண்மையில் எதிர்ப்பைக் காட்டுவோமா எனக் குழப்பம் தோன்றும்போதெல்லாம் பதில் தெரியாமல் பதற்றம் தொற்றிக்கொள்ளும்.

அதுவரை அந்த இடத்தில் சமிக்ஞை விளக்கின் தேவை இருப்பதாக அவ்வூர் மக்கள் யாரும் உணர்ந்ததே இல்லை. பகல் நேரத்தில் கார்கள் அரிதாக வரும் சாலை அது. அரகுடா எனும் குக்கிராமத்துக்குச் செல்லும் வழியில் வலது புறம் எதிர்ப்படும் செம்மண் சாலையில் ஒரு கிலோமீட்டர் பயணித்தால் மாரியம்மன் கோயில் இருந்தது. கோயிலின் மண்டபத்தில் பலகைகளால் தடுப்புகள் உருவாக்கப்பட்டே பள்ளிக்கூடம் நடத்தப்பட்டது. பள்ளி முடிந்தபின் தடுப்புகள் அகற்றப்பட்டு முழுக் கோயிலாக மாறியபின் நான்கைந்து கார்களை மாலை பூஜையில் பார்க்கலாம். பகல்வேளைகளில் மோட்டார் சைக்கிள்கள்தான் உறுமிக்கொண்டு ஓடும். பள்ளிக்குப் பிள்ளைகளை ஏற்றிவரும் ஒன்றிரண்டு வேன்களைத் தவிர ஆசிரியர்களின் கார்கள் உள்ளே நுழையும். மற்றபடி பினாங்குக்குச் செல்லும் லாரிகளின் ஓட்டம் இருந்தது. யாராக இருந்தாலும் தோட்டக்காரரை மீறிப் போகமுடியாது.

மாணவர்கள் பாதுகாப்புக்காகப் பள்ளி தொடங்கும்போதும் முடியும்போதும் பள்ளித் தோட்டக்காரர்தான் சைகை காட்டியபடி வாகனங்களை நிறுத்தி மாணவர்கள் சாலையைக் கடக்க உதவுவார். எவ்வளவு வேகமாக மோட்டார்கள் வந்தாலும் அவர் சாலையின் குறுக்கே பாய்ந்து நிறுத்திவிடுவார். முழங்கால் வரை நீண்ட கைகள் அவருக்கு. கொடிமலர் பார்த்ததிலேயே உயரமான மனிதர் அவர்தான். ஆனால் சிறுவர்களிடம் குனிந்து பேசிப் பேசி மெல்லிய கூன் வளைந்திருந்தது.

தோட்டக்காரரின் உதவியின்றி சாலையை எப்படிக் கடப்பது என ருக்கு குழம்பினாள். கூலிம் பெரிய மருத்துவமனைக்கு அவள் கணவரை வண்டி பிடித்து அழைத்துச் சென்றபோது அதிக நேரம் சிவப்பு விளக்கின் முன் நின்றதாக ஞாபகம். ‘மூனு கலர்மிட்டாய் மாதிரி இருக்குப்பா!’ எனக் கொடிமலர் சொன்னபோது கடும் வயிற்றுவலியில் அழுத அவள் கணவன், கொஞ்சமாய் சிரித்தது இப்போது ஞாபகத்துக்கு வந்தது. வயிற்றுக்கட்டி வெடித்து கணவன் இறந்தபின் அவளுக்குக் கூலிம் செல்லும் தேவை ஏற்பட்டதில்லை. வெள்ளை வண்ணத்துப்பூச்சிகள் இருந்திருந்தால் தேவதையாக மாறி தன்னால் அப்பாவைக் காப்பாற்றியிருக்க முடிந்திருக்கும் எனக் கொடிமலர் அம்மாவிடம் பல நாட்கள் சொல்லிக்கொண்டே இருந்தாள்.

எல்லோருமே அந்த விளக்கின் விதிமுறைகள் குறித்து முன்னமே தெளிவாக அறிந்து வைத்திருப்பதைப்போல சாதாரணமாக வேறெங்கோ பார்த்தபடி இருப்பதே ருக்குவுக்குப் படபடப்பைக் கூட்டியது. அவளுக்குப் பச்சை விழுந்தால் போக வேண்டும் என்றும் சிவப்பு விழுந்தால் நிற்க வேண்டும் என்றும் தெரியும். மஞ்சள் வந்தால் என்ன செய்வது என்றுதான் குழம்பினாள். கோயில் கோபுரம் தெரிந்தது. அடுத்து மஞ்சள் வரக்கூடாது என மாரியம்மனிடம் வேண்டிக்கொண்டாள். அவள் வேண்டுதல் அவ்வப்போது பழிப்பதுண்டு. சிவப்புக்குப் பின் நேராக பச்சைக்கு விளக்கு வரவும் காலை கோயில் பூஜைக்கான மணி ஒலிக்கவும் சரியாக இருந்ததால் அவளுக்கு உடல் சிலிர்த்தது. ஆனால் கால் நடுக்கம் குறையவில்லை. நெடுநேரம் ஹாரன் சத்த ஒலிகளுக்குப் பின் மனதைத் திடப்படுத்திக்கொண்டு பெடலை மிதித்தாள்.

அந்தச் சின்னஞ்சிறிய விளக்குக் கம்பத்தைக் கடக்கும்போது அவளுக்குப் பல கிலோ மீட்டர்களைக் கடந்து வந்ததைப்போல உணர்வு. மூச்சு வாங்கியது. நிதானம் அடைந்தபோது ருக்கு சிரித்தது கொடிமலருக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரு தூர தேசத்தைத் தனியே கடந்து சென்றுவிட்டதுபோல பதற்றம் அதிகரித்து அடங்கத் தொடங்கியது. அடுத்த ஒரு மாதம் இந்தத் தொல்லை இருக்காது என சமாதானப்படுத்திக்கொண்டாள். ருக்குவுக்குக் கொடிமலரின் மேல் உள்ள கோபம் மறைந்து கைகளை பின்னே வளைத்து அவள் கன்னத்தைக் கிள்ளினாள். கொடிமலர் திரும்பிப் பார்த்தாள். ருக்கு செய்த தாமதத்தால் தலைமை ஆசிரியரின் வண்டி மீண்டும் தோன்றிய சிவப்பு விளக்கில் மாட்டிக்கொண்டது. கொடிமலர் தொடர்ந்து ருக்குவை முட்டியபடியே வேகமாக சைக்கிளை விடச்சொல்லிக்கொண்டிருந்தாள். அவளுக்கு அவ்வதிகாலையில் உற்சாகம் கொப்பளித்தது. ஒரு விளக்குக் கம்பம் தலைமை ஆசிரியரின் காரை நிறுத்தியதில் அவளுக்கு வெகு கொண்டாட்டம்.

பள்ளி வாயில் கதவின் ஓரம் கொடிமலர் இறங்கியபோது செம்மண் புழுதியைக்White butterfly 02 கிளப்பிவிட்டபடி உள்ளே நுழைந்தது தலைமை ஆசிரியரின் கார். கொடிமலரின் முகத்தை மூடினாள் அம்மா. கொடிமலர் கைகளை விலக்கி காரைப் பார்த்தாள். வண்டியில் இருந்த கணபதி விரல்களை மடக்கி அசைத்தபடி கீழுதட்டை உள்நோக்கி வளைத்து நுனிநாக்கில் தள்ளிக்கொண்டிருந்தான். அப்படிச் செய்தால் ஈர பலூனில் விரலை வைத்து தேய்ப்பதுபோல விசித்திர ஒலிவரும். அவன் எப்போதுமே கொடிமலரைப் பார்த்து அவ்வாறு பளிச்சுக்காட்டுவதால் அந்த ஓசை அவள் உள்ளுக்குள் இருந்து கேட்டது. கொடிமலர் மட்டம்போடத் தொடங்குவதற்கு முதல்நாள், கணபதி அவளைப் பார்க்கும் இடமெல்லாம் அவ்வாறுதான் செய்துகொண்டிருந்தான். அவள் அவ்வாறு கிண்டலுக்கு ஆளாக கோவலனின் மனைவி கண்ணகிதான் காரணம்.

தேர்வு முடிந்த சோர்வு நீங்க தமிழ் ஆசிரியர் மாணவர்களை வகுப்பில் நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்ய சொல்லியிருந்தார். கொடிமலர் குழு கண்ணகி நாடகம் போடலாம் என முடிவெடுத்தபோது கொடிமலர் கண்ணகியாக நடிக்க முன்வந்தாள். அவள் பக்கத்துவீட்டில் இருந்த கதிர்வேலுவைப் பாண்டிய மன்னனாக நடிக்கச் சம்மதிக்க வைத்தாள். கதாபாத்திரங்களை முடிவெடுத்தபின்தான் பாண்டிய மன்னனிடம் காட்டிக் கோபப்பட்டு உடைக்க மாணிக்கக் கல் பதித்த சலங்கை தன்னிடம் இல்லை என்பது அவள் மண்டைக்கு உறைத்தது. ருக்குவுக்குத் தெரிந்தால் தோலை உரித்துவிடுவாள் என்பதால் இரவு வரை காத்திருந்து டப்பியில் இருந்த அரிசியில் ஒருபிடி திருடினாள். மூன்று ஸ்ட்ராக்களில் அரிசிப் பருக்கைகளை நுழைத்து வளையமாக்கி இணைத்துக்கட்டினாள். சலங்கை போல் ஒன்று உருவானது. குலுக்கினால் ஜலக் ஜலக் என ஒலி கொடுத்த அதை மறுநாள் நண்பர்கள் பார்த்து ஆச்சரியப்பட்டனர். தேவதையான தன்னால் எதையும் உருவாக்க முடியும் என வியக்கும் நண்பர்களிடமெல்லாம் சொல்லிவைத்தாள்.

நாடகத்தின் இறுதியில் கொஞ்சம் உணர்ச்சிப் பெருக்கெடுத்து கண்ணகி சலங்கையை உடைக்க நாலாபக்கமும் அரிசிப் பருக்கைகள் சிதறின. கோயிலுக்கு நேந்துவிட்ட சேவல்களில் ஒன்று தைரியமாக வகுப்பில் நுழைந்து ஒன்றிரண்டு அரிசிப் பருக்கைகளைக் கொத்தித்தின்ன பாண்டிய மன்னன் சேவலை விரட்ட ஓடினான். வேறு யாரையும்விட கணபதிதான் அதிகம் சிரித்தான். “மாணிக்கக் கல்ல சேவ திங்குதுடா” என நாக்கில் ஒலி எழுப்பி பலிச்சுக்காட்டினான். அவளுக்கு அவமானமாக இருந்தது. கணபதி அவளை எப்போதுமே அழ வைக்கும் திறன் பெற்றிருந்ததான். தேர்வுக்குப் பின்னர் ஆசிரியர் நுழையாத வகுப்புகளைப் பயன்படுத்தி அவன் மேலும் தன்னை அவமானப்படுத்துவான் என்பதாலும் தலைமை ஆசிரியர் மகன் என்பதால் யாரும் அவனைக் கண்டிக்கப்போவதில்லை என்பதாலும் அவள் பள்ளிக்கு வருவதை நிறுத்தியிருந்தாள்.

பள்ளியின் இறுதி நாள் என்பதால் பெரும்பாலும் ஆசிரியர்கள் வகுப்பில் நுழையவில்லை. ஆறாம் ஆண்டு மாணவர்கள் பள்ளியை விட்டுப் பிரிவதால் பிரியாவிடை சடங்கு நடந்துகொண்டிருந்தது. அவர்கள் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்குப் பரிசுகளை அழகிய தாளில் சுற்றி கொடுத்துக்கொண்டிருந்தனர். கொடிமலரும் தான் ஆறாம் ஆண்டு முடிக்கும்போது ஒவ்வொரு ஆசிரியருக்கும் பரிசு கொடுக்க வேண்டும் என நினைத்துக்கொண்டாள். என்ன பரிசு கொடுக்கலாம் என யோசித்தபோது வெள்ளை வண்ணத்துப்பூச்சிகள் நினைவுக்கு வந்தது. அது சிறந்த பரிசாக அவளுக்குத் தோன்றியது. எல்லா மாணவர்களும் அவரவர் நண்பர்கள் வட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர். அவளுக்குக் குறிப்பிட்ட நண்பர்கள் வட்டம் இல்லாவிட்டாலும் மிகுந்த சந்தோஷமாகவே எப்போதும் இருந்தாள். அவளுக்கு எல்லோருமே நண்பர்கள். எனவே வகுப்பு முழுவதும் சுற்றி வந்து அனைவரிடமும் பேச்சுக்கொடுத்தாள். கணபதி ஓரமாக அமர்ந்து படித்துக்கொண்டிருந்தான். அவன் எப்போதும் புத்தகத்துடன் தனியனாகவே காட்சியளிப்பான். அவை பெரும்பாலும் வீட்டிலிருந்து கொண்டுவரும் ஆங்கிலக் கதைப்புத்தகங்கள்.

கணபதி அருகில் வந்ததும், புருவத்தை உயர்த்தி “உங்கிட்ட வெள்ளப் பாப்பாத்தி கத புத்தகம் இருக்கா?” என்றாள். கணபதி சங்கடமாக அவளைப் பார்த்தான். “இல்லையா… எங்கிட்ட இருக்கே” என்றவள் அவனைப் பார்த்து நாக்கை மடக்கி ஒலியெழுப்பி வகுப்பைவிட்டு மறைந்தாள்.

மண்டபத்தின் இடையிடையே இருந்த பலகை தடுப்புகளுக்குக் கீழ் நுழைந்து செல்ல நல்ல வசதி இருந்ததால் பக்கத்து வகுப்புகளுக்குச் சென்று அங்குள்ள அக்காள்களிடமும் அண்ணன்களிடமும் பேசிக்கொண்டிருந்தாள். அவளுக்கு எல்லாரிடமும் பேச ஏதாவது ஒன்று இருக்கவே செய்தது. யாரும் எங்கும் செல்லத் தடைகளோ கட்டுப்பாடுகளோ இல்லாத பள்ளியின் கடைசி தினம் அவளைக் குதூகலப்படுத்தியது. கீழுள்ள இடைவெளி வழியாக குனிந்தபடியே அடுத்தடுத்த வகுப்புகளுக்குப் புகுந்து சென்றுகொண்டிருந்தாள். அப்படித் தரையோடு தரையாக அலைவது அவளுக்கு வெள்ளை வண்ணத்துப்பூச்சிகளை நினைவுபடுத்தியது. ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்புக்குள் நுழையும்போது கைகளை விரித்துப் படபடக்க வைத்தாள். தமிழ் ஐயா வகுப்பில் நுழையும்வரை அவள் வெள்ளை வண்ணத்திப்பூச்சியாகவே இருந்து மீண்டாள்.

அவர்தான் முதலாம் ஆண்டு மாணவர்களின் வகுப்பாசிரியராகவும் இருந்தார். எனவே பெரும்பாலான பாடங்களின் திருத்தப்பட்ட சோதனைத்தாட்களை அவர்தான் வைத்திருந்தார். அவரிடம் ஒரு பழக்கம் இருந்தது. என்ன வேலை இருந்தாலும் நிதானமாகப் பெயர் சொல்லி வகுப்பின் முன் மாணவர்களை அழைத்து புள்ளிகளை உரக்கக் கூறியே தாளைக்கொடுப்பார். தாள்கள் குறைவான புள்ளியில் இருந்து அதிகமான புள்ளிக்கு அடுக்கப்பட்டிருக்கும். புள்ளிகளின் மதிப்பு கூடக் கூட அடுத்து யார் என வகுப்பே பரபரப்புக்கும். கைத்தட்டல்கள் பறக்கும். பெரும்பாலும் அதிகப் புள்ளிகள் எடுப்பது கணபதி அல்லது கொடிமலர் என்பது வகுப்பில் பழகிப்போன ஒன்று. அரையாண்டுத் தேர்விலும் கணபதிதான் வகுப்பில் முதலாவதாக வந்திருந்தான். கொடிமலர் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாவதானாள்.

எப்போதும்போல அவள்தான் அம்முறையும் தமிழில் அதிகப் புள்ளிகள் எடுத்திருந்தாள். தமிழ் ஐயா “ஜப்பான்” என அவளை அழைத்தபோது அவள் ஓடி வகுப்பின் முன்னே சென்றாள். தமிழ் ஐயா அவளைத் தூக்கி மேசையில் அமர வைத்து “இந்த முறையும் ஜப்பான்தான் தமிழில அதிக மார்க் வாங்கியிருக்கா…” என்று சொன்னதும் கைத்தட்டல்கள் பலமாகின. முதலாம் ஆண்டு மாணவர்களுக்குத் தங்கள் தோழமைகளைப் பாராட்டுவதில் கஞ்சத்தனமே இருப்பதில்லை. கணபதி மட்டும் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தான். கொடிமலருக்கு ஜப்பான் என ஐயா அழைத்ததில் வருத்தம்தான். வகுப்பில் அவள்தான் குட்டையானவள். உடல் காற்றுபோல தக்கென இருப்பது தமிழ் ஆசிரியர் அவ்வப்போது தூக்க வசதியாக இருந்தது. பெரிய கண்களுடன் இருக்கும் அவளை ஜப்பானிய கார்ட்டூன் பொம்மைபோல இருப்பதாக தமிழ் ஐயா கூறுவார். தன்னை அவ்வாறு ஐயா கூப்பிடுவது குறித்தும் அவரைப் பின்பற்றி கணபதி கூப்பிடுவது குறித்தும் அவளிடம் புகார் இருந்தாலும் ஐயாவிடம் சொன்னால் இனி அன்பாக இருக்கமாட்டாரோ என்ற தயக்கம் இருந்தது. அப்பாவுக்குப் பிறகு தமிழ் ஐயாதான் அவளிடம் அக்கறையாக இருந்தார். அவளுக்குப் பள்ளிச்சீருடைகள், பள்ளிக்காலணி வாங்கிக்கொடுத்தவர் அவர்தான்.

கடந்த இரண்டு வருடமாக ருக்கு எதையுமே வாங்குவதில்லை. கணவன் இறந்தபின் பிறர் மூலம் வழங்கப்படும் எதையும் அம்மா மறுத்து கொடிமலர் பார்த்ததே இல்லை. அவளைப் பொறுத்தவரை எதுவுமே விரயமாகும் பொருள் அல்ல. கணவன் இறந்தபிறகுதான் ருக்கு தோட்டத்தில் இருந்து வெளியேறி மர ஆலையில் வேலைக்குச் சேர்ந்தாள். அதன்பின் ருக்குவின் சிக்கனம் நேரடியாக பாதித்தது கொடிமலரைத்தான்.

முதலில் அவளுக்கு மலம் எப்படிக் கழிக்க வேண்டும்? எனப் பாடம் நடத்தப்பட்டது. சரியாக குழிக்குள் குறிபார்த்துக் கழிக்காவிட்டால் அம்மாவிடம் அடிவிழும். வெளியில் சிந்துவதால் நீரை விரயமாக்குவது ருக்குவுக்குப் பிடிக்காது. அப்பா வாங்கிய கலர் டிவி விற்கப்பட்டது. ஒரே ஒரு வானொலி மட்டும் அவ்வப்போது மெதுவாகப் பாடிக்கொண்டிருக்கும். வியாழக்கிழமையில் தாவோயிஸம் வகுப்புக்குச் செல்வதுதான் கொடிமலருக்குப் பெரிய கொடுமையாக இருந்தது. அவளுக்கு அவ்வகுப்புகள் கடும் சோர்வை உருவாக்கும். சீனர்களால் இலவசமாக நடத்தப்பட்ட அந்த வகுப்பில் பேசப்படுவது ஒன்றுமே அவளுக்குப் புரியாது. ஆனால் வகுப்பு முடிந்தபின் சுவையான சைவ உணவு கிடைக்கும். கோயிலில் ஏதும் விசேட தினங்கள் என்றாலும் ஒரு சிறிய பையுடன் ருக்கு கொடிமலரை அழைத்துக்கொண்டு கிளம்பிவிடுவாள்.

கொடிமலருக்குக் கோவில் செல்லப் பிடிக்காது. அவளிடம் இருந்தது ஒரே ஒரு பட்டுப்பாவாடை. அவள் வளர்ந்துவிட்டதில் அது முழங்காலுக்கும் கனுக்காலுக்கும் நடுவில் இருந்தது. கணபதி பார்த்துவிட்டால் மறுநாள் பள்ளியில் நண்பர்களிடம் அதையே சொல்லி கிண்டல் செய்வான் என்பதால் எவ்வளவு கெஞ்சினாலும் ருக்கு அதைதான் அணிவித்து அழைத்துச்செல்வாள். பெரும்பாலும் பள்ளியில் படிக்கும் எல்லா தோழிகளையும் இரவில் கோயிலிலும் பார்க்கலாம். எல்லோரும் அன்று அவர்கள் அணிந்து வந்திருக்கும் தோடு, வண்ணப்பொட்டு, வளையல், போன்றவற்றை சக தோழிகளிடம் காட்டிக்கொண்டிருக்க கொடிமலர் அம்மாவின் பின்னே ஒளிந்துகொள்வாள். அவளிடம் அவ்வாறு காட்ட எதுவும் இருக்காது. ருக்கு, கையில் ஒரு பெரிய பை வைத்திருப்பாள். பைக்கு அடியில் இரண்டு ஊதிபத்திகளும் இரண்டு சூடமும் இருக்கும். அதை கோயில் பூசாரியிடம் கொடுத்துவிடுவாள். கணபதி விஷேச காலங்களில் மட்டும் கோயிலுக்குப் பளபளப்பாக வருவான். அப்போதெல்லாம் கொடிமலர் ஒவ்வொரு முறையும் அவனை யாரோ புதியவன் என்றே அடையாளம் காண்பாள். கோயிலில் அவன் அவளைக் கிண்டல் செய்யமாட்டான். பேசக்கூட மாட்டான். புலிநக சங்கிலி ஒன்றைக் கழுத்தில் அணிந்திருப்பான். பெரிய மனுஷன் தோரணையில் அம்மாவுடன் வந்து சாமி கூம்பிட்டுவிட்டுக் கிளம்பிவிடுவான். அவன் விஜயம் தரும் அன்று அவன் அம்மா கொடுக்கும் பூமாலைதான் அம்மன் கழுத்தில் இருக்கும். அன்னதானம் தொடங்கும்போது ருக்கு தூணோரம் அமர்ந்துகொள்வாள். பழக்கப்பட்டவர்கள் ருக்குவிடம் விடைபெற்றுச் செல்லும்போதெல்லாம் கொடிமலரைக் கொஞ்சுவதுண்டு. கூட்டம் குறையும்போது பிளாஸ்டிக் பையைக் கொடுத்தால் சாம்பாரும் சோறும் கிடைக்கும். பெரும்பாலும் சோற்றுப் பையைச் சுமந்து செல்லும்போது கணபதி பார்த்துவிடுவான். உதட்டைக் குவித்து காற்றழுத்தி உதடுகள் அதிர ஒரு சத்தத்தை வரவைத்துச் சிரிப்பான். மறுநாள் பள்ளியில் கொடிமலர் வீட்டில் இன்றைக்குப் பருப்பு சாம்பார் எனக் கேலி செய்வான்.
அடுத்தடுத்தப் பாடங்களின் புள்ளிகளை அறிவிக்கும்போதும் மற்ற ஆசிரியர்கள் சோதனைத்தாளைக் கொடுக்கும்போதும் கொடிமலரும் கணபதியும் மாறி மாறி அதிகப்புள்ளிகள் பெற்றுக்கொண்டிருந்தனர். ஒருவரைவிட மற்றவர் குறைவாக எடுத்தால் விரல்களை மடக்கி அசைத்தபடி ஒலி எழுப்பி கிண்டல் செய்துகொண்டனர். பின்னர் அருகருகே அமர்ந்து அவர்களின் புள்ளிகளை ஒரு தாளில் எழுதி மொத்தப்புள்ளிகளைக் கணக்கிட்டனர். கொடிமலர் ஐந்து புள்ளிகளில் முன்னிலையில் இருந்தாள். கணபதி மறுஉறுதி செய்துகொள்ள மீண்டும் மீண்டும் அவளது புள்ளிகளைக் கேட்டுக் கணக்கிட்டான். தனது புள்ளிகளையும் கவனமாகப் பார்த்துக்கூட்டினான். கூட்டுத்தொகையில் மாற்றம் இல்லை. கணபதி முகம் இருளடைந்திருந்தது. அவன் கொடிமலரின் முகத்தைப் பார்க்கவே இல்லை. அவன் கண்கள் கலங்கத்தொடங்கின. கொடிமலர் அவன் தோள்களில் கை வைத்தாள். “நான் ஏஞ்சல். சிண்ட்ரலாவ இளவரசியா மாத்துனிச்சே. அந்த ஏஞ்சல். நான் எல்லாத்தையும் சந்தோசமாதான் வச்சுக்குவேன். உன்னை வெடைக்க மாட்டேன்” என்றவளின் கைகளை தட்டிவிட்டுப் போய்விட்டான்.

ஓய்வு நேரம் முழுவதும் கொடிமலர் அவனுடனேயே இருந்தாள். அவனைச் சாப்பிடச் சொன்னாள். அவன் அழுதால் அவள் தேவதையாக முடியாது என்றாள். கணபதி ஒன்றும் பேசாமல் இருந்தான். அவன் முகம் சிவந்திருந்தது. மீண்டும் பள்ளி மணி அடித்தபோது மட்டும் “அப்பா அடிப்பாரு தெரியுமா!” என்றான். அவளுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. பரீட்சைக்காகவெல்லாம் அவளை அம்மா அடித்ததே இல்லை. அவள் பள்ளிக்குச் செல்வதை அப்பா பார்க்கும் முன்னமே இறந்துவிட்டிருந்தார். ஒருவேளை அப்பா இருந்திருந்தால் தன்னை அடித்திருப்பாரா என அம்மாவிடம் கேட்கவேண்டுமென நினைத்துக்கொண்டாள்.

மீண்டும் வகுப்பில் புகுந்த தமிழ் ஆசிரியர் தேர்ச்சி அட்டையை வழங்கினார். குறைவிலிருந்து அதிகத்துக்குச் செல்லும் பாணியை இப்போதும் அவர் கறாராகவே கடைபிடித்தார். வகுப்பில் கடைசியாக வந்த பரணியின் பெயரைச் சொன்னதும் அனைவரும் சிரித்தனர். கணபதி எந்த உணர்ச்சியும் காட்டாமல் உம்மென இருந்தான். பரணி அட்டையை வாங்கிக்கொண்டு அதை திறந்துகூட பார்க்காமல் அமர்ந்துகொண்டான். தன்னைக் கடந்துபோகும்போது கொடிமலர் மட்டும் அவனுக்குக் கைகொடுத்தாள். தான் தேர்ச்சி அட்டையை வாங்கி வரும்போது அவ்வாறு தனக்கு எல்லோரும் கைகொடுப்பதைக் கற்பனை செய்துகொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாக ஆசிரியர் ஒற்றை இலக்க எண்களுக்குத் தாவினார். தனது பெயரை அழைக்க அதிக நேரம் இருப்பதாகப் பரபரப்புடன் காத்திருந்தவளை வகுப்பில் எட்டாவதாகத் தேர்ச்சி பெற்றுள்ளாள் என ஆசிரியர் கூறியபோது கணபதிதான் முதலில் அதிர்ச்சியில் திரும்பினான். கொடிமலர் நாற்காலியை விட்டு எழாமல் முதுகுத்தண்டை நேராக்கி சந்தேகத்தோடு பார்த்தாள். “நீதான் வா” என ஆசிரியர் சிரித்துக்கொண்டே அழைத்தபோது வகுப்பறையின் முன் நடந்து செல்வது அத்தனை சிரமமாக இருந்தது. கால்கள் வலுவிழந்தன. உடல் கனத்து கீழே விழுந்துவிடுவதைப்போல உணர்ந்தாள். போய்ச் சேருவதற்குள் ஆசிரியர் பெயரைத் தவறாக அழைத்துவிட்டதாகச் சொல்வாரா என ஏங்கினாள். எங்கே என்ன தவறு என அவளால் கணிக்க முடியவில்லை. அட்டையை வாங்கிப் பார்த்தாள். அவளுடையதுதான். பரணி மட்டும் ஓடி வந்து அவள் எட்டாவதாக வகுப்பில் வந்ததற்கு கைகொடுத்து வாழ்த்தினான்.

***

“நா பரீச்சையில எட்டாவது. வெள்ளப் பாப்பாத்திக்கு கலர் அடிக்கலன்னு பெரிய வாத்தியாரு கோசம் போட்டுட்டாரு. நல்லாதான் இருந்துச்சி. பாக்குறீங்களா?” என புத்தகப்பையில் கைவிட்டவளைத் தடுத்து கன்னங்களை வருடினாள் ருக்கு. பலமுறை கண்ணீர் வழிந்து காய்ந்திருக்க வேண்டும். பிசுபிசுத்தது.

“நீங்க வெள்ளப் பாப்பாத்திய பாத்துருக்கீங்கள்ள? சார்கிட்ட வந்து சொல்லுங்கம்மா!” என எவ்வளவு இறைஞ்சியும் ருக்கு ஒன்றும் பேசாதது அவளுக்கு மேலும் வதைத்தது. பேசாமல் சைக்கிளில் ஏறிக்கொண்டாள்.

ருக்கு இப்படி இறுக்கமாக இருப்பவள் அல்ல. எவ்வளவு திட்டினாலும் சில துளிகள் அவளின் அரவணைப்பைக் காட்டிக்கொண்டே இருப்பாள். யாரோ ஒருவருடன் சைக்கிளில் ஏறிச் செல்வதுபோல இருந்தது கொடிமலருக்கு.

டிராப்பிக் விளக்கு அருகில் சென்றபோதுதான் தோட்டக்காரர் நின்றிருப்பதைப் பார்த்தாள் கொடிமலர். விளக்கில் ஒளி இல்லை. பக்கத்தில் சைக்கிளில் வந்து நின்ற ஒரு பெண்மணி “தேர்தலுக்கு அவசர அவசரமா போட்டது என்னா லச்சனமா இருக்கு பாரு” என வெற்றிலை கறை தெரிய ருக்குவிடம் சிரித்தாள். ருக்கு அவரிடமும் பேசவில்லை. தோட்டக்காரர் இருபக்கமும் வழக்கம்போல வாகனங்களை நிறுத்தி மைய சாலையில் வாகனங்கள் முதலில் செல்ல அனுமதித்துக்கொண்டிருந்தார். அம்மாவுக்குக் கொடிமலரை ஏற்ற வரும்போதே விளக்கு பழுதானது தெரிந்திருக்க வேண்டும். நிதானமாகத் தெரிந்தாள். கொடிமலருக்குதான் விளக்கு எரியாதது ஏமாற்றமாக இருந்தது. அன்று எல்லாமே அவளை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டாள். பின்னால் ஹாரன் அடித்ததும் கொடிமலர் திரும்பியபோது தலைமை ஆசிரியரின் கார் முன்னோக்கி வந்துகொண்டிருந்தது. கைதூக்கி சலாம் வைத்த தோட்டக்காரர் பிரதான சாலையின் வாகனங்களை நிறுத்தினார். தலைமை ஆசிரியரின் காரைப் போக வசதி செய்துகொடுத்தார். அம்மாவும் அருகில் நின்ற வெற்றிலை கறை பெண்மணியும் சைக்கிளை ஓரமாக நகர்த்தி கார் கடக்கும் வரை காத்திருந்தனர்.

பின் இருக்கையில் அமர்ந்திருந்த கணபதி, கொடிமலரைக் கடக்கும்போது கண்ணாடியில் பதித்த வலது கைப்பாதத்தைத் துடைப்பதுபோல இடவலமாக அசைத்து மென்மையாகச் சிரித்தான். அவன் அவ்வாறு சிரிப்பது முதல்முறை. கொடிமலர் ஏதோ நினைவுக்கு வந்தவளாய் புத்தகப்பையில் கையைவிட்டு பெரிய இறக்கைகள் கொண்ட வெள்ளை வண்ணத்துப்பூச்சியொன்றை நிதானமாக எடுத்தாள். படபடத்துத் துடித்த அதன் இறக்கைகள் மேல் நோக்கி விட்டதும் விரிந்து நிதானத்துக்கு வந்தது. காற்றில் அலைக்கழிந்த அந்த மெல்லிய ஜீவன் கொடிமலரின் தலைக்கு மேலாக ஒருதரம் சுழன்று பின் வான் நோக்கி வேகமாக பறந்து சென்றபோது எல்லா கவலைகளையும் மறந்துபோனவளாய் கணபதிக்குக் கையசைத்து விடைகொடுத்தாள்.

– ஜூன் 2018(நன்றி: http://vallinam.com.my)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *